COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Sunday, August 31, 2014

கேட்பீர்களா....? குற்றம் அதிகரிக்கிறதே என்று கேட்பீர்களா....?

அந்நிய நேரடி முதலீட்டுக்கு நாட்டின் கதவுகளை அகலத் திறந்து வைத்துவிட்டு, நாடெங்கும் மதவெறி வன்முறை தலை விரித்தாட வழிசெய்துவிட்டு செங்கோட்டையில் மோடியும், அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டலுக்கு தமிழகத் தொழிலாளர்களை பலி கொடுத்துவிட்டு, தமிழக மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் கருப்புச் சட்டத்தை நிறைவேற்றிவிட்டு புனித ஜார்ஜ் கோட்டையில் ஜெயலலிதாவும் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றிவைத்து தேசப்பற்று உரையாற்றினார்கள். ஜனநாயகத்தில் இதற்கு இடமுண்டு.

ஜெயலலிதா பதினான்காவது முறையாக கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றியதாகச் சொன்னார். பகத்சிங் தியாகத்தை நினைவு கூர்ந்தார். (அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன தொடர்பு?) அதற்குப் பிறகுதான் மகாத்மா, மற்றவர்கள். இளைஞர்களை ஈர்க்கிறாரா? அங்கிருந்து தமிழ்நாட்டு சுதந்திரப் போர் தியாகிகள் பட்டியல் ஊடாக அண்ணாதுரை, எம்ஜிஆர் என வந்துவிட்டார். (சுதந்திரத்துக்கு வந்த சோதனை...?)

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தமிழ்நாட்டின் காவல் துறை பெருமை பேசும் ஜெயலலிதாவின் சுதந்திர தின உரையில் காவல்துறை பெருமையும் சட்டம் ஒழுங்கு சீரும் மட்டும் இடம் பெறவில்லை. யதார்த்தத்துக்கு வழிவிட்டிருக்கிறார் ஜெயலலிதா. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுகிறது என்று ஜெயலலிதா சொன்னாலும், தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், வனக்குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தும் குற்றவாளிகள், குடிசை நில அபகரிப்பாளர்கள், திருட்டு வீடியோ தயாரிப்பவர்கள், இணையக் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள் ஆகியோரின் பயங்கர நடவடிக்கைகளை தடுப்பதற்கான சட்டம் 2014 என்று இனி அழைக்கப்படவுள்ள குண்டர் சட்டத் திருத்தம், பொது அமைதியை சீர்குலைக்கும் குற்றங்கள் அதிகரித்து வருவதாகச் சொல்கிறது.

சென்ற ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் 2140 பேர் கைது செய்யப்பட்டனர். 2013 -  2014ல் இந்த எண்ணிக்கை 2,500 என அதிகரிக்கலாம் என காவல்துறையினர் சொல்கின்றனர். இந்த வழக்குகள் தொடர்பான பணிகளுக்கு கூடுதல் நிதி வேண்டும் என்றும் கேட்கின்றனர். அரசு சராசரியாக 2,200 எனக் கணக்கிட்டு, தலா ரூ.8,000 செலவு என்ற அடிப்படையில் ரூ.1 கோடியே 76 லட்சம் ஒதுக்கியுள்ளது. (http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=48346#sthash.PjD1m6xx.dpuf)

தமிழ்நாட்டில், இந்தச் சட்டத்தின் பெயரிலேயே சொல்லப்படும் விதவிதமான குற்றங்கள் மலிந்திருக்கின்றன. நாளொன்றுக்கு 10 குற்றங்கள் என்று குறைவாக கணக்கிட்டால் கூட ஆண்டுக்கு 3,650 குற்றங்கள் என்றாகிவிடுகிறது. காவல்துறையினர் சொல்லும் எண்ணிக்கை குறைவுதான். மணல் கடத்துபவர்களையும்,  திருத்தப்படாத குண்டர் சட்டத்தில் கைது செய்து விசாரணை இன்றி சிறையில் அடைக்க முடியும் என்றால், வைகுண்டராஜன் முதல் அஇஅதிமுக மற்றும் திமுக பிரமுகர்களுக்கு தனிச்சிறையே தேவைப்படும்.? திட்டக்குடி மாணவிகள் பாலியல் வன்முறை விசயத்தில் அதிமுக பிரமுகரும் அவரது வாகன ஓட்டுநரும்தான் முக்கிய குற்றவாளிகள் என்று கடலூர் மாவட்ட காவல்துறை சொல்கிறது. 13 அம்ச செயல் திட்டப்படி அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்களா என்று ஜெயலலிதா நமக்குச் சொல்ல வேண்டும்.  பிரச்சனை உண்மை குற்றவாளிகள், தப்பவிடப்படுகிறார்கள். பொய் குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் காவல்துறை காகிதங்களையும் தமிழ்நாட்டின் சிறைகளையும் நிரப்புகின்றன.

ஆகஸ்ட் 11 அன்று தமிழக சட்டமன்றத்தில் ஒரே நாளில் நிறைவேற்றப்பட்ட 19 சட்ட மசோதாக்களில் இந்த குண்டர் சட்டத் திருத்தமும் ஒன்று. இந்தத் திருத்தப்பட்ட சட்டத்துக்கு எதிராக தமிழ்நாட்டில் குரல்கள் எழுந்துள்ளன. மூன்று முறை அதே குற்றத்தைச் செய்யும் ஒருவரை மீண்டும் அந்தக் குற்றம் செய்யவிடாமல் தடுக்கும் பொருட்டு விசாரணையின்றி ஓராண்டு சிறை வைக்கும் சட்டமான குண்டர் சட்டம் 1982, ஒரு முறை குற்றம் செய்தாலே விசாரணையின்றி சிறையில் தள்ளலாம் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திருத்தம் மக்கள் மத்தியில் கடுமையான ஆட்சேபத்துக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகக் கூடும் என்பதால், இணையக் குற்றங்கள் முதலிலும் பிறகு பாலியல் குற்றங்களும் சட்டத்தின் பெயரிலும் உள்ளடக்கத்திலும் சேர்க்கப்பட்டன. இவை சேர்க்கப்பட்ட இடத்தில்தான் முதல் முறை குற்றத்துக்கு கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவதற்கான நியாயங்களும் சொல்லப்பட்டுள்ளன.

‘ஒரே ஒரு குற்றம் கூட பொது அமைதியை சீர்குலைக்கும் உள்ளாற்றல் கொண்டது என்பதால், குற்றவாளி குற்றத்தில் ஈடுபடுவதைத் தடுக்க, குற்றவாளி அந்தக் குற்றத்தில் மீண்டும் மீண்டும் ஈடுபடும் வரை காத்திருப்பதில் பொருளில்லை. எனவே அது போன்றவர்கள் பொது அமைதியை குலைக்கும் விதம் ஒரு முறை குற்றம் புரிந்தாலும் தடுப்புக் காவலில் கைது செய்ய வழிவகை தேவையிருக்கிறது. தகவல் தொழில்நுட்பம் வளர்கிற இந்தக் காலத்தில் இணையக் குற்றங்கள் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும். எனவே, இந்தச் சட்டத்தின் கீழ் இணையக் குற்றங்களையும் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று முதல் திருத்தத்திலும், ‘பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பொது அமைதியை பாதுகாப்பதில் தடைகளாக இருப்பதால் அவையும் இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்றன’ என்று இரண்டாவது திருத்தத்திலும் சொல்லப்பட்டுள்ளது.

இணையதளத்தை முடக்கும் ஹேக்கர்களால் வர்த்தகம், அரசு செயல்பாடுகள் பாதிக் கப்படுகிறது. சில சமயங்களில் முடக்கப்படுகிறது என்று சட்டத் திருத்தத்தை முன்வைத்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சொன்னார். தமிழ்நாட்டில் அஇஅதிமுக இணையதளம் முடக்கப்பட்டது தவிர வேறு பரபரப்பு முடக்கம் ஏதும் நடக்கவில்லை. தமிழ்நாட்டில் எந்த அரசு இணையதளமும் பாதிக்கப்படவில்லை. இதனால் அரசு செயல்பாடுகள் எவையும் பாதிக்கப்பட்டதாகவும் திருத்தத்துக்கான நோக்கத்தில் சொல்லப்படவில்லை. இணையதள குற்றங்களால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டுவிட்டது, காப்பாற்றுங்கள் என்று தமிழ்நாட்டில் யாரும் போர்க்குரல் எழுப்பவும் இல்லை. நடக்காத குற்றத்துக்கு ஏன் இந்த அளவுக்குக் கடுமையான திருத்தம்? வரும் முன் காக்கும் நோக்கமா? சட்டத் திருத்தம் அஇஅதிமுக இணைய தளத்தை முடக்கியவர்களை முடக்கவா? அல்லது இணையதளக் குற்றங்களைத் தடுக்கவா?

சீர்காழியில் ஒரு பெண் திராவக வீச்சுக்கு ஆளாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திராவக விற்பனையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சில மாதங்களுக்கு முன் முதலமைச்சர் சொல்லிக் கொண்டிருந்தார். அறிவிப்பு அறிவிப்பாகவே நின்றதால், இப்போது ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திராவக வீச்சு குற்றங்கள் நடக்கத் துவங்கியுள்ளன.

பாலியல் வன்முறைக் குற்றங்களைக் கட்டுப்படுத்த, தமிழக அரசு ஏற்கனவே அறிவித்த 13 அம்ச செயல் திட்டம் அமலில் உள்ளது. அதன்படி, பாலியல் குற்றம் புரிபவர்கள் சிலர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள். ஏற்கனவே இருக்கும் சட்டங்கள் முறையாக, கறாராக அமல்படுத்தப்பட்டாலே, இணையக் குற்றங்களும் பாலியல் குற்றங்களும் தடுக்கப்படலாம். ஆனால், மக்கள் மத்தியில் சீற்றமும் அச்சமும் ஏற்படுத்தியுள்ள இந்தக் குற்றங்களில் பெயரால் குண்டர் சட்டத்தை கருப்புச் சட்டமாக்கும் முயற்சியைத்தான் ஜெயலலிதா இப்போது எடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் தடா, பொடா காலம் ஒன்று இருந்தது. ஜெயலலிதா ஆட்சியில் இருந்த காலம். தமிழ்நாட்டின் பத்திரிகைகள் அவரை ஹிட்லரைப் போல் கேலிச் சித்திரம் தீட்டிய காலம். வைகோ மாதக்கணக்கில் சிறையில் இருந்தார். தமிழ்நாட்டில் இன்னும் தடா, பொடா வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. இந்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்றைய நிலைமைகளில் இருக்கிற சட்டங்கள்படியே தமிழ்நாட்டில் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு குறைவிருப்பதில்லை. புதிய சட்டம் கருத்துச் சுதந்திரத்துக்கு சவால் விடுக்கும், அரசியல்ரீதியான விமர்சனங்களை முடக்கும் நோக்கம் கொண்டுள்ளது தெளிவு. அரசியல் விமர்சனம் செய்யும் எதிர்க் கட்சியினர் மீது அவதூறு வழக்குகள் போடப் படுகின்றன. நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டது. தினமலர் பத்திரிகை மீது வழக்கு உள்ளது.

ஜெயலலிதா 2011ல் ஆட்சிப் பொறுப் பேற்ற பிறகு கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர்கள், தலைவர்கள் பெயர்களை பட்டியலிட்டு, தற்போதைய திருத்தம் அரசியல் பழிவாங்குதலுக்குத்தான் இட்டுச் செல்லும் என்று கருணாநிதி விரிவான அறிக்கை விடுத்துள்ளார். 2011க்குப் பிறகு வெவ்வேறு குற்றச் சம்பவங்களில், புகார்களில், குற்றம் சாட்டப்பட்டவரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான விதிகள் முறையாக பின்பற்றப் படவில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார். (அவர் பட்டியலில் சொந்தப் பிரச்சனை தூக்கலாக இருப்பது வேறு விசயம். தாமிரபரணியில் மாஞ்சோலை தலித் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கும் அவர் விரிவான விளக்கம் தந்தால் நல்லதுதான்).

அந்த அறிக்கையில், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் தனபாலன், சொக்கலிங்கம் ஆகியோருடன் அமைக்கப்பட்ட குழு, ஜூன் 14, 2014 அன்று காலை 10.30 மணிக்குத் துவங்கி மதியம் 2 மணிக்குள் 220 வழக்குகளை விசாரித்து 212 வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்கிறார்.

தடுப்புக் காவல் சட்டங்களில் கைது செய்யப்பட்டவர்கள் வழக்குகளில் 5% வழக்குகளில் மட்டுமே குற்றங்கள் மெய்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றம் மெய்ப்பிக்கப்படாத வழக்குகளில், வழக்கு முடிவதற்குள் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் 6 முதல் 8 மாதங்கள் வரை சிறையில் கழிக்க நேர்வதாகவும் மனித உரிமை நீதிமன்றத்தின் முன்னாள் சிறப்பு அரசு வழக்கறிஞர் கண்ணதாசன் சொல்கிறார்.

ஏற்கனவே மனித உரிமைகளுக்குப் புறம்பாக பயன்படுத்தப்படுகிற குண்டர் சட்டத்துக்கு, ஒருவர் குற்றம் செய்தார் என்று சொல்லி காவல்துறையினர் யாரை வேண்டுமானாலும் சிறையில் அடைக்கும் சுதந்திரத்தை இந்தத் திருத்தம் தந்துள்ளது.  அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கைகளை சட்டபூர்வமாகவும், யாருக்கும் விளக்கம் சொல்ல வேண்டிய கட்டாயம் எதுவும் இன்றி சுதந்திரமாகவும் செய்ய இந்தத் திருத்தம் வழி வகுத்துள்ளது. இணையதளத்தில் எழுதினால் குண்டர் சட்டம். கேள்வி கேட்டால் குண்டர் சட்டம். கோவையில் தேமுதிகவைச் சேர்ந்த ஒருவரை, அஇஅதிமுகவைச் சேர்ந்த ஒருவர் கொடுத்த இணையதள புகாரின் பேரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவருக்கு பிணையும் மறுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்னும் ஒரு சுற்று ஒடுக்கு முறை நடவடிக்கைகள் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது என்ற பெயரில் புதிய குண்டர் சட்டம் மூலம் அரங்கேறும்.

மரியாதை நிமித்தம் எழுந்து நிற்கவில்லை என்பதற்காக கையை வெட்டிவிடும் அளவுக்கு தமிழ்நாட்டில் குற்றவாளிகளுக்கு துணிச்சல் உள்ளது. குற்றங்கள் இப்படி கட்டுக்கடங்காமல் உள்ளன என்று தமிழக மக்கள் குற்றம் சுமத்துவதாலேயே அவர்கள் மீதே இப்படி ஒரு பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார் ஜெயலலிதா.

சுதந்திர தின உரையாற்றுவதற்கு முன்பு, தமிழக மக்களின் சுதந்திரமான நடமாட்டத் துக்கு தடை போட்ட ஜெயலலிதா, தமிழக மக்களைப் பார்த்து கேட்கிறார்: கேட்பீர்களா? குற்றம் அதிகரிக்கிறதே என்று கேட்பீர்களா? 

நரிக் கதையும் நாட்டு நடப்பும்

ம்ம்ம்ம்... முன்பு ஒரு காலத்துல
முருங்கமரக் காட்டுக்குள்ள
முன்பு ஒரு காலத்துல
முருங்கமரக் காட்டுக்குள்ள
தந்திரம் மிகுந்த நரி வாழ்ந்து வந்தது.
அது காடு விட்டு நாடு தேடி ஓடி வந்தது.
என்ன பண்ணிச்சி...? ஓடி வந்துச்சி....
ஓடி வந்த குள்ள நரி
ஹையையோ ஹையையோ
கால்தவறி விழுந்ததடி 

ஓடி வந்த குள்ள நரி கால்தவறி விழுந்ததடி.
நீல நிறம் சாயம் கொண்ட தொட்டி ஒன்றிலே
அது நிறம்மாறி போனதடி சின்ன பொம்பளே....
ஹஹஹஹஹ
நரி கலர் மாறிப் போச்சு பிறகு காடு தேடி போச்சு
நரி.....?
நரி காடு மாறிப்போச்சு.... கலர் தேடிப் போச்சு...
ஹஹஹ....
நான் ஆண்டவன் அனுப்பிய புருஷன்
ஹஹஹ ஹஹஹ...
உங்கள ஆள வந்திருக்கும் அரசன்
மிருகங்களெல்லாம் பயந்தன.
அங்கு நரியின் ராஜ்ஜியம் நடந்தது.

ஒரு நாள்....
மேகம் இடித்தது மின்னல் வெடித்தது காற்று அடித்தது.
காடு துடித்தது நிலம் அசைந்தது மழை பொழிந்தது
ஆஆஆ...........
காட்டு விலங்குகள் கலங்கின... கொஞ்சம் பயந்தன...
உடல் நடுங்கின ஆவி ஒடுங்கின
நீல நரியின் வாசல் வந்து ஓலமிட்டு அழுதன.
நரியும் வெளியில் வந்தது...
மழையில் கொஞ்சம் நனைந்தது....
நீல சாயம் கரஞ்சது.... நரியின் வேஷம் கலஞ்சது.....
ஹஹஹ   ஹஹஹ

நீல சாயம் வெளுத்துப் போச்சு
டும் டும் டும் டும்
ராஜா வேஷம் கலஞ்சு போச்சு
டும் டும் டும் டும்
நீல சாயம் வெளுத்துப் போச்சு
டும் டும் டும் டும்
ராஜா வேஷம் கலஞ்சு போச்சு
டும் டும் டும் டும்
காட்டை விட்டே ஓடிப் போச்சு
டும் டும் டும் டும்
டும் டும் டும் டும்
டும் டும் டும் டும்

தமிழ்த் திரைப்பாடலில், தீயவை அம்பல மாவதும், அவை ஓடி வெளியேறுவதும் சுகமான கற்பனையாக வந்துள்ளன.
அவ்வளவு சுலபமாக நரேந்திர மோடி அரசு அம்பலமாகி வெளியேறாது என்பது நமக்குத் தெரியும்.

வாக்குறுதிகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் இடையிலான வேறுபாடு அதிகரிக்கும் என்பதும், பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது, மக்கள் போராட்ட மின்னல்கள் இடி மழை வலுத்தால், நரேந்திர மோடி அரசும் வேஷம் கலைந்து வெளியேறித்தான் ஆக வேண்டும் என்பதும், வரலாறு நமக்குச் சொல்லித் தருகிற பாடம்.

‘நல்ல காலங்கள் வருகின்றன’, ‘எல்லோருக்குமான வளர்ச்சி’, - இவைதான் நரேந்திர மோடி அரசு போட்டுக் கொண்ட வேஷம். சாயம் வெளுத்து வேஷம் கலைய ஆரம்பிக்க வில்லையா? ரயில் கட்டண உயர்வு, மக்கள் தலையில் விழுந்த முதல் பெரிய இடி. காங்கிரசிடமிருந்து நாட்டை விடுவிப்பதாகச் சொல்லி பதவியை பிடித்த மோடி, காங்கிரஸ் கொள்கைகளை தீவிரமாகவும் தயக்கமின்றியும் துணிச்சலாகவும் அமுல்படுத்துவதை, நாடு கண்டு வருகிறது.

கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை, கஜானாவை திறந்து விடுவது என்பதில், மோடி அரசும் சளைக்கவில்லை. மோடியின் சுதந்திர தின உரையில், பன்னாட்டு நிறுவனங்களை, come, make in india என, அதாவது, இந்தியா திறந்திருக்கிறது, வாருங்கள், வந்து அனுபவியுங்கள், ஆதாயம் அடையுங்கள் என்கிறார். இந்திய இளைஞர்கள் மேட் இன் இந்தியா எனத் தயாராகும் விஷயங்களில் பெருமைப்பட வேண்டும் என்கிறார். உலகம் தழுவிய உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள், வியத்நாம் பங்களாதேஷ், தாய்வான், ஹோண்ட்ருவாஸ், மெக்சிகோ, சீனாவில், அந்தந்த நாட்டு அடையாளத்துடன் உற்பத்தி செய்கின்றன என்றால், குறைந்த கூலி  ஆகக்கூடுதல் சுரண்டல்தான் அதற்கு காரணம் என, மோடிக்குத் தெரியாதா?

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே பாணியில் மோடி அரசு தொழிலாளர் சட்டங்கள் மீது தாக்குதல் தொடுக்கத் தயாராகிறது. ஜெயலலிதா அரசு போல, பயிற்சியாளர்களைப் பெரும் எண்ணிக்கையில்  வேலைக்கு வைக்கும் முறைக்கு, மோடி அரசும் மும்மரமாகவும் முனைப்பாகவும் முயற்சிக்கிறது. இந்நியாவின் நலன்புரி - கலப்பு பொருளாதாரத்தின் கடைசி அடையாளச் சின்னங்களில் ஒன்றான திட்ட கமிஷனை ஒழிப்பதின் மூலம், இனி எல்லாம் முதலாளித்துவ சந்தை வழிகளின் படியே என, மோடி அரசு பிரகடனம் செய்துள்ளது. அந்நிய முதலீடு,  பாதுகாப்பு காப்பீடு போன்ற துறைகளில் கூடுதலாய் நுழைய அனுமதி,  பொதுத்துறை நிறுவனங்கள் பங்கு விற்பனை, பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப் அதிகரிப்பு என, அய்முகூ அரசு பின்பற்றிய பெருமுதலாளித்துவ ஆதரவு வளர்ச்சிப் பாதை, இப்போதும் தொடர்கிறது.

