COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Wednesday, July 30, 2014

தலித் மக்கள் மீது தொடரும் ஒடுக்குமுறை

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு, கடந்த மூன்றாண்டுகளில், தமிழகத்தில் தலித்துகள் மீதான தாக்குதல்கள், வன்முறைகள் அதிகரித்துச் செல்கின்றன. சாதிய வெறியர்கள், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், பொது இடங்களை தலித்துகள் புழங்குவதற்கு எதிராகதாக் குதல்கள் தொடுக்கின்றனர்; தலித்துகளின் வாழ்வாதாரங்களை, வாழ்வுரிமையை சேதப்படுத்துகின்றனர்; சாதி மறுப்புத் திரு மணங்களை எதிர்ப்பது என்ற பெயரால் கும்பல் வன்முறையை கட்டவிழ்த்துவிடுகின்றனர்; கவுரவக் கொலைகளை அரங்கேற்று கின்றனர்; தலித் பெண்களை, சிறுமிகளை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கி கொலை செய்கின்றனர்; ஆளும் கட்சியும், தமிழக காவல்துறையும் சாதிய வெறியர்களோடு கைகோர்த்து நிற்கின்றன. கடந்த 6 மாதங்களில் மட்டும் சாதிய வெறியாளர்களாலும், காவல்துறையாலும் கொல்லப்பட்ட தலித்துகளின் எண்ணிக்கை 60அய் தாண்டியுள்ளது.

இளவரசன் முதலாமாண்டு நினைவு நாள் நிகழ்ச்சியை ஜூலையில் நடத்த முயன்ற தருமபுரி நத்தம் காலனி தலித் மக்கள், தருமபுரி காவல்துறையால் மிரட்டப்பட்டனர். 6 தலித் முன்னணிகள், உள்ளூர் பாமக தலைவரை கொல்வதற்கு ஆயுதப் பயிற்சி மேற்கொண்டதாகவும், சதித் திட்டம் தீட்டியதாகவும் பிடித்துச் செல்லப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டனர். மாவட்ட ஆட்சியரை சந்தித்த நூற்றுக்கணக்கான பெண்கள், இந்த அராஜகம் தடுத்து நிறுத்தப்படவில்லை எனில், வாக்காளர் அடையாள அட்டைகளை, ரேசன் அட்டைகளை திருப்பித் தந்துவிட்டு கிராமத்தை விட்டு வெளியேறுவதாக எச்சரித்தனர்.

காவல்துறையினர் 6 பேரையும் மாவோயிஸ்டுகள் என சித்தரித்து சிறையில் அடைத்து, 11 நாட்கள் கழித்து, அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசாங்கம் பிரயோகித்தது.

மகனின் நினைவுநாள் நிகழ்ச்சியை நடத்துவதற்குக் கூட இளவரசனின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தை நாட வேண்டியிருந்தது. அரசியலமைப்புச் சட்டத்தினடிப்படையில் சிவில் உரிமைகளையும், சனநாயக உரிமைகளையும் உயர்த்திப் பிடிக்க வேண்டிய நீதிமன்றம், இரண்டு மணி நேர அனுமதி, உறவினர்களும் நண்பர்களும், கிராமத்தினரும் என அய்ம்பது பேருக்கு மட்டுமே அனுமதி, அரசியல் கட்சிகளுக்கும், சமூக அமைப்புகளுக்கும் அனுமதி இல்லை என்றது. நீண்ட நெடிய காலம் நீடித்துக் கொண்டிருந்த 144 தடை உத்தரவு மட்டும் போதாது என்று, ஜூலை 4 அன்று, இளவரசன் நினைவுநாளில், நத்தம் காலனி என்ற ஒரு தலித் கிராமத்தில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். ஜெயா அரசாங்கமே வன்முறையாளராக மாறி, தலித்துகளின் சனநாயக உரிமைகளை, உணர்ச்சிகளை நசுக்கியது.

திமுக, தேமுதிக, மதிமுக போன்ற எதிர்க் கட்சிகள், சட்டமன்றத்தில் பிரதிநிதிகளை கொண்டுள்ள விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், குடியரசு கட்சி போன்ற தலித் அமைப்புகள், அதிகாரபூர்வ இடதுசாரிகள் எல்லாம் மவுனம் சாதித்தனர். தலித் விரோத ஜெயா ஆட்சியை கண்டிக்கத் தவறினர்.

இகக (மாலெ), மார்க்சிஸ்ட் கட்சி, மக்கள் விடுதலை போன்ற இடதுசாரி அமைப்புகள் 13.07.2014 அன்று சேலத்தில் ‘தலித்துகள் மீது தொடரும் வன்முறைகள், தாக்குதல்கள்’ பற்றி பொது விசாரணை ஏற்பாடு செய்தன. மக்கள் தீர்ப்பாயமாக அமைந்த பொது விசாரணையின் நடுவர்களாக, உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக் கறிஞர் பொ.ரத்தினம், பியுசிஎல் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ச.பால முருகன், எழுத்தாளரும் வழக்கறிஞருமான இரா.முருகவேள் செயல்பட்டனர். நத்தம் காலனியைச் சேர்ந்த பெண்கள் தைரியமாக சாட்சியமளித்தனர்.

மாலெ கட்சியின் ஊழியரும், நத்தம் காலனியைச் சேர்ந்தவருமான இரமணி, தனது வாக்குமூலத்தில் இளவரசன் நினைவு நாளை கடைபிடிக்க அனுமதி கோரியதும், நீதிமன்றத்திற்கு சென்றதும், தமிழக அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் தலைமையிலேயே அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது என்றும் காவல்துறை அராஜகம் பற்றி புகார் தெரிவித்த பெண்களிடம், ‘உங்கள் வீடுகளில் குண்டுகளை வைத்துவிட்டு உங்களை எல்லாம் சிறைக்குள் தள்ளிவிடுவேன்’ என அவர் மிரட்டியதாகவும் கூறினார். கைது செய்யப் பட்ட 6 பேர் மீது போடப்பட்ட பொய் வழக்கில் முதல் தகவல் அறிக்கை நீதிமன்றத்துக்கு, செய்தி தாள்களுக்குச் செல்லும் முன்பே,  பாமக தலைவர் ராமதாஸ் கைக்கு கிடைத்து ‘பாமக தலைவர்கள் உயிருக்கு நக்சலைட்களால் ஆபத்து’ என பேட்டி கொடுக்க முடிந் தது. போலீசிற்கும், பாமகவிற்கும் இது போன்ற நெருக்கம் உள்ளதென சுட்டிக்காட்டினார்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைக் கப்பட்டுள்ளவர்களின் உறவினர்களான சுமதி, செல்வி மற்றும் சாலம்மாள் கண்ணீருடன் கரங்கூப்பி, போலீசாரின் அட்டூழியங்கள் பற்றி சொன்ன செய்திகள், பொது விசாரணை அரங்கத்தை ஸ்தம்பிக்க வைத்தது. ‘ஜூன் 27 அன்று பகலில் விசாரணை என்று அழைத்துச் செல்லப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள்  தெரியாமல், ஒவ்வொரு காவல் நிலையமாக ஏறி இறங்கி, அலைந்து பரிதவிக்க வேண்டியிருந்தது. அடுத்த நாள் மாலை அவர்களை பார்த்த போது, போலீஸ் லாக்அப்பில் கடும் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர், முட்டிகள் மற்றும் தொடைகளை தாக்கியதால் அவர்களால் நிற்க கூட முடியவில்லை, அவர்களை பார்க்கச் சென்ற எங்களையும் படுகேவலமாக பெண் போலீசார் உட்பட திட்டினர். 2012 நவம்பர் 7 அன்று எங்களது வீடுகள், சொத்துக்கள் சாதி வெறிபிடித்த (பாமக, அதிமுக, திமுக) கும்பலால் எரிக்கப்பட்டபோது மவுனமாக கைகட்டி நின்ற இந்த போலீஸ், இளவரசன் நினைவு நாளை நடத்த திட்டமிட்டதற்காக கடும் சித்திரவதைக்குள்ளாக்குகிறது. எங்களது பையனுடைய நினைவு நாளைக் கொண்டாடக் கூட எங்களுக்கு உரிமை இல்லையா?’ என கண்ணீர் ததும்ப சாட்சியமளித்தனர்.

கரூர் கிருஷ்ணராயபுரத்தில் தலித் மாணவி வினிதாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கொலையாளிகளை கைது செய்யாத காவல்துறை விசாரணை என்ற பெயரால் மாணவிகளை துன்புறுத்துவதையும், பலியானவரின் ஒழுக்கம் பற்றிய புனை கதைகளை பிரச்சாரம் செய்யும் காவல்துறையின் கையாலாகாத்தனத்தையும், கேவலமான பண்பையும் தனது சாட்சியத்தில்  ராமச்சந்திரன் பதிவு செய்தார். விழுப்புரம் மாவட்டம் எம்.குன்னத்தூரில் குடிநீரில் உரிய பங்கைக் கேட்ட தலித்துகளை சாதிவெறி பிடித்த ஊராட்சித் தலைவரும், அடியாட்களும் அடித்து உதைத்ததையும், டிஎஸ்பி டீ பிஸ்கட்டுகளை சாப்பிட்டுக் கொண்டு வேடிக்கைப் பார்த்ததையும் வெங்கடேசன் தனது வாக்குமூலத்தில் விளக்கிக் கூறினார். சிதம்பரம் அருகே வடக்கு மாங்குடியில் தேர்தலை ஒட்டி, விடுதலை சிறுத்தைகளுக்கு வாக்குகள் சென்றுவிடாமல் இருப்பதற்காக திட்டமிட்டு பாமகவால் தொடுக்கப்பட்ட வன்முறையையும், தொடரும் தாக்குதல்களையும் விரிவாக ராஜசங்கர் பதிவு செய்தார்.

பொது விசாரணைக்குழு பின்வரும் தீர்ப்புகளை வழங்கியது:

1. தருமபுரி - நத்தம்காலனி 6 பேர் மீது போடப்பட்டுள்ள‘மாவோயிஸ்ட்’ ஆயுதப் பயிற்சி - கொலை சதித் திட்டம்’ என்றமைந்த வழக்குகள் பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்குகள். இவற்றை மக்கள் தீர்ப்பாயம் வன்மையாகக் கண்டிப்பதுடன், பொய் வழக்கு களை கைவிட வேண்டுமெனவும், கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டுமெனவும் கோருகிறது.

2. திரு.கிறிஸ்துதாஸ் காந்தி அய்.ஏ.எஸ்., நடத்துகிற ‘துடி’ அமைப்பின் செயல்பாடுகளை மாவோயிஸ்ட் ஆயுதப் பயிற்சியாக சித்தரித்திருப்பதும், வேலூர் டிஅய்ஜிக்குத் தெரியாமல் அரக்கோணத்தில் பயிற்சி என்பதும், சென்னை மெரினா கடற்கரையிலேயே ஆயுத பயிற்சி என முதல் தகவல் அறிக்கையில் கூறியிருப்பதும், இவ்வழக்குகள் அப்பட்டமான பொய் வழக்குகள் என்பதை புலப்படுத்துகின்றன. தருமபுரி மாவட்ட காவல்துறை பின்னணியில் யார் உள்ளார்கள் என்பதையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என மக்கள் தீர்ப்பாயம் கருதுகிறது.

3. இளவரசன் நினைவுநாள், தலித்துகள் அணிதிரளும் நாளாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே, தமிழக அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட அடக்குமுறையே நத்தம் காலனி மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் ஆகும் எனவும் மக்கள் தீர்ப்பாயம் கருதுகிறது.

80களில் நக்சலைட் இயக்கத்தை ஒடுக்கிய எம்ஜிஆர் - தேவாரம் கால அடக்குமுறையை, ஜெயா ஆட்சியின் நத்தம் காலனி மீதான ஒடுக்குமுறை நினைவுபடுத்துகிறது. தென் மாவட்டங்களில் தலித்துகளின் அடையாளம் ஆகிப்போன இம்மானுவேல் சேகரன் போன்று, இளவரசன் நினைவுநாள் மாறிவிடக்கூடாது, தலித்துகள் அரசியல்ரீதியாக அணிதிரண்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் அவர்களது எழுச்சியை ஜெயா முளையிலேயே கிள்ளி எறிகிறார். மகனின் நினைவுநாளுக்கு கூட நீதிமன்றத்துக்கு செல்லவேண்டிய அவலத்தையும், சிவில் உரிமை களை உயர்த்திப் பிடிக்கத் தவறிய நீதிமன்றத் தின் கூருணர்ச்சியற்ற போக்கையும் எதிர்த்தெழ வேண்டியுள்ளது.

வன்கொடுமை தடுப்புச் சட்டத் திருத்த மசோதா விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும், தொடரும் வன்முறைகள் மீது சட்டமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்தப்பட வேண்டும், 2012 நவம்பர் 7 தாக்குதல் வழக்கிற்காக சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும், கொடியங்குளம், தாமிரபரணி, பரமக்குடி, தருமபுரி மற்றும் சிதம்பரத்தில் நடைபெற்ற போலீஸ் தாக்குதல்கள் பற்றி மறு விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளை தண்டிக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைக ளோடு மாலெ கட்சி பிற ஜனநாயக சக்திகளுடன் இணைந்து களம் காணவுள்ளது.

(பொது விசாரணையில் மாலெ இயக்கத்தினர், இடதுசாரி அமைப்புகளின் செயல்வீரர்கள், தலித் அறிவாளிகள், பெண்கள் என 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் கே.கங்காதரன், சிபிஎம்எல் (மக்கள் விடுதலை) மய்யக்குழு ந.குணசேகரன் ஆகியோர் கருத்துரையாற்றினர். மாலெ கட்சி மாநிலச் செயலாளர் பாலசுந்தரம் சிறப்பரையாற்றினார்)

ஜூலை 23, தாமிரபரணி படுகொலை நினைவுதின ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலியில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களான தலித்துகள் கூலி உயர்வு கேட்டு போராடியபோது காவல்துறை காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தி தாமிரபரணி ஆற்றில் மூழ்கடித்து படுகொலையை அரங்கேற்றியது.

இன்றளவும் அதன் தொடர்ச்சியாக தலித்துகள் மீதான வன்முறை தொடர்ந்து வருகிறது. தாமிரபரணி படுகொலை நினைவு நாளான ஜூலை 23 அன்று நெல்லையில் இகக(மாலெ) ஆர்ப்பாட்டம் நடத்தியது. இகக(மாலெ) கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர் பாலசுப்பிரமணியன், மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் டி.சங்கரபாண்டியன், ஜி.ரமேஷ், எஸ்.எம்.அந்தோணிமுத்து, ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி அமைப்பாளர் தோழர் சிம்சன், ஏஅய்சிசிடியு தலைவர்கள் தோழர்கள் அந்தோனிராஜ், கணேசன், சுந்தர்ராஜ், அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் அன்புச் செல்வி, சுசீலா, இகக (மாலெ) நெல்லை மாவட்டக்குழு உறுப்பினர்கள் கருப்பசாமி, ரவிடேனியல், சபாபதி, ராமையா, விருதுநகர் மாவட்டப் பொறுப்பாளர் ஆவுடையப்பன், கூடலிங்கம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

விழுப்புரத்தில் இகக(மாலெ) நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தோழர் வெங்கடேசன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.நாடாளுமன்ற ஜனநாயகமே மக்கள் ஜனநாயகமாகிவிடுமா ? - பகுதி 4

அரசு பற்றிய மார்க்சிய தத்துவத்தை, புரட்சியில் பாட்டாளிவர்க்கத்தின் கடமைகளை விளக்குவதற்காக, தோழர் லெனின் ‘அரசும் புரட்சியும்’ நூலை எழுதினார். 1917 ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அந்த நூல் எழுதப்படும்போது அரசு பற்றிய பிரச்சனை தத்துவத்திலும் நடைமுறை அரசியலிலும் குறிப்பான முக்கியத்துவம் பெற்றிருந்தது. அரசு என்ற தலைப்பில் மார்க்ஸ் உண்மையிலேயே என்ன சொல்லித் தந்தார் என்பதை மீண்டும் நிலை நாட்டுவது தமது முதன்மையான கடமையாக இருந்தது என்றார் தோழர் லெனின்.

அரசு பற்றிய மார்க்ஸ் மற்றும் எங்கெல்சின் தத்துவத்தைப் பரிசீலிப்பதும் சந்தர்ப்பவாதிகள் அந்த தத்துவத்தில் எந்த அம்சங்களை புறக்கணித்தார்களோ அல்லது சிதைத்தார்களோ அந்த அம்சங்களின் குறிப்பான விவரங்களைக் கவனமாகக் காண வேண்டி இருந்தது என்று குறிப்பிட்டார் தோழர் லெனின். நூல் நெடுக மார்க்ஸ் மற்றும் எங்கெல்சின் நீண்ட மேற்கோள்கள் எடுத்துக் கையாளப்பட்டுள்ளன. நம் மாபெரும் ஆசானே, அரசு பற்றி மார்க்ஸ், எங்கெல்ஸ் சொன்ன விசயங்களை, அவர்கள் சொன்ன வார்த்தைகளிலேயே சொல்லி மீண்டும் நிலை நாட்ட வேண்டி இருந்தது.

நாமும் மார்க்ஸ், எங்கெல்ஸ் மற்றும் தோழர் லெனின் அரசு பற்றி சொல்லியிருந்த விசயங்களை, திரும்பவும் முடிந்தவரை, அவர்கள் வார்த்தைகள் மூலமாகவே எடுத்துச் சொல்ல முயற்சிப்போம்.

