COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Thursday, May 15, 2014

நோக்கியா தொழிலாளர் வேலை வாய்ப்பைப் பாதுகாக்க மே 9, ஏஅய்சிசிடியு மாநிலம் தழுவிய ஒருமைப்பாடு ஆர்ப்பாட்டம்

கார்ப்பரேட் நிறுவனங்களின் கைமாற்று விளையாட்டில், 7500 நோக்கியா தொழிலாளர்கள் வேலை இழக்கிறார்கள். 7500 தமிழகக் குடும்பங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழில் துவங்க பல்வேறு வசதிகளை செய்து தந்து, சலுகைகள், விலக்குகள் பல தர, தொழிலாளர் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்வதாகக் கூட, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடும் அரசாங்கங்கள், அந்த நிறுவனங்களில் வேலை செய்யப் போகிற தொழிலாளர் நலன்காக்க, அந்த நிறுவனங்களுக்கு சலுகைகளும் விலக்குகளும் வழங்கி உருவாக்கிய வேலை வாய்ப்புகளை தக்கவைத்துக் கொள்ள, அந்த நிறுவனங்களுக்கு எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை.

மத்திய அரசுக்கு ரூ.22,000 கோடி வரி பாக்கி, மாநில அரசுக்கு ரூ.2,400 கோடி வரி பாக்கி என்று கடைசி நேர கணக்கு சொல்லி, திருபெரும்புதூர் நோக்கியாவை மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு மாற்றுவது முடியாமல் போனது.

நோக்கியாவின் இளம் தொழிலாளர்களை விருப்ப ஓய்வுத் திட்டம் என்ற பெயரில் வீட்டுக்கு அனுப்ப நோக்கியா நிர்வாகம் முயற்சி செய்கிறது. 25 வயதே ஆகிற தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வா? 66 வயதாகிற ஜெயலலிதா பிரதமராகிவிட முயற்சி செய்கிறார். 90 வயதாகிற கருணாநிதி திமுகவுக்கு வாக்களித்தால் இன்னும் 50 ஆண்டுகள் அரசியலில் தொடர ஆசை என்கிறார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மூன்று மாதங்களுக்கும் மேலாக கொதித்துக் கொண்டிருக்கிற இந்தப் பிரச்சனை பற்றி, 7500 இளம் தொழிலாளர்கள், அவர்கள் குடும்பங்கள் பற்றி இன்னும் ஏதும் பேசவில்லை. நோக்கியா தொழிலாளர் வேலை வாய்ப்பு பாதுகாக்கப்பட வேண்டும். தமிழக அரசு இதற்கான முயற்சிகளை உடனடியாக எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் தழுவிய அளவில் ஏஅய்சிசிடியு மே 9 அன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது.

கோவை: பிரிக்கால் பிளாண்ட் 1, பிளாண்ட் 3 வாயில்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டங்களில் பிரிக்கால் சங்க நிர்வாகிகள் தோழர்கள் சுரேஷ்பாபு, சுவாமிநாதன், ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர் உரையாற்றினார்கள். சாந்தி கியர்ஸ் வாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்சிசிடியு நிர்வாகிகள் தோழர்கள் கோபால்சாமி, பாலமுருகன், ஆனந்தன் உரையாற்றினார்கள். 1000 தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர்.

சென்னை: காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்சிசிடியு மாநிலக் குழு உறுப்பினர் தோழர் ஏ.ஆர்.பாலகிருஷ்ணன், உரையாற்றினார். திருபெரும்புதூர் ஏசியன் பெயின்ட்ஸ் ஆலை வாயிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத் தலைவர்கள் ராஜேஷ், மகேஷ், ராஜன், உள்ளிட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நடந்த ஆர்ப்பட்டத்தில் ஓஎல்ஜி, சாய்மீரா, டிஜேபி, இன்னோவேட்டர்ஸ், கிளைமேக்ஸ், மெர்குரிபிட்டிங்க்ஸ், ஜெய் இஞ்சினியரிங் தொழிற்சாலைகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.சேகர், ஏஅய்சிசிடியு மாவட்ட நிர்வாகிகள் தோழர்கள் கே.வேணுபோபால், எஸ்.பாலகிருஷணன், ஜி.முனுசாமி, ஆர்.மோகன், பகுதி நிர்வாகிகள் தோழர்கள் ஜோசப், வீரராகவன், சுந்தரராஜ், ஆனந்தன், வரதராஜன், தனசேகர் கண்டன உரையாற்றினர்.
 
நெல்லை: ஆர்ப்பாட்டத்திற்கு ஏஅய்சிசிடியு மாவட்டப் பொதுச் செயலாளர் தோழர் கா.கணேசன் தலைமை தாங்கினார். ஏஅய்சிசிடியு மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் டி.சங்கரபாண்டியன், மாநில துணைத் தலைவர் தோழர் ஜி.ரமேஷ் கோரிக்கையை விளக்கிப் பேசினார்கள். ஏஅய்சிசிடியு மாவட்ட நிர்வாகிகள் அன்புச்செல்வி, சுந்தர்ராஜ், சேக்முகமது, திலகவதி, சுப்பிரமணியன், ஆவுடையப்பன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
நாமக்கல்: குமாரபாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் கே.கோவிந்தராஜ், நாமக்கல் மாவட்டப் பொதுச் செயலாளர் ஏ.கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள் தோழர்கள் எஸ்.சுப்பிரமணியன், பொன்.கதிரவன், கே.ஆர்.குமாரசாமி, ஆர்.எம்.ராஜ÷ ஆகியோர் உரையாற்றினார்கள்.

கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

- ஜி.ரமேஷ்

ஜெயலலிதா அரசுக்கு உயர்சிறப்பு சிகிச்சை தேவை

கடுமையான வெயிலில் தமிழ்நாடு முழுவதும் பறந்து பறந்து தேர்தல் பிரச்சாரம் செய்த களைப்பு நீங்க கொடநாடு சென்றாலும், பாழாய்ப்போன அரசியல் ஜெயலலிதாவை ஓய்வு எடுக்கவிடவில்லை. முல்லைப்பெரியாறு தீர்ப்பு மீது அவர் தனது பாத்யதையை நிறுவ வேண்டியதாயிற்று. தென்மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதை விட, கருணாநிதியை ஆட்ட அரங்கில் இருந்து விலக்கி வைக்கும் முயற்சியில், வரலாற்றுக் காரணங்கள் பல சொல்லி ஜெயலலிதா அறிக்கை விட, அஇஅதிமுகவினர், இந்த முறை பொன்னியின் செல்வி ஜெயலலிதாவுக்கு புதிதாக என்ன பட்டம் சூட்டுவது என்று தெரியாமல், குழப்பத்துடனேயே, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடித் தீர்த்தனர்.  

அதையும் முழுமையாக ஜெயலலிதாவால் கொண்டாட முடியாமல் போனது. தேர்தல் முடிந்து முடிவுகளுக்காக காத்திருக்கும் இந்த குறுகிய காலத்தில், தமிழ்நாட்டில், கருணைக் கொலைகள் செய்துவிடுங்கள் என்ற கோரும் இரண்டு மனுக்கள், ஜெயலலிதாவின் முகத்தின் முன் யதார்த்த ஆட்டம் ஆடின.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, குழித்துறை அரசு மருத்துவமனையில் தவறாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சையால் கோமா நிலைக்குச் சென்றுவிட்ட தனது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் அரசு செலவில் சிகிச்சை தர வேண்டும், இல்லையேல் அவரை கருணைக் கொலை செய்துவிட வேண்டும் எனக் கோரி முதலமைச்சர் தனிப்பிரிவில் மனுக் கொடுத்துள்ளார். குழித்துறையில் செய்யப்பட்ட சிகிச்சை முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் செய்யப்பட்டது. இந்த செய்தி தமிழ்நாட்டு பத்திரிகைகளில் மே 9 அன்று வெளியானது.

மனைவிக்கு டான்சில்ஸ் அறுவை சிகிச்சை செய்ய தனியார் மருத்துவமனை கேட்ட ரூ.60,000 ஏற்பாடு செய்ய முடியாததால், அரசு மருத்துவமனையை நாடினார். இப்போது, கோமாவில் இருக்கும் மனைவியைக் காப்பாற்றும் தவிப்பில் ரூ.3.5 லட்சம் வரை கடனாளியாகிவிட்டார். மனைவி மீது அளவுகடந்த அன்பு கொண்ட அந்தக் கணவன், மேலும் கடன் வாங்க வழியின்றி, இன்னும் அலைந்துதிரிய தெம்பின்றி, கருணை கொலை செய்து விடுங்கள் என்று கோருகிறார்.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் என்ற 17 வயது இளைஞருக்கு தொண்டையில் புற்றுநோய் முற்றி, அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை கைவிட்டுவிட்டது. கருணைக் கொலை வேண்டுமென மனு கொடுத்துள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியர் சென்னையில் உள்ள பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டு, ஏப்ரல் 30 அன்று சக்திவேல் அங்கு அனுமதிக்கப்பட்டார்.

வேலூரில் சிகிச்சை துவங்கி கடைசியாக சென்னைக்கு வந்து சேர்ந்ததற்கு இடைபட்ட காலத்தில் அவரும் தமிழ்நாட்டில் வெவ்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளைப் பார்த்துவிட்டார். அதுதான் அந்த இளைஞரை சாவைப் பார்க்கத் தூண்டியிருக்க வேண்டும்.

ஜெயலலிதா, திடீரென்று தொலைக் காட்சியில் தோன்றி கருணைக் கொலை கேட்ட சுப்ரமணியத்தின் மனைவி சீதாலஷ்மிக்கு சிறப்பு மருத்துவம் உறுதி செய்ய சிறப்புக் குழுவும் குடும்பத்துக்கு உதவித் தொகையாக ரூ.5 லட்சமும் அறிவித்தார். குழுவைச் சேர்ந்தவர்களும் தொலைக்காட்சி காமிராக்கள் முன் அந்த நோயாளியைச் சந்தித்தார்கள்.

2012 ஜூலையில் கும்பகோணத்தில் இருந்து பிழைப்புக்கு ஈரோட்டுக்கு வந்து சேர்ந்த ஜெயா, தனது மகள் மதுமிதாவுக்கு சிகிச்சை தர முடியாததால் கருணைக்கொலை கேட்டார். அதற்கு முன்பு மதுரை, திருச்சி, தஞ்சை என பல மருத்துவமனைகளை பார்த்துவிட்டார். பிறகு மறுவாழ்வு இல்லத்தில் அந்தச் சிறுமியை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் பொருளுள்ள மருத்துவம் வேண்டும் என்றால், கருணைக் கொலைக்கு மனு தர வேண்டும் என்பது விதியாகிவிடுமா? மனுதரக் கூட முடியாமல் சாவுடன் போராடிக் கொண்டிருப்பவர்களுக்காக, வந்த நோய் என்ன என்றே தெரியாமல் கரைந்து கொண்டிருப்பவர்களுக்காக யார் நடவடிக்கை எடுப்பார்கள்? அரசு மருத்துவமனையில் உயிர்காக்கும் உபகரணங்கள் பழுதானதால் உயிர் விட்டவர் குடும்பத்துக்கு என்ன பதில்? ஜெயலலிதாவின் மூன்றாண்டு கால ஆட்சியில், திராவிடக் கட்சிகளின் 54 ஆண்டு கால ஆட்சியில் மிஞ்சுவது கருணைக் கொலை மனுதானா?

2011 முதல் 2013 மார்ச் வரை, தமிழ்நாட்டில் உள்ள 38 அரசு மருத்துவமனைகளில் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்றவர்கள் 5,02,53,049 பேர். இதே காலகட்டத்தில் உள் நோயாளிகள் 1,72,01,656 பேர். தமிழக அரசு தரும் விவரங்கள், தமிழ்நாட்டின் ஏகப் பெரும்பான்மை மக்கள் அரசு மருத்துவமனைகளை நம்பித்தான் இருக்கின்றனர் என்று தெளிவாகச் சொல்கின்றன. அப்படியானால் அங்கு அலங்காரமாக அம்மா உணவகம் அமைத்தால் மட்டும் போதாது. அனைத்து அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு, உள்கட்டுமான வசதிகளுக்கு எந்தக் குறைவும் இருக்கக் கூடாது.

இவ்வளவு நோயாளிகளையும் பார்த்துக் கொள்ளும் பணியில், மருத்துவர், செவிலியர், மருத்துவம் சார்ந்த பிற பணியாளர் என அனைத்து வகைகளுக்குமாகச் சேர்த்து வெறும் 22,375 பேரை அமர்த்தியிருக்கிறது தமிழக அரசு. ஜெயலலிதா கார் ஓட்ட ஒருவர், அவர் செல் போனை வைத்துக் கொள்ள ஒருவர், அவருக்கு தரப்படும் பூங்கொத்துக்களை வாங்க ஒருவர் என சாதாரண நடமாட்டத்துக்கே அவருடன் ஒரு நாளில் சில பத்து பேர் தேவைப்படும் போது, கோடிக்கணக்கானவர்களுக்கு சிகிச்சை தர இந்த ஊழியர்களால் எப்படி முடியும்?

ஆரம்ப சுகாதார மய்யங்களில் செவிலியர்கள் தொகுப்பூதியத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். தனியார் கல்லூரி செவிலியர்களுக்கு அரசுப் பணி தொடர்பான பிரச்சனை வந்தபோது, அரசு செவிலியர் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் பயிற்சி என்ற பெயரில் எவ்வளவு கடுமையாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்று தமிழ்நாடு தெரிந்து கொண்டது. அரசுப் பணிகளில் உள்ள செவிலியர்கள் கடுமையான வேலைப் பளுவால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி, விருப்ப ஓய்வுத் திட்டத்தில் சென்று விடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பயிற்சி மருத்துவர்கள் கடுமையான வேலைப் பளுவை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று சென்ற ஆண்டில் அவர்கள் நடத்திய போராட்டங்கள் வெளிப்படுத்தின. அரசு மருத்துவமனைகளில் பணிகளில் ஈடுபடுத்தப்படும் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு உதவித் தொகை பாக்கி கூட தமிழக அரசு வைத்திருக்கிறது. தூய்மைப் பணி ஒப்பந்தக்காரரிடத்தில். ஒப்பந்தத்தில் தூய்மை இல்லாததால் அரசு மருத்துவ மனைகள் தூய்மைக் கேட்டில் உள்ளன.

கட்டணமில்லா, விலையில்லா என்ற அரிய சொற்களை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்திய  பெருமை படைத்த ஜெயலலிதா, அந்தச் சொற்களை தரமான மருத்துவத்துக்கும் விரிவுபடுத்த மறுக்கிறார். மூன்று ஆண்டுகளாக அவரது ஆட்சி பற்றி அவர் கட்டி எழுப்புகிற பிம்பங்கள் உடனுக்குடன் சிதறிவிடுகின்றன.

    அனைத்தும் தழுவிய மக்கள் விரோத நடவடிக்கைகள், அலட்சியம் என்ற அதிதீவிரமான, தீராத நோயால் பீடிக்கப்பட்டிருக்கிற ஜெயலலிதா அரசாங்கத்துக்கு உயர் சிறப்பு சிகிச்சை தேவைப்படுகிறது. தமிழக மக்களே இந்த விசயத்தில் சிறப்பு மருத்துவர்கள்.

மே 25, நக்சல்பாரி தினம். அனைத்து அதிகாரமும் மக்களுக்கே

நக்சல்பாரியில் விவசாயப் போராட்டம் துவங்கி ஆண்டொன்று கடந்து விட்டது. இந்தப் போராட்டம் மற்ற அனைத்து விவசாயப் போராட்டங்களில் இருந்தும் மாறுபட்டது. எங்குள்ளது அந்த மாறுபாடு? பல்வேறு அநீதிகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக விவசாயிகள் எப்போதும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் பகுதித்தன்மை கொண்ட கோரிக்கைகளுக்காக மட்டுமின்றி அரசு அதிகாரத்தைக் கைப்பற்றவும் அப்போதுதான் முதல் முறையாக போராடினார்கள். நக்சல்பாரி விவசாயப் போராட்டத்தில் இருந்து நமக்கு பாடம் எதுவும் இருக்குமானால், அது இதுதான்: போர்க்குணமிக்க போராட்டங்களை நிலத்துக்காக, விளைச்சலில் பங்குக்காக நடத்தக் கூடாது; அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக நடத்த வேண்டும். இதுதான் நக்சல்பாரி போராட்டத்துக்கு அதன் தனித்தன்மையை தருகிறது. பல்வேறு பகுதிகளிலும் இருக்கும் விவசாயிகள், தங்கள் பகுதிகளில் உள்ள அரசு பொறியமைவுகள் செயலற்றுப் போகும்படிச் செய்யும் விதம் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் விவசாயப் போராட்டங்களின் வரலாற்றில், நக்சல்பாரியில்தான் முதல்முறையாக இந்த வழி கடைபிடிக்கப்பட்டது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், புரட்சிகர சகாப்தம் துவக்கப்பட்டுவிட்டது; இது, அந்த சகாப்தத்தின் முதல் ஆண்டு. இதனால்தான், எல்லா நாடுகளிலும் உள்ள புரட்சியாளர்கள் நக்சல்பாரி போராட்டத்தை நெஞ்சு நிறைய வரவேற்கிறார்கள்.

இந்தியா, ஏகாதிபத்தியத்தின், திரிபுவாதத்தின் அடித்தளமாக மாற்றப்பட்டுவிட்டது; இன்று, விடுதலைக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு எதிரான பிற்போக்கு சக்திகளின் அடித்தளமாக செயல்படுகிறது. எனவே, நக்சல்பாரி போராட்டம் தேசிய அளவிலான ஒரு போராட்டம் மட்டும் அல்ல; அது ஒரு சர்வதேச அளவிலான போராட்டமும் கூட. இந்தப் போராட்டம் கடினமானது. நாம் தேர்ந்தெடுக்கிற பாதை எளிதானதோ, மென்மையானதோ அல்ல. அங்கு சிரமங்கள் இருக்கும்; ஆபத்துக்கள் இருக்கும்; பின்னடைவுகள் கூட இருக்கும். ஆனால், புதிய சர்வதேசியத்தின் உணர்வால் பற்ற வைக்கப்பட்ட விவசாயிகள் இவை அனைத்தையும் மீறினார்கள்; இவை அனைத்துக்கும் அடங்க மறுத்தார்கள். தங்கள் போராட்டப் பாதையில் தொடர்ந்து செல்கிறார்கள்.

ஒரு சிறிய பகுதியில் நடந்த இந்தப் போராட்டத்தின் செய்தி இந்தியாவின் மூலைமுடுக்குகளுக்கு எல்லாம் பரவியிருப்பதை, கடந்த ஓராண்டுகால நமது அனுபவம், காட்டுகிறது. இப்போது இருக்கிற அனைத்து அரசியல் கட்சிகளும் நக்சல்பாரி போராட்டத்தை எதிர்த்தன. ஆயினும் மக்கள் இந்தப் போராட்டத்தை ஒட்டியே சிந்திக்கிறார்கள்; இந்தப் போராட்டம் வகுத்திருக்கிற பாதையில் செல்ல முன்வருகிறார்கள். நக்சல்பாரி போராட்டத்தின் வீரமிக்க தலைவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள்;     பிற்போக்கு அரசாங்கம் எவ்வளவு முயற்சி செய்தும் அவர்களை அழிக்க முடியவில்லை. அனைத்து பிற்போக்காளர்களும் காகிதப் புலிகள். பிற்போக்காளர்கள் தோற்றத்தில் அச்சம் உருவாக்குபவர்களாக இருப்பார்கள். ஆனால், யதார்த்தத்தில் அவர்கள் அவ்வளவு சக்திவாய்ந்தவர்கள் அல்ல என்ற தலைவர் மாவோவின் சொற்கள் எவ்வளவு உண்மை என்பதை இது காட்டுகிறது.

காலனியமும் ஏகாதிபத்தியமும் அனைத்து சுரண்டல் அமைப்பு முறைகளும் முழுமையாக வீழ்வதும், உலகில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் தேசங்கள் முழுமையாக விடுதலை பெறுவதும் வெகுதொலைவில் இல்லை.

விடுதலையின், அந்த அறிவார்ந்த சூரியஒளியை கொண்டு வர நாம் முன்னோக்கிச் செல்வோம்.

- சாரு மஜூம்தார், லிபரேசன், ஜூன் 1968

வாரணாசி தேர்தல்கள், பிற பிரச்சனைகள் பற்றிய இகக மாலெ நோக்குநிலை

இகக மாலெ பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யாவுடன்
அஜாஸ் அஷ்ரஃப் நடத்திய நேர்காணல், லைவ் மின்ட், மே 5 2014.


கேஜ்ரிவாலை ஆதரிப்பது என்ற முடிவை இகக மாலெ ஏன் எடுத்தது? வாரணாசி தேர்தல் எந்த விதத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் பெறுகிறது?

