COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Sunday, December 15, 2013

நீதி மற்றும் விடுதலைக்கான போராட்டத்தில் நெல்சன் மண்டேலா எப்போதும் உற்சாகமளிப்பார்

நெல்சன் மண்டேலா நேற்று உயிர்நீத்தார். பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான, விடுதலை மற்றும் நீதிக்கான உறுதியான போராட்டத்தின் நிலைத்திருக்கும் வழிமரபை அவர் விட்டுச் சென்றுள்ளார்.

ஆப்பிரிக்கா சூறையாடப்பட்டதும் அடிமைப்படுத்தப்பட்டதும், ஒரு பொருளில், இன்று நாம் பார்க்கிற நவீன முதலாளித்துவ உலகின் அடிப்படைகளை நிறுவின. தென்ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கெதிரான தனது போராட்டத்தை நெல்சன் மண்டேலா நடத்தியபோது, ஜனநாயகம் மற்றும் விடுதலை என்ற பெயரில் போர் தொடுக்கும் ஆக்கிரமிப்பில் ஈடுபடும் அதே நாடுகளின் ஆதரவுதான், நிறவெறி ஆட்சிக்கும் இருந்தது என்பதை நினைவில் கொள்வது மிகவும் முக்கியமானது.

நீதி, சமத்துவம் மற்றும் விடுதலைக்கான நீண்ட போராட்டத்தின் திருவுருவாகவும், எதிர்ப்பின் இறவா உணர்வின் திருவுருவாகவும் மண்டேலா முதன்மையாக நினைவுகூரப்படுவார். உலகம் முழுவதும், பல நூற்றாண்டு கால ஒடுக்குமுறை மற்றும் அநீதிக்கெதிராக போராடுகிற மக்கள், நெல்சன் மண்டேலாவிடம் இருந்து உற்சாகம் பெறுவார்கள். டிசம்பர் 5 அன்று மண்டேலா மறைந்தார். அதற்கு அடுத்த நாள், ஆழப்பரவியுள்ள ஒடுக்குமுறை மற்றும் அநீதிக்கெதிரான போராட்டத்தின் இன்னொரு திருவுருவான பாபாசாஹேப் பிஆர் அம்பேத்கர் மறைந்த நாள்.

மண்டேலா மற்றும் அம்பேத்கரின் போராட்டம் இன்னும் நிறைவு பெறவில்லை. இனவெறி, நிறவெறி, சமூக ஒடுக்குமுறை ஆகியவை நவதாராளவாத உலகமயத்துடன் கைகோர்த்துக் கொண்டு மக்களை அடிமைச் சங்கிலியில் பிணைத்துள்ளன. அவர்களுடைய வழிமரபில் இருந்து உற்சாகம் பெற்று, விடுதலைக்கான போராளிகள், இனவெறியும் சமூக ஒடுக்குமுறையும் முழுமையாக ஒழிக்கப்படும் வரை உறுதியுடன் துணிச்சலுடன் தொடர்ந்து போராடுவார்கள்.

திபங்கர் பட்டாச்சார்யா
பொதுச் செயலாளர், இகக (மாலெ)
06.12.2013, புதுதில்லி

இறுதி நியாயம் கிடைக்கும் வரை

ஏற்காடு இடைத்தேர்தல் வெற்றி தந்த மகிழ்ச்சியில், இந்த வெற்றி தந்த மக்கள் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி தர வேண்டும் என்று ஜெயலலிதா தமிழக மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆளும்கட்சி இடைத்தேர்தல்களில் வெற்றி பெறுவது புதிதில்லை என்றாலும் மக்கள் நலத்திட்டங்களால் தமிழ்நாட்டை நிரப்பியுள்ளதாகச் சொல்கிற ஜெயலலிதா, அந்த நலத்திட்டங்கள் ஏற்காடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தரும் என்ற உறுதியான நிம்மதியுடன் சென்னையிலேயே இருந்துவிட முடியவில்லை.

இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் செய்ததும் செய்யாததும் தமிழக மக்களைபோல் ஜெயலலிதாவுக்கும் நன்கு தெரியும் என்பதால் ஒரேநாளில் ஒன்பது கூட்டங்களில் மக்களை சந்தித்தார். நலத்திட்டங்களைப் பட்டியலிட்டார். இதற்கு முந்தைய இடைத்தேர்தல்கள் போலவே அமைச்சர்கள் இறக்கப்பட்டனர். அனைத்துவிதமான முறைகேடுகளும் அரங்கேறின.  

ஏற்காடு தேர்தல் பற்றி மகிழ்ச்சி தெரிவித்த ஜெயலலிதா, அதே நாளில் வெளியான நான்கு மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பற்றி இன்னும் தனது கருத்தை வெளியிடவில்லை. அவருடைய மவுனம் பொருள் நிறைந்தது. அவருடைய மவுனம் நிச்சயம் மூன்றாவது அணிக்கானது அல்ல. 2014ல் தனக்கு ஆதாயம் தரக்கூடிய எந்த வாய்ப்பையும் விட்டுவிட, அல்லது கெடுத்துக்கொள்ள அவர் தயாராக இல்லை.

தமிழக மக்களின், ஏற்காடு தொகுதி மக்களின் எந்த வாழ்வாதாரப் பிரச்சனைக்கும் தீர்வு காணப்படாத நிலையில், இந்தத் தளத்தில் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாட்டில் வலுவான எதிர்ப்பும் இல்லாமல் போனதால்தான் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

ஜெயலலிதா அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லும்போது கூடவே அஇஅதிமுகவுடன் இககவும் இககமாவும் மட்டுமே நின்றன, மற்ற அனைத்து கட்சிகளும் எதிரணியில் இருந்தன, இருந்தபோதும் மகத்தான வெற்றி என்று சொல்லி வெற்றியில் பங்கு பெற தோழர் டி.கே.ரங்கராஜன் முயற்சி செய்கிறார். இந்த வெற்றி 2014 நாடாளுமன்ற தேர்தல்களிலும் தொடர வேண்டும் என்ற மதச்சார்பற்ற அணி பற்றிய தனது விருப்பத்தை சுற்றி வளைத்து தெரிவிக்கிறார்.

தமிழ்நாட்டுக்கு தனியாக பாஜக தேவையில்லை. ஜெயலலிதாவே அந்தப் பொறுப்பையும் நிறைவேற்றிவிடுவார். இந்த உண்மையை எந்தத் திரைபோட்டும் மறைக்க முடியாது என்பதை இககவும் இககமாவும் தெரிந்தும் தெரியாததுபோல் இருக்கின்றன.

கூலி கூட கேட்டார்கள், கூடவே சமத்துவமும் சமூகநீதியும் கவுரமும் கேட்டார்கள், கொஞ்சம் போனால் அதிகாரம் கேட்பார்கள், வர்க்கமாக எழுவார்கள் என்பதால் அன்று வெண்மணி எரிந்தது. தலித் மக்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர். அன்று அவர்கள் ஏற்றிய விடுதலை தீ பரவியது. அவர்கள் எரிக்கப்பட்டதை வேடிக்கை பார்த்தவர்கள் கூட சமத்துவம், சமூகநீதி என்று பேச வேண்டி வந்தது.

அது யதார்த்தமானபோது ஆதிக்கவெறி மீண்டும் தலைதூக்க கொடியன்குளம், தருமபுரி என, ஓரளவு மேல்நிலை எட்டிய தலித் மக்கள் மீது தாக்குதல்கள் அதிகரிக்கின்றன. எப்படி நீ சமமாவாய் என்று தாக்குதல். அதிகாரம் கேட்டால் தாக்குதல். எட்டிய நிலையை தக்க வைக்க நினைத்தால் தாக்குதல். தலித் மக்கள் மீது தாக்குதல்கள் ஓயவில்லை. வெண்மணி தீ இன்னும் சுடுகிறது.

இககமாவே இன்று வீதிகளில் இறங்கி தலித் மக்கள் பிரச்சனைகள் மீது போராட்டங்கள் நடத்துகிறது. சம்பத் கமிசன் அறிக்கை, மலக்குழி சாவுகள், தலித் குடியிருப்புக்கள் மீது தாக்குதல்கள், தமிழ்நாட்டில் எஸ்சி/எஸ்டி ஆணையம் ஆகியவற்றில் (அனுமதி பெற்று) சன்னமான குரல் எழுப்புகிறது.

தேசிய குற்றப்பதிவு அமைப்பு தரும் விவரங்கள்படி 2012ல் தமிழகச் சிறைகளில் தண்டனை அனுபவிப்பவர்கள் 4,678 பேரில் தலித்துகள் 1,748 பேர். பழங்குடியினர் 322 பேர். இசுலாமியர்கள் 642 பேர். கிறித்துவர்கள் 673 பேர். கிட்டத்தட்ட 72% பேர் தலித், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர்.

மொத்த முள்ள விசாரணைக் கைதிகள் 7,994 பேரில் தலித்துகள் 3,442 பேர். பழங்குடியினர் 898 பேர். இசுலாமியர்கள் 663 பேர். கிறித்துவர்கள் 637 பேர். கிட்டத்தட்ட 70% பேர் தலித், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர். இந்த இரண்டரை ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சி இந்தப் பிரச்சனையில் ஏன் ஏதும் செய்ய வில்லை? அல்லது ஏற்காட்டில் கூட நின்று ஜெயிக்க வைத்ததுபோல், இந்த விசயத்தில் ஏன் எதுவும் செய்ய வைக்க முடியவில்லை?

திண்டுக்கல் அருகில் உள்ள நடுப்பட்டியில் கோயில் திருவிழாவில் தலித் இளைஞர்கள் ஒண்டிவீரன் படம் போட்ட டி சர்ட் போட்டதால் துவங்கிய பிரச்சனை, தலித் மக்கள் வீடுகள் மீது வன்னிய சாதியைச் சேர்ந்தவர்கள் வெடிகுண்டுகள் போடுவது வரை தீவிரமடைந்துள்ளது. தலித் மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியவில்லை. பிரச்சனை உண்மையில் தலித் மக்களுக்குச் சொந்தமான நிலம் தொடர்பானது என்றும் சொல்லப்படுகிறது.

சட்டம் ஒழுங்கை காப்பதற்காக அவதரித்துள்ள ஜெயலலிதா ஏன் இதை முளையிலேயே கிள்ளியெறியவில்லை? கூட இருந்தவர்களும் ஏன் சுட்டிக் காட்டவில்லை? இந்தத் தாக்குதல் நடந்தது அக்டோபர் மாதம். நவம்பரில் முதலமைச்சர் தொகுதியான சிறீரங்கத்தில் தலித் மக்கள் மீது தாக்குதல். அதே மாதத்தில் அரக்கோணம் அருகில் ஷோலிங்கூரில் தலித் மக்கள் மீது தாக்குதல். டிசம்பரில் தருமபுரி அருகே வேப்பமருதூர் தலித்துகள் மீது தாக்குதல்.

தமிழ்நாடு தலித் விரோத நாடாகி விட்டதா? பணக்காரர்கள் கொலை செய்திருக்க மாட்டார்கள் என்று வெண்மணி வழக்கில் தீர்ப்பு வந்ததுபோல் மேல்சாதிக்காரர்கள் தாக்குதல் நடத்தியிருக்க மாட்டார்கள் என்று ஜெயலலிதா முடிவுக்கு வந்துவிட்டாரா? மோடிக்கு இசுலாமியர்கள் போல் ஜெயலலிதாவுக்கு தலித் மக்கள் மாறி விட்டார்களா?

தமிழ்நாட்டின் இசுலாமியர்களையும் ஜெயலலிதா மோடி மகிழ்ச்சி அடையும் விதத்தில்தான் நடத்துகிறார். தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவது, எங்கோ குண்டு வெடித்தால் எங்கிருப்பவரையோ கைது செய்வது, கைது செய்தவுடனேயே, விசாரணை துவங்கும் முன்பே அவர்களை குற்றவாளிகளாக சித்தரிக்க முயற்சிப்பது என தமிழ்நாட்டில் பாசிச நடவடிக்கைகள் தொய்வின்றி நடக்கின்றன.

மதச்சார்பற்ற அணியுடனோ, மதச்சார்பற்ற சக்தி என்றோ எந்த அடிப்படையிலும் ஜெயலலிதாவை அடையாளப்படுத்த முடியாத நிலை தமிழ்நாட்டில் இருக்கும்போது,  அவருக்கு வலுக்கட்டாயமாக மதச்சார்பின்மை முகம் தரும் முயற்சிகள் மக்கள் சீற்றத்தில் இருந்து ஜெயலலிதாவைத்தான் பாதுகாக்குமே தவிர, வேறு யாரும் விரும்பும் எந்த விளைவும் ஏற்படாது.

இன்றைய நிலைமைகளில் மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புடன் தொடர்புடையது. ஜெயலலிதா ஜனநாயகத்துக்கு ஆதரவானவர், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் என்று சொல்வார்களானால் தோழர்கள் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று அழைத்துக்கொள்வதை பரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.

ஜெயலலிதாவின் ஜனநாயக விரோத செயல்பாடு, ஏகாதிபத்திய சார்பு என்றும் திருப்பித் தாக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
வெண்மணி நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தச் செல்வது மட்டும் எரிந்து போனவர்களை திருப்திப்படுத்தாது. இறுதி நியாயம் கிடைக்கும்வரை அவர்கள் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

சட்டமன்ற தேர்தல்கள் சொல்லும் செய்தியும் 2014க்கான பெரிய போரும்

2014க்கான பெரிய போருக்கு முன் நடந்த சமீபத்திய சட்டமன்ற தேர்தல்களின் முடிவுகள், ஒரு வார்த்தையில் சொல்வதானால், திகைப்பூட்டுகிறது.

தேர்தல்களில் வெளிப்பட்ட போக்குகளை அரசியல் நோக்கர்கள் சில காலமாகவே பார்க்க முடிந்தது. பல தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புக்களும் இதை போதுமான அளவு காட்டியிருந்தன.

ஆனால், முடிவுகளின் தீவிரம் பல விசயங்களை சொல்கிறது.
ராஜஸ்தானிலும் டில்லியிலும் காங்கிரஸ் வெற்றி பெற்ற இடங்களின் பங்கு 10% அல்லது அதற்கும் குறைவாக சரிந்தது. தேர்தலுக்கு முன் தேர்தல்கள் நடந்த மூன்று மாநிலங்களில் காங்கிரசும் இரண்டு மாநிலங்களில் பாஜகவும் ஆட்சியில் இருந்தன. இந்த அய்ந்து மாநிலங்க ளில் இப்போது மிசோரம் மட்டுமே காங்கிரசுக்கு மிஞ்சியுள்ளது. பாஜக இன்னும் ஒரு மாநிலத்தில் கூடுதலாக வெற்றி பெற்று மூன்று மாநிலங்களை கைப்பற்றியுள்ளது.

டில்லியில், கைக்கெட்டியும் வாய்க்கெட்டாமல், தொங்கு சட்டமன்றம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டணி வடிவமைப்பாளர்கள், 36 என்ற மந்திர எண்ணிக்கையுடன் ஒரு தேர்தலுக்குப் பிந்தைய ஏற்பாட்டை உருவாக்குவதில் சிரமம் எதிர்கொள்கின்றனர்.

சட்டிஸ்கர் மற்றும் மிசோரத்துக்கு அப்பால், காங்கிரஸ் இந்தத் தேர்தல்களில் கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டது. ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்ற மோடியின் மூர்க்கமான அழைப்பு வெற்றி பெற்றுள்ளது என்று தெரிந்தாலும், அது பாஜகவின் சவாலுக்கு உட்படுத்தப்படாத மேலோங்கிய நிலையாக மிகச்சரியாக மாறவில்லை. பாஜக மூன்றில் இரண்டு இடங்களில் வெற்றி பெற்ற மத்தியபிரதேசத்திலும் பல அமைச்சர்கள் தோற்றுப் போயுள்ளனர்.

சட்டிஸ்கரில் இறுதி வரை அது நெருக்கமான போட்டியாகவே இருந்தது. டில்லியில் முதல்முறையாக தேர்தல் களம் காணும் ஆம் ஆத்மி கட்சியை விட சில இடங்களே கூடுதலாக பாஜக பெற்றுள்ளது. பெரும்பான்மை எண்ணிக்கைக்கு 5 இடங்கள் குறைவாகவே பெற்றுள்ளது.

 பாஜக தனது வெற்றிகளுக்கு மோடிதான் காரணம் என்று சொல்லலாம். ஆனால் மோடியின் மின்சார தாக்கம் தேர்தல்களில் உண்மையில் எந்த அளவுக்கு இருந்தது என்பது பற்றி தீர்ப்பு இன்னும் எழுதப்பட வேண்டியுள்ளது. மோடி பேரணி நடத்திய ஆறு தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது.

இந்தத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சிதான் உண்மையில் ஆகப்பெரிய கதையாக இருக்கிறது. சாதி, மதம், தேசியம், அல்லது பிராந்திய அடையாளம் போன்ற எந்த வழமையான காரணங்களாலும் உந்தித்தள்ளப்படாத ஒரு கட்சி, அதன் முதல் தேர்தல் பங்கேற்பிலேயே ஒரு சக்திவாய்ந்த தாக்கத்தை  ஏற்படுத்துவது, தேசத்தின் தலைநகரத்தில் அரசியல் பரப்புவெளியை மீண்டும் எழுதுவது என்பது உண்மையில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வே.

ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக் கதைக்குள் ஆய்வுக்குட்படுத்த பல விசயங்கள் உள்ளன என்றாலும், ஆம் ஆத்மி கட்சியின் கண்கவர் எழுச்சி, இன்றைய இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிற கடைசல் பற்றிய ஓர் இன்னும் பெரிய சித்திரத்தையும் தருகிறது. இந்தியாவின் மாறுகிற நகர்ப்புற மக்கள் தொகையியல், அதிகரித்து வருகிற அமைப்புக்குள் இருக்கிற அழுகலுக்கான ஒரு பதிலுக்கான வெகுமக்கள் வேட்கை ஆகியவற்றின் அரசியல் பிரதிபலிப்பைத்தான் நாம் இன்று பார்க்கிறோம்.

ஆயினும் மாற்றம் பற்றிய ஆம் ஆத்மி கட்சியின் கருத்து, அடிப்படை சமூக - பொருளாதார மாற்றம் என்பதற்கு மேல், சட்டரீதியான மாற்றத்தை, ஒரு வகை ‘ஆட்சிமுறை நவீனமயம்’ என்று ஒருவர் சொல்ல விரும்புவதை முன்னுரிமைப்படுத்துவதாக தெரிகிறது; பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் ஜனநாயகம், சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பால்நீதி ஆகிய முக்கிய பிரச்சனைகளில் ஆம் ஆத்மி கட்சி எப்படி உருவாகப் போகிறது என்று நாம் பார்க்க வேண்டியுள்ளது.

ஊழலுக்கெதிராக, காங்கிரசுக்கு எதிராக இருந்த வெகுமக்கள் சீற்றத்தை தட்டியெழுப்புவதில் துவங்கிய ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளை பெற்றது மட்டுமின்றி, பிரதானமாக, முன்னாள் அல்லது மரபுரீதியான காங்கிரஸ் ஆதரவு வாக்குகளையும் பெற்றிருக்கக் கூடும் என்பது சுவாரசியமானது.

ஆம் ஆத்மி கட்சி, ஆகக் கூடுதலாக, 29.3% வாக்குகள் பெற்றது. காங்கிரஸ் தனது வாக்குகளில் 17%அய் இழந்தது. பாஜகவும் 5% வாக்குகளை இழந்தது. மரபுரீதியான அல்லது கருவான காங்கிரஸ் வாக்காளர்களின் பல பிரிவினர் - மறுகுடியமர்வு காலனிகளிலோ, இசுலாமியர்கள் கூடுதலாக இருக்கிற பகுதிகளிலோ அல்லது அரசு ஊழியர்கள் மத்தியிலோ - ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்ததன் மூலம் காங்கிரஸ் சரிந்து போவதை துவக்கி வைத்து, ஆம் ஆத்மி கட்சியை, புறநிலைரீதியாக, பாஜகவுக்கு போட்டியாக நிறுத்தினர் என்பது தேர்தல் முடிவுகளில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.

போட்டியின் இந்த புதிய கட்டத்தை ஆம் ஆத்மி கட்சி எப்படி கையாளப் போகிறது என்பது சுவாரசியமானதாக இருக்கப் போகிறது. எதிர்க்கட்சியாக இருக்கப் போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளபோது, ஆம் ஆத்மி கட்சியின் ஒரு மூத்த தலைவர் பாஜகவுக்கு நிபந்தனை அடிப்படையிலான ஆதரவு தரும் கருத்தை முன்நகர்த்தியதாக சொல்லப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சிக்குள் நடந்த ஓர் ஆய்வு, ஆம் ஆத்மி கட்சியின் 31% ஆதரவாளர்கள், மோடியை பிரதமராகப் பார்க்க விரும்புகிறார்கள் என்று காட்டுவதாக தெரிகிறது.

2014 பெரிய இறுதிப் போட்டிக்கு முந்தைய அரையிறுதிப் போட்டி என ஊடகங்கள் இந்தத் தேர்தல்களை பரவலாக விவரிக்கின்றன. ஓர் இறுதிப் போட்டிக்கு முன் எப்போதும் இரண்டு அரையிறுதிப் போட்டிகள் இருக்கும்.

காங்கிரஸ் - பாஜக இருதுருவப் போக்கால், அரசியல் முறை மேலோங்கிய விதத்தில் குறிக்கப்படுகிற மாநிலங்களுக்கு அப்பால், பாஜகவின் இருத்தல் குறைவான, காங்கிரசின் இருத்தலும் கடந்த சில ஆண்டுகளில் ஓரஞ்சாரத்துக்கு தள்ளப்பட்டுள்ள பகுதிகளை உள்ளடக்கிய பல்துருவப் போக்குகள் கொண்ட, மிகப் பரந்த பகுதிகள் உள்ளன.

வழமையான இருதுருவ கோட்டைகளுள் ஒன்று கூட, மூன்று துருவங்கள் கொண்டதாக மாறி, டில்லியில் தொங்கு சட்டமன்றம் உருவாவதற்கு இட்டுச் செல்லும் என்பது, இந்தத் தேர்தல்கள் சொல்லும் பெரிய செய்தி.