அரசு என்பது, சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தின், ஒரு விளைபொருளே ஆகும். அது, சமூகம் தீர்க்க முடியாத முரண்பாட்டில் சிக்கியுள்ளது, சமூகம் தீர்க்க முடியாத பகைமைகளில் பிளவுண்டுள்ளது, மற்றும் சமூகத்திற்கு அவற்றை அகற்றும் ஆற்றல் இல்லை என்பதற்கான ஒப்புதலே ஆகும். ஆனால் இந்தப் பகைமைகளும் மோதுகின்ற பொருளாதார நலன்கள் கொண்டுள்ள இந்த வர்க்கங்களும், தம்மையும் சமூகத்தையும் ஒரு பயனற்ற போராட்டத்தில் மூழ்கடித்துவிடக் கூடாது என்பதற்காக, ஒரு சக்தி தேவைப்பட்டது. இந்த சக்தி சமூகத்திற்கு மேலே நிற்பதாகத் தோற்றம் தந்தது. இந்த சக்தி மோதலைத் தணித்து (ஒழுங்கீன) எல்லைகளுக்குள் மோதலை வைப்பதாக இருந்தது. இந்த சக்தி சமூகத்திலிருந்து எழுந்தது. ஆனால் சமூகத்திற்கு மேலே தன்னை வைத்துக் கொண்டது. மேலும் மேலும் சமூகத்தினிடமிருந்து தனிமைப் பட்டது. இந்த சக்தியே அரசு ஆகும்.
-எங்கெல்ஸ்  1

‘தற்காலத்திய அரசில்’ அனைவருக்கும் வாக்குரிமை என்பது, உழைக்கும் மக்களின் பெரும்பான்மையினரின் விருப்புறுதியை வெளிக்காட்டுகிற, அதனைச் சாதிக்கிற ஆற்றலை, உண்மையிலேயே கொண்டுள்ளது என்ற தவறான கருத்தை, தாமும் பகிர்ந்து கொள்கிற சந்தர்ப்பவாதிகள், அதனை மக்கள் மனதில் விதைக்கவும் செய்கிறார்கள்.
- லெனின் 2

மனித சமூகத்தில் இதுவரை நிகழ்ந்த எல்லாப் புரட்சிகளும் வெற்றி பெற்றவரின் பரிசாக அரசைக் கைப்பற்றின. தம் ஆதிக்கத்தை நிலைநாட்ட இந்த ஒடுக்குமுறைக் கருவியை மென்மேலும் பலப்படுத்தின. முந்தைய எல்லாப் புரட்சிகளும் அரசு எந்திரத்தைக் கச்சிதப்படுத்தியுள்ள போது பாட்டாளிவர்க்கப் புரட்சி, அதனை உடைத்து நொறுக்க வேண்டும்.
 - லெனின் 3

சுரண்டும் வர்க்கங்களுக்கு சுரண்டலை நிலைநாட்டிக் கொள்வதற்காக அதாவது மிகப் பெருவாரியான மக்களுக்கு விரோதமாய், ஆகக் குறைவான சிறுபான்மையினரது சுயநலத்திற்காக, அரசியல் ஆட்சி தேவைப்படுகிறது. சுரண்டப்படும் வர்க்கங்களுக்கு எல்லாவித சுரண்டலையுமே அறவே ஒழிக்கும்பொருட்டு அதாவது மிகப் பெருவாரியான மக்களது நலன்களுக்காக, நவீன கால அடிமை உடைமையாளர்களாகிய நிலப்பிரபுக்களும் முதலாளிகளுமான மிகச் சொற்ப சிறுபான்மையினருக்கு எதிராய், அரசியல் ஆட்சி தேவைப்படுகிறது.
- லெனின் 4

அரசு உலர்ந்து உதிர்வது
மற்றும் வன்முறைப் புரட்சி

பாட்டாளி வர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றி, முதலில் உற்பத்திச் சாதனங்களை அரசுடமை ஆக்குகிறது. ஆனால் இதன் மூலம் அது, பாட்டாளி வர்க்கமாகத் தான் இருத்தலை ஒழிக்கிறது; எல்லா வர்க்க வேறுபாடுகளையும் வர்க்கப் பகைமைகளையும் ஒழிக்கிறது; அரசு அரசாய் இருத்தலையும் ஒழிக்கிறது. இது வரை சமூகம் வர்க்கப் பகைமைகளின் அடிப்படையில் செயல்பட்டதால், அதற்கு அரசு தேவைப்பட்டது. அதாவது, குறிப்பிட்ட சுரண்டும் வர்க்கத்துக்கான ஒழுங்கமைப்பொன்று தேவைப்பட்டது. இந்த சுரண்டும் வர்க்கத்துக்குரிய பொருளுற்பத்தி புற நிலைமைகளை நிலைநாட்டுவதற்காகவும் இதன் பொருட்டு இன்னும் முக்கியமாய் சுரண்டப்படும் வர்க்கத்தை அந்தந்த பொருளுற்பத்தி அமைப்பாலும் (அடிமை முறை, பண்ணைடிமை முறை, கூலி உழைப்பு முறை) நிர்ணயிக்கப்படும் ஒடுக்குமுறை நிலைமைகளில் பலவந்தமாய் இருத்தி வைப்பதற்காகவும், இந்த சமூகத்திற்கு, அரசு தேவைப்பட்டது.

சமூகத்தின் முழுமையான அதிகாரபூர்வ பிரதிநிதியாக, கண்கூடான அதன் உருவகத் திரட்சியாக, அரசு விளங்கியது. ஆனால் எந்த வர்க்கம் தன்னுடைய காலத்தில் சமூகம் முழுவதற்கும் தானே பிரதிநிதியாக இருந்ததோ, அந்த வர்க்கத்தின் அரசாய் இருந்த அளவுக்குத்தான், அதாவது புராதன காலத்தின் அடிமை எஜமான குடிகளின் அரசாகவும், மத்திய காலங்களில் நிலவுடைமை பிரபுக்களின் அரசாகவும், நாம் வாழும் இக்காலத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசாகவும் இருந்த அளவுக்குத்தான், அரசால், இவ்வாறு விளங்க முடிந்தது. இறுதியில் அரசானது, சமூகம் முழுமையின் மெய்யான பிரதிநிதி ஆகிவிடும் போது, அது தன்னை தேவையற்றதாக்கிக் கொள்கிறது. இனி கீழ்ப்படுத்தி வைக்க வேண்டிய சமூக வர்க்கம் எதுவும் இல்லாமல் போனதும், வர்க்க ஆதிக்கமும் - பொருளுற்பத்தி முறையில் தற்போதுள்ள அராஜகத்தின் அடிப்படையில் நடைபெரும் பிழைத்திருத்தலுக்கான தனி மனிதப் போராட்டம் மற்றும் இந்த போராட்டத்திலிருந்து எழுகிற மோதல்களும் மட்டுமீறல்களும் - நீக்கப்பட்டதும், கீழ்ப்படுத்திவைப்பதற்கு எதுவும் இல்லாமல் போய்விடுகிறது, ஆதலால் ஒரு சிறப்பு ஒடுக்குமுறை சக்தியை ஓர் அரசை அவசியப்படுத்தும் எதுவும் இல்லாமல் போகிறது.

அரசானது, சமூகம் முழுமையின் பிரதிநிதியாக மெய்யாகவே முன்வந்து செய்திடும் முதல் நடவடிக்கை - அதாவது பொருளுற்பத்திச் சாதனங்களை சமூகத்தின் பெயரால் கையகப்படுத்தும் செயல் - அரசு என்ற முறையில் கடைசியாய் சுதந்திரமாய் அது எடுக்கும் நடவடிக்கையாக ஆகிவிடுகிறது. சமூக உறவுகளில் அரசின் தலையீடு ஒவ்வொரு துறையிலுமாய் தேவையற்றதாகி, பிற்பாடு தானாகவே தணிந்து அணைந்து விடுகிறது. ஆட்களை ஆளும் அரசாங்கமானது, விசயங்களை நிர்வகிப்பதாய் உற்பத்தி இயக்கப் போக்குகளை நடத்துவதாய், மாற்றீடு செய்யப்படுகிறது. அரசு ‘ஒழிக்கப்படுவதில்லை’ அது உலர்ந்து உதிர்ந்து விடுகின்றது.
- எங்கெல்ஸ் 5

முதலாளித்துவ அரசை பாட்டாளி வர்க்க அரசு ஒடுக்குவது, ஒரு பலாத்கார புரட்சி இல்லாமல் சாத்தியமே இல்லை. பாட்டாளி வர்க்க அரசை ஒழிப்பது, அதாவது பொதுவில் அரசு என்பதை ஒழிப்பது.‘உலர்ந்து உதிரும்’ இயக்கப்போக்கின் மூலமாக மட்டுமே அல்லாமல் வேறு எந்த விதத்திலும் சாத்தியமில்லை.
- லெனின் 6

‘என்னைப் பொறுத்தவரை, நவீன சமூகத்தில் வர்க்கங்கள் நிலவுவதையோ அவற்றுக் கிடையில் போராட்டங்கள் நிலவுவதையோ கண்டுபிடித்த பெருமை, என்னைச் சாராது. எனக்கு நெடுங்காலம் முன்பாகவே முதலாளித்துவ வரலாற்றியலாளர்கள் இந்த வர்க்கப் போராட்டத்தின் வரலாற்று வழிப்பட்ட வளர்ச்சியையும், முதலாளித்துவ பொருளியலாளர்கள் வர்க்கங்களின் பொருளாதார உடற் கூறியலையும் விவரித்திருந்தனர். நான் செய்ததில் புதியது என்னவெனில், பின்வருவனவற்றை நிரூபித்ததுதான்.

1. வர்க்கங்கள் நிலவுதல் பொருளுற்பத்தியின் வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டங்களோடு மட்டுமே இணைந்ததாகும்.

2. இந்த வர்க்கப் போராட்டம் அவசியமாய் பாட்டாளி வர்க்க சமூகத்திற்கு இட்டுச் செல்கிறது.

3.இந்த சர்வாதிகாரம் எல்லா வர்க்கங்களும் ஒழிக்கப்படுவதற்கும் வர்க்கமில்லாத சமூகத்திற்குமான ஒரு மாறிச் செல்லும் கட்டம் ஆகும்.’
- மார்க்ஸ் 7

வர்க்கப் போராட்டத்தை மட்டுமே அங்கீகரிப்பவர்கள் இன்னமும் மார்க்சிஸ்டுகள் ஆகிவிடுவதில்லை. அவர்கள் இன்னமும் முதலாளித்துவ சிந்தனை மற்றும் முதலாளித்துவ அரசியலின் எல்லைக்குள்ளேயே இருந்துவிட முடியும். மார்க்சியத்தை வர்க்கப் போராட்ட தத்துவத்தோடு சுருக்கிவிடுவது, மார்க்சியத்தை குறுக்குவது, சிதைப்பது, முதலாளித்துவ வர்க்கத்தாருக்கு ஏற்புடையதாக்குவது என்றுதான் ஆகும். எவரொருவர், வர்க்கப் போராட்டத்தை அங்கீகரிப்பதை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வரை நீட்டிக்கிறாரோ, அவரே மார்க்சிஸ்ட் ஆவார்.
- லெனின் 8

சந்தர்ப்பவாதம், வர்க்கப் போராட்டத்தை அங்கீகரிப்பதை தலையாய பிரச்சனையான முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு மாறிச் செல்லும் கட்டம் முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்துவது அதனை அறவே ஒழித்துவிடுவது என்பது வரை நீட்டிப்பதில்லை. எதார்த்தத்தில், இந்த காலகட்டம்தான் முன்னுதாரணமில்லாத தீவிர வடிவங்களில் முன்னுதாரணமில்லாத பலாத்கார வர்க்கப் போராட்ட காலகட்டமாகும், தொடர் விளைவாக, அரசானது இந்த காலகட்டத்தில் தவிர்க்க முடியாமல் ஒரு புதிய வகையில் ஜனநாயக இயல்புடையதாக (பாட்டாளி வர்க்கத்திற்கும் பொதுவாக சொத்தில்லாதவர்க்கும்) ஒரு புதிய வழியில் சர்வாதிகார இயல்புடையதாக (முதலாளித்துவத்திற்கு எதிரானதாக) திகழும்.
- லெனின் 9

திருக்குறளுக்கு, பரிமேலழகரிலிருந்து பலரும் உரை எழுதியிருந்தாலும், இறுதி ஆராய்ச்சியில், வள்ளுவர் எழுதிய குறளே ஆதாரமான அடிப்படையாகும். அதே போல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் மேற்கோள்களை நேரடியாக அந்த மேற்கோள்களிலிருந்து புரிந்து கொள்வதே, சாலச் சிறந்ததாகும். இந்த எச்சரிக்கையுடன், நாம் பொதுவான வாசகர்களுக்காக, இந்த மேற்கோள்கள் சொல்லும் மய்யமான செய்திகளை சுருக்கமாகத் தர முயற்சி எடுக்கிறோம். (வசதி கருதி மேற்கோள்களுக்கு எண்கள் தரப்பட்டுள்ளன)

    அரசு என்பது, ஓர் ஒடுக்குமுறைக் கருவி. அது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அடக்கி ஆள்வதற்கான கருவியாகும்.

    அரசு என்பது, எந்தக் காலத்திலும் சமூகத்திலுள்ள எல்லோருக்கும் எல்லா வர்க்கங்களுக்கும் பொதுவானதாக இருந்ததில்லை, இருப்பதில்லை, இருக்கப் போவதுமில்லை. இந்த விதி, அடிமைச் சமூக அரசு, பிரபுத்துவ அரசு, முதலாளித்துவ அரசு மற்றும் பாட்டாளி வர்க்க அரசு ஆகிய அனைத்து அரசுகளுக்கும் பொருந்தும்.

    அரசால், வர்க்கப் பகைமைகளுக்கு இணக்கம் காண முடியாது. அது, அனைவருக்கும் வாக்குரிமை அடிப்படையிலான நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற முகமூடி தரித்துள்ள முதலாளித்துவ அரசாக இருக்கும் போதும், வர்க்கப் பகைமைகளுக்கு இணக்கம் காண முடியாது.

    2ஆம் எண் தரப்பட்டுள்ள மேற்கோள், அனைவருக்கும் வாக்குரிமை அடிப்படையிலான நாடாளுமன்ற ஜனநாயகம், ஒரு போதும், உழைக்கும் மக்களின் பெரும்பான்மையினரின் விருப்பங்களை பிரதிபலிக்காது என்பதையும், அது ஒரு போதும் உழைக்கும் மக்களின் விருப்பங்களை சாதிக்காது என்பதையும் ஓங்கி அறைந்து சொல்கிறது. இது தொடர்பான மாயைகளைப் பரப்புபவர்கள், மார்க்சிஸ்டுகளல்ல, சந்தர்ப்பவாதிகளே ஆவார்கள்.

    அடிமைச் சமூக அரசு துவங்கி முதலாளித்துவ அரசு வரை, சிறுபான்மையினர் நலன்களுக்காக பெரும்பான்மையினரை ஒடுக்கினர். பிரபுத்துவ அரசு, அடிமை சமூக அரசை மேலும் பலப்படுத்தியது. முதலாளித்துவ அரசு பிரபுத்துவ அரசை மேலும் பலப்படுத்தியது. பாட்டாளி வர்க்க அரசு முதலாளித்துவ அரசை பலப்படுத்தாது, மாறாக அதனைத் தகர்த்தெறியும்.

    அரசு அமைவது எவருடைய விருப்பத் திற்கேற்பவும் இருக்காது. பொருளுற்பத்தியில் ஈடுபட்டுள்ள வர்க்கங்கள் கொண்டுள்ள சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில், ஒரு குறிப்பிட்ட வர்க்கம் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தை அடக்கியாள்வதற்கான புறநிலை தேவைக்கேற்பவே, அரசு அமையும்.

    அரசு உலர்ந்து உதிரும் என்ற எங்கெல்ஸ் மேற்கோளை, சந்தர்ப்பவாதிகள் வேண்டுமென்றே தவறாக விளக்குகிறார்கள். எங்கெல்ஸ் முதலாளித்துவ அரசை குறிப்பிட்டதாகவும், அந்த முதலாளித்துவ அரசில் மெல்ல மெல்ல மாற்றங்கள் கொண்டுவந்து அமைதியான நாடாளுமன்ற வழியில் அந்த அரசை உலர்ந்து உதிரச் செய்ய முடியும் என, மார்க்சியத்தை திரித்துச் சொல்கிறார்கள். முதலாளித்துவ அரசு தகர்த்தெறியப்பட வேண்டியது என்று போதனை செய்யும் மார்க்சியம், பாட் டாளி வர்க்க அரசு என்பதுதான், வர்க்கங்களே இல்லாத ஒரு சமூகத்தை நோக்கிய, அரசே இல்லாத ஒரு சமூகத்தை நோக்கிய, உண்மையில் சுதந்திரமான, மானுட சாரம் மீட்கப்படும் கம்யூனிச சமூத்தை நோக்கிய பயணத்தில், ஒரு மாறிச் செல்லும் கட்டம் என்கிறது. அராஜகவாதிகள், அரசை ஓர் இரவில் ஒழித்து விடலாம் என அபத்தமாகச் சொல்வதை, மார்க்சிய லெனினியம் நிராகரிக்கிறது. முதலாளித்துவ வர்க்கத்தை அடக்கி ஆள, முதலாளித்துவம் மீளாமல் தடுக்க, பாட்டாளி வர்க்கத்திற்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு தேவை என அறுதியிட்டு உறுதியாகச் சொல்கிறது.

    வர்க்கப் போராட்டத்தை அங்கீகரிப்பதைத் தாண்டி, பாட்டாளிவர்க்க அரசை நிறுவுவது, வர்க்கங்களில்லாத, அரசு இல்லாத சமூகம் நோக்கிச் செல்வது என்பதை அங்கீகரித்து செயல்படுபவர்கள் மட்டுமே மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்டுகள் ஆவார்கள்.

     பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற பெயரால் மார்க்சிய இலக்கியங்களில் திரும்பத் திரும்ப குறிப்பிடப்படும் பாட்டாளி வர்க்க அரசானது, உண்மையில் ஒரு புதிய வழியில், பாட்டாளிகளுக்கும் சொத்தில்லாதவர்களுக்கும் ஜனநாயக இயல்புடையதாக இருக்கும்; அதே நேரம் அது ஒரு புதிய வழியில், இதுகாறும் இல்லாத வகையில், பெரும்பான்மை உழைக்கும் மக்கள் ஆகச் சிறிய முதலாளிவர்க்கத்தின் மீது செலுத்துகிற சர்வாதிகாரமாகவும் இருக்கும்.

     உலர்ந்து உதிர்வது பாட்டாளிவர்க்க அரசாகவே இருக்கும். உற்பத்தி சக்திகளின் பிரும்மாண்டமான வளர்ச்சி, நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடையிலான வேறுபாடு மறைதல், மூளை உழைப்பிற்கும் உடல் உழைப்பிற்கும் இடையிலான வேறுபாடு மறைதல் மற்றும் தனிநபரை உழைப்புப் பிரிவினைக்கு உட்படுத்தி அடிமைத்தளையிடுதல் மறைதல் ஆகியவை நிகழும், சோசலிச பொருளாதாரத்தின் ஒரு வளர்ச்சிக் கட்டத்திலேயே அரசு உலர்ந்து உதிரும். அப்போது புதிய சமூகத்தில் புதிய மனிதர்கள் உருவாகியிருப்பார்கள். அவர்கள் அரசின் கீழ்ப்படுத்துதல் இல்லாமலேயே சமூக வாழ்க்கையின் சாதாரண விதிகளை ஒரு பழக்கமாகப் பற்றி ஒழுகுவார்கள்.

நாடாளுமன்ற ஜனநாயகம் தொடர்பான மார்க்சிய லெனினிய கருத்துக்களை, அரசு பற்றிய கருத்துக்களோடு பொருத்திப் பார்க்கும் போது மட்டுமே அவை முழுமையடையும். அதனால்தான் அரசு குறித்த சில அடிப்படை விசயங்களை இங்கு பார்த்தோம். அடுத்த பகுதி யில் முதலாளித்துவ அரசுக்கும் பாட்டாளிவர்க்க அரசுக்கும் இடையிலான வேறுபாடுகளை, பாரீஸ் கம்யூன் அனுபவங்களில் நின்று கொண்டு மார்க்சிய லெனினியம் எப்படிக் காண்கிறது என்பதைப் பார்ப்போம். - தொடரும்
ஜெயலலிதா அரசு அறிவிக்கிற வேலை வாய்ப்பு: ஒரு மாயமான்

சட்டமன்ற மேசைகள் தட்டப்படும் நாட்களின் ஊடே தமிழ்நாடு சென்றுகொண்டிருக்கிறது. 110, கூச்சல், வெளியேற்றம், வெளிநடப்பு எல்லாம் முன்னர் நடந்தபடியே நடக்கின்றன.

தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பில்லாத பொறியியல் பட்டதாரிகள், பட்டயம் பெற்ற இளைஞர்கள் என 18 முதல் 25 வயதுள்ள 25,000 இளைஞர்களுக்கு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்புடன் கூடிய 6 மாத கால பயிற்சி அளிக்கப்படும், இதில் பெண்களுக்கு 30% இடம் ஒதுக்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார். திட்டத்தின் பெயர் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் திட்டம்’. அஇஅதிமுககாரர்கள் மேசை தட்டினார்கள்.

