COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Tuesday, September 16, 2014

உங்கள் பகைவர் எங்கும் நிறைந்தார்

நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறை தன்னைத் தானே அம்பலப்படுத்திக் கொள்ளும் பல தருணங்கள் வரலாற்றில் தோன்றி விடுவதுண்டு. இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை பிரகடனம், மதச்சார்பற்ற அரசு என்ற அரசியல்சாசன விதியை காற்றில் பறக்கவிட்டு பாப்ரி மசூதியை இடிப்பது, அப்படி இடிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருப்பது என சிலவற்றை நாம் பார்த்திருக்கிறோம். நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறை தனக்குத் தானே ஒவ்வாததாகும்போது, முரண் நிகழ்வுகளால் அதை சரி செய்துகொள்கிறது. பிறகு நானே, சர்வ ஜனநாயக பாதுகாப்பாளன் என்று சொல்லிக்கொண்டு மீண்டும் ஆட்சியில் அமர்ந்துகொள்கிறது.

தமிழ்நாட்டில் அப்படி ஒரு நிகழ்வைப் பார்க்கும் வாய்ப்பை முதலமைச்சர் ஜெயலலிதா உருவாக்கித் தந்திருக்கிறார். முந்தைய ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கொடூரமான காவல் துறை ஆட்சியை நாம் பார்த்திருக்கிறோம். (ஜெயலலிதாவின் பாதி முகத்தை ஹிட்லரின் முகம்போல் சித்தரித்து கேலிச் சித்திரங்கள் கூட வெளியாகியிருக்கின்றன). இப்போதும் அந்த நடைமுறை தொடர்கிறது. உள்ளாட்சி தேர்தல்களில் நாம் காண்பது அவருடைய புதிய முயற்சி. திமுகவுக்கு திருமங்கலம் என்றால், அஇஅதிமுகவுக்கு 2014 உள்ளாட்சி இடைத்தேர்தல்கள்.

உள்ளாட்சித் தேர்தல்கள், மக்கள் கைகளில் அதிகாரம், கடைசி குடிமகன்/குடிமகள் வரை அதிகாரமுடையவராக்குவது, மக்கள்நல நடவடிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுவது என்றும் இன்னும் பலவும் சாதித்திருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது நடக்க இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்களில், சாமான்யர்கள் இருக்கட்டும், ஓரளவு அதிகாரம் படைத்தவர்களே தாக்குப்பிடிக்க முடியாமல் போய் கதறும் நிலை உருவாகியிருக்கிறது.

ஓரளவு அதிகாரமுடையவர்கள் என்று இங்கு குறிப்பிடப் படுவது பாஜக. தமிழ்நாட்டில் ஒப்பீட்டுரீதியில் பாஜகவின் அதிகாரம் குறைவே என்றாலும், இன்றைய தேசிய சூழலில் பாஜகவுக்கு அதிகாரம் என்ற பொருளில் குறை ஒன்றும் இல்லை. டில்லி சட்டமன்றத்துக்கு தேர்தல் நடத்துங்கள் என்று ஒருபுறம் வலியுறுத்திவிட்டு, மறுபுறம், ஆம்ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினருடன் குதிரை பேரம் பேசும் பாஜக (காண்க: ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள காணொளிக் காட்சி), தமிழ்நாட் டில் தலைகீழான சூழலை எதிர்கொள்கிறது. மிரட்டப்பட்ட தாகவும், கடத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிற பாஜக வேட்பாளரின் குடும்பத்தை சாட்சிக்கு பக்கத்தில் வைத்துக் கொண்டு பேச வேண்டிய நிலை, பாஜக புதிய மாநிலத் தலைவர் தமிழிசைக்கு நேர்ந்துள்ளது.

ஜெயலலிதா அஇஅதிமுக பொதுச் செயலாளராக மீண்டும் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டபோது, உள்ளாட்சி தேர்தல்களில் சிறப்பான பங்காற்ற கழகச் செயல்வீரர்களை ரத்தத்தின் ரத்தங்களை ஊக்கப்படுத்த அல்லது உசுப்பேற்ற எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் என்ற பாரதிதாசன் பாடலை அவர்களுக்கு நினைவுபடுத்தினார். தமிழ்நாட்டு அரசியலில் அவர் பகைவர் என்று கருதுவது பிரதானமாக திமுகவை. மற்ற கட்சிகள் அவருக்கு ஒரு பொருட்டல்ல. அந்தப் பொருளில் அஇஅதிமுக பகைவர் மறைந்துவிட்டனர்தான். ஆயினும், திமுகவின் மறைவை உறுதிப்படுத்தியவர்கள், மாற்றம் வேண்டுமென விரும்பிய தமிழ்நாட்டின் வாக்காளர்களேயன்றி ஜெயலலிதாவோ அஇஅதிமுக செயல்வீரர்களோ, அல்ல.

திமுக எதிர்ப்பால் அஇஅதிமுகவுக்குக் கிடைத்த சட்டமன்ற தேர்தல் வெற்றி, நாடாளுமன்றத் தேர்தலை தனித்துச் சந்திக்க அஇ அதிமுகவுக்கு துணிச்சல் தந்ததுபோல், நாடாளுமன்ற தேர்தல் வெற்றி, உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியின்றி வெற்றி பெற வேண்டும் என்ற கனவை அஇஅதிமுகவினருக்குத் தந்திருக்க வேண்டும். நிரந்தரப் பொதுச் செயலாளர் சொன்னதன் உண்மையான பொருளை புரிந்துகொண்டிருக்க வேண்டும். விளைவு, தேர் தல் நடக்கும் முன்பே அஇஅதிமுக வெற்றி பெற்றுவிட்டது.

இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெறுகிறது. உள்ளாட்சித் தேர்தல்களிலும் ஆளும் கட்சி வெற்றி பெறுவது வழமைதான். இந்த இடைத்தேர்தல்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கானவைதான். ஆக, இடைத் தேர்தல், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் என்ற இரண்டு விதத்திலும் அஇஅதிமுக வெற்றி பெறுவதில் சிரமமில்லைதான். அங்கு, இங்கு சிறிதாக தோற்றாலும் பெரிய நட்டமில்லை தான். அப்படியானால், போட்டியின்றி வெற்றி பெறுவதை உறுதிசெய்ய அஇஅதிமுகவினர் ஏன் இந்த பெருமுயற்சி எடுக்க வேண்டும்?

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி என்ற ஒன்றே  எந்தப் பொருளிலும், எந்தத் தளத்திலும் இல்லை, காரணம், தனது நல்லாட்சி என்று மக்களுக்கும் மற்றவர்களுக்கும் சொல்லப் பார்க்கிறார் ஜெயலலிதா. அப்படிச் சொல்லும் முயற்சியின் குறுக்கே, அஇஅதிமுகவின் தம்பி துரைக்கு நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவி கொடுத்த பாஜகவே என்றாலும் அதே விதிப்படித்தான் என்கிறார்.

ஆனால், நடப்பது நல்லாட்சிதானா? கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, விசாரணை என்ற பெயரில் உடுமலைப்பேட்டை காவல்நிலையத்தில், குற்றத்தை ஒப்புக்கொள்ள வற்புறுத்திய காவல்துறையினர் 8 பேரால், கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணையும் அவரது உறவினர்களையும் கேட்டால், இல்லை, இல்லை, இல்லவே இல்லை என்பார்கள்.

ஏஅய்சிசிடியு மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் புவனேஸ்வரி, குப்பாபாய், லில்லி ஆகியோர், நீதிமன்ற உத்தரவின் பேரில் ஓமந்தூரார் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள, பாதிக்கப்பட்ட பெண்ணை சந்திக்கச் சென்றனர். நீதிமன்ற உத்தரவின்படி, அந்தப் பெண்ணைச் சந்திக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. அந்தப் பெண்ணின் சகோதரி மட்டும், தினமும் ஒரு மணி நேரம் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படுகிறார். ஏஅய்சிசிடியு குழு பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரியை, அவரது தந்தையை, சந்தித்துப் பேசியது.

வறியவர்களில் வறியவர் பிரிவைச் சேர்ந்த வர்கள் அவர்கள். கையில் இருந்த கன்றுக்குட்டி ரூ.1,500 விலைக்குப் போனதாம். அந்த ரூ.1,500 மட்டும் எடுத்துக்கொண்டு அவர்கள் இருவரும் சென்னை வந்திருந்தார்கள். மருத்துவமனையின் வெளியில் நடைபாதையில் தங்கியிருக்கிறார்கள். மழை பெய்தால் வரவேற்பு மேசை அருகில் உள்ள இடத்தில் படுக்க அனுமதி உண்டு என்றார்கள். தலை காய்ந்தவர்கள். காலையில் வாங்கிய உணவுப் பொட்டலம் அப்படியே பிரிக்கப்படாமல் இருந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணை பார்த்துவிட்டு வந்த பிறகு உணவு செல்லவில்லை என்றார் அந்தச் சகோதரி. அழுது அழுது கண்ணில் நீர் வற்றிப்போய் விட்டது என்றார் அழுக்கு வேட்டியும் நைந்து போன சட்டையும் அணிந்திருந்த அந்த தந்தை.

உடுமலைப்பேட்டை காவல்நிலையத்தில் அந்தப் பெண்ணுக்கு என்ன நேர்ந்தது என்று விவரித்த அந்தச் சகோதரியால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பேசிய அரை மணி நேரமும் அவரது கண்களில் கண்ணீர் வடிந்துகொண்டுதான் இருந்தது. எங்கள் பிள்ளைக்கு நேர்ந்தது, எங்கள் பகைவருக்கும் நேரக் கூடாது என்றார். அவர் விவரித்த விசயங்கள் என்ன என்பதை, வீரப்பனை பிடிப்பது என்ற பெயரில் பழங்குடிப் பெண்களை காவல் துறையினர் சித்திரவதை செய்ததை விவரிக்கும் திரு.பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ நூலைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். அந்த நூலின் மாதிக்கு நேர்ந்ததுதான் உடுமலைப்பேட்டை காவல் நிலையத்தில் நிகழ்த்தப்பட்டது.

மூன்றாம்தர சித்திரவதை. விரல்நகங்கள் முதல் பிறப்புறுப்பு வரை எப்படியெல்லாம் காயப்படுத்த முடியுமோ, அப்படியெல்லாம் காயப்படுத்தியிருக்கிறார்கள் ஜெயலலிதாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கிற காவல்துறை யினர். ஆட்சியாளர்கள் மொழியில் ‘மக்கள் நண்பர்கள்’. குற்றத்தை ஒப்புக்கொள்ள வில்லை என்றால், குடித்து விட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுவதுபோல் வீடியோ எடுத்து பாலியல் தொழில் வழக்கில் கைது செய்துவிடு வதாக மிரட்டியுள்ளனர்.

பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புக்களும் போராட்டங்களும் நிறைந்துள்ள சூழலில், இந்த அளவுக்குக் கொடூரமாக நடந்துகொள்ள காவல்துறையினருக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது?

உடுமலைப் பேட்டை காவல்நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது, தனக்கு யாரும் இல்லை என்று அந்தப் பெண் சொன்னாராம். கேட்பாரற்ற அந்தப் பெண்ணை கட்டாயப்படுத்தி கொலைக் குற்றத்தை ஏற்றுக்கொள்ளச் செய்யலாம் என்று நினைத்தார்களா, அல்லது, உண்மையை வரவழைக்க வன்முறையை கை கொண்டார்களா என்பது வழக்கு முடியும் போது தெரியவரும். எப்படியாயினும், யாரும் இல்லாதவர்களை என்னமும் செய்யலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். அதனால் அந்தப் பெண்ணை காட்டுமிராண்டித்தனமாக சித்திரவதை செய்துள்ளனர். மூன்று நாட்கள் காவல் நிலையத்தில் வைத்திருந்து நான்காவது நாள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். என்ன செய்தாலும் பிரச்சனை வெளியே வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று எழுதப்படாத சலுகை காவல்துறையினருக்கு தரப்பட்டிருப்பதுபோல் தெரிகிறது.

கேட்பதற்கு யாரும் இல்லாதவர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லை. அந்தப் பெண் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்கிறார் அவரது சகோதரி. என்னை மீண்டும் அடிப்பார்களா என்று கேட்கிறாராம்.
இருளர் பெண்கள் காவல்துறையினரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்ப வத்திலும் குற்றம் புரிந்த காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்களே தவிர கைது செய்யப்படவில்லை.

பொதுவாக, அம்மா நம் பக்கம் இருக்கும்போது நமக்கென்ன கவலை என்ற எண்ணம் தமிழ்நாட்டின் காவல் துறையினருக்கு உள்ளது. இருளர் பெண்கள் விசயத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருந் தால் உடுமலைப்பேட்டை காவல்துறையின ருக்கு தயக்கமாவது ஏற்பட்டிருக்கலாம். இந்த விசயத்திலும் காவல்துறையினர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், ஒரு பெண் எதிர்கொண்ட துன்பம், தமிழ்நாட்டில் நல்லாட்சி நடப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதைக் காட்டுகிறது. விவசாயிகள், வெவ்வேறு பிரிவு தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள், தலித்துகள் என அனைத்து பிரிவு மக்களும் அரசின் குற்றமய அலட்சியம், ஒடுக்குமுறை ஆகியவற்றால் தொடர்பாதிப்புக்கு உள்ளாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். வாழ்வாதாரம், வாழ்வுரிமை இழக்கும் இவர்கள் ஜெயலலிதா அரசோடு நிச்சயம் நட்பு பாராட்ட முடியாது. இந்தப் பெரும்பிரிவு ஜெயலலிதா அரசுக்கு பகையாகி நிற்கிறது.

இலங்கை ராணுவ இணையப் பக்கத்தில் ஜெயலலிதா மத்திய அரசுக்கு எழுதுகிற கடிதங் களை கொச்சைப்படுத்தி செய்தி வெளியான போது, கட்சி பேதம் இன்றி கருணாநிதி முதல் அனைவரும் அந்த செய்திக்கு எதிர்ப்பு தெரிவித் தனர். ராஜபக்சே மன்னிப்பு கேட்கும் நிலை ஏற்பட்டது. இதை ஜெயலலிதா நினைவில் கொள்ள வேண்டும். கருணாநிதியோ, மற்றவர் களோ, ஜெயலலிதாவைத்தானே சொன்னார் கள் என்று பேசாமல் இருந்திருந்தால், தமிழக மக்களை அவர்கள் அடுத்து துணிச்சலாக சந்திக்க முடியாது. தமிழ்நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

(இடதுசாரிக் கட்சிகள் தவிர மற்றவர்களுக்கு இதுபோன்ற கூருணர்வு அரிது). அதனால்தான் எதிர்ப்பு தெரிவித்தார்கள். தமிழ்நாடு மட்டுமல்ல, நாட் டின் எந்தப் பகுதியிலும் மக்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த, தோற்கடித்த இந்நாள், முன்னாள் ஆட்சியாளர்களை கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த கண்காணிப்பில் இருந்து யாரும் தப்பிவிட முடியாது.