அனைத்து சமிக்கைகளின்படியும், 2014க்கான போர், நாட்டின் பல பகுதிகளிலும் தீவிரமான போட்டி இருக்கும் பல்துருவ போராக இருக்கும். ஊழல் மற்றும் பெருநிறுவனச் சூறையாடல், மதவெறி மற்றும் ஜனநாயகம், மக்களின் உரிமைகள் மற்றும் செல்வாதாரங்கள் ஆகிய முக்கிய பிரச்சனைகள் பெரிதாக எழும்.

ஆபத்தான கார்ப்பரேட் - மதவெறி கூட்டுக்கு எதிரான, மக்களின், மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் போராக இந்தப் போரை நாம் மாற்ற வேண்டும்.

இடிந்தகரை, சுனாமி காலனி வெடிகுண்டு சம்பவத்துக்கும் அப்பாவிகள் 6 பேர் உயிரிழப்புக்கும் மாநிலக் காவல்துறையும் மாநில மத்திய அரசுகளும் பொறுப்பேற்க வேண்டும்! சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பான முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டும்!

கூடங்குளம் அணுஉலைக்கும், அணுஉலை எதிர்ப்பு இயக்கம் இரண்டாண்டுக்கு மேலாக நடந்துகொண்டிருக்கும் இடிந்தகரைக்கும், சமதூரத்திலுள்ள  சுனாமி காலனியில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து அப்பாவிகள் 6 பேர் உயிர் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. பல கேள்விகளை எழுப்புகிறது.

சர்வதேசக் கவனத்தைப் பெற்றதும் மாநில, மத்திய அரசுகளின் 24 மணி நேர இடைவிடாத நேரடிக் கவனத்திலிருக்கும் கூடங்குளம் அணுஉலைப் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் தாராளமாக புழங்குவதும் அடிக்கடி பயன்படுத்தப்படுவதும் இப்போது 6 பேர் கொல்லப்பட்டிருப்பதும் அனைவருக்கும் பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன. அத்துடன் காவல்துறையின் கண்காணிப்பு மற்றும் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் இப்படிப்பட்ட விபரீத சம்பவங்கள் எவ்வாறு நிகழ்கின்றன என்ற கேள்வியையும் எழுப்பு கின்றன.

அமைதியான முறையில் இரண்டாண்டுகளுக்கு மேலாகப் போராடிவரும் அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கம், அதன் தலைவர்கள், மக்கள் மீது 2 லட்சத்துக்கு மேலான பொய் வழக்குகள், சிறை, போராடும் மக்களைக் காணவரும் தலைவர்களுக்குத் தடை என இடிந்தகரை, கூடங்குளம் பகுதிகளை போலீஸ் முற்றுகைப் பகுதியாக கடந்த இரண்டாண்டுக்கு மேலாக வைத்துள்ள ஒரு பகுதியில் நடந்துள்ள இத்தகைய வெடிகுண்டு சம்பவங்கள் காவல்துறை, மாநில அரசாங்கத்தின் மீது பலத்த சந்தேகத்தை எழுப்புகின்றன.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து ஆளுனருக்கு முதல்வர் அறிக்கை அளித்ததாகச் சொல்லப்படும் அன்று இரவே நடந்துள்ள சுனாமி குடியிருப்பு வெடிகுண்டு சம்பவம் சட்டம் ஒழுங்கின் அவலத்தைப் படம் பிடித்துக் காட்டுவதாகவும் உள்ளது.

அமைதியாகப் போராடி வருகிற மக்கள் மீது கடும் அடக்குமுறையை ஏவி வருகிற மத்திய, மாநில அரசுகள் போராட்டத்தை உடைக்கும் நோக்கத்துடன், தாதுமணல் கொள்ளையர்களின் முழு ஆசியுடன் கள்ளத்தனமாக வெடிகுண்டுகள் தயாரிக்கும் சக்திகளுக்கு ஆதரவு அளித்து வருகிறதோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்துவதாகவே உள்ளது. மீனவர் சமூகத்து மக்கள் இரண்டு பிரிவினருக்கு இடையே உள்ள மோதல் இத்தகைய சம்பவங்களுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இது போன்ற சம்பவங்களில் காவல்துறை ஆதரவின்றி பெருமளவில் வெடிகுண்டுகள் தயாரிப்பதும் பயன்படுத்துவதும் நடப்பதில்லை.

மீனவர்கள் தாதுமணல் கொள்ளைக்கு எதிராகவும் தங்கள் எதிர்ப்புக் குரலை உயர்த்தியுள்ள நிலையில், அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாக பங்கு பெற்று வரும் மீனவர்கள் மத்தியில் பிளவைக் கொண்டுவரும் நோக்கத்துடன், இத்தகைய சம்பவங்கள் நடக்க மறைமுகமாகவோ, நேரடியாகவோ அரசின் ஆதரவுடன் காவல்துறை இவ்வாறு செயல் படுகிறதோ என்ற வலுவான அய்யத்தையும் எழுப்புகின்றன.

இந்த வெடிகுண்டு சம்பவத்தைப் பயன்படுத்தி அணுஉலைக்கு எதிராகப் போராட்டத்தை நடத்திவரும் தலைவர்கள் மீதும் மக்கள் மீதும் மீண்டும் பல பொய் வழக்குகளைப்போட மாநில அரசும் காவல்துறையும் திட்டமிடுகிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.

போராட்டக்காரர்களுக்கும் வெடிகுண்டுச் சம்பவத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் கூறிய பின்னரும் அணுசக்திக்கெதிரான தலைவர்கள்தான் இதற்குக் காரணம் என்று அனைத்துப் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் செய்திகள் வரச்செய்ததும் இப்போது காவல்துறை கண்காணிப்பாளர் இடம் மாற்றப்பட்டிருப்பதும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துவதாகவே உள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறது.

  • சுனாமி குடியிருப்பு வெடிகுண்டு சம்பவத்தை தடுக்கத் தவறிய காவல்துறையின் தோல்வி குறித்து நேர்மையான நீதி வசாரணை நடத்த வேண்டும்.
  • உயிரிழந்த 6 பேர் குடும்பத்துக்கும் தலா ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும். அவர்களது குடும்பத்தினருக்கு அரசாங்க வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். காயம் பட்டவர்களுக்கு முழுமையான சிகிச்சையும் நிவாரணமும் வழங்க வேண்டும்.
  • அந்தப் பகுதியில் நிரந்தரமான அமைதியைக் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் கூடங்குளம் அணுஉலைகளை மூட வேண்டும்.
  • போராட்டக்காரர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.
  • தாது மணல் அள்ளுவதை முழுமையாக தடைசெய்ய வேண்டும். தாது மணல் கொள் ளையர்கள் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். 

குறைந்தபட்ச கூலி கூட இல்லையென்றால் குறைந்தபட்ச வாக்குகளும் இல்லை - ஈஸ்வரி

டில்லியில் சோனியா காந்தி வீடு இருக்கிற ஜன்பத் சாலையில் ஃபெராரி கார் ஷோரூம் ஒன்று உள்ளது. சமீபத்தில் ஒரு நாள் அரியானாவைச் சேர்ந்த 24 வயதான ஒருவர், பெரிய மூட்டையுடன் அந்த ஷோரூமுக்குள் நுழைந்தார். மூட்டைக்குள் பணம். தனது தந்தையின் பிறந்த நாளுக்கு பரிசாக அளிக்க உடனடியாக ஒரு ஃபெராரி கார் வேண்டும் என்று அவசரப் பட்டார். ஒரு ஃபெராரி காரை வடிவமைக்க ஆறு மாதங்கள் ஆகும் என்பதால் ஆறு மாதங்கள் கழித்து அவரை வரச் சொன்னார்கள். அவருக்கு சுருதி குறைந்து போனது. காரின் விலை ரூ.2,51,30,829. இரண்டரை கோடி ரூபாயை சர்வ சாதாரணமாக ஒருவர் பணமாக கைமாற்றத் தயாராக வைத்திருக்க முடிகிறது.

இந்தியாவின் முதல் பத்து தலைமை நிர்வாக அதிகாரிகள் சம்பளம் ஆண்டுக்கு மொத்தம் 74.26 மில்லியன் டாலர். அதாவது 497 கோடியே 54 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய். மாதத்துக்கு ரூ.41 கோடியே 46 லட்சத்து 18 ஆயிரத்து 333. நாளொன்றுக்கு ரூ.1 கோடியே 38 லட்சத்து 20 ஆயிரத்து 611. 8 மணி நேர வேலை எனக் கணக்கில் கொண்டால் ஒரு மணி நேரத்துக்கு ரூ.17 லட்சத்து 27 ஆயிரத்து 576. இவர்களுக்கு பீஸ்ரேட், டைம்ரேட் என்ற எந்த அளவீடும் கிடையாது. அவ்வப்போது அந்தந்த நிறுவனங்களின் போர்டுகள் கூடி லாபத்துக்கு ஏற்றவாறு சம்பளம் நிர்ணயிக்கும்.

மாதத்துக்கு ரூ.41 லட்சத்துக்கு மேல் ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரிகள் எண்ணிக்கை 2010ல் 19 ஆக இருந்ததில் இருந்து 2013ல் 48 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் யாரும் மரத்தை வெட்டவோ மண்ணைத் தோண்டவோ வேண்டியதில்லை.

2010ல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பளம் மாற்றப்பட்டது. அதுவரை ரூ.16,000 சம்பளம் பெற்றவர்கள் உயர்த்தப்பட்ட பிறகு ரூ.50,000 பெற்றார்கள். படிகள், பிற சலுகைகள் எல்லாம் சேர்த்து அவர்கள் பெறும் தொகை ஆண்டொன்றுக்கு ஒருவருக்கு ரூ.32 லட்சம். 5 ஆண்டுகளுக்கு 534 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம், படிகள், சலுகைகள் என்றாகும் செலவு ரூ.855 கோடி. இவர்களுக்கும் டைம்ரேட், பீஸ்ரேட் என்று எதுவும் இல்லை.

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாநிதி ஆட்சி காலத்தின் இறுதியில் ரூ.50,000 வரை மாதமொன்றுக்கு சம்பளம் பெற்றார்கள். ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களில் அதை ரூ.55,000 ஆக்கினார். இவர்களுக்கும் டைம்ரேட், பீஸ்ரேட் என்று எதுவும் இல்லை.

(அப்புறம் ஏன்டா விவசாயத் தொழிலாளிக்கு தர மட்டும் அழுவுறீங்க... அளக்கறீங்க...?)

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 2006 - 2007ல் நிர்ணயிக்கப்பட்ட நாள் கூலி ரூ.69. 2013 - 2014ல் அது ரூ.174. இது முழுவதுமாக, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் எந்த விவசாயத் தொழிலாளிக்கும் இதுவரை கிடைத்ததில்லை. இன்னும் கூட ரூ.40 நாள் கூலி பெறும் நிலை இருக்கிறது. இரண்டரை கோடி ரூபாயை கையில் எடுத்துக் கொண்டு ஒருவர் கார் வாங்கச்சென்ற அதே அரியானாவில் நாள் முழுக்க உழைக்கும் ஒரு விவசாயத் தொழிலாளி ‘அளவீடுகளை பூர்த்தி செய்தால்’ அன்று ரூ.214 கூலி பெறுவார். வேலை உறுதித் திட்டத்தில் நாட்டில் விவசாயத் தொழிலாளி பெறும் கூலியில் அரியானாவில் தரப்படுவதே அதிகம். பிற மாநிலங்களில் இதைவிடக் குறைவு.

மாநில அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வேண்டும் என்பது பல்வேறு மாநில அரசு ஊழியர்களும் தொடர்ந்து வலியுறுத்தும் கோரிக்கை. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலையும் அரசு வேலைதான். அரசு திட்டங்களைத்தான் அந்தத் தொழிலாளர்கள் நிறைவேற்றுகிறார்கள். இங்கு மட்டும் நிலைமை தலைகீழாக உள்ளது.

விவசாயத் தொழிலாளர்களுக்கு மாநில அரசுகள் தரும் குறைந்தபட்ச ஊதியம் போல் ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கும் தர வேண்டுமென வலியுறுத்த வேண்டியுள்ளது.

தற்போது தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட கூலி நுகர்வோர் குறியீட்டெண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆயினும் 8 மாநிலங்களில் இது அங்குள்ள விவசாய தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச கூலியை விடக் குறைவாக உள்ளது. இவற்றில் அய்ந்து மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. மாநில அரசுகள் நிர்ணயிக்கும் கூலியையே மத்திய அரசு நிர்ணயித்தால் மாநில அரசுகள் அடிக்கடி குறைந்தபட்ச ஊதியத்தை மாற்றியமைக்கும்போது அது மத்திய அரசுக்கு சுமையாக மாறிவிடுமென மத்திய அரசு தயங்குகிறது.

பிரதமர் வேட்பாளர் முதலமைச்சராக இருக்கிற குஜராத்தில், ஊரக வேலை உறுதித் திட்டம் அறிமுகமான 2006க்குப் பிறகு ஒரே ஒருமுறைதான் விவசாயத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் மாற்றியமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 2005ல் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது மாற்றியமைக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்க்கான குறைந்த பட்சக் கூலி, கருணாநிதி ஆட்சியில் 2009ல் மாற்றியமைக்கப்பட்டதற்குப் பிறகு, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் மாற்றியமைக்கப்படவில்லை.

அய்முகூ எதிர்ப்புப் போராளியாக அறிக்கைகள் விடுக்கும் ஜெயலலிதாவின் ஆட்சியிலும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மத்திய அரசு நிர்ணயித்துள்ள கூலியை விட குறைவாகவே விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அய்முகூவை இடைவிடாமல் எதிர்ப்பதாகச் சொல்பவர்களின் செயல்பாடே இவ்வளவுதான் எனும்போது அய்முகூ சொல்வது வெறும் சாக்குதான்.

1983 (1) எல்எல்ஜே பக்கம் 220ல் குறிப்பிடப்பட்டுள்ள சஞ்சித் ராய் எதிர் ராஜஸ்தான் மாநில அரசாங்கம் வழக்கில் உச்சநீதிமன்றம், குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தில் உற்பத்தி அளவை அடிப்படையில் கூலி நிர்ணயிக்கப்படாத எந்த வேலைக்கும், தேவையான அளவு வேலை செய்யப்படவில்லை என்பதால் மாநில அரசாங்கம், கூலியை குறைக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது.

ராஜஸ்தான் மாநில அரசாங்கம், பஞ்ச நிவாரண வேலை செய்த தொழிலாளர்களின் ஒரு பகுதி கூலியை பிடித்தம் செய்தபோது, அப்படி பிடித்தம் செய்தது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று உச்சநீதிமன்றம் சொன்னது. அதேபோன்ற ஒரு தீர்ப்பு வழங்கிய நீதிபதி பி.என்.பகவதி, அப்படி பிடித்தம் செய்வது, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 23க்கு விரோதமானது என்றார். நீதிபதி ஆர்.எஸ்.பதக் அப்படி பிடித்தம் செய்வது, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 14க்கு விரோதமானது என்றார்.

இந்தச் சட்டங்கள், தீர்ப்புக்கள் எவற்றையும் மதிக்காமல் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் அளவீட்டின் அடிப்படையில் கூலி நிர்ணயிக்கப்படுகிறது. நிறைவேற்ற முடியாத அளவுக்கு நிர்ணயிக்கப்படுகிற இந்த அளவீட்டை, நிறைவேற்ற முடியாமல் முழு நாள் கூலி பெறுவது சாத்தியமற்ற நிலைமையே நிலவுகிறது. தமிழ்நாட்டில் ரூ.119, ரூ.132 என்று உயர்த்தப்பட்ட கூலியை தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் எந்தத் தொழிலாளியும் வாங்கவில்லை. இப்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள ரூ.148க்கும் அதே விதிதான்.

சோனியாவும் ராகுலும் பிற காங்கிரஸ் தலைவர்களும் மாறிமாறி பெருமை பேசுகிற தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 30.01.2013 அன்றைய நிலவரப்படி திட்டம் துவங்கியதில் இருந்து ஒரு குடும்பத்துக்கு சராசரியாக 44 நாட்கள் வேலை மட்டுமே தரப்பட்டுள்ளது. 2006 முதல் ஆறு ஆண்டுகளில் 12,000 கோடி வேலைநாட்கள் தரப்பட்டு, கூலி உட்பட பல்வேறு செலவினங்களும் சேர்த்து ரூ.1,66,760 கோடிதான் செலவிடப்பட்டுள்ளது.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் குறைந்த பட்ச கூலியில் மத்திய மாநில அரசுகள் நிர்ணயிக்கும் கூலியில் சமனிலை வேண்டும் என்று குரல் எழுப்பப்படும்போது, நாட்டின் மிகப்பெரிய தொழிலாளர் பிரிவான விவசாயத் தொழிலாளர்கள் தொடர்பான ஒரு திட்டத்திற்கான ஒதுக்கீட்டையே குறைப்பது அய்முகூ அரசாங்கத்தின் பதிலாக இருக்கிறது.

நிதிப்பற்றாக் குறையை சமாளிக்க, கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதிஒதுக்கீட்டில் ரூ.15,000 கோடி வரை குறைக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் பேசுகிறார். அதில் ரூ.2,000 கோடி ஊரக வேலை உறுதித் திட்ட ஒதுக்கீட்டில் குறைக்கப்படக்கூடும்.

தேசிய வேலை உறுதித் திட்டத்தில் கூலி அதிகமாக இருப்பதால் விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைக்காமல் விவசாயத்தில் ஒட்டுமொத்த உற்பத்தித் திறன் குறைகிறது என்று சரத்பவாரும், திட்டத்தில் வேலைக்கு ஆட்கள் வருவதில்லை என்று சிதம்பரமும், ஒதுக்கீட்டுக் குறைப்புக்குக் காரணம் சொல்கிறார்கள்.

வேலை உறுதித்திட்டம் விவசாயத்துக்கும் நீட்டிக்கப்பட வேண்டும், பேரூராட்சிகளும் திட்டத்தின் கீழ் வரவேண்டும் என்று நாட்டிலுள்ள விவசாயத் தொழிலாளர்கள் குரல் எழுப்புவது கேட்காததுபோல் நடிக்கிறார்கள்.

நான்கு மாநில மக்கள் காங்கிரஸ்காரர்களுக்கு குறைந்தபட்ச வாக்குகள் தராததால் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் வருத்தப்பட்டு பாரம் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.

அடுத்தச் சுற்று அலைக்கற்றை விற்பனை. இதுவும் கரைந்து போகும் - மஞ்சுளா

அய்முகூ அரசாங்கம் அறிவிப்பு

இன்று முதல், ஒரு கிலோ வெங்காயம் ரூ.5. ஒரு கிலோ அரிசி ரூ.5. 4 பேர் குடியிருக்கக் கூடிய அனைத்து நவீன வசதிகளும் கொண்ட ஒரு வீட்டின் வாடகை நகரத்தில் ரூ.2000. ஒரு பேண்ட் சர்ட் ரூ.50க்கு மிகாது. ஒரு சேலையோ, சுடிதாரோ ரூ.25தான்.

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் கட்டுப்பாட்டு ஆணையம் நிர்ணயித்த விலையை விட சற்று கூடுதலாக அரசு நிர்ணயித்த விலைப் பட்டியல் இது. இது சென்ற ஆண்டு இருந்த விலையை விட 50% குறைவு.
இப்படி ஒரு செய்தி நாளிதழ்களில் வெளியானால் யாராவது நம்புவார்களா?

அய்முகூ ஆட்சியில் இப்படி வெளியாகாது. ஏனென்றால் அந்த அறிவிப்பு சாமான்ய மக்களுக்கு ஆதரவானது. ஆனால், அய்முகூ அரசாங்கம் அலைக்கற்றை தொடர்பான கட்டணங்களை இப்படித்தான் குறைத்துள்ளது. வோடாஃபோன், ரிலையன்ஸ், டாடா, அய்டியா, பார்தி ஆகியோர் அலைக்கற்றை வாங்கப் போகிறார்கள்.

அலைக்கற்றை ஊழலில் அரசியல்வாதிகள் சிறைக்குச் சென்றார்கள்; தரகர்கள் விசாரிக்கப் பட்டார்கள்; சில முதலாளிகள் கூட நீதிக்கு முன் நிறுத்தப்பட்டார்கள்; ஆனால், நாடு இழந்துவிட்ட ரூ.1.76 லட்சம் கோடியில் ஒரு ரூபாய் கூட இன்னும் நாட்டுக்கு திரும்பவே இல்லை. அது யானை வாய்க்குள் போன கரும்பு.

ஊழலில் விசாரணை, கைது, சிறைவாசம்  என நடந்துகொண்டிருக்க, ஆ.ராசா அமைச்சராக இருந்தபோது வழங்கப்பட்ட அலைக்கற்றை உரிமங்கள் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் பிறகு ரத்து செய்யப்பட்ட பின் நவம்பர் 2012 மற்றும் மார்ச் 2013 என இரண்டு முறை 2 ஜி அலைக்கற்றை உரிமங்கள் ஏலம் விடப்பட்டுள்ளன. 2010ல் நடந்த 3 ஜி மற்றும் 4 ஜி அலைக்கற்றை விற்பனையில் ரூ.1,06,262 கோடி வருவாய் வந்தது.

நவம்பர் 2012 விற்பனை எதிர்ப்பார்த்தது போல் இல்லை என்றாலும் ரூ.9,407 கோடி கருவூலத்துக்கு வந்தது. மார்ச் 2013 விற்பனையில் சிஸ்டெமா ஷ்யாம் டெலிசர்வீசஸ் (எம்டிஎஸ்) மட்டும் பங்கேற்று வெறும் ரூ.3600 கோடி வருவாய் வந்தது. விற்பனை என்று வரும் போது கூடுதல் விலை நிர்ணயிப்பதில் கார்ட்டல்கள் அமைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அலைக்கற்றை வாங்குவது என்று வந்த போது, விலையைக் குறைக்க கார்ட்டல்கள் அமைத்து வாங்குவதைக் குறைத்தன.