இதில் மேசை தட்ட என்ன இருக்கிறது? தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள். அவர்களில் உயர்படிப்பு படித்தவர் உள்ளிட்ட 25,000 பேருக்கு பயிற்சி, சான்றிதழ், வேலை வாய்ப்பு என்ற திட்டத்தில் பெருமிதத்துக்கு என்ன இருக்கிறது? சமீபத்தில் நடந்த குரூப் 1 தேர்வில் 79 காலியிடங்களுக்கு 70,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர். நடப்பாண்டில் 25,000 பேருக்கு பயிற்சி, பின் வேலை வாய்ப்பு என்றால், 31.03.2014 நிலவரப் படி, தமிழ்நாட்டின் வேலை வாய்ப்பகங்களின் பதிவேட்டில் காத்திருப்போர் பட்டியலிலுள்ள 84 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பில் லாத தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கதவுகள் எதுவும் இப்போது திறக்கவில்லை.

இந்தப் பயிற்சி தனியார் நிறுவனங்களால் அளிக்கப்படவுள்ளது. அதாவது, தனியார் நிறுவனங்களில் இந்த 25,000 இளைஞர்கள் 6 மாத காலம் பயிற்சியாளர்களாக இருப்பார்கள். இந்த 6 மாத காலத்துக்கு மாதம் ரூ.5,000 உதவித் தொகை தரப்படும். பயிற்சி தரும் தனியார் நிறுவனத்துக்கு அரசு ஒரு பயிற்சியாளருக்கு ரூ.12,000 தரும். தனியார் நிறுவனங்கள் குறைந்த கூலியில் தனது உற்பத்தியை நடத்திக் கொள்ள தொழிலாளர்களைக் கொடுத்து, அவர்களுக்கான கூலியில் ஒரு பங்கையும் அரசு தரும். கரும்பு தின்ன கூலி.

பயிற்சி முடிந்த பிறகு தொழில் நிறுவனங்கள் அவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளும் என்று சொல்கிற அறிவிப்பு, அவர்கள் ஊதியத் தையும் நிர்ணயித்துவிடுகிறது. ரூ.5,000 அல்லது அந்த குறிப்பிட்ட தொழிலில் குறைந்தபட்ச ஊதியம் ஆகியவற்றில் எது அதிகமோ அதுவே அவர்கள் பெறவிருக்கும் ஊதியம்.

இந்த வேலை வாய்ப்பு தவிர, திண்டுக்கல், கரூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் புதிதாக 3 தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு அங்கு அமையவுள்ள 345 தொழில் நிறுவனங்களில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு என்று அந்த அறிவிப்பில் சொல்லப்படுகிறது. (10,000 பேருக்கு வேலை வாய்ப்பு என்ற பெயரில், தொழில் துவங்குபவர்களுக்கு பல நூறு கோடி ரூபாய் சலுகைகள் வழங்கப்படும் என்பது அறிவிப்பில் சொல்லப்படவில்லை).

அடுத்த 11 ஆண்டுகளில் 2 கோடி பேருக்கு பயிற்சி அளித்து அவர்களை திறன் பெற்றவர்களாக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் உயிர் மூச்சான தொலைநோக்குத் திட்டம் 2023 சொல்கிறது. ஆண்டுக்கு 20 லட்சம் பேருக்கு பயிற்சி என்றால்தான் அந்த இலக்கை எட்ட முடியும். இப்போது அவர் அறிவித்துள்ள அம்மா திறன் திட்டம் எந்த விதத்திலும் ஆண்டுக்கு 20 லட்சம் பேருக்கு பயிற்சி என்பதற்கு அருகில் வரவில்லை. இது ஜெயலலிதாவின் உடனடி மற்றும் நீண்டகால திட்டங்களுக்குள்ளேயே இருக்கிற ஒவ்வாமை.

20 லட்சம் பேருக்கு ஆண்டுக்கு பயிற்சி என்றால், ஆண்டுக்கு 20 லட்சம் வேலை வாய்ப் புக்களும் உருவாக்கப்பட வேண்டும். இல்லை என்றால், வேலை வாய்ப்புக்காக ஏற்கனவே காத்திருக்கிற 84 லட்சம் பேருடன் ஆண்டுக்கு இன்னும் 20 லட்சம் பேர் சேர்வார்கள். ஆண்டுக்கு 25,000 மற்றும் 10,000 வேலை வாய்ப்புக் கள் உருவாக்கப்படுவதையே சாதனை என்று சொல்லும் தமிழக அரசு, உலகமயச் சூழலில் ஆண்டுக்கு 20 லட்சம் வேலை வாய்ப்பு உருவாக்குவது சாத்தியமா?

2013 - 2014ல் உருவாக்கப் பட்ட வேலை வாய்ப்புக்கள் 17,978. தற்போது மொத்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கையே 18,81,500 என்று தமிழக அரசு தரும் விவரம் சொல்லும்போது, ஆண்டுக்கு 20 லட்சம் பயிற்சியாளர்கள் உருவாக்குவது என்ற அறிவிப்பே, கேலிக்குரியது.

வருடாந்திர தொழில் கணக்கெடுப்பின் 2011 - 2012 விவரங்கள்படி தமிழ்நாட்டின் தொழிலாளர் எண்ணிக்கை 19,40,819. 2014ல் தமிழக அரசு தரும் விவரங்கள்படி தமிழ்நாட்டில் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இன்றைய நிலைமை இது என்றால் நாளை, 20 லட்சம் எங்கிருந்து வரும்? அவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவது பற்றி 2023 தொலைநோக்குத் திட்டம் எதுவும் சொல்லவில்லை.இந்த அறிவிப்புகள் வெறும் கண்கட்டு வித்தைகள்.

அம்மா திறன் மற்றும் வேலை வாய்ப்புத் திட்டத்திலேயே, 25,000 பேருக்கு வேலை நிலைமைகள் எப்படி இருக்கும் என்பதை திட்ட அறிவிப்பு சொல்லும் ஊதியத்தில் இருந்து புரிந்துகொள்ளலாம். இதற்கும் தமிழ்நாட்டி லேயே முன்னுதாரணமும் இருக்கிறது.

2012 நவம்பரில் அறிவிக்கப்பட்டு, 2014 பிப்ரவரியில், காவல்துறையினருக்கு உதவ, தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை அமைக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இருந்து 10,500 பேர் தேர்வுகள் கடந்து மார்ச் மாதம் பணிக்கமர்த்தப்பட்டார்கள். இவர்கள் காவல்துறையினருக்கு உதவி செய்வார்கள், அவர்களைப் போலவே அக்கம்பக்கமாக அவர்கள் ஈடுபடும் அதே பணிகளில் ஈடுபடுவார்கள் என்றாலும் இந்த 10,500 பேர் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் அல்ல. காவல்துறையில் அரசே ஏற்பாடு செய்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்று இவர்களை அழைக்க முடியும்.

இவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.7,500 என்று அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கு இந்த ஊதியம் குறிப்பிட்ட நாளில் முறையாக வழங்கப்படுவதில்லை. வார விடுமுறையோ, மருத்துவ விடுப்போ இல்லை. காவல் துறையினருக்கு கிடைக்கும் வேறெந்த சலுகையும் இவர்களுக்கு இல்லை. இந்தப் பணியாளர்களில் ஒருவர் இரண்டு நாட்கள் பணிக்கு வராததால் ஊதியத்தில் ரூ.500 பிடித்தம் செய்தார்களாம். (தி இந்து, 23.07.2014).

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, காவல்துறையை வலுப்படுத்துவது என்றெல்லாம் சொல்லி இந்த 10,500 இளைஞர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டார்கள். காவல்துறை, அரசுப் பணி என்ற கனவுகளோடு பணிக்குச் சேர்ந்த அந்த இளைஞர்களில், சென்னையில் மட்டும் 2,000 பேர் இது வரை வேலையை விட்டுச் சென்றுவிட்டனர். அவர்கள் பணி நிலைமைகள் இப்படியே தொடர்ந்தால் மீதமிருப்பவர்களும் இதே முடிவுக்குத் தள்ளப்படலாம். வேலை தரப்பட்டாகிவிட்டது என்று தமிழக அரசு கணக்கு காட்டுகிற அந்த 10,500 பேரில் இன்று 2,000 பேர் வேலையில்லா இளைஞர்கள். தமிழக அரசின் மொழியில் சொல்வதானால் வேலை நாடுநர்கள். இந்த வேலை நாடுநர்கள் கணக்கு மீண்டும் வேலை வாய்ப்பக கணக்குகளில் வருமா என்பது கேள்வி.

இவர்கள் நிலைமைகளை, இப்போது அறிவிக்கப்படுகிற 25,000த்துடனும், 10,000த்துடனும் ஒப்பிட்டுப் பார்த்தால், 6 மாத காலத்துக்குப் பிறகு அந்த 25,000 இளைஞர்களுக்கும், 10,000 இளைஞர்களுக்கும் எந்த நேரமும் இருட்டு காத்திருக்கும் என்று சொல்லலாம்.

இந்த விசயத்தில் நல்ல காலம் வந்துவிடும் என்று மோடி போல் ஆருடம் சொல்ல முடியாது. நோக்கியா, திருபெரும்புதூரின் பிற ஆலைகளின் தொழிலாளர்கள் தொடர்பான தமிழ்நாட்டின் அனுபவம் நமக்கு அது போன்ற நம்பிக்கை தருவதாக இல்லை. மாயமானைக் காட்டுவதில் பயனில்லை.திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்குச் சாவடி மட்டங்களில் அமைப்பு நிலை பற்றிய ஆய்வு

கட்சியின் மத்திய கமிட்டி வழிகாட்டுதல் படி, திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 2014 மக்களவை தேர்தல்களில் 10க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றுள்ள வாக்குச்சாவடிகளில் கட்சி அமைப்பு நிலவரம் பற்றி புதுக்கோட்டை மாவட்ட கமிட்டி ஆய்வு மேற்கொண்டது. ஆய்வின் அடிப்படையில் பின்வரும் விசயங்கள் முன்வைக்கப்படுகின்றன.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் கந்தர்வகோட்டை மற்றும் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் 24 வாக்குச் சாவடிகளில் 10க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றுள்ளோம். இவற்றில் 20 வாக்குச் சாவடிகள் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியிலும் 4 வாக்குச் சாவடிகள் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியிலும் உள்ளன. கந்தர்வகோட்டை வாக்கு விவரங்கள் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி

    கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் பெற்ற மொத்த வாக்குகள் 865. இங்குள்ள 20 வாக்குச் சாவடிகளில் 10 முதல் 89 வாக்குகள் வரை பெற்றுள்ளோம். 7 வாக்குச்சாவடிகளில் 10 முதல் 20 வரை வாக்குகளும், 7 வாக்குச் சாவடிகளில் 21 முதல் 30 வரை வாக்குகளும், 6 வாக்குச் சாவடிகளில் 40 முதல் 89 வரை வாக்குகளும் பெற்றுள்ளோம்.

    55 முதல் 89 வரை வாக்குகள் பெற்ற 4 வாக்குச் சாவடிகளில் அதிமுக, திமுகவுக்கு அடுத்து கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளோம்.

    29 வாக்குகள் பெற்ற 123ஆவது வாக்குச் சாவடியிலும் அதிமுக, திமுகவுக்கு அடுத்து கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளோம்.

    25 வாக்குகள் பெற்றுள்ள 99ஆவது வாக்குச் சாவடியில் அதிமுக, திமுகவுக்கு அடுத்து கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளோம். காங்கிரசும் இங்கு 25 வாக்குகளே பெற்றுள்ளது.

49, 40 வாக்குகள் பெற்ற 157 மற்றும் 190ஆவது வாக்குச் சாவடிகளில் அதிமுக, திமுக, தேமுதிகவுக்கு அடுத்து கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளோம்.

    10க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றுள்ள இந்த 20 வாக்குச்சாவடிகள் உள்ள பகுதிகளில் 11 உள்ளூர் கமிட்டிகளும் 38 கட்சிக் கிளைகளும் உள்ளன. இங்குள்ள மொத்த கட்சி உறுப்பினர் எண்ணிக்கை 546. (இவர்களில் 45 பேர் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பதால் அவர்களுக்கு வாக்குகள் இல்லை). பெற்றுள்ள வாக்குகள் 647. இந்த 20 வாக்குச் சாவடிகளில் 3 வாக்குச் சாவடிகளில் கட்சி உறுப்பினர்கள் இல்லை.

    இந்த 20 வாக்குச் சாவடிகள் உள்ள பகுதிகளில் 1,950 அவிதொச உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 20 வாக்குச் சாவடிகள் உள்ள ஊராட்சிகளில் அவிதொச மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 4,950.

    89 வாக்குகள் பெற்ற வாக்குச் சாவடி எண் 138 பெரியகோட்டையில் உள்ளது; இங்கு 26 கட்சி உறுப்பினர்கள் உள்ளனர். 75 வாக்குகள் பெற்ற வாக்குச் சாவடி எண் 148 சங்கம்விடுதியில் உள்ளது; இங்கு 32 கட்சி உறுப்பினர்கள் உள்ளனர். 68 வாக்குகள் பெற்ற வாக்குச் சாவடி எண் 128 மட்டங்காலில் உள்ளது; இங்கு 40 கட்சி உறுப்பினர்கள் உள்ளனர். 55 வாக்குகள் பெற்ற வாக்குச் சாவடி எண் 195 குளந்திரான்பட்டில் உள்ளது; இங்கு 75 கட்சி உறுப்பினர்கள் உள்ளனர்.

    தேர்தல் நாளன்று இந்த 20 வாக்குச் சாவடிகளிலும் நமது கட்சித் தோழர்கள் சாவடி மட்ட குழு அமைத்திருந்தனர். 5 முதல் 40 பேர் வரை தேர்தல் நாளன்று பணிகளில் ஈடுபட்டனர். மொத்தம் 250 பேர் பணியாற்றினர். பெரியகோட்டையில் நமது தோழர்கள் ஊர்வலமாக வந்து வாக்களித்தனர்.

    இவற்றில் வாக்குச் சாவடி எண் 156, 157 ஆகியவை துவார் கிராமத்தில் வருகின்றன. இந்த வாக்குச்சாவடிகளில் முறையே 14 மற்றும் 49 வாக்குகள் பெற்றுள்ளோம். வாக்குச் சாவடி எண் 156 துவார் வாக்காளர்களுக்கானது. இங்கு கட்சிக் கிளை இல்லை; அவிதொசவில் 200 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.  இந்த வாக்குச் சாவடி ஆண்டிகுளப்பன்பட்டி உள்ளூர் கமிட்டி பகுதிக்கு அருகில் உள்ள பகுதி. இங்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஆண்டிகுளப்பன்பட்டியில் உள்ள கட்சித் தோழர்கள் இங்குள்ள தலித் பிரிவு மக்களுடன் தொடர்ந்து ஊடாடுகின்றனர். இந்தப் பகுதியில் முன்னர் 7 உறுப்பினர்களுடன் ஒரு கிளை இயங்கியது. கிளைப் பொறுப்பாளர்களில் ஒருவர் வெளிநாடு சென்றுவிட்டதாலும் ஒரு பெண் தோழர் திருமணமாகி வேறு பகுதிக்குச் சென்றுவிட்டதாலும் இங்கு அமைப்பு நடவடிக்கைகளை தொடர முடியாமல் போனது. மீதமிருந்த கட்சி உறுப்பினர்கள் ஆண்டிகுளப்பன்பட்டி கிளையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

49 வாக்குகள் பெற்றுள்ள 157ஆவது வாக்குச் சாவடி ஆண்டிகுளப்பம்பட்டி வாக்காளர்களுக்கானது. இந்த வாக்காளர்கள் துவார் சென்றுதான் வாக்களிக்க வேண்டும். ஆண்டிகுளப்பம்பட்டி மக்களுக்கான ரேசன் கடையும் துவாரில்தான் உள்ளது.

கட்சி உறுப்பினர் யாரும் இல்லாத, அவிதொச உறுப்பினர்கள் 100 பேர் இருக்கிற புதுநகர் 108ஆவது வாக்குச்சாவடியில் வருகிறது. இங்கு 21 வாக்குகள் பெற்றுள் ளோம். இந்தப் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மட்டும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த வேலைப் பகுதிகளில் இந்த வாக்குச் சாவடிகள் தவிர இன்னும் ஓரிரு வாக்குச் சாவடிகள் உள்ளன. அவற்றில் இந்த வேலைப் பகுதிகளில் உள்ள பிற கட்சி உறுப்பினர்கள், வெகுமக்கள் வாக்குகள் பெற்றுள்ளோம்.

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி

புதுக்கோட்டை சட்ட மன்ற தொகுதியில் நான்கு வாக்குச் சாவடிகளில் 12 முதல் 29 வரை வாக்குகள் பெற்றுள்ளோம்.

இந்த நான்கு வாக்குச் சாவடிகளில் 3 கிளைகளும் 1 உள்ளூர் கமிட்டியும் இயங்கு கின்றன.

கணபதிபுரத்தில் (வாக்குச் சாவடி எண் 163) 14 கட்சி உறுப்பினர்கள், கருப்புடையான்பட்டியில் (வாக்குச் சாவடி எண் 159) 8 கட்சி உறுப்பினர்கள், ஆத்தியடிப் பட்டியில் (வாக்குச் சாவடி எண் 184) 3 கட்சி உறுப்பினர் கள் உள்ளனர். கடுக்காகாடு பகுதியில் (வாக்குச் சாவடி எண் 203) கட்சி உறுப்பினர்கள் இல்லை.

25 கட்சி உறுப்பினர்கள் உள்ள இந்த 4 வாக்குச் சாவடிகளில் மொத்தம் 77 வாக்குகள் பெற்றுள்ளோம்.

200 அவிதொச உறுப்பினர் இந்த 4 வாக்குச் சாவடிகள் எல்லைக்குள் உள்ளனர்.

29 வாக்குகள் பெற்றுள்ள 163ஆவது வாக்குச் சாவடி வருகிற கணபதிபுரம் பகுதியில் 500 அவிதொச உறுப்பினர்கள் உள்ளனர். மற்ற 3 வாக்குச் சாவடிகள் உள்ள பகுதிகளான கருப்புடையான்பட்டி (12 வாக்குகள்), ஆத்தியடிப்பட்டி (14 வாக்குகள்), கடுக்காகாடு (22 வாக்குகள்) ஆகியவற்றில் வெகுமக்கள் உறுப்பினர்கள் இல்லை.

கடுக்காகாடு, ஆத்தியடிப்பட்டி, துத்தான் கரைவிடுதி ஆகிய விடுதலை சிறுத்தைகள் செல்வாக்குள்ள பகுதிகளில் நாம் அவர்களின் சில வாக்குகளையும் பெற்றுள்ளோம்.

தேர்தல் வேலைகளில் மொத்தம் 55 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்களில் 28 பேர் புதிதாக வந்த இளைஞர்கள்.
தொகுத்துச் சொன்னால்,

10க்கு மேல் வாக்குகள் பெற்றுள்ள இந்த 24 வாக்குச் சாவடிகளிலும் வாக்குச்சாவடி மட்ட குழுக்கள் இயங்கின.

24 வாக்குச் சாவடிகளில் 20 வாக்குச் சாவடிகளில் கட்சி அமைப்பு இயங்குகிறது.