வாரணாசியில் கேஜ்ரிவாலை ஆதரிப்பது என்ற எங்கள் முடிவு, 2014 வாரணாசி தேர்தல் தொடர்பாக உள்ள குறிப்பான அரசியல் பின்னணியின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. அதிகாரத்தை பிடிப்பதற்கான பாஜகவின் முயற்சி, தற்போதைய தேர்தலில், முழுக்க முழுக்க மோடியை மய்யங்கொண்ட பிரச்சாரமாக வடிவெடுத்துள்ளது.

தேசிய அளவில் தேர்தல்ரீதியான அங்கீகாரம் மற்றும் தலைமைக்கான தனது பாத்யதையை முன்னிறுத்த மோடி வாரணாசியை தேர்ந்தெடுத்துள்ளார். எனவே மோடியின் வாரணாசி பயணத்தை எதிர்ப்பதும் மோடி வகைப்பட்ட, கார்ப்பரேட்டுகளால் செலுத்தப்படுகிற மதவெறி அரசியலை அம்பலப்படுத்துவதும் சவாலுக்கு உட்படுத்துவதும் மிகவும் முக்கியமானது.

மோடி வாரணாசியை தேர்ந்தெடுத்திருப்பது அரசியல்ரீதியான அடையாளவாதம் நிறைந்ததும் ஆகும். இந்தியாவின் பல்கலாச்சார, பன்மைவாத மரபை மிகவும் நெகிழ்ச்சியுடன் தட்டியெழுப்பச் செய்யும் விதம் முன்வைப்பதன் முழுவடிவமாக இருக்கிற நகரம் வாரணாசி. இந்த மரபை சிதைவுக்கு உள்ளாக்கி அதற்கு மதவெறி திருப்பம் தர சங் பரிவார் முயற்சி செய்கிறது. சங் பரிவாரின் அயோத்தி நோக்கிய பயணத்தின்போது, அயோத்தி, காசி மற்றும் மதுராவின் முன்னோட்டம் மட்டுமே என்ற முழக்கத்தை நாம் அடிக்கடி கேட்டோம்.

மோடி வேட்பு மனு தாக்கல் செய்ததை ஒட்டி நடந்த பேரணியில் நாம் இன்னும் ஓர் ஆபத்தான கூக்குரலை கேட்டோம். உத்தரபிரதேசத்தில் குஜராத் நிகழ்த்தப்படும். அது காசியில் இருந்து துவங்கும். முசாபர்நகர் படுகொலைகள் நடந்துள்ள பின்னணியில், இது போன்ற முழக்கங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி ஆபத்தான் அதிர்வலைகள் கொண்டுள்ளன.

எல்லா விசயங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கும்போது, ஜனநாயகம் விரும்பும் அனைவரும், மக்கள் இயக்கங்களும், வாரணாசியில் மோடியின் மதவெறி எதேச்சதிகார பிரச்சாரத்துக்கு எதிராக துணிச்சலான போராட்டத்தை முன்நிறுத்தியாக வேண்டும். வாரணாசியில் போட்டியிடவுள்ளதாக கேஜ்ரிவால் அறிவித்தபோது, ஜனநாயகத்தை, நமது பன்மைவாத மரபை பாதுகாப்பது என்ற நோக்குநிலையில் இருந்து அவரை ஆதரிப்பது என்று முடிவு செய்தோம்.

கேஜ்ரிவால் வாரணாசியில் போட்டியிடாமல் இருந்திருந்தால் இகக மாலெ அங்கு போட்டியிட்டு இருக்குமா?

வாரணாசி எங்கள் பட்டியலில் இல்லை. சந்தோலி, ராபர்ட்ஸ்கஞ்ச் மற்றும் மீர்சாபூர் போன்ற, இந்த பிராந்தியத்தின் வேறு தொகுதிகளில் நாங்கள் கவனம் குவித்துள்ளோம். ஆனால், கேஜ்ரிவால் வாரணாசியில் போட்டியிடாமல் இருந்திருந்தால், நாங்கள் எங்கள் வேட்பாளரை நிறுத்துவது பற்றியோ அல்லது மோடிக்கு எதிராக வேறொரு வேட்பாளரை ஆதரிப்பது பற்றியோ நாங்கள் யோசித்திருக்கலாம்.

இககமாவும் வாரணாசியில் வேட்பாளரை நிறுத்தியிருக்கிறது. இககமா போட்டியில் இருந்து விலக வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

வாரணாசியில் போட்டியிடும் இககமாவின் முடிவை நான் மதிக்கிறேன். ஆம் ஆத்மி கட்சிக்கு இககமாவின் ஆதரவு வேண்டும் என்றால் அதற்கு ஆம் ஆத்மி கட்சி தலைமைதான் இககமா தலைமையை அணுக வேண்டும். ஆனால் இப்போது அதற்கு காலம் கடந்துவிட்டதாக நான் கருதுகிறேன். இது ஆம் ஆத்மி கட்சி சந்திக்கும் முதல் மக்களவை தேர்தல். எனவே எத்தனை வேட்பாளர்களை நிறுத்த முடியுமோ அத்தனை வேட்பாளர்களை நிறுத்தி தங்கள் இருத்தலை பரவலாக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். ஒரு கட்சியையோ, ஓர் இயக்கத்தையோ கட்டியெழுப்புவதற்கான காத்திரமான முயற்சியை இது உண்மையில் பிரதிபலிக்கவில்லை. தேர்தல்கள் முடிந்த பிறகு ஆம் ஆத்மி கட்சி கூட சுயபரிசோதனை செய்துகொள்வதற்கான நிறைய விசயங்களை பெற்றிருக்கும் என்று நான் உறுதியாக சொல்ல முடியும்.

ஆம் ஆத்மி கட்சி போன்ற ஒரு கட்சி வெகுமக்கள் கற்பனையை பற்றிக்கொண்டது போல், இடதுசாரிகள் செய்ய முடியவில்லையே, ஏன்?

டில்லியில் அதன் முதல் முயற்சியிலேயே ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் கண்கவர் வெற்றி பெற்றது உண்மைதான். பிற இடங்களிலும் வெகுமக்கள் கற்பனையை பற்றிக் கொள்ள இது உதவியது. கடந்த காலத்திலும், இப்போதும், பல்வேறு கட்டங்களில், டில்லியின் பெருநகர சூழலை விட சிக்கலான, கடினமான தளங்களில், இடதுசாரிகளின் பல்வேறு பிரிவினரும் மக்கள் கற்பனையை பற்றிக்கொண்டுள்ளனர். மக்கள் கற்பனையை பற்றிக் கொள்வது, அவர்கள் நம்பிக்கையை, விருப்பங்களை தட்டியெழுப்புவது ஆகியவற்றை, மக்கள் நலன்களுக்காக சேவை செய்வது, அவர்கள் உரிமைகளைப் பெறுவது, விரிவாக்குவது என்ற இன்னும் பெரிய தளத்தில் இருந்து பார்க்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சியின் பயணம் இப்போதுதான் துவங்கியுள்ளது. மக்கள் நலன்களுக்காக சேவை செய்யும் அதன் ஆற்றல், மிகவும் முக்கியமாக, நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒடுக்குமுறை மற்றும் அநீதியின் ஆழப்பரவியுள்ள கட்டமைப்புகள் மற்றும் வடிவங்கள் ஆகியவற்றை எதிர்கொள்வதில் அதன் ஆற்றல் மற்றும் தயார்நிலை ஆகியவை இன்னும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.

மேற்கு வங்கத்திலோ, தேசிய அரசியலிலோ, இககமா தலைமையிலான மாதிரி சரிந்துவிட்டதைத் தொடர்ந்து, நாட்டின் இடதுசாரி இயக்கம் ஒரு சவால்மிக்க மாறிச்செல்கிற, மறுதிசை வழியிலான கட்டத்தின் ஊடே சென்று கொண்டிருக்கிறது. இந்த ஒட்டுமொத்த சூழலிலும் பின்னணியிலும், இககமாலெயும் அதனுடன் இணைந்துள்ள பல்வேறு வெகுமக்கள் அமைப்புக்களும் ஜனநாயக இயக்கத்தை முன்னகர்த்துவதில், புரட்சிகர பதாகையை உயர்த்திப் பிடிப்பதில் ஒரு முக்கியமான பங்காற்றிக் கொண்டிருக்கின்றன.

இந்த கட்டத்தில் நிகழ்ந்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சி, உண்மையில் ஒரு சுவாரசியமான நிகழ்வே. இது பலப்பல சாத்தியப்பாடுகளை கொண்டுள்ளது. கார்ப்பரேட் சூறையாடல், ஜனநாயகம் கார்ப்பரேட்டுகளால் சீர்குலைக்கப்படுவது ஆகியவற்றுக்கு எதிரானப் போராட்டம் தீவிரமடையும்போது, புரட்சிகர இடதுசாரிகளும் ஆம் ஆத்மி கட்சியும் தங்கள் நிலைகளை மதிப்பிட்டுக் கொண்டு, பொருளுள்ள ஒத்துழைப்புக்கான சாத்தியப்பாடுகளை கண்டறிய வேண்டும்.

தங்கள் இயல்பான சமூக அடித்தளம் என்று இடதுசாரிகள் கருதும் மக்கள் மத்தியில்  உள்ள நுகர்வுவாத கலாச்சாரத்தை எவ்வாறு எதிர்கொள்ள முடியும்?

உலகமயமாகிக் கொண்டிருக்கிற இந்திய பொருளாதாரம், தகுதிபெற்ற நுகர்வாளர்கள் என்று கருதாத கிராமப்புற வறியவர்களும் உழைக்கும் மக்களின் அமைப்புசாரா பிரிவினரும்தான் இன்னும் கூட இடதுசாரி இயக்கத்தின் மேலோங்கிய சமூக அடித்தளம். அவர்களுடைய நுகர்வு தேவைகள் அடிப்படை தேவைகளால் செலுத்தப்படுபவையே தவிர, ஆடம்பரத்தாலோ, பேராசையாலோ செலுத்தப்படுபவை அல்ல.

எப்போதும் விரிவடைந்து கொண்டே இருக்கிற நடுத்தர வர்க்கத்தின் செழிப்பு என்ற புனைவை முன்னகர்த்துவதற்கு மாறாக, ஆடம்பர மேட்டுக்குடி வாழ்க்கை முறைகள் கொண்ட உச்சியில் இருக்கிற ஒரு சிறு பிரிவு அதிபணக்காரர்கள் ஒருபுறமும், தேவைக்கு நுகர முடியாத நிலை தீவரப்படுவது, திணிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு இட்டுச் செல்கிற அரசின், சந்தையின் கிடுக்கிப்பிடி தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுகிற உழைக்கும் மக்களின் மேலோங்கிய பெரும்பான்மை மறுபுறமும் என சமூகத்தை மூலதனம் இன்று துருவப்படுத்துகிறது.

     நாம் எதிர்கொள்கிற அதீத சமத்துவமின்மையும், பெருமளவிலான சுற்றப்புறச் சூழல் பேரழிவும், நிச்சயம், ஒரு பெரிய சமூக, அரசியல், கலாச்சார கடைதலை உருவாக்கும். நுகர்வாத ஆபத்துக்களைப் பற்றி கவலைப்படுவதைவிட, இந்த கடைதலில் இருந்து பெருமளவில் ஆதாயம் அடைவதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

16 முறை நாடாளுமன்றத் தேர்தல் முடிந்துவிட்டது. தீண்டாமை ஒழிந்துவிட்டதா? - காம்ரேட்

டாக்டர் அம்பேத்கர் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதினார் என அதிகாரத்தில் இருப்பவர்களும், ஆதிக்க சாதியினரும் கூடச் சொல்கிறார்கள். நாடெங்கும் இருக்கும் அம்பேத்கர் சிலைகளில் அவர் கையில் ஒரு புத்தகம் இருக்கும். பரவலாக, அந்தப் புத்தகம், இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்ற புரிதலே பொதுப் புத்தியில் உள்ளது. நிச்சயமாக, அது அம்பேத்கர் எழுதிய ‘சாதியை அழுத்தொழிப்பது’ என்ற புத்தகம் எனப் பேசப்படுவதில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 17 ‘தீண்டாமை நீக்கப்படுகிறது, தீண்டாமை எந்த வடிவத்திலும் நடை முறைப்படுத்தப்படுவதும் தடை செய்யப்படுகிறது. தீண்டாமையின் மூலம் எந்த பாதிப்பாவது எழுந்தால், அது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் ஆகும்’, எனப் பிரகடனம் செய்கிறது.

நீச் ராஜ் நீதிக்கு‘எதிரான’ மோடியின் குஜராத்தில்
 
பிரியங்கா வதேரா, தனது சகோதரர்க்கும் தாய்க்கும் ஆதரவாகப் பிரச்சாரம் செய்யும்போது, மோடி ‘கீழ்த்தரமான அரசியலில்’ ஈடுபடுகிறார் என்றார். ‘நீச்’ என பிரியங்கா பேசியது, தம்மைக் ‘கீழ் சாதிக்காரன்’ என அவர் அவமதிப்பதாகும் என மோடி, எகிறி குதித்துப் பாய்ந்தார். அட, என்ன ஆச்சர்யம்! மோடியின் தமிழ்நாட்டுக் கூட்டாளிகள், இவற்றையெல்லாம் முன்னரே உணர்ந்துதான்  வடநாட்டு வெண்தாடி வேந்தர் என மோடியை, பெரியாருடன், சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடிக்கச் சொன்ன பெரியாருடன் ஒப்பிட்டனரோ?

2014ல்தான், மோடி இதர பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்ற விஷயம் சொல்லப்படுகிறது.

இந்துத்வா, இசுலாமியர்களுக்கும் தலித்துகளுக்கும் எதிராகச் செயல்படுகிறது. ‘நாம் எதிர் அவர்கள்’ என்ற சமன்பாட்டை, அது, இரு தளங்களில் செயல்படுத்துகிறது. இரட்டைக் குழல் துப்பாக்கியின் ஒரு குழல் இசுலாமியர்க்கு எதிரானது. மறு குழல் தலித்துகளுக்கு எதிரானது.

மதவெறியும் சாதியமும் கை கோர்க்கின்றன. மேல் சாதியினர், இசுலாமியர் கிறிஸ்துவர், தலித்துகள் பழங்குடியினர் போக, சாதி இந்துக்கள், அதாவது பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இந்திய மக்கள் தொகையில் 50%க்கும் மேல் இருப்பார்கள். இந்து எதிர் இசுலாமியர், சாதி இந்து அதாவது பிற்படுத்தப்பட்டோர் எதிர் தலித்துகள் என்ற சமன்பாட்டின் அடிப்படையில்தான், அந்தச் சந்திப்புப் புள்ளியில்தான் நரேந்திர மோடியும் ராமதாசும் கை கோர்த்துக் கொள்கிறார்கள்.

நாடெங்கும், தலித் விரோத நடவடிக்கைகள், தலித்துகள் மீதான ஒடுக்குமுறைகள் தடையின்றித் தொடர்கின்றன. அச்சமற்ற சுதந்திரம் பெண்களுக்கு வேண்டும் என, 2012 டிசம்பரில் இளம் ஆண்களும் பெண்களும் ஓர் இளம் பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டபோது, அதிகாரத்திற்கு எதிராக ஆர்த்தெழுந்தது, நிச்சயம் ஒரு வரலாற்று நிகழ்வுதான். அதே 2012ல் 1574 தலித் பெண்கள் நாடெங்கும் பாலியல் வன்முறைக்கு ஆளாயினர். 651 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில், தலித்துகள் மட்டுமே போட்டியிடும் தனித் தொகுதிகளில், நோட்டா பொத்தானை (நன் ஆஃப் த அபவ் - மேலே உள்ள யாரும் இல்லை) கணிசமான சாதி இந்துக்கள் அழுத்தி உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

ஹரிஜன் எனப் பேசிய காந்தியின் குஜராத்தில், இந்தியாவிற்கு முன் மாதிரியாக நிறுத்தப்படும் குஜராத்தில், தீண்டாமை நிலவரம் என்ன? 2007லிருந்து 2010 வரை நவ்சர்ஜன் அறக்கட்டளை குஜராத்தின் 1589 கிராமங்களில் நடத்திய ஆய்வின் விவரங்கள் பின்வரும் உண்மைகளைச் சொல்கின்றன.

    98.4% கிராமங்களில் தலித்துகள் பிற சாதியினரைத் திருமணம் செய்ய முடியாது. (செய்தால் வன்முறை வெடிக்கும், கவுரவக் கொலை நடக்கும் எனச் சொல்லத் தேவையில்லை).

    98.1% கிராமங்களில் தலித் அல்லாதவர்கள் வசிக்கும் பகுதிகளில் தலித்துகள் குடியிருக்க முடியாது.

    97.6% கிராமங்கில் தலித் அல்லாதோர் தண்ணீர் குடங்களை, பாத்திரங்களை தலித்துகள் தொடக் கூடாது.

    67% கிராமங்களில் தலித் உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு தனிக் குவளைகளில்தான் தேநீர் தரப்படுகிறது. 56% கிராமங்களில் இரட்டைக் குவளை முறை, அதாவது தலித்துகளுக்கு தனியாக தேநீர் தரும் முறை, நடைமுறையில் உள்ளது.

    53% பள்ளிகளில் தலித் மாணவர்களுக்கு மதிய உணவு தனிப் பந்தியில்தான் பரிமாறப்படுகிறது. பொதுவான தண்ணீர் குடம்/பானை கிடையாது. அங்கு தலித் மாணவர்கள் அவரவர் வீடுகளுக்குச் சென்றுதான் தண்ணீர் குடிக்க முடியும்.

    45.4% கிராமங்களில் தலித்துகள் கடைகளுக்குள் நுழைய முடியாது. வெளியேதான் நின்றாக வேண்டும்.

எல்லோருக்கும் சம நீதி, எல்லோருடனும் எல்லோருக்குமான வளர்ச்சி என்ற நரேந்திர மோடியின் முழக்கங்கள், குஜராத்தில் இசுலாமியர்களுக்கு மட்டுமல்லாமல் தலித்துகளுக்கும் பொருந்தாது என்ற உண்மையைச், சுலபமாக, மேலே தரப்பட்டுள்ள விவரங்களிலிருந்து அறியலாம்.

இந்தியாவில் இப்போதும்
மனிதர் மலத்தை மனிதர் அள்ளும் கொடுமை தொடர்கிறது

ஜூன் 1, 2008ல், உச்சநீதிமன்ற நீதிபதி எச்.கே. சீமா, மலத்தைக் கையால் அள்ளுபவர்/கையாள்பவர் எனக் கடைசியாக ஒருவர் கூட இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் வரை, சஃபாய் கரம்சாரி அந்தோலன் வழக்கை முடிக்க மாட்டோம் என்றார். 2013ல் கையால் மனித மலம் அள்ளும் வேலையைத் தடுத்தல் மற்றும் அவர்கள் மறுவாழ்வு சட்டம் 2013 என்ற முழுமையான சட்டம் வந்துவிட்டதால், இனி வழக்கு தொடர்ந்து நடத்தப்பட வேண்டியதில்லை என மார்ச் 27, 2014 அன்று, தலைமை நீதிபதி சதாசிவம் உள்ளிட்ட அமர்வம் முடிவு செய்தது.

2013 சட்டத்திற்குப் பிறகு 2014 தீர்ப்பிற்குப் பிறகு, 96 லட்சம் உலர் கழிப்பறைகள் உள்ளன. அவற்றை நேரடியாக கைகளால் சுத்தம் செய்பவர்கள் 12 லட்சம் பேரும் உள்ளனர்.

கழிவகற்றும் பணியில் இறந்தால் நஷ்ட ஈடு ரூ.5 லட்சம் என்பது ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சாக்கடைகளில் பாதுகாப்பு கருவிகளோடு நுழையாவிட்டால்தான் சட்ட விரோதம் எனச் சொல்லப்படுகிறது.
   
கழிவகற்றும் பணியில் மனிதர் ஈடுபடுவது தொடர்வதை, பாதுகாப்பு கருவிகள் இருப்பது நல்லது எனச் சொல்வதன் மூலம், ஏதோ ஒரு விதத்தில் அங்கீகரிப்பதாகத்  தெரிகிறது. இந்தியாவின் ரயில்வே தண்டவாளங்கள், நீக்கமற மனிதக் கழிவு நிறைந்த இடங்கள். 12,000 பயணிகள் ரயில்கள் உள்ளன.

