COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Saturday, February 15, 2014

அம்பத்தூரில் உழைக்கும் மக்களின் முன்னேற்றம், அமைதி, வளர்ச்சி கோரி மாலெ கட்சி தலைவர்கள் காலவரையற்ற பட்டினிப் போராட்டம்

பிப்ரவரி 9 அன்று காலை பட்டினிப் போராட்டம் துவங்கியது. மாலெ கட்சியின் மாநிலக் கமிட்டி உறுப்பினரும், புரட்சிகர இளைஞர் கழகத்தின் தேசியச் செயலாளருமான தோழர் பாரதி, ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் பழனிவேல் தலைமையில் சுமார் 200 பேர் பட்டினிப் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தை ஏஅய்சிசிடியு கோவை மாவட்ட சிறப்புத் தலைவர் தோழர் சந்திரன் துவக்கி வைத்து உரையாற்றினார். ஏஅய்சிசிடியு மாநில சிறப்புத் தலைவர் தோழர் ஜவஹர், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநிலத் தலைவர் தோழர் தேன்மொழி, அகில இந்திய மாணவர் கழக மாநிலத் தலைவர் தோழர் மலர்விழி ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி உரையாற்றினார்கள்.

60 நாட்களுக்கும் மேல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகிற மதராஸ் ஜிம்கானா கிளப் சங்கத்தின் தலைவர்கள் ஜேம்ஸ், உசேன், மற்றும் நிர்வாகிகள், அகில இந்திய விளையாட்டு வீரர்கள் நலச் சங்கத்தின் தலைவர் டேவிட் மோசஸ் ராஜ், ஏசியன் பெயின்ட்ஸ் தொழிலாளர் சங்கத்தின் தலைவர்கள் ராஜேஷ், மகேஷ், தினகர், குணா உள்ளிட்ட முன்னோடிகள் தொடர்ந்து போராட்டப் பந்தலில் ஆதரவு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர்.

 அம்பத்தூரின் மக்கள் நலன் விரும்பும் மருத்துவர் ராமநாதன் நேரில் வந்து தோழர்களை வாழ்த்தினார்.

கட்சியின் சென்னை மாநகரச் செயலாளர் தோழர் எஸ்.சேகர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழிநடத்தினார். கட்சி மாவட்டக் கமிட்டி உறுப்பினர்கள் மக்கள் கோரிக்கைகளை விளக்கிப் பேசியதுடன் 2 மாத காலமாக கையெழுத்து இயக்கம் நடத்தியபோது மக்கள் தெரிவித்தக் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

மாலெ கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் குமாரசாமி நிறைவாக சிறப்புரையாற்றினார். தோழர்கள் பாரதி மற்றும் பழனிவேல் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தை 12.02.2014 அன்றும் நான்காவது நாளாக தொடர்கின்றனர்.

பகுதி மக்கள், பல்வேறு கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள் என நாள்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் தோழர்களுக்கு வாழ்த்தும் போராட்டத்துக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். நீதிக்கான போராட்டத்துக்கு நிதியும் தரப்படுகிறது.

எம்ஆர்எப் தொழிலாளர் சங்கத் தோழர்கள், சீரமைப்பு இயக்கத்தின் தலைவர் தோழர் மா.சேகர் மற்றும் முன்னோடிகள், அகில இந்திய தரைவழி போக்குவரத்து ஓட்டுநர் சங்கத் தோழர்கள், மாலெ கட்சி மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் ஜானகிராமன், இரணியப்பன் ஆகியோர் பட்டினிப் போராட்டம் நடத்தும் தோழர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

போராட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் :

•    உழைப்பவர் எவரானாலும் மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்க வேண்டும்.

•    வீடற்ற அனைத்து குடும்பங்களுக்கும் தலா 3 சென்ட் வீட்டு மனைப்பட்டா, அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1000 படுக்கைகளும் அனைத்து நவீன வசதிகளும் கொண்ட அரசு பொது மருத்துவமனை வேண்டும்.

•    அம்பத்தூரில் கலை, மருத்துவம், பொறியியல், அரசு கல்லூரிகள்
கூடுதலாக ஒரு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இரண்டு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள் வேண்டும்.

•    அம்பத்தூரின் வானகரம் ரோட்டில் உள்ள குப்பைக் கிடங்கு அப்புறப்படுத்தப் பட வேண்டும்.

•    சகல விளையாட்டுக்களுக்கான நவீன வசதிகளும் கொண்ட விளையாட்டு மைதானம் வேண்டும்.

•    டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.

மக்களை வஞ்சிக்கும் திறமை விரைவில் தண்டிக்கப்படும்

தமிழ்நாட்டில் சில சிலைகள் கொடுத்து வைத்தவை. விலை ஏறிய தங்கத்தை வாங்க முடியாமல், கடன் வாங்கி மகளுக்கு திருமணம் செய்து, கடனை அடைக்க கிட்னி விற்பதுவரை செல்லும் மக்கள் வாழும் மாநிலத்தில், ஒரு சிலைக்கு 13 கிலோ தங்கமா? பொதுவுடைமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு ஆகியவற்றுக்காக வாழ்ந்ததாகச் சொல்லப்படும் ஒருவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவித்து, பூஜை செய்வது அவருக்கு மரியாதை செய்வதாகுமா? ஜெயலலிதா ஏன் அப்படிச் செய்தார் என்று விளக்குவாரா?

தங்கக் கவசம் அணிவித்தது அஇஅதிமுக, தமிழக அரசாங்கம் அல்ல என்பதுதான் இதில் தமிழக மக்கள் ஆறுதல் அடையக்கூடிய ஒரே விசயம்.
ஆனால், அஇஅதிமுக சார்பாக அணிவிக்கப்பட்ட தங்கக் கவசத்தை தமிழக மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறையினர் 24 மணி நேர பணி பார்த்து பாதுகாப்பார்கள்.

பிறகு, அது தேசியமயமாக்கப்பட்ட வங்கி பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். பெட்டக சாவியை அஇஅதிமுகவினரா, தேவர் நினைவில்ல பாதுகாவலர்களா, யார் வைத்துக் கொள்வது என ஜெயலலிதா முடிவு செய்வார். ஜெயலலிதாவும் சசிகலாவும் நகைக் கடைகளாக ஊர்வலம் வந்தது, எவ்வளவு தடுத்தாலும், கண்முன் தோன்றுகிறது. அவர்கள் தங்கம். அவர்கள் உரிமை.

ரூ.5 கோடிக்கு தங்கக் கவசம் செய்து அதை பிறகு வங்கிப் பெட்டகத்தில் வைக்கப்போகும் அஇஅதிமுகவினர் இந்த விசயத்தை சற்று யோசித்துப் பார்க்கலாம்: 2013 செப்டம்பரில் அம்மா உணவகத்தில் சப்பாத்தி கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. இன்று வரை சப்பாத்தி கிடைப்பதில்லை. அதற்கான சோதனை ஓட்டம் இன்னும் முடிவு பெறவில்லை என்று சொல்கிறார்கள் அதிகாரிகள்.

ஏன் சோதனை ஓட்டம் முடிவு பெறவில்லை என்றால், போதுமான சப்பாத்தி எந்திரங்கள் இல்லை என்றும் ஓர் எந்திரம் பழுதானால் உடனடியாக மாற்று எந்திரம் இல்லை என்றும் இந்த சிலபல காரணங்களால் சப்பாத்தி தருவதில் தாமதம் என்றும் சொல்கின்றனர். அஇஅதிமுககாரர்கள் அரசு உணவகங்களுக்கு சப்பாத்தி எந்திரம் வாங்கித் தந்தால் தமிழக மக்கள் மத்தியில் அம்மா புகழ் கொடிகட்டிப் பறக்காதா?

இதையொட்டி இன்னொரு கேள்வியும் எழுகிறது. ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையை கூட்டணி கட்சியினர் கூட மெச்சிப் பாராட்டுகின்றனர். ஒரு சப்பாத்தி எந்திரம் வாங்க முடியாத திறமை என்ன திறமை? இன்று சப்பாத்திக்கு ஏற்பட்ட நிலை மக்களவை தேர்தல் முடிந்த பிறகு ஒட்டுமொத்த மலிவு விலை உணவகத்துக்கும் ஏற்படாது என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது.

இன்னொரு தொடர் கேள்வி. சென்னையில் கொசுத் தொல்லையில் இருந்து மக்களைப் பாதுகாக்க சென்னை மாநகராட்சி கட்டணமில்லா கொசுவலை தருகிறது. கொசு ஒழிப்புக்கு கழிவுநீர் குழாய்கள் பொருத்துவது போன்ற சாதாரண வழி கூட கண்டுபிடிக்க முடியாத திறமை என்ன திறமை?

இது போன்ற சாதாரண திறமைகள் கூட இல்லாத தமிழக ஆட்சியாளர்கள் அரசுப் பணிகளில் தகுதி, திறமை, தேர்வு என்று பந்தல் கட்டுகிறார்கள். தகுதித் தேர்வின் பெயரால் தமிழ்நாட்டின் செவிலியர் மாணவர் மத்தியில் பிளவை ஏற்படுத்தியவர்களின் அடுத்த இலக்கு, தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையில் பணிக்கமர்த்தப்பட்ட இளைஞர்கள்.

இந்தப் படையில் சேர 1,49,488 பேர் விண்ணப்பித்தார்கள். 23,865 பேர் தகுதி பெற்றார்கள். அவர்களில் 10,099 பேர், உடல் தகுதி மற்றும் உடல் திறன் தேர்வில் தேர்ந்தெடுக்கப் படை உருவாகிவிட்டது. மாதம் ரூ.7,500 ஊதியம். ஓராண்டுக்குப் பிறகு தமிழ்நாடு சீரூடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில் தகுதி தேர்வு எழுதி காவல்துறையில் பணி. தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இன்று மக்கள் நலப் பணியாளர்கள் நிற்பதுபோல் தெருவில் நிற்பார்களா?

ஹூண்டாய் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள்போல் தமிழக அரசு அவர்களை பயிற்சியாளர்களாக இன்னும் சில வருடங்கள் வைத்துக்கொள்ளுமா? காவல்துறையில் ஆள்பற்றாக்குறை என்று காரணம் சொல்லி இளைஞர் படைக்கு ஆள் எடுப்பவர்கள், அவர்களை பணிக்கு அமர்த்துவதில் ஏன் சூதாட்டம் நடத்துகிறார்கள்?

தேசிய அளவில் பின்னர் செயல்படுத்தக் கூடிய திட்டங்களை முன்னரே செயல்படுத்தி தேசிய திட்டங்களுக்கு முன்னோடியாக தமிழகம் விளங்குகிறது என்று ஆளுநர் ரோசய்யா தனது சட்டமன்ற உரையில் குறிப்பிட்டார். ரோசய்யா உண்மையைச் சொல்லிவிட்டார். தேசிய அளவில் மக்களை எப்படி விதவிதமாக வஞ்சிக்க முடியும் என்பதை முன்னரே செயல்படுத்தும் தமிழக அரசு மக்களை வஞ்சிப்பதில் நிச்சயம் முன்னோடிதான்.

ஜெயா தொலைக்காட்சியில் மட்டும்தான் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக சொல்லப்படுகிறதே தவிர, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பிரிவு மக்களும் தங்கள் வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காக, தங்கள் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக, வீதிகளில் இறங்கியுள்ளனர். விவசாயிகளுக்கு இழப்பீடு வேண்டும், விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை, கூலி, கவுரவம் வேண்டும், வீடற்றவர்களுக்கு வீட்டு மனை வேண்டும்,
வேலைவாய்ப்பற்றவர்களுக்கு வேலை வேண்டும், சாதி ஆதிக்க சக்திகளுக்கு தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும், அணுஉலை ஆபத்துக்கு முடிவுகட்ட  வேண்டும் என ஒவ்வொரு நாளும் பல பிரிவு உழைக்கும் மக்களும் குரல் எழுப்புகின்றனர். ஜெயலலிதா என்னிடம் இப்போது இருப்பதெல்லாம் அறிவிப்பு ஒன்றுதான், மற்றதெல்லாம் மத்தியில் ஆட்சி மாறிய பிறகு என்கிறார்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அதிகாரபூர்வ இடதுசாரிகளுடன் கூட்டணி அறிவித்த பிறகு, ஜெயலலிதா, துணிச்சலாக பொதுவுடைமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற பதங்களை எல்லாம், தன்னை, தனது ஆட்சியை விவரித்துக் கொள்ள பயன்படுத்துகிறார். தடி எடுத்தவர் தண்டல்காரராக முடியாது.

இடதுசாரிகளுடன் கூட்டணி அமைப்பதால் பொதுவுடைமைவாதி ஆகிவிட முடியாது. எந்த வேடமும் ஜெயலலிதாவின் நவதாராளவாத முகத்தை மறைத்துவிட முடியாது.

தமிழக மக்களுக்கு சோதனை மேல் சோதனை. தமிழ் மண்ணே வணக்கம் என்று ஏ.ஆர்.ரஹ்மான் பாடலைச் சொல்லி வண்டலூர் பொதுக் கூட்டத்தில் தனது உரையை துவங்கினார் மோடி. நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணி வெற்றி பெறும் என்று அங்கு கூடியுள்ள கூட்டமே சொல்வதாக மோடி சொன்னார். மோடி பொதுவாக குறுகிய பார்வை கொண்டவர். வேற்று மதத்தினரை விலக்கி வைத்துப் பார்த்துப் பழக்கப்பட்டவர். அதனால், வண்டலூருக்கு வந்தவர்கள்தான் தமிழக வாக்காளர்கள் என்று குறுகிய கருத்துக்கு வந்துவிட்டார்.

தமிழகம் மிகப்பெரியது மோடி அவர்களே. இது பகுத்தறிவு பாரம்பரியம் கொண்ட மாநிலம். மனுதர்மம் தலைதூக்காமல் பார்த்துக் கொள்கிற மக்கள் இருக்கிற மாநிலம். உங்கள் ஆர்எஸ்எஸ் அடையாளத்தை மறைத்து, உங்கள் வளர்ச்சி, நல்லாட்சி கதைகளை இங்கே விற்க முடியாது.

 கூட்டத்தில் கலந்துகொள்ளாமல், கூட்டம் முடிந்த பிறகு, மோடியை அவர் தங்கியிருந்த அய்ந்து நட்சத்திர விடுதியில் சந்தித்த வைகோ இந்தியாவை மோடிதான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மோடியிடம் இருந்து குஜராத்தை மட்டுமின்றி நாட்டை  காப்பாற்ற வேண்டிய அவசிய கடமை எதிர் வருகிறது. அந்தக் கடமையை நிறைவேற்ற தயாராகும் உழைக்கும் மக்கள் மோடியை மட்டுமல்ல, ஜெயலலிதாவையும் கூட சேர்த்து, அவர்களுடைய மக்கள் விரோத நடவடிக்கைகளுக்காக தண்டிப்பார்கள்.

முன்னாள் கொள்கை பரப்புச் செயலாளருக்கு இந்நாள் கொள்கை பரப்புச் செயலாளர்கள்

ஜெயலலிதா அரசியல் அரிச்சுவடி அறியாதவரல்ல

இன்று தமிழக முதல்வராக, அஇஅதிமுக பொதுச் செயலாளராக இருக்கிற ஜெயலலிதா, 04.06.1982ல் அஇஅதிமுகவில் சேர்ந்தார். ஜனவரி 1983ல் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரானார். எம்.ஜி.ராமச்சந்திரன் மறைவுக்குப் பிறகு, பல சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களைச் சந்தித்த அவரால், மூன்று முறை முதல்வராகவும் முடிந்தது. ஆக, ஜெயலலிதா அரசியலில் ஒரு நீண்ட அனுபவம் பெற்றுள்ளார். மாநில அரசியல், அகில இந்திய அரசியல் ஆகிய இரண்டைப் பற்றியும், ஜெயலலிதா என்ற அரசியல்வாதிக்கு, அவரது அரசியல் கட்சிக்கு நிச்சயமாய் ஒரு பார்வை இருக்கிறது.  

ஒரு கட்டத்தில், தமிழக அரசியலில், எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, அஇஅதிமுக ஜெயலலிதா, ஜானகி பிரிவுகள் என இரண்டாக உடைந்தது. ஜானகி தலைமையிலான ஆட்சி கலைந்த பிறகு நடந்த தேர்தலில், தமிழ்நாட்டில், கருணாநிதி, மூப்பனார், ஜெயலலிதா, ஜானகி என்ற நான்கு பேர் முதல்வர் வேட்பாளர்களாகக் களத்தில் இருந்தனர்.

ஜெயலலிதா 2014ல் ஒரு கணக்கு போடுகிறார். காங்கிரஸ் நிச்சயம் தோற்றுப் போகும். இந்தியா முழுவதிலும் தமிழகத்திலும் காங்கிரஸ் எதிர்ப்பு அலை உள்ளது. ஆகவே தமிழ்நாட்டில் தானே காங்கிரஸின் முதன்மை எதிர்க்கட்சி என்ற பிம்பத்தைக் கட்டி அமைப்பதில் மிகவும் தெளிவாக உள்ளார். காங்கிரஸ் வீழ்ச்சி பாஜகவின் எழுச்சியாக நேரடியாக மாறுமா என்ற சந்தேகம்  அவருக்கும் உள்ளது.

2014 தேர்தல்களில் தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் பாஜக மற்ற கட்சிகளின் ஆதரவை நாடலாம். இது ஒரு சாத்தியப்பாடு. மற்றுமொரு சாத்தியப்பாடு, காங்கிரஸ் - பாஜக அல்லாத கட்சிகள் கணிசமான இடங்கள் பெறுவது. அப்போது, அந்தக் கட்சிகளில் ஏதாவது ஒன்றிலிருந்து பிரதமர் வரவும், அவருக்கு வெளியிலிருந்து ஆதரவு கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

ஆகவே ஜெயலலிதா, தாமே பிரதமராக வாய்ப்பு உள்ளது எனத் திட்டவட்டமாக அடித்துச் சொல்லாமல், அடுத்து அமைய உள்ள மத்திய அரசில் தமக்குப் பெரும் செல்வாக்கு இருக்கும் என்பதையே சொல்கிறார்.

பாவம் சிபிஅய் தோழர்கள். சிபிஅய் கட்சியின் முன்னாள் தேசியச் செயலாளர் தோழர் ஏ.பி.பரதன் இப்போதைய செயலாளர் தோழர் சுதாகர் ரெட்டி, தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் தா.பாண்டியன் ஜெயலலிதாவைச் சந்தித்த பிறகு, தோழர் ஏ.பி. பரதன், தங்களது கூட்டணி வெற்றி பெற்றால் ஜெயலலிதா பிரதமராகும் வாய்ப்புக்கள் இயற்கையாகவே உருவாகும் என்றார்.

மறுநாள் சிபிஎம் முறை வந்தது. தோழர்கள் பிரகாஷ்காரத்  டி.கே.ரங்கராஜன், ஜி.ராமகிருஷ்ணன் ஜெயலலிதாவைச் சந்தித்தனர். இரண்டு பேருமே தேர்தல்களை கூட்டாகச் சந்திக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்கள். (தொகுதிப் பங்கீடு பற்றிப் பேசவில்லையாம்! தொகுதிப் பங்கீடு பற்றி சிபிஅய் சிபிஎம்மால் ஜெயலலிதாவிடம் பேச முடியும் என சிபிஅய் சிபிஎம்மே நினைக்க முடியாது. ஏற்கனவே து.ராஜாவுக்கு ஒன்று டி.கே.ரங்கராஜனுக்கு ஒன்று என நாடாளுமன்ற மேலவை இடங்கள் தரப்பட்டுவிட்டன. அதையும் கவனத்தில் கொண்டே  ஜெயலலிதா முடிவு செய்வார்).

இந்த அறிவிப்பு வெளியிடப் படும்போது, ஜெயலலிதா சொன்னார்: “ஒரு விஷயத்தை நான் இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். அடுத்த பிரதமர் யார் என்று விவாதிப்பதற்கு இது சரியான நேரம் இல்லை. யார் பிரதமர் என்று எந்த ஒரு அரசியல் கட்சி விவாதிப்பதும் பொருளற்றது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே அது குறித்து விவாதிக்க முடியும்.” பாவம், அம்மாவின் விவரம் இல்லாத விசுவாசிபோல் பேசியதற்கு,  சிபிஅய் தேசிய செயலாளர் தலையில் செல்லமாக ஒரு குட்டு வைத்தார் ஜெயலலிதா. தோழர் பாண்டியன், மோதிரக் கையால் குட்டுப்பட்டது பாக்கியம் என்று சொல்லவும் கூடும். ஏனெனில் அவர், யாருடைய ஆதரவில் ஜெயலலிதா பிரதமர் ஆனாலும், அது நாட்டிற்கு நல்லது என்று சொன்னவர் அல்லவா!

 அஇஅதிமுக சிபிஎம் அறிவிப்பு நடந்த நேரத்தில் வேறொரு சுவையான விசயம் நடந்தது. ஒரு கேள்விக்கு மிகமிகப் பொருளுள்ள ஒரு பதிலை (!) ஜெயலலிதா தந்ததை, தீக்கதிர் 03.02.2014 அன்று முதல் பக்கத்தில் பிரசுரம் செய்திருந்தது.  உங்களுக்கும் நரேந்திர மோடிக்கும் நல்லுறவு இருக்கிறது என ஒரு நிருபர் கேட்க, ஜெயலலிதா, “இந்தச் செய்தியாளர் சந்திப்பு, கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கானது. இதில் வேறு கேள்வி எதற்கும் பதில் இல்லை. மற்ற பிரச்சனைகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்” எனப் பதில் சொன்னார். தேர்தலுக்கு முந்தைய உடன்பாடு பற்றித்தான் பேச்சு என்றும், தேர்தலுக்குப் பின் என்ன என்பதை தேர்தல் முடிந்த பிறகு பார்க்கலாம் என்றும் சிபிஎம் தலைவர்கள் முன்னிலையில், பளிச் எனச் சொல்கிறார். மோடி, மதவெறி பற்றி எல்லாம் அவர் எதுவும் பேசவில்லை.

அவர் தெளிவாக உள்ளார். அவர் எந்தக் காயை ஆடவும் எந்தக் காயை வெட்டவும் தயாராக இருப்பதைத் தெளிவாக்குகிறார். மோடி தொடர்பாக இதுவரை எந்த எதிர்மறைக் கருத்தையும் அவர் சொல்லாமல் இருக்கிறார். சிபிஅய், சிபிஎம் தோழர்கள் ஜெயலலிதாவிற்கு வாக்கு கேட்கும்போது, மறைமுகமாக, அதில் மோடிக்கும் வாக்கு கேட்கும் வாய்ப்பு உள்ளது என்பதை, உணர வேண்டும்.

சிபிஎம், ஜெயலலிதாவின் கொள்கை பரப்புச் செயலாளர் என்று சொல்வது, மிகையான பொருத்தமற்ற விமர்சனமா?

தோழர் மாவோ, விவரங்களிலிருந்து உண்மையைக் கண்டறியச் சொல்கிறார். (SEEK TRUTH FROM FACTS). அஇஅதிமுக தனக்கு இரண்டு தளங்கள் இருப்பதாக நாடகமாடுகிறது. (1) வறியவர் ஆதரவு (2) மாநில உரிமைகளிலிருந்து மத்திய அரசு எதிர்ப்பு. ஏற்காடு சட்டமன்ற இடைத் தேர்தலிலேயே, தோழர் ராமகிருஷ்ணன், அஇஅதிமுக நிறை வேற்றிய மக்கள் நலத் திட்டங்களுக்காக அதற்கு வாக்களிக்கக் கோரியதன் மூலம், அஇஅதிமுகவின் வறியவர் ஆதரவு நிலைக்கு வக்காலத்து வாங்கினார். மாநில உரிமைப் போராளி மத்திய அரசு எதிர்ப்பாளி என்ற பிம்பத்தை அஇஅதிமுகவிற்கு உருவாக்குவதில், சிபிஎம் எவ்வளவு கண்ணும் கருத்துமாய் உள்ளது என்பதை தீக்கதிரில் வெளிவந்துள்ள சிபிஎம் சட்டமன்றத் தலைவர் தோழர் சவுந்தர் ராஜன், துணைத் தலைவர் பாலபாரதி பேசிய விஷயங்களிலிருந்து காணலாம். 

