COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Monday, March 31, 2014

2014 மக்களவை தேர்தல்களுக்கான இகக மாலெயின் வேண்டுகோள்

கொள்கை மாற்றத்துக்காக, ஆட்சி மாற்றத்துக்காக
மக்களவையில் மக்கள் குரலை உறுதி செய்ய

2014 மக்களவை தேர்தல்களுக்கான இகக மாலெயின் வேண்டுகோள்

நாடு ஒரு கடுமையான நெருக்கடியில் இருக்கிறபோது, 2014 மக்களவை தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இருபதாண்டு கால கார்ப்பரேட் ஆதரவு, மக்கள் விரோத பொருளாதாரக்  கொள்கைகள், கடுமையான விலைஉயர்வு, பசி, வேலையின்மை, விவசாயிகள் தற்கொலை, நிலத்தை, இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பது, அது மெகா ஊழல்களுக்கும் வறிய மக்கள் வாழ்விடங்களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதற்கும் இட்டுச் செல்வது ஆகியவற்றையே உருவாக்கியுள்ளன. ஒரு கவுரவமான வாழ்க்கைக்குத் தேவையான கல்வி, மருத்துவம், ஊட்டச்சத்துள்ள உணவு, வீடு மற்ற பிற அத்தியாவசிய வசதிகள் கைக்கெட்டாமல் போய்விட்டன. அவற்றுக்கான தங்கள் பொறுப்பையும் அரசாங்கங்கள் கைகழுவிவிட்டன. மக்கள் கார்ப்பரேட் மேலாதிக்கம் செலுத்தும் சந்தையின் கருணையில் கிடத்தப்பட்டுவிட்டனர். மக்கள் இயக்கங்கள் கடுமையான ஒடுக்குமுறையை எதிர்கொள்கின்றன. மதவெறி மற்றும் சாதிப் படுகொலைகளுக்கு தண்டனை கிடைப்பதில்லை. பெண்களுக்கு சுதந்திரம் சமத்துவம் கவுரவம் மறுக்கப்படுகிறது. அனைத்து முனைகளிலும் சாமான்ய மக்களின் அடிப்படை நலன்களும் உரிமைகளும் மறுக்கப்படுகின்றன.

தொடர்ந்து அடுத்தடுத்த இரண்டு பதவிக் காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அய்முகூ அரசாங்கம்தான் இந்த நிலைமைகளுக்கு நேரடிப் பொறுப்பு. 2004ல் அது ஆட்சிக்கு வந்தது. சாமான்ய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதாகச் சொல்லி மீண்டும் 2009லும் ஆட்சிக்கு வந்தது. ஆனால் சொன்னதற்கு நேரெதிராக நடந்துகொண்டது. எனவே, காங்கிரசின் ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று மக்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளார்கள். இந்த வெற்றிடத்தை நிரப்ப பாஜக வெறித்தனமாக முயற்சி செய்கிறது. ஆனால், 1998 - 2004ல் பாஜக மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும், அது ஆட்சியில் இருக்கிற மாநிலங்களிலும், பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி நடத்துகிற குஜராத் மற்றும் சட்டிஸ்கர் போன்ற மாநிலங்களிலும் சமீப காலம் வரை ஆட்சியில் இருந்த பீகார் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் பாஜகவின் கடந்த காலத்தைப் பார்த்தால், காங்கிரசுக்குப் பதிலாக பாஜகவை தேர்ந்தெடுப்பது எண்ணெய் சட்டியில் இருந்து எரிகிற நெருப்பில் குதிப்பதைப் போன்றது.

பாஜக தலைமையிலான தேஜமு 2004ல் திகைப்பூட்டுகிற தோல்வி அடைந்ததற்கான இரண்டு பெரிய காரணங்களை நினைவில் கொள்வது அவசியமானது. விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டபோது, வேலை வாய்ப்பின்மை அதிகரித்துக் கொண்டிருந்தபோது, விலைவாசி கடுமையாக உயர்ந்து கொண்டிருந்தபோது, மக்கள் துன்பம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டிருந்தபோது, கொடூரமான நகைச்சுவையாக, ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று தேஜமு அரசாங்கம் சொன்னது மக்களின் சீற்றத்தை தூண்டியது. பாஜகவின் பிரதமர் வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்டிருக்கிற நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக அரசாங்கம் 2002ல் குஜராத் மனிதப் படுகொலைகளுக்கு தலைமை தாங்கியது, இன்னொரு முக்கியமான காரணம்.

நரேந்திர மோடியை இந்தியாவின் பிரதமராக்கும் முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்பது சங்பரிவார் மட்டுமல்ல. சர்வநிச்சயமாக, அனைத்து முக்கிய கார்ப்பரேட் நிறுவனங்களும் இந்த முயற்சியை ஆதரிக்கின்றன. இதற்கு அய்க்கிய அமெரிக்காவின் ஆசிகளும் உண்டு. இந்தியாவில் அய்க்கிய அமெரிக்க தூதர் நான்சி பாவெல் அகமதாபாத் சென்றது உட்பட அய்க்கிய அமெரிக்காவின் பல்வேறு சமிக்கைகள் இதை சுட்டிக்காட்டுகின்றன.

அனைத்திலும் பரவியிருக்கிற நெருக்கடியில் இருந்து விடுதலை பெறுவதற்கான நம்பிக்கை, ஒரு மாற்றுக்கான மக்கள் போராட்டங்களில்தான் இருக்கிறது! முன்கூட்டியே தயார் செய்யப்பட்ட மாற்று எதுவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. மக்களின் நீடித்த ஜனநாயக அறுதியிடல் மூலம் இதை நாம் கட்டியெழுப்ப வேண்டும். நமக்கு ஊழலையும் துன்பங்களையும் தந்துள்ள பொருளாதாரக் கொள்கைகளை மாற்ற 2014ல் நாம் வாக்களிக்க வேண்டும்! நமது உரிமைகளைப் பெற, ஒடுக்குமுறைக்கு முடிவு கட்ட 2014ல் நாம் வாக்களிக்க வேண்டும்! ஊழல், மக்கள் விரோத சக்திகளை விரட்டியடிக்க, உண்மையான மக்கள் போராட்ட சக்திகளை மக்களவைக்கு அனுப்ப 2014ல் நாம் வாக்களிக்க வேண்டும்!

மாற்றத்துக்கான இகக மாலெயின் சாசனம்

மாற்றத்துக்கான மக்கள் போராட்டங்களின் புகழ்மிக்க வரலாறு கொண்டது இகக மாலெ. இகக மாலெ சார்பாக தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு மக்களவை உறுப்பினரும், பின்வரும், மாற்றத்துக்கான சாசனத்துக்கான மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கும் எங்கள் கடப்பாட்டை மறுஉறுதி செய்கிறோம்.

1. பொருளாதாரக் கொள்கைகளில் மக்கள் ஆதரவு மாற்றத்துக்காக

அ) விவசாய நிலங்களை பாதுகாக்க புதிய சட்டம் இயற்றுவது. வன நிலங்கள், கடலோரப் பகுதிகள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகள் தனியாரால் கையகப்படுத்தப்படுவதை தடுப்பது.
ஆ) விவசாயத்தில் பொது முதலீட்டை அதிகரிப்பது. நெருக்கடியில் இருக்கும் விவசாய சமூகத்துக்கு அனைத்துவிதமான நிறுவன ஆதரவும் உறுதிசெய்வது.
இ) உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்த சிறிய மற்றும் நடுத்தர தொழில்களுக்கு அழுத்தம் வைப்பது.
ஈ) சில்லறை வர்த்தகம் மற்றும் போர்த்தந்திர துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை தடுப்பது. பாதகமான அந்நிய போட்டியில் இருந்து அனைத்து உழைப்பு செறிவு துறைகளையும் பாதுகாப்பது.
உ) முக்கியமான உள்கட்டுமான மற்றும் நிதித்துறைகள் தனியார்மயத்தைத் தடுப்பது. எண்ணெய், எரிவாயு, கனிம வளங்கள் போன்ற முக்கியமான செல்வாதாரங்களை அரசுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது.
ஊ) மருத்துவம், கல்வி, விஞ்ஞான ஆய்வு ஆகியவற்றுக்கு பொது முதலீட்டை அதிகரிப்பது.

2. விலைஉயர்வைக் கட்டுப்படுத்துவது; உழைக்கும் மக்கள் நிலைமைகளை மேம்படுத்துவது

அ) அத்தியாவசிய பொருட்கள் விலை மற்றும் சேவைகளின் கட்டணம் சாமான்ய மக்கள் வாங்க முடியாத அளவுக்கு உயர்வதை அனுமதிக்கக் கூடாது.
ஆ) அய்ந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு சர்க்கரை, பால், பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றுடன் மாதம் 50 கிலோ உணவு தானியம் வழங்கப்படுவதை உறுதி செய்யும்விதம் உணவுப் பாதுகாப்புச் சட்டம் வலுப்படுத்தப்பட வேண்டும்.
இ) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை, குறைந்தபட்ச நாள்கூலி ரூ.300, நகராட்சிப் பகுதிகளும் திட்டத்தின் கீழ் வருவது ஆகியவை உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.
ஈ) வறுமைக் கோட்டுப் பட்டியல் தொடர்பான முறைகேடுகள் தடுக்கப்பட வேண்டும். வரி செலுத்தத் தேவையில்லாதவர்களும் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் உள்ளவர்களும் வறியவர்களுக்கு தரப்படும் பல்வேறு சலுகைகள் பெறும்விதம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களாக கருதப்பட வேண்டும்.
உ) நில உச்சவரம்பு குறைக்கப்பட்டு தரநிர்ணயம் செய்யப்பட வேண்டும். நிலம், குத்தகை, மற்றும் பிற விவசாயிகள் ஆதரவு சீர்த்திருத்தங்கள் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும். விவசாயத்திலும் தோட்டத் தொழிலிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு குடியிருப்பு மனை உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.

3. மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் வளர்ச்சி போர்த்தந்திரத்தை மறுதிசைவழிப்படுத்துவது

அ) அனைவரும் பயன்பெறும் நீதி, மக்கள் உரிமைகள், சுற்றுச்சூழலின் தாக்குப்பிடிக்கும் தன்மை ஆகிய மூன்று கருவான கோட்பாடுகள் கொண்டதாக வளர்ச்சி போர்த்தந்திரத்தை மறுதிசைவழிப்படுத்துவது.
ஆ) சுற்றுச்சூழல் விதிகளை மீறுகிற அனைத்து திட்டங்களையும் நிறுத்துவது.
இ) பொதுமக்கள் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிற அனைத்து அணுஉலைத் திட்டங்கள் மற்றும் மரபணு மாற்றப் பயிர்களை தடுப்பது.
ஈ) கிராமப்புற, நகர்ப்புற வறியவர்களுக்கும் சிறுதொழில் நிறுவனங்கள், கடைகள், விவசாயத்துக்கு தடையற்ற மின்சாரம் உறுதிசெய்வது.
உ) கிராமப்புற மின்வசதியை உறுதிப்படுத்துவது
உ) அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவம் ஆகியவற்றை உறுதிசெய்வது.

4. சமவேலைக்கு சமக்கூலி, ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவது, குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவது

அ) நிரந்தரத் தன்மை கொண்ட பணிகளில் அமர்த்தப்படும் தொழிலாளர்கள் நிரந்தப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு துறையிலும் சமவேலைக்கு சமக்கூலி என்ற கோட்பாடு உயர்த்திப்பிடிக்கப்பட வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு, அதே வேலை செய்யும் ஆண் தொழிலாளர்களுக்கு இணையாக கூலி வேண்டும்.
ஆ) ஆஷா, அங்கன்வாடி, மதியஉணவு ஊழியர்கள், உரிய காலமுறை ஊதியம் கொண்ட நிரந்தர ஊழியர்களாகக் கருதப்பட வேண்டும்.
இ) குறைந்தபட்ச ஊதியம் மாதமொன்றுக்கு ரூ.15000 என உயர்த்தப்பட வேண்டும்.

5. மக்கள் உரிமைகளை உத்தரவாதப்படுத்துவது

அ) உணவு, இருப்பிடம், மருத்துவம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகள் அடிப்படை உரிமைகளாக அரசியல் சாசனத்தில் உட்புகுத்தப்பட வேண்டும்.
ஆ) கல்வி கற்று வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு, அவர்களுக்கு முறையான வேலை வாய்ப்பு கிடைக்கும் வரை மாதமொன்றுக்கு குறைந்தபட்ச படியாக ரூ.5000 வழங்கப்பட வேண்டும்.
இ) இசுலாமியர் மற்றும் பிற சிறுபான்மை பிரிவு மக்களின் நிலைமைகளை மேம்படுத்த சச்சார் குழு மற்றும் ரங்கநாத் மிஸ்ரா ஆணைய பரிந்துரைகள் அமலாக்கப்பட வேண்டும்.

6. கொடூரமான, வழக்கொழிந்த, மக்கள் விரோதச் சட்டங்கள் ரத்து செய்யப்படுவது. அனைவருக்கும் நீதி

அ) சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம், தேசத்துரோகச் சட்டம் மற்றும் பிரிவு 377 ஆகியவை ரத்து செய்யப்பட வேண்டும்.
ஆ) பசுமை வேட்டை மற்றும் சல்வா ஜ÷டும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். பழங்குடி மக்கள் உரிமைகள் மற்றும் வளர்ச்சி தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளும் விரைந்து தீர்க்கப்பட வேண்டும்.
இ) சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சட்டம் 2005 மற்றும் மின்சாரச் சட்டம் 2003 ரத்து செய்யப்பட வேண்டும்.
ஈ) சாதிப் படுகொலைகள், மதவெறி கலவரங்கள், இனப்படுகொலைகள், சட்டத்துக்கு அப்பாற்பட்ட படுகொலைகள் ஆகியவற்றுக்குக் காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்ய சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
உ) தலித்/பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் வலுப்படுத்தப்பட வேண்டும். நிறவெறி, சிறுபான்மையினர் மற்றும் இடம்பெயர்ந்தோர் மீது தாக்குதல் ஆகியவற்றை தடுக்க சட்டம் இயற்றப்பட வேண்டும்.
ஊ) இசுலாமிய மற்றும் பழங்குடியின இளைஞர்கள் வேட்டையாடப்படுவது நிறுத்தப்பட வேண்டும். விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். தண்டனையின்றி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

7. பெண்கள் உரிமைகள் மற்றும் சுதந்திரம்

அ) பெண்களுக்கு பாதுகாப்பான, கவுரமான, ஊதியம் தரப்படுகிற வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட வேண்டும்.
ஆ) பெண்களுக்கு, வீடுகளிலும் பொது இடங்களிலும் சுத்தமான கழிப்பறை வசதிகள் மற்றும் முறையான பாதுகாப்பான பொது போக்குவரத்து உறுதி செய்யப்பட வேண்டும்.
இ) வன்முறையில் இருந்து தப்பிப்பிழைத்த பெண்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரே இடத்தில் அனைத்து சேவைகளும் கொண்ட 24 மணிநேர நெருக்கடி மய்யங்கள் மற்றும் பாதுகாப்பான காப்பகங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
ஈ) பாலியல் வன்முறை மற்றும் திராவக வீச்சுக்கு ஆளாகி தப்பிப்பிழைத்த பெண்களுக்கு இழப்பீடு மற்றும் மறுவாழ்வு உறுதிசெய்யப்பட வேண்டும்.
உ) பாலியல் கூருணர்வுடனான காவல்துறை மற்றும் குற்றவிசாரணை செயல்முறைகள் கறாராக பின்பற்றப்பட வேண்டும்; ஒவ்வொரு வழக்கிலும் துரிதமான நீதி கிடைப்பதை உறுதி செய்ய நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும்.
ஊ) பெண்கள் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட வேண்டும்.
எ) பாலியல் வன்முறைக் குற்றங்கள் புரிந்த தேர்தல் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய நடத்தை விதிகள் உருவாக்கப்பட வேண்டும். மக்களவையில் பெண்கள் விரோத கருத்துக்கள் தெரிவிப்பது மற்றும் நடத்தை ஆகியவற்றுக்கு முடிவு கட்ட வேண்டும். அரசு/அரசுசாராதோர் தார்மீகக் காவலில் ஈடுபடுவது தொடர்பாக சகிப்புத்தன்மை கூடாது.
ஏ) நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் காவல் பாலியல் வன்முறை வழக்குகளில் நீதியை உறுதி செய்ய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்.

8. கூட்டாட்சி மறுகட்டமைப்பு மற்றும் மாநிலங்கள் மறுசீரமைப்பு

அ) பின்தங்கிய மாநிலங்களுக்கும் பிராந்தியங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும். பிராந்திய ஏற்றத்தாழ்வை முடிவுக்குக் கொண்டு வர அனைத்துவிதமான நிறுவனரீதியான ஆதரவும் அளிக்கப்பட வேண்டும்.
ஆ) பல்வேறு தனிமாநில கோரிக்கைகளை அனுதாபத்துடனும் அனைத்தும் தழுவிய விதத்திலும் ஆராய இரண்டாவது மாநில மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.
இ) கர்பி ஆங்லாங் மற்றும் திமாஅசா மாநிலங்களுக்கு சுயாட்சி மாநில அந்தஸ்தை உறுதி செய்ய அரசியல் சட்டப் பிரிவு 244 எ-அய் அமல்படுத்துவது.

9. தேர்தல், சட்ட மற்றும் காவல்துறை சீர்திருத்தங்கள்

அ) தேர்தல்களில் விகிதாச்சார அடிப்படையிலான பிரதிநிதித்துவம்
அறிமுகப்படுத்தப்படுவது. கார்ப்பரேட்டுகள் நிதி தருவதற்கு முடிவு கட்டுவது. அனைத்து கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் சமமான ஆடுகளம் உறுதி செய்வது.
ஆ) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை வலுப்படுத்துவது; சக்திவாய்ந்த, சுதந்திரமான ஊழல் தடுப்பு அமைப்பு உருவாக்கப்படும் விதம் ஜன்லோக்பால் சட்டம் இயற்றுவது; அமைச்சர்கள், அதிகாரிகள், ஆயுதப்படைகள் மற்றும் நீதித்துறை, கார்ப்பரேட் நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள், அரசுசாரா நிறுவனங்கள் ஆகியவற்றின் அனைத்து மட்டங்களையும் ஜன்லோக்பால் சட்டத்தின் கீழ் கொண்டு வருவது.
இ) சர்ச்சைக்குரிய ‘ஆதார்’ மற்றும் ‘பணப்பட்டுவாடா’ திட்டங்களை கைவிடுவது.
ஈ) அமைதிவழியிலான ஜனநாயக நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்கள் மீது நடத்தப்படும் அனைத்து மனித உரிமை மீறல்கள் மற்றும் கொடுமைகளை தடுத்துநிறுத்த, காவல்துறையை முழுவதுமாக சீரமைப்பது.
உ) தேசிய விசாரணை மய்யம் மற்றும் புலன்விசாரணை பிரிவு ஆகியவை நாடாளுமன்றத்துக்கு பதில் சொல்பவையாக இருக்க வேண்டும். அனைத்துவிதமான பாதுகாப்புப் படைகள் மற்றும் புலன்விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகள் அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டுள்ளவற்றையும் அவற்றின் உணர்வையும், சட்டத்தின் ஆட்சியின் கோட்பாடுகளையும் பின்பற்ற வேண்டும்.
ஊ) சிறை கையேடு இற்றைப்படுத்தப்பட்டு கறாராக அமலாக்கப்பட வேண்டும். பிணை கொடுப்பது விதியாக இருக்க வேண்டும். சிறைகளை அளவுக்கதிகமாக நிரப்புவது நிறுத்தப்பட வேண்டும். குற்றம் சாட்டப்படாமல் ஆண்டுக்கணக்காக சிறையில் இருப்பதை தடுக்க வேண்டும்.
எ) மரண தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும். ஆயுள் தண்டனை அதிகபட்ச தண்டனை என அறிவிக்கப்பட வேண்டும்.