59,000 பயணிகள் பெட்டிகள் உள்ளன. எவ்வளவு கழிப்பிடம் எத்தனை பேர் கழிப்பறையை உபயோகிப்பார்கள் என எவரும் கணக்கிடலாம். வெறும் 504 கழிப்பறைகள் மட்டுமே தாமாகவே சுத்திகரிப்பு செய்து கொள்பவை. ரயில்வே தன்னிடம் மனித மலம் அகற்றும் வேலை செய்பவர் எவரும் இல்லை என்ற மாபெரும் பொய்யைச் சொல்கிறது. மனித மலத்தை, சாக்கடைகளை மனிதர்கள் சுத்தப்படுத்துவது தொடரும் வரை, தீண்டாமை தொடர்கிறதுதானே? அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 17, 2014 வரை காகிதப் புலியாகவே உள்ளது.

‘மகாத்மா’‘அண்ணல்’ 
‘காந்தி அடிகளார்’சிந்தனை முதல்
நரேந்திர மோடி சிந்தனை வரை
இந்துத்வா இழையோடுகிறது


பவ நகரில் கத்தியவார் அரசியல் மாநாட்டை 8.01.1925 அன்று காந்தி துவங்கி வைத்தார். அப்போது அவர் பேசினார். ‘எனக்கு ஏதாவது ஓர் இடம்/பதவி வேண்டுமென்றால், அது பங்கியின் (வால்மீகி) இடமே. அசுத்தத்தை சுத்தம் செய்யும் புனிதப் பணியை ஒரு பார்ப்பனரும் செய்ய முடியும், ஒரு பங்கியும் செய்ய முடியும்.  பார்ப்பனருக்கு அதன் புனிதத் தன்மை தெரியும். பங்கிகளுக்கு அதன் புனிதத் தன்மை தெரியாது. நான் இருவரையும் மதிக்கிறேன், போற்றுகிறேன். இருவரில் எந்த ஒருவர் இல்லாவிட்டாலும் இந்துயிசம் அழிந்து விடும். எனக்கு சேவையின் பாதை பிடிக்கும். அதனால் பங்கியைப் பிடிக்கும். எனக்கு அவர்களோடு சேர்ந்து உணவு உண்ண எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால் அவர்களோடு திருமண உறவு கொள்ளுமாறு சமபந்தி போஜனம் செய்யுமாறு உங்களிடம் சொல்லவில்லை. எப்படி அப்படி ஆலோசனை சொல்ல முடியும்?’ காந்தியார் தெளிவாகத்தான் இருக்கிறார்.

 இந்து மதத்தின் பிடியிலிருந்து தலித்துகள் ஒரு போதும் விலகக் கூடாது. பங்கிகள் (மலம் அள்ளுபவர்கள்) போன்ற தலித்துகள் தாம் செய்யும் பணிகளை, தமக்குப் புனிதமாக விதிக்கப்பட்டவை என ஏற்று, அவற்றை சேவையாகச் செய்ய வேண்டும். (பார்ப்பனர் மலம் அள்ள மாட்டார் எனத் தெரிந்த காந்தி, பார்ப்பனரும் பங்கிகள்போல் மலம் அள்ளலாம் என்று துவங்குகிறார்). மற்ற சாதியினர்க்கு இது போன்ற கடமைகள் புனிதமாக விதிக்கப்பட்டதாக காந்தியார் சொல்லவில்லை. அவர்களை இந்த வேலைகளில் ஈடுபடுமாறும் சொல்லவில்லை. சமபந்தி போஜனம் சம்பந்தி போஜனம் பற்றி எல்லாம் பேச முடியாது என்பதும், இந்து சமூகத்தில் சாதி இந்துக்களுக்கும் தலித்துகளுக்கும் எந்த தொப்புள் கொடி உறவும் கிடையாது, இருக்க முடியாது என 1925லேயே அவர் தெளிவுபடுத்துகிறார்.

பங்கி/வால்மீகி சமூகத்திற்கு மனித மலம் அள்ளுவது ஓர் ஆன்மீக அனுபவம் என சிலாகித்தார் மோடி. இதே மோடி, 2010ல் ஏப்ரல் 25 அன்று தலித் மக்களை மன வளர்ச்சி இல்லாத குழந்தைகளோடு ஒப்பிட்டார். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, 07.11.1936, ஹரிஜன் இதழில் எழுதினார்: ‘ஹரிஜன் லட்சியத்துக்காகப் பாடுபடுபவர்கள் முற்றிலும் எந்த நுட்பமும் இல்லாத அப்பாவித்தனமான புத்திமட்டான, குழந்தைகள் அறிவுமட்ட அளவிலேயே உள்ள ஆண்களோடும் பெண்களோடும் நெருங்கிய தொடர்பு கொள்ள வேண்டும்’. மோடியின் இந்துத்துவா, ஆன்மீக சேவையாக மலம் அள்ளுபவர்களை, மற்ற தலித் மக்களை மனவளர்ச்சி இல்லாத குழந்தைகள்போல் கவனித்துக் கொள்ளும். காந்தியின் ராமராஜ்ஜியத்தில் வலுவானவர்களும் பலவீனமானவர்களும் இருப்பார்கள். வலுவானவர்கள் பலவீனமானவர்கள் நலன்களை அவர்களது தர்மகர்த்தாக்கள் போல் பார்த்துக் கொள்வார்கள். என்ன ஒற்றுமை!

1925லிருந்து 2014 வரை, தீண்டாமை தொடர்கிறது. சாதி ஆதிக்கம் தொடர்கிறது. இந்துத்துவாவோடு பல கட்சிகளும் இயல்பாகக் கைகோர்ப்பதற்கும், (அக்கூட்டை எதிர்ப்பதற்கும்) வரலாற்று வேர்கள் உள்ளன.

1931ல் காந்தியை அம்பேத்கர் முதல் முறையாகச் சந்தித்தபோது, காந்தி அவரிடம், அவர் ஏன் காங்கிரசைக் கூர்மையாகச் சாடுகிறார் என்று கேட்டாராம். அம்பேத்கர் பதில் சொன்னாராம்: ‘காந்திஜி, எனக்கு எந்த சொந்த தாயகமும் கிடையாது. எந்த தீண்டத்தகாதவரும் இந்த நாடு பற்றி பெருமிதம் கொள்ளமாட்டார்’. ‘காங்கிரஸ் சுதந்திரத்திற்காகப் போராடுகிறது என்ற விஷயத்தைக் காட்டிலும், யார் சுதந்திரத்திற்காகப் போராடுகிறது என்பதே முக்கியப் பிரச்சனை’. 

‘பார்ப்பனிய மற்றும் புதிய பார்ப்பனிய கருத்தியல் மற்றும் கலாச்சாரத்தால் நியாயப்படுத்தப்படும் சாதிய ஒடுக்குமுறையும் பாகுபாடும் இந்திய சமூகத்திலும் அரசியலிலும் நிலவுகிற மற்றுமொரு வெறுக்கத்தக்க அம்சம். ஆகவே, சமூக ஒடுக்குமுறையை நீக்குவதும் சாதிகளை அழித்தொழிப்பதும் மற்றுமொரு கேந்திரமான புரட்சிகர இலக்காகும். இந்திய அரசு பெண்கள் சமத்துவம் மற்றும் அதிகாரம் வழங்குதல் பற்றியும் நிறையப் பேசும்போதே அனைத்துவிதமான ஆணாதிக்க கட்டமைப்புகளையும் சக்திகளையும் பாதுகாத்து முன்னகர்த்துகிறது. மத அடிப்படைவாதம், மதவெறி, சாதியம், பால்ரீதியாக சிறுமைப்படுத்துதல், இனரீதியாக தனித்து நிறுத்துதல், மொழி மற்றும் பிராந்திய வெறி நிகழ்வுப் போக்குகள் ஆகியவை இந்திய ஆட்சி அமைப்பு முறையின் வெவ்வேறு தளங்களில் நிலவுகின்றன. இவை வெறுமனே கடந்துபோன நிலப்பிரபுத்துவ, காலனிய சகாப்தத்தின் காட்சிப் பொருட்கள் அல்ல. இவை ‘நவீன’ இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதிகளாகும். இந்திய மக்களின் வளரும் ஜனநாயக ஒற்றுமையை, விழிப்புணர்ச்சியை பலவீனப்படுத்தவும், சீர்குலைக்கவும், ஆளும் வர்க்கங்களும் அவர்களது கட்சிகளும், இந்தக் கருவிகளை நன்கு கணக்கிட்ட விதத்தில் பயன்படுத்துகின்றன’

- இகக(மாலெ) 9ஆவது காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட கட்சி திட்டம்

பாலியல் வன்புணர்ச்சியின் உட்கூறுகளும் அதை அடுத்த உடனடி நிகழ்வுகளும்

தூக்கமில்லாத இரண்டு நாட்கள் வேகமாக கழிந்துவிட்டன. எனக்கு தெரிந்த அந்த பெண், உற்சாகத்துடன், கண்கள் விரிய வலம்வரும் கல்லூரி முதலாமாண்டு மாணவியான அவர், பாலியல் வன்கொடுமைக்கு  ஆளாக்கப்பட்டுள்ளார். அநீதிக்கு எதிராக, ஒடுக்குமுறைக்கு எதிராக, பாலியல் வன்முறைக்கு எதிராக நானும் அந்தப் பெண்ணும் பல பேரணிகளில் பங்கேற்றிருக்கிறோம். பல மாதங்களுக்கு முன் கோல்கத்தாவிலுள்ள இந்தியன் காபி ஹவுசுக்கு எதிரில் அவரைச் சந்தித்தபோது, தீவிர இடதுசாரி மாணவர் அமைப்பான அய்சாவின் செயல் வீரராக அவர் இருந்தார். அதற்குப் பின் பல நிகழ்ச்சிகளில் நான் அவருடன் உரையாடியிருக்கிறேன். பாலியல் வன்புணர்ச்சி நடைபெற்ற அன்று கூட நரேந்திர மோடியை முன்நிறுத்தும் கார்ப்பரேட் - மதவெறி தாக்குதலுக்கு எதிரான மாணவர் ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு வந்திருக்கிறார். அடுத்த நாள் மற்றுமொரு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. அந்த இரவில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது.

விடியும் வரையிலான அன்றைய இரவு

நான் தூங்குவதற்கு தலை சாய்கையில் அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த அதிர்ச்சி தரும் சம்பவத்தை நண்பர் ஒருவர் எனக்கு தெரிவித்தது போலவே என் பெண்கள் இயக்க தோழியான சந்திரஸ்மிதாவிற்கும் தெரிவித்திருந்தார். அந்தப் பெண் தான் தங்கியிருந்த விடுதிக்கு அருகிலேயே வடக்கு கொல்கத்தா வீதியில் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கபட்டதாகவும், அந்த நபர் அங்கிருந்து ஓடிய பின்பு அந்தப் பெண் தன் விடுதிக்கு வந்து சக மாணவிகளிடம் இது பற்றி சொன்னதாகவும் எனது நண்பர் கூறினார். இது விசயத்தில் கால தாமதம் கூடாது என்பதாலும், தடயங்கள் அழிந்துவிடக் கூடாது என்பதாலும் நானும், சந்திரஸ்மிதாவும் உடனே புறப்பட்டு விடுதிக்குச் சென்றோம். எங்களோடு இணைத்துக்கொள்ள முடிந்தவர்களையெல்லாம் இணைத்துக் கொண்டோம். இரவு 1.30மணிக்கு விடுதிக்கு சென்றோம். விடுதி மாணவிகள் அச்சத்திலும் கோபத்திலும் இருந்தனர். சம்பந்தப்பட்ட பெண்ணிடம் பேசும்போது, அந்தக் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்ற விருப்பத்தோடு கூடவே தன் குடும்பம் மற்றும் சுற்றத்தார் சந்திக்கக் கூடிய சமூக புறக்கணிப்பு மற்றும் பாதுகாப்பு, தன் படிப்புக்கு வரும் இடையூறுகள் பற்றி கவலை தெரிவித்தார். அவரை தனியாக உட்கார வைத்து நடந்த விசயங்களை நிதானமாக நினைவில் இருக்கும் அனைத்தையும் எழுத சொன்னோம். பிறகு அருகிலுள்ள நண்பர், டாக்டர் ஒருவரின் காரில் இரவு 2.30 மணிக்கு அம்ஹர்ஸ்ட் தெரு காவல் நிலையம் சென்றோம். அங்கு எழுத்துபூர்வ புகாரை மாணவி கொடுத்தார். அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பாக 1. முதல் தகவல் அறிக்கை உடனடியாக பதியப் பட வேண்டும். 2. உடனே மருத்துவப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். 3. குற்றவாளி அடையாளம் காணப்பட்டு பிடிக்கப்பட வேண்டும் என்று கோரி கடிதம் ஒன்றையும் நாங்கள் காவல் நிலையத்தில் கொடுத்தோம். மாணவியின் பாதுகாப்பையும் விடுதியில் தங்கியுள்ளோரின் பாதுகாப்பையும் காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம்.

காவல் நிலைய பொறுப்பு அதிகாரி வந்து சேர 2 மணி நேரமானது. பலர் அந்தப் பெண்ணை திரும்பத் திரும்ப விசாரித்தார்கள். ஒவ்வொருவருக்கும் அதே பதிலை சொல்ல வேண்டிய துயரம் அவருக்கு நேர்ந்தது. இறுதியாக காலை 5 மணிக்கு அவர் கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்தப் பெண்ணின் விடுதி தோழி ஒருவரும் நானும் காவல்துறை ஜீப்பில் உடன் அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கே காத்திருந்து காத்திருந்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு எங்கேயோ இருந்த அந்தப் பணி நேரத்திற்கான ஆண் மருத்துவர் (ட்யூட்டி டாக்டர்) வந்தார். ஒரு செவிலியர், இரு பயிற்சி மருத்துவர்கள், ஒரு பெண் காவலர் முன்னிலையில் அவர் அந்தப் பெண்ணை பரிசோதனை செய்தார். என்னையோ அல்லது விடுதி மாணவிகளையோ உள்ளே அனுமதிக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நம்பகமானவர்களை அனுமதிக்க வேண்டுமென்று சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் குறிப்பான விதிகள் இருந்தும், எங்களை அனுமதிக்கவில்லை. பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ - சட்ட கவனிப்பு தரப்படும்போது நம்பகமானவர் உடனிருக்க வேண்டுமென அமைச்சக விதிகள் கட்டாயமாக்கியிருக்கிறது. காவல்துறையினர் இருக்கக் கூடாது என்றும் சொல்லியிருக்கிறது. 10 நிமிடத்திற்குள்ளாகவே மருத்துவ பரிசோதனை முடிந்துவிட்டது.

நாங்கள் காலையில் போக அனுமதிக்கப்படுவதற்குள் மிகவும் சோர்வுக்குள்ளான ஒரு இரவை கடந்திருந்தோம். காவல்துறையினர் மீண்டும் மாலை அந்தப் பெண் தலைமையகம் வந்து குற்றவாளியின் படம் வரைவதற்கு உதவ வேண்டும் என்றனர்.

பாலியல் புகார் அளிக்க, உயிர் பிழைத்தவரை கவனிக்க, புகார் மற்றும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய, மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ மற்றும் மனநல ஆலோசனை என அனைத்திலும் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் கொண்ட 24 மணி நேரமும் செயல்படக் கூடிய மய்யங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் போதுமான அளவு வேண்டும், அங்கும் இங்கும் அலைக்கழிக்காமல் அனைத்து தேவையான விசயங்களையும் ஒரே இடத்தில் சேகரித்துக் கொள்ள வேண்டும் என பெண்கள் இயக்கத்தில் நாம் வைக்கும் கோரிக்கை எவ்வளவு நிதர்சனமானது என்பது அன்று இரவு 8 மணி நேரம் நடந்த கடினமான சோதனை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது. மருத்துவப் பயிற்சியாளர்கள் பாதி தூக்கத்தில் எழுப்பி விட்டார்களே என அக்கறையும் விருப்பமும் அற்று செயல்பட்டனர். எல்லாவற்றையும் கடந்து தன் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலை தொடர்ந்து எல்லோரிடமும் விளக்கி வந்த அந்தப் பெண்ணின் அமைதியான பண்பையும், துணிவையும் நான் பாராட்டுகிறேன்.

அந்தச் சம்பவம்

ஏப்ரல் 28 இரவு பாதிக்கப்பட்ட பெண் தன் உறவினர் வீட்டில் இரவு உணவு அருந்தி விட்டு தனது விடுதிக்குள் நுழைய முற்படும் போது அந்தச் சம்பவம் நடந்தது. சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவர் அவரை அழைக்க இது வழமையான ஆண்களின் பாலியல் சீண்டல் என உதாசீனப்படுத்தியிருக்கிறார். பிறகு குறிப்பாக தனது தாயார் அனுப்பியதாகவும், தான் மருத்துவர் எனவும், தான் செய்யப் போகிற இழிசெயலை மறைத்தும் அந்தப் பெண்ணுக்கு உள்ள உடல்ரீதியான மருத்துவ பிரச்சனையை அறிந்தவராகவும், நம்பிக்கைக்குரியவராக நடித்து அந்த நபர் பேசியிருக்கிறார். தனக்கு அவசர மருத்துவ உதவி தேவையில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் சொல்லியும் அவர் வற்புறுத்தி சில மாத்திரைகளை பரிந்துரைப்பதாகவும் கூறியிருக்கிறார். விடுதிக்கு எதிர்புறம் அழைத்ததற்கு தயக்கத்துடன் சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் உடலை பரிசோதிக்க வேண்டும் என சொல்லி அந்த நபர் முற்பட்டபோது மறுத்து திரும்ப முற்பட்டபோதுதான் வலுக்கட்டாயமாக அந்தப் பெண்ணை பலவந்தப்படுத்தி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியிருக்கிறான். அவர் உடலை சீண்டி ஆடைகளை அவிழ்த்து சில நிமிடங்களில் திரும்பத் திரும்ப வன்புணர்ச்சி செய்திருக்கிறான். அவன் கையில் பை ஒன்றும் இருந்திருக்கிறது. அதில் ஆயுதங்கள் இருக்கலாம் என பெண் அச்சப்பட்டிருக்கிறார். திடகாத்திரமான அவனை மெலிந்த அந்தப் பெண் தள்ளிவிட்டு எழும்போது அவன் அந்த இடத்தில் இருந்து ஓடிப்போய் விட்டான். பிறகு ஆடையை சரி செய்து கொண்டு பாதிக்கப்பட்ட பெண் விடுதிக்கு வந்து தோழிகளிடம் நடந்தவற்றை சொன்னார்.

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகமும், அகில இந்திய மாணவர் கழகமும் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தின. பேரணி, சாலை மறியல் போன்ற போராட்டங்களும் நடத்தப்பட்டன. சம்பவம் பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்லப்பட்டது. குற்றவாளியின் உத்தேச வரைபடத்தை பொதுவில் வெளியிட வேண்டும் எனவும், குற்றவாளிக்கு கடுமையான தண்டனையையும், மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு முழுப்பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்த கோரிக்கை விடப்பட்டது. இது சம்பந்தமாக மேற்கு வங்க முதல்வர் அறிக்கை தர வேண்டும் எனக் கோரும்பொழுதே ஆத்திரமுற்ற மாணவர்கள் குற்றவாளியைப் பிடிக்க 72 மணி நேர கெடு விதித்தனர்.

மருத்துவ சோதனை, பத்திரிகை செய்திகள், எப்போதைக்குமான சந்தேகங்கள்

மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் ஒரு சில கேள்விகளை கேட்டுவிட்டு பெண் உறுப்பிலிருந்து திரவம் எடுத்து (வெஜினல் ஸ்வேப்) போலீசாரிடம் பரிசோதனைக்கு கொடுத்தார். சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டும் நெறிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. (பக்கம் 23 - 36) முக்கியமாக ஆய்வுக்குரிய பகுதியின் உரோமங்கள் (ப்யூபிக் ஹேர்) சேகரிக்கப்படவில்லை. மார்ச் 19 வழி காட்டும் நெறிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டு தேவையற்ற (இரட்டை விரல் சோதனை) விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆகவே சோதனை செய்த மருத்துவருக்கு நெறிமுறைகள் பற்றியெல்லாம் எதுவுமே தெரியாது என்றே தெரிகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் சிறு துணுக்குகள் இருந்தால் அவை சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட வேண்டும். இரட்டை விரல் சோதனை, முன்னர் அவர் உடல் உறவில் ஈடுபட்டிருந்தாரா போன்ற விபரங்கள் தேவையற்றவை, கூடாது என நெறிமுறையில் சொல்லப்பட் டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிறுநீர் சோதனை, ஹெச்அய்வி சோதனை செய்யப்படவில்லை.

குற்றவாளியின் விரல் ரேகை தடயங்கள் உடலில் இருக்கும் என்று பாதிக்கப்பட்ட பெண், மருத்துவரிடம் சொன்னதற்கு அவர் எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் என்று பதில் அளித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மனநலம் பேண சிகிச்சை அளிக்கப்படவில்லை. பெண்ணின் மருத்துவச் சான்றுகளை நெறிமுறைகள் படியான உரிய படிவத்திலும் நிரப்பவில்லை (பக்கம் 62). மருத்துவமனையில் வழிமுறைகளின் நகலோ அல்லது உரிய படிவமோ இல்லை என்றே தெரியவருகிறது.