நிதி தீண்டாமையை முடிவுக்குத் கொண்டு வர, நிதிரீதியான விடுதலையைக் கோடிக்கணக்கானவர்களுக்கு பெற்றுத்தர, அனைவருக்கும் வங்கிக்கணக்கு என்கிறார் மோடி. எவ்வளவு மோசமான மோசடி வாய்ஜாலம்! சிற்சில உடனடிப் பயன்கள் தாண்டி, இந்த வங்கிக் கணக்குகள் அடிமடியிலேயே கைவைக்க வாய்ப்பு உள்ளது. மான்யங்கள் இல்லை, இனி எல்லாமே ரொக்கப் பட்டுவாடா (cash transfer) என்று சொல்ல பாதை அமைக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க தலைவர் அமித்ஷா, ‘அதிகாரம் பெறுதல்’ ‘நல் ஆளுகை’ பற்றி மட்டுமே கவலைப்படுங்கள், உரிமைகள் பற்றி யோசிக்காதீர்கள் என்கிறார். ‘சரியான நிலைமைகளில்’ ‘தாமாகவே’ எதுவும் நடக்க வேண்டுமே தவிர, சட்டம் போடுதல் கிளர்ச்சிகள் போன்றவற்றால் எதுவும் நடக்காது என்கிறார். ஜாடிக்கு ஏற்ற மூடி, மோடிக்கேற்ற ஜோடி இந்துக்களின் இந்துஸ்தான் என  ஆர்எஸ்எஸ் விஷம் கக்குகிறது. உத்தரப்பிரதேசத்தில் மதவெறி நெருப்பில் சங்பரிவார் எண்ணெய் ஊற்றுகிறது. முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் அல்லது கபிர்ஸ்தான் (இடுகாடு) என்ற இரண்டு இடங்கள்தானாம்!

மோடி அரசின் நூறு நாட்கள் ஆட்சி, நம்பிக்கை ஏற்படுத்தவில்லை. ஆதரித்த பலர் இன்று தயங்குகிறார்கள். அழிவு துவங்கிவிட்டது என்ற அளவுக்கு சொல்ல முடியாவிட்டாலும், அதிருப்திகள் குவியத் துவங்கிவிட்டன எனச் சொல்ல முடியும்.
 
2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மோடியின் கட்சி உத்தர்கண்ட் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தோற்றுப் போனது. இப்போது நடந்த கர்நாடகா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், பீகார் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் மோடி அலை ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை.

பீகாரில், இப்போது இடைத் தேர்தல் நடந்த 10 தொகுதிகளில், பாஜக கூட்டணி, ஏப்ரல் - மே  2014ல் நடந்த தேர்தலில் 45.3%  வாக்குகள் பெற்றது. ஆனால் இப்போது 10ல் 6 தோற்று 37.3% வாக்குகள் பெற்று, 8% வாக்குகளை இழந்துள்ளது. கர்நாடகாவில் மூன்று தொகுதிகளில் இரண்டில் தோற்று, ஒன்றில் எடியூரப்பாவின் மகன் தப்பிப்பிழைத்து வென்றுள்ளார்.

நாட்டு மக்களுக்கு நல்ல காலங்கள் வராத போது, பாஜகவுக்கு மட்டும் நல்ல காலம் எப்படி வரும்? பாஜகவின் கதை முடிகிறது, நரேந்திர மோடி அடுத்தடுத்து தோற்பார் என்றெல்லாம் சுலபமாகப் பகல் கனவு காண முடியாது என்றாலும், நிச்சயமாக, மோடி அரசுக்கு அடுத்தடுத்து  அடி கொடுக்க  முடியும் என்பதும் அதனைப் பலவீனப்படுத்த முடியும் என்பதும் தெளிவாகிறது.


நாடாளுமன்ற ஜனநாயகமே மக்கள் ஜனநாயகமாகிவிடுமா? - நிறைவு பகுதி

இதுவரை, நாடாளுமன்றம் தவிர்த்த பாதை, பாட்டாளி வர்க்க அரசை நிறுவுதல், அந்த அரசு அரசாகவும் அரசாக இல்லாமலும் எப்படிச் செயல்படும், அரசு எப்படி உலர்ந்து உதிரும் ஆகியவை பற்றிய அடிப்படையான மார்க்சிய லெனினிய கருத்துக்களைப் பார்த்தோம். நாடாளுமன்ற ஜனநாயகம் மக்கள் ஜனநாயகம் ஆகிவிடாது என்பதை முந்தைய பகுதிகள் தெளிவுபடுத்தின. நாடாளுமன்ற அரங்கில், கட்சியின் அடிப்படையான வழிக்குப் பொருத்தமான உரிய செயல்தந்திரங்களை வளர்த்துக் கொண்டே, நீண்டகாலத்திற்கு ஒரு புரட்சிகர எதிர்க்கட்சி பாத்திரம் ஆற்ற  கட்சி தயாராக வேண்டுமென இகக (மாலெ) திட்டம் குறிப்பிடுவதையும் கவனித்தோம்.

2014 நாடாளுமன்றத் தேர்தல்கள் முடிந்த பிறகு, மே 26, 27 கூடிய கட்சி மத்திய குழு  பின்வரும் முடிவு எடுத்தது. ‘நமது பிரச்சாரம், தேர்தல் செயல்பாடுகள் பற்றி அனைத்துக் கட்சி கமிட்டிகளும் முழுமையான பரிசீலனை மேற்கொள்ள வேண்டும். நாம் 50க்கும் மேற் பட்ட வாக்குகள் பெற்ற வாக்குச்  சாவடிகளை அடையாளம் கண்டு அங்குள்ள கட்சி வெகு மக்கள் அமைப்புக்களில் கட்டமைப்பு மற்றும் நிலைமை பற்றிப் பரிசீலனை செய்ய வேண்டும். குறைவான வாக்குகள் பெற்றுள்ள தொகுதிகளில், 30 அல்லது அதற்கு கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ள வாக்குச் சாவடிகளை அடையாளம் காண வேண்டும். 30 ஆண்டுகளுக்கு முன் நாம் தேர்தலில் போட்டியிட துவங்கிபோது இருந்ததை விட, தேர்தல் அரசியல், இன்று மிகவும் போட்டி நிறைந்ததாக, சவாலானதாக மாறியிருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த புதிய சூழ்நிலையில், மக்களுக்கு சேவை செய்ய, ஒரு நிரந்தரத் தன்மைகொண்ட வாக்குச் சாவடிமட்ட அமைப்பையும் செயல்பாட்டையும் உருவாக்க, நாம் நமது ஆற்றல்களையும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்’.

அதற்குப் பிறகு ஆகஸ்ட் 16, 17, 2014ல் கூடிய கட்சி மத்திய கமிட்டி பின்வரும் முடிவை எடுத்தது.

கட்சி விரிவாக்கம்
மற்றும் அமைப்பு புத்துருவாக்கம்

அ.    நமது தேர்தல் செயல்பாடு தொடர்பான வாக்குச்சாவடி மட்ட பரிசீலனை, நமது தற்போதைய வேர்க்கால்மட்ட அமைப்பு நிலையை வெளிப்படுத்தியுள்ளது. சக்தி வாய்ந்த மோடி அலையை எதிர்கொண்ட இந்தத் தேர்தல் நமக்கு மிகவும் கடினமான ஒரு தேர்தலாக இருந்தது. இந்தத் தேர்தலில் நாம் பெற்றுள்ள வாக்குகள் நமது பலவீனங்கள் (3 முக்கியமான பலவீனங்கள் என குறிப்பிட்டால், குறைவான உறுப்பினர் பலம், நம்மால் முழுக்க செல்லமுடியாத மிகப் பரந்த பகுதிகள், வெகுமக்கள் அடித்தளம் செயலற்று இருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள்) பற்றி நமக்கு பல விசயங்கள் சொல்கின்றன; ஆனால், கூடுதல் உறுப்பினர் எண்ணிக்கை, மேலும் பரந்த, மேலும் திறன்மிக்க அமைப்பு வலைப்பின்னல் என்ற பொருளில், விரிவாக்கத்திற்கான முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்புக்கள் இருப்பதையும் அவை காட்டுகின்றன. ஒவ்வொரு மாவட்டக் கமிட்டியும் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக, இந்த அமைப்புப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும். நமது வெற்றி வாய்ப்பை உயர்த்த முடியும், வாக்குகளை முக்கியத்துவம் வாய்ந்த விதத்தில் அதிகரிக்க முடியும் என்று நாம் எதிர்பார்க்கிற அனைத்து முக்கிய தொகுதிகளிலும், அது போன்ற திறன்மிக்க விரிவாக்கத்திற்கு தேவையான அரசியல் - அமைப்பு அடிப்படைகளை உருவாக்க, நாம் உடனடியாக கவனம் செலுத்தியாக வேண்டும்.

ஆ.  அனைத்து கட்சி கமிட்டிகளும், அமைப்பு விரிவாக்கத்திற்கான பொருத்தமான இலக்குகளை உடனடியாக நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்; இந்தத் தேர்தல்களில் கட்சிக்கு வாக்களித்தவர்கள், கட்சிக்காக செயல்பட்டவர்கள் மத்தியில் இருந்து பரிட்சார்த்த உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். சம்பந்தப்பட்ட உள்ளூர் வாக்குச் சாவடிகளுக்கு ஏற்ப கட்சிக் கிளைகளை புனரமைக்க வேண்டும். பரிட்சார்த்த உறுப்பினர்கள் மட்டும் இருக்கும் இடங்களில், அவர்களை செயல்வீரர் குழுக்களில் அமைப்பாக்க வேண்டும். இவ்வாறு புனரமைக்கப்பட்ட கிளைகளுக்கும் செயல்வீரர் குழுக்களுக்கும் பின்வரும் உடனடி கடமைகளை ஒப்படைக்க வேண்டும்; (1) உள்ளூர் கிளர்ச்சிகளில் செயலூக்கமான பாத்திரம். (2) சராசரியாக 100 பேரிடம் இருந்து கட்சி நிதியாக ரூ.1000 திரட்டுவது. (3) கட்சிப் பத்திரிகைகள் மற்றும் கட்சி வெளியிடும் பிற பத்திரிகைகள் (இந்தி பேசும் மாநிலங்களில் ஜன்மத், ஷ்ரமிக் சாலிடாரிட்டி, ஆதி ஜமீன்) சந்தா/விநியோகம் குறைந்தது 2.

இ.  மேலே சொல்லப்பட்டுள்ள கிளைகளும் செயல்வீரர் குழுக்களும் உள்ளூர் கமிட்டிகளும் துணை விதிகளில் சொல்லப்பட்டுள்ள நிபந்தனைகள் அடிப்படையில் மாநாடுகள் மூலம் அமைப்பாக்கப்பட வேண்டும். உறுப்பினர் புதுப்பித்தல் முடிந்த பின்பு அதுபோன்ற உள்ளூர் கமிட்டி மாநாடுகள் நடத்தப்பட வேண்டும். இந்த இயக்கப் போக்கு டிசம்பர் 18, 2014க்குள் முடிவுற வேண்டும்.

ஈ.  ஒவ்வொரு மாவட்ட, மாநில கமிட்டியும் இயக்கம் பற்றிய மாதாந்திர அறிக்கையை மத்தியக் கமிட்டிக்கு அனுப்ப வேண்டும்.

உ.    2014ம் ஆண்டு நடந்த இரு மத்திய கமிட்டி கூட்டங்களுக்கு இடையில், கட்சி, தியாகிகள் தினமான ஜூலை 28 அன்று, மோடி ஆட்சியில் கார்ப்பரேட் மதவெறி தாக்குதலுக்கு எதிராகத் திறன்மிக்க எதிர்ப்பைக் கட்டமைக்க கட்சியை விரிவாக்குவோம்! வலுப்படுத்துவோம்! என அழைப்பு விடுத்தது. அந்த அழைப்பில் பின்வருமாறு குறிப்பிட்டது: ‘அனைத்துக்கும் பிறகு, தேர்தல் போராட்டங்களின் மய்ய தலங்கள் வாக்குச் சாவடிகளே. மேலோங்கிய ஆளும் வர்க்கக் கட்சிகளின் பணபலம், ஆள் பலம், ஊடக பலம் மற்றும் சமூக இயக்க சமன்பாடுகள், வாக்காளர்களை வாக்குச் சாவடி மட்டத்தில் அணிதிரட்டுவது என்பதன் மூலம் செய லாற்றுகின்றன. தேர்தல் களம், சமமான ஆடு களம் அல்ல எனும்போது, தேர்தல் போராட்டங்களில்  அதிகார சமன்பாடு, வறிய மற்றும் உழைக்கும் மக்களுக்கு எதிராகவே சாய்ந்துள்ள போது, வேர்க்கால் மட்டத்தில் தீவிரமான எதிர் அணிதிரட்டலுடன், ஆளும் வர்க்கங்களின் அரசியலுக்கு எதிராக, கம்யூனிஸ்டுகள் திறன் மிக்க வேர்க்கால் மட்ட எதிர்ப்பை கட்டமைக்க வேண்டியது கூடுதல் அவசியமாகிறது’.

ஊ.    ‘நமது கட்சி உருவெடுத்து வந்த காலங்களில், நிலப்பிரபுத்துவ மேலாதிக்கம் மற்றும் அரசு பயங்கரத்துக்கு எதிரான போராட்டங்களில் பெரிய வெற்றிகள் பெற்ற வேர்க்கால் மட்ட அமைப்புதான், தேர்தல் அரங்கிலும் நமது பிரதானமான ஆயுதம் ஆகும். காங்கிரஸ் மற்றும் பல்வேறு அடையாள அடிப்படையிலான கட்சிகள் போலல்லாது, பாஜக ஓர் ஊழியர் அடிப்படை கொண்ட கட்சி; வேர்க் கால் மட்டத்தில் அமைப்பு, பிரச்சாரம் மற்றும் போதனை ஆகியவற்றுக்கு அது காத்திரமான கவனம் செலுத்துகிறது. எனவே, பாஜகவுக்கு எதிரான கம்யூனிஸ்ட் எதிர்ப்பு, வேர்க்கால் மட்டத்தில் அமைப்புரீதியான, கருத்தியல் அரசியல்ரீதியான அணி திரட்டல் என்ற தளத்தில் மிகவும் தீர்மானகரமாக கட்டமைக்கப்பட வேண்டும். கட்சி புனரமைக்கப்பட்டதன் நாற்பதாவது ஆண்டு தினத்தில், வெகுமக்கள் பலம், அரசியல் அணிதிரட்டல், அமைப்பு செயல்பாடு என்ற பொருளில், நமது வேர்க்கால்மட்ட அமைப்பை, இன்னும் கூடுதல் உயரத்துக்கு எடுத்துச் செல்ல நாம் உறுதியேற்போம். உழைக்கும் மக்களின் சக்திவாய்ந்த கம்யூனிஸ்ட் அமைப்பு, மக்கள் போராட்டத்தின் ஒவ்வோர் அரங்கிலும் பரந்த ஜனநாயக சக்திகளுடன் ஒத்திசைவாக செயல்பட்டு, கார்ப்பரேட் - மத வெறி அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தில் தீர்மானகரமான வெற்றி பெற வேண்டும்’.

எ.    ஒரு சில தோழர்கள், பூத் மட்ட வேலைகள் பற்றி கட்சி கூடுதல் அழுத்தம் வைப்பதாகத் தெரிவதாகவும், நாமும் கூட இகக, இகக (மா) போல தேர்தலுக்கு கூடுதல் அழுத்தம் வைப்பவர்களாக மாறி வருவதாகத் தாம் கருதுவதாக, ஆழ்ந்த அக்கறையோடும் கரிசனத்தோடும் தெரிவிக்கின்றனர்.

ஏ.    இகக, இகக(மா) சந்திக்கும் சிக்கல்கள் எத்தகையவவை என்பதைச் சரியாகப் பார்க்க வேண்டும். அவர்களது சிக்கல் தேர்தல் பங்கேற்பில் மூழ்கியவர்களின் சிக்கலாக இருக்கும் போது, இகக (மாலெ) விடுதலை சந்திக்கும் பிரச்சனை, தேர்தலில் பங்கேற்கும் புறக்கணிப்பாளர்கள் என்றாகிவிடக் கூடாது என்பதாக உள்ளது.

ஐ.    இகக, இகக(மா) நெருக்கடியை, ஜெர்மனியில் விவசாயப் போர் நூலில் எங்கெல்ஸ் எழுதிய விசயங்களோடு சுலபமாகப் பொருத்திப் பார்க்கமுடியும். ‘தனது ஆதிக்கத்திற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, இயக்கம் முதிர்ச்சி அடையாத ஒரு சகாப்தத்தின் ஓர் அரசாங்கத்தை நடத்த நேருவதுதான், ஒரு தீவிரக் கட்சியின் தலைவருக்கு நேரக்கூடிய ஆக மோசமான விசயமாக இருக்கும்’. ஒரு தீவிரக் கட்சியின் இத்தகைய தலைவர், ‘அந்நிய வர்க்க நலன்களையே முன்னேற்றுவார்; தமது சொந்த வர்க்கத்திற்கு வெறும் வாய்வீச்சையும் வாக்குறுதிகளையும்  மட்டுமே தருவார்; அந்நிய வர்க்கத்தின் நலன்கள் தமது சொந்த வர்க்கத்தின் நலன்கள் என நம்பிக்கையூட்டுவார்; இத்த கைய ஒரு பொய்யான நிலையில் சிக்குபவர் மீள முடியாதபடி காணாமல் போவார்’ என்கிறார் எங்கெல்ஸ். எங்கெல்ஸ் போதனைகளைப் புறக்கணித்தவர்களின் சங்கடத்தை இகக, இகக (மா) அனுபவிக்கிறார்கள் என்பது புரிகிறது.

ஒ.    இகக (மாலெ) தேர்தல் பங்கேற்பில் ஈடுபடும் போதே புறக்கணிப்பாளர்களாக மாறாமல் இருக்க, கவனம் செலுத்த வேண்டும். ஆக இருவரின் சிக்கலும் வேறு வேறானது. இகக (மாலெ) விடுதலையின் மே, ஆகஸ்ட் 2014 மத்திய கமிட்டி முடிவுகளையும், ஜ÷லை 28 அழைப்பையும் புரிந்து கொள்ள, எங்கெல்ஸ் தேர்தல் பற்றிச் சொல்கிற விசயங்களையும், லெனின் இடதுசாரி கம்யூனிசம் பிள்ளைப் பிராயக் கோளாறு நூலில் சொல்லி உள்ள விசயங்களையும் பார்ப்போம்.

எங்கெல்ஸ்

   ‘தேர்தல்கள் மிகவும் துல்லியமாக நமது சொந்த பலத்தையும், எல்லா பகை சக்திகளின் பலத்தையும் நமக்குப் புலப்படுத்தும். தேர்தல் நம்மை விட்டுத் தள்ளி நிற்கிற மக்கள் திரளோடு நாம் தொடர்பு கொள்வதில் ஒரு சிறந்த சாதனமாகும். எல்லாக் கட்சிகளையும் மக்கள் மத்தி யில் அவர்கள் கருத்துக்கள் மற்றும் நடவடிக்கைகள் பற்றிய நமது தாக்குதல்களுக்குப் பதில் சொல்ல வைக்கும். நாடாளுமன்றம், ஊடகங்களிலோ கூட்டங்களிலோ கருத்து சொல்வதைக் காட்டிலும், கூடுதல் ஆளுமையோடு சுதந்திரத்தோடு, நமது பிரதிநிதிகள், தமது எதிராளிகளுடனும் மக்கள் திரளுடனும் பேசுவதற்கான, ஒரு மேடையை வழங்கும்’.

லெனின்

 ‘ஒரு புரட்சி நடத்த, பின்வருபவை அத்தியாவசியமானவை ஆகும். (1) பெரும்பான்மையான தொழிலாளர்கள் (அல்லது குறைந்தபட் சம் வர்க்க உணர்வுள்ள, சிந்திக்கும் திறன் படைத்த, அரசியல்ரீதியில் செயலூக்கமான தொழிலாளர்களின் பெரும்பான்மையினர்) ஒரு புரட்சி தேவை என முழுமையாக உணர வேண்டும். (2) ஆளும் வர்க்கங்கள் ஓர் அரசாங்க நெருக்கடியின் ஊடே சென்று கொண்டிருக்க வேண்டும்; அந்த நெருக்கடி மிகவும்  பின் தங்கிய மக்களை அரசியலுக்குள் ஈர்க்க வேண்டும்; (இதுவரை அசிரத்தையாக இருந்த உழைக்கும் மக்கள் ஒடுக்கப்பட்ட மக்கள், துரிதமாக பத்து மடங்கு நூறு மடங்கு அதிகமான எண்ணிக்கையில் அரசியல் போராட்டம் நடத்தும் ஆற்றல் பெறுவது, எந்த உண்மையான புரட்சியையும் அடையாளப்படுத்தும்). இந்த நெருக்கடி, அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தும்; புரட்சியாளர்கள் விரைந்து அரசாங்கத்தைத் தூக்கி எறிவதற்கான சாத்தியப்பாட்டை உருவாக்கும்’.

