COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Saturday, March 15, 2014

வன்கொடுமை தடுப்புச் சட்டம் (1989) திருத்தப்பட வேண்டுமா? - சந்திரமோகன்

பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்புச் சட்டம்) 1989 இயற்றப்பட்டு, 25 ஆண்டுகள் ஆகின்றன. இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது பற்றி விவாதங்கள் நடைபெறுகின்றன. சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டி, பாட்டாளி மக்கள் கட்சி சில சாதி அமைப்புகள், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை திருத்த வேண்டும், ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகளை எழுப்பி வருகின்றன. சமீபத்தில் திமுகவின்  உட்கட்சிப் பிரச்சனையில் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் மீது, மு.க. அழகிரி ஆதரவாளரால் இச்சட்டத்தின் அடிப்படையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையொட்டிய விவாதத்தில், கருணாநிதியும், ஜெயலலிதாவும் கூட தொட்டும் தொடாமலும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். திமுகவும் கருணாநிதியும் இச்சட்டத்தை ஆதரிக்கின்றனரா, எதிர்க்கின்றனரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என ராமதாஸ் கோரியுள்ளார். இடதுசாரிகளும், தலித் அமைப்புகளும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பலப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். வரலாற்றுப் பின்னணி பல நூற்றாண்டுகளாக தீண்டாமைக் கொடுமையால் பாதிக்கப்படும் ஒரு சமூகம் அக்கொடுமையிலிருந்து விடுதலை பெறும் முயற்சிகளின் ஓர் அங்கமாகவே சட்டங்கள் உருவாயின.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், அம்பேத்கர் சைமன் கமிசனிடம் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் உரிமைப் பட்டியல் வழங்கியதிலிருந்து இதற்கான முயற்சி துவங்கியது. சென்னை மாகாணத்தில் ரெட்டமலை சீனிவாசனார், எம்.சி.ராஜா, எல்.குருசாமி, சுப்பாராவ் போன்ற தலித் தலைவர்களும், சட்டமன்ற பிரதிநிதிகளும், ‘பொது இடங்களில் தாழ்த்தப்பட்டோர் புழங்குவதற்கு சட்டரீதியான உரிமை’ கோரி, தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர்.

பிரிட்டிஷ் ஆட்சியில், முதலில், தாழ்த்தப்பட்டோரின் (மனித) உரிமைகள் மற்றும் ஒதுக்கீடு என்பதன் அடிப்படையில், ஒரு சில சட்ட ஏற்பாடுகள் உருவாக்கப்பட்டன. பிறகு சுநத்திர இந்தியாவில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி III அடிப்படை உரிமைகளை வரையறுத்தது. ‘மதம், இனம், சாதி, பாலினம் மற்றும் பிறந்த இடத்தின் அடிப்படையில் பாரபட்சம் கடைப்பிடிக்கப்படுவதை தடை செய்தல்’ பற்றி சட்டப்பிரிவு 15 விளக்குகிறது.

சாதி அடிப்படையில், எந்தவொரு பிரஜைக்கும் எதிராக அரசு பாரபட்சம் காட்டக்கூடாது என பிரிவு 15(1) கூறுகிறது. அதேபோல, பிரிவு 15(2)படி,‘சாதியின் அடிப்படையில், எந்தவொரு பிரஜையும் கடைகள், ஓட்டல்கள், மற்றும் பொழுதுபோக்கு கூடங்களுக்குச் செல்வதற்கோ, பொது மக்களால் பயன்படுத்துகிற அரசு சார்ந்த அல்லது அரசு நிதி பெறுகிற பொது இடங்கள், சாலைகள், கிணறுகள், குளங்கள் குளிக்குமிடங்கள் புழங்குவதற்கு தடுக்கப்படுவதோ, கட்டுப்பாடு விதிக்கப்படுவதோ, முடக்கப்படுவதோ கூடாது. சட்டப்பிரிவு 17 திட்டவட்டமாக அறிவித்தது. ‘தீண்டாமை ஒழிக்கப்படுகிறது. அனைத்து வகைகளிலும் தீண்டாமை நடைமுறைப்படுத்தப்படுவது தடைசெய்யப்படுகிறது. தீண்டாமையால் உருவாகிற எந்த  பாதிப்பும்/தீங்கும், சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும்’.