இரவு 9.30 மணிக்கு கொல்கத்தா நகர வீதியில் நடந்த இந்தச் சம்பவம் மறுநாள் தலைப்புச் செய்திக்கு உரியதாக பத்திரிகைகள் கருதவில்லை. மனம்போன போக்கில் செய்திகளை வெளியிட்டன. பெண்ணின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என  ஒரு பத்திரிகையும், மருத்துவப் பரிசோதனையில் பாலியல் வன்புணர்ச்சி நிரூபிக்கப்படவில்லை என ஒரு பத்திரிகையும் கருத்து தெரிவித்திருந்தன. பத்திரிகைகளே நீதிபதிகளாக செயல்பட்டன.

எல்லோரிடமும் இருக்கும், பாலியல் வன்புணர்ச்சி மருத்துவ சோதனையில் நிரூபிக்கப்பட வேண்டும் என்ற கருத்தே பத்திரிகைகளிடமும் உள்ளது. மாறாக பாலியல் வன்புணர்ச்சி விசயத்தில் நீதிமன்றத்தில் பல்வேறு சான்றுகளில் மருத்துவ சோதனை அறிக்கையும் ஒன்று என்பதை பலரும் அறிந்திருக்கவில்லை. இன்னும் அந்தப் பெண்ணுக்கு மருத்துவ - சட்ட பரிசோதனை முடிவடையவில்லை. அவர் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் சோதனை முடிந்து அறிக்கை வரவில்லை.

அவரது ஆடை இன்னும் சோதனை செய்யப்படவில்லை. ஆனால் பத்திரிகைகள் போலீசார் சொன்னதாக கூறி பெண்ணின் வாக்குமூலம் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது என்றும், நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும், தெருவில் பலமுறை எப்படி வன்புணர்ச்சியில் ஈடுபட்டிருக்க முடியும் என்றும் ஆணாதிக்க எண்ணங்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அநேகமாக அவர்கள் ஹிந்திப் படங்களில் நீண்ட நேரம் காண்பிக்கப்படும் பாலியல் வன்புணர்ச்சிக் காட்சிகளை இந்நிகழ்வுடன் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன். நாம் சமூகத்தில் எந்தெந்த இடங்களிலெல்லாம் வன்புணர்ச்சி நடைபெற முடியும் என்பதைப் பார்த்தோம்.

பாலியல் வன்புணர்ச்சி பெண்ணின் உடல் மீது அத்துமீறுவதாகும் என்பதை நான் திரும்ப திரும்ப சொல்லி வருகிறேன். இது தினமும், நிமிடங்களில், நொடிகளில் நடைபெறுகிறது. மூடிய அறைக்குள், திருமணமானவர்களின் படுக்கையறையில், பரபரப்பான நாளில் கல்லூரி சங்க அலுவலகத்தில், வீட்டு வேலைக்கு பெண்கள் செல்லும் பொது வீதிகளில், மூடிக்கிடக்கும் ஆலைக்குள் பெண் பத்திரிகையாளர் செய்தி சேகரிக்க செல்லும்போது, பெண் தொழிலாளர்கள் வேலை செய்யும் வயல்வெளிகளில், கலவரங்கள், திட்டமிடப்பட்ட தாக்குதல்கள், போர் போன்றவை நடைபெறும்போது, காவல்துறை அல்லது ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்போது, ஓடிக்கொண்டிருக்கும் பேருந்து அல்லது காரில், உயர் குடியினர் கேளிக்கை நடக்கும்போது மின் தூக்கிகளில், பாதிக்கப்பட்டவரின் பெற்றோர்கள் அறைக்கு வெளியே உட்கார்ந்திருக்கும்போது ஆசிரம அறைகளுக்குள் என தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. எனவே சம்பவம் நடைபெற முடியாத தனியார் அல்லது பொது இடம் என்று எதுவுமில்லை.


நம் முகத்தில் அறையும் கேள்விகள்

கொல்கத்தா நகரைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியின் காரணமாக மாணவர்கள் நகருக்கு வந்து குவிகிறார்கள். ஆண்/பெண் என இரு பாலருக்குமே போதிய பாதுகாப்பான, வசதியான விடுதிகள் கிடையாது. ‘விடுதி’ பெரும் வியாபாரம் ஆகிவிட்டது. காசு கொடுத்து விருந்தாளியாக தங்குவது என்ற முறை பெருகி விட்டது. ஆனால் இவை எந்த சட்ட திட்டப்படியும் செயல்படுவதில்லை. கூடுதலான கட்டணங்களை தாங்களாகவே நிர்ணயித்துக் கொள்கிறார்கள்.

இந்தப் பிரச்சனையில் கூட சம்பந்தப்பட்ட பெண்ணை, தங்களை விசாரணையிலிருந்து தற்காத்துக் கொள்ளும் நோக்கத்துடன் விடுதி நிர்வாகம் காவல்நிலையம் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறார்கள். அப்படி அவர் காவல் நிலையம் சென்றால் விடுதி பெயர் கெட்டுவிடும் என்றும், அவருடன் அறையை பகிர்ந்து கொள்ள யாரும் விரும்பமாட்டார்கள் என்றும், தனது வியாபாரம் பாதிக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் மீறி அந்தப் பெண் புகார் கொடுத்ததால், பெண்ணின் தந்தையிடம் விடுதியை காலி பண்ணக் கூறி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியிருக்கிறார்கள். சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அவர் மனமுடைந்து போயிருக்கிறார். தற்காலிகமாக விடுதியை அடைத்து விட்டார்கள். இது பற்றியும் நாங்கள் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறோம். நடவடிக்கை எடுக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

நான் கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பின்னால்தான் அமர்ந்திருந்தேன். இரண்டு மருத்துவ பயிற்சியாளர்கள் தூக்கத்தில் தம்மை தொந்தரவு செய்துவிட்டார்களே என கொட்டாவி விட்டுக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு என்ன பிரச்சனை என்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஒரு செவிலியர் வந்து பக்கத்து அறையில் ஒரு குழந்தை இறந்து விட்டது என்று அவர்களிடம் சொல்லும்போது கூட அவர்களிடம் எவ்வித அசைவும் இல்லை.

காவல்துறை அதிகாரி திரும்பத்திரும்ப சொல்லியும் மருத்துவர் வராததால், அவர் தாமாகவே மருத்துவர் அறைக்கு சென்று அவரை கூட்டி வந்தார். அவ்வளவு சீக்கிரமாக பரிசோதித்த பிறகு அதை படிவத்தில் குறிப்பிட படிவத்தை நீண்ட நேரம் தேடினார்கள். உரிய படிவம் எது என்று யாருக்கும் தெரியவில்லை. இறுதியில் கிடைத்துவிட்டதாகச் சொல்லி தவறான படிவத்தில் எல்லாம் குறிக்கப்பட்டது. எதுவும் தெரியாத மருத்துவர், பயிற்சியாளர்களை கடிந்து கொண்டார். இதுதான் கொல்கத்தாவின் பிரசித்தி பெற்ற மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவருக்கு நேர்ந்த அனுபவம்.

இரண்டாவது கேள்வி காவல்துறை அதிகாரிகள் தொடர்பானது. அதிலும் குறிப்பாக பத்திரிகையாளர்களுக்கு கொடுத்த செய்தி தொடர்பானது. நீதிபதி வர்மா கமிசன் அறிக்கைக்குப் பிறகு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டும் நெறிமுறைகள் தெளிவாக கீழ் கண்டவற்றை சொல்கின்றன. ‘நடைபெற்ற சம்பவம் தொடர்பாக நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தும் விதத்தில் எந்த ஆலோசனையும் வழங்கப்படக் கூடாது.

பாதிக்கப்பட்டவர் மீது இரக்கமற்ற தன்மையை உருவாக்கும் விதம் தீர்ப்புரை குறிப்புகள் (ஜட்ஜ்மெண்டல் ரிமார்க்ஸ்) எதுவும் சொல்லப்படக் கூடாது. பாதிக்கப்பட்டவரின் நடவடிக்கையோ அல்லது நடவடிக்கையின்மையோ நடந்த சம்பவத்திற்கு எவ்விதத்திலும் காரணமில்லை என்ற முக்கிய செய்தி பகரப்பட வேண்டும்’

காவல்துறை இணை ஆணையாளர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் சந்தேகத்திற்கிடமானது என்றார். இதைத்தான் காவல்துறை எப்போதுமே செய்து வருகிறது. எது மாதிரியான சந்தேகத்திற்கிடமான கேள்விகள் அவை?

தெரியாத நபருடன் ஏன் அவர் செல்ல வேண்டும்? தாக்குதல் நடக்கும்போது அவர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவோ கூச்சலிடவோ இல்லை? தெரியாத நபருடன்  அந்தப் பெண் சந்திற்குள் சென்றார் என்றால் அது குற்றமாகவோ, பாலியல் வன்புணர்ச்சியாகவோ கருதப்பட முடியாது. ஆனால் நடந்தவற்றை பாதிக்கப்பட்டவர் சொல்லியிருக்கிறார். அவர்தான் மிகவும் நம்பத் தகுந்த சாட்சி. அவர் சொல்வது உண்மை என எனக்கும், விடுதியிலுள்ள மாணவர்கள் அனைவர்க்கும் படுகிறது. கேட்ட கேள்விகள் எல்லாவற்றிற்கும் ஒரு படித்தான பதிலையே அவர் திரும்பத்திரும்ப சொல்லியிருக்கிறார்.

அப்படியிருக்க காவல்துறை நடத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு யாரைக் காப்பாற்ற? முதலமைச்சர் மாநிலம் பற்றி அடிக்கும் தம்பட்டங்களுக்கு ஆதரவானதா? காவல்துறையின் விசாரணை நடவடிக்கைகள் பற்றி குற்றவாளியின் வரையப்பட்ட படத்தை பொதுமக்களுக்கு வெளியிடுவது பற்றி அவர் ஏன் மவுனம் காக்க வேண்டும்? உயிர்பிழைத்த இளம் பெண்ணை களங்கப்படுத்துவதில் ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறார்கள்?

இந்த நேரத்தில், பார்க் ஸ்ட்ரீட் கூட்டு பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணுக்கு முதல் தகவல் அறிக்கை பதிய மறுத்ததை, ஜகச்சாவில் வீட்டு வேலை செய்யும் பெண் கூட்டு பாலியல் வன்புணர்ச்சி புகாரைக் கூட பதிவு செய்ய படாதபாடு பட்டதை, கட்டோவில் தன் மகள் கண் முன்பே இரயிலில் இழுத்து சென்று பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணை அமைதி காக்க சொன்னதை, எப்படி அதிகார பலம் கொண்ட முதலமைச்சரும் அவர் சகாக்களும் இது போன்ற குற்றச்சாட்டுகளை முன் கூட்டியே தயாரிக்கப்பட்டவை என்று சொல்லி புறந்தள்ளுவதை எல்லாம் நான் நினைத்துப் பார்க்கிறேன்.

பார்க் ஸ்ட்ரீட் நிகழ்வில் பாதிக்கப்பட்டவரை நாடாளுமன்ற உறுப்பினர் கேவலமாக நடத்தியதை, தொடர் நிகழ்வுகள் நடந்த பின்னரும் ஒருவர் கூட தண்டிக்கப் படாததை, பதிலாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள்  மீது பழி சொல்லப்படுவதை, பாதிக்கப்பட்டவர்களின் வாய் அடைக்கப்படுவதை, மாநிலத்தை விட்டே வெளியே துரத்தப்படுவதை எல்லாம் கூட நினைத்துப் பார்க்கிறேன்.

குற்றமிழைப்பவர்களுக்கு இப்படி ஒரு பாதுகாப்பு இருப்பது மேற்குவங்கத்தில் பாலியல் வன்புணர்ச்சி சம்பவங்கள் பெருகி வருவதற்கான காரணமாக இருக்கக் கூடும். அதனால்தான் இரவு 9.30 மணிக்கு கல்லூரி மாணவி பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட  சம்பவம் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. புகார் கொடுத்தவர் பொய் சொல்கிறார் என நிரூபிப்பதற்கான முயற்சிகளும் நடக்கின்றன. இது ஒரு வகைமாதிரியை குறிக்கிறது.

இங்குதான், அரசியல் விழிப்புணர்வு பெற்ற, தைரியமான இந்த இளம் பெண் மாணவர் தோழர்களையும், பெண்கள் இயக்கத்தவரையும் உடனடியாக தனக்கு ஆதரவாக திரட்டிக் கொள்ளும் நல்வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். ஆனாலும் பல்வேறு தடைகள், முத்திரை குத்தப்படுதல் மற்றும் அவதூறு நடவடிக்கைகள் ஆகியவற்றை கடக்க வேண்டியுள்ளது. நீதி எப்போதும் போலவே கைவரப் பெறாமல் உள்ளது. அவரது தந்தை நீதி கோருகிறார். ஆனால் இப்போது தண்டனை விகிதத்தைப் பார்க்கும்போது நீதி கிடைக்கும் என்பதில் அவருக்கு நம்பிக்கையின்மையே உள்ளது.

மருத்துவ - சட்ட உள்கட்டமைப்பு இல்லாத தொலைதூர இடங்களில் சமூகத்தின் கீழ்நிலை மக்கள் இதுபோன்ற விசயங்களை சந்திக்கும்போது நீதி என்பது அவர்களுக்கு லாட்டரி அடிப்பது போலானதுதான்.

ஆனால் இந்தப் பெண் உறுதியாக இருக்கிறார். நிர்ப்பந்தம் எங்கிருந்து வந்தாலும் அவர் தலை குனிவதாய் இல்லை. அவரின் அரசியல் கடப்பாடு இதில் வெளிப்படுகிறது. நாம் கூட்டாக பேரணிகளில் கலந்து கொள்ளும்போது நாம் முழக்கமிடுவது போல நாம் போராடுவோம், நாம் வெற்றி பெறுவோம் என்று சொல்ல அவரைச் சுற்றி தீர்மானகரமான மனிதர்கள் பலர் உண்டு.

(கட்டுரையாளர் ஆராய்ச்சியாளர், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாவட்டக் குழு உறுப்பினர். தமிழில்: தேசிகன்)

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடைகால கேளிக்கை - ஜி.ரமேஷ்

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கு. 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 13 பேர் ஒன்றாகச் சேர்ந்து ஆண்டிறுதியைக் கொண்டாட பரிசுப் பொருள்கள் வாங்க கடை வீதிக்குச் சென்றுள்ளார்கள். அவர்களில் சிலர், பள்ளிச் சீருடையிலேயே சென்றுள்ளார்கள். அதனால், அந்த பள்ளியின் மரியாதைக்குப் பங்கம் ஏற்பட்டுவிட்டது என்று கூறி அந்த மாணவர்களில் 12 பேரின் பெற்றோரையும் அழைத்து மாறுதல் சான்றிதழை வாங்கிக் கொண்டு போகச் சொல்லிவிட்டது பள்ளி நிர்வாகம்.

ஒரு மாணவரின் அப்பா காவல்துறை அதிகாரி. அதனால், அவரை மட்டும் விட்டு விட்டார்கள். மாணவர்கள் அனைவரும் மார்ச் 28 அன்று ஆண்டிறுதித் தேர்வின் முதல் தேர்வை எழுதிவிட்டார்கள். மார்ச் 29ல் இருந்து அந்த மாணவர்கள் பரீட்சை எழுத அனுமதிக்கப்படவில்லை. பள்ளி நிர்வாகத்திற்கு மாணவர்கள் சீருடையில் கடை வீதிக்குப் போனது பெரிய மானப் பிரச்சனையாகி விட்டது. மாணவர்கள் பரீட்சை எழுத முடியாமல் அவர்களின் எதிர்கால வாழ்க்கையே பாழாய் போனாலும் பிரச்சனையில்லை, பள்ளியின் கவுரவம்தான் எங்களுக்கு முக்கிய என்கிறது.

மதுரை கொசக்குளத்தில் உள்ள சிஇஓஏ மெட்ரிக்குலேசன் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக பெற்றோர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளார்கள். அதில் 5 மாணவர்களின் பெற்றோர்  எங்கள் பிள்ளைகள் சீருடையில் செல்லவில்லை என்று அப்பாவியாக நீதிமன்றத்தில் வாக்கு மூலம் தாக்கல் செய்துள்ளார்கள். குழந்தைகள் கடை வீதிக்கு சீருடையில் போனால் என்ன என்று கூட அவர்களால் கேட்க முடியவில்லை.

தங்கள் பள்ளியின் மரியாதை பற்றி அக்கறைப்படும் இவர்கள், பாட நூல், பள்ளிச் சீருடை மட்டுமின்றி, கால் செருப்பிலிருந்து கழுத்துப்பட்டை வரை எல்லாவற்றையுமே தங்களிடம்தான் வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி காசு பார்த்து, கல்விச் சேவை(!) புரியும் இதுபோன்ற மெட்ரிக்குலேசன் பள்ளி தனவான்கள், இந்த ஆண்டு நாங்கள் கட்டாயக் கல்விச் சட்டம் 2009ன் கீழ் 25% ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவு மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று கொடி பிடித்திருக்கிறார்கள்.

 கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டாயக் கல்விச் கட்டத்தின் சேர்க்கப்பட்ட ஏழை மாணவர்களுக்கான கட்டணத்தை அரசாங்கம் அவர்களுக்கு இன்னும் வழங்கவில்லை, அதனால், 2014 - 2015 கல்வியாண்டில் ஏழை மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளமாட்டோம் என்று அவர்கள் சங்கம் கூட்டி அடாவடியாக அறிவித்தார்கள். மே 3 முதல் மாணவர் சேர்ப்பிற்கான படிவங்கள் வழங்க வேண்டும். அது பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. எங்களுக்குப் பணம் வரவில்லை என்றால் யாரையும் சேர்த்துக் கொள்ள முடியாது, சட்டமாவது மண்ணாவது என்றார்கள்.

தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இந்த சட்டத்தின்படி 40% மாணவர்களைக் கூட  கடந்த ஆண்டு சேர்த்துக் கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் மொத்தம் 3,550 (சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர்த்து) மெட்ரிக்குலேசன் பள்ளிகள் உள்ளன. இதில் 1000 பள்ளிகள் கூட கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி  மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளவில்லை. 58,619 பேரை சேர்த்திருக்க வேண்டிய இடங்களில் 23,248 இடங்களை மட்டுமே நிரப்பினார்கள். 

அரசு சொன்னபடி வங்கிக் கணக்கெல்லாம் துவக்கிவிட்டோம், இரண்டு தவணைகளாக தருகிறோம் என்றார்கள். ஒரு தவணைகூட வரவில்லை, தமிழ்நாட்டில் பல வகுப்புகளில் தமிழ் கட்டாயப் பாடம் என்று ஆக்கப்பட்டுவிட்டதால் பல மாணவர்கள் மத்திய பாடத் திட்டத்திற்கு, சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு மாறிக் கொண்டிருப்பதால் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் கடும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றன, அதனால் 23,000 பேரைச் சேர்த்ததற்கு அரசாங்கத்திடம் இருந்து வர வேண்டிய பணம் 25 கோடி ரூபாய் முதலில் வரட்டும் என்றார் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிட் பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார்.

2012 - 2013 மற்றும் 2013 - 2014 கல்வி ஆண்டுகளில், பல பள்ளிகளில் இந்தச் சட்டத்தின்படி மாணவர்களைச் சேர்க்கும்போது, முழுக் கட்டணத்தையும் கட்டிவிடுங்கள், அரசாங்கம் பணம் தந்தவுடன் நாங்கள் திருப்பித் தந்து விடுகிறோம் என்று பெற்றோரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சேர்த்துள்ளார்கள். கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் பள்ளியில் இருந்து 1 கி.மீட்டருக்குள் ஆண்டு வருமானம் 2 லட்ச ரூபாய்க்கும் கீழ் உள்ள பெற்றோர்களின் குழந்தைகளைத்தான் சேர்க்க வேண்டும்.