“மனித வளக்குறியீடுகள், மாநில வளர்ச்சிக் குறியீடுகள் ஆகியவை ஒப்பீட்டு அளவில் இந்தியாவில் மிகச்சிறந்த வளர்ச்சியை தமிழகம் கண்டுள்ளது என்று ஆளுநர் அறிக்கை விவரமாகக் குறிப்பிட்டுள்ளது. ஒரு மாநிலம் வளர்ச்சிக் குறியீடுகளில் சிறப்பாகச் செயல்பட்டால், அந்த மாநிலத்தை விவசாயத் துறையில், தொழில் துறையில், கல்வித் துறையில், மகளிர் மற்றும் சமூக நலத்துறையில் எப்படி ஊக்குவிக்கலாம் என்று யோசிப்பதற்குப் பதிலாக வளர்ச்சி அடைந்த மாநிலமா, நன்றாக செயல்படுகிற மாநிலமா தண்டித்தே தீர வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டதைப் போல நிதிக் குழுவும் மத்திய அரசும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

வளர்ச்சிக் குறியீடுகளில் தமிழகம் சிறப்பாக இருக்கிறது என்ற காரணத்திற்காக நமக்கு நிதிப் பங்கீட்டை குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார்கள் என்பது ஆளுநர் உரையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எல்லாவற்றையும் தலைகீழாகப் பார்க்கிற பார்வையாகும். வளர்ச்சி குன்றிய அல்லது போதுமான வளர்ச்சியை எட்டாத மாநிலங்களுக்கு கூடுதலான சலுகையை தரவேண்டும் என்பது ஒருபக்கம் இருந்தாலும் வளர்ச்சி அடைகிற மாநிலங்களை ஊக்குவிப்பது என்பதும் அவசியமாகும். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் இது நடைபெறவில்லை, குறிப்பாக நம் தமிழகம் பல வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளது. நிதி பங்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் புதிய அரசமைப்பதில் தமிழகம் முக்கிய பங்காற்றும்; மாநிலங்களின் நலன்களைப் பாதுகாக்கிற அரசை அமைப்பதில் அதிமுகவுடன் இடதுசாரிக் கட்சிகள் இணைந்து செயல்படும்.” இவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் தோழர் அ.சவுந்தரராஜன் கூறிய விசயங்களாகும். 

பல்வேறு பிரிவு மக்களிடையே நல்லிணக்கத்தைப் பேணும் தமிழகம்தான் இந்தியாவுக்கு வழிகாட்டுகிற மாநிலமாக இருக்கிறதேயன்றி, மதவெறி அடிப்படையில் மக்களைக் கூறுபோடும் மோடியின் குஜராத் அல்ல என்று மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற துணைத் தலைவர் கே.பாலபாரதி கூறினார்.
தோழர் அ.சவுந்தரராஜன், தொழிலாளர்களின் வேலையைக் காப்பாற்ற வேண்டிய நிலைமை ஏற்படுகிறபோது, மூன்று நாட்கள் தொழிலாளர் துறை இரவு பகலாக வேலை செய்ததை தான் அருகில் இருந்து பார்த்ததாகச் சொல்கிறார். சிறப்பாக தொழிலாளர்துறை செயல்பட்டு அந்தத் தொழிலாளர்களின் வேலை பாதுகாக்கப்பட்டது என்றும் பல தொழிற்சாலைகள் இங்கே வருகின்றன என்றும் சொன்னார்.

 அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மேசை தட்டுவதில் கின்னஸ் சாதனை படைத்தவர்கள் படைப்பவர்கள் என்றால், அம்மா அம்மா பெரியம்மா நீங்கதாம்மா எல்லாம்மா என்ற பக்திப் பாடலுக்கு சவுந்தர்ராஜனும் பாலபாரதியும் எப்படி மெய்மறந்து பக்க வாத்தியம் வாசிக்கிறார்கள்!

ஆனாலும் சவுந்தர்ராஜன் அவர்களே, தமிழகத் தொழிலாளர்களால் வெறுக்கப்படும் தொழிலாளர் துறையை, உங்களால் எப்படிப் போற்றிப் புகழ முடிந்தது என உண்மையிலேயே புரியவில்லை. மேலே குறிப்பிடப்பட்டுள்ள விசயங்கள், தமது கட்சிக்கு வெளியிலிருந்து அதுவும் இடதுசாரி முகாமிலிருந்தே தமக்கு நற்சான்றிதழ்கள் வருகின்றன என்று ஜெயலலிதா காட்டிக்கொள்ளும் விதத்தில், நமது தோழர்கள் அவரது கொள்கை பரப்புச் செயலாளர்களாக எவ்வளவு சிறப்பாகப் பணியாற்றுகிறார்கள் என்பதைப் புலப்படுத்தும்.

தேர்தல் உடன்பாடுகளும் சிபிஅய், சிபிஎம் கட்சிகளின்
சந்தர்ப்பவாதத் தவறுகளின் வரலாறும்

1967ல் திமுக அண்ணாதுரை தலைமையில் தேர்தலைச் சந்தித்தபோதே, வலதுசாரி சுதந்திரா கட்சியுடன் சேர்ந்து சிபிஎம் அக்கூட்டணியில் இடம் பெற்றது. சிபிஅய் தனித்துப் போட்டியிட்டது. ராஜாஜியின் சுதந்திரா கட்சி போட்டியிட்ட 20 இடங்களில் 6 இடங்களிலும் சிபிஎம் போட்டியிட்ட 11 இடங்களில் 4 இடங்களிலும் வெற்றி பெற்றன.

திமுகவிலிருந்து எம்ஜிஆர் வெளியேறி அஇஅதிமுக உருவாக்கினார். கேப்பிடலிசம் சோசலிசம் எல்லாவற்றையும் புட்டியில் போட்டுக் குலுக்கி எடுத்து அற்புதமான அண்ணாயிசம் கண்டுபிடித்தார். அந்த நேரத்திலேயே சிபிஅய்யின் பாலதண்டாயுதம் ஊழலை லஞ்சத்தை எதிர்க்கும் எம்ஜிஆர் மீது ஒரு துரும்பு ஒரு கீறல் பட்டாலும், ஒரு திமுக மந்திரி கூட தமிழ் நாட்டில் உயிரோடு நடமாட முடியாது என்ற எச்சரிக்கையைப் பிரகடனம் செய்தார்.

எம்ஜிஆர் திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் மாயத்தேவரை நிறுத்தியபோது, அவரிடம் கொள்கையும் திட்டமும் தெளிவாக இல்லை எனச் சொல்லி தோழர் பி.சங்கரய்யாவை வேட்பாளராக நிறுத்திய சிபிஎம், எம்ஜிஆர் தோழர் பி.இராமமூர்த்தியை சந்தித்த பிறகு, தனது வேட்பாளரை விலக்கிக் கொண்டு, அஇஅதிமுகவை ஆதரித்தது. அவமானகரமான அபத்தக் களஞ்சியமான அண்ணாயிசத்தைச் சீர்செய்ய, தீக்கதிரில் 5 அல்லது 6 தொடர் கட்டுரைகள் மூலம் ஆலோசனை வழங்கினார்கள். அப்போதே, கேப்பிடலிசத்தையும் சோசலிசத்தையும் இணைப்பவரின் ஆலோசகர் வேலையை வலியச் செய்தனர்.

நெருக்கடி நிலைக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தல் 1977ல் வந்தது. அஇஅதிமுக சிபிஅய், இ.காங்கிரஸ் ஓர் அணி. திமுக, ஜனதா, சிபிஎம் வேறு அணியில் நின்றார்கள். அதிமுக 18, இ.காங்கிரஸ் 15 சிபிஅய் 3ல் வென்றன. ஜனதாவிற்கு 3ம் திமுகவிற்கு ஓரிடமும் கிடைத்தன. திமுக மீதான ஊழலை விசாரிக்க சர்க்காரியா ஆணையம் அறிவிக்கப்பட்ட பிறகும், சிபிஎம் திமுகவுடன் தேர்தலைச் சந்தித்தது.

1977லேயே சட்டமன்றத் தேர்தல்கள் வந்தன. சிபிஎம், பல்ட்டி அடித்து அஇஅதிமுக அணிக்குச் சென்றது. அதற்குப் பின்வரும் காரணம் சொன்னது. “மக்களவைத் தேர்தல் என்பது சர்வாதிகாரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் நடந்த போட்டி. ஆனால் சட்டமன்றத் தேர்தல் அப்படியான பிரச்சனையை முன் வைத்து நடக்கவில்லை.

திமுக ஆட்சி செய்த தவறுகளை 1969 ஆம் ஆண்டிலிருந்தே மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக் காட்டி வருகிறது. தவிரவும், திமுகவின் முக்கியத் தலைவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் மீது சர்க்காரியா கமிஷன் விசாரணை செய்து கொண்டிருக்கும்போது, திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்திட மார்க்சிஸ்ட்கள் உடந்தையாக இருக்க முடியாது.” நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஊழல் பிரச்னை கிடையாது! சட்டமன்றத் தேர்தலுக்கு ஜனநாயகம் பிரச்சனை கிடையாது! ஆஹா பிரமாதம்.

1980 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக இ.காங்கிரஸ் கூட்டணி வென்றது. அஇஅதிமுக ஜனதா சிபிஎம் கூட்டணி அமைத்தன. சட்ட மன்றத் தேர்தலில் அஇஅதிமுக தலைமையிலான 14 கட்சி கூட்டணியில், சிபிஅய், சிபிஎம் இடம் பெற்றன. அக்டோபர் 31, 1984ல் இந்திரா கொல்லப்பட்டார். 1984 டிசம்பர் நாடாளுமன்றத் தேர்தலில் அஇஅதிமுக காங்கிரஸ் கூட்டணி அமைந்தது. சட்டமன்றத் தேர்தலும் கூடவே நடந்தது. சிபிஅய், சிபிஎம், திமுக, ஜனதா கூட்டணியில் இருந்தன. இரண்டிலும் அஇஅதிமுக கூட்டணியே வெற்றி பெற்றது.

24.12.1987ல் எம்ஜிஆர் இறந்த பிறகு அஇ அதிமுக, ஜெயலலிதா ஜானகி அணிகளாகப் பிரிந்தது. நான்கு முதல்வர் வேட்பாளர்களோடு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் சிபிஅய் ஜெயலலிதாவுடனும் சிபிஎம் திமுக ஜனதாவுடனும் சேர்ந்தன. கருணாநிதி முதல்வரானார். 1989 நவம்பரில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுக, சிபிஅய், சிபிஎம் ஓரணியில் நின்றன.

அஇஅதிமுக, இந்திரா காங்கிரஸ் கூட்டணி நாகப்பட்டினம் தவிர அனைத்து இடங்களையும் கைப்பற்றியது. அகில இந்திய அளவில் வி.பி.சிங்கின் தேசிய முன்னணி 141 இடங்களையும் இந்திரா காங்கிரஸ் 192 இடங்களையும் பாஜக 88 இடங்களையும் கைப்பற்றின. தேசிய முன்னணி ஆட்சி அமைக்க, ஒரு பக்கம் சிபிஅய் சிபிஎம்மும், மறு பக்கம் பாஜகவும் ஆதரவு தந்தனர்.

ராஜீவ் காந்தி மே 91ல் இறந்தார். ஜூன் 91 நாடாளுமன்றத் தேர்தலில் அஇஅதிமுக இந்திரா காங்கிரஸ் கூட்டணி வென்றது. திமுக சிபிஅய், சிபிஎம் கூட்டணி தோற்றது. காங்கிரஸ் தலைமையில் நரசிம்மராவ் பிரதமராக, சிறுபான்மை அரசு, மத்தியில் 21.06.1991ல் வந்தது. 1996ல் திமுக, சிபிஅய், தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி உருவானது. சிபிஎம், மதிமுக தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றது. தோழர் சுர்ஜித் தமது கூட்டணி வென்றால் வைகோ தான் முதல்வர் என அறிவித்தார். வைகோ, சுர்ஜித்தில் பெரியாரை காண்பதாக உருகினார்.

தொங்கு நாடாளுமன்றம் வந்தது. பாஜக 154, காங்கிரஸ் 140 இடங்கள். 16.05.1996 முதல் வாஜ்பாய் 13 நாட்கள் பிரதமரானார். 01.06.1996ல் தேவகவுடா, அய்க்கிய முன்னணி பிரதமரானார். அய்மு, இடது முன்னணி ஒருங்கிணைப்பு ஏற்பட்டது.

சிபிஅய்யின் இந்திரஜித் குப்தா சதுரானன் மிஸ்ரா மத்திய அமைச்சர்கள் ஆனார்கள். சிபிஎம் வெளியில் இருந்து ஆதரிப்பது தாண்டி, ஒருங்கிணைப்பின் மூலம் நேரடியாக அல்லாத விதத்தில் ஆட்சியில் அங்கம் வகித்தது. 21 ஏப்ரல் 1997ல் குஜ்ரால் பிரதமராகி, பிறகு அந்த ஆட்சியும் அற்பாயுசில் கவிழ்ந்தது.

1998 பிப்ரவரியில் மக்களவைத் தேர்தல் வந்தது. அஇஅதிமுக, மதிமுக, பாமக, பாஜக கூட்டணி உருவானது. திமுக, தமாகாவுடன் சிபிஅய் கூட்டணி சேர்ந்தது. சிபிஎம் வடசென்னையில் மதுரையில் தனித்துப் போட்டியிட்டு, மற்ற இடங்களில் திமுக கூட்டணியை ஆதரித்தது.

பாஜக 179 காங்கிரஸ் 142 இடங்கள் பெற, பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சி அமைந்து 13 மாதங்கள் ஓடியது. 99ல் அஇஅதிமுக ஆதரவை வாபஸ் வாங்க, மீண்டும் தேர்தல் வந்தது. அஇஅதிமுக, காங்கிரஸ் கூட்டணி அமைக்க, அதில் சிபிஅய், சிபிஎம் சேர்ந்தனர். திமுக, பாஜக, மதிமுக, ராஜீவ் காங்கிரஸ், பாமக கூட்டணி அமைத்தனர். மூன்றாவது அணியாக தமாக விடுதலைச் சிறுத்தைகள் புதிய தமிழகம் களம் இறங்கினர். தமிழ்நாட்டில் பாஜக, திமுக கூட்டணி 24 இடங்கள் வென்றன. 182 இடங்கள் வென்று, பாஜக “இந்தியா ஒளி வீசும்” ஆட்சி நடத்தியது.

2004ல் பாஜக, அஇஅதிமுக கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தது. திமுக காங்கிரஸ் கூட்டணியில் சிபிஅய், சிபிஎம் இடம் பெற்று எல்லா இடங்களையும் வென்றனர். 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், சிபிஅய், சிபிஎம் கூட்டணி வென்று கருணாநிதி முதல்வரானார். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் 39ல் 27 இடங்களையும், புதுச்சேரி தொகுதியையும் வென்றனர். அஇஅதிமுக, மதிமுக பாமக, சிபிஅய், சிபிஎம் மூன்றாம் அணியாய் நின்றனர். அஇஅதிமுக 9 இடங்கள், மதிமுக, இகக, இககமா தலா 1 இடமும் வெற்றி பெற்றன. பாமக ஓரிடம் கூட வெற்றி பெறவில்லை.

படிக்கும் போதே மூச்சு வாங்குகிறதா? சிபிஅய், சிபிஎம் கட்சிகள் நோகாமல், இந்தத் தாவல்களை, பல்ட்டிகளை, பாய்ச்சல்களை நடத்திவிட்டனர். இந்தப் பின்னணியில் சிபிஅய், சிபிஎம் ஜெயலலிதாவோடு 2014 தேர்தலுக்குக் கூட்டு சேர்வதைக் காண வேண்டும். புரட்சி, சமூக மாற்றம் என்பவற்றிற்கும் சிபிஅய் சிபிஎம் தேர்தல் தந்திரங்களுக்கும், எந்த சம்பந்தமும் கிடையாது என்பது தெளிவு.

தேர்தல் அல்லாத நேரங்களில் மற்றும் அதன் தொடர்ச்சியாக தேர்தல்களில், புரட்சிகர இடதுசாரி கட்சியின் நிலைப்பாடு எப்படி அமைய வேண்டும் என இகக (மாலெ) 9ஆவது காங்கிரஸ் ஆவணம் பின்வருமாறு சொல்கிறது.

‘நாம், சங்பரிவாரின் மதவெறி அரசியலில் இருந்து மட்டுமின்றி, கட்டற்ற அதிகாரம் மற்றும் சூறையாடலுக்காக பசியுடன் காத்திருக்கிற பெரும்தொழில் குழும உலகில் இருந்தும் இன்று மோடி தமது சக்தியை பெறுகிறார் எனப் புரிந்துகொள்ளும்போது, மோடி மாதிரிக்கெதிரான போராட்டத்தை வெறுமனே மதவெறி எதிர் மதச்சார்பின்மை வழிகளில் தொடர முடியாது என்பதை அங்கீகரித்தாக வேண்டும்; மாறாக அது உழைக்கும் மக்களின் பெரும்தொழில் குழும எதிர்ப்பு மற்றும் ஜனநாயகத்திற்கான தொடர் போராட்டங்களிலிருந்து பலம் பெற வேண்டும்.

மோடி முத்திரை அரசியலோடு பிரிக்க முடியாதபடி பிணைந்துள்ள மதவாத பயங்கரம், பெரும் தொழில்குழும மூலதனம், அரசு ஒடுக்குமுறை, ஏகாதிபத்தியத்தின் பயங்கரவாதத்திற்கெதிரான போரின் ஒரு பகுதியாக இஸ்லாமியர்களை குற்றவாளிகளாகக் காட்டுவது ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்களை திறம்பட இணைப்பதன் மூலம்தான் மோடி மாதிரியை எதிர்கொள்ள முடியும். மக்களின்  ஓர் அதிஉயர்ந்தபட்ச அறுதியிடலும் இடதுசாரி ஜனநாயக சக்திகளின் சக்திவாய்ந்த தலையீடும் மட்டுமே, நாடு  ஒட்டுமொத்தமாக பெரும்தொழில் குழும - பாசிச கையகப்படுத்தல் ஆபத்துக்கு ஆளாவதில் இருந்து காப்பாற்ற முடியும்’.

‘பெரும்தொழில்குழும-பாசிச தாக்குதலை எதிர்ப்பது, காங்கிரஸ் மற்றும் பாஜகவை எதிர்கொள்வது என்ற மய்ய அரசியல் கடமை, வெவ்வேறு மாநிலங்களில் நிலவுகிற வேறு வேறு வகைப்பட்ட அரசியல் சூழல்கள் மற்றும் நிலைமைகளைச் சார்ந்து எழுகிற அந்தந்த மாநிலங்களுக்கு குறிப்பான அரசியல் இலக்குகள் மற்றும் முன்னுரிமைகளோடு இணைக்கப்பட வேண்டும். பெரும்பாலான மாநில அரசாங்கங்கள் பாஜக/தேஜமு அல்லது காங்கிரஸ்/அய்முகூ ஆகியவற்றால் நடத்தப்படுகின்றன.

ஆக இந்த இரண்டு கூட்டணிகளுமே தேசிய அளவில் நமது பிரதான இலக்குகளாகும். இந்த இரண்டு கூட்டணிகளோடும் நேரடியாகத் தொடர்பில்லாத கட்சிகளால் நடத்தப்படுகிற மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ், ஒடிசாவின் பிஜூ  ஜனதா தளம், உத்தரப்பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி தமிழ் நாட்டின் அஇஅதிமுக போன்ற அரசாங்கங்கள் சமஅளவுக்கு மோசமான மக்கள்விரோத, ஜனநாயக விரோத வரலாறு உடையவர்கள். ஆகவே நாம் இவர்களையும் ஊக்கத்துடன் எதிர்த்திட வேண்டும்’.

தமிழ்நாட்டில் மோடியின் திருப்பணியை ஜெயலலிதாவே மேற்கொள்வதால் கம்யூனிஸ்ட்களின் முதன்மையான கடமை ஜெயலலிதாவை எதிர்ப்பதே ஆகும். அதற்காக, போராடுகிற இடதுசாரி ஜனநாயக தேசபக்த சக்திகளிடம், உழைக்கும் மக்களிடம் துணிந்தும், உரிமையோடும், ஆதரவு கேட்கவேண்டும். பாட்டாளி வர்க்க அரசியலின் செங்கொடியின் சுதந்திரத்தை உத்தரவாதம் செய்வதன் மூலம் வருங்கால தமிழகத்திற்கு நம்பிக்கை ஊட்டவேண்டும்.

புரட்சிகர இளைஞர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட முதல் மாநாடு

புரட்சிகர இளைஞர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட முதல் மாநாடு திருபெரும்புதூரில் 08.02.2014ல் நடைபெற்றது. மாநாட்டுக்கு மாவட்ட அமைப்பாளர் தோழர் ராஜகுரு தலைமை தாங்கினார். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி சிறப்புரையாற்றினார்.

கோவை மாவட்ட ஏஅய்சிசிடியு சிறப்புத் தலைவர் தோழர் த.சந்திரன், புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலாளர் தோழர் பாரதி, சிபிஅய் (எம்எல்) மாநிலக்குழு உறுப்பினர் தோழர் சொ.இரணியப்பன், ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் கே.பழனிவேல், கடலூர் மாவட்ட ஆர்ஒய்எவின் அமைப்பாளர் தோழர் தனவேல், திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு, கோவை மாவட்ட அமைப்பாளர் தோழர் இராமச்சந்திரன், அகில இந்திய மாணவர் கழக மாநிலச் செயலாளர் தோழர் சீதா உரையாற்றினர். ஹூண்டாய் சங்க முன்னணித் தொழிலாளர் தோழர் ராஜவேலு கொடியேற்றினார்.

தைரியமாகச் சொல், இது குடியரசுதானா....?

தாலிக்குத் தங்கம், புரட்சித்தலைவியின் புரட்சிகரமான திட்டம் என்று ஜெயலலிதா ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஜெயலலிதா வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் புள்ளி விவரங்களும் சொல்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் சொல்கிறார்: ‘40 பவுன் நகை போச்சு. பொழப்புக்குன்னு இருந்த ஆட்டோ போச்சு. இப்பத்தான் காசுக்கு வேற வழியில்லாததால தொழிலுக்கு (மீன்பிடி) போறாக... இப்ப வாரத்துக்கு ஒரு நாள் குடிக்கிறாக...’ அவர் சொன்னதை கேட்டுக்கொண்டிருந்த இன்னொரு பெண், ‘எங்க வீட்டுலயுந்தான் 30 பவுன் நகை போச்சு... வீடு போச்சு’ என்றார்.

தமிழ்நாட்டில் பல பெண்கள் இதேபோன்ற கதை சொல்வார்கள். இப்படி டாஸ்மாக் கடைக்கு வந்து சேர்ந்த தங்கத்துக்கும் ஜெயலலிதா புள்ளிவிவரங்கள் தர வேண்டும். ‘எங்களுக்கு இலவசங்கள் எதுவும் வேண்டாம், இந்த சாராயக் கடைகளை ஒழித்தால் போதும்’ என்று இன்னொரு பெண் சொன்னார். இலவசத்துக்கும் சாராயக் கடைக்கும் என்ன முடிச்சு போடுகிறீர்கள் என்று கேட்டபோது, ‘சாராயக் கடையில் வரும் வருமானத்தில்தான் இலவசங்கள் தருவதாக முதலமைச்சர் சொல்கிறார், அதனால் அது வேண்டாம்’ என்றார். இலவசங்கள் வேண்டாம் என்று சொல்ல தமிழக மக்களுக்கு விதவிதமான வாழ்வாதார காரணங்கள் இருக்கின்றன.

தாலிக்கு தங்கம் திட்டத்தில் 2011 - 2012ல் 1,64,552 பேர் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 1,63,228 பேர் பயன்பெற்றனர். 2011 - 2012ல் டாஸ்மாக் விற்பனை ரூ.18081 கோடியே 16 லட்சம். இந்த நிதியாண்டில் தாலிக்கு தங்கம் திட்டத்துக்கு செலவிடப்பட்ட தொகை வெறும் ரூ.620 கோடி.
தாலிக்கு தங்கம் திட்டத்தில் 2012 - 2013 நிதியாண்டில் 1,66,687 பேர் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 1,19,684 பேர் பயன்பெற்றனர். இதே நிதியாண்டில் டாஸ்மாக் விற்பனை ரூ.21680 கோடியே 67 லட்சம். தாலிக்கு தங்கம் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.701 கோடியில் ரூ.589 கோடிதான் செலவிடப்பட்டது.

தாலிக்கு தங்கம் திட்டத்துக்கு 2013 - 2014க்கும் ரூ.701 கோடிதான் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியாண்டின் டாஸ்மாக் வருமான விவரம் மார்ச் மாதத்துக்குப் பிறகு தெரியவரும்.