10. சுதந்திரம் மற்றும் நட்புறவுகளை உறுதி செய்யும்விதம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மறுதிசைவழிப்படுத்துவது

அ) அய்க்கிய அமெரிக்க வெளியுறவு கொள்கையின் நலன்கள் மற்றும் முன்னுரிமைகளில் இருந்து இந்திய வெளியுறவுக் கொள்கை விடுவிக்கப்பட வேண்டும்.
ஆ) அனைத்து பெரிய மற்றும் சிறிய அண்டை நாடுகளுடன் இந்தியாவுக்கு நட்புறவு மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பு இருக்க வேண்டும்.
இ) போர்க்குற்றங்கள் இழைத்த அனைவரையும் நீதியின் முன் நிறுத்த இந்திய முன்செயலூக்கமான பாத்திரம் ஆற்ற வேண்டும்.
ஈ) உலகமெங்கும் உள்ள அந்நிய ராணுவ தளங்களை அகற்ற இந்தியா விடாப்பிடியாக முயற்சி செய்ய வேண்டும்

நண்பர்களே,

மக்களின் எதிர்ப்புக் குரல் நாடாளுமன்றத்தில் எதிரொலிப்பதை உறுதி செய்ய, கொள்ளை மற்றும் ஊழல் ஆட்சிக்கு சவால்விடுக்க, 2014 மக்களவை தேர்தலில் இகக மாலெ வேட்பாளர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம். கார்ப்பரேட் மற்றும் மதவெறி பாசிச சக்திகளின் மறைமுகமான சதியை முறியடிப்போம். ஒரு மேலான எதிர்காலத்துக்காக, மக்களின் ஜனநாயக ஒற்றுமை மற்றும் போராட்டங்களை, அனைத்து விதங்களிலும் உறுதி செய்வோம்.

விலை உயர்வைக் கட்டுப்படுத்த, வேலை வாய்ப்பை உறுதி செய்ய
முழுமையான ஊதியம் உறுதி செய்ய

ஊழல் மற்றும் சூறையாடலின் ஆட்சியை மாற்ற

மதவெறி நஞ்சை முறியடிக்க
அமைதியை, நீதியை உறுதிப்படுத்த

கொள்கை மாற்றத்துக்காக, ஆட்சி மாற்றத்துக்காக
மக்களவையில் மக்கள் குரலை உறுதி செய்ய

விளைநிலங்களை பாதுகாக்க
விவசாயத்தை, விவசாயிகளை பாதுகாக்க
கார்ப்பரேட் கொள்ளை ஆட்சிக்கு முடிவு கட்ட

சாராயம் அல்ல, வேலை, மின்சாரம், உணவு, வீட்டு வசதி பெற 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)க்கு
மூன்று நட்சத்திரக் கொடிச் சின்னத்தில் வாக்களிப்பீர்

கொடும்தீமையின் பொதுப்படையான தன்மை

(மார்ச் 23 இந்து நாளேட்டில் நிஸ்ஸிம் மன்னத்துக்கரேன் எழுதியதில் இருந்து)

பாசிசம் என்பது ஆளும் வர்க்கங்களின், ஆகப்பிற்போக்கான பிரிவின், ஆகக்கொடூரமான ஒடுக்குமுறை ஆட்சியாகும். அதே நேரம், அது, சில பிரிவினரை குறி வைத்துத் தாக்குகிறது. தேச, இன, மத பெருமிதம் பேசி தன் கொடும்தீய செயல்களுக்கு பெரும்பான்மை பிரிவின் ஆதரவைத் திரட்டுகிறது. கணிசமானவர்களை தன் நடவடிக்கைகளில் செயலூக்கமாக பங்கேற்க வைக்கிறது. மக்கள் திரளை எதிர்ப்பற்ற மவுன சாட்சிகளாக மாற்றுகிறது. ஒத்துப் போ, கேட்காதே, எதுவும் பேசாதே என்ற நிலையை உருவாக்குகிறது.

    ஹன்னா ஆரன்டட் என்ற மெய்ஞானி, கொடும்தீமையின் பொதுப்படையான தன்மை (Banality of Evil) என்ற சொற்றொடரை உலகுக்கு தந்தார். யூதப் படுகொலை போன்ற கொடூரமான குற்றங்கள் ஆபத்தான மனப்பிறழ்வு கொண்டவர்களாலோ, பிறர் துன்பத்தில் இன்பம் காண்பவர்களாலோ இழைக்கப்படவில்லை. தங்களின் கடமைகளை, உத்தரவுகளை கவனமாகச் செயல்படுத்தும், சாதாரணமான மற்றும் இயல்பான மனநலம் உள்ளவர்களாலேயே செய்யப்பட்டன.

    2002 குஜராத் கலவரங்களில் 95 பேரை படுகொலை செய்தார் என 28 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாஜகவின் நரோடா சட்டமன்ற உறுப்பினர் மாயா கோத்னானி, ஒரு பெண். அவர், மகப்பேறு மருத்துவமனை நடத்திய மருத்துவர். அவர், மோடி அரசில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் அமைச்சர்.

    1984 சீக்கிய படுகொலையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜகதீஷ் டைட்லர், சீக்கிய தாய்க்குப் பிறந்தவர். நன்கறியப்பட்ட ஒரு கல்வியாளரால் கிறித்துவரால் வளர்க்கப்பட்டவர்.

    கொடும்தீமை, சாமான்ய மக்கள் அதில் பங்கேற்கும்போது, அதில் இருந்து சற்று விலகி நின்று அதனை நியாயப்படுத்தும்போது, பொதுப்படையானதாகிறது. யோசிக்காமலே முறைசார்ந்த விதத்தில் இந்தச் செயல்களில் சாமான்யர்களும் ஈடுபடும்போது, அது, பொதுப் படையானதாகிறது. அறம் சார்ந்த கேள்விகள், வெறுப்புக்கள் இல்லாமல் போய், கொடும் தீமை, கொடும்தீமையாய் காட்சியளிக்காமல் முகமற்றதாகிவிடுகிறது. இந்தத் தேர்தலில் குஜராத் படுகொலை ஒரு விசயமே இல்லை என்றாக்கப்படுகிறது. ‘வளர்ச்சியின் நாயகனுக்கு’ முடிசூட்ட வழிவிடச் சொல்கிறார்கள். நேற்று வரை, மோடி பிரதமர் ஆவது அறச்சீற்றத்தோடு கூடவே கூடாது என பார்க்கப்பட்டது என்றால், இன்று கருத்துக் கணிப்புக்கள், ஊடகக் கருத்துரைகள், அறிவாளிகளின் அபிப்ராயங்கள், அரசியல் தாவல்கள் மற்றும் அய்க்கிய அமெரிக்காவின் ஒப்புதல் என்ற பிரம்மாண்டமான அலை, அந்தக் குற்றங்களை கழுவி அகற்றிவிடுகிறது.

    குஜராத் படுகொலையின்போது, இந்துக்களும் கூட கொல்லப்பட்டார்கள், எனவே, அது ஒரு மதக்கலவரம் என சில அறிவாளிகள் அதற்கு முலாம் பூசும்போது, குற்றத்தின் தீவிரத்தை, மானுடத் துயரத்தின் வீச்சை, குறைக்கப் பார்க்கின்றனர்.

    மோடி குற்றம் நடந்த இடத்தில் இல்லை, சட்டப்படி எடுபடும் சாட்சியம் இல்லையே, பின் எப்படி அவரை குற்றவாளி என்பது என சாமான்யரும் பேச வைக்கப்படுகின்றனர். 2002, 1984 நடந்த படுகொலைகளில் பிரம்மாண்டமான அரசு எந்திரம் உண்மை சாட்சியங்களை அழிக்க, பொய் சாட்சியங்களை உருவாக்க, பயன்படுத்தப்பட்டுள்ள பின்னணியில், சட்ட பூர்வ சாட்சியம் மட்டுமே, அரசியல் தீர்ப்புக்களுக்கு போதுமானதா?

    காங்கிரஸ் ஆட்சியில் 1984ல் பல ஆயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். மோடி ஆட்சியில் 2002ல் பல ஆயிரம் இசுலாமியர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு இது எண்ணிக்கை ரீதியாக சரியாகிப் போய்விட்டது என்ற  பொருள்படவும் பேசப்படுகிறது. உண்மை மனிதர்களும் மானுடத் துயரங்களும், எண்ணிக்கைக் கணக்குகளாக மாற்றப்படுகின்றன.

    இந்தப் பொதுப்படையாக்குதலில் மிகப்பெரிய கருவி வளர்ச்சி என்பதே ஆகும். நாகரிகமான, கல்வியறிவு உடைய, கவுரவமான மனிதர்கள் கூட ‘வளர்ச்சி நாயகன்’ என்பதால் மோடியை சகஜமாக்கப் பார்க்கின்றனர். கலவரங்களுக்கு அவருக்கு தார்மீகப் பொறுப்பு இருக்கலாம்தான்; ஆனால், குஜராத்தின் சாலைகளைப் பாருங்கள் என்கின்றனர்.

    சாக்கியா ஜாஃப்ரி மற்றும் பிற பாதிக்கப்பட்டோரின் வலியை, சாலைகளோடு சமப்படுத்தி பேசும் அறம் எத்தகைய அறம்? இது எத்தகைய தர்ம நியாயம்?

    கொடும்தீமைக்கு அக்கம்பக்கமாக, வளர்ச்சியும் பொதுப்படையானதாக்கப் பட்டுவிட்டது.

    அது வெறும் பொருளாதார வளர்ச்சி என்பதாக சுருக்கப்பட்டுவிட்டது. இங்கு மக்களோ, சுற்றுச்சூழலோ, ஒரு பொருட்டே அல்ல. வளர்ச்சிக்கான தேடலில், மீறப்பட முடியாத அறநெறி கோட்பாடுகள் எவையும் இல்லை. தேசிய ஆளுகையில் நுழைய, முன்பு, அடல் பிஹாரி வாஜ்பாய் பாஜகவின் முகமூடியாக இருந்தார் என்றால், மோடி தலைமையிலான பாஜகவின் தற்போதைய முயற்சியில், வளர்ச்சியே  முகமூடியாக இருக்கிறது.