 ‘நமது விருப்பத்தை, நமது அரசியல் கருத்தியல் அணுகுமுறையை, புறநிலை யதார்த்தமாக, நாம் கருதிவிடக் கூடாது’.

‘நேரடியான வெளிப்படையான உண்மையிலேயே மக்கள் திரள் தன்மையுடைய, உண்மையிலேயே புரட்சிகரப் போராட்டத்திற்கான நிலை இல்லாத போது, புரட்சிகர அமைப்புகளாக இல்லாதவற்றில் பல நேரங்களில் அப்பட்டமான பிற்போக்கு அமைப்புகளில், புரட்சிகர சூழல் இல்லாதபோது, உடனடியாக புரட்சிகரமான நடவடிக்கைகளின் முறைகளின் தேவையை புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாத மக்கள் மத்தியில், பிரச்சாரம் கிளர்ச்சி மற்றும் அமைப்பாக்குதல் மூலம் புரட்சியின் நலன்களை முன்னெடுப்பதுதான் மிகவும் கடினமானதாகும். மிகவும் விலை மதிப்பே இல்லாததாகும். அதுவே ஒரு புரட்சியாளருக்கு உரிய பணியாகும்’.

‘அரசியல் ஒரு கலை ஆகும். அரசியல் ஓர் அறிவியல் ஆகும். அது ஆகாயத்திலிருந்து குதித்து வந்து விடுவதில்லை. அது இலவசமாக எவருக்கும் கை கூடுவதில்லை. முதலாளித்துவத்தை வெல்ல வேண்டுமானால், எவ்விதத்திலும் முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்குக் குறைவில்லாத விதத்தில், பாட்டாளிவர்க்கம், தனது சொந்த பாட்டாளி வர்க்க அரசியல்வாதிகளுக்குப் பயிற்சி தந்தாக வேண்டும்’.

நமது சூழல் எத்தகையது?

இன்றைய வர்க்க சமூகத்தில், நமது நாட்டில், வர்க்கங்களுக்கு இடையிலான சண்டை, நேருக்கு நேரான ஆயுத மோதல்களாக நிகழ்வதில்லை. முதலாளிகளும் தொழிலாளிகளும், பணக்காரர்களும் ஏழைகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டால், ஏகப் பெரும்பான்மையாக உள்ள தொழிலாளர்களும் ஏழைகளுமே வெல்வார்கள். ஆனால், சில ஆயிரம் வருடங்களாகச் சிறுபான்மை பெரும்பான்மையை ஆள்கிறது. அது சாத்தியமாக, அரசு ஒடுக்குமுறை நிச்சயம் ஒரு முதன்மையான சாதனம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், கை கால்களுக்குப் போடப்படும் விலங்குகளைவிட, மூளைக்குப் போடப்படும் விலங்குகள் எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல. வர்க்கங்களுக்கு அரசியல் கட்சிகள் உள்ளன. கட்சிகளுக்கு, தலைவர்கள் தலைமை தாங்குகிறார்கள். முதலாளித்துவக் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும், உழைக்கும் மக்களுடைய ஏழைகளுடைய வாக்குகளை வாங்கிக்கொண்டு, முதலாளிகளுக்காக பணக்காரர்களுக்காக ஆட்சி நடத்துவதில் கை தேர்ந்தவர்கள்.

அரசியல் சண்டை வெற்று வெளியில் நடப்பதில்லை. முதலாளித்துவ அரசியலை பாட்டாளி வர்க்க அரசியல், எல்லா இடங்களிலும் எல்லா தளங்களிலும் சந்தித்தாக வேண்டும். நாடாளுமன்றம் தவிர்த்த பாதை பலப்பட, பாட்டாளிவர்க்க அரசை நிறுவிட, பாட்டாளி வர்க்கம் அரசியல் வலிமை செல்வாக்கு பெற்றாக வேண்டும். அரசியல் சண்டைகளில் மிகவும் முக்கியமான ஒரு சண்டை தேர்தல் சண்டை. தேர்தல் சண்டையில் ஆர்வத்துடன் முனைப்புடன் திறமையுடன் ஈடுபடாமல் இருப்பது, புறக்கணிப்புக்கு இணையானதாக ஆகிவிடாதா?

அகில இந்திய அளவில் பாஜகவும் தமிழ் நாட்டில் அஇஅதிமுகவும்தான் முதன்மையான முதலாளித்துவ கட்சிகள். இவர்கள் இருவரும் ஊராட்சி பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி வார்டு வரையில், வார்டு மட்டத்தில், வாக்குச் சாவடியை மய்யப்படுத்திச் செயல்படுகிறார்கள். அவர்களது அரசியலை வேரறுக்க, நமது அரசியலை வேரூன்ற வைக்க, நாமும், வார்டு மட்டத்தில் வாக்குச் சாவடியை மய்யப்படுத்திச் செயல்பட்டாக வேண்டும். நமது திறமைக் குறைவு, கவனம் குவிப்பின்மை என்பவை, நாடாளுமன்றம் தவிர்த்த பாதைக்கு எவ்வித்திலும் உதவாது. நீண்டகாலம் இந்தியாவில் புரட்சியாளர்கள் புரட்சிகர எதிர்க்கட்சிப் பாத்திரம் ஆற்ற வேண்டியிருக்கும் என்பதால், திறன் வாய்ந்த விளைவு தரும் தேர்தல் பங்கேற்பு, நம் தலைமையிலான மக்கள் போராட்டங்களிலிருந்து பலம்பெற்று, அவற்றுக்கு பலம் சேர்க்கும். நாடாளுமன்றம் தவிர்த்த பாதை, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பவை வெற்று முழக்கங்கள் அல்ல, அவை எந்த விதத் திலும் குறுகியதன்மையோடு பொருந்தாதவை.

இன்றைய இந்தியாவில் தமிழகத்தில், கம்யூனிஸ்ட் கட்சி முன்பு பெரும் சவால்கள் இருப்பது உண்மைதான். அதே நேரம் சந்தர்ப்பங்களும் நிறையவே உள்ளன. கட்சி மற்றும் வெகுமக்கள் அமைப்புக்களின் துணிச்சலான விரிவாக்கம், வேர்க்கால் மட்ட மற்றும் கீழ் மட்ட அமைப்புக்களை வாக்குச் சாவடிகளை மய்யப்படுத்தியும் மக்கள் திரள் நடவடிக்கைகளோடு தொடர்புபடுத்தியும் பலப்படுத்துவது, சுதந்திரமாக சொந்தக் காலில் நின்றுகொண்டு பெருகும் அனைத்து அதிருப்திகளோடும் உறவாடும் அய்க்கிய முன்னணி போன்ற நடவடிக்கைகள் மூலம், போராடும் இடதுசாரிகள் பலப்படுவது சாத்தியமானது, அவசியமானது, தவிர்க்க முடியாதது.


கேட்ஸ் ஃபவுண்டேசன்: மக்கள் சேவை என்ற பெயரில் மார்க்கட் சேவை

பணத்திற்காக நான் ஒன்றும் செய்யவில்லை. இது கடவுளின் செயல்” “ஏழை நாடுகள் அப்படியே ஏழை நாடுகளாக இருக்கின்றன என்பது ஒரு கட்டுக் கதை. 1990ல் இருந்த பரம ஏழைகள் சதவீதம் பாதியாகக் குறைந்துவிட்டது. வெளிநாட்டு உதவிதான் அதை சாத்தியப்படுத்தியது”. “2035ல் உலகத்தில்  அநேகமாக ஏழை நாடுகளே இருக்காது”.

இப்படியெல்லாம் சொல்வது உலகத்தின் முதல் பணக்காரர் பில் கேட்ஸ். அதைச் செயல்படுத்தவே, அதுதான் ஏழை நாடுகளை, வளரும் நாடுகளை பணக்கார நாடுகளாக மாற்ற பில் கேட்ஸும் அவர் மனைவி மெலிண்டா கேட்ஸும் சேர்ந்து (Bill and Melinda Gates Foundation (BMGF) பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை நிறுவனம் நடத்தி வருகிறார்கள். தெற்காசிய நாடுகளில், ஆப்பிரிக்க நாடுகளில் இந்த கேட்ஸ் அறக் கட்டளை நிறுவனத்திற்கு மட்டுமே ஏகப்பட்ட நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்கள். இந்தியாவில் கேட்ஸ் அறக்கட்டளையை  2003ல் ஆரம்பித்தார்கள். அப்போது முதல் 2012 வரை அவர்கள் அந்நிறுவனத்திற்குள் ஒரு பில்லியன் டாலர் பணம் போட்டுள்ளார்களாம்.

இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு முன்பே, எய்ட்ஸ் பரவாமல் தடுப்பதில் இருந்து எங்கள் பணி ஆரம்பமாகி விட்டது, இந்திய மக்களின் சுகாதாரம், தாய், சேய் நலம், ஊட்டச்சத்து, நோய் தடுப்பு, மக்கள் தொகைக் கட்டுப்பாடு, விவசாய வளர்ச்சி, தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவது ஆகியவற்றில் இந்தியாவில் கேட்ஸ் அறக்கட்டளை அதிகமாக அக்கறை செலுத்துகிறது என்கிறார் மெலிண்டா கேட்ஸ். மேலும் அவர், “வறுமையை ஒழித்து வளமான இந்தியாவைப் படைப்பதற்காக, இந்திய அரசாங்கம் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்கிறது. எங்கள் குறிக்கோளும் இந்திய அரசாங்கத்தின் செயல்திட்டமும் ஒன்று போல் இருப்பதால் அந்தக் குறிக்கோளை நிறைவேற்ற நாங்கள் இணைந்து செயல்பட அர்த்தமுள்ள கூட்டு அமைத்துள்ளோம்” என்கிறார். அதற்காக அரசாங்கத்தின் திட்டங்களுடன், தொண்டு நிறுவனங்களுடன் மட்டுமின்றி மருந்து நிறுவனங்களுடனும் இணைந்து செயல்படுகிறார்கள். பொது மற்றும் தனியார் கூட்டை ஊக்குவித்து இந்தியாவின் எதிர்காலத்தை முன்னேற்றப் போவதாகச் சொல்கிறார்கள் கேட்ஸ் தம்பதிகள்.

மத்திய அரசாங்கத்துடன் மட்டுமின்றி மாநில அரசாங்கங்களோடும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது கேட்ஸ் அறக்கட்டளை. ஏழை மக்கள் அதிகமாக உள்ள பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களில் முக்கியமாக முதலீடு செய்துள்ளது. பீகாரில் அனன்யா என்ற பெயரில் 2010ல் பீகார் அரசாங்கத்துடன் கேட்ஸ் நிறுவனம் கூட்டு ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இந்திய அரசாங்கம் பொதுச் சுகாதாரத்திற்காகச் செலவு செய்யும் நிதியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது கேட்ஸ் அறநிறுவனத்தின் ஒதுக்கீடு என்பது மிகக் குறைவு என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இந்திய அரசாங்கம் பொதுச் சுகாதாரத்திற்காக 2010-11 காலக்கட்டத்தில் மட்டுமே 18.3 பில்லியன் டாலர் செலவு செய்துள்ளது.

பொது மற்றும் தனியார் கூட்டு (Public Private Partnership)என்ற பெயரில், பொருள் வளர்ச்சிக்கான கூட்டுகள் (Product Development
Partnerships) ஏற்படுத்துவதே கேட்ஸின் முக்கிய நோக்கம். மென்பொருள் தொழில் தாண்டி வேறு பொருள்களை உற்பத்தி செய்து விற்பதற்கான வழியை ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்குள் தான் நுழைவதற்கான தனது திட்டத்தை கேட்ஸ் அறக்கட்டளை மூலம் தீட்டியுள்ளார். மருந்துகள், தடுப்பு ஊசி மருந்துகள், நோய் கண்டறி பொருட்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் போன்றவைதான் இவரின் இப்போதைய பிரதான பொருள்கள். ஏழை மக்களின் சுகாதாரம், ஊட்டச்சத்து என்று சொல்லிக் கொண்டு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் போன்ற வற்றை தங்கு தடையின்றி விற்பனை செய்யவே இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற வளரும் நாடுகளை கேட்ஸ் நிறுவனம் தேர்ந்தெடுத் துள்ளது. பொருள்களை தான் தயாரிக்காமல் அப்பொருளைத் தயாரிக்கும் நிறுவனங்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு, அந் நிறுவனங்களுக்கும் அரசாங்கங்களுக்கும் இடையே பாலமாகச் செயல்படுகிறது கேட்ஸ் அறக்கட்டளை.

இந்திய அரசாங்கத்தின் உயிரி தொழில் நுட்பத் துறையும் கேட்ஸ் அறக்கட்டளையும் சேர்ந்து 2013ல் இந்தியாவின் மாபெரும் சவால்கள் (எழ்ஹய்க் இட்ஹப்ப்ங்ய்ஞ்ங்ள் ஐய்க்ண்ஹ) என்ற திட்டத்தை உருவாக்கின. அத்திட்டத்தின்படி இந்தியாவில் கேட்ஸ் அறக்கட்டளையும் இந்தியாவின் உயிரி தொழில்நுட்பத்துறையும் தலா 25 மில்லியன் டாலர் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து தடுப் பூசி மருந்துகள், மருந்துகள், விவசாயப் பொருள்கள் கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவது, ஊட்டச்சத்தின்மை, குழந்தைகள் மற்றும் குடும்ப நலத்தில் தலையீடு செய்வது என்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டுள்ளன. புதிய தடுப்பூசி மருந்துகளை கண்டு பிடிப்பது, ஏற்கனவே இருப்பவற்றை மேம்படுத்துவது, மரபு வழி மற்றும் வேதியியல் செயல் திட்டங்களை வளர்த்தெடுத்து நோய்களைக் கட்டுப்படுத்துவது, சத்துமிக்க உணவு தானியங்களை அறிமுகப்படுத்தி ஊட்டச்சத்தை இந்திய மக்களுக்குக் கொடுப்பது ஆகியவைதான் மாபெரும் சவால்கள் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாம்.

சத்தான உணவை உற்பத்தி செய்து இந்தியக் குழந்தைகளுக்கு ஊட்டி எல்லாரையும் ஹார்லிக்ஸ் விளம்பரக் குழந்தைகள் போல ஆக்கப் போகிற அற்புதமான திட்டம் இது என்று பார்த்த மாத்திரத்தில் கண்டிப்பாகத் தோன்றும். இந்தத் திட்டத்தால் முதலில் அடி வாங்கப்போவது பாரம்பரிய உணவு தானியங்களும் பாரம்பரிய உணவு உற்பத்தியும். ஏனென்றால், கேட்ஸ் அறக்கட்டளை முழுக்க முழுக்க ஆதரிப்பது மரபணு மாற்றுப் பயிர்களையும் உணவு தானியங்களையும்தான். சத்துமிக்க அரிசி என்று தங்க நிற மரபணு மாற்று அரிசியை பரிந்துரைக்கிறது கேட்ஸ் அறக்கட்டளை. காற்றில் இருக்கும் நைட்ரஜனை உறிஞ்சிக் கொண்டு, உரம் போடாமல்  வளரும் மரபணு மாற்று அரிசி, கோதுமையைக் கண்டுபிடித்த இங்கிலாந்து விஞ்ஞானிக்கு 6.4 பில்லியன் பவுன்ட்ஸ் பரிசாகக் கொடுத்திருக்கிறார் பில் கேட்ஸ்.  நம்ம ஊரு எம்.எஸ்.சுவாமிநாதனின் பசுமைப்புரட்சியினால் நம் நாட்டு விவசாயம் எல்லாம் ஏற்கனவே பாழாய்போய், விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.  இப்போது ஊட்டச்சத்து, உரமில்லாப் பயிர் என்று சொல்லி மொத்த விவசாய நிலங்களை யும் தரிசாக்கதலை எடுத்துள்ளார்கள் கேட்ஸ் தம்பதியர். கேட்ஸ் அறக்கட்டளைக்கு மிகவும் நெருக்கமான கூட்டாளி மான்சாண்டோ நிறுவனம்.

இந்த மாபெரும் சவால்கள் திட்டத்தில் தயாரிக்கப்படும் மருந்து மற்றும் தடுப்பூசிகள். எல்லாம் உண்மையிலேயே இந்தியர்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்யும் என்பதற்கு நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஒரு மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனையில், அதை சந்தைக்குக் கொண்டு செல்வதற்கு முன்பு பரிசோதனை செய்து பார்ப்பதும் அடங்கும். அதுமாதிரியான பரிசோதனைகளை பேயர், ஏராஸ், கிளாஸ்கோ ஸ்மித் கிலைன் (சிஎஸ்கே) ஃபைசர், ஷனோபி, க்ருசெல் போன்ற பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக் காக கேட்ஸ் அறக்கட்டளை இந்தியாவில், ஆப்பிரிக்காவில் உள்ள ஏழை மக்களிடத்தில் நடத்துகிறது. 2011 மார்ச்சில் தங்களுடைய டிபி நோய் தடுப்பூசி பரிசோதனையை பெங்களூரு வில் ஏராஸ் மற்றும் க்ருசெல் நிறுவனங்களுக் காக கேட்ஸ் அறக்கட்டளை கூட்டுடன் நடத் தப்பட்டது. போலியோ ஒழிப்புப் பிரச்சாரமும் சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியும்  அடிக்கடி நடப்பதற்குக் காரணம் கேட்ஸ் அறக் கட்டளை, சர்வதேச ரோட்டரி சங்கம் மற்றும் உலகச் சுகாதார நிறுவனம். பில் கேட்ஸøக்கு போலியோ ஒழிப்பு பொதுச் சுகாதாரத்தில் மிக முக்கியமான ஒன்றாம். மேற்கண்ட நிறுவனங்களே போலியோ மருந்துகளை அதிகம் தயாரிக்கின்றன. அதனால், இந்திய அரசிடம் தன் செல்வாக்கைக் காட்டினார். இந்திய அரசும் கேட்ஸ÷க்கு அடிபணிந்து நம் நாட்டின் பொதுச் சுகாதாரத் திட்டத்தில் முன்னுரிமையில்லாத போலியோ ஒழிப்புக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறது. போலியோ ஒழிப்பு தேவையில்லை என்பதல்ல. அதைவிட இந்தியாவில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியவை தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தின்மை, நோஞ்ஞான் குழந்தைகள், பச்சிளம் குழந்தைகள்  இறப்பைத் தடுப்பது, கொசு ஒழிப்பு, சுத்தமான சுகாதாரமான குடிநீர் போன்றவையாகும்.

ஹெப்பாடைட்டிஸ் பி என்று சொல்லப்படும் மஞ்சள்காமாலை தடுப்பூசி, மற்றும் சில தடுப்பூசிகளைப் போடுவதற்கு இந்திய அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்துகிறது கேட்ஸ் அறக்கட்டளை. மருத்துவ நிபுணர்கள் பலர் இந்தியாவின் சூழ்நிலைக்கு, இந்திய மக்களின் வாழ்நிலைக்கு வருமானத்திற்கு இவையெல்லாம் தேவையில்லை. அவை அவ்வளவு பாது காப்பானவையும் இல்லை என்று சொன்னாலும் கேட்ஸ் வகையறாக்களும் இந்திய அரசாங்கமும் அதைக் காதில் போட்டுக் கொள்வதேயில்லை. வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.

338 மில்லியன் டாலர் நிதியில் 2003ல் “அவகான்” என்கிற எய்ட்ஸ் தடுப்புத் திட்டத்தை, இந்தியாவில் இருக்கும் எல்லாருக்கும் எய்ட்ஸ் இருப்பதுபோல் ஆரம்பித்தது. பின்னர், அதை பாதியிலேயே திரும்பப்பெற்றுக் கொண்டு அரசாங்கத்தின் தலையில் கட்டிவிட் டது கேட்ஸ் நிறுவனம். காலரா, வயிற்றுப் போக்கு போன்றவை வருவதற்குக் காரணமாக உள்ள அசுத்தமான தண்ணீர் போன்றவற்றைச் சீர் செய்வதற்குப் பதிலாக, அதற்கு தடுப்பூசி கண்டுபிடித்து, பரிசோதனை நடத்தி, விற்பனை செய்து காசு பார்ப்பது இதுதான் கேட்ஸ் அறக் கட்டளையின் அறம். அளிப்பு அதிகமானால் தான் அதிக லாபம் வரும். அளிப்பு அதிகரிக்க அதற்கான தேவையை அதிகரிக்க வேண்டும். அதற்காகவே, சில அமைப்புகளை உருவாக்கி அவற்றின் மூலம் படிப்பு, ஆராய்ச்சி, கண்டு பிடிப்பு, பரிசோதனை, முடிவு, பிரச்சாரம் என்று அரசாங்கங்கள் மூலமே அவற்றைச் செய்ய வைக்கிறார்கள் இந்த பில்கேட்ஸ் போன்ற பெரும் கொடையாளர்கள்.