கருணாநிதியும் விஜயகாந்தும் ராமதாசும் ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகளே தவிர பகைவர் அல்ல. அவரை வீழ்த்த வல்ல பகை வர்களான தமிழ்நாட்டின் உழைக்கும் மக்கள் எங்கும் மறைந்துவிடவில்லை. தமிழ்நாடு முழுவதும் நிறைந்திருக்கின்றனர்.

ஏஅய்சிசிடியு திருப்பூரில் நடத்தும் எட்டாவது மாநில மாநாடு வெல்லட்டும்!

ஏஅய்சிசிடியுவின் ஏழாவது மாநில மாநாடு குளச்சலில் நடந்தபோது, கருணாநிதி யின் தயவால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்திருந்தார். அக்டோபர் 4, 5 2014, திருப்பூரில் எட்டாவது மாநாடு நடக்கும்போது, ஜெயலலிதா, அரசியல் களத்தில், தன் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பகைவர்களே இல்லை எனப் பெருமிதம் பொங்கச் சொல்கிறார். எட்டாவது மாநாடு நடக்கும்போது, மத்தியில், இந்தியாவின் ஆகப் பிற்போக்கான ஒரு வலதுசாரி ஆட்சி அரியணையில் ஏறி அமர்ந்துள்ளது. ஆக இந்தியாவில், தமிழ்நாட்டில், அரசியல் சமூகம் பொருளாதா ரம் கலாச்சாரம் என எல்லாத் தளங்களிலும், ஓர் அழுத்தமான வலதுசாரி திருப்பம் சாய்வு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், உழைக்கும் மக்கள் தொடர்பான அரசின் அணுகுமுறையை, கெஸ்ட்டம்ப் சங்க்வூ ஹைடெக் தொழிலாளர்கள், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று சந்தித்த ஒடுக்கு முறை, வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பன்னாட்டு மூலதனம் இழைக்கும் கொடுமைகளுக் கெதிராக, இந்நாட்டின் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நியாயம் கேட்கச் சென்ற 167 தொழிலாளர்கள், சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்கள் பிணையில் வெளியே வந்த போது, அவர்களுக்கு தற்காலிகப் பணி நீக்க உத்தரவு தயாராய் இருந்தது. மூலதனம் சுதந்திரமாக இருக்கிறது. கூலி உழைப்பு, கூலி அடிமை விலங்குகளோடு, சிறைக்குள் அடைக்கப் படுகிறது. என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தைத் துவங்கி உள்ளனர். நீதிமன்றம், கூடாது கூடாது சட்டவிரோதம் என்கிறது. மன்மோகனுக்கு நிர்ப்பந்தம் தந்த ஜெயலலிதா, நரேந்திர மோடிக்கு, எந்த நிர்ப்பந்தமும் தருவதாகத் தெரியவில்லை. என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு, தமிழ் அடையாளம் ஏதும் இல்லை போலும்.

தமிழ்நாட்டின் தொழிலாளர் நிலை அறிய, ஏஅய்சிசிடியு ஏழாவது மாநாட்டு அறிக்கை எடுத்துச் சொன்ன மார்க்சின் மேற்கோளைக் காண்போம்.

‘சமுதாயத்தின் மேல் அடுக்குகளில் இருந்து தொழிலாளர் வர்க்கத்திற்கு புதிய ஆட்கள் வந்து சேர்கின்றனர். சிறு முதலாளிகளும் சிறு வட்டி வருமானத்தினரும் ஆகிய ஒரு திரளினர், தொழிலாளர் வர்க்கத்தின் அணியினுள் தள்ளப்படுகின்றனர்; வேறு வழி ஏதுமின்றி இவர்கள் தொழிலாளர்களுடன் கூடச் சேர்ந்துகொண்டு அவசரமாய்க் கையேந்தி நின்று வேலை கேட்கிறார்கள். இவ்வாறு வேலை கேட்டு உயர்த்தப்படும் கரங்களது காடு மேலும்மேலும் அடர்த்தியாகிச் செல்கிறது. அதேபோது இந்தக் கரங்கள் மேலும்மேலும் மெலிந்து செல்கின்றன.’

2014 நடப்புக்கள், நம் தமிழ்நாட்டு நடப்புக்கள், ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன் மார்க்ஸ் எழுதிய விஷயங்கள் எவ்வளவு சரியானவை என்பதற்குச் சான்று கூறுகின்றன.

தொழிலாளர் சேர்க்கை


நகர்மயமாதலில் தொழில்மயமாதலில் முதலிடத்திற்குப் போட்டியிடும் தமிழ்நாட்டில், பாட்டாளி வர்க்கச் சேர்க்கையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. விவசாயத்தின் சரிவு, சமூகம் சிதைவுறுதல் ஆகியவற்றால், பாட்டாளி வர்க்கத்தின் எண்ணிக்கை பெருகுகிறது. புதுவிதப் பாட்டாளிகள், இதுவரை காணப் படாத பிரிவினர், பாட்டாளி வர்க்க அணியில் நுழைந்துள்ளனர். டெல்ஃபி டிவிஎஸ், பிரிக்கால், சாந்தி கியர்ஸ் போன்ற பல நிறுவனங்களில், பொறியியல் பட்டயப் படிப்பு (டிப்ளமோ), பொறியியல் பட்டப் படிப்பு, பொறியியல் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரையிலான சம்பளத்திற்கு, பயிற்சியாளர்களாகப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

சுயதொழில் செய்வோர், குற்றேவல் பணி கள் செய்வோர் பல லட்சங்களில் உள்ளனர். கீ போர்ட் மெய்நிகர் அடிமைகளும் இருக்கவே செய்கின்றனர். தோற்ற மாயைகள் காட்சிப் பிழைகள் தாண்டி, உழைப்புச் சக்தியை விற்றால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்பதும், உழைப்பு அந்நியமாகி, சுருக்கி சிறுமைப்படுத்துவதாகவே, மூச்சுத் திணற வைப்பதாகவே உள்ளது என்பதும், அனைவருக்கும் பொதுவான எதார்த்தமாகும்.

வேலையற்றோர் கரங்கள் அதிகரிக்க அதிகரிக்க, அது அடர்ந்த காடாக, அந்த கரங்கள் மேலும்மேலும் மெலிந்துதான் போகின்றன. வேலையின்மை, சேமப்பட்டாளம் நிலவுதல், உபரி மக்கள் தொகை நகரங்களில் கொட்டப்பட்டு குவிதல் ஆகிய அனைத்துமே, மூலதனத் திரட்சிக்கு நெம்புகோலாய் உள்ளன.

கூட்டுபேர ஆற்றலின் எதார்த்த நிலை 

மார்க்சிய அறிஞர் எல்லன் மெய்ஸ்கின் வுட், முதலாளித்துவ சமூகத்தின் பிரும்மாண்டமான உற்பத்தி ஆற்றல் எதார்த்தமாவதில்லை என்பார். அது சற்று பெரிய விசயம்தான். நாம் நம் கண் முன்பு கூட்டு பேர ஆற்றலின் எதார்த்தம் படும்பாட்டை பார்ப்போம்.

தமிழ்நாடு மின்சார வாரியம். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள். இங்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். கூட்டு பேர ஆற்றல் இங்கு அவலமான காட்சிப் பொருளாகி உள்ளது. மின் வாரியத்தில், ‘அம்மா’ அறிவித்த ஊதிய உயர்வை, அங்குள்ள சங்கங்கள் கையொப்பமிட்டு ஒப்பந்தமாக்க நேர்ந்தது. மாதங்கள் வருடமாக நீண்ட பிறகும், தமிழக அரசு, போக்குவரத்துத் தொழிலாளர் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை பேச முன்வராமல் இழுத்தடிக்கிறது. அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது பழங்கால வழக்கு.

இப்போது அரசாங்கங்கள் எவ்வழி, அவ்வழியே நாங்களும் என்கிறார்கள் முதலாளிகள். 2 லட்சம் பேர் பணியாற்றும் இடங்களில் முன்மாதிரி வேலையளிப்பவரான (மாடல் எம்ப்ளாயர்) அரசாங்கமே கூட்டுபேர உரிமையை மதிக்காமல் மிதிக்கும்போது, தனியார் கம்பெனிகள் ஏன் சங்கங்களோடு, (குறிப்பாக தொழிலாளர்கள் விரும்புகிற சங்கங்களோடு) பேச வேண்டும் எனக் கேட்கிறார்கள்.

சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வம் ஃபாக்ஸ்கான் வழக்கில், ரகசிய வாக் கெடுப்பின் மூலம் பெரும்பான்மை அறிதலின் நியாயத்தை ஏற்றுக் கொண்ட பிறகும், அதற்கெதிரான ஸ்பெஷல் லீவ் பெட்டிஷன் மேல் முறையீட்டை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த பிறகும், ஜெயலலிதா, ரகசிய வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மை அறிந்து தொழிற்சங்க அங்கீகாரம் வழங்குதலுக்கான சட்டத் திருத்தம் வேண்டுமென்ற தொழிற்சங்க இயக்க கோரிக்கையை புறக்கணித்து வருகிறார். மேதாவியான அவருக்கு, மேற்கு வங்கம், கேரளம் போன்ற மாநிலங்கள் தொழிற்சங்க சட்டத்தை தமது சட்டமன்றங்கள் மூலம் திருத்தியது கவனத்திற்கு வரவில்லையா? இங்கே மாநில அரசின் உரிமைகள் என்பது கரைந்து காணாமல் போய்விடுகின்றனவா?

பொதுப் பயன்பாட்டு சேவை நிறுவனங்களில் கிட்டத்தட்ட சட்டபூர்வமான வேலை நிறுத்தம் சாத்தியம் இல்லை. ஜெயலலிதா அரசு இந்த விசயத்தில் மட்டும் கருணாநிதி துவங்கி யதை ஆர்வத்துடன் தொடர்ந்து முடித்தும் வைத்தது. ஆட்டோமொபைல் தொழில் பொதுப் பயன்பாட்டு சேவை என்றது.

ஹூண்டாய் நிறுவனத்திடம் அது துவங்கும் நேரத்தில், புரிந்துணர்வு ஒப்பந்தம் போடும்போது, பொதுப் பயன்பாட்டு சேவை என அறிவிப்பதாக வாக்குறுதி தந்துள்ளதாலும், முதலீட்டு நலன்களில் முதலீட்டாளர் விருப்பத்தை நிறைவேற்றவும், ஆட்டோமொபைல் தொழிலை பொதுப் பயன்பாட்டு சேவை என அறிவித்ததாகச் சொன்னது. (அறிவிப்பை 6 மாதங்களுக்குப் பிறகு நீட்டிக்கவில்லை). 15.07.2014 அன்று டயர் உற்பத்தித் தொழிலும் பொதுப் பயன்பாட்டு சேவை என அரசாணை பிறப்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. (முதலாளிகளுக்கு தந்த வாக்குறுதி பற்றி கவலைப்படும் அரசாங்கம், 2011 தேர்தலில் ஜெயலலிதா, வீடற்ற அனைவருக்கும் 3 சென்ட் வீட்டுமனை, வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு மாதம் 20 லிட்டர் நல்ல குடி நீர் என தமிழக மக்களுக்கு தந்த வாக்குறுதிகள் பற்றி கவலைப்பட வில்லை.

வீட்டுமனையும் குடிநீரும் தேவைப்படுவோர்கள் தமிழ்நாட்டின் வாக்காளர்கள், ஆனால், ஹூண்டாயின் தென்கொரிய முதலாளியும் எம்ஆர்எஃப்பின் முதலாளியான மம்மன் மாப்பிள்ளையும் தமிழ்நாட்டுக்காரர்களே இல்லை என்பது போன்ற விசயங்களில் கூட, தமிழ் தேசியம் பேசுபவர்கள் ஆர்வம் காட்டலாம்.

ஹூண்டாய், எம்ஆர்எஃப் போன்ற பெரு முதலாளித்துவ நிறுவனங்கள் எப்படி எப்போது முதல் பொதுப் பயன்பாட்டு சேவைகளாயின? ஆட்டோமொபைல் தொழில் 6 மாதங்களுக்கு மட்டுமே பொதுப் பயன்பாட்டு சேவையாய் இருந்தது எப்படி? ஹூண்டாய், எம்ஆர்எஃப் உற்பத்தி நின்றால், அது, எவ்வாறு ஏகப்பெரும் பான்மை மக்கள் வாழ்வை பாதிக்கும்? இவை ஜெயலலிதா பதில் சொல்ல முடியாத கேள்வி கள். முதலாளிகள் கூட்டுபேர உரிமையை பலவீனப்படுத்த தொடர்ந்து முயற்சிக்கிறார் கள். எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் வேலை நிறுத்த உரிமையை வெட்டிச்சுருக்க பார்க்கிறார்கள். அதற்கேற் பவே ஜெயலலிதாவின் அரசாணைகள்.

கூலி - கூட்டுபேரம் - கார்ல் மார்க்ஸ்

‘ஆனால், உழைப்பானது திருப்தி அளிக்கா ததாகி, வெறுப்பூட்டுகிறதாகிவரும் அதே போது போட்டி அதிகரித்து கூலி குறைகிறது. தொழிலாளி அதிகமாய் வேலை செய்து நீண்ட நேரத்துக்கு வேலை செய்தோ, ஒரு மணி நேரத் தில் முன்னிலும் அதிகமாய் பொருளுற்பத்தி செய்தோ தனது கூலியின் அளவு குறையாத வாறு பார்த்துக் கொள்ள முயலுகிறார். இல்லாமையின் நிர்ப்பந்தத்தால் தள்ளப்பட்டு, இவ்விதம் அவர் உழைப்புப் பிரிவினையின் தீய பலன்களை மேலும் அதிகமாக்குகின்றார். இதன் விளைவு என்னவெனில், எவ்வளவுக்கு எவ்வளவு அவர் அதிகம் வேலை செய்கிறாரோ அவர் பெறும் கூலி அவ்வளவுக்கு அவ்வளவு குறைவாகின்றது. அந்த அளவுக்கு அவர் தமது சக தொழிலாளர்களுடன் போட்டி போடுகி றார். இதனால் அவர்களை தன்னைப் போலவே அதே அளவுக்கு மோசமான பேர நிபந்தனைகளை ஏற்று வேலை செய்ய முற்படும் அத்தனை பேரையும் போட்டியாளர் களாக்குகிறார். எனவே இறுதியாய் பார்க்கும் இடத்து தம்முடனேயே, தொழிலாளிவர்க்க உறுப்பினர் என்ற முறையில் தம்முடனேயே போட்டி போடுகிறார் என்பதே இதற்குரிய காரணம்’.