 1955ல், தீண்டாமையை பிரச்சாரம் செய்வது, கடைப்பிடிப்பது மற்றும் அதனால் ஏற்படக்கூடிய தீய விளைவுகள் மற்றும் அதோடு தொடர்புடைய விவகாரங்களில் தண்டனை வழங்குவதற்கான ஒரு சட்டம்  குடிஉரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1955 இயற்றப்பட்டது.

தீண்டாமையின் அடிப்படையில் மதரீதியாக, சமூக ரீதியாக புறக்கணிப்பை தாழ்த்தப்பட்டோர் மீது திணித்தல், பொது இடங்களை புழங்குவதை தடை செய்தல் மற்றும் பிற குற்றங்களுக்கு தண்டனை வழங்குவது பற்றி பட்டியலிட்டது. தீண்டாமையின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டோர்மீது தொடுக்கப்படும் சமூக, பொருளாதார, பண்பாடு மற்றும் மதரீதியான ஒடுக்குமுறைகளை விரிவாக சுட்டிக் காட்டியது: அவை தண்டிப்பதற்குரிய குற்றங்கள் எனத் தெளிவுபடுத்தியது. ஆனாலும், தீண்டாமைக் குற்றங்கள் ஒழிந்துவிடவில்லை.

குடியுரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1955ல் மிகவும் குறைவான வழக்குகளே பதிவாயின. தண்டனை வழங்கப்பட்டவை மிகவும் குறைவாகும். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், கிராமப்புறங்களில், பழங்கால காட்டுமிராண்டித்தனமான முறையிலான தாக்குதல்கள் மேல்சாதி ஆதிக்க கும்பல்களாலும், தனியார் படைகளாலும் அரங்கேற்றப்படுகின்றன. நகர்ப்புறங்களிலும் தீண்டாமைக் கொடுமைகள் தொடர்ந்தன. ஒடுக்குமுறைக்கு எதிரான இயக்கங்கள், போராட்டங்கள், எதிர்ப்புகள் உருவாயின. புதியதொரு வலுவான சட்டத்தின் தேவையும் எழுந்தது.

1955லிருந்து முப்பதாண்டு கால அமலாக்கத்தின் பல்வேறு அம்சங்களையும் பரிசீலித்து 1989ல் புதியதொரு சட்டம் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன் கொடுமை தடுப்பு) சட்டம் 1989 உருவானது.

இச்சட்டத்தை எதிர்ப்பவர்கள் இதைக் கொடூரமான சட்டமாக சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். இச்சட்டத்தின்படி எவை எல்லாம் வன்கொடுமைகள் என்றால்,

(1) தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியின நபரை உண்ணத்தகாத/அருவருப்பான பொருள் எதனையும் குடிக்குமாறு/உண்ணுமாறு வற்புறுத்துவது

(2) அவர்களது இருப் பிடத்தில் அல்லது அருகாமையில் மலம், கழிவுப் பொருட்கள், விலங்குகளின் பிணங்கள், அருவருப்பான பொருட்களை கொட்டுதல்

(3) தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியின நபரின் ஆடைகளை அகற்றியோ, வெற்றுடம்புடனோ, கரியால் சாயத்தால் அலங்கோலப் படுத்தியோ பிறர் காண இழுத்துச் செல்லுதல்

(4) அவருக்குச் சொந்தமான/ஒதுக்கப்பட்ட/ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலத்தை பிறர் சட்டவிரோதமாக உடமையாக்குதல், பயிரிடுதல், உரிமை மாற்றம் செய்து கொள்ளுதல்