ஜெயலலிதா அரசு தமிழக மக்களுக்கு தாலிக்கு தங்கமாக தருவதற்கும் தங்கத்துக்கு சாராயமாக தருவதற்கும் இடையில் சில பத்தாயிரம் கோடி ரூபாய் வித்தியாசம் உள்ளது.

‘பொன்மனச் செம்மல், இதயதெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர்’ என்று அழைக்கப்படுகிற எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சி யில் 1983ல் அரசு சாராயம் கொள்முதல் செய்ய டாஸ்மாக் உருவாக்கப்பட்டது. 2003 நவம்பரில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சாராய விற்பனையை தமிழக அரசு எடுத்துக் கொண்டது. 2003 - 2004ல் ரூ.3,639 கோடியே 92 லட்சமாக இருந்த டாஸ்மாக் விற்பனை 2012 - 2013ல் ரூ.21,680 கோடியே 67 லட்சமாக வளர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 700% வளர்ச்சி. 2003 முதல் 2012 வரை ஒவ்வோர் ஆண்டும் ரூ.1200 கோடி முதல் ரூ.3100 கோடி வரை உயர்வு ஏற்பட்டுள்ளது. இடையில் எந்த கட்டத்திலும் விற்பனையில் பின்னடைவே இல்லை. மொத்தமுள்ள 6,837 கடைகளில், 4,631 கடைகளில் மட்டுமே அரசு அனுமதியு டன் பார்கள் இயங்குகின்றன. உரிமம் இன்றி செயல்படும் இந்த பார்களை முறைப்படுத்தினால் அரசுக்கு இன்னும் பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வரும்.

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி - என
மேவிய யாறு பலவோட - திரு
மேனி செழித்த தமிழ்நாடு!

பாரதிக்குத்தான் எவ்வளவு பெருமிதம். இந்த எல்லா ஆறுகளும் இன்று வற்றிவிட்டாலும் வற்றாத ஜீவநதியான டாஸ்மாக் மூலம் தமிழ்நாட்டின் பெருமையை கட்டிக்காக்கிறார் ஜெயலலிதா.

தமிழ்நாட்டில் 11 அயல்நாட்டு மதுபான உற்பத்தி நிறுவனங்கள், 6 பீர் உற்பத்தி நிறுவனங்கள், ஒரு ஒயின் உற்பத்தி நிறுவனம் இருப்பதாக தமிழக அரசு விவரங்கள் தருகிறது. இந்த நிறுவனங்கள் டாஸ்மாக் கடைகளுக்கு சாராயம் விற்கின்றன. அரசின் நாகரிக வார்த்தைகளில் சொல்வதென்றால், அரசு இந்த நிறுவனங்களிடம் இருந்து சாராயம்  ‘கொள்முதல்’ செய்கிறது. இவை, சசிகலாவின் மிடாஸ் உட்பட அஇஅதிமுக மற்றும் திமுக பிரமுகர்களால் நடத்தப்படுபவை.

இந்த நிறுவனங்களிடம் இருந்து சாராயம் வாங்க மக்கள் பணம்தான் தரப்படுகிறது. தமிழ்க் குடிமக்கள் அதை வாங்கிக் குடித்து மீண்டும் அரசுக்கு பணம் சேர்க்கிறார்கள். ஆக, டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு வருமானம் வருவதாகச் சொல்வது பொருந்தாதது. பொய்யானது. விலையில்லா பொருட்கள் திட்டங்களுக்கும் டாஸ்மாக் வருமானத்துக்கும் சம்பந்தம் இல்லை. அரசு மீண்டும் சாராயம் கொள்முதல் செய்ய வேண்டும். அதற்கு ஆகும் பெரும் செலவு போக ஊழியர் ஊதியம் தர வேண்டும். நிர்வாகச் செலவுகளை ஈடுகட்ட வேண்டும். கூடுதல் இருப்பு வாங்கி வைத்து பழையவற்றை விற்கும் நடைமுறையும் இருப்பு தேங்கியிருப்பதும் டாஸ்மாக் கடைகளில் சாதாரணமான நிகழ்வுகளே. இந்த வகையில் மட்டும் தமிழக அரசுக்கு ரூ.2,465 கோடி நட்டம் என்று சொல்லப்படுகிறது.

உண்மையில் தமிழக அரசு சாராய உற்பத்தி நிறுவனங்களின் சந்தை முகவராக செயல்படுகிறது. 2011 ஜ÷லை, 2012 செப்டம்பர் என இரண்டு முறை சாராய விலை ஏற்றப்பட்டதும் தனியார் நிறுவனங்கள் கூடுதல் விலை கேட்டதால்தான். மது வகை,  அவற்றை விற்கும் நிறுவனங்கள் பட்டியல், நிறுவனங்கள் வாரியாக விற்கப்படும் அளவு என பல விவரங்கள் சொல்லும் டாஸ்மாக் இணையதளத்தில் கொள்முதல் விலை பற்றிய விவரம் மட்டும் இல்லை. தனியார் நிறுவனங்கள் தங்கள் சொந்தக் கடைகள், தங்கள் சொந்த ஊழியர்கள், தங்கள் சொந்த விற்பனை என செய்ய வேண்டிய வேலைகளை அரசே செய்து தருகிறது. லாபம் பார்ப்பது தனி யார் நிறுவனங்கள்தானே தவிர அரசு அல்ல. மொத்த இயக்கப்போக்கிலும் அரசுக்கு நிற்பது வெகு சொற்பமே. உதாரணமாக, ரூ.18,081 கோடி விற்பனை நடந்த ஆண்டில், அரசுக்கு  ரூ.1,400 கோடி லாபம் என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சொல்கிறார். (இதற்குத்தானா ஆசைப்பட்டாய் ஏழைத் தமிழா....?)

பால் உற்பத்தியாளர்கள் கூடுதல் கொள் முதல் விலை கேட்டுப் போராடுகிறார்கள். பிறகு போராட்டத்தை விலக்கிக் கொள்கிறார்கள். போராட்டத்தை விலக்கிக் கொள்ளக் காரணம் ஆளும் கட்சிக்காரர்களின் மிரட்டல் என்கிறார்கள். கோமாரி நோயால் பாதிக்கப்படக் கூடிய ஆடு மாடுகளை தமிழ்நாட்டின் வறிய பெண்களுக்கு விலையில்லாமல் வழங்குவதை வெண்மைப் புரட்சி என்று ஜெயலலிதா சொல்கிறார்.
பால் தேவைக்கு அரசு நிறுவனமான ஆவின் நிறுவனம் வழங்கும் பால் போதாமல் தனியார் நிறுவன பால் பாக்கெட்டுகளை மக்கள் வாங்குகிறார்கள்.

 2013 டிசம்பரில் கொள்முதல்  விலையை உயர்த்தியதால் தனியார் நிறுவன பால் பாக்கெட்டுகள் விலை ஏறியது. ஏற்கனவே, அஇஅதிமுக ஆட்சி அமைந்தவுடன் தமிழக மக்களுக்கு தரப்பட்ட முதல் பரிசான, பால் விலை உயர்வையே இன்னும் சமாளிக்க முடியாமல் திண்டாடும்போது, இன்னும் ஓர் விலைஉயர்வு திண்டாட வைத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் சாராய உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களிடம் இருந்தும் அரசு சாராயம் வாங்கும்போது, ஏன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பால் உற்பத்தியாளர்களும் உற்பத்தி செய்யும் ஒன்றரை கோடி லிட்டர் பாலையும் வாங்கிவிட முடியாது? அப்படி வாங்கினால்தானே அதை வெண்மைப் புரட்சி என்று சொல்ல முடியும்? அய்ஸ்க்ரீம் வாங்க முப்பது ரூபாய் செலவழிப்பவர்கள் அரிசி வாங்க செலவழிக்கக் கூடாதா என்று சிதம்பரம் கேட்டதைப் போல், சாராயம் வாங்க ரூ.90 செலவழிப்பவர்கள், பால் வாங்க ரூ.20 செலவழிக்கக் கூடாதா என்று ஜெயலலிதா கேட்டாலும் வியப்படைய ஏதுமில்லை. இருவரும் நவதாராளவாதக் கொள்கைளுக்குச் சொந்தக்காரர்களே. எப்படியாயினும், தமிழ் நாட்டில் இன்றைய நிலைமைகளில் சாராயப் புரட்சி தவிர வேறேதும் நடப்பதாக தமிழக மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

தாலிக்கு தங்கம் திட்டம், ஜெயலலிதா சொல்கிற வெண்மைப் புரட்சி ஆகியவற்றை டாஸ்மாக் ஓட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் வெளிப்படுகிற படுபாதகமான நிலைமைகள் தான் ஜெயலலிதா அரசாங்கம் நிறைவேற்றுவதாகச் சொல்லப்படுகிற மற்ற ‘மக்கள்நலத்’ திட்டங்களுக்கும் பொருந்தும்.

பேருந்துக் கட்டண உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என அவர் தந்திருக்கிற தொடர்ச்சியான அதிர்ச்சிகளின் தாக்கத்தால் வேதனை மேலிட்ட தமிழக மக்களுக்கு, சாராயம் அதிர்ச்சி நிவாரணி ஆகாது.
அஇஅதிமுக ஆட்சியாளர்களின் இந்த விஷ விளையாட்டில், அரசுக்கும் ‘தமிழ்க்குடி’ மக்களுக்கும் இடையில் இசகுபிசகாகச் சிக்கிக் கொண்டவர்கள் டாஸ்மாக் ஊழியர்கள்.

செங் கொடி சங்கங்களில் இருக்கிறார்கள். காலமுறை ஊதியம் இல்லை, வார விடுமுறை இல்லை, 8 மணிநேர வேலை இல்லை, மிகைநேரப் பணிக்கு மிகை ஊதியம் இல்லை, அனைத்துக்கும் மேல் பணியிடத்தில் பாதுகாப்பு இல்லவே இல்லை, அதிகாரிகளின், அரசியல்வாதிகளின் தொல்லை, மிரட்டல் என அவர்கள் துன்பப்பட்டியல் முடிவின்றி நீள்கிறது. 2003ல் 36,000 ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டார்கள்.

இப்போது அவர்கள் எண்ணிக்கை 29,000 என குறைந்து உள்ளது. விற்பனையும் கடைகளின் எண்ணிக் கையும் அதிகரித்ததற்கு ஏற்ப ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. சமீபத்தில் குன்னூரில் தங்கள் மாநில மாநாட்டை நடத்திய டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடத்தில் ஏற்படுகிற மனஉளைச்சலால் இதுவரை தமிழகம் முழுவதும் 4,000 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகச் சொல்லியுள்ளனர்.

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்கிறீர்களே, அந்த வேலைவாய்ப்பை நம்பி இருக்கும் அந்த 29,000 ஊழியர் குடும்பம் நிலை என்ன என்று ஜெயலலிதா அக்கறை கொண்ட வர் போல் கேட்கலாம். அந்த 6,837 கடைகளையும் அரசின் மலிவு விலை உணவகங்களாக மாற்றி அவர்களுக்கு அங்கேயே கவுரவமான வேலை தரலாம்.

பிப்ரவரி 7 அன்று காஞ்சிபுரம் மாவட்ட டாஸ்மாக் விற்பனை இலக்கை தாண்டியது. பிப்ரவரி 8 அன்று வண்டலூரில் மோடி கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. ஆளும் வர்க்கக் கட்சிகளின் பெரிய கூட்டங்கள் நடக்கும்போது டாஸ்மாக் விற்பனை அமோகமாக நடக்கிறது. மதுவிலக்கு வேண்டும் என்று மேடைக்கு மேடை முழங்குகிற பாட்டாளி மக்கள் கட்சி கூட்டங்கள் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்கள் இன்னும் ஒரு படி மேலேபோய், டாஸ்மாக் கடைக்கு போன கையோடு அருகில் இருக்கிற தலித் கிராமத்துக்குச் சென்று தாக்குதலும் நடத்திவிடுவார்கள்.

இதுபோன்ற கூட்டங்கள் தவிர பண்டிகை நாட்களில் டாஸ்மாக் விற்பனை இலக்கை தாண்டுகிறது. சாதாரண நாட்களிலும் இலக்கு எட்டப்படுகிறது. தமிழ்நாட்டில் தொய்வின்றி நடக்கும் ஒரே விற்பனை டாஸ்மாக் விற்பனை. கரும்புக்கும் நெல்லுக்கும் கூடுதல் கொள்முதல் விலை கேட்டு விவசாயிகள் போராட்டங்கள் நடத்துவதுபோல், தங்கள் நிறுவன சாராயத்தை  அரசு வாங்கவில்லை என்று சிலர் நீதிமன்றக் கதவுகளை தட்டுவது வரை டாஸ்மாக் விற்பனை பொறுத்தவரை தமிழ்நாட்டில் ‘குடி’யரசு தழைத்தோங்குகிறது.

தோளில் இருந்து சரிகிற சிவப்புத்துண்டை சரிசெய்துகொண்டே அந்தத் தோழர் சொன்னார்: ‘டாஸ்மாக் கடை இல்லை என்றால் நமது ஆண்கள் சாராயம் குடிக்க கேரளாவுக்கும் ஆந்திராவுக்கும் செல்வார்கள். கள்ளச்சாராயம் பெருகிவிடும்’. ‘தமிழ்க்குடிமக்கள்’, பிற மாநிலங்களை நம்பியிருக்காமல் சொந்தக் காலில் நிற்க வைப்பதுதான் எவ்வளவு பெருமைமிகு செயல்! ‘தமிழ்க்குடிமக்கள்’ மீது, அரசுக்கு இருப்பதாகச் சொல்லப்படும் அக்கறையை எப்படித்தான் மெச்சுவது!

சிக்கன் ஒரு துண்டு கூட எடுத்துவிட்டார் என்பதற்காக தனது நண்பனையே அடித்துக் கொன்றார் ஒரு ‘குடி’மகன். குடித்துவிட்டு துன்புறுத்திய கணவனை மனைவி, தந்தையை மகன், அண்ணனை தம்பி, மகனை தாய் அல்லது தந்தை கொலை செய்த செய்திகளும் வந்து கொண்டு இருக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது, கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்ற குற்றச்சாட்டுக்கு பதில் சொன்ன ஜெயலலிதா, உணர்ச்சிப்பெருக்கில் கொலைகள் நடப்பதை தடுக்க முடியாது என்று சொன்னார். மேலே குறிப்பிடப்பட்ட கொலைகளுக்கு முழுக்கமுழுக்க தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் ஏற்படுத்திய உணர்ச்சிப்பெருக்குதான் காரணம். எனக்கு குடும்பம் இல்லை, தமிழக மக்கள்தான் எனது குடும்பம் என்று ஜெயலலிதா சொல்கிறார். ஜெயலலிதா என்கிற முதலமைச்சர் தனது ஆட்சியில் இருக்கும் மக்களாகிய குடும்பத்துக்கு சாராயம் கொடுத்துத்தான் சீரழிப்பாரா?

தனக்குத் தேவையான சீனப் பொருட்களுக்கு மிகக் கூடுதல் விலை கொடுக்க நேர்ந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், சீனத்தை, கிழக்கிந்திய கம்பெனி உற்பத்தி செய்த அபினியால் அடித்தது. சீனத்துக்குள் அபினியை விற்று சீன மக்களை அபினி மயக்கத்தில் தள்ளியது. போதைக்கு அடிமையாகி, தங்களிடம் இருந்த வெள்ளியை, தங்கத்தை விற்று, அடகு வைத்து, கடன்பட்டு, முற்றிலும் திசை மறந்தவர்களாக அவர்களை மாற்றியது. இந்தியாவில் இருந்த தனது படைகள் கொண்டு, சீன கடலோரப் பகுதிகளை ஆக்கிரமித்து தனது வர்த்தகத்துக்கு பயன்படுத்திக் கொண்டது. ஆயினும் சீன மக்கள் நிரந்தரமாக அபினி மயக்கத்திலேயே இருந்துவிடவில்லை. பிறிதொரு நாள், கம்யூனிஸ்டுகள் தலைமையில் ஏகாதிபத்தியத்தை விரட்டியடித்தார்கள்.

 ஜெயலலிதாவும் தமிழக மக்களை நீண்ட காலத்துக்கு டாஸ்மாக் மயக்கத்தில் ஆழ்த்தி வைக்க முடியாது. வாக்களித்த மக்களுக்கு விஷமளித்து, அவர்கள் துன்பத்தில் சாவதை வேடிக்கைப் பார்க்கும் அஇஅதிமுகவுக்கு தக்க பாடம் தர காலம் நெருங்குகிறது.

அலைக்கற்றை ஏலம் 2014: இது முகேஷ் அம்பானி ஸ்பெஷல்

முகேஷ் அம்பானிதான் சென்ற ஆண்டிலும் இந்தியாவின் முதல் பணக்காரர். வேறு யார்தான் அவர் இடத்தைப் பிடிக்க முடியும்? அடுத்த ஒன்பது பணக்காரர்களும் இதற்கு முன்பு இருந்தவர்களேதான். இவர்கள் இடகளையும் வேறு யார் பிடிக்க முடியும்? இந்தியாவின் மத்திய மாநில அரசாங்கங்கள் அவர்களுக்காகவே இயங்கும்போது அவர்கள் பணக்காரர்களாக தொடர்வதை எப்படி தடுக்க முடியும்?

முகேஷ் அம்பானி என்ன விரும்புகிறாரோ அதற்கேற்ப அமைச்சர்கள், அதிகாரிகள் மாறுகிறார்கள். இயற்கை வளமான இயற்கை எரி வாயுவுக்கு அவர் என்ன விலை சொல்கிறாரோ அதை நிர்ணயிக்கிறார்கள். அவர் மகன் கார் ஓட்டி விபத்து நடந்தால் விபத்து நடக்கவே இல்லை என்று அனைவரும் ஒன்று சேர்ந்து சொல்கிறார்கள். அலைக்கற்றை ஏலம் அவர் விருப்பப்படி நடக்கிறது. ஊழல் சுட்டுவிரல்கள் நீட்டப்பட்டவர்கள் பக்கமே மீண்டும் மீண்டும் நீட்டப்பட்டாலும் அவர் பக்கம் மட்டும் நீட்டப்படுவதே இல்லை. எல்லாம் அவர் செயலாக இருக்கிறது. அதனால் அவர் இந்தியாவின் முதல் பணக்காரராக இருப்பார்.

இப்போது இன்னும் பெரிய பணக்காரராக மாறுவதற்கான இன்னுமொரு வாய்ப்பை அவர் எடுத்துக்கொண்டுள்ளார். 2014ஆம் ஆண்டுக்கான அலைக்கற்றை ஏலம் ரூ.54,600 கோடி வருமானத்தை அரசுக்கு கொண்டு வந்துள்ளது. இந்தப் பணத்தில் உடனடியாக அரசின் கைகளுக்கு ரூ.15,000 கோடி வரும். ஏலம் எடுத்தவர்கள் மீதி பணத்தை 13 ஆண்டுகளில் தந்து விடுவார்கள்.

மூன்றில் ஒரு பங்கு பணம் மட்டும் தருபவர்களுக்கு மூன்றில் ஒரு பங்கு அலைக்கற்றை தரப்படும் என்று நாம் தவறாக நினைத்துவிடக் கூடாது. அது முழுவதுமாகத்தான் தரப்பட்டு விடும். அதை பயன்படுத்தி அவர்கள் முழு லாபம் பார்ப்பார்கள். ஆனால் அரசுக்கு மட்டும் மெல்லமெல்ல தவணை முறையில் பாக்கியை தருவார்கள். இந்த கனவான்களில் ஒருவராக முகேஷ் அம்பானி இருப்பார் என்றால் இன்னும் சில ஆண்டுகளில் அவர் இன்னும் கூடுதல் பணக்காரர்தானே ஆவார்?

முகேஷ் அம்பானி போன்றவர்கள் கூடுதல் பணக்காரர்கள் ஆவதற்கு வழிசெய்வதை மறைக்க கபில் சிபல் இந்த முறை முயற்சி எடுக்கவில்லை. ரூ.1.76 லட்சம் கோடி ஊழலே நடக்கவில்லை, அரசுக்கு இழப்பே இல்லை என்றவர், பார்த்தீர்களா, நாங்கள் அலைக்கற்றை விலையைக் குறைத்ததால்தான் அரசு எதிர் பார்த்த ரூ.40,000 கோடியை விடக் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது என்கிறார். என்ன ஏமாற்று தர்க்கம் இது? அலைக்கற்றை ஏலமதிப்பும், அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணமும் முன்பு இருந்ததை விட மிகக் குறைவாக  நிர்ணயிக்கப்பட்டுள்ளபோதே, எதிர்ப்பார்த்ததை விட கூடுதல் வருமானம் என்றால், 2008ல் கூடுதல் வருமானம் வந்திருக்க வேண்டும், அது வரவில்லை, நட்டம் என்பதுதானே உண்மை?

அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணம் பொறுத்தவரை, இதற்கு முன்பு, பயன்பாட்டுக்கு ஏற்ப, மொத்த வருமானத்தில் 3% முதல் 8% என இருந்தது. இப்போது, பயன்பாடு கூடுலாகவோ, குறைவாகவோ இருந்தாலும், அதாவது வருமானம் கூடுதலாக இருந்தாலும், அது 5% என நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. அதாவது பெரிய மீனும் சின்ன மீனும் சரிசமமாக சண்டை போடும். இதிலும், இந்த முறைப்படுத்துதல் இந்த ஆண்டு வாங்கப்படும் உரிமங்களுக்குத்தானே தவிர, இதற்கு முன்பு வாங்கப் பட்ட உரிமங்களுக்கு அல்ல. அவை பழைய விதிகள் அடிப்படையிலேயே பயன்பாட்டு கட்டணம் செலுத்தும். (கூடுதல் சலுகைகள் பெற கூடுதல் இணைப்புக்கள் இருப்பதாக கணக்குக் காட்டுபவர்கள், வருமானத்தைக் குறைத்துக் காட்டி பயன்பாட்டு கட்டணத்தை குறைத்துச் செலுத்துவது வேறு கதை).

ஏன் அப்படி? ஏனென்றால், 2010ல், 1% பயன்பாட்டு கட்டணம் என்று நிர்ணயிக்கப்பட்ட, அகன்றவரிசை அலைக்கற்றை வாங்கிய இன்ஃபோடெல் நிறுவனத்தை வாங்கியவர் முகேஷ் அம்பானி. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்தான் இது வரை தொலை தொடர்பு தொழில் செய்து வந்தது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு இப்போது சொந்தமாகிவிட்ட அந்த அலைக்கற்றையை இன்னும் அவர்  பயன்படுத்தவில்லை. இனிதான் பயன்படுத்தப் போகிறார். வெளிப்படையாக நடத்தப்பட்ட ஏலத்தில் பங்கேற்காமலேயே கொள்ளை லாபம் கொழிக்கும் தொலைதொடர்பு சந்தைக்குள் நுழையப் போகிறார். இப்போது  குறைக்கப்பட்ட விலையில் வாங்கியுள்ள அலைக்கற்றைக்கு, எவ்வளவு கூடுதலாக பயன்படுத்தினாலும் 5% என குறைவாகவும், முன்பு பின்கதவு வழியாக வாங்கிய அலைக்கற்றைக்கு, எவ்வளவு கூடுதலாக பயன்படுத்தினாலும் 1% என இன்னும் குறைவாகவும் பயன்பாட்டு கட்டணம் செலுத்துவார். சென்ற ஆண்டு நடந்த அலைக்கற்றை ஏலத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால், அவர் எதிர்ப்பார்த்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படவில்லை. அதாவது உரிமக் கட்டணம், உபயோகக் கட்டணம் ஆகியவற்றை அவர் எதிர்ப்பார்த்ததுபோல், அரசு குறைவாக மாற்றியமைக்கவில்லை.

முகேஷ் அம்பானி, ஸ்பெக்ட்ரம் வாங்கிய இன்ஃபோடெல் நிறுவனத்தை வாங்கியது விதிகளுக்குப் புறம்பானது என்றும் அதனால் அரசின் கருவூலத்துக்கு ரூ.4,800 கோடி இழப்பு என்றும் மத்திய தணிக்கையாளர் குற்றம் சாட்டியுள்ளார். அலைக்கற்றை வாங்கிய ஒரு நிறுவனம் அலைக்கற்றை வாங்கிய மூன்று ஆண்டுகளுக்கு தனது பங்குகளை விற்கக் கூடாது என்ற விதியின் எல்லையில் இருந்து அகன்ற வரிசை அலைக்கற்றை உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த ஓட்டையை பயன்படுத்தி இன்ஃபோடெல் நிறுவனத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியொ நிறுவனம் வாங்கியதாகவும் சொல்கிறார்.