‘ஏன்? மிகவும் சுலபமாக சொல்வதென்றால், ஒரு பிரிவினருக்கு, ஒரு விதியாக அவர்களது கூலியால் அளவிடப்படும் ஓர் ஒப்பீட்டு ரீதியான உயர்வாழ்க்கைத் தரத்தைப் பராமரிக்க, ஒரு சக்திவாய்ந்த அமைப்பு உதவுகிறது. மற்றொரு பிரிவினர் அமைப்பற்றவர்கள். பலவீனமானவர்கள், அவர்கள், அவர்களது வேலையளிப்பவர்களின் தவிர்க்கமுடியாத மனம் போன போக்கிலான அத்துமீறல்களுக்கு அடிபணிய வேண்டியுள்ளது; அவர்களது வாழ்க்கைத் தரம் படிப்படியாக குறைக்கப்படுகி றது. அவர்கள் மேலும்மேலும் குறைவான கூலியோடு வாழக் கற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் இதுவே போதுமானது என ஏற்றுக் கொள்ளும் மட்டத்திற்கு இயற்கையாக கூலி வீழ்கிறது’.

முதலாளித்துவ சமூகத்தில், தொழிலாளர்கள் தமக்கிடையிலான போட்டியை முடிவுக்குக் கொண்டுவர, தமக்கும் முதலாளிகளுக்கும் உள்ள போட்டியை தீவிரப்படுத்த, அவர்களுக்கு கூட்டுபேர உரிமை அவசியம். முதலாளித்துவ சமூகம் அதுபோகிற போக்கில், மிகவும் இயல்பாய் தொழிலாளர்களுக்குள் போட்டியை தீவிரப்படுத்தும். இந்தப் போட்டி கூலியை குறைக்க தன் பங்கிற்கு உதவும். இங்கேதான், கூட்டுபேர உரிமைக்கு வெளியே, அதாவது தொழிற்சங்கம் கொண்டு பேரம் பேசும் உரிமைக்கு வெளியே சில கோடி பேர் அமைப்புசாரா தொழிலாளர்களாய் இருக்கும் பிரச்சனையின் தீவிரம் அடங்கியுள்ளது.

ஜெயலலிதா அரசு, மிகவும் திறமையாக போராட்டத்தில் எழுகிற பல பிரிவினரை, அவர்களுக்குள்ளேயே மோதவிடுகிறது. தமிழ்நாட்டில் செவிலியர்கள் கவனத்தை ஈர்த்த போராட்டத்தை நடத்தினார்கள்.

ஜெயலலிதா அரசு, அரசு கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் அதற்கு வெளியே படித்தவர்கள் என்ற போட்டியை தூண்டிவிடுகிறது. போராடும் ஆசிரியர்கள் மத்தியிலும், புதிய தகுதிகளை உருவாக்கி பிரிவினையை தூண்டிவிடுகிறது. வனக்கல்லூரி மாணவர்கள் மத்தியில் இதே அணுகுமுறையைத்தான் எடுக்கிறது.

இங்கேதான் தொழிற்சங்க இயக்கம் ஒரு தொழிலாளர் வர்க்க இயக்கமாக சமூக அக்கறையுடையதாக சமூக செயல்பாடுடையதாக மாற வேண்டியுள்ளது. கூலி என தனியாக துண்டித்து, அதில் மட்டுமே கவனம் செலுத்துவதற்கு மாறாக, அமைப்புசாரா தொழிலாளர்கள் மத்தியிலான வேலையை நாட்டுப்புற, நகர்ப்புற வறியவர்கள் வேலையாக, குடியிருப்பு பகுதி வேலைகளாக மாற்ற வேண்டியுள்ளது.

ஏஅய்சிசிடியு, அக்டோபர் 4, 5 மாநில மாநாட்டையொட்டி நடத்துகிற மக்கள் கோரிக்கை சாசனத்தின் மீதான மக்கள் சந்திப்பு இயக்கத்திலும், அக்டோபர் 28 சிறை நிரப்பும் போராட்டத்திலும், ஒரு சமூகமாக தொழிலா ளர்களை திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. விலை உயர்வு மக்களை வாட்டி வதைக்கும் பிரச்சனையாக மாறியிருக்கும்போது, உண்மையான வளர்ச்சிக்கு மக்கள் சார்ந்த வளர்ச்சிக்கு, மக்கள் கைகளில் வாங்கும் சக்தி இருப்பதே ஆகச்சிறந்த வழி என்றும், அதற்கு மக்களுக்கு போதுமான வருமானம் வேண்டுமென்றும், அதனால் உழைக்கிற எந்தத் தொழிலாளிக்கும் மாதம் ரூ.15,000 சம்பளம் வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை கல்விக்கு பொறுப்பேற்க வேண்டிய அரசு, மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய மக்களுக்கு பக்கத்தில் அனைத்து வசதிகளுடன் மருத்துவத்திற்கு பொறுப்பேற்க வேண்டிய அரசு, கல்வியும் மருத்துவமும் காசுள்ளவர்களுக்குத்தான் என மாற்றியுள்ள தற்கு எதிராக, கல்வி மற்றும் மருத்துவம் தொடர்பான குறிப்பான கோரிக்கைகளை மக்கள் மத்தியில் முன் வைக்க முயற்சிக்கிறது. அந்தக் கடமைகளை கைவிட்டுவிட்டு அதற்கு நேரெதிராக, அரசு சாராயக் கடைகளை நடத் துவதன் பின்னாலுள்ள அனைத்து அநீதிகளையும் தோலுரித்துக் காட்டுகிறது. டாஸ்மாக் கடைகளை மூடுவதால் நலத்திட்டங்களுக்கு பாதிப்பு என்பது மோசடிவாதம் என்பதை சுட்டிக்காட்டுவதோடு, தமிழ்நாட்டு மக்களின் சட்டைப்பையிலிருந்து பணத்தை எடுத்து, அரசு எவ்வாறு கிங் பிஷர் மல்லையா, சசிகலாவிற்கு வேண்டியவர்கள் திமுக தலைமைக்கு வேண்டி யவர்கள் போன்றவர்கள் நடத்தும் சாராய ஆலைகளிடம் வாரி வழங்குகிறது என்பதையும், அவர்களது மார்க்கெட்டிங் ஏஜெண்டாக எப்படி செயல்படுகிறது என்பதையும் எடுத்துச் சொல்கிறது.

மக்கள் சந்திப்பு இயக்கத்தில் மாநாட்டுப் பிரச்சாரத்தில் சிறை நிரப்பும் போராட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவதை ஒரு மய்யமான பிரச்சனையாக எடுத்துள்ளது. மாநில மாநாட்டில் இது தொடர்பாக ஒரு வெளியீடு கொண்டுவர யோசித்துள்ளது. ஜெயலலிதா தன் முன்னே பகைவர்களே இல்லை எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போது, தமிழ்நாட்டு மக்களை அவர் எப்படியெல்லாம் பகையாளிகளாக நடத்துகிறார் என்பதை ஏஅய்சிசிடியு எடுத்துச் சொல்கிறது. சாதனைகள் என ஆரவாரம் செய்யும் அம்மையாரை, வீடற்றவர்களுக்கு 3 சென்ட் வீட்டுமனைப் பட்டா வாக்குறுதி என்ன ஆனது என்ற கேள்வியுடன் மக்கள் எதிர்கொள்ள, களப் பணியாற்றுகிறது.

தமிழ்நாட்டில் திமுக, தேமுதிக போன்றவர்கள் ஜெயலலிதாவோடு நேருக்கு நேர் மோதுவதிலிருந்து பின்வாங்கியுள்ளனர் என்பது வெளிப்படையாக புலப்படுகிறது. தமிழ்நாட்டில் உழைக்கும் மக்கள் பிரச்சனைகளுக்கு பஞ்சமே இல்லை. கடுமையான சவால்களை சந்திக்காமல் பணிகள் முன்னேறாது என்பது உண்மைதான். ஆனால், போராடும் இடதுசாரிகள் முன்பு வாய்ப்புக்களும் தாராளமாக உள்ளன. பாஜக அஇஅதிமுக ஆகிய முதலாளித்துவக் கட்சிகள், மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊராட்சி வார்டுகள் வரை அமைந்துள்ள வாக்குச் சாவடிகளில் மய்யங் கொண்டு, தங்கள் அரசியல் பிரச்சாரத்தை, கருத்து போதனையை, அமைப்பை, பலப்படுத்திக் கொண்டிருக்கும் போது, ஏஅய்சிசிடியு தனது மாநாட்டு பணியை, இயக்கங்களை, போராட்டங்களை வாக்கு சாவடிகளை மய்யப்படுத்தி கட்டமைக்க வேண்டியுள்ளது. எட்டாவது மாநாடு, உழைக்கும் மக்களை ஒரு சக்தியாக மாற்றுவது, அவர்களை தமிழகம் தழுவிய அளவில் ஒரு சவாலை எழுப்புபவர்களாக மாற்றுவது, அவர்களை வாக்குச் சாவடிகள் மட்டத்தில் அமைப்பாக்குவது என்ற கடமைகளில் கவனம் குவிப்பதில் வெல்லட்டும்.

ஒரு புரட்சிகர தொழிற்சங்கத்தின் மக்கள் சந்திப்பு இயக்கம்

கல்வி மருத்துவம் சுகாதாரம் குடியிருப்பு கோரிக்கைகளுக்காக காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்திய நாங்கள், உழைப்பவர் எவரானாலும் ரூ.15,000 மாத சம்பளம், சாராயக் கடைகளை மூட வேண்டும், வீட்டுமனை தருவேன் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டு சிறைக்குப் போகிறோம், எங்களுடன் சிறை நிரப்ப வாருங்கள், நிதி தாருங்கள் எனச் சொல்லி ஏஅய்சிசிடியு தலைமையில் தொழிலாளர் தோழர்கள் மக்கள் மத்தியில் செல்கின்றனர்.

ஏஅய்சிசிடியு 8ஆவது மாநில மாநாட்டை நோக்கி, மக்கள் சந்திப்பு இயக்கத்தினை நடத்தி வரும் ஏஅய்சிசிடியு தோழர்கள் ஒரு சமூக ஜனநாயகவாத கட்சியின் கிளைச் செயலாளர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் ஏஅய்சிசிடியு தோழர்களை வெறுப்புடன் பார்த்தார். அவர்கள் உரையாடல் பின்வருமாறு:

சமூக ஜனநாயகவாத கட்சியின் கிளைச் செயலாளர் (சஜககிசெ): எங்களைப் பார்த்து மக்கள் சந்திப்பு இயக்கம் காப்பி அடிக்கிறீர்களா?

ஏஅய்சிசிடியு தோழர் (ஏதோ): இல்லை தோழரே, நாங்கள் ஜூன் மாதமே முடிவு செய்துவிட்டோம். சிறை நிரப்பும் போராட்டம் அக்டோபரில் நடத்த உள்ளோம்.

சஜககிசெ: ஏன் ஜவ்வுமாதிரி இழுத்துக் கொண்டே போகிறீர்கள்? எங்களைப் போல் காப்பியடித்து, போராட்டமும் சீக்கிரம் முடித்திருக்கலாமே.

ஏதோ: நீங்கள் மக்கள் சந்திப்பு இயக்கம் பற்றி தாமதமாகப் புரிந்து கொண்டு, அவசரமாகத் தொடங்கி அவசரத்தில் முடித்ததாகத் தெரிகிறது. எப்படி ஆயினும் மக்கள் சந்திப்பு இயக்கங்கள் யார் நடத்தினாலும், வரவேற்கிறேன். இந்த இயக்கத்தை அதன் உண்மையான பொருளில் நடத்துவதிலும், நடைமுறையில் விளைவுகளை கைப்பற்றுவதிலும்தான் நம் எதிர்காலம் இருக்கிறது.

ஏதோ: மக்கள் சந்திப்பு இயக்கம் எத்தனை நாட்கள் நடத்தினீர்கள்? எப்படி நடத்தினீர்கள்?

சஜககிசெ: 500 பிரசுரங்கள் தந்தார்கள்.

ஏதோ: யார்?

சஜககிசெ: தலைமையில் இருந்து தந்தனர்.

ஏதோ: ஓ.கே. அப்புறம் என்ன செய்தீர்கள்?

சஜககிசெ: கிளை தோழர்களை அழைத்துக் கொண்டு போய் வீடுவீடாக தந்தோம். பிரசுரத் திற்கான நன்கொடை கிடைத்துவிட்டது.

ஏதோ: அப்படியா? எத்தனை நாட்கள் போனீர்கள்?

சஜககிசெ: அதுவா? அது ஒரே நாள். அப்புறம், ஒரு போராட்டம் நடந்தது.

ஏதோ: என்ன போராட்டம்?

சஜககிசெ: பட்டினிப் போராட்டம்.

ஏதோ: எத்தனை பேர் கலந்து கொண்டீர்கள்?

சஜககிசெ: ஒரு வேன் பேசி அழைத்துப் போய் கூட்டி வந்தார்கள். 12 பேர். 

ஏதோ: கிளையில் எவ்வளவு பேர்?

சஜககிசெ: 30 பேர்.

ஏதோ: எப்படி பிரச்சாரம் செய்தீர்கள்?

சஜககிசெ: பிரசுரத்தை கொண்டு போய் கொடுத்தோம். 

ஏதோ: அவ்வளவுதானா?

சஜககிசெ: மக்கள் நிதி கொடுத்தார்கள்.

ஏதோ: எவ்வளவு?