ரூ.1.76 லட்சம் கோடி இழப்புக்கு எதிராக நாடு கிளர்ந்தெழுந்தபோது, நட்டமே ஏற்பட வில்லை என்று கபில் சிபல் சொன்னதை உறுதிப் படுத்தவும் இந்த நடவடிக்கை பயன்பட்டது. இப்போது அதே அலைக்கற்றைக்கு ரூ.9,407 கோடிதான் வந்துள்ளது, எங்கே அந்த ரூ.1.76 லட்சம் கோடி என்று கபில் சிபல் கேட்டார். மறுபுறம், முதல் முறை குறைவருவாயும், அடுத்த முறை விற்பனையில் ஒரு நிறுவனம் தவிர யாரும் வாங்க வராததும் சேர்ந்து அலைக்கற்றை விலைக் குறைப்புக்கு சூழல் உருவாக்கின.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை யாரும் வாங்கவில்லை என்றால் கெட்டுப்போகும், அதனால், கடைசி நேரத்திலாவது விலையை குறைத்து விற்க வேண்டியிருக்கும். அலைக்கற்றை கெட்டுப் போகப் போவதில்லை.

அரசுக்கு, தன் கருவூலத்துக்கு நல்ல வருவாய் வர வேண்டும் என்ற உறுதியான எண்ணம் இருந்தால் இந்த விலைதான், வாங்கினால் வாங்கு இல்லை என்றால் போ என்று சொல்ல வேண்டும். ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் கோடு போட்டால் அதை கோலமாக்கிவிடும் அய்முகூ அரசு இந்த வாய்ப்பை இறுகப் பற்றிக் கொண்டது.

ட்ராய் நிர்ணயித்த விலையை விடக் கூடுதலாக நிர்ணயித்து, அய்முகூ அமைச்சரவை, அதனால் தனக்கு நாட்டின் செல்வத்தின் மீது அக்கறை அதிகம் என்று சொல்கிறது.

2014 ஜனவரியில் நடக்கவுள்ள அலைக்கற்றை விற்பனையின்போது,
2013 மார்ச்சில் இருந்ததை விட 37% முதல் 53% சதம் விலை குறைவாக இருக்கும்.

பயன்பாட்டு கட்டணம் நிறுவனம் வைத்திருக்கும் அலைக்கற்றை அளவுக்கேற்ப அல்லாமல் அனைத்து நிறுவனங்களுக்கும் சீராக 3% என்று இருக்கும். (கூடுதல் அலைக்கற்றை வாங்குபவருக்கு என்ன ஊக்கம் இருக்க முடியும்? அவர் கூடுதல் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதே என்று வோடாஃபோன் சொன்னதை அப்படியே சொல்லி கபில் சிபல் கவலைப்படுகிறார்).

அபராதத் தொகை குறைக்கப்படும். (சாதாரண செயல்முறை தவறுகள் மட்டுமே ஏற்படுவதால் தவறுகளுக்கான அபராதத் தொகை குறைக்கப்படும் - கபில் சிபல். இதை அவரே சொன்னார்).

1800 மெ.ஹெ அலைக்கற்றையை விட 900 மெ.ஹெ அலைக்கற்றை விலை இரண்டு மடங்கு கூடுதலாக இருந்தது. இப்போது அது 1.6 மடங்கு முதல் 1.7 மடங்கு வரை மட்டுமே கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அலைபேசி சேவையில் முன்னணி இடங்களில் இருக்கிற பார்தி ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் நிறுவனங்களின் உரிமங்கள் டில்லி மற்றும் மும்பையில் நவம்பர் 2014ல் காலாவதியாகிவிடும். ஒழுங்குமுறை ஆணையம் குறைக்கப்பட்ட விலைகளை அறிவித்ததை ஒட்டி, அய்டியா செல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிறுவனங்கள் 900 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை வைத்துள்ளன. இந்த அலைக்கற்றை விலை இப்போது 53% குறைக்கப்பட்டுள்ளது. ட்ராய் 60% குறைக்க வேண்டும் என பரிந்துரைத்தது. 1800 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை விலையை 37% குறைக்க வேண்டும் என பரிந்துரைத்தது.

அலைக்கற்றை உபயோகக் கட்டணத்தையும் தற்போது வைத்துள்ள அலைக்கற்றை அளவுக் கேற்ப, வருவாயில் 3% முதல் 8% என்பதை, எவ்வளவு அலைக்கற்றை வைத்திருந்தாலும் 3% என்று குறைத்து பரிந்துரைத்துள்ளது. இதனால், நிறுவனங்கள் கூடுதல் அலைக்கற்றை வாங்குவார்கள் என்று வாதம் முன்வைக்கப்படுகிறது. இது பற்றி இன்னும் அமைச்சரவைக் குழு முடிவெடுக்கவில்லை.

இந்த மூன்று நிறுவனங்கள்தான் பெரிய அளவில் 900 மெ.ஹெ. அலைக்கற்றை வைத்துள்ளன. இப்போது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவும் 900 மெ.ஹெ. அலைக்கற்றை வாங்கும். அய்முகூ தன் சட்டைப் பைக்குள் இருப்பதாக முகேஷ் அம்பானி சொன்னார்.

அப்படிப்பட்ட அரசாங்கத்தின் விலைக்குறைப்பு அறிவிப்பு ஏன் என்பதற்கு இதைவிட சிறப்பான காரணம் வேறென்ன இருக்க முடியும்?

அலைக்கற்றை விலை குறைப்பால் நாட்டின் கருவூலத்துக்கு ரூ.35,000 கோடி இழப்பு ஏற்படும் என்று முன்னாள் நிதியமைச்சரான பாஜகவின் யஷ்வந்த் சின்ஹா சொல்கிறார். (கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிவது வேறு பிரச்சனை). இப்போது, அரசாங்கம் எதிர்ப்பார்க் கும் ரூ.33,000 கோடி வருமானம் வந்து விட்டால், யஷ்வந்த சின்ஹா சொல்லும் கணக்கையும் சேர்த்துக் கொண்டால் ரூ.1.76 லட்சம் கோடிக்கு நியாயம் கிடைக்கலாம்.

முன்பு முறைகேடாக நடந்தது இப்போது முறையாக நடக்கிறது. இரண்டிலும் விளைவு ஒன்றுதான். நாட்டுக்கு இழப்பு. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம்.

இதற்கு கூட வோடாஃபோன் நிறுவனம் தயாராக இல்லை. நாங்கள் ஏற்கனவே வைத்தி ருக்கிற அலைக்கற்றையை ஏன் ஒப்படைக்க வேண்டும், அந்த உரிமங்களை நீட்டித்தால் போதாதா என்று கேட்கிறது. தன்னிடம் இப்போதுள்ள அலைக்கற்றைக்கு முன்பு கொடுத்ததுபோல் 1.6 மடங்கு கூடுதலாக தருவதாகச் சொல்கிறது.

20 ஆண்டுகளுக்கு பயன்பாட்டு கட்டணம் ரூ.4000 கோடி தருவதாகவும் ஆண்டுக்கு ரூ.4000 கோடி முதல் ரூ.7000 கோடி வரை இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பதாகவும் வோடாஃபோன் சொல்லியுள்ளது. இந்திய அரசுக்கு வரியாக செலுத்த வேண்டிய ரூ.11,200 கோடியை செலுத்த வேண்டியதில்லை என்று சொல்லும் உச்சநீதிமன்றம் இருக்கிற ஒரு நாட் டில் முதலீடு செய்ய எந்த நிறுவனத்துக்குத்தான் ஆர்வம் இருக்காது?

தனியார் நிறுவனங்கள் நாட்டின் இயற்கை செல்வத்தை குறைந்த விலையில் வாங்கி லாபம் ஈட்டும்போது, அரசு நிறுவனங்களான பிஎஸ் என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் மட்டும் நட்டம் காட்டுகின்றன. திட்டமிட்டு நட்டத்தில் தள்ளப்படுகின்றன.

இப்போது பயன்பாட்டு கட்டணம் என்ன, உரிம விற்பனைக்கான செயல்முறை என்ன என்று இந்திய அரசாங்கத்துக்குச் கட்டளையிடப் பார்க்கிறது வோடாஃபோன் நிறுவனம்.

அலைபேசியில் பேசப்பேச வயிறு நிரம்பும் மந்திரத் தொழில்நுட்பத்தையும் சேர்த்து வோடாஃபோனும் ரிலையன்ஸ் ஜியோவும் இன்ன பிற கார்ப்பரேட் நிறுவனங்களும் தந்தால் அய்முகூ அரசாங்கம் உணவுப் பாதுகாப்பு என்று ‘கவலைப்பட’ வேண்டியதில்லை.

வகுப்புவாதம்

(20 - 26 டிசம்பர் 1992 கொல்கத்தாவில் நடந்த இககமாலெ அய்ந்தாவது அகில இந்திய மாநாட்டில் தோழர் வினோத் மிஸ்ரா (24.03.1947 - 18.12.1998) முன்வைத்த அரசியல் அமைப்பு அறிக்கையிலிருந்து)

 கடந்த ஒரு சில வருடங்களாக இந்தியாவின் வகுப்புவாத சூடு தணியாமல் தொடர்ந்து அதிகரித்து வரவே செய்கிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதையும் அதையடுத்து ஆயிரம் பேர் பலியாகி மேலும் பலர் காயமடைந்த நாடு தழுவிய துயரச் சம்பவத்தையும் அடுத்து வகுப்பு வாதம் அரசியல் நிகழ்ச்சிநிரலில் முதல் இடத்திற்கு வந்துள்ளது.

நேருவிய பொருளாதார முன்மாதிரியின் வீழ்ச்சி, அரசியல் அமைப்பு மீது வளர்ந்து வரும் மக்கள் அதிருப்தி, தேசிய ஒற்றுமைக்கு எதிரான உண்மையான மற்றும் கற்பனைரீதியான அச்சுறுத்தல்கள், வலதுசாரி மற்றும் அடிப்படைவாத எழுச்சிக்கான சர்வதேச சூழல் ஆகிய பல காரணிகள், வகுப்புவாத கருத்தியலும் அரசியலும் வளர்வதற்கு உகந்த சூழல் ஏற்பட பங்களிப்பு செய்துள்ளன.

பிரதான நீரோட்டத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் - காங்கிரஸ் (இ) ஜனதா தளம், சிபிஅய் மற்றும் சிபிஅய் (எம்) ஆகிய அனைத்தும் உட்பட, ஏதேனும் ஒரு கட்டத்தில் பிஜேபி தொடர்பாகக் கடைபிடித்த அரசியல் சந்தர்ப்பவாதம் பிஜேபியின் வளர்ச்சிக்கு மேலும் உதவியது. 
  
ராம் ஜன்ம பூமி - பாபர் மசூதி பிரச்சனை இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையிலான   வெறும் கோவில் – மசூதி பிரச்சனை மட்டுமல்ல என்பது தெளிவாக புரிந்துகொள்ளப்பட வேண்டும். ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபியின் புத்திசாலித்தனமான தலைமை, பாபர் மசூதியை இந்து இந்தியாவின் மீதான முஸ்லீம் படையெடுப்பின் நினைவுச் சின்னமாக இடைவிடாமல் முன்னிறுத்தி வந்துள்ளது. இந்து மகிமை மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டுமானால், மசூதி நொறுக்கப்பட வேண்டும் என கூறிவந்துள்ளது.

இங்ஙனம் ராம ஜென்ம பூமி, இந்து ராஜ்ஜியம் என்ற நெடுநாளைய ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் மிகவும் குறிப்பானதோர் சின்னமாக ஆகியது. அப்பாவி இந்து மக்கள் மத்தியில் பெரும் எண்ணிக்கையினரைக் கவர்ந்தது.

அத்துடன் சங் குடும்பத்தால் திறம்பட கட்டமைக்கப்பட்ட பெரும்மக்கள் இயக்கத்தின் குணாம்சத்தைப் பெற்றது. மதம் என்ற முகமூடிக்குப் பின்னால் உண்மையில் அரசியலும் கருத்தியலுமே இருந்தன. ராமர் பெயர், பாஜகவை நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குக்கும் கொண்டு சென்று குறுகிய காலத்திற்குள் அதை பிரதான எதிர்க்கட்சியாக்க உதவியது.

நான்கு மாநிலங்களில் பாஜக அதிகாரத்தில் இருப்பதனால், இந்து ராஜ்யக் கருத்தியலைப் பரப்பும் மய்யங்களாக  பள்ளிக்கூடங்களை மாற்ற, ஆர்எஸ்எஸ், பள்ளி பாடத்திட்டங்களை உடனடியாக மாற்றத் தொடங்கியது.

இங்ஙனம் பாஜக, மார்க்சிஸ்ட் மற்றும் பல்வேறு இதர சோசலிச இலட்சியங்கள் பின் வாங்கியதாலும், காங்கிரஸ் அவப்பெயருக்கு உள்ளானதாலும் ஏற்பட்ட, கருத்தியல் அரசியல் வெற்றிடத்தைப் பயன்படுத்தி, வகுப்புவாத - பாசிச மாற்றாக தோன்றியுள்ளது. முதலாளித்துவ வர்க்கம், மற்றும் நிலப்பிரபுக்களின் மிகவும் பழமைவாதப் பிரிவின் பிரதி நிதித்துவரீதியான சிந்தனையாக விளங்கும் பாசிசம், அதன் தன்மையிலேயே அடாவடிக் குணத்தைக் கொண்டது. ஓரிரு மாநிலங்களில் பெற்ற அதிகாரத்தோடு திருப்தியடைந்து விடக்கூடிய கட்சியல்ல பாஜக.

டெல்லியில் அதிகாரத்தைக் கைப்பற்ற அடுத்த பாய்ச்சலை மேற்கொள்ள அது துடித்துக் கொண்டிருக்கிறது. எனவே அது அயோத்யா பிரச்சனையில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டு வந்தது. பாபரி மசூதி இடிக்கப்படுவதைக் கட்டமைத்தது. இப்போது காசியிலும் மதுராவிலும் முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களை இடிக்கப்போவதாக புதிய அச்சுறுத்தல்களை விட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த வகுப்புவாதத் தாக்குதல்களுக்கு அதிகாரபூர்வ பதில், தாராளவாத இந்து கருத்தை எழுப்புவதோடும், சட்டரீதியான வழிகளைக் கையாளுவதோடும் நின்று விடுகிறது. பிரதான நீரோட்ட இடதுசாரி பதிலும் இந்த எல்லைக்கோட்டை ஒருபோதும் தாண்ட முடியவில்லை. இது இறுதியில் ‘கோவில் கட்டப்படட்டும், மசூதி இருக்கட்டும், சட்டத்தைப் பின்பற்றுவோம்’ என்ற கோஷ மாக போய் முடிந்தது.

மார்க்ஸ் உயிரோடு இருந்திருந்தால், இந்தியாவில் எல்லா போராட்டங்களும், வர்க்கங்களுக்கிடையிலான போராட்டமானாலும் சரி, கருத்துக் கோப்புக்களுக்கிடையிலான போராட்டமானாலும் சரி, சமரசங்களில்தான் முடிவடைகின்றன என கருத்து தெரிவித்திருப்பார். மதச்சார்பின்மை விசயத்திலும் அப்படியே.

இந்துக்கள் பெரும்பான்மையினராக இருப் பதால்தான் இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்கிறது என்ற மற்றொரு பாஜக பிரச்சாரத்தால் பலர் கவரப்பட்டுள்ளனர். இஸ்லாமில் உள்ளார்ந்திருப்பதாகக் கூறப்படும்

அடிப்படை வாதத்திற்கு நேர்மாறாக, இந்து மதம் தாராளவாதத் தன்மையும் சகிப்புத் தன்மையும் வாய்ந்தது என்ற கருத்து இதில் உட்பொதிந்துள்ளது.
முதலாவதாக,  அயோத்யா  சம்பவங்கள் இந்த மாயையை ஆணித்தரமாக தகர்த்திருக் கின்றன. அயோத்யாவை தனது ஹிந்து வாடிகனாக சொல்லிக் கொண்டு, விஸ்வ ஹிந்து பரிஷத் போன்று ஒரு கட்டமைக்கப்பட்ட இயல்பை ஹிந்துயிசம் மேற்கொண்டவுடனேயே, ஹிந்து மடாதிபதிகள், வேறு எந்த மதத்தையும் சேர்ந்த அடிப்படைவாதிகளைப் போலவே வெறியர்களாகவும் தீவிரவாதிகளாக வும் வெளிப்பட்டனர்.

இரண்டாவதாக, மதச்சார்பின்மைக்கும் (சர்வ தர்ம சம்பவே) எல்லா மதமும் சமம் என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது மதச்சார்பின்மையை இந்தியமயமாக்குவது என்ற பெயரில், இந்தியாவின் நவீன சமூக சிந்தனையாளர்களால் அதற்கு கொடுக்கப்பட்ட அர்த்தம். மதச்சார்பின்மை என்பது முக்கியமாக அரசு விவகாரங்களைக் கட்டமைப்பதில் மதத்தை நிராகரிப்பது என்று அர்த்தம்.

மூன்றாவதாக, எங்கும் மதச்சார்பற்ற அரசு என்பது வெற்றிகரமான ஜனநாயகப் புரட்சியின் விளைபொருளாகும். இந்தியாவில் மதச்சார்பின்மை எனும் கருத்துக்கோப்பை நீர்த்துப் போகச் செய்வதற்கான நிர்ப்பந்தமே இந்திய ஜனநாயகப் புரட்சியின் முடிக்கப்படாத குணாதிசயத்திற்கான மற்றொரு வாக்குமூலமாகும்.  எந்த ஒரு மதத்தின் பழமைவாத முகமோ அல்லது தாராளவாத முகமோ எது மேலோங்கிய நிலையை  மேற்கொள்கிறது  என்பது சிவில் சமூகத்தின் பரிணாம வளர்ச்சிக் கட்டத்தோடு தொடர்புடையது.

கிருஸ்த்துவ மதம் பழமைவாதக் கட்டத்திலிருந்து தாராளவாதத்திற்கு கடந்து சென்று கொண்டிருக்கிறது அல்லது உள்ளார்ந்தரீதியில் தாராளவாதத் தன்மை வாய்ந்தது என்று சொல்லப்பட்ட சீக்கிய மதம், காலிஸ்தான் எழுச்சியையடுத்து பழமைவாதத் தன்மைவாய்ந்ததாக மாறிக் கொண்டிருப்பது இவையெல்லாம் இந்த சமூக விதிக்கான எடுத்துக் காட்டுகளாகும்
பாபர் மசூதி இடிக்கப்பட்டது இந்து மத அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதாக தாராளவாத ஹிந்து அறிவுஜீவிகளெல்லாம் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதே நேரத்தில், இந்த பாழடைந்த கட்டிடத்தின் மீதான அதிலும் வழிபாடு நடக்காத இந்த மசூதி மீதான தங்கள் கோரிக்கையை முஸ்லீம் தலைவர்கள் ஏன் விட்டுக்கொடுக்கவில்லை என்றும் வியப்பு தெரிவிக்கின்றனர். இசுலாமியர்களைப் பொறுத்தவரையிலும் கூட பாபர் மசூதி என்பது இந்தியாவின் சிக்கலான சமூக பொருளாதார நிலைமைகளில் அவர்களது அடையாளத்தையும் இருத்தலையும் குறிக்கும் நினைவுச் சின்னம் என்பதை அவர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள்.

இந்திய மதச் சார்பற்ற அறிவுஜீவிகள் சாமானியனிடமிருந்து தனிமைப்பட்டிருப்பதும், அதன் காரணமாக, வகுப்புவாதத் தாக்குதலின் முன்னிலையில் அவர்களுக்கு ஏற்படும் பீதியும், சில நேரங்களில் கோயிலுக்கு எதிராக மண்டலை நிறுத்துவது என்ற எதிர்மறையான போர்த்தந்திரத்தை சார்ந்திருக்க வைத்துள்ளது. இந்த போர் தந்திரம் சென்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தது.

இன்றைய வகுப்புவாத தாக்குதலுக்கு எதிராக பரந்த மக்கள் கருத்தை அணிதிரட்ட இந்துயிசம் மற்றும் இஸ்லாம் ஆகிய இரு மதங்களின் தாராளவாத நெறிகளையும், அதோடு தொல்பொருள் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் நீதிமன்ற தீர்ப்புகள் ஆகிய அனைத்தையும் நன்கு பயன்படுத்த வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும், சுதந்திரமான இடதுசாரி மேடையிலிருந்து நவீன மதச்சார்பற்ற இலட்சியங்களை பரவலாக பிரச்சாரம் செய்வது மட்டுமே எதிர்த்தாக்குதலுக்கான சாராம்சரீதியாக கருவாக அமைய முடியும்.

மேலும், மதச்சார்பின்மை என்ற பெயரால், ஜனநாயக அல்லது மதச்சார்பற்ற முன்னணி என்ற பெயரால் எல்லா வகையான சந்தர்ப்பவாத கூட்டுகளையும் நியாயப்படுத்தக் கூடாது. மாறாக அது ஜனநாயகப் புரட்சியின் பிரிக்கப்பட முடியாத பகுதியாக ஆக்கப்பட வேண்டும். ஜனநாயகப் பிரச்சனைகளையும் கூட கையிலெடுக்கக் கூடிய ஒரு மதச்சார்பற்ற முன்னணி என்பதற்கு பதிலாக, ஒரு மதச்சார்பற்ற அரசை அமைப்பதை தனது நிகழ்ச்சிநிரலில் முதன் மையாகக் கொண்ட ஒரு ஜனநாயக முன்னணியை நாம் கொண்டிருக்க வேண்டும். அது வெறும் நியாய நெறி பிரச்சனையாக அல்லாமல்  ஒரு நடைமுறை அரசியல் பிரச்சனையாக, ஒரு நவீன இந்தியாவைக் கட்டுவதற்கான முழு முதல் நிபந்தனையாக இருக்க வேண்டும்.

கஸ்தூரிரங்கன் அறிக்கை வேண்டாம்


....வளர்ச்சியின் அடிப்படை கொள்கை என்பது, வளங்களின் மீது மக்களின் கட்டுப்பாட்டை உத்தரவாதம் செய்வது மற்றும் அந்த வளங்களிலிருந்து பெறும் வருவாயை மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பயன்படுத்துவதை உத்தரவாதம் செய்வது என்பதாக மறுவரையறை செய்யப்பட வேண்டும்.....