(5)தாழ்த்தப்பட்ட/பழங்குடியினருக்கு சொந்தமான நிலத்தில்/ இருப்பிடத்தில் அவருக்கு உரிய உரிமையைப் பறித்தல்; அவரது நிலம்/இருப்பிடம்/நீராதாரம் மீது அவருக்குள்ள உரிமைகளை பயன்படுத் துவதில் குறுக்கீடு செய்தல்

(6) பலவந்தமாக வேலை சுமத்துதல், கொத்தடிமை முறைக்கு ஆட்படுத்துதல் அல்லது ஆசைகாட்டி சிக்க வைத்தல்

(7) தேர்தலில் குறிப்பிட்டதொரு வேட்பாளருக்கு வாக்களிக்கவோ/வாக்களிக்காமல் இருக்கவோ கட்டாயப்படுத்துதல், மிரட்டுதல்

(8) பொய்யான, தீய நோக்கமுள்ள, அலைக் கழிப்புக்குள்ளாக்கும் சிவில் அல்லது கிரிமினல் அல்லது பிற சட்டங்களின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட/பழங்குடியினருக்கு எதிராக தொடுத்தல்

(9) அரசு ஊழியரிடம் பொய்யான/அற்பமான தகவல்களைக் கொடுத்து தாழ்த்தப்பட்டோருக்கு/பழங்குடியினருக்கு தீங்கு அல்லது தொல்லை கொடுக்குமாறு துண்டுதல்

(10) பொது இடத்தில் இழிவுபடுத்தும் கருத்துடன் வேண்டுமென்றே அவமானப்படுத்துதல் அல்லது அச்சுறுத்துதல்

(11)தாழ்த்தப்பட்ட/பழங்குடியினப் பெண்ணை அவமானப்படுத்துதல் மற்றும் கண்ணியத்தை குலைக்கும் நோக்குடன் தாக்க முனைவது, தாக்குவது,

(12) தான் வகிக்கும் பதவி/பொறுப்பு ஆகியவற்றில் ஒருவர் தாழ்த்தப்பட்ட/பழங்குடியினப் பெண்ணை பாலியல் ரீதியாக பயன்படுத்துதல், அடிமைப்படுத்துதல்

(13) அவர்கள் பயன்படுத்தும் நீர்நிலைகள், நீராதாரங்களை கெடுத்தல் அல்லது மாசுபடுத்துதல்

(14) பொதுமக்கள் பயன்படுத்தி வருகிற ஒரு பாதையை பயன்படுத்துவதற்கான உரிமையை மறுத்தல், பொதுமக்கள் கூடும் இடத்தினை அவர்கள் பயன்படுத்துவதை, அங்கு சென்று வருவதைத் தடுத்தல்

(15)  தாழ்த்தப்பட்ட/பழங்குடியினத்தைச் சார்ந்த ஒருவரை அவருடைய வீட்டிலிருந்தோ/ ஊரிலிருந்தோ/ குடியிருக்கும் இடத்திலிருந்தோ வெளியேறுமாறு கட்டா யப்படுத்துதல், தூண்டுதல் ஆகியவை வன்கொடுமை குற்றச்செயல்கள் ஆகும். குறைந்தபட்சம் ஆறு மாதம், அதிகபட்சம் அய்ந்தாண்டுகள் வரை சிறைத் தண்டனை உண்டு: அபராதமும் விதிக்கப்படும். சட்டத்தின் ஆட்சி சனநாயக அரசியல் என்றெல்லம் பீற்றிக் கொள்ளுகிற நமது நாட்டில், நாகரீக சமூகம் வெட்கித் தலைகுனியுமளவிற்கு மேலே பட்டியலிடப்பட்டுள்ள வன்கொடுமைகள் நடைபெறத்தான் செய்கின்றன.