இந்தியாவில் கேட்ஸ் அறக்கட்டளையும் பிக் பார்மாவும் இணைந்து மருந்துப் பரிசோத னைகளை இந்திய மலைவாழ், ஏழை மக்களிடத்தில் நடத்தினார்கள். பெண்களுக்கு வரும் கர்ப்பப் பை புற்றுநோயை உருவாக்கும் ஹெச்.பி.வி. வைரஸுக்கான தடுப்பூசியை குஜராத் மற்றும் ஆந்திராவில் ஆதிவாசிப் பெண்களுக்குப் போட்டு பரிசோதனை செய்து பார்த்தார்கள். அந்த பரிசோதனையில் 2010ல் ஏழு இளம் வயதுப் பெண்கள் இறந்துபோனார்கள். சிஎஸ்கே மற்றும் மெர்க் மருந்துக் கம்பெனிகளால் தயாரிக்கப்பட்ட இதே மருந்தை 10 முதல் 14 வயதுள்ள 23,000 பெண்கள் மீது பரிசோதனை செய்துள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மிக மோசமான பக்க விளைவுகள் ஏற்பட்டன. இயற்கையாக உள்ள நோய் எதிர்ப்புத் தன்மையும் குறைந்துபோனது. அந்தப் பெண்களுக்கு தொடர் சிகிச்சை எதுவும் தரப்படவில்லை பரிசோதனை நடத்திய கேட்ஸ் அறக்கட்டளை கனவான்கள். இந்திய நாடாளுமன்றக் குழு ஒன்று, கேட்ஸ் அறக்கட்டளை, மருந்துப் பரிசோதனை செய்வதற்காக உருவாக் கப்பட்டுள்ள சட்டப்படியான வழிமுறைகள் எதையும் கடைபிடிக்கவில்லை என்று கண்டு பிடித்து அறிவித்தது.

போலியான மருந்துகளை இந்திய மக்களின் தலையில் கட்டியது கேட்ஸ் அறக்கட்டளை. “கார்ட்ஸில்” என்கிற கர்ப்பப் பை புற்று தடுப்பூசியை அமெரிக்க, அய்ரோப்பியப் பெண்கள் போட்டுக் கொள்ள மறுத்த பின்னர் இந்தியாவில் அதை விற்பனை செய்ய முயற்சித்தார்கள். 2012ல் கார்ட்ஸில் விற்பனை 35 சதவீதம் அதிகமானது. மேலை நாடுகளில் தோற்றுப்போன, அதிகமான பக்கவிளைவுகளை ஏற்படுத்திய “நார்பிளாண்ட்” என்ற கருத்தடை மாத்திரையை விற்பனை செய்வதற்கு கேட்ஸ் அறக்கட்டளை அதிக அக்கறை எடுத்துக் கொண்டது. இந்த மாத்திரையின் தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்கப் பெண்கள் 36,000 பேர் வழக்கு தொடுத்தார்கள். ஃபைசர் நிறுவனத்தின் இன்னொரு கருத்தடை மாத்திரையான டெப்போ புரோவேராவை அறிமுகப் படுத்தியது கேட்ஸ் நிறுவனம். அதுவும் பெண் களுக்கு கர்ப்பப்பை பாதிப்பு, மனஅழுத்தம், முடி உதிர்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கியது.   
   
2009ல் உலகளவில் நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, பில்கேட்ஸ், வாரன் பப்பெட், டேவிட் ராக்பெல்லர் ஆகியோர் தலைமையில் நியூயார்க்கில் உலகப் பணக்காரர்கள் ஒன்று கூடினார்கள். முதலாளித்துவ நிதி நெருக்கடி, முதலாளித்துவ ஆட்சியாளர்களால் வளரும் நாடுகளில் மக்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தியைச் சமாளிக்க, குறிப்பாக மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் தொற்று நோய் ஆகியவற்றில் தாங்கள் தலையிடுவதன் மூலம், தங்களை பெரும் கொடையாளர்களாகக் காட்டத் தீர்மானித்தார்கள். மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளான மருத்துவம், சுகாதாரம், கல்வி ஆகியவை கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டால், பிரச்சினைகள் பெரிதாகி தங்களுக்கு ஆபத்தாகும் என்றுணர்ந்த பெரும் பணக்காரர்கள் ஆள் ஆளுக்கு அறக்கட்டளைகள் ஆரம்பித்தார்கள். இந்த அறக்கட்டளைகள் மூலம் தங்களை பெரும் கொடையாளர்களாகக் காட்டிக் கொள்வது மட்டுமின்றி, தாங்கள் கட்டவேண்டிய சட்டப்படியான வரியில் இருந்தும் தப் பித்துக் கொள்கிறார்கள். இந்தக் கொடையாளர்கள் வேஷம் பெரும் பணக்காரர்களால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டதல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பெரும் முதலாளி களால் அங்கங்கே போடப்பட்டு வரும் வேஷம் என்றாலும் இன்றைய உலகமய காலக்கட்டத்தில் அது ஓர் உலகளாவிய பரிமாணம் எடுக்கிறது.

பில் கேட்ஸ் அறக்கட்டளையின் அடிப்படை நோக்கமே  ஆளும் வர்க்க நலன்களுக்கு ஏற்ப சமூகத்தை மறு சீரமைப்பு செய்வதே. வளரும் நாடுகளின், மேலை நாட்டுக் கலாச்சாரம் இல்லாத நாடுகளின் மக்கள் தொகைப் பெருக்கம் மக்களை கம்யூனிசத்திற்கு இட்டுச் செல்லும் என்று அமெரிக்க ஆட்சியாளர்கள் அஞ்சுகிறார்கள்.  அதற்காக,  மக்கள் தொகைப் பெருக்கத்தையும் கட்டுப்படுத்த வேண்டும் என்கிறார்கள். அதன் காரணமாகவே அதிகமான அளவு கருத்தடை மாத்திரைகளுக்கான பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள். அளவுக் கதிகமான குழந்தைகளே தங்கள் ஏழ்மைக்குக் காரணம் என்று எண்ண வைக்கிறார்கள். அதன் வாயிலாக சமூக உழைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட செல்வங்கள் ஒரு சிலரிடமே குவிந்து கிடப்பதற்கு எதிரான சிந்தனையில் இருந்து மக்களைத் திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். இந்த அறக்கட்டளைகள் மூலம் அரசாங்கங்களின் சேவைத் துறைகளை அவசியமற்றவைகள், அர்த்தமற்றவைகள் என்ற சிந்தனையை மக்கள் மத்தியில் பதிய வைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், என்னதான் செய்தாலும் இவர்களின் பிரதான நோக்கம் குறிக்கோள் “லாபம், லாபம் லாபம்” என்கிறபோது, இந்த பெரும்கொடையாளர்கள் அம்பலப்படுவது தள்ளிப் போகலாமே தவிர, தவிர்த்துவிட முடியாது.ஆகஸ்ட் 14, ஜனநாயகத்திற்கு இன்னுமொரு சோகமான நாள்

சுதந்திர தினத்தை ஒட்டி மும்பையிலுள்ள புனித சேவியர் கல்லூரியில் உரையாற்ற கபிர் கலா மஞ்ச் செயல்வீரரும், தலித் பாடகருமான ஷீதல் சாதே அழைக்கப்பட்டிருந்தார். ஏபிவிபியினர் வன்முறையால் அந்நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்த பின்னணியில் திரைப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்தன் அவருக்கு பதிலாக உரையாற்றினார். அவருடைய உரை இங்கு தரப்பட்டுள்ளது.

இன்று உரையாற்ற முறைப்படி அழைக்கப்பட்டிருந்த ஷீதல் சாதே இடத்தில் உங்கள் முன்னால் நான் உரையாற்றுகிறேன். ஷீதல் சாதேவிற்கோ அல்லது அவர் குழந்தைக்கோ உடல் நலக்குறைவு என்று அவர் வராமல் இல்லை. அவரிடம்  உங்களுக்கு சொல்வதற்கு எதுவுமில்லை என்பதாலும் அவர் வராமல் இல்லை.  அவர் எதைச் சொல்ல வேண்டுமோ அதை உங்களிடம் சொல்வதற்கு அச்சப்படுகிறார் என்பதாலும் அல்ல. அவரை பேச அழைத்தவர்களின் நம்பகத்தன்மை பற்றி அவருக்கு சந்தேகம் இருக்கிறது என்ற காரணத்தாலும் அவர் வராமல் இல்லை.

அவர் இந்த விழாவில் பேசினாலோ, பாடி னாலோ இடையூறு ஏற்படும் என்று (ஏபிவிபி) விடுத்திருந்த எச்சரிக்கைக்கு நிகழ்ச்சி அமைப்பாளர்களும், இங்கு குழுமியிருக்கிற மக்களும் ஆளாகிவிடக் கூடாது என்ற காரணத்தினாலும், தன்னை விழாவிற்கு அழைத்த அந்த மாணவர்கள் அவர் மீது கொண்டிருக்கிற அளப்பரிய அன்பு மற்றும் மரியாதை காரணமாகவும் தான்  அவர் வரவில்லை.

இந்த எச்சரிக்கையை யார் விடுத்தார்கள் என்பது மக்களுக்கு தெரிய வேண்டும். இந்த எச்சரிக்கையை நீதிமன்றமோ காவல்துறையோ அல்லது மத்திய, மாநில அரசாங்கங்களோ விடுக்கவில்லை.

ஷீதல் சாதே, தான் குற்றமற்றவர்  என்று நிரூபணம் செய்வதற்கான வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது அவருடைய சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தக் கூடாது என்பதற்காகத்தான் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கி இருக்கிறது. நீதிமன்றம் அவர் பேசுவதற்கான சுதந்திரத்தையோ அல்லது பாடுவதற்கான உரிமையையோ பறித்து விடவில்லை. நீதி மன்றம் அவரது குரலையோ அல்லது ஒடுக்கப்பட்ட, முத்திரை குத்தப்பட்ட கோடிக்கணக்கான மக்களின் குரலை அவர் பாடுவதையோ முடக்கவில்லை.

நம் மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாய் இருக்கிற, அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்ட ஓர் அமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. இதுபோன்ற அரசியல்சாசனத்திற்கு அப்பாற்பட்ட பல அமைப்புகளின் அதிகாரம் வளர்ந்து வருகிறது. அவர்களுக்கென்று பல பெயர்கள் இருக்கின்றன. பல கடமைகளும் இருக்கின்றன. சில இந்திய மக்கள் எதுமாதிரி புத்தகங்கள் படிக்க வேண்டுமென்றும், சில எந்த மாதிரி படங்கள் பார்க்க வேண்டுமென்றும், சில எத்தகைய பேச்சுக்களை, பாடல்களை கேட்க வேண்டுமென்றும் முடிவு செய்கின்றன. அவர்கள் தாமாகவே பல தணிக்கைகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் அவையெல்லாம் ஒரே குடும்பம், ஒரே தத்துவம், ஒரே தொகுப்பான நம்பிக்கையைச் சார்ந்தவை. இந்த நம்பிக்கைகள் மிகவும் இளம் வயதினரிடம், மனதில் விளைவை உண்டாக்கக் கூடியவர்களின் மூளையில் செலுத்தப்படுகிறது. பொற்காலம் என்று அவர்களால் சொல்லப்படும் 1000 ஆண்டுகளுக்கு முன்பான பார்ப்பனிய வேத காலத்தில்தான் விமானம் மற்றும் ராக்கட் விஞ்ஞானம் கண்டு பிடிக்கப்பட்டது என்று சொல்வதோடு அல்லாமல், தலித்துகள் மற்றும் பெண்களின் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்ட, அதை எதிர்த்தவர்கள் சொல் லொணா தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட பண்டைய கால பார்ப்பனிய சட்டமான மனு ஸ்மிரிதி மீது அவர்கள் நம்பிக்கை கொண்டிருப் பவர்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.

இன்று அதே தத்துவம், தேசியவாதம் என்ற பெயரில் நம் முன்னே வருகிறது. சுதந்திரத்தின் போது மூவர்ணக் கொடி ஏற்றுவதை வன்மையாக எதிர்த்து, இந்துத்துவாவின் ஆரஞ்சு நிறக் கொடியை ஏற்றுமாறு அதன் வழிவந்தவர்களால் நிர்ப்பந்தப்படுத்தப்பட்ட அதேதான் இப்போது இந்தியக் கொடியால் போர்த்தப்பட்டு வருகிறது. அவர்கள்  ‘வந்தே மாதரம்’தான் தேசிய கீதமாக இருக்க வேண்டும் என்று சொல்லி ‘ஜனகன மன’ பாடவும் மறுத்தார்கள். இந்திய முஸ்லீம்களை இழிவு படுத்தும் 19ஆம்  நூற்றாண்டில் பக்கிம் சந்திரா எழுதிய ‘ஆனந்த மடம்’ நாவலில் வருவதுதான் ‘வந்தே மாதரம்’ என்பதை இங்கு குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறேன்.

தேசியவாதம் அல்லாமல் இந்தியாவின் மேட்டுக்குடி மற்றும் மத்தியதர வர்க்கத்தின் பேராசையை பற்றவைத்த மற்றுமொரு இன்னும் அதிக போதையூட்டும் முகமூடி ஒன்று உள்ளது. அந்த முகமூடிதான் ‘வளர்ச்சி’. இந்த வளர்ச்சி பேராசை மூவர்ணத்தை விட உயர்ந்ததாகி விடுகிறது. அது ‘உலகின் எண்ணெய் வளமும், தண்ணீரும் வேகமாக குறைந்து வருவதால் என்னவாகிவிடப்போகிறது, சுற்றுச் சூழல் மாசு, உலகம் வெப்பமயமாதல், சுனாமி அச்சம், அணுப் பேரழிவு ஆகியவை நடந்தால் என்ன, பன்னாட்டு நிறுவனங்கள் அபகரிக்க விரும்பும் இந்தியாவின் காற்று, நீர், காடுகள், நிலம், தாது ஆகிவற்றை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்?’ என்றும் கேட்க வைக்கிறது.

ஒரு சிலரின் குறுகியகால நலன்களுக்காக நம் இறையாளுமையை விற்க தயாராகியிருக்கிறார்கள். பிறகு, நவீனம், வளர்ச்சி பற்றிய கூக்குரலோடு கூடவே மிகவும் துவக்ககால, இனவெறி, சுரண்டல் கலாச்சார மற்றும் பொருளாதார மரபுகளை வளர்ப்பதை நோக்கிச் செல்கிறார்கள்.

நானும் நீங்களும் இதை எப்படி தடுக்கப் போகிறோம்? நாம் தவறிழைத்துவிடக்  கூடாது. இந்தக் கருத்தியல் மாறுபட்ட கருத்து எதையும் அனுமதிப்பதில்லை. இன்று இந்திய ஜனநாயகத் துக்கு மற்றுமொரு சோகமான நாள். இன்று நூறாண்டுகளுக்கு மேலாக கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் ஒரு கல்லூரிக்கு எதிராக ஆளும் கட்சியின் ஆதரவு பெற்ற அரசியல் சாசனத்தைத் தாண்டிய ஓர் அமைப்பு அச்சுறுத்தல் விடுத்த நாள். ஆம் அதுதான் இறுதி வரி ஆகும்(?) அதுதான் புனித சேவியர் கல்லூரியை, அதிலும் குறிப்பாக அதன் கொள்கையாளரான முதல்வரை, தாக்குதலுக்கான இலக்காக்கியிருக்கிறது.

ஷீதல் சாதேவும், கபிர் கலா மஞ்ச்சும் இந்த விழாவை சீர்குலைக்க விரும்பவில்லை. ஆனால், எங்கள் குரலை ஒரு நாளும் அமைதிபடுத்த முடியாது என்பதையும் நாங்கள் பதிவு செய்ய விரும்புகிறோம். இந்த குறிப்பிட்ட அச்சுறுத் தலை விடுத்தவர் யார் என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். இந்திய மக்களிடம் நாங்கள் கடந்த காலங்களில் உறவு கொண்டிருந்த பிரிவினை, மதவாத, சாதிய சக்திகளுடன் இனி நிற்க மாட்டோம் என்று, மக்களிடம் சொல்லி ஆட்சிக்கு வந்த அரசியல் கட்சியின் இளைஞர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்புதான் அச்சுறுத்தல் விடுத்த அமைப்பு. ஏபிவிபி போன்ற குழுக்கள் கேகேஎம் போன்ற குழுக்களை வெறுப்பதற்கான காரணம் என்ன என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இது தேசியவாதத்தோடு அல்லது  நக்சலிசத்தோடு எவ்விதத்திலும் தொடர்பும் இல்லாதது. இருவரின் இந்தியா பற்றிய பார்வை நேர் எதிரானது. சாதி, மத, இன அடையாளங்கள் துறந்து, நாம் அனைவரும் நீதி, அமைதி, உண்மையான ஜனநாயகம் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ள வர்கள் என்பதை அங்கீகரிக்கும் பன்மைதன்மை கொண்ட இந்தியாவிற்காக கபீர் கலா மஞ்ச் நிற்கிறது. இந்த இந்துத்துவ கருத்தியலாளர்கள் எவ்வளவுதான் பெரிய தேசியக் கொடியால் தங்களைச் சுற்றி போர்த்தியிருந்தாலும் அவர்கள் எப்போதுமே முற்றிலும் புதிய நிகழ்ச்சிநிரல் கொண்டிருப்பார்கள்.கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி: 2011 முதல் 2014 வரை

2011 சட்டமன்ற தேர்தல்களில் கந்தர்வ கோட்டை தொகுதியில் போட்டியிட்ட இகக மாலெ, தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி மக்கள் வாழ்க்கை நிலைமைகளின் அனைத்து அம்சங்கள் பற்றியும் ஒரு சிறுபுத்தகம் வெளியிட்டது.

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், தலித் பிரிவினர், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், சமூக வாழ்வின் வெவ்வேறு அம்சங்கள், வளர்ச்சித் திட்டங்கள் என பல்வேறு அம்சங்கள் பற்றியும் அதில் ஒரு சித்திரம் தரப்பட்டிருந்தது. அந்தச் சித்திரம், பெரும்பான்மை  வாக்காளர்களான வறிய மக்கள் வாழ்வு துன்பத்தில் இருப்பதையே சுட்டிக்காட்டியது.

மூன்றாண்டு ஆட்சி முழுமையான வளர்ச்சி என்று ஜெயலலிதா சொல்வதன் பொருள் கந்தர்வகோட்டை தொகுதியைச் சேர்ந்த மக்களுக்கு என்ன என்பதை தெரிந்துகொள்ள, 2011ல் இருந்த நிலைமைகளை, இன்றைய நிலைமைகளோடு ஒப்பிட்டுப் பார்க்க, இகக மாலெயின் புதுக்கோட்டை மாவட்டக் கமிட்டி ஓர் ஒப்பு நோக்கு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் அடிப்படையில் கந்தர்வகோட்டை தொகுதி மக்களின் இன்றைய வாழ்க்கை நிலைமைகள் பற்றி பின்வரும் புதிய, ஆனால், நிலைமைகளில் பெரிதும் மாற்றம் இல்லாததால், பழைய சித்திரம் முன்வைக்கப்படுகிறது.

விவசாயிகள்

ஓர் ஏழை விவசாயி, 1 ஏக்கர் கடலை பயிர் செய்தால் 2011ல் அவருக்கு மிஞ்சியது ரூ.10,585. அன்று டீசல் ரூ.43. இன்று ரூ.62. இந்த வகையில் கிட்டத்தட்ட ரூ.900 செலவு அதிகரிக்கிறது. உர விலை அன்று ரூ.450. இன்று ரூ.880 முதல் ரூ.1,100. கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உயர்வு. விவசாயிக்கு கிடைப்பதில் மாற்றம் இல்லை. பாசனத்துக்கு ஆழ்குழாய் கிணறுகளையே நம்பியிருப்பதால், மின்தட்டுப்பாடும் சேர்ந்து கொண்டு டீசல் செலவை இன்னும் அதிகரிக்கிறது. எல்லாமும் சேர்ந்து விவசாயி சாகுபடி செய்கிற நிலப்பரப்பை குறைத்துவிட்டன.

விவசாயத் தொழிலாளர்கள்

2011ல் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஊரக வேலை உறுதித் திட்டத்தில் சட்டக் கூலி ரூ.119. அப்போது அந்தக் கூலி யாருக்கும் கிடைக்கவில்லை. அளவீட்டு முறையைக் அறி முகப்படுத்தி உழைப்புக்கேற்ற ஊதியம் உழைத்தால்தான் சாத்தியம் என்று அன்றைய துணை முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னார். இன்று சட்டக்கூலி ரூ.167. இன்று ஸ்டாலின் இல்லை என்றாலும் அளவீட்டு முறை இருக்கிறது. யாரும் சட்டக் கூலி முழுமையாகப் பெறு வதில்லை. மத்தியில் ஆட்சி மாறிய மூன்று மாத காலமாக, மத்தியில் இருந்து நிதி வரவில்லை என்று சொல்லப்பட்டு, மூன்று மாதங்களாக கூலி தரப்படவில்லை. மத்திய நிதி வரவில்லை என்பதை காரணம் காட்டி வேலை மறுக்கப்படு வதால் விவசாயத் தொழிலாளர்களும் நூறு நாள் வேலைக்குச் செல்வதில்லை. வேறுவித மாகச் சொன்னால், வேலை வாய்ப்பு பறி போயுள்ளது. நூறு நாள் வேலைத் திட்டத்தில் புதிதாக யாருக்கும் வேலை அட்டை வழங்கப் படவில்லை. அதாவது, இந்த அரங்கில் புதிய வேலை வாய்ப்பு உருவாகவில்லை.