    ஆனால், வளர்ச்சி பற்றிய அதுபோன்ற, பொதுப்படையான புரிதல் பொதுமக்கள் கற்பனையை கவர்ந்துள்ளது. குஜராத் மாதிரியின் மிகவும் பளிச்சென தெரிகிற அம்சம், வளருகிற அதன் பொருளாதாரத்தில் இருந்து விலகிச் செல்லும் மனித வளர்ச்சி குறியீட்டின் சரிவுதான். உதாரணமாக, அய்க்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தின், சமத்துவமின்மை சரிசெய்யப்பட்ட மனித வளர்ச்சி குறியீட்டின்படி, 19 மாநிலங்களில், குஜராத், கல்வியில் ஒன்பதாவது இடத்திலும், சுகாதாரத்தில் பத்தாவது இடத்திலும் உள்ளது. 1998 - 2008 காலத்துக்கான மனித வளர்ச்சி குறியீட்டின் ஆதாயங்கள் பொறுத்தவரை, 23 மாநிலங்களில், குஜராத், 18ஆவது இடத்தில் உள்ளது. 2009 வருடத்திய முதல் இந்திய அரசு பட்டினிக் குறியீட்டில் 17 மாநிலங்களில், குஜராத், 13ஆவது இடத்தில் உள்ளது. சட்டிஸ்கர், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்கள் மட்டுமே குஜராத்துக்கு பிந்தைய நிலையில் உள்ளன. ஆயினும், பகவதி போன்ற பிரபலமான பொருளாதார அறிஞர்கள், அதன் பொருளாதாரத்தை புகழ்மிக்கதாகக் காட்டுவதன் மூலம், அதிர்ச்சிதரும் வகையில், வளர்ச்சியை பொதுப்படையானதாக்குகிறார்கள்.

    இந்த விவரங்களும், அனைத்து விதங்களிலும் மனிதர்கள் ஏதுமற்றவர்களாக்கப்பட்டுள்ளது பற்றிய பிற விவரங்களும், தேர்தல் விவாதங்களில் ஒரு பொருட்டாகவே இல்லை என்பதும் அதிர்ச்சி தருகிறது. ஆனால், அப்படி ஏதாவது இருந்தாலும், வளர்ச்சியின் நாயகனின் பிம்பத்தில் அது எந்த பாதிப்பையும் உருவாக்காமல் போகலாம். பொதுப்படையாக்குதலின் சக்தி அப்படிப்பட்டது. ஏனென்றால், யதார்த்த விவரங்களுடன் அதற்கு சம்பந்தமே இல்லை.

    நகர்ப்புற தொழில்கள் அடிப்படையிலான எல்லையற்ற பொருளாதார வளர்ச்சி மாதிரிகளுக்கு, பேரழிவுமிக்க, மானுட - சுற்றுச் சூழல் விலை என்ன என்பதை, வளர்ச்சியடைந்த நாடுகள் உணரும்போது, நாம், நகைமுரணாக, அதே படுபாதாளத்தை நோக்கி வேகமாக விரைகிறோம். சர்வதேச சுற்றுச்சூழல் செயல்பாட்டு குறியீட்டில் இந்தியா 32 இடங்கள் சரிந்துள்ளது. கார்ப்பரேட் தலைமையிலான குஜராத்தில், மனம்போன போக்கில், காடுகளையும் மேய்ச்சல் நிலங்களையும் அழிப்பது அதற்கு இணையான கதைகள்தான்.

    தேர்தல்கள் பற்றிய ஊடக விவாதப் போக்குகள், மனிதர்களின் நல்வாழ்க்கை, சுற்றுச்சூழல் அழிவு, அறநெறிகள் ஆகியவை பற்றியதாக இல்லாமல், ஆளுமைகளுக்கு இடையிலான மோதலின் ஒரு மேம்போக்கான நாடகமாக சுருக்கப்பட்டு விட்டது.

    பொருளாதாரமும் வளர்ச்சியும் அற நெறியில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளபோது, மனித நல்லியல்பு, சிறுபான்மையினர் மீதான வன்முறை அனைத்தும் தழுவிய விதத்தில் பொதுப்படையான அம்சமாகும்போது, பாசிசம் உருவாகிக் கொண்டிருக்கிறது. தார்மீக தேர்வுகள் எப்போதும் கருப்பு வெள்ளையில் இருப்பதில்லை. ஆனால், அவை செய்தாகப்பட வேண்டும். இந்தத் தேர்தல் உண்மையிலேயே ஒரு தார்மீக இருமனது நிலையாக இருக்கும் என்று இந்தியா நம்புமானால், புத்தர் மற்றும் காந்தி பூமியின் மனசாட்சி வெடிப்பின் விளிம்பில் உள்ளது.

பாரதீய ஜனதா கட்சியும் கழகங்களும், கழகங்களும் சந்தர்ப்பவாத இடதுகளும்

தமிழ்நாட்டில் 2014 நாடாளுமன்றத் தேர்தல்களில் வெளிப்படையாக எந்த எதிர்ப்பு அலையையும் காண முடியவில்லை. ஜெயலலிதா பிரச்சாரத்தில் இருந்த அந்த ஆரம்ப வேகம் தணிந்து சுருதி குறைந்து வருகிறது.

மு.க.ஸ்டாலின் முனைப்பான பிரச்சாரம் செய்வதாக, ஊடக கவனம் பெற்றுள்ளார். கருணாநிதி, காங்கிரசை மன்னிக்கவும் அதன் தவறுகளை மறுக்கவும் தயார் என்கிறார். தமிழ் நாட்டு மக்கள் காங்கிரசின் மெகா ஊழல்களையும் விலை உயர்வையும் பெரும் தொழில் குழும ஆதரவு மக்கள் விரோத ஆட்சியையும், அதற்குத் துணை நின்ற கூட்டாளிகளையும் மறக்கவும் மன்னிக்கவும் மாட்டார்கள் என்று கருணாநிதிக்கு தமிழிலோ இந்தியிலோ சொல்லப்பட வேண்டும். (கருணாநிதி இந்தி பாட்டு பாடுகிறார்; இந்தி சுவரொட்டி ஒட்ட வைக்கிறார்).

தமிழ்நாட்டில், பாஜக தேமுதிக பாமக மதிமுக அணியை 3ஆவது அணி எனச் சொல்ல முடியுமா என்பது சந்தேகமே. ஏனெனில் தேர்தல் முடிந்த பிறகு, ஜெயலலிதாவோ கருணாநிதியோ, நரேந்திர மோடியோடு சேர மாட்டார்கள் எனச் சொல்ல முடியாது.


தமிழ்நாட்டில் பாஜக வருகையும் வாய்ப்பும்

சமூக நீதி, பகுத்தறிவு, கடவுள் மறுப்பு, பார்ப்பனீய எதிர்ப்பு போன்ற விஷயங்களில், இந்தியாவிலேயே முதன்மையான வரலாறு கொண்ட தமிழ்நாட்டில், இன்று, இரு பெரும் தேசிய கட்சிகளில், மதச்சார்பற்றது என பல நேரங்களில் அழைக்கப்படும் காங்கிரஸ் சீந்து வாரில்லாமல் போயிருப்பதும், பாஜகவின் மவுசு கூடியிருப்பதும் விசித்திரமாகத் தோன்றினாலும், உண்மையான விஷயம்தானே! தமிழ் நாட்டில் பாஜக தானாக வந்ததா அல்லது திராவிட கட்சிகளால் அழைத்து வரப்பட்டதா?

காங்கிரஸ் பந்தயத்தில் கடைசியில் ஓடிக் கொண்டிருந்தாலும், அஇஅதிமுக மற்றும் திமுக விடம், நாளை பாஜகவை ஆதரிப்பீர்களா எனக் கேள்வி எழுப்புகிறது. காங்கிரஸ் திமுக தவிர திடீர் ஞானோதயம் பெற்ற இகக இகக(மா) வரை, அஇஅதிமுக மோடியை பாஜகவை விமர்சிக்காதது ஏன் எனக் கேட்டுள்ளனர்.

கர சேவைக்கு ஜெயலலிதா ஆள் அனுப்பினார் என கருணாநிதி சொல்ல, ஜெயலலிதா இல்லவே இல்லை என மறுத்தார். வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றாமல் விடுவேனா என கருணாநிதி, 1992ல் தேசிய ஒருமைப்பாடு கவுன்சிலில் ஜெயலலிதா பேசிய விஷயத்தை அம்பலப்படுத்தினார்: ‘கர சேவைக்கு அனுமதிக்கும்படி நீதிமன்றங்களை அணுகத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். உத்தரப்பிரதேச அரசு கையகப்படுத்தியுள்ள இடத்தில் கரசேவை நடத்தத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்’. ஜெயலலிதா தன் பங்கிற்கு, கருணாநிதி பாஜகவுடன் கூட்டு வைத்தவர்தானே எனக் கேட்டார்.

 கருணாநிதி, ஜெயலலிதாவால்தான் தாம் பாஜகவை ஆதரிக்க நேர்ந்தது என்றார். ‘1998ல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியில் மத்தியில் இடம் பெற்றிருந்த ஜெயலலிதா, திமுகவின் மாநில அரசை கலைக்குமாறு பாஜகவை வற்புறுத்தினார். அதனை, பாஜக நிறைவேற்றாததால் மத்திய அரசைக் கவிழ்த்தார். அதனால்தான் 1999ல் திமுக பாஜகவோடு கூட்டணி வைக்கும் சூழல் உருவானது’ என்றார் கருணாநிதி.

கவனிக்கத்தக்க விஷயம், கரசேவை விசயத்தில் ஜெயலலிதா தற்காப்பு நிலைக்கு சென்றதும், மத்தியில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த விஷயத்தில் கருணாநிதி தற்காப்பு நிலைக்கு சென்றதும் ஆகும். தமிழ்நாட்டில் மதவெறிக்கு எதிராக உள்ள உணர்வு, சிறுபான்மையினர் வாக்குகள் பற்றிய கவலை காரணமாகவும், பாஜகவுக்கு கூடுதல் இடங்கள் தரத் தேவை இல்லை என்பதாலும், தத்தம் கட்சிகளுக்கு ஆகக் கூடுதலான இடங்கள் வேண்டும் என்பதாலும், அஇஅதிமுக, திமுக இம்முறை பாஜகவுடன் சேர்ந்து களம் காணவில்லை. ஆனால் பாஜக தமிழ்நாட்டில் கால் பதிக்க, கழகங்களே காரணம் என்பதுதான் உண்மை.

