COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Sunday, September 15, 2013

2013 டிசம்பருக்குள், 2014க்கு 5000 தீப்பொறி சந்தாக்கள் சேர்க்க உறுதியேற்ற மாலெ கட்சி மாநில ஊழியர் கூட்டம்

2014ல் நாடாளுமன்ற தேர்தல்களை நோக்கி நகர வேண்டியிருக்கிற சூழலில், 2014க்கான தீப்பொறி சந்தா சேர்ப்பு இயக்கத்தை முன்கூட்டியே நடத்துவதை திட்டமிட மாலெ கட்சி மாநில ஊழியர் கூட்டம் 31.08.2013 அன்று விழுப்புரம் மாவட்டம் கெடிலத்தில் நடைபெற்றது. மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள், மாவட்ட முன்னணிகள் மற்றும் உள்ளூர் கமிட்டிச் செயலாளர்கள் என 52 பேர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு தீப்பொறி ஆசிரியர் குழுவோடு, அதன் மேலாளர் தோழர் இராதாகிருஷ்ணன் மற்றும் தோழர் தேன்மொழி ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தை துவக்கி வைத்து மாலெ கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் குமாரசாமி உரையாற்றினார்.

கருணாநிதியும், ஜெயலலிதாவும் திருமண நிகழ்ச்சியில் குட்டி கதைகள் மூலம் அரசியல் பேசுகின்றனர், இந்த ஊழியர் கூட்டத்தில் சமகால அரசியல் நிகழ்வுகளை பகிர்ந்து கொள்வோம் என்று கூறி தனது உரையை துவங்கிய அவர், சமகால சர்வதேச, தேசிய மற்றும் மாநில அரசியல் சூழல் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். முதலாளித்துவ ஊடகங்களின் செயல்பாடு பற்றி குறிப்பிட்ட அவர், ராபர்ட் வதேரா நில மோசடி வெளிவந்தபோது, பத்திரிகைகளும், தொலைக்காட்சியும் ராபர்ட் வதேரா கம்பி எண்ணுவது தவிர வேறு வழியில்லை என்பது போல் சித்தரித்தன, மேல்மருவத்தூர் பிரச்சனையிலும் கல்லூரிக்கான அனுமதி முறைகேடு பற்றி சில நாட்கள் செய்தி வெளியிட்டன, இரு பிரச்சனையிலுமே, பிறகு அந்தச் செய்திகளையே தவிர்த்து விட்டன என்றார். தமிழகத்தில் தீப்பொறி எல்லா மாவட்டங்களிலும் உள்வயமாகியிருக்கிறது, அது இல்லாமல் 4008 சந்தாக்கள் இன்று வந்திருக்காது என்றார். கட்சி அமைப்பில் கிளைகள் அடித்தளமாகவும், உள்ளூர் கமிட்டி தூண்களாகவும் இருக்கின்றன என்று குறிப்பிட்ட அவர், கட்சி கட்டுதல், அமைப்பு பற்றிய மேலான புரிதலுக்கு கட்சி ஊழியர்கள் திப்பு, பர்துவான் அமைப்பு மாநாட்டு ஆவணங்களையும், ‘என்ன செய்ய வேண்டும்’ நூலில் பத்திரிகை பற்றிய பகுதிகளையும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

கம்யூனிஸ்ட் கட்சி வேலைகள் பற்றி குறிப்பிடும் போது தன்னெழுச்சிக்கும், கத்துக்குட்டித் தனத்துக்கும் தொடர்பு உண்டு என்றும், வேலைகளில் குறுகிய தன்மை இருக்கக் கூடாது என்றும், கம்யூனிஸ்ட் கட்சி என்றாலே அது உணர்வுபூர்வ பாத்திரம் என்றும் சொன்னார். கம்யூனிஸ்ட் வேலையில் நிகழ்கால வேலைகளில் எதிர்கால லட்சியங்களைப் பொருத்துகிறோமா இல்லையா என்பது முக்கியமானது என்றும் சில அமைப்புகளுக்கு மக்கள் திரள் இருப்பதாலேயே அதை சிலாகித்து, மோகிக்க தேவையில்லை என்றும் தமிழகத்தைப் பொறுத்தவரை மாநிலக் கமிட்டி, மாவட்டக் கமிட்டிகள், வெகுஜன அமைப்புகள், பத்திரிகை ஆகியவை நிலை பெற்றுள்ளன என்றும் கட்சி அமைப்பை முறைப்படுத்த தீப்பொறி நிச்சயம் பயன்படும் என்றும் 5000 இலக்கு என்பது இடைப்பட்ட புள்ளிதான், அடுத்து, வார இதழுக்குப் போயாக வேண்டும் என்றும் சொன்னார். பத்திரிகை கட்சியை பலப்படுத்தும், விரிவுபடுத்தும் என்ற குறிப்பிட்ட அவர், பத்திரிகையை கூட்டாக வாசிப்பதில், அதற்கான உணர்வுபூர்வமான நடவடிக்கைகளில் பலவீனம் நிலவுவதை சுட்டிக்காட்டினார். பிரிக்கால் பிளாண்ட் 3 வாயிலில் ‘சோசலிசம்: சில எளிய உண்மைகள்’ என்ற ஒருமைப்பாட்டில் வெளிவந்த கட்டுரை கூட்டாக வாசிக்கப்பட்டது. 100 பேர் கூட்டாக படித்தனர். இதே போல், சாந்தி கியர்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் போன்ற மற்ற இடங்களிலும் நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய தோழர் குமாரசாமி, தீப்பொறி வாசகர் வட்டங்கள் நோக்கி  தீவிரமாக நகர வேண்டும் என்றார்.

தோழர் இராதாகிருஷ்ணன் (மேலாளர், தீப்பொறி), மாவட்ட வாரியாக சந்தா இருப்பு விவர பட்டியலை முன்வைத்து, டிசம்பருக்குள் அடைய வேண்டிய இலக்கு பற்றியும் பேசினார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட ஊழியர்கள் பேசும்போது, தீப்பொறியில் வெளியிடப்படும் கருத்துக்கள் அமைப்புக்கு உள்ளும் வெளியிலும் வரவேற்பு பெறுவதாக, 50 சந்தா சேர்ப்பதே மலைப்பாக இருந்த நேரத்தில் முயற்சி செய்தபோது 100, 200, 300 என சந்தா எண்ணிக்கையை கூடுதலாக்க முடிந்ததாக, தீப்பொறி வாசிப்பு நடத்தப்படும் கூட்டங்கள் ஒப்பீட்டுரீதியில் கூடுதல் நேரம் நடத்தப்படுவதாக கருத்துக்கள் முன்வந்தன.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்

2014க்கான சந்தாக்களை சேர்க்க, 2013 செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் சந்தா சேர்ப்பு இயக்கம் நடத்தப்பட வேண்டும்.

சந்தா இலக்கு 5000. டிசம்பர் 18, உறுதியேற்பு தினத்தன்று 2014க்கு 5000 சந்தாக்கள் இருக்க வேண்டும்.

ஊழியர் கூட்ட தலைமைக் குழு முன்வைத்த இலக்குகளை தாண்ட முடியும் என்பது கூட்டத்தில் தோழர்கள் முன் வைத்த கருத்துக்களில் வெளிப்பட்டுள்ளது. கூடுதல் சந்தாக் களுக்கு முயற்சி செய்வதென்றும் 5000 இலக்கை நிச்சயமாக நிறைவேற்றுவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

மாவட்ட கமிட்டிகள் மற்றும் கோஆப்டெக்சுக்கு மாநில ஊழியர் கூட்ட தலைமைக் குழு முன்வைத்த இலக்குகளையும், பிற மாவட்டங்கள் தங்களுக்கு முன்வைத்த இலக்குகளையும் ஊழியர் கூட்டம் ஏற்றுக் கொண்டது. இந்த அடிப்படையில் முடிவான மாவட்டவாரியான இலக்குகள் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

தீப்பொறி, அமைப்பில் உள்வயமாகி இருக்கிறபோதிலும், வாசகர் வட்டங்கள் நடத்துவது, கூட்டுப் படிப்பு ஆகியவற்றில் உள்ள பலவீனங்களைக் களைய வேண்டும். சந்தா சேர்ப்பு இயக்கத்தில் உள்ளூர் கட்சி அமைப்புக்கள் ஈடுபடுத்தப்படுவதை, மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும். உள்ளூர் கமிட்டி ஒவ்வொன்றும் 50 சந்தாக்கள் உறுதி செய்ய வேண்டும்.

தீப்பொறியில் வெளியான படம் பற்றி சுட்டிக்காட்டப்பட்ட தவறு மற்றும் தபால் செய்வதில், விவரங்கள் முறையாக வைப்பதில் உள்ள குறைபாடுகள் களையப்பட வேண்டும்.

மாவட்டங்கள் தங்கள் சந்தாக்கள் பற்றிய விவரப் பதிவேடு வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும்.

புதுச்சேரி மாநில செயலாளரும், கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினருமான தோழர் பாலசுப்பிரமணியன், தீப்பொறி, பற்றியெறியும் காட்டுத் தீயாக பரவட்டும் என்று வாழ்த்திப் பேசினார்.

பல்சக்கரமும் சங்கிலியும் போல் பத்திரிகையும் அமைப்பும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி நிறைவுரையாற்றிய மாலெ கட்சி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், பல சமயங்களில் கட்சி கட்டுகிற வேலையை பத்திரிகையே செய்யும் என்றும் ஊழியர்களின் ஆலோசனைகளையும் ஏற்று செயல்பட மாநில கமிட்டியும், ஆசிரியர் குழுவும் தயாராகவே இருக்கிறது என்றும் கட்சி பத்திரிகை, கட்சியமைப்பு, உறுப்பினர் இவர்களுக்கிடையிலான இணைப்பு அவசியம் என்றும் சொன்னார்.

மாவட்டக் கமிட்டிகள் பத்திரிகைக்கு, துடிப்பான, கட்சி முழுவதையும் அறிந்திருக்கக் கூடிய மாவட்டக் கமிட்டி உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் கன்னியாகுமரியில் தோழர் ஜாக்குலின்மேரி நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றும் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் மாவட்டக் கமிட்டி கூட்டத்தில் அறிக்கை தர வேண்டும் என்றும் கட்சி கிளைச் செயலாளர்களை சந்தா சேர்ப்பு இயக்கத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் மாவட்டக் கமிட்டிகள் குறிப்பிட்ட நாளை தீர்மானித்து பத்திரிகை படிப்பதை வழக்கமாக்க வேண்டும் என்றும் டிசம்பரில் சந்தா இயக்கத்தை அடைய கமிட்டிகள் உரிய பங்காற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


சிரியா மற்றும் ஈரான் மீதான அய்க்கிய அமெரிக்க தாக்குதல் திட்டத்திற்கு மாலெ கட்சி எதிர்ப்பு

செப்டம்பர் 9 அன்று சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), மார்க்சிஸ்ட் கட்சி, எஸ்.யு.சி.அய், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து சிரியா மற்றும் ஈரான் மீதான அய்க்கிய அமெரிக்க தாக்குதல் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தின. இகக(மாலெ) கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். எஸ்யுசிஅய் தோழர் நடராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர் நீலகண்டன், முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் திரு.இப்ராஹிம் ஆகியோருடன் இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன், அய்சா அமைப்பின் தோழர் சத்திய கிருஷ்ணன் உரையாற்றினர்
கோயம்புத்தூரில் பிரிக்கால் கம்பெனியின் பிளாண்ட் 1 நுழைவாயிலில் இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன் தலைமையிலும், பிளாண்ட் 2 நுழைவாயிலில்  ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் என்.கே.நடராஜன் தலைமையிலும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. 350 தொழிலாளர்கள் பங்கெடுத்தனர்.
மயிலாடுதுறையில் ஆர்டிஓ அலுவலகம் முன்பு போர் எதிர்ப்பு கேலிச் சித்திரங்களுடன் வண்ணமய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், டி.கே.எஸ்.ஜனார்த்தனன், ரமேஷ்வர் பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர்.
கன்னியாகுமரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் அந்தோணிமுத்து உரையாற்றினார்.
கந்தர்வகோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் ஆசைத்தம்பி, மாநிலக்குழு உறுப்பினர் வளத்தான் பங்குபெற்றனர்.
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் மாநிலக் குழு உறுப்பினர்கள் சேகர், தேன்மொழி, ஜவகர் ஆகியோர் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் போருக்கு எதிராக துண்டறிக்கைகள் விநியோகம் செய்யப்பட்டன. செப்டம்பர் 11 அன்று தெருமுனைக் கூட்டமும் நடைபெற்றது. கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் கோவிந்தராஜ் உரையாற்றினார்.
விழுப்புரத்தில் சுவரொட்டி இயக்கம் நடைபெற்றது.

சீனப் புரட்சி மற்றும் அது தரும் பாடங்கள் பற்றிய ஒரு சுருக்கமான சித்திரம்

புரட்சிக்கு முந்தைய சீன சமூகத்தின் வர்க்கப் பகுப்பாய்வு

சீனப் புரட்சியைக் கட்டமைக்கும், வழி நடத்தும் கடப்பாடு கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிக்கு முந்தைய சீன சமூகம் பற்றிய    வர்க்கப் பகுப்பாய்வை, மார்க்சிய- லெனினிய வழிமுறையில் ஓர் அனைத்தும் தழுவிய விதத்தில் மேற்கொள்ள வேண்டியிருந்தது. இந்த பகுப்பாய்வை பின்வருமாறு முன்வைக்கலாம்.

1. நிலப்பிரபு

அரை நிலப்பிரபுத்துவ முறையை பயன்படுத்தி விவசாயிகளை சுரண்டிய ஒடுக்கிய வர்க்கம் இது. இது உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு தடையாக இருந்ததுடன் சீனத்தின் பொருளாதார, அரசியல், கலாச்சார வளர்ச்சிக்கு தடைகளை உருவாக்கியது. சீனத்தில் ஏகாதிபத்தியம் இயங்குவதற்கு நிலப்பிரபுத்துவ வர்க்கம் பிரதான சமூக அடித்தளமாக இருந்தது.

2. முதலாளித்துவத்தார்

அ) தரகு பெருமுதலாளித்துவ வர்க்கம்: ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளிகளுக்கு நேரடியாக சேவை செய்த இந்த தரகு பெருமுதலாளித்துவ வர்க்கம், அவர்களால் பேணி வளர்க்கப்பட்டது. கிராமத்து சமூகத்தில் இருந்த நிலப்பிரபுத்துவ சக்திகளுடன் எண்ணிலடங்கா இணைப்புக்கள் மூலம் நெருக்கமாக பிணைக்கப்பட்டிருந்தது. எனவே, சீன சமூகத்தின் இந்தப் பிரிவு மிகவும் பிற்போக்கானது. ஆயினும் பல்வேறு ஏகாதிபத்திய சக்திகளுடன் உறவு கொண்டிருந்ததால் தரகு பெருமுதலாளித்துவ வர்க்கத்தின் வெவ்வேறு பிரிவினருக்குள் தங்கள் நலன்களை பாதுகாத்துக் கொள்ள மோதல்கள் இருந்தன. சில நிலைமைகளில் அது பகைத்தன்மை கொண்டதாகவும் மாறியது.

ஆ) தேசிய முதலாளித்துவத்தார்: சீனத்தின் நடுத்தர முதலாளித்துவத்தாரை பிரதிநிதித் துவப்படுத்துகின்றனர். இது இரட்டைத் தன்மை கொண்ட ஒரு வர்க்கம். ஒரு புறம் இது ஏகாதிபத்தியத்தால் ஒடுக்கப்படுகிறது; நிலப்பிரபுத்துவ தளைகளால் கட்டப்பட்டிருக்கிறது. விளைவாக ஏகாதிபத்தியத்துடனும் நிலப்பிரபுத்துவத்துடனும் முரண்பாடுகள் கொண்டுள்ளது. இந்த வகையில் ஓரளவு புரட்றசிகர உள்ளடக்கம் கொண்ட வர்க்கம் இது.

மறுபுறம், ஏகாதிபத்தியத்தையும் நிலப்பிரபுத்துவத்தையும் முழுமையாக எதிர்க்கும் துணிவு இல்லாதது. ஏனென்றால், இது பொருளாதாரரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலவீனமானது. மக்கள் புரட்சிகர சக்திகள் சக்திவாய்ந்த விதத்தில் வளர்ந்தபோது இது தெளிவாகத் தெரிந்தது.

3. விவசாயிகள்

அ) பணக்கார விவசாயிகள்: கிராமப்புற சமூகத்தின் 5 சதம் பேர் பணக்கார விவசாயிகள். கிராமப்புற முதலாளித்துவ வர்க்கம் இவர்களைக் கொண்டது. சீனத்தின் பணக்கார விவசாயிகள் இயல்பில் அரை-நிலப்பிரபுத்துவத் தன்மை கொண்டிருந்தனர்; அவர்கள் தங்கள் நிலத்தின் ஒரு பகுதியை குத்தகைக்கு விட்டனர். வட்டித் தொழில் செய்தனர். பண்ணை தொழிலாளர்களை கடுமையாகச் சுரண்டினர். ஆனால், பொதுவாக, இவர்களும் உழைப்பில் ஈடுபட்டதால், ஒரு பொருளில் விவசாய சமூகத்தின் ஒரு பிரிவினராவர்.

ஆ) நடுத்தர விவசாயிகள்: சீன மக்கள் தொகையில் 20 சதம் பேர். அவர்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு கொண்டவர்களாக இருந்தனர். அவர்கள் பொதுவாக, மற்றவர்களைச் சுரண்டவில்லை. இவர்கள் ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் மற்றும் முதலாளித்துறவத்தாரின் சுரண்டலுக்கு உள்ளானார்கள். விதிவிலக்காக, சிலரிடம் ஓரளவு உபரி பயிர்கள் இருந்தன; ஓரளவு கூலிக்கு அமர்த்தினர்; சிறிய தொகை பணத்தை வட்டிக்கு விட்டனர். அவர்களிடம் போதுமான அளவு நிலம் இல்லை. ஒரு பிரிவினரிடம் மட்டுமே ஓரளவு உபரி நிலம் இருந்தது. இவர்களுக்கு அரசியல் உரிமைகள் ஏதும் இல்லை.

இ) வறிய விவசாயிகள்: சீன கிராமப்புற சமூகத்தின் 70 சதம் வறிய விவசாயிகளையும் பண்ணைத் தொழிலாளர்களையும் கொண்டது. அவர்கள் நிலமற்றவர்களாக, அல்லது போது மான அளவு நிலமற்றவர்களாக, கிராமப்புறத்தின் அரைப் பாட்டாளிகளாக இருந்த பரந்த விவசாய வெகுமக்கள். விதிவிலக்கின்றி அவர்கள் வாழ்வதற்கு தங்கள் உழைப்புச் சக்தியை விற்க வேண்டியிருந்தது.

4. விவசாயிகள் தவிர, குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் வெவ்வேறு பிரிவினர்

அ) அறிவாளிப் பிரிவினர் மற்றும் மாணவர்: இவர்கள் ஒரு தனி வர்க்கமோ பிரிவோ இல்லை என்றாலும், அவர்களின் குடும்பப் பின்னணி, வாழ்நிலைமைகள் மற்றும் அரசியல் பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களில் பலரை குட்டி முதலாளித்துவத்தார் என வகைப்படுத்தலாம். ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் மற்றும் பெருமூலதனத்தால் அவர்கள் சுரண்டலுக்கு ஆளானார்கள். வேலையில்லா திண்டாட்டம், படிப்பை பாதியிலேயே நிறுத்த நேர்வது போன்ற துன்பங்களை எதிர்கொண்டார்கள்.