2011க்குப் பிறகு தொழில்துறையிலும் புதிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை. புதிய ஆலைகள் எதுவும் துவங்கப்படவில்லை.

சாதி ஆதிக்கம்: பொட்டு வைத்த குவளை

கந்தர்வகோட்டை தொகுதியில் வெற்றி பெற்ற அஇஅதிமுக வேட்பாளர் என்.சுப்ரமணி யன் இன்று ஜெயலலிதா அமைச்சரவையில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர். 2011ல் இருந்ததை விட இன்று தலித் மக்கள் மீதான தாக்குதல்கள், கவுரவப் படுகொலைகள், சாதி அடிப்படையிலான பாகுபாடான நடவடிக்கை கள் அதிகரித்துள்ளன.

தொகுதிக்குட்பட்ட காட்டாதி, கருக்காக் குறிச்சி ஊராட்சிகளின் தலித் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கொத்தனப்பட்டியில் கவுரவக்கொலை, பிசானத்தூரில் தலித் படு கொலை நடந்துள்ளன.

இரட்டைக் குவளை முறை அதிகாரபூர்வமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால், நடை முறையில் வேறு புதிய வடிவங்களில் கிராமப் புறங்களில் நீடிக்கிறது. தேநீர் கடைகளில் தலித் மக்களுக்கு வழங்கப்படும் குவளைகளை வண்ண வண்ண பொட்டுக்கள் அடையாளப்படுத்துகின்றன. எவர்சில்வர் குவளை என்றாலும், பெரிய குவளையில் குறிப்பிட்ட சாதியினருக்கு, சிறிய குவளையில் குறிப்பிட்ட சாதியினருக்கு என்று தரம் பிரித்து தரப்படுகிறது.

22% தலித் மக்கள் வாழும் இந்தத் தொகுதிக்கு புதிதாக ஆதிதிராவிடர் பள்ளிகள் எவை யும் இந்த மூன்று ஆண்டுகளில் துவக்கப்படவில்லை. தலித் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறபோதும், அதற்கேற்ப ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை; இருக்கிற விடுதிகளில் இருப்பிட வசதி  மேம்படுத்தப்படவில்லை.

ஊர் சொத்துக்கள் எவற்றிலும் இன்றும்  தலித் மக்களுக்கு பங்கோ, பாத்தியதையோ இல்லை.

தலித் இளைஞர்கள் விளையாட்டு போட்டிகள் நடத்த முடிவதில்லை. பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட மோகனூரில், தலித் இளைஞர்கள் விளையாட்டு போட்டி நடத்த முயற்சி செய்தபோது, கள்ளர் பிரிவினர் கலவரம் செய்ய முற்பட்டதால், அதைக் காரணம் காட்டி காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது. கலவரம் செய்ய முற்பட்டவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. வீரடிப்பட்டி ஊராட்சியின் இளைஞர்கள் கிரிக்கெட் போட்டி நடத்தியபோதும், கள்ளர்களால் தாக்கப்பட்டனர். இதுபோன்ற சம்பவங்களில் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது காவல் துறையினர் சட்டப்படியான முறையான நடவடிக்கைகள் எடுப்பதில்லை.

தெம்மாவூரில் முத்தரையர்களுக்கு தனிக் குவளை முறை உள்ளது.

சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள்

முதியோர் ஓய்வூதியம், கணவனை இழந்த பெண்கள் ஓய்வூதியம் என அனைத்துவிதமான ஓய்வூதியங்களும் நிறுத்தப்பட்டுவிட்டன. இதற்கு முறையான காரணம் ஏதும் அரசு அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படவில்லை.
பொது விநியோகத்திட்டத்தில் 600 குடும்ப அட்டைகள் இருக்கும் ஒரு பகுதியில் 500 குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. 100% விநி யோகம் இருக்கக் கூடாது என்று பொதுவிநியோக ஊழியர்களுக்கு அதிகாரபூர்வமற்ற விதத்தில் உத்தரவு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

மருத்துவமனைகள் எண்ணிக்கை, தரம் ஆகியவற்றில் எந்த முன்னேற்றமும் இல்லை. பழைய நிலைமையே தொடர்கிறது.
கால்நடை வளர்ப்பு மக்கள் வாழ்வாதாரம் தொடர்பான முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் இந்தத் தொகுதியில் கால்நடை மருத்துவமனை புதிதாக ஏதும் இதுவரை அமைக்கப்படவில்லை.

காற்றில் பறக்கும் வாக்குறுதிகள்

தொகுதியில் 40 டாஸ்மாக் சாராயக் கடைகள் உள்ளன. (குடிகாரர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கக் கூடும். இந்த எண்ணிக்கை பற்றிய விவரங்களை அரசுதான் தரவேண்டும்). கந்தர்வகோட்டை தொகுதிக்கு 2011ல் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தபோது, கல்லாக்கோட்டை சாராய ஆலையை அங்கிருந்து அகற்றுவதாக, ஜெயலலிதாவே தனது உரையில் நேரடியாக வாக்குறுதி அளித்தார். ஆனால், அந்த ஆலை இப்போதும் எந்த இடையூறும் இல்லாமல் அங்கேயே இயங்கிக் கொண்டிருக்கிறது.
காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் தொகுதிக்கும் வரும் என்றும் தேர்தல் வாக்குறுதி தரப் பட்டது. இந்த விசயத்திலும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
எங்கும் நிலவுகிற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை இங்கும் நிலவுகிறது. இந்த விசயத்திலும் 2011க்குப் பிறகு மாற்றம் எதுவும் இல்லை.

சில அடையாள நடவடிக்கைகள்

வற்றிப் போன குளங்களில் படிக்கட்டுகள் கட்டப்படுகின்றன. பெயருக்கு சில கலையரங் கங்கள், பேருந்து நிழற்குடைகள், கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

புதிதாக ஆரம்பப் பள்ளிகள்  திறக்கப்படவில்லை. கல்லாக்கோட்டையில் உள்ள உயர் நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கரம்பக்குடியில் 2013ல் கலை அறிவியல் கல்லூரி ஒன்றும் கந்தர்வ கோட்டை பாலிடெக்னிக் ஒன்றும் புதிதாக துவங்கப்பட்டுள்ளன.

கந்தர்வகோட்டையில் பேருந்து பணிமனை கட்டுவதற்கான பணிகள் துவங்கியுள்ளன.

மிக்சி, கிரைண்டர் போன்ற விலையில்லா பொருட்களை 50% பயனாளிகள் மட்டுமே பெற்றுள்ளனர். ஆடு, மாடு வளர்ப்பை நம்பியுள்ளமக்கள் நிறைந்த இந்தத் தொகுதியில் ஆடு, மாடுகள் உரியவருக்கு வழங்கப்படவில்லை. 600 பேருக்கு ஆடு, மாடு வழங்க வேண்டிய இடத் தில் 30 பேருக்கு மட்டுமே தரப்பட்டுள்ளன.

ஏழை சொல் அம்பலமேறாது என்ற பழ மொழியை மாற்றி தமிழ்நாட்டில் ஏழை சொல் தான் புனித ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்கும் என்ற புதுமொழியை தனது அரசு நிலை நாட்டியுள்ளதாகச் தனது சுதந்திரதின உரையில் ஜெயலலிதா சொல்லியுள்ளார். ஆனால், கந்தர்வ கோட்டை சட்டமன்ற தொகுதி மக்களின் வாழ்க்கை நிலைமைகள் அவர் சொல்வதற்கு மாறாக அமைந்துள்ளன. அவர் பெருமையாக சொல்லிக் கொள்ளும் விலையில்லா, கட்டண மில்லா பொருட்கள் கூட மக்களுக்கு முழுவதுமாக சென்று சேரவில்லை. மக்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்கள் என புதிதானவை சொல்லிக்கொள்ளும்படி எவையும் இல்லை. குடிநீர் கூட பெரும்பிரச்சனையாகவே இந்தத் தொகுதி மக்களுக்கு உள்ளது.

ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் ஒரு தொகுதியைச் சேர்ந்த மக்களின் குறைந்தபட்ச வாழ்வாதாரத்தைக் கூட, ஆதாரங்கள் ஏராளமாக இருந்தும் உறுதி செய்யாத, உறுதி செய்ய முயற்சி செய்யாத அரசு, ஏழை சொல், ஏழையின் சிரிப்பு என்று  பொருத்தமில்லாமல் அவ்வப்போது ஏதாவது சொல்லிக் கொண்டே இருந்தால் தப்பித்து விடலாம் என எதிர்ப்பார்க்கிறது.


ஆலை மூடலுக்கு எதிராக பட்டினிப் போராட்டம்

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள டால்புரோஸ் ஆலை மூடப்பட்டு 113 தொழிலாளர்கள் வீதியில் நிற்கிறார்கள். டோபஸ்டூல் ஆலை கதவடைப்பால் 36 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோல் 5 ஆலைகள் மூடப்பட்டு 215 தொழிலாளர்கள் குடும்பங்கள் தெருவில் நிற்கின்றன. கதவடைப்பு செய்யப்பட்டுள்ள, மூடப்பட்டுள்ள ஆலைகளை உடனடியாகத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும், அது வரை வேலையின்றி நிற்கும் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 27.08.2014 அன்று பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் AICCTU தலைமையில் குடும்பத்துடன் பட்டினிப் போராட்டம் நடத்தினார்கள். இதில் 300 பேர் கலந்து கொண்டார்கள்.

பட்டினிப் போராட்டத்திற்கு ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் பழனிவேல் தலைமை தாங்கினார். இகக(மாலெ) சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் சேகர் துவக்கி வைத்துப் பேசினார். புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் தோழர் முரளிதரன், தோழர்கள் தேன்மொழி, முனுசாமி, மோகன், தேவகி ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். தொழிலாளர்கள் 20 பேர் பட்டினிப் போராட்டத்தில் தங்கள் கருத்தை முன் வைத்தார்கள். பட்டினிப் போராட்டத்தை புரட்சிகர இளைஞர் கழகத்தின் தேசியச் செயலாளர் தோழர் பாரதி முடித்து வைத்துப் பேசினார். முன்னதாக, பட்டினிப் போராட்டத்தை நடத்தவிடாமல் செய்வதற்காகவும், ஆலைகளைத் திறப்பதற்குப் பதிலாக தொழிலாளர்களைக் கணக்கு முடித்துக் கொண்டு போக வைப்பதற்காகவும் மாநில ஆளுங்கட்சியான அதிமுக, மத்திய ஆளுங்கட்சியான பாஜகவைச் சேர்ந்தவர்கள் கடும் முயற்சி எடுத்தார்கள்.

குறிப்பாக, மாநில பிற்பட்டோர் நலம் மற்றும் கைத்தறித் துறை அமைச்சரான அப்துல் ரஹீமின் மைத்துனர் மிரட்டல் நடவடிக்கைகளில் வெளிப்படையாகவே ஈடுபட்டார். மூடப்பட்ட ஆலை ஒன்றை அவர்கள் நேரடியாக எடுத்து நடத்தப் போவதாகவும் அதற்கு வாய்ப்பாக தொழிலாளர்கள் கணக்கு முடித்துப் போய் விட வேண்டும் என்று மிரட்டினார். தொழிலாளர் துறை அதிகாரிகளும் அவருக்கும் நிர்வாகத்தினருக்கும் பல வழிகளில் ஆதரவாகச் செயல்பட்டு தங்கள் விசுவாசத்தைக் காட்டிக் கொண்டார்கள்.

குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய பெண்கள் நீதிமன்றம்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் லக்னோவில் நடத்திய பெண்கள் நீதிமன்றத்தில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிருந்தும் 700 பெண்கள் கலந்து கொண்டனர். மாநிலத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும்  பெண்கள் மீதான வன்முறைக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு என்று நீதிமன்றம் அவற்றை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது.
உயிர் பிழைத்தவர்கள், வன்முறைக்கு ஆளானவர்களின் உறவினர்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர். லக்கிம்பூர் கேரியிலிருந்து வந்திருந்த ஒரு பெண், தவறான குற்றச் சாட்டில் தனது கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தான் காவலர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது பற்றி விவரித்தார்.

இன்னொரு பெண் 2011ல் தன் 11 வயது மகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு மரத்தில்  தொங்கவிடப்பட்டதையும், இன்று வரை யாரும் தண்டனை பெறவில்லை என்பதையும் குறிப்பிட்டார்.
பிலிபிட்டிலிருந்து வந்திருந்த பெண், தனது மகள் வரதட்சணைக் கொடுமையால் கொல் லப்பட்டதாகவும், கொலையாளிகளும், காவல் துறையினரும் ஒன்றாக இனிப்பு சாப்பிட்டதாகவும், முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை என்றும் சொன்னார்.

பிலிபிட்டிலிருந்து வந்த பல்வேறு பெண்கள், தாங்கள் காட்டில் சுள்ளி பொறுக்க, சிறு காட்டுப் பொருட்களை சேகரிக்கச் செல்லும் போது புலிகள் சரணாலயம் என்ற பெயரில் வனக் காவலர்கள் தங்களை பாலியல்ரீதியாக சீண்டுவதாக, அடிப்பதாகக் குறிப்பிட்டனர். இது சம்பந்தமாக புகார் செய்தால், இனி காட்டுக்குள் வராதே என்கிறார்கள். இந்த காட்டு விறகுகள் இல்லாமல் நாங்கள் எப்படி  உயிர்வாழ முடியும்? என்று  கேட்டார்கள்.

காசியாபூரின் பெண்கள் கழக செயல்வீரர் சரோஜ் பேசும்போது குற்றக் கும்பல்களுக்கும், காவல்துறையினருக்கும் உள்ள தொடர்பைப் பற்றிக் குறிப்பிட்டார். ஜீராதேவி என்பவர் சஞ்சய்சிங் என்ற குற்றவாளியால் தாக்கப்பட்டதையும், காவல்துறை இதுவரை அவரைக் கைது செய்யாததையும், கம்ருன்னிசா என்ற பெண்ணும் அவர் மகனும் குற்றக்கும்பலால் தாக்கப்பட்டபோது அவர்கள் யாரிடமும் புகார் தரக் கூடாது என்று காவல்துறையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதையும் குறிப்பிட்டார்.

பெண்கள் கழக செயல்வீரர்கள் மிர்சாபூரி லிருந்து அனிதாவும், சிதாபூரிலிருந்து சரோஜினியும் இன்னும் நிறைய சம்பவங்கள் பற்றி குறிப்பிட்டுப் பேசினார்கள். சிதாபூரிலிருந்து பேசிய ஒரு பெண் தனது 14 வயது மகள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டதாகவும், ஆனால் அதன் பின்பு 2 நாட்களாக காவலர்கள் புகாரைப் பதிவு செய்யவில்லை என்றும், பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய ரூ.8000 லஞ்சமாக கேட்டதாகவும், ரூ.4000 கொடுத்துத் தான் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்ட தென்றும் அதிலும் அந்தக் குடும்பத்தினருக்கு கடும் நெருக்கடி கொடுத்ததால் அவர்கள் பாலியல் வன்புணர்ச்சி என்று புகாரில் குறிப்பிட வில்லை என்றும், எனவே முதல் தகவல் அறிக்கையில் பாலியல் வன்புணர்ச்சி என்பது இடம் பெறவில்லை என்று குறிப்பிட்டார். இப்போது முற்போக்கு பெண்கள் கழகமும், இகக(மாலெ)யும் நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத் திருக்கின்றன. உயிர்பிழைத்த அந்த 14 வயது பெண்ணும் உறுதியாக  நிற்கிறார்.

முற்போக்கு பெண்கள் கழக மாநில துணைத் தலைவர் ஆர்த்தி ராய், மத்திய பாஜக அரசும், மாநில சமாஜ்வாதி அரசும் பெண்கள் உரி மையைப் பாதுகாப்பதற்கு பதிலாக, பெண்கள் மீது ஒழுக்க கண்காணிப்பு  செலுத்துவதில்தான் அதிக ஆர்வம் காட்டுகின்றன என்றார்.

பதாயூன், மோகன்லால் கஞ்ச்  ஆகிய இடங்களில் நடைபெற்ற பாலியல் வன்புணர்ச்சி கொலைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. உத்தர பிரதேச காவல்துறையும், மத்திய புலனாய்வுத் துறையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதில், ஆர்வம் காட்டவில்லை. மாறாக, இந்த வழக்குகள் பரபரப்பு செய்திகளாக்கப்பட்டு சீர்குலைக்கப்படுகின்றன.

மீரட்டிலும், முசாபர்நகரிலும் பாலியல் வன்புணர்ச்சி புகார்கள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஸால் வகுப்புவாதமயமாக்கப்பட்டு பாஜகவின் அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு சேவை செய்கின்றன.

கருத்தரங்கில் முற்போக்கு பெண்கள் கழக தேசிய செயலாளர் தோழர் கவிதா கிருஷ்ணன் உரையாற்றினார். மத்திய, மாநில அரசுகள் பெண்களுக்கு அதிகரித்த அளவில் நீதிமன்றங் கள் ஏற்படுத்த ஆர்வம் காட்டுவதில்லை. தவறு செய்யும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதுமில்லை, காவல்துறையினர் பொறுப்பை உத்தரவாதப்படுத்துவதுமில்லை என்ற அவர், உத்தரபிரதேச அரசாங்கம் மோசமான பாலியல்ரீதியான கருத்துக்களைச் சொல்லி பாலியல் வன்புணர்ச்சி சாதாரணமானது என்ற தோற்றத்தை ஏற்படுத்தப் பார்க்கிறது, உடனடி யாக செய்ய வேண்டியவற்றை செய்யாமல் செயலற்று இருக்கும் மோடி அரசாங்கம், மறுபுறம் வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறை சட்டத்தைத் திருத்துவதன் மூலம் பெண்கள் நீதியும், பாதுகாப்பும் பெறுவதை சிக்கலாக்கியிருக்கிறது என்றார்.

சிறார் நீதி சட்டத்தை திருத்தும் அரசாங்கத்தின் முயற்சியை சாடிய அவர் சிறுவர்களை சிறைக்கு அனுப்பினால் அவர்கள் புடம் போட்ட குற்றவாளிகளாகத்தான் மாறுவார்கள், அதனால் மட்டும் பெண்கள் பாதுகாப்பை உத்தர வாதப்படுத்த முடியாது என்றார். சிறார்கள் சம்பந்தப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான பாலியல் வன்புணர்ச்சி வழக்குகள் உண்மையிலேயே இருவரும் சேர்ந்து வீட்டை விட்டு சென்ற சம்பவங்களே என்றும், இசைவு தெரிவிக்கும் வயது வரம்பை உயர்த்துவதன் மூலம் இது குற்றமயமாக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார். சிறார் நீதி சட்டம் திருத்தப்பட்டால், தனது ஒத்த வயது பெண் பிள்ளைகளுடன் பாசம் வைத்திருக்கும் அந்த இளைய பையன்கள் பாலியல் வன்புணர்ச்சி குற்றச்சாட்டில் பதிவு செய்யப்படுவதோடு சிறையிலும் அடைக்கப்படுவார்கள்.

ஆர்எஸ்எஸ்ஸ÷ம், மற்ற குழுக்களும் ‘காதல் ஜிகாத்’ என்ற பூதத்தைக் கிளப்பி, பெண்கள் தங்கள் விருப்பப்படி திருமண துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையை பறிப்பது பற்றியும் எச்சரிக்கை விடுத்தார். வகுப்புவாத வெறியூட்டப்பட்ட சூழலில், வேறு மதத்திலிருந்து தனது துணையை தேர்ந்தெடுப்பது பெண்களுக்கு சிரமம், வகுப்புவாதமயமாகிவிடுமோ என்ற அச்சத்தால் பாலியல் வன்புணர்ச்சிக்கு எதிராக புகார் அளிப்பதும் சிரமம் என்று குறிப்பிட்டார்.

முற்போக்கு பெண்கள் கழக மாநிலத் தலைவர் தோழர் தஹிரா ஹாசன், செயலாளர் தோழர் கீதா பாண்டே, தேசிய செயற்குழு உறுப்பினர் தோழர் வித்யா ராஜ்வர், இகக (மாலெ) மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் கிருஷ்ணா அதிகாரி ஆகியோர் கருத்தரங்கில் உரை நிகழ்த்தினர்.

பெண்ணுரிமை செயல்வீரரான பேராசிரியர் ரூப்ரேகா வர்மா, இந்திய தேசிய பெண்கள் சம்மேளனத்தின் நிவேதிதா, ஹம்சாபரின் சுதா, பெண்களை காப்போம் அமைப்பின் அனுபமா, பாஹின் அமைப்பின் நாஸ், வீட்டுவேலை செய்யும் பெண்கள் அமைப்பின் கீதாசிங் ஆகியோரும் உரையாற்றினர். 