ஈயமும் பித்தளையும்
ஒன்றைப் பார்த்து ஒன்று சிரித்தாலும்
இரண்டையும் பார்த்து மக்கள் சிரிப்பார்கள்


16.05.1996 முதல் 28.05.1996 வரை, மத்தி யில் முதல்முறையாக பாஜக வாஜ்பாய் தலைமையில் 13 நாட்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தது. அப்போது பாஜக 154 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக இருந்தது. காங்கிரஸ் 140 இடங்கள் வைத்திருந்தது. 28.05.1996 முதல் 11.04.1997 வரை, 10 மாதங்கள் 11 நாட்கள் தேவ கவுடா தலைமையிலான அய்க்கிய முன்னணி அரசும், 21.04.1997 முதல் 8 மாதங்கள் குஜ்ரால் தலைமையிலான அய்க்கிய முன்னணி அரசும் அமைந்தன. (அது முதலாளித்துவ மத்திய அரசில் இகக நேரடியாகவும், இககமா வழி நடத்தும் குழு (ஸ்டியரிங் கமிட்டி) மூலமும் பங்கு பெற்ற காலம்). அதற்குப் பிறகுதான், கழகம் காவி உறவு சகாப்தம் தமிழ்நாட்டில் துவங்கியது.

16.02.1998 மற்றும் 28.02.1998 தேதிகளில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்தன. பிப்ரவரி 14ல் கோவையில் அத்வானி பேச இருந்த ஒரு கூட்டத்தில் வெடிகுண்டு வெடித்தது. தமிழகச் சூழலில் மதவெறி நஞ்சு பரந்து பரவியது.

 பாஜகவுடன், அஇஅதிமுக தலைமையில் மதிமுக, பாமக, வாழப்பாடியார், சுப்பரமணியம் சாமி கூட்டணி அமைத்தனர். போட்டியிட்ட 23 இடங்களில் அஇஅதிமுக 18, பாஜக 5ல் 3, பாமக 5ல் 4, மதிமுக 5ல் 3, வாழப்பாடி ராமமூர்த்தி, சுப்பரமணியம் சாமி தலா 1 வென்றனர். பாஜக 13 மாதங்கள் ஆண்டது. ஜெ முயற்சியும் சேர, அந்த ஆட்சி கவிழ்ந்தது. 1998ல் காங்கிரசுக்கு 142 இடங்களும், பாஜகவுக்கு 179 இடங்களும் இருந்தன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜக கூட்டணிக்கு 30/40.

1999ல் திரும்பவும் தேர்தல்கள். இம்முறை, திமுக தலைமையில் மதிமுக பாமக எம்ஜிஆர் அதிமுக திருநாவுக்கரசர் பாஜகவுடன் கூட்டு சேர்ந்தனர். அஇஅதிமுக காங்கிரஸ் இகக இகக (மா) கூட்டணி அமைத்தன. பாஜக கூட்டணி 25 இடங்கள் பெற்றது. பாஜக 182 இடங்களும் காங்கிரஸ் 114 இடங்களும் பெற்றன.

1998 மற்றும் 1999ல் பாஜக ஆட்சி அமைந்த போது, இரு முறையும் அவர்களுக்கு 179, 182 இடங்கள் மட்டுமே கிடைத்தன. தமிழ்நாட்டில் அக்கூட்டணி ஒரு முறை 30 இடங்களும் மறுமுறை 25 இடங்களும் பெற்றது, அரசு அமைக்க மட்டுமின்றி, ஒரு மதவாதக் கட்சி நாட்டின் பிரதான நீரோட்ட அரசியலில் ஓர் ஏற்புடைத் தன்மையைப் பெறவும் உதவியது. மு.க.ஸ்டாலின் மொழியில், புண்ணியவதி ஜெயலலிதாவும், புண்ணியவான் கருணாநிதியும், பாஜக என்ற நச்சு மரம் வேரூன்ற, வளர, பெரும் தொழில் குழும/மதவெறி பாசிசம் பலப்பட போட்டி போட்டு உதவியவர்கள்தான்.

2004 மற்றும் 2009 தேர்தல்கள்

இந்தியா ஒளி வீசுகிறது எனப் பொய் பேசிய பாஜக, 2004ல் இருளால் சூழப்பட்டது. கூட்டாளிகளிடமிருந்து தனிமைப்பட்டது. கருணாநிதி ‘சாணக்கியம்’, தோல்வி அடையும் குதிரையிலிருந்து கடைசி நேரம் விலகி, வெற்றி பெறும் குதிரை மீது பந்தயம் கட்ட உதவியது. கருணாநிதி மதச்சார்பின்மைக்கு மாறினார். திமுக காங்கிரஸ் பாமக மதிமுக கூட்டணி 40க்கு 40 பெற்றது. ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டு சேர்ந்து படுதோல்வி அடைந்தார். பாஜக தமிழகத்தில் கால் பதிக்க கழகங்கள் மாறி மாறி இடம் தந்த போது, 2004ல் தமிழ் நாட்டில் பாஜகவுக்கு இடமே இல்லை எனத் தமிழக மக்கள் முடிவெடுத்தனர்.

2009 தேர்தலில் ஒரு மாற்றம் நடந்தது. அய்முகூ அதாவது காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய மதிமுக, பாமக, இகக, இககமா, பாஜக விலிருந்து தனித்து போட்டியிட்ட அஇஅதிமுக வுடன் சேர்ந்து கொண்டனர். இகக, இககமா, தமிழகத்திலும் இந்தியாவிலும், காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணி அமைந்து விட்டதாக ஆனந்தக் கூத்தாடினர்.

பாஜகவுக்கு தமிழ்நாட்டில் ஓரிடம் கூடக் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை எதிர்பாராத வகையில் திமுக காங்கிரஸ் கூட்டணி புதுச்சேரி சேர்ந்து 28 இடங்கள் வென்று முதல் அணி ஆனது. மூன்றாவது அணி, தமிழகத்தில் இரண்டாவது அணியாகி அதிமுக 9 இடங்களும் இகக, இகக(மா) மதிமுக  தலா ஓரிடமும் வென்றன. பாமகவுக்கு பூஜ்ஜியம்.

தொகுத்துச் சொன்னால்

    தமிழ்நாட்டில் அதிமுக திமுக பாமக அனைவருமே, காங்கிரஸ் அல்லது பாஜக என்ற இரண்டு அகில இந்திய துருவங்களில் ஏதாவது ஒன்றோடு சேர்ந்து கொள்வார்கள்.

    தமிழ்நாட்டின் இருபெரும் துருவங்களான  அதிமுக திமுகவோடு கூட்டு சேர்ந்தே, பாஜக, தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியும்.

    2004, 2009 இரு தேர்தல்களிலும், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஓரிடம் கூடக் கிடைக்கவில்லை.

    தமிழ்நாட்டில் 1998 முதல் 2014 வரை (2009 நீங்கலாக), பாஜக எந்தக் கூட்டணியிலும், இளநிலைக் கூட்டாளியாகவே இருந்துள்ளது. இந்த முறை நரேந்திர மோடி அலையில், காங்கிரஸ் கழகங்கள் எதிர்ப்பில் கரை சேரும் நப்பாசையுடன், கூட்டணிக் கட்சிகளின் கூட்டு வாக்கு சதவீதம் தொடர்பான எண் கணித நம்பிக்கையுடன் விஜயகாந்த்துக்கு முதலிடம் தந்து ஓர் அணி எப்படியோ அமைய, அதில் பாஜகவும் இடம் பெற்றுள்ளது. மோடி மந்திரம் தமிழகத்திலும் ஒலிக்கிறது.

    2014 நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக திமுக இரண்டுமே, 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு அஇஅதிமுக - திமுக என இரு துருவ அரசியலே நல்லது எனத் தெளிவாக இருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டில் அதிமுக, திமுக, மதிமுக, பாமக கட்சிகளிலிருந்து புதிதாகப் புற்றிலிருந்து புறப்பட்டுள்ள தேமுதிக வரை, எந்த கட்சியையும், விடாப்பிடியான காங்கிரஸ் எதிர்ப்பு பாஜக எதிர்ப்பு அல்லது காங்கிரஸ் பாஜக அல்லாத மாற்றணி, மதச்சார்பற்ற அணி, அல்லது உலகமய தாராளமய தனியார்மய எதிர்ப்பணி என, செங்கொடி பிடிக்கும் எவர் சொன்னாலும் அவர் தன்னையும் ஏமாற்றிக் கொண்டு மற்றவர்களையும் ஏமாற்றுகிறார் என்பது தெளிவு.

2009 மற்றும் 2014: மூன்றாவது அணி
அல்லது மாற்றணியின் கதை


2009ல் இகக, இகக(மா), மாயா - ஜெயா போன்றவர்களுடன் மூன்றாவது அணி அமைத்தனர். காங்கிரசுக்கு பாஜகவுக்கு மாற்று நாங்களே எனச் சொன்ன இந்த மூன்றாவது அணியை மக்கள் நம்பவில்லை. 2009 தேர்தலில் மூன்றாம் அணி கட்சிகள் 2009ல் வென்ற இடங்களும், 2009க்கு முன் அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் இருந்த இடங்களும் அட்டவணையில் தரப்பட்டுள்ளது.மூன்றாவது அணி கட்சிகள் 108 இடங்களில் இருந்து 77 இடங்களாகக் குறைந்தனர். இடது முன்னணி 35 இடங்களை இழந்தது. எந்த அணியிலும் இல்லாத சமாஜ்வாதி கட்சி 36லிருந்து 23, லாலு கட்சி 24லிருந்து 4, பஸ்வான் கட்சி 4லிருந்து பூஜ்யம் இடங்களை வென்றனர். இவர்கள் தயவில்தான் (அல்லது இவர்களை சிபிஅய் மூலம் மிரட்டியே) அய்முகூ - 2 அரசாங்கம் காலம் தள்ளியது.

காங்கிரசும் பாஜகவுமாக 1996ல் 294 இடங்களும் 1998ல் 321 இடங்களும் 1999ல் 296 இடங்களும் 2004ல் 283 இடங்களும் 2009ல் 322 இடங்களும் பெற்றன. இகக இககமா சொல்லும் மூன்றாவது அணி - மாற்று அணி  - மதச்சார்பற்ற அணி கட்சிகளில் ஒன்று கூட ஒரே நேரத்தில் காங்கிரஸ் - பாஜக எதிர்ப்பு அல்லது காங்கிரஸ் பாஜக அல்லாத கட்சிகள் என்ற வரையறையில் வரவில்லை.