....புவி வெப்பமடைதலில் இருந்து, தொழிற்சாலை மாசு, நீராதாரம் மற்றும் வனவளங்கள் குறைவது வரையான சுற்றுச்சூழல் பிரச்சனைகள் எல்லாவற்றுக்கும் ஆட்சியாளர்கள் முன்வைக்கும் தீர்வு, இந்தப் பிரச்சினைகளை மேலும் மோசமாக்கும் சந்தை மற்றும் லாப வரையறைகளை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. மேலும், இதற்காக முன்வைக்கப்படும் தீர்வுகள் மூலம் சுற்றுச்சூழல் தரந்தாழ்ந்து போவது மற்றும் சுற்றுப்புறவியலின் சேதம் ஆகியவற்றால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் பரம ஏழைகள் மற்றும் சமூகத்தின் ஓரஞ்சாரத்தில் இருக்கும் மக்கள் பிரிவினர் ஆகியோரே சுற்றுச்சூழல் பாதிப்பின் மொத்த பளுவையும் சுமக்க வேண்டியவர்கள் ஆகிறார்கள். புரட்சிகர இயக்கம் இந்த வரையறையை எதிர்த்துப் புறம்தள்ளுகிற அதே வேளை, சமூகத்தின் மறுக்கப்பட்ட மற்றும் எளிதில் பாதிப்புக்கு ஆளாகக் கூடிய பிரிவினரின் நலன்களில் ஊன்றி நின்று, சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுப்புறவியல் பற்றிய முற்றிலும் மாறுபட்ட வரையறையை வலுவாக முன்னெடுக்க வேண்டும்.

(இகக மாலெ 9ஆவது காங்கிரஸ் அறிக்கையில் இருந்து)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியைப் பாதுகாக்க, அதன் சுற்றுச்சூழலை புத்துருவாக்கம் செய்ய, அந்தப் பகுதியில் தாக்குப்பிடிக்கக் கூடிய வளர்ச்சியை திட்டமிட, மேற்கு தொடர்ச்சி மலையில் நுட்பமான சுற்றுச் சூழல் பகுதியை வரையறுக்க, மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், மாதவ் காட்கில் தலைமையில் மேற்கு தொடர்ச்சி மலை சுற்றுச்சூழல் நிபுணர் குழு அமைத்தது. 2011 ஆகஸ்டில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையை 2012 மே மாதம்தான் அரசு வெளியிட்டது.

இந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கை மீது  சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கங்கள் தெரிவித்த கருத்துக்களை (எதிர்ப்புக்களை) கணக்கில் கொண்டு, நீடித்த மற்றும் சமமான வளர்ச்சிக்கான அனைத்தும் தழுவிய அணுகுமுறையை வளர்த்தெடுக்க கஸ்தூரிரங்கன் தலைமையில் உயர்மட்ட செயற்குழு அமைத்தது. 2013 ஏப்ரல் மாதம் இந்தக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கை அடிப்படையில் மத்திய அரசு நகல் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. கஸ்தூரிரங்கன் குழு அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் மாநிலங்களின் கருத்துக்களை கேட்ட பிறகு இறுதி அறிவிப்பாணை வெளியிடப்படும் எனச் சொல்லியுள்ளது.

நுட்பமான சுற்றுச்சூழல் பகுதி

கஸ்தூரிரங்கன் அறிக்கையில், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் 60,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நுட்பமான சுற்றுச் சூழல் பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் குஜராத், கோவா, தமிழ்நாட்டில் காங்கிரஸ் அல்லாத ஆட்சிகள் நடக்கின்றன. இவை காங்கிரஸ் அல்லாத ஆட்சிகளே தவிர கார்ப்பரேட் எதிர்ப்பு ஆட்சிகள் அல்ல. மகாராஷ்டிராவில் காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் அமைத்துள்ள கூட்டணி ஆட்சியில் உள்ளது.

கஸ்தூரிரங்கன் அறிக்கை, மொத்த மேற்கு மலைத்தொடர் 1,64,280 சதுர கிமீ என்று அறிக்கை வரையறுக்கிறது. இதில் 96,031 சகிமீ பாரம்பரிய நிலப்பரப்பு என்றும் 68,249 சகிமீ இயற்கை நிலப்பரப்பு என்றும் இந்த இயற்கை நிலப்பரப்பில் 59,940 சகிமீ நுட்பமான சுற்றுச் சூழல் பகுதி என்றும் வரையறுக்கிறது. இந்த வரையறையை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது.

மகாராஷ்டிராவில் 2,159 கிராமங்கள், கேரளாவில் 123 கிராமங்கள், தமிழ்நாட்டில் 235 கிராமங்கள், கோவாவில் 99 கிராமங்கள் குஜராத்தில் 64 கிராமங்கள் கர்நாடகாவில் 1576 கிராமங்கள் கஸ்தூரிரங்கன் அறிக்கை சொல்லும் நுட்பமான சுற்றுச்சூழல் பகுதிக்குள் வரும்.

அறிக்கைக்கு ஆதரவு

அறிக்கை திருத்தப்பட வேண்டும் என்றும் களநிலைமைகளை கணக்கில் கொண்டு இன்னும் சில பகுதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று உம்மன் சாண்டி சொல்கிறார். ராகுல் காந்தியும் உம்மன் சாண்டி சொல்வதைப் பற்றி தானும் விவாதிப்பதாக உறுதியளித்துள்ளார். கர்நாடகா அரசாங்கம் அனைத்து கட்சி குழு அமைத்து விவாதிக்கப் போவதாக சொல்கிறது. கர்நாடகாவில் வளர்ச்சி நடவடிக்கைகள் தடைபட்டுவிடும் என்று சட்ட அமைச்சர் சொல்லியுள்ளார்.

அறிக்கை அமலாக்கப்பட வேண்டும் என்றும் மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் சொல்கிறது. அறிக்கைக்கு ஆதரவான மற்றொரு கருத்து அறிக்கையால் பாதிக்கப்படுபவர்கள் மணல் மற்றும் கனிம குவாரி சொந்தக்காரர்கள்தான் என்கிறது.

நுட்பமான சுற்றுச் சூழல் பகுதியான 37% பகுதியில்தான் முல்லைப் பெரியாறு அணையும் வருகிறது, அதனால் கட்டுமானப் பணிகளுக்கு அங்கு வாய்ப்பில்லை, அணை மீது கேரள அரசாங்கம் கைவைக்க முடியாது என்பதால் அறிக்கையை அமலாக்க வேண்டும் என்று வைகோ சொல்கிறார். எதிர்நிலையில் இருந்து, இதே காரணத்துக்காக, இந்தப் பிரச்சனை உரிய மேடைகளில் எழுப்பப்பட வேண்டும் என்று கேரள நீர் வளத்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் சொல்கிறார்.

அறிக்கைக்கு எதிர்ப்பு

கஸ்தூரிரங்கன் அறிக்கை கேரளாவில் எதிர்ப்பைச் சந்திக்கிறது. இககமா போராட்டம் நடத்துகிறது. கேரள மக்களின் முழு அடைப்புப் போராட்டத்தில் தமிழகப் போக்குவரத்து பாதிக்கிறது. கேரள மலைவாழ் மக்கள் 30 லட்சம் பேர் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு அறிக்கை வழிவகுக்கிறது. சில லட்சம் கேரளவாழ் தமிழர்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும் குரல்கள் எழுகின்றன.

கஸ்தூரிரங்கன் குழுவுக்கு முன்பு அமைக்கப்பட்ட காட்கில் குழு பரிந்துரைகளில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது என்று காட்கில் குழு தலைவர் மாதவ் காட்கில் சொல்கிறார்.

அறிக்கை அமலானால் ஏற்படக்கூடிய விளைவுகள்

நுட்பமான சுற்றுச்சூழல் பகுதியான 37% பகுதியில் சுரங்க நடவடிக்கைகள், மணல் குவாரிகள், ஆக்கிரமிப்புகள், அனல்மின் நிலையங்கள், எண்ணெய், சிமிண்ட், வேதிப்பொருள் ஆலைகள், அணைகள் ஆகிய செயல்பாடுகளை அறிக்கை தடை செய்கிறது. இங்கு வாழும் மக்களும் வெளியேற்றப்படுவார்கள். 60% பகுதியில் என்னமும் செய்து கொள்ளலாம்.

மக்கள் வாழும் 60% பகுதியில் மணல் மற்றும் கனிம குவாரிகள் இயங்குகின்றன. கோவாவில் இந்தப் பகுதியில்தான் ரூ.35,000 கோடிக்கு சுரங்க ஊழல் நடந்தது என காட்கில் தனது திறந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 37% பகுதியில் பூங்காக்கள், அடர்வனங்கள், பாரம்பரிய நிலப்பகுதிகள் உள்ளதால் அந்தப் பகுதி ஏற்கனவே மத்திய மாநில சட்டங்களின் பாதுகாப்பின் கீழ் வருகிறது.

காட்கில் குழு அடையாளப்படுத்திய நுட்பமான சுற்றுச்சூழல் பகுதியை விட கஸ்தூரிரங்கன் குழு வரையறுத்துள்ள நுட்பமான சுற்றுச் சூழல் பகுதியின் அளவு குறைவு. காட்கில் குழு மொத்த பகுதியையும் நுட்பமான சுற்றுச்சூழல் மண்டலம் 1, 2, 3 என அடையாளப்படுத்தி அவற்றில் சுற்றுச் சூழலை பாதிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாகவும் படிப் படியாகவும் ரத்து செய்ய வேண்டும் என்று முன்வைத்தது.

கஸ்தூரிரங்கன் அறிக்கை  வெறும் 37% பகுதியை மட்டும் நுட்பமான சுற்றுச்சூழல் பகுதி என்று அறிவித்ததோடு, காட்கில் குழு ஒப்புதல் மறுத்த அதிரப்பள்ளி அணை மற்றும் குன்டியா புனல்மின் நிலையம் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்யலாம் என சொல்கிறது. மகாராஷ்டிராவின் சிந்தூர்துர்க் மற்றும் ரத்னகிரி மாவட்டங்களில் எந்த சுரங்க நடவடிக்கையும் கூடாது என காட்கில் அறிக்கை சொன்னதில் இருந்து கஸ்தூரிரங்கன் அறிக்கை மாறுபட்டு இந்த இரண்டு மாவட்டங்களில் நுட்பமான சுற்றுச் சூழல் பகுதிக்குள் வரும் இடங்களில் மட்டும் சுரங்க நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கிறது.

இந்த 37% பகுதியிலும் சுரங்கமோ, வேறு தொழிலோ செய்ய நிலம் வேண்டும் என்றால், பகுதி மக்கள் மத்தியில் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு அவர்கள் ஒப்புதல் இருந்தால் செய்து கொள்ளலாம். நிலம் அபகரிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் கருத்துக் கேட்பு கூட்டங்கள் பொதுவாக எப்படி நடக்கின்றன என்பது பற்றி நமக்கு நல்ல அனுபவம் உண்டு.

வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும் எனவே அமல்படுத்தக் கூடாது என்று ஒரு சாராரும் மக்கள் பாதுகாக்கப்படுவார்கள் குவாரி முதலாளிகள்தான் பாதிக்கப்படுவார்கள் எனவே அறிக்கை அமலாக வேண்டும் என இன்னொரு சாராரும் சொல்லிக் கொண்டிருக்க, தி இந்து நாளிதழில் வெளியாகியுள்ள ஒரு செய்தி குவாரி முதலாளிகளுக்கு அறிக்கை ஒரு வகையில் பாதுகாப்பு அளிக்கிறது என்று சொல்கிறது.

அறிக்கையின் வழிகாட்டுதல்கள், 2013 ஏப்ரல் 17க்கு முன் அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு விலக்கு அளிக்கிறது. அதன்படி, கேரளாவில் இடுக்கி பாலக்காடு மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் கேரளாவின் மாநில சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையம் அனுமதி மறுத்த, காட்கில் தலைமையிலான மேற்கு தொடர்ச்சி மலை சுற்றுச்சூழல் நிபுணர் குழு நுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் என அறிவித்த பகுதியில் வருகிற அய்ந்து கிரானைட் குவாரிகளுக்கான விண்ணப்பங்களை இப்போது மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். அந்த குவாரிகள் கஸ்தூரிரங்கன் அறிக்கை வரையறுக்கிற நுட்பமான சுற்றுச் சூழல் பகுதிகளிலேயே வரக்கூடும் என்றாலும் இப்போது, அந்த குவாரிகளுக்கு அனுமதி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

நியூட்ரினோ ஆய்வுக் கூடம்

கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி,   மாவட்டங்களின் 235 கிராமங்களை அறிக்கை நுட்பமான சுற்றுச்சூழல் பகுதியாக அறிவிக்கிறது. தேனி மாவட்ட மக்களின் வாழ்வை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கிற நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கப்படுகிற பகுதிகள் இந்த வரையறைக்குள் வரவில்லை.

இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தின் அங்கமே நியூட்ரினோ திட்டம். அணுசக்திக்கு அடிப்படையான நவீன (துகள்) அறிவியலில் அமெரிக்கா முன்னேற முயற்சிக்கிறது. சிகாகோவில் ஃபெர்மிலேப் எனப்படுகிற இயற்பியல் கூடம் அய்க்கிய அமெரிக்க அணுசக்தி துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படுகிற ஆற்றல் மிக்க நியூட்ரினோ கற்றைகளை பெற்றுக் கொள்ள, புவி உருண்டையின் நேர்எதிர் பக்கத்தில், மேற்கு மலைத்தொடரில் ஆய்வுக் கூடம் தேவைப்படுகிறது. ஃபெர்மி லேபிற்கு பங்களிப்பு செய்வதே இந்திய நியூட்ரினோ ஆய்வுக் கூடம்.

தேனி மாவட்டம் போடி மேற்கு மலைப்பகுதியில் உத்தமபாளையம் தாலுகாவில், தேவாரம், பொட்டிபுரம் கிராமத்திற்கு அருகில் உள்ள அம்பரப்பர் மலை/அம்பரசர்கரடு எனப் படுகிற 1300 மீட்டர் உயரமுள்ள குன்றில் 1 கி.மீ. அடியில் மலையைக் குடைந்து பாதாள ஆய்வுக்கூடம் அமைக்கப்படுகிறது.

இந்திய அணுசக்தி துறை, அமெரிக்க உதவியுடன் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க சாலைகள், வேலிகள் அமைக்கும் பணியை துவங்கிவிட்டது.

திட்டத்தில் பாறைகள் அகற்றப் பயன்படுத்தப்படும் ஜெல்லட்டின்கள், மேற்கு மலைத் தொடரில் நிலநடுக்கங்களை தூண்டும், மாசுபடுத்தும், கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள 12 அணைகளை பாதிக்கும், 2018ல், திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், சிகாகோ ஆய்வுக் கூடத்தில் தயாரிக்கப்பட்டு போடி ஆய்வகத்திற்கு அனுப்பப்படும் நியூட்ரினோ கற்றை இந்திய ஆய்வகத்தின் சுற்றுப்புறத்தில் கதிர்வீச்சையும், கழிவுகளையும் ஏற்படுத்தும், 50 லட்சம் தமிழக, கேரள மக்களின் வாழ்வுரிமை பாதிக்கும், மேற்குத் தொடர் மலைகளை பேராபத்திற்குள் தள்ளிவிடும் என விஞ்ஞானி வி.டி.பத்மநாபன் சொல்கிறார்.

பகுதி மக்களின் வாழ்வுரிமைக்கும் சுற்றுச் சூழலுக்கும் பெரும்கேடு விளைவிக்கக்கூடிய இந்தத் திட்டத்திற்கு, ஜெயா அரசாங்கம், 2011ல் அனுமதி வழங்கியுள்ளது. அய்முகூ எதிர்ப்புப் போராளியான ஜெயலலிதா, தமிழ்நாட்டின் 235 கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற நிலையிலும் கஸ்தூரிரங்கன் அறிக்கைக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

கஸ்தூரிரங்கன் அறிக்கை வேண்டாம்

மொத்தத்தில், கஸ்தூரிரங்கன் அறிக்கை வளர்ச்சியின் பெயரில் மக்கள் வாழ்வுரிமையை பறித்து கார்ப்பரேட்களை கொழுக்க வைக்கும் அய்முகூ அரசின் ஆதாரக் கொள்கையை நடைமுறையை மறுஉறுதி செய்கிறது. நிலம் பறிப்பு, வாழும் இடங்களில் இருந்து வெளியேற்றப் படுவது, வாழ்வுரிமை இழப்பது, சுற்றுச்சூழல் கேடுகளுக்கு ஆளாவது என்று, லட்சக்கணக்கான மலைவாழ் மக்கள் வாழ்வு பறிபோவதோடு அவர்களின் அடுத்தடுத்த சந்ததியினர் வாழ்வும் சிதைக்கப்படுவதற்கான திட்ட முன்வரைவாகவே அறிக்கை உள்ளது.

ராகுல் காந்தியும் ஆர்எஸ்ஸ÷ம் ஆதரிக்கிற ஜெயலலிதா மவுனம் காக்கிற ஒரு திட்டத்தில் இந்திய, தமிழக சாமான்ய மக்களுக்கு கேடு தவிர வேறென்ன இருக்க முடியும்?  கஸ்தூரிரங்கன் அறிக்கை வேண்டாம் என உழைக்கும் மக்கள் உரக்கச் சொல்ல வேண்டும்.

சீனப் புரட்சி மற்றும் அது தரும் பாடங்கள் பற்றிய ஒரு சுருக்கமான சித்திரம் - டி.பி.பக்ஷி

சீனப் புரட்சியின் முக்கிய கட்டங்களும் முக்கிய இயல்புகளும்

நான்கு கடமைகளை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முன்னகர்த்தியது.

அ) சுதந்திர முன்முயற்சியின் அடிப்படையில் கெரில்லா யுத்தத்திற்கு அமைப்பாக்குவது. யுத்த எதிர்ப்பைக் கட்டமைக்கவும், எதிரி படைக்குப் பின்னால் நகர்ந்து சென்று தளப்பிரதேசங்களை கட்டமைக்கவும் செம்படையை கண்டிப்பாக சிறு குழுக்களாக பிரித்து அணிதிரட்டுவது மற்றும் தயார்படுத்துவது.

ஆ) வட சீனத்தில், கட்சி எல்லா நடவடிக்கைகளையும் கெரில்லா யுத்தத்தை மய்யமாக வைத்து கட்டமைத்துக் கொள்வது. உள்ளூர் கட்சி கிளைகள், மக்களை எதிர்ப்புக்கு தயார் படுத்துவது, சிதறிக் கிடக்கும் ஆயுதங்களை குவித்துக் கொள்வது, விட்டுச்சென்ற படை வீரர்களை இனங்கண்டு, பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட வகையில் கெரில்லா படையை மறுஅமைப்பாக்கம் செய்து கொள்வது.

இ) படைகளுக்கு குறுகிய காலத்தில் ராணுவ பயிற்சி கொடுத்து மறு அமைப்பாக்குவது, கட்சி வேலைகளை புனரமைப்பது, குற்றவியல் தன்மை கொண்ட நபர்களிடமிருந்து தளப் பகுதிகளை விடுவிப்பது, புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு ஆக்கிரமிப்புக்கு எதிராக பயிற்சி கொடுப்பது, கீழ்மட்ட அளவில் ஜப்பான் ஆதரவு சக்திகளை அழித்தொழிப்பது ஆகியவைதான் ஏற்கனவே வளர்த்தெடுக்கப்பட்ட ஜப்பான்–எதிர்ப்பு தளப்பகுதிகளை உறுதிபடுத்துவதற்கான மிகச் சிறந்த வழியாகும்.

ஈ) ஜப்பான் எதிர்ப்பு தடுப்புப் போரில் ஒட்டு மொத்த நாடும் பங்களிக்கும் அடிப்படையில் மற்றும் இந்த யுத்தத்தில் மக்களை கிளர்ச்சி பெறச் செய்வது என்ற கடமையை முன்னெடுத்து செல்ல சாண்டிங் மற்றும் ஹோபை சம வெளிகளில் கெரில்லா யுத்தத்தை துவக்கி விரிவாக்க எல்லா சாத்தியப்பாடுகளும் உண்டு. இதுபோன்ற வாய்ப்புள்ள பகுதிகளில் ராணுவ தலைமையகம் இருந்தால்தான் கெரில்லா யுத்தத்தை விரிவாக்கவும், ஆழப்படுத்தவும் முடியும். விடுதலை செய்யப்பட்ட பகுதிகளில் ஜப்பான் எதிர்ப்பு அரசாங்கங்களை நிறுவி கெரில்லா படைக்குழுவை முறையான ராணுவத்துடன் இணைத்து, யுத்தத்தில் மக்களை அணிதிரட்ட முடுக்கிவிட வேண்டும்.

கருத்தியல் தளத்தில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய அடிமைத்தனம் மற்றும் ஜப்பான் எதிர்ப்பு யுத்தம் என்ற இயக்கப் போக்கில் துரித மற்றும் எளிய வெற்றி என்ற இரண்டு போக் குகளுக்கும் எதிராக போரிட்டது.

ஜப்பான் ஆக்கிரமிப்புக்கு எதிராக சியாங் கே ஷெக் அரசாங்கத்தில் இணைவது என்ற கருத்தை, ஒரு கட்சி ‘பிற்போக்கு அரசு’ என நிராகரித்துவிட்டு ஜப்பான் எதிர்ப்பு சக்திகளின் கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதை பரிந்துரைத்தது.

‘நீண்ட யுத்தம்’ என்ற கருத்தை முன்நகர்த்தியது. நீண்ட யுத்தத்தின் மூன்று கட்டங்களையும் அடையாளப்படுத்தியது. அவையாவன: பகையாளியின் போர்த்தந்திர தாக்குதல் மற்றும் எதிர்ப்பின் போர்த்தந்திர தற்காப்பு காலம்; பகையாளி போர்த்தந்திரரீதியாக உறுதிப்படுதல் மற்றும் எதிர்ப்பியக்கத்தின் எதிர் தாக்குதல் மற்றும் பகையாளியின் போர்த்தந்திர பின்வாங்குதலின் காலம். இதோடு கூட, சீன கம்யூனிஸ்ட் கட்சி, ஜப்பானுக்கு எதிரான கெரில்லா யுத்தத்தின் 6 குறிப்பான தன்மைகளையும் அடையாளப்படுத்தியது.