பள்ளி நிர்வாகங்கள் ஏழை மாணவர்களைச் சேர்ப்பதற்குப் பதிலாக, ஏற்கனவே பணம் கொடுத்துச் சேர்ந்துள்ள மாணவர்களை இச்சட்டத்தின்படி சேர்க்கப்பட்ட மாணவர்களாகக் கணக்குக் காட்டியுள்ளார்கள். இப்படிப் பல மோசடிகளையும் செய்து பணம் பார்த்தது போதாது என்று அரசாங்திடம் இருந்து பணம் வரவில்லை என்று வருத்தப்படுகிறார்கள். இந்தச்சட்டம் 2010ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்ததாலோ என்னவோ தனியார் பள்ளி நிர்வாகங்கள் தமிழக மக்கள் எல்லாரையும் முட்டாள்களாக ஆக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

கல்வி வியாபாரிகள் கோபப்பட்டவுடன்  அரசாங்க அதிகாரிகள் ஓடி வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். மத்திய அரசு பணம் அனுப்பவில்லை, அதனால்தான் தர முடியவில்லை, மொத்த பணத்தையும் மூன்று மாதங்களில் தந்து விடுகிறோம் என்று சமாதானப்படுத்துகிறார்கள். பள்ளி நிர்வாகத்தினரும் அரசின் உறுதிமொழியை ஏற்று ஏழை மாணவர்களை இந்த ஆண்டு சேர்த்துக் கொள்வதாகச் சொல்லியுள்ளார்கள். மத்திய அமைச்சர் நாராயணசாமி, ‘நாங்கள் பணத்தை மாநில அரசுக்கு அனுப்பி விட்டோம். மாநில அரசு தான் பணத்தை பள்ளிகளுக்குக் கொடுக்காமல் வைத்துள்ளது’ என்கிறார்.

மே 10 முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு மே 14 அன்று மாணவர்கள் பட்டியல் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது. மே 12 வரை பெரும்பாலான பள்ளிகளில் விண்ணப்பம் வழங்கப்படவில்லை. தமிழக அரசோ அதிகாரிகளோ இன்னும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 21ஏ எல்லா குழந்தைகளுக்கும் கல்வி, அது அவர்களின் அடிப்படை உரிமை என்கிறது. கல்வி பெறும் உரிமைச் சட்டம் 2009, இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும் குழந்தைகள் உரிமைச் சட்டமாகக் கொண்டுவரப்பட்டு 6 முதல் 14 வயது வரை உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் அடிப்படைக் கல்வி எல்கேஜி முதல் எட்டாம் வகுப்புவரை இலவசமாக கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் என்கிறது. அதன்படி தனியார் பள்ளிகளும் நலிவுற்ற பிரிவு மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கான செலவை தொகையை அரசு தந்துவிடும்.

இங்குதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது. அரசு பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, அப்பள்ளிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து அதன் தரத்தை மேம்படுத்துவது என்பதற்கு மாறாக, தனியார் பள்ளிகளை கணக்கில்லாமல் திறக்க அனுமதி அளித்துவிட்டு, அவர்களிடம் 25% ஏழை மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று கெஞ்சுவது எல்லாருக்கும் இலவசக் கல்வி என்கிற அரசியல் அமைப்புச் சட்ட வாக்குறுதியையே அர்த்தமற்றதாக்கிக் கொண்டிருக்கிறது.

முல்லைப் பெரியாறு தீர்ப்புக்கு தான்தான் காரணம் என்று கொண்டாடிக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர், வறிய நிலையில் இருந்து விடுபட்டுவிட கல்வி பெறுவது ஒரு வழி என்ற எண்ணத்துடன் படிக்க வந்த வறிய மாணவர்கள், அடுத்து என்ன என்று தெரியாமல் தெருவில் நிற்பது பற்றி இன்னும் பேசவில்லை. கல்வியாண்டு துவக்கத்தில் மாணவர்களை நிச்சயமின்மையில் தள்ளுவதும், பெற்றோர்களை பரிதவிக்க வைப்பதும் ஜெயலலிதாவின் கோடைகால கேளிக்கையாகிவிட்டது.

கட்டாய இலவசக் கல்வி, இப்போது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தனியார் பள்ளிகளில் நலிவுற்ற ஏழை மாணவர்களைச் சேர்ப்பதன் மூலம் சாத்தியப்படாது. கல்வி கற்கும் உரிமை அனைவருக்குமானது. நாட்டில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் அரசே அதன் முழுச் செலவில் ஆரம்பக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை வழங்க வேண்டும்.  கல்விக்கூடங்களை நடத்த வேண்டிய அரசு சாராயக் கூடங்களை நடத்திக் கொண்டிருக்கிறது.

சாராயம் விற்றவர்கள் இப்போது கல்வியை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். கல்வி, கல்வித் தந்தைகள் என்று  தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக்கொள்ளும் கல்வி வியாபாரிகளிடம் இருந்து கல்வி முழுமையாக விடுவிக்கப்படவேண்டும். அப்போது மட்டுமே அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 21ஏவிற்கு முழுமையான பொருள் இருக்கும்.

வடக்குமாங்குடியில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டிக்கிறோம்

கடலூர் மாவட்டம் வடக்குமாங்குடியில் தலித் மக்கள் தாக்கப்பட்டதை ஒட்டி, சம்பவ இடத்துக்குச் சென்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) குழு திரட்டிய விவரங்கள் அடிப்படையில் 03.05.2014 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலசுந்தரம் வெளியிட்ட பத்திரிகை செய்தி

மக்களவைத் தேர்தல் நடந்த 24.04.2014 அன்றும் அதற்கடுத்த நாட்களிலும் சிதம்பரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பல கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்களது குடியிருப்புகள், மக்கள் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைச் சம்பவங்களை பத்திரிகைகள் வாயிலாக அறிந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) குழுவொன்று கட்சி மாநிலச் செயலாளர் பாலசுந்தரம் தலைமையில் ஏப்ரல் 29, 30 தேதிகளில் தாக்குதலுக்கு ஆளான கிராமங்களுக்குச் சென்று வந்தது. இக்குழுவில் கடலூர் மாவட்டச் செயலாளர் சி.அம்மையப்பன், மாவட்டக் கமிட்டி உறுப்பினர்கள் புலவேந்திரன், ராஜசங்கர், அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் காட்டுமன்னார் கோயில் ஒன்றிய அமைப்பாளர் செல்வராஜ், கட்சியின் விழுப்புரம் மாவட்டக் கமிட்டி உறுப்பினர் கணேசன், தஞ்சை - நாகை மாவட்டச் செயலாளர் இளங்கோவன், அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் டி.கே.எஸ்.ஜனார்த்தனன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

வடக்குமாங்குடி தாழ்த்தப்பட்ட மக்களைச் சந்திக்கவிடாமல் மாலெ கட்சியின் குழுவை காவல்துறை திருப்பி அனுப்பிவிட்ட போதிலும் தாக்குதலுக்கு ஆளான வடக்கு மாங்குடி கிராமத்து மக்களை சந்தித்தது. சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரையும் சந்தித்து ஆறுதல் கூறியது. மேலும் பலதரப்பட்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், வன்னியர் சாதி பிரமுகர்கள், காவல்துறையினர் ஆகியோரை சந்தித்து நடந்த சம்பவங்கள் குறித்து விவரங்களைத் திரட்டியது.

தேர்தல் நடந்த 24.04.2014 அன்றும் அதற்கு அடுத்த நாட்களிலும் வடக்குமாங்குடி, கோதண்டவிளாகம், விளாகம், ஆண்டிப்பாளையம், திருநெடுஞ்சேரி ஆகிய கிராமங்களில் தலித் குடியிருப்புகள் தாக்கப்பட்டுள்ளன. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள், பாமக என்று சொல்லிக் கொள்வோர் பயங்கர ஆயுதங்களுடன் தலித் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் மீது வன்கொடுமை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

எண்ணிக்கையில் குறைவாக உள்ள வடக்குமாங்குடி தலித் கிராமத்தில் மட்டும் பெண்கள், வயதானவர்கள் உட்பட 8 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களுள் பாப்பா(65) என்பவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். இந்த தாக்குதல்கள் அனைத்தும் தலித்துகளை வாக்களிக்க விடாமல் தடுப்பது. தலித்துகளது வாக்குகளை அவர்களது விருப்பத்துக்கு மாறாக பாமக, அதிமுக கட்சிகளுக்கு ஆதரவாக பதிவு செய்வது. ஆதிக்க சக்திகளின் அச்சுறுத்தலையும் மீறி வாக்களித்த தலித்துகளை பழி தீர்த்துக் கொள்வது ஆகிய காரணங்களுக்காக நடைபெற்றுள்ளன.

கடந்த 3 தேர்தல்களாக விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வருவதை ஒட்டி தொகுதியிலுள்ள தலித்துகள் அரசியல் வேட்கையுடன் ஒவ்வொரு தேர்தலிலும் அணி திரண்டு வருகின்றனர். தலித்துகளின் அரசியல் அணிதிரட்டலை முறியடிக்கும் நோக்கில் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர்களை உசுப்பிவிடுவதும் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுவது உள்ளிட்ட வன்முறைகளில் ஈடுபடுவதும் வாடிக்கையாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே இந்த தேர்தலிலும் தேர்தல் வன்முறை நடத்தப்பட்டுள்ளது.    
   
தருமபுரி, மரக்காணம் சம்பவங்களின் பின்னணியில் பாமக மூர்க்கத்தனமான தலித் எதிர்ப்பும் வெறித்தனமான சொந்த சாதி அணி திரட்டலையும் செய்து வருகிறது. தருமபுரியில் அன்புமணி ராமதாசை வெற்றி பெறச் செய்வதும் சிதம்பரத்தில் திருமாவளவனை தோற்கடிக்கச் செய்வதுமே இந்த தேர்தலில் பாமகவின் அறிவிக்கப்படாத ஒரே திட்டமாக இருந்துள்ளது. அவசர அவசரமாக, காங்கிரசிலிருந்த மணி ரத்தினத்தை கட்சியில் சேர்த்து வேட்பாளராக அறிவித்த ஆர்வமும் அதை அடுத்து உக்கிரமாக தேர்தலில் இறங்கிய காடுவெட்டி குரு உள்ளிட்ட பாமக தலைவர்களின் செயலும் இதை உறுதி செய்கின்றன. இந்தப் பின்னணியிலேயே சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் நடந்துள்ளன.

இந்தப் பின்னணியில், தொகுதியிலுள்ள பதட்டமான நிலைமைகளைக் கருத்தில் கொண்டு தலித்துகளின் வாக்குரிமையை பாதுகாக்கவும், அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யவும், சாதி ஆதிக்க சக்ததிகளின் தாக்குதலிலிருந்து தலித்துகளைப் பாதுகாக்கவும் தேர்தல் ஆணையமும் தொகுதியின் தேர்தல் அதிகாரியும் தவறிவிட்டனர். தேர்தல் நிர்வாகத்தின் பொறுப்பற்ற முன்னெச்சரிக்கையில்லாத நடவடிக்கையே இந்த தாக்குதலுக்கும் இழப்புகளுக்கும் காரணம்.

ஈச்சம்பூண்டி, வேலப்பூண்டியிலும் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. பண்ணையார் போல் செயல்பட்டு வரும் ஈச்சம்பூண்டி கிராமத்தின் தற்போதைய (தலித்) ஊராட்சித் தலைவர் பரமேசுவரனும் அவரது ஆதரவாளர்களும் இன்னொரு பிரிவு தலித் மக்களை தாக்கியுள்ளனர். அவர்கள் பாமக வேட்பாளர் சுதா மணிரத்தினத்துக்கு வாக்களித்தார்கள் என்ற காரணத்துக்காக கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இங்கு தாக்குதல் நடத்தியது தலித் ஊராட்சித் தலைவரே என்றாலும் ஒரு பிரிவு தலித்துகள் வாக்குகள் விடுதலை சிறுத்தைகளுக்கு போகாமல் தடுத்து, பாமகவுக்கு வாக்களிக்க வைக்கும் நோக்கத்துடன் பாமக செயல்பட்டுள்ளது தெரிய வருகிறது. தாக்கப்பட்ட தலித்துகள் பற்றி கவலைப்படாத ராமதாஸ் கைது செய்யப்பட்ட தனது கட்சிக்காரர்களைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டு அறிக்கை விட்டிருப்பதிலிருந்து இது உறுதியாகிறது.

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பும் பிறகும் தலித்துகள் மீதான தாக்குதல் நடக்கக்கூடும் என்ற அச்சத்திலும் பதட்டத்திலும் பெரும்பாலான தலித் கிராமங்கள் உள்ளன. நடந்த வன்கொடுமைத் தாக்குதல் குறித்து அதிமுக தலைவர் ஜெயலலிதாவோ, விடுதலை சிறுத்தை கூட்டணித் தலைவர் கருணாநிதியோ, வைகோ விஜயகாந்த் போன்ற தலைவர்களோ பாஜக போன்ற கட்சிகளோ தலித்துகள் மீதான இந்த வன்கொடுமை தாக்குதல்களை கண்டிக்கவில்லை. இக்கட்சிகளும் தலைவர்களும் இந்த வன்கொடுமை  செயல்களை ஆதரிப்பதாகவே தெரிகிறது.

மாவட்ட நிர்வாகம், மாநில அரசாங்கம், தேர்தல் ஆணையம் ஆகியவை உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு, இழப்பீடு, வழங்குவதோடு மீண்டும் ஒரு தாக்குதல் நடைபெறா வண்ணம் தடுத்திட வேண்டும். தலித் மக்கள் அச்சமின்றி தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். தாக்குதலுக்கு ஆளான வடக்குமாங்குடி கிராமத்து மக்கள் வேறு இடத்தில் குடியமர்த்துமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளது தலித்துகளின் பாதுகாப்பற்ற நிலையை உணர்த்துகிறது.

ஒரே ஒரு குடும்பமாக இருந்தாலும் பாரம்பரியமான இடத்தில் அச்சமின்றி தலித்துகள் வாழ்வதை உறுதி செய்ய வேண்டியது மாநில அரசாங்கம், மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பாகும். குற்றமிழைத்தவர்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி கடும் தண்டனை வழங்குவதன் மூலமே தலித்துகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்திட முடியும். தலித்துகளின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அவர்களைத் தாக்கியவர்களை நீதியின் முன் நிறுத்துவதுமே அரசியல் சட்டத்தின்படி ஆளுவதாகச் சொல்லும் மாநில அரசாங்கம், மாவட்ட நிர்வாகம், தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாகும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி தொடர் இயக்கம் நடத்த முடிவு செய்துள்ளது.

மக்கள் பணம் கார்ப்பரேட்டுகள் கையில் மக்கள் பணம் கார்ப்பரேட்டுகள் கையில்

‘ஒரு சிறப்பு வர்த்தகமாக, ஒரு சமூக நடவடிக்கையாக மூலதனம் விநியோகிக்கப்படுவது, வங்கி முறை மூலம், தனியார் முதலாளிகள் மற்றும் கந்துவட்டிக்காரர்கள் கைகளில் இருந்து அகற்றப்பட்டுவிடுகிறது. ஆனால், அதே நேரம், வங்கி முறையும் கடன் வழங்குதலும் முதலாளித்துவ உற்பத்தியை அதன் சொந்த எல்லைகளைத் தாண்டிச் செலுத்துவதற்கான, ஆகத் திறன்வாய்ந்த வழிமுறைகள் ஆகின்றன; அத்துடன், நெருக்கடிகள் மற்றும் மோசடிக்கான ஆகச் சிறந்த வாகனங்களில் ஒன்றாகின்றன’.

- கார்ல் மார்க்ஸ், மூலதனம், தொகுதி 3, பகுதி 5, அத்தியாயம் 36, முதலாளித்துவத்துக்கு முந்தைய உறவுகள்


அய்முகூ ஆட்சியாளர்கள், மக்களுக்குச் சேர வேண்டியவற்றை சிந்தாமல் சிதறாமல் கொண்டு சேர்ப்பதில் அக்கறை உடையவர்களாம். அவர்கள் பக்கத்தில் உள்ள பொருளாதார மேதைகள் எல்லாம் மான்யங்களில் பணம் வீணாகக் கூடாது, அது இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்துவிடும் என்று அறிவுறுத்தினார்களாம். உங்கள் பணம் உங்கள் கையில் என்றார்கள் அய்முகூ ஆட்சியாளர்கள். மக்கள் நல நடவடிக்கைகளுக்கு தரப்படும் மான்யம் பற்றி தீராத கவலைப்பட்டவர்கள், அதை முறைப்படுத்துகிறோம் என்று சொல்லி நந்தன் நீல்கேணியை அழைத்து அவரிடம் ரூ.120 கோடி எனத் துவங்கி ரூ.14,232 கோடி வரை கொடுத்தார்கள். அவரும், மாற்றி மாற்றி அடையாள அட்டை காட்டி சாமான்யர்கள் அரசாங்கத்தை ஏமாற்றுவதற்கு முடிவு கட்டுகிறேன் என்று, ஆதார் அட்டை தயார் செய்தார். வேலை ஆகவில்லை, இன்னும் பணம் வேண்டும் என்றார். இன்னும் ரூ.1,758 கோடி தந்தார்கள். ஆதார் அட்டை வேலையும் முழுமையாக முடியவில்லை. மக்களுக்கு எதுவும் போய்ச் சேரவும் இல்லை. மக்கள் பணம் பறந்து போனது.

ஆனால் வேறொரு பக்கம் வேறு வகைப்பட்ட பணம் சேர வேண்டும் என்று அய்முகூ ஆட்சியாளர்கள் விரும்பியவர்களுக்கு சென்று சேர்ந்து கொண்டேதான் இருந்தது. இதற்கென அய்முகூ ஆட்சியாளர்களோ, அப்படிச் சேருவதை ஆதரிக்கும் மற்ற ஆட்சியாளர்களோ சிறப்புத் திட்டம் எதையும் அறிவிக்கவில்லை. அடையாள அட்டை தருவதாகச் சொல்லவில்லை. நாராயணமூர்த்தியையோ சத்யம் நாதெள்ளவையோ அழைக்கவில்லை. வங்கிகளில் இருந்த மக்கள் பணம் கார்ப்பரேட் நிறுவனங்களின் வயிற்றுக்குள் சென்றுகொண்டே இருந்தது. சென்றுகொண்டே இருக்கிறது.

ஏப்ரல் 18, 2014 அன்றைய நிலவரப்படி இந்திய வங்கிகளில் உள்ள மக்கள் பணம் ரூ.78,69,970 கோடி. வாராக்கடன் வாங்கியிருப்போர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று நீண்டகாலமாக போராட்டங்கள் பல நடத்திக் கொண்டிருக்கிற வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம், பல முறை கோரியும் சங்கத்தின் கோரிக்கை நிறைவேறாததால், முதல் 406 கடன்கார கார்ப்பரேட் நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். அடுத்து இன்னும் 3000 நிறுவனங்களின் பட்டியலை வெளியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

கடன்சுமை தாளாமல் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட, செய்துகொண்டிருக்கிற நாட்டில், கடன் கொடுத்தவர்களுக்கு பயந்து, மானத்துடன் சாகவாவது செய்யலாம் என்று குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்கிற நாட்டில், மார்ச் 2008ல் ரூ.39,000 கோடியாக இருந்த வாராக்கடன் மார்ச் 2013ல் ரூ.1,64,600 என மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

செப்டம்பர் 2013ல் ரூ.2,36,600 என அதிகரித்தது. (இந்தத் தொகைக்கு 10 சதம் வட்டி வாங்கினால் கூட வங்கிகளுக்கு ஆண்டுக்கு ரூ.24,000 கோடி வரும்).
முதலாளித்துவ பொருளாதார மேதைகள் வாராக்கடனுக்கு செயல்படாத சொத்துக்கள் என்று நளினமான பெயர் வைத்திருக்கிறார்கள். கார்ப்பரேட் வயிற்றுக்குள் போனதுதானே, அது கார்ப்பரேட்டுகளுக்கு சொத்தாக நிச்சயம் மாறி இருக்கும். ஆனால், வங்கிக்கு, வங்கிகளில் பணம் சேர்த்து வைத்த சாமான்யர்கள் எங்கள் பணம் அங்கே இருக்கிறதே என்று கேட்டால் என்ன செய்வது? அதனால் அந்த சொத்து செயல்படாதது என்று சொல்லி வைக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் கேள்வி கேட்டால் கேள்வி கேட்டவர் சுருண்டுவிழும் அளவுக்கு புரியாத, புதிரான பொருளாதாரச் சொற்களைச் சொல்லி அச்சுறுத்துவார்கள்.

இப்படி சட்டை கசங்காமல் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகள் எடுத்துக்கொண்டு போன பணம் வாராக்கடன். அது வரும். ஆனால் வராது. இந்த வகையில், மார்ச் 31, 2013 நிலவரப்படி, முதல் 406 வாராக்கடன்களின் மதிப்பு ரூ.70,300 கோடி. முதல் 12 பேர் ரூ.20,000 கோடி கடன் பாக்கி வைத்துள்ளார்கள். முதல் 50 கடனாளிகள் மட்டும் ரூ.40,000 கோடி பாக்கி வைத்திருக்கிறார்கள். 172 கார்ப்பரேட் நிறுவனங்கள் ரூ.100 கோடிக்கும் மேல் கடன் வாங்கி திருப்பித் தராமல் உள்ளன.