அவர்கள் ஓரளவுக்கு முதலாளித்துவ விஞ்ஞான அறிவு பெற்றவர்களாக இருந்தனர். அவர்களிடம் ஆர்வமுள்ள அரசியல் உணர்வு இருந்தது; அடிக்கடி முன்னோடிப் பாத்திரம் ஆற்றிய அவர்கள் புரட்சிகரப் போராட்டத்தில் வெகுமக்களுடனான இணைப்புக்களாக இருந்தனர். அவர்களில் ஒரு சிறிய பிரிவினர், ஏகாதிபத்தியம் - நிலப்பிரபுத்துவம் - மற்றும் பெருமூலதனத்துக்கு சேவை செய்ய பிற்போக்கு முகாமுக்குச் சென்றனர்.

ஆ) சிறுவர்த்தகர்கள்: இவர்கள் சிறு கடைகள் நடத்தி வந்தனர். ஒரு சில வேலையாட்கள் வைத்திருந்தனர். அல்லது தாங்களே பார்த்துக் கொண்டனர். கந்துவட்டிக்காரர்களின் அச்சுறுத்தலிலேயே அவர்கள் வாழ வேண்டியிருந்தது.

இ) கைவினைஞர்கள்: இவர்கள் பெரிய எண்ணிக்கையில் இருந்தனர். சொந்தமாக உற்பத்திக் கருவிகள் வைத்திருந்தனர். அவர்கள் வேலையாட்கள் யாரும் வைத்திருக்கவில்லை. ஓரிரண்டு பயிற்சியாளர்கள் அல்லது உதவியாளர்கள் வைத்திருந்தனர்.

ஈ) தொழில்முறையாளர்கள்: இப்பிரிவு மருத்துவர்கள் மற்றும் பிற பல்வேறு தொழில்களில் இருந்தவர்களைக் கொண்டது. பொதுவாக, அவர்கள் மற்றவர்களைச் சுரண்டுவதில்லை. அல்லது ஒரளவு சுரண்டலில் ஈடுபட்டனர்.

5. அரைப்பாட்டாளிகள்

அவர்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

அ) தங்கள் சொந்த நிலத்திலும் பிறரிடம் குத்தகைக்கு வாங்கிய நிலத்திலும் உழைக்கிற வறிய விவசாயிகளின் மேலோங்கிய பிரிவினர்

ஆ) வறிய விவசாயிகள்

இ) சிறு கைவினைஞர்கள்

ஈ) கடை உதவியாளர்கள்

உ) அலைந்துதிரிந்து விற்பவர்கள்

அரைப்பாட்டாளிகளின் சாரமான அடையாளம் வாழ்வதற்காக ஓரளவாவது தங்கள் சொந்த உழைப்பில் ஈடுபடுவது

6. பாட்டாளி வர்க்கம்

நவீன ஆலைப் பாட்டாளிகள், சீனப் பாட்டாளி வர்க்கத்தின் கருவாக இருந்தனர். பொருளாதாரம் பின்தங்கிய நிலையில் இருந்ததால், அவர்கள் எண்ணிக்கை இரண்டரை கோடியாக இருந்தது. ரயில்வே, சுரங்கம், கப்பல் போக்குவரத்து, ஜவுளி மற்றும் கப்பல் கட்டுதல் போன்ற துறைகளில் அவர்கள் இருந்தனர். உற்பத்திச் சாதனங்கள் எதுவும் அவர்களுக்குச் சொந்தமானதாக இல்லை. இழப்பதற்கு அவர்களுக்கு உழைப்புச் சக்தியைத் தவிர வேறேதும் இல்லை. இதனால் அவர்கள் கூலி அடிமைத்தனத்தை ஏற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர். நவீன எந்திரங்கள், நவீன தொழில்நுட்பம் மற்றும் பெருவீத உற்பத்தியில் ஈடுபடுவது ஆகியவற்றால், அவர்கள் மிகவும் அமைப்பாக்கப்பட்ட வர்க்கமாக எழுந்தனர்; பிரிவுவாதக் கருத்துக்கள் மற்றும் குறுகிய கருத்துக்களில் இருந்து விடுபட் டவர்களாக, மிகவும் முற்போக்கு கருத்துக்கள் கொண்டவர்களாக இருந்தனர்.

7. நாடோடிகள்

சீனா ஓர் அரை - நிலப்பிரபுத்துவ, அரை - காலனிய சமூகம் என்ற நிலை, மற்றும் அதை காலனி நாடாக மாற்ற எடுக்கப்பட்ட மூர்க்கமான முயற்சிகள் ஆகியவற்றால் எண்ணற்ற கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வேலைவாய்ப்பு இல்லாதோர் உருவாயினர். உற்பத்தி சாதனங்கள் ஏதும் இல்லாமல், வாழ்வதற்கான முறையான வழியேதும் இல்லாமல், அவர்களில் பலர் சட்டவிரோத வழிகளில் இறங்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். இந்த இயக்கப்போக்கால், திருடர்கள், கும்பல் செயல்களில் ஈடுபடுபவர்கள், பிச்சைக்காரர்கள், பாலியல் தொழிலாளர்கள், மூடநம்பிக்கைகளை பயன்படுத்தி வாழ்க்கை நடத்துபவர்கள் என அவர்கள் மாறினர். ஆளும் வர்க்கத்தால் அவர்கள் பயன்படுத்தப்பட்டனர். விதிவிலக்காக, புரட்சிகர இயக்கத்திலும் சேர்ந்தனர். ஆனால், பொருளுள்ள, ஆக்கபூர்வமான அணுகுமுறைக்கு மாறாக, உள்ளார்ந்த விதத்தில் நாசகர போக்கு கொண்டிருந்தனர். திருடர் - கலகம் மற்றும் அராஜகவாத கருத்தியலின் சமூக அடித்தளத்தை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

சீன புரட்சிகர சக்திகளைப்  பொறுத்தவரை, புரட்சிக்கு முந்தைய சீன சமூகத்தை இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவாறு பகுப்பாய்வு செய்துவிடுவதே நோக்கமாக இருந்துவிட வில்லை. சீனப் புரட்சியின் வர்க்க திசை வழியை, வர்க்க வழியை தீர்மானிக்க அதை பயன்படுத்தியதால்தான் அது ஒரு பொருளுள்ள நடவடிக்கையாக இருந்தது.

இந்தப் பின்னணியில், ‘நமது எதிரிகள் யார்? நமது நண்பர்கள் யார்? புரட்சிக்கு இது தான் முதல் முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி. சீனாவில் இதற்கு முன் நடந்த அனைத்து புரட்சிகர போராட்டங்களும் பெரிதாக சாதிக்க முடியாமல் போனதற்கு, உண்மையான எதிரி மீது தாக்குதல் தொடுக்க உண்மையான நண்பர்களுடன் ஒன்றுபடுவதில் ஏற்பட்ட தோல்விதான் அடிப்படைக் காரணம்... நமது புரட்சியில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். வெகுமக்களை அங்கும் இங்கும் அலைகழிக்க மாட்டோம்..... உண்மையான எதிரி மீது தாக்குதல் தொடுக்க உண்மையான நண்பர்களுடன் ஒன்றுபடுவதில் நாம் கவனம் செலுத்தியாக வேண்டும்’ என்று மாவோ சொன்னார்.

வர்க்கங்களின் இயங்காற்றல் என்ற பொருளில், புரட்சிக்கு முந்தைய சீன சமூகத்தின் பகுப்பாய்வின்படி, ஒட்டுமொத்த பொருளில் ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் மற்றும் பெருமுதலாளித்துவத்தை தூக்கியெறிவது சீனப் புரட்சியின் இலக்கு. சீனத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த ஏகாதிபத்திய சக்திகள், நிலப்பிரபுக்கள், பெரு தரகு முதலாளித்துவம் ஆகியோர், சீனப் புரட்சியின் எதிரிகள்.

சீனப்புரட்சியின் தலைமை தாங்கும் சக்தி ஆலைப் பாட்டாளிகள். விவசாயிகள், ஒட்டு மொத்தப் பொருளில் பாட்டாளி வர்க்கத்தின் நம்பத்தகுந்த கூட்டாளிகளை பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர். விவசாயிகளுக்குள், வறிய விவசாயிகள், அரை-நில உடைமையாளர்கள் மற்றும் பண்ணைத் தொழிலாளர்கள் ஆகியோர் போராடுகிற நண்பர்கள். நடுத்தர விவசாயிகள் பாட்டாளி வர்க்கத்தின் நம்பத்தகுந்த நண்பர்கள். புரட்சிகரப் போராட்டம் முன் செல்லும் போது, பணக்கார விவசாயிகளில், எதிரி முகாமுக்குச் சென்றுவிட்ட ஒரு பிரிவினர் தவிர,  மற்றவர்கள் புரட்சியின் பலவீனமான கூட்டாளிகளாகவோ அல்லது நடுநிலையாளர்களா கவோ இருந்தனர்.

விவசாயிகள் தவிர, குட்டி முதலாளித்துவ பிரிவினர், சீனப் புரட்சியின் நம்பத்தகுந்த நண்பர்கள். அறிவாளிப் பிரிவினரின் ஒரு பிரிவினர் பிற்போக்கு முகாமுக்குச் செல்கின்றனர். நடுத்தர அல்லது தேசிய முதலாளித்துவத்தார், சீனப் புரட்சி சூழலில் ஊசலாடுகிற சக்திகள்; அதன் இடதுசாரிப் பிரிவு, சில சந்தர்ப்பங்களில் புரட்சியின் நண்பர்களாக மாறலாம்.

புரட்சிகரப் போராட்ட அலைகள் மற்றும் அது எடுத்துச் செல்லப்படும் விதத்துக்கு ஏற்ற வாறு உதிரிப் பாட்டாளிகள் புரட்சியில் சேர  முன்வரலாம்.
இந்த அம்சங்கள்தான், சீனப் புரட்சிக்கு, சீன கம்யூனிஸ்ட் கட்சி கடைபிடித்த வர்க்க வழியின் பொதுவான வரையறைகளாக இருந்தன. சீனத்தை காலனியாக்க ஏகாதிபத்திய சக்திகள் மேற்கொண்ட நேரடியான முயற்சிகள், சீனத்தின் ஆளும் வர்க்கங்கள் மத்தியிலான பகைமைகளை தீவிரப்படுத்தியபோது, சூழலின் குறிப்பான மாற்றங்களுக்கு ஏற்ப, சில மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டன.

உதாரணமாக, சீனத்தில் ஜப்பானிய படையெடுப்பு நடந்தபோது, பெரிய தரகு முதலாளித்துவத்தார் மற்றும் நிலப்பிரபுக்களிடையே பிளவு ஏற்பட்டது. இதன் விளைவாக, பெருமுதலாளிகள் மற்றும்  நிலப்பிரபுக்கள் மத்தியில் கூட, ஜப்பான் எதிர்ப்பு பிரிவினர்  உருவாயினர். இவர்கள் சீனப் புரட்சியின் ஊசலாட்டம் கொண்ட நண்பர்களாக இருந்தனர்.

சீனப் புரட்சியின் கட்டம் மற்றும் வகைமாதிரி இயல்பு....
அடுத்த இதழில்

ராபர்ட் வதேரா என்கிற சிறு விவசாயியும் நிலம் கையகப்படுத்துதல் மசோதாவும்

ராபர்ட் வதேராவின் நிழல் நிறுவனங்கள் நிலம் பறித்த பிரச்சனை பற்றி மன்மோகனும் சோனியாவும் பதில் சொல்ல வேண்டியிருந்த சூழலில், நிலக்கரி ஊழல் தொடர்பான கோப் புக்கள் காணாமல் போனது பற்றி மன்மோகன் விளக்கம் தர வேண்டியிருந்த வேளையில் இந்த காத்திரமான பிரச்சனைகள் பற்றி எதிர்க் கட்சிகள் சம்பிரதாய கூக்குரல் எழுப்பிக் கொண் டிருக்க மக்களவையில் 16 மசோதாக்கள் நிறை வேற்றப்பட்டன.

நிறைவேற்றப்பட்ட மசோ தாக்களில் முக்கியமானவை நியாயமான இழப்பீடு பெறும் உரிமை மற்றும் நிலம் கையகப்ப டுத்துதல், மறுவாழ்வு, மறுகுடியேற்றத்தில் வெளிப்படைத் தன்மை மசோதா 2012 என்ற பெய ரிலான நிலப்பறி மசோதா, ஓய்வூதிய ஒழுங்கு முறை மசோதா என்கிற ஓய்வூதிய பறிப்பு மசோதா, உணவுப் பாதுகாப்பு என்கிற உணவுப் பறிப்பு மசோதா ஆகியவை.

நியாயமான இழப்பீடு பெறும் உரிமை மற்றும் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, மறுகுடியேற்றத்தில் வெளிப்படைத் தன்மை மசோதா 2012 என்று அது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தோற்ற மாற்றம் உள்ளடக்கத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வரவில்லை. சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் நிலம் கையகப்படுத்தப்பட் டதைப் போல் மற்றொரு சுற்று நிலம் கையகப்படுத்துதலை இந்தச் சட்டம் உறுதி செய்யும். நிலப்பறி இன்னும் ஒரு முறை சட்ட பூர்வமாகும். மக்கள் எதிர்ப்புக்களால் முடங்கிய  நிலப் பறி திட்டங்களை விரைவுபடுத்தும்.

சட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுவிட்டால் தனியார் நிறுவனங்களுக்கு அரசு நிலம் பறித்துத் தருவது சட்டபூர்வமாக நடக்கும். கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு நிலச்சொந்தக்காரர்கள் வெளியேற வேண்டும். அய்க்கிய அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் சில அய்ரோப்பிய யூனியன் நாடுகளில் கூட தனியார் பயன்பாட்டுக்கு அரசு நிலம் பறித்துத் தர சட்டத்தில் இடமில்லை. இந்திய ஆட்சியாளர்கள் இந்த விசயத்தில் மொத்த உலகுக்கும் வழிகாட்டுகிறார்கள்.

தமிழ்நாட்டிலும் குஜராத்திலும் மாநில அரசாங்கமே நில வங்கிகள் அமைத்து தனியார் நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க நிலம் தருகின்றன. யாருக்கு என்ன விலையில் நிலம் தரப்படுகிறது என்று இந்த அரசாங்கங்கள் யாருக்கும் சொல்லிக் கொண்டிருப்பதில்லை. விவசாயத்தை விட தொழிலில்தான் வேலை வாய்ப்பு அதிகம், அதனால் நிலப்பறிப்புக்கு முன்னுரிமை என்ற கருணாநிதியின் கொள்கையில் ஜெயலலிதாவுக்கு பிரச்சனை இல்லை.
எல்லா அரசுத் திட்டங்களும் அரசு - தனி யார் கூட்டு மாதிரியின் மூலம் நிறைவேற்றப் படும் காலம் இது. எனவே, அரசு திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்படுவதாகச் சொல்லப்படுவதும் தனியாருக்கே ஆதாயமாக முடியும்.

பாஜக மசோதாவை ஆதரித்து வாக்களிக்க, மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இகக, இககமா, அஇஅதிமுக கட்சிகள் வெளி நடப்பு செய்தன.

தனியாருக்கு நிலம் வேண்டுமென்றால் அவர்கள் சந்தை விலைக்கு நேரடியாக நிலச் சொந்தக்காரர்களிடம் வாங்கிக் கொள்ளும்படி மசோதா திருத்தப்பட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தியது கணக்கில் கொள்ளப்படவில்லை. தனியார் நிறுவனங்கள் தாங்கள் வாங்கும் நிலத்துக்கு முன்னர் செலுத்தியதை விட கூடுதல் விலை செலுத்த வேண்டும், கூடுதல் ஒப்புதல் வேண்டும் என்பதைத் தவிர, பெரிய மாற்றம் ஏதும் சட்டத்தில் இல்லை.

ஆனாலும், ராபர்ட் வதேரா போன்ற சிறு விவசாயிகள் நலன் பாதுகாக்கப்பட இந்தச் சட்டத்தில் வாய்ப்புக்கள் அதிகம். அதனால் தான் இந்திய முதலாளிகள் தரப்பு, சட்டம் பல திட்டங்களை முடக்கிவிடும் என்று கவலைப்படுகிறது.

 நிலம் விலை உயர்ந்துவிடும் என்று புலம்புகிறது. நகர்ப்புறத்தில் நிலம் வேண்டும் என்றால், புதிய சட்டப்படி சந்தை விலையைப் போல் இரண்டு மடங்கு விலை தர வேண்டும் என்பதால் கட்டுமான நிறுவனங்கள் தாங்கள் தொழில் செய்வது சிரமம் என்கிறது. கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங் கள் திணறிப் போகும் என்கிறது. (நாட்டில் 100 கோடி பேர் பல்வேறு விதங்களில் திணறிக் கொண்டுதான் இருக்கிறார்கள்).
அரியானாவில் ராபர்ட் வதேரா முறைகேடாக நிலம் வாங்கியது பற்றி கேட்டபோது, அரியானா முதலமைச்சர் பூபீந்தர் சிங் ஹ÷டா, ராபர்ட் வதேரா ஒரு சிறுவிவசாயி என்றும், நகர்ப்புற வளர்ச்சியில் சிறுவிவசாயிகளும் பயன் பெறும் விதம் மாநில அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தின் அடிப்படையில்தான் அவருக்கு உரிமம் வழங்கப்பட்டது என்றும் சொல்கிறார்.

 ராபர்ட் வதேரா என்ற மூன்றரை ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரரான சிறுவிவசாயி தனது நிலத்தை மேம்படுத்த உரிமம் பெற்றார் என்றும் பிறகு அந்த நிலத்தை வேறொரு நிறுவனத் துக்கு விற்றார் என்றும் இதில் என்ன தவறு என்றும் ஹ÷டா கேட்கிறார். அரியானா அர சாங்கம் டிஎல்எஃப் நிறுவனத்துக்கு 350 ஏக்கர் நிலம் தர ஒப்பந்தம் செய்திருப்பதற்கும் ராபர்ட் வதேரா நிலம் விற்றதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், பிப்ரவரி 2008ல் ரூ.7.5 கோடிக்கு வதேராவின் நிறுவனம் வாங்கிய நிலம் ஜ÷ன் 2008ல் ரூ.58 கோடிக்கு விற்கப்படுவதில் முறைகேடு எதுவும் இல்லை என்றும் நாம் நம்ப வேண்டும்.

வாமனன் தனது இரண்டு அடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்தது போல் ராபர்ட் வதேரா தனது இரண்டு கண்களால் நாட்டின் நிலப் பகுதிகளை அளந்துவிடுகிறார். ராஜஸ்தான் முதல் அரியானா வரை கிட்டத்தட்ட 800 ஹெக்டேர் நிலங்களை அவர் வாங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மூன்றரை ஏக்கர் நிலத்தில் நான்கு மாதங்களில் ரூ.50 கோடி பார்க்க முடியும் என்றால், 800 ஹெக்டேர் நிலம் என்ன வருமானம் தரும் என்று மதிப்பிட்டுக் கொள்ளலாம். நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் இந்த 800 ஹெக்டேர் நிலத்துக்கு என்ன விலை கிடைக்கும் என்றும் அல்லது நிலம் மேம்படுத்துவது, தொழில் துவங்குவது என்ற பெயரில் ராபர்ட் வதேரா என்ற சிறுவிவசாயி எந்த அளவுக்கு வளம் பெறுவார் என்றும் நாம் பொறுத் திருந்து பார்க்க வேண்டியுள்ளது. எப்படியாயினும், நிலம் கையகப்படுத்துதல் சட்டம் ராபர்ட் வதேரா போன்ற சிறுவிவசாயிகள் மற்றும் டிஎல்எஃப் போன்ற தொழில் முனைவோர் வாழ்வில் பெரிய மாற்றத்தை உருவாக்கும். சீனா இந்திய எல்லைக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்த ராபர்ட் வதேராவை பொறுப்பாக்க வேண்டும் என்றும் சீனா ஊடுருவி இருப்பதாக சொல்லப்படும் அந்த நிலப் பகுதியை சீனாவே வியக்கும் வண்ணம் அவர் மேம்படுத்திக் காட்டுவார் என்றும் இணைய தளங்கள் கேலிக் கதைகள் எழுதும்.