சஜககிசெ: சில ஆயிரங்களில் கொடுத்தார் கள். பிரசுரத்திற்கான கட்டணம், போராட்டப் பயண செலவு போக மீதி இருப்பு கிளையி லேயே உள்ளது.
ஏதோ: உங்கள் அமைப்பில் இருப்பது போல் கீழ்மட்ட அமைப்புக்கள் மிகவும் திறமை யாக இயங்க வேண்டும் என்பது எங்களுக்கும் ஆசைதான். ஆனால், எங்கோ இடைவெளி உள்ளது. நாங்கள் கற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கிறோம். (உரையாடல் இங்கே முடிகிறது)

அந்தக் கட்சியின் அமைப்பு பலத்தால் சில நாட்களில் சில லட்சம் மக்களை பார்த்துவிட்டதாக சொல்கிறார்கள். நமது அமைப்பில் 100 பேர் 10,000 பேரை பார்க்கச் சொல்கிறோம். அவர்கள் 100 பேர் 100 பேரை பார்ப்பதே இலக்காக சொல்கிறார்கள்.

ஏஅய்சிசிடியு பிரச்சார இயக்கம் சரியான சூழலில் நடத்தப்படுவதை, பிரச்சாரத்தில் சந்திக்கும் மக்களின் பதில்வினைகளைப் பார்க்கும் போது புரிந்துகொள்ள முடிகிறது.

பிரச்சாரம் கூடுதல் நேரம் எடுக்கிறது. பத்து பேர் ஒரு தெருவுக்குள் போனால் எவ்வ ளவு குறைவாக பேசினாலும் 300 வீடுகளைத் தான் பார்க்க முடிகிறது. நம் தோழர்கள், பேசு வதை மக்கள் ஏற்கிறார்கள், அவர்கள் நெருங்கி பேசுவதால் அவர்களை தட்டிக் கழிக்க தோழர் களால் முடியவில்லை. கவலைகள், எதிர்பார்ப்பு கள், விருப்பங்கள் என மக்கள் தோழர்களுடன் பரிமாறிக் கொள்கிறார்கள். போராட்டப் பங்களிப்பாக நிதி தருகிறார்கள். தோழர்களும் பத்திரிகை தருகிறார்கள், சந்தா, உறுப்பினர் சேர்ப்பு என பிரச்சாரம் தொடர்கிறது. இது போன்ற ஊடாடலை, சந்திக்கிற 300 வீடுகளில், 15 வீடுகளில் காண முடிகிறது.

100க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள், போராட்டம் பற்றி தோழர்கள் பேசுவதைக் கேட்டு நிதியும் தருகிறார்கள். இன்னும் ஒரு 100 வீடுகளில் குழந்தைகள், முதியவர்கள், வரவேற்கிறார்கள். தோழர்கள், அரசுப் பள்ளி, முதியோர் பென்சன் கேட்டு போராட்டம், எனச் சொல்லிவிட்டு வருகிறார்கள்.
சில வீடுகளில் விவாதமே இருக்காது. கேட் திறக்காது. துண்டுப் பிரசுரம் பறக்காமல் இருக்குமா என்ற கவலையுடன் தோழர்கள் கேட்டின் மீது சொருகிவிட்டு வருகிறார்கள். இது பார்த்தவர் கணக்கிலும் வராது.

சில வீடுகளில் தோழர்கள்  விந்தையான விஷயங்களைச் சொல்வதாக, விற்பனை பிரதி நிதியை பார்ப்பது போல் பார்ப்பார்கள். நிதி கேட்டால் இல்லை என்பார்கள். சரி, நன்றி படியுங்கள் என்று சொல்லி துண்டு பிரசுரத்தைத் தந்து விட்டு தோழர்கள் புறப்படுவார்கள்.

சில வீடுகளில் கிண்டல் கேலி உள்ளிட்ட அறிவுப்பூர்வமான கேள்விகள் கேட்டு தம் வர்க்க இயல்பை வெளிப்படுத்துவார்கள். உங்களால் என்ன முடியும் என கேட்பார்கள். யாராலும் எந்த நிலையும் மாறாது என்று பேசிக் கொண்டே இருப்பார்கள். தோழர்களை பிய்த்துக் கொண்டு வரவேண்டியிருக்கும்.

மக்கள் சந்திப்பு இயக்கத்தில்  தோழர்களின் அனுபவங்களை எழுதிக்கொண்டே போகலாம். வகைமாதிரி ஊடாடல்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

இப்படித்தான் சென்னையில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடக்கிறது. அம்பத்தூரில் அய்ந்து டிவிசன்களிலும், ஒன்றரை லட்சம் மக்களை சந்திக்க வேண்டும் என முடிவு செய்யப் பட்டதில், மாவட்ட ஏஅய்சிசிடியு தலைவர் தோழர் பழனிவேல் உதவியுடன், மோகன், கண்ணன்,  தலைமையில் 10,000 குடும்பங்களை (வீடுகளை), 25,000 பேரை சந்திக்க 120 பேர் 16 நாட்கள் பங்கெடுத்துள்ளனர். ரூ.20,000 நிதி திரட்டி உள்ளனர்.

முனுசாமி, லில்லி, வேணுகோபால், பால கிருஷ்ணன் ஆகிய தோழர்கள் தலைமையில் நடந்து வரும் இயக்கத்தில் தொழிற்சாலை நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் கட்சிக் கிளை செயலாளர்கள், முன்னோடிகள் என 90 தோழர் கள் பங்கேற்புடன் மங்களபுரம், மண்ணூர்பேட் டையில் 5,000 குடும்பங்கள், 15,000 பேரை சந்தித்துள்ளனர். ரூ.7,500 நிதி திரட்டியுள்ளனர்.

தோழர்கள் பசுபதி, வீரராகவன், மணி, சேகர், வீரப்பன், ராஜேந்திரன், இவர்களுடன் 70 தொழிற்சாலை சங்க கிளைகளின் தோழர் கள், 14 நாட்கள், சராசரியாய் 2 மணி நேரம் என 2,500 குடும்பங்களைச் சந்தித்துள்ளனர். ரூ.8,000 நிதி திரட்டியுள்ளனர்.  வரதராஜபுரம், முகப்பேர், ஒரகடம் பகுதிகளிலும், 2,500 குடும்பங்களையும் சந்தித்துத்துள்ளனர்.

மக்களை சந்தித்த குழுக்களின் வேலைப் பகுதிகளில் 2014 தேர்தலில் நமக்குக் கிடைத்த வாக்குகளை செல்வாக்காக மாற்றுவதை மனதில் கொண்டு தலைமை தாங்கும் தோழர்கள் செயல்பட்டுள்ளனர். தோழர்கள் இந்த இயக்கத்தில் சந்தித்த மக்கள் மத்தியில் இருந்து அக்டோபர் 28 சிறை நிரப்பும் போராட்டத்துக்கு அணிதிரட்டுவது, அவர்கள் மத்தியில் இருந்து கட்சி உறுப்பினர் சேர்ப்பது ஆகிய அடுத்த கட்ட கடமைகளை நிறைவேற்றும், பல்முனைப் பட்ட, பல பரிமாண வேலைகளை எடுத்துச் செல் லும் வாய்ப்புகளையும் கண்டறிந்துள்ளனர்.

இந்தப் பகுதிகளில் இன்னும் நிதானமாக இன்னும் நிறைய நேரம் செலவு செய்து மக்களைச் சந்திக்கவே நாம் விரும்புகிறோம். மீண்டும் இதேபோன்ற முயற்சிகள் அக்டோபர் 5க்கு பிறகு மேற்கொள்ளப்படும்.

இந்தப் பகுதிகளை தாண்டியுள்ள மக்கள் மத்தியிலும் பிரச்சாரத்துக்கு வரவேற்பு உள்ளது. செப்டம்பர் இறுதிக்குள் 1,00,000 பேர் சந்திப்பு நிறைவுறும்.
மக்கள் சந்திப்பு இயக்கத்தின் ஊடேயே காஷ்மீர் மக்களுக்கான வெள்ள நிவாரண நடவடிக்கையில் செப்டம்பர் 10 - 14 தேதிகளில் 200 பேரை ஈடுபடுத்தி நிதி திரட்டும் இயக்கம் நடத்தப்பட்டது.   

சென்னையில் உள்ள ஜிம்கானா கிளப், காஞ்சி மருத்துவமனை, அகர்வால் பவன், அரசு அச்சகம் கிளைகளின் தோழர்கள், வடசென்னை, அயனாவரம், பெரம்பூர் ஆகிய மய்யங்களில் பிரச்சாரம் மேற்கொண்டனர். தோழர்கள் பொன் ராஜ், பி.டி.ராஜசேகர், குப்பாபாய், ஜேம்ஸ், பழனி, கதிரேசன், எம்.ஆர்.பாலகிருஷ்ணன்  பங்கேற்றனர். 15,000 பேரை சந்தித்துள்ளனர் ரூ.7000 நிதி திரட்டியுள்ளனர்.

செப்டம்பர் 15 முதல் பாதயாத்திரைகள், தெருமுனைக்கூட்டங்கள், ஊர்க் கூட்டங்கள் மூலம் பரவலாக மக்களை சந்திப்பது, திருபெரும்புதூரின் இளம்தொழிலாளர்கள், திருவெற்றியூரின் பாரம்பரிய தொழிற்சாலைகளின் தொழிலாளர் மத்தியில் என மக்கள் சந்திப்பு இயக்கம் விரிவடையும்.

டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும்

கன்னியாகுமரி மாவட்ட இகக(மாலெ) ஊழியர் கூட்டம் 08.09.2014 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் தோழர் அந்தோணிமுத்து தலைமை தாங்கினார். கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி கலந்து கொண்டார். மாவட்டத் தலைமைக்குழு உறுப்பினர்கள் சுசீலா, சந்திரமோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பெண் தோழர்கள் ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை, விலைவாசிகள் உயர்ந்து கொண்டே போகின்றன, இலவசங்கள் கொடுத்து ஏமாற்றுகிறார்கள், டாஸ்மாக் சாராயக் கடைகளால் எல்லா குடும்பங்களின் வாழ்க்கையும் நாசமாகிறது என்று தங்கள் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினார்கள். டாஸ்மாக் கடைகளை மூடுவதற்காக எத்தகைய போராட்டத்தையும் நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக பெண் தோழர்கள் கூறினார்கள்.

முதற்கட்டமாக குளச்சல், ரீத்தாபுரம் போன்ற இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள 5 சாராயக் கடைகளை மூட வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்த முடிவானது. இதை ஏஅய்சிசிடியு 8ஆவது மாநில மாநாடு பிரச்சாரத்துடன் இணைத்து பல்லாயிரக்கணக்கான கையெழுத்துக்ளையும் பெறுவது என்றும் அந்தக் கையெழுத்துக்கள் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நாகமுத்து தீர்ப்பையும் இணைத்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கொடுத்து குடியிருப்புப் பகுதிகளில் உள்ள கடைகளை உடனடியாக மூட வலியுறுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. முடிவெடுத்த மறுநாளே பெண் தோழர்கள் தோழர் அந்தோணி முத்துவிடம் எப்போது கையெழுத்து இயக்கத்தைத் துவக்கலாம் என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

நெல்லை குடியிருப்புப் பகுதிகளில் தமிழக உழைக்கும் மக்கள் சாசனத்தின் மீதான மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் சந்திப்பின் போது பெண்கள் சாராயக் கடையை மூடவேண்டும் அதற்கு நீங்கள் எங்கு கூப்பிட்டாலும் வருகிறோம் என்று தோழர்களிடம் தெரிவித்துள்ளார்கள். 10.09.2014 அன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தில் இகக(மாலெ) அரசியில் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி கலந்து கொண்டார். அப்போது எல்லா குடும்பத்தில் உள்ள பெண்களும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள்.

தமிழக மக்களின் தலையாய பிரச்சினையாக இப்போது இருப்பது டாஸ்மாக் கடைகள்தான். எங்களுக்கு இலவசப் பொருள்கள் வேண்டாம், உழைப்பதற்கு கூலி தர வேண்டும், அந்தக் கூலி ஒழுங்காக வீடு வந்த சேர டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பதே அனைவருடைய கோரிக்கையாக உள்ளது. குமரி, நெல்லை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதே குரல்கள்தான் கேட்கின்றன. ஆனால், அது ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு மட்டும் கேட்கவில்லை. 

குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இகக மாலெ, ஏஅய்சிசிடியு இணைந்து டாஸ்மாக் சாராயக் கடைகளை மூடக் கோரி இயக்கம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சொற்கொல்லர் உரைகளில் பின்னுக்குத் தள்ளப்படும் பிரச்சனைகள்

முதலாளித்துவம் தன்னைப் போன்ற ஒரு உலகைப் படைத்திடுகிறது என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் சொல்லப்படுகிறது. சுற்றி இருக்கும் எதுவும் அதிலிருந்து தப்பித்துவிட முடிவதில்லை. முதலாளித்துவத்தைத் தாங்கிப் பிடிப்பவர்கள், சுற்றியிருக்கும் அனைத்தும் தன்னைப் பற்றியே பேச வேண்டும், எங்கும் தன் குரலே கேட்க வேண்டும் என்ற இயல்பு உடையவர்களாக இருக்கக் கூடும். ஹிட்லர் அப்படி இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இன்று நாம் அந்த இயல்பை மோடியில் காண முடிகிறது. நார்சிசம் என்று ஆங்கிலத்தில் சொல் வார்கள். தமிழில் தற்காதல் என்று சொல்லலாம்.

ஹிட்லர், மோடி என அதிகாரத்தில் இருப்பவர்களைப் பொறுத்தவரை இது வெறும் குண இயல்பு மட்டுமல்ல. ஆளுகை முறை. தனது கருத்துப் பரப்பல் கடமையில் சற்றும் தளராமல், இடைவெளி விடாமல் ஈடுபடும் இயல்பு. இந்த இயல்பில் இருந்து, எதிர்கால இந்தியாவிடம் தன் கருத்தை விற்கும் அல்லது திணிக்கும் முயற்சியில் 2014 ஆசிரியர் தினத்தை தன் தினம் ஆக்கிக்கொண்டார் மோடி.