24 வாக்குச் சாவடிகளில் 13 வாக்குச் சாவடிகளில் அவிதொச இயங்குகிறது.

24 வாக்குச் சாவடிகளில் 11 வாக்குச் சாவடிகளில் பெண்கள் பிரச்சாரம் நடந்தது.

24 வாக்குச் சாவடிகளிலும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

24 வாக்குச் சாவடிகளிலும் இளைஞர்கள் வேலை செய்தனர். அவர்களது அசைவு உற்சாகம் தந்தது. இளைஞர்களை தொட்டது சாதகமானது.

நமது வேலை 24 வாக்குச் சாவடிகளிலும் குறிப்பாக தலித் பகுதியில் நடந்தது.

தேர்தல் பிரச்சாரம் செய்த தலித் பகுதிகளில், பிற கட்சிகளின், குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் இளைஞர்கள் சிலரை ஈர்க்க முடிந்தது.

ஊராட்சி மட்டத்தில் எந்த வாக்குச் சாவடியிலும் 100களில் வாக்குகள் பெறும் நிலையை நாம் எட்டவில்லை என்பது தெளிவு. அப்படி ஒரு சமூக, வர்க்க, மக்கள் திரள் செல்வாக்கை பெறும் திசையில் வேலைகள் செலுத்தப்பட வேண்டிய அவசியத்தை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

பல வருடங்கள் கட்சி செயல்பட்டும், நாம் சட்டமன்ற தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலில் ஆகக் குறைந்த வாக்குகள் பெற்றுள்ளோம் என்பதை கூருணர்வோடு புரிந்து கொண்ட பின்புதான் வாக்குச் சாவடி மட்ட ஆய்வை மேற்கொண்டோம்.

ஆய்வு முடிவுகள் நமக்கு எந்த சுயதிருப்தியும் தரவில்லை. சிறிய அளவில் குறைந்த வீச்சில், ஆனால், திட்டமிட்ட விதத்தில் அமைப்புரீதியாக செயல்பட்டதற்கே விளைவுகள் கிடைக்கும்போது, முறையாக, தொடர்ச்சியாக அமைப்பாக்கப்பட்ட விதத்தில், அரசியல் முனைப்புடன் மக்கள் திரள் பணிகளை மேற்கொண்டால், விளைவுகளும் அதற்கேற்ப அமையும் என்பதையே ஆய்வு முடிவுகள் புலப்படுத்துகின்றன.
 

டாஸ்மாக் கடைகளை மூடு !

டாஸ்மாக் மதுவால், 50 பெண்கள் கணவனை இழந்த கச்சிராயநத்தம் கிராமத்தில் உள்ள சாராயக் கடையை அப்புறப்படுத்த வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு, வட்டியில்லாக் கடன் கேட்டும், அரசு உயர்நிலைப்பள்ளி, 24 மணி நேரமும் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கக் கோரியும், தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் 300 நாட்கள் வேலை, நாளொன்றுக்கு ரூ.300 கூலி வழங்கக் கோரியும் ஜெயங்கொண்டத்தில் ஜூலை 15 அன்று, இகக(மாலெ), புஇக, அவிதொச ஆர்ப்பாட்டம் நடத்தின.

அங்குள்ள ஆரூரான் எரிசாராய ஆலையை அப்புறப்படுத்த வேண்டுமென்றும் ஆண்டிமடம் ஒன்றியம் பெரிய கருக்கை கிராமத்தில் ஊரக வேலை வாய்ப்பு திட்ட கூலி பட்டுவாடா செய்யாததைக் கண்டித்தும், பெரிய கருக்கையில் தனியார் வசம் உள்ள முத்துமாரியம்மன் மற்றும் வீரனார் கோயிலுக்கு சொந்தமான இடத்தை மீட்க வலியுறுத்தியும் தோழர்கள் அய்யப்பன் மற்றும் ஜெகந்நாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இகக(மாலெ) வட்ட அமைப்பாளர் தோழர் செங்குட்டுவன், மாவட்ட அமைப்பாளர் தோழர் சாகுல் ஹமீது, தோழர் கவ்னர் உரையாற்றினர்.இஸ்ரேல் நடத்தும் படுகொலைகளும் குற்றங்களும் நிறுத்தப்பட வேண்டும்! பாலஸ்தீனத்தை விட்டு இஸ்ரேல் வெளியேற வேண்டும்!

 ‘எனது அரசாங்கம் பெரிதும் காரணமான, நானே மறைமுகமாக ஆதரித்துக் கொண்டி ருக்கிற ஓர் இனப்படுகொலையின் நடுவே நான் இருந்துகொண்டிருக்கிறேன்’ என்று அமெரிக்க இளைஞர் ரச்சேல் கோர்ரி கூறினார். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க இவர் பாலஸ்தீனம் சென்றபோது இஸ்ரேலிய புல்டோசரால் 16.03.2003 அன்று நசுக்கிக் கொல்லப்பட்டார். 2003 பிப்ரவரில் ரச்சேல் சொன்னது இன்றும் 11 ஆண்டுகள் ஆனபின்பும் தொடர்கிறது.

2008 - 2009 புத்தாண்டு பிறந்தபோது 500 பெண்கள், குழந்தைகள் உட்பட 1100 பாலஸ்தீனர்கள் காசா மீது இஸ்ரேல் நடத்திய கொடூரக் குண்டு வீச்சில் கொல்லப்பட்டார்கள். மசூதிகள், அகதிகள் முகாம், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் என்று குறி வைத்து குண்டுகள் வீசியது இஸ்ரேல். 

இப்போது 2014ல் இன்னும் மோசமாக பாலஸ்தீனத்தில் இஸ்ரேல்  இனப்படுகொலை நடத்திக்கொண்டிருக்கிறது. காஸா மீது இஸ்ரேல் நடத்திவரும் தொடர் தாக்குதலில் இதுவரை 1000க்கும் மேற்பட்ட பாலஸ்தீன அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் உள்ள காசாவையும் வெஸ்ட் பாங்க் பகுதியையும் பல பத்தாண்டுகளுக்கும் மேலாக சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துகொண்டு, அந்தப் பகுதிகளுக்கு பொருளாதாரத் தடை விதித்து, அந்தப் பகுதிகளுக்கு எரிபொருள், மின்சாரம், ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றை தடுத்து, மக்களின் நடமாட்டத்தை முடக்கியது மட்டுமின்றி தண்ணீர் விநியோகம், சுகாதாரம், போக்குவரத்தையும் முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

காசா ஒரு திறந்தவெளிச் சிறை என்றார் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன். நம் வார்த்தைகளில் சொல்வதென்றால், காசா ஒரு மிகப்பெரிய ஜாலியன் வாலாபாக். அங்கே உணவுக்காக, தண்ணீருக்காக, மருந்துக்காகத் தவித்துக் கொண்டு இருக்கும் மக்கள் மீது அவ்வப்போது குண்டுகள் போடப்படுகின்றன.

வெஸ்ட் பாங்க்கில் 3 யூதச் சிறுவர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். இச்செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. ஆனால், அந்த மூவரின் கொலைக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்துத் தண்டிப்பதற்குப் பதிலாக இஸ்ரேல் இதைச் சாக்காக வைத்துக் கொண்டு பாலஸ்தீன மக்களைக் கொன்று குவித்து வருகிறது. பாலஸ்தீன இளைஞர்களைக் குறி வைத்துத் தாக்கியது இஸ்ரேல். ஓர் இளைஞர் உயிரோடு எரிக்கப்பட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் படுகொலை செய்வதை ‘புல் அறுப்பது’ என்று இஸ்ரேலிய அடிப்படைவாதிகள் 2012ல் கூறினார்கள். அந்தப் ‘புல் அறுப்பு’ படுகொலைக்கு இந்த ஆண்டு 3 யூதச் சிறுவர் கள் கடத்திக் கொல்லப்பட்டதைச் சாக்காக்கிக் கொண்டுள்ளது இஸ்ரேல். இஸ்ரேல் நடத்தும் மனிதத்தன்மையற்ற இனப்படுகொலைக்கு இது மாதிரி பெயர்கள் வைத்து அதை நியாயப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள் இஸ்ரேல் அரசியல்வாதிகள்.

1969ல் இஸ்ரேலியப் பிரதமராக இருந்த கோல்டா மேயர் பாலஸ்தீனர்கள் என்று இருந்ததே இல்லை என்றார். 1982ல் பிரதமர் மேனாகெம் பெகின், பாலஸ்தீனர்களை, இரண்டு கால்களால் நடக்கும் விலங்குகள் என்றார். 1988ல் மற்றொரு பிரதமர் யிட்சாக் சமீர், பாலஸ்தீனர்கள் வெட்டுக்கிளிகளை அழிப்பதுபோல் அழிக்கப்படுவார்கள் என்றார். இப்போதைய பிரதமர் நெதன்யாகு, உலக நாடுகள் எங்களைத் தடுத்து நிறுத்த முடியாது, நாங்கள் தொடர்ந்து செல்வோம் (கொல்வோம்) என்று அறிவிக்கிறார்.

உலகின் பெரிய நாடுகள் அனைத்தும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. வீடுகள், மருத்துவமனைகள், பொதுமக்கள் வாழ்விடங்கள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றன. பாலஸ்தீனத்தில் கொல்லப்பட்டுள்ளவர்களில் 80%க்கும் மேற்பட்டவர்கள் பொதுமக்கள் என்று சொல்லும் அய்க்கிய நாடுகள் சபையே காசாவின் மீது நடத்தப்படும் தாக்குதலைத் தடுத்து நிறுத்த உருப்படியான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஹமாஸ்கள் மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்களில் ஒளிந்து கொண்டிருப்பதால்தான் நாங்கள் அங்கே குண்டுகள் வீசுகிறோம் என்று தனது அநியாயச் செயலை நியாயப்படுத்துகிறது இஸ்ரேல். இஸ்ரேல் அரசும் அய்க்கிய அமெரிக்காவும் இஸ்ரேல்தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இஸ்ரேல் மக்கள் உயிர் வாழும் உரிமைக்காகவே தங்களைத் தற்காத்துக் கொள்ளவே தாக்குதல் நடத்துகிறார்கள் என்றும் திரும்பத் திரும்பப் பிரச்சாரம் செய்கின்றன.

இது அப்பட்டமான பொய். இஸ்ரேலைப் பொறுத்தவரை பாலஸ்தீனர் ஒவ்வொருவரும் தீவிரவாதி. யூதர் இல்ல கட்சி (Jewish Home Party)யைச் சேர்ந்த இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர் அயலெட் ஷகீத், குட்டிப் பாம்பு களைப் பெற்றெடுக்கும் பாலஸ்தீனப் பெண்களை (அம்மாக்களை) வெட்டித் தள்ள வேண்டும் வெளிப்படையாக அறிக்கை விடுகிறார். இஸ்ரேல் பல்கலைக்கழகம் ஒன்றைச் சேர்ந்த அரபு இலக்கிய ஆசிரியர் மொர்டாசாய் கேதார், பாலஸ்தீன தாய்மார்களையும் சகோதரிகளையும் வன்புணர்ச்சி செய்தால் மட்டுமே தீவிரவாதிகளைத் தடுக்கமுடியும் என்கிறார்.

ஹமாஸின் தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்துகிறது, இரண்டு பக்கமும் தவறு இருக்கிறது, இந்தியா எந்தப் பக்கமும் இருக்கக் கூடாது என்று இஸ்ரேலுக்காக வக்காலத்து வாங்குகிறார்கள் இந்தியாவில் இஸ்ரேலுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள். எது உண்மை? இஸ்ரேல் பக்கம் இழப்பு என்பது மிகச் சொற்பமே.ஆனால், பாலஸ்தீன் பக்கம் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகிறார்கள். அதில் பெரும்பாலும் குழந்தைகள். இஸ்ரேல் பாலஸ்தீனர்களை வீட்டை விட்டுவிட்டு ஓடு என்று எச்சரிக்கிறது. தங்கள் இடத்தில் தங்கியிருக்கும் பாலஸ்தீனர்களை தீவிரவாதிகள் என்று சொல்லி கொல்கிறது இஸ்ரேல் படை. பாலஸ்தீனியர்கள் எங்கு போய் ஓடி ஓளிவார்கள்?

ஹமாஸ்களை தீவிரவாதிகள் என்றும் அவர்கள்தான் இந்தத் தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள் என்று சொல்லும் இஸ்ரேலும் மேற்குலகு நாடுகளும், ஹமாஸ்களுக்கு முன்பே சியோனிஸ்ட்டுகள் தங்களின் ‘விரிவாக்கம் மற்றும் வெளியேற்றுதல்’ திட்டத்தைத் தொடங்கி விட்டார்கள் என்பதை வசதியாக மறந்துவிடுகின்றன. 1947 அய்க்கிய நாடுகள் சபை ஆணை பாலஸ்தீனத்தில் 55%அய் இஸ்ரேலுக்குக் கொடுத்தது. ஆனால், இஸ்ரேல் அதோடு நிற்கத் தயாராக இல்லை. தனது ராணுவ பலத்தால் 78% பகுதியை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டது. அதற்குப் பிறகும் இஸ்ரேலுக்கு திருப்தி வரவில்லை.

மத்திய தரைக்கடல் பகுதியில் அமெரிக்க நலன்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருப்பது இஸ்ரேல். அய்க்கிய அமெரிக்க ஏகாதியத்தியத்தின் உலக மேலாதிக்கத்திற்கு மத்திய கிழக்குப் பகுதியில் தன் அடியாளாக இஸ்ரேலை அய்க்கிய அமெரிக்கா வைத்துள்ளது. இஸ்ரேல் இருந்திருக்கவில்லை என்றால், அய்க்கிய அமெரிக்க தொழில் துறை புதிதாக அதைக் கண்டுபிடிக்க வேண்டியதிருந்திருக்கும் என்று கூறினார் இஸ்ரேலிய எழுத்தாளர் யூரி அவ்னரி.

ஆகவேதான் இஸ்ரேலின் வெளிநாட்டு உதவி நிதியில் மூன்றில் ஒரு பங்கு அய்க்கிய அமெரிக்காவினுடையது. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக, ஆண்டுக்கு 3 பில்லியன் டாலர் அய்க்கிய அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கி வருகிறது. அரசியல், ராஜதந்திரம், ராணுவம், பொருளாதாரம் என அனைத்திலும் இஸ்ரேலுக்கு அய்க்கிய அமெரிக்கா உதவுகிறது. இஸ்ரேலுக்கு பொருளாதார உதவி மட்டுமின்றி போலீஸ் உதவியும் செய்கிறது அய்க்கிய அமெ ரிக்கா. அய்க்கிய நாடுகள் சபையில் தனக்குள்ள தனித்த அதிகாரத்தைப் (veto power) பயன் படுத்தி இஸ்ரேலின் போர்க் குற்றங்களை நியாயப்படுத்தி, இஸ்ரேலுக்கு எதிரான தடைகளில் இருந்து அதைக் காப்பாற்றுகிறது அய்க்கிய அமெரிக்கா. 

இந்த நிலையில், இஸ்ரேலின் அராஜகம் தொடர்பாக இந்திய அரசாங்கம் வெட்கங்கெட்ட வகையில் அமைதி காப்பது மட்டுமின்றி இரட்டை வேடம் போடுகிறது. பாலஸ்தீன மக்கள் படுகொலை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுத்தது மத்தியில் உள்ள பாஜக அரசு. பின்னர், ராஜ்ய சபா தலைவர் விவாதிக்கலாம் என்றார். ஆனால், இஸ்ரேல் நடவடிக்கையைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் போட இந்திய அரசு மறுத்துவிட்டது. அது இந்தியாவின் நலனுக்கு எதிரானது என்றது. 

இந்திய அரசின் இப்போதைய மவுனம் பாலஸ்தீன மக்கள் போராட்டத்திற்கு இந்தியா அளித்து வந்துள்ள நீண்டகால ஒருமைபாட்டினை கேலிக்குரியதாக்குகிறது. பாலஸ்தீனத்திற்கு இந்தியாவின் ஒருமைப்பாடு, ஆதரவு என்பது காலனியாதிக்கத்தை எதிர்த்த இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அனுபவத்தில் உண்டானதாகும். அதனால்தான் காந்தி உட்பட இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் பாலஸ்தீன போராட்டத்தை எவ்வித தயக்கமும் இல்லாமல் ஆதரித்தனர்.

‘ஆங்கிலேயர்களுக்கு இங்கிலாந்து சொந்தம், பிரஞ்சுக்காரர்களுக்கு பிரான்ஸ் சொந்தம் என்பதுபோல் அரேபியர்களுக்கு பாலஸ்தீனம் சொந்தம்’ என்றார் காந்தி.

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் ஆளும் வர்க்கம் அய்க்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நெருங்கிச் செயல்பட ஆரம்பித்ததில் இருந்து ஒரு விடாபிடியான உறவை இந்தியா இஸ்ரேலுடன் கொண்டுள்ளது. முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் இந்த உறவு கருத்தியல் ரீதியாகவும் வலுப்பெற்றது. இஸ்லாத்திற்கு எதிரான ஒத்த கருத்தில் சியோனிசமும் இந்துத்துவாவும் ஒன்றிணைந்தது. இருந்தபோதிலும் காங்கிரஸ் ஆட்சியிலும் சரி பாஜக ஆட்சியிலும் சரி இஸ்ரேலின் ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் இந்தியாதான் அதன் மிகப் பெரிய வாடிக்கையாளர். அதன் காரணமாகவேதான் இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்குமான உறவு மேலும் வலுப்பெற்றது.

காலனிய ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா, பாலஸ்தீனத்திற்கு இடையிலான பிணைப்பை, பாரம்பரிய வரலாற்றை காவிக் கூட்டத்தினர் மோடி அரசாங்கத்தின் ஆதரவோடு இப்போது அழிக்கப் பார்க்கிறார்கள். இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரை, இந்தியா மற்றும் அருகில் உள்ள தேசிய இனங்களை அடக்கி ஒடுக்குவதன் மூலம் இந்தியத் துணைக் கண்டத்திற்கு ஓர் இஸ்ரேல் முகம் கொடுக்கப் பார்க்கிறார்கள்.

இஸ்ரேலின் கொடூரச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் தூதரைத் தன் நாட்டில் இருந்து வெளியேற்றினார் வெனிசுலா முன்னாள் அதிபர், இறந்துபோன, ஹூயுகோ சாவேஸ். ஆனால், வெட்கக்கேடு என்னவென்றால், இந்தியாவின் அய்முகூ அரசின் பிரதமர் மன்மோகன் சிங் இஸ்ரேலை ஒடுக்குமுறை அரசு என்று வெளிப்படையாகக் குற்றம் சுமத்தக்கூட மறுத்துவிட்டார். அதே நிலையைத்தான் மோடி அரசும் எடுக்கிறது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே நடுநிலை வகிக்க வேண்டும் என்கிறது மோடி அரசு.

இந்திய சுதந்திரப் போராட்டத்தை உயர்த்திப் பிடிக்கும் இந்தியர்கள் அனைவரும் இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்படும் நாடுகளில் உள்ள மக்களுடனும் உலகில் விடுதலையை விரும்பும் அனைவருடன் ஒன்றிணைந்து ஏகாதி பத்தியத்தையும் இஸ்ரேலின் பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலையும் ஆக்கிரமிப்பையும் எதிர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம். மன சாட்சிப்படி இந்திய அரசு பாலஸ்தீனத்துடன் நிற்பதற்கு மாறாக காலனிய ஆதிக்கத்திற்கு எதிரான இந்திய மற்றும் பாலஸ்தீன சுதந்திரப் போராட்ட பாரம்பரியத்தை அழிக்க முயற்சிப்பதை இந்திய மக்கள் அனுமதிக்கக் கூடாது.