தமிழில்: தேசிகன்
கல்வியில் ஊழல், கொள்ளையை தடுக்கக் கோரி கண்டனக் கூட்டம்

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் அதிகரித்து வரும் ஊழல்களைக் கண்டித்தும் பள்ளி, கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமை, கல்வி உதவித் தொகைகள் வழங்கப்படாமை கண்டித்தும் அதற்கு எதிராகப் போராடும் மாணவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுவதைக் கண்டித்தும் அரசாணை 92அய் மீறும் கல்வி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தோழர் தனவேல் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெறக் கோரியும் விழுப்புரம் மாவட்டம் கெடிலத்தில் 18.08.2014 அன்று அகில இந்திய மாணவர் கழகம் கண்டனக் கூட்டம் நடத்தியது. தோழர் திருமலை தலைமை தாங்கினார். தோழர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். அகில இந்திய மாணவர் கழக மாநிலத் துணைத் தலைவர் தோழர் ராஜசங்கர், புரட்சிகர இளைஞர் கழக மாநில அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் தனவேல், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாவட்டச் செயலாளர் தோழர் செண்பக வள்ளி, அகில இந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் தோழர் தேசிங்குராஜா, மாற்றுத் திறனாளிகள் பட்டதாரிச் சங்கத் தலைவர் தோழர் சுரேஷ் கண்டன உரையாற்றினர்.மார்க்சிய கல்வி முகாம்கள்

இகக (மாலெ) மத்தியக்குழு வழிகாட்டுதல்  அடிப்படையில் தமிழகத்தில் அய்ந்து பகுதிகளில் முதற்கட்ட மார்க்சிய கல்வி முகாம்கள் நடைபெற்றன. இந்த முகாம்களில் மார்க்சியம் கற்போம் எங்கிருந்து துவங்குவது? மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (இந்தியப் பதிப்பு முன்னுரையுடன்) ஆகிய இரண்டு பாடங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

சேலம்: ஆகஸ்டு 9, 10 தேதிகளில் சேலத்தில் நடைபெற்ற கல்வி வகுப்பில் சேலம், நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல், கரூர் மாவட்டத் தோழர்கள் 50 பேர் கலந்து கொண்டனர். வகுப்புக்கு சேலம் மாவட்டச் செயலாளர் தோழர் மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் தோழர் அ.கோவிந்தராஜ் வகுப்பைத் துவக்கி வைத்துப் பேசினார். முதல் நாள் வகுப்பில்  மார்க்சியம் கற்போம். இரண்டாம் நாள் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. மார்க்சியம் கற்போம் பாடம்  பற்றி தோழர் சந்திரமோகன் அறிமுக உரையாற்றினார். மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் மார்க்சிய அடிப்படைகள் மற்றும் ஏகாதிபத்தியம் பற்றி விரிவாக விளக்கினார்.

இரண்டாம் நாள் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. தோழர் சந்திரமோகன் அறிமுக உரை நிகழ்த்தினார். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் உள்ள அத்தியாயங்களை விரிவாகவும் அதில் சொல்லப்பட்டுள்ளவை தற்போதும் எவ்வாறு பொருத்தப்பாடு உள்ளது என்றும் விளக்கி கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் பேசினார்.

கோவை: ஆகஸ்டு 23, 24 தேதிகளில் கோவையில் நடைபெற்ற கல்வி முகாமில் மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் கோவை மாவட்ட கமிட்டி உறுப்பினர்கள் உட்பட கலந்து 60 தோழர்கள் கலந்து கொண்டனர். வகுப்பிற்கான பாடங்கள் 1. மார்க்சியம்  கற்போம் எங்கிருந்து துவங்குவது 2. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இந்தியப்பதிப்பின் முன்னுரை முன்கூட்டியே ஏறத்தாழ 90 பேருக்கு வழங்கப்பட்டிருந்தது. அரங்கில் தொங்கவிடப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முக்கிய வாசகங்கள் அடங்கிய பதாகைள் கற்றலுக்கான சூழலை ஏற்படுத்தியிருந்தன. மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஆசைத்தம்பி வகுப்பை துவக்கி வைத்து உரையாற்றினார். முதல்நாள் மார்க்சியம் கற்போம் பாடத்திற்கான வகுப்பில் தோழர்கள் 5 குழுக்களாக பிரிந்து, பாடத்தின் மீதான கேள்விகளுடன் வாசித்தனர். பிறகு ஒரு குழுவிற்கு 3 பேர் வீதம் 15 பேர் பதில்களை முன் வைத்தனர். அதனைத் தொடர்ந்து மாநிலக்குழு உறுப்பினர் தோழர் என்கே.நடராசன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் குமாரசாமி தொகுத்து உரையாற்றினர்.

மறுநாள் கம்யூனிஸ்ட்கட்சி  அறிக்கை வாசிக்கப்பட்டது. அதன் மீது தரப்பட்ட கேள்விகளுக்கான பதில்களை தோழர்கள் 3 குழுக்களாக பிரிந்து விவாதித்து தயார் செய்தனர். தோழர்கள் என்கே நடராஜன், ஆசைத்தம்பி, பாலசுப்பிரமணியன், தாமோதரன், வெங்கடாசலம், மலர்விழி ஆகியோர் அவர்களுக்கு உதவினார்கள். பின்னர் 21 தோழர்கள் கேள்விகளுக்கான பதிலை விளக்கிக் பேசினர். இறுதியில் தோழர் குமாரசாமி கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, அக்காலத்திற்குப்பின்னால் ஏற்பட்ட மாற்றங்கள் கம்யூனிஸ்ட் அறிக்கையின் சமகால பொருத்தப்பாடு என 2 மணிநேரம் விரிவாக விளக்கிப் பேசினார்.

சென்னை: ஆகஸ்டு 23, 24 தேதிகளில்  சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டத் தோழர்கள் 62 பேர் கலந்து கொண்ட வகுப்பு செங்குன்றத்தில் நடத்தப்பட்டது. வகுப்பில் கலந்து  கொண்டவர்களில் 80% பேர் இளைஞர்கள். கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் சேகர் வகுப்புக்கு தலைமையேற்று நடத்தினார். மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார் துவக்கவுரையாற்றினார்.

வகுப்பு தொடர்பான தயாரிப்புக் கூட்டம் ஆகஸ்ட் 20 அன்று நடத்தப்பட்டு முன்னரே தயாரிக்கப்பட்ட குறிப்புகள் இறுதி செய்யப்பட்டன.

மார்க்சியம் கற்போம்: எங்கிருந்து தொடங்குவது தலைப்பில், முன்னரே தயாரிக்கப்பட்ட கேள்விகள் மீது, தோழர்கள் அய்ந்து குழுக்களாகப் பிரிந்து விவாதித்தனர். மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் எ.எஸ்.குமார், சேகர், இரணியப்பன், பாரதி ஆகியோர் அவர்களுக்கு உதவினார்கள்.

குழு விவாதத்துக்குப் பின், கொடுக்கப்பட்ட கேள்விகள் மீது வகுப்பில் பங்கேற்ற தோழர்கள் உற்சாகமாக பதிலளித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஜவஹர் மொத்த பாடத்தின் மீதும் தொகுப்புரை ஆற்றினார்.

இரண்டாவது நாள் வகுப்பில், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இந்தியப் பதிப்பிற்கான முன்னுரையும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும் வாசிக்கப்பட்டன. வகுப்பு அரங்கில் ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய குறிப்புகள் கொண்ட 17 பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அந்த 17  பதாகைகளுக்கும் எண் கொடுக்கப்பட்டது. சீட்டு குலுக்கி போட்டு எந்த எண் வருகிறதோ அதை எண்ணில் உள்ள குறிப்பை அந்த தோழர் விளக்கிக் கூற வேண்டும் என்று சொல்லப்பட்டது. தோழர்கள் மிகவும் உற்சாகமாக அதில் பங்கெடுத்தார்கள். பெரும்பாலும் புதிய தோழர்கள் என்ற போதிலும் கூடுமானவரை சரியாகவே விளக்கிக் கூறினார்கள். அதன் பின்னர், மத்தியக்குழு உறுப்பினர் தோழர் புவனா இந்தியப் பதிப்பின் முன்னுரை, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் சமகால பொருத்தப்பாடு ஆகியவற்றை தொகுத்துப் பேசினார்.

குமரி: கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் ஆகஸ்டு 23, 24 தேதிகளில் நடந்த மார்க்சிய கல்வி முகாமில் நெல்லை, குமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களின் முன்னணித் தோழர்கள் 50 பேர் கலந்து கொண்டனர். வகுப்புக்கு மாநிலக்குழு உறுப்பினர்கள் அந்தோணிமுத்து, மேரிஸ்டெல்லா தலைமை தாங்கினார்கள். மாநிலக்குழு உறுப்பினர் தோழர் சங்கரபாண்டியன் துவக்கவுரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ரமேஷ், கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் பற்றி தோழர்களிடம் கேள்வி பதில் விவாத முறையில் அறிமுகப்படுத்திப் பேசினார். பின்னர், மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் விவரிவாக விளக்கிப் பேசினார்.

மறுநாள் தோழர் ரமேஷ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை அதன் உள்ளடக்கம் பற்றி அறிமுக உரையாற்றினார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் இருந்து தொகுக்கப்பட்ட முக்கிய வாசகங்களை தோழர்களிடம் கொடுத்து படிக்கச் சொல்லி அதை அவர்களே விளக்கிக் கூறச் சொல்லப்பட்டது. பிறகு தோழர் பாலசுந்தரம் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் இந்தியப் பதிப்பிற்கான முன்னுரை பற்றி, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் சமகால பொருத்தப்பாடு தேவை பற்றி விரிவாக விளக்கப் பேசினார்.

இந்த கல்வி முகாம்களில் கலந்து கொண்ட தோழர்கள் இதுபோல் அடிக்கடி மார்க்சிய கல்வி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். சென்னையில் கலந்து கொண்ட தோழர் குப்பாபாய், ‘எனக்கு 67 வயதாகிறது, இப்போதுதான் எனக்கு இதைப் படித்து புரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது, முன்னரே கிடைத்திருந்தால், கட்சி வேலைகளில் எனது பங்களிப்பு இன்னும் மேலானதாக இருந்திருக்கும்’ என்றார். ஏஅய்சிசிடியு நடத்திக் கொண்டிருக்கிற மக்கள் சந்திப்பு இயக்கத்தை வெற்றிகரமாக நடத்துவதன் அவசியத்தை வகுப்பு வலியுறுத்தியுள்ளதாகவும் தோழர்கள் கருத்து தெரிவித்தனர்.


சென்னை மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

சென்னை மாநகராட்சி நிர்வாகம், மாநகராட்சியின் கீழ் உள்ள பள்ளிகளை தனியார்களிடம் ஒப்படைப்பதற்கான முடிவை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் அறிவித்தது. மாநகராட்சி பள்ளிகளை தனியாரிடம் கொடுக்கும் முடிவை திரும்பப் பெறக் கோரி புரட்சிகர இளைஞர் கழகம், அகில இந்திய மாணவர் கழகம் மற்றும் ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த  தோழர்கள் ஆகஸ்டு 20 அன்று சென்னை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு மேயர் இல்லாததால், உதவி ஆணையர் தோழர்களை அழைத்துப் பேசினார். கோரிக்கை பற்றி பரிசீலனை செய்வதாகச் சொன்னார். ஆனால், கோரிக்கை நியாயமானது என்றாலும் முற்றுகை செய்தது தவறு என்று கூறி சென்னை மாநகரக் காவல் தோழர்களைக் கைது செய்து பின்னர் மாலையில் விடுவித்தது. இந்தப் போராட்டத்திற்கு புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலாளர் தோழர் பாரதி, அகில இந்திய மாணவர் கழகப் பொறுப்பாளர் சீதா தலைமை தாங்கினார்கள். இகக (மாலெ) சென்னை மாவட்டக் குழு தோழர்கள் முனுசாமி, மோகன்  முற்றுகை போராட்டத்தில் கலந்துகொண்டனர்.உருக்காலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

சோனல் வியாபார் லிமிட் என்ற இரும்பு உருக்கு ஆலையை மூடக்கோரி இகக(மாலெ) சேலம் மணியணூர் உள்ளூர் கமிட்டி 27.08.2014 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆலையினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவக் குழு அமைக்க வேண்டும், மணியணூரில் உள்ள அனைத்து மக்களுக்கும் 10 லட்ச ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும், அந்த செலவை சோனல் வியாபார் நிறுவனத்திடம் இருந்து பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் தோழர் மல்லி ஆனந்த் தலைமை தாங்கினார். இகக(மாலெ) மாநிலக்குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன், சேலம் மாவட்டச் செயலாளர் தோழர் மோகனசுந்தரம், ஏஅய்சிசிடியு மாவட்டச் செயலாளர் தோழர் வேல்முருகன், தோழர்கள் மாரிமுத்து, கணேசன், நடராஜன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

களச் செய்திகள் தொகுப்பு: ஜி.ரமேஷ்

தோழர் சந்திர ராஜேஸ்வர ராவ் பிறந்ததின நூற்றாண்டு நிகழ்ச்சி

இகக(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா பங்கேற்பு

28 ஆண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தோழர் சந்திர ராஜேஸ்வர ராவ் (சிஆர் என்று பிரபலமாக அழைக்கப்பட்டவர்) பிறந்த நூற்றாண்டு நிகழ்ச்சி ஆகஸ்ட் 11 அன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. அங்கு குழுமியிருந்த வெகுமக்கள் முன் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் உரை நிகழ்த்தினார்கள். 

அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கானவர்களில் செஞ்சட்டை அணிந்த 1500 தொண்டர்கள் இருந்தார்கள். மேடையில் இகக பொதுச் செயலாளர் சுதாகர்ரெட்டி, இகக(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா, இகக(மா) பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ் காரத், மூத்த ஆர்எஸ்பி தலைவர் தோழர் அபானி ராய், ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநில இகக செயலாளர்கள், நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் வீற்றிருந்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய தோழர் திபங்கர் பட்டாச்சார்யா, 1992 பிப்ரவரி மாதம் விஜயவாடாவில் நடைபெற்ற இந்திய மக்கள் முன்னணியின் தேசிய மாநாட்டில் தோழர் சிஆர் கலந்து கொண்டதை நினைவு கூர்ந்து, போர்க்குணமிக்க விவசாயப் போராட்டங்களுக்கு அவர் அழுத்தம் கொடுத்ததையும், இயக்கங்களைச் சார்ந்து இடதுசாரி ஒற்றுமையைப் பற்றி பேசியதையும் குறிப்பிட்டார். கூட்டத்தில் பேசிய அனைத்து இடதுசாரி தலைவர்களும் தோழர் சிஆர்ரின் தெலுங்கானா மரபையும், மதவெறிக்கு எதிராக அவர் மக்களை அணி திரட்டியதையும் குறிப்பிட்டனர். தற்போதைய மோடி அரசாங்கத்தின் அதிகரித்துவரும் பெருந்தொழில் குழும - மதவெறி தாக்குதலுக்கு எதிராக கூட்டுப் போராட்டங்களில் அனைத்து இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் பரந்த ஒற்றுமையை வலியுறுத்தினர்.

ஆகஸ்ட் 10 அன்று நூற்றாண்டு நிகழ்வின் ஒரு பகுதியாக ‘சமூக இயக்கங்களும், இடதுசாரிகளின் செயல்பாடும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம்  நடைபெற்றது. இதில் கியூபா, வியட்நாம் மற்றும் வங்கதேச கம்யூனிஸ்ட் கட்சி, தொழிலாளர் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். இகக தலைவர் ஏபி பரதன் துவக்கி வைத்த இந்த கருத்தரங்கில் பிரபாத் பட்நாயக்  உரையாற்றினார். இகக (மாலெ) விடுதலையின் மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் என்.மூர்த்தியும் கருத்தரங்கில் உரையாற்றினார்.


Friday, August 15, 2014

இரவுப் பணியில் பெண் தொழிலாளர்கள்: சில விவரங்கள்

பெண் தொழிலாளர்கள் இரவுப் பணிக்கு வருவதைத் தடை செய்யும் தொழிற்சாலைகள் சட்டம் 1948, பிரிவு 66 (1) (b)அய் திருத்தி பெண் தொழிலாளர் இரவுப் பணிக்கு வருவதை உறுதி செய்கிற நடவடிக் கையை மோடி அரசாங்கம் எடுத்துக்கொண்டிருக்கிறது. பெண் தொழிலாளர்களின் சமத்துவத்தை உறுதி செய்வது நோக்கம் என்று சொல்லப்படுகிறது.

மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டறிக்கை, இந்திய தொழிலாளர் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ள பல்வேறு அம்சங்களைக் கணக்கில் கொள்ளாமல், தொழிலாளர் நலன்களுக்கு விரோதமாக, அவர்களுக்கு இருக்கும் பாதுகாப்புகளை அகற்றும்விதம் தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்படுவதாகச் சொல்கிறது.

ஜூன் 1990ல் நடந்த சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மாநாடு, பெண் தொழிலாளர் இரவுப் பணிக்கு வருவதற்கு ஏதுவாக, சில எல்லைகளுக்குள், இந்தத் தடைகளுக்கு விலக்கு அளிக்கலாம் என்று தீர்மானம் நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க 2003ல் இந்திய அரசாங்கம் முடிவு செய்தது. 29 ஜூலை 2003 அன்று தேஜமு அரசாங்கமும் 10 ஆகஸ்ட் 2005 அன்று அய்முகூ அரசாங்கமும் இதற்கான தொழிற்சாலை திருத்தச் சட்டங்களை மக்களவையில் அறிமுகப்படுத்தின.

தமிழ்நாடு இந்த விசயத்தில், முன்னோடியாக இருக்கிறது. பெண் தொழிலாளர்கள் இங்கு பல ஆண்டு காலமாக இரவுப் பணிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

1997ல் திருப்பூரின் தொழிற்சாலைகள் சங்கங்கள் இந்தச் சட்டப் பிரிவுக்கு தடை கோரி தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் இடைக்காலத் தடை வழங்கியுள்ளது.

டிசம்பர் 8, 2000 அன்று சென்னை உயர்நீதிமன்றம், இந்தப் பிரிவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றும், பெண் தொழிலாளர்களை இரவுப் பணியில் அமர்த்த வேண்டுமானால், சம்பந்தப்பட்ட தொழிற்சாலை கள் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகள் என்ற நீண்ட பட்டியல் ஒன்றை முன்வைத்து, வழக்கு தொடுத்த தனிப்பட்ட நிறுவனங்கள், அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று பெண் தொழிலாளர்களை இரவுப் பணியில் அமர்த்தலாம் என்றும், இந்த அனுமதி ஒவ்வோர் ஆண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் முதலாளிகள் பக்கம் நளினி சிதம்பரம் வாதாடினார். ஜனநாயக மாதர் சங்கம், பெண் தொழிலாளர்கள் பாதுகாப்பு என்ற அடிப்படையில், சட்டப் பிரிவு தொடர வேண்டும் என்று வலியுறுத்தியது.

சந்துரு ஜனநாயக மாதர் சங்கத்துக்காக வாதாடினார். இந்தத் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. 16 பிப்ரவரி 2010 அன்று தமிழ்நாடு தலைமை தொழிலக ஆய்வாளர், பஞ்சாப் முதன்மைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலோ அல்லது வேறு எந்த நீதிமன்றத்திலோ, மேல் முறையீடு நிலுவையில் இல்லை என்று பதில் அளித்துள்ளார்.

1997 இடைக்காலத் தடை, 2000 சிறப்பு அனுமதி ஆகியவற்றை பயன்படுத்தி, திருப்பூர் முதலாளிகள் சட்டபூர்வமாக பெண் தொழிலாளர்களை இரவுப் பணியில் அமர்த்துகின்றனர். இங்குள்ள ஆடை தயாரிக் கும் நிறுவனங்களில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு பணிமுறை, இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஒரு பணி முறை என பெண் தொழிலா ளர்கள் 9 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை வேலை செய்கின்றனர்.

நோக்கியா சிறப்பு அனுமதி பெற்றுதான் பெண் தொழிலாளர்களை இரவுப் பணிக்குக் கொண்டு வந்தது. நோக்கியா துணை நிறுவனங்களும் சிறப்பு அனுமதியின் பேரில் பெண்களை இரவுப் பணியில் அமர்த்தின.

மெப்ஸ் ஏற்கனவே சிறப்பு சலுகைகள் பெற்றது; மேலும் சிறப்பு அனுமதி பெற்று இங்குள்ள மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களும் ஆடை உற்பத்தி நிறுவனங்களும் பெண் தொழிலாளர்களை இரவுப் பணி யில் அமர்த்துகின்றன.

கோவையில் வைரம் பட்டைத் தீட்டும் நிறுவனத் தின் பெண் தொழிலாளர்கள் இரண்டு பணிமுறைகளில் இரவு 10 மணி வரை வேலை செய்கின்றனர். ஆடை தயாரிப்பு நிறுவனங்களும் இதே முறையில் இரவுப் பணியில் பெண்களை வேலைக்கு அமர்த்துகின்றன.

ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உதிரிபாகங் கள் கொள்கை 2014ல் பெண் தொழிலாளர்களை இரவு நேரப் பணியில் அமர்த்துவது பரிசீலிக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சொல்கிறார். 2014 ஜூன் 17 தேதிய தொழிலாளர் துறை கடிதம், பெண்கள் தங்கள் குடும்பக் கடமைகளை சிறப்பாக நிறைவேற்ற உதவும் விதம் அவர்களுக்கு நெளிவுசுளிவான வேலை நேரம் தருவது பற்றிய, ஃப்ளக்சி கேரியர் பிரைவேட் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்தின் முன்வைப்பை தமிழ்நாட்டின் தொழிற்சங்கங்களின் பரிசீலனைக்கு சுற்றுக்கு விட்டுள்ளது.