முன்முயற்சியை பயன்படுத்துவது, தற்காப்புக்குள்ளேயே நெளிவுசுளிவான மற்றும் திட்டமிட்ட தாக்குதலை தொடுப்பது, நீண்ட யுத்தத்திற்குள் போர் பற்றிய உடனடி முடிவுகள், உள் நடவடிக்கைகளுக்குள் வெளிநடவடிக்கைகள்  நகர்ந்து செல்லும் போரில் ஈடுபட்டிருக்கும்போதே கெரில்லா போர் நடவடிக்கையை வளர்த்தெடுப்பது மற்றும் ராணுவத் தலைமையுடனான சரியான உறவு.

மொத்த ஜப்பான் எதிர்ப்பு தடுப்பு யுத்தமும் கீழ்க்கண்ட படிநிலைகளால் பிரிக்கப்பட்டது.

1.    ஜப்பான் எதிர்ப்பின் முதல் காலம் (1937 ஜ÷லை—1940) இதன் அம்சங்கள்: உலக  யுத்தம் துவங்கியது, ஜப்பான் எதிர்ப்பு அய்க்கிய முன்னணி உருவாக்கம், ஜப்பான் எதிர்ப்பில் சீனாவுக்கு சோவியத் ஆதரவு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சுதந்திர முன்முயற்சியை தக்கவைப்பது, கொரில்லா யுத்த துவக்கமும் தளப்பிரதேசங்கள் உருவாக்குவதும், போர்த்தந்திர மந்த காலத்தில் எதிர்ப்புப் போராட்டம் மற்றும் முதல் மற்றும் இரண்டாவது கம்யூனிஸ்ட் எதிர்ப்புப் பிரச்சாரத்தை வீழ்த்தியது.

2.    எதிர்ப்பு யுத்தத்தின் சிக்கலான கால கட்டம் மற்றும் ஜப்பான் எதிர்ப்பு தளப் பிரதேசங்களை உறுதிப்படுத்துவது (1941–1942) அம்சங்கள்: இரண்டாம் உலக யுத்தத்தில், துவக்கத்தில் பாசிச சக்திகள் முன்னேறியதால் வந்த சிக்கல்கள்; விடுதலை அடைந்த பகுதிகளில் உற்பத்தியை முடுக்கி விடுவது; தளப்பகுதிகளில் பகையாளியின் தாக்குதலை எதிர்த்து போரிட மக்கள் ராணுவத்தை வளர்த்தெடுப்பது.

3.    விடுதலை அடைந்த பகுதிகளிலிருந்து பகுதியளவு எதிர்தாக்குதல் துவங்கி எதிர்ப்பின் இறுதி வெற்றியை நோக்கி (1943 –செப்டம்பர் 1945) அம்சங்கள்: பகையாளி கைவசப்படுத்தியிருக்கும் பகுதி உட்பட வளர்ந்து வரும் ஜப்பான் எதிர்ப்பு பிரச்சார இயக்கம் மற்றும் விடுதலை அடைந்த பகுதிகளை விரிவாக்குவது; அதிகார வர்க்க மூலதனம் உறுதிப்படுதல் 3வது கம்யூனிஸ்ட் எதிர்ப்பு பிரச்சார இயக்கம் மற்றும் சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்க தலைûயீட்டை வீழ்த்தியது; விடுதலை அடைந்த பகுதிகளை ஜப்பானுக்கு எதிரான போர்த்தந்திர எதிர் தாக்குதலுக்கு முடுக்கிவிடுவது; சீன –சோவியத் நட்பு ஒப்பந்தம் கையெழுத்தானது; ஜப்பான் எதிர்ப்புப் போரின் வெற்றி.

ஜப்பான் எதிர்ப்பு போரின் கடைசி கட்டம் (1945 ஆகஸ்டிலிருந்து அக்டோபர் முற்பகுதி வரை) மக்கள் விடுதலைப் படை 3,15,200 சதுர கிலோ மீட்டரை விடுவித்தது. பகுதியின் மக்கள் தொகை 18,737,000; 190 நகரங்களை மீண்டும் ஆக்கிரமித்தது மற்றும் 2,30,000 பகையாளி மற்றும் பொம்மை படைகளை அழித்தொழித்தது. பெருநகரங்கள் மக்கள் விடுதலைப் படையால் சுற்றி வளைக்கப்பட்டன. ஆனால் குவாமின்டாங் எதிர்ப்பு மற்றும் அமெரிக்க தலையீட்டால் அவற்றை பிடிக்க முடியவில்லை.

1945 செப்டம்பர் 2 ஜப்பான் சரணடைந்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

நாடாளுமன்ற தேர்தல்கள் நோக்கி சென்னை மாநகரக் கட்சியின் தயாரிப்புகள்

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இககமாலெ பல ஆண்டுகளாக வேலை செய்கிறது. நாம் மாவட்டக்குழு என வைத்திருப்பது, நம் கட்சி அமைப்புச் சட்டத்திற்குப் பொருத்தமான தகுதிகள் உடையவை என்ற அளவில் தான் உள்ளன. மாநகரம் முழுவதும் பரந்து விரிந்த கட்சி, சகல பிரிவினர் மத்தியிலும் செல்வாக்குடைய கட்சி என்ற நிலை இல்லை. குறிப்பாக, நகரின் இதயப் பகுதியில் நமது வேலைகள் இல்லை. மாணவர் இளைஞர்கள் படிப்பாளிப் பிரிவினர் மத்தியில் நமது வேலைகள் துவக்க நிலையில் உள்ளன என்றும் கூட தயக்கத்தோடே சொல்ல வேண்டி உள்ளது.

ஆனால் நம் பாரம்பரிய வலிமை, தொழிலாளர்கள் மத்தியிலான நமது வேலையிலேயே உள்ளது. அம்பத்தூர், திருவொற்றியூர், திருபெரும்புதூர் பகுதிகளில் உள்ள வேலைகளே, சென்னை மாநகர வேலைகள் என அறியப்படுகின்றன. சென்னை நகருக்குள் சில பத்தாண்டுகள் கால தொழிற்சங்க வேலைகள் உள்ளன. அம்பத்தூர், சமீபத்தில் சென்னை மாநகராட்சிக்குள் கொண்டு வரப்பட்டதால், சென்னை மாநகராட்சி  குடியிருப்புப் பகுதிகளில் வேலை செய்கிறோம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

திருபெரும்புதூர், அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள நமது வேலைகளை அடிப் படையாகக் கொண்டே, திருபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட விரும்புகிறோம். சென்னையில், டிசம்பர் 2013 கணக்குப்படி, கட்சி உறுப்பினர் எண்ணிக்கை 1100. ஏஅய்சிசிடியு உறுப்பினர் எண்ணிக்கை 45,000. தீப்பொறி சந்தாதாரர் எண்ணிக்கை 1,100. மாதம் இருமுறை தீப்பொறி தனி இதழ் விற்பனை 100. மாதம் 1500 இதழ்கள் ஒருமைப்பாடு விநியோகிக்கப்படுகின்றன.

அடுத்தச் சுற்று வேலைகளைப் பற்றி, பொதுவாக சென்னை வேலைகளின் வர்க்க பூகோள இயல்பைப் பற்றிப் புரிந்து கொள்ள, 2014 தீப்பொறி சந்தா இலக்குகளைப் பார்ப்பது உதவும். படிப்பாளிப் பிரிவினர், வழக்கறிஞர்கள் மத்தியில் 100, திருபெரும்புதூர் தொழிலாளர் மத்தியில் 300, பிஎஸ்என்எல் ஊழியர்கள் மத்தியில் 50, சென்னை தொழிலாளர்கள் மத்தியில் 350, சென்னை உள்ளூர் கமிட்டி பகுதி மக்கள் மத்தியில் 100, அம்பத்தூர் தொழிலாளர்கள் மத்தியில் 400, அம்பத்தூரில் உள்ள உள்ளூர் கமிட்டிகள் பகுதி மக்கள் மத்தியில் 600. மொத்தம் 1900.

அறிவாளிப் பிரிவினர், படிப்பாளிப் பிரிவினர் மத்தியில் வேலை என்பது நமக்குத் தொடர்ந்து பலவீனமாகவே உள்ளது. மாநகரின் மய்யப் பகுதியில் மாணவர்கள் மத்தியில் வேலை இல்லை. ஆனால் கடந்த ஓராண்டாக, ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் மூலம், உயர் நீதிமன்ற வளாகத்தில் விடாப்பிடியாகவும் தொடர்ச்சியாகவும் துணிச்சலாகவும் ஜனநாயகக் கோரிக்கைகள் மீது போரட்டங்கள் நடத்தி வருகிறோம். கடைசியாக, பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் பற்றி விசாரிக்கும் குழுவை சென்னை உயர்நீதி மன்றம் அமைக்க வேண்டும் என வலியுறுத்து கிறோம்.

நம் இளைஞர்கள் வேலையை, இளம் தொழிலாளர் மத்தியிலான வேலையாக மாற்றி உள்ளோம். திருபெரும்புதூரில் நமது வேலை தொழிற்சங்க வேலையாகச் சுருங்காமல் இருக்க, ஆரோக்கியமற்ற தொழிற்சங்கப் போட்டி எதிலும் நாம் நுழையாமல், சில லட்சம் இளம் தொழிலாளர்கள் பிரச்சனையை, ஓர் அரசியல் பிரச்சனையாக்க முயற்சிக்கிறோம்.

ரஷ்யப் புரட்சி தினமான நவம்பர் 7ல், ஒரு கையெழுத்து இயக்கம் துவங்கி உள்ளோம். குறைந்தபட்ச சம்பளம் ரூ.15,000, ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பெரும்பான்மை சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கும் தொழிற்சங்க சட்டத்திருத்தம், ரெகுலர் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட நிரந்தரமற்ற தொழிலாளர் நலன் தொடர்பான நிலையாணைகள் திருத்தச் சட்டம் 47/2008க்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறுதல் போன்ற கோரிக்கைகள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஒரு லட்சம் கையெழுத்துக்கள் தொட்டுவிடும் தூரம்தான் என்ற நம்பிக்கை தந்துள்ளன. இயக்கம் துவங்கிய பிறகு, ஒரு நிறுவனம் தொடர்ந்த சிவில் வழக்கில் ஆட்டோ பாகம் தயாரிக்கும் தொழில் பொதுச் சேவை நிறுவனம் எனக் குறிப்பிட்டதை விசாரிக்கத் துவங்கி, ஜெயலலிதா அரசு ஆட்டோமொபைல் தயாரிப்பு தொழிலை பொது சேவை என அறிவித்துள்ளதையும், ஆறு மாதத்திற்குப் பிறகு நீடிக்காததையும், தெரிந்து கொண்டோம். ஆட்டோ மொபைல் தயாரிப்பு ஆட்டோமொபைல் உதிரி பாகத் தயாரிப்பு தொழில்களை பொது சேவையாக அறிவிக்கக் கூடாது என்ற கோரிக்கையையும் சேர்த்துக் கொண்டுள்ளோம்.

நோக்கியா, நோக்கியா தொடர்புடைய 30,000 தொழிலாளர்களுக்கு, தமிழக அரசு நியாயம் வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். தமிழக அரசு நோக்கியா முதலாளிக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒரு வருடத்திற்கு ஒரு ரூபாய் குத்தகைக்கு தந்துள்ளபோது, முதலீடு போடும் அளவுக்கு வரிச்சலுகை தந்துள்ளபோது, 30,000 தொழிலா ளர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறது என்ற கேள்வியை எழுப்புகிறோம்.

திருப்பெரும்புதூரில் ஒரு நாள் வேலை நிறுத்தம் என்ற விதையைத் தூவுகிறோம். பாடுபட்டுப் பயிர் செய்தால் அறுவடை நிச்சயம்.
வெகுமக்கள் அரசியல் வழி - கவனம் குவிக்கப்பட்ட வேலைப் பகுதி - மேலிருந்து கீழ் வரை வலைப்பின்னல் என்பவற்றிற்குச் செயல் வடிவம் தர அம்பத்தூரில் முயற்சி செய்கிறோம்.

இயக்கத்தின் செயல்பரப்பை எப்போதும் விரிவுபடுத்துவது, அதே நேரம் வேர்க்கால் மட்ட கட்சியமைப்பை செயலூக்கப்படுத்துவது -  பார்த்த மாத்திரத்திலான இந்த எதிர்மறை களின் அய்க்கியமே   - கம்யூனிஸ்ட் வேலை நடையின் சாரம் என்கிறார் தோழர் வினோத் மிஸ்ரா.

நமக்கு அமைப்பாக்கப்படாத தொழிலாளர்கள் மத்தியிலான வேலையில், குடியிருப்புப் பகுதி வேலையில் ஒரு நீடித்த நிலைத்த அடித்தளத்தைப் பெறுவதும், செயல்துடிப்புள்ள ஓர் அமைப்பு வலைப்பின்னலை உருவாக்குவதும் சவாலாகவே உள்ளன. அலுக்காமல் சலிக்காமல் வேலை செய்து கொண்டே, கருவான ஓர் ஊழியர் குழாம் கொண்டு மக்கள் மத்தியில் தொடர்ந்து வேலை செய்து கொண்டே, தீர்வுக்கான தேடலில் இருக்கிறோம்.

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுமாராய் 6 லட்சம் பேர் இருப்பதாகவும் சுமாராய் வாக்காளர்கள் 4 லட்சம் பேர் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சுமார் 1.5 லட்சம் குடும்பங்கள் இருப்பதாக ஒரு கணக்கு வைக்கலாம். 1.25 லட்சம் குடும்பங்கள் வறியவர்கள், கீழ் நடுத்தர வர்க்கம் என்றே இருக்கிறார்கள். (விவரங்கள் அனைத்தும்  தோராயமானவை, வேலை தீவிரமடைய விவரங்கள் துல்லியமாகும்). இவர்களுடைய தேவைகள் விருப்பங்கள் கவலைகளோடு உறவாடுவது, அவற்றை அரசியல் தளத்தில் விவாதத்திற்குரிய கோரிக்கைகளாக மாற்றுவது என்பதையே, வெகுமக்கள் அரசியல் வழி என்றும், இப்படி செய்வதன் மூலமே வெகுமக்கள் செல்வாக்கு விரிவடையும் என்றும் சொல்ல முடியும்.

உழைப்பவர் எவரானாலும் மாதம் ரூ.15,000, வீடற்ற அனைவருக்கும் ஜெயலலிதா வாக்குறுதிப்படி வீட்டுமனை, அம்பத்தூரில் 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, அம்பத்தூரில் அரசு கல்லூரி, மேல்நிலைப் பள்ளிகள், அம்பத்தூரில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் போன்ற கோரிக்கைகள் மீதான கையெழுத்து இயக்கம், நிச்சயம் மக்கள் மனங்களுக்கு நெருக்கமானவை. குப்பை அகற்றுதல், தையல் தொழிலாளர் குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயம் செய்தல் கோரிக்கைகளை சேர்த்துக் கொள்ள முடியும். மக்களுடைய வருமானம், கல்வி, மருத்துவம், வீட்டுமனை, கவுரவம், உரிமைகள் போன்றவை அடிப்படையான ஜனநாயக மற்றும் வாழ்வுரிமைகள் ஆகும். மத்தியிலும் மாநிலத்திலும் அரியணையில் உள்ள கொள்கைகள், மக்களுக்கு எதிரானவை, பெரும்தொழில் குழுமங்களுக்கு ஆதரவானவை என்பதை நாம் இந்த இயக்கத்தில் எடுத்துச் சொல்ல உள்ளோம்.

பாஜக மோடி கைகளில் அதிகாரக் கடிவாளங்கள் செல்வது, நாட்டிற்கும் நாட்டு மக்களுக் கும் நல்லதல்ல என்பதையும், தமிழகத்தில் பெரும்தொழில் குழுமங்களையும் மதவாத சாதீய சக்திகளையும் பாதுகாப்பதில் ஜெயலலிதாவே முதன்மையானவர் என்பதையும், நாம் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல இருக்கிறோம். இகக, இககமா ஜெயலலிதாவுக்கு வெண் சாமரம் வீசப் புறப்பட்டுவிட்ட நேரத்தில், நாம் துணிச்சலாக புரட்சிகர போராடும் இடதுசாரி குரலை உரத்து எழுப்ப உள்ளோம்.

யார் மூலம் எப்படி இந்த வேலைகளைச் செய்ய உள்ளோம்? அம்பத்தூரில் ஏஅய்சிசிடியு வில் சங்கமாக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் மத்தியில் ஒரு துடிப்பும் வேகமும் தோன்றி உள்ளது. மாதத்தில் இரண்டு ஞாயிற்றுக் கிழமைகள், வாரத்தில் 3 தினங்கள், சங்கப்பணி தாண்டி சமூக மாற்றப் பணியில் ஈடுபடும் வகையில் நமது தொழிலாளர் முன்னணிகளை, கட்சி உள்ளூர் கமிட்டிகளுடன் இணைக்கத் திட்டமிட்டுள்ளோம். உள்ளூர்மட்ட கமிட்டிகளை, அவற்றின் கீழுள்ள கிளைகளை, உறுப்பினர்களை இதற்கு தயார் செய்கிறோம். இந்த திசையில் ஒருகட்ட உறுப்பினர் சந்திப்பு நடந்துள்ளது.

டிசம்பர் 22 நடக்கவுள்ள மாவட்ட மாநாட்டிற்குள், உள்ளூர் கமிட்டி மாநாடுகள், கிளைப் பேரவைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கையெழுத்து இயக்கக் கோரிக்கைகள் மீது 2014 ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி துவக்கத்தில் 2000 பேர் வரை ஓர் அணிதிரட்டல் செய்ய முயற்சிக்கிறோம்.

கையெழுத்து இயக்கம் நடக்கும்போதே, உழைப்பவர் உரிமை இயக்க உறுப்பினர் சேர்ப் பில் இறங்குவது எனவும், அந்த நேரத்திலேயே உழைப்பவர் உரிமை இயக்கத்திற்கு இயன்ற வரை தெருவாரியாக கிளைகள் போடுவது எனவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வகையில் அமைப்பாக்கப்படாத தொழிலாளர்கள் வேலை என்பதையே குடியிருப்புப் பகுதி வேலை/நகர்ப்புற வறியவர்கள், கீழ் நடுத்தரப் பிரிவினர் வேலை என்று செய்யத் திட்டமிட்டுள்ளோம்.

ஜனவரி அல்லது பிப்ரவரி நடைபெறும் அணிதிரட்டல், நாடாளுமன்றத் தேர்தல் வேலை, வாக்கு சேகரிப்பு ஆகிய அனைத்து வேலைகளையும், கட்சி உள்ளூர் கமிட்டிகள் கிளைகள், உழைப்பவர் உரிமை இயக்கம் மூலம் செய்வது எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

கட்சி மற்றும் தொழிற்சங்கத் தோழர்கள் அனைவரையும், இக்கடமைகளை நோக்கித் திரட்டிக் கொள்ளும் தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.          

சக்திவாய்ந்த மாற்று முயற்சிக்கு மக்கள் காத்திருக்கின்றனர் - தா.சந்திரன்

கோவை மாவட்ட கமிட்டிக் கட்சிக் கூட்டம் நவம்பர் 25 அன்று நடைபெற்றது.  தொழிலாளர் வேலையிழப்புக்குக் காரணமான கடுமையான மின்வெட்டை கண்டித்து துடியலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

கோவையில் 4 லட்சம் தொழிலாளர்கள், 30.000க்கும் மேற்பட்ட சிறுசிறு தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். இந்த  சிறு நிறுவனங்கள் டீசல் ஜெனரேட்டர்களை பயன்படுத்தும் ஆற்றல் அற்றவை. அந்தப் பொருட்செலவை சமாளிக்க முடியாத பட்டறைகளும் தொழிற்சாலைகளும் வேலையில்லா காலத்திற்கு லேஆஃப் சம்பளம் வழங்குவதில்லை. வேலை செய்த நாட்களுக்கான கூலியைக் கூட வழங்காமல் இழுத்தடிக்கும் நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.

20 கிலோ விலையில்லா அரிசியாலும் தீர்க்க முடியாமல் கடும் விலைவாசியேற்றம் எல்லை கடந்து விட்டது. இலவச மின்விசிறி, டிவி, மிக்சி, கிரைண்டர் ஆகியவை மின்வெட்டால் ஓடாது. அவற்றை அடகு வைத்து உப்பு, புளி, மிளகாய் வாங்கவும் முடியாது. இந்த நிலைமைகளில் ‘ஆண்டிற்கு ரூ.5 லட்சம் கோடி கார்ப்ரேட் முதலாளிகளுக்கு வரிச்சலுகை  வழங்கும் மத்திய மாநில அரசுகளே பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ரூ.5000 மாதம் நிவாரணம்’ என்ற கோரிக்கை மாலெ கட்சி ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டது

கோவையில் மேலோங்கிய சிறுவீத உற்பத்தியாளர்களின் சங்கங்கள் மின்வெட்டிற்கு எதிராக  தங்கள் தொழிலாளர்களையும் திரட்டி போராடி வருகிறார்கள். அந்தப் போராட்டங்கள் விளிம்பு நிலை உற்பத்தியாளர்களின் குரலாக ஓர் எல்லைக்குள் நிற்கின்றன. முதலாளித்துவ அரசியல் கட்சிகளால் உள்வாங்கப்படுகின்றன.

மாலெ கட்சி ஆர்ப்பாட்டம் 4 லட்சம் தொழிலாளர்களின் குரலாக எழுந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாலெ கட்சி மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் என்.கே.நடராஜன், தாமோதரன், மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்ரமணியம், மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் சக்திவேல், ஏஅய்சிசிடியு மாவட்ட சிறப்பு தலைவர் தோழர் சந்திரன் ஆகியோர் உரையாற்றினர்.

டிசம்பர் 18 தோழர் வினோத் மிஸ்ரா நினைவு தின உறுதியேற்பு பொதுக்கூட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் நடைபெற இருக்கிறது. டிசம்பர் 19 அன்று ஒண்டிபுதூர் சுங்கம் திடலில் சாந்தி கியர்ஸ் தொழிலாளர்கள் முன்முயற்சியில் நடக்கவுள்ள பொதுக்கூட்டத்துக்கான தயாரிப்பு வேலைகள் சூடுபிடித்துள்ளன. கோவிலூர் பொதுக்கூட்ட தயாரிப்பு வேலைகள் மக்கள் சந்திப்பு இயக்கங்களோடு நடக்கின்றன.