பள்ளிகளுக்கு மோடி உரையை ஒளி, ஒலி பரப்ப சிறப்பு ஏற்பாடுகள் செய்ய கட்டளை பிறப்பிக்கப்பட்டது. எங்கும் மோடி. எதிலும் மோடி. இது, திணிப்பு என்ற எதிர்ப்புக்கள் எழுந்த பிறகு, பள்ளிக்கூடங்கள் முடிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. நடைமுறையில் திணிப்பு இருந்தது. ராஞ்சியில் அரசுப் பள்ளி ஒன்றின் வாயிற் கதவுகளை மூடிவிட்டார்களாம். மூன்று மணிக்குத் துவங்கிய ஒன்றரை மணி நேர மோடி உரை முடிந்த பிறகே கதவுகள் திறக்கப்பட்டு, மாணவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டார்களாம். 18 லட்சம் பள்ளிகளின் 1.2 கோடி மாணவர்கள் மோடி பேசியதை கேட்டனர் என சொல்லப்படுகிறது.

கற்பித்தல் வாழ்க்கை முறை, கற்றல், ஜப்பானிய கல்வி முறை என பிரசங்கம் (பிரச்சாரம்?) செய்து மோடி ஆசிரியர் தினத்தை ஆக்கிரமித்தார்.

 சொற்கொல்லர் (சொற்களால் கொல்பவரா?) புறப்பட்டுவிட்டதாக, மோடி ஆதரவு ஊடகங்கள் வழக்கம் போல் ஊதிப் பெருக்கிக் காட்டின.

சமூக வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் மோடி தலையிடப் பார்க்கிறார். மக்கள் பிரச்சனைகளில் பிரதமர் தலையிட வேண்டும்தான். தலையீடு எந்த அரங்கில் நடக்கிறது, எப்படிப்பட்டது, என்ன நோக்கம் கொண்டது என்பது கேள்வி.

தனது ஒன்றரை மணி நேர ஆசிரியர் தின உரையில் ஆசிரியர்கள் பற்றிப் பேசுவதை விட மாணவர்களைப் பற்றியே கூடுதலாக மோடி பேசினார். மாணவர்கள் பற்றி பேசியதிலும் கல்வி வர்த்தகமயத்தின் நாசகர விளைவுகளால் அவர்கள் மதிப்பெண் பெறுகிற எந்திரங்களாகி விட்டிருப்பதைப் பற்றியோ, காசுக்கு மட்டும் கல்வி என்றானதால், கல்வி கற்க முடியாமல் போய்விடும் பெரும்பான்மை குழந்தைகள் பற்றியோ அவர் பேசவில்லை. அதிகபட்சம் பெண் கல்வி, அதை உறுதிப்படுத்த பள்ளிகள் தோறும் கழிப்பறைகள் பற்றி பேசினார். பெண் குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்தி விடுவது கழிப்பறை இல்லாததால்தான் என்று நம்மை நம்பச் சொல்கிறார். நிஜக் காரணமான கல்வி தனியார்மயத்தை தப்பிக்கச் செய்கிறார்.

ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்கள் பற்றி பேசுவதில் அவருக்கு, அரசின் அலட்சியத்தால் ஏற்பட்டுள்ள தடைகள் உள்ளன. ஆசிரியர்கள் பற்றி பேசினால், நாடு முழுவதும் மிகக் குறை வான சம்பளத்தில் கற்றல் பணியில் இருக்கிற பல லட்சக்கணக்கான துணை ஆசிரியர்கள், அவர்கள் பணிநிலைமைகள், வாழ்நிலைமைகள் பற்றி அவர் பேச வேண்டியிருக்கும்.

மாதக் கணக்கில் சம்பளமே கிடைக்காமல், ஒரு நாள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் துணை ஆசிரி யர்களாக பணியாற்றுபவர்கள் எண்ணிக்கை அதிகம். அதனால், ஆசிரியர்கள் பற்றிப் பேசு வதையே தவிர்த்துவிட்டதோடு, ஆசிரியர் பணிக்கு தன்னார்வலர்கள் வேண்டும் என்று வலியுறுத்துகிறார். கற்பித்தல் தேச நிர்மாணத் துக்கு தேவையான மக்கள் இயக்கமாக மாற, பொறியாளர்கள், மருத்துவர்கள் என கற்றோர் அனைவரும் வகுப்புகள் நடத்த வேண்டும், ஒவ்வொருவரும் வாரத்தில் ஒரு நாள் வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிக்குச் சென்று பாடம் நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

(நாட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே உட்கார்ந்திருப்பதில்லை. வாழ வழிதேடுவதில் குறைந்தது 14 மணி நேரமாவது வீட்டுக்கு வெளியில்தான் செலவு செய்கிறார்கள். வீடு திரும்பி உண்டு, உறங்கி, பின் எழுந்து மீண்டும் பிழைப்பு தேடி வெளியே செல்லத்தான் அவர் களுக்கு நேரமிருக்கிறது. இன்னும் கூடுதல் சுமை தாளாது). துணை ஆசிரியர்களுக்கு, அந்தக் குறைவான சம்பளம் கூட ஏன் தர வேண்டும், அவர்களை ஒரேயடியாக விரட்டி விடலாம் என மோடி கருதுகிறார்.

ஆசிரியர் பணி ஒரு தொழில் அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை என்கிறார் மோடி. நல்லது. ஆசிரியர்கள் அப்படித்தான் கருதுகிறார்கள். தங்கள் பணியில் பெருமிதம் கொள்கிற ஆசிரியர்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள். கற்றல் பணியோடு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, தேர்தல்கள் நடத்துவது என வேறுவேறு வேலைகள் காலம் காலமாக அவர்கள் மீது சுமத்தப்பட்டும் அந்த கடமைகளையும் குறைவின்றி நிறைவேற்றிக் கொண்டு, கூடவே கற்றல் பணியையும் விடாமல் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கான இலவசத் திட்டங்கள் அனைத்தும் ஆசிரியர்கள் மூலமே நிறைவேற்றப்படுகின்றன. அக்கம்பக்கமாக அதே பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் வேறு விதமான சம்பளம் பெறுவதைப் பார்க்கும் துணை ஆசிரி யர்களும் தங்கள் பொறுப்பை நிறைவேற்றத்தான் செய்கிறார்கள். மாணவர்கள் குறைவான மதிப்பெண் பெறும்போது, ஆசிரியர்களை குற்றம் சொல்ல முந்திக்கொண்டு வருபவர்கள், ஆசிரியர்கள் மீது கற்பித்தல் அல்லாத பணிகள் அளவற்று திணிக்கப்படுவது பற்றி ஒருபோதும் வாய்திறப்பதில்லை. காணுமிடமெங்கும் பொறுப்பைத் தட்டிக் கழிப்பது ஆட்சியாளர்கள்தானே தவிர, ஆசிரியர்கள் அல்ல.

ஜப்பானில் மாணவர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகளையும் கழிப்பறைகளையும் சுத்தம் செய்யும் பாரம்பரியம் இருப்பதாக மோடி சொன்னார். அதுபோல், ஏன் இந்தியாவிலும் நாம் ஏன் செய்யக் கூடாது என்று கேட்டார். இந்தியாவில் பெரும்பாலான பள்ளிகளில் வகுப்பறைகளும் கழிப்பறைகளும் இல்லை. தனியார் பள்ளிகளில் கூட கழிப்பறை பிரச்சனைதான். இருந்தால் சுத்தம் செய்ய வேண்டும்தான்.

கழிப்பறைகள் இருக்கிற சில அரசுப் பள்ளிகளில் அவற்றை சுத்தம் செய்ய தலித் மாணவர்கள் நிர்ப்பந்திக்கப்படுவதற்கு இட்டுச் சென்றுள்ள இந்திய, இந்துத்துவ பாரம்பரியம் பற்றி பெருமை கொண்டவர்தானே மோடி? மாணவர்களும், இருக்கிற வேலைகளுக்கும் கூடுதலாக ஆசிரியர் களும் துப்புரவுப் பணிகளும் செய்து கொள்ளுங் கள் என்கிறார் மோடி.

(மாணவர்களும் ஆசிரியர்களும் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுவிட்டால், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், துப்புரவு தொழி லாளர்களை பணிக்கு அமர்த்த வேண்டியிருக்காது). பாஜக அமைச்சர்களின், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் அவர் பெருமைப்பட்டுக்கொண்ட அந்த ஜப்பானிய முறையை அவர் முதலில் அமல்படுத்த வேண்டும்.

உலகெங்கும் ஆசிரியர்கள் தேவை அதிகரிக்கிறது, நாம் ஆசிரியர்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றார். இன்றைய நிலைமைகளிலேயே, 12 லட்சம் ஆசிரியர்கள் இந்தியாவி லேயே தேவை. அதற்கு உருப்படியாக என்னத் திட்டம் வைத்திருக்கிறார் என்று மோடி தனது உரையில் சொல்லவில்லை. ஆசிரியர் பணிக்கு யாரும் முன்வருவதில்லை என்று மோடி ஒப்புக் கொள்கிறார் என்றால், அவர்கள் நிலைமைகள் மோசமாக உள்ளது என்பதையும் அவர் ஒப்புக் கொள்கிறார். கல்வி சிறந்த தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் நிலை மைகள் திருப்தி தருவதாக இல்லை. ஒப்பீட்டுரீதியில் முன்னேறிய மாநிலமான தமிழ்நாட்டில் இது நிலைமை என்றால் மற்ற மாநிலங்கள் இந்த விசயத்தில் இன்னும் பின்தங்கி இருக்கத் தான் வாய்ப்பு உள்ளது.

மோடியின் ஆசிரியர் தின உரை, கல்வி பற்றி, இன்றைய சமூகத்தில் மேலோங்கியுள்ள குட்டி முதலாளித்துவ கருத்துக்களின் கோர்வை யான தொகுப்பு. இந்தக் கருத்துக்களில் ஒளிந்து கொண்டு, கல்வி பற்றிய தனது பொறுப்பில் இருந்து நழுவி விட மோடி முயற்சி செய்கிறார்.
எப்படியாயினும், 2024ல் பிரதமர் பதவி யில் அவர் இருக்க மாட்டார் என்று மோடி உறுதியாகச் சொன்னார். அவர் அய்க்கிய அமெ ரிக்க நாடாளுமன்ற முறையுடன் ஒப்பிட்டு அப்படிச் சொல்லியிருக்கலாம். அவ்வளவு காலம் இந்திய மக்கள் விட்டுவைக்க மாட் டார்கள். தங்கள் கற்பித்தல் பணியில் குறை வைக்காமல் மோடி கற்க வேண்டிய பாடத்தை அவருக்கு கற்பிப்பார்கள்.

சட்டிஸ்கரின் பஸ்தாரில் உள்ள ஒரு பள்ளியின் மாணவி, மோடியுடனான ‘நேரடி ஊடாடலில்’ கேட்ட ஒரு கேள்வி, பாஜக முதலமைச்சர் ராமன் சிங்கை புகழ மோடிக்கு ஒரு வாய்ப்பு அளித்தது. ‘கல்வி பற்றிய கேள்வியா? அதுவும் மாவோயிஸ்டுகளால் ஏராளமாக ரத்தம் ஓடும் பூமியில் இருந்தா?’ என்று கேட்டு மோடி அந்த மாணவியை பாராட்டினார். பழங்குடி மக்களின் அறுவடை கால விழாக்களின் மீது மத்திய ரிசர்வ் படை போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பள்ளிக்குச் சென்றிருந்த மாணவர்கள் சிந்திய ரத்தம் பற்றி மோடி பேசவில்லை. 2012ல் சர்சேகுடாவில் நடந்த படுகொலையில், விடுமுறைக்கு வீட்டுக்கு வந்திருந்த 15 வயது காகா ராகுல் மற்றும் மத்கம் ராம்விலாஸ் என்ற இரண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் ‘மாவோயிஸ்டுகள்’ என்று முத்திரைக் குத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். 12 வயதே ஆன காகா சரஸ்வதியும் கொல்லப்பட்டார். அதே பகுதியில், அரசால் நடத்தப் படும் பள்ளிகளில் பழங்குடி மாணவிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டபோது, ‘நட்சத்திரங்கள் சரியில்லாததால்’ அது நடந்தது என்று சட்டிஸ்கர் உள்துறை அமைச்சர் சொன்னார். இந்த பாலியல் வன்முறை பற்றியும் மோடி பேசவில்லை. எம்எல் அப்டேட், 2014 செப்டம்பர் 09 – 15

கழிவுகள் ஜாக்கிரதை

சுற்றுச் சூழல் பாதிப்பே இல்லாமல் நாம் பொருளுற்பத்தி செய்ய வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார். இது சாத்தியமா?

‘கழிவுகளை நீக்கி, தூய்மையாக வைத்திருப்பதா? அப்படி ஒன்றை கேட்டதே இல்லை. சுத்தமில்லாத தண்ணீர், நகரங்களின் தெருக்களில் திறந்தவெளி சாக்கடைகளில் ஓடும் கழிவு நீர்; தங்கள் ஜன்னல்கள் வழியே கழிவுகளை வெளியேற்றுவதும் வீதிகளில் குப்பைகளை அப்படியே விட்டு நாற்றமடையச் செய்வதும் மக்கள் கடைப்பிடித்து வரும் பொதுவான வழக்கங்களாகும். எங்கு பார்த்தாலும் மனிதக் கழிவுகள் குட்டையாக தேங்கி நிற்கும். இறந்த விலங்குகள் (நாய், பூனைகள், எலிகள் மற்றும் குதிரைகள் கூட) வீதிகளில் அப்படியே கிடந்து பட்டு அழுகிக் கொண்டிருக்கும்.’

‘பெரும்பாலான தார்ச்சாலைகள், அந்த வழியே சென்றுவரும் குதிரைச் சாணங்களால் நிரம்பி மிகவும் அசுத்தமாக இருக்கும். இறந்த நாய்கள், பூனைகள் மற்றும் எலிகள் தெருக்களில் குப்பைகளாக இரைந்து கிடக்கும். வீட்டுக் காய்கறிக் கழிவுகள் மழைக்காலங்களில் தெருக்களிலுள்ள வெடிப்புகளில் மூன்று அடி அல்லது அதற்கும் அதிகமான ஆழம் வரை சென்று தேங்கி நிற்கும். குப்பைத் தொட்டிகள் எப்போதாவது மட்டுமே காலி செய்து சுத்தம் செய்யப்படும். அவை இறந்த விலங்கின் உடல் களாலும், வீட்டுக் கழிவுகளாலும் எப்போதும் நிரம்பி வழியும்.’