இவர்கள் இந்திய நாட்டின் கனவான்கள் என்று அறியப்படுபவர்கள். சொகுசுக் கப்பல், ராயல் சேலஞ்சர்ஸ் கிரிக்கெட் குழு, சாராய கம்பெனி என செல்வத்தில் திளைக்கும் விஜய் மல்லையா ரூ.2,673 கோடி  கடன் பாக்கியுடன் இந்தப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். ரூ.938 கோடி பாக்கி வைத்திருக்கிற ஆர்கிட் கெமிக்கல்ஸ் அண்டு பார்மசூட்டிக்கல்சின் ராகவேந்திர ராவ், 2011ல் விருது பெற்றவர். மோசர் பேயர் இந்தியா நிறுவனத்தின் தீபக் பூரி 2010ல் பத்மஸ்ரீ விருது பெற்றார். இவர் ரூ.581 கோடி கடன் பாக்கி வைத்துள்ளார். மத்திய ஜவுளி அமைச்சர் கே.எஸ்.ராவ் ரூ.351 கோடி பாக்கி வைத்துள்ளார். இவர்கள் எல்லாம் இன்னும் கூட அரசினரின் பெருமதிப்புடன் அதிகார தாழ்வாரங்களில் குறுக்கும் நெடுக்கும் நடப்பவர்கள். இவர்களால்தான் இந்தியா தொழில் வளர்ச்சி பெற்று சிறப்புற்று விளங்குகிறது என்று அவ்வப்போது விதவிதமான விருதுகளால் கவுரவிக்கப்படுபவர்கள்.


என்ன செய்யலாம் இவர்களை? சாமான்ய மக்கள் வாங்கிய கடனை திருப்பி வாங்குவது போல் இவர்கள் கடனையும் வாங்க வேண்டும். அவர்கள் சொத்துக்களை ஜப்தி செய்ய வேண்டும்; ஏலம் விட வேண்டும்; பாக்கியை வசூல் செய்ய வேண்டும். அவர்கள் பெயர் பட்டியலை வங்கிகளிலும் காவல்நிலையங்களிலும் அறிவிப்புப் பலகையில் நிழற்படத்துடன் காட்சிக்கு வைக்க வேண்டும். வங்கிக் கடனை வேண்டுமென்றே திரும்பச் செலுத்தாமல் இருப்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வங்கி ஊழியர் சம்மேளனம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

ஆனால், நமது ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள்? கடந்த அய்ந்தாண்டுகளில் மட்டும் ரூ.11,000 கோடி முதல் ரூ.1,40,000 கோடி வரையிலான வங்கிகளின் லாபம் வாராக்கடனை சரிக்கட்ட, ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் ரூ.2.04 லட்சம் கோடி கடன் வரவே வராது என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. ரூ.3.25 லட்சம் கோடி வாராக்கடனை நல்ல கடன் என்று மறுகட்டமைப்பு செய்துள்ளனர். அதாவது அவர்கள் திருப்பித் தந்து விட சில வசதிகள் செய்து கொடுக்கிறார்கள். வட்டியைக் குறைப்பது, கால அவகாசத்தை நீட்டிப்பது, மிகவும் முக்கியமாக புதிதாகக் கடன் தருவது என்று அந்தக் கடன்கார கார்ப்பரேட்டுகளை காப்பாற்றுகிறார்கள்.

பெரிய சாதனை செய்ததுபோல் 2014 பிப்ரவரியில் சிதம்பரம் அறிவித்தார். 2014 - 2015க்கு வங்கி மூலதனத்தை அதிகரிக்க அரசு ரூ.11,200 கோடி வங்கிகளில் முதலீடு செய்யும். 2013 - 2014ல் ரூ.14,000 கோடி அளித்துள்ளது. வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்து வங்கிகள் நிலைமை மோசமடைவதால், அந்த நிலையில் இருந்து வங்கிகளைப் பாதுகாக்க அரசு நிதி தருகிறது. கார்ப்பரேட் நிறுவனம் பணம் வாங்கி திருப்பித் தர மாட்டான். அதில் வங்கி நட்டம் எதிர்கொள்ளும். அதை அரசு அக்கறையுடன் சமாளிக்கும். ஜனநாயகம்... ஜனநாயகம்...

பெற்றோர்களைக் கொன்றவன், நான் அனாதை அதனால் எனக்கு கருணை காட்டி விட்டுவிடுங்கள் என்று சொன்னதுபோல், நாங்கள் கடனை திருப்பிச் செலுத்தவில்லை, திருப்பிச் செலுத்த கடன் கொடுங்கள் என்று கார்ப்பரேட் நிறுவனங்கள் கேட்கின்றன. ஆட்சியார்கள் கொடுக்கிறார்கள்.

யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின்  செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தும் மென்பொருள் இன்போசிஸ் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டது. அந்த மென்பொருளில் சிக்கல்கள் இருப்பதாகவும் வாராக் கடன்களை சாதாரண கணக்குகளாகக் காட்டுவதாகவும் வங்கி நிர்வாகம் சொல்கிறது. விளங்குமா?

சீனத்தில் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் வாராக்கடன் 9.6 பில்லியன் டாலர் (ரூ.62,400 கோடி). இதனால் சீனப் பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கும் என்றும், சிக்கினாலும், ஏதாவது ஒரு கட்டத்தில், சீனா அதற்கு மூடி போட்டு ஆபத்தை தடுத்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது.

இங்கு அப்படி ஏதாவது நடக்குமா? மே 12ல் வங்கி நிர்வாகங்களைச் சந்திக்கவுள்ள சிதம்பரம் மக்கள் பணத்தைப் பாதுகாக்க உருப்படியாக ஏதும் சொல்ல வாய்ப்புக்கள் அரிது.

உலகமயம் பார்ப்பனியம் போலவே செயல்படுகிறது

உலகமயம் பார்ப்பனியம் போலவே செயல்படுகிறது. வளர்ச்சிக்கும் செல்வச் செழிப்புக்கும் அடையாளமாகக் கருதப்படுகிற சிங்கப்பூரிலும் பார்ப்பனிய ஏற்றத்தாழ்வு கருத்துக்கள்  ஆதிக்கம் செலுத்த முடியும். சிங்கப்பூரில் வேலை செய்யும் இந்திய தொழிலாளர்களுக்கு  தனியாக பொழுதுபோக்கு வெளி அமைக்கப்படுவதும் ஊருக்கு வெளியே தலித்துகளுக்கு தனியாக வசிப்பிடம் இருப்பதற்கும் வித்தியாசம் இல்லை. உழைப்புச் செலுத்த வேண்டும், உரிமை கோரக் கூடாது என்ற சாதிய விதிக்கும், வேலை செய்யுங்கள், ஓய்வெடுக்க, பொழுதுபோக்க தனியிடத்துக்குச் சென்று விடுங்கள் என்ற உலகமய விதிக்கும் வேறுபாடு இல்லை.

சிங்கப்பூரின் செல்வச் செழிப்புக்கு ஆதாரமான உள்கட்டுமானம் பெரும்பாலும் இந்திய மற்றும் பிற ஆசிய நாடுகளில் இருந்து செல்லும் தொழிலாளர் உழைப்பில்தான் எழுந்து நிற்கிறது. சிங்கப்பூர் குடிமக்கள் இந்த இயக்கப்போக்கில் பங்கு பெறுவது மிகவும் சொற்பம். சிங்கப்பூர் மொத்த மக்கள் தொகை 54 லட்சம். இதில் 16 லட்சம் பேர் இடம்பெயரும் தொழிலாளர்கள்.

இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வாழ்விடங்களுக்கு அருகில் உலாவுவதை சிங்கப்பூர் மேட்டுக்குடியினர் விரும்புவதில்லை. 2008ல், ஒரு மேட்டுக்குடி பகுதியில் 1000 இடம் பெயரும் தொழிலாளர்களுக்கு வசிப்பிடம் அமைக்க சிங்கப்பூர் அரசாங்கம்  திட்டமிட்டபோது அதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்ததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

சிங்கப்பூரை கட்டியெழுப்பத்தான் அந்தத் தொழிலாளர்களை அங்கு அனுமதிக்கிறார்களே தவிர அதற்கு மேல் அங்கு அவர்களுக்கு பாத்யதை இல்லை. வாரத்தில் ஒரு நாள், ஞாயிறு, விடுமுறை நாளன்று, மிகைநேரப்பணி செய்யவில்லை என்றால் நாள் முழுவதும், செய்தால் மாலை நேரங்களில், லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படுகிற அந்த இடத்தில் அவர்கள் கூடுகிறார்கள். தங்கள் நாட்டவர்களை சந்தித்துக் கொள்கிறார்கள்.
உண்கிறார்கள். மது அருந்துகிறார்கள். அடுத்த நாள் வேலைக்குத் திரும்புகிறார்கள். லிட்டில் இந்தியா இந்தியர்கள் வசிக்கும் இடம் அல்ல. அங்கு சிங்கப்பூர் குடிமக்கள் வசிக்கிறார்கள். அது இந்தியர்கள் வந்து செல்லும் இடம் மட்டும்தான். வந்து செல்லும்போதும் அவர்கள் அங்குள்ள விடுதிகளுக்கு ஒரு சந்தை. அவ்வளவே.

2013 டிசம்பரில் சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படுகிற இடத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் குமரவேல் என்ற கட்டுமான தொழிலாளி பேருந்து விபத்தில் கொல்லப்பட்டதை கண்டித்து இந்திய தொழிலாளர்கள் போராடியபோது ஏற்பட்ட கலவரத்தில் சிங்கப்பூர் காவல் துறையினர் சிலர் காயங்களுக்குள்ளானார்கள். காவல்துறை வாகனங்கள் சேதத்துக்குள்ளாயின.

நாற்பது ஆண்டுகளில் நடக்காத கலவரம் நடந்துவிட்டதால் மீண்டும் இதுபோல் நடப்பதை தடுக்க சிங்கப்பூர் அரசாங்கம் சில சிறப்பு முயற்சிகளை எடுக்கிறது. சக்திவேல் குமரவேல் மீது பேருந்தை மோதி அவர் சாவுக்குக் காரணமான பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்துள்ளார். சிங்கப்பூர் காவல்துறையினருக்கு லிட்டில் இந்தியாவில் மட்டும் சிறப்பு அதிகாரங்கள் தரப்பட்டுள்ளது. 56 இந்திய தொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். 27 பேர் மீது வழக்கு நடக்கிறது. ஏழாண்டுகள் சிறை தண்டனை மற்றும் கம்பு கொண்டு அடிக்கப்படும் தண்டனைக்கு அவர்கள் உட்படுத்தப்படலாம். கலவரத்தைத் தடுப்பது என்பதற்காகவே இப்போது இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கென நகருக்கு வெளியில் நான்கு பொழுதுபோக்கு மய்யங்கள் அமைக்க உள்ளனர்.

கட்டுமான வேலைக்காக தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் சென்று வருபவர்கள், அங்கு தங்குவதற்கென்று பெரும்பாலும் தனியாக வசதிகள் ஏற்படுத்தித் தருவதில்லை என்றும் கட்டப்படுகிற கட்டிடத்தின் தரை தளத்துக்குக் கீழ் உள்ள அறையில் தங்க வைக்கப்படுவதாகவும் சொல்கின்றனர்.

மோசமான பணி நிலைமைகளால் இடம் பெயரும் தொழிலாளர் மத்தியில் உள்ள அமைதியின்மையின் வெளிப்பாடே லிட்டில் இந்தியாவில் ஏற்பட்ட கலவரம் என்று சிங்கப்பூரில் கருத்துக்கள் எழுந்துள்ளன. நமது நாட்டை கட்டி எழுப்பும் பிற நாட்டு தொழிலாளர்களை நாம் முறையாக நடத்துவதில்லை என்றும் இந்தப் பிரச்சனைகள் எந்த வடிவத்திலும் வெடிக்கலாம் என்றும் சிங்கப்பூரின் எதிர்க்கட்சியினர் சொல்கின்றனர். சிங்கப்பூர் குடிமக்களுக்கு மட்டுமே போராட்ட உரிமை உண்டு. இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் போன்ற எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட தடை உள்ளது.

 இப்போது, கலவரத்துக்குக் காரணம் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டது என்று பார்ப்பதற்கு பதிலாக, அது விபத்து என்றும் கலவரம் போதையில் இருந்த கட்டுக்கு அடங்காத ஒரு கும்பலால், வெளிநாட்டு தொழிலாளர்களால் நடந்தது என்றும் காரணம் சொல்லி அவர்களை ஊருக்கு வெளியே ஒதுக்கிவைக்க திட்டமிடப்பட்டுவிட்டது.

கலவரம் நடந்த இடத்தில் ஓர் இந்தியத் தொழிலாளி கண்ணீரோடு நின்றுகொண்டிருந்ததாகவும் காரணம் கேட்டபோது, எங்கள் நாட்டைச் சேர்ந்தவர் என்று சொன்னதாகவும் விபத்து பற்றி செய்தி வெளியிட்ட பத்திரிகை ஒன்று சொல்கிறது. அது வரை சக்திவேல் யார் என்று அவருக்கு தெரிந்திருக்கவில்லை. ஒரு தொழிலாளி கொல்லப்பட்டால், அதைப் பார்க்க நேரும் சக தொழிலாளர்கள் அனைவரும் சேர்ந்து வயலின் வாசித்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று உலகமயம் எதிர்ப்பார்க்கிறது. மே 1 அன்று சென்னை ரயில் நிலையத்தில் குண்டு வெடித்த போது, சத்தம் கேட்டு ஓடி வந்த சுமைதூக்கும் தொழிலாளர்கள் தங்கள் செல்போன்களில் அங்கு படம் எடுத்துக்கொண்டு நிற்கவில்லை. உயிருக்காகப் போராடியவர்களை, வாகனம் எல்லாம் எதிர்ப்பார்க்காமல் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு எதிர்ப்பக்கம் இருக்கிற அரசு மருத்துவமனைக்கு ஓடினார்கள். அவர்கள் உலகமயம் போல் இரக்கமற்றவர்கள் அல்ல.

சிங்கப்பூர் குற்றங்களே நடக்காத நியாய பூமி அல்ல. 2012ல் 7.4 மில்லியன் சிங்கப்பூர் டாலர் அளவுக்கும், 2013ல் 7.4 மில்லியன் சிங்கப்பூர் டாலர் அளவுக்கும் பணமோசடி நடந்துள்ளது.  வர்த்தக குற்றங்கள், மோசடிகள் 2012ல் இருந்ததைவிட 2013ல் 373 குற்றங்கள் அதிகரித்துள்ளன. கணிணி குற்றங்களும் 2012ல் 238 என இருந்து, 2013ல் 509 குற்றங்கள் என அதிகரித்துள்ளன. இணையதள காதல் மோசடி குற்றத்தில் மட்டும் 2013ல் 5.8 மில்லியன் சிங்கப்பூர் டாலர் மோசடி நடந்துள்ளது. இந்த குற்றங்களைத் தடுக்க அவற்றைச் செய்யக் கூடியவர்கள் என்று யாரையும் அடையாளப்படுத்தி அவர்களுக்கென தனியிடங்கள் அமைக்கப்படவில்லை.

சக்திவேல் குமரவேல் பேருந்து விபத்தில் கொல்லப்பட்ட பிறகு, இந்தியத் தொழிலாளர் பலரும் கைது செய்யப்பட்ட பிறகு, திருப்பி அனுப்பப்பட்ட பிறகு, சம்பிரதாய அறிவிப்புகளுடன் இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் உள்ள இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் தங்கள் கடமையை முடித்துக் கொண்டார்கள்.

இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், குறிப்பாக, இந்தியர்கள் பற்றிய இனவெறிக் கருத்துக்களும் சிங்கப்பூர் குடிமக்கள் மத்தியில் உண்டு. இடம்பெயரும் தொழிலாளர்களை தண்டித்து நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று வலைதளங்களில் கருத்துக்கள் பதிவாகியுள்ளன. இந்தியர்களுக்கு/மக்கள் குடியரசு சீனத்து சீனர்களுக்கு வீடு வாடகைக்கு இல்லை என்று வாசகத்துடன் வீடு வாடகை விளம்பரங்களையும் சிங்கப்பூரில் காண முடியும்.

இனவெறிக் கருத்துக்களும் தீண்டாமைக் கருத்துக்களும் சிங்கப்பூரில் வேலை செய்யும் இந்தியத் தொழிலாளர்களை சமூகத்துக்கு வெளியே நிறுத்துகிறது. சிங்கப்பூரின் அதிநவீன வளர்ச்சி உலகமயத் தீண்டாமையை தடுத்து நிறுத்திவிடவில்லை. ஏகாதிபத்தியம் நிலப்பிரபுத்துவ மிச்ச சொச்சங்களை பயன்படுத்திக் கொள்கிறது.

Thursday, May 1, 2014

சீனப் புரட்சி மற்றும் அது தரும் பாடங்கள் பற்றிய ஒரு சுருக்கமான சித்திரம்

சீனப் புரட்சியின் முக்கிய கட்டங்களும் முக்கிய இயல்புகளும்

புதிய ஜனநாயகப் புரட்சி நடத்தி முடிப்பதை மக்கள் விடுதலைப்படை அறுதியிட்ட பின்பும் கூட, தேசிய முதலாளிகளின் ஒரு பிரிவினரும், குவாமின்டாங் ஆதிக்கத்திற்குட்பட்ட பகுதிகளின் மேல்தட்டு அறிவுஜீவிகளும் புரட்சியின் எதிர்காலம் பற்றி சந்தேகம் கொண்டிருந்தனர்.

அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் குவாமின்டாங் பற்றி இன்னும் மாயை கொண்டிருந்தனர். (அவர்களின் வகை மாதிரி பிரதிநிதிகளாக ஷங் போஷென் மற்றும் லோலுங்ஷி ஆகியோர் இருந்தனர்). அவர்கள் தங்களை ‘நடுநிலையாளர்கள், சுதந்திரமானவர்கள், மூன்றாம் கட்சி’ என்ற தோற்றம் காட்டி, புரட்சிக்கும் எதிர் புரட்சிக்குமிடையிலான சீர்திருத்தவாத மய்ய வழி என்று சொல்லி ‘சீன ஜனநாயக லீக்’ அமைப்பை ஏற்படுத்தினர்.

ஆனால் குவாமின்டாங்கின் வளர்ந்து வரும் பயங்கரவாத ஆட்சி ‘லீக்’ அமைப் பையும் கூட தடை செய்து தகர்த்தது. இது மூன்றாம் கட்சியின் திவால்தனத்தை அம்பலப்படுத்தியது. ஜனநாயக அமைப்பின் ஒரு பிரிவு குவாமின்டாங்கின் புரட்சிகர கமிட்டியாக மறு வடிவம் பெற்றது. இன்னொரு பிரிவு, குறிப்பாக ஜனநாயக லீக்கின் தலைமை (தலைமையகத்தை ஹாங்காங்குக்கு மாற்றி) சீன கம்யூனிஸ்ட் கட்சியோடு ஒத்துழைப்பது என்ற நிலை எடுத்தது.

மக்கள் விடுதலைப் படை தனது தாக்குதல் அழுத்தம் காரணமாக, குறுகிய காலத்தில் அடுத்தடுத்து, பல நகரங்கள் உட்பட பல பகுதிகளையும் கைப்பற்றி, 3 கோடி மக்கள் பிரிவினரை உள்ளடக்கிய மத்திய சீனத்தின் சமவெளி பகுதிகளில் பரந்த விடுதலை செய்யப்பட்ட பகுதியை உருவாக்கியது. அப்போது, விடுதலை செய்யப்பட்ட பகுதிகளில் மொத்தமாக 16 கோடி பேர் இருந்தனர். பல நடுத்தர நகரங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டு விடுதலை செய்யப்பட்டன.

ஏகபோக அதிகாரவர்க்க மூலதனத்தைக் கைப்பற்றுவது, தொழிற்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி முறையைத் தொடர்வது, கவுரவம் மற்றும் உயர் வாழ்நிலைகளை உறுதிப்படுத்த அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களின் நிர்வாகத்தை ஜனநாயகப்படுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கிய சமூக சீர்திருத்தங்களை நகரங்களிலும், நகர்ப்புறத்திலும் சீன கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது. குவாமின்டாங்குக்கு தீர்மானகரமான அடி கொடுக்க மக்கள் விடுதலைப்படையின் தாக்குதல் கட்டத்தில் லியோஷி - ஷென்யாங், ஹ÷வாய் - ஹாய், பெய்ஜிங் - டியன்சின் ஆகிய மூன்று பகுதிகளில் நடவடிக்கைகளை மக்கள் விடுதலைப்படை எடுத்தது.
வடகிழக்கு சீனத்தில் 1948 செப்டம்பர் 12 முதல் நவம்பர் 2 வரை லியோசி-ஷென்யாங் நடவடிக்கையை மக்கள் விடுதலைப்படை கட்டமைத்தது. ஷின்ஷயோவை கைப்பற்றியதன் மூலம், வடகிழக்கு பகுதிக்கும், பெருஞ்சுவரின் தெற்குப் பகுதி வரையிலான குவாமின் டாங்கின் தொடர்புகள் மொத்தமாக அழிக்கப்பட்டது. அதன் பின்னர் ஷான் ஷீங் முழுமையாக விடுவிக்கப்பட்டு, இறுதியாக மொத்த வடகிழக்கு சீனமும் விடுவிக்கப்பட்டது.