கட்சியை அதன் அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கு எடுத்துச் செல்ல கத்துக்குட்டித்தனத்துக்கும் தற்காலிகவாதத்திற்கும் விடை கொடுப்போம்! கட்சி முழுவதும் ஆழமான கடினமான புரட்சிகர வேலைநடையை பரவச் செய்வோம்!

பகுதி 2

அன்றும் இன்றும்

1902 ரஷ்யா வேறு, 2013 இந்தியா வேறு தான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் 1902 வேறு 2013 வேறு, இந்தியா வேறு ரஷ்யா வேறு எனச் சொல்வதில் எந்த மேலான அறிவியல் கண்டுபிடிப்பும், நிச்சயம் இல்லை.
அதே நேரம் 1848ல் மார்க்சும் ஏங்கெல்சும் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, மார்க்சி யத்தின் வர்க்கப் போராட்டம் முதலாளித்துவ நெருக்கடி தொடர்பான கருத்துக்கள் இப்போ தும் பொருத்தமானவையாகவே உள்ளன.

நிதி மூலதன சந்நிதானமான வால்ஸ்ட்ரீட் பெரும் அதிர்வுகளுக்கு ஆளானபோது, 2008ன் இலையுதிர் காலத்தில் டைம்ஸ் ஏடு ஓங்கிக் குரல் எழுப்பியது: “அவர் திரும்ப வந்து விட்டார்”  அவர் என டைம்ஸ் குறிப்பிட்டது மார்க்சைத்தான். 2008ல் நியுயார்க்கிற்கு மார்க்ஸ் திரும்பும்போது, 2013ல் இந்தியாவிற்கு லெனின் திரும்ப முடியாதா?

மார்க்ஸ் லெனின் மாவோ போன்றோர் சொன்ன விசயங்களை அந்த அந்த நாட்டு, அந்த அந்த கால சூழலோடு நிலைமைகளோடு உயிரோட்டமாகப் பொருத்த வேண்டும். 1902 ரஷ்ய மற்றும் 2013 இந்தியச் சூழலில் நிலைமைகளில் என்ன வேறுபாடுகள் என்பவற்றை, நிச்சயம் நாம் கணக்கில் கொண்டாக வேண்டும்.

அய்ரோப்பியக் கண்டத்தின் பெரிய நாடுகள் எனக் காணும்போது, ரஷ்யாவில், முதலாளித்துவம் கடைசியாகத் தான் கால் பதித்தது. 1861ல் ஜார் அரசு பண்ணை அடிமை முறையை ஒழிக்க, முதலாளித்துவ வளர்ச்சிக்குப் பாதை திறக்கப்பட்டது. 1890களின் இறுதிப் பகுதியில் தொழிலாளர் வர்க்க எண்ணிக்கையும் தொழிலாளர் போராட்டங்களும் பாய்ச்சலில் முன்னேறின. 1898லேயே முறைப்படி அமைப்பு ரீதியாக, பாட்டாளி வர்க்க இயக்கத்தையும் சோசலிசத்தையும் இணைக்கும் முயற்சி துவங்கியது. 1902லிருந்து 1917 நவம்பர் 7 வரை, அதாவது ரஷ்யாவில் சோசலிசம் வெல்லும் வரை, சோசலிச முகாமில், பாட்டாளி வர்க்கத்தின் சுதந்திரமான அறுதியிடலுக்கும் முதலாளித்துவத்திற்கு வால்பிடிப்பதற்கும் இடையிலான போராட்டம் தீவிரமாக நடந்தது.

•    ரஷ்யாவில், கம்யூனிஸ்ட் கட்சி, பிரதானமாக தொழிலாளர்கள் மத்தியிலும், சீருடை அணிந்த விவசாயிகளான போர் வீரர்கள் மத்தியிலுமே பணியாற்றியது. போர் வீரர்கள் மத்தியிலான பணி, முதல் உலகப் போருக்குப் பின்பே தீவிரமடைந்தது.

•    ரஷ்யாவில் சோசலிசப் புரட்சி வெற்றி பெறும் வரை அனைவர்க்கும் வாக்குரிமை அடிப்படையிலான நாடாளுமன்ற ஜனநாயகம் நிலவவில்லை.

•    ரஷ்யாவில் தோழர் லெனின் தோழர் ஸ்டாலின் போன்ற புரட்சியாளர்கள், முதன் மையாக தலைமறைவு நிலைமைகளிலேயே செயலாற்றினர்.

•    ரஷ்யாவில், கட்சிகளிடையிலான போட்டி என்பது, அங்கிருந்த நாடாளுமன்ற ஜனநாயக முறையின் முடக்கப்பட்ட குறுகிய நிலைக்கேற்பவே இருந்தது. ஆட்டக்காரர்கள், சுருக்கமாகச் சொன்னால், முதலாளிகளின் கேடட் கட்சி, பாட்டாளி வர்க்கத்தின் சமூக ஜனநாயகக் கட்சி (போல்ஷ்விக்), குட்டி முதலாளித்துவக் கட்சியான சமூக ஜனநாயகக் கட்சி (மென்ஷ்விக்) மற்றும் சோசலிச புரட்சியாளர்கள் என்ற நான்கு கட்சிகளாகவே இருந்தனர்.

•    தொழிலாளர் வர்க்கம் மத்தியில், சமூக ஜனநாயகக் கட்சியே செல்வாக்கு செலுத்தியது. 1917 நவம்பர் புரட்சியை ஒட்டியே போல்ஷ்விக் செல்வாக்கு பெரும்பான்மை நிலையைப் பெற்றது.

•    தொழிலாளர் இயக்கத்தை சோசலிசத்தை நோக்கி உணர்வுப்  பூர்வமாகச் செலுத் தாமல், முதலாளித்துவத்திற்கு வால் பிடிக்கிற, தொழிலாளர் இயக்கத்தின் மீது தன்னெழுச்சி யாக முதலாளித்துவக் கருத்துக்கள் செல்வாக்குப் பெற வழிவகுப்பவர்களாக, பொரு ளாதாரவாதிகளாக, மென்ஷ்விக்குகள் விளங்கினார்கள்.

•    தலைமறைவுக் கட்சி, தொழில்முறைப் புரட்சியாளர்கள் அமைப்பு என்ற கருவை மய்யப்படுத்தி, அதன் தலைமையில் பாட்டாளிகளையும், பாட்டாளி வர்க்கத்தின்  தலைமை யில், இதர ஒடுக்கப்படுகிற சுரண்டப்படுகிற வர்க்கங்களையும் திரட்ட வேண்டிய கடமை, கம்யூனிஸ்ட்களுக்கு இருந்தது

இந்திய நிலைமைகளில்
என்ன மாற்றங்கள் உள்ளன
    
•    இந்தியாவில், அனைவர்க்கும் வாக்குரிமை அடிப்படையிலான நாடாளுமன்ற ஜனநாயகமுறை, 1950 முதலே செயல்பட்டு வருகிறது. (இது உண்மையில் முதலாளித்துவ சர்வாதிகாரம் தான் என்பது வேறு விசயம்)  
                             
•    இந்தியாவில், கட்சிகளின் செல்வாக்கு எனக் காணும்போது, முதலாளித்துவ அரசியல் கட்சிகளே, கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் காட்டிலும் ஆகக்கூடுதலான செல்வாக்கு பெற்றுள் ளன. (கம்யூனிஸ்ட் இயக்கம் என்பதை மிகப் பரந்த பொதுப் பொருளிலேயே குறிப்பிடு கிறோம்)

•    நாடாளுமன்ற ஜனநாயகம், உழைக்கும் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு, உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகள், நகர்ப்புற கிராமப்புற மேட்டுக்குடியினர் நலன்களைக் காக்கும் ஆட்சி நடத்த, மத்தியிலும் மாநிலங்களிலும், முதலாளித்துவக் கட்சிகளுக்கு வாய்ப்பு தருகிறது.

•    இ.க.க, இக.க (மா), இக.க. (மாலெ) ஆகிய இயக்கங்கள் அனைத்துமே மிகப் பெரும் அளவுக்கு கிராமப்புறங்களிலும் விவசாய சமூகம் மத்தியிலும் பணியாற்றுகின்றன. இவற்றின் செல்வாக்கு ஆகக் கூடுதலான ஆலைப் பாட்டாளிகளின் மத்தியில் தான் உள்ளது என்று சொல்ல முடியாது.

•    நவதாராளவாத நிகழ்ச்சி நிரல் துவங்கிய பிறகு, அதாவது, உலகமய தனியார்மய தாராளமயக் கொள்கைகள் வேகம் பெற்ற பிறகு, முதலாளித்துவ மறுகட்டமைப்பு, தீவிரம் அடைந்துள்ளது. லாப விகிதங்களைப் பாதுகாக்க, உயர்த்திக் கொள்ள, அமைப்பாக்கப்பட்ட துறை அமைப்புக் குலைவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. பாட்டாளி வர்க்கத்தின் பெரும்பகுதி, நிரந்தரமற்ற ஒப்பந்த தற்காலிக பயிற்சித் தொழிலாளர்களாகவும் பொருளுற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் அமைப்புசாரா தொழிலாளர்களாகவுமே உள்ளனர். ஆக, இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் ஏகப் பெரும்பான்மை, பாட்டாளி வர்க்கத்தின் துவக்க நிலை வர்க்க அமைப்பான தொழிற் சங்கங்களில் கூட, இடம் பெறவில்லை.

மாறுபட்ட நிலைமைகள் கோரும்
மாற்றங்கள் என்ன?

•    தொழில்முறைப் புரட்சியாளர்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்ட இரகசியக் கட்சி என்பது இந்திய நிலைமைகளுக்குப் பொருத்தமானதல்ல. இங்கு, தேவைப்படுவது, ஒரு வெகுமக்கள் போல்ஷ்விக் கட்சியே. இன்றைய நிலைமைகளில் அது வெளிப்படையாக முதலாளித்துவ அரசியலோடு, எங்கும் எதிலும் போட்டியிடுவதாகவே இருந்தாக வேண்டும். கட்சியில் பெருமளவுக்கு பகுதிநேர ஊழியர்களே செயல் வீரர்களே உறுப்பினர்களாக இருப்பார்கள்.

“நேரடியான, பகிரங்கமான, உண்மையிலேயே மக்கள் திரள் தன்மை கொண்ட உண்மையிலேயே புரட்சிகரமான போராட்டம் நடத்த நிலைமைகள் இல்லாதபோதும், புரட்சிகரமான செயல்முறைகளுக்கான அவசியத்தை உடனடியாய் உணர முடியாத மக்கள் மத்தியில், ஒரு புரட்சிகரமல்லாத சூழலில், புரட்சிகரமல்லாத அமைப்புக்களில் ஏன் பிற்போக்கு அமைப்புக்களிலும் கூட, புரட்சியின் நலன்களை, (பிரச்சாரம்  கிளர்ச்சி அமைப்பாக்குதல் மூலம் ) முன் நிறுத்துவது தான், புரட்சியாளர்களாய் இருப்பதுதான், மிக மிகக் கடினமானது, மிக மிக மதிப்பு வாய்ந்ததாகும்.” ஆம், லெனின் இடதுசாரி கம்யூனிசம் இளம் பருவக்கோளாறு நூலில் சொல்வது போல், இந்தியாவில் புரட்சியாளர்கள், சக்திகளின் சமநிலையை மாற்ற, முதலாளித் துவ அரசியலை பாட்டாளி வர்க்க அரசியல் கொண்டு வெல்ல, நீண்டகாலத் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும்.

•    வேகமாகவும் திரள் திரளாகவும் போராட்டங்களில் தாமே எழுபவர்கள் மத்தியில், அரசியல் பணியாற்றுவது என்பதோடு கூட, பல கோடிக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்களை, நிரந்தரமற்ற தொழிலாளர்களை, தொழிற்சங்கமாக்குவது - வர்க்கப் போராட்ட எல்லைகளுக்குள் கொண்டு வருவது, உழைக்கும் மக்களை அவர்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளிலேயே அமைப்பாக்குவது, இந்திய நிலைமைகளில் ஒரு மிகவும் முக்கிய அரசியல் கடமையாகும். உணர்வுபூர்வமான பணியாகும். இருக்கின்ற, கிடைத்துள்ள சமூக அடித்தளத்தை, போராட்டங்களில் நம் பின்னால் வந்த மக்களை, சமூக மாற்ற அரசியலுக்கு ஆளாக்குவது போல், நமக்கென, ஒரு நிலையாக நீடிக்கும் சமூக அடித்தளத்தையும், அதாவது தொழிற்சங்கம் போன்ற அமைப்புக்களை உருவாக்குவதும் மிகவும் முக்கிய அரசியல் பணிகளே.

அங்கேயும் இங்கேயும் பொதுவானவை எவை?

•    தொழிற்சங்கங்கள் மட்டுமல்லாது புரட்சியாளர்களின் அமைப்பான கம்யூனிஸ்ட் கட்சியும் தேவை என்பது பொதுவானது.

•    ‘இயக்கம் தான் எல்லாம் இறுதி லட்சியம் ஏதுமில்லை’ எனத் தன்னெழுச்சிக்குத் தலை வணங்குவதற்கு மாறாக, நிகழ்கால இயக்கத்தில் போராட்டத்தில் எதிர்காலக் கடமைகளை நுழைக்கும் கம்யூனிஸ்ட் பணி பொதுவானது.

•    “பக்குவமின்மை” “கத்துக்குட்டித்தனம்” ஆகியவற்றுக்கு எதிராகப் போராடுவது, தன்னெழுச்சிக்கு எதிராகப் போராடுவது பொதுவானது. (கத்துக்குட்டித்தனம் என்பது தேர்ச்சி நயமின்மை என்றும் மொழிபெயர்க்கப்படுகிறது.) என்ன செய்ய வேண்டும் நூலின் பாகம் 4 மற்றும் 5 அமைப்பு விவகாரங்கள் பற்றிப் பேசுகின்றன.

•    “ ‘பக்குவமின்மை’ என்பது நடைமுறை வழிப்பட்ட பயிற்சியின்மைக்கும் மேலான ஒன்றைத் தழுவி நிற்கிறது. அது பொதுவாகப் புரட்சிப் பணியின் குறுகிய பரப்பெல்லையைக் குறிக்கிறது.; இப்படிப்பட்ட குறுகிய நடவடிக்கையின் அடிப்படையில் புரட்சியாளர்களின் ஒரு நல்ல அமைப்பைக் கட்ட முடியாது என்பதைப் புரிந்து கொள்ளத் தவறுவதை அது குறிக்கிறது; கடைசியாக, முக்கியமான விசயமும் இதுதான், இந்தக் குறுகிய தன்மையை நியாயப்படுத்தி, அதை ஒரு தனித் ‘தத்துவமாக’ உயர்த்துகிற முயற்சிகளை, அதாவது, இந்தப் பிரச்சனையிலும் தன்னியல்புக்கு அடிபணிவதை அது குறிக்கிறது.” “ நமது பக்குவமின்மை காரணமாக, நாம், ரஷ்யாவில் புரட்சியாளர்களின் கவுரவத்தைத் தாழ்த்தி இருக்கிறோம். அமைப்பு விசயத்தில் நாம் செய்திருக்கும் படுமோசமான கேடு இதுவே. தத்துவ சம்பந்தமான பிரச்சனைகளில் உண்மையின்மை, உறுதியின்மை, குறுகிய பார்வை, தன் சொந்த சோம்பலுக்கு மக்களின் தன்னியல்பைச் சாக்காகச் சொல்வது; மக்களின் தலைவராய் இருப்பதை விட தொழிற்சங்க செயலாளராகத் தெரிவது; எதிரிகளும் கூட மதிக்கத்தக்க விரிவான துணிச்சலான திட்டம் உருவாக்கி அளிக்கத் திறனின்மை; தானே தொழிலாக மேற்கொண்டுள்ள கலையில்- அரசியல் போலீசை எதிர்த்துப் போராடும் கலையில்-அனுபவமின்மை, நயமின்மை; இப்படி உள்ள ஒரு நபர், புரட்சியாளன் அல்ல, படுமோசமான கத்துக் குட்டியே!”
புரட்சி நம்மிடமிருந்து முதலாவதாகக் கோருவது, கிளர்ச்சி செய்வதில் அனுபவம், ஒவ்வொரு கண்டனத்தையும் (கம்யூனிச வழியில்) ஆதரிக்கும் திறமை, தன்னியல்பான இயக்கத்தை நண்பர்களின் தவறுகளிலிருந்தும் எதிரிகளின் சூழ்ச்சிகளிலிருந்தும் பாதுகாத்த படியே வழி நடத்திச் செல்லும் திறமை ஆகியவையே.”

“சீமான்களே, குழுக்களில் பல வகை உண்டு! உண்மை, ‘தேர்ச்சி நயமற்றவர்களைக்’ கொண்டிருக்கும் குழுக்கள் தம் தேர்ச்சிநய மின்மையை உணர்ந்து அதைக் கைவிடாத வரை அரசியல் பணிகளைச் சமாளிக்க முடியாது தான். இது தவிர, இந்த தேர்ச்சி நயமற்றவர்கள், தம் பக்குவமின்மையிலேயே மோகித்துப் போய் விட்டால், ‘நடைமுறை வழிப்பட்ட’ என்ற சொற்களைக் கொட்டை எழுத்தில் தான் போடுவோம் என்று பிடிவாதம் செய்தால், நடைமுறை வழிப்பட்டதாய் இருப்பதற்கு ஒருவருடைய பணிகள் மக்களின் மிகப்பிற்பட்ட பகுதிகளின் அறிவின் தரத்திற்கு தாழ்த்தப்பட வேண்டியதே என்று நினைத்தால், அவர்கள் கதி மோட்சமில்லாத தேர்ச்சி நயமற்றவர்களேயாவர், நிச்சயமாய், அவர்களால், எந்த அரசியல் பணிகளையும் பொதுவாகவே சமாளிக்க முடியாதுதான்.”லெனின் மொழியில், பக்குவமின்மை, கத்துக்குட்டித்தனம், குறுகிய அரசியல் அமைப்பு பணிகளின் பரப்பெல்லை, தன்இயல்புக்கு அடிபணிவது ஆகியவை பற்றியும், இவற்றுக்குள்ள பரஸ்பர தொடர்பு பற்றியும் பார்த்தோம். இவை இந்திய நிலைமைகளில் எப்படி பொருந்துகின்றன என்பதை அடுத்த இதழ்களில் காணலாம்.

சர்வதேச சம நிலையும் சிரியாவும்

“‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ (இதற்கு உண்மையில் பயங்கரவாதப் போர் என மறு பெயர் சூட்டப்பட வேண்டும்) என அழைக்கப்பட்டு, 9/11அய் அடுத்து அய்க்கிய அமெரிக்காவால் தொடுக்கப்பட்ட போர், ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் புதிய புதிய பகுதிகளுக்குப் பரவுகிறது. முதலில் ஆக்கிரமிப்பிற்கு உள்ளான ஆப்கானிஸ்தானில் ஈராக்கில், போர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. அமெரிக்காவும் அதன் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) கூட்டாளிகளும், பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுகிறோம் ஜனநாயகத்திற்கு உதவுகிறோம் என்று சொல்லி, புதிய புதிய சாக்குகளுடன் புதிய புதிய இலக்குகளுடன், இப்போரை ஒரு நிரந்தரப் போராக்கி விட்டனர். சதாம் உசேனை தீர்த்துக்கட்டி ஈராக்கை ஆக்கிரமிப்பு செய்த பிறகு, அமெரிக்க -  நேட்டோ அச்சு லிபியாவைக் குறி வைத்து அதன் பலமான தலைவராக விளங்கிய மும்மர் கடாபியைக் கொன்றொழித்தது. இப்போது சிரியாவில் ஆட்சி மாற்றம் கொண்டு வருவதில் மும்முரமாக உள்ளது.”