இந்தியாவில் உள்ள ஜனநாயகவாதிகளும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களும் பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தச் செய்யவும் இஸ்ரேலைக் கண்டிக்கவும் இந்திய அரசை வலியுறுத்த வேண்டும். இஸ்ரேலுடன் நடக்கும் ஆயுத வியாபாரத்தைக் கைவிட்டு விட்டு பாலஸ்தீன மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க, அதற்காக அய்க்கிய நாடுகள் சபையை தலையிடச் செய்ய இந்திய அரசை நாம் வலியுறுத்த வேண்டும்.

இன்று இனவெறிக்கு எதிராக, காலனிய ஆதிக்கத்திற்கெதிராக, ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடைபெறும் மிகப்பெரிய போராட்டம் பாலஸ்தீனர்களின் போராட்டம்தான். ஒரு காலத்தில் ஹிட்லரின் நாசிச இனவெறியால் பாதிக்கப்பட்ட, படுகொலைக்குள்ளான யூத மக்கள் இப்போது அதே போன்றதொரு இனவெறிப் படுகொலைகளை நடத்திக் கொண்டிருப்பது விந்தை முரண். இந்த இனவெறிப் படுகொலையை முடிவுக்குக் கொண்டுவர உலகத்தின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப வேண்டியது இன்று நமது தலையாயக் கடமையாகும்.

(லிபரேசன், 2014 ஆகஸ்ட்
தமிழில்: ஜி.ரமேஷ்)வேட்டி பாரம்பரியத்தை பாதுகாப்பவர்கள் வேட்டி அணிபவர்களை பாதுகாப்பார்களா?

 ‘காந்தியடிகள் அணிந்தது வேட்டி, பாரதி அணிந்தது வேட்டி, ரஷ்யாவில் காமராஜர் துணிச்சலுடன் அணிந்தது வேட்டி, அண்ணா துரை அமெரிக்கா சென்றபோது அணிந்தது வேட்டி, எம்ஜிஆரின் அடையாளமும் வேட்டி, நமது பாரம்பரியமான உடையான வேட்டிக்கு குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி...’எம்சிஆர் வேட்டிகள் மற்றும் ஷர்ட்டுகள். சந்தைதான் எவ்வளவு சாதுரியமானது! எதையும் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது. வேட்டி பிரச்சனையை விளம்பரமாக்கி தனது வேட்டிச் சந்தையை தக்கவைத்துக் கொள்ளப் பார்க்கிறது எம்சிஆர் வேட்டிகள் மற்றும் ஷர்ட்டுகள் நிறுவனம்.

வேட்டி தமிழ் பண்பாடு, அதை எப்படி தடை செய்யலாம் என்று சட்டமன்றம் வரை குரல் எழுந்து, தடைக்குத் தடை விதிக்க சட்டம் என முடிவாகிவிட்டது. தமிழ் பண்பாட்டின் அனைத்து நற்கூறுகளும், அப்படி எதுவும் இருக்கும்பட்சம், காக்கப்பட வேண்டியது மிக மிக அவசியமே. இன்றும் என்றும் பாதுகாக்கலாம்.

அன்று வேட்டி அணிபவர்கள் இந்திய அடிமைகள். ஆண்டான்கள் புழங்கும் இடத்தில் அடிமைகளுக்கு இடமிருப்பதில்லை. அதனால், ஆங்கிலேயர்கள் தடை செய்தார்கள். இன்று வேட்டி அணிபவர்கள் யார்? சதுரங்க வேட்டை திரைப்படத்தில் ஒரு வசனம்... ‘வேட்டி கட்டினப்புறம், யாரையும் எப்படியும் ஏமாத்தலாம்னு ஒரு தைரியம் வருதில்ல...?’ இந்த வசனத்துக்கு எதிர்ப்பு ஏதும் எழவில்லை.

தமிழ் நாட்டின் அனுபவம், கேள்வி எழாமல்  இருக்கக் காரணமாக இருக்கலாம். வேட்டி அணிபவர்கள் எல்லாம் ஏமாற்றுக்காரர்கள் அல்ல, ஏமாற்றுக்காரர்கள் வேட்டி அணிகிறார்கள் என்று வைத்துக் கொண்டால், வெள்ளை, சொள்ளைக்காரர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்று பொதுப் புத்தியில் எப்படியோ படிந்திருப்பது, இன்றைய தமிழ் பண்பாட்டின் ஒரு பகுதி என்பதை நாம் மறுத்துவிட முடியாது என்றே தோன்றுகிறது. தமிழக சட்டமன்றம் ஏற்படுத்துகிற பாதிப்பாகக் கூட இது இருக்கலாம். (இன்று அங்கு சேலை கட்டியவர்களும் இருக்கிறார்கள். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி மட்டும்தான் வேறுவித உடை அணிகிறார். உடையை வைத்து யாரையும் மதிப்பிட முடியாது என்பதை நமது சட்டமன்றத்தை விட வேறெது எளிதாக விளக்கிவிட முடியும்?)

நீதிபதி அரிபரந்தாமன் போன்றவர்கள் அரிதாகவே வேட்டி பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டின் கிராமப்புற வறியவர்கள் வேட்டிதான் இன்றும் பயன்படுத்துகிறார்கள். பேண்ட், சட்டை அவர்கள் பொருளாதாரத்தில் இருந்து சற்று தூரத்தில் இருக்கிறது. மிகவும் மலிவானது என்றால் கூட, ஒரு பேண்ட், ஒரு சட்டைக்கு துணி வாங்க குறைந்தது ரூ.400 வேண்டும். அதை தைக்க இன்னும் ஒரு ரூ.200 வேண்டும்.இந்தத் தொகையில் அவர்கள் ஒரு மாத அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வாங்கிவிடுவார்கள். வேட்டி வாங்கினால், இன்னும் சிக்கனமாக முடியும். தையல் செலவு மிச்சம். ஆக, வேட்டி அணியும் தமிழர்கள் பண்பாடு அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டுமானால், இப்போது சட்டமன்றத்தில் சொல்லப்பட்ட சட்டம் மட்டும் போதாது. வேட்டியை மட்டும் தனியாக பாதுகாக்க முடியாது. தமிழ்நாட்டின் ஏகப்பெரும்பான்மை வறிய மக்களை பாதுகாக்க வேண்டும். வேட்டி நெய்யும் நெசவாளர்களை பாதுகாக்க வேண்டும். இலவச வேட்டி, சேலைத் திட்டத்தை கோஆப்டெக்ஸ் மூலம்தான் அமல்படுத்த வேண்டும் என்று அந்த ஊழியர்கள் வலியுறுத்துகிறார்கள். அவர்களையும் பாதுகாக்க வேண்டும். அவர்கள் எல்லாம் அழிந்துவிட்டால் கூடவே வேட்டி அணியும் தமிழர்கள் பண்பாடும் அழிந்துவிடும்.

ஆலைகளில் தொழிலாளர்களுக்கு சீருடையாக பேண்ட், சட்டை தருகிற நிர்வாகங்கள், தையல் செலவுக்கும் ஒரு தொகை தர வேண்டும். அதனால்தான், தமிழக அரசு இலவச வேட்டி, சேலை தருகிறது. இலவச பேண்ட் என்றால், தையல் கூலியும் சேர்த்துத் தர வேண்டும். நல்லது. இலவச வேட்டி தந்தாகிவிட்டது. சட்டை...? வறிய பிரிவு ஆண்கள், சட்டை இல்லாமல் வாழ்க்கையை கழித்துவிடுகிறார்கள்.அக்கம்பக்கம் கடைகளுக்குச் செல்லும்போது கூட சட்டை பற்றி பெரிதாகக் கவலைப்படுவதில்லை. அதற்கும் அப்பால் எங்காவது வெளியில் போனால்தான் சட்டை வேண்டும். திருவிழா, பண்டிகை நாட்களில் மட்டும் அது நடக்கும். எப்படியோ சமாளிக்கிறார்கள்.

பெண்களுக்கு சேலை மட்டும் தருகிறார்களே, ரவிக்கை...? வறிய குடும்பத்து பெண்கள் ரவிக்கை அணிய வேண்டியதில்லை என்று தமிழக அரசு கருதுகிறதா? கீழ்ச்சாதி பெண்கள் தான் ரவிக்கை இன்றி இருந்தார்கள். தோள் சீலைப் போராட்டம் கண்ட மாநிலம் அல்லவா இது? பெண்கள் உடை பற்றி தமிழக அரசின் பார்வையில் அடிப்படை கோளாறு இருப்பதாக அல்லவா தெரிகிறது?

உழைக்கும் மக்களில் பெரும்பான்மையினர் இடுப்பில் கோவணம் மட்டும் கட்டிக் கொண்டு கடுமையாக உழைக்கும் நிலைதான் தமிழகத்தில் நிலவியது. இந்தப் பாரம்பரியத்தை மீட்க வேண்டும் என்று நிச்சயம் யாரும் சொல்ல மாட்டார்கள்.

மவுலிவாக்கம், உப்பரபாளையம் கட்டிட விபத்துகளில் பலியான தொழிலாளர்கள் லுங்கி அணிந்திருந்தார்கள். பெரும்பாலும் கடினமான உடல் உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் லுங்கியே அணிகிறார்கள். தமிழ்நாட்டின் பொதுப் புத்தியில் சமூக விரோதிகளின் உடை என்றே லுங்கி அடையாளம் காணப்படுகிறது.

கலாச்சாரம், பண்பாடு எல்லாம் இருக்கட்டும். நகர்ப்புற உழைக்கும் பிரிவினர்க்கு வேட்டி அணிய முடியாது. மூச்சுத் திணறும் அளவுக்கு கூட்டம் இருக்கும் பேருந்தில் ஏறி இறங்கும் மாணவனோ, தொழிலாளியோ வேட்டியில் வெளியே செல்வதை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. அவர்களுக்கு கிட்டத்தட்ட வேட்டி அணிய நேரம் இருப்பதில்லை. சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. சாமான்ய மனிதர்கள் அணிவதால் பேண்ட், சட்டை மதிப்பிழந்ததாகி விடுகிறதா? அல்லது பேண்ட், சட்டை அணிவதால் அவர்களுக்கு பெருமதிப்புதான் கிடைத்து விடுகிறதா? உழைக்கும் மக்கள் அணியும்போது, பேண்ட் சட்டைக்கு பயன்பாட்டு மதிப்புக்கு மேல் வேறு மதிப்பு இருக்க முடியாது.

உழைக்கும் மக்கள் பிரிவினரை, அவர்கள் அடையாளங்களாக அறியப்படுவனவற்றை இழிவுபடுத்துவதும் தடை செய்வதும் தள்ளி வைப்பதும் இன்று சென்னை கிரிக்கெட் கிளப்பில் புதிதாகத் துவங்கவில்லை. தென்னாப் பிரிக்காவில் வெள்ளைக்கார சிப்பாயால் பழுப்பு நிறத்தவர் என்ற காரணத்தால் புகை வண்டியிலிருந்து காந்தி இறக்கிவிடப்பட்டார். சீனாவில் ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்ட உணவு விடுதிகளில் ‘இங்கே சீனர்களுக்கும், நாய்களுக்கும் இடமில்லை’ என்று அறிவிப்பு பலகையில் எழுதி வைக்கப்பட்டது. தமிழகத்தில் ‘பிராமணாள் கபேக்களில்’ பிற சாதியினருக்கு இடமில்லை என்று எழுதி வைக்கப்பட்டது. (அப்போதுதான் பெரியார் ‘சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி’ என்றார்).

இவற்றை எல்லாம் கடந்து நீண்ட தூரம் வந்த பிறகும் கடந்த கால மிச்சசொச்சங்கள் விரட்டுகின்றன. இன்று ஜனநாயகவாதிபோல் வேட்டிக்கு குரல் கொடுக்கும் ராமதாஸ் தலித் இளைஞர்கள் ஜீன்ஸ், டி சர்ட் போடுவதில் உடன்பாடு இல்லாதவர். (நீங்கள் எங்குதான் நிற்கிறீர்கள் மருத்துவர் அவர்களே?). மருத்துவ கல்லூரிகளில் கண்ணியம் காப்பது என்ற பெயரில் உடைக் கட்டுப்பாடு, பெண்களுக்கு குடும்ப கவுரவத்தைக் காப்பாற்ற பொதுவாக உடைக் கட்டுப்பாடு, பள்ளி மாணவர்களுக்கு நல்ல பழக்க வழக்கம் பெறுவது என்ற பெயரில் நமது தட்பவெப்ப நிலைக்குப் பொருந்தாத உடைக் கட்டுப்பாடு, மேல் சட்டையில்லாதவர்கள் மட்டுமே சில கோயில்களில் சில எல்லைகள் வரை அனுமதிக்கப்படுவது என அனைத்தையும் கேள்விக்குள்ளாக்க, அந்தக் கட்டுப்பாடுகளுக்குப் பின் இருக்கும் சனாதன, ஆதிக்க, மேட்டுக்குடி, ஆணாதிக்க கருத்துக்களை கேள்விக்குள்ளாக்க, வேட்டி பிரச்சனை வாய்ப்பு தந்திருக்கிறது.

வர்க்க சமூகத்தில் அவரவர் இருக்கும் இடம் அவரவர் உடையை தீர்மானிக்கிறது. அவரவர் சமூகத்துக்கு ஆற்றும் பங்கு அவரவர் உடையை தீர்மானிக்கிறது. பண்பாடு, கலாச்சாரம், கருத்து அனைத்தும் பின் அதைச் சுற்றி கட்டமைக்கப்படுகிறது.

கேதன் பரீக், ஹர்ஷத் மேத்தா, சுப்ரதா ராய், சத்யம் நிறுவன உரிமையாளர்கள்... இவர்கள் கோட், சூட் அணிந்தவர்கள். கேடி சகோதரர்கள் இந்தப் பட்டியலில் சேர்வார்கள் போல் தெரிகிறது. கோட், சூட் அணியும் இன்னொரு வகை அம்பானி, டாடா, மிட்டல், ஜின்டல் இப்படி. இவர்கள் மனித ரத்தம் உறிஞ்சும் அட்டைகள். கோட், சூட் அணிபவர்கள் அனைவரும் கனவான்களும் அல்ல; வேட்டியும் லுங்கியும் அணிபவர்கள் சமூக விரோத சக்திகளும் அல்ல.
பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்

பேயரசு செய்தால் சாத்திரங்கள் பிணம் தின்னும். பாரதி சொன்னான். 2014 மே 26க்குப் பிறகு, ஜனநாயகம் என்ற பொருளில், இந்தியா பின்னோக்கிச் செல்வதில் துரிதம் காட்டுவதாகத் தெரிகிறது. இதற்குத்தான் காத்திருந்தோம் என்று பிற்போக்கு சக்திகள் ஆட்டம் போடுகின்றன. நாம் எதிர் அவர்கள், மேல் எதிர் கீழ் என்ற கருத்தாக்கங்கள் வலுப்பெறுகின்றன.

வெறுப்பு அரசியல் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. மதச்சார்பின்மை என்று சொன்னாலே அடிப்பார்களோ, சிறுபான்மையினர் உரிமை என்று வலியுறுத்திப் பேசினால் நாடு கடத்துவார்களோ, இந்து மத பழக்கவழக்கங்கள் பல வழக்கொழிந்தவை என்றால் சிறையில் அடைப்பார்களோ என்று சாமான்ய மக்களை அச்சுறுத்தும் விதம் சில நிகழ்வுகள் கடந்த 60 நாட்களில் நடந்தேறிவிட்டன.

டில்லியில் உள்ள மகாராஷ்டிரா சதன் உணவு விடுதியில், சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் ராஜன் விசாரே, ரமலான் விரதத்தில் இருந்த அர்ஷத் சுபேர் என்ற இசுலாமிய ஊழியருக்கு, சப்பாத்தியை வாயில் பலவந்தமாக திணித்த காட்சி அது போன்ற நிகழ்வுகளில் ஒன்று. திண்ணியத்தில் தலித் ஒருவர் வாயில் மலம் திணித்தது நினைவை தட்டுகிறது. தடுமாறச் செய்கிறது. ராஜன் விசாரே மீது 19 குற்ற வழக்குகள் உள்ளன.

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்தில், நான் அப்படிச் செய்யவே இல்லை என்று அந்த சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சொல்ல முடியவில்லை. அவருடைய அடாவடி வெறிச் செயல் கேமிராவில் பதிவாகி நாடு முழுவதும் ஒளிபரப்பப்பட்டுவிட்டது. எனவே, அவர் இசுலாமியர் என்பது தெரியாது என்று சொல்லப் பார்க்கிறார். அந்த ஊழியர் பெயர் பொறித்த அட்டை அணிந்திருந்தார். தான் விரதத்தில் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். இதற்குப் பிறகும் சிவசேனாவும் சங்பரிவாரும் ஆட்சியில் இருக்கும் பாஜகவும் தந்த துணிச்சலில் அவர் தனது அத்துமீறலை நடத்தியிருக்கிறார். அந்த ஊழியர் இசுலாமியர் இல்லை, அவர் விரதத்தில் இல்லை என்றாலும் நடந்தது அத்துமீறல். சைவ உணவு உண்பவர் வாயில் இறைச்சியைத் திணித்தால் பாஜகவும் சங்பரிவாரும் என்ன செய்வார்கள் என்று தான் பார்க்க விரும்புவதாக ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா நியாயமான கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரச்சனை பெரிதாகி நாடாளுமன்றத்தில் வெடிக்கிறபோதும் மன்னிப்பு கேட்கச் சொல்வது, தண்டனை தொடர்பான நடவடிக்கைகள் அரைகுறையாக நடந்துகொண்டிருக்க, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், கேள்வி எழுப்பும் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து நீங்கள் பாகிஸ்தான் போக வேண்டியதுதான் என்கிறார்.

தெலுங்கானாவின் புதிய நல்லெண்ணத் தூதுவராக சானியா மிர்சா நியமிக்கப்பட்டதற்கு தெலுங்கானா பாஜக சட்டமன்ற உறுப்பினர் பாகிஸ்தான் மருமகளை எப்படி தூதுவராக நியமிக்கலாம் என்று கேள்வி எழுப்பினார். சானியா மிர்சா, நான் இறுதி வரை இந்தியப் பிரஜையே என்று ஊடகங்கள் முன் சத்தியம் செய்ய வேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலைக்குத் தள்ளப்பட்டார்.

மோடியின் தலைமையில் இந்தியா ஒரு இந்து நாடாக மாறும் என்று கோவா சட்ட மன்ற உறுப்பினர் ஒருவர் சொல்ல, இந்தியா ஏற்கனவே இந்து நாடுதான் என்று கோவா துணை முதலமைச்சர் சொல்கிறார். 2002க்குப் பிறகான குஜராத் மாதிரிதான் சரி, அதை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என கர்நாடகா பாஜக தலைவர் சொல்கிறார். நாட்டை மாற்றிக் காட்ட தனக்கு 60 மாதங்கள் தரச் சொல்லிக் கேட்டார் மோடி. மோடியின் புகழ் பாடுபவர்கள் அவ்வளவு நாட்கள் காத்திருக்கத் தயாரில்லை.