காங்கிரஸ் பாஜக இரண்டும் சேர்த்தே, ஆட்சி அமைக்கத் தேவைப்படும் 273க்கு மேல் 50 இடங்கள் தாண்டிக் கூட வென்றதில்லை. பிராந்திய அல்லது சமூக நீதி அல்லது மதச்சார்பற்ற வேடம் புனையும் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் பாஜகவோ காங்கிரசோ 1999லிருந்து நாடாளவில்லை.

தமிழ்நாட்டு சறுக்கலுக்கு
இகக இகக(மா) விளக்கங்கள் ஏற்புடையவையா?


தமிழ்நாட்டில், இந்தத் தேர்தலில், உண்மையில் மகிழ்ச்சியோடு வேலை செய்வது இடதுசாரி தோழர்களே. சூரியனுக்கு, இரட்டை இலைக்கு, டாக்டர் கலைஞர்க்கு புரட்சி தலைவிக்கு வாக்கு கேட்கும் அவமானம் தலை குனிவு நமக்கில்லை, நமக்கும் முதுகெலும்பும் சொந்தக் காலும் உண்டு எனக் காட்ட முடிகிறதே என்ற நியாயமான மகிழ்ச்சி அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் இகக, இகக(மா) தலைமைகள், ஜெயலலிதா தங்களைச் சிறுமைப்படுத் தியதற்கான சரியான அரசியல் காரணங்களைக் கண்டறிந்தனரா?

நாடாளுமன்ற முடக்குவாத, வால்பிடிக்கும் சந்தர்ப்பவாத அரசியல் வழியே, தங்களை அவமானப்படுத்தியது என உணர்ந்தனரா? அல்லது, வழக்கம்போல் தோல்விக்கான காரணங்களை வெளியில் தேடுகின்றனரா? தோல்வியை மறைக்கின்றனரா? மறுக்கின்றனரா?

தினமலரில் வெளிவந்து பின்னர் தீக்கதிர் வெளியிட்ட, இகக(மா)வின் தோழர் ராம கிருஷ்ணன், இககவின் தோழர் மகேந்திரன், டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட தோழர் தா.பாண்டியன் பேட்டிகள் சொல்லும் செய்திகளை ஆராய்வோம்.
                 
தோழர் ராமகிருஷ்ணன் பேட்டியிலிருந்து

மூன்றாவது மாற்று என்ற முழக்கத்தை வைப்பதாலேயே இரு கட்சி ஆட்சி முறை தடுக்கப்படுகிறது. மூன்றாவது மாற்று இரு முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த ஆட்சியை காங்கிரசும் பாஜகவும் இணைந்து கவிழ்த்தனர். அக்டோபர் 30, 2013 வகுப்புவாத எதிர்ப்பு சிறப்பு மாநாட்டில், பிப்ரவரி 25, 2014  கூட்டத்தில், 11 கட்சிகள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் அல்லாத பாஜக அல்லாத மாற்று அரசை, அதிமுக தலைமை ஏற்றுக் கொண்டது என்ற நம்பிக்கையில் முயற்சித்தோம். இதில் தவறு இல்லை.

கேள்வி: அதிமுகவின் மூன்றாண்டு கால ஆட்சி திருப்தி அளிக்கிறதா?

பதில்:   மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்துப் போராடி வருகிறோம். மக்களுக்குச் சாதகமான நடவடிக்கைகளை ஆதரிக்கிறோம்.

தோழர் மகேந்திரன் பேட்டியிலிருந்து

மம்தா கார்ப்பரேட்டுகளுடன் கை கோர்த்துள்ளார். அவர்களின் ஆதரவுடன் லோக்சபா தேர்தலைச் சந்திக்கிறார். தேர்தலுக்குப் பின் கார்ப்பரேட்டுகள் உதவியுடன் நாட்டை ஆட்சி செய்ய விரும்புகிறார். இந்தப் பின்னணியில்தான் ஜெயலலிதா மம்தாவுடன் பேசினார். அதற்கு ஜெயலலிதா ஒத்துப்போவதற்கு கம்யூனிஸ்ட்கள் இடைஞ்சலாக இருப்பார்கள் என, கூட்டணியை முறித்துள்ளார். கம்யூனிஸ்ட்களை அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேற்ற பெரும் சதி நடந்துள்ளது. தேசிய அளவில், கம்யூனிஸ்ட்களை தவிர்க்க முடியாத சக்தி ஆக்கி விடக்கூடாது என்பதற்காக, எங்களுடனான கூட்டணியை அஇஅதிமுக முறித்துக் கொண்டுள்ளது.

மூன்றாவது அணி என நாங்கள் எப்போதும் சொல்வதில்லை. மாற்று அணி என்றுதான் சொல்கிறோம். மாற்று அணியால்தான் வி.பி.சிங், தேவகவுடா, குஜ்ரால் போன்றவர்கள் பிரதமராக இருந்தார்கள். காங்கிரஸ் பாஜக அல்லாத மாற்று அரசுகள் நாட்டை ஆள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

 1964ல் கட்சி பிரிந்து, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவானதிலிருந்து, அதிமுக - திமுக கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். அப்போதெல்லாம் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. இப்போது தனித்து நிற்கிறோம். எங்கள் கொள்கையை தன்னிச்சையாக மக்களிடம் எடுத்துச் சொல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

தோழர் தா.பாண்டியன் பேட்டியிலிருந்து   அஇஅதிமுகவுக்கு பாஜக மேல் புதிதாக ஏற்பட்டுள்ள அன்பை புரிந்து கொள்ளவும் முடியாது. ஏற்கவும் முடியாது. அதிமுக, காங்கிரஸ் அல்லாத பாஜக அல்லாத என்ற கொள்கைத் தளத்தை கைவிட்டுவிட்டது. ஜெயலலிதா அவரது பிரச்சாரத்தில் காங்கிரஸ், திமுகவை விமர்சிக்கிறார். பாஜக பற்றிப் பேசுவதில்லை. அவர் பாஜகவுக்காக நிற்கிறார் என்பது சொல்லாமலே புரியும். ஜெயலலிதா தவிர, மொத்த உலகமும் மோடி பற்றிப் பேசுகிறது. நிச்சயமாக, நாங்கள் மோடி பற்றி மதவாத ஆபத்து பற்றி பேசுவோம் என்பதால்தான் அவர் எங்களைத் தவிர்த்தார்.

மத்திய அரசு உருவாக்கமும்
இடதுசாரி அணுகுமுறையும்


இன்றைய நிலைமைகளில், சமூகப் பொருளாதார அரசியல் சக்திகளின் சமநிலையில், கம்யூனிஸ்டுகள், தேர்தல்கள் மூலம், இந்தியாவில் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது. நாடாளுமன்ற பெரும்பான்மை பெற்று, மக்களாட்சி அமைக்க முடியாது. நாடாளுமன்றம் தவிர்த்த பாதை என்பது, சக்திகளின் சம நிலையை தலைகீழாகப் புரட்டிப் போடுவதில் மக்கள் போராட்டங்களே முதன்மையானவை என்றும், அவற்றின் தொடர்ச்சியாகவும் அவற்றுக்குத் துணையாகவுமே நாடாளுமன்றத் தேர்தல் போராட்டங்கள் அமையும் என்றும் நம்புகிறது. அதாவது முதலாளித்துவ நாடாளுமன்றத்தில் புரட்சிகர எதிர்க்கட்சியாக செயல்படுவதே கம்யூனிஸ்ட் பணியாகும்.

புரட்சிக்கான தயாரிப்பு காலத்தில் புரட்சிகர எதிர்க்கட்சிப் பாத்திரம் என்பதே பொருத்தமானதாகும். இங்கேதான், இகக, இககமா செயல்தந்திரம், மத்தியில் வேறுவேறு அரசாங்கங்கள் அமைக்கும் கடமையை வலிந்து எடுத்துக் கொள்கின்றது. வி.பி.சிங் அரசாங்கம் அமைவதில் பங்கு, அய்மு அரசாங்கத்தில் நேரடி மற்றும் ஸ்டியரிங் கமிட்டி மூலம் பங்கு என்ற நிலை வரை சென்றுவிட்டனர். இப்போது, அதையே, காங்கிரஸ், பாஜக அல்லாத மாற்றணி/மூன்றாவது அணி/மதச்சார்பற்ற அணி என்கிறார்கள்.

நீடிக்கும் இந்த செயல்தந்திரம் நாடாளுமன்றப் பாதை என்ற போர்த்தந்திர நிலையை எட்டிவிட்டது. அதிலிருந்து உருவான ஒட்டிப்பிறந்த இரட்டை நோய்கள்தான் நாடாளுமன்ற முடக்குவாதமும் வால்பிடிக்கும் சந்தர்ப்பவாதமும்.

இககமா சிலாகிக்கும் மூன்றாவது மாற்று, இகக ஏற்றிப்போற்றும் மாற்றணி ஆகியவை முதலாளித்துவ மாற்றணிகளே. அவை அரசில் இருந்தும் பொதுவாழ்வில் இருந்தும் மதத்தை விலக்கி நிறுத்தி வைக்கும் மூலச்சிறப்பு மிக்க மதச்சார்பற்ற அரசாக இருக்க முடியாது. ஏகாதிபத்திய எதிர்ப்பின் ஜனநாயகப் போராட்டங்களின் பிரிக்க முடியாத பகுதியான மதச்சார்பின்மைக்கும், இந்தத் தோழர்கள் சொல்லும் மாற்றணிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

இந்த அணிகளின் அரசுகள், உலகமய, தாராளமய, தனியார்மய பிணிகளையே பரப்பும். இந்த அரசுகளுக்காகத்தான் சிதம்பரம் அய்மு காலத்தில் கனவு பட்ஜெட் தாக்கல் செய்தார். பெயரளவிலான ஒப்பனை மாற்றங்கள் தவிர, இந்த அரசுகளுக்கும் மக்கள் சார்பு வளர்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

2014க்கான இககமா தேர்தல் அறிக்கை முதலாளித்துவ சமூகத்தின் அனைத்தும் தழுவிய நெருக்கடி எதிரிகளின் பலவீனங்கள் ஆகியவற்றின் மீது குறிவைக்காமல் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு ஆபத்து என, அரசனைக் காட்டிலும் அரச விசுவாசத்துடன் கூப்பாடு போடுகிறது.

மாலெ கட்சி, மூன்றாவது அணி, காங்கிரஸ், பாஜக அல்லாத, பிராந்திய, கூட்டாட்சி, சமூக நீதிக் கட்சிகளின் கதம்பக் கூட்டணியாக இருக்காது என்கிறது.