ஏப்ரல் 02 - 06, 2013
இகக மாலெ ஒன்பதாவது அகில இந்திய மாநாடு


போரின் விளிம்பிலிருந்து........

செப்டம்பர் மாதம், 2013. உலகம் ஒரு போரின் விளிம்பு வரை சென்று மீண்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஆப்கானிஸ்தான் இராக் ஆக்கிரமிப்பு போல், சிரியாவை ஆக்கிரமிப்பது அவ்வளவு சுலபமானதல்ல. அமெரிக்கா, மத்திய தரைக் கடலின் லெபனான் கடற்கரையில் தனது நான்காவது பிரும்மாண்டமான போர்க் கப்பலை நிறுத்தியது. குரூஸ் ஏவுகணைத் தாக்குதல், விமானத் தாக்குதல், இதோ அதோ என அச்சுறுத்திக் கொண்டிருந்தது. செப்டம்பர் 12, 2013. உடனடியாய் ஒரு போர் இல்லை என்கிறார் ஒபாமா. தற்காலிகமாகவேனும் உலகம் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது.

ஒபாமா தொலைக்காட்சி உரை

செப்டம்பர் 11 அன்று ஒபாமா சிரியா தொடர்பான தமது நிலைப்பாட்டை தொலைக்காட்சி உரை மூலம் அமெரிக்க மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தெளிவு படுத்தினார். அந்த உரையின் சில பகுதிகள், நமக்கு, சிரியா தொடர்பான சர்வதேச சமநிலை பற்றிப் புலப்படுத்தும்.
“அமெரிக்கா உலகின் போலீஸ்காரரல்ல. உலகெங்கும் மோசமான விசயங்கள் நடை பெறுகின்றன. ஒவ்வொரு தவறையும் சரி செய்வது நம் சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால் வாயுக்களால் குழந்தைகள் சாகடிக்கப்படுவதை நம்மால் தடுக்க முடியும். நீண்ட கால அடிப்படையில்  இதுவே நம் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு ஆகும். நாம் செயல்பட வேண்டும் என நினைக்கிறேன். அதுதான் அமெரிக்காவை வேறுபடுத்திக் காட்டும்.”
“ஈராக், ஆப்கானிஸ்தானில் பெரும் இழப்புக்களுக்குப் பிறகு, இராணுவ நடவடிக்கை பற்றிய எந்தக் கருத்தும் மக்கள் மத்தியில் எடுபடாது என எனக்குத் தெரியும். நானே, கடந்த நான்கரை ஆண்டுகளாக, போர்களைத் துவக்குவதற்காக அல்லாமல் போர்களை முடிவிற்குக் கொண்டு வருவதற்காகவே பதவியில் இருக்கிறேன்.”

“இராணுவ நடவடிக்கை இல்லாமலே, இரசாயன ஆயுதங்கள் அகற்றும் உள்ளாற்றல் ரஷ்ய முன்முயற்சிக்கு இருக்கிறது என நம்புகிறேன். ஏனெனில், ரஷ்யா அசாத்தின் ஒரு பலமான கூட்டாளி ஆகும்.”


குரங்கு, கையில் வைத்திருந்த குண்டை,
கீழே வைத்தது எப்படி?

மேற்கு நாடுகள் இசுலாமிய உலகிடம் கையில் குண்டு வைத்துள்ள குரங்கு போல் நடந்து கொள்கின்றன என ரஷ்ய அயல் விவகாரத்துறை துணை அமைச்சர் டிமிட்ரி ரோகோசின் குறிப்பிட்டார். (குரங்கோ வேறெந்த உயிரினமோ ஏகாதிபத்தியம் போல் அதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் போல் குரூரமானவை அல்ல). அமெரிக்காவின் கூட்டாளியாக இராக் இருந்தபோது, அது ஈரான் மக்களை இரசாயன ஆயுதங்களால்  கொன்று குவித்தபோது அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை; இதே அமெரிக்கா தான் வியத்நாம் மீது நாபாம் எரி குண்டுகளை வீசியது. நாபாம் குண்டு வீச்சுக்குள்ளாகி உடலில் ஆடைகளின்றி எரிந்து கொண்டே ஓடி வரும் வியத்நாமியச் சிறுமியின் புகைப்பட உருவம், மானுட மனச்சாட்சியில் என்றும் உறைந்து போய் இருக்கும். பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகப் பொய் சொல்லி, இராக்கைத் தாக்கினார்கள். சிரியாவின் அரசு வட்டாரங்களில் வாயுக்கள் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துவது பற்றி பேச்சு அடிபடுவதாக இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாத் கண்டறிந்ததாம்! அதற்குப் பிறகு குழந்தைகள் உட்பட 300 பேர் வாயு தாக்குதலில் பலியாக, சிரியா அரசு சிவப்புக் கோட்டைத் தாண்டியதாக அமெரிக்கா எகிறி எகிறிக் குதித்தது. உண்மையில், மேற்கு ஆசியாவில் வடக்கு ஆப்ரிக்காவில் வெடித்தெழுந்த மக்கள் இயக்கங்களை, அரபு வசந்தத்தை, ஆட்சி மாற்றம் என்ற பெயரில் இரத்த வெள்ளத்தில் ஏகாதிபத்தியம் மூழ்க டிக்கப் பார்க்கிறது. புதுப்புதுச் சாக்குகள். புதுப்புது இலக்குகள். நிரந்தரப் போர்.

ஆனால், அமெரிக்காவால் மேலை உலகில் தான் விரும்பிய கருத்தொற்றுமையை உரு வாக்க முடியவில்லை. இங்கிலாந்து நாடாளுமன்றமும் ஜெர்மனியும் போர் வேண்டாம் என்றன அமெரிக்க மக்களின் 60% பேர் சிரியா மீது இராணுவ நடவடிக்கை வேண்டாம் என்றனர். உலக மக்களின் ஏகப் பெரும்பான்மையினர் போரை எதிர்த்தனர். சிரியாவில் கலகக்காரர்கள் கிட்டத்தட்ட தோற்கடிக்கப்பட்டு, தமக்குள் சண்டையிட்டுக் கொள்ளத் துவங்கினர். சிரியா விமானத் தாக்குதலை எதிர் கொள்ளத் தயாரானது. ஈரானும் ஹிஸ்புல்லாவும் போர் துவங்கினால் தாம் வேடிக்கை பார்க்க மாட்டோம் என்றார்கள். இரசாயன ஆயுதங்கள் பயன்பாட்டை அறிய அய்நா குழு சிரியாவில் ஆய்வு செய்வதை சிரியா அரசு வரவேற்றது. (ஏற்கனவே அய்நா, கலகக்காரர்கள்தான் சாரின் விஷவாயுவைப் பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளது).

அய்நா குழு சிரியா வந்து ஆய்வுகளைத் துவக்கியது. இந்தப் பின்னனியில் சீனாவும் ரஷ்யாவும், அய்நா பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானம் இல்லாமல், சிரியா மீது தாக்குதல் கூடாது என அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னார்கள். ஜி 20 நாடுகளில் அமெரிக்காவின் குரல் எடுபடவில்லை. சமாதானம் வேண்டும் என்ற ரஷ்யாவின் குரலே ஓங்கி ஒலித்தது.

ஒபாமா, தாக்குதலுக்கு காங்கிரஸ் ஒப்புதல் பெறப் போகிறேன் எனச் சொல்லி சற்று பின்னே சென்றார். காங்கிரஸ் ஒப்புதல் கிடைப்பது கடினம், தமது கோரிக்கை எடு படாவிட்டால் சங்கடம் எனத் தயங்கி தடுமாறி நின்ற ஒபாமாவிற்கு, மீசையில் மண் ஒட்டவில்லை எனச் சொல்லித் தப்பிக்க, ரஷ்யா ஒரு வாய்ப்பு தந்தது.

விவகாரம் கொதி நிலையை அடைந்திருந்தபோது அமெரிக்க அயல் விவகாரச் செயலர் ஜான் கெர்ரி, சிரியா தனது ரசாயன ஆயுதங்களை சர்வதேசக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தால் போருக்கு அவசியம் இருக்காது எனப் போகிற போக்கில் குறிப்பிட்டார். அந்த நேரம் சிரியா அயல் விவகார அமைச்சர் ரஷ்யாவில் இருந்தார். ரஷ்யாவின் அயல் விவகார அமைச்சர் லாவ்ரோவ் சடாரென வாய்ப்பைக் கைப்பற்றிக்கொண்டு, ஜான் கெர்ரியின் யோசனையை தாம் வரவேற்பதாகவும் சிரியாவையும் ஏற்குமாறு ஆலோசனை சொல்வதாகவும் தெரிவித்தார். சிரியாவின் அயல் விவகார அமைச்சர் வாலித் அய் முல்லம் தமது அரசும் இந்த யோசனையை ஏற்பதாகச் சொல்ல, சங்கடத்தில் இருந்து வெளியே வர ஒபாமாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. போர் என  தான் முடிவு எடுத்ததால்தான் சிரியா வழிக்கு வந்தது என்று சொல்லி, அமைதிக்கு ஒரு வாய்ப்பு தருவதாக ஆரவாரமாகப் பேசி, உடனடிப் போர் என்ற முடிவிலிருந்து ஒபாமா நகர முடிந்தது. (அய்நா ஆய்வாளர்கள் குழந்தைகளைப் படுகொலை செய்த வாயு தாக்குதலை சிரியா அரசு மேற்கொண்டதாகச் சொல்ல சான்றுகள் ஏதும் இல்லை என்றார்கள்)


சிரியாவின் துயரம்

அசாத் முற்போக்காளரா ஜனநாயகவாதியா என்பவை இப்போது உலகின் முன் உள்ள கேள்விகள் அல்ல. அசாத் வேண்டுமா வேண்டாமா, அசாத் ஆட்சி இருக்க வேண்டுமா தூக்கி எறியப்பட வேண்டுமா என்பவை சிரியாவின் மக்கள் விடை காண வேண்டிய கேள்விகள். அமெரிக்காவும் அய்ரோப்பாவும் பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம் ஜனநாயகத்தைக் காக்கிறோம் என ஆட்சிக் கவிழ்ப்புக்களில் ஈடுபடுவதை, எடுபடி ஆட்சிகளை உருவாக்குவதை ஏற்க முடியாது.

அல்கொய்தாவோடு தொடர்புடைய கலகக்காரர்களுக்கு, அமெரிக்காவும் அதன் அரபு அய்ரோப்பிய கூட்டாளிகளும் பணமும் ஆயுதங்களும் தருவதால்தான், இதுவரை சிரியாவில் ஒரு லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர். 50 லட்சம் சிரியா மக்கள் வீடு இழந்துள்ளனர். 10 லட்சம் சிரியா குழந்தைகள் அகதிகளாகியுள்ளனர். மூன்றரை லட்சம் குழந்தைகள் லெபனான் முகாம்களில் உள்ளனர். ஜோர்டானின் சடாரி என்ற ஓர் அகதி முகாமில் மட்டும் சிரியாவின் 120000 பேர் உள்ளனர். பிராந்தியம் நெடுக போர் மேகம் சூழ்ந்துள்ளது. மேற்கத்திய ஏகாதிபத்திய உலகம் இஸ்ரேலோடு சேர்ந்து கொண்டு இந்த அநியாயங்களை எல்லாம் செய்து முடித்துவிட்டு, இப்போது சிரியாவின் குழந்தைகள் மரணம் பற்றி பேசுவது குரூரமான மோசடியாகும்.


1957லேயே அமெரிக்க ஆங்கிலேய சதி

1957ல் அமெரிக்க அதிபராக அய்சனோ வரும் பிரிட்டிஷ் பிரதமராக மேக்மில்லனும் இருந்தனர். பிரிட்டனின் ராணுவ அமைச்சராக அப்போது இருந்த டன்சன் சாண்டிஸ் வசம் இருந்த ரகசிய ஆவணங்கள் சமீபத்தில் மேத்யு ஜோன்ஸ் என்ற கல்வியாளரால் கண்டெடுக்கப் பட்டன. சிஅய்ஏவும் பிரிட்டிஷ் உளவு நிறுவனமான எம்16ம் இணைந்து அப்போதே சிரியாவில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டனர். ஃப்ரீ சிரியா கமிட்டி உருவாக்குவது, மூன்று முன்னணித் தலைவர்களைப் படுகொலை செய்வது, எல்லைகளில் மோதல்களை உருவாக்குவது, கலகக்காரர்களுக்கு ஆயுதங்கள் பணம் தருவது போன்ற சதிச் செயல்களில் அப்போதும் ஈடுபட்டனர். சிரியா மக்கள் இந்த சதிகளை வெறுத்தனர் என அய்சனோவர் நொந்து கொண்டார்.


இப்போது ஒபாமா நொந்து கொள்ளும்
நேரம் வந்துள்ளது

சர்வதேச சமநிலையில், சிரியா விவகாரத்தில், அமெரிக்காவின் பிடி சற்றே தளர்ந்ததும் கூட வரவேற்கத்தக்கது. எல்லா போர்களுக்கும் முடிவு கட்ட ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரைத் தீவிரப்படுத்துவோம். 

“இராணுவ அரசியல் அரங்கில் அமெரிக்கா இன்னமும் தன் மேன்மை நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ள போதும், பல துருவங்கள் நோக்கிய ஒரு புறநிலைப் போக்கைக் காண முடிகிறது.”
      
இகக மாலெ ஒன்பதாவது அகில இந்திய மாநாடு

முசாபர்நகரில் மதவாத வெறியாட்டம்

பாஜக 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தனக்கே உரிய வழியில் தயாராகிறது. நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளர்.  நரேந்திர மோடியின் குஜராத் நரவேட்டைத் தளபதி அமித் ஷா, உத்தரபிரதேச மாநிலத்துக்கு பாஜக தேர்தல் பிரச்சாரப் பொறுப்பாளர். எது நடக்க வேண்டுமோ அது நடந்து விட்டது.

உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் இசுலாமியர்கள் வேட் டையாடப்பட்டனர். படுகொலை, குண்டு வீச்சு, வீடு எரிப்பு, வீடு இடிப்பு எல்லாம் நடந்தேறின. சாவு எண்ணிக்கை நாற்பதை நெருங்கி விட்டது.


உத்தரபிரதேசத்தில் பிரதான போட்டியாளர்கள் முலாயமும் மாயாவதியும்தான். பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே, முதலிடத்திற்கான போட்டியாளர்கள் அல்ல. யார் மூன்றாம் இடம், யார் நான்காம் இடம் என்பதில் தான் அவர்கள் போட்டி. உத்தர பிரதேசத்தில் நாம் எதிர் இசுலாமியர்கள் என்ற சமன்பாட்டை, இந்து அணிதிரட்டலை உருவாக்குவதில் தான், பாஜக உத்தரபிரதேசத்தில் கணிசமான நாடாளுமன்ற இடங்களைப் பிடிக்க முடியும்  எனக் குரூரமாகத் திட்டமிட்டு காய் நகர்த்துகிறது சங்பரிவார். இந்த அரசியல் சதுரங்கத்தில், மனிதத் தலைகளே வெட்டுண்டு மண்ணில் விழுகின்றன. டில்லி சிம்மாசனம் நோக்கிய பயணப் பாதையில் கடந்த காலத்தில் அத்வானியின் ரத யாத்திரை மூலம் ரத்த ஆற்றை ஓட வைத்தார்கள். பிணக் குவியல் மீது கால்வைத்து ஏறி பதவியைப் பிடித்தார்கள்.


நிலம் கையகப்படுத்துதல், ஓய்வூதியம் போன்ற அனைத்து விசயங்களிலும் காங்கிரசோடு நாடாளுமன்றத்தில் கார்ப்பரேட் கருத்தொற்றுமை  கொண்டுள்ள பாஜகவிற்கு, நாடு நெருக்கடியில் இருந்து மீள அந்நிய முதலீடும் முதலீட்டாளர்கள் நம்பிக்கையுமே முன்னிபந்தனைகள் என காங்கிரசைக் காட்டிலும் உரத்துக் குரல் எழுப்பும் பாஜகவிற்கு, இப்போது, வசதியாகக் கை கொடுக்கும் ஒரே துருப்புச் சீட்டு மதவாதமே. சங்பரிவார், சில இந்துக்களை, ஓர் இசுலாமிய பெரும்கும்பல் கொடூரமாக கொல்வது போல், ஒரு போலி காணொளிக் காட்சியை தயாரித்து வெளியிட்டதும், பிரச்சனைக்கு ஒரு முக்கிய காரணம்.


முசாபர்நகர் நிகழ்வுகளை, முலாயம் அது ஜாட் - இசுலாமியர் சண்டை மட்டுமே என்றும் அதற்கு மதவாதச் சாயம் பூசக்கூடாது என்றும் பேசுகிறார். முலாயம், பாஜகவின் மதவாதத்தோடு நேருக்கு நேர் மோத இந்து வாக்கு வங்கியிடம் இருந்து அந்நியப்படத் தயாரில்லை. அதனால்தான், முசாபர்நகரில், தடையின்றி ஒரு லட்சம் பேர் கலந்துகொண்ட மகாபஞ்சாயத்து ஆகஸ்ட் 31 அன்று நடந்துள்ளது. அங்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஹ÷கும் சிங், சுரேஷ் ரானா, சங்கீத் சிங் சோம் மற்றும் பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர்கள் நரேஷ் திகாயத், ராகேஷ் திகாயத் ஆகியோர், இசுலாமியர்களுக்கு எதிராக மதவெறி நஞ்சை பாய்ச்சும் உரையாற்றினர்.

அதற்குப் பிறகே, இசுலாமியர் மீதான தாக்குதல் வேட்டை துவங்கியது. மகாபஞ்சாயத்து கூட்டத்தில் பேசியவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. (அவர்கள் பேசிய விஷயங்களை, தேசிய தொலைக்காட்சி அலை வரிசைகள் வெளியிட்டன). நரேந்திர மோடி ஆட்சிக்கு வர இத்தனை உயிர்ப்பலி என்றால், அவர் பிரதமரானால் என்னவெல்லாம் நடக்கும்?


மேற்கு உத்தரபிரதேசத்தில் ‘சங்பரிவார் விஷம் காய்ச்சுகிறது’ எனத் தலைப்பிட்டு செப்டம்பர் 11 இந்து நாளேட்டில் பிரஷாந்த் ஜா சங் பரிவார் சதியை அம்பலப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் ராமதாஸ், சாதி இந்துப் பெண்களை தலித்துகளிடம் இருந்து பாதுகாப்பதாகச் சொல்லி புறப்பட்டதுபோல், விசுவ இந்து பரிசத்தின் சந்திரமோகன் சர்மா இசுலாமியர்கள் உத்தரபிரதேசத்தில் காதல் புனிதப் போர் (ஜிகாத்) தொடுத்துள்ளதாகச் சொல்கிறார். ‘நல்ல தோற்றம் கொண்ட இசுலாமிய இளைஞர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு சோனு, ராஜ÷ போன்ற இந்துப் பெயர்கள் வழங்கி, அவர்களுக்கு ஜீன்ஸ், டி சர்ட், மொபைல் மோட்டார் பைக் வாங்கித் தருகிறார்கள்; அவர்கள் இந்து பெண்களுக்கு கல்லூரி, பள்ளி வாசல்களில் காதல் வலைவிரித்து எப்படியோ, மடக்கி விடுகிறார்கள். இந்து இளைஞர்கள் இசுலாமியப் பெண்களுடன் ஓடிப்போவதில்லை. ஓடிப்போகும் 100 பெண்களில் 95 பேர் இந்துக்கள். அவர்கள் இசுலாமியர்களுடன்தான் ஓடிப்போகிறார்கள்’.