இந்திய சமூகத்தின் கால் பங்கினர் SC/ST பிரிவினர், சாதி ஆதிக்க சக்திகள் +அரசியல் வாதிகள்+அதிகார வர்க்கத்தினரின் கூட்டுத் தாக்குதல்களை தினமும் சந்தித்துக் கொண்டிருக்கும்போது, 1989 வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், திருத்த வேண்டும் என்ற விவாதம் அநீதியானதாகும். மாறாக, கும்பல் வன்முறை, சாதிய வெறியாட்டம், சாதிய படுகொலைகள், கூட்டுப் பாலியல் பலாத்காரங்கள் போன்ற அட்டூழியங்களை எதிர்கொள்ளும் அளவு இச்சட்டம் வலுவானதாக இல்லை எனலாம்.

சொத்துக்களை திட்டமிட்டு அழிப்பதற்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை எனச் சொல்லப்பட்டாலும், அமலானதாக வரலாறு எதுவும் இல்லை. திட்டமிட்டு சொத்துக்களை அழித்த குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வது பற்றி சட்டத்தில் இடமில்லை.

குற்றச் செயல்களை அரசு ஊழியர் ஒருவர் செய்தால், கடமைகளை வேண்டுமென்றே புறக்கணித்தால் அதிகபட்சம் ஓராண்டு சிறைத்தண்டனை என்று இச்சட்டம் சொல்கிறது. இந்த சட்டத்தின் அடிப்படையில் பரிசீலித்தால், பரமக்குடி துப்பாக்கி சூட்டிற்கு காரணமான காவல்துறை, தருமபுரி, நத்தம் காலனி மீதான வெறியாட்டத்திற்கு காரணமான சாதிவெறி கும்பல், மற்றும் கடமைகளை உரிய நேரத்தில் செய்யத் தவறிய மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு என்ன தண்டனை கிடைக்கும்? வெடிப் பொருட்களை பயன்படுத்தி திட்டமிட்டு வீடுகளை, சொத்துக்களை அழித்த வன்முறைக் கூட்டத்திற்கு ஆயுள் தண்டனை கிடைக்குமா? சட்டத்தினடிப்படையில் நீதி வழங்கிட தமிழக நீதித்துறைக்கும், ஜெயலலிதா ஆட்சிக்கும் அரசியல் உறுதி இருக்கிறதா?

தமிழக காவல்துறை சாதிய ரீதியாகவே உள்ளது. சட்டத்தின் அடிப்படையில் செயல்படுவதும் இல்லை. தாழ்த்தப்பட்டவராக அல்லாதவரே காவல்துறையில் நிரம்பியுள்ளதால், சகோதரத்துவமோ சனநாயகமோ அவர்களிடம் இல்லை. வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட/பழங்குடியினத்தவர் ஒருவர் காவல் நிலையத்தின் கதவைத் தட்டினால், நடைபெறுவது என்ன? காவல் நிலையத்தில் இவ்வழக்கை எடுக்க முடியாது, இதற்கென தனியாக ஒரு காவல் நிலையம் உள்ளது/டி.எஸ்.பி உள்ளார் - அங்குதான் புகாரை தர வேண்டும் எனத் தட்டிக் கழிப்பது நடைபெறுகிறது.

பாதிக்கப்பட்டவர் நிர்ப்பந்தம் கொடுத்தால், இச்சட்டத்தின் கீழ் வழக்கு வராமல், வழக்கமான இ.பி.கோ எதாவது ஒரு பிரிவின் கீழ் பதிவு செய்வது நடைபெறுகிறது. கொல்லப்படுதல், கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் இருந்தால், மக்கள் போராட்டங்களில் இறங்கினால், அமைப்புகள், ஊடகங்கள் தலையிட்டால் மட்டுமே வழக்கு பதிவாகிறது. பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட/பழங்குடியினருக்கு எதிர்தரப்பிடம் புகார் தரச்சொல்லி பெற்றுக் கொண்டு சமரச பேரத்தில் ஈடுபடு வதுதான் பரவலாக நடைபெறுகிறது.