தனது ஆண்டு வருமானத்தை விட 1500 மடங்கு கூடுதலாக இன்ஃபோடெல் நிறுவனம் ஏலக் கட்டணம் செலுத்தியது எப்படி என்று கேள்வி எழுப்புகிறார்.
மத்திய தணிக்கையாளரின் கேள்விகளுக்கு ரிலையன்ஸ் ஜியோ அதிகாரிகள் ஒப்புக்கு பதில் சொல்ல, முகேஷ் அம்பானி அதைக் கடந்து போய்விட்டார்.

அடுத்தச் சுற்று அலைக்கற்றை ஏலம், அலைக்கற்றை ஊழலில் புதிதாக ஜாஃபர் சேட், கனிமொழி, சண்முகநாதன் உரையாடல் கள் கொண்ட ஒலிநாடாக்கள் என வேறுவேறு மேகங்கள் சூழ்ந்துவிட்டன. வோல்டாஸ் நிறுவன நிலமாற்றம் பற்றிய பிரச்சனை மீண்டும் எழுந்தாலும் அது கனிமொழியைத்தான் சுற்றியடிக்கிறதே தவிர டாடாவை அல்ல.

இது தேர்தல்கள் காலம். ஒலிநாடாக்கள் அரசியல்வாதிகளை பதம் பார்க்க, பணிய வைக்க, பேரம் பேச பயன்படுத்தப்படுமே தவிர, கார்ப்பரேட் ஊழல்கள், ஆளும் வர்க்க அரசியல் கட்சிகள் ஒன்றையொன்று பழிவாங்கும் கருவியாக பிரயோகிக்கப்படுமே தவிர, டாடாவும் அம்பானியும் வோடாஃபோனும், தேர்தல் நடக்கிறதோ, இல்லையோ, பாதுகாக்கப்படுவார்கள். சட்டங்களுக்கு, விதிகளுக்கு அப்பால் கனவான்களாக உலா வருவார்கள்.

 சக்தி ஒவ்வொரு கையிலும், முன்னேற்றம் ஒவ்வொரு கையிலும் என்று காங்கிரஸ் கட்சியின் விளம்பரம் ஒன்று சொல்கிறது. நம்மால் காங்கிரஸ் தலைவர்களின் ஒவ்வொரு கையிலும் ஊழல் கறையைத்தான் காண முடிகிறது.

சீனப் புரட்சி மற்றும் அது தரும் பாடங்கள் பற்றிய ஒரு சுருக்கமான சித்திரம்

சீனப் புரட்சியின் முக்கிய கட்டங்களும் முக்கிய இயல்புகளும்
1946ல் அய்க்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் நாடு முழுவதும் மக்கள் மீது சியாங்கே ஷெக் சிவில் யுத்தம்  தொடுத்தார்.

வெளிப்படையாகவே, ‘விடுதலை செய்யப்பட்ட பகுதிகளை’ ஒடுக்குமுறை மூலம் தகர்ப்பது என்பது அதன் நோக்கமாகும். யுத்தத்தின் துவக்க காலத்தில் சியாங்கே ஷெக், 43 லட்சம் துருப்புகள், பெரிய மாநகரங்கள் மற்றும் நகரங்களிலுள்ள 30 கோடி மக்கள் மீது கட்டுப்பாடு, பெரிய ரயில்வே வழித்தடங்கள், மிகப்பெரும் சொத்து என சக்திமிக்கவராகவும் வலிமையானவராகவும் இருந்தார். இதன் கூடவே 10 லட்சம் ஜப்பானிய துருப்புகளின் ராணுவ வளங்களையும் அவர் பிடித்து வைத்திருந்தார். இரண்டாவது உலக யுத்தத்திற்கு பிறகு உலகை ஆளுமை செலுத்தும் ஏகாதிபத்திய சக்தியாக எழுந்திருக்கிற அய்க்கிய அமெரிக்க ஆதரவு மிகவும் முக்கியமான விசயமாகும்.

இன்னொருபுறம் சீன மக்கள் விடுதலைப் படையின் வலு என்பது கிட்டத்தட்ட 12 லட்சம் தான். விடுதலை செய்யப்பட்ட பகுதியின் மக் கள் தொகை 13 கோடி ஆகும். இது குவாமின்டாங் செல்வாக்கு பகுதியோடு ஒப்பிடும்போது மூன்றில் ஒரு பகுதியே. மேலும், பிற்போக்கு நிலப்பிரபுத்துவ சக்திகளை துடைத்தெறிவதற்கான விவசாய சீர்திருத்தங்களும் இப்பகுதியில் நிறைவடையவில்லை. இந்தப் பின்னணியில் தான் சியாங்கே ஷெக் 16 லட்சம் துருப்புகளையும் ஓரணியில் திரட்டி அனைத்தும் தழுவிய தாக்குதல் நடத்தி ஒரே அடியில் விடுதலை செய்யப்பட்ட பகுதிகளை தகர்ப்பது என்ற யுத்தியை கையாண்டார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பரிசோதிக்கப்பட்ட போர்த்தந்திரமான செயல்துடிப்புள்ள ‘தற்காப்பு நடவடிக்கைக்கு அழுத்தம்’ என்பதை கையாண்டது. தங்கள் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதிகளிலும் நகரங்களிலும் குவாமின்டாங் சக்திகள் உள்ளே நுழைய அனுமதித்தது. பிறகு தனிமைப்பட்டு, சோர்வடைந்து, பலவீனமாக இருந்த எதிரிப் படைகள் மீது பெரும் எண்ணிக்கையில் தனது சக்திகளை திரட்டி தாக்குதல் தொடுத்தது. ஜ÷லை 1946க்கும் பிப்ரவரி 1947க் குமிடையில் குவாமின்டாங் சக்திகள் தங்கள் அனைத்தும்தழுவிய தாக்குதலை நிறுத்தின. மற்றும் மக்கள் விடுதலைப் படை பெரும் எண்ணிக்கையிலான எதிரிப் படையினரைக் கொன்றொழித்தது. மக்கள் விடுதலைப்படை பெருமளவிலான ஆயுதங்களை, குண்டுகளை எதிரிப்படையிடமிருந்து கைப்பற்றியதோடல் லாமல் அதன் ஒரு பிரிவினரை அரசியல் கல்வி மூலம் தன் பக்கம் சுவீகரித்துக் கொண்டது. குவாமின்டாங் துவக்கிய இந்தத் தாக்குதல் நடவடிக்கை மக்கள் விடுதலைப் படை வளர்வதிலும் குவாமின்டாங் சக்திகள் பலவீனமாவதிலும் போய் முடிந்தது.

1946 மார்ச்சுக்குப் பிறகு, அனைத்தும் தழுவிய தாக்குதல் என்ற தாக்குதல் நடவடிக்கை ‘சீசா’ போன்றதொரு யுத்தத்தால் எதிர்கொள்ளப்பட்டதால் குவாமின்டாங் தன் செயல்தந்திரத்தை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. குவாமின்டாங்கின் முக்கிய இலக்கு சான்தெர்ன் மற்றும் வடக்கு ஷென்சியாக இருந்தது. புதிய உத்தியின்படி மஞ்சள் ஆற்றின் தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியத்திலுள்ள மக்கள் விடுதலைப் படையின் செயல்பாட்டை கிழக்கு மற்றும் மேற்கு பகுதியிலிருந்து இரு பிரிவு படைகளை அணிதிரட்டி ராணுவ நடவடிக்கை மூலம் அகற்றுவது என்பதாகும். இதன் பிரத்தியேகமான நோக்கம் என்பது மக்கள் விடுதலைப்படையை அப்புறப்படுத்தி அதன் பிரிவுகளை சிதறடிப்பது, அப்படி சிதறடிக்கப்பட்ட பின் கு சென் டுங்கின் உத்தர வின்படி அதை நசுக்குவது என்பதாகும். குவா மின்டாங்கின் 2/3 பங்கு சக்திகளை (4,50,000க்கு நெருக்கமாக) சான்டங் விடுதலைப் பகுதியில் அணிதிரட்டுவது மற்றும் கு சுங் நன் தலைமை யில் 2,30,000 படையை (மக்கள் விடுதலைப் படையை விட 10 மடங்கு அதிகம்) கொண்டு வடக்கு ஷென்சி பகுதியைக் குறிவைப்பது.

சான்பாப் விடுதலைப் பகுதிக்கு எதிரான இயக்கம் என்பது 1947 ஏப்ரல் 6 முதல் இன்னும் தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால் குவாமின்டாங்கின் முக்கிய துருப்புகள் எய்மங்க், மென்கின், லைமெங்க் பகுதிகளில் தகர்க்கப்பட்டன.  குவாமின்டாங் சக்திகளின் முன்னேறிய பிரிவினர் நசுக்கப்பட்டனர்; தலைசிறந்த போர் பிரிவுகள் பலவும் அப்புறப்படுத்தப்பட்டன. இது கிழக்கு சீனத்தில் சக்திகளின் சமநிலையில் மாற்றத்தைக் கொண்டுவந்து மக்கள் விடுதலைப் படை நாடு தழுவிய எதிர்த்தாக்குதல் நடத்த வழியை திறந்துவிட்டது.

இது போலவே, வடக்கு ஷென்சியில் 1947, மார்ச் 13லிருந்து நடத்தப்பட்ட குவாமின்டாங்  சக்திகளின் தாக்குதல், மக்கள் விடுதலைப் படையின் தொடர் யுத்தம் மற்றும் விரைந்து முடிவெடுத்தல் ஆகியவற்றால் முறியடிக்கப்பட்டது.

இந்த சமயத்தில் மக்கள் விடுதலைப்படை சான்சி - சாகர் - கோபே, சான்சி - கோபே -சான்டங் பிராந்தியங்களில் எதிர்த் தாக்குதலை துவக்கியது மற்றும் குவாமின்டாங் தற்காப்பு உத்தியை கடைபிடிக்கும்படி தள்ளப்பட்டது. இது யுத்த இயங்காற்றலில் அடிப்படை மாற்றங்களை குறிப்பதாக அமைந்தது.
ஒரு வருட காலத்தில் 11,20,000 முறையான மற்றும் முறைசாரா குவாமின்டாங் சக்திகளை மக்கள் விடுதலைப் படை வலுவிழக்கச் செய்துவிட்டது. மறுபுறம் மக்கள் விடுதலைப் படையின் எண்ணிக்கை 12 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்ந்தது. இதன் மூலம், குவாமின்டாங்கின் போர்த்தந்திர முன்முயற்சி மக்கள் விடுதலைப் படையால் கைப்பற்றப்பட்டது.

எல்லா யுத்தகளங்களிலும் குவாமின்டாங் படுமோசமான தோல்வியை சந்தித்தது. இது பிற்போக்கு குவாமின்டாங்கின் வகை மாதிரி அராஜகத்துக்கு பலத்த அடி கொடுத்தது. இறுதி ஆராய்ச்சியில், குவாமின்டாங், கம்யூனிஸ்ட்டுக ளால் தலைமை தாங்கப்படும் மக்கள் விடுதலைப் படையின் ஆற்றல் மற்றும் போர்த்தந்திரத்தை புரிந்து கொள்ள படுமோசமாக தவறிவிட்டது.

குவாமின்டாங்கின் ராணுவரீதியான நெருக்கடி, தீவிரமான பொருளாதார நெருக்கடியோடும் இணைந்து கொண்டது. குவாமின்டாங் செல்வாக்கு பகுதிகள் அய்க்கிய அமெரிக்காவின் காலனியாக வளர்ந்து வருவதோடு இணைந்து, கம்யூனிஸ்ட் எதிர்ப்பு சிவில் யுத்தத்தின் தாக்கமும் இதற்கு பங்களிப்பு செய்திருந்தது.

ஜப்பான் அடிபணிந்த பிறகு, குவாமின்டாங், பெருமளவிலான பொருட்களை கைப்பற்றியதோடு, அய்க்கிய அமெரிக்காவின் கடன் மற்றும் நிவாரணத்தையும் பெற்றது. இதன் கூடவே, ஜப்பான் மற்றும் அதன் அடிமை நாடுகளின் ராணுவ தளவாடங்களையும் பெரு மளவில் கைப்பற்றியது. இந்த அர்த்தத்தில் இது குவாமின்டாங்குக்கு பொற்காலமாகும். ஜூலை 1947 வரை, அய்க்கிய அமெரிக்கா, கிட்டத்தட்ட 4000 அமெரிக்க டாலர் பெறுமான ஆயுதங்கள் மற்றும் பொருட்களை அளித்தது. மேலும் குவாமின்டாங் அரசாங்கம் ஜப்பானின் பெரும்தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களையும் கையகப்படுத்தியது.

அய்க்கிய அமெரிக்க புள்ளிவிவரப்படி இதன் மதிப்பு 1800 மில்லியன் அமெரிக்க டாலர்கள். ஜப்பான் சரணடைந்த பின் குவாமின்டாங் ஆட்சி மூலம் சீன தொழிற்சாலைகளிலிருந்து 70 - 80% அதிகாரத்துவ மூலதனம் கைப்பற்றப்பட்டு, அதை 4 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். குவாமின்டாங் செல்வாக்குப் பகுதிகளிலிருந்து அமெரிக்காவின் தீர்மானகரமான ஆதரவு பெற்ற சீன அதிகாரத்துவ மூலதனம் சீனாவை அதன் காலனியாக மாற்ற முயற்சித்ததோடு, சோவியத் யூனியனுக்கு எதிரான ராணுவ தளமாகவும் பயன்படுத்திக் கொண்டது. மேலும் சீனாவில் கம்யூனிச எதிர்ப்பு சிவில் யுத்தத்தை ஆதரிப்பதும் அதன் நோக்கமாக இருந்தது.

ஜப்பான் சரணடைந்த பிறகு, வெளிப் படையாகவும், செயல்தந்திரரீதியாகவும் அய்க்கிய அமெரிக்காவோடு பல்வேறு துரோக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டது. சீனாவில் அமெரிக்க இறக்குமதி 1946ல் 51.2%. (இது 1936ல் 22.6% இருந்தது) அமெரிக்காவுக்கு சீனத்தின் ஏற்றுமதி 1946ல் 57.2% (1937ல் 19.7%ஆக இருந்தது) என்ற அளவுக்கு சென்றது.

சிவில் யுத்தத்தால் விளைந்த கடுமையான நெருக்கடி காரணமாக மக்கள் மீது கொடிய முறையில் வரி விதிப்பு செய்யப்பட்டது. 1947ல் விலைவாசி உயர்வு, ஜப்பான் யுத்தத்திற்கு முந்தைய காலத்தோடு ஒப்பிடும்போது 60,000 மடங்கு ஊதி பெருகியிருந்தது.

குவாமின்டாங் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு சிவில் யுத்தத்தில் இருந்ததால், தேசிய தொழில் மற்றும் வர்த்தகத்தில் பலத்த அடி விழுந்தது. ஷாங்காய் பகுதியில் யுத்தத்திற்கு முன்னர் 5400 என்ற அளவில் இருந்த தொழிற்சாலைகள், 1947ல் 582 ஆக குறைந்துவிட்டது. குவாமின்டாங் ஆளுகை பகுதிகளில் விவசாயம் கடுமையான பாதிப்புக்குள்ளாகி பஞ்சம் ஏற்பட்டது. இந்தப் பின்னணியில் குவாமின்டாங் அரசியல் கருத்துப் பரிமாற்ற மாநாட்டு முடிவுகளை நிராகரிப்பது என்ற தனது நிலைப்பாட்டை மறுஉறுதி செய்து, 1946, நவம்பரில் நடைபெற்ற தேசிய கவுன்சில் கூட்டத்தில் போலியான அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றிக் கொண்டது. இந்த அரசியலமைப்பில் மக்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. மொத்த அதிகாரமும் அரசாங்கத்துக்குத்தான். அதுவும் உள்ளாட்சிகளுக்கல்ல, மத்திய அரசுக்கு மட்டும்தான்.

சமூக நிலைத்தன்மையை பராமரிப்பதில் ஆர்வம் என்று சொல்லி ‘அவசரநிலை’ காலத்தில் மக்களின் உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டன. உள்ளூர் மட்டத்தில் சுயாட்சி மற்றும் சிறுபான்மையினருக்கான சுயாட்சி ஆகிய கொள்கைகள் அரசியலமைப்பு சட்டத்தால் நிராகரிக்கப்பட்டன. இந்தப் போலி அரசியல மைப்பு சட்டத்தின் அடிப்படையிலேயே, 1947 ஏப்ரல் 18 அன்று குவாமின்டாங் அரசாங்க மறு சீரமைப்பை அறிவித்தது.

சியாங்கே ஷெக் இந்த அரசு ‘தாராளமான’ அரசு என வெட்கக்கேடாக அறிவித்தது அரசியலமைப்பு சட்ட அரசாங்கத்தின் துவக்கத்தைக் குறிப்பதாக அமைந்தது. பல கட்சி அரசாங்கத்தில் இளைஞர் கட்சி மற்றும் ஜனநாயக சோசலிச கட்சி (சீன ஜனநாயக லீக் கட்சியிலிருந்து பிரிந்தது) ஆகிய இரண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டன. குவாமின்டாங் அரசாங்கத்தில் ராணுவ சர்வாதிகாரிகளும், கட்சி தலைவர்களும், பணக்காரர்கள் மற்றும் மில்லியனர்களும் உறுப்பினர்களாக இடம் பெற்றிருந்தனர். சியாங்கின் சர்வாதிகாரத்தை மறைக்க, விலை கொடுத்து வாங்கப்பட்ட, உடைந்த குழுக்களான இளைஞர் கட்சி மற்றும் ஜனநாயக சோசலிச கட்சி ஆகியவை திரையாக பயன்படுத்தப்பட்டன.

1947 செப்டம்பரில் குவாமின்டாங்கில் பதவி பெறும் பிரச்சனையில் ஜனநாயக சோசலிச கட்சி மீண்டும் பிளவு பெற்றது. குவாமின்டாங் எல்லா பிரிவுகளையும் அரசாங்கத்தில் அனுசரித்தது. 1947, நவம்பரில் குவாமின்டாங் அரசாங்கம் அய்க்கிய அமெரிக்காவிடம் 4 வருட தவணையில் நிதி கேட்டு கோரிக்கை வைத்தது. உதவியை உத்தரவாதம் செய்ய, மொத்த பொருளாதார விவகாரங்களை கவனிக்கும் அய்க்கிய அமெரிக்க ஆலோசகர் ஒருவரை நியமிக்கவும் குவாமின்டாங் ஒப்புதல் தந்தது. 1948 மார்ச்சில் குவாமின்டாங் அரசாங்கத்துக்கு 570 மில்லியன் டாலர் உதவி அளிப்பதற்கான தீர்மானத்தை அய்க்கிய அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்றியது.

 இன்னொருபுறம், 1946 – 1947, கால கட்டத்தில் குவாமின்டாங்கின் அரசியல் திவால் தனம் மற்றும் அய்க்கிய அமெரிக்காவுக்கு சரண டையும் சியாங்கின் போக்கு ஆகியவற்றுக்கு எதிராக தேசபக்த இயக்கங்களின் அலையையும் சீனம் கண்டது.

2014 மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் வி.சாந்தாராம் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ஆவண திரைப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் ஆற்றிய ஏற்புரை

வாழ்நாள் சாதனை விருதை நான் பெற்றுக் கொள்ளும் இந்த மாலை நேரத்தில் வெவ்வேறு  உணர்வுகள் கலந்த நிலையில் நான் இருக்கிறேன். உண்மைதான். நாங்கள் செய்த வேலைக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இது நடப்பதற்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. நாங்கள் செய்த வேலை, அதிகாரத்தில் இருப்பவர்களின் கண்டனத்துக்கு ஆளானபோதெல்லாம், சந்தை அவற்றை நிராகரித்தபோதெல்லாம், அளவற்ற, தன்னலமற்ற ஆதரவு தந்த எனது பெற்றோர், எனது குடும்பம், எனது நண்பர்கள்... இவர்கள் எனக்கு கிடைத்ததில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. எதிர்ப்புக்கள் இருந்தபோதும் எனது பல திரைப்படங்களுக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அங்கீகாரம் கிடைத்தது என்பதிலும் நான் அதிர்ஷ்டசாலி.

இங்குதான், வெவ்வேறு  உணர்வுகள் கலந்த நிலையில் நான் இருக்கிறேன். எனது திரைப்படங்கள் முன்வைத்த பிரச்சனைகளையும் அந்தப் பிரச்சனைகளுக்காக போராடியவர்களையும் விலக்கிவிட்டு அவற்றை பார்த்தால், அவை ஒன்றுமில்லாதவை. இந்தத் திரைப்படங்கள், அந்த மக்களுக்கு, அந்தப் பிரச்சனைகளில், ஏதாவது மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறதா என்று நான் என்னையே கேட்டுக்கொள்கிறேன். மாற்றம் ஏற்படவில்லை என்பதை நான் ஒப்புக் கொண்டாக வேண்டும்.

நான் சில உதாரணங்களைச் சொல்ல விரும்புகிறேன்.

1978ல் எடுக்கப்பட்ட மனசாட்சியின் கைதிகள் என்ற படம் சுதந்திர இந்தியாவில் அரசியல் கைதிகள் பற்றியது. இன்று சிறையில் அடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஆண்டுக் கணக்கில் விசாரணை ஏதுமின்றி சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர்களுக்குக் கூட பிணை தர நமது கட்டமைப்பு மறுக்கிறது. நான் இங்கே பேசிக்  கொண்டிருக்கும்போது, நீண்ட காலமாக பிணை மறுக்கப்படும் பல சிறைக் கைதிகள் பட்டினிப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
1985ல் எடுத்து முடிக்கப்பட்ட மும்பை நமது நகரம் வீடற்றவர்களின் தற்காலிக வீடுகளை இடித்துத் தள்ளும் கொடூரமான நடைமுறை பற்றிய படம். இப்போதும் வீடுகளை இடித்துத்தள்ளுவது முழுவீச்சில் நடைபெறுகிறது. நகர்ப்புறத்தில் இடம்பெயர்தலை, நகர்ப்புற வறுமையை கேள்விக்கு உள்ளாக்குவதற்கு பதில் நாம் தொடர்ந்து வறியவர்களை குற்றவாளிகளாக்குகிறோம்.

எனது நண்பர்களின் நினைவாக (1990), கடவுளின் பெயரால் (1992) ஆகிய படங்கள், மதத்தின் பெயரால் பிளவுவாதமும் வன்முறையும் வளர்ந்து வருவது பற்றியவை. இன்று, மகாத்மா காந்தியை கொலை செய்யும், பாப்ரி மசூதி இடிக்கப்படுவதை திட்டமிடும், அது இடித்துத் தள்ளப்பட்டதை கொண்டாடுகிற, சிறுபான்மையினர் படுகொலை செய்யப்படுவதில் கூட்டுச்சதி செய்கிற, அவற்றை மன்னித்து விடுகிற கருத்தியல் மனப்போக்குடன் பேணி வளர்க்கப்பட்டவர்களை மீண்டும் அதிகாரத்தில் அமர்த்தும் விளிம்பில் இருக்கிறோம். தாக்கப்பட்டவர்கள், நீதி மறுக்கப்பட்டவர்கள் மத்தியிலும் இது பழிவாங்குவதற்கான, எதிர் வன்முறைக்கான தாகத்தை உருவாக்குகிறது.

பிதா, சுதன் மற்றும் புனிதப் போர் (1995) என்ற படம் நமது ஆணாதிக்க அமைப்பு முறை, மதவாத வன்முறை மற்றும் ஆண்திமிர் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு பற்றியது. இன்று பெண்கள் மேலும்மேலும் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்; கூட்டுப் பாலியல் வன்முறை மதவெறி தாக்குதலின் ஓர் அங்கமாக இருக்கிறது; ஆண்மையை கொண்டாடும் ஒரு வெகுமக்கள் கலாச்சாரத்தை நாம் பார்க்கிறோம். பிரதமர் வேட்பாளர் ஒருவர் தனது 56 அங்குல அகல மார்பு பற்றி பொது வெளியிலேயே பெருமைபட்டுக் கொள்கிறார்; ஒட்டுமொத்த கார்ப்பரேட் உலகமும் அவற்றால் சூழப்பட்ட ஊடகங்களும் 2002 மனிதப் படுகொலையின்போது அவர் செய்ததையும் செய்யாமல் விட்டதையும் மறந்துவிட்டன; மன்னித்துவிட்டன.