பாரத் மாதா மந்திரில் இருந்து விஎச்பியின் சுதர்சன், ‘மகாபஞ்சாயத்துக்குப் பிறகு, உத்தரபிரதேசத்தின் கோத்ரா நடந்தது; இந்துக்கள் சும்மா உட்கார்ந்திருக்கவில்லை; கோத்ராவிற்குப் பிறகு, 2002ல் குஜராத்தில் இந்துக்கள் செய்ததையே இப்போது இங்கு இந்துக்கள் செய்துள்ளார்கள்’. ‘வெற்றி எங்களுக்கே. கோயில்களை, பெண்களை, பசுக்களை, கங்கையை, நம் மதத்தைப் பாதுகாக்க சங் பரிவார் இந்துக்களை ஒன்று படுத்தும்’.
2002 குஜராத் படுகொலைக்குப் பிறகு, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் இசுலாமி யர்களுக்கு மற்றவர்களோடு சேர்ந்து வாழ முடியவில்லை என்றார்.

இன்று உத்தரபிர தேசத்தின் சங்பரிவாரம், இசுலாமியர்கள், குஜ்ஜார், பார்ப்பனர், தலித், தாகூர், குஷாவா, ஜாட் என எல்லோருடனும் சண்டையிடுவதாகச் சொல்கிறது. சங்பரிவார் கூட்டம், ‘ஜாட்டும் முஸ்லீமும் முதல் முறையாக சண்டை போடுகின்றனர்; இது பெரிய சாதனை. ஜாட்கள் இந்துக்கள் போல முதல் முறையாக சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். எவ்வளவு அதிகமான இந்து சாதிகள் இசுலாமியர்களோடு சண்டையிடுகின்றனரோ, அவ்வளவுக்கு அவ்வளவு சங்பரிவாருக்கும் பாஜகவுக்கும் ஆதாயம்’ எனச் சொல்கிறது.

முசாபர்நகர், ஓர் எச்சரிக்கை மணி. ஆகஸ்ட் 25 அன்று அயோத்திக்குள் நுழைந்து கலவரம் செய்யப் பார்த்த விஎச்பியின் முயற்சிகள் பிசுபிசுத்துப் போயின. கோயில் கதை எடுபடாததால் இப்போது, நேரடியாக மதவெறி தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. சங்பரிவாரை, காங்கிரஸ் எதிர்க்காது. ஏகாதிபத்திய எதிர்ப்பு, ஜனநாயக உணர்வுடைய மதச்சார்பற்ற சக்திகள், சங் பரிவாருக்கு எதிரான மக்களின் போராட்ட ஒற்றுமைக்குப் பாடுபட வேண்டும்.


எம்ஜிஆருக்கு ஒரு தேவாரம் போல் மோடிக்கு இருந்தவர் குஜராத் டிஜிபி வன்சாரா. போலி மோதல் படுகொலை நிபுணர். மோடியைக் கொல்ல வந்த தீவிரவாதிகள் என்று சொல்லி போலி மோதல் படுகொலைகளை நிகழ்த்தியவர். இன்று விசாரணைக் கைதியாக குஜராத் சிறையில் இருக்கிறார். போலி மோதல் படுகொலைகளில் அவருடன் இணைந்து செயல்பட்ட இன்னும் சில காவல்துறை அதிகாரிகள் அவருடன் சிறையில் இருக்கிறார்கள். இந்தப் படுகொலைகளுக்கு பின்னால் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட அமித் ஷா வெளியில் வந்து உத்தரபிரதேசத்தில் தனது அடுத்த வெறியாட்டத்தைத் துவங்கிவிட்டார்.


ஆனால், அதே வழக்குகளில் கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள் யாரையும் வெளியே கொண்டு வர குஜராத் அரசாங்கம் முயற்சி ஏதும் எடுக்கவில்லை. வன்சாரா பொறுமை இழந்து விட்டார். ஆங்கிலத்தில் ஸ்பில்லிங் தி பீன்ஸ் என்று சொல்வார்கள். மனதில் இருந்த உண்மைகள் சிலவற்றை சமீபத்தில் தனது கடிதம் ஒன்றில் சொல்லியுள்ளார். போலி மோதல் படுகொலைகளை அதிகாரத்தில் இருப்பவர்கள் சொல்லித்தான் செய்தோம் என்றும், மொத்த அரசாங்கமும் சிறையில் இருக்க வேண்டும் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள் ளார். அதாவது, நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்ட அரசாங்கம் சிறையில் இருக்க வேண்டும் என்று சொல்லி, மோடிதான் குஜராத்தில் நடந்த பல போலி மோதல் படுகொலைகளுக்குக் காரணம் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.


சாட்சிகள் சொன்னதைத்தான் நம்ப வில்லை. சக கொலையாளி சொல்வதையாவது நம்ப வேண்டாமா?

இளம் அரசியல் தொண்டர்களுக்கு - பகத்சிங்

அன்பிற்குரிய தோழர்களே.....

........தற்போதைய போராட்டத்திற்குப் பிறகு நேர்மையான புரட்சிகரத் தொண்டர் கள்  மத்தியில் வெறுப்பையும் அவநம்பிக்கையினையும் நீங்கள் காண்பீர்கள். ஆனால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.

 உணர்ச்சிவயப்படுதலை ஒதுக்கித் தள்ளுங்கள். நிகழ்வுகளை எதிர்கொள்வதற்குத் தயாராக இருங்கள். புரட்சி என்பது மிகவும் கடினமான பணி. புரட்சியை ஏற்படுத்துவது என்பது தனிநபர்கள் எவரது சக்திக்கும் அப்பாற்பட்டது. அதனை முன்கூட்டியே குறித்து வைத்த தேதி ஏதேனுமொன்றில் கொண்டு வரவும் முடியாது. அது குறிப்பிட்ட சமுதாய - பொருளாதார சூழ்நிலை களின் மூலமாகவே கொண்டு வரப்படும். இந்த சூழ்நிலைகளால் கொடுக்கப்படும் எந்த வகையான வாய்ப்பையும் பயன்படுத்துவதே ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட கட்சியின் வேலை. புரட்சிக்காக மக்களை தயார்படுத்துவதும் புரட்சிக்கான சக்திகளை ஒன்றுதிரட்டுவதும் மிகவும் கடினமானதொரு பணி. அப்பணி, புரட்சிகர தொண் டர்களிடம் இருந்து மாபெரும் தியாகத்தை வேண்டுகிறது. இதனை நான் தெளிவுபடுத் துகிறேன்.

 நீங்கள் ஒரு வியாபாரியாகவோ இவ்வுலக வாழ்வில் ஈடுபட்டிருப்பவர் அல்லது குடும்பஸ்தராகவோ இருந்தால் தயவுசெய்து நெருப்போடு விளையாடாதீர்கள். ஒரு தலைவராக உங்களால் கட்சிக்கு ஒரு பயனும் இல்லை. சொற் பொழிவாற்றுவதற்காக சில மாலை நேரங்களை செலவிடும் இத்தகைய தலைவர்கள் நம்மிடத்தில் ஏற்கனவே நிறைய பேர் இருக்கின்றனர்.

அவர்கள் பயனற்றவர்கள். நமக்குத் தேவையானவர்கள் - புரட்சியையே தங்களது தொழிலாகக் கொண்ட முழுநேர புரட்சியாளர்களே. புரட்சியைத் தவிர வேறெந்த இலட்சியமோ வாழ்நாட்பணியோ இல்லாத முழுநேரத் தொண்டர்கள். அத்தகைய தொண்டர்கள் அதிக எண்ணிக்கையில் கட்சிக்குள் சேர்க்கப்படுவது உங்களது வெற்றிக்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்......


.......கட்சிக்குத் தேவைப்படுகின்ற தொண்டர்களை இளைஞர் இயக்கத்தின் மூலமாக மட்டுமே கொண்டு வர முடியும். ஆகவே இளைஞர் இயக்கத்தையே நமது செயல் திட்டத்தின் தொடக்கப் புள்ளியாக நாம் காண்கிறோம். இளைஞர் இயக்கமானது படிப்பு வட்டங்களுக்கும் அரசியல் வகுப்புகளுக்கும், துண்டு பிரசுரங்கள், சிற்றிதழ்கள், புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகள் வெளியிடுவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். இதுவே அரசியல் தொண்டர்களை புதிதாகச் சேர்ப்பதற்கும் அவர்களின் பயிற்சிக்குமான களமாகும்......


...........இத்திசைவழியில் நீங்கள் செயல்பாட்டைத் துவங்கினால் மிகவும் பொறுமை காக்க வேண்டும். இச்செயல் திட்டம் நிறைவேறுவதற்கு குறைந்தபட்சம் இருபது ஆண்டுகள் தேவைப்படலாம். ஒரு வருடத்தில் சுயராஜ்யம் என்ற காந்தியின் கற்பனாவாத வாக்குறுதியைப் போன்றே, பத்து ஆண்டுகளுக்குள் ஒரு புரட்சி என்ற உங்களின் இளமைக்குரிய கனவுகளையும் உதறித் தள்ளுங்கள். புரட்சி, உங்களிடமிருந்து உணர்ச்சி வேகத்தையோ மரணத்தையோ வேண்டவில்லை. மாறாக உறுதியான போராட்டம், துன்பங்கள் மற்றும் தியாகங்களையே அது வேண்டுகிறது.

முதலில் உங்களது தன்னலத்தை அழித்து விடுங்கள். தனிப்பட்ட சுகபோகங்கள் பற்றிய கனவுகளை உதறித் தள்ளுங்கள். அதன் பிறகு செயல்பாட்டைத் தொடங்குங்கள். படிப்படியாக நீங்கள் முன்செல்ல வேண்டும். இதற்கு துணிவும் விடாமுயற்சியும், கலைக்க முடியாத மனவுறுதியும் வேண்டும். எந்தத் துன்பங்களும் துயரங்களும்  உங்களது தன்னம்பிக்கையை குலைத்து விடகூடாது. எந்தத் தோல்வியும் துரோகங்களும் உங்களை மனம் தளரச் செய்துவிடக் கூடாது. உங்கள் மீது திணிக்கப்படும் எந்த வேதனைகளும் உங்களுக்குள்ளிருக்கும் புரட்சிகரமான மனநிலையைக் கொன்றுவிடக் கூடாது. துன்பங்களும் தியாகங்களும் நிறைந்த சோதனையை முழுமையாகக் கடந்து நீங்கள் வெற்றிகரமாக மீண்டு வர வேண்டும். தனிநபர்கள் அடையும் இந்த வெற்றிகளே புரட்சியின் மதிப்புமிக்க சொத்துக்களாக இருக்கும்.......


......புரட்சி நீடூழி வாழ்க!    

கச்சத்தீவை மீட்க வேண்டும்தான். மீனவர் மீட்புக்கு என்ன வழி?

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப் படுவது, கைது செய்யப்படுவது, இலங்கை சிறைகளில் வாடுவது, கொல்லப்படுவது, அவர்கள் உறவினர்கள் அலைகழிக்கப் படுவது என்று அவர்கள் கடலிலும் கரையிலும் கண்ணீர் சிந்துகிற பின்னணியில், கருணாநிதியை விட கூடுதல் அரசியல் மதிப்பெண் பெற, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இலங்கையில் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியப் பிரதமரை அழைக்க டில்லிக்கு வந்த இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸ், மிகவும் திட்டவட்டமாக, கச்சத்தீவை இந்தியாவுக்குத் தரும் திட்டம் ஏதும் இல்லை என்றார். கச்சத்தீவு தொடர்பாக டெசோ தொடர்ந்துள்ள வழக்கில் உச்சநீதி மன்றம் பெரீசுக்கு தக்க பதிலடி தரும் என்று கருணாநிதி வீர  உரை ஆற்றிக் கொண்டிருந்த சமயத்தில் அந்த அதிர்ச்சி செய்தி அய்முகூ அரசாங்கத்திடம் இருந்து வந்தது.

 
2008ல் அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதா தொடர்ந்த வழக்கை இப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ஜெயலலிதா கோரியதன் அடிப்படையில் வழக்கு இப்போது உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு, இலங்கைக்கு இந்தியப் பகுதி எதுவும் தரப்பட வில்லை (அதாவது மத்திய அரசின் கூற்றுப்படி கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி இல்லை) என்றும் 1974 மற்றும் 1976 ஒப்பந்தப்படி தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடல் பகுதியில் (அதாவது கச்சத் தீவில்) மீன் பிடிக்கும் உரிமை இல்லை என்றும் அது தாரை வார்க்கப்பட்டதாக ஜெயலலிதா சொல்வது அரசு ஆவணங்களுக்கு முரணானது என்றும் தனது பிரமாண வாக்கு மூலத்தில் சொல்கிறது.


இதுவே விவாதத்துக்குரிய விசயமாக மாறியுள்ளது. மத்திய அரசின் தமிழர் விரோதத் தன்மைக்கு இது மற்றுமொரு எடுத்துக்காட்டு என்று காங்கிரஸ் எதிர்ப்பாளர்களும் தமிழ் ஆர்வலர்களும் சொல்ல, ‘தமிழர் நலனை’ அல்லும் பகலும் பாதுகாத்துக் கொண்டிருக்கிற அதிமுக, திமுக முதல் திராவிடக் கட்சிகள் அனைத்தும் கொந்தளித்துப் போக, தமிழ்நாட்டின் சந்தர்ப்பவாத அரசியல் வானத்தில் அறிக்கை மழை பெய்து தள்ளியது.


கருணாநிதி ஆட்சியில்தான் கச்சத்தீவு கைவிட்டுப் போனது என்று ஜெயலலிதா குற்றம்சாட்ட, இரண்டு நாடுகளுக்கிடையில் நல்லுறவு பேணும் நோக்கில்தான் கச்சத்தீவு தரப்பட்டது என்று ஜெயலலிதா என்றோ சொன்னார் என்பதையும், கச்சத்தீவை நிரந்தரக் குத்தகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஜெயலலிதா சொன்னதையும் கருணாநிதி நினைவுபடுத்த, ஒருவர் துரோகத்தை, மற்றொருவர் அம்பலப்படுத்தினார்கள்.

இரண்டு நாடுகள் போட்ட ஒப்பந்தத்தை மதிக்க வேண்டும் என்று இககமா நாடாளு மன்ற உறுப்பினரும் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று இககமா சட்டமன்ற உறுப்பினர் தமிழக சட்டமன்றத்திலும் சொல்கின்றனர். இந்த வேறு வேறு நிலைப்பாடுகளுக்கு வேறு வேறு விதமான பதில்கள் சொல்லிக் கொள்ளலாம். சந்தர்ப்பவாத அரசியலில் இவை சகஜம். இககமா நாடாளுமன்ற உறுப்பினர் இதையும் தாண்டி இன்னொரு விசயம் கேட்கிறார். கச்சத்தீவு இந்தியாவுக்குத்தான் சொந்தம் என்று இன்று ஆதாரம் தருபவர்கள், அதாவது, கருணாநிதி, அன்று கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது ஏன் வேடிக்கைப் பார்க்க வேண்டும் என்று கேட்கிறார். அதாவது, ஜெயலலிதாவை விட திறமையாக கருணாநிதியை கார்னர் செய்கிறார்.

கொ.ப.செ. தா.பா., கச்சத்தீவை மீட்கும் தமிழக அரசின் முயற்சிகளுக்கு மக்கள் ஆதரவு கோரியிருக்கிறார்.

ஞானதேசிகன் கச்சத்தீவை குத்தகைக்கு எடுக்கும் தற்காலிகத் தீர்வை முன்வைக்கிறார். ராமதாஸ், வைகோ இன்னும் மற்றோரும் பெருபாரியைத் துணைக்கழைத்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று சொல்லிவிட்டனர். இவர்கள் அனைவருமே கச்சத்தீவு மீட்கப்படுவதே தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு என்று சொல்கிறார்கள்.
  
பொதுவாகச் சொல்லப்படுவதுபோல் பெருபாரி திரும்பப் பெறப்படவில்லை. பெருபாரி பாகிஸ்தானுக்கு என்று இரண்டு நாடுகளுக்கு இடையிலும் ஒப்பந்தம் ஏற்பட்டபோது, அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்தான், ஒரு நாட்டின் ஒரு பகுதியை ஓர் ஒப்பந்தத்தின் மூலம் இன்னொரு நாட்டுக்கு தர முடியாது என்றும் அரசியல் சாசனத்தின் சட்டத்திருத்தம் மூலம்தான் அது செய்யப்பட வேண்டும் என்றும் தீர்ப்பானது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகு ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசு ஒன்பதாவது அரசியல் சாசனத் திருத்தத்தின் மூலம் பெருபாரியை பாகிஸ்தானுக்கு வழங்க வழி செய்தது. ஆனால், அதற்குப் பிறகு பாகிஸ்தானில் ஏற்பட்ட கொந்தளிப்பின் காரணமாக, பங்களாதேஷ் உருவாக, ஒன்பதாவது அரசியல் சாசனத் திருத்தத்தை அமல்படுத்த முடியாமல் போனது. பெருபாரி இந்தியாவுடன் நின்றது.

இந்தப் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று இப்போது தமிழ்நாட் டில் குரல்கள் எழுகின்றன. நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனத் திருத்தம் செய்யாமல் கச்சத்தீவை இலங்கைக்கு தந்திருக்கக் கூடாது என்ற வாதம் சரியே. அந்த அடிப்படையில் 1974, 1976 ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் பின்னணியில் இது மிகவும் அவசியமாகிறது.


ஆனால், ஜெயலலிதாவும் கருணாநிதியும் மற்றவர்களும் தமிழக மீனவர் நலன்களில் கொண்டுள்ள அக்கறையில் இருந்துதான் இந்தப் பிரச்சனையை எழுப்புகிறார்களா என்று பார்க்க வேண்டியுள்ளது. ஜெயலலிதா மற்றும் கருணாநிதியை பொறுத்தவரை, தமிழர் நலன் காப்பவர்களாக காட்டிக் கொள்வதைத் தவிர, தங்கள் சொந்தத் தேர்தல் நலனைத் தவிர வேறேதும் இல்லை. தமிழக மீனவர் நலனில் அவர்களுக்கு இருக்கும் அக்கறையை கூடம்குளம் மக்கள் அன்றாடம் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மொத்த எதிர்கால சந்ததியே பாழாகிப் போகும், எங்களை விட்டுவிடுங்கள் என்று விதவிதமாகக் கேட்டுப்பார்க்கும் அவர்கள் குரல் ஜெயலலிதா, கருணாநிதி இருவர் காதுகளிலும் இன்று வரை விழவில்லை. தமிழக காவல் துறையை அனுப்பி அவர்களை ஒடுக்கியவர், அவர்கள் மீது பொருத்தமில்லாத பொய் வழக்குகள் போட்டவர் ஜெயலலிதா. அந்த வழக்குகளை திரும்பப்பெறச் சொல்லி உச்சநீதி மன்றம் சொன்னதைக் கூட இன்னும் அமல்படுத்தாதவர் ஜெயலலிதா. இவை அனைத்தையும் வேடிக்கைப் பார்த்து ரசிக்கிறவர் கருணாநிதி. இவர்கள் இருவருமே, மீனவர் நலன் பற்றி, தமிழர் நலன் பற்றி பேசுவதற்கு அருகதை அற்றவர்கள்.


தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு கச்சத்தீவில் தொடங்கி கச்சத்தீவில் முடிந் துவிடவில்லை. கச்சத்தீவு மீட்கப்பட்டுவிட்டால் மட்டும் அந்தப் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து விடப்போவதில்லை.


தமிழக மீனவர்களுக்கு இலங்கைக் கடற்படையினரால் மட்டும் துன்பம் ஏற்படுவதில்லை. வெளிநாட்டு மீன்பிடி கலன்களை ஊக்குவிக்கும் இந்திய அரசின் மீன்பிடி கொள்கைகள், அந்தக் கொள்கையை அமல்படுத்துவதாகச் சொல்லும் இந்திய கடலோர காவல் படையினர் என உள்
நாட்டுக்காரர்களாலும் தமிழக மீனவர்களுக்கு துன்பம்தான்.


ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்க 1991ல் கொள்கை உருவாக்கப்பட்டது. இந்திய மீனவர்களை ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடுத்துவது என்ற பெயரில் வெளிநாட்டு மீன்பிடிக் கலன்கள் இந்திய கடல் பகுதிகளில் மீன் பிடிக்க நுழைந்தன. இந்திய பொருளாதார தனி உரிமைப் பகுதிகளில் உள்ள மீன்வளத்தை இந்த அந்நியக் கலன்கள் அபகரிக்கின்றன. கடலோரப் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பாரம்பரிய மீனவர்கள் கடலோரப் பகுதிகளில் மீன் வளம் குறைந்திருப்பதால் ஆழ்கடலுக்குள் செல்லும்போது, வெளிநாட்டு மீன்படி கலன்களுடன் சமனற்ற போட்டியில் இறங்கி படாதபாடுபட வேண்டியுள்ளது. விசைப் படகுக்கு உரிமம் வைத்திருக்கிறாயா என்ற கடலோர பாதுகாப்புப் படையினரின் கேள்விமுதல் வலையை இழுத்துக் கொண்டு ஓடி விடும் அந்நியக் கலன்கள் வரை பல்வேறு துன்பங்களை சந்தித்து அவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு விலையை அவர்கள் சொல்ல முடியாது. அவர்கள் உழைப்பில் இருந்து முற்றிலுமாக அவர்கள் அந்நியப்படுத்தப்பட்டு வியாபாரிகள் விலை நிர்ணயிக்கிறார்கள்.


ஆழ்கடல் மீன்வளம் வீணாகக் கூடாது என்பதற்கு மேல் அது இந்தியர்களுக்கு பயன் படுகிறதா என்பதைப் பற்றி இந்திய அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை. ஆழ்கடல் மீன்பிடிப் பில் அனுமதிக் கடிதமுறை மூலம் இந்திய கடல் எல்லைக்குள் சட்டபூர்வமாக மீன்பிடிக்கும் அந்நிய கலன்கள், தாங்கள் பிடித்த மீன்களை கடலிலேயே சட்டபூர்வமாக வேறொரு கப்பலுக்கு மாற்றி சர்வதேச சந்தையில் விற்று விடுகின்றன. இதனால், இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிப்பு குறைவதுடன், இந்தியாவுக்கு, இந்தியக் கடல் எல்லைக்குள் இருக்கும் மீன் வளத்தால் எந்தப் பயனும் இல்லாமல் போகிறது. டாடா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, அய்டிசி, இந்துஸ்தான் லீவர், டன்லப் போன்ற நிறுவனங்கள் அந்நிய மீன்பிடி கலன்களுக்கு உரிமம் பெற்றுள்ளன. ஆண்டொன்றுக்கு, மீன்பிடி கலன் ஒன்றுக்கு, ரூ.630 கோடி மதிப்பில் மீன்பிடிப்பு செய்யும் இந்த அந்நியக் கலன்கள் மூலம் மிகசொற்பத் தொகையாக உரிம கட்டணம் தவிர வேறு எந்த வருமானமும் இந்திய அரசாங்கத்துக்கு அவற்றை அனுமதித்தன் மூலம் கிடைப்பதில்லை. ஆண்டொன்றுக்கு ரூ.815 கோடி முதல் ரூ.1196 கோடி வரை இழப்பும் ஏற்படுகிறது. சில நேரங்களில் இந்த மீன்கலன்கள் கடலோரப் பகுதிகளுக்குள் வந்து அங்கும் பாரம்பரிய மீனவர் பிழைப்பைப் பறிக்கின்றன. இந்தியக் கடலின் ஆழ்கடல் மீன்வளத்தையும் இந்த அந்நியக் கலன்கள் ஒட்டுமொத்தமாக சுரண்டி விடுகின்றன.

அந்நிய மீன்பிடி கலன்களோடு, இலங்கை மீனவர்களோடு மட்டுமன்றி, பிற மாநில மீனவர்களுடனும் தமிழக மீனவர்கள் போட்டிபோட வேண்டியுள்ளது. குமரி மாவட்ட மீன வர்கள் கேரளா மற்றும் மகாராஷ்டிரா கடல் பகுதிகளுக்குச் செல்கிறார்கள். தமிழக கடல் பகுதிக்குள்ளேயே விசைப் படகுகளுக்கும் நாட்டுப் படகுகளுக்கும் இடையில் மீன் பிடிப்பதில் போட்டி உள்ளது. விசைப்படகுகள் தங்கள் வலைகளை அறுத்துவிட்டதாக மற்றவர்கள் புகார் செய்வதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
இதுபோன்ற பிரச்சனைகள் மட்டுமின்றி, தமிழக மீனவர்கள் அன்றாட வாழ்க்கையை கவுரவமாக, குறைந்தபட்ச பாதுகாப்புடன் நகர்த்த சில அடிப்படைக் கோரிக்கைகளை நீண்டகாலமாக எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். கடலில் இருக்கும் இடத்தைக் காட்டும் ஜிபிஎஸ் கருவிகள், கடலில் மீன்கூட்டம் கண்டு பிடிக்கும் கருவிகள், கரையுடன் தொடர்பு கொள்ளும் கருவிகள் வேண்டும் என்று கேட்கிறார்கள்.
மீன்பிடித் தடை காலத்தில் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தக் கோரி நீண்ட காலமாக குரல் எழுப்புகிறார்கள். அந்த காலத்தில் மாற்று வேலைவாய்ப்பு வேண்டும் என்று கேட்கிறார்கள்.
அந்நியக் கலன்களுக்கு மான்ய விலையில் டீசல் தரும் அரசாங்கம் தங்களுக்கும் தர வேண்டும் என்று கேட்கிறார்கள்.
தமிழகத்தை மாறிமாறி ஆட்சி செய்யும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் அந்நிய மீன் பிடி கலன்கள் பற்றி, அவற்றால் மீனவ மக்கள் வாழ்விழப்பது பற்றி என்றாவது கேள்வி எழுப்பியிருக்கிறார்களா? தமிழக மீனவர் எழுப்பிவரும் சாதாரண கோரிக்கைகளைத்தான் நிறைவேற்றியிருக்கிறார்களா?

கடலோரப் பகுதிகளை அழகுபடுத்துவது என்று அங்கு தலைமுறைகளாக வாழும் மீன வர்களை அப்புறப்படுத்துவதற்கும் இலங்கைக் கடற்படை தாக்குவதற்கும் என்ன பெரிய வேறுபாடு? தாது மணல் கொள்ளையால் கடல் வளம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் நாசமாகி றது என்று சொல்கிற தூத்துக்குடி கடலோர மக்களுக்கு ஜெயலலிதாவும் கருணாநிதியும்  இன்று வரை என்ன பதில் சொன்னார்கள்? ஆறுகளில் கொட்டப்படும் ஆலை மாசுக்கள் கடலில் கலந்து கடல் நீரை மாசுப்படுத்தி மீன் வளத்தை நாசப்படுத்தி, மீனவர் வாழ்வாதாரத்தைப் பறிப்பது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்? கடலில் மீன் பிடிக்கப் போய் காணாமல் போய்விடும் மீனவர்கள் 7 ஆண்டுகளுக்கு வரவில்லையென்றால் தான் அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறது. அது வரை அந்தக் குடும்பங்கள் என்ன ஆகின்றன என்று என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறார்களா?


தமிழக மீனவர்களின் இந்தப் பிரச்சனைகள் எல்லாம் தீர்வதற்கும் கச்சத்தீவு மீள்வதற்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழக மீனவர்கள் சொந்த நாட்டு ஆட்சியாளர்களால் ஒரு விதமான தாக்குதலுக்கும் உரிமை பறிப்புக்கும் வேற்று நாட்டு ஆட்சியாளர்களால் வேறுவித மான தாக்குதலுக்கும் ஆளாகிறார்கள்.


இந்தியப் பிரதமரை சந்திக்க வந்த பெரீசும், இலங்கைக் கடல் பகுதிக்குள் நுழையும் இந்திய மீனவர் நைலான் வலைகள் மற்றும் ட்ராலர்கள் பயன்படுத்துவதால் அந்த பகுதியில் மீன்வளம் பாதிக்கப்படுவதாகச் சொல்கிறார். மீனவர்கள் என்ற பொருளில் இலங்கை மீனவர்ளும் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.

எரிகிற வீட்டில் கிடைக்கிற வரை லாபம் என்று சிலர் சீன ராணுவம் கச்சத்தீவில் தளம் அமைக்கிறது என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள். சீனமோ, இந்தியாவோ, வேறொரு மய்யத் தில் இருந்துதான் ஒன்றன்மீது ஒன்று தாக்குதல் தொடுக்க வேண்டும் என்ற நிலை இல்லை. அந்தந்த நாடுகளுக்கு உள்ளிருந்தே, அடுத்த நாட்டைத் தாக்கும் ஏவுகணைகளை இரண்டு நாடுகளுமே வைத்துக் கொண்டுள்ளன. கச்சத்தீவு பிரச்சனையாகவே தொடர்வது ஜெயலலிதா, கருணாநிதிக்கு மட்டுமின்றி இலங்கை ஆட்சியாளர்களுக்கும் நல்லது. அவர்கள் அனைவருமாகச் சேர்ந்து அரசியல் நடத்த இரண்டு நாட்டு மீனவர்கள் வாழ்க்கையையும் துயரத்தில் தள்ளி, பிரச்சனைகள் தீராமல் பார்த்துக் கொள்வார்கள். ஜெயலலிதாவும் கருணாநிதியும் எங்கள் மீனவர்களை நாங்களே ஒடுக்கிக் கொள்கிறோம், இலங்கை கடற்படை ஒடுக்கக் கூடாது என்று மட்டும் உரிமைக் குரல் எழுப்பிக் கொண்டிருப்பார்கள்.

நிர்பயாக்களுக்கு நீதி வேண்டும்

‘ஒருவருக்காக 6 பேர் சாக வேண்டுமா?’ அதிர்ச்சி தரும் இந்தக் கேள்வியை டில்லி கூட்டுப் பாலியல் வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவரின் சகோதரி கேட்கிறார். கேள்வி கேட்டது ஒரு பெண். இது இன்னும் அதிர்ச்சி தருகிறது.

அதிசயிக்கத்தக்க விதத்தில் இந்தியாவில் ஒரு பாலியல் வன்முறை குற்றச்சாட்டு எட்டரை மாத காலத்தில் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது என்ற நிலையை எட்டியுள்ளது. கொலை, பாலியல் வன்முறை, கடத்தல், சாட்சிகள் அழிப்பு உட்பட அவர்கள் மீது போடப்பட்ட 13 குற்றச்சாட்டுகள் மெய்ப்பிக்கப்பட்டு செப்டம்பர் 10 அன்று அவர்கள் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டார்கள். தண்டனை செப்டம்பர் 13 அன்று அறிவிக்கப்பட உள்ளது.

நீதிமன்ற வளாகம் போராட்டக்காரர்களால் நிறைந்துள்ளது. அதிகபட்ச தண்டனை தரப்பட வேண்டும் என்று நாடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும்போது, அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் வழக்கமான குற்றவாளிகள் அல்ல, விளைவுகள் தெரியாமல் செய்துவிட்டார்கள், திருந்தி வாழ வாய்ப்பு கொடுங்கள் என்று உறவினர்களும் வழக்கறிஞர்களும் கேட்கிறார்கள். ஒரு பெண்ணின் பிறப்புறுப்பின் வழியாக இரும்புக் கம்பியைச் செலுத்தி உடல் உறுப்புக்களை கிழித்துப் போட்டவர்கள் தெரியாமல் செய்தார்கள் என்று சொல்வதில் பொருள் இல்லை.

தலைநகரிலும் நாடு முழுவதும் எழுந்த தீவிர எதிர்ப்பின் நிர்ப்பந்தத்தாலேயே இன்று அவர்கள் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த எதிர்ப்பு இல்லையென்றால் இது நடந்திருக்குமா என்பது சந்தேகத்துக்குரியதே. பாலியல் வன்முறைக்கெதிராக தீவிரமான போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோதே, இன்று வரையிலும் நாட்டின் பல மூலைகளிலும் பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

மும்பை பத்திரிகையாளர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, பின் சாட்சிகளை அழிக்கவும் சம்பவம் நடந்த இடத்தை சுத்தம் செய்யவும் பாலியல் வன்முறையாளர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டார். டில்லியில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட அய்ந்து வயது சிறுமி, அந்த ‘மாமா’ கடுமையாக அடிக்கப்பட வேண்டும் என்று பத்திரிகையாளர்களிடம் சொல்கிறாள்.

ஒரு வேளை டிசம்பர் 16 வழக்கு இன்னும் விரைவாக முடிக்கப்பட்டு, தண்டனை அறிவிக்கப்பட்டிருந்தால் மும்பையும் மீண்டுமொரு முறை டில்லியும் நடக்காமல் தடுத்திருக்கக் கூடும். டிசம்பர் 16 அன்று நடந்த கொடுமையின் தீவிரத்துடன் சேர்த்துப் பார்க்கும்போது எட்டரை மாத காலம் மிகவும் நீண்டதே. இடையில் அவசரச் சட்டம் என்ற பெயரில் ஒப்பீட்டு ரீதியில் கறாரான வர்மா கமிட்டி பரிந்துரைகளை நீர்த்துப் போகச் செய்வது கூட நடந்துவிட்டது.

இந்த விசயத்தில் இன்னும் ஒரு முறை தாமதமோ, அலட்சியமோ சற்றும் அனுமதிக்கப்படக் கூடாது. ஆறு பேரில் ஒருவர், மிகவும் மூர்க்கமாக இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர், சிறுவர் என்று சொல்லி ஏற்கனவே தப்பிவிட்டார். இன்னொருவர் தற்கொலை செய்துகொண்டு விட்டார்.

எஞ்சியிருப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதே நாட்டில் உள்ள பெண்களுக்கு ஜனநாயக இயக்கப்போக்கின் மீது ஓரளவு நம்பிக்கையையாவது உருவாக்கும்.

இன்றைய நிலைமைகளிலேயே, சிறுவன் என்று சொல்லி ஒரு குற்றவாளி தப்பிவிட்ட நிலையில், இந்த வழக்கு நீர்த்துப் போகச் செய்யப்படுமா, குற்றவாளிகளை ஏதாவது காரணம் சொல்லி தப்பவிட்டுவிடுவார்களா, நிர்பயாவுக்கு உண்மையில் நியாயம் கிடைக்குமா என்ற கேள்விகள் உள்ளன. மரண தண்டனையா, ஆயுள் தண்டனையா என்ற விவாதத்தை விட தண்டனையை உறுதி செய்வது முக்கியம். நல்லெண்ணம் கொண்ட பலர் பெண்கள் மீதான குற்றங்கள் குறைவதில் ஆண்களின் மனமாற்றம், பெண்கள் ஆண்களை வளர்ப்பதில் மாற்றம் ஆகியவற்றுக்கு அழுத்தம் வேண்டும் என்கின்றனர். நரகத்துக்கான பாதை நல்லெண்ணங்களால் போடப்படுகிறது.

தன் சகோதரன் மன்னிக்கப்பட வேண்டும் என்று விரும்பும் அந்த சகோதரியும் ஆணாதிக்கத்தின் கைதியே. நடந்திருப்பது இந்திய சட்டங்களின்படி குற்றம். குற்றம் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். கடுமையான குற்றங்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். அது மட்டுமே குற்றங்களைத் தடுக்கும். மனமாற்றம் ஏற்படுவதில் இந்தத் தண்டனைகள் மிக மிக முக்கிய பங்காற்றும்.

Sunday, September 1, 2013

கிராமப்புற வறியவர் வாழ்வுரிமை கோரி அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் மாநிலந் தழுவிய ஆர்ப்பாட்டம்


ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.148 சட்டக் கூலி வழங்கு!

ஊரக வேலை உறுதி திட்டத்தில் அளவு முறையை ரத்து செய்!

ஊரக வேலை உறுதி திட்டத்தை பேரூராட்சிப் பகுதிக்கும்,
சிறு, குறு விவசாயத்துக்கும் விரிவுபடுத்து!

கோவில், மடம், புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் தாழ்த்தப்பட்டோர் வன்னியர் மற்றும் முத்தரையர் சமூக ஏழைகளுக்கு அந்த நிலங்களை சொந்தமாக்கு!

ஜ÷ன் 27, 28 தேதிகளில் ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் கூடிய அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்க தேசிய செயற்குழு, விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வுரிமை, அரசியல் உரிமை கோரிக்கை மீது தேசந் தழுவிய இயக்கம் நடத்த அறைகூவல் விடுத்தது. ஜ÷லை 15 முதல் ஆகஸ்ட் 19 வரை கிராமப்புற வறிய மக்கள் மத்தியில் ஆழமான பிரச்சார இயக்கம் நடத்தவும் முடிவு செய்தது.

தமிழகத்தில் ஜ÷லை 7 அன்று விழுப்புரத்தில் கூடிய மாநில நிர்வாகக் குழு தமிழகத்தில் விவசாயத் தொழிலாளர்களின் ஜீவாதாரமான கோரிக்கைகளான ஊரக வேலை உறுதி திட்டத்தில் சட்டக் கூலியான ரூ.148, மாநில அரசு அறிவித்துள்ள வருடத்தில் 150 நாட்கள் வேலை, வீடில்லாத வறிய மக்களுக்கு 5 சென்ட் வீட்டுமனைப் பட்டா, நூறுநாள் வேலைத் திட்டத்தை பேரூராட்சிப் பகுதிக்கும், சிறு, குறு விவசாயத்துக்கும் விரிவுபடுத்துவது, 100 நாள் வேலை திட்டத்தில் அளவு முறையை ரத்து செய்வது, கோவில், மடம், புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் தாழ்த்தப்பட்டோர் வன்னியர் மற்றும் முத்தரையர் சமூக ஏழைகளுக்கு அந்த நிலங்களை சொந்தமாக்குவது, மற்றும் சுகாதாரம், மருத்துவ வசதி, கல்வி ஆகியவற்றின் மீது செயல்துடிப்புள்ள பிரச்சார இயக்கத்தை கட்டமைக்க முடிவு செய்தது.

ஊராட்சிகள் தோறும் கூடுவோம், உரிமைகளுக்காக போராடுவோம் என முழங்கி ஊராட்சிமட்ட கூட்டங்கள் கட்டமைக்கப்பட்டன.

புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை - நாகை, விழுப்புரம், மதுரை, நாமக்கல், கடலூர் மாவட்டங்களில் 20 ஊராட்சிகளில் 2300 பேர் பங்கேற்ற கூட்டங்கள் நடத்தப்பட்டன. 50 பெண் ஊழியர்கள் உட்பட 200 செயல் வீரர்கள் உற்சாகமாக செயல்பட்டனர். துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், ஊர்க் கூட்டங்கள் என ஒரு மாத கால பிரச்சார இயக்கத்தில் மக்களை அணி திரட்ட தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. மக்களிடம் நிதி வசூல் செய்யப்பட்டது. ஆகஸ்ட் 19 அன்று மாநிலம் முழுவதும் 11 புள்ளிகளில் 1500 பெண்கள் உட்பட 2500 பேர் பங்கேற்ற எழுச்சி மிகு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டையில் தோழர் ஜோதிவேல் தலைமையில், தோழர்கள் வளத்தான், ராஜாங்கம், ராஜா ஆகியோர் முன்னிலை வகிக்க 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. தாலுகா அலுவலகம், வட்டாட்சியரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஊராட்சி வாரியாக கொடுக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இகக(மாலெ) கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் ஆசைத்தம்பி, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தேசிகன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
குன்றாண்டார் கோவில் ஒன்றியம் கீரனூரில் 130 பேர் கலந்து கொண்ட பேரணியும், ஆர்ப்பாட்டமும்  நடைபெற்றது. தோழர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற பேரணியில் தோழர் செல்லையா முன்னிலை வகித்தார். வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இகக(மாலெ) மாநிலக் குழு உறுப்பினர் தோழர் தேசிகன் உரையாற்றினார்.
கறம்பக்குடி ஒன்றியம் கறம்பக்குடியில் 100 பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் தோழர் விஜயன் தலைமையில் நடைபெற்றது. தோழர்கள் கலைச்செல்வன், மூக்கையன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

விழுப்புரம்

அவிதொச மாவட்டத் தலைவர் தோழர் கலியமூர்த்தி தலைமையில் ஆணும், பெண்ணுமாக 500 பேர் பங்கேற்ற பேரணி நீதி மன்றத்திலிருந்து புறப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சென்றது. 15 பேர் கொண்ட குழு மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்து பேச்சுவார்த்தை நடத்தியது. கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக ஆட்சித் தலைவர் உத்தரவாதம் அளித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர் களை 144 தடை உத்தரவு இருப்பதாக கூறி காவல்துறை கைது செய்தது. நிகழ்ச்சியில் இகக (மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், அயாலா மாநில துணைப் பொதுச் செய லாளர் தோழர் வெங்கடேசன், முற்போக்கு பெண்கள் கழக மாநிலச் செயலாளர் தோழர் செண்பக வள்ளி கலந்து கொண்டனர். கைது செய்யப்பட்ட தோழர்கள் மாலையில் விடுதலையாகினர்.

திருவள்ளூர்

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் சில நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவிதொச மாநில பொதுச் செயலாளர் தோழர் ஜானகிராமன் உரையாற்றினார். தோழர் ஜானகிராமன் தலைமையிலான குழு ஆட்சியரை சந்தித்து கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்தியது. நூறுநாள் வேலைத் திட்டக் கூலியை வங்கியில் பெறுவதில் தொழிலாளர்களுக்கு இருக்கும் சிரமங்கள் எடுத்துச் சொல்லப்பட்டு வேலை செய்யும் இடத்திலேயே கூலி வழங்கப்பட வேண்டும் என  வலியுறுத்தப்பட்டது. ஆட்சியர் இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதாக உத்தரவாதம் அளித்தார். ஏஅய்சிசிடியு மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் எ.எஸ்.குமார் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்.

தஞ்சை

கும்பகோணத்தில் தோழர் கண்ணையன் தலைமையிலும் தோழர்கள் குருசாமி, செல்லத்துரை முன்னிலையிலும் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் அவிதொச மாநிலத் தலைவர் தோழர் டி.கே.எஸ்.ஜனார்த்தனன் உரை நிகழ்த்தினார்.

நாகை

மயிலாடுதுறையில் தோழர் ஆனந்தன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர இளைஞர் கழக தோழர் கார்த்திக், இகக(மாலெ) மாவட்ட செயலாளர் தோழர் இளங்கோவன் ஆகியோர் உரையாற்றினர். 175 பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை

தோழர் சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏஅய்சிசிடியு தோழர் மணிராஜ், அய்சா தோழர் சத்ய கிருஷ்ணன், அவிதொச முத்தம்மாள், இகக(மாலெ) மாவட்ட பொறுப்பாளர் தோழர் மதிவாணன் உரையாற்றினர்.

நாமக்கல்

ராசிபுரத்தில் தோழர் கணேசன் தலைமையில் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 200 பேர் பங்கெடுத்தனர். தோழர்கள் வேல்முருகன், மோகனசுந்தரம் சிறப்புரையாற்றினர்.

கடலூர்

காட்டுமன்னார்கோவிலில், ராமாபுரம் ஊராட்சியில் 100 பேர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இகக(மாலெ) மாநில குழு உறுப்பினர் தோழர் அம்மையப்பன் உரையாற்றினார்.

வறுமைக் கோட்டுப் பட்டியல் தில்லுமுல்லு, உணவுப் பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் மோசடி ஆகியவை கிராமப்புற வறியவர் மத்தியில் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புற வறியவர்களை பெரும் அரசியல் சக்தியாக எழ வைக்கும் வாய்ப்பும் கடமையும் அவிதொசவுக்கு உள்ளது.
                                                                                                                              

அய்சா, ஆர்ஒய்ஏ தோழர்களும் அமைதியிழந்த அமைச்சரும்

சட்டமன்றத்தை முற்றுகையிட்ட அய்சா - ஆர்ஒய்ஏ தோழர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது. அரசாணை எண் 92அய் அமல்படுத்தக்கோரி 16.08.2013 அன்று சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் சிறைக்குச் செல்ல நேரும் என்ற தயார் நிலையிலேயே இருந்தனர். அய்சா, ஆர்ஒய்ஏ தோழர்கள், பாரிமுனை பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். அதை ஏற்க மறுத்த தோழர்கள் தலைமை செயலகம் செல்லும் பேருந்தில் ஏறினர். தோழர்கள், பேருந்தில் இருந்து இறங்கி, சட்டமன்றம் நோக்கி கொடி, பேனர், வாசக அட்டைகளை ஏந்தி காவல் துறையினரின் தடுப்பை மீறி சட்டமன்றத்தில் நுழைய முயன்றனர். காவல்துறையினர், தோழர்களை பிடித்துத் தள்ளியபோது, சாலையில் அமர்ந்து முழக்கம் எழுப்பி போராட்டம் நடத்தினர். தோழர்களை காவல் துறையினர் பிடித்து இழுத்து, லத்தியால் அடித்து, சாலையிலிருந்து தரதரவென இழுத்து காவல்துறை வாகனத்தில் தள்ளினர். போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறை வாகனத்தின் கண்ணாடி உடைந்தது. பெண் தோழர்களை பெண் காவல்துறையினர் பிடித்து இழுத்து காவல்துறை வாகனத்தில் ஏற்றினர்.


பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகத்தினர், தலைமை செயலகத்தின் முன்பு மாணவர்கள் மீது தாக்குதல் என்றும், அய்சா, ஆர்ஒய்ஏ அமைப்பினர் அரசாணை 92யை அமல்படுத்தக் கோரி காவல் துறையினருடன் மோதலில் ஈடுபட்டதாகவும், தலைமை செயலகம் சுற்றியுள்ள பகுதிகளில் கலவரம் நீடிப்பதாகவும், பதற்றம் நிலவுவதாகவும் செய்தி வெளியிட்டனர். தோழர்களை கைது செய்த காவல் துறையினர், எவ்வித நிபந்தனையும் இன்றி மாலையில் அவர்களை விடுவித்தனர். தோழர்களை விடுவிக்கும் போது, காவல் துறை உதவி ஆணையர், அய்சா, ஆர்ஒய்ஏ தரப்பினரிடம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் 19.08.2013 அன்று பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.


இந்த போராட்டத்திற்கு புரட்சிகர இளைஞர் கழக தேசிய செயலாளர் தோழர் பாரதி தலைமை தாங்கினார். தோழர்கள் சுரேஷ், ஜெனிபர், சீதா, உமா, ராஜலஷ்மி, சுஜாதா, சங்கர், தனவேல், சத்தியகிருஷ்ணன், அருண், ராமநாதன், அதியமான், ராஜகுரு, பாண்டிராஜன், அன்பு, கோபி, செந்தில், ரமேஷ்வர் பிரசாத், திபங்கர், தனசேகர், சந்திரகுமார், பிரதீப், கண்ணன், உசேன் மற்றும் மாலெ கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் மோகன் மற்றும் மாலெ கட்சித் தோழர்கள் ஸ்ரீதர், ஜீவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதில் தோழர் ராமநாதனுக்கு தலையில் அடிபட்டு மூன்று தையல் போடப் பட்டது. தோழர்கள் ராஜகுரு, அதியமான் ஆகியோருக்கு கைகளில் இரத்தகாயம் ஏற்பட்டது.


19.08.2013 அன்று தோழர்கள் பாரதி, விஜய், சீதா, ஜெனிபர், அதியமான் ஆகியோர் கொண்ட அய்சா, ஆர்ஒய்ஏ குழு கோரிக்கைப் பட்டியலுடன் அமைச்சரை சந்தித்தது. அமைச்சரிடத்தில் 20011-2012, 2012-2013, 2013-2014 கல்வி ஆண்டுகளில் சுயநிதி கல்லூரிகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்திய ஆதிதிராவிட, பழங்குடியின பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு தாமதம் இன்றி கல்விக் கட்டணம் கிடைக்க ஏற்பாடு செய்யவும், அரசாணை 92படி, அரசாணையை அமல்படுத்த குழு அமைத்திடவும், அனைத்து சுயநிதி கல்லூரிகளின் அறிவிப்பு பலகையில் அரசாணையை ஒட்டி வைக்க நடவடிக்கை எடுக்கவும், அரசாணையை அமல்படுத்தாத அதிகாரிகள் மற்றும் அரசாணையை ஏற்காத சுயநிதி கல்லூரிகள் மீது சட்டப்படி, கடுமையான நடவடிக்கை எடுக்கவும், 24.05.2013 அன்று அரசாணை 92க்காக ஒதுக்கப்பட்ட ரூ.482,46,67,000 மாணவர்களுக்குச் சென்று சேரவில்லையென்றும், இத்தொகை மாணவரிடத்தில் சென்று சேர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும், சட்டத்துறை, வேளாண்துறை மற்றும் பல துறைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படாத சூழலில் உடனடியாக கட்டணம் நிர்ணயிக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தனர்.


மாணவர், இளைஞர் கோரிக்கைகளை கேட்ட அமைச்சர் சுப்பிரமணியன், அவர்கள் சொல்வது 10 சதம் உண்மை என்றும், 90 சதம் மிகைப்படுத்தி சொல்வதாகவும் தெரிவித்தார். கடந்த இரண்டு வருடங்களில் எத்தனை மாணவர்களுக்கு எவ்வளவு தொகை அளிக்க வேண்டும் என்ற தகவல்கள் பெறுவதில் சிக்கல்கள் உள்ளதாகவும், கடந்த இரண்டு வருடங்கள் படித்து முடித்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் சேர்ந்ததா என்று பார்ப்பதை விட இந்த வருடம் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் சென்று சேருவதை உறுதிப்படுத்த தமிழக அரசு முயற்சித்து வருவதாகவும், ஒவ்வொரு வருடமும் மாணவர்களுக்கு சென்று சேர வேண்டிய கல்விக் கட்டணத் தொகையின் அளவு மாறுவதால் (உதாரணத்திற்கு சென்ற வருடம் ரூ.300 கோடி தேவைப்பட்டதாகவும், இந்த வருடம் ரூ.600 கோடி தேவைப் படுவதாகவும்) அரசாணையை அமல்படுத்த முடியவில்லையென்றும், தன்னால் இதையும் தாண்டி வேலை செய்ய முடியாதென்றும் கூறி மேசை மீது ஓங்கி அடித்தார். தான் 26 ஆண்டுகள் அரசு ஊழியராக பணிபுரிந்ததால் மட்டுமே இந்த பதவியில் தொடர முடிகிறது என்றும், தன்னைப் போல் வேறு யாராலும் வேலை செய்ய முடியாதென்றும், தனக்கு முன்பு பதவியில் இருந்தவர்கள் அச்சத்துடன் பணிபுரிந்ததாகவும் கூறினார். மாணவர், இளைஞர் நடத்திய போராட்டம் தனக்கு மிகுந்த மன வேதனையை உருவாக்கியுள்ளதாகவும், துணை இயக்குநர், இந்தப் போராட்டத்திற்கு பிறகு அவரது பதவியில் இருந்து ராஜினாமா செய்யப் போவதாக அமைச்சரிடம் தெரிவித்ததாகவும் கூறினார். நீங்கள் “முதல்வர்” ஆனால் கூட அரசாணையை முழுமையாக அமல்படுத்த முடியாது என்றார். தோழர் சீதா பேச முற்பட்ட போது, “நீ எனக்கு மகள் போல், நான் உனக்கு தந்தை போல்” என்று கூறி அவரைப் பேச விடாமல் தடுத்தார்.


கடலூரில் ஆதிதிராவிட மாணவர் விடுதியில் படித்து முன்னேறுவதை விட, மாடு மேய்த்து முன்னேறலாம் என்று மாணவர்கள் எழுதி வைத்துள்ளதாகவும், மாணவர் விடுதிகளை அசுத்தமாக மாணவர்கள் வைத்திருப்பதாகவும், நாய் வாலை தான் நிமிர்த்த முயற்சிப்பதாகவும், அது தன்னால் முடியவில்லை என்றும், துணை இயக்குநர் பதவிக்கு வருபவர்கள் ஆதிதிராவிடர் பிரிவிலிருந்து பதவிக்கு வந்திருப்பதாகவும், அவர்களுக்கு வேலையைப் பற்றி தெரிவதில்லை என்றும், தானும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்றும், வறுமையான குடும்பத்தில் பிறந்து, அமைச்சர் பதவி வரை முன்னேறி இருப்பதாகவும், தன் நிலைமையை மாணவர்கள் சுலபமாக புரிந்து கொள்ள முடியும் என்றும் சொன்னார். அமைச்சர், அரசாணை 92அய் அமல்படுத்த முடியவில்லை என்றும், தாழ்த்தப்பட்ட மாணவர் நிலைமையை நாய் வாலோடு ஒப்பிட்டு பேசியும், தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து உயர் பதவிக்கு வந்தவர்க்கு ஒன்றுமே தெரியாது என்றும், ஆதி திராவிடர் மாணவர் தவறான வழியில் செயல்படுவதாகவும், தெரிவித்தார். அரசாணையை அமல்படுத்த கண்காணிப்பு குழு ஏன் அமைக்கப்படவில்லை என்று கேட்கப்பட்டபோது, அமைச்சர் அதற்கு பதிலளிக்காமல், அமைச்சரின் உதவியாளர், மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட ஆதி திராவிடர் அதிகாரிகள் மூலம் கல்வி கட்டணம் அளிப்பதாக தெரிவித்தார். கடந்த இரண்டு வருடங்கள் கல்விக் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் திரும்பக் கிடைக்க தமிழக அரசு என்ன ஏற்பாடு செய்துள்ளது என்ற தோழர்களின் கேள்விக்கு கடந்த இரண்டு வருடங்கள் படித்த மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் தாமதமாகத்தான் கிடைக்கும் என்றார்.


மாணவர்கள் கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன்வைப்பது தங்களின் உரிமை என்றும், அதற்கு பதிலளிப்பது தமிழக அரசின் கடமை என்றும் அரசாணையை அமல்படுத்தாத அதிகாரிகள் மீதும், அரசாணையை ஏற்காத சுயநிதி கல்லூரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதெனவும் அய்சா, ஆர்ஒய்ஏ தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

அமைச்சர், கோபத்துடன், குரலை உயர்த்தியும், மேசையை ஓங்கி தட்டியும், அவர் எழுதிய கடிதங்களை காட்டியும் தன்னுடைய வாதங்களை முன்வைத்தார். தோழர்கள் அமைச்சரின் விளக்கங்களை ஏற்காமல், தமிழக அரசின் செயல்பாடின்மையை தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கினர்.  ஆதிதிராவிடர், பழங்குடியினர் அமைச்சர், அரசாணை 92அய் முழுமையாக அமல்படுத்த எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை, மாறாக, தமிழக அரசு அரசாணை 92 அமல்படுத்தப்படாத நிலையை நியாயப்படுத்தவே முயன்றார்.  - சுஜாதா

நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்கலாமா?

நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார். ஜெயலலிதாவும் இதே விசயத்தை வலியுறுத்தி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி விட்டார். ஆகஸ்டு 12 அன்று மத்திய பழங்கு டியினர் நலத்துறை அமைச்சர் கிஷோர் சந்திர தியேவுக்கு கருணாநிதி எழுதிய கடிதத்தின் சாரம் பின்வருமாறு:

‘தமிழகத்தில் நரிக்குறவர்கள் என்ற ஓர் இனம் உள்ளது... வாழ்நிலை பரிதாபகரமானதாக உள்ளது... காலம் காலமாக நாடோடிகளாக வாழ்ந்து வருகிறார்கள். வாழ்வதற்கென்று நிலையான இடம் எதுவும் கிடையாது. அவ்வப்போது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். சமூக ரீதியில், கல்வி ரீதியில் பின்தங்கியவர்கள்... நம்மால் இரக்கமுடன் கவனிக்கப்பட வேண்டியவர்கள்... சரித்திர ரீதியாகவும் அவர்கள் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்கள்... அவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்... திமுக அரசு நரிக்குறவர் நலனுக்காக 1970களில் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுத்து, அங்கேயே அவர்களை குடியமர்த்த வழிவகை செய்தது.. 2008 - 2009ல் தனியாக நல வாரியம்  உருவாக்கி, அவர்களுக்கு பல்வேறு வகைகளில் நிதி உதவி செய்தது...’. சிபிஎம் கட்சியும் நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சரும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தால், மக்களவையில் மசோதாவை தாக்கல் செய்வோம் என பதில் அளித்துள்ளார்.


பழங்குடியினர் வரையறைகள்

இந்தியாவில், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதுதான் பழங்குடி என அடையாளப்படுத்துவது துவங்கியது. 1901 கணக்கெடுப்பின்போது ஆவி வழி பாடு கொண்டவர்கள் பழங்குடி என பதிவு செய்யப்பட்டனர். 1921 கணக்கெடுப்பில் மலை வாசிகளும் காட்டுவாசிகளும் பழங்குடிகள் என வரையறுக்கப்பட்டனர். 1931 கணக்கெடுப்பில் ‘தொல்பழங்குடிகள்’ எனப்பட்டனர். காலனிய அதிகாரிகள் ட்ரைப், அபாரிஜின்ஸ் என்ற சொற்களையும், ‘ஆதிவாசி’ என்ற சொல்லை இந்தியாவைச் சேர்ந்த அறிஞர்கள், தலைவர்களும் பயன்படுத்தினர். அரசியல் அமைப்புச் சட்ட உருவாக்கத்தில் பெரும் பங்காற்றிய அம்பேத்கர் அட்டவணைப் பழங்குடி (ஷெட்யூல்டு ட்ரைப்) என அடையாளப்படுத்தினார். பின்வரும் அடிப்படைகள் கொண்டவர்கள் பழங்குடியினர் என வரையறுக்கப்படுகிறார்கள்: 1. தொல்குடி எச்சங்களின் அடையாளங்கள் 2. தனிச்சிறப்புமிக்க பண்பாடு 3. பூகோளரீதியில் தனிமைப்பட்டிருத்தல் 4. பெரிய அளவில் சமூகத்துடன் தொடர்பு இல்லாமல் ஒதுங்கியிருத்தல் 5. பின்தங்கிய நிலை.