பிரதமர் தனது சுதந்திர தின உரையில் நம்மைச் சுற்றி இருக்கும் அருவருக்கத்தக்க குப்பைக் கழிவுகள்தான், நாம் ஒரு தேசிய குணாம்சம் பெறுவதை தடுப்பதற்கான மிகப் பெரிய தடைக்கற்கள் என்ற கருத்தை வலிமையாக எடுத்துரைத்தார். தேசத்தின் வரலாற்றின் மிக முக்கிய நாளில் முக்கியத்துவமில்லாத சிறிய விசயத்தின் மீது பிரதமர் அழுத்தம் கொடுத்துப் பேசுவது என்பது இது வரை இல்லாததாக தெரியலாம் என அவரே அங்கீகரித்தார். ‘நாம் கிராமத்தில், நகரத்தில், தெருக்களில், பகுதியில், பள்ளிக்கூடங்களில், ஆலயங்களில், மருத்துவமனைகளில் ஒரு துரும்பு குப்பையைக் கூட விடக் கூடாது என உறுதி எடுக்குமாறு’ 125 கோடி மக்களை கேட்க வேண்டும் என அவர் நினைத்திருக்கிறார்.

பிரதமரின் புத்திமதியில் இரண்டு அடிப்படைப் பிரச்சனைகள் உள்ளன. முதலாவதாக, அழுக்கும், குப்பையும் வெறும் கலாச்சார பிரச்சனைகள், தேசிய குணாம்சத்தில் உள்ள இந்தக் குறைபாட்டை ஒழுக்க நெறி சீர்திருத்தம் மூலம் மட்டுமே சரி செய்து விட முடியும் என்று சொல்வதாகத் தெரிகிறது. அதனால்தான் அவர் ‘நம் நாட்டு மக்கள் குப்பைக் கூளத்தை பரவ விட மாட்டோம் என்று முடிவு எடுத்தால் உலகத்தின் வேறு எந்த சக்தியால் நம் நாட்டு நகரங்களை, கிராமங்களை குப்பையாக்க முடியும்?’ என்று கேட்கிறார்.

இது சாமான்ய மனிதர்கள் கவனக்குறைவால் அழுக்கையும், குப்பைகளையும் பரப்புவதாகவும், மற்றவற்றோடு இதுவும் சேர்ந்து சுற்றுலா வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருப்பதாகவும், மோடி வலியுறுத்துவது, கழிவுகள் பற்றிய குறுகிய புரிதலுக்கு இட்டுச் செல்லக் கூடியது. நாட்டை சுத்தப்படுத்த வேண்டும் என்ற மோடியின் நல்லெண்ணம், அவரது பேச்சில் அழுத்தம் கொடுத்த இந்தியாவை உற்பத்தி துறையிலும், கணினித் துறையிலும் மய்யமாகவும், சுற்றுலாதளத்துக்கான இலக்காகவும் மாற்றி உலக சக்தியாக மாற்ற வேண்டும் என்ற பேச்சுக்கு நேர் எதிரானதாக இருக்கிறது.

மனிதகுலத்தின் பரிணாம வளர்ச்சியை மோடி பார்ப்பாரேயானால், சுத்தமும் குப்பைக் கழிவுகள் பற்றிய அணுகுமுறையும் பரந்த சமூக இயக்கப் போக்கிலிருந்து சுலபமாக பிரிக்கப்பட முடியாததென்றும், பொருளாதார, அரசியல், மருத்துவ மற்றும் விஞ்ஞான பின்புலத்திலிருந்து அதை பிரித்துத் தனியாக பார்க்க முடியாது என்றும் அவர் அறியக் கூடும். இல்லாவிட்டால் நாம் ஆரம்பத்தில் இரண்டு பத்திகளில் குறிப் பிட்டுள்ள விசயங்களை தவறாக எடுத்துக் கொண்டு அழுக்குப் படிந்த மூன்றாம் உலக நகரங்கள் என நினைக்க ஆரம்பித்து விடுவோம். ஆனால் அவை அப்படியல்ல.

மாறாக, அவை 18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளின் முறையே மிகப் பெரிய நவீன நகரங்களான லண்டனும், நியுயார்க்கும்தான். சமூகம் இந்நிலைக்கு எப்படி வந்தது, இன்று எப்படி உள்ளன என்ற பெரிய, நீண்டகால சித்திரம் பற்றிய புரிதல் முக்கிய மானது. அவ்வப்போது எடுக்கப்படும் மேலான தூய்மை மற்றும் துப்புரவு நடவடிக்கைகள் இந்தியாவுக்கு முழுக்க தேவையான நடவடிக் கைகள். மிகப் பரந்த சமூக - பொருளாதார மாற்றமில்லாமல் எளிதாக பாதுகாக்கக் கூடிய உயிரிழப்பை தடுக்க முடியாது என்று தவறாக கருதிவிடக் கூடாது. உலகம் முழுவதும் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் இறப்பிற்கு வயிற்றுப்போக்கு நோய் முக்கிய காரணமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு 2195 குழந்தைகள் இறக்கின்றன. எய்ட்ஸ், மலேரியா, அம்மை நோய் என எல்லாவற்றையும் சேர்த்தாலும் அதை விட இது அதிகமாகும்.

சுத்தமாக இருப்பது என்பது மேலான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது என்பது மாத்திரமல்ல. கூடவே தற்போது மிகப் பெரும் கொடுங்கனவாக நடைமுறையிலுள்ள உற்பத்தி மற்றும் நுகர்வு முறையால் உற்பத் தியாகும் குப்பைகளையும், கழிவுகளையும் மற்றும் எல்லா வகையான சுற்று சூழல் கேடு களையும் எதிர் கொள்வதுமாகும். குப்பைகளை உற்பத்தி செய்யும் இந்தப் பிரச்சனையை ஒதுக்கித் தள்ளுவதன் மூலம், மோடி முழு சித்திரத்தை இழக்கிறார். குப்பை, தவறுதலாக ஏழ்மை மற்றும் பின்தங்கிய தன்மையோடு இணைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையிலேயே, நான் என்னுடைய முந்தைய கட்டுரையில் விவாதித்தது  போல் ‘நவீன மனிதகுல நிலையின் குறியீடாக உள்ள, ஆனால் அப்படி அங்கீகாரம் பெறாத ஒரு பொருள் இருக்கிறது. அது ‘குப்பை’ கழிவு. அது, முதலாளித்துவத்தால் உந்தித்தள்ளப்படுகிற நகர்மயமாக்கத்தின் தொழில்மயமாக்கத்தின் பிரிக்கப்பட முடியாத உடன்விளைவாகிவிட்டது. கிராமப்புறங்களில் இருப்பவர்களை விட நான்கு மடங்கு கூடுத லாக நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் கழிவு களை உருவாக்குகிறார்கள். வளரும் நாடுகளை விட பல மடங்கு கூடுதலாக வளர்ச்சி பெற்ற நாடுகள் கழிவுகளை உருவாக்குகின்றன.

1900ல் உலக நகரங்களில் வாழ்ந்த 13% மக்கள் 3,00,000 டன் குப்பைகளை உற்பத்தி செய்தார்கள் என்றால் இன்று உலகத்தின் நகரத்தில் வாழும் மக்கள் தொகை 50% ஆகி 3.5 மில்லியன் டன் திடக் கழிவுகளை உற்பத்தி செய்கிறார்கள். (இது தொழிற்சாலை மற்றும் ஆபத்தான கழிவுகள் நீக்கிய விபரம் ஆகும்). கழிவுகள் பற்றிய உலக வங்கி அறிக்கையினை இணைந்து எழுதியவர்களில் ஒருவரான டேனியல் ஹோர்ன்வெக், 2100ல் இந்த எண்ணிக்கை 11 மில்லியன் டன்களை தொட்டுவிடும் எனக் கணிக்கிறார். 2050ல் நகரங்களில் வாழும் மக்கள் தொகையும் 70% ஆகிவிடும்.

தங்குதடையற்ற உற்பத்தியும், நுகர்வும் அதே போல், மனிதகுலத்தையும், சுற்றுச் சூழலையும் விலையாகக் கொடுத்து கழிவுகள் உற்பத்தியும் நடந்து கொண்டிருக்கும்போது தான், அசாதாரண சூழலில் மோடி உலகுக்கு அறைகூவல் விடுக்கிறார்: ‘வாருங்கள் இந்தியா வில் உருவாக்குங்கள்’, ‘வாருங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்’. 

வாகன உற்பத்தி, நெகிழி, நீர்மூழ்கி கப்பல், செயற்கைக் கோள் என எல்லா வகையான தொழில்களுக்கும் அழைப்பு விடுத்தார். அடிப்படையில் மேற்குலக நாடுகள் தடம்பதித்த பாதை இது. அதைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளும் சமீபமாக இப்போது சீனாவும் இதில் பயணிக்கின்றன. இதில் மீட்கவே முடியாத அழிவுகளை விட்டுச்செல்கின்றன. உதாரணத்திற்கு அமெரிக்காவின் 200 ஆண்டுகால தொழில்துறை முன்னேற்றத்துக்குப் பின், 40% நீர் நிலைகள் நீச்சலுக்கோ, மீன் வளர்ப்புக்கோ உகந்ததாக இல்லாமல் போய்விட்டது. ஈயத்தின் அளவு உயர்ந்த மட்டத்துக்கு போனதன் விளைவாக 20 லட்சம் குழந்தைகள் நரம்பியல் பாதிப்புக்கு ஆளாகக் கூடிய நிலையில் உள்ளனர். உணவில் உள்ள பூச்சிக் கொல்லி மருந்துகளால் மட்டும் 10 லட்சம் பேருக்கு புற்றுநோய் வரக்கூடும்.

பிரதமர் சுற்றுச் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல்தான் பொருட்களை உற்பத்தி செய்யச் சொல்கிறார். வரலாற்றில் எங்காவது வளர்ச்சிமய கற்பனாவாதத்தில் இருபுறமும் வெற்றி என்ற உதாரணம் உண்டா? அல்லது இந்தியாவில் எங்காவது சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத, உற்பத்தியோ அல்லது கழிவை அகற்றுவதோ அவசியம் என்று அங்கீகரிக்கப் பட்டிருக்கிறதா? மத்திய சுற்றுச் சூழல் அமைச் சகம் சமீபத்தில் சுரங்கம், சாலைக் கட்டமைப்பு, எரிசக்தி மற்றும் பாசனத் திட்டங்களுக்கும், வனப்பகுதியில் சுரங்கப் பணிகளுக்கு கிராம சபையின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற நிபந்தனை உட்பட நடப்பிலுள்ள மெலிதான கட்டுப்பாடுகளைக் கூட நீர்த்துப் போகச் செய்யும்போது சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத உற்பத்தி என்பது நகைமுரணானது என்று வர்ணனையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பிரதமரின் கனவுகளிலேயே ஆகப் பெரியது கிராமப்புற மக்களுக்கும் கணினி நிர்வாகத்தைக் கொடுக்கும் ‘டிஜிட்டல் இந்தியாவை’ உருவாக்குவதுதான். ஆனால் இந்த ‘டிஜிட்டல் இந்தியா’ இந்தக் கோளில் மிருதுவாக பய ணித்து நம்மைச் சுற்றியிருக்கும் குப்பைகளை அகற்றுமா? இந்தக் கற்பனாவாதமும் சாத்தியமாகக் கூடியதாக தெரியவில்லை. ஏராளமான எரிசக்தியை(எனர்ஜி)யும், மூல வளங்களையும் கொண்டுதான் மின்னணுப் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும் எனும்போது, (ஒரு கம்ப்யூட்டர் தயாரிக்க 2800 கேலன் தண்ணீரும், 700 வகையான ஆபத்தான, வேதியியல் பொருட்களும் தேவைப்படுகிறது) மின்னணு கழிவுதான் உலகத்திலேயே வேகமாக வளர்ந்து வரும் கழிவு வகையினமாக உள்ளது.

அய்நா வின் ஸ்டெப் முன்முயற்சி, ஈயம், காட்மியம், நிக்கல், பாதரசம் மற்றும் ஆர்செனிக் ஆகிய வற்றை உள்ளடக்கிய மின்னணுக் கழிவுகள் 2017ல் எகிப்தின் 8 மிகப்பெரிய பிரமிடுகளின் எடைக்கு ஈடானதாக இருக்கும் என்கிறது.

புது வகையான கணினிகளையும், கைப்பேசிகளையும் ‘வித்தியாசமாக யோசித்து’ வாங்குங்கள் என்று நமக்கு சொல்லப்படும்போது இது ஒன்றும் வியப்புக்குரியதல்ல. ஒரு வருடத்திற்கு 300 மில்லியன் கணினிகளும், 1 மில்லியன் கைப்பேசிகளும் உற்பத்தி செய்யப் படுகின்றன. 2009ன் அய்நா சுற்றுச்சூழல் நிகழ்ச்சி பற்றிய திட்டம் ஒன்று, 2020 வாக்கில் இந்தியாவில் கணினி மூலம் உருவாகும் மின் னணு கழிவு 5 மடங்கும், கைப்பேசி மூலம் உருவாகும் கழிவு 18 மடங்கும் உயர்ந்திருக்கும் என்கிறது. இந்தக் கழிவுகளை வைத்துக் கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம்? வளர்ந்த நாடுகள் அவர்கள் நாட்டு குப்பைக் கிடங்கில் கொட்டுவார்கள் அல்லது பெரும் அளவிலான கழிவுகளை ஏழை நாடுகளில் கொட்டி அந்த நாட்டு குப்பைகளோடு சேர்த்து இதையும் சமாளிக்கட்டும் என்று விட்டுவிடு வார்கள். நாம் எங்கே போய் கொட்ட முடியும்?

நம் நாட்டில் சட்ட வரையறை ஏதும் இல்லாதிருப்பதால், 90% மின்னணு கழிவுகள் மறுஉற்பத்தி செய்யப்படும்போது, எது மாதிரியான ‘டிஜிட்டல் இந்தியாவை’ பிரதமர் மனதில் வைத்திருக்கிறார்? இங்கு குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்களையும் தங்கள் சுற்றுப்புறங்களையும் மாசுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். நமது டிஜிட்டல் வருங்காலத்திற்காக தம் வாழ்வை இழந்து கொண்டிருக்கும், மின்னணுக் கழிவில் வேலை செய்யும் 4 - 5 லட்சம் குழந்தைகளை நாம் எவ்விதமான கனவுகாணச் சொல்ல முடியும்?