பெரும்எண்ணிக்கையிலான தொழிலாளர்களின் முன்முயற்சி, உள்ளூர்கமிட்டி மாநாடுகள், கிளைக் கூட்டங்கள், ஏஅய்சிசிடியுவில் இணைந்துள்ள சங்க நிர்வாகிகள் மற்றும் துறை நிர்வாகிகள் கூட்டங்கள் மூலம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

புரட்சிகர இளைஞர் கழகம், டிசம்பர் 29 அன்று ‘மதவாத சாதீய சக்திகளுக்கு எதிரான மாற்றத்திற்கான மக்கள் போராட்டம்’ என்ற பொருளில் கருத்தரங்கம் நடத்துவதற்கான தயாரிப்பு வேலைகளை துவக்கிவிட்டது.


Monday, December 2, 2013

உழைக்கும் மக்கள் தமிழ்நாட்டை ஜெயலலிதாவிடம் இருந்து காப்பாற்றுவார்கள்

சென்னை காவல்துறை ஆணையர் எஸ்.ஜார்ஜ் மீண்டும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் குற்றவாளிகள் என்ற பூதத்தை கிளப்புகிறார்.

காவலாளிகளாக வேலையில் அமர்த்தப்பட்ட இரண்டு வெளிமாநிலத் தொழிலாளர்கள் பாலியல் வன்முறை குற்றத்தில் சமீபத்தில் கைது செய்யப்பட்டதை அடுத்து வெளிமாநிலத் தொழிலாளர் மற்றும் வாடகைக்கு குடியிருப்போர் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

வீடுகளை வாடகைக்கு தருபவர்கள் வாடகைக்கு வருபவர்கள் முழு
விவரங்களை காவல்நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். வேளச்சேரியில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டார்கள் என்று சுட்டுக்கொன்றபோதும் இதே போன்ற முயற்சி எடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

நவம்பர் 16 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிபூண்டி அருகில் சின்னப்புலியூர் என்ற இடத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஆறு பேர் அருகில் இருந்த சுவர் இடிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே செத்துப்போனார்கள். இன்னும் ஆறு பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி முதலில் பொன்னேரி அரசு மருத்துவமனையிலும் பின்னர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்துக்குக் காரணமாக யாரும் கைது செய்யப்படவில்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். இறந்தவர் குடும்பங்களுக்கு ரூ.1.50 லட்சம் நட்டஈடு தந்ததாக தெரிவித்தார்.

மறுநாள், இககமாலெ திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் ஜானகிராமன் மற்றும் தமிழ்நாடு ஜனநாயகக் கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் தோழர் ராஜா ஆகியோர் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்றபோது அங்கு காவலாளியைத் தவிர யாரும் இல்லை. அங்கு வேலை பார்த்த 26 வெளிமாநிலத் தொழிலாளர்களும் உடனடியாகத் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டனர்.

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்ற எந்த விவரமும் அந்தக் காவலாளியிடம் இல்லை. வேறு பொறுப்பான எந்த நபரையும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. விபத்துக்குக் பொறுப்பேற்க வேண்டியவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள். தொழிலாளி உயிர்விட்டான்.

தமிழ்நாட்டில், குறிப்பாகச் சென்னையில், சென்னையைச் சுற்றி மூலதனம் குவிகிற பகுதிகளில் பணியிட விபத்துக்களில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் உயிரிழப்பதும் உறுப்புக்கள் இழப்பதும் கூட அன்றாடச் செய்திகள்தான்.

தமிழ்நாடு மற்றும் சென்னை காவல்துறையினர் இதுவரை இந்த விபத்துக்களுக்கு உயிரிழப்புக்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது சில விதிவிலக்குகள் தவிர எல்லா சம்பவங்களிலும் நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா?

வெளிமாநிலத் தொழிலாளர்களை பணிக்கமர்த்துவதில் நடக்கும் சட்டமீறல்கள் என்றாவது இவர்கள் கண்ணில் பட்டிருக்கிறதா? அந்த மீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா? ஒரு வகையில் வெளிமாநிலத் தொழிலாளர் கணக்கெடுப்பு அவசியம். அவர்கள் குற்றவாளிகள் என்ற அடிப்படையில் அல்லாமல் அவர்கள் உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த அவர்கள் உயிர் வாழ்வதை உத்தரவாதப்படுத்த அது அவசியம்.

தமிழ்நாட்டுத் தொழிலாளி விபத்துக்குள்ளானாலும் இதே போன்ற விசயங்கள்தான் நடக்கின்றன. நவம்பர் 24 அன்று திண்டுக்கல்லில் அப்பள நிறுவனம் ஒன்றில் வேலை செய்த ஒரு பெண் தொழிலாளியின் வலதுகை எந்திரத்தில் சிக்கி மணிக்கட்டு வரை துண்டாகிப் போனது.

உள்ளூர் தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சைக்கு வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டதால் துண்டான கையோடு அவர் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். துண்டான கையை சேர்க்க முடியாது என்று அங்கு சொல்லப்பட்டது. விபத்துக்குக் காரணம் அந்தத் தொழிலாளியின் கவனக்குறைவே என்று நிர்வாகம் சொல்கிறது.

விபத்துக்கு பொறுப்பேற்று நிர்வாகத் தரப்பில் எந்த முறையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காவல்துறையும் எந்த முறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நாளொன்றுக்கு ரூ.100 கூலியில் அந்த ஆபத்தான வேலையில் இன்னும் பலர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விபத்து நடந்தால் பொதுவாக ஒரு மாத சம்பளத்தைக் கொடுத்து பாதிக்கப்பட்ட தொழிலாளியை வீட்டுக்கு அனுப்பிவிடுவது அந்த நிறுவனத்தின் வழக்கம் என்று சொல்லப்படுகிறது. நிறுவனச் சொந்தக்காரருக்கு விபத்து நேர்ந்து தொழிலாளி எல்லாம் சேர்ந்து ஒரு மாதச்சம்பளம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பினால் சட்டம் பார்த்துக் கொண்டிருக்குமா என்று சென்னை தொழிலாளி ஒருவர் கேட்டார்.

தமிழ்நாட்டில் வாழும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை இதுபோன்ற சம்பவங்கள் சொல்லிக் கொண்டு இருக்க ஏற்காடு தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஜெயலலிதா, தமிழ்நாட்டை சுபிட்சமாக்கியே தீருவேன் என்று சூளுரைக்கிறார். இதே நிலை மைகள் தொடர அனுமதிக்கப்பட்டால் அவர் சொல்லும் சுபிட்சம் வரும்போது மொத்த தமிழ்நாடும் இடுகாடாகிவிடும்.

ஜெயலலிதாவின் மக்கள் விரோத நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற் படுத்திக் கொண்டிருக்கும்போது அவர் தப்பித்துக்கொள்ள காமன்வெல்த் போன்ற பிரச்சனைகள் அவ்வப்போது உதவிவிடுகின்றன.

முள்ளிவாய்க்கால் முற்றம் அமைத்ததால், கைது செய்யப்படுபவர்கள் கூட தங்களுக்கு ஓய்வு தர ஜெயலலிதா கைது செய்தார் என்று சொல்லி விமர்சனத்தின் கூர்மையை மழுங்கடிக்கின்றனர். அந்த மழுங்கடிப்புக்கு மறுபுறம் எல்லாப் புகழும் எனக்கே என்ற ஜெயலலிதாவின் பாட்டு ஒலிக்கிறது. அதில் பங்குபோட வந்தால் ஒடுக்குமுறை என்ற தாளம் தெறிக்கிறது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஅய் குழுவில் இடம்பெற்றிருந்த எஸ்பி தியாகராஜன், தான் பேரறிவாளன் வாக்கு மூலத்தை முழுமையாக பதிவு செய்யவில்லை என்றும், பணிமூப்புக்குப் பின் அந்தத் தவறு தன்னை வாட்டுவதாகவும் அதனால் விசயத்தை வெளியே சொல்ல வேண்டும் என்று சொன்னதாகவும் வெளியாகியுள்ள செய்தி மொத்த வழக்கு விசாரணையின் முன்முடிவையும் முன்முடிவோடு விசாரணை நடத்தப்பட்டதையும் தெளிவாகக் காட்டுகிறது.

பேரறிவாளன் தண்டனையே அவர் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் தரப்பட்டது என்றால் சரியாக பதிவு செய்யப்படாத வாக்குமூலத்தின் அடிப்படையில் தரப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டியுள்ளது.

கொலைக்குப் பின் இருக்கிற சதி பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கோருகிற பேரறிவாளன் மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு டிசம்பர் 10க்கு ஒத்திப்போடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா இன்னும் இந்தப் பிரச்சனையில் தனது மேலான தலையீட்டைச் செய்யவில்லை. உடனடியாக ஏற்காடு தேர்தலுக்கு அது தேவைப்படவில்லை. மக்களவை தேர்தலுக்காக அதை இருப்பில் வைக்க ஜெயலலிதா திட்டமிட்டிருக்கலாம்.

தூக்கை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசு கையில் உள்ளது என்று வந்த விவாதத்தை ஒரு முறை சமாளித்ததுபோல் மறுமுறையும் சமாளிக்க முடியாது. ஏமாற்று அம்பலம் ஏறும். அமைச்சர்கள் இல்லத் திருமண விழாவில் பேசிய ஜெயலலிதா நாளைய பாரதம் நம் கையில் என்றார். என்னவாகும் இந்தியா? ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என யாரோ சொன்னார்கள்.

கடவுளால் காப்பாற்ற முடியாதுதான். உழைக்கும் மக்கள் அந்தப் பொறுப்பை  எப்போதும் எடுத்துக் கொள்வார்கள். தமிழ்நாட்டை மட்டுமின்றி மொத்த நாட்டையும் ஜெயலலிதாவிடம் இருந்து காப்பாற்றுவார்கள்.

மதச்சார்பற்ற சக்திகள், ஜனநாயக சக்திகள் யார்? - காம்ரேட்

டெல்லியில் இககமா, இகக  முன்முயற்சியில் 30.10.2013 அன்று மக்கள் ஒற்றுமை மதவெறி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இகக, இககமா தலைவர்கள், அய்க்கிய ஜனதாதளம், அஇஅதிமுக, அஸ்ஸாம் கனபரிஷத் போன்ற கட்சிகளின் தலைவர்களோடு கைகோர்த்துக் கொண்டு பின்வரும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

“வகுப்புவாத சக்திகளை முறியடிக்கவும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும், நம் பன்முகப் பண்பாட்டைப் பாதுகாக்கவும், மக்கள் ஒற்றுமையைப் பலப்படுத்தவும், அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் தங்களது முயற்சிகளைப் பலப்படுத்த வேண்டும்”.

தீர்மானத்தில் இடதுசாரி சக்திகள் பற்றி குறிப்பிடாததால், இகக, இககமா தம்மை இடதுசாரி சக்திகள் எனக் கருதிக் கொள்ளவில்லை என, நாம் முடிவு செய்ய வேண்டாம். பரந்த ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றுபடுத்த முயற்சிக்கும்போது, சுதந்திர இடதுசாரி அரசியலை வலியுறுத்தாமல் இருக்கும் அரசியல்ரீதியான பரந்த மனதும் புத்தி சாதுரிய நெளிவு சுளிவும் தேவை என, இகக இககமா தலைவர்கள் எப்போதுமே கருதுவார்கள்!

மதவெறி சக்திகளுக்கு எதிராக உறுதியாக விடாப்பிடியாகப் போராடும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியும் ஜனநாயகத்தின் பாதுகாவலாளியுமான இககமாலெயை அவர்கள் மக்கள் ஒற்றுமை மதவெறி எதிர்ப்பு மாநாட்டிற்கு அழைக்கவில்லை. இகக, இககமா போராடும் இடதுசாரி கட்சிகளுடன் ஒற்றுமை என்பதில் நாட்டமின்றி, முதலாளித்துவக் கட்சிகளோடு வேறுவேறு காரணங்கள் சொல்லி ஒற்றுமையைக் கட்டுவதற்கு முன்னுரிமை தருவதே, இடதுசாரி ஒற்றுமைக்குப் பெரும் தடையாகும்.

இகக, இககமா தங்கள் மாநாட்டிற்கு நேற்று வரை பீகாரில் பாஜகவோடு அதிகாரத்தைக் பகிர்ந்து கொண்ட நிதிஷ்குமாரின் ஜனதாதளத்தை அழைத்திருந்தனர். பல அடிப்படையான சிக்கல்கள் இருந்தாலும், பாஜகவோடு எந்தக் கட்டத்திலும் உறவாடாத லாலுபிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் அழைக்கப்படவில்லை.

குஜராத்தில் நரேந்திர மோடி இஸ்லாமியர்களை நர வேட்டையாடியதை அடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேஜமு அரசிலிருந்து விலகிய லோக் ஜனசக்தி கட்சியின் ராம் விலாஸ் பஸ்வான் அழைக்கப்படவில்லை. மசூதி இடிப்பு கர சேவைக்கு கல் அனுப்பிய ஜெயலலிதா போன்றவர்கள்தான் அழைக்கப்பட்டனர்.

30.10.2013 தங்கள் அழைப்புப்படி டெல்லிக்கு வந்த கட்சிகளை எந்த அடிப்படையில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் எனச் சொல்கிறார்கள் என்பதற்கு இகக, இககமா கட்சிகள் நாட்டிற்கும் பரந்த இடதுசாரி இயக்க தொண்டர்களுக்கும் விளக்கம் தர வேண்டும். 

விவாதத்தில் நெருக்கும்போது, நாங்கள் அவர்களோடு தேர்தலுக்கான மூன்றவது அணி கட்டவில்லை என்றோ, அல்லது நாங்கள் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றுபட வேண்டும் எனப் பொதுவாகத்தான் சென்னோமே தவிர, நிதிஷ் முலாயம் ஜெயலலிதா போன்றவர்களை ஜனநாயக சக்திகள் என்று சொல்லவில்லை என்றோ சொல்லி நழுவ முயற்சிக்கக் கூடாது.

மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் என அவர்களைக் கருதவில்லை என்றால், அவர்களை அழைத்து அவர்கள் ஒப்புதலோடு அவர்களோடும் சேர்ந்து, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒற்றுமை எனப் பேசுவது அரசியல் மோசடி அல்லவா?

அய்க்கிய அமெரிக்கா, சர்வதேச பயங்கரவாத எதிர்ப்புப் போரின் இலக்காக இசுலாமியர்களை நிறுத்தியுள்ளபோது, இனி மதவெறி எதிர்ப்பு மதச்சார்பின்மை ஆதரவு என்பது, ஏகாதிபத்திய எதிர்ப்போடு பிரிக்க முடியாமல் தொடர்புடையதாகும். ஏகாதிபத்திய எதிர்ப்பில்லாமல் மதவெறி எதிர்ப்பு கிடையாது. அதேபோல் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது ஜனநாயகத்திற்காக நிற்பதோடு பிரிக்க முடியாமல் தொடர்புடையதாகும்.

ஜனநாயகத்திற்கு ஆதரவாக நிற்பது என்பது பெருமுதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை எதிர்ப்பது, அரசு ஒடுக்குமுறையை எதிர்ப்பது, மக்கள் சார்பு வளர்ச்சிப் பாதைக்காக நிற்பது ஆகியவற்றோடு தொடர்புடையது. ஆக, இன்றைய சர்வதேச தேசிய சூழலில், மதச்சார்பின்மை என்பது ஜனநாயகத்தோடும் ஏகாதிபத்திய எதிர்ப்போடும் தொடர்புடையது.

 இககவும் இககமாவும், மதச்சார்பற்ற சக்திகள் ஜனநாயக சக்திகள் என அழைப்பதற்கு என்ன இலக்கணம் வைத்துள்ளனர், என்ன தகுதியுடையவர்கள் இத்தகைய சக்திகள் ஆவார்கள் என விளக்க வேண்டும்.

அந்த இசுலாமியர்கள் குற்றவாளிகள் அல்ல - ஜி.ரமேஷ்

2013 ஏப்ரல் மாதம் பெங்களூர் பாஜக அலுவலகம் அருகே குண்டு வெடித்த வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த 20 இஸ்லாமிய இளைஞர்களை தமிழக காவல்துறை உதவியுடன் கைது செய்தது கர்நாடகா காவல்துறை.

அதில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த பீர்முகைதீன், தென்காசி ஹனீபா, சதாம் ஹு சைன் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைபட்டார்கள்.

கிட்டத்தட்ட 6 மாதங்கள் அவர்கள் சிறையில் சித்தரவதை அனுபவித்த பிறகு, இப்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது இந்த மூவரும் குற்றவாளிகள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று சொல்லி அவர்களை விடுதலை செய்துள்ளது பெங்களூர் மாநகரக் காவல்துறை.

இந்தக் கொடுமையைக் கண்ட கர்நாடகா மாநில மனித உரிமை ஆணையம் தானாகவே முன்வந்து பெங்களூர் மாநகர காவல்துறை மீது வழக்கு தொடுத்துள்ளது. இவ்வழக்கில் கர்நாடகா மாநில தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள மனித உரிமை ஆணையம், பாதிக்கப்பட்ட அந்த மூவருக்கும் கர்நாடகா அரசு தலா 2 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

“இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்திற்காக எவ்விதக் குற்றமும் செய்யாமல் ஆறு மாத காலம் சிறைக் கொடுமை அனுபவித்துள்ளனர். இந்த மூவரையும் பயங்கரவாதிகள் முத்திரை குத்தி சிறையிலடைத்துள்ளார்கள். இதற்கு முழுக் காரணம் காவல்துறை அதிகாரிகளே. இந்த அதிகாரிகள் இந்த அப்பாவிகளை அநியாயமாகச் சிறையில் தள்ளியது மட்டுமின்றி, அவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்குவதற்காக அவர்களைச் சித்தரவதை செய்துள்ளனர்.

அதிகாரிகள் இதற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்று கர்நாடகா மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் சி.ஜி.ஹன்குந்த் கர்நாடகா அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். மேலும் அவர், முஸ்லீம்கள் என்றாலே பயங்கரவாதிகள் என்று காவல்துறை அதிகாரிகளின் மண்டையில் எந்த அளவிற்கு ஆழமாகப் பதிந்துள்ளது என்பதை இது காட்டுகிறது. மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்டிப்பாக நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும். இந்த நஷ்டஈடு காவல்துறையினரை கொஞ்சம் கூருணர்வு உள்ளவர்கள் ஆக்குவதற்கான ஒரு சிறிய முயற்சி என்று கூறியுள்ளார்.


இந்த மூவரைப்போலவே, கடந்த வருடம் அஜாஷ் அகமது மிர்சா என்ற விஞ்ஞானி ஒருவரும் பத்திரிகையாளர் மதியுர் ரஹ்மான் சித்திக் என்பவரும் இந்துத்துவா தலைவர்களை, அரசியல்வாதிகளைக் கொல்ல சதி செய்தார்கள் என்று பெங்களூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறைவாசத்திற்குப் பின்னர், சாட்சிகள் இல்லை என விடுதலை செய்யப்பட்டார்கள்.

அதேபோல் மாலேகான், அஜ்மீர் செரிப், சம்சுத்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மஜ்ஜீஸ் போன்ற இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளுக்குக் காரணம் இந்துத்துவா பரிவாரங்கள்தான் என வெளிப்படையாக தெரிந்துவிட்ட பிறகும் அவ்வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஏதுமறியா இஸ்லாமியர்கள் இன்னமும் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். 

நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய இளைஞர்கள் மீது நடத்தப்படும் இந்த வேட்டையால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளின் எதிர்காலமும் அவர்களுடைய குடும்பங்களின் எதிர்காலமும் பாழாய்போன பின்பும் அவர்களிடம் மன்னிப்பு கோருவதை, அவர்களுக்கு இழப்பீடுகள் வழங்குவதை இந்த அரசாங்கங்கள் தவிர்த்து விடுகின்றன.

மெக்கா மஜ்ஜீஸ் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து 70 இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் சித்தரவதை அனுபவித்தார்கள். மத்திய புலனாய்வுத்துறையின் விசாரணையில் இந்துத்துவா அமைப்புகளே குண்டு வைத்தது தெரிந்த பின்னர் அவர்களில் சிலர் விடுதலை செய்யப்பட்டார்கள்.

ஆந்திர மாநில சிறுபான்மையோர் ஆணையம் பாதிக்கப்பட்ட 20 பேருக்கு தலா 3 லட்ச ரூபாயும் 50 பேருக்கு தலா 20 ஆயிரம் ரூபாயும் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது. ஆந்திர அரசும் சிலருக்கு மட்டும் வழங்கியிருக்கிறது.

அதற்குள்  வெங்கடேஷ் கவுடு என்பவர் நஷ்டஈட்டிற்கு எதிராக வழக்குப்போட ஆந்திரா உயர்நீதிமன்றம் நஷ்டஈடு வழங்குவதற்குத் தடை விதித்துள்ளது. தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஆந்திர முதல்வர் ஆலோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

இஸ்லாமியர்கள் என்றாலே பயங்கரவாதிகள் என்கிற சிந்தனை, எண்ணம் காவல்துறை அதிகாரிகளிடத்தில் மட்டுமின்றி சில நீதிபதிகளிடம் கூட இருக்கிறது. இந்திய ஆட்சியாளர் களும் ஆளும் வர்க்கமும் இந்த விஷ வித்தை திட்டமிட்டு  இந்திய மக்களின் பொதுப்புத்தியில் விதைத்து வருகிறார்கள்.

சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் மோடி கும்பல்களால்  திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களை பாகிஸ்தானின் உளவுத்துறையான அய்எஸ்அய் தொடர்பு கொண்டது என்று வாய்கூசாமல் பேசினார் காங்கிரஸ் கட்சியின் இளவரசர் ராகுல்காந்தி.

முசாபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பிச் செல்வதற்கு வேண்டிய எந்தவித வசதி வாய்ப்புக்களையும் செய்து கொடுக்காமல், அவர்களெல்லாம் அகதி முகாம்களில் சொகுசாக இருப்பதால், வீடுகளுக்குப் போக மறுக்கிறார்கள் என்று இஸ்லாமிய மக்களை இழிவுபடுத்தியுள்ளது முலாயம் சிங் அரசு.