கிழக்கு சீனத்தில், ஷான்டங் பிராந்தியத்தின் தலைநகரான சினானில் 16 செப்டம்பர் 1948ல் மக்கள் விடுதலைப்படை தனது நடவடிக்கையைத் துவங்கியது. இது 7 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு நகரமாகும். இது குவாமின்டாங் படையின் முக்கிய பிரிவுகளை ஒழித்துக்கட்ட பங்களித்ததுடன், பெரும் நகரங்களை சுற்றி வளைத்து விடுவிப்பதின் துவக்கமாகவும் அமைந்தது.

டிசம்பர் 5, 1948 முதல் ஜனவரி 31, 1949 வரை பெய்ஜிங் - டியன்சின் நடவடிக்கையை மக்கள் விடுதலைப் படை கட்டமைத்தது. முதலில் ஷன்ங்ஷியா கோ வை கைப்பற்றியதைத் தொடர்ந்து தொழில் மற்றும் வர்த்தகத்தின் முன்னணி நகரங்களில் ஒன்றான டியன்சின் சுற்றி வளைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 1.3 லட்சம் குவாமின்டாங் படைகள் அழித்தொழிக்கப்பட்டன. மற்றும் 2 லட்சம் துருப்புகள் அமைதியான முறையில் மக்கள் விடுதலைப்படையில் உள்வாங்கப்பட்டனர். ஜனவரி 31, 1949 அன்று சீனத்தின் பழமை வாய்ந்த தலைநகர் பெய்ஜிங் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

3 பெரும் நடவடிக்கைகளின் முடிவில், 15 லட்சம் குவாமின்டாங் படைகள் தகர்க்கப்பட்டு, மொத்த வடகிழக்குப் பகுதி, வடக்கு சீனத்தின் பெரும் பரப்பு, யாங்க்சியின் வடக்கில் பெரும் பகுதி ஆகியவை மக்கள் விடுதலைப் படையால் விடுதலை செய்யப்பட்டன. இது மக்கள் விடுதலைப்படைக்குத் தலைமை தாங்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானகரமான ராணுவ வெற்றியை குறிப்பதாக அமைந்தது.

பெரும் தொல்லைகளையும், சிக்கலான சூழ்நிலையையும் எதிர்கொண்ட சியாங்கே ஷெக் 1949, புத்தாண்டில் அமைதிக்கான செய்தி ஒன்றை வெளியிட்டார். இருக்கின்ற நிலையை தொடர்வது என்பதே முன்மொழிதலின் முக்கிய அம்சமாக இருந்தது. அமைதி நடவடிக்கை என்ற பெயரில் நேரத்தை கடத்தி, குவாமின்டாங் படைகளை மறு அமைப்பாக்கி, மக்கள் விடுதலைப்படைக்கு எதிராக புதிய தாக்குதல் தொடுப்பது என்பதுதான் அதன் உண்மையான நோக்கமாகும்.

போர் குற்றவாளிகளுக்கு தண்டனை, நடந்து கொண்டிருக்கும் போலியான ஆட்சியின் செல்லுபடித் தன்மையை நீக்குவது, போலி அரசியல் சாசனத்தை மாற்றுவது, ஜனநாயக வழிமுறைகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த பிற்போக்கு ராணுவத்தையும் மறு அமைப்பாக்குவது, அதிகாரவர்க்க மூலதனத்தைக் கைப்பற்றுவது, விவசாயச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது, தேசவிரோத ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளை ரத்து செய்வது, ஜனநாயக கூட்டு அரசை அமைப்பதற்காக, பிற்போக்கு சக்திகளைத் தவிர்த்து, தேசிய அரசியல் சாசன மாநாட்டைக் கூட்டுவது ஆகியவை அடங்கிய 8 பதில் நிபந்தனைகளை பேச்சுவார்த்தைக்கான நிபந்தனைகளாக சீன கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.

ஜனவரி 21, 1949ல் அமெரிக்க எஜமானர்களின் அறிவுரைப்படி, ஷியாங்கே ஷெக் தனது பதவி ஓய்வை அறிவித்து, துணைத் தலைவரான லிஷசுங் ஷென்னிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் திட்டமிடப்பட்ட வேலைப் பிரிவினை தவிர வேறல்ல. லிஷசுங் ஷென்னை அமைதி தூதுவராக காண்பித்துவிட்டு, ஷியாங், குவாமின்டாங் படைகளை மறு அமைப்பாக்குவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

லிஷசுங் ஷென், அமைதிக்கான செயல் முறையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 8 அம்ச நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதுபோல் தோற்றம் காட்டினார். அப்படியிருந்தபோதும், சீன கம்யூனிஸ்ட் கட்சி அமைதிக்கான பேச்சு வார்த்தை துவங்க ஒப்புக்கொண்டதோடு குவாமின்டாங்கின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்த பிற்போக்கு நான்கிங் அரசாங்கத்தையும் பேச்சுவார்த்தையில் அனுமதித்தது. 15 நாட்கள் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் அமைதி செயல்பாட்டிற்கென்று, திருத்தப்பட்ட மற்றும் மாற்றியமைக்கப்பட்ட நிபந்தனைகளை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்தது.

 (தவறுக்கு வருத்தம் தெரிவித்து), விடுதலைப் போரின் நலனிலிருந்து தேசத்தின் புனர்நிர்மாண நடவடிக்கைகளில் பங்கு பெற தயாராக இருப்பவர்களை போர்க்குற்றவாளிகள் பட்டியலிலிருந்து நீக்கம் செய்து தரப்பட்டது) ஷியாங்கே ஷெக் மற்றும் அவரின் நம்பகமான துரோகிகள் தவிர மற்ற பிற்போக்கு சக்திகளுக்கு கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் நான்கிங் அரசாங்கம் இந்த புதிய முன்மொழிதலை முழுமையாக நிராகரித்தது. இது குவாமின்டாங், எதிர் புரட்சிகர யுத்தத்தைத் தொடர்ந்து எடுத்து செல்வதன் தீய உள்நோக்கத்தை குறிப்பதாக இருந்தது.

ஏப்ரல் 21, 1949 முதல், மக்கள் விடுதலைப்படை யான்ங்கி ஆற்றைக் கடந்து மொத்த நாட்டையும் விடுவிக்க வடக்கு சீனம் நோக்கி முன்னேறியது. இந்தக் கடைசி நடவடிக்கையின் இயக்கப் போக்கிலும், உள்ளூர் குவாமின்டாங் அரசு மற்றும் அதன் துருப்புகளின் கோரிக்கை அடிப்படையில் உள்ளூர்மட்ட அமைதிகரமான தீர்வுகளுக்கு மக்கள் விடுதலைப் படை தயக்கம் காட்டவில்லை. பிற்போக்கு குவாமின்டாங்கின் 22 ஆண்டுகால பழமை வாய்ந்த மய்யமான நான்கிங்கை, யான்ங்சி ஆற்றைக் கடந்து பிடிக்க மக்கள் விடுதலைப்படை 3 நாட்களே எடுத்துக் கொண்டது. இந்த தீர்மானகரமான தாக்குதலுக்குப் பிறகு மற்றதெல்லாம் மக்கள் விடுதலைப் படைக்கு வெற்றிகளே. அக்டோபர் 1949ல் சீன மக்களின் தேசிய அரசியல் சாசன மாநாடு கூட்டப்பட்டு புதிய ஜனநாயக அரசாங்கத்துக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.

இவ்வகையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் தலைமை தாங்கப்பட்ட ஜனநாயக புரட்சி நிறைவுற்று சோசலிச புரட்சிக்கான தடையற்ற பாதை திறந்துவிடப்பட்டது.

அடுத்த பகுதியில் சீன புரட்சியில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டுவதன் பல்வேறு அம்சங்களைப் பற்றி பார்ப்போம்.

புரட்சிகர கட்சி வேட்பாளரின் பார்வை - சந்திரன்

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்களின் தேர்தல் பிரச்சாரம் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் சிறப்பாக நடைபெற்றது. வழக்கமாக பலப் பல தேர்தல்களை சந்தித்து அனுபவமுள்ள முதலாளித்துவக் கட்சிகளுக்கு சற்றும் சளைக்காத விதத்தில் நமது கட்சியின் பிரச்சாரம் அமைந்தது.

சுமார் ஆயிரம் தோழர்கள் தேர்தல் பிரச்சார வேலைகளில் பங்கெடுத்தனர். சிறிய வடிவிலான பிரசுரங்கள்  3 லட்சம் அச்சடிக்கப்பட்டு நேரடியாக வீடு வீடாக 2.5 லட்சம் பேரிடம் கொடுக்கப்பட்டன. மீதி இருந்த பிரசுரங்கள் மீண்டும் ஒருமுறை பிரிக்கால், சாந்தி கியர்ஸ் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் மீண்டும் கொடுக்கப்பட்டன.

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கும் இரண்டு வாகனங்கள் 15 நாட்கள் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டன. அந்த வாகனங்களில் மக்கள் கூடும் இடங்களில் நகரங்களிலும் கிராமங்களிலும் 120 இடங்களில் வேட்பாளருடன் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. பிரச்சார வாகனம் செல்லும்போது 25 இருசக்கர வாகனங்களில் பிரிக்கால் தோழர்களும் சாந்தி கியர்ஸ் தோழர்களும் கலந்து கொண்டனர். மற்ற அரசியல் கட்சிகளில் பொதுவாக வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் பேசுவதில்லை. ஆனால் நமது பிரச்சாரத்தில் வேட்பாளர் வருகிற வாகனங்களில் வேட்பாளர் உட்பட 6க்கும் மேற்பட்ட தோழர்கள் ஆங்காங்கே கட்சியின் நாடாளுமன்ற பங்கேற்பின் நோக்கம் மற்றும் கட்சி தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை தொடர்ந்து எடுத்துரைத்தனர்.

குறிப்பாக நமது பிரச்சாரத்தில், நாடாளுமன்ற பாதை குறித்து நமக்கு எவ்வித மாயையுமில்லை, நாம் போராடுகின்ற எதிர்க்கட்சியாக இருக்கத்தான் போட்டியிடுகிறோம் என்பதை தெள்ளத்தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.

இந்த கருத்தே மிகவும் வித்தியாசமாக பொதுமக்களால் பார்க்கப்படுகிறது. ஆளும்கட்சி, எதிர் கட்சிகள், அவர்களுக்கு வால்பிடிக்கும் கட்சிகள் ஆகியவற்றின் நிறைவேற்றப்படாத வெற்று வாக்குறுதிகள் மற்றும் கீழ்த்தரமான வசவுகளை கேட்டும் பார்த்தும் வந்த வாக்காளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை நமது பிரச்சாரம் ஏற்படுத்தியது.

கட்சியின் தேர்தல் அறிக்கையிலுள்ள அம்சங்களை கோவைத் தொகுதிக்குப் பொருத்திக் கூறியபோது  மிகுந்த கவனத்தைப் பெற்றது. குறிப்பாக சாராயக் கடைகள் இழுத்து மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததை பார்க்க முடிந்தது. பெண்கள் மட்டுமின்றி ஆண்களிடமும் இந்த கோரிக்கை வரவேற்பு பெற்றிருந்தது. பிரச்சாரத்தை ஆண்களைவிட பெண்கள் அதிகம் கவனிப்பதை உணர முடிந்தது. பிரச்சாரத்தை கவனிப்பதில் மூத்த வயதுடைய  வாக்களர்களிடம் இருக்கிற ஆர்வம் இளைய வாக்களர்களிடம் குறைவாக இருந்தது.

அனைத்து அரசியல் கட்சிகளின் மீதும் இருக்கிற வெறுப்பு நம் மீது ஆரம்பத்தில் வருகிறது. ஆனால் கருத்துக்களை கேட்க ஆரம்பித்த  பிறகு பாராட்டுக்களைக் கேட்க முடிகிறது. இவ்வளவு விவரங்களை பேசுகிற ஒரே கட்சி நீங்கள்தான் என்று நேரிலும் பிரச்சாரம் முடிந்த பிறகு தொலைபேசியிலும் அழைத்துச் சொல்வதும் நடந்தது.

பிரச்சாரத்திற்குப் பிறகு பல இடங்களில் இருந்து தொலைபேசியிலும் அழைத்து உங்கள் கட்சிக்கு வாக்களிக்கிறோம், முடிந்தளவு வாக்கு சேகரிக்கிறோம் என்று பேசியது தோழர்களுக்கு உற்சாகம் அளித்தது.
எந்த முதலாளித்துவக் கட்சிக்கும் வால் பிடிக்காத குறிப்பாக திமுக, அதிமுக கட்சிகளோடு கூட்டணி வைக்காத கம்யூனிஸ்ட் கட்சி என்பது மக்களிடத்தில் வரவேற்பு பெற்ற முக்கிய அம்சம். யாரோடும் கூட்டணி வைக்காத கட்சி என்பதை மக்கள் மிகுந்த ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள். ஒரு தொழிலாளி நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது பெரும்பாலான உழைக்கும் மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலாளித்துவ கட்சிகள் ஒருபோதும் தொழிலாளியை வேட்பாளராக்காது என்றும்  ஆச்சரியத்தை வெளிப்படுத்துகின்றனர்.

பிரச்சாரத்தின்போது ‘செங்கொடியை உயர்த்திப் பிடித்து தன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம்’ என்ற பாடல் பெரும்பாலும் ஒலிபரப்பப்பட்டது. அந்தப் புரட்சிகர பாடலும் பிரச்சாரத்தின் ஒரு அங்கமாகவும் நமது அடையாளமாக மாறியது. பெரும்பாலானவர்கள் அப்பாடலில் ஈர்க்கப்பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.

நிறைய இடங்களில் நமது பிரச்சாரத்தை கவனிப்பதற்கு முன்பே ‘நீங்கள் எப்படி இருந்தாலும் திமுக, அதிமுகவோடு கூட்டுச் சேரப் போகிறவர்கள்தானே எதற்கும் பிரச்சாரம் செய்கிறீர்கள்’ என்பது போன்ற விவாதங்கள் தொடங்கி, நாம் சிபிஅய், சிபிஅய் (எம்) கட்சிகள் அல்ல போராடுகிற சிபிஅய் (எம்எல்) கட்சி என்று சொன்ன பிறகு மகிழ்ச்சியோடு வரவேற்று முழுப்பிரச்சாரப் பேச்சையும் கேட்டு கைகுலுக்கி விட்டுசென்றதும் நடந்தது.

தொகுதியில் பெரும்பாலான மக்களிடம் ஒரு புதிய கம்யூனிஸ்ட் கட்சி இந்தத் தேர்தலில்  போட்டியிடுகிறது என்ற கருத்தை, தாக்கத்தை நம் சக்திக்கும் சற்று அதிகமாகவே ஏற்படுத்தியுள்ளதாக கருதுகிறோம்.

முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அவர்களுக்கு  வால்பிடிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மீதும், நாடாளுமன்ற ஜனநாயகம் மீது ஒருவித வெறுப்பும், நம்பிக்கையின்மையும் பிரதிபலிக்கிற தருணத்தில், கருத்தியல்ரீதியாக போராடுகிற  மாற்றுக் கொள்கைகளுக்கு, ஒரு மாற்று சக்தி மாலெ கட்சிதான் என்று பதியவைக்கும் விதையை ஊன்றியுள்ளோம்.

மின்சாரம், நிலம், வீட்டுமனை போன்றவை உழைக்கிற மக்களுக்குக் கிடைக்காதபோது அதை முதலாளித்துவக் கட்சிகள் வாக்குறுதிகளாகக் கொடுத்தும் ஆட்சிக்கு வந்து நிறைவேற்றத் தவறிவிட்டு பெரு முதலாளிகளுக்கு மட்டும் எந்த வாக்குறுதிகளும் தராமலேயே, அவர்களிடம் வாக்குகள் வாங்காமலேயே தடைற்ற முறையில் மக்கள் வரிப்பணத்திலிருந்து சலுகைகளை அள்ளித்தருகிறார்கள் என்ற கருத்து மக்களிடம் மாலெ கட்சி சொல்வது நியாயம்தானே என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள், தங்களுக்கு சம்பந்தமில்லை என்று சொல்லி வந்த பெருமுதலாளிகள் மற்றும் அவர்களுக்கு வரிப்பணத்தை சலுகைகளாக அள்ளித்தரும் முதலாளித்துவக் கட்சிகள், இவர்களின் செயல்பாடுகளுக்குக் காரணமாக இருக்கிற முதலாளித்துவ பொருளாதாரம் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தம் வாழ்வை பாதிப்பதில் சம்மந்தமுள்ளதுதான் என நினைக்க வைக்க இந்த தேர்தலை பயன்படுத்தியிருக்கின்றோம்.

வாக்குகள் எவ்வளவு வரும் என்பதை நம்மால் கணிக்க இயலவில்லை என்றாலும் கணிசமாக நாம் வாக்குகளை பெறுவோம் என பலரும் கூறும்படியாக நமது பிரச்சாரம் அமைந்துள்ளது. இகக(மா)வுக்கு கருத்தியல்ரீதியான ஒரு சங்கடத்தை நமது மாலெ கட்சியின் பிரச்சாரம் ஏற்படுத்தியுள்ளது. தாக்கல் செய்யப்பட்ட முதல் வேட்பு மனு நமது என்பதால் ஊடகங்கள் தவிர்க்க முடியாமல் செய்தி வெளியிட்டன. அது நமது அணிகளுக்கு உற்சாகம் தந்தது. அதன் பிறகு அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி பேட்டி வெளிவந்தது. இவை தவிர, ஊடகங்கள் நமது செய்திகளை வெளியிடாமல் தவிர்த்துவிட்டன.

ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் வேட்பாளர் பிரச்சாரம் என்பது கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் சுமார் 75 சதம் பல்லடம் 20 சதம், கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், சூலூர் ஆகிய தொகுதிகளில் 40 சதம் இருந்தது. ஆனால் வேட்பாளர் இல்லாமல் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் 85 சதம் பிரச்சாரம் அமைந்திருந்தது.

வாக்காளர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தைவிட பிரச்சாரத்தை கட்டமைத்து நடத்திய பிரிக்கால், சாந்தி கியர்ஸ் தோழர்களிடம் இந்தத் தேர்தல் பிரச்சாரம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் மேலும் கட்சியை, உழைப்போர் உரிமை இயக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டியது அவசியம் என உணருகின்றனர். போராடுகின்ற மாலெ கட்சியின் அரசியல் மீது மக்களுக்கு ஏற்படுகின்ற ஈர்ப்பைப் பார்த்து நமது பலத்தை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

கோவையை பொறுத்தவரை, ஒரு புரட்சிகர தொழிற்சங்கமாகத் தொடங்கிய நமது பயணம் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டபோது கட்சியின் ஒரு கட்டத்தை எட்டியிருக்கிறதென்றால் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் ஒரு பாய்ச்சலோடு ஒரு புரட்சிகரக் கட்சியாக முன்னேறி களத்தில் நிற்கிறது. மீண்டும் அதீத வீச்சோடு கட்சியை முன்னெடுத்துக் செல்ல முனைப்போடு பணியாற்றுவோம்.

பழவேற்காடு மீனவர் மீதான தாக்குதலும் தமிழக மீனவர் வாழ்க்கையும் - ஜி.ரமேஷ்

இகக மாலெ திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.ஜானகிராமன் தலைமையிலான உண்மை அறியும் குழு பழவேற்காட்டில் தாக்குதலுக்கு உள்ளான மீனவர்களை சந்தித்து உரையாடியபோது மீனவர்கள் சொன்ன விவரங்கள் அடிப்படையில் எழுதப்பட்டது

“உழைப்பவர் வாழ்க்கை மலராதோ... ஒருநாள் பொழுதும் புலராதோ.... தரைமேல் பிறக்க வைத்தான். எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான். கரைமேல் இருக்க வைத்தான் பெண்களைக் கண்ணரில் குளிக்க வைத்தான்”

என்ற வாலியின் பாடல் வரிகள் 54 ஆண்டுகளுக்குப் பின்பும் தமிழக மீனவர்கள் வாழ்க்கையில் அர்த்தம் மாறாமல் அப்படியே இருக்கின்றது. அவர்களின் சோகம் அதிகமாகிக் கொண்டே போகின்றது. இயற்கையால்  இழப்பதை விட அவர்கள் மனிதர்களால் இழப்பதே அதிகம். இலங்கைக் கடற்படையால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள், வலைகள் கைப்பற்றப்படுவதும்  அழிக்கப்படுவதும் அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்ட நிலையில், இப்போது இந்தியக் கடலோரக் காவல் படையினரும் இடிந்தகரை மீனவர்களை, கன்னியாகுமரி மீனவர்களைத் தாக்கித் துன்புறுத்த ஆரம்பித்துள்ளனர்.