இறுதியாக மோடி, சுற்றுலா ‘பரம ஏழைகளுக்கு வேலை வாய்ப்பைக் கொடுக்கும்’ என்று சொல்லி மாயாஜால வித்தை காட்டப் பார்க்கிறார். உலக சுற்றுலாவும் அதன் விளைவான அதிகரித்த விமானப் பயணமும் தட்பவெப்ப நிலை மாறுதலுக்கு மிகப் பெரிய பங்களிக்கின்றன என்பதை காணத் தவறுகிறார். இதோடு கூடவே சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத சுற்றுலா பற்றிய அழுத்தம் தராமல் இருப்பதும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் மந்தைக் கூட்டம் போல் வருவதும் ஏற்கனவே விமானப் போக்குவரத்தால்  பாதிக் கப்பட்டுக் கிடக்கும் ஓசோன் மண்டலத்தை இன்னும் பாதிப்படையச் செய்வதில் பங்காளி களாகவே ஆக்கும்.

எனவே குப்பை என்பது சுற்றியிருக்கிற இடத்தில் சிறிய அழுக்குகளை விட்டுச் செல்வது என்பது மட்டுமல்ல. மாறாக மனிதகுல வரலாற்றிலேயே இதுவரை இல்லாத உற்பத்தி மற்றும் நுகர்வு கட்டமைப்பு முறையினால் மலை போல் குவியும் ஆபத்தான கழிவுகள் மற்றும் மாசுக்களை உருவாக்குவதும், அதை அப்புறப்படுத்த ஒப்பீட்டுரீதியான முன்னேற் றங்கள் இல்லாமல் இருப்பதுமாகும். இதே கட்டமைப்பு நெருக்கடிக்கு வினையாற்றாவிட்டால், உலகத்தின் மோசமான காற்று மாசுபாடு அடைந்துள்ள 20 நகரங்களில் இந்தியாவில் 13 நகரங்கள் உள்ளன என்று உலக சுகாதார நிறுவனம் பட்டியலிடும்போது, குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் போடுவதை உத்தர வாதம் செய்துவிட்டால் போதும் என்ற, சுத்த மாக இருப்பது பற்றிய மாயைகளில் நாம் இருப்பவர்களாகி விடுவோம்.

உலகம் முழுவதும் கழிவுகளையும், மாசு படுதலையும் குறைக்க எடுக்கக் கூடிய நடவடிக்கைகள், தங்குதடையற்ற தொழிற்சாலை உற்பத்தியினாலும், நகர்மயமாக்கலினாலும் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் உலகத்தின் பொருளுற்பத்தி மற்றும் டிஜிட்டல் மய்யமாக உருவாக வேண்டும் என்று விரும்புவதாலும் வீரியம் இழக்கச் செய்யப்படுகிறது. 2025ல் தெற்கு ஆசியா அதிலும் குறிப்பாக இந்தியா கழிவுகளை உருவாக்குவதற்கான பிராந்தியமாக வேகமாக வளர்ந்து வருகிறது என்று ஹோர்ன் வெக் கணிக்கிறார். சுத்தமாக இருப்பது மற்றும் சுகாதாரத்திற்கு மோடி மகாத்மா காந்தியை அழைக்கிறார். ஆனால் காந்தி சூறாவளி விளைவுகள் முழுமையாக தெரிவதற்கு முன்பே, அப்போதே தொழிற்சாலை நவீனத்தில் ஆன்மா அற்ற தன்மை பற்றி விமர்சனம் செய்திருப் பதை மோடி ஏனோ மறந்துவிட்டார்.

(டாக்டர் நிஸ்ஸிம் மன்னுத்துக்கரன் கனடாவில் உள்ள டல்ஹவுசி பல்கலைகழகத்தைச் சேர்ந்தவர்)

காஷ்மீர் வெள்ள நிவாரண நிதி

காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இகக (மாலெ) சார்பாக வெள்ள நிவாரண நிதி நாடு முழுவதும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. தமிழ்நாட்டில் சென்னை, நெல்லை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் மத்தியில் வெள்ள நிவாரண நிதி பெறப்பட்டது. நெல்லையில் 10.09.2014 அன்று மூன்று மணி நேரத்தில் மக்கள் மத்தியில் ரூ.5,200 திரட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இகக(மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி, நெல்லை மாவட்டச் செயலாளர் தோழர் சங்கரபாண்டியன், ஏஅய்சிசிடியு நிர்வாகிகள் கே.கணேசன், சுந்தர்ராஜ் உட்பட 30 பேர் கலந்துகொண்டனர்.

இடிந்தகரையில் இகக(மாலெ)

இடிந்தகரை போராட்டத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு மற்றும் இடிந்தகரை தியாகிகள் அந்தோணிஜான், சகாயம், ரோஸ்லின், ராஜசேகர் ஆகியோரின் 2ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி 10.09.2014 அன்று இடிந்தகரையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இகக(மாலெ) உட்பட பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டனர். இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ரமேஷ் கலந்து கொண்டனர். தியாகிகள் நினைவுச் சுடர்களில் ஒன்றை, போராளிப் பெண்களிடம் இருந்து தோழர் பாலசுந்தரம் பெற்றுக்கொண்டார். ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்கள் மத்தியில், தோழர் பாலசுந்தரம் பேசினார். காங்கிரசிடமிருந்து நாட்டைக் காப்பாற்றப் போவதாகக் கூறி கார்ப்பரேட்டுகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்த நரேந்திரமோடி, 100 நாட்கள் ஆட்சியில் காங்கிரசின் கொள்கைகளை, ஆர்எஸ்எஸ்ஸின் மதவெறி நிகழ்ச்சிநிரலை அமல்படுத்துகிறார்.

தனது பதவி ஏற்பு விழாவிற்கு இலங்கையில் தமிழினத்தை அழித்த ராஜபக்சேவை பட்டுக் கம்பளம் விரித்து அழைத்து வந்தார். பிரதமராகப் பதவியேற்றபின் ரஷ்யா சென்ற மோடி, ரஷ்ய பிரதமர் புடினை கூடன்குளத்திற்கு வந்து பார்க்குமாறு அழைப்பு விடுக்கிறார். ஆஸ்திரேலியப் பிரதமருடன் அணுஉலை ஒப்பந்தம் போடுகிறார். தான் கார்ப்பரேட்டுகளின் நாயகன் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். கார்ப்பரேட் மதவெறி ஆட்சிக்கு எதிராக முற்போக்கு ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும். மக்கள் போராட்டங்கள் மகத்தானவை. இந்தப் போராட்டம் 1988ல் இருந்தே 27 ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 1, 2 அணு உலைகள் மூடப்பட வேண்டும். 3, 4 அணு உலைகளை துவங்கக் கூடாது. இதற்காகப் போராடும் மக்களுடன் எப்போதும் ஒன்றுபட்டு நிற்பதுடன், இந்தப் போராட்ட செய்தியை இகக (மாலெ) நாடு முழுவதும் கொண்டு செல்லும் என்றார். 

இவர் வேற மாதிரி...?

என்டிபிசி நிறுவனம் 2012 - 2013க்கு ஈவுத் தொகையாக அரசுக்கு ரூ.4,700 கோடி கொடுத் துள்ளது. எல்லா பொதுத்துறை நிறுவனங்களும் அரசுக்கு ஈவுத்தொகை வழங்கும். தனியார் மின் உற்பத்தி நிலையங்களும் பிற தனியார் நிறுவனங்களும், வரிசலுகைகள் எல்லாம் போக, வரி கட்டிவிட்டு மீதியை பைக்குள் போட்டுக்கொள்ளும். அதனால், பொதுத்துறை நிறுவனங்களை போற்றி வளர்த்தால், அரசுக்கு வருவாய் இருக்கும். மக்கள் நலத்திட்டங்களுக்கு, வேறு வேறு திட்டங்களுக்கு, நிதி இல்லை என்ற பாட்டு பாடாமல் இருக்கலாம். கையில் உள்ள வெண்ணெய்யை விற்றுவிட்டு விஷத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அரசு பங்குகளை விற்க ரூ.58,000 கோடி இலக்கு வைத்திருக்கிறார்கள். அய்டிசி, எல்அண்டுடி ஆகிய தனியார் நிறுவனங்களில் அரசு பங்குகள் முறையே ரூ.31,500 கோடி, ரூ.12,100 கோடி மதிப்பில் உள்ளன. இவற்றை விற்றால் ரூ.43,000 கோடி கிடைத்துவிடும். இவற்றை விற்க அரசு தயக்கம் காட்டுகிறது. பிரமாதமான காரணம் சொல்கிறார்கள். அய்டிசி நிறுவனத்தில் உள்ள அரசு பங்குகளை அந்நிய நிறுவனங்கள் வாங்கி விட்டால் புகையிலை தொழில் அந்நிய நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் போய்விடுமாம். எல் அண்டுடி நிறுவனம் ராணுவம் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் அந்த நிறுவனத்தில் அரசு பங்கு வேண்டுமாம்.

இதைத்தானே நாடு முழுவதும் இருக்கிற மக்களும் சொல்கிறார்கள். அந்நிய நிறுவனங்கள் நாட்டின் செல்வத்தை கொள்ளையடிக்க வழி விடாதீர்கள், ராணுவம் போன்ற நாட்டின் பாதுகாப்பு தொடர்பான துறைகளில் தனியாரையும் அந்நியரையும் அனுமதிக்காதீர்கள் என்று சொல்லித்தான் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்கும்போது அரசுக்கு இல்லாத இந்த அக்கறை தனியார் நிறுவனங்களில் உள்ள பங்குகளை விற்கும்போது பீறிட்டு எழுகிறது.

புகையிலை தொழில் நாட்டுக்கு என்ன அவசியம்? பசித்திருக்கும் மக்கள் புகையிலையைத்தான் பசி தீர உண்கிறார்களா? அய்டிசி நிறுவனம் எப்படி போனால்தான் உங்களுக்கு என்ன? எல் அண்டு டி நிறுவனத்திடம் போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை ஏன் ஒப்படைக்க வேண்டும்? நேற்றைய, இன்றைய ஆட்சியாளர்கள், கார்ப்பரேட் நலன்களுக்காக கொள்கைகள், நடவடிக்கைகள் வகுத்துவிட்டு, அனைத்தும் சாமான்ய மக்களுக்காகவே செய்கிறோம் என்கிறார்கள்.

இதைத்தான், முதலாளி முதலாளியாய் இருப்பது, தொழிலாளர் வர்க்கத்தின் நலனுக் காகவே என்று முதலாளித்துவத்தைப் பாதுகாப் பவர்கள் வாதாடுகிறார்கள் என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை சொன்னது.

அய்டிசி, எல் அண்டு டி நிறுவனங்களில் அரசு எப்போது பங்கு வாங்கியது என்பது பற்றி சுவாரசியமான காரணக் கதை சொல்கிறார்கள். நாட்டு மக்களின் சிறுசேமிப்பை முறையாக நிர்வகிக்காமல் யுடிஅய் நெருக்கடியில் சிக்கிய போது, அதைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு எஞ்சிய சொத்துக்கள், யுடிஅய் சிறப்பு நிறுவனத்திடம் நின்றன. இந்த சொத்துக்கள், அய்டிசி, எல்அண்டுடி நிறு வனங்களின் பங்குகள். ஆக்சிஸ் வங்கியிலும் யுடிஅய் சிறப்பு நிறுவனத்தின் ரூ.11,500 கோடி மதிப்பிலான பங்குகள் உள்ளன. இந்தப் பங்குகளை எல்லாம் விற்றால் அரசுக்கு ரூ.55,000 கோடி வந்துவிடும். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க வேண்டியிருக்காது.

மோடி அரசின் திட்டத்தில் ரூ.4,700 கோடி ஈவுத் தொகை வழங்கியுள்ள என்டிபிசி, கோல் இந்தியா போன்ற நிறுவனங்களில் உள்ள அரசு முதலீடு அகற்றப்படவுள்ளது. கோல் இந்தியா தொழிலாளர் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்த விசயங்களில் அய்முகூ ஆட்சி முன்னெடுத்து பாதியில் விட்டதைத் தொடர் வதுதான் இப்போது செய்யப்படவுள்ளது.

மோடி அரசு இன்னும் ஒரு கூடுதல் சாய்வு நடவடிக்கையை வழக்கமான விளம்பரமின்றி எடுத்துள்ளது. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல் விசாரணையில் 1992 முதல் செய்யப்பட்ட நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தை அடுத்து, பல தனியார் நிறுவனங்கள் பாதிக்கப்படுவது தெரிந் தும், நாங்கள் வேற மாதிரி என்று காட்ட, தீர்ப்பை அப்படியே ஏற்றுக்கொள்வதாகவும் மீண்டும் புதிதாக நிலக்கரிச் சுரங்க ஏலத்துக்கு தயார் என்றும் சொன்னது மோடி அரசு.

ஆனால் மறுபக்கம் மோடிக்கு நெருக்கமானவரான, மின்உற்பத்தியில் டாடாவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ள அதானியின் மின்உற்பத்தி நிறுவனம் உட்பட்ட தனியார் மின்உற்பத்தி நிறுவனங்கள் கோடி கோடியாக பணம் பண்ணும் விதம் நிலக்கரியின் விலையை டன்னுக்கு ரூ.1,500 என்று நிர்ணயித்துள்ளது. அரசு இந்த குறைந்த விலை நிர்ணயிக்கவில்லை என்றால், தனியார் நிறுவனங்களின் ஒன்பது மின்உற்பத்தித் திட்டங்கள், தங்கள் மின்உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை கோல் இந்தியா நிறுவனத்திடம் இருந்து வாங்க, அல்லது, இறக்குமதி செய்ய டன்னுக்கு ரூ.4,000 செலவிட வேண்டும். (வெங்காயம், தக்காளி, பெட்ரோல், டீசல் விலைகளை கட்டுப்படியாகும் விதம் நிர்ணயிக்கச் சொல்லிக் கேட்கிறார்கள் இந்திய மக்கள். அவர்கள் குரல்  ஆட்சியாளர்கள் காதுகளில் விழுவதே இல்லை).