தமிழகத்தில் இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டாலும் கொல்லப்பட்டாலும் அதற்குக் காரணம் இஸ்லாமியர்கள் என்ற ரீதியில்தான் வழக்கை விசாரிக்கவே தொடங்குகிறது காவல்துறை. இந்துத்துவா இயக்கத்தைச் சேர்ந்த வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர் கொல்லப்பட்ட சமயத்தில் தமிழக காவல்துறைத் தலைவர் ஒன்றிரண்டைத்தவிர பெரும்பாலான கொலைகள் தனிப்பட்ட காரணங்களால்தான் நடந்துள்ளன என்று அறிக்கையே வெளியிட்டார்.

ஆனால், அடுத்தடுத்து அனைத்து வழக்குகளிலும் இஸ்லாமியர்களையே கைது செய்தார்கள். மேலப்பாளையத்தில் பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் இருக்கும்போது வெறும் பெட்டியை ஒரு வீட்டில் இருந்து எடுத்துவிட்டு யாரிடமும் திறந்துகூட காட்டாமல் வெடிகுண்டுகள் எடுத்ததாக வழக்குப் போட்டுள்ளார்கள்.

போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் இருவரையும் இந்து அமைப்புத் தலைவர்கள் கொல்லப்பட்ட அனைத்து வழக்குகளிலும் கஸ்டடியில் வைத்துக் கொண்டே அடுத்தடுத்து கைது செய்து அவர்களே ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்று சொல்லி ஜோடித்துக் கொண்டிருக்கிறது தமிழக காவல்துறை.

தீவிரவாதிகளைப் பிடித்த 238 போலீஸôருக்கு ரூபாய் 2.53 கோடி பரிசுத்தொகை வழங்கிப் பாராட்டியுள்ளார் ஜெயலலிதா. முதலில் சில போலீசாருக்கு மட்டும் பரிசுத்தொகை அறிவித்ததால் காவல்துறைக்குள் முணுமுணுப்பு ஏற்பட்டதால் எல்லாரும் பரிசு என வாரி வழங்கியிருக்கிறார்.

கருணாநிதி கூட, கொலையாளிகள் போலீஸ் பக்ருதீன் குழுவினரா? அல்லது ஏற்கனவே டிஜிபி அறிவித்த நபர்களா? என்று பொது மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு அரசு ஏன் பதில் அளிக்கவில்லை என்று கேள்வி கேட்டுள்ளார்.

இவர் ஆட்சியிலும் இஸ்லாமியர்கள்தான் குறிவைத்து கைது செய்யப்பட்டார்கள் என்பது தனிக்கதை. புதிய இளைஞர்கள் மட்டுமின்றி பல்வேறு வழக்குகளில் இருந்து நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் மீதும் மீண்டும் மீண்டும் வழக்குகள் போடுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது தமிழக அரசும் காவல் துறையும். கர்நாடகத்திலாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது சிலரை மட்டுமாவது விடுதலை செய்துள்ளனர். (அதற்காக மற்றவர்கள் எல்லாரும் உண்மைக் குற்றவாளிகள் என்று அர்த்தம் இல்லை).

ஆனால், ஓர் இஸ்லாமியரை கைது செய்துவிட்டால் முதல் தகவல் அறிக்கையில் இருந்து குற்றப்பத்திரிகை, சாட்சி விசாரணை வரை வழக்கை ஜோடித்து வெளியே வரமுடியாதபடி செய்வதுதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

தமிழக மனித உரிமை ஆணையம் மற்றும் நீதிமன்றங்கள்கூட இதுபோன்ற விசயங்களில் அதிகம் கவனம் எடுத்துக் கொள்வதில்லை. இதுபோன்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மக்கள் இயக்கங்கள் அதிகமாவது மட்டுமே தீர்வாகும்.

புதுக்கோட்டையில் ஆயிரம் கட்சி உறுப்பினர்கள் - பழ.ஆசைத்தம்பி

தமிழ்நாட்டில், அகில இந்திய தொழிற்சங்க மய்ய கவுன்சில் 2 லட்சம்  உறுப்பினர்கள் அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் 70,000 உறுப்பினர்கள் என்ற நிலையை எட்டிய பிறகும், கட்சி என்ற விதத்தில் சென்னையில் மட்டுமே ஆயிரம் உறுப்பினர் இலக்கைத் தாண்டி இருந்தோம்.

டிசம்பர் 18, தோழர் வினோத் மிஸ்ரா நினைவு உறுதி ஏற்பு நாளில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் கட்சியில் ஆயிரம் உறுப்பினர்கள் என்ற நிலை நிச்சயம் இருக்கும்.

கட்சி உறுப்பினர்களை ஒருவர் விடாமல் சந்திக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. மாவட்டக் குழு உறுப்பினர்கள், உள்ளூர் கமிட்டி உறுப்பினர்களை, கிளை செயலர்களை, கிளை தலைமைக்குழு உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு, கட்சி உறுப்பினர்களைச் சந்திக்கப் புறப்பட்டார்கள். லெவி வசூலை உறுப்பினர் புதுப்பித்தலை, முறைப்படி செய்ய முடிந்தது. கட்சிக்கும் உறுப்பினர்களுக்கும் நெருக்கம் என்பதை, அமைப்புரீதியாக ஒரு குறைந்தபட்ச பொருளில், அதாவது உறுப்பினர் சந்திப்பு என்ற பொருளில், சாதிக்க முடிந்தது.

ஆனால் கட்சிக்கும் உறுப்பினர்களுக்கும் இடையிலான நெருக்கத்தை, அரசியல் கருத்தியல்ரீதியாக பலபடுத்தி உயர்த்தி, அதன் மூலம், கட்சிக்கும் மக்களுக்கும் இடையிலான நெருக்கம் என்பதைச் சாதிப்பதில், மிகுந்த பலவீனம் இருப்பதால், கடுமையான விடாப்பிடியான தொடர் முயற்சிகளை எடுக்க வேண்டி உள்ளது.

2012ஆம் ஆண்டு கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை 826 ஆக இருந்தது. கந்தர்வ கோட்டை, கறம்பக்குடி, புதுக்கோட்டை, குன்றாண்டார்கோவில் மற்றும் ஆவுடையார்கோவி லில் 750க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்களை நேரில் சந்திக்க முடிந்தது. மீதம் உள்ளவர் களையும் டிசம்பருக்குள் சந்தித்து விட முடியும். சந்தித்தவர்கள் சந்திக்கப்பட்டவர்கள் என்ற இரு தரப்பினருமே உற்சாகப்பட்டனர். நம்பிக்கை பெற்றனர். வேலைகள் பற்றி விவாதித்தனர்.

கிளைகள் கூடுதல், தலைமைக் குழு போடுதல், செயலர் தேர்வு என்ற விதத்தில் 60 கிளைகள் அமைப்பாக்கப்பட்டுள்ளன. இந்த சமயத்திலேயே பழைய பகுதிகளில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதும் நடந்தது. 10 உள்ளூர் கமிட்டி மாநாடுகள் நடந்துள்ளன. இன்னமும் 4 உள்ளூர் கமிட்டி மாநாடுகள் நடக்க உள்ளன. 10 புதிய கிளைகள் போட வாய்ப்புள்ளது.

இந்த காலகட்டத்தில் குளந்திராம்பட்டு 100 பேர் வெட்டன்விடுதி 19 பேர் நரங்கிப் பட்டு 56 பேர் கருப்புடையான்பட்டி 17 பேர் மல்லிகை நத்தத்தில் சிலர் என புது உறுப்பினர்கள் சேர, கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை நான்கு இலக்கத்திற்கு வந்துவிட்டது.

குளந்திராம்பட்டு ஊராட்சியில் இணைப்பு விழா கூட்டம் 18.11.2013 அன்று நடைபெற்றது. கறம்பக்குடியைச் சேர்ந்த மாவட்டக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் கலைச்செல்வன் விஜயன் முருகதாஸ் மற்றும் இதர மாவட்டக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட செயலர் தோழர் பழ.ஆசைத்தம்பியும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமியும் உரையாற்றினர்.

இககமா மாவட்டக்குழு உறுப்பினராக இருப்பவரும், குளந்திராம்பட்டு ஊராட்சிமன்றத் தலைவராக இருமுறை இருந்தவருமான தோழர் தங்கப்பா நிகழ்ச்சியை கட்டமைத்து ஒருங்கிணைத்தார். ஊராட்சித் தலைவராக இககமாவில் செயல்பட்ட தோழர் சாவித்திரி, முதலில் இககவில் பிறகு இககமாவில் முன்னணி தோழராக இருந்த தோழர் துரைச்சாமி ஆகியோரோடு கணிசமான பெண்களும் இளைஞர்களும் கட்சியில் சேர்ந்தனர்.

இடதுசாரி முகாமில், இந்நிகழ்ச்சியும், இந்நிகழ்ச்சிக்கு பின்னால் உள்ள இககமாலெ விரிவடைவது என்ற அரசியல் போக்கும், கவன ஈர்ப்பு பெற்றன. 
                            
திருச்சி நாடளுôமன்ற தொகுதிக்குள், திருச்சி நகரத்தில், தோழர் தேசிகன் ஏற்பாடு செய்திருந்த கட்சியின் தொழிலாளர் வர்க்க இயக்கம் தொடர்பான காங்கிரஸ் ஆவணத்தின் மீதான கல்வி வகுப்பு, தோழர்களிடம் ஆர்வத்தை தூண்டியது.

“இப்போதைய அதிமுக்கிய பிரச்சனை கட்சி நடவடிக்கைகளில் கட்சி உறுப்பினர்களின் சீரான பங்கேற்பை உறுதி செய்வதாகும். மக்களுடன் நெருக்கமான உறவு, செயலூக்கமான கிளைகள், கட்சி பத்திரிகையின் அதிகரித்த விநியோகம், உரிய நேர லெவி வசூல் போன்றவற்றிற்கு, இதுவே திறவுகோல். சாதாண மக்களிடமிருந்து கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் பாத்திரம் வேறுபடுகிற விசயங்கள், வர்க்க உணர்வு மற்றும் கட்டமைக்கப்பட்ட செயலூக்கம் என்பது சொல்லாமலே விளங்கும்.

ஆனால் நம்முடைய கணிசமான உறுப்பினர்களிடம், இந்த வேறுபாட்டைக் காண முடிவதில்லை. எல்லா மட்டங்களிலும் உள்ள கட்சி அமைப்புக்கள், கட்சி நடவடிக்கைகளில் பொதுவான உறுப்பினர்களின் பங்கேற்பு வீதத்தையும் மட்டத்தையும் முன்னேற்ற கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, நாம் பெரிய அளவிலான, வெகுமக்கள் அணிதிரட்டலுக்குச் செல்லும் போதெல்லாம், நாம் எல்லா உறுப்பினர்களையும் ஈடுபடுத்த முயற்சிக்க வேண்டும்.” 

(இககமாலெ 9 ஆவது அகில இந்திய மாநாட்டு அமைப்பு தொடர்பான தீர்மானத்திலிருந்து) இந்த சவாலை புதுக்கோட்டை கட்சியும் எதிர்கொள்கிறது.

19.11.2013 கூடிய கட்சி மாவட்டக்குழு, அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்க சுதந்திர செயல்பாட்டை உறுப்பினர் சேர்ப்பைப் பலப்படுத்துவது, பெண்கள் இளைஞர்கள் மத்தியில் கவனம் செலுத்துவது, உள்ளூர் கமிட்டிகள் கிளைகள் மூலம் ஊராட்சிகளுக்கு இலக்குக்குகள் வைத்து 2014 ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி துவக்கத்தில் நடைபெறும் மக்கள் கோரிக்கை பேரணிக்கு அணிதிரட்டுவது போன்ற விசயங்களில் கவனம் செலுத்தியது.

வெளியிலிருந்து உள்ளே - காம்ரேட்

தனக்குள் ஒரு வர்க்கம்  தனக்கான ஒரு வர்க்கமாக தானே மாறுமா? மாறாது. அப்படி பாட்டாளி வர்க்கம் மாறி இருந்தால், எப்போதோ நாடெங்கும்  உலகெங்கும் புரட்சி நடந்து முடிந்திருக்கும். பாட்டாளி வர்க்கம் சுரண்டப்படுகிறது. ஒடுக்கப்படுகிறது. தான் சுரண்டப்படுகிறோம் ஒடுக்கப்படுகிறோம் என்பதை மட்டுமே புரிந்து கொள்ளும்போது, தனக்குள் ஒரு வர்க்கமாக மட்டுமே இருக்கிறது. அது எப்போது, இந்த சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் காரணம் என்ன, இவற்றிற்கு எப்படி முடிவு கட்டலாம் என உணர்ந்து கொள்கிறதோ, அப்போதுதான் அது தனக்கான வர்க்கமாகிறது.
 
தானே எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா என்ற தமிழ்ப் பாட்டு சரியான தைத்தான் சொல்கிறது. ஏடறிந்த வரலாறெல்லாம் வர்க்கங்களின் வர்க்கப் போராட்டங்க ளின் வரலாறே. புராதன பொது உடைமை சமூகமாக, மனித சமூகம் இருந்த போது, அங்கே, தனிச் சொத்து, குடும்பம், அரசு ஆகியவை இல்லை. அடிமை சமூகம் துவங்கி முதலாளித்துவ கூலி அடிமை சமூகம் வரை, சமூகம் வர்க்கங்களாகப் பிளவுண்டுதான் இருந்துள்ளது. ஆனால் சிறுபான்மை பெரும்பான்மை மீது ஆதிக்கம் செலுத்தி உள்ளது.

அடிமை எஜமானன் இடத்தில் பண்ணை எஜமானனும், பண்ணை எஜமானன் இடத்தில் நவீன முதலாளித்துவ வர்க்கத்தினருமாக, அதிகாரத்தில் இருந்து பெரும்பான்மை உழைக்கும் மக்களை சுரண்டி வந்துள்ளனர், ஒடுக்கி வந்துள்ளனர். மார்க்சியம், நவீன முதலாளித்துவமும் பாட்டாளி வர்க்கமும் பிறந்த பிறகுதான், விஞ்ஞான சோசலிசம் உருவாக முடியும் எனவும், தனக்குள் ஒரு வர்க்கம் என்ற நிலையிலிருந்து பாட்டாளி வர்க்கம் தனக்கான வர்க்கம் ஆக முடியும் என்றும் சொல்கிறது.

‘இயக்கம்தான் எல்லாம் இறுதி இலட்சியம் ஏதுமில்லை’   ‘அவசியமானதற்காக அல்லாமல் சாத்தியமானதற்கே முயற்சிப்பது ’ என்பவற்றை தன்னெழுச்சி எனச் சொல்லி, உணர்வுபூர்வ மான பாத்திரமே தேவை என வலியுறுத்தும்போது, லெனின், ‘என்ன செய்ய வேண்டும்’  நூலில் கார்ல் காவுட்ஸ்கியின் பின்வரும் நீண்ட மேற்கோளைக் கையாள்கிறார்.

“பொருளாதார வளர்ச்சியும் வர்க்கப் போராட்டமும் சோசலிஸ்டு உற்பத்திக்கான நிலைமைகளைப் படைக்கிறதோடல்லாமல் நேரடியாக அதன் அவசியத்தைப் பற்றிய உணர்வையும் (கா.காவுட்ஸ்கி கொட்டையெழுத்தில் போட்டது) படைக்கிறது என்று மார்க்ஸ் அடித்துக் கூறியிருப்பதாக நமது திருத்தல்வாதிகளில் பலர் எண்ணுகின்றனர்.

மேலும், முதலாளித்துவ முறையிலேயே மிக உயர்வாக வளர்ந்துள்ள இங்கிலாந்து மற்றெந்த நாட்டையும்விட இவ்வுணர்விலிருந்து வெகு தொலைவில் நிற்கிறது என்று இந்த விமர்சகர்கள் அடித்துப் பேசுகிறார்கள். நகலைப் பார்க்கும்போது, இப்படி, மறுக்கப்பட்ட வைதிக - மார்க்சிய வகைப்பட்டதாகச் சொல்லப்படும் கருத்தை ஆஸ்திரிய வேலைத் திட்டத்தைத் தயாரித்த குழு ஏற்றுக்கொண்டுள்ளதாக அனுமானிக்கக்கூடும்.

நகல் வேலைத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ‘முதலாளித்துவ வளர்ச்சி பாட்டாளி வர்க்கத்தின் எண்ணிகையை உயர்த்த உயர்த்த, பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராட மேன்மேலும் நிர்ப்பந்திக்கப்படுகிறது, மேன் மேலும் தகுதி பெறுகிறது.

’ சோசலிசத்தின் சாத்தியப்பாட்டையும் அவசியத்தையும்  ‘பாட்டாளி வர்க்கம் உணர்ந்து கொள்கிறது ’.  இது சம்பந்தமாக, சோசலிஸ்டு உணர்வு பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தின் அவசியமான, நேரடியான விளைவு என்று தோன்றுகிறது. ஆனால் இது முற்றிலும் பொய். தத்துவம் என்கிற வகையில் சோசலிசம் - பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டம் போலவே – தற்காலப் பொருளாதார உறவு முறைகளில் வேர் கொண்டிருப்பதும், அந்த வர்க்கப் போராட்டத்தைப் போலவே அதுவும் முதலாளித்துவம் படைத்த வறுமையையும் மக்களின் துன்பதுயரங்களையும் எதிர்க்கும் போராட்டத்திலிருந்து வெளித் தோன்றுகிறதும் உண்மைதான்.

ஆனால், சோசலிசமும் வர்க்கப் போராட்டமும் அக்கம்பக்கமாக உதிக்கின்றன. ஒன்றிலிருந்து மற்றொன்று உதிக்கவில்லை. ஒவ்வொன்றும் வெவ்வேறு நிலைமைகளின்கீழ் உதிக்கிறது. நவீன சோசலிஸ்டு உணர்வு ஆழ்ந்த விஞ்ஞான அறிவின் அடிப்படையிலே மட்டுமே உதிக்க முடியும்.

உண்மையாகச் சொன்னால், நவீனகாலத் தொழில் நுட்பவியல் போலவே (எடுத்துக்காட்டாகச் சொல்கிறோம்) தற்காலப் பொருளாதார விஞ்ஞானமும் சோசலிஸ்டு உற்பத்திக்கு நிபந்தனையாகும். எவ்வளவு விருப்பம் இருந்தபோதிலும் சரி, தொழிலாளர் வர்க்கத்தால் இவற்றில் எதையும் படைக்க முடியாது. இரண்டும் தற்காலச் சமுதாய நிகழ்வுப்போக்கிலிருந்து உதிக்கின்றன.

விஞ்ஞானத்தை எடுத்துச் செல்லும் ஊர்தி பாட்டாளி வர்க்கமல்ல, முதலாளி வர்க்கப் போக்குள்ள படிப்பாளிப் பகுதியே (காவுட்ஸ்கி கொட்டையெழுத்தில் போட்டது): இந்தப் பகுதியின் தனித்தனி உறுப்பினர்களின் சிந்தனையிலேதான் நவீனகால சோசலிசம் தோற்றம் எடுத்தது. அவர்கள்தாம் அதை மேலான அறிவு வளர்ச்சி பெற்ற தொழிலாளர்களிடம் கொண்டுபோனார்கள். இவர்கள் தம் முறைக்கு பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்திலே, நிலைமைகள் அனுமதிக்கிற அளவுக்கு, அதைப் புகுத்துகிறார்கள்.

 எனவே, சோசலிஸ்டு உணர்வு எனப்பட்டது பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்துக்குள் வெளியிலிருந்து புகுத்தப்படுகிற ஒன்றாகும். உள்ளிருந்து தன்னியல்பாகத் தோன்றிய ஒன்றல்ல. அதன்படியேதான், பழைய ஹெய்ன்ஃபெல்ட் வேலைத் திட்டம் சரியாகக் கூறியது. தொழிலாளர் வர்க்கத்துக்குத் தனது நிலை பற்றிய உணர்வை, தனது பணியைப் பற்றிய உணர்வை ஊட்டுவது (உண்மையிலேயே சொன்னால், நிரப்புவது) சமூக - ஜனநாயகவாதத்தின் பணியாகும். வர்க்கப் போராட்டத்திலிருந்து உணர்வு தானாகவே உதிக்கிறதென்றால் இப்பணிக்கு அவசியமெதுவும் இராது. புதிய நகல் இந்த முன்கூற்றைப் பழைய வேலைத் திட்டத்திலிருந்து பிரதி செய்து கொண்டு மேலே சொன்ன முன்கூற்றை அத்துடன் இணைத்துள்ளது. ஆனால் இது சிந்தனைநெறியை முற்றாக அறுத்துவிட்டது.”

உழைக்கும் மக்கள் தமது இயக்கத்தின் நிகழ்வுப்போக்கிலே தாங்களாகவே ஒரு சுதந்திரமான சித்தாந்தத்தை வகுத்துக் கொள்ளும் பேச்சுக்கிடமில்லை. ஆதலால் ஒன்றுதான் தேர்ந்தெடுக்க உண்டு - முதலாளித்துவச் சித்தாந்தம் அல்லது சோசலிஸ்டு சித்தாந்தம், என்று. நடு வழி ஏதும் கிடையாது (ஏனெனில் மனித குலம் ஒரு “மூன்றாம்” சித்தாந்தத்தைப் படைக்கவில்லை; மேலும், வர்க்கப் பகைமைகளால் பிளக்கப்பட்டுள்ள ஒரு சமுதாயத்தில் வர்க்கத் தன்மையற்ற சித்தாந்தமோ வர்க்கத்துக்கு அப்பாற்பட்ட சித்தாந்தமோ என்றைக்கும் இருக்க முடியாது). எனவே, சோசலிஸ்டு சித்தாந்தத்தை எந்த விதத்தில் சிறுமைப்படுத்தினாலும், அதிலிருந்து இழையளவேனும் விலகிச் சென்றாலும் முதலாளித்துவ சித்தாந்தத்தைப் பலப்படுத்துவதாகவே பொருள்.”

ஆக தனியுடைமையை ஒழித்துக்கட்டி பொது உடைமையை உருவாக்க வேண்டும் என்ற சோசலிச உணர்வு, அதாவது பாட்டாளி வர்க்க அரசியல் உணர்வு, பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு வெளியிலிருந்துதான் புகுத்தப்பட வேண்டும். சரியாகச் சொல்வதென்றால், நிரப்பப்பட வேண்டும். இதில் எந்த ஜனநாயக மறுப்பும் கிடையாது. அப்படியானால் தொழிலாளர் வர்க்கம் மத்தியிலிருந்து தத்துவம் படைப்பவர்கள் எவரும் எழ மாட்டார்களா? எப்படி எழுவார்கள்? இந்த கேள்விகளுக்கு லெனின் பின்வருமாறு பதில் சொல்கிறார்.