ஒரு நர்மதா நாட்குறிப்பு (1995) ராட்சத சர்தார் சரோவர் அணை, அந்தத் திட்டத்துக்கு   நிதி அளித்துக் கொண்டிருந்ததை நிறுத்த உலக வங்கியை நிர்ப்பந்தித்த மக்கள் இயக்கம் பற்றிய படம். இன்று அந்த அணை கட்டும் பணி கிட்டத்தட்ட நிறைவுபெற்றுவிட்டது; ஆயினும் அங்கிருந்து வறட்சிப் பகுதிகளுக்கு நீர் பாய்வதற்குப் பதிலாக, நகர்ப்புற குஜராத்தில் உள்ள நீர்ப்பூங்காக்களுக்கு, அகல நடைபாதைகளுக்கு தண்ணீர் மின் அழுத்தத்தின் உதவியுடன் எடுத்துச் செல்லப்படுகிறது.

போரும் அமைதியும் (2002) என்ற படம்,  அவப்பெயர்பெற்ற அணுஆற்றல் மன்றத்தில் இந்தியாவும் இணைந்து அணுஆயுதம் பயன்படுத்தக்கூடிய ஓர் அரசாக மாறுவது என்ற துயரமான முடிவு பற்றியது. பாகிஸ்தானும் அதே விதத்தில் பதில் சொல்லியுள்ளபோது, இந்த மொத்த பிராந்தியமும் அணுஆயுத பாதுகாப்பின்மையில், நிச்சயமின்மையில் தள்ளப்பட்டுள்ளது. இன்று, பதவிக்காலம் முடியவிருக்கிற நமது பிரதமர், தான் பெருமைப்படுகிற சில சாதனைகளைப் பற்றி பேசும்போது, இந்தியாவின் அணுஆற்றல் திட்டத்திற்கு இருந்த தடையை விலக்கி, நாடு முழுவதும் மேலும்மேலும் அணுஉலைகளை நிறுவ உதவிய இந்திய - அய்க்கிய அமெரிக்க அணுஒப்பந்தத்தைத்தான் முதல் சாதனை என்று பட்டியலிட்டார். ஃபுகுஷிமா அணுஉலை விபத்திற்குப் பிறகு, அணுசக்தி பாதுகாப்பற்றது மட்டுமின்றி, கட்டுப்படியாகாதது என்று உலகம் முழுவதும் உணரும்போது, சுனாமியால் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நமது கடலோரப் பகுதிகளை நிரப்ப, வேண்டாமென வீசப்பட்ட செர்னோபிள்களை வாங்குவதில் மும்முரமாக இருக்கிறது.

ஜெய்பீம் காம்ரேட் (2012), ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட, இழிவான வேலைகள் செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட, தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்ட மக்களின் எதிர்ப்பு என்னும் இசை பற்றியது. அரசாங்கத்தின் அதிகாரபூர்வ விவரங்கள்படி,  இந்த நாட்டில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு மூலையில் தலித்துகள் இரண்டு பேர் கொல்லப்படுகிறார்கள்; மூன்று தலித் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள். இந்தக் கொடுமைகளை எதிர்க்கிற பல்வேறு குழுக்களில் ஒன்று எங்களது படத்தில் வரும் கபீர்கலா மன்ச். படத்தின் இறுதியில், காவல்துறையினர் அவர்களை மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் என்று முத்திரை குத்துவதால், அவர்கள் தலைமறைவாக வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கு முன்பு நடந்த மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் பெற்ற விருது உட்பட ஜெய்பீம் காம்ரேட் பல விருதுகள் பெற்றது; அது பற்றி விரிவாக எழுதப்பட்டது; அதன் பிறகு நாங்கள் கபீர் கலா மன்ச் பாதுகாப்பு குழு ஒன்று உருவாக்கினோம். இறுதியில், குடிமைச் சமூகத்தின் உதவியுடன் வெளிப்படையாக வருவது சாலப் பொருத்தமானது என்று கபீர் கலா மன்ச் முடிவு செய்தது. மகாராஷ்டிரா சட்டமன்றத்துக்கு வெளியே பாடல்கள் பாடி  அகிம்சை முறையில் சத்தியாகிரகத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்கள். அதன் பிறகு, அவர்களில் மூன்று பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்கள்; பத்து மாதங்கள் ஆன பிறகும் இன்னும் மூன்று பேர் சிறையில் இருக்கிறார்கள். ஜனநாயகத்தில் அவர்களுக்கு இருந்த நம்பிக்கையின் அடிப் படையில் அவர்கள் தாமாக சரணடைந்தார்கள். அவர்களுடைய பாடல்கள் மட்டும்தான் அவர்களுடைய ஒரே ஆயுதம். இன்று, நமது அரசியல் மற்றும் நீதித்துறைதான் உண்மையில் குற்றவாளி கூண்டில் நிற்கிறது.

எனவேதான் சொல்கிறேன்; வெவ்வேறு  உணர்வுகள் கலந்த நிலையில் நான் இருக்கிறேன். கசப்பும் இனிப்பும் கலந்த இந்தத் தருணத்தில், நான் பெற்றுள்ள அனைத்துக்கும் நான் நன்றி சொல்ல வேண்டிய எனது பெற்றோர் இங்கு இல்லை. தாங்கள் எதை நம்பினார்களோ அதற்காக உயிர்விட்ட பூஜாரி லால்தாஸ், ஜெய்மல் சிங் பத்தா, ஷாகிர் விலாஸ் கோக்ரே போன்ற எனது படங்களின் கதாநாயகர்களும் இன்று இல்லை. எனது இந்த நீண்ட பயணத்தில், பெர்வேஸ் மெர்வான்சி, சரத்சந்திரன், தாரிகி மசூத், இப்போது, பீட்டர் வின்டோனிக் போன்ற எனது அன்பிற்குரிய, நான் போற்றுகிற எனது திரைப்பட நண்பர்களையும் நான் இழந்துவிட்டேன்.

உங்களது நேரத்தை நான் கூடுதலாக எடுத்துக்கொண்டதற்கு வருந்துகிறேன். எனது பணி அங்கீகரிக்கப்பட்டதன் மூலம் பலரின் பணி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு எனது நன்றிகள். இதுபோன்ற விருதுகள் எங்களுடைய பணியை, எங்களுடைய லட்சியத்தை இன்னும் கூடுதலாக தெரியும்படிச் செய்யும் என்று நான் நம்புகிறேன். அது மிகப்பெரிய அளவில் நடக்கும்போது, மாற்றம் வரும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நன்றி.

- ஆனந்த் பட்வர்த்தன், மும்பை, 03.02.2014


இகக மாலெ மாவட்ட மாநாடுகள்

கோவை: இரண்டாவது மாவட்ட மாநாடு

இகக மாலெ கோவை மாவட்ட இரண்டாவது மாநாடு பிப்ரவரி 2 அன்று நடைபெற்றது. 89 பேர் பிரதிநிதிகள், 46 பேர் அழைப்பாளர்கள் என 135 பேர் கலந்துகொண்டனர். அறிக்கை மீதான விவாதத்தில் 25 பேர் கலந்து கொண்டனர். மாலெ கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் மோகனசுந்தரம் மாநிலக்குழு பார்வையாளாராக கலந்துகொண்டார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி சிறப்புரையாற்றினார்.

மாநாட்டில் இரண்டு ஆண்டுகள் வேலைத் திட்டம் முன்வைக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் முதன்மையான இடதுசாரிக் கட்சியாக மாறுவதை நோக்கிச் செல்வது பற்றி  மாநாடு விவாதித்தது. அதையொட்டி, உடனடியாக நாடாளுமன்ற தேர்தல் தயாரிப்பு, மாநாட்டு விவாதத்தில் முன்னுரிமை பெற்றது.

தொழிலாளர் வர்க்கத்தின் மீதான அதிகரித்து வரும் நெருக்கடி, அதற்கு எதிராக கட்சி முன்வைத்த கோரிக்கைகள், போராட்டங்கள் ஆகியவற்றை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. பன்னாட்டு, இந்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் கோரிக்கைகள் மீது அரசுகள் பரிவுடன் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இத்தகைய அரசுகளின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத போக்கிற்கு எதிராக, மார்ச் 2 அன்று தொழிலாளர்கள் எச்சரிக்கை பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்துவது என மாநாடு முடிவு செய்தது. பேரணி பொதுக் கூட்டத்தில் 2000 பேர் அணிதிரட்ட மாநாடு உறுதி எடுத்துக் கொண்டது.

37 பேர் கொண்ட புதிய கமிட்டியை மாநாடு ஏகமனதாக தேர்ந்தெடுத்துள்ளது. மீண்டும் கே.பாலசுப்பிரமணியன் புதிய கமிட்டியின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தோழர் சந்திரன் இறுதியாக தீர்மானத்தை முன்வைத்துப் பேசினார். மாநிலக் குழு உறுப்பினர் தோழர் என்.கே.நடராஜன் மாநாட்டில் கலந்து கொண்டார்.

திருவள்ளூர்: ஒன்பதாவது மாவட்ட மாநாடு

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட மாநாடு நோக்கிய தயாரிப்புகளாக, டிசம்பர், ஜனவரி மாதங்களில், நெற்குன்றம், சோழவரம், நல்லூர், அழிஞ்சிவாக்கம், ஊத்துக்கோட்டை ஆகிய உள்ளூர் கமிட்டி மாநாடுகள் நடைபெற்றன. உள்ளூர் கமிட்டி உறுப்பினர்களில் 70% பேர் வரை இந்த மாநாடுகளில் பங்கேற்றனர். தற்போதைய அரசியல் நிலவரங்கள், 2014 போராட்ட ஆண்டாக அறிவித்ததன் பின்னணி, நாடாளுமன்றத் தேர்தல், உள்ளூர் பிரச்சனைகள் ஆகியவை பற்றி இந்த மாநாடுகளில் விவாதிக்கப்பட்டது.

உறுப்பினர் சேர்ப்பு, புதுப்பித்தல் வேலைகள், லெவி வசூல், தீப்பொறி சந்தா சேர்ப்பு, ஒருமைப்பாடு விநியோகம் பற்றியும் பேசப்பட்டது. எல்லா பரிமாணங்களிலும் முன்னேற்றம் தேவை, அவசியம் என்ற வகையில் விவாதம் இருந்தது. இறுதியில் உள்ளூர் கமிட்டி தேர்வும், செயலாளர் தேர்வும் நடைபெற்றது. கிளைகளை இயக்குவது, தலைமைக் குழுக்களை முறைப்படுத்தப்பட்ட செயல்பாட்டில் ஈடுபடுத்துவது, 9ஆவது மாவட்ட மாநாட்டை வெற்றிகரமாக்குவது என இந்த மாநாடுகளில் முடிவு செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்ட இகக மாலெ 9ஆவது மாநாடு காலஞ்சென்ற மூத்த கம்யூனிஸ்ட் தோழர் வண்ணை பி.சந்திரசேகரன் நினைவரங்கத்தில் காரனோடையில் நடைபெற்றது. காரனோடை சந்தை முழுவதும் செங்கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாநாட்டு கொடியை தோழர் காமாட்சி ஏற்றி வைத்தார். பின்னர் தியாகிகளுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. தோழர்கள் வண்ணை பி.சந்திரசேகரன் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநாட்டில் பார்வையாளராக மாநிலக்குழு உறுப்பினர் தோழர் தேன்மொழி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

தோழர் ஜி.அன்புராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட தலைமைக் குழு மாநாட்டை நடத்தியது. பதவிக் காலம் நிறைவுறுகிற கமிட்டியின் மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.ஜானகிராமன் நகலறிக்கையை முன்வைத்தார். தற்போதைய தேசிய தமிழக அரசியல் மாற்றங்களிலிருந்து தொடங்கினார். இந்த ஆண்டு போராட்டங்களின் ஆண்டு என்பதற்கேற்ப அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் செயல்பட வேண்டும் என்பதோடு கடந்த கால சாதக பாதகங்களை அறிக்கை விவரித்தது. மிகப் பிரதானமாக அமைப்பு வலைப்பின்னல், உள்ளூர் கமிட்டிகளை சுயமாக இயங்க வைப்பது, அனைத்தும் தழுவிய வேலை, பார்வை அனைத்து வெகுமக்கள் அமைப்புகள், கட்சி விரிவாக்கத்தின் அவசியம் ஆகியவற்றை மாநாடு அறிக்கை எடுத்துரைத்தது.

மாநாட்டில் 53 பிரதிநிதிகளும் 12 பார்வையாளர்களும் பங்கேற்றார்கள். 10க்கு மேற்பட்ட பிரதிநிதிகள் விவாதத்தில் பங்கேற்றார்கள். ஊழியர் வளர்ப்பு, தற்காலிகவாதம், கத்துக்குட்டித்தனம் போன்ற பிரச்சனைகள் பற்றி தீப்பொறியில் வெளியான கட்டுரைகள் வாசித்து விளக்கப்பட்டன. தீப்பொறி, ஒருமைப்பாடு வாசகர் வட்டம், கல்வி வகுப்புகள் போன்றவை பற்றி ஆழமாக அறிக்கை கூறியது. ஒரு லோக்கல் கமிட்டி 100 தீப்பொறி என்ற அடிப்படையில் 400அய் தாண்டுவது என்றும் 300 ஒருமைப்பாடு என்பதும் இலக்காக்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டத்தின் மூன்று ஒன்றியங்களில் உள்ள வேலையை மேலும் விரிவாக்குவது என மாநாடு உறுதியேற்றது. 20க்கு மேற்பட்ட தீர்மானங்கள் முன்வைத்து நிறைவேற்றப்பட்டன. 21 பேர் கொண்ட மாவட்டக் கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக தோழர் எஸ்.ஜானகிராமன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாநாட்டில் 152 தீப்பொறி சந்தாக்கள் மாநாட்டு பார்வையாளர் தோழர் தேன்மொழியிடம் ஒப்படைக்கப்பட்டன.

விழுப்புரம்: இரண்டாவது மாவட்ட மாநாடு

  ஜனவரி 31 அன்று உளுந்தூர்பேட்டை குப்புசாமி, தட்சணாமூர்த்தி, குப்பன் நினைவரங்கத்தில் கட்சி மாவட்ட மாநாடு நடைபெற்றது. விழுப்புரம்  நீதிமன்றம் முன்பிருந்து வழக்கறிஞர் ரஸ்கின் துவக்கி வைத்த தியாகிகள் நினைவு கொடி பயணம் உளுந்தூர்பேட்டை வந்தடைந்தது. மாநாட்டுக் கொடியை மாநிலக்குழு உறுப்பினரும், மாநிலப் பார்வையாளருமான தோழர் அம்மையப்பன் ஏற்றி வைத்தார். மாநாட்டு தலைமைக் குழுவாக தோழர்கள் கணேசன், செண்பகவள்ளி, சுசீலா, சுப்பிரமணி ஆகியோர் இருந்தனர்.

 கலைந்து செல்லும் கமிட்டியின் மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன் முன்வைத்த அறிக்கை விவாதத்திற்குப் பின் அவையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அழைக்கப்பட்ட 62 பிரதிநிதிகளில் 55 பேர் கலந்து கொண்டனர். 8 பார்வையாளர்களும் கலந்து கொண்டனர். மாநாட்டில் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் சிறப்புரையாற்றினார்.

மாநாட்டு அரங்கில் 25 தீப்பொறி சந்தாவிற்கான தொகை வழங்கப்பட்டது. மாநாட்டிற்கு 15 நாட்கள் முன்னதாகவே பிரதிநிதிகளுக்கு அறிக்கை வழங்கப்பட்டது. சென்ற ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

நெல்லை நகர உள்ளூர் கமிட்டி மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியின் நெல்லை நகர உள்ளூர்  மாநாடு 05.02.2014 அன்று நடைபெற்றது. கருப்பசாமி, சுந்தர்ராஜன், சேக்முகமது ஆகியோர் கொண்ட தலைமைக்குழு மாநாட்டை நடத்தியது. மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் நெல்லை மாவட்டச் செயலாளர் டி.சங்கரபாண்டியன், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ரமேஷ்,  மாவட்டக்குழு உறுப்பினர் கே.கணேசன் கிளைச் செயலாளர்கள் சிவகாமிநாதன், சங்கர், ஆவுடையப்பன், உரையாற்றினார்கள்.

மாநாட்டில் நெல்லை நகர உள்ளூர் கமிட்டியின் செயலாளராக தோழர் சுந்தர்ராஜன் தேர்வு செய்யப்பட்டார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்கள் :
கூடங்குளம் அணுஉலை  உடனடியாக மூடப்படவேண்டும்.

3, 4 அணுஉலைகள் திறக்கும் முயற்சியை நிறுத்த வேண்டும்.

ஆதார் அட்டை, தமிழக அரசின் ஸ்மார்ட் கார்டு திட்டங்கள் கைவிடப்பட வேண்டும்.

44வது வார்டில் உள்ள தாய் சேய் நல விடுதி மேம்படுத்தப்பட வேண்டும்.

குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் செப்பனிடப்படவேண்டும்.

புதுக்கோட்டையில் மக்கள் கோரிக்கைப் பேரணி

புதுக்கோட்டையில், பிப்ரவரி 11 அன்று, அரிவாள் சுத்தியல் கொடிகளுடன் ஜெயலலிதா அரசுக்கு எதிராக முழக்கமிட்டு வந்த பேரணியை மக்கள் வியப்புடன் பார்த்தார்கள். பிறகுதான் இது மக்கள் விரோத நடவடிக்கைகள் கொண்ட ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்காத புரட்சிகர கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் என்று புரிந்து கொண்டார்கள். 

பேரணியில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, மனு கொடுத்தவர்களுக்கு நிலம்,  வீட்டுமனை வேண்டும். புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயக் கடனை தள்ளுபடி செய், நிலவரி, வீட்டு வரியை ரத்து செய், தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்டு, சாதி ஆதிக்க சக்திகளுக்கு தண்டனையை உறுதி செய், மாநிலத்தில் பொருளுள்ள லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வா, ஆடு, மாடு விலையில்லாப் பொருட்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி வழங்கு, பெண்களுக்கு அச்சமற்ற சுதந்திரத்தை உறுதி செய், 100 நாள் வேலைத் திட்டத்தில் சட்டக்கூலி வழங்கிடு, அளவு முறையைக் கைவிடு, சிறு குறு விவசாயத்துக்கும்  பேரூராட்சி பகுதிக்கும் விரிவுபடுத்து என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

வேலை நிறுத்தத்தில் இருக்கும் வங்கி ஊழியர் போராட்டம் வெல்லட்டும் எனவும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் முழக்கம் எழுப்பினர்.

கிட்டத்தட்ட 1000 பேர் கலந்து கொண்ட பேரணியை அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் தோழர். டி.கே.எஸ். ஜனார்த்தனன் துவக்கி வைத்தார். பேரணிக்கு தோழர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார்.

மாலெ கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் தேசிகன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். பேரணி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வந்தடைந்தது. அங்கு முதல் நுழைவாயிலிலேயே மக்கள் காவல் துறையால் நிறுத்தப்பட்டனர்.

பிரதிநிதிகள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பிரதிநிதிகளுடன் பேச மாவட்ட ஆட்சித் தலைவர் முதல் உதவியாளர், கோட்டாட்சியர் என யாரும் இல்லாத காரணத்தால், மக்கள் அனைவரும் ஆட்சித் தலைவர் அலுவலக கட்டிடம் முன் சென்று தாழ்வாரத்தில் (போர்ட்டிகோ) அமர்ந்தனர். அதன் பிறகே கோட்டாட்சியர் நேரடியாக மக்களிடம் வந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

குமரியில் வீட்டுமனை கோரி மறியல்

ரூ.1000 கோடி மதிப்புள்ள ஆராச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட 50 ஏக்கர் நிலத்தில் 1650 பேருக்கு பட்டா கேட்டு இகக(மாலெ) பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ள பின்னணியில், பிப்ரவரி 3 அன்று மறியல் போராட்டம் என்று அறிவிக்கப்பட்டு முன்னதாக ஜனவரி 31 அன்று ஊழியர் கூட்டம் நடத்தப்பட்டது.

இகக(மாலெ) அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் இணைந்து நடத்திய கூட்டத்தில் ஏஅய்சிசிடியு தேசியச் செயலாளர் தோழர் புவனேஸ்வரி கலந்து கொண்டார். கூட்டத்திற்கு தோழர்கள் சந்திரிகா, மேரிஸ்டெல்லா, சுசீலா, யூஜிலா, கலா, மார்க்கரெட் மேரி, ஹெலன் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில் பிப்ரவரி 3 மறியல் போராட்டத்தில் பெருந்திரளில் அணி திரட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது.

மாவட்ட ஆட்சித் தலைவர் மனுக்கள் பெறும் பிப்ரவரி 3 அன்று அறிவிக்கப்பட்ட மறியல் போராட்டத்தால் பெரும் பரபரப்பு நிலவியது. பெரும் எண்ணிக்கையில் காவல்துறை குவிக்கப்பட்டிருந்தது. அதனையும் மீறி பல பகுதிகளிலிருந்து பெண்கள் வந்து குவிந்தனர்.

போராட்டத்தை தடுத்து நிறுத்த வந்து சேர்கிற பெண்களை காவல் துறையினர் கைது செய்யத் துவங்கினர். ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்க வந்த மாற்றுத் திறனாளிகள் உட்பட வேறு சிலரையும் கைது செய்ததால் தகராறாக மாறி குழப்பம் நிலவியது. 200க்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே ஆக்கிமிப்பாளரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நடேசன், இடம் முறைப்படி பட்டா பெறப்பட்டு விற்கப்பட்டு, பல கை மாறியிருப்பதாக தெரிவித்து அரசியல் ஆதாயத்துக்காக தோழர் அந்தோணிமுத்து நாடகமாடுகிறார் எனப் பேட்டியளித்தார்.

ஆக்கிரமிப்பு கும்பல், சில பெண்களை தயார் செய்து தங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு நிலம் பெற்றுத் தருவதாக அந்தோணிமுத்து வாக்குறுதி கொடுத்ததாக பொய் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போராட்டத்தில் தொடர்கிற பெண்கள் 04.02.2014 அன்று காவல்துறை கண்காணிப்பாளரிடம் சென்று புகார் மீது கண்காணிப்பாளர் அவர் அலுவலகத்திலேயே நேரடி விசாரணை நடத்தி உண்மையை அறிந்திட வேண்டுமென மனு கொடுத்தனர்.

மறுபுறம் அச்சுறுத்தும் முகமாக தோழர் அந்தோணிமுத்துவின் மகள் மட்டும் தனியாக வீட்டில் இருந்தபோது சில மர்ம நபர்கள் அவர் வீட்டின் மீது கல்லெறிந்து ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். தோழர் அந்தோணிமுத்து மீது இதுவரை 32 பொய் வழக்குகள் பதியப்பட்டு அவர் 20 வழக்குகளில் விடுதலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 தொடர்ச்சியான போராட்டங்களின் ஊடே, ஜனவரி 30 அன்று 800 பெண்கள் கலந்து கொண்ட  அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் இரண்டாவது மாவட்ட மாநாடும் நடத்தப்பட்டது. தோழர் மேரி ஸ்டெல்லா மாவட்ட தலைவராகவும் தோழர் சுசீலா மாவட்டப் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஏஅய்சிசிடியு தேசியச் செயலாளர் தோழர் புவனேஸ்வரி, இககமாலெ மாவட்டச் செயலாளர் தோழர் அந்தோணிமுத்து உரையாற்றினர்.

கரூர் அருகே தலித் பெண் பாலியல் பலாத்காரம் கண்டித்து இகக(மாலெ) தலையீடு

ஜனவரி 16 அன்று அரவக்குறிச்சி வட்டம் கள்ளிமரத்துப்பட்டியிலுள்ள தங்களது குடும்பத்தினர் கணவர் மற்றும் 5 வயது சிறுமி, மகளுடன் இரவு தனது காலனி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது 7 பேர் கொண்ட கும்பல் வீட்டினுள் நுழைந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கணவரை அடித்து இழுத்துச் சென்றுள்ளனர்.

அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகார் மீது நடவடிக்கை இல்லாததால் பாதிக்கப்பட்ட குடும்பம் இகக(மாலெ) தோழர்களை தொடர்பு கொண்டது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை அணுகி முறையிட்ட பிறகு இப்போது பாலியல் வன்முறை மற்றும் வன்கொடுமை தடுப்பு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளிகளாக சொல்லப்பட்டுள்ள ராஜா, ரவி, ராமகிருஷ்ணன், வெங்கடேசன், முத்துசாமி, முருகேசன், பொன்னுசாமி ஆகிய நபர்கள் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் ஜனவரி 26 அன்று தோழர்கள் தேசிகன், இராமச்சந்திரன், சாலமன், சக்திவேல், ராஜசேகர் ஆகியோர் அடங்கிய குழு கள்ளிமரத்துப்பட்டி சென்று, பாதிக்கப்பட்ட பெண், அவரது கணவர், அவர்களின் 5 வயது சிறுமி மற்றும் ஊரில் சிலரிடம் விசாரித்து அறிந்தது. சம்பவத்தைக் கண்டித்து, முதல் தகவல் அறிக்கையில் பெயர் குறிப்பிட்டுள்ள குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், வர்மா கமிஷன் பரிந்துரைகளை மாநில அரசு அமல்படுத்த வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு பாதுகாப்பு கோரியும் சுவரொட்டி இயக்கம் நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக இகக(மாலெ) நிற்கும் என அறிவிக்கப்பட்டது.