2014 ஜனவரி 22 அன்று, தொழிற்சாலைகள் சட்டம் 1948, பிரிவு 84 ஆ என்ற புதிய பிரிவை சேர்த்து சட்ட வரைவு திருத்தம் முன்வைத்துள்ளது. இது, போக்கு வரத்து, பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பு உள்ளிட்ட, இரவுப் பணியில் பெண்களை அமர்த்தும் நிறுவனங்கள் நிறைவேற்ற வேண்டிய, 14 நிபந்தனை களை முன்வைக்கிறது.

குஜராத் உயர்நீதிமன்றம் 2013 டிசம்பரில் 66 (1)(b) அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று தீர்ப்பளித்தது. அதன் மூலம் இரவு நேரப் பணிக்கு இருந்த தடையை நீக்கியது.

தமிழ்நாட்டு நடைமுறையை உதாரணம் காட்டி, அந்தத் தடையை அப்படியே பஞ்சாபில் அமல்படுத்த முடியாது என்பதால், அரசாங்கமே, இரவுப் பணியில் பெண் தொழிலாளர்கள் அமர்த்தப்படுவதை அனுமதித்து 2010, அக்டோபர் 25 அன்று அறிவிப்பாணை வெளியிட்டது; பின் பஞ்சாப் அரசாங்கம், 2013 நவம்பர் 13 அன்று வெளியிட்ட அரசாணையில், இரவுப் பணியில் பெண் தொழிலாளர்கள் அமர்த்தப்படுவதற்கான நிபந்தனைகள் பட்டியலை அறிவித்தது.

மும்பை உயர்நீதிமன்றம், 1999, ஜ÷ன் 10 தேதிய தீர்ப்பொன்றில், சான்டா க்ரூஸ் ஏற்றுமதி மண்டலத்தில் இரவுப் பணிக்கு பெண்கள் வருவதை அனுமதித்தது. ஆந்திரா உயர்நீதி மன்றமும் பிரிவு 66 அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என தீர்ப்பளித்துள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் இரவுப் பணி தவிர்க்க முடியாததாகிய போது ஆந்திரா, கர்நாடகா அரசாங்கங்கள், 2007ல் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சட்டங்களில் திருத்தங்கள் செய்து பெண் தொழிலாளர்கள் இரவுப் பணிக்கு வருவதில் உள்ள தடையை நீக்கின.

இரவுப் பணி செய்யும் பெண் தொழிலாளர்கள் மத்தியில் அசோசெம் (முதலாளிகள் சங்கம்) உதவியுடன் தேசிய பெண்கள் ஆணையம் நடத்திய ‘பெண்களுக்கு இரவுப் பணி: வளர்ச்சியும் வாய்ப்பும்’ என்ற ஆய்வில், 76.3% பெண் தொழிலாளர்கள், இரவுப் பணியில் வேலை நேரம் கூடுதலாக இருப்பதாகவும், 21% பேர் மனரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் சொல்லியுள்ளனர். இரவுப் பணிக்கு வரும் பெண்களில் 45% பேர் தொடர்ந்து அசதியாக இருப்பதாகவும், 50% பேருக்கு செரிமானப் பிரச்சனை இருப்பதாகவும், 60% பேர் தூக்கமின்மையால் அவதியுறுவதாகவும், 55% பேர் அடிக்கடி காய்ச்சல், ஜலதோசம் ஆகியவற்றுக்கு உட்படுவதாகவும், 10% பேர் மனஅழுத்தத்துக்கு ஆளானதாகவும், 45% பேருக்கு எப்போதும் ஏதாவது உடல்நிலை பிரச்சனை இருப்பதாகவும் ஆய்வு சொல்கிறது.

இரவுப் பணியில் பெண்கள் அமர்த்தப்படுவதற்கு இருக்கும் தடையை நீக்கி பெண்களின் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்காகத்தான் இரவுப் பணியில் அவர்களை அமர்த்துவதாக 1997 முதல் 2014 வரை வெவ் வேறு மாநில, மத்திய அரசாங்கங்கள் சொல்லி வந்துள்ளன. இப்போது மோடி அரசாங்கம் அதையே காரணம் காட்டி பெண்களை இரவுப் பணியில் அமர்த்த இருக்கிற சட்டரீதியான தடையை நீக்கவுள்ளது. 1997 முதல் 2014 வரை இரவுப் பணியில் அமர்த்தப்பட்ட பெண்களுக்கு சமத்துவம் நிலைநாட்டப்படவில்லை, கூடுதல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றுதான் தெரிகிறது. ஒரு வேளை மோடி மந்திரம் நிலைநாட்டிவிடுமோ?

திருப்பதி காடுகளில் தொலைந்து போன பழங்குடித் தமிழர்கள்

திருப்பதியில் சேஷாசலம் வனப்பகுதியில் மீண்டும் என்கவுண்டர். கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டை பகுதியில் செம்மரக்கட்டை கும்பலுக்கும் போலீசுக்கும் மோதல். அடையாளம் தெரியாத தமிழக தொழிலாளர் ஒருவர் பலி என்ற செய்தியை ஊடகங்கள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தெரிவித்தன.

 ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில், கடப்பா மாவட்டம் ஓகுல வாரி பள்ளி மண்டலம் காதேலு வனப்பகுதியில் மோதல்; இரண்டு தமிழக தொழிலாளர்கள் பலி, யார் என்ற விவரம் தெரியவில்லை. என்ற ஒரு செய்தியையும் செய்தி ஊடகங்கள் தெரிவித்தன. ஜெயா அரசாங்கத்தின் கவனத்திற்கு வராத தமிழக எதிர்க்கட்சிகளின் கரிசனத்திற்கு உள்ளாகாத இந்த தமிழக தொழிலாளர்கள் யார்?

 ஜூன் மாதத்திலும் போலி மோதலில் கொல்லப்பட்டதாக பலர் பற்றிய படங்களும், செய்திகளும் வெளியாயின. திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதி தானியார் கிராமம் எஸ்.சிவா, எஸ்.விஜயகாந்த், எஸ்.வெங்கடேசன் கொல்லப்பட்ட செய்திதான் செம்மரக் கட்டை வெட்டும் பணியில் தமிழகத் தொழிலாளர்கள் ஈடுபட்டு, ஆயிரக்கணக்கில் ஆந்திராவின் சிறைகளில் சிக்கித் தவிப்பதை வெளியுலகிற்கு கொண்டுவந்தது.

ஜூலை 1 அன்று, திருப்பதி என்டிஆர் விளையாட்டு மைதானத்தில் கடப்பா, நெல்லூர் மாவட்ட சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 346 தமிழக தொழிலாளர்களை, சீமாந்திரா போலீசார் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினர். இவர்கள் அனைவரும் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

 திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில், 2013 டிசம்பர் 15 அன்று செம்மரக் கடத்தல் மாஃபியாக்களால் வனத்துறை அதிகாரிகள் டேவிட், ஸ்ரீதர் கொல்லப்பட்டனர்; 16 பேர் காயமுற்றனர். அதைத் தொடர்ந்து ஆந்திரா போலீசார் 3 நாட்கள் சோதனைகள் நடத்தி ரயில் நிலையங்களிலும், பஸ் நிலையங்களிலுமிருந்த தொழிலாளர்களை கைது செய்தனர். அதற்கு பிறகும், செம்மரக் கட்டை வெட்டிக் கடத்துவதாக ஜூன் 1 அன்று ரேணிகுண்டாவில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கைது செய்தனர். திருப்பதி வனப் பகுதியில் போலி மோதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டவர் பற்றிய தகவல்களும் வெளி உலகிற்கு தெரியாமல் சடலங்களை அவரவருடைய சொந்த ஊரில்/ மலைப்பகுதியில் அடக்கம் செய்யும் செய்திகளும் தொடர்கதையாகி வருகின்றன.

செம்மரக் கட்டை கொள்ளை ஏன்?

சந்தன மரம் போலவே செம்மரமும் (ஆங்கிலத்தில் ரெட் சேன்டர்ஸ், தெலுங்கில் எர்ர சந்தனம்) விலை மதிப்பு மிக்க அரிய வகை மரம். இசைக் கருவிகள், கைவினைப் பொருட்கள் செய்ய இது பயன்படுகிறது. செம்மரம் அரிய மருத்துவ பண்புகள் கொண்டது. சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் அணு உலைகளில் குளிரூட்டியாக பயன்படுத்தப்படுவதாகவும், சொல்லப்படுகிறது. இந்தியாவில் இதன் மதிப்பு டன் ரூ.15 இலட்சம் முதல் ரூ.20 இலட்சம் வரை ஆகும். தெற்கு ஆசிய நாடுகளில் டன் ரூ.60 இலட்சம் வரை விற்பனை ஆகிறது. சீனத்திலோ, ரூ.10 கோடி வரை மதிப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. உலகம் முழுவதும் செம்மரத்தின் ஆண்டுத் தேவை 3000 டன் ஆகும். தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தின் சில பகுதிகளில் செம்மரங்கள் வளர்ந்த போதிலும், சீமாந்திரா வின் கடப்பா, சித்தூர் மாவட்டங்களில் உள்ள உயரம் குறைந்த சேஷாசலம் மற்றும் பால கொண்டா மலைப் பகுதிகளில்தான், உலகிலேயே மிக அதிகமாக விளைகின்றன.

அரிய தாவரங்களின் சர்வதேச வர்த்தக ஒப்பந்தத்தின் (சைட்ஸ்) அடிப்படையில், செம்மரங்கள் தக் காண பீடபூமியின் அரிய தாவரம் என பட்டியலிடப் பட்டதால், அதை வெட்டுவது குற்றம். எனவே, ஏற்றும திக்கு தடை விதிக்கப்பட்டது. 2010க்கும் பிறகுதான், ஆந்திர மாநில  அரசு சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் மூலமாக சைட்ஸ் சர்வதேச அமைப்பிற்கு செம்மரம் வெட்ட அனுமதி கோரி விண்ணப்பித்தது.

 செம்மரங்கள் அரிய வகை தாவரமல்ல என்றும் முதிர்ந்த மரங்களை வெட்டுவதற்கும், ஒரு முறை ஏற்றுமதிக்கு அனுமதியும் கோரியது. பறிமுதல் செய்யப்பட்டு கிடங்கு களில் குவிக்கப் பட்டிருந்த செம்மரங்களை ஏற்றுமதி செய்ய, மத்திய வர்த்தக அமைச்சரகம் 2013 அக்டோபரில் அனுமதி அளித்தது. எனவேதான் பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக, செம்மரங்களை வெட்டி ஏற்றுமதி செய்யும் கடத்தல் தொழில், ஆந்திராவின் அரசியல்  செல்வாக்குமிக்க புள்ளிகள் மாஃபியாக்கள் ஆதரவுடன் கொடிகட்டிப் பறந்தது.

 காங்கிரஸ் முன்னாள் முதல்வர் கிரண்ரெட்டியின் தம்பி கிஷோர் ரெட்டி புங்கனூர் எம்எல்ஏ புட்டிரெட்டி ராம கிருஷ்ணாரெட்டி, கெங்கிரெட்டி வரை செம்மரக் கட்டை கொள்ளையர்களின் வலைப்பின்னல் பரந்து விரிந்ததாகும்.

2010லிருந்து திருப்பதியில்  பதிவு செய்யப்பட்ட செம்மரக்கட்டை கடத்தல் வழக்குக ளின் எண்ணிக்கை 1472 ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட மரங்கள் 1535 டன்கள், கைப்பற்றப்பட்ட வண்டிகள் 940, கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3893 எனவும் ஆந்திர அரசாங்கம் தெரிவிக்கிறது.
    
ஜூன் 25 அன்று விசாகப்பட்டினம் தனியார் கண்டெய்னர் முனையத்தில் ஹாங்காங்கிற்கு செல்லும் ரூ.12 கோடி மதிப்புள்ள 26 டன்கள் செம்மரக்கட்டை கண் டெய்னர் போலி கிரானைட் பில்களுடன் பிடிபட்டது. சித்தூரிலிருந்து 830 கி.மீ. தொலைவில் உள்ள விசாகப்பட்டினத்திற்கு, தடைபடாமல் எப்படி செல்ல முடிந்தது? எத்தனை முறைகள், எவ்வளவு நாட்களாக இந்தக் கடத்தல்கள்  நடக்கின்றன? அரசியல் புள்ளிகள், அதிகார வர்க்கத்தினர், காவற் துறையினர் உதவியில்லாமல் மாஃபியாக்கள் செம்மரக் கட்டைகளை வெட்டி எப்படி கடத்த முடியும்? ஆந்திராவின் கடத்தல்காரர்கள், அரசியல் புள்ளிகள், வனத்துறையினர், காவற்துறையினர், அதிகாரவர்க்கத்தினர் கைது செய்யப்படாதது ஏன்?

பிழைப்பிற்காக வாழ்க்கையைத் தொலைக்கும் பழங்குடி இளைஞர்கள்

ஆந்திராவின் சிறைகளில் வாடுகிற 5000க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளர்கள், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம், விழுப்புரம் மாவட்டங்களைச் சார்ந்த ஜவ்வாது மலை, ஏலகிரிமலை, சித்தேரிமலை, சேர்வராயன் மலை, அருநூத்துமலை, கல்ராயன் மலை ஆகிய வற்றைச் சேர்ந்த பழங்குடி இளைஞராவர். தமிழக பழங்குடிகள் பல்லாண்டுகளாக மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பிரிட்டிஷார் வந்த பின் ரயில்வே உருவாக்கப்பட்டது. பின்னர் நகர்ப்புறங்களின் வளர்ச்சியினால் கட்டுமானங்கள் முதல் கட்டிடங்கள் வரை மரங்களின் தேவை பெரிதாக அதிகரித்தது. மத்திய மாநில அரசாங்கங்களும், வனச் சட்டங்கள், வனத்துறை அமைச்சகத்தின் அனுமதிக்குட்பட்டு, சிலவகை மரங்களை வெட்ட அனுமதித்தன. மரம் வெட்டும் வேலையும் சட்டபூர்வமான தொழிலானது. மலைகளில் மரம் வெட்டுதல், அவற்றை சுமந்து வண்டிகளில் ஏற்றுதல், குறிப்பிட்டதொரு உடற் கட்டமைப்பை, உடல் ஆற்றலைக் கோருகிறது. மலைப் பகுதிகளில் உணவே கிடைக்கவில்லை எனினும் கூட கடினமான வேலைகளை செய்யப் பழக்கப்பட்டவர்கள் தமிழக பழங்குடி இளைஞர்கள் ஆவர்.

தமிழக மலைப் பகுதிகளில் இருந்த பழங்குடி நிலங்கள், அரசியல்வாதிகளால், தொழிலதிபர்களால், நில வியாபார மோசடிப் பேர்வழிகளால் அபகரிக்கப்பட்டு விட்டதால் கணிசமானோர் நிலங்களை இழந்து கூலி களாக்கப்பட்டுவிட்டனர். மரம் வெட்டும் வேலை பிழைக்கக் கை கொடுத்தது. மலைகளில் தோட்டங்கள் இருந்தால், அதில் வேலை கிடைத்தது;  இல்லையெ னில் வேலைத் தேடி அருகமை நகரங்களுக்கு கட்டுமான வேலைகளுக்கு செல்லத் துவங்கினர்.

தமிழகத்தின் மலைப் பகுதிகளில் எஸ்டேட்டுகளில், விவசாய நிலங்களில் வளர்க்கப்படும் மரங்கள் (மனிதன் உருவாக்கிய காடுகள்) வெட்டப்படுவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக அவ்வப்பொழுது அனுமதியளிக்கப்படுகிறது. பல மலைப் பகுதிகளிலும் மரம் வெட்ட அனுமதி இல்லாததால், பழங்குடி இளைஞர்கள் வேலைத் தேடி கேரளா மற்றும் கர்நாடகத்திற்கு மரம் வெட்டுதல், தோட்ட வேலைகள் என செல்ல துவங்கினர். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு சம்பாதித்த பணத்துடன் வீடு திரும்புகின்றனர்.

பிழைப்பிற்காக இடம் பெயர்வது தமிழக பழங்குடி இளைஞர்கள் மத்தியில் பொதுவான போக்காக மாறி வருகின்றது. பழங்குடியினப் பெண்கள்/சிறுமிகள் நூற்பாலைகளில் சுமங்கலித் திட்டச் சுரண்டலிலும், பருத்தி தோட்டங்களில் கொத்தடிமை தனத்திலும் சிக்கித் தவிக்கின்றனர். அழைக்கப்படும் வேலைக்கு செல்பவர்களாக பழங்குடியினர் மாறுகின்றனர். மொழி தெரியாத மாநிலத்தில், ஆந்திராவின் சேஷாசலம் மற்றும் பாலகொண்டா மலைப்பகுதிகளில் பிழைப்பிற்காகச் சென்று வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஜவ்வாது மலை - ஜமுனாமரத்தூர்
ஆய்வும், அதிர்ச்சிகளும்


இகக(மாலெ) மற்றும் பழங்குடி சங்கத் தலைவர்களைக் கொண்ட உண்மையறியும் குழு தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை - ஜமுனா மரத்தூர் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தது; சிறைகளில் உள்ளவர்களின் நெருங்கிய உறவினர்கள், அர சாங்க அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரைச் சந்தித்து பல்வேறு விவரங்கள் திரட்டியது. திருப்பதி சேஷாசலம் காடுகளில் ஜூன் மாதத்தில் கொல்லப்பட்ட மூவரும், மீண்டும் கைது செய்யப்பட்ட பலரும் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள். இம் மலைப்பகுதியில் 90,000 பேரில் பெரும்பான்மையினர் மலையாளி - பழங்குடி வகுப்பினராவர். இப்பகுதியின் 11 ஊராட்சிகளும் பழங்குடி/எஸ்டி ஊராட்சிகளே ஆகும். இப்பகுதியிலிருந்து 5000 பழங்குடி இளைஞர்கள் வெளி மாநில வேலைகளுக்குச் சென்றிருப்பதாக சொல்லப்படு கிறது; கடந்த 5 ஆண்டுகளில் ஆந்திராவின் காடுகளில் தொலைந்து போனவர்கள் ஏராளம். அடுத்தடுத்த தேர்தல்களின் வாக்காளர் பட்டியல்களை ஒப்பிட்டுப் பார்த்த போது, பல ஆயிரம் பழங்குடி வாக்காளர்கள் குறைவதும் அபாயகரமான நிலைமையை சுட்டிகாட்டுகிறது. திருப்பதி காடுகளுக்கு மரம் வெட்டும் வேலைக்கு பழங்குடி இளைஞர்களை அனுப்பும் முகவராக அஇஅதிமுக துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் செயல்படுகிறார்; குறுகிய காலத்தில் இவர் கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார்.

வீரப்பனூர் (4 பேர்), குறியானூர்(7 பேர்), அரச வள்ளி(4 பேர்), புதுப்பட்டு (7 பேர்), நெமியாம்பட்டு (2 பேர்), விளாங்குப்பம் (4 பேர்) என பாதிக்கப்பட்ட இளைஞர் களின் குடும்பங்களைச் சேர்ந்தோர் பல்வேறு தகவல்களைத் தெரிவித்தனர். கைதான இளைஞர்களின் குடும்பத்தினர் ரேசன் கார்டுகளை, அடையாள அட்டைகளை ஆந்திர வழக்கறிஞர்களிடம் கொடுத்துவிட்டு, கையிலிருந்த பணத்தை எல்லாம் ஜாமீன் எடுப்பதற்கு தந்துவிட்டு, உணவிற்கு வழியில்லாமல் வாடுகின்றனர்.

ஒரு முறை காட்டிற்குள் சென்று மரம் வெட்டி கட்டைகளைச் சுமந்து, வெளியே வந்து வண்டிகளில் ஏற்றுவதற்கு 3 நாட்கள் வரை ஆகிறது. கிலோ 1க்கு ரூ.100 முதல் ரூ.300 வரை கூலி என்றடிப்படையில் 30 கிலோ வரை சுமந்து வரும் தொழிலாளிக்கு ரூ.3000 முதல் ரூ.9000 வரை தருகின்றனர். கூலியின் ஒரு பகுதி உடனே தரப்படும் என்றும், மீதிப் பகுதி முகவர்கள் மூலமாக வீட்டிற்கு வந்து சேரும். ஆனால், கணிசமானத் தொகை முகவர்களிடம் சிக்கிக் கொள்ளும் என்று தெரிவிக்கின்றனர். முகவர்களில் பெரும்பான்மையோர் அதிமுகவைச் சேர்ந்தவர்களாவர்.

மரம் வெட்டும் தொழிலாளர்கள் பெறுகிற கூலி அவரவர் வேலை அனுபவத்தைப் பொறுத்து வேறுபடுகிறது. சில ஊடகங்கள் தெரிவிப்பது கூட இவர்கள் யாரும் லட்சக் கணக்கில் பணம் சம்பாதிப்பதில்லை.