தமிழகத்திலுள்ள பழங்குடிகளை அவர்களது ‘தொன்மையை’ அடிப்படையாகக் கொண்டு பின்வருமாறு வகைப்படுத்தலாம். 1. தொல்குடி: வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே வாழ்பவர்கள், தனித்துவமான இனக் கூறுகளை கொண்டிருப்பவர்கள். 2. முதுகுடி: நீண்ட நெடுங்காலமாக தங்களது (மலை, மலை சார்ந்த/வனம் சார்ந்த) பகுதிகளில் மண்ணின் மைந்தர்களாக வாழ்பவர்கள் 3. பழங்குடி: பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், பல்வேறு காரணிகளால் சமவெளிப் பகுதிகளிலிருந்து மலைப்பகுதிகளுக்குச் சென்று குடியேறி வாழ்பவர்கள்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர், வட மேற்கில், குஜராத் பகுதியில் இருந்து, அரசியல் காரணங்களால், இடம் பெயர்ந்து வந்த ஒரு மக்கள் பிரிவு நரிக்குறவர்கள் என அழைக்கப் படுகின்றனர். மராத்தி மொழியின் சாயலுடைய தோமாரி மொழியின் கிளையான வக்ரி போலி என்ற மொழியைப் பேசும் இம்மக்கள் நிலையாக தங்கி வாழும் வாழ்க்கையை மேற்கொள் வதில்லை. துவக்க காலத்தில் நரிகளை வேட்டையாடுவது, பிடிப்பது போன்றவற்றில் ஈடு பட்டதால், நரிக்குறவர்கள் என்றும், பழைய வகையிலான துப்பாக்கிகளை வைத்து பறவை களை வேட்டையாடியதால் குருவிக்காரர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். தற்போது பல வகை மணியிலான அணிகலன்களை விற்பவர்களாக உள்ளனர். நரிக்குறவர்களில் பெரும் பான்மையோர் நாடோடி வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர். இருப்பிட சான்றிதழ்களோ அல்லது முறையான அதிகாரப்பூர்வமான ஆவணங்களோ இல்லாதவர்களாக உள்ளனர். மிகவும் பிற்பட்டோர் (எம்பிசி) பட்டியலில் உள்ளனர். இவர்களின் திட்டவட்டமான மக்கள் தொகை எண்ணிக்கையும் தெரியவில்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில், 2005ல், தமிழக அரசு, நரிக்குறவர்களுக்கு பழங்குடி அந்தஸ்து கோரி பரிந்துரை செய்தது. மத்திய அரசு நரிக்குறவர் சமுதாயத்தின் பழங்குடி அடையாளங்களை உறுதிப்படுத்துமாறு திருப்பி அனுப்பி விட்டது. இவர்கள் சந்திக்கும் மாபெரும் துன்பங்களான ஏழ்மை, நோய்கள், எழுத்தறிவு இன்மை, நிலையாகத் தங்கி வாழும் வசதியின்மை ஆகியவற்றைப் போக்க எந்த அரசாங்கமும் திட்டமிடவில்லை. நரிக்குறவர்கள் ஏழைகள், நாடோடிகள், அக்கறை செலுத்தப்பட வேண்டியவர்கள் என்பதைத் தவிர, மானிடவியல் அளவுகோல்கள் படியும் அரசாங்க (பழங்குடி அமைச்சகம்) வரையறைகளின்படியும் பழங்குடியினர் எனக் கருத முடியாது. மாறாக, நாடோடித் தன்மை வாய்ந்த, இருப்பிட முகவரி தர இயலாத இவர்களுக்குத் தரப்படும் பழங்குடி (எஸ்டி) அந்தஸ்து, பழங்குடியினர் அல்லாதவர்கள் பழங்குடியினர் ஆகும் மோசடிக்கு நியாயம் வழங்கும்.


அட்டவணைப் பழங்குடியினரில் (எஸ்டி)
நிரம்பி வழியும் போலிகள்

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பில், தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியினர் எண்ணிக்கை 6,51,321. இவர்களில், பழங்குடியினர் என்ற போர்வையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் போலிச் சான்றிதழ்கள் பெற்றுள்ள பிற சமூகத்தினர். 1961 கணக்கெடுப்பின்போது பழங்குடியினர் மக்கள் தொகை 2,51,991. இது தமிழக மக்கள் தொகையில் 0.75% இருந்தது. 1971 கணக்கெடுப்பில் பழங்குடியினர் எண்ணிக்கை 3,11,515. இது 1981ல் 5,20,226 ஆக உயர்ந்துவிட்டது. அதாவது 1971 - 1981 பத்தாண்டுகளில் மட்டும் 67% உயர்ந்துவிட்டது.

பழங்குடியினர் மக்கள் தொகை 1981 - 1991க்கு இடையில் 10%மும், 1991 - 2001க்கு இடையில் 13% மட்டுமே உயர்ந்துள்ளது என்ற விவரங்களைப் பார்த்தால் போலிகள் நுழைவை அறிந்து கொள்ள முடியும். தொல் பழங்குடியினர் என்றழைக்கப்படுகிற, மக்கள் தொகையில் அதிகரிக்காத அல்லது அருகி வருவதாகக் கருதப்படுகிற, 6 தொல்பழங்குடியினரில் காட்டுநாய்க்கர் பிரிவில் சுமார் 33000, கொண்டாரெட்டி பிரிவில் 19,000, குருமன்ஸ் பிரிவில் 20,000, இருளர் பிரிவில் 30,000 பேர் என போலிகள் இணைந்துள்ளனர். நீலகிரி மலைப் பகுதிக்கு வெளியே தமிழகம் முழுவதும் பரவலாக, பல ஆண்டு காலம் போலிகள் வந்து குவிந்துவிட்டனர். காட்டுநாய்க்கன் பிரிவில் பிற்பட்டோர் பட்டியலில் உள்ள நாய்க்கர், தொழுவ நாய்க்கர், வெத்திலைக்கார நாய்க்கர், உரிக்கார நாய்க்கர் பிரிவுகளிலிருந்தும் மிகவும் பிற்பட்ட தொட்டிய நாய்க்கர் பிரிவிலிருந்தும் உள்ளே நுழைந்தனர். முற்பட்ட வகுப்பினரான ரெட்டியிலிருந்து கொண்டாரெட்டிக்கும் பிற்பட்ட வகுப்பினரான 27 வகையான குறவரிலிருந்து மலைக் குறவனுக்கும் மிகவும் பிற்பட்ட வகுப்பினரான குரும்ப கவுண்டரிலிருந்து குறுமன்ஸ் பிரிவுக்கும், பிற்பட்ட வகுப்பு ஊராளி கவுண்டர்களிலிருந்து ஊராளி பழங்குடிக்குள்ளும் போலிகள் நுழைந்து விட்டனர். 10,000க்கும் மேற்பட்ட பழங்குடி போலிச் சான்றிதழ் வழக் குகள் நீதிமன்றங்களில் உள்ளன. அட்டவணைப் பழங்குடியினரில் சொல்லப்படுகிற எல்லை வரம்பு (ஏரியா ரெஸ்ட்ரிக்சன்) அரசு அதிகாரிகளால் கடைபிடிக்கப்படுவதில்லை. அருகி வருவ தாக பட்டியிலிடப்பட்ட சில தொல்பழங்குடியினர் மக்கள் தொகையில் 800% வரை மக்கள் தொகை  உயர்ந்தபோதுதான் ‘போலிகள்’ பற்றிய விவரங்கள் வெளிப்படையாகின. உண்மை யான தமிழகப் பழங்குடியினர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை முறையாகப் பெற முடிய வில்லை. தமிழகத்தில் உள்ள 1% (பழங்குடியினர்) இட ஒதுக்கீட்டையும் போலிகளே 90% அபகரித்து உள்ளனர். பிரிட்டிஷார் ஆட்சியில் பழங்குடியினருக்கு எதிரான நில உரிமைச் சட் டங்களாலும் மலைப் பகுதிகளில் காட்டெரிப்பு விவசாய முறை தடை செய்யப்பட்டதாலும், காப்பி எஸ்டேட்டுகள் போன்றவற்றை அமைக்கவும் வெளியேற்றப்பட்ட, மலையாளிப் பழங்குடியினர், நிலங்களைப் பெரிதும் இழந்தனர். போலிச் சான்றிதழ்களால் வேலை வாய்ப்புகளையும் பெற முடியாமல் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர்.

இந்தப் பின்னணியிலிருந்துதான், நரிக்குறவர் சமூகத்தை பழங்குடிப் பட்டியலில் இணைக்க வேண்டுமென்ற கோரிக்கையை பரிசீலிக்க வேண்டியுள்ளது. பழங்குடியினரை வரையறுப்பதற்கான முறையான அறிவியல் பூர்வமான பார்வை மானிடவியல் பார்வையே. ஆனால், பல சந்தர்ப்பங்களில், பழங்குடிகளாக அங்கீகாரம் பெறுவதில், அச்சமூகங்களின் மக் கள் தொகையும், வாக்கு வங்கியும், அரசியல் கட்சித் தலைவர்கள் மூலம் ஏற்படும் அழுத்தங் களும் காரணமாகி விடுகின்றன. மானிடவியல் காரணிகள்/அளவுகோல்கள், அரசாங்கத்தின் வரையறைகள் புறக்கணிக்கப்படுகின்றன.


அரசியலமைப்புச் சட்டமும்
அரசியல் தலைவர்களின் கூப்பாடும்

உலகமய, தனியார்மய, தாராளமய கால கட்டத்தில், அரசு வேலைவாய்ப்புகள் குறைந்து கொண்டே போகின்றன. தனியார் நிறுவனங்களில் வேலைகள் வழங்குவதில் இட ஒதுக்கீடு கிடையாது. கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம், ஒடுக்கப்பட்ட பிரிவினர் (எஸ்சி & எஸ்டி) வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்றுதான் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய தலைவர்கள் நம்பினர். வரம்புக்குட்பட்ட அந்த வாய்ப்பையும் தட்டிப் பறிக்க, அரசியலை பிழைப்பாகக் கொண்ட தலைவர்கள் கூப்பாடுகள் போடுகின்றனர். அறிக்கைகளை வெளியிட்டுத் தள்ளுகின்றனர். ஜெயலலிதாவின், கருணாநிதியின் நரிக்குறவர் கவலை, சிபிஎம் தலைவர்களின் குரும்பர் மற்றும் குறவர் அரசியல் ஆகியவை சமூக வரலாற்றை வசதியாக மறந்துவிட்டு அரசியலமைப்புச் சட்ட விதிமுறைகளை மனதில் கொள்ளாமல் எழுப்பப்படுகின்றன.

பழங்குடியினர் யாவர் என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதி 342 பின் வருமாறு விளக்குகிறது. குடியரசு தலைவர், மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் ஆளுநரை கலந்தாலோசித்த பின், பழங்குடிகள் அல்லது பழங்குடி சமூகங்கள் அல்லது பழங்குடிகள்/பழங்குடிச் சமூகங்களின் சில பிரிவினர்களை அல்லது குழுக்களை ஒரு பொது அறிவிக்கையாக, (அரசியலமைப்புச் சட்ட பழங்குடியினர் உத்தரவாக) அறிவிக்கலாம். அவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களே இந்த அரசியலமைப்புச் சட்ட அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் அட்டவணைப் பழங்குடியினராக (செட்யூல்டு ட்ரைப்ஸ்) கருதப்படுவர். இந்தப் பட்டியலில் ஒருவரை இணைப்பதையோ அல்லது நீக்குவதையோ, நாடாளுமன்றத்தில் இயற்றும் ஒரு சட்டத்தின் மூலம் செய்யலாம். ஆனால், ஏற்கனவே குடியரசுத் தலைவர் பழங்குடி என பொது அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள ஒரு பிரிவை வேறொரு அறிவிப்பின் மூலம் அவரே கூட நீக்க முடியாது.

நாடாளுமன்றத்தை தவிர எந்தவோர் அதிகார அமைப்பும், ஏற்கனவே வெளியிட்டுள்ள உத்தரவை (பழங்குடியினர் பட்டியலை) மாற்றியமைக்க முடியாது. மாநில அரசாங்கங்களோ, சட்டரீதியான அமைப்பாகக் கருதி நீதி மன்றங்களோ, தீர்ப்பாணையங்களோ, எந்தவொரு அதிகார அமைப்போ இவ்விவகாரத்தில் விசாரணை நடத்தவோ, உத்தரவிடவோ முடியாது.

எந்தவொரு பழங்குடியை அல்லது சாதியை இணைக்கவோ, நீக்கவோ கோர முடியாது. கூர்நோக்கு குழு உறுப்பினர்களோ, பழங்குடி வளர்ச்சி/ஆராய்ச்சி அதிகாரிகளோ, ஒரு பழங்குடிப் பெயரை மற்றொன்றாக சித்தரிக்க முயற்சிப்பதோ, எல்லை வரம்புகளை (ஏரியா ரெஸ்ட்ரிக்சன்) மாற்றக் கோருவதோ தவறானது. சட்டவிரோதமானது. பரிசீலனைக்கே உட்படுத்தக் கூடாதது ஆகும்.


அரசியலமைப்புச் சட்டம் பற்றிய சட்ட அறிவு இல்லாதவர்கள் என நாம் அரசியல் கட்சித் தலைவர்களை கருதிவிட முடியாது. சட்ட வல்லுநர்கள் மூலம் தங்கள் கோரிக்கையின் தராதரத்தை அறிந்தே இருக்கிறார்கள். எனினும் அரசியல் நோக்கங்களுக்காக அவ்வப்போது இத்தகைய கோரிக்கைகளை எழுப்புகிறார்கள். இவர்களால் ஊக்கம் பெறப்பட்டே போலிகள் பழங்குடிப் பட்டியலில் நுழைகிறார்கள்.

 பழங்குடி சங்கங்கள் அமைத்துக் கொள்கிறார்கள். கூர்நோக்கு குழு உறுப்பினர்களும், பழங்குடி ஆராய்ச்சி மய்ய அதிகாரிகளும் விலை போகின்றனர். ஆட்சியாளர்களின் விருப்பங்களுக்கேற்ப ஆய்வுகளை எழுதுகின்றனர். அறிக் கைகளை அனுப்புகின்றனர். வாக்கு வங்கிகளை இலக்காக வைத்து திமுக அதிமுக, சிபிஎம் தலைவர்கள் அரசியல் நடத்துகிறார்கள். பழங்குடி மக்கள் வாழ்க்கையில் விளையாடுகிறோம் என்ற உணர்வே இன்றி, பொழுது போக்குபோல அறிக்கைகள் வெளியிடுகிறார்கள். விழிப்புணர்வு பெற்று வரும் பழங்குடிகள் இவர்களை நிச்சயம் முறியடிப்பார்கள். பழங்குடிகள் அரசியல் ரீதியாக வலிமையானவர்கள் என்பதை நிரூபிப்பார்கள்.

வாய்வீச்சும் யதார்த்தமும்

வெள்ளையர் வெளியேறி சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. வெங்காயம், டாலர், பெட்ரோல் மூன்றில் எது முதலில் நூறு என்ற எண்ணை எட்டும் எனக் காண வேண்டி உள்ளது. குடியரசுத் தலைவர் ஆகஸ்ட் 15, 2013 உரையில் நாடு சந்திக்கும் சில பிரச்சனைகளைப் பற்றிக் கோடிட்டுக் காட்டினாலும், தீர்வுகள் பற்றிப் பேசாமல், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்திரமான அரசாங்கம் வர வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.


பிரணாப் முகர்ஜியின் விருப்பத்தை வரவேற்றுள்ள நரேந்திர மோடி, தம் தலைமையில் அப்படி ஒரு ஸ்திரமான அரசாங்கம் வரும் என நம்பிக்கை ஊட்டப் பார்க்கிறார். நரேந்திர மோடி பூச்சாண்டி காட்டியும், தகவல் அறியும் உரிமை, வேலை உறுதி சட்டம், கல்வி பெறும் உரிமை, உணவு பெறும் உரிமைச் சட்டங்கள் காட்டியும், கரை சேர முடியுமா எனக் காங்கிரஸ் பார்க்கிறது.


வளர்ச்சி, அனைவரையும் உள்ளே கொண்டு வரும் வாய் வீச்சுக்கள் எல்லாம் தாண்டி உண்மையில் இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை ஆகஸ்ட் 15, 2013 அன்று பீகாரிலும் குஜராத்திலும் நடந்த இரு சம்பவங்கள் புலப்படுத்துகின்றன.


யதார்த்தம் 1

நள்ளிரவில் கிடைத்து விடியாத சுதந்திரத்தை, பீகார் மாநிலம் ரோத்தாஸ் மாவட்டம் கில்சாகர் ஒன்றியம் பத்தி கிராமத்து தலித்துகள், ஆகஸ்ட் 15, 2013 அன்று அனுபவத்தில் உணர்ந்தனர். நாடெங்கும் சுதந்திர தினக் கொண்டாட்டங்களும் தயாரிப்புக்களும் மும்முரமாக நடந்து கொண்டிருந்தபோது, அந்த கிராமத்து தலித்துகள், ரவிதாஸ் கோவிலில், முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவுப்படி, ஒன்றிய வளர்ச்சி அலுவலர் காலை 10 மணிக்கு கொடி ஏற்ற வருவார் எனக் காத்திருந்தனர். ஆனால் 9 மணி அளவிலேயே, நிலப்பிரபுக்கள், மேல்சாதி ஆதிக்க சக்திகள் தலைமையிலான குற்றக் கும்பல், தலித் கோவில் கண்ணை உறுத்துவதால், அதனைத் தரை மட்டமாக்கி, அந்த இடத்தைக் கைப்பற்ற வந்தது. நியாயம் கேட்ட தலித் மக்களை ஆயுதங்களால் தாக்கியது. துப்பாக்கியால் சுட்டது. விலாஸ் ராம் மரணமடைந்தார். மிகவும் வஞ்சகமாக 1857 முதல் சுதந்திரப் போரில் மடிந்த ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த நிஹாந்த் சிங் என்பவர் சிலையை, தலித் மக்கள் கோவிலை இடிக்கும் இடத்தில் நிறுவப் போவதாகச் சொல்கிறார்கள். இந்தக் கிராமம் நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமாரின் தொகுதியில் உள்ளது.


யதார்த்தம் 2

தொழிலாளர்கள் உரிமை கோரினால், அவர்கள் தொழிற்சாலைக்கு வெளியேயும் உள்ளேயும் சிறையில்தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் மாருதியை, நரவேட்டை நரேந்திர மோடி குஜராத்துக்கு வந்து அருள் புரிய அழைத்தார். மோடி, சிறப்பு முதலீட்டு பிராந்தியங்கள் அமைத்துள்ளார். டாடாவின் நானோ தொழிற்சாலை சிங்கூர் மக்களால் மேற்கு வங்கத்திலிருந்து விரட்டப்பட்டபோது, குஜராத்தில் சிங்கூர் நடக்காது என மோடி டாடாவை அழைத்துக் கொண்டார். மண்டல் - பெக்கராஜி சிறப்பு முதலீட்டு மண்டலத்தில் மாருதிக்கு நிலம் வழங்க மோடி திட்டமிட்டார். வருவாய் தரிசு நிலம் எனப் பயிர் நிலத்தைக் காட்டப் பார்த்தார்கள். ஆகஸ்ட் 15 அன்று ஹன்சால்பூரில் கூடிய விவசாயிகள் 5000 பேர் மாருதியே திரும்பிப் போ, சிறப்பு முதலீட்டு மண்டலம் வேண்டவே வேண்டாம் என முழங்கினார்கள். விடாப்பிடியான மக்கள் எதிர்ப்பால், 44 கிராமங்களில் 36 கிராமங்களில் நிலம் எடுக்க மாட்டோம் என இப்போது குஜராத் அரசாங்கம் பணிந்துள்ளது. மோடியின் செங்கோட்டை கனவுகள், குஜராத் மண்