உள்ளாட்சி தேர்தலின்போது சாதி இந்து வேட்பாளருக்கு எதிராக இந்தக் குடும்பம் செயல்பட்டதே தாக்குதலுக்கான காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. கட்சி நடத்திய சுவரொட்டி இயக்கத்திற்குப் பிறகே காவல்துறை செயல்பட்டு, பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். ஆனாலும் காவல்துறை, குற்றவாளிகள் ஊரில் இல்லை என காரணம் சொல்லி இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. அடுத்த கட்டமாக ஆர்ப்பாட்டம் நடத்த கட்சி தயாராகி வருகிறது.   Saturday, February 1, 2014

தலையங்கம் - தமிழக ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கு வேலையும் இல்லை வாழ்க்கையும் இல்லை

ஒரு மரத்தை ஆறு மணி நேரத்துக்குள் வெட்ட வேண்டும் என்று சொல்லி என்னிடம் ஒரு கோடரியைக் கொடுத்தால் முதல் நான்கு மணி நேரத்தை கோடரியை கூர்தீட்டுவதில் செலவிடுவேன் என்று ஆப்ரகாம் லிங்கன் சொன்னதை காவல் துறையினருக்கு ஜெயலலிதா நினைவுபடுத்தினார்.

ஜெயலலிதா ஆப்ரகாம் லிங்கன் அளவுக்கு கோடரியை கூர்தீட்டும் பணியில் தன்னை துன்புறுத்திக்கொள்ளமாட்டார். கோடரியை நான் நான்கு மணி நேரம் கூர்தீட்டுவேன் என்று அறிவித்துவிடுவார். அவர் அறிவித்தபின், அந்த அறிவிப்பைப் பாராட்டி கழக உடன்பிறப்புகள் சுவரொட்டி ஒட்டுவார்கள்; தொலைக்காட்சி நேர்காணல்களில் அறிவிப்பை மெச்சித்தள்ளுவார்கள்; சிவப்புத் துண்டணிந்த சிலர் கூட ஆஹா, அற்புதமான அறிவிப்பு என்று சொல்லிவிடுவார்கள்; முடிந்தது கூர்தீட்டும் வேலை.

இரண்டரை ஆண்டுகளுக்கும் மேல் ஜெயலலிதா நடத்திக் கொண்டிருக்கிற அறிவிப்பு அரசியலில் அமலாக்கப்பட்ட அறிவுப்புக்கள் எவை, அமலாகாத அறிவிப்புகள் எவை என்ற கணக்குப் பார்த்தால் அமலாகாதவை முந்தி நிற்கும். கட்டணம் இல்லா அரிசி முதல் கணிணி ஊடாக வீட்டுமனை வரை முழுமையான அமலாக்கம் நடந்தது, அந்த அறிவிப்புகள் செயல் வடிவில் முழுமையாக மக்களைச் சேர்ந்தது என்று யாரும் முழுமையாகச் சொல்ல முடியாது.

இலங்கை தமிழர், தமிழக மீனவர், காவிரி என்று இடையில் சில சடங்குகள் நடத்தப்படும். சமீபத்திய சடங்கு தமிழக, இலங்கை மீனவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை. என்ன பேசினார்கள், முடிவெடுத்தார்கள் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் பேச்சு வார்த்தை நடந்ததே தனது சாதனை என்று ஜெயலலிதா தனது பட்டியலில் சேர்த்துக் கொள்வார்.

ஜெயலலிதா அடையாள அளவில் முயற்சிகள் எடுத்து தனது மேலோட்டமான அறிவிப்புக்களை, சடங்குகளை விற்கப் பார்த்தாலும், அவை தமிழக மக்கள் மத்தியில் தொடர்ந்து எடுபடாமலே போகின்றன. ஏனென்றால் பெரிய ஆடம்பர அறிவிப்புக்கள் இல்லாமல் சில அரசாணைகள் மூலம் சாமான்ய மக்களின் சில அடிப்படை உரிமைகளுக்கு முடிவு கட்டுகிறார் ஜெயலலிதா. மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களாக அறிவிக்கப்படும் அதிமுகவினர் தகுதியைப் பற்றி முன்னறியாமல் அறிவித்துவிடும் ஜெயலலிதா, பிறகு முடிவை மாற்றி அறிவிக்கும் நடைமுறையை கொண்டிருக்கிற ஜெயலலிதா, தமிழக அரசின் பணிகளில் மட்டும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும் என்கிறார்.

பார்வையற்ற பட்டதாரிகள் தகுதி தேர்வு தங்களை எப்படி துன்பத்தில் தள்ளியுள்ளது என்று தங்கள் போராட்டங்களால் தமிழ்நாட்டு மக்களுக்குச் சொன்னார்கள். இப்போது அந்த வரிசையில் அரசு செவிலியர் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இணைந்துள்ளார்கள்.

அரசு செவிலியர் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே தங்களுக்கு வகுப்புக்கள் எடுக்கப்படுவதாகவும் வாரத்தில் 5 நாட்கள் மருத்துவமனையில் பணியாற்றுவதாகவும் சொல்கிறார்கள். படிப்பு முடிந்தால் அரசுப் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களை செலுத்துகிறது. அந்த நம்பிக்கைக்கு முடிவு கட்டியுள்ளது தமிழக அரசின் அரசாணை.

மூன்றரை ஆண்டுகள் பட்டயப் படிப்பு, அந்தப் பட்டயப் படிப்பின் பெரும்பான்மை பகுதி நேரடி சேவை என்று ஈடுபடும் செவிலியர்கள் அரசுப் பணி வேண்டும் என்றால் தேர்வு எழுத வேண்டும் என்று அந்த அரசாணை சொல்கிறது. செவிலியர் மாணவர்கள் வாழ்க்கையை இந்த அரசாணை நிச்சயமற்ற நிலைக்கு தள்ளுகிறது.

அவர்கள் அரசு கல்லூரி மாணவர்களுக்கு எதிராக நிறுத்தப்படுகிறார்கள். தனியார் கல்லூரிகள் அரசின் கொள்கைகளின் முழுஆதரவுடன்தான் நடக்கின்றன. தனியார் கல்லூரிகளில் பயில்வதால் அந்த மாணவர்களுக்கு அரசு வேலை இல்லை என்று ஒதுக்கிவிட முடியாது.

அதனால் தேர்வு என்று புத்திசாலித்தனமாக காரணம் சொல்லப்படுகிறது. உங்களுக்குள் மோதிக் கொள்ளுங்கள் என்று தமிழக அரசு மக்களிடம் சொல்கிறது. மாநிலம் முழுவதும் காளான்போல் முளைத்துக் கிடக்கிற தனியார் கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு வேலை தரவேண்டிய பொறுப்பை தட்டிக்கழிக்கப் பார்க்கிறது.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு மக்கள் வாக்களித்து வெற்றி பெற்ற பிறகு, பதவி ஏற்க வேண்டுமானால் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று ஜெயலலிதாவையும் அவரது அமைச்சர்களையும் பணித்தால் ஏற்றுக் கொள்வார்களா?

ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று மத்திய அரசு சொல்வதைத்தான் நான் செய்கிறேன் என்று சொல்கிற ஜெயலலிதா, செவிலியர்களை பணிக்கமர்த்துவதில் ஏன் மத்திய அரசின் கொள்கையை பின்பற்ற வேண்டும்?

ஜெயலலிதாவின் மத்திய அரசு எதிர்ப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரச்சனைகளில் மட்டும்தானா?
அரிது அரிது வேலை வாய்ப்பு கிடைப்பது அரிது, அதனினும் அரிது அரசுப் பணி கிடைப்பது என்ற நிலைமைகளை உருவாக்கிவிட்டு தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க அனைத்து முயற்சிகளும் எடுப்பதாக தமிழ்நாடு பொதுத் தேர்வாணையம் மூலம் தோற்றம் தரப்பார்க்கிறார் ஜெயலலிதா. முன்னாள் நீதிபதியின் பொறுப்பில் உள்ள தேர்வாணையம் வெவ்வேறு அரசுப் பணிகளுக்கான கால அட்டவணை அறிவிப்பது வரை போக்கு காட்டுகிறது.

ஆனால், சில ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு பல லட்சம் தமிழக இளைஞர்கள் விண்ணப்பிக்கிறார்கள். தேர்வுக் கட்டணமாக பல கோடி ரூபாய் அரசு கருவூலத்துக்கு வந்து சேர்கிறது.

எங்கள் ஆட்சியில் புதிய தொழில்கள் துவங்கப்பட்டு வேலை வாய்ப்புக்கள் அதிகரித்தன, இப்போது புதிய தொழில்களும் இல்லை, வேலை வாய்ப்புக்களும் இல்லை என்று கனிமொழி விமர்சிக்கிறார். கனிமொழி நடத்திய வேலை வாய்ப்பு முகாம்களில் எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது, எந்த விதமான வேலை வாய்ப்பு கிடைத்தது என புரிந்துகொண்டதால்தான் தமிழக மக்கள் திமுகவை வஞ்சத்துடன் தூக்கியெறிந்தார்கள்.

ஜெயலலிதா முந்தைய திமுக ஆட்சியில் இருந்து பாடம் பெற்றாக வேண்டும். சலுகைகள், இலவசங்கள் மக்கள் சீற்றத்தை எந்த விதத்திலும் தணிக்கவில்லை. அவர்கள் தங்கள் வாழ்வில் ஸ்தூலமான முன்னேற்றம் கோருகிறார்கள். அதற்குக் குறைவாக எதையும் ஒப்புக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை.

இது தேர்தல்களின் காலம். மக்களவை தேர்தல்களில் யார் எங்கு நிற்கப் போகிறார்கள் என்பதை பரிசோதிக்க மாநிலங்களவை தேர்தல் பேரங்கள் பயன்பட்டன. தனித்து போட்டி என்று அறிவித்த ஜெயலலிதா இககமா வேட்பாளரை ஆதரித்து தனது மக்களவை தேர்தல் கூட்டணி எப்படி இருக்கப் போகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

திமுகவுக்கு இது சோதனை காலம். காங்கிரஸ் தன்னுடன் யார் வருவார்கள் என்று எதிர்பார்த்து கதவை திறந்து காத்திருக்கிறது. ஊழலுக்கு எதிராக ராட்சத பலூன் பறக்க விட்டிருக்கிற தேமுதிகவின் மாபெரும் தேர்தல் உத்தியை தெரிந்து கொள்ள பிப்ரவரி 2 வரை காத்திருக்க வேண்டும்.

மக்கள் வாக்குகள் பெற்றால்தான் வெற்றி பெற முடியும் என்பதை மட்டும் இந்த அனைத்து கட்சிகளும் மறந்துவிட்டதாகத் தெரிகிறது. ஏனென்றால் இவர்கள் யார் விவாதத்திலும் வேலை வாய்ப்பின்மை உட்பட தமிழக மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் எந்தப் பிரச்சனை பற்றியும் எந்த விவாதமும் இல்லை.

தமிழக உழைக்கும் மக்களும் தமிழக  ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கு வேலையும் இல்லை வாழ்க்கையும் இல்லை என பதில் சொல்வார்கள்.

கிர்க்கி முதல் சுபல்பூர் வரை பெண்கள் மீதான தாக்குதல்களும் பெண்களின் போர்க்குரல்களும்

மேற்குலகம் அனுபவித்திராத ஒரு வாழ்க்கை முறை இந்தியாவில் இருப்பதாகவும், இங்கே பெண்களை வழிபடுவது நம் உயர்ந்த பாரம்பரியம் என்றும், பழைமைவாதக் கருத்துக்கள் இப்போதும் பகிரங்கமாகப் பேசப்படுகின்றன; எழுதப்படுகின்றன. (காண்க: 22.01.2014 தினமணி நடுப்பக்க கட்டுரை).

மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் சுபல்பூர் கிராமத்தில், பெண் எப்படி  வழிபடப்பட்டாள் என்பதைப் பார்ப்போம். இந்த கிராமத்தைச் சேர்ந்த இருபது வயது பழங்குடியினப் பெண் ஒருவர் மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஓர் ஆணுடன் உறவு கொண்டார் எனச் சொல்லி, பஞ்சாயத்து தலைவர் சில ஆயிரங்கள் அபராதம் என தண்டனை விதித்தார். அந்தப் பெண்ணால் அந்த அபராதத் தொகையை செலுத்த முடியவில்லை.

அப்போது அங்கிருந்த சாதிய பஞ்சாயத்து, அந்தப் பெண்ணை தண்டிக்க, அதே கிராமத்தில் உள்ள ஆண்கள் அந்த பெண்ணுடன் பாலியல் வல்லுறவு கொள்ளச் சொன்னது. கிராமத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய, குற்றுயிரும் குலையுயிருமாக, அந்தப் பெண் மருத்துவமனையில் இருக்கிறாள். நேற்று வரை அண்ணா மாமா சித்தப்பா பெரியப்பா எனத் தான் அழைத்தவர்கள்தான், இந்தக் கொடுங் குற்றத்தை இழைத்ததாக, அந்தப் பெண், நினைவு இருக்கும் நேரம் சொன்னாள்.

கேடுகெட்ட அயல்நாட்டுப் பாரம்பரியங்களுக்கு எதிரான போற்றுதலுக்குரிய நம் பாரதப் பாரம்பரியம், பண்பாடு, பெண்ணை எப்படி வழிபட்டது என்பதை, சுபல்பூர் கதை நமக்குச் சொல்லும். கண்ணகி தேசத்து தமிழ்ப் பண்பாடு, காரைக்கால் பெண்ணை எப்படி வழிபட்டது என்பதை, சில தினங்கள் முன் நடந்த சம்பவம் சொன்னது. 

டெல்லியில் ஒரு புயல் போல் ஆட்சியைப் பிடித்தது ஆம் ஆத்மி கட்சி.  சங்பரிவார் போல் ஆம் ஆத்மி கட்சியும், தினமணி கட்டுரையாளர் எடுத்தாண்ட மனு ஸ்மிருதி மேற்கோளைப் பற்றிப் பெருமையாகப் பேசுபவர்கள் கொண்ட கட்சிதான்.

‘யத்ர நாரியஸ்து பூஜ்யந்தே ரமன்தே
தத்ர தேவதஹ’.

இதற்கு, எங்கு பெண்கள் பூஜிக்கப்படுகிறார்களோ அங்கு எல்லா தேவதைகளும் குடியிருக்கும் என்று பொருள். அவர்களும் ‘அதிதி தேவோ பவ’, விருந்தினரை  வழிபடுவோம் என்கிறவர்கள்தான்.

ஆனால் டெல்லி மாநகரின் கிர்கியில் என்ன நடந்தது?

கிர்கியில், நைஜீரியா, ருவாண்டா, உகாண்டா போன்ற ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பலர் வாழ்கிறார்கள். பாசிசம், ஹிட்லர் காலத்திலிருந்து ‘நாம் எதிர் அவர்கள்’ என்ற சமன்பாட்டை முன்நிறுத்துகிறது., அய்க்கிய அமெரிக்கா, சர்வதேச பயங்கரவாத எதிர்ப்புப் போர் என்ற பெயரால், ‘நாம் எதிர் இசுலாமியர்கள்’ என்ற சமன்பாட்டைக் கட்டமைத்துச் செயல்படுத்தி வருகிறது. இதே சமன்பாட்டை இந்தியாவில் சங் பரிவார் செயல்படுத்துகிறது. ஆம் ஆத்மி கட்சி இதே சமன்பாட்டை, உள்ளூர் ‘மா பெஹன் பேட்டி’ அதாவது ‘உள்ளூர் தாய்கள்/சகோதரிகள்/மகள்கள் எதிர் வெளிநாட்டு வேசிகள்’ எனக் கட்டமைத்துள்ளது.

டெல்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி, ஆப்பிரிக்கர்கள் நம்மவர்களும் அல்ல நல்லவர்களும் அல்ல என்கிறார். கருப்பு தோல் மனிதர்களுக்கு எதிரான நிறவெறி, இனவெறி நஞ்சாய் கிர்கியில் உமிழப்பட்டது. ஆப்பிரிக்கப் பெண்கள் வேசிகள், ஆப்பிரிக்க ஆண்கள் போதை மருந்து கடத்துபவர்கள் என சோம்நாத் பார்தி விஷம் கக்கி, ஆப்பிரிக்கர்கள் குடியிருக்கும் ஒவ்வொரு வீட்டையும் சோதிப்போம் என மக்களை உசுப்பி விடுகிறார்.

அவரது ஆதரவாளர்கள் ஆப்பிரிக்கப் பெண்களை விரட்டுகிறார்கள். அவர்கள் ஓடுகிறார்கள். இவர்கள் பிடித்து அடித்து இழுத்து வருகிறார்கள். பெண்களின் உடல்களைப் பாலியல் ரீதியாகத் தடவுகிறார்கள். அந்தப் பெண்களை, பொது இடத்தில், சிறுநீர் கழிக்க வைத்து சிறுநீர் சோதனைக்கு உட்படுத்துகிறார்கள்.

டெல்லியின் கிர்க்கியிலும், இப்படித்தான் ஆப்பிரிக்கப் பெண்கள் வழிபடப்பட்டுள்ளனர்! மனு ஸ்மிருதியை மேற்கோள் காட்டுபவர்கள் எல்லாம் மறைமுகமாக கடவுள் மறுப்பு கொள்கை பிரச்சாரத்திற்கு உதவுவதாகத் தெரிகிறது. அவர்கள் தேவதைகள் குடி இருக்கும் இடம் இந்தியாவில் எங்கும் இல்லை என்ற உண்மை நிலையை உணர்த்துவதன் மூலம், இந்தியாவில் தேவதைகள் இல்லை எனக் காட்டுகிறார்கள். 
    
சோம்நாத் பார்தி, மக்கள் புகார்கள் அடிப்படையில்தான் செயல்பட்டதாக ஆம் ஆத்மி கட்சியும் அர்விந்த் கெஜ்ரிவாலும் வக்காலத்து வாங்குகிறார்கள். சோம்நாத் பார்தி, ஆப்பிரிக்கர்கள் சமூக அறத்தை/தார்மீக நெறிகளை மாசுபடுத்திவிட்டதாகச் (POLLUTING SOCIAL MORALITY) சொல்கிறார்.

தலித்துகளால், எல்லாமே மாசுபடும் தீட்டு ஆகிவிடும் என்ற சுத்தக் கோட்பாட்டை முன்வைத்துத்தான், இந்துத்துவா ஊருக்கு வெளியில் சேரி என்றது. இதே இந்துத்துவாதான் இயற்கையின் விளைவான மாதவிடாய்க் கால இரத்தப்பெருக்கைக் காரணம் காட்டி, பெண் உடல் அசுத்தமானது தீட்டு, அதனால் பெண் என்றும் இரண்டாம் தரமானவள் என்றது.

பகுதி மக்கள் புகார் செய்தார்கள் என்று சொல்லி மொத்த ஆப்பிரிக்க பெண்கள் மீது ஆண்கள் மீது சோதனை என்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்? நாளை, முசாபர் நகரில் ஆம்ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இருந்து அவரிடம் பகுதியிலிருந்து சிலர் இசுலாமிய இளைஞர்கள் காதல் போர் (LOVE JEHAD) தொடுப்பதாகப் புகார் சொன்னால், தர்மபுரியில் ஒரு சட்டமன்ற உறுப்பினரிடம் தலித் இளைஞர்கள் காதல் போர் (LOVE JEHAD) தொடுப்பதாக யாராவது புகார் சொன்னால், அந்த இரண்டு இடங்களிலும் முறையே அனைத்து இசுலாமிய தலித் இளைஞர்கள் மீதும் சோதனை (RAID) நடத்தி போலீசார் அவர்களை கைது செய்ய வேண்டும் எனச் சொல்லி அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்துவார்களா?

ஒரு குடியிருப்போர் அமைப்பு பக்கத்து குடிசைப் பகுதியிலிருந்து, சில திருடர்கள் வந்ததாகப் புகார் செய்தால், மொத்த குடிசைப் பகுதியும் வேட்டையாடப் படுமா? புகார் வந்தால் புகார் விசாரிக்கப்படட்டும். விசாரணை நடக்கட்டும். குற்றம் சுமத்தப்படட்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்கப்படட்டும். ஆனால், ஒரு சமூகத்தையே ஒரு நிறத்தினரையே ஓர் இனத்தினரையே குற்றவாளிகளாகச் சித்தரித்து, கும்பல் மனோநிலைக்கு தலைமை தாங்குவது, குற்றம் என்கிறோம்.

டெல்லியின் முற்போக்கு ஜனநாயக சக்திகளிலிருந்து ஹசார்ட் சென்டரின் துனுராய், ஜேஎன்யுவின் நிவேதிதா மேனன், ஜி.அருணிமா, டெல்லி பல்கலைக் கழகத்தின் நிர்மலாங்சு முகர்ஜி, நந்தினி சுந்தர், வரலாற்றாளர் உமா சக்ரவர்த்தி, பத்திரிகையாளர்கள் பமேலா பிலிப்போஸ் சத்யா சிவராமன், கல்வியாளர் கவுதம்பான், திரைப்படம் எடுப்பவர்களான சபாதேவன், இரம் குப்ரன், நியு டிரேட் யூனியன் இனிசியேடிவின் ராக்கி செகல், ஜாமியா மிலியா இசுலாமியாவின் சோஹினி கோஷ் சோஹாய்ல் அக்பர், பியுசிஎல்லின் கவிதா சிறீவத்சவா, அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் கவிதா கிருஷ்ணன், ஜகோரியின் சுனிதா தார்,   மற்றும் பலர், டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி நிறுவனத் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் முன்பு பின்வரும் கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

1. சோம்நாத் பார்தி உடனடியாக சட்ட அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.
     
2. ஆப்பிரிக்க பெண்களுக்கெதிரான நிற வெறி மற்றும் பாலியல் வன்முறையை தூண்டிய, நிகழ்த்திய குற்றம் புரிந்த சோம்நாத் பார்தி உள்ளிட்டோர் தண்டிக்கப்பட வேண்டும்.

3. டெல்லி போலீஸ், டெல்லி அரசாங்கத்தின் கீழ் வர வேண்டும். ஆனால் டெல்லி போலீஸ், அமைச்சர் மற்றும் கும்பல்களின் ஆணைகள்படி அல்லாமல் அரசியலமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

4. இனவெறி பாலியல் வன்முறை பற்றி புகார் கூறியுள்ள உகாண்டா பெண்களிடம், அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும். வன்முறைகளை கண்டிக்க வேண்டும்.
நாமும் இந்த கோரிக்கைகளோடு இணைந்து கொள்வோம்.

ஆம் ஆத்மி கட்சியின் கருத்தியலாளரான யோகேந்திர யாதவ், ‘சமூக மோதல்களை’ உரையாடல் மூலம் தீர்க்க வேண்டும் என்கிறார். சமூகக் கருத்தொற்றுமை அடிப்படையில் முடிவுகள் என்கிறார். தலித் விரோத, பெண்கள் விரோத காப் பஞ்சாயத்துகள் பற்றி மவுனம் சாதிக்கிறார்.

ஆதிக்க சாதியினரின் கருத்தொற்றுமை அடிப்படையிலான முடிவுகளை ஏற்பவர்கள், ‘சமூக மோதல்களை’ எப்படி உரையாடல் மூலம் தீர்க்க முடியும்? இது, ஒடுக்கப் படுபவர்களை, வலியவர்களிடம் வணங்கிப் போ என்று உபதேசம் செய்வதில்தானே முடியும்? கும்பல் மனோ நிலை, ஏதோ ஒரு வெறியின் அடிப்படையிலான உன்மத்தம் பிடித்த கலவர கும்பல் மனோநிலைக்கு அடி பணிவது, அதைவிட மோசமாக, அதனைத் தூண்டிவிடுவது என்பதற்கு மாறாக, அரசியல் அமைப்புச் சட்டம் சொல்லும்படி தனிநபர் உரிமைகளை குறிப்பாக எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடியோர் உரிமைகளைக் காப்பதுதான், விடாப்பிடியான அனைத்துந்தழுவிய ஜனநாயகத்தின் கடமையாகும்.