இந்து மதம் பற்றி வென்டி டோனிகர் எழுதிய புத்தகம் தடை செய்யப்பட்டு அந்தப் புத்தகத்தின் பிரதிகள் அழிக்கப்பட்டன. இதற்காக நீதிமன்றம் சென்றவர் தீனாநாத் பத்ரா. சிக்ஷா பச்சாவோ அந்தோலன் சமிதி அமைப்பாளர். ஏ.கே.ராமானுஜம் எழுதிய 300 ராமாயணங்கள் கட்டுரைக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்ட வரும் இவரே. இவரது புத்தகங்கள், இன்று குஜராத் பள்ளிகளில் கட்டாயப் பாடங்கள்.

பிறந்த நாளில் மெழுகுவர்த்தியை ஊதுவது மேற்கத்திய கலாச்சாரம், அப்படிச் செய்யக் கூடாது, காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும், இந்திய வரைபடத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூடான், திபெத், பங்களாதேஷ், சிறிலங்கா, பர்மா ஆகிய நாடுகளும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் அவரது புத்தகங்கள், நமது வரலாற்றையும் கலாச்சாரத்தையும் மாணவர்கள் புரிந்துகொள்ள உதவும் என்று குஜராத் மாநில பள்ளி பாடப் புத்தக ஆணையத்தின் இயக்குநர் பரத் பண்டிட் சொல்கிறார். இந்த ஆண்டுதான் இந்த 9 புத்தகங்கள் பாடமுறையில் புகுத்தப்படுகின்றன. குஜராத்தில் மாணவர்கள் மனதில் இந்துத்துவா நஞ்சு திட்டமிட்டு அரசு ஆதரவுடன் திணிக்கப்படுகிறது. கல்வி காவிமயமாக்கத்தில் தீர்மானகரமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்திய வரலாற்றை காவிமயமாக்கவும் புதிய அரசு தயாராகியுள்ளது. இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சிலின் தலைவராக புதிய அரசால் நியமிக்கப்பட்டுள்ள சுதர்சன் ராவ், இந்திய வரலாற்றில் சாதிய முறையின் பாத்திரத்தை உயர்த்திப் பிடிப்பவர். ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட கல்வி அமைப்புக்களில் பொறுப்பில் இருந்தவர்.

பிரச்சனை குஜராத் எல்லையில் நிற்காமல், பெரியார் மண்ணையும் தொடப்பார்க்கிறது. மத்திய அரசு பாடத்திட்டம் உள்ள பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கை கடுமையான எதிர்ப்புக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அலுவல் விவகாரங்கள், இணையதளத்தில் இந்தியில் இருக்க வேண்டும் என்ற புதிய அரசின் ஆணை கடுமையான எதிர்ப்புக்குள்ளான பிறகு இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டும் அது பொருந்தும் என மத்திய அரசு அறிவித்தது. சமஸ்கிருத வாரம் பிராந்திய மொழி வாரமாக மாற்றப்பட வேண்டும் என்று மோடிக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம் இதுபோன்ற மாற்றம் எதையும் கொண்டு வருகிறதா என்று பார்க்க வேண்டும்.

சப்பாத்தி திணிக்கப்பட்ட பிரச்சனையில், அது தவறு என்று அத்வானி சொன்ன பிறகும், சிவசேனா மற்றும் பாஜக தலைவர்கள் நியாயப்படுத்துவது போலவோ, அதற்கு எதிர்நிலையில் இருந்தோ, ஜெயலலிதா இன்னும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

மத்திய அரசின் ரயில்வே மற்றும் பொது நிதிஅறிக்கைகளை தொலைநோக்கு, வளர்ச்சி நோக்கு என்று விவரித்த ஜெயலலிதா, சப்பாத்தி திணிக்கப்பட்ட பிரச்சனையில் எதிர்க்கவில்லை என்றால் அதற்கு ஆதரவு என்றுதான் பொருள். இதில் நடுநிலை என்ற ஒன்று இருக்க முடியாது.விரதம் இருப்பவர்களுடன் விருந்தில் கலந்து கொள்வது இந்த ஆதரவு நிலைக்கு பாவ மன்னிப்பு தந்துவிடாது. ஜெயலலிதாவைப் பொறுத்தவரை, தம்பித்துரை துணை சபாநாயகர் ஆகிவிட்டால் சமஸ்கிருதமய முயற்சி மன்னிக்கப்படலாம். பிள்ளைகள் பதவிக்காக மத்திய அரசை கருணாநிதி விமர்சிக்கவில்லை என்று ஜெயலலிதா இனி துணிந்து சொல்ல முடியாது. பாஜகவின் தமிழகக் கூட்டாளிகள் தங்கள்  வீர வசனங்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இறைதூதனிடம் கையேந்திக் கொண்டிருக்கிறார்கள்.

பொதுவாக நிறைய பேசும் மோடி இந்த எல்லாப் பிரச்சனைகளிலும் மவுனம் காப்பது பற்றி கேள்வி எழுப்பப்படுகிறது. மோடி பேச வேண்டியதெல்லாம் தேர்தல் பிரச்சாரத்திலேயே பேசிவிட்டார். மாமிச ஏற்றுமதி பற்றி, பங்களாதேஷில் இருந்து ஊடுருவுபவர்கள் பற்றி, பாஜகவும் சங் பரிவார் அமைப்புக்களும் என்ன செய்ய வேண்டும் என்று பேசிவிட்டார். சங் பரிவார் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், தேர்தலுக்குப் பிறகு பாகிஸ்தான் செல்ல தயாராகுங்கள் என்று தேர்தல் பிரச்சாரத்திலேயே பாஜக எதிர்ப்பாளர்களிடம் சொன்னார்கள். தேர்தல் பிரச்சாரத்தில் மோடியும் பாஜகவும் சங் பரிவார் அமைப்புக்களும் வலுவாக முன்வைத்த இந்துத்துவ விஷக் கருத்துக்களும் வெறுப்பு அரசியலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இவை மோடியின் ஒப்புதல் இல்லாமல் நடக்கவில்லை. மவுனம் சம்மதம்.

மரபணு மாற்றப் பயிர்களுக்கு அனுமதி, காப்பீட்டில் அந்நிய நேரடி முதலீடு, தானியக் கொள்முதல் விலையில் மாநிலங்கள் தரும் ஊக்கத் தொகை கூடாது, ஒரு கிலோ தக்காளி ரூ.50 விற்கிற காலத்தில் ரூ.47 தாண்டாத வறுமைக் கோடு என கார்ப்பரேட் முன்னேற்ற நடவடிக்கைகள், மக்கள் வாழ்வாதாரம் மீது கடுமையான தொடர் தாக்குதல்கள் நடத்திக் கொண்டே, மறுபுறம் இந்துத்துவா முன்னேற்ற நடவடிக்கைகள் என மோடியின் அணிவகுப்பு வேகமாகச் செல்லப் பார்க்கிறது.

ஒரு புறம் நிலப்பிரபுத்துவ மிச்சசொச்சங்கள் மேலும் வலுப்பெறுவது, மறுபுறம் கார்ப்பரேட் முதலாளித்துவம் முன்னேறிப் பாய்வது என்ற இரட்டை இலக்குகளை இணைப்பதில் குஜராத் மாதிரியை நாடு முழுவதும் பொருத்த மோடியின் ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமான முயற்சிகள் மேற்கொண்டால், மோடியே ஒரு முறை எடுத்துச் சொன்னதுபோல், ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை இருக்கும்.கார்ப்பரேட் மதவெறி தாக்குதலுக்கு எதிராக உறுதியேற்புப் பொதுக் கூட்டம்

மோடி அரசின் கார்ப்பரேட் மதவெறி தாக்குதலுக்கு எதிராக திறன்மிக்க மக்கள் எதிர்ப்பைக் கட்டமைப்போம், மக்கள் கவலைகளை விருப்பங்களை எதிர்பார்ப்புகளை கண்டுகொள்ளாத, தேர்தல் வாக்குதிகளை நிறைவேற்றாத ஜெ. அரசின் சர்வாதிகார ஒடுக்குமுறைகளை எதிர்த்து சிறைகளை நிரப்புவோம் என்ற முழக்கத்துடன் ஜூலை 18 அன்று அம்பத்தூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி. மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் பழ.ஆசைத்தம்பி, மாநகரச் செயலாளர் தோழர்.எஸ்.சேகர் கண்டன உரையாற்றினர்.

AICCTU மாநில சிறப்புத் தலைவர் தோழர் எஸ். ஜவகர் உறுதிமொழியை முன்வைத்தார். AICCTU மாவட்ட தலைவர் தோழர் கே.பழனிவேல் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.


காசா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு கண்டனம்

போர் வேண்டாம், அமைதி வேண்டும், காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும், இந்தியா  இஸ்ரேலை கண்டிக்க வேண்டும், முதலாளித்துவம் வீழட்டும், சோசலிசம் வெல்லட்டும் என்ற  முழக்கங்களுடன் ஜூலை 16 அன்று அம்பத்தூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார். மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலாளர் தோழர் கே.பாரதி, AICCTU மாநில சிறப்புத் தலைவர் தோழர் எஸ்.ஜவகர், மாநிலச் செயலாளர் தோழர் கே.பழனிவேல், கட்சி மாவட்ட, பகுதி, கிளை தலைவர்கள் கலந்துகொண்டனர். மாநகரச் செயலாளர் தோழர் எஸ்.சேகர் தலைமை தாங்கினார்.

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி ஜூலை 16 அன்று நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இகக மாலெ மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.எம்.அந்தோணிமுத்து தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இகக மற்றும் AITUC தோழர்களும் கலந்துகொண்டனர்.


மோடி, ஜெயலலிதா அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக

மோடி அரசின் மக்கள் விரோத நிதிநிலை அறிக்கை, டீசல், பெட்ரோல் விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்தும், அதிமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளான நாளொன்றுக்கு 20 லிட்டர் குடிநீர், 3 சென்ட் வீட்டுமனை, பசுமை வீடு ஆகியவற்றை நிறைவேற்ற வலியுறுத்தியும், கட்டிட விபத்துக்களில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு, கட்டுமானத் தொழிலாளர்கள் உயிர்ப்பலிகளை தடுக்க உரிய நடவடிக்கைகள், பார்வதிபுரத்தில் 50 ஏக்கர் ஆராச்சார் நிலத்தில் வீடற்றவர்களுக்கு வீட்டுமனையும் பசுமை வீடு ஆகியவை கோரியும், குமரி மாவட்ட இகக மாலெ, ஜூலை 11 அன்று 12 மய்யங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது.

இந்த ஆர்ப்பாட்டங்களில் 1100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.எம்.அந்தோணிமுத்து, மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர்கள், AICCTU, புரட்சிகர பெண்கள் கழக தலைவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு தரப்பட்டது.
குமரியில் உள்ள அரசுப் பேருந்துகள் பராமரிக்கப்படாமல் அடிக்கடி விபத்துகள் நடப்பதை தடுக்க வலியுறுத்தி ஜூலை 13 அன்று கள்ளிச்செடி சாத்தும் போராட்டம் நடத்தப்பட்டது. தோழர்கள் எஸ்.எம்.அந்தோணிமுத்து, சுசீலா உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர்.


கரூர் தலித் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஅய்டிக்கு மாற்று

கரூர் கிருஷ்ணராயபுரம், பிச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வினிதா 23.06.2014 அன்று வீடு திரும்பும் வழியில் மிருகத்தனமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.முதலில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை ஏற்புடையதாக இல்லை என்று கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தவுடன் புதிதாக முதல் தகவல் அறிக்கை மீண்டும் பதிவு செய்யப்பட்டது. அந்த ஊர் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். இன்னும் பலரும் பள்ளி செல்லவில்லை.

இகக(மாலெ) கரூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் மு.இராமச்சந்திரன் தலைமையிலான குழு  அந்தக் கிராமத்திற்கு சென்று விசாரணை செய்தது. விசாரணையில் குற்றம் நடந்த இடத்தில் டாஸ்மாக் மது பாட்டில்கள் கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் பாலியல் வன்முறைக் குற்றங்களுக்கு ஒரு காரணியாக இருப்பதும் தெரிகிறது.

குற்றத்தின் கடுமை, குற்றவாளிகளை கைது செய்வதில் ஏற்படும் கால தாமதம், காவல் துறை விசாரணை பற்றி மக்களிடம் ஏற்பட்டிருக்கிற அதிருப்தி ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு வழக்கை சிபிசிஅய்டிக்கு மாற்ற வேண்டும், குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப் படவும், தண்டிக்கப்படவும் வேண்டும், மாணவி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், டாஸ்மாக் சாராய கடைகளை மூட வேண்டும், தலித் மாணவர் அச்சமின்றி பள்ளிக்குச் செல்வதை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இகக(மாலெ) ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இகக(மாலெ) கட்சியினருடன் தமிழ்நாடு மின் வாரிய டாக்டர் அம்பேத்கார் பணியாளர் மற்றும் பொறியாளர் சங்கத்தினரும் திரளாக கலந்து கொண்டனர். தோழர் இராமச்சந்திரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன், தமிழ்நாடு மின் வாரிய டாக்டர் அம்பேத்கார் பணியாளர் மற்றும் பொறியாளர் சங்க மாநில நிர்வாகி தோழர் பால்ராஜ் கண்டன உரையாற்றினர். ஏஅய்சிசிடியு திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் மணிவேல், சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


வேட்டிக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக

சென்னை கிரிக்கெட் கிளப்பில் வேட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக, இன்னும் காலனி ஆதிக்க கட்டுப்பாடுகள் நிலவுவதைக் கண்டித்து, ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம், ஜிம்கானா தொழிலாளர் சங்கம் ஜூலை 14 அன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. உயர்நீதிமன்ற வளாகத்தில் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ‘நீதி வழங்குவதாகச் சொல்லும் நீதிபதிக்கே நீதி இல்லையா?’என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க அமைப்பாளர் வழக்கறிஞர் தோழர் கே.பாரதி தலைமை தாங்கினார்.

அதே நாள் மாலை சென்னை ஜிம்கானா கிளப்பில் ஆடை கட்டுப்பாட்டை கண்டித்தும் அங்குள்ள தொழிலாளர்கள் காலனிய அடிமை முறையில் நடத்தப்படுவதையும், வேலை நீக்கம், இடைக்கால வேலை நீக்கம், போனஸ் மறுப்பு போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுவதையும் கண்டித்தும், ஜிம்கானா கிளப்பின் தொழிலாளர் விரோத போக்கைக் கண்டித்தும், தொழிலாளர் சட்டங்களை மதிக்காத கிளப் அதிகாரிகளை கைது செய் என்ற முழக்கத்துடன், ஜிம்கானா தொழிலாளர் சங்கமும், ஜனநாயக வழக்கறிஞர் சங்கமும் ஆர்ப்பாட்டம் நடத்தின. வழக்கறிஞர்கள், தொழிலாளர்கள் என 200 பேர் கலந்துகொண்டனர்.

ஜிம்கானா கிளப் வாயிலில் நடந்த AICCTU ஆர்ப்பாட்டத்தில் சங்க முன்னணிகள்,  ஜனநாயக வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள், வேட்டி அணிந்து கலந்துகொண்டனர். AICCTU மாவட்டச் செயலாளர் தோழர் என்.ஜேம்ஸ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், சங்க ஆலோசகரும், வழக்கறிஞருமான தோழர் கே.பாரதி, மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


Wednesday, July 16, 2014

அடுத்து வருவது... அம்மா சுடுகாடுகள்

விருத்தாசலம் அருகே உள்ள கச்சிராயநத்தம் ஊராட்சியில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடையை அப்புறப்படுத்தக்கோரி 23.06.2014 அன்று அவ்வூரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியதையும் இவர்களுள் 50 பேர் கணவனை இழந்த பெண்கள் என்பதையும் அதையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு சென்று கணவனை இழந்த பெண்களை சந்தித்து உதவிகள் செய்வதாக அறிவித்ததையும் செய்தித்தாள்கள் வாயிலாக அறிந்து 04.07.2014 அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) குழு அக்கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்கள், ஊராட்சித் தலைவர், மூத்த குடிமக்கள், பள்ளி ஆசிரியர்கள், படிக்கும் சிறுவர்கள், ஊர் மக்கள், டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள், பாட்டாளி மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட பல கட்சிப் பிரமுகர்கள் என பலதரப்பட்ட பிரிவினரையும் சந்தித்தது.

     சுமார் 4000 மக்கள் தொகை உள்ள கச்சிராயநத்தம் ஊராட்சியில் சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் 50க்கும் மேல் இருப்பது பேரதிர்ச்சி தரும் கொடூரமான உண்மை! பெரும்பாலும் முந்திரி விவசாயத்தையே நம்பி இருக்கும் சிறு, குறு ஏழை விவசாயிகளைக் கொண்ட இக்கிராமத்தில் 2003ல் துவங்கப்பட்ட சாராயக் கடை கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் ரூ.20 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. விவசாயிகளின் நிலம், அரைகுறை முந்திரி வருமானம், பெண்களின் நகைகள், பாத்திரம், பண்டம், தட்டுமுட்டுச் சாமான்கள் ஆகியவையே இந்த சாராயக் கடையின் வருமானமாக மாறியுள்ளது! இதனால் கச்சிராயநத்தம் கிராமத்தின் பொருளாதாரம் சிதைந்து சீரழிந்து போயுள்ளது. கிராமத்தின் அமைதியும் நிம்மதியும் உருக்குலைந்து கிராமமே சோக பூமியாகக் காட்சியளிக்கிறது. ‘தாழ்வுற்று வறுமை மிஞ்சி’ என்ற பாடலுக்கு மிகப் பொருத்தமான கிராமமாக இருக்கிறது கச்சிராயநத்தம்.

     வருமானம் தொலைந்து, வாழ்க்கை கெட்டு, பிள்ளைகள் படிப்பு நாசமாகி, குரூரமான அவலங்களை உருவாக்கியிருப்பது தான் ‘நல்ல சாராயத்தின்’  சாதனை! இந்த கிராமத்தில் போதுமான பஸ் போக்குவரத்து கிடையாது. அரசாங்கப் பள்ளிக்கூடம், ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை. ஆனால் சாராயக் கடை மட்டும் இருக்கிறது. இங்குள்ள ஊராட்சி உதவி பெறும் துவக்கப் பள்ளியில் குழு சென்றபோது 73 பிள்ளைகள் இருந்தார்கள். இவர்களுள் 30க்கும் மேற்பட்டவர்கள் அப்பா இல்லாத பிள்ளைகள் என்பது நெஞ்சை உலுக்குவதாகும். இதில் அம்மா இல்லாத பிள்ளைகளையும் சேர்த்துக் கொண்டால் பெற்றோர் இல்லாத பிள்ளைகளின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கும்! இந்த ஒரு உண்மையே போதும் நல்ல சாராயத்தின் சாதனையைத் தெரிந்து கொள்ள.