“இப்படிப்பட்ட தத்துவத்தைப் படைப்பதில் தொழிலாளர்களுக்குப் பங்கு இல்லை என்று இதற்கு அர்த்தமல்ல. என்றபோதிலும், அவர்கள் பங்கு கொள்வது தொழிலாளர்கள் என்கிற முறையிலல்ல, சோசலிஸ்டுத் தத்துவ ஆசிரியர்கள் என்கிற முறையில் - புரூதோன்களைப் போல, வைட்லிங்குகளைப் போல; சுருங்கச் சொன்னால், அவர்கள் தங்கள் சகாப்தத்தின் அறிவைப் பெறவும் அதை வளர்க்கவும் ஏறத்தாழ முடிகிறபோதுதான், முடிகிற அளவுக்குத்தான், அவர்கள் பங்கு கொள்கிறார்கள்.

ஆனால், இதில் தொழிலாளர்கள் மேலும் அடிக்கடி வெற்றிபெறச் செய்வதற்கு  பொதுவாகவே தொழிலாளிகளின் உணர்வின் தரத்தை உயர்த்துவதற்கு எல்லா முயற்சிகளும் எடுத்துக் கொள்ளவேண்டும்; “தொழிலாளிகளுக்கான இலக்கியம்” என்கிற செயற்கையாகக் குறுக்கப்பட்ட வரம்புகளுக்குள் தொழிலாளர்கள் நின்று விடாமல் பொதுவாக இலக்கியத்தைப் பயின்று புலமை பெற மேன்மேலும் கற்கவேண்டியது அவசியம்.

“ தொழிலாளர்கள் நின்று விடாமல்”  என்று சொல்வதைவிட “தொழிலாளர்களை நிறுத்திவிடாமல்” என்று சொல்வது மேலும் உண்மையாயிருக்கும். காரணம் தொழிலாளர்களைப் பொறுத்தவரை படிப்பாளிப் பகுதிக்காக எழுதப்படுவதனைத்தையும் அவர்கள் வாசிக்க விரும்புகிறார்கள். வாசிக்கவும் செய்கிறார்கள். ஒரு சில மோசமான அறிவுஜீவிகள் தாம் “தொலாளர்களுக்குத்” தொழிற்சாலை நிலைமைகளைப் பற்றிச் சில விசயங்களைச் சொன்னால் போதும், எல்லோருக்கும் வெகுகாலமாகத் தெரிந்திருக்கிறவற்றையே திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தால் போதும் என்று நம்புகிறார்கள்”

தொழிலாளர் வர்க்கம் மத்தியிலிருந்து வரும் புரட்சியாளர்கள் விசயத்தில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விசயங்கள் பற்றி லெனின் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“நமது முதன்மையான முக்கியமான கடமை தொழிலாளி வர்க்கப் புரட்சியாளர்களைப் பயிற்றுவிக்க உதவுவதே, இவர்கள் கட்சி நடவடிக்கை விசயத்தில் அறிவுஜீவிகளிடையே இருந்து வரும் புரட்சியாளர்களுக்குச் சமமாக இருப்பார்கள் “கட்சி நடவடிக்கை விசயத்தில்” எனும் சொற்களை வலியுறுத்துகிறோம். ஏனெனில் மற்ற விசயங்களில் அறிவுஜீவிகளின் தரத்திற்குத் தொழிலாளர்களை உயர்த்துவது அவசியமாயினுங்கூட அது அவ்வளவு சுலபமோ அவசரத் தேவையோ அல்லன.

எனவே தொழிலாளர்களைப் புரட்சியாளர்களின் தரத்திற்கு உயர்த்துவதற்கு முதன்மையான கவனம் செலுத்த வேண்டும்; “பொருளாதாரவாதிகள்” செய்ய விரும்புவதுபோல்  “உழைக்கும் மக்களின்” தரத்திற்கோ, ஸ்வபோதா செய்ய விரும்புவது போல் “சராசரித் தொழிலாளர்களின்” தரத்திற்கோ இறங்குவது  நம் பணி அல்லவே அல்ல.”

வர்க்கங்கள் உள்ளவரை, வர்க்கப் பகைமைகள் நிலவும்வரை, வர்க்கப் போராட்டங்கள் நடந்தே தீரும். ஆனால், பாட்டாளி வர்க்கம் தனக்குள் ஒரு வர்க்கமாக இருக்கும் நிலையிலி ருந்து தனக்கான ஒரு வர்க்கம் என்ற நிலைக்குச் செல்ல, வெளியிலிருந்து பாட்டாளி வர்க்க அரசியல், பாட்டாளி வர்க்க இயக்கத்திற்குள் நுழைக்கப்பட வேண்டும். பாட்டாளி வர்க்கத்தின் புறநிலைரீதியான வரலாற்றுப் பாத்திரம், தனது உணர்வுபூர்வமான ஒன்று குவிக்கப்பட்ட வெளிப்பாட்டைப் பெறுவது, கம்யூனிஸ்ட் கட்சியில்தான், மார்க்சிய லெனினியத்தில்தான்.

இந்த பூமி, மனிதர்கள், லாபங்கள் ஆகியவை இன்றைய சமூகத்தின் முக்கிய மூன்று விசயங்கள் ஆகும் ( PLANET, PEOPLE, PROFIT ). முதலாளித்துவத்திற்கு உள்ளிருந்தே, நாடாளுமன்ற முறைக்கு உள்ளிருந்தே, லாபங்களைக் காட்டிலும் மக்களும் இந்த பூமியும் முதன்மையான வர்கள் என்ற கரிசனம் பிறக்காது. பொருளாதாரக் கொள்கையின் முதன்மை இடத்தில் மக்களையும் இந்த பூமியையும் நிறுத்த வேண்டுமானால், தொழில்மயமாக்கத்திற்கு மூலதனம் அத்தியாவசியமா என்ற கேள்வி எழுப்பப்பட வேண்டும்.

மூலதனமில்லாத தொழில் எனும்போது, இயந்திரமில்லாத தொழில், தொழில்நுட்பமில்லாத தொழில், நிதிகளில்லாத தொழில், நிர்வாகமில்லாத தொழில் என்றெல்லாம் அதற்குப் பொருள் ஆகாது. இவை எல்லாம் மூலதனத்தின் பண்புகளை வரையறை செய்யவில்லை.

சமூகமயமாக்கப்பட்ட உற்பத்தியின் பயன்களை தனிச்சொத்து அபகரிப்பதை உறுதி செய்யும் ஒன்று குவிக்கப்பட்ட முரண்பட்ட சமூக அதிகாரமே மூலதனம் ஆகும்.  மூலதனம் முதலாளித்துவம் ஆகியவை இல்லாத தொழில்மயமாக்கம் சாத்தியமென்பதைத்தான், 20ஆம் நூற்றாண்டு சோசலிசம் சொன்னது, 21ஆம் நூற்றாண்டு சோசலிசம் சொல்கிறது, சோசலிசம், உற்பத்தியை பொதுவுடைமையின் கீழ் வைப்பதன் மூலம், சமூகமயமாக்கப்பட்ட உற்பத்தியை தனிச்சொத்து அபகரிக்கும் முரண்பாட்டிற்கு தீர்வு காணும்.

அதற்கு, தனிச்சொத்தின் அடிப்படையிலான சுரண்டும் சமூகத்தைத் தாண்டி வெளியே செல்ல வேண்டும்; நாடாளுமன்றம் தாண்டிய மக்கள் போராட்டங்கள் வேண்டும்; இதுவரை இல்லாத வகையில், பெரும்பான்மை சிறுபான்மையை ஆளும் ஜனநாயகம் வேண்டும்.

ஈரான் மீதான ஏகாதிபத்திய முற்றுகை மீது ஓர் அடி விழுந்துள்ளது - எஸ்.குமாரசாமி

ஏகாதிபத்திய சாத்தான்கள் வேதம் ஓதின. ஈரான் அணுகுண்டு தயாரிக்கப் பார்க்கிறது. ஈரானிடம் அணுகுண்டு வந்தால், இஸ்ரேலுக்கு ஆபத்து. மேற்கு ஆசியாவிற்கு ஆபத்து. உலக அமைதிக்கு ஆபத்து. இந்தப் பாட்டும் பல்லவியும் மாமூலானவை.

இஸ்லாமிய பயங்கரவாதம் என ஓர் எதிரியை அடையாளப்படுத்தி தேர்வு செய்த பிறகு, முல்லா ஓமரையும் பின்லேடனையும் தேடிப் பிடிக்கப் போகிறோம் எனச் சொல்லி, அய்க்கிய அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தார்கள். இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகக் கதை சொல்லி, சதாம் உசேனைக் கொன்றார்கள். இராக்கை ஆக்கிரமித்தார்கள். பயங்கரவாத எதிர்ப்புப் போர் என்ற பெயரால், எண்ணெய் எரிவாயு நிலக்கரி போன்ற வளங்களை விழுங்கவும் உலகளாவிய எரிசக்தி பொருளாதாரம் மீது ஓர் ஏகாதிபத்தியக் கட்டுப்பாட்டை நிறுவவுமே முயற்சிக்கிறார்கள்.

ஈரான் என்பிடி- நான் பிராலிஃபிரேஷன் டிரீடி அதாவது அணுசக்தி பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது. ஆனால் இஸ்ரேல்  என்பிடி ஒப்பந்தத்தில் கையொப்ப மிடவில்லை என்பதோடு மட்டுமல்லாமல், அணுகுண்டுகளையும் வைத்துள்ளது. அய்க்கிய அமெரிக்கா – இஸ்ரேல் அச்சுதான், அமைதி மற்றும் சுதந்திரத்தின் முதன்மையான எதிரிகளாக உள்ளன. பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல்,ஏகாதிபத்திய உலகம் துணை இருக்கும் துணிச்சலில், ஈரானைத் தாக்குவேன், ஈரான் மீது குண்டு வீசி தரைமட்டமாக்குவேன் என மிரட்டி வந்தது.

 அய்க்கிய அமெரிக்கா ஆதரவு மன்னர் ஷா வீழ்த்தப்பட்ட காலத்திலிருந்தே (1979), ஏகாதிபத்திய உலகம் ஈரான் மீது பகைமை பாராட்டி வருகிறது. ஈரான் பொருளாதாரரீதி யாகவும் அரசியல்ரீதியாகவும் முற்றுகையிடப்பட்டது.

ஞாயிறு (24/11/2013) காலை 4.30 மணி அளவில், ஈரான் அணு ஆற்றல் திட்டம் தொடர்பாக ஓர் உடன்பாடு ஜெனிவா நகரில் கையொப்பமானது. அய்க்கிய அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா, சீனா என்ற 6 நாடுகள் 2006 அய்நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானப்படி ஈரானுடன் பேசி வருகின்றன.

இந்த ஒப்பந்தத்தின் பயனாக, முடக்கி வைக்கப்பட்டிருந்த ஈரானின் எண்ணெய் வருவாய் ரூ.20,000 கோடி ஈரான் கைகளுக்குக் கிடைக்கும். தங்கம், பெட்ரோ கெமிக்கல்ஸ், கார், விமான பாகங்கள் ஆகியவற்றில் ஈரானோடு வர்த்தகம் கூடாது என்ற தடையும் தற்காலிகமாக நீக்கப்படும். ஈரான், யுரேனியத்தை ரியாக்டர் தரம் 5% மேல் செறிவூட்டக்கூடாது.

ஈரான் தன் கைவசம் உள்ள தாழ்ந்த மட்ட செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அதிகரிக்காது. ஈரான் புதிய சென்ட்ரிஃபியூகஸ் (மய்ய விலக்கிகள்) நிறுவாமலும், கைவசம் உள்ள 16000 சென்ட்ரிஃபியூகஸில் பாதிக்கு மேல் இயக்காமலும், தனது செறிவூட்டும் ஆற்றலை முடக்கிக் கொள்ளும். ஈரான், அராக்கில் கட்டும் தனது கன-நீர் ரியாக்டரை செயல்பாட்டிற்கு கொண்டு வராது; செலவழிக்கப்பட்ட எரி சக்தியிலிருந்து புளூட்டோனியம் தயாரிக்கும் ரீ பிராசசிங் பிளாண்ட் கட்டாது. ஈரான் தனது சில அணு நிலையங்கள் மீது அன்றாட சர்வதேச கண்காணிப்புக்கும் ஒப்புக் கொள்ளும்.

இஸ்ரேல் இந்த ஒப்பந்தம் ஒரு வரலாற்றுத் தவறு என்கிறது. “இன்று உலகம் மேலும் கூடுதல் ஆபத்தானதாக மாறியுள்ளது; உலகிலேயே மிகவும் ஆபத்தான ஓர் ஆட்சி உலகின் மிகவும் ஆபத்தான ஆயுதத்தை அடைவதை நோக்கி முக்கிய அடி எடுத்து வைத்துள்ளது” என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, மேலை நாடுகள் குறிப்பாக அவரது கூட்டாளிகள், ஈரான் அணு குண்டு தயாரிக்க இடம் தந்து விட்டதாகச் சொல்கிறார். ஆபத்தான நாடான இஸ்ரேல் ஆபத்தான அணுகுண்டுகளை கைவசம் வைத்துக் கொண்டு, இவ்வளவும் பேசுகிறது!

ஈரான் குடியரசுத் தலைவர் ஹாசன் ரவுஹானி யுரேனியத்தை செறிவூட்டும் தமது உரிமையை கைவிட முடியாது என உறுதியாக இருந்த அதேநேரம், பேச்சுவார்த்தைகள் மூலம், தமது நாட்டை முடக்கிப்போடும் தண்டனைத் தன்மை வாய்ந்த தடைகளை அகற்ற முயன்றார்.

இஸ்ரேல் கையொப்பமிடாத, ஈரான் கையொப்பமிட்டுள்ள அணு ஆற்றல் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தின் ஷரத்து 4, “எந்த வேறுபடுத்தலுமின்றி, அமைதி நோக்கங்களுக்காக அணு ஆற்றல் தொடர்பான ஆராய்ச்சியை வளர்த்திட, அணு ஆற்றலை தயாரிக்க பயன்படுத்த, ஒப்பந்தத்தின் அனைத்து தரப்பினர்க்கும் உள்ளார்ந்த பறிக்க முடியாத உரிமைகளுண்டு” என்கிறது. ஒப்பந்தத்திற்குப் புறம்பாகத்தான் ஈரானை மிரட்டினார்கள். ஆனால், 2005லேயே, 3,000 சென்ட்ரிஃபியூகசுடன் தனது யுரேனிய செறிவூட்டும் ஆற்றலை நிறுத்திக் கொள்வதாக, ஜார்ஜ் புஷ்ஷிடம் ஈரான் சொன்னது. முடியாது கூடாது விடுவேனா பார் என, அய்க்கிய அமெரிக்கா மீசையை முறுக்கியது; முஷ்டியைத் தட்டியது. 2008லேயே ஈரானிடம் 7,221 சென்ட்ரிஃபியூஜஸ் (மய்ய விலக்கிகள்) இருந்தன. 2008ல் ஈரான் கைவசம் 1,000 கிலோகிராம் தாழ்ந்த மட்ட செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருந்தது. இன்று 10,000 கிலோகிராம் உள்ளது. 

சிரியா, இரசாயன ஆயுதங்கள் விசயத்தில் சிவப்புக்கோடு தாண்டியதால், சிரியா மீது குண்டு வீச்சு, தாக்குதல் என உருட்டி மிரட்டிய அய்க்கிய அமெரிக்கா, கடைசியில், சிரியா சர்வதேச கண்காணிப்பிற்கு ஒப்புக் கொண்டதால்தான் தாக்குதல் கைவிடப்பட்டது எனச் சொல்லி, தன் மீசையில் மண் ஒட்டாததாகக் காட்டிக் கொண்டது. இப்போது ஈரானுடன் ஒப்பந்தம் கையொப்பமான பிறகு ஒபாமா சொல்கிறார்; “உலக பிரச்னைக்கு, அமைதி தீர்வு காணும் முயற்சிதான், ஈரானுடனான ஒப்பந்தம். இது தவிர்க்க முடியாதது. நாம், பேச்சு வார்த்தை ராஜதந்திரத்திற்கு, கதவுகளை மூட முடியாது. முடிவில்லா மோதலையும் அனுமதிக்க முடியாது. கடுமையாகப் பேசுவதோ கோபத்தில் முகம் சிவக்கக் கண்டிப்பதோ, அரசியல்ரீதியாக எளிதானது. ஆனால் இவை நம் பாதுகாப்பிற்கு ஏற்றவை அல்ல”.  ஆப்கா னிஸ்தானில் இராக்கில் சிக்கியுள்ள அய்க்கிய அமெரிக்காவிற்கு, லிபியாவில் செய்ததைப் போல், சிரியாவில் ஈரானில் செய்ய முடியவில்லை என்பது, மிகமிக நல்ல விசயம்.

இவ்வளவு நெருக்கடியான கட்டத்திலும், ஈரானோடு சவுதி அரேபியா, கத்தார் அய்க்கிய அரபு குடியரசு ஆகிய நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகளில் குளிர் காய்ந்து கொண்டு, அரபு நாடுகளில் (யுஏஈ) அணு உலை கட்டவும் பல பில்லியன் டாலர் மதிப்புடைய ஆயுதங்கள் தளவாடங்கள் வழங்கவும் பிரான்ஸ் தயாராகிறது. வரலாற்றின் விந்தை முரணாக இப்போது இஸ்ரேலுக்கும், சவுதி அரேபியா- கத்தார்  - அய்க்கிய அரபு குடியரசுக்கும் பொது எதிரிகள், சிரியாவும் ஈரானும்; பொது நண்பன் பாதுகாவலன் அய்க்கிய அமெரிக்க நாடுகள். அய்க்கிய அரபு குடியரசில் கட்டப்படும் அணு உலையில் அணுகுண்டு ஆபத்து என பூச்சாண்டி காட்ட இஸ்ரேலோ அய்க்கிய அமெரிக்காவோ தயாராக இல்லை.

குற்றவாளிகள் குற்றம் சுமத்துகிறார்கள்

அணு ஆயுதங்களை குவித்து வைத்திருப்பவர்கள், அணு ஆற்றல் பரவல் தடை (என்பிடி), அனைத்தும் தழுவிய அணு சோதனை தடை ஒப்பந்தம் (சி டி பி டி) பற்றிப் பேசுகிறார்கள். நியுக்ளியர் கிளப்  அதாவது அணு ஆயுத கிளப் உறுப்பினர்கள் வேறு யாரும் உள்ளே வரக் கூடாது என்கிறார்கள்.

1985ல் உலகில் 68,000 அணு ஆயுதங்கள் இருந்தன. 2013ல் செயல்படும் நிலையில் 17,000 அணு ஆயுதங்கள் உள்ளன. அய்க்கிய அமெரிக்கா 7,700, ரஷ்யா 8,420, இங்கிலாந்து 225, பிரான்ஸ் 300, சீனா 250, இந்தியா 100, பாகிஸ்தான் 110, வடகொரியா 10க்கும் கீழே அணு ஆயுதங்கள் கொண்டுள்ளன எனச் சொல்லப்படுகிறது.

இஸ்ரேல், தன்னிடம் இல்லை ஆனால் இருக்கிறது எனப் பேசுகிறது. அய்க்கிய அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் இஸ்ரேலிடம் 150 அணுகுண்டுகள் இருப்பதாகச் சொல்கிறார். (பாலஸ்தீன் விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத் 11/11/2004 அன்று இறந்ததற்குக் காரணம் போலோனியம் நஞ்சு தான் என சுவிட்சர்லாந்து விசாரணைக் குழு நவம்பர் 7, 2013 அன்று அறிவித்துள்ளது. இஸ்ரேலின் டிமோனா அணு உலையிலிருந்து போலோனியம் தயாரிக்க வாய்ப்பு உண்டு என்பதால் சந்தேகத்தின் ஊசிமுனை இஸ்ரேல் நோக்கி திரும்பி உள்ளது). 

ஈரான் இந்தியா நல்லுறவு
இந்திய மக்களுக்கு நல்லது

இந்தியாவுக்கு டாலர்/யூரோ போன்றவற்றில் அல்லாமல் ரூபாயில் மலிவு விலையில் ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கவும், ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக ஆழ்குழாய்கள் மூலம் மலிவான விலையில் இயற்கை எரிவாயு பெறவும் சிறந்த வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்தியா தன் மீது மேலை நாடுகள் விதித்த தடைகளை நீக்கக்கோரி, முயற்சிகள் எடுத்த போது, அய்க்கிய அமெரிக்காவின் போர்த்தந்திர சங்கிலியில் கட்டப்பட்டது.

அவர்களின் அணு ஆற்றல் சட்டத்தின் 123 பிரிவின் கீழ் போடப்பட்ட ஒப்பந்தப்படி, இந்தியாவின் அயல் விவகாரக் கொள்கை அய்க்கிய அமெரிக்க அயல் விவகாரக் கொள்கையுடன் முற்றிலும் இசைவானதாக இருக்க வேண்டும். 110 கோடி மக்கள் கொண்ட, இறையாளுமை உடைய(?) இந்தியாவை, ஈரான் விசயத்தில் சொன்னதைக் கேள் என, அய்க்கிய அமெரிக்க அயல் விவகார அமைச்சர் கோண்ட லிசா ரைசால் மிரட்ட முடிந்தது. 

இந்தியா இப்போதாவது ஈரான் மீதான தடைகளுக்கு துணை போகாமல், ஈரானோடு சுமுக உறவுகள் மேற்கொண்டால், ரூபாய் தந்து எண்ணெய் பெறவும், மலிவாக எண்ணெய் பெறவும், பாகிஸ்தான் வழியாக எரிவாயுவை ஈரானிலிருந்து மலிவு விலையில் பெறவும் வாய்ப்பு உண்டு. நடப்புக் கணக்கு பற்றாக்குறை விலை உயர்வு ஆகிய சுமைகளிலிருந்து ஓரளவாவது நாடும் நாட்டு மக்களும் நிவாரணம் பெற முடியும். இது சாத்தியமாக, சுதந்திரமான அயல் விவகாரக் கொள்கை தேவை.

Search