இகக மாலெ 2014 தேர்தல் அறிக்கை சொல்கிறது.

 ‘அனைத்திலும் பரவியிருக்கிற நெருக்கடியில் இருந்து விடுதலை பெறுவதற்கான நம்பிக்கை, ஒரு மாற்றுக்கான மக்கள் போராட்டங்களில் தான் இருக்கிறது! முன்கூட்டியே தயார் செய்யப்பட்ட மாற்று எதுவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. மக்களின் நீடித்த ஜனநாயக அறுதியிடல் மூலம் இதை நாம் கட்டியெழுப்ப வேண்டும்’.

மூன்றாவது அணி தொடர்பான இகக, இககமா தேர்தல் செயல்தந்திரம் என்ன ஆனது? அக்டோபர் 23 மதவாத எதிர்ப்பு சிறப்பு கருத்தரங்கம், பிப்ரவரி 25 அன்று நடந்த 11 கட்சிகள் கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்ட இடது முன்னணியின் நான்கு கட்சிகள் போக, இவர்களோடு, எந்த மதச்சார்பற்ற கூட்டாளி தேர்தல் உடன்பாடு கண்டுள்ளார்?

பீகாரில் நிதிஷ் இரண்டு இடம் இககவுக்கு தந்துள்ளார். மொத்தமாய் இதுபோல் நாடெங்கும் 5 இடங்களில் அத்தகைய ஆதரவு கிடைத்தாலே பெரிய விசயம். எல்லா மாநிலங்களிலும், தோழர்கள், ஜெயலலிதா பின்பற்றியது போன்ற வேறுவேறு அணுகுமுறைகளால் அலைகழிக்கப்பட்டுள்ளனர். 2004ல் இருந்த 59 இடங்கள் 2009ல் 35 குறைந்து 24 இடங்களானது. 2014ல் என்ன ஆகுமோ?

இவ்வளவுக்கும் பிறகு, இககமா 2014 தேர்தல் அறிக்கை சொல்கிறது. மக்கள் முன்பு காங்கிரஸ், பாஜக அல்லாத ஒரு மாற்றை உறுதிசெய்ய, இககமாவும் பிற இடதுசாரி கட்சிகளும் பிற மதச்சார்பற்ற காங்கிரஸ் அல்லாத கட்சிகளோடு ஒத்துழைக்கும். என்ன அசாத்திய நம்பிக்கை!

தமிழகத்தில்

இன்னமும் இந்த நம்பிக்கையில் தளராமல் சளைக்காமல் முயற்சிக்கும் தோழர்கள், ஜெயலலிதாவின் மனமாற்றத்தில் நப்பாசை கொண்டுள்ளனர். ஜெயலலிதா மோடி பற்றி, பாஜக பற்றி விமர்சிப்பதில்லை என்று சொல்வதோடு நின்றுவிடுகிறார்கள். இககமா ஜெயலலிதாவின் மூன்றாண்டு ஆட்சி திருப்தியளிக்கிறதா என்ற கேள்விக்கு நேரடியாக இல்லை என பதிலளிக்க முடியாமல் தடுமாறுகிறது. இகக நல்லதும் உண்டு, அல்லாததும் உண்டு என்கிறது. மேலே சொன்ன விசயங்களை விட, ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு பற்றிய கேள்விக்கு நேரடி பதில் சொல்ல முடியாத அவர்கள் தயக்கத்தில், போயஸ் தோட்டத்துக் கதவுகள் நிரந்தரமாக மூடிவிடக் கூடாது என்ற கவலை வெளிப்படுகிறது.

கருணாநிதி 2ஜி ஊழல் கசக்கிறது அம்மையாரின் சொத்துக் குவிப்பு மற்றும் இதர ஊழல்கள் இனிக்கிறதா என்று கேள்வி கேட்கும்போது, பாவம், நமது தோழர்கள் பம்மிப் பதுங்குகிறார்கள்.

3 சென்ட் நிலம், தொழிற்சங்க அங்கீகாரச் சட்டம், பயிற்சியாளர் நலன் காக்கும் சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் பெற வலியுறுத்துதல், மாநில அரசு ஊழியர்க்கு  அகவிலைப்படி வழங்காதது, ஆட்டோமொபைல் தொழிலை பொது பயன்பாட்டு சேவையாக அறிவித்தது போன்ற அடிப்படை விசயங்களில் கூட, இது வரை விமர்சனங்கள் வைக்கவில்லை.

மாலெ தீப்பொறி ‘இகக இககமா ஜெயலலிதாவுக்கு வாக்கு கேட்கும்போது, அது மறைமுகமாக மோடிக்கு வாக்கு கேட்பது’ என பிப்ரவரி 16 - 28 இதழில் எழுதியதை, இப்போதாவது இகக, இககமா தலைவர்கள் உணர்ந்துள்ளனர்.

 மாலெ தீப்பொறி, தனது பிப்ரவரி 16 - 28 இதழில் ‘தமிழ்நாட்டில் மோடியின் திருப்பணியை ஜெயலலிதாவே மேற்கொள்வதால், கம்யூனிஸ்டுகளின் முதன்மையான கடமை ஜெயலலிதாவை எதிர்ப்பதே ஆகும். அதற்காக போராடுகிற இடதுசாரி ஜனநாயக தேசபக்த சக்திகளிடம் உழைக்கும் மக்களிடம் துணிந்து ஆதரவு கேட்க வேண்டும். பாட்டாளி வர்க்க அரசியலின், செங்கொடியின் சுதந்திரத்தை உறுதி செய்வதன் மூலம், வருங்காலத் தமிழகத்துக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும்’ என எழுதியது. இதே விருப்பத்தை இகக, இககமா தொண்டர்கள் கொண்டுள்ளனர். அவர்கள் தலைமை என்ன செய்யப் போகிறது?


உங்களையே சுற்றிச்சுற்றி அடிப்பார்...பாரதம் ஒளிர தமிழகம் மிளிர அஇஅதிமுகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என ஜெயலலிதா தனது பரப்புரைகளில் சொல்லி வருகிறார். இந்தியா ஒளிர்கிறது என்று சொன்னவர்கள் அடுத்த பத்து ஆண்டுகள் மத்தியில் ஆட்சிக்கு வரமுடியவில்லை. தமிழ்நாட்டில் கருணாநிதியின் மக்கள் விரோத நடவடிக்கைகள் ஜெயலலிதாவை கொண்டுவந்து, மக்கள் வாழ்வை மேலும் துன்பத்தில் தள்ளியுள்ளது போல், பத்தாண்டு கால அய்முகூவின் மக்கள் விரோத ஆட்சி பாஜகவை ஆட்சியில் அமர்த்தி நாட்டை கார்ப்பரேட் பாசிச பிடியில் சிக்க வைத்துவிடுவதை மக்கள் தடுக்க வேண்டியுள்ளது.

பாரதம் ஒளிரும் என்று சொல்லும் ஜெயலலிதாவால் தமிழகம் ஒளிரும் என்று சொல்ல முடியவில்லை. மின்மிகை மாநிலமாக தமிழ்நாடு மாறும் என்று சொல்லிக் கொண்டிருந்த ஜெயலலிதாவை அவரது நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் விரட்டுகின்றன. கூட்டணி கட்சிகளை சம்பிரதாய மரியாதை கூட இல்லாமல் தூக்கியெறிந்து விட்டு பிரச்சாரத்தைத் துவக்கியபோது இருந்த அதீத தன்னம்பிக்கை, வேறுவேறு கூட்டணிகள் வடிவெடுத்த பிறகு வடிந்து வருகிறது.

அனைத்து முதலாளித்துவ கட்சிகளும் கூட்டணி குழப்பத்தில் ஆழ்ந்திருந்த நேரத்திலேயே, தேர்தல் தெளிவு பெற்ற ஒரே கட்சி அஇஅதிமுக என்ற தோற்றத்துடன், ஜெயலலிதா தாக்குதல் தன்மையுடன் துவங்கிய பிரச்சாரத்தில் இன்று சிதம்பரம், இடதுசாரிகள், திமுக, தேமுதிக என அனைவரது கேள்விகளுக்கும் விளக்கம் சொல்வது என்பதாக, பெருமளவில் தற்காப்பு வாதங்கள் இடம் பிடித்துவிட்டன. மூன்று சென்ட் நிலம், கொடநாட்டில் 900 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு என சில அடிப்படை கேள்விகளை ஜெயலலிதா தவிர்த்துவிட்டு கடந்து செல்ல முயற்சி செய்தாலும் கட்சி செலவில் நடப்பதாகச் சொல்லப்படும் வான்வெளி பிரச்சாரத்துக்குக் கூட விரிவான பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

மாநிலத்தில் ஆட்சியில் இருக்கிற ஜெயலலிதா, மத்தியில் ஆட்சியில் இருக்கிற காங்கிரஸ் மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளாக இருந்த கட்சிகள் உட்பட எந்த முதலாளித்துவ கட்சியும் தாக்குதல் தன்மையுடனான பரப்புரை மேற்கொள்ள முடியவில்லை. கடந்த கால துரோகங்களும் நிகழ்கால சந்தர்ப்பவாத உடன்பாடுகளும் கூட்டணி பேர கட்சிகளை தற்காப்பு வாதங்களுக்கு தள்ளியிருக்கின்றன. இந்தக் கட்சிகளால் வறிய மக்களை மட்டுமின்றி, புதிய வாக்காளர்களை, நடுத்தரப் பிரிவு வாக்காளர்களையும் நேரடியாக எதிர்கொள்வதில் கிட்டத்தட்ட சாத்தியமற்ற நிலை இருக்கிறது. நவதாராளவாதக் கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட மாற்று பொருளாதாரக் கொள்கைகள் இல்லாததால் மக்கள் முன்வைக்கிற வாழ்வாதாரக் கேள்விகளுக்கு, அவர்கள் சீற்றத்தைத் தணிக்கக்கூடிய விதத்தில் பதில் சொல்ல முடியாத நிலை இருக்கிறது.