  இந்த ஊரில் குடிக்கும் தண்ணீருக்கும் பிரச்சனை வந்துவிட்டது. 136 ஏக்கரில் வந்துள்ள ஆரூரான் சர்க்கரை ஆலையின் எரிசாராய ஆலை நிலத்தடி நீரை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. தண்ணீர் மாசடைந்து விட்டது. ஜ÷ன் 28 அன்று ஜெயசூர்யா மருத்துவமனையால் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் 110 பேர்களுக்கு சிறுநீரகக் கோளாறும் 100 பேர்களுக்கு சர்க்கரை நோயும் உள்ளது. கிராமத்திலுள்ள நிலத்தடி நீரை குடிக்கக் கூடாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். இது சாராய ஆலையால் ஏற்பட்ட விளைவு. வன்னியர் சமூகத்தை மட்டுமே கொண்டிருக்கும் இக்கிராமம் தானே புயல் ஏற்படுத்திய துயரத்தையும் தாண்டிய துயரத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

     இரண்டாண்டுக்கு முன்பாகவே ஊராட்சி மன்றம் சார்பாக சாராயக் கடையை எடுக்கச் சொல்லி தீர்மானம் நிறைவேற்றி மூன்றுமுறை அரசுக்கு அனுப்பியுள்ளனர். ஆனாலும் அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. இதை அடுத்தே பெண்கள் முன்னின்று மறியல் போராட்டத்தை நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டத்தை ஜெயந்தி உள்ளிட்ட கணவனை இழந்த 50 பெண்களும் முன்னின்று நடத்தியுள்ளனர். அரசுக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை சரி செய்யும் நோக்கில் மாவட்ட அதிகாரிகள் கச்சிராயநத்தம் சென்று விசாரித்துள்ளனர் என்பது தெரிய வருகிறது. பல வாக்குறுதிகளும் அளித்துள்ளனர். ஆனால், சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் உறுதியளிக்கப்பட்ட பின்னரும் தேவநாதன் மனைவி தமயந்திக்கு (55) இன்னும் கணவனை இழந்த பெண்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்பதை பத்திரிகை செய்தி அம்பலப்படுத்துகிறது. இதற்காக ரூ.5000 லஞ்சம் கொடுத்துள்ளார்.

1. கச்சிராயநத்தம் கொடும் சோகத்துக்கு தமிழக அரசாங்கமே பொறுப்பு. உடனடியாக அந்த கிராமத்திலுள்ள சாராயக் கடையை அப்புறப்படுத்த வேண்டும்.

2. பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் வேலை வாய்ப்பு, தொழில் செய்ய வட்டியில்லா கடன், பிள்ளைகளின் கல்வி, மருத்துவ வசதி, உள்ளிட்ட மறுவாழ்வு நடவடிக்கைகளையும், அரசு உயர்நிலைப்பள்ளி, 24 மணி நேரமும் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், பஸ் போக்குவரத்து உள்ளிட்ட கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

3. தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் ஆண்டுக்கு 300 நாட்கள் வேலை, நாளொன்றுக்கு ரூ.300 கூலி தர வேண்டும்.

4. ஆரூரான் சர்க்கரை ஆலை நடத்தும் எரிசாராய ஆலையை இவ்வூரிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

5. கச்சிராயநத்தம் சோகத்தை அபாய எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு தமிழ் நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். முழுமையான மதுவிலக்கை கொண்டு வர வேண்டும்.

     இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை 15 அன்று மாநிலம் முழுவதும் அனைத்திந்திய விவசாயத்   தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.

     அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு எல்லாம் நடத்தும் ஜெயலலிதா அரசாங்கம், உடனடியாக டாஸ்மாக் கடைகளை மூடாவிட்டால், சாராயத்தால் விளையும் சாவுகளைத் தடுக்காவிட்டால், தமிழ் நாட்டில் அம்மா சுடுகாடுகள் திறக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

(கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், கடலூர் மாவட்டப் பொறுப்பாளர் சி.அம்மையப்பன், அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் மா.வெங்கடேசன், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக விழுப்புரம் மாவட்டப் பொதுச் செயலாளர் தோழர் செண்பகவள்ளி, புரட்சிகர இளைஞர் கழக கடலூர் மாவட்ட அமைப்பாளர் சி.ராஜசங்கர், ராமநாதன் ஆகியோர் குழுவில் இடம்பெற்றனர்)

2014 ஜூலை 28: மத்திய கமிட்டி அறைகூவல்

மோடி ஆட்சியின் கார்ப்பரேட் மதவெறி தாக்குதலுக்கு எதிராக திறன்மிக்க எதிர்ப்பை கட்டமைக்க கட்சியை விரிவாக்குவோம்! வலுப்படுத்துவோம்!

ஜூலை 28, 2014, கட்சியின் நிறுவனத் தலைவர் தோழர் சாரு மஜூம்தார் தியாகியான 42ஆவது ஆண்டு தினத்தை குறிக்கிறது. 1970களின் துவக்கத்தில் கட்சி சந்தித்த பின்னடைவுக்குப் பிறகு, கட்சி புனரமைப்பு செய்யப்பட்டதன் 40ஆவது ஆண்டு தினத்தையும் அது குறிக்கிறது. இந்தியாவில் பாஜக பெரும்பான்மை கொண்ட முதல் ஆட்சி, மத்தியில் அமைந்திருப்பதை நாம் எதிர்கொள்ளும்போது, அதன் முதல் இரண்டு மாத கால ஆட்சியிலேயே, அதன் அனைத்தும் தழுவிய கார்ப்பரேட் நட்பு நிகழ்ச்சிநிரல் மற்றும் எதேச்சதிகார, மதவெறி இயல்பின் நிச்சயமான வெளிப்பாடுகளை நமக்குக் காட்டியிருக்கும்போது, தோழர் சாரு மஜூம்தாரின் இறுதி வார்த்தைகளும் 1970களிலும் 1980களின் துவக்கத்திலும் இந்திரா எதேச்சதிகாரத்துக்கு எதிரான நமது போராட்டத்தில் நாம் கற்ற பாடங்களும் நமக்கு நினைவுக்கு வருகின்றன.

      வங்கி தேசியமயமாக்கம் மற்றும் ‘வறுமை ஒழிப்பு’ முழக்கம் ஆகியவற்றின் மீதேறி, 1971ல் காங்கிரசின் பழைய தலைவர்களை தோற்கடித்து இந்திரா காந்தி தெளிவான தேர்தல் வெற்றி பெற்றார். அதன் பிறகு, வங்கதேசப் போரில் பாகிஸ்தானை வெற்றி கொண்டு, தனது அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொண்டதில், ஆர்எஸ்எஸ் திகைப்புற்றுப் போனது; வாஜ்பாய், கொடியவர்களை அழிக்கும் கடவுளான துர்கையுடன் இந்திரா காந்தியை ஒப்பிட்டார். ‘வறுமையை ஒழிப்பதற்கான’ அந்த வெற்றியும் தேசியவாத ஈர்ப்பும் மிகவிரைவாகவே, இகக (மாலெ) மீதான மிருகத்தனமான துணை ராணுவ ஒடுக்குமுறையாக மாறியதை, இந்தியாவின்         நாடாளுமன்ற ஜனநாயகம், நெருக்கடி நிலையின் இருளால் சூழப்பட்டதை வரலாறு நமக்குச் சொல்கிறது.

      தோழர் சாரு மஜூம்தார் இந்த ஆபத்தை மிகத் தெளிவாக அறிந்திருந்தார்; அவர் தியாகியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு, மக்கள் நலனே கட்சியின் நலன் என்று அறுதியிட்டுச் சொல்லி, மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக பரந்த அடிப்படையிலான ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தார். 1974, ஜூலை 28 அன்று கட்சியின் மத்திய கமிட்டி புனரமைப்பு செய்யப்பட்டதும் அதைத் தொடர்ந்து கட்சி மீட்டெடுக்கப்பட்டதும், விவசாயிகளின் எழுச்சி அலைகள் மூலமும் அனைத்தும் தழுவிய வெகுமக்கள் முன்முயற்சிகள் மூலமும் அடிப்படை சமூக மாற்றம் மற்றும் விடாப்பிடியான ஜனநாயகம் என்ற நிகழ்ச்சிநிரலின் துணிச்சலான அறுதியிடல் மூலமும், தோழர் சாருமஜ÷ம்தாரின் சக்திவாய்ந்த இறுதி வார்த்தைகளை உயர்த்திப் பிடித்தன.

புதுப்பிக்கப்பட்ட இகக (மாலெ), மக்களின் நலன்கள் மற்றும் போராட்டங்களுக்கு அர்ப்பணித்துக் கொள்கிற, கடப்பாடுடனான கம்யூனிஸ்ட் கட்சியை படிப்படியாக கட்டியெழுப்பி, ஆளும் வர்க்கங்களின் எதேச்சதிகார தாக்குதல்களை, வெற்றிகரமாக எதிர்கொண்டது.

      நாற்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த சூழல் போலவும், அதுபோல் அல்லாமலும், இன்றைய சூழல் நிலவுகிறது. இந்திரா காந்தி இடதுசாரி பொய்த் தோற்றங்களையும் சோசலிச வாய்வீச்சுக்களையும் கொண்டிருந்தார். நரேந்திர மோடி தனது வலதுசாரி அரசியல் மற்றும் நெருக்கமான கார்ப்பரேட் பிணைப்புக்களை பெருமிதத்துடன் முன்வைக்கிறார். இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் இகக (மாலெ)யின் இரங்கல் செய்தியை எழுதுவதில் மும்முரம் காட்டியது. ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்கிற மோடியின் லட்சியம், பாஜகவின் தனிப்பட்ட தலைமையில் வலதுசாரி மேலாதிக்கத்தை நிறுவ, வலுப்படுத்த முனைகிறது; ஒட்டுமொத்த இடதுசாரி சக்திகளும் துடைத்தெறியப்பட்ட இந்தியாவை அவர் காண விரும்புகிறார்; அந்தப் போக்கில், பல்வேறு இடதுசாரி அல்லாத தாராளவாத சமூக, கலாச்சார விவாதப்போக்கையும் ஓரங்கட்டிவிட விரும்புகிறார்.

     இந்திரா காந்தி, நெருக்கமான நபர்கள் கொண்ட குழுவின் ஆதரவுடன், இரும்புக் கரம் கொண்டு ஆட்சி செய்ய விரும்பியது போலவே, மோடி, அவருடைய பக்தர்களின் வெட்கக்கேடான பொய்புகழ்ச்சி மற்றும் அவரது சக அமைச்சர்களின் கூட்டு ஆகியவை கொண்ட மிகப்பெரிய தலைவராக ஆட்சி செய்ய விரும்புகிறார். இரண்டு தலைவர்களுமே, தேசியவாத பொய்யுரையை தங்கள் வாய்வீச்சின் மய்யமாகக் கொண்டிருந்தனர்; ‘தேச ஒற்றுமை மற்றும் ஓர்மை’ இந்திராவின் அழுத்தமாக இருந்தது; அது மதச்சார்பின்மை என்று அதிகாரப் பூர்வமாகச் சொல்லப்பட்டது; மோடியின் தேசியவாதம், வெளிப்படையாகவே பெரும்பான்மைவாதத் தன்மை கொண்டது; ‘தேசப் பாதுகாப்பு’ என்ற பெயரில் சுதந்திரங்களை ஒடுக்கும் ஒரு வலிமையான அரசு, எதிர்ப்புக் குரல் அனைத்தையும் நசுக்கிவிடும், கார்ப்பரேட் வழிநடத்தும், பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்கள், மக்கள் வாழ்வுரிமை அழிக்கப்படுவதை புனிதப்படுத்தும் வளர்ச்சி வாதம் என்பவற்றில் அழுத்தம் கொண்டது.

     அதிகரித்து வரும் இந்த வலதுசாரி தாக்குதல் மற்றும் கார்ப்பரேட் - மதவெறி தாக்குதலுக்கு எதிராக எழுவது இன்று நமது பணி. இடதுசாரிகள் ஓரங்கட்டப்பட்டு விட்டதாகச் சொல்லும் வெற்றிவாத வலதுசாரி கூக்குரலுக்கு எதிராக நாம் மீண்டும் பாய்ந்து முன்னேற வேண்டியுள்ளது. இந்த சவாலை நாம் கையில் எடுக்கும்போது, நாம் மக்கள் மத்தியில் ஆழமாகச் செல்ல வேண்டும்; அவர்களுடைய அன்றாடப் பிரச்சனைகளில் அவர்களை அமைப்பாக்கி அணிதிரட்ட வேண்டும். ஆட்சியைப் பிடிக்க, தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக பயன்படுத்திய மக்கள் விருப்பங்களை, வேகமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் பாஜகவின் கார்ப்பரேட் - மதவெறி நிகழ்ச்சிநிரல் மற்றும் விலைஉயர்வு, மக்கள் நல்வாழ்வு மேலும் மேலும் கேலிக்குள்ளாக்கப்படுவது என்ற கடினமான யதார்த்தம் ஆகியவற்றுக்கு எதிராக நிறுத்த வேண்டும். ‘நல்ல காலங்கள்’ பற்றிய வாய்வீச்சு, ‘கசப்பு மருந்து’ என்ற யதார்த்தமாக மாறும்போது, மக்கள் எதிர்த்துப் போராடுவார்கள்; இகக (மாலெ) மக்கள் போராட்டங்களின் முன்னணியில் இருந்து தனது பாத்திரத்தை நிறைவேற்ற வேண்டும்.

     மோடி அரசாங்கம் அதன் எதேச்சதிகார ஆட்சி முறையை கட்டவிழ்த்துவிட்டு, அதன் கார்ப்பரேட் - மதவெறி நிகழ்ச்சிநிரலை திணிக்க முற்படும்போது, நம்மைச் சுற்றிலும், ஏமாற்றம் மற்றும் அதிருப்தி குரல்களை நாம் கேட்க முடிகிறது. விலை உயர்வு பற்றி புகார் செய்யும் சாமான்ய மனிதன் முதல், நீதிபதிகள் நியமனத்தில் அரசாங்கத்தை குற்றம் சாட்டும் இந்திய தலைமை நீதிபதி வரை எங்கும் எதிர்ப்புக் குரல்களை கேட்க முடிகிறது. பல்வேறு போராடும் சக்திகளைச் சென்றடைய, சாத்தியப்படும் அளவுக்கான பரந்த போராட்ட ஒற்றுமையைக் கட்டியெழுப்ப இது சரியான நேரம்.

     இன்று, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி மிகவும் பலவீனமாகிவிட்டது; மக்கள் உரிமைகளை, வாழ்வாதாரத்தை நாட்டின் பன்மைவாத இழையை, பல்வேறு நிறுவனங்களின் சுதந்திரத்தை பாதுகாப்பது என்ற பிரச்சனையில், எதிர்க்கட்சிகளின் பல பிரிவினரும் நம்பகத்தன்மை இழந்துவிட்டனர். நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சியின் பாத்திரம், மோடி அரசாங்கத்தால் ஏற்படுகிற சவால்களுக்கு பல்வேறு நிறுவனங்களும் ஆற்றுகிற பதில்வினை ஆகியவற்றுக்கு அப்பால், துணிச்சலாக, வீதிகளில் எதிர்ப்புக் குரல்களை எழுப்ப வேண்டும். பல்வேறு முற்போக்கு ஜனநாயக சக்திகளுடன் விரிவான ஊடாடல், பல்விதமான மக்கள் போராட்டங்களுடன் திறன்மிக்க ஒருமைப்பாடு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவையே இப்போது காலத்தின் தேவை.

      நிச்சயமாக, முன்னெப்போதும் இருந்ததை விட இப்போது இன்னும் வலுவான கட்சி அமைப்பு நமக்கு தேவை. 1974 ஜூலையில் மத்திய கமிட்டி புனரமைக்கப்பட்டபோது, மேலிருந்து கட்சியை புனரமைப்பது என்று நாம் துவங்க வேண்டியிருந்தது; அன்று நம்மிடம் கிட்டத்தட்ட எதுவும் இல்லை. இன்று, ஒன்பது காங்கிரசுகளுக்குப் பிறகு, ஒரு லட்சத்துக்கும் மேல் உறுப்பினர்கள், 20 மாநிலங்களில், 100 மாவட்டங்களில் கட்சி அமைப்பு என, நாம் ஒரு கூடுதல் வலுவான அமைப்பை கொண்டுள்ளோம். ஆனால், வேர்க்கால் மட்டத்தில் இன்னும் திறன்மிக்க கட்சி அமைப்பு தேவை என்பதை சமீபத்திய தேர்தல்கள் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளன. நாம் கிட்டத்தட்ட 30 லட்சம் வெகுமக்கள் உறுப்பினர்கள் கொண்டுள்ளோம்; ஆனால் நமது வாக்குகள் 10 லட்சத்தை மட்டுமே தாண்டியுள்ளன; நமது உறுப்பினர்களை, ஆதரவாளர்களை அரசியல் ரீதியாக, தேர்தல்ரீதியாக அணிதிரட்டுவதில் உள்ள நமது பலவீனத்தை இது காட்டுகிறது.

     அனைத்துக்கும் பிறகு, தேர்தல் போராட்டங்களின் மய்ய தலங்கள் வாக்குச் சாவடிகளே. மேலோங்கிய ஆளும் வர்க்கக் கட்சிகளின் பணபலம், ஆள் பலம், ஊடக பலம் மற்றும் சமூக இயக்க சமன்பாடுகள், வாக்காளர்களை வாக்குச் சாவடி மட்டத்தில் அணிதிரட்டுவது என்பதன் மூலம் செயலாற்றுகின்றன. தேர்தல் தளம், சமமான ஆடுகளம் அல்ல எனும்போது, தேர்தல் போராட்டங்களில் அதிகார சமன்பாடு, வறிய மற்றும் உழைக்கும் மக்களுக்கு எதிராகவே சாய்ந்துள்ளபோது, வேர்க்கால் மட்டத்தில் தீவிரமான எதிர் அணிதிரட்டலுடன், ஆளும் வர்க்கங்களின் அரசியலுக்கு எதிராக, கம்யூனிஸ்டுகள் திறன்மிக்க வேர்க்கால் மட்ட எதிர்ப்பைக் கட்டமைக்க வேண்டியது கூடுதல் அவசியமாகிறது.

      நமது கட்சி உருவெடுத்து வந்த காலங்களில், நிலப்பிரபுத்துவ மேலாதிக்கம் மற்றும் அரசு பயங்கரத்துக்கு எதிரான போராட்டங்களில் பெரிய வெற்றிகள் பெற்ற வேர்க்கால் மட்ட அமைப்புதான், தேர்தல் அரங்கிலும் நமது பிரதானமான ஆயுதம் ஆகும். காங்கிரஸ் மற்றும் பல்வேறு அடையாள அடிப்படையிலான கட்சிகள் போலல்லாது, பாஜக ஓர் ஊழியர் அடிப்படை கொண்ட கட்சி; வேர்க்கால் மட்டத்தில் அமைப்பு, பிரச்சாரம் மற்றும் போதனை ஆகியவற்றுக்கு அது காத்திரமான கவனம் செலுத்துகிறது. எனவே, பாஜகவுக்கு எதிரான கம்யூனிஸ்ட் எதிர்ப்பு, வேர்க்கால் மட்டத்தில் அமைப்புரீதியான, கருத்தியல் - அரசியல்ரீதியான அணிதிரட்டல் என்ற தளத்தில் மிகவும் தீர்மானகரமாக கட்டமைக்கப்பட வேண்டும்.

கட்சி புனரமைக்கப்பட்டதன் நாற்பதாவது ஆண்டு தினத்தில், வெகுமக்கள் பலம், அரசியல் அணிதிரட்டல், அமைப்பு செயல்பாடு என்ற பொருளில், நமது வேர்க்கால் மட்ட அமைப்பை, இன்னும் கூடுதல் உயரத்துக்கு எடுத்துச் செல்ல நாம் உறுதியேற்போம். உழைக்கும் மக்களின் சக்திவாய்ந்த கம்யூனிஸ்ட் அமைப்பு, மக்கள் போராட்டத்தின் ஒவ்வோர் அரங்கிலும் பரந்த ஜனநாயக சக்திகளுடன் ஒத்திசைவாக செயல்பட்டு, கார்ப்பரேட் - மதவெறி அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தில் தீர்மானகரமான வெற்றி பெற வேண்டும்.