கலாச்சார/அற/தர்ம நியாய கட்டுப்பாடு கோடு ஒன்று போடப்பட்டு, கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, கோட்டின் இந்தப்பக்கம் நிற்பவர்கள் எல்லாம் தாய்/சகோதரி/மகள் என்றும், அந்தப் பக்கம் நிற்பவர்கள் வேசிகள் என்றும் சொல்வது, அப்பட்டமான ஆணாதிக்கமாகும். இந்தக்கோடு இல்லாதபோதுதான், பெண்களுக்கு சுதந்திரம் இருக்கும். ஓர் ஆப்பிரிக்கப் பெண்ணோ, ஒரு பாலியல் தொழிலாளியோ, ஒரு பால் மாறியவரோ, இரவானாலும் பகலானாலும் வீதிகளில் அச்சமில்லாமல் நடமாட முடிந்தால்தான், பெண்களுக்கு அச்சமற்ற சுதந்திரம் இருப்பதாக ஆகும்.

இந்தியா முழுவதும் பெண் உரிமை சமத்துவம் தொடர்பான விவாதங்கள் பல புதிய நுழைவாயில்களைத் தாண்டி, ஆதிக்கத்தின் அடிவயிற்றில் கலக்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நேரம், நாம் குறிப்பிட்டிருந்த தினமணி கட்டுரை பெண்களை, தொழிலாளர்களை இருண்மை நிறைந்த 19ஆம் நூற்றாண்டிற்கு அழைக்கிறது.
  
‘இந்தியாவில் நமது முன்னேனார்கள் பெண்ணுக்கு உரிமை தரவில்லை பெருமை தந்தார்கள். அந்தப் பெருமை பெண்ணுக்குக் கடமையுணர்வினால் வருமேயன்றி உரிமை கோஷத்தால் வந்துவிடாது. இந்த விஷயத்தில் நாம் மேலை நாடுகளைப் பின்பற்ற முடியாது. மேற்கத்திய பெண்ணியக் கோட்பாடுகள் ஆணும் பெண்ணும் சமம் என்ற அரசியல் கருத்தில் இருந்து தோன்றியவை ஆகும்.

ஆனால் ஆணும் பெண்ணும் தனித்தன்மை கொண்டவர்கள் என்பதே இந்தியாவின் சிந்தனை. நமக்குத் தேவை பாரம்பரியமான இந்தியப் பண்பாட்டின்படியான பெண்ணின் பெருமையா அல்லது மேற்கத்திய போராட்ட அனுபவங்களில் இருந்து அச்சமூகம் பெற்று மகிழ்ந்திருக்கும் பெண் உரிமையா?  இன்றைய இந்தியப் பெண்ணுக்கு தேவை உரிமைகளை அள்ளித்தரும் நவீனமல்ல. அதற்கு மாறாக பெருமையைக் கொட்டிக் கொடுக்கும் மரபுகளே ஆகும். இந்த இரண்டில் ஏதோ ஒன்று மட்டுமே கிடைக்கும் என்பதே உண்மை. இதுவரை இந்தியப் பெண்கள் பெருமையின் பக்கமே நிற்கிறார்கள் என்பதே நமக்குப் பெருமைதான்.’

இந்தப் பழைமைவாதக் கருத்துக்கு பிரிக்கால் பெண் தொழிலாளர்கள் ‘அச்சமற்ற சுதந்திரமும் உரிமைகள் உள்ள நிலைமையுமே, பெண்களுக்கும் மனிதர்களுக்கும் பெருமை’, என மிகச் சரியான பதில் தந்து விட்டார்கள். ‘நீ உன் கடமையைச் செய், பலனை எதிர் பாராதே’ என்று முதலாளி பேசும்போது, அது தொழிலாளி காதில் கீதோபதேசமாக விழாது, நரகத்திற்குத் தள்ளும் சாத்தானின் நாராசக் குரலாகவே ஒலிக்கும்.

பெண்ணாக இருக்கட்டும் தொழிலாளியாக இருக்கட்டும், அவர்களுக்குத் தேவை, ஆணாதிக்கத்தை, பெண் அடிமை முறையை, முதலாளித்துவத்தைப் பலப்படுத்துகின்ற, பெருமை பற்றிய போலியான கற்பிதங்கள் அல்ல; அவர்களுக்குத் தேவை எல்லாம் உரிமைகள், உரிமைகள், உரிமைகள் மட்டுமே. உரிமைகளைப் பெற போலிப் பெருமைகளை உதறித் தள்ளியாக வேண்டும்.

உங்கள் வேசிகளிடமிருந்து
உங்கள் மனைவிகளைப்
பிரித்து வைத்திருக்கிற,
உங்கள் காதலிகளை
உங்கள் மனைவிகளிடமிருந்து
பிரித்து வைத்திருக்கிற
நீங்கள்
ஒரு பெண்
வேசிகள் மனைவிகள் காதலிகள் என்ற
அடையாளங்கள் வழியாகவும்
அந்த அடையாளங்கள் தாண்டியும்
தன்னையே தான் தேடி
அச்சமில்லாமல் திரிந்தால்,
எவ்வளவு தூரம்
நடுநடுங்கிப் போகிறீர்கள்.....?

              - அலோக் தன்வா

ஆம் ஆத்மி கட்சி நிகழ்வுப்போக்கு இந்தியாவின் மாறுகிற அரசியல் வெளி மற்றும் விவாதப்போக்கு - திபங்கர் பட்டாச்சார்யா

டில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் திடீர் வளர்ச்சி இன்றைய இந்தியாவில் அதிகம் பேசப்படும் அரசியல் மாற்றமாக இருக்கிறது. நாட்டின் நீள அகலங்கள் முழுவதும் ஒரு மகத்தான அரசியல் விசையை கட்டவிழ்த்து விட்டுள்ள பெருவெடிப்பு எழுச்சி என்று அதன் தலைவர்கள் அதை அழைக்கிறார்கள்.

பிரதான நீரோட்ட ஊடகங்கள் ஆம் ஆத்மி கட்சியை ஓர் எழுந்துவருகிற தேசிய அளவிலான அரசியல் சக்தி என்று முன்னிறுத்தத் துவங்கியிருக் கின்றன. அதன் அளவு, புலப்பாடு, விசை, வேகம் மற்றும் வழக்கமாக நம்பிக்கையின்மை மற்றும் செயலின்மையில் இருக்கும் நடுத்தர வர்க்கப் பிரிவினர் மத்தியில் அது உருவாக்கியிருக்கிற நம்பிக்கை மற்றும் செயலூக்கம் ஆகியவற்றில் இந்த நிகழ்வுப்போக்கு உண்மையில் தனிச் சிறப்பு கொண்டதாகவே இருக்கிறது.

எல்லா அரங்கங்களிலும் ஆம் ஆத்மி கட்சி பற்றிய ஓர் உயிரோட்டமான விவாதம் நடப்பது புரிந்துகொள்ளக் கூடியதே. இந்த நிகழ்வுப் போக்கை நாம் எப்படி புரிந்துகொள்வது?

கருத்தியல் - அரசியல் நிறப்பிரிகையில் அதை நாம் எங்கு நிறுத்துவது? ஆம் ஆத்மி கட்சியை புரிந்துகொள்வதில் அதற்குரிய இடத்தில் அதை நிறுத்துவதில் நமக்கு உதவ வரலாற்றுரீதியான தரவோ, இணையோ இருக்கிறதா? இன்றைய இந்தியாவில் ஆம் ஆத்மி கட்சியின் சாத்தியப்படக் கூடிய வழித்தடம் என்னவாக இருக்கும்? அரசியல் நோக்கர்களும் செயல்வீரர்களும் இது போன்ற பல கேள்விகளை மும்முரமாக விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

தேர்தல் என்ற அளவில் சொல்வதானால், புதியதொரு கட்சி முதல்முறை பெரிய வெற்றி பெறும் இதுபோன்ற பல நிகழ்வுகளை கடந்த முப்பது ஆண்டுகளில் நாம் பார்த்திருக்கிறோம். அசாமில் அசாம் கன பரிஷத், ஆந்திராவில் தெலுங்கு தேசம், உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை சில உதாரணங்கள்.

ஆனால், ஆம் ஆத்மி கட்சி அந்த கட்சிகளில் இருந்து பெரிதும் மாறுபட்டதாக இருக்க முடியாது. அசாமின் புவியியல் மற்றும் மக்கள் தொகையியல் நிலைமைகள் பற்றிய கவலைகள் மற்றும் அச்சங்கள், வடகிழக்கு அகில இந்திய அரசியல் மேட்டுக்குடியால் புறக்கணிக்கப்படுகிறது என்ற ஆழ வேரூன்றியுள்ள உணர்வு ஆகியவற்றில் இருந்து உருவான அசாம் இயக்கத்தில் இருந்து அசாம் கன பரிஷத் உருவானது.

தெலுங்கு தேசம் காயப்படுத்தப்பட்ட தெலுங்கு பெருமிதத்தில் இருந்து சக்தி பெற்றது; ஆந்திராவின் சக்திவாய்ந்த சமூக பொருளாதார நலன்களின் ஆதரவும் இருந்தது. உத்தரபிர தேசத்தில், மேலான நிலைமைகளைப் பெற ஒரு கருவியாக தங்கள் வாக்குகளை ஒன்று குவித்து பயன்படுத்த தலித் மக்களை உந்தித் தள்ளியதன் மூலம் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சியை உந்தித் தள்ள அதுபோன்ற பிராந்திய அல்லது மொழி ரீதியான அல்லது சாதி அடையாளம் அல்லது சமன்பாடு போன்ற எதுவும் இல்லை.

‘அசல்’ காங்கிரஸ் அல்லது நாட்டு  விடுதலை போராட்டக் கால காங்கிரஸ் போன்றவற்றுடன், வரலாற்றுக்குள் சென்று ஆம் ஆத்மி கட்சியை ஒப்பிடுபவர்களும் உள்ளனர்; ஆம் ஆத்மி கட்சியின் கருத்தியலாளர்களும் தலைவர்களும் இதுவரை அப்படி ஓர் ஒப்புமையை கவனமாக தவிர்த்து வருகின்றனர்; காங்கிரசின் பதிலி என்று பாஜகவால் குற்றம்சாட்டப்படுவதால் கூட அப்படி இருக்கலாம்.

மாறாக, யோகேந்திர யாதவ், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அல்லது லத்தீன் அமெரிக்காவின் இயக்கங்கள் மற்றும் கட்சிகளுடன் ஒப்பிடுகிறார். அது போன்ற ஓர் இணையை எந்த விதத்திலும் நியாயப்படுத்த ஆம் ஆத்மி கட்சியின் தோற்றம் மற்றும் எழுச்சியில் இது நாள் வரை ஏதும் இல்லை. ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் ஒரு கட்டத்தில் ஆயுதப் போராட்ட கட்சியாக இருந்தது. இதுநாள் வரை தென்னாப் பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்க அமைப்புடன் உயிரார்ந்த, கட்டமைப்புரீதியான உறவில் உள்ளது. லத்தீன் அமெரிக்காவின் வெகுமக்கள் இயக்கங்களும் கட்சிகளும் எப்போதும் வலுவான இடதுசாரி மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுகளால் சக்தியூட்டப்பட்டவை.

சர்வதேச மற்றும் இந்திய வரலாற்றில் இணையை தேடுவதற்கு பதிலாக, ஆம் ஆத்மி கட்சி அதன் சொந்த விதத்தில் ஒரு புதிய அரசியல் அமைப்பு என்று நாம் பார்க்கலாம். டில்லியில் ஆளும் கட்சியாக அது இப்போது என்ன செய்கிறது என்ற அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சியை டில்லி மற்றும் இந்திய மக்கள், மதிப்பிட முடியும். ஆனால், ஓர் அரசியல் புரட்சியின் அறிவிப்பாளர் என்று ஆம் ஆத்மி கட்சி தன்னை அழைத்துக் கொள்கிறது. இந்தப் புரட்சியில் இணைந்து அரசியலை, இந்தியாவை மாற்ற வேண்டும் என மக்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

நேற்று வரை, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் பலரும் தொண்டு நிறுவன செயல்பாட்டாளர்களாக சமூக இயக்கங்களின் தத்துவவியலாளர்களாக அல்லது அவற்றை முன்மொழிபவர்களாக இருந்தனர். இன்று, ஒரே பிரச்சனை மீதான சமூக இயக்கங்கள் என்ற விவாதப் போக்கில் இருந்து வெளிப்படையான அரசியல் விவாதப்போக்கு என்பதற்கு மாறிச் சென்றிருக்கிறார்கள்.

ஆனால், ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் தான் என்ன? சந்தேகத்திற்கிடமின்றி கட்சியின் அசல் மற்றும் அதிகாரபூர்வமான தலைவரான அர்விந்த் கேஜ்ரிவால், யோகேந்திர யாதவ் மற்றும் பிரசாந்த் பூஷண் ஆகிய கட்சியின் மூன்று நன்கறியப்பட்ட தலைவர்களின் உரைகள் மற்றும் பேட்டிகளை படிப்பதும் கேட்பதும் அது பற்றிய ஓர் உடனடி கருத்தைப் பெற ஆகச்சிறந்த வழி.

அர்விந்த் கேஜ்ரிவால் கட்சியின் லட்சியத்தை தனது உரைகளில் சொல்கிறார்; யோகேந்திர யாதவ் தனது நுட்பமான ‘கருத்தியல் அற்ற’ கருத்துரை மூலம் அதை இன்னும் ஆழப்படுத்துகிறார்; பிரசாந்த் பூஷண் காஷ்மீர் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் மற்றும் அதுபோன்ற பிரச்சனைகளில் அவருடைய சொந்த கருத்து என்று கட்சி நிராகரிக்கும் அறிவிப்புகள் வெளியிடுவதன் மூலம் ஆம் ஆத்மி கட்சி என்னவாக இருக்காது என்று நமக்குச் சொல்கிறார்.

கேஜ்ரிவாலில் இருந்து, ‘ஆம் ஆத்மி’ பற்றிய அவருடைய வரையறையில் இருந்து துவங்குவோம். டில்லி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது, தனது பதிலுரையில் ஒரே எளிமையான பொது பண்பாக நேர்மை என்ற சொல்லை பயன்படுத்தி ‘ஆம் ஆத்மி’ பற்றிய ஆகக்கூடுதலான அனைவரையும் உள்ளடக்கும் வரையறையை முன்வைத்தார்.

குடிசை வாழ் மக்கள் முதல் டில்லியின் மிகவும் வளமான வளர்ந்து வருகிற பகுதியான கிரேட்டர் கைலாஷ் பகுதியில் வசிப்பவர்கள் வரை நேர்மையை, நேர்மையான அமைப்பு முறையை விரும்புபவர்கள் ஆம் ஆத்மி என்று கேஜ்ரிவால் சொன்னார். ஆகக் கூடுதலாக அனைவரையும் உள்ளடக்குகிற இந்த வரையறை, அனைத்து சமூக பொருளாதார வேறுபாடுகளையும் கடந்ததாக இருக்க, ஊழல் எதிர்ப்பு தளத்தில் புதிய கூட்டணி வகையொன்றை உருவாக்க முனைகிறது.

அடித்தட்டைச் சேர்ந்த 20% மற்றும் மேல் தட்டைச் சேர்ந்த 10% தவிர டில்லி மக்களின் 70% பேர் ஆம் ஆத்மி கட்சியின் பரவலான அடித்தளம் என்று யோகேந்திர யாதவ் சொல்கிறார். கட்சி பெற்றுள்ள நிதி என்று அறிவிக்கப்பட்டுள்ள விவரங்களிலும் இது பிரதிபலிக்கிறது. டிசம்பர் 27 வரை கட்சி பெற்றுள்ள நிதி என்று அதன் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள விவரங்கள், 83,000 பேர் கட்சியின் கருவூலத்துக்கு ரூ.22.3 கோடி நிதியளித்துள்ளனர் என்று சொல்கின்றன.

இந்த நிதியில் 60% பேர் ரூ.1000 மற்றும் அதற்கு குறைவாக கொடுத்துள்ளனர். இது மொத்த நிதியின் 5% மட்டுமே. 35% பேர் ரூ.1001 முதல் ரூ.10,000 வரை கொடுத்துள்ளனர். இது மொத்த நிதியின் 30%. 4500 பேர் ரூ.10000 முதல் ரூ.1 லட்சம் வரை கொடுத்துள்ளனர். இது மொத்த நிதியில் மூன்றில் ஒரு பங்கு. 0.4% பேர் ரூ.1 லட்சத்துக்கும் மேல் கொடுத்துள்ளனர் இது மொத்த நிதியில் 30%க்கும் சற்று கூடுதல்.

ஆம் ஆத்மி கட்சியின் இந்தப் பரவலான ஆதரவு, டில்லியில் அது பெற்ற வாக்குகளிலும் ஆம் ஆத்மி கட்சியில் சேர்பவர்களின் விதவிதமான பின்னணிகளும் பிரதிபலிக்கிறது.  காங்கிரசின் 17% வாக்குகள், பாஜகவின் 2% வாக்குகள் மற்ற கட்சிகளின் 10% வாக்குகள் என டில்லியில் அது 29% வாக்குகள் பெற்றது. ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், மாத ஊதியம் பெறும் ஊழியர்கள், உயர்மட்ட தொழில்முறையாளர்கள் என அதன் வாக்குகளும் ஒரு பெரிய சேர்க்கையை பிரதிபலித்தன.

இப்போது நன்கறியப்பட்ட பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், செயல்பாட்டாளர்கள், அதிகாரிகள், தொழில் முனைவோர் என ஆம் ஆத்மி கட்சியில் சேர்பவர்களும் அதே போன்றதொரு தோற்றத்தை பிரதிபலிக்கிறார்கள். ஆம் ஆத்மி கட்சி மூலம் அரசியலில் ஈடுபட குறிப்பிடத்தக்க தயார் நிலையை வெளிப்படுத்துகிறார்கள்.

இந்த பரந்த ஆம் ஆத்மி நிறக்கற்றையை ஒன்றிணைப்பது ஊழல் ஒழிப்பு என்ற ஒரே உறுதி என்று கேஜ்ரிவால் சொல்கிறார். ஆனால் ஊழலை ஒழிக்க என்ன வேண்டும்? அதற்கு கொள்கைகளை மறுதிசைவழிப்படுத்துதல் தேவையா? கார்ப்பரேட் மூலதனத்தை திறன் மிக்கவிதத்தில் கட்டுப்படுத்துவது அதற்கு அவசியமா? கேஜ்ரிவால் அப்படி கருதுவதாக தெரியவில்லை. அவரைப் பொறுத்தவரை, பெருந்தொழில் மற்றும் அரசியல் அதிகாரம் ஆகியவற்றுக்கு இடையில் அதிகரித்த அளவிலான நெருக்கமான கூட்டு, கார்ப்பரேட்டுகளுக்கு கூச்சமற்ற விதத்திலான விலக்குகளும் சலுகைகளும் பொழிகிற, மக்களுக்கு துன்பம் தருகிற கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகள் ஆகியவற்றைச் சுற்றி ஊழல் செழிக்கவில்லை.

தொழில் செய்யும் வர்க்கத்தின் 99 சதம் நேர்மையாக தொழில் செய்ய விரும்புவதாகவும் அரசியல்தான் அதை ஊழலில் ஈடுபட கவர்ந்திழுக்கிறது அல்லது நிர்ப்பந்திக்கிறது  என்று கேஜ்ரிவால் சொல்கிறார். ஆக, முதலாளிகளை ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் எல்லைகளுக்கு வெளியே நிறுத்தி அரசியலை தூய்மைப்படுத்தி அதிகாரப்பிரிவை கட்டுப்படுத்துவதுதான் ஆம் ஆத்மி கட்சியின் நிகழ்ச்சிநிரல். ஆம் ஆத்மி கட்சி முன்வைத்துள்ள ஜன் லோக்பால் மற்றும் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள லோக்பால் சட்டம் ஆகிய இரண்டும இந்த அடிப்படை கொண்டவையே.

‘ஆம் ஆத்மி’ வாழ்க்கையில் எதிர்கொள்ளும் மற்ற பிரச்சனைகள் என்ன? வேலையில்லா திண்டாட்டம், குறைவான கூலி, விலைஉயர்வு ஆகியவை தொடர்பாக என்ன சொல்கிறார்? மூலதனச் சுரண்டல், அரசு ஒடுக்குமுறை, சமூக ஆதிக்க சக்திகளால் ஒடுக்கப்படுவது ஆகியவை பற்றி என்ன சொல்வது? சிறுபான்மை சமூகங்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் மதவாத தப்பெண்ணங்கள் மற்றும் வன்முறையின் சுமை பற்றி என்ன சொல்கிறார்? தலித் மக்கள், பழங்குடி மக்கள் மீதான முடிவற்ற தாக்குதல்கள், ஆழ வேரூன்றியுள்ள பெண்கள் மீதான வெறுப்பு மற்றும் ஆணாதிக்க ஒடுக்குமுறை, கிட்டத்தட்ட வாழ்க்கையின் அன்றாட நடை முறையாக பெரும்பாலான பெண்கள் எதிர் கொள்ளும் வன்முறை ஆகியவை பற்றி அவர் என்ன சொல்கிறார்?

வளர்ச்சி என்ற முகமூடிக்குப் பின் நடக்கிற கார்ப்பரேட் மூர்க்கத் தனத்தால் சுற்றுச்சூழல் மீது நடத்தப்படும் ‘உடன்விளை சேதம்’ பற்றி அவர் என்ன சொல்கிறார்? இப்போது அது மிகப்பெரும் அளவில் மனிதர்களையும் விலையாக எடுத்துக் கொள்ளத் துவங்கியிருப்பது பற்றி என்ன சொல்கிறார்?

யோகேந்திர யாதவ் இந்தக் கேள்விகளை மறுக்க மாட்டார். ஆனால் அவர் சொல்கிற பதில், மத்தியஸ்தம், பேச்சுவார்த்தை, உரையாடல், சமரச பேச்சு ஆகியவற்றில் இருக்கிறது. அவரைப் பொறுத்தவரை, முரண்படுகிற பிரச்சனைகளைத் தீர்ப்பதும் முரண்பாடுகளை சமாளிப் பதுமே அரசியல். அரசியலை இப்படி விவரிப்பது இது முதல் முறையல்ல.

உண்மையில், வளர்ந்துகொண்டே இருக்கிற ஒரு பெரிய வரிசை அரசியல் சாசன திருத்தங்கள், சட்டங்கள் இயற்றுவது ஆகியவற்றைக் கொண்டு இதைச் செய்வதாகத்தான் இந்திய அரசு சொல்லிக் கொண்டிருக்கிறது. அப்படியானால், ஆம் ஆத்மி கட்சி எந்த விதத்தில் தனது அரசியலை புரட்சிகரமானது என்று சொல்லிக் கொள்கிறது? அரசியல் நிறுவனத்தில் இருந்து சுயராஜ்யம் என்ற கோட்பாடு தன்னை பிரித்துக் காட்டும் என்று ஆம் ஆத்மி கட்சி சொல்கிறது. சுயராஜ்யம் அல்லது தன்னாளுகை தீவிர அதிகாரப் பரவலை கொண்டு வரும், குடிமக்களை அதிகாரமுடையவர்கள் ஆக்கும் என்றும் அதுதான் மக்களுக்கு அதிகாரத்தை மாற்றுவது என்றும் கேஜ்ரிவால் விவரிக்கிறார்.

சுயராஜ்ஜியத்தில் பொருளாதாரமும் சமூகமும் கூட அடிப்படை மாற்றத்துக்கு உள்ளாக்கப்படுமா? தொழில்துறை முதலாளித்துவம் மற்றும் நவீன அரசின் சிக்கல்கள் மற்றும் அழுத்தங்களில் இருந்து விடுபட்ட ஒரு சமூகத்தை காந்தியின் சுயராஜ்ஜியம் கற்பனை செய்தது.

அன்றாட நிர்வாக விவகாரங்களில் குடிமக்களின் கூடுதல் பங்கேற்பு பற்றி அது பேசினாலும், சுயராஜ்ஜியம் பற்றிய ஆம் ஆத்மி கட்சியின் பார்வையில், ஆயுதம்தாங்கிய அரசின் வல்லமையால் திணிக்கப்படும் மூலதனத்தின் ஆட்சியுடனான அதுபோன்ற பொருத்தப்பாட்டு பிரச்சனை ஏதும் இல்லை.