டி.எஸ்.பி விசாரணை என இழுத்தடித்து புகார் மனுக்களை வழக்குகளாக மாற்றுவதற்கு பல நாட்கள் எடுத்துக் கொள்ளப் படுகிறது. விளைவு, வன்கொடுமைகள் ஆயிரக்கணக்கில் நடைபெற்றாலும், வழக்குகள் நூறுகளில்தான் பதிவாகின்றன. தமிழகத்தில் பழங்குடியினர் மற்றும் அருந்ததியர் மீதான வன்கொடுமை குற்றச் செயல்கள் மீது வழக்குகள் மிகக் குறைவாகவே பதிவாகியுள்ளன. வாச்சாத்தி பழங்குடியினர் மீதான வழக்குகளும் தீர்ப்பும் விதிவிலக்கானவை.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் அமலாக்கம் பற்றிய விபரங்கள் தெரிவிப்பது என்னவெனில், கடந்த மூன்றாண்டுகளில் (2011, 13) பதிவு செய்யப்பட்ட 302 வழக்குகளில் தவறான சான்று  என்று கூறி துவக்கநிலை விசாரணையிலேயே 79 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.

சட்டத்தின்படி டி.எஸ்.பி (துணை கண்காணிப்பாளர்) தான் விசாரணை அதிகாரி எனச் சொல்லப்பட்டாலும், பல வழக்குகளை துணை ஆய்வாளரே (எஸ்.அய்) விசாரித்து முடித்து விடுகிறார். 2011ல் 43 வாக்குகளில் மட்டும்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். 517 வழக்குகளில் விடுவிக்கப்பட்டனர். மே 2012 வரை, 600 வழக்குகள் விசாரணையில் இருந்தது 3042 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. வன்கொடுமையில் ஈடுபடுவோர் தண்டனைகக்குள்ளாகும் விகிதம், மூன்றாண்டுகளில் 21% என்றளவிலேயே இருந்தது.

தமிழகத்தில் 28 மாவட்டங்கள் வன்கொடுமைகள் நிறைந்த மாவட்டங்களாக பட்டியலிடப்பட்டுள்ள போதும், 1989 வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் மாவட்ட வாரியாக அமைக்க வேண்டிய சிறப்பு நீதிமன்றங்கள் திருச்சி, மதுரை, தஞ்சாவூர், திரு நெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் மட்டுமே அமைக் கப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களிலும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியே சிறப்பு நீதிமன்றமாக கருதப்படுகிறார்.

சிறப்பு அரசு குற்ற வழக்கறிஞர் மட்டுமே அனைத்து மாவட்டங்களிலும் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர். இச்சட்டம் உருவாகிய பிறகு கடந்த 24 ஆண்டுகளில் தமிழகத்தில் இதுவரை ஒரு அதிகாரியும் கூட கடமையில் தவறிய குற்றத்திற்காக இச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவே இல்லை. குற்றவாளிகள் பலரும் விடுதலையாகி வந்தபோதிலும் கூட, அரசுத் தரப்பிலிருந்து வழக்கை சிறப்பாக நடத்தாத தவற்றிற்காக, இதுவரை ஒரு சிறப்பு அரசு குற்ற வழக்கறிஞர்கூட நீக்கப்படவே இல்லை.

இச்சட்டத்தின் விதிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மாநில மட்டத்திலான கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழு முதலமைச்சர் தலைமையிலானது, 6 மாதங்களுக்கு ஒருமுறை கூடி வழக்குகளை ஆய்வு செய்ய வேண்டும்.  ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு, இதுவரையும் குழு கூடவில்லை. ஆனால், பசும்பொன் கிராமத்திற்குச் சென்று முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்க கவசத்தை நன்கொடையாக வழங்க மட்டும் ஜெயலலிதாவிற்கு நேர அவகாசம் இருந்தது. ஆக, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தமிழகத்தில் சரியாக அமல்படுத்தப்படவில்லை. ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அக்கறையும் இல்லை.