ஜமுனாமரத்தூர் வட்டாரத்தில் 5,000 மோட்டார் சைக்கிள்கள் உள்ளன. டாஸ்மாக் கடையின் திங்கட்கிழமை விற்பனை மட்டும் ரூ.4 லட்சம், பிற நாட்களில் தினசரி விற்பனை ரூ.2.50 லட்சம் ஆகும். ஆந்திராவின் போலீசார் அடிக்கடி இப் பகுதிக்கு வந்து விசாரணை செய்கின்றனர். இளைஞர்களைப் பிடித்துச் செல்கின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த கலசப்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏவும், அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயா அரசாங்கம் எவற்றையும் கண்டுகொள்ளவில்லை என பலரும் தெரிவித்தனர்.  
 
பழங்குடியினரை வஞ்சிக்கும் அரசாங்கங்கள்

தமிழகத்தின் பல மலைக் கிராமங்களிலும், கொல்லப்பட்ட/தொலைந்துபோன பழங்குடி இளைஞர் கள் பற்றிய செய்திகள் உலாவிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் கடந்த காலத்தில் அதிமுகவினர்  ஆளும் கட்சியினராக இருந்தபோது சந்தன மரங்கள் வெட்டி கொள்ளையடிக்கப்பட்ட பின்னணியில்தான், வாச்சாத்தி பழங்குடியினர் மீதான தாக்குதல் வீரப்பன் வேட்டை போன்றவை தோன்றியது. அன்றைக்கும் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் கூலிக்காரர்களாகப் மரம் வெட்டப் போன அப்பாவி பழங்குடி ஏழைகள்தான். இன்றைக்கும் அதிமுகவினர் கொள்ளையர்களாக அல்லது முகவர்களாக இருக்க மரம் வெட்டபோய் அழிந்து கொண்டிருப்பவர்கள் அப்பாவி ஏழைப் பழங்குடியினர்தான்.

பழங்குடியினர் நிலம் அபகரிக்கப்படுதல், வேலையின்மையால் இடம் பெயருதல், வெளி மாநிலங்களில் சிக்கி சீரழிதல் என்ற மிகப் பெரிய சமூகப் பிரச்சனை பற்றி ஜெயா அரசாங்கத்திற்கு சிறிதும் அக்கறை இல்லை. பழங்குடியினர் நிலங்களை மீட்டுத் தருவதற்கோ, மலைப்பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கோ, பழங்குடியினர் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்கோ திட்டங்களும் நடவடிக்கைகளும் இல்லை. சிறப்பு உட்கூறு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தவும் இல்லை. தமிழக பழங்குடியினர் அஇஅதிமுகவின் சமூக அடித்தளமாக உள்ளனர். தமிழகத்தில் உள்ள இரண்டு பழங்குடி எம்எல்ஏக்களும் கூட அஇஅ திமுகவின் பக்கம்தான் உள்ளனர். ஆனால், ஜெயா அரசாங்கம் ஆந்திராவில் சிறையிலடைக்கப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்ற குரலைக் கூட எழுப்பவில்லை; ஆந்திராவின்  செம்மரக் கட்டை கடத்தல் கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும், அப்பாவி தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுக்கவில்லை.

தமிழக பழங்குடி தொழிலாளர்கள் ஆந்திர வனப்பகுயில் சாவது பற்றியோ ஆந்திராவின் சிறைகளில் வாடுவது பற்றியோ மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசாங்கத்தின் பழங்குடியினர் விவகாரத்திற் கான அமைச்சரகமும் கண்டுகொள்ளவே இல்லை. இந்த பிரச்சனை பற்றி பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்திடம் பல்வேறு அமைப்புகள் முறையிட்ட போது எதுவுமே தெரியாது என கூருணர்ச்சி இல்லாமல் பதிலளித்தது. தமிழக பழங்குடியினர் அவர்களது நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கூலித் தொழிலாளர்களாக மாறியவர்கள் குற்றவாளிகள் ஆக்கப் பட்டுள்ளனர். அவர்களை மோடி, ஜெயா அரசாங்கங்கள் கை கழுவிவிட்டனர். தமிழக பழங்குடியினர் வாழ்வுரிமைக்காக வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதற்காக, புரட்சிகர இடதுசாரி அமைப்புகள் மற்றும் பழங்குடி/தலித் அமைப்புகள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.

கும்பகோணம் மீண்டும் நிகழாமல் இருக்க கல்வி வியாபாரம் ஒழிக்கப்பட வேண்டும்

2004 ஜூலை 16 அன்று கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் தீ பிடித்து 94 குழந்தைகள்  கொடூரமாய் கொல்லப்பட்டனர். 18 குழந்தைகள் மோசமாக படுகாயமுற்றார்கள். அந்த அநியாயத்திற்குக் காரணமான குற்றவாளிகள் என்று அரசு தரப்பில் 24 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு, பின்னர் 3 பேரை வழக்கில் இருந்து விடுவித்துவிட்டது தமிழக அரசு.

பத்து ஆண்டுகள் கழித்து இப்போது ஜூலை 30 அன்று தஞ்சாவூர் அமர்வு நீதிமன்றம், 10 பேர் குற்றவாளிகள் என்று தண்டனை வழங்கியும் 11 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பு வழங்கியுள்ளது. பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை. அவர் மனைவியும் பள்ளித் தாளருமான சரஸ்வதி(!)க்கு 5 ஆண்டுகள் சிறை. மற்ற குற்றவாளிகள் பள்ளி தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையலர் வசந்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலாஜி, அவரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலக கண்காணிப்பாளர் தாண்டவன், உதவியாளர் சிவப்பிரகாசம் மற்றும் பொறியாளர் ஜெயச்சந்திரன் ஆவர். இவர்களில் ஜெயச்சந்திரன் தவிர மற்றவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை. இவர்கள் அனைவருக்கும் சேர்த்து ரூ.52.57 லட்சம் அபராதம். இந்தப் பணத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தலா ரூ.50,000. படுகாயமுற்ற 15 குழந்தைகளுக்கு தலா ரூ.25,000. லேசான காயமுற்ற குழந்தைகள் மூவருக்குத் தலா ரூ.10,000.

இந்த விபத்து நடந்தபோது ஆட்சியில் இருந்தது கும்பகோண மகாமகம் புகழ் ஜெயலலிதாதான். தன் பெயரைக் காப்பாற்றிக்கொள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு பெயரளவுக்கு நிவாரணம் அறிவித்தார். பெற்ற ஒன்றிரண்டு குழந்தைகளையும் பறி கொடுத்த பெற்றோர்க்கு வெறும் லட்ச ரூபாய் நிவாரணத்தால் என்ன பயன்? அந்த நிவாரணம் போதுமானதல்ல, உருக்குலைந்து காயத் தழும்புகளுடன் நடமாடும் குழந்தைகளுக்கு முழு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று வீதியிலும் நீதி மன்றத்திலும் போராடினார்கள் மக்கள். வேறு வழியின்றி ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. நீதிபதி சம்பத் தலைமையிலான குழு, முடுக்கு போன்ற இடத்திற்குள் மூன்று பள்ளிகூடங்களை, அதிலும் 900 மாணவர்களை அடைத்து வைத்து நடத்தியது அநியாயம், இதற்கு முழுக் காரணம் பேராசை பிடித்த பள்ளி நிர்வாகமும் அரசு அதிகாரிகளும்தான் என்றது.

நிவாரணம் போதாது என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வழக்குத் தொடுத்ததில், கூடுதல் நிவாரணம் வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றது. உச்சநீதி மன்றத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய நிவாரணம் தமிழக அரசு கொடுத்து விட்டது, அதனால், மேலும் நிவாரணம் தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைத்தது தேவையற்றது என்று வாதாடியது தாயுள்ளம் கொண்ட(!) அம்மாவின் தமிழக அரசு. ஆனால், உச்சநீதிமன்றம் தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில்தான், தஞ்சாவூர் அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பும் வந்துள்ளது. ‘வந்த தீர்ப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது.

ஆசிரியர்கள் உட்பட 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதும், தண்டிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு தரப்பட்டுள்ள தண்டனையும் ஏமாற்றமளிக்கிறது. ஏற்க முடியாதது. ஆசிரியர்கள் விபத்து நடந்தபோது வெளியில் ஓடிவிட்டார்கள், அதுவும் குழந்தைகளை வகுப்புக்குள் உள்ளேயே இருக்கச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். குழந்தைகளைக் காப்பாற்ற நினைக்காத அவர்களை விடுவித்தது சரியல்ல’ என்று பாதிக்கப்பட்ட பெற்றோர்களும் குழந்தைகளும் குமுறுகிறார்கள். அன்று காயம்பட்டுத் தப்பிய குழந்தைகள் இன்று கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மனித உயிரின் விலை வெறும் ரூ.50,000. உயிர் பிழைத்து கோர உருவத்துடன், நடந்த கொடூரச் சம்பவத்தை மறக்க முடியாமல் நித்தம் நித்தம் வேதனையில் வாழ்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு வெறும் ரூ.25,000, ரூ.10,000. 
நகராட்சி விதிகளுக்குப் புறம்பாக கட்டிடம் கட்டிய தற்காக அபதாரம் ரூ.100. தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளி ஒழுங்குமுறைச் சட்டத்தை பின்பற்றாத தற்கான அபராதம் ரூ.500. சாலையோரக் கடை போட்டு பிழைப்பு நடத்துபவர்களிடம், விதி மீறல் என்று சொல்லி ரூ.500 வசூலிக்கும் இன்றைய நிலையில், குழந்தைகள் வாழ்க்கையில் பெரும்பகுதியை கழிக்கும் பள்ளிகூடம் நடத்துவதற்குத் தேவையான எந்தவிதிமுறைகளையும் பின்பற்றாததற்கு அபராதம் நூறும் அய்நூறும். தொழிலாளர் நலச் சட்டங்களை, தொழிற்சாலைச் சட்டங்களை அமல்படுத்தாத முதலாளிகளுக்கு விதிக்கப்படும் அபராதங்கள் போல் இந்த லட்சணத்தில் சட்டங்கள் இருந்தால் யார்தான் விதியை மீறமாட்டார்கள்.

தற்போது நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளவர்கள் 3 பெண் ஆசிரியர்களும் கல்வி, நகராட்சி அதிகாரிகளும். இவர்கள் குற்றம் செய்தார்கள் என்பதற்குச் சரியான ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் இவர்களை விடுவித்துள்ளது.

 இவர்களுக்கு தண்டனை கொடுத்துவிட்டால் மட்டும் எல்லாம் சரியாகிவிடுமா? சத்துணவு அமைப்பாளரும் சமையலரும் ஆசிரியர்களும் கல்வித்துறை, நகராட்சி அலுவலர்கள் மட்டுமா இதற்குக் காரணம். இந்தத் தீர்ப்புக்கு முன்பே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 24 பேர்களில் குற்றப்பத்திரிகை தாக்கலின் போது தமிழக அரசால்  விடுவிக்கப்பட்டவர்கள் மூவர்.

அப்போதைய முதன்மைக் கல்வி அலுவலர் பழனிச்சாமி, கும்பகோணம் வட்டாட்சியர் பரமசிவன், தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணன். இயக்குநர், தாசில்தார் மட்டத்தில் இருப்பவர்கள் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டாலே அது அரசையும் குற்றவாளி என்றாக்கிவிடும். அதனால், உயர்மட்ட அதிகாரிகளை முதலில் விடுவித்துவிட்டது அரசு. சமீபத்திய மவுலிவாக்கம் சம்பவத்தில் ஜெயலலிதா எடுத்த நிலைப்பாட்டில் இருந்து இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ள தினமணி, அரசாங்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் ஒழுங்காக வருவதில்லை, அப்படியே வந்தாலும் முறையாகப் பாடம் சொல்லித் தருவதில்லை. எங்கள் கிராமத்தில் இருந்து பிள்ளைகள் இந்தப் பள்ளிக்கு வந்துபோக இலவசமாக பேருந்து வசதி செய்து கொடுத்தார்கள், அதனால்தான் எங்கள்  குழந்தைகளை இங்கு அனுப்பினோம் என்று குழந்தைகளைப் பறிகொடுத்த கும்பகோணம் பெற்றோர்கள் சொன்னார்கள், அரசாங்கப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை ஒழுங்காக வர வைப்பதற்கு இப்போது உள்ளாட்சிகளிடம் அதிகாரம் இல்லை, அதுதான் காரணம் என்று தலையங்கம் எழுதியது. ஒரு வாரம் கழித்து ஆபத்தான நிலையில் அரசுப் பள்ளிகள் என்று இன்னொரு கட்டுரையை அது வெளியிட்டது.

அதில், ‘அரசு கோடிக் கணக்கில் அரசுப் பள்ளிகளுக்குக் கொட்டிக் கொட்டிக் கொடுத்தாலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. மடிக் கணினி, இலவச பஸ் பாஸ் எல்லாம் கொடுத்தும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை உயரவில்லை.

 அதற்குக் காரணம் பட்டி தொட்டிகளில்கூட தொடங்கப்பட்டுள்ள தனியார் பள்ளிகளும், அரசுப் பேருந்து நுழையாத கிராமங்களுக்குக் கூட தனியார் பள்ளிப் பேருந்துகள் சென்று வருவதும்தான். இன்னொரு பக்கம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக தங்கள் வீட்டை இடமாற்றம் செய்யவும், எவ்வளவு செலவு செய்யவும் தயாராக இருக்கிறார்கள். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூட தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில்தான் சேர்க்கிறார்கள். அவர்களுக்கே அவர்கள் பள்ளி மீது நம்பிக்கை இல்லை.... சில கிராமங்களில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வீடுவீடாகச் சென்று பிள்ளைகளைச் சேர்க்குமாறு கேட்கத் தொடங்கியுள்ளார்கள்.

இது நல்ல விசயம். அதைவிட பயனளிக்கக் கூடியது என்னவென்றால், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை கண்டிப்பாக அரசுப் பள்ளி அல்லது அரசு நிதி உதவி பெறும் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று அரசு உத்தரவிட வேண்டும்...’ என்று அரசுப் பள்ளிகளுக்கு குழந்தைகள் வராமல் தனியார் பள்ளிகள் நோக்கிச் செல்வதற்கு ஆசிரியர்கள்தான் காரணம் என்று சொல்லி உண்மையை மூடி மறைக்கப் பார்க்கிறது.

அரசாங்கப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்வது, அவர்களை இடமாற்றம் செய்வது  என அனைத்திற்கும் லட்சக்கணக்கில் பணத்தைப் பிடுங்கும் ஆட்சியாளர்கள் பற்றி இவர்கள் வாய் திறப்பதேயில்லை.

கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கட்டிடங்கள் எப்போது விழுமோ என்கிற நிலையில் உள்ளது பற்றி, அங்குள்ள உள்கட்டுமான வசதிகள் பற்றி ஆட்சியாளர் எவருக்கும் அக்கறையில்லை. அரசுப் பள்ளிகள் உள்கட்டுமானம் இல்லாமல் இருந்தால்தான் தாங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு பிள்ளைகள் வருவார்கள் என்று திட்டமிட்டுச் செயல்படும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பற்றி மென்மையான கேள்விகள்தான் எழுப்பப்படுகிறது.

தனியார் பள்ளிகளை, மழலையர் பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை கல்வி வியாபாரிகள் கணக்கில்லாமல் திறப்பதற்கு அனுமதி அளிப்பது யார்? அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கட்டாயம் என்று சொல்லும் அரசு, அரசாங்கப் பள்ளிகளை மேம்படுத்துவதற்குப் பதிலாக புற்றீசல்கள் போல தனியார் கல்வி நிறுவனங்களை பழனிச்சாமி போன்ற வியாபாரிகள் நடத்துவதற்கு அனுமதி அளிப்பது ஏன்?

தமிழ்நாட்டில் 2005-2006 புள்ளிவிவரக் கணக்குப் படி அரசுத் தொடக்கப்பள்ளிகள் எண்ணிக்கை 24,208, அரசு உதவி பெறும் பள்ளிகள் 5,018, தனியார் பள்ளிகள் 4,683. உயர் நிலைப்பள்ளிகளில் அரசு பள்ளிகள் 2,143, அரசு உதவி பெறும் பள்ளிகள் 636, தனியார் பள்ளிகள் 1,657. மேல்நிலைப் பள்ளிகள் அரசுப் பள்ளிகள் எண்ணிக்கை 1,856, அரசு உதவி பெறும் பள்ளிகள் 1099, தனியார் மேல்நிலைப் பள்ளிகள் 1,677. இந்த எண்ணிக்கை இப்போது உயர்ந்து கொண்டே போகிறது. குறிப்பாக உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளை தனியார் அதிகம் அதிகம் நடத்துகிறார்கள் அதில்தான் அதிகம் காசு பார்க்க முடியும் என்பதால்.

இதற்குக் காரணம் யார்? தனியார் பள்ளிகளை துவங்கு வதற்கு அனுமதி அளிப்பது யார்? வியாபாரிகள் பள்ளிக் கூடங்களையும் கல்லூரிகளையும் துவங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டிய அவசியம் என்ன? பல அடுக்கு மாடிகளில் குறுகலான படிகளோடு பள்ளிகளைக் கட்டிக் கொண்டு, பள்ளிக் குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு கூட மைதானம் இல்லாமல், ஏன் விளையாட்டு வகுப்பே இல்லாமல் குழந்தைகளை எந்திரம் போல் நடத்தும் பணம் பிடுங்கும் பகற்கொள்ளை தனியார் பள்ளிகளை இல்லாமல் செய்வதற்கு இவர்களுக்கு ஏன் மனம் இல்லை? ஏனென்றால். இன்று பணம் கொழிக்கும் பெரும் வியாபாரமாக பள்ளிக்கூடங்களை ஆக்கி வைத்துள்ளார்கள் ஆட்சியாளர்கள். அதனால்தான் தனியார்களால் நடத்தப்படும் ஊடகங்களும் பத்திரிகைக ளும் கல்வி நிறுவனங்களை தனியார் நடத்தக் கூடாது என வெளிப்படையாக அறிவிக்கத் தயாராக இல்லை. 

இன்றும் கிராமப்புற ஏழை உழைக்கும் மக்களுக்கு அரசுப் பள்ளிகளே ஆதாரம். அவர்களுக்குக் கிடைக்கும் வருமானத்தில் தனியார் பள்ளிளை நினைத்துப் பார்க்கவே முடியாது. ஆனால், தனியார் பள்ளிகளை ஊக்கு விக்கும் நோக்குடன் அருகமைப் பள்ளி, கட்டாயக் கல்வி, சமச்சீர் கல்வி என எல்லா திட்டங்களையும் திட்டமிட்டு அரசு ஒப்புக்குச் செயல்படுத்துகிறது.

 திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 20 அரசு தொடக்கப் பள்ளிகள் மாணவர் வருகை இல்லாததால் மூடப்படவிருப்பதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் ஓட்டேரியில் அரசுப் பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு அங்கு வேறு அரசு அலுவலகம் கட்டப்படவுள்ளதாகச் சொல்கின்றனர்.

எழிலகத்தில் தீப்பிடித்த பிறகு அங்கு செயல்பட்டு வந்த சில அரசு அலுவலகங்கள் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் செயல்படுகின்றன. மதுரவாயலில் உள்ள அரசுப் பள்ளி இருக்கும் இடத்திலும் வேறு அரசு அலுவலகங்கள் கட்ட அரசு திட்டமிடுகிறது. இன்றைய நிலைமைகளில் தமிழ் நாட்டின் 15% அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை. தமிழ்நாட்டின் வறிய குடும்பங்களின் குழந்தைகளுக்கு கல்வியே தேவையே இல்லை என்று அரசு முடிவு செய்துள்ளதைத்தான் இந்தச் செய்திகள் சொல்கின்றன. தமிழக மக்களின் பொழுதுபோக்குக்காக ரூ.25 கட்டணம் பெறும் அம்மா திரையரங்குகள் கட்டத் தயாராகிற, அதற்கான உள்கட்டுமான செலவுகளுக்கு நிதி ஒதுக்கியிருக்கிற ஜெயலலிதா அரசு, புதிதாக அம்மா பள்ளிக் கூடங்கள் கட்டினால், நடத்தினால், (அல்லது இருக்கிற அரசுப் பள்ளிகளுக்கு எல்லாம் அம்மா அரசுப் பள்ளி என்று பெயர் மாற்றினால் அரசு கவனம் செலுத்துமா?) வறிய மக்கள் கல்வி உறுதி செய்யப்படும்.

மீண்டும் கும்பகோணம் நிகழாமல் இருக்க வேண்டும் என்றால், கும்பகோணம் பள்ளிக் கூட விபத்திற்கு அரசு பொறுப்பாக்கப்பட வேண்டும். பழனிச்சாமிக்கு ஆதரவாகச் செயல்பட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உயரதிகாரிகள் அனைவரையும் குற்றவாளிகளாக்கி தண்டிக்க வேண்டும். இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் அரசு வழங்க வேண்டும்.

 படுகாயமுற்று இன்றும் மன உளைச்சலுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு தலா ரூ.10 லட்சமும் முழுச் சிகிச்சையும் அரசாங்கத்தால் அளிக்கப்படவும் வேண்டும். இதற்கெல்லாம் மேலாக, கல்வி வியாபாரம் தடுக்கப்பட வேண்டும். தனியார் பள்ளிகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும். அரசுப் பள்ளிகளுக்கு தரமான கட்டிடம், போக்குவரத்து வசதிகள் உட்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும். தேவையான ஆசிரியர்கள் (லஞ்சம் வாங்காமல்) நியமிக்கப்பட வேண்டும்

Search