ஒரு விதத்தில், ஆம் ஆத்மி கட்சி நிகழ்வுப் போக்கு, நவதாராளவாத யுகத்தில், மய்யமான சமூக சேவைகளை தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் இயக்கப்போக்கின் அரசியல் பிரதிபலிப்பு அல்லது அறுதியிடலே ஆகும்; ஆளுகையை தொண்டு நிறுவனமயமாக்குவது என்பதில் இருந்து தொண்டு நிறுவனங்களை கட்சிமயமாக்குவது என்ற வழித்தடத்தை பூர்த்தி செய்வதே ஆகும். நவதாராளவாதம் கட்டவிழ்த்துவிட்டுள்ள அனைத்தும் தழுவிய கார்ப்பரேட்மய ஆட்சிக்கு சமூக - அரசியல் ரீதியாக இட்டு நிரப்பும் சேவை செய்யும்.

ஆம் ஆத்மி கட்சியில் ‘பங்கேற்பு’ பற்றிய ஒரு குறிப்பிட்ட அணுகுமுறையை நாம் இப்போது பார்க்க முடிகிறது. உதாரணமாக, டில்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஒப்புக்கொள்வதற்கு முன்பு பொது வாக்கெடுப்பு போன்ற ஒன்றை ஆம் ஆத்மி கட்சி நடத்தியது.

அது நிச்சயம் புதுமைதான். அர்விந்த் கேஜ்ரிவாலும் அவரது அமைச்சர்களும் டில்லி தலைமை செயலகத்திற்கு வெளியே சாலையோரத்தில் ஜனதா தர்பார் நடத்தினார்கள்; ஆனால் ஒப்பந்தத் தொழிலாளர்களும் துன்பத்தில் இருக்கிற மற்ற டில்லி குடிமக்களும் ஆயிரக்கணக்கில் திரண்டபோது, மக்களுடன் நேரடியாக உறவாடுவது என்ற கருத்துக்கே புதிய அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்தது; கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் மூலம் மக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்று சொன்னது.

காஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் தேவையா என்பது தொடர்பாக காஷ்மீர் மக்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பிரஷாந்த் பூஷண் பேசியபோது, ஆம் ஆத்மி கட்சி, உடனடியாக, அந்தக் கருத்தை நிராகரித்தது. ராணுவத்தை நிறுத்துவது பற்றி முடிவெடுப்பதில் மக்களுக்கு பாத்திரம் இருக்க முடியாது என்று சொன்னது. அச்சுறுத்தல் பற்றிய கவலை, தேசத்தின் பாதுகாப்பு தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் அதை தீர்மானிக்க முடியும் என்றது.

காங்கிரசோ பாஜகவோ மிகச்சரியாக இப்படித் தான் வாதிடும். ஆக, ஆளுகையை கண்காணிக்கும் அதற்கு உதவும் பங்கேற்பு முறை ஒரு குறிப்பிட்ட கட்டம் வரைதான். கொள்கை விவகாரங்களும் போர்த்தந்திர பிரச்சனைகளும் களத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றிய எந்த தொடர்பும் இன்றி தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பவர்களால் தீர்மானிக்கப்படும்.

நவதாராளவாத பொருளாதார மற்றும் ராணுவ - போர்த்தந்திர சட்டகத்துக்கு ஊறு ஏதும் இல்லாமல், அதன் அனைத்து நாசகர விளைவு களுக்கும் ஊழல் மேல் பழிபோடுவது, மூன்றாம் உலக அரசின் உள்ளேயே மட்டுமே அது இருப்பதாக புரிந்துகொள்ளப்படுவது என்ற, உலகவங்கி முன்நகர்த்தப் பார்க்கிற ‘நல்லாட்சி’ நிகழ்ச்சிநிரலுடன் ஆம் ஆத்மி கட்சியின் அணுகுமுறை பளிச்சென தெரியும்படி ஒத்துப்போகிறது.

அப்படியானால், ஆம் ஆத்மி கட்சியின் கருத்தியல் வரையறைதான் என்ன? இந்த கேள்வி ஆம் ஆத்மி கட்சி தலைவர்களால் தொடர்ந்து பரிகாசத்துக்கு உள்ளாக்கப்படுகிறது. கருத்தியல் வேறுபாடுகளில் ஆம் ஆத்மி கட்சிக்கு நம்பிக்கை இல்லை என்றும் அதன் அணுகுமுறை தீர்வுகள் நோக்கியது என்றும் அவர்கள் சொல்கிறார்கள். இடதும் வலதும் இன்றைய உலகில் பொருள் ஏதுமற்ற இருபதாம் நூற்றாண்டு இரட்டைகள் என்று யோகேந்திர யாதவ் சொல்கிறார்.

உண்மையில், வலதுசாரிகளிடம் செயல்படத்தக்க அரசியல் இல்லை, இடதுசாரிகளிடம் புத்திசாலித்தனமான பொருளாதாரம் இல்லை என்பதால் இந்தியாவில் இடது - வலது பிரிவுக்கு எப்போதும் எந்தப் பொருத்தப்பாடும் இருந்ததில்லை என்று யோகேந்திர யாதவ் வாதிடுகிறார்.

வலதுசாரிகளின் பொருளாதாரம் சரி என்று இதை பொருள்கொள்ள முடியும். அப்படியானால், வலதுசாரி சுதந்திரச் சந்தை கொள்கைகள் ஆணையில் இருக்கும் சர்வதேச பொருளாதாரம், சர்வதேச மூலதனத்தின் ஆகப்பெரிய சக்திகளான அய்க்கிய அமெரிக்காவிலும் அய்ரோப்பாவிலும், மாபெரும் பொருளாதார நெருக்கடியின் நினைவுகளை மீண்டும் தூண்டும்விதம், ஏனிந்த நீடித்த நெருக்கடியின் ஊடே சென்று கொண்டிருக்க வேண்டும்?

இருபதாண்டு காலமாக, கட்டுப்பாடு அகற்றுதலின், தனியார்மயத்தின் புத்திசாலித்தனமான பொருளாதாரம் இருந்தும், இந்தியா ஏன் இந்த தீவிரமான நெருக்கடியை சந்திக்கிறது? சாமான்ய மக்கள் ஏன் நாளும் அதிகரிக்கிற விலைஉயர்வால் துன்பப்படுகிறார்கள்? ஏன் மகா ஊழல்கள் நடக்கின்றன?

விதவிதமான கருத்தியல் போக்குகள் கொண்ட அனைத்துவிதமான பிரிவினரையும் ஈர்க்க புதிய கட்சி விரும்புவது தெளிவாகத் தெரிகிறது. மூன்று வேறுபட்ட போக்குகளுடன் தொடர்புடைய மூன்று முழக்கங்களை அர்விந்த் கேஜ்ரிவால் திட்டமிட்டு பயன்படுத்துவதிலும் இது தெளிவாகத் தெரிகிறது. பெரும்பாலும் காங்கிரஸ், சமயங்களில் பாஜகவும் பயன்படுத்துகிற ‘வந்தே மாதரம்’, ஆர்எஸ்எஸ்/பாஜக பயன்படுத்தும் ‘பாரத் மாதா கி ஜே’, பகத்சிங் காலம் முதல் இடதுசாரிகளின் மிகவும் ஜனரஞ்சகமான போர் முழக்கமான ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ ஆகிய மூன்று முழக்கங்களைத்தான் அர்விந்த் கேஜ்ரிவால் தனது உரைகளை முடிக்கும்போது பயன்படுத்துகிறார்.

ஆம்ஆத்மி கட்சி, இடதுசாரிகளின் முன்னுரிமைகள் மற்றும் கோட்பாடுகளுடன் ஒத்துப்போகிற, உகந்ததாக இருக்கிற ஒரு திறந்த மேடை என்று சொல்லி, இடதுசாரிகளில் இருந்து சிலரும் ஆம் ஆத்மி கட்சியில் இணைவதை நாம் பார்க்க முடிகிறது. ஆம் ஆத்மி கட்சி எப்படி வளர்ந்தெழும், ஆம் ஆத்மி கட்சிக்குள் இருக்கும் இடதுசாரி பிரிவினர் என்ன பாத்திரம் ஆற்றுவார்கள் என்று நாம் விரைவில் பார்க்கப் போகிறோம். பிரஷாந்த் பூஷண் அறிவிப்புக்களுக்கு ஆம் ஆத்மி கட்சி வெளிப்படுத்திய பதில்வினை, ஆம் ஆத்மி கட்சிக்குள் சங்கடம் தரக்கூடிய தீவிர ஜனநாயக கருத்துக்கள்பால் சகிப்புத் தன்மையோ, அவை செயல்படுவதற்கான இடமோ இல்லை என்பதையே காட்டுகிறது.

சோசலிசம் தோற்றுப்போன இருபதாம் நூற்றாண்டு கருத்தியல் என்று யோகேந்திர யாதவ் சொல்கிறார். அவர் திட்டமிட்டு, சோசலிசத்தை சோவியத் மாதிரியுடன் சுருக்கி நிறுத்தி, வழிகள் மற்றும் செயல்முறை கேள்விகளை கருத்தியல் தளத்துக்கு உயர்த்துகிறார். சர்வதேச மூலதனத்தின் சக்தியுடனான போட்டியில் சோவியத் மாதிரி வீழ்ந்தது என்பதால், அதன் சொந்த தேக்கத்தின் அழுத்தத்தால் சரிந்தது என்பதால், முதலாளித்துவம் மேலான ஓர் அமைப்பு முறையாகிவிடுமா? ‘சமாஜ்வாதி ஜன் பரிஷத்தின்’ முன்னாள் கருத்தியலாளர் என்ற விதத்தில், அவர், சோசலிச லட்சியத்தை  கைவிட்டுவிட்டு முதலாளித்துவம்தான் இறுதியான அமைப்பு முறை என்று ஏற்றுக்கொண்டு விட்டாரா என்று அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

கம்யூனிசம் ‘முன்கூட்டியே வடிவமைக்கப்பட்ட’ கருத்தியல் அல்ல, அது எதிர்காலம் பற்றிய லட்சிய நோக்கு, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடப்பட்ட 1848ல் இருந்து கணக்கிட்டால், 160 ஆண்டு காலமாக, வரலாற்றில் தகவமைத்துக் கொள்ளும் தன்மையையும் தாக்குப்பிடிக்கும் தன்மையையும் வெளிப்படுத்தியுள்ளது என்பவை நன்கறிந்த விசயங்கள்.

முழுவரிசை சமூகப் பின்னணிகளில், வரலாற்றுக் கட்டங்களில் - நிலப்பிரபுத்துவ பின்தங்கிய நிலையை முறியடிப்பதாகட்டும், காலனிய ஆட்சியை தூக்கியெறிவதாகட்டும், முடியாட்சிக்கு முடிவு கட்டுவது, பாசிசத்தை வீழ்த்துவது என்பவையாகட்டும் - சமூகங்களை மாற்றியமைப்பதில் அது வெற்றி கண்டுள்ளது.

அதிகாரத்துவ தேக்கத்தால் சோவியத் யூனியன் வீழ்ந்தது என்றால், அரசின் பாத்திரம் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட சந்தை ஆகியவற்றுக்கு இடையில் ஒரு சமன்பாட்டை உருவாக்கும், அதிருப்தி கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் அதேநேரம், பரந்த பெரும்பான்மை மக்களின் உரிமைகளை விருப்பங்களை உயர்த்திப் பிடிக்கும் ஜனநாயக மாதிரியை உருவாக்கும் தனது பரிசோதனைகளில் சீனா தடுமாறுகிறது என்றால், அது கம்யூனிஸ்ட் கருத்தியலை தேவையற்றதாக மாற்றிவிடாது; முதலாளித்துவ ஒழுங்கை நியாயப்படுத்தும் முதலாளித்துவ கருத்தியல்களை மதிப்புடையதாக்காது.

உண்மையில், இருபத்தியோராம் நூற்றாண்டில் லத்தீன் அமெரிக்காவில் ஒரு சக்திவாய்ந்த இடதுசாரி புத்தெழுச்சி காணப்படுகிறது; ஜனநாயகம் மற்றும் மக்கள் பங்கேற்பை ஆழப்படுத்துவது, விரிவுபடுத்துவது ஆகிய பிரச்சனைகளுக்கு குறிப்பான கவனம் செலுத்தப்படுகிறது.

ஆம் ஆத்மி கட்சி இடதுசாரி கருத்துக்களை முன்னிறுத்தவில்லை, கம்யூனிஸ்ட் கருத்துக்கள்பால் நிற்கவில்லை என்பதால் நிச்சயமாக நாம் இதை ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக நிறுத்தவில்லை. ஆம் ஆத்மி கட்சி தாராளவாத ஜனநாயக விழுமியங்களை உண்மையிலேயே உயர்த்திப் பிடிக்கும் என்றால், கார்ப்பரேட்களால் செலுத்தப்படும் கூடாநட்பு முதலாளித்துவத்தின் இடத்தில் மக்கள் நல்வாழ்வு முதலாளித்துவத்தை கொண்டுவர முயற்சிக்க தயாராக இருக்கிறது என்றால், அது நிச்சயம் ஆளுகிற மேட்டுக்குடியின் அதிகார போதையிலான ஊழல் அரசியலை விட மேலானதொரு முன்னேற்றமாகத்தான் இருக்கும்.

ஆனால், அனைத்து தளங்களிலும் வெளிப்படைத்தன்மை பற்றி பேசும் ஆம் ஆத்மி கட்சி ஏன் கருத்தியல் இருட்டடிப்பிடம் தஞ்சம் புக வேண்டும்? ஆணாதிக்க தேச வெறிவாத குமார் விஸ்வாஸ் மற்றும் இனவாத சோம்நாத் பார்தி போன்றவர்களை கமல் மித்ரா செனாய், மல்லிகா சாராபாய் மற்றும் பிரஷாந்த் பூஷண் போன்ற முற்போக்காளர்களுடன் சேர்த்து நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் காரணமா?

அதிகாரப் பரவல் முயற்சியில் உள்ளூர் மக்கள் சபைகள் ஒரு பெரிய பரிசோதனையாக இருக்கலாம்; ஆனால், சமூக மாற்ற அரசியல் என்ற இன்னும் பெரிய நோக்குநிலை இல்லாவிட்டால், அதிகாரப் பரவல், சிறுபான்மையினர் மற்றும் பலவீனமான பிரிவினருக்கு எதிரான அனைத்து விதமான பெரும்பான்மைவாத மேட்டுகுடிவாத தப்பெண்ணங்களுக்கு ஒரு வாகனமாக எளிதில் மாறிவிடும்.

போதை மருந்து மற்றும் பாலியல் தொழிலை கட்டுப் படுத்துவது என்ற பெயரில் ஆம் ஆத்மி கட்சி நகர்ப்புற காப் பஞ்சாயத்து போல் நடந்து கொண்டதை கிர்கி சம்பவம் ஏற்கனவே காட்டிவிட்டது. அதுபோன்ற வெறிகொண்ட கொலை கும்பல் மனப்போக்கு மற்றும் ஆதிக்க கண்காணிப்பு செயல்பாடு ஆகியவற்றுக்கு மிக நெருக்கமாகத்தான், அப்பாவி மக்கள் மீது சுமத்தப்படும் அனைத்து விதமான ‘குற்றங்கள்’ மற்றும் ‘வழிவிலகல்கள்’ முதல்  முக்கியமான பிரதான நீரோட்ட கட்சிகள் குற்றம் சுமத்தப் பட்டுள்ள கலவரங்கள், வன்கொடுமைகள், சூனியகாரர்கள் என்று வேட்டையாடப்படுவது வரையிலான நிகழ்வுகள் உள்ளன.

டில்லியில் ஆம் ஆத்மி கட்சி எப்படி செயல்படுகிறது, குறிப்பாக, அதிகாரத்தில் உள்ள கட்சியாக அதன் பாத்திரம் எப்படி இருக்கிறது என்பதில் இருந்து அதை மதிப்பிடுவது சிறந்தது. இந்த துவக்க நாட்களிலேயே அறிகுறிகள், கலப்பு வகையாக இருக்கின்றன. ஆம் ஆத்மி கட்சி அதன் மூன்று வாக்குறுதிகளை நிறைவேற்றும் திசையில் நகர்ந்துள்ளது.

மின்கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது; 700 லிட்டர் விலையில்லா தண்ணீர் தரப்படுகிறது; பல்இலச்சினை சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு நிறுத்தப்பட்டிருக்கிறது. தண்ணீர் குழாய் இணைப்பு இல்லாத கணிசமான வறிய மக்களுக்கு இதில் ஆதாயம் எதுவும் இல்லை; நடுத்தர பிரிவினர் அரசு கருவூலத்தில் இருந்து ஆதாயம் பெறுவர். அதேபோல் 400 யூனிட் வரை மின்சாரம் செலவிடும் வீடுகளுக்கு மின்கட்டணம் பாதியாக குறைக்கப்படுவதால் ஒவ்வொரு மாதமும் இதற்கான மானியம் வழங்குவதில் அரசுக்கு ரூ.20 கோடி செலவாகும். இதுவும் நகர்ப்புற வறிய மக்களை விட நடுத்தரப் பிரிவினருக்கே ஆதாயமாக அமையும். மின்விநியோக நிறுவனங்களின் கணக்குகளை தணிக்கை செய்த பிறகு அந்த நிறுவனங்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எதுவும் எடுக்குமா என்று பார்க்க வேண்டியுள்ளது. மின்சாரம் தனியார்மயம் பின்னோக்கித் திருப்பப்படுமா என்ற மய்யமான கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

தொழிலாளர் வர்க்கத்துக்கு தரப்பட்ட முக்கியமான வாக்குறுதியான ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவது என்பது பற்றி அரசாங்கம் இன்னும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் அறிவிக்கவில்லை. உண்மையில், உடனடி பணி நிரந்தரம் கோரி ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஜனதா தர்பாரில் திரண்டபோது, ஜனதா தர்பார் நடத்தும் எண்ணத்தையே அரசாங்கம் கைவிட்டது.

சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தியின் பொறுப்பற்ற செயல் பொதுமக்கள் மத்தியில் பரவலான விமர்சனத்துக்கு உள்ளானபோது, ஆம்ஆத்மி கட்சி அந்தப் பிரச்சனையை மத்திய அரசாங்கத்துடனான மோதலாக மாற்றியது; காவல்துறை அதிகாரிகள் சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியது; இரண்டு நாட்களுக்குப் பிறகு காவல்துறை அதிகாரிகள் இரண்டு பேரை விடுப்பில் அனுப்பிவிட்டதாக மத்திய அரசு அறிவித்தபோது, தனது தோற்றத்துக்கு பெரிய சேதம் இல்லை என்ற நிலை உருவான பிறகு, கோரிக்கையை கைவிட்டது.

ஆனால், அதே நேரத்தில், பணி நிரந்தரம் என்ற ஆம் ஆத்மி கட்சியின் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரிய ஒப்பந்த ஆசிரியர்கள், ஆம் ஆத்மி கட்சி தார்ணா நடத்திய இடத்தில் தாக்கப்பட்டனர். சட்ட அமைச்சரின் சர்ச்சைக்குரிய நடுஇரவு சோதனை, அவருடைய இனவெறி, நிறவெறி கூற்றுக்களை ஆம் ஆத்மி கட்சி தலைவர்களின் கூற்றுக்கள் நியாயப்படுத்தியது, இனவெறி எதிர்ப்பாளர்கள் ‘போதை மருந்து மற்றும் பாலியல் தொழிலை’ நியாயப்படுத்துபவர்கள் என்று பரிகாசம் செய்யப்பட்டது ஆகியவை, ஓர் அரசியல் புரட்சியின் தீபத்தை ஏந்துபவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு கட்சிக்கு, கவலை தரும் அறிகுறிகள்.

அனைத்து தரப்பு மக்களையும் பல்வேறு இயக்கங்கள் நடத்தும் அமைப்புக்களையும் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைய வேண்டும் என்று சொல்வதன் மூலம் ஓர் அகில இந்திய கட்சியாக ஆம் ஆத்மி கட்சி விரிவடைய முயற்சி செய்வதும் ஜனநாயக அரசியலில் ஆரோக்கிய மான அறிகுறி அல்ல.

தற்போதைய கட்டம் 1977 போன்ற ஒரு கட்டம் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கருதலாம்; அப்போது காங்கிரஸ் கட்சி வடக்கில் முழுவதுமாக விரட்டி யடிக்கப்பட்டது; இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத அரசாங்கமாக ஜனதா கட்சி அதிசயிக்கத்தக்க விதத்தில் எழுந்தது. ஆனால், ஜனதா கட்சி அரசாங்கம் மிக விரைவாகவே வீழ்ந்தது. ஜனதா பரிசோதனையில் இருந்து சக்தியும் அங்கீகாரமும் பெற்று ஜன் சங் பாஜகவாக தன்னை மறுகண்டுபிடிப்பு செய்துகொண்டது. வர்க்கங்கள், கருத்தியல் போக்குகள், அரசியல் சாயைகள் என்ற பொருளில், ஆம் ஆத்மி கட்சி தனது ‘வானவில் கூட்டணி’ பிம்பத்தை எவ்வளவு காலம் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதை யாரும் ஊகித்துக் கொள்ள முடியும்.

ஆம் ஆத்மி கட்சி நிகழ்வுப்போக்குக்கு இடதுசாரிகள் எவ்வாறாக பதில்வினை ஆற்ற வேண்டும்? ஆம் ஆத்மி கட்சிக்குள்ளிருந்தே அதற்கு ஓர் இடதுசாரி திருப்பம் தரும் விருப்ப நம்பிக்கையுடன் சமீபத்தில் இடதுசாரி செயல்வீரர்கள் சிலர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளனர். ஆனால், இடதுசாரிகளின் எந்த காத்திரமான அமைப்பும் இயக்கமும் ஆம் ஆத்மி கட்சியை விடுதலைப் போராட்ட காலத்தில் காந்தியின் தலைமையில் செயல்பட்ட காங்கிரசின் மறு அவதாரம் என்று பார்க்காது. நிஜமான காங்கிரசில் கூட, சுபாஷ் போஸ் போன்ற மிகவும் பிரபலமான தேர்ந்தெடுக்கப்பட்ட இடது அணி காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட கம்யூனிஸ்டுகளும் சோசலிஸ்டுகளும் காலப்போக்கில் காங்கிரசில் இருந்து விலக நேர்ந்து தங்கள் சொந்த அமைப்புக்களை உருவாக்கினார்கள் என்பதை நினைவுபடுத்திக் கொள்வது நல்லது.

இந்தியாவில் காலனியத்துக்குப் பிந்தைய அரசியல் மாற்றம் என்ற வரலாற்றுப் பின்னணி யில், ஆம் ஆத்மி கட்சி நிகழ்வுப்போக்கின் இடத்தை காண வேண்டுமானால், சோசலிச நீரோட்டத்தின் எழுச்சியுடன் அதை ஒப்பிடலாம். ஜமீன்தாரி முறை ஒழிப்பு மற்றும் முதல் கட்ட நிலச்சீர்திருத்தம் ஆகியவற்றால் ஆதாயம் அடைந்த ஜமீன்தார் முறைக்குப் பிந்தைய விவசாய சமூகத்தில் சோசலிஸ்டுகள் தங்கள் வலுவான அடித்தளத்தைக் கொண்டிருந்தனர்.

ஆயினும் சோசலிஸ்ட் இயக்கம், நிலச்சீர்திருத்தத்துக்கான போராட்டத்தையோ, நிலப்பிரபுத்துவ மிச்சசொச்சங்களை ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டத்தையோ முன்னெடுத்துச் செல்லவில்லை; பழைய நிலப்பிரபுத்துவ அதிகாரத்துக்கு எதிராக, கிராமப்புற நடுத்தர வர்க்கத்தின் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதில் திருப்தியுற்றனர். இன்னும் பாதகமாக, பணக்கார விவசாயிகளின் உறுதிப்படுத்தப்பட்ட அதிகாரம், தங்கள் உரிமைகள், கவுரவம், முற்போக்கு நிலச்சீர்திருத்தம், மற்றும் விவசாய சீர்திருத்தங்கள் ஆகியவற்றுக்கான, கம்யூனிஸ்டுகள் தலைமையிலான, நிலமற்ற தொழிலாளர்களின், வறிய விவசாயிகளின் போராட்டங்களுக்கு எதிராக நின்றது.

ஆம் ஆத்மி கட்சி நிகழ்வுப்போக்கும், அதேபோல், முதன்மையாக, நடந்துகொண்டிருக்கிற பொருளாதார சீர்திருத்தங்களால் துவக்க காலத்தில் ஆதாயம் அடைந்த, ஆனால் கூடாநட்பு முதலாளித்துவத்தின் ஊழல் பிடித்த கார்ப்பரேட் மேலாதிக்க வழிமுறைகளால் தங்கள் விருப்பங்களும் வாய்ப்புக்களும் தடைபடுவதை பார்க்கும்.

Search