தேர்தலுக்கு முந்தின நாள் காலையில் மீன் பிடித்துத் திரும்பிக் கொண்டிருந்த இடிந்தகரை மீனவர்களின் இரண்டு படகுகளை இடிந்த கரையில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் இந்திய கடலோரக் காவல் படையினர் தடுத்து நிறுத்தி, உரிமத்தைக் காட்டச் சொல்லியுள்ளனர். பின்னர்,  படகின் உரிமையாளர்களான தொம்மையையும் டரூமனையும் தங்கள் காவல்துறைப் படகில் கட்டாயப்படுத்தி ஏற்றி 50 தோப்புக்கரணங்கள் போடச் சொல்லி கம்பால் அடித்துள்ளனர். அதன் பின், மீனவர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காகப் பிடித்து வைத்திருந்த மீன்களையும் நண்டுகளையும் பிடுங்கிக் கொண்டு “இனிமேல் கடலுக்குள் செல்லும்போது இந்த பயம் இருக்க வேண்டும்” என்று மிரட்டி அனுப்பியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீனவர்கள் கடலுக்குள் சென்று சின்னமுட்டத்தில் இருந்து 6 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் படகுகளையும் இந்தியக் கடலோரக் காவல் படையினர் மறித்து, அடையாள அட்டையைக் காட்டச் சொல்லிக் கேட்டுள்ளனர். பின்னர், இது கூடங்குளம் அணுமின்நிலையப் பகுதி. இங்கு வந்து மீன் பிடிக்கக் கூடாது என்று சொல்லி மீனவர்களை அடித்துத் தோப்புக்கரணம் போடவைத்து அவர்களிடம் இருந்த மீன்களையும் நண்டுகளையும் இறால்களையும் பறித்து கொண்டு மிரட்டி அனுப்பியுள்ளார்கள். இனிமேல் லைசென்ஸ் இல்லாத 14 வயது சிறுவனையெல்லாம் படகில் அழைத்து வரக் கூடாது, அப்படி வந்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றும் கூறியுள்ளார்கள்.

மீனவக் குழந்தையின் வாழ்க்கையே வள்ளங்களில்தான் ஆரம்பிக்கிறது. அந்த மீனவர்களிடம் பிடுங்கித் தின்னும் இந்தியக் கடலோரக் காவல்படையினர் சட்டம் பேசுகிறார்கள்.

இப்போது மீன்பிடித் தடைக் காலம். ஆழமான பகுதிக்குச் செல்லத் தடை விதிக்கப் பட்டுள்ளது. அன்றாடச் செலவுக்காக, வள்ளங்களில் (நாட்டுப்படகு) கரையை ஒட்டிய பகுதியில் மீன், நண்டுகளைப் பிடித்து வந்து வயிற்றைக் கழுக வேண்டிய நிலை. இது நாள் வரை இல்லாமல், இப்போது 3, 4ஆவது அணுஉலைகளுக்கு ரஷ்யாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ள பின்னணியில், மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் இந்தியக் கடலோரக் காவல் படை அடித்து விரட்ட ஆரம்பித்துள்ளது. நாகர்கோவிலில் சோனியாவும் மோடியும் ராமநாதபுரத்தில் ராகுல் காந்தியும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு நாங்கள் தக்க நட வடிக்கை எடுப்போம் என்று கர்ஜித்து விட்டுப் போன பின்புதான் இந்தியக் கடலோரக் காவல் படை தன் கைவரிசையைக் காட்டியுள்ளது.

ஆழ்கடலில் மீன்பிடித்தால் அடுத்த நாட்டுக்காரன் அடிக்கிறான். அண்மைக் கடலில் மீன்பிடித்தால் சொந்தநாட்டுக்காரன் அடிக்கிறான். நாங்கள் எங்கு போக என்று ஏங்குகிறார்கள் இங்குள்ள மீனவர்கள். இது ஒரு புறம் என்றால், இன்னொரு பக்கம் மீனவர்களுக்குள்ளேயே தாக்குதல்களை உருவாக்கி, அதன் மூலம் சம்பாதிக்கிறார்கள் ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும் காவல்துறையும். சமீபத்தில் பழவேற்காட்டில் நடந்த கலவரத்திற்கு மூல காரணமும் முழுக் காரணமும் அரசாங்கமும் காவல்துறையுமே.

திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி தாலுகாவில் உள்ளன சின்ன மாங்காடு, பெரிய மாங்காடு, புதுக்குப்பம் என 3 குப்பங்கள். கும்மிடிப்பூண்டித் தாலுகாவில் நொச்சிக்குப்பம், பாட்டைக்குப்பம், பத்தானிக்குப்பம், வெங்கடேச பெருமாள் நகர், கோங்கிலிக்குப்பம், வள்ளம்பேடு, சுண்ணாம்புக்குளம்,  பெரிய மேடு, காரைக்காடு குப்பம் என சுமார் 20 குப்பங்கள் உள்ளன. இதில் 3 குப்பங்கள் மட்டுமே ஆந்திர மாநில எல்லைக்குள் வருகின்றன. இவர்கள் எல்லாருக்குமே வாழ்வாதாரம் பழவேற்காடு ஏரியில் கிடைக்கும் மீன்களும் நண்டுகளும் இறால்களும்தான்.

சின்னமாங்காடு, பெரிய மாங்காடு, புதுக்குப்பம் இந்த மூன்று குப்பங்களும் ஏரியின் ஆழமான முகத்துவாரப் பகுதிக்கு அருகில்  உள்ளன. அதனால், அவர்களுக்கு மீன் கிடைப்பதில் சிக்கல் இல்லை. ஆனால், இந்தப் பகுதியில் உள்ள நொச்சிக்குப்பம் பாட்டைக்குப்பங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு மீன் கிடைப்பதில்  சிக்கல் வருகிறது. இவர்கள் ஆழமான பகுதிக்குச் சென்று வலை விரித்தால் அந்த வலைகளை மாங்காடு குப்பத்து மீனவர்கள் அறுத்துவிடுகிறார்கள். அல்லது தூக்கிச் சென்று விடுகிறார்கள்.

அப்படித்தான் ஜனவரி 31 அன்று நொச்சிக்குப்பம் மீனவர்கள் வலைகளை மாங்காடு மீனவர்கள் எடுத்துச் சென்றுவிட, நொச்சிக்குப்பப் பகுதி மீனவர்கள் திருப்பாலை வனம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கிறார்கள். வலைகளைக் கொண்டு வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிடுகிறார்கள். ஆனால், மீண்டும் வலைகளை எடுத்துச் சென்றது மட்டுமின்றி மாங்காடு மீனவர்கள், நொச்சிக்குப்பம் மீனவரைத் தாக்குகிறார்கள். ஆரப்பாக்கம் காவல்நிலைத்தில் புகார் தரப்படுகிறது. எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை. காரணம் மாங்காடு தரப்பினரிடமிருந்து மாதம் தவறாமல் காவல்துறைக்கு மாமூல் செல்வதே என்கிறார்கள்.

மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்ததைத் தொடர்ந்து பொன்னேரி தாலுகா அலுவலகத்தில், பிப்ரவரி முதல் வாரத்தில் கோட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த அமைதிப் பேச்சு வார்த்தைக்கு சின்னமாங்காடு, பெரியமாங்காடு, புதுக்குப்பம் தரப்பில் இருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை. அதிகாரிகளும் அதைக் கண்டு கொள்ளவில்லை. அதனால், நொச்சிக்குப்பம் தரப்பு மீனவர்கள் பிப்ரவரி 12 அன்று மறியல் நடத்துகிறார்கள். அதைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இருதரப்பும் ஆஜர். வலைகளை எடுத்துச் சென்றதால் தங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பு என்கிறார்கள் நொச்சிக்குப்பம் மீனவர்கள். ஆனால், ரூபாய் 6 லட்சம் மாங்காடு தரப்பு நொச்சிக்குப்பம் தரப்புக்குக் கொடுக்க வேண்டும் என்று பேசி முடிக்கிறார்கள் அதிகாரிகள்.

அதன் பின்பும் மாங்காடு தரப்பினர் நொச்சிக்குப்பம் மீனவர்கள் சிலரை ஏப்ரல் 8 அன்று அடித்துக் காயப்படுதுகிறார்கள். காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. யாரும் கைது செய்யப்படவும் இல்லை. வாழ்வாதாரப் பாதிப்பு, வலைகள் இழப்பு, அதிகாரிகளின் அலட்சியம் ஆகியவற்றால் அதிருப்தி அடைந்த நொச்சிக்குப்பம் தரப்பு மீனவர்கள் வேறு வழியின்றி, மீனவர் சமுதாய வழக்கப்படி மாங்காடு தரப்பினரை சண்டைக்கு அழைக்கும் வகையில் சண்டைக் கொடி ஏற்றுகிறார்கள்.

சண்டைக் கொடியேற்றிவிட்டால், எதிர்த் தரப்பு 1 மணி நேரத்திற்குள் பதில் கொடுக்க வேண்டும். ஆனால் பதில் இல்லை. அதைத் தொடர்ந்து சின்னமாங்காட்டிற்குள் நொச்சிக் குப்பம் தரப்பு மீனவர்கள் நுழைந்து தாக்குதல் நடத்துகிறார்கள். 4000 பேர் இருந்ததாகச் சொல்கிறார்கள். அங்குள்ள 9 தெருக்களில் 4 தெருக்களில் இருந்த குடிசைகள் எரித்து, காரைவீடுகளைத் தாக்கியுள்ளார்கள்.  விவரம் அறிந்த சின்ன மாங்காடு ஆட்கள் ஏற்கனவே ஊரைக் காலி செய்து சென்றுவிட்டிருந்தார்கள். போலீஸôர் மட்டுமே இருந்துள்ளார்கள். அவர்கள் மீது ஆத்திரத்தில் இருந்த மீனவர்கள் போலீஸôரைத் தாக்கியுள்ளார்கள். 75 குடிசைகள், 25க்கு மேற்பட்ட படகுகள் எரிக்கப்பட்டுள்ளன. சின்ன மாங்காட்டில் உள்ள மற்ற 5 தெருக்களுக்கோ, பெரிய மாங்காடு, புதுக்குப்பம் பகுதிகளுக்குள்ளோ அவர்கள் செல்லவில்லை. எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இத்தனைக்கும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பொன்ராஜ÷ மற்றும் கோட்டாட்சியர் மாங்காடு பகுதிக்குள் இருந்தும் உருப்படியான தடுப்பு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

நொச்சிக்குப்பம் தரப்பினர் 136 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். வீடுகளில் பெண்கள் மட்டுமே உள்ளார்கள். காவல்துறை நொச்சிக் குப்பம் பகுதிகளில் வீடுவீடாகச் சென்று பெண்களை அசிங்கமாகப் பேசி அவர்கள் வீட்டு ஆண்களை அழைத்து வரச் சொல்லி மிரட்டுகிறார்கள். “20க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள எங்களுக்கு வாழ்க்கையே பாழாகிறது என்று நாங்கள் பல முறை முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத அரசும், காவல்துறையும் இப்போது வந்து எங்கள் வீட்டு ஆண்களை விரட்டி விரட்டிக் கைது செய்கிறது. மாமூல் வாங்கிக் கொண்டு மனசாட்சியில்லாமல் செயல்பட்டு எங்களை மேலும் துன்புறுத்துகிறார்கள்” என்று நொச்சிக்குப்பம் பகுதிப் பெண்கள் குமுறுகிறார்கள்.

தங்களுக்கு  நீதி கிடைக்கவில்லை என்று கூறி நொச்சிக்குப்பம் தரப்பைச் சேர்ந்த சுமார் 10000 வாக்காளர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்துவிட்டார்கள். அதிமுக அரசு தங்களுக்கு நிறைய செய்வார்கள் என்ற நம்பிக்கையில். சின்ன மாங்காடு, பெரிய மாங்காடு, புதுக்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். அரசோ கலவரத்தில் பாதிக்கப்பட்ட படகு ஒவ்வொன்றுக்கும் ரூ.4500ம் எரிந்த குடிசைகளுக்கு தலா ரூ.3500ம், பாதிப்படைந்த  வீடுகளுக்கு தலா ரூ.2000மும் மட்டுமே வழங்கியுள்ளது. தேர்தல் சமயம் என்பதால் நிறைய தரமுடியாது. தேர்தல் முடிந்தவுடன் நல்ல நிவாரணம் தரப்படும் என்று சொல்லியுள்ளார்களாம். இகக (மாலெ) கட்சியினரைத் தவிர இதுவரை எந்தவொரு கட்சியும் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்று பார்வையிடவில்லை.

பிரச்சனை இரு தரப்பு தமிழக மீனவர்களுக்கிடையேதான். ஆனால், மக்களுக்கிடையே உள்ள பிரிவினையைப் பயன்படுத்தி, காசு பார்க்கும் அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கத்தினரும் ஊடகங்களும் ஆந்திர மீனவர்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் என்று ஊதிப் பெருக்கி இல்லாத பிரச்சினையை இருப்பதாகக் காட்ட முயற்சிக்கிறார்கள். வெறும் 3 குப்பங்கள் மட்டுமே ஆந்திர எல்லைக்குள் வருகின்றன. அதிலும் அதிகம் வசிப்பவர்கள் தமிழர்கள். பழவேற்காடு ஏரியில் முக்கால் பாகம் ஆந்திர எல்லைக்குள்ளும் கால் பாகம் மட்டுமே தமிழக எல்லைக்குள்ளும் இருக்கிறதாம். ஆந்திர எல்லைக்குள் அதிகமாக இருக்கும் ஏரியில் மீன்பிடிப்பதில் தமிழக மீனவர்களுக்கிடையே தகராறு. 

பொதுவாக சாதாரண காலங்களில் மீன்கள் அதிகம் உள்ள காலங்களில் இரண்டு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்படுவதில்லை. இரு தரப்புக்குள்ளும் திருமண சம்பந்தம்  செய்து கொள்கிறார்கள். கோடை காலத்தில், ஏப்ரல், மே, ஜ÷ன் மாதங்களில் மாங்காடு குப்பங்களுக்கு அருகில் உள்ள முகத்துவாரத்தில் மட்டுமே மீன்கள் கிடைக்கும். அதனால், அவர்கள் ஒரு நாளைக்கு ரூ.5000 பார்த்து விடுவார்கள். நொச்சித் தரப்புக்கோ மீன் விளைச்சல் இல்லாததால் ஒரு நாளைக்கு ரூ.1000 கிடைப்பதே அரிது. மேலும் மாங்காடு தரப்பினர் விசைப் படகு வைத்துள்ளார்கள். நொச்சிக்குப்பம் பகுதியினரிடம் பாய்மரப் படகு மட்டுமே இருக்கிறது. கடந்த காலங்களில்  நாள் முறை வைத்து மீன்கள் பிடித்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வந்துள்ளார்கள். ஆனால், இப்போது அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அவர்களுக்குக் காசு கிடைக்கிறது என்பதற்காக, பிரச்சனைக்குத் தீ மூட்டி எரியவிட்டு அதில் குளிர் காய்கிறார்கள்.

பழவேற்காடு மட்டுமல்ல பொதுவாகவே மீனவர் கிராமங்களுக்கிடையே மோதல் என் பது வெளியே தெரிந்தும் தெரியாமலும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. ராமநாதபுரம், தூத்துக்குடி, பெரியதாழை, மணப்பாடு பகுதி மீனவர்களுக்கிடையே எல்லை பிரச்சனை தகராறுகள் வரும். சமாதானமாகும். இப்போதும் கூட சுருக்குமடி வலை, இரட்டை மடி இழுவலைப் பிரச்சினை இருந்து கொண்டே தான் இருக்கின்றது.

விசைப்படகு வைத்திருப்பவர்கள் ஆழ் கடலுக்குள் செல்ல முடியும். அதனால், நாட்டுப் படகு மீனவர்கள் சுருக்கு மடி வலையை விரித்து மொத்த மீன்களையும் அள்ளி விடுகிறார்கள். இந்த வலையில்  மீன் குஞ்சுகள் கூட தப்பாது. இதனால் மீன்கள் இனப் பெருக்கமே பாதிக்கும். ஆகையால் விசைப்படகு மீனவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதே வேளை அவர்கள் ஆழ்கடலுக்குள் கண்ணிகள் நெருக்கமாக உள்ள இரட்டை மடி இழுவலையைப் போட்டு மீன் பிடிக்கிறார்கள். இதுவும் சுருக்குமடி போல, மீன் வளத்தை முற்றிலும் அழித்துவிடும். அதோடு கூட்டமாக வாழும் கணவாய் பார்களை வேரோடு அழித்துவிடும். எனவே சுருக்கு மடி வலையும், இரட்டை மடி வலையும் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. ஆயினும், காசு பார்க்க இவற்றைப் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இதனால், வலை அறுப்பு, வலை பறிப்பு, தகராறுகள் நடக்கின்றன.

இலங்கை மீனவர்களுக்கும் இந்திய மீனவர்களுக்கும் இடையே நடக்கும் தகராறுக்கு ஒரு வகையில் இந்த இரட்டை மடி இழு வலை விரிப்பும் காரணம் என்கிறார் ராமநாதபுரத்தைச் சேர்ந்த நிரபராதி மீனவர்களை விடுவிக்கும் அமைப்பின் தமிழகப் பிரதிநிதி அருளானந்தம்.  தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளால், பாக் ஜலசந்தி கடல் வாழ் உயிரினங்கள் இடம்பெயரும் சூழல் உருவாகிறது என்கிறார் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக புவியியல் துறை ஆராய்ச்சியாளர் சூசை அனந்தன்.

இந்த லட்சணத்தில் கூடங்குளம் அணுஉலை, சேது சமுத்திரத் திட்டம், தாது மணல் தொழிற்சாலை என்று எல்லாவற்றையும் அமல்படுத்தி கடைசியில் கடலை கட்டமண்ணாக்கப் பார்க்கிறார்கள்.
 
பழவேற்காடு தொடங்கி குமரி மாவட்டத்தின் நிரோடி வரை 1078 கி.மீ நீளம் கொண்ட தமிழகக் கடற்கரையில் மீன் வளத்தை நம்பித்தான் மீனவர்கள் இருக்கிறார்கள். கடல் நீரோட்டத்திற்கேற்ப நகரும் படகே அவர்களின் அன்றையத் தொழிலைத் தீர்மானிக்கும். ஆனால், சிலர் காசுக்காக தடை செய்யப்பட்ட முறையில் மீன்பிடித்து மீன் வளத்தையே அழிக்கிறார்கள்.

இதற்குத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது ஆட்சியாளர்களின், அரசாங்கத்தின் பொறுப்பு. ஆனால், தடை செய்யப்பட்ட வலைகள் பயன்படுத்துவதை கறாராகத் தடுப்பதற்கோ மீன் வளம் குறைவாக உள்ள பகுதியினரும் மீன் வளம் அதிகம் உள்ள பகுதியினரும் மோதிக் கொள்ளாமல் முறை வைத்து மீன்பிடிப்பதற்கோ நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, பிரச்சனை ஆறாமல் இருப்பதையே ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கத்தினரும் விரும்புகிறார்கள். இலங்கைக் கடற்படையால்தான் மீனவர் வாழ்க்கை ஆபத்துக்குள்ளாகிறது என்று மட்டும் சொல்லி பொறுப்பில் இருந்து நழுவுகிறார்கள். 

அரபிக் கடலில் மீன்பிடிக்கும் குஜராத் டையு டாமன்  மீனவர்கள் பாகிஸ்தான் கடல்படையால் கைது செய்யப்படுகிறார்கள். 232 இந்திய மீனவர்கள் பாகிஸ்தானின் பல்வேறு சிறைகளில் உள்ளார்கள். பாகிஸ்தான் கடல்படை 800 இந்திய மீனவர் படகுகளை பறிமுதல் செய்து வைத்துள்ளது என தேசிய மீன்பிடித் தொழிலாளர் மன்றம் (The National Fishworkers Forum) கூறுகிறது. இந்திய வெளியுறத்துறை இணை அமைச்சர் இ.அகமதியும் இதை நாடாளுமன்றத்தில்  கூறியுள்ளார். பாகிஸ்தானின் 139 மீனவர்களை, 200 படகுகளை இந்திய கடற்படை சிறைப் பிடித்துள்ளது என்கிறார்கள்.

 

Search