அரசாங்கம் நிர்ணயித்துள்ள விலையில் நிலக்கரி வாங்குவதால், ஒன்பது தனியார் மின் உற்பத்தி திட்டங்கள் ஆண்டுக்கு ரூ.6,085 கோடி மிச்சப்படுத்தும். வேறு வகையில் சொல்வதானால், அரசுக்கு ரூ.6,085 கோடி இழப்பு ஏற்படும். அய்முகூ அரசாங்கம் போல் நாங்கள் திரைமறைவில் செய்யவில்லை, நேரடியாகவே செய்கிறோம் என்கிறார் மோடி. இதற்கும் காரணம் சொல்கிறார்கள். இப்படிச் செய்யாவிட்டால், மின்உற்பத்தி தொழிலில் செய்யப்பட்டுள்ள முதலீட்டுக்கு நட்டம் ஏற்பட்டால், அது வங்கிகளை பாதிக்குமாம். அதாவது, தனியார் நிறுவனங்கள் மின்உற்பத்தியில் முதலீடு செய்ய கடன் தந்த வங்கிகள் நலன் காக்கத் தான், அரசு முதலாளிகளுக்கு சலுகை விலை யில் நிலக்கரி தருகிறது என்கிறார்கள்! முதலாளி வங்கியில் கடன் வாங்கிக்கொள்வார். அரசிடம் சலுகைப் பெற்றுக்கொள்வார். லாபம் மட்டும் தன்னுடையது என்பார்.

நிலக்கரி பற்றாக்குறையால் என்டிபிசியின் சில அலகுகள் மூடப்பட்டுள்ள நிலையில், பொதுத் துறை நிறுவனங்களுக்கு தேவையான எரிபொருள் வழங்கும் நடவடிக்கைகளை எடுப் பதற்குப் பதிலாக, சில தனியார் நிறுவனங்கள் நாட்டின் இயற்கை வளத்தை கொள்ளையடிப் பதற்கு உதவ, நடவடிக்கைகள் மேற்கொள்கிறது இன்றைய அரசு. நிலக்கரி வழங்கும் அரசின் உறுதிக் கடிதத்தை கையில் வைத்துக்கொண்டு, கோல் இந்தியா நிறுவனத்துடன் எரிபொருள் வழங்கல் ஒப்பந்தம் போட பல மின்உற்பத்தி நிறுவனங்கள் காத்திருக்கும் போது, உறுதிக் கடிதமோ, ஒப்பந்தமோ இல்லாமல் ஒன்பது தனியார் மின்உற்பத்தி திட்டங்கள் குறைந்த விலையில் நிலக்கரி பெறும். அரசு நிர்ணயித்துள்ள சலுகை விலையில் நிலக்கரி வாங்கினால், அதானியின் இரண்டு மின்உற்பத்தி நிறுவனங் கள் மட்டும் ஆண்டுக்கு ரூ.1,518 கோடி முதலீட்டிலேயே மிச்சப்படுத்தும். ஒவ்வோர் ஆண்டும் இது தொடரும். அய்முகூவின் நிலக்கரி ஊழலில் நாட்டுக்கு ரூ1.86 லட்சம் கோடி இழப்பு எனச் சொல்லிச் சொல்லியே ஆட்சிக்கு வந்தவர்கள் வெறும் மூன்று மாதங்களிலேயே, ரூ.6,085 கோடி இழப்புக்கு வழிசெய்துவிட்டார்கள்.

ஆனந்த சுதந்திரம் அடைந்ததற்குப் பள்ளுப் பாடச் சொன்னான் பாரதி. சுதந்திரம் அடைந்து விட்டோம். ஆனந்தம்தான், அதானிகளுக்கு, அம்பானிகளுக்கு மட்டும் என்று சுருங்கிவிட்டது. இன்று பாசிச சக்திகள் ஆட்டம் போட இடமும் உருவாகிவிட்டது. இந்த நிலைமைகளில் தலைகீழ் மாற்றம் வந்தால்தான், அய்யா, நீ சொன்ன ஆனந்தப் பள்ளு.

நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம்

கோவை மாவட்ட பிரிக்கால் ஒற்றுமை சங்கம், பிரிக்கால் நிர்வாகத்துடன் வெற்றிகரமாக ஒப்பந்தம் எட்டியதற்கு உதவிய பொது மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் 05.09.2014 அன்று நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் தோழர் சுரேஷ் பாபு தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஏஅய்சிசிடியு தேசியத் தலைவர் தோழர் குமாரசாமி, ஒப்பந்தத்தின் வரலாற்று பின்னணியை விளக்கிப் பேசினார். மோடி மற்றும் ஜெயலலிதா அரசின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்தி  உழைக்கும் மக்களின் கோரிக்கைகளுக்காக அக்டோபர் 28 அன்று நடக்கவுள்ள சிறை நிரப்பும் போராட்டத்தில் கோவை மாவட்டத்தில் துடியலூரிலும், சின்னியம்பாளையத்திலும் பிரிக்கால் மற்றும் சாந்தி கியர்ஸ் தொழிலாளர்களுடன் பகுதி மக்களும் ஆயிரக்கணக்கில் பங்கு பெற வேண்டுமென அறைகூவல் விடுத்தார்.

கூட்டத்தில் ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் என்.கே.நடராஜன், மாவட்டத் துணைத் தலைவர் தோழர் தா.சந்தரன், சிபிஅய் (எம்எல்) மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன், ஏஅய்சிசிடியு மாவட்டப் பொதுச் செயலாளர் தோழர் ஆர்.தாமோதரன், மாவட்டச் செயலாளர் தோழர் குருசாமி, புரட்சிகர இளைஞர் கழகத்தின் தேசியச் செயலாளர் தோழர் பாரதி, கோவை மாவட்ட பிரிக்கால் ஒற்றுமை சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் சுவாமிநாதன், சாந்தி கியர்ஸ் தொழிலாளர்சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் பாலமுருகன் ஆகியோர் உரையாற்றினர்.  கோவை மாவட்ட பிரிக்கால் ஒற்றுமை சங்கத்தின் பொருளாளர் கூட்டத்தை முடித்து வைத்து உரையாற்றினார். கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.                            

ஏஅய்சிசிடியு 10 லட்சம் மக்கள் சந்திப்பு இயக்கத்தில் விசைத்தறி தொழிலாளர்கள்

நாமக்கல் - ஈரோடு மாவட்ட வேலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல மக்கள் சந்திப்பு இயக்கம் உதவியுள்ளது. இயக்கத்தின் 15 அம்ச கோரிக்கைகள் மீது ஜ÷லை 15 முதல் ஆகஸ்ட் 31 வரை, குமாரபாளையம், பள்ளிபாளையம், ஈரோடு, பெருந்துறை, பவானி, வெப்படை, தட்டாங்குட்டை ஆகிய பகுதிகளில் 25,000க்கும் மேற்பட்ட மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

ரூ.25,000 நிதி திரட்டப்பட்டுள்ளது. விசைத்தறி, கைத்தறி, கட்டுமானம், டிஎன்சிஎஸ்சி சுமை தூக்கும் தொழிலாளர்கள் என இந்த இயக்கத்தில் 200 பேர் ஈடுபட்டு உள்ளனர். மக்களை நேரடியாகவும், மினிடோர் வாகனம், தெருமுனை பிரச்சார கூட்டங்கள், ஊர்வலம் ஆகியவற்றின் மூலமும் சந்தித்து பிரச்சாரம் நடத்தப்பட்டது.

இந்த இயக்கத்தின் ஊடே வெப்படை பகுதியில் கட்டுமான சங்க கிளை துவக்கப்பட்டது. கட்டுமான தொழிலாளர் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவேரி நகர், சி.என்.பாளையம் பகுதியில் 100 பேர் கலந்து கொண்ட கைத்தறி நெசவாளர்கள் சங்க கிளை துவக்கப்பட்டு ஊர்வலம், தெருமுனை கூட்டம் நடத்தப்பட்டது. காசா மீதான இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

புதியதாக தேர்வு செய்யப்பட்ட ஏஅய்சிசிடியு மாவட்ட கமிட்டியும் செயற்குழுவும் முழுமையாக இயங்கியது. அக்டோபர் 4 - 5 தேதிகளில் திருப்பூரில் நடக்கவுள்ள ஏஅய்சிசிடியு மாநில மாநாட்டுக்குள் இன்னும் 25 ஆயிரம் மக்கள் மத்தியில் செல்லவும் ரூ.75,000 நிதி திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. அக்டோபர் 28ல் நடக்க உள்ள சிறை நிரப்பும் போராட்டத்திற்கு 500 பேரை அணி திரட்டுவதற்கான வழி தெரிகிறது.  
                 

மார்க்சிய கல்வி முகாம்

ஆகஸ்ட் 30, 31 தேதிகளில் தஞ்சை மாவட்டம் திருப்புவனத்தில் தஞ்சை - நாகை, புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த சுமார் 60 பேர் பங்கேற்ற  மார்க்சிய கல்வி முகாம் நடைபெற்றது. அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் குமாரசாமி, மத்திய கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் பாலசுந்தரம், பாலசுப்பிரமணியன் ஆகியோருடன் ஆசிரியராக மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் ஜவஹரும் கலந்து கொண்டனர். கல்வி முகாமைத் துவக்கி வைத்து தோழர் பாலசுந்தரம் உரையாற்றினார். நாட்டில் வளர்ந்து வரும் கார்ப்பரேட் கொள்ளை மற்றும் வகுப்புவாத சூழலில் கம்யூனிஸ்ட் ஊழியர்களுக்கு மார்க்சிய கல்வியின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.

முதல் அமர்வாக ‘மார்க்சியம் கற்போம், எங்கிருந்து துவங்குவது’ என்ற தலைப்பில் தோழர் ஜவஹர் விளக்கிப் பேசினார். அவ்வப்போது தோழர்களின் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் விளக்கம் அளித்தார். தோழர்கள் முழு ஈடுபாட்டுடன் பங்கு கொண்டனர். கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம், அரசு, ஏகாதிபத்தியம், சமூக ஜனநாயகம் என பல்வேறு மார்க்சிய அடிப்படைகளை அனைவரும் புரிந்து கொள்ளும் விதம் விளக்கினார்.

முதல் நாள் இரவே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பற்றிய இரண்டாவது அமர்வு துவங்கியது. அதற்கு முன்னதாக அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முக்கிய அம்சங்கள் அடங்கிய பதாகைகளை பங்கு கொண்டவர்கள் ஒரு முறை படித்தும் பார்க்க நேரம் ஒதுக்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் ரா.கிருஷ்ணய்யாவின் மொழி பெயர்ப்பில் வெளிவந்த கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் தமிழாக்க புத்தகமும் தோழர் அரிந்தம் சென்னின் முன்னுரையும் வழங்கப்பட்டிருந்தது.

மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர் பாலசுப்பிரமணியன் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் அடிநாதமாக விளங்குவது ‘சொத்துடமை’ பற்றியதுதான் என குறிப்பிட்டு, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் தேர்ந்தெடுத்த பக்கங்களை வாசித்து விளக்கினார். தோழர்களின் வினாக்களுக்கும் பதில் அளித்தார். இரண்டாம் நாள் மதியம் வரை இந்த அமர்வு தொடர்ந்தது.

வகுப்பின் இறுதி நிகழ்வாக, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் குமாரசாமி தொகுப்பாக கிட்டத்தட்ட 3 மணி நேரம் உரையாற்றினார்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் சமகாலத்திற்கு பொருத்தப்பாடுடைய விசயங்களையும், அறிக்கைக்கு பிறகு மாற்றம் அடைந்துள்ள விசயங்களையும், இந்த வகுப்புகள் கட்சி கட்டுவதற்கு எவ்விதம் பொருத்தப்பாடுடையவை என்பதையும் பல பரிமாணங்களில் விளக்கிப் பேசினார்.

வகுப்பு பற்றிய தங்களது உணர்தல்களையும் தோழர்கள் பகிர்ந்து கொண்டனர். வகுப்புகள் வாசிப்பைத் தூண்டியதாக, புதிய படிப்பினை பெற்றதாக, தீப்பொறி தொடர்ந்து வாசிக்க வேண்டும் என, கருத்துமுதல்வாத சக்திகள் ஆட்சியிலிருக்கும் போது வகுப்புகள் மிக அவசியம் என கருத்துத் தெரிவித்தனர். கிராமப்புற வறியவர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

அஞ்சலி

இந்திய மக்கள் முன்னணியின் மாநிலத் தலைவராக இருந்தவரும், தீப்பொறி பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) மாநிலக்  குழு உறுப்பினராக இருந்தவருமான தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த தோழர் நாராயணன் ஆகஸ்ட் 31 அன்று காலமானார். அவர் இந்திய மக்கள் முன்னணியின் அகில இந்திய செயலாளர்களில் ஒருவராகவும் இருந்து செயல்பட்டார். பல்வேறு அரசியல் இயக்கங்கள் இணைந்து செப்டம்பர் 14 அன்று தஞ்சையில் அஞ்சலிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கின்றன. மாலெ கட்சி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறார். மறைந்த தோழருக்கு தீப்பொறி அஞ்சலி செலுத்துகிறது.

வேண்டுகோள் : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மு - காஷ்மீர் மாநில மக்களுக்கு உதவுங்கள்

கடந்த அறுபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ளத்தால் ஜம்மு - காஷ்மீர் மாநில மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் மடிந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து விட்டார்கள். வாழ்வாதாரங்களை இழந்துவிட்டார்கள்.  ஜம்மு - காஷ்மீர் மாநில மக்களுக்கு நமது ஒருமைப்பாடும் ஆதரவும் தேவைப்படுகிறது.

உத்தர்கண்டில் ஏற்பட்ட பேரழிவை விட, மனம்போன போக்கிலான சுற்றுச்சூழல் அழிவு மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்க எந்த எச்சரிக்கை பொறியமைவையும் நிறுவத் தவறியது ஆகியவற்றால்,  ஜம்மு - காஷ்மீரில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பேரழிவின் அளவு மிகவும் கூடுதலாக உள்ளது.

இகக (மாலெ), நாடு முழுவதும், ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கான வெள்ள நிவாரணப் பணிகளைத் துவக்கியுள்ளது. கட்சியின் அனைத்து மாநில அமைப்புக்களும், வெகுமக்கள் அமைப்புக்களும் நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த பிரச்சனையில் அக்கறை கொண்ட அனைவரும், “CPIML” என்ற பெயரில் காசோலையாகவோ வரைவோலையாகவோ தங்கள் பங்களிப்பை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.  ஜம்மு - காஷ்மீர் வெள்ள நிவாரணம் என்று குறிப்பிடவும். உங்கள் நிதியை யு - 90, ஷகர்பூர், டில்லி - 110 092, இந்தியா (U - 90, SHAKARPUR, DELHI - 110 092, INDIA) என்ற முகவரிக்கு அனுப்பவும்.

மத்திய கமிட்டி
இகக (மாலெ) விடுதலை

Search