அதிகாரபூர்வ இடதுசாரி கட்சிகளும் மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்துவதைவிட கூடுதல் சிரத்தையுடனும் சிரமத்துடனும் இத்தனை ஆண்டுகால சந்தர்ப்பவாத அரசியல் நிலைப்பாடுகளுக்கு விளக்கம் சொல்வதில் நேரம் செலவிட நேர்ந்துள்ளது. துணிச்சலுடன் ஜெயலலிதாவை எதிர்கொள்ள இன்னும் முன்வராததால் மக்களை துணிச்சலுடன் இன்னும் சந்தித்தபாடில்லை. இந்த நிலையிலும் இல்லாத மூன்றாவது அணியின் இருப்பதாக அறியப்படும் அய்க்கிய ஜனதா தளத்துக்கு தமிழ்நாட்டில் ஆதரவு அறிவித்தும், புரட்சிகர இடதுசாரி கட்சியான இகக மாலெவுக்கு ஆதரவு என அறிவிக்க முன்வரவில்லை.

தேர்தல் பரபரப்பு பற்றிக்கொண்ட நிலையிலும், தேர்தல் வேலைகளுக்கு கவனம் செலுத்துவதைக் காட்டிலும், புரட்சிகர தொழிற்சங்கம் இன்று வரை, சவால்கள் பல எதிர்கொண்டு முன்னுதாரணமிக்க தொழிலாளர் வர்க்க, தொழிற்சங்க போராட்ட நடைமுறையை பின்பற்றி வருகிற பிரிக்காலில், போட்டி சங்கம் நடத்த முனைப்பு இருக்கிறது. இவற்றுக்கும் சேர்த்துத்தான் தேர்தல் களத்தில் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்ற  உணர்வுக்கு பஞ்சம் காணப்படுகிறது.

மறப்பது மக்கள் இயல்பு, அதனால் இதுவும் கடந்துபோகும் என்று இந்தக் கட்சிகள் எதிர்ப் பார்ப்பார்களானால், லெனின் சொன்ன சதுப்பு குழி காத்திருக்கிறது. இசுலாமிய மக்கள் மோடியின் துரோகத்தை, இசுலாமியர்கள் உடலும் மனமும் ரணப்பட்டதை மறக்கவில்லை என்ற யதார்த்த நிலையை தேமுதிகவின் நட்சத்திர வேட்பாளர் சுதிஷ் சேலத்தில் சந்தித்தார். தவறு தான் என்றாலும், காங்கிரஸ்காரரே என்றாலும், மோடியை கூறுபோடுவேன் என்று சொல்லும் அளவு இசுலாமியர் மத்தியில் கொதிப்பு இருப்பதை காசி காட்டியுள்ளது.

பெருந்துறையில் கழிவுநீர்த் தொட்டியில் உயிர்விட்ட தொழிலாளர்கள் குடும்பங்கள், என்எல்சியில் பேச்சுரிமையை வெளிப்படுத்தியதற்காக கொல்லப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளி யின் குடும்பம், வண்ணக்கனவுகள் பொய்யாய் போவதை சகிக்க முடியாமல் தகித்துக் கொண் டிருக்கும் நிரந்தர தற்காலிக, ஒப்பந்த இளைய தொழிலாளர்களின் குடும்பங்கள், வாழ எந்த வழியும் கண்ணுக்குப் புலப்படாத கிராமப்புற வறிய மக்கள் குடும்பங்கள் என யாரும், நாளும் தங்களை விரட்டும் துன்ப நிலைமைகள் விலகாத,  மாறாத சூழலில் ஜெயலலிதாவின் துரோகத்தையும் மறக்கப் போவதில்லை.

ஜெயலலிதா தமது கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும்போது, உங்களுடனேயே இருப்பார், உங்களையே சுற்றிச்சுற்றி வருவார், அதற்கு நான் உத்தரவாதம் தருறேன் என்கிறார். 2011 முதல் அவர் அளித்த உத்தரவாதங்களும் வாக்குறுதிகளும் சொல்லளவில்தான் இருக்கின்றன.

கொலை, கொள்ளைச் சம்பவங்களில் இருந்து கூட மக்களை பாதுகாக்க முடியாதவர் ஜெயலலிதா என்பதைத்தான், அவர் மக்களை சுற்றிச்சுற்றி அடித்ததைத்தான் இன்றுவரை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.

தற்காப்பு நிலையில் உள்ள முதலாளித்துவ கட்சிகளை முன்னேறித் தாக்க, அவர்களை இருக்க வேண்டிய இடத்தில் நிறுத்த, உழைக்கும் மக்களுக்கு 2014 தேர்தல், தவறவிட்டுவிட முடியாத வாய்ப்பைத் தந்திருக்கிறது.

போஜ்பூரில் அரசியல் படுகொலை

பகத்சிங் நினைவுதினமான மார்ச் 23 அன்று அதிகாலை இகக மாலெ தோழர்கள், இகக மாலெ சர்போக்ரி ஒன்றியச் செயலாளர் தோழர் புத்ராம் பாஸ்வான் உடலை கண்டெடுத்தனர். இகக மாலெ வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் தொடர்பான வேலைகளுக்காக தனது கிராமத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது அவர் கொல்லப்பட்டார். அவர் உடலில் சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன. அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதற்கு முன்பு அவரை கயிற்றில் கட்டி தரையில் இழுத்துக் சென்றிருக்கிறார்கள். அவர் நெஞ்சில் ஏறி மிதித்திருக்கிறார்கள். 1998 நகரி பசார் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட ரன்வீர் சேனாவைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட, நன்கறியப்பட்ட பல நிலப்பிரபுத்துவ லும்பன் சக்திகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரன்வீர் சேனா மீதான படுகொலை வழக்குகளில் நிலப்பிரபுத்துவ அச்சுறுத்தலை மீறி சாட்சி சொல்ல சாட்சிகள் துணிச்சலாக சாட்சி சொல்வதில் அவர்களுக்கு பெரிதும் பக்க பலமாக இருந்தவர் தோழர் புத்ராம் பாஸ்வான். மார்ச் 23 அன்று, ரன்வீர் சேனா ஆதரவாளர்கள் வானத்தை நோக்கிச் சுட்டு புத்ராம் படுகொலை செய்யப்பட்டதை கொண்டாடினார்கள். புத்ராம் படுகொலை ஓர் அரசியல் படுகொலை என்பதை இந்தக் கொண்டாட்டங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. அர்ரா தொகுதியில் இகக மாலெ ஒரு வலுவான போட்டியாளராக உள்ளது. தேர்தல் நேரத்தில் இகக மாலெ ஆதரவாளர்களை அச்சுறுத்தும் நோக்கம் இந்தப் படுகொலைக்குப் பின் உள்ளது.

நிதிஷ் குமாரின் நல்லாட்சிக்குப் பிறகு பீகாரில் நிலப்பிரபுத்துவ வன்முறை கடந்த காலத்ததாகிவிட்டது என்று நிதிஷ் குமார் ஆதரவு கருத்தியலாளர்கள் சொல்லப் பார்க்கிறார்கள். 80களில், தலித் மக்கள் வாக்குச் சாவடிகளுக்கு வந்து வாக்களிப்பதைத் தடுக்க முயன்ற நிலப்பிரபுத்துவ சக்திகள், இகக மாலெ பதாகையிலான ஒடுக்கப்பட்ட நிலமற்ற வறிய மக்களின் வெற்றிகரமான போராட்டங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. அந்தப் போராட்டங்களில் மக்கள் தங்கள் வாக்குரிமையை வென்றெடுத்தனர்.

80களின் இறுதிப் பகுதியிலும் 90களின் துவக்க வருடங்களிலும் போஜ்பூரில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் இகக மாலெ வெற்றி பெற்றபோது, அதே சக்திகள் ரன்வீர் சேனாவை உருவாக்கின. வறிய மக்களின் சமூக அரசியல் அறுதியிடலை தடுக்க, அவர்களை அச்சுறுத்த பல படுகொலைகளை நடத்தின. இப்போது, தலைவர்களை, ஊழியர்களை படுகொலை செய்வது என்ற போர்த்தந்திரத்தை கையாளுகின்றன. 2012ல் இககமாலெ ரோதாஸ் மாவட்டச் செயலாளர் தோழர் பய்யா ராம் யாதவ் படுகொலை செய்யப்பட்டார். 2014ல் புத்ராம் பாஸ்வான் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 2013 சுதந்திர தினத்தன்று பட்டி பகுதியைச் சேர்ந்த தலித் மக்கள், நிலப் பிரபுத்துவ வன்முறைக்கு உள்ளாயினர். ஒருவர் கொல்லப்பட்டார். தலித் மக்கள் வழிபடுகிற கவிஞர் ரவிதாஸ் கோயில் இடிக்கப்பட்டது.

70களிலும் 80களிலும், உரிமைகளுக்காகப் போராடிய மக்களின் தலைவர்களை படுகொலை செய்தபோதும், ஆளும் வர்க்கங்கள் அந்தப் போராட்டங்களை ஒடுக்க முடியவில்லை. தோழர் புத்ராம் பாஸ்வானை படுகொலை செய்தவர்களும் இதுபோன்ற படுகொலைகள் மூலம் தங்கள் இலக்கை ஒரு போதும் எட்ட முடியாது.

மார்ச் 24 அன்று நடந்த தோழர் புத்ராம் பாஸ்வான் இறுதி ஊர்வலத்தில் இகக மாலெ தலைவர்களுடன் ஆயிரக்கணக்கான வறிய, ஒடுக்கப்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதி

புதுச்சேரி ஒன்றியப் பிரதேசம் முழுவதும் ஒரு நாடாளுமன்றத் தொகுதி. 2009ம் ஆண்டு கணக்குப்படி மொத்த வாக்களர்கள் 7,62,440. இதில் ஆண் வாக்காளர்கள் 3,67,073. பெண் வாக்காளர்கள்  3,95,367

       இகக(மாலெ) புதுச்சேரி தொகுதி வேட்பாளர் தோழர் கோ.பழனி, வயது 59. பட்டயப் படிப்பு பெற்றவர். 35 ஆண்டுகளாக கம்யுனிஸ்ட் இயக்கத்தில் தீவிர பங்காற்றி வருகிறார். தற்போது இகக(மாலெ) புதுச்சேரி மாவட்டச் செயலாளர். சுதேசி மில்லில் 21 ஆண்டுகள் பணிபுரிந்தார். அங்கு தொழிற்சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து தொழிலாளர்களுக்காகப் பல போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தி சிறை சென்றுள்ளார்.

Search