நாடாளுமன்ற ஜனநாயகமே மக்கள் ஜனநாயகமாகிவிடுமா? பகுதி 3

ஜூலை ஆகஸ்ட், 1920ல் கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது காங்கிரஸ் கூடியது. கம்யூனிஸ்ட் கட்சிகளும் நாடாளுமன்றவாதமும் என்ற தலைப்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.    புதிய சகாப்தமும் புதிய வகை நாடாளுமன்றவாதமும் என்ற  துணைத்தலைப்பு, முன்னுரை போல் அமைந்தது.

2.    கம்யூனிசம், பாட்டாளி வர்க்க சர்வாதி காரத்துக்கான போராட்டமும் முதலாளித்துவ நாடாளுமன்றங்களை பயன்படுத்துவதும் என்ற துணைத் தலைப்பு 20 அம்சங்களைப் பற்றி பேசியது.

3.    புரட்சிகர நாடாளுமன்றவாதம் என்ற துணைத்தலைப்பு 12 அம்சங்கள் கொண்டதாக அமைந்தது.

அவற்றிலிருந்து, நாடாளுமன்றம் தொடர்பான அணுகுமுறையை, தோழர் லெனின் காலத்திய கம்யூனிஸ்ட்கள் எப்படி வகுத்துக் கொண்டனர் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

    நாடாளுமன்றம் தொடர்பான மூன்றாவது அகிலத்தின் அணுகுமுறை, புதிய தத்துவ கருத்துக்களால் தீர்மானிக்கப்படவில்லை; அது, நாடாளுமன்றத்தின் மாறிய பாத்திரத்தாலேயே தீர்மானிக்கப்படுகிறது. முந்தைய வரலாற்று சகாப்தத்தில், நாடாளுமன்றம், வளரும் முதலாளித்துவ அமைப்பின் ஒரு கருவியாக இருந்தது. அந்த வகையில், ஒரு குறிப்பிட்ட விதத்தில் முற்போக்கானதாக இருந்தது. கட்டுக்கடங்காத ஏகாதிபத்திய நிலைமைகளில், நாடாளுமன்றம், பொய் - ஏமாற்று - வன்முறை ஆகியவற்றின் ஆயுதமாகவும், அயற்சியடைய வைக்கும் வெற்றுப் பேச்சு சந்தை மடமாகவும் ஆகியுள்ளது.

    தற்போது, கடந்த சகாப்தத்தில் சில குறிப்பிட்ட சமயங்களில் செய்ததைப் போல், தொழிலாளிவர்க்க வாழ்க்கைத்தர முன்னேற்றம் மற்றும் சீர்திருத்தங்கள் ஆகியவற்றுக்கான ஒரு போராட்ட அரங்காக, கம்யூனிஸ்ட்டுகளால் நாடாளுமன்றத்தை பயன்படுத்த முடியாது. அரசியல் வாழ்க்கையின் கவனப்புள்ளி, முழுமையாகவும் இறுதியாகவும், நாடாளுமன்ற எல்லைகளைத் தாண்டியதாக உள்ளது. அப்படி இருந்தும், முதலாளித்துவம், அதற்கு தொழிலாளி வர்க்கத்தோடு உள்ள உறவுகளால் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்துக்குள்ளேயே உள்ள சிக்கலான உறவுகளால், சில நேரங்களில் எப்படியோ சில நடவடிக்கைகளை நாடாளுமன்றம் மூலம் முன்தள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் வேறுவேறு கும்பல்கள் அதிகாரத்திற்காக சண்டையிடும்போது, அவை, தமது பலங்களை வெளிப்படுத்துகின்றன; தமது பலவீனங்களை வெளிக்காட்டிவிடுகின்றன; தமக்குள் சமரசம் செய்து கொள்கின்றன.

    பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமை ஆளும் வர்க்கங்களின் கைகளிலிருந்து நாடாளுமன்ற சாதனத்தைப் பறித்தெடுத்து, அதனை உடைத்து தகர்த்து, அதனை பாட்டாளி வர்க்க அதிகாரத்தின் புதிய உறுப்புக்களால் மாற்றீடு செய்வதாகும்.

    உண்மையில் நாடாளுமன்றம் ஆளும் வர்க்கங்களின் கைகளில் உள்ள ஓர் அடக்குமுறை ஒடுக்குமுறை ஆயுதமே என்றபோதும், அது வெளித்தோற்றத்தில், வர்க்கங்களுக்கு மேலே உயர்ந்து நிற்கிற, வெகுமக்கள் விருப்புறுதியின் (டர்ல்ன்ப்ஹழ் ஜ்ண்ப்ப்) அமைப்பாகவே தெரிகிறது. இந்தக் கட்டத்தில், மொத்த மக்கள் தொகையின் விருப்பங்களை பிரதிபலிக்கும் ஒரு ‘வெகுமக்கள் விருப்புறுதி’ இருப்பது போன்ற எந்த பொய்த்தோற்றமும், பாட்டாளி வர்க்கத்துக்கு தீங்கு பயப்பதே ஆகும்.

    முதலாளித்துவ அரசு இயந்திரத்தின் பல  சாதனங்களில் ஒரு முக்கிய சாதனமே முதலாளித்துவ நாடாளுமன்றம் ஆகும். பொதுவாக முதலாளித்துவ அரசைப் போல், முதலாளித்துவ நாடாளுமன்றத்தையும் பாட்டாளிவர்க்கம் தன் பக்கத்திற்கு வென்றெடுக்க முடியாது. முதலாளித்துவ அரசு எந்திரத்தை, குடியரசு இயல்போ அல்லது அரசியல் அமைப்புச் சட்ட முடியாட்சி இயல்போ கொண்ட நாடாளுமன்றங்களை, தகர்த்து எறிவதே பாட்டாளி வர்க்கத்தின் கடமையாகும்.

    ஆக, கம்யூனிசம், நாடாளுமன்றம், வருங்கால சமூகத்தின் அரசு வடிவம் அல்லது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் வடிவம் என்பதை நிராகரிக்கிறது. ஒரு நீண்டகால அடிப்படையில், பாட்டாளி வர்க்க லட்சியத்திற்கு, நாடாளுமன்றம் வென்றெடுக்கப்படும் சாத்தியப்பாட்டை, அது நிராகரிக்கிறது. அது, நாடாளுமன்றத்தை நொறுக்கும் கடமையையே கையேற்றுள்ளது.  ஆக, இதிலிருந்து தொடர்வது என்னவெனில், முதலாளித்துவ நிறுவனங்களை அவற்றை அழிப்பதற்காகவே பயன்படுத்த வேண்டும். அவற்றைப் பயன்படுத்துவது என்ற கேள்வியை, மேலே குறிப்பிட்ட ஒரே ஒரு விதத்தில் மட்டுமே, முன் நிறுத்த வேண்டும்.

    புரட்சிகர கருத்துக்களைப் பரப்புவது, நாடாளுமன்ற மேடையிலிருந்து எதிரிகளின் முகமூடிகளைக் கிழித்தெறிவது, இன்னமும் நாடாளுமன்றத்தை மதிக்கிற அதன் ஜனநாயகத் தன்மைபால் மாயையைகள் கொண்டுள்ள மக்களின் குறிப்பாக பின்தங்கிய பகுதிகளின் மக்களின் கருத்தியல் ஒத்திசைவை முன்னேற்றுவது என்பதாகவே, பிரதானமாக நாடாளுமன்ற நடவடிக்கை அமைகிறது. நாடாளுமன்றத்திற்கு வெளியேயான வெகுமக்கள் போராட்ட லட்சியங்களுக்கும் கடமைக்கும், முழுமுற்றூடாக கீழ்ப்படுத்தப்பட்டதாக, நாடாளுமன்ற நடவடிக்கை வைக்கப்பட வேண்டும்.

    இதுவரை அரசியல் வாழ்விலிருந்தும் புரட்சிகர இயக்கத்திலிருந்தும் தனித்து நிற்கும் கிராமப்புற உழைக்கும் மக்கள் போன்ற உழைப்பாளிகளை அரசியல்ரீதியாக வென்றெடுக்க, தேர்தல் இயக்கங்களில் பங்கேற்பதும் நாடாளுமன்றத்தை, புரட்சிகர கருத்துக்களுக்கான ஒரு மேடையாக பயன்படுத்துவதும் குறிப்பான முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

    உள்ளூர் அரசாங்க நிறுவனங்களிலான எல்லா கம்யூனிஸ்ட் நடவடிக்கைகளும், முதலாளித்துவ அமைப்பு முறையை உடைத்து நொறுக்கும்  போராட்டத்தின் ஒரு பகுதியாகவே காணப்பட வேண்டும் (உள்ளூர் அரசாங்க நிறுவனம் என்பது இங்கு, மாநில அரசு முதல் ஊராட்சி அமைப்பு வரையிலானவற்றை குறிப்பிடும் - கட்டுரையாளர்)

    அதிகபட்ச எண்ணிக்கையிலான நாடாளுமன்ற இடங்களை பெறும் உந்து விசையுடன் தேர்தல் இயக்கத்தை நடத்தாமல், அதனை, பாட்டாளி வர்க்கப் புரட்சி என்ற முழக்கத்தை மய்யப்படுத்தி மக்களை அணி திரட்டவே நடத்தவேண்டும். தேர்தல் போராட்டத்தில் தலைவர்கள் மட்டுமே ஈடுபடுவது என்றில்லாமல், கட்சி உறுப்பினர்களின் பரந்த அணிகளும் ஈடுபடுத்தப்பட வேண்டும். இந்த இயக்கத்தில், வேலை நிறுத்தங்கள் ஆர்ப்பாட்டங்கள் ஆயுதப் படையினர் மத்தியிலான இயக்கம், இன்னபிற வெகுமக்கள் நடவடிக்கைகளை முன்னெடுப்பதும், அவற்றோடு தேர்தல் இயக்கத்தை நெருக்கமாக தொடர்புபடுத்துவதும் அத்தியாவசியமானதாகும். பாட்டாளி வர்க்க மக்கள் திரள் அமைப்புக்களும், தேர்தலை மய்யங்கொண்ட செயலூக்கமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

    ஒரு பொதுவான விதியாக, தேசிய நாடாளுமன்றம் மற்றும் உள்ளூர் அரசாங்க உறுப்புக்களுக்கான தேர்தல்களில் பங்கேற்பதின், அந்த நிறுவனங்களில் பணிபுரிவதின் அவசியத்தை ஏற்கிற அதேவேளை, கம்யூனிஸ்ட் கட்சி, அந்தக் கணத்தின் குறிப்பான நிலைமைகளை மதிப்பிட்டே ஒவ்வொரு நேர்விலும் (ங்ஹஸ்ரீட் ஸ்ரீஹள்ங்) முடிவெடுக்க வேண்டும். தேர்தல் அல்லது நாடாளுமன்ற புறக்கணிப்பு, நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே வருவது என்பவை, முதன்மையாக அதிகாரத்திற்கான ஆயுதப் போராட்டத்திற்கு உடனடியாக நகர நிலைமைகள் கனிந்துள்ளபோதே அனுமதிக்கத் தக்கதாகும்.

    இந்தப் பிரச்சனையின் ஒப்பீட்டுரீதியான முக்கியத்துவமின்மை மனதில் கொள்ளப்பட வேண்டும். அரசு அதிகாரத்திற்கான போராட்டத்தின் கவனப்புள்ளி, நாடாளுமன்றத்திற்கு வெளியே இருப்பதால், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மற்றும் அதனைச் சாதிப்பதற்கான மக்கள் போராட்டம் என்ற பிரச்சனைகள், நாடாளுமன்ற முறையை எப்படி பயன்படுத்துவது என்ற விசயத்தைக் காட்டிலும் அளவிட முடியாத முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது கண்கூடு.

இகக(மாலெ) தனது 9ஆவது காங்கிரசில் புரட்சிகர இயக்கப்போக்கு பற்றி சொல்லியுள்ளதை காண்போம்.

புரட்சிகர இயக்கப்போக்கு

     இந்தியா போன்ற ஒரு பரந்த, சிக்கல்கள் நிறைந்த நாட்டில், ஒரு கம்யூனிஸ்ட் கட்சி, சாத்தியமான ஒவ்வொரு வேலை அரங்கிலும் வேலை செய்வதில், நாடாளுமன்றம் அல்லாத மற்றும் நாடாளுமன்ற போராட்ட வடிவங்களில், வெவ்வேறு வடிவங்களில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு துரிதமாக மாறிச்செல்வதில், குறிப்பாக, தேர்ச்சி பெற்றதாக இருக்க வேண்டும். ஆகவே எல்லா அவசியமான போராட்ட மற்றும் அமைப்பு வடிவங்களையும், உயிரார்ந்த விதத்தில் இணைப்பதன் மூலம், ஓர் அனைத்தும் தழுவிய புரட்சிகர நடைமுறையை வளர்த்தெடுக்க கட்சி பாடுபடுகிறது.

    சாதாரண நிலைமைகளில் இந்திய ஆட்சி அமைப்பு முறை, கம்யூனிஸ்ட்களை, வெளிப்படையான சட்டபூர்வமான நாடாளுமன்ற வழிமுறைகளில் செயல்பட அனுமதிக்கிறது. நாடாளுமன்ற அரங்கில், கட்சியின் அடிப்படையான அய்க்கிய முன்னணி வழிக்கு பொருத்தமான உரிய செயல்தந்திரங்களை வளர்த்துக் கொண்டே, நீண்ட காலத்துக்கு ஒரு புரட்சிகர எதிர்க்கட்சி பாத்திரமாற்ற கட்சி தயாராக இருக்க வேண்டும். தேர்தல் போராட்டத்தின் போக்கில் கம்யூனிஸ்ட்கள் உள்ளாட்சி அமைப்புகளில் மாநில சட்டமன்றங்களில் கூட பெரும்பான்மை பெற சாத்தியமுண்டு. நீண்டகால மற்றும் தீவிரமான அரசியல் போராட்டங்கள் மூலமாக, வர்க்க சக்திகளின் சம நிலையில் ஒரு சாய்வு ஏற்படுத்தும் அதே நேரம், வாக்காளர்களுக்கு தந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்தும் அளவுக்கு கட்சி வலிமையானதாக இருக்கும் பட்சம், இதுபோன்ற சந்தர்ப்பங்களை சுதந்திரமாகவோ அல்லது ஒத்த கருத்து கொண்ட சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்தோ பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்கிறது.

     எப்படியிருப்பினும், அதுபோன்ற உள்ளாட்சி அமைப்புக்களோடும்/அரசாங்கங்களோடும், கட்சி கொண்டிருக்கும் உறவும் பாத்திரமும் பின்வரும் அடிப்படை கோட்பாடுகளால் வழி நடத்தப்படும்.

அ.     கட்சி எப்போதும் என்ன நேரும்போதும் சுதந்திரமான அமைப்பு செயல்பாட்டையும் அரசியல் முன்முயற்சியையும் தக்கவைத்துக் கொண்டே ஆக வேண்டும்.

ஆ. உள்ளாட்சி அமைப்புக்கள்/அரசாங்கங்கள் கொண்டுள்ள அதிகாரம் தீவிரமான ஜனநாயக சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும், மக்கள் உணர்வை, ஒரு புதிய ஜனநாயக மாற்றை உருவாக்குவதை நோக்கி திசைவழிப் படுத்துவதற்கும் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும்.

இ. மய்ய அதிகாரம் வரையிலான அடுத்தடுத்த உயர்நிலை கட்ட அதிகாரங்களைப் பொறுத்தவரை, அதுபோன்ற உள்ளாட்சி அமைப்புக்கள்/அரசாங்கங்கள், பரந்ததொரு புரட்சிகர எதிரணியின் பிரிக்கமுடியாத அங்கமாக செயல்பட வேண்டும்.

ஈ.    கட்சியும் அதனால் தலைமை தாங்கப்படும் உள்ளாட்சி அமைப்புக்களும் அரசாங்கங்களும் ஜனநாயக சக்திகளின், ஜனநாயக உணர்வின், ஜனநாயக இயக்கங்களின் சுதந்திரமான வளர்ச்சி எந்த சூழ்நிலையிலும் தடைபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

      இந்தியாவின் காலனிய எதிர்ப்புப் போராட்டம், கம்யூனிச இயக்கம் மற்றும் வளர்ந்துவரும் பெருந்தொழில் குழும எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றின் வரலாற்றில், வேர்க்கால் மட்டங்களில் பல்வேறு வகை மக்கள் கமிட்டிகள், தொழிற்சாலைகள் மற்றும்/அல்லது தொழிலாளர் குடியிருப்புகளில் தொழிலாளர்கள் குடிமக்கள் கவுன்சில்கள் முதல் மக்கள் தன்னாட்சியின் வேறு வேறு வடிவங்கள் வரை, வேறுவேறு வடிவங்களில் அளவுகளில் மக்கள் அதிகாரம் அவை குறைந்த காலமே இருந்தவை எனினும் எழுந்த நிகழ்வுகள் பல உண்டு. மக்கள் நலன்களையும் உரிமைகளையும் காப்பதற்கான வெகுமக்கள் போராட்டங்களின் போக்கில், அதுபோன்ற உள்ளூர் அதிகாரங்கள் எழுகின்ற சாத்தியப்பாட்டை அடையவும் ஊக்கப்படுத்தவும் கட்சி விழைகிறது.

      விதிவிலக்கான தேசிய மற்றும் சர்வதேசிய சூழல்களில் - உதாரணமாய் ஒரு தீர்மானகரமான மக்கள் திரள் எழுச்சி நிலைமைகளில் - சமூக அரசியல் சக்திகளின் சமநிலை, ஒப்பீட்டு ரீதியில் அமைதியான வழியில் புரட்சிகர சக்திகளிடம் மய்ய அதிகாரம் மாற்றப்படுவதைக்கூட அனுமதிக்கும் சாத்தியப்பாட்டை கட்சி ஒதுக்கிவிடவில்லை. ஆனால், ஜனநாயக நிறுவனங்கள் சாரம்சத்தில் நொறுங்கிவிடக் கூடிய மற்றும் குறுகிய அடித்தளங்களைக் கொண்டுள்ள ஒரு நாட்டில், வெகுஜன சக்திகளின் சிறிய வெற்றிகளை, ஓரளவான சீர்திருத்தங்களை அடைவதற்கும் அவற்றைப் பாதுகாப்பதற்கும் கூட மக்களுடைய போர்க்குணத்தின் பலம் தேவைப்படுகிற ஒரு நாட்டில், பாட்டாளி வர்க்கக் கட்சி, அனைத்து சாத்தியமான எதிர்ப்புரட்சி தாக்குதல்கள் முன்னிலையிலும், இறுதியில் தீர்மானகரமான வெற்றியை அடைவது மற்றும் தக்கவைப்பது என்பதன் மூலம் புரட்சியை நிறைவேற்ற தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஆகவே, கட்சியின் ஆயுதக் கிடங்கில், ஒரு மக்கள் ஜனநாயக முன்னணியும் ஒரு மக்கள் ராணுவமும் புரட்சியின் இரண்டு மிகவும் அடிப்படையான அங்கங்களாக இருக்கும்.

 - தொடரும்

Search