1989 வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இணைக்க வேண்டிய பல கொடுமைகள் விடுபட்டுள்ளது. தாழ்த்தப் பட்டோரை இழிவுபடுத்துவதற்காக மொட்டை அடித்தல், மீசை எடுத்தல், செருப்பு மாலை அணிவித்தல் நடை பெறுகிறது. சமூகரீதியாக, பொருளாதாரரீதியாக தாழ்த்தப்பட்ட குடியிருப்பையே, ஊரையே புறக்கணிப்பது என்ற கொடுமையும், சாதிய அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் இழிவான சுவரெழுத்துக்கள், வெறுப்பேற்றும் பேச்சுக்கள் குற்றங்களாக இச்சட்டத்தில் இடம் பெறவில்லை. மனித கழிவுகளை, பிணங்களை, செத்த விலங்குகளை அகற்றுவதற்கு தாழ்த்தப்பட்டோரை மட்டுமே (உள்ளாட்சி அமைப்புகள் உட்பட) பணியமர்த்துவது குற்றச் செயலாக இணைக்கப்படவில்லை.

தாழ்த்தப் பட்ட/பழங்குடியினப் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் இச்சட்டத்தில் இணைக்கப்படவில்லை. மறைமுகமாக தேவதாசி முறையில் தாழ்த்தப்பட்ட/பழங்குடியினப் பெண்களை சீரழிப்பது (திருவள்ளூர் மாவட்டத்தில், அருந்ததியர் பெண்களிடம் உள்ள மாத்தம்மா முறை) வன்கொடுமையாக பட்டியலில் சேர்க்கப்படவில்லை. மேலும் மதம் மாறிய தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மீதான தீண்டாமைத் தாக்குதலும் வன்கொடு மையாக சேர்க்கப்பட்டாக வேண்டும். கும்பல் வன்முறைக்கு தண்டனைகளை அதிகப்படுத்த வேண்டும்.

இந்திய குற்றவியல் தண்டனைக்கு சமமான தண்டனைகளை வன்கொடுமைக் குற்றச் செயல்களுக்கும் வழங்க வேண்டும். கடமைகளை செய்யத் தவறும் திட்டமிட்டு தவறிழைக்கும் அரசு அதிகாரிகள் (மாவட்ட ஆட்சியர் காவல் துறை கண்காணிப்பாளர், வனத்துறை அதிகாரிகள் உட்பட) மீதான தண்டனைகளை கடுமையாக உயர்த்த வேண்டும்.

தீண்டாமை பாரம்பரியத்தின் நடைமுறை காரண மாக உருவாகிற படுமோசமான சமூக, பொருளாதார பின் தங்கிய நிலைமை என்பதே பட்டியல் சாதியினரை தாழ்த்தப்பட்ட சமூகத்தை தீர்மானிக்க அளவுகோலாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனவே, தீண்டாமையை ஒழித்திட வன்கொடுமை தடுப்புச் சட்டம் பலப்படுத்த வேண்டும்: அரசாங்கத்தின் கண்காணிப்பு அமைப்புகள், சட்ட அமைப்புகள் சனநாயகபூர்வமானதாக, வலுவானதாக இருக்க வேண்டும்.

வாக்கு வங்கி அரசியலுக்காக ஆதிக்க சாதிகளைத் திருப்திப்படுத்தும், அஇஅதிமுக ஆட்சிக்கெதிராக போராடுகிற புரட்சிகர இடதுசாரி சக்திகளோடு, தலித் பழங்குடி அமைப்புகள், சனநாயக சக்திகள் அணிசேர வேண்டும். சாதிய, சந்தர்ப்பவாத அரசியல் சக்திகளின் சதிகளை முறியடிக்க வேண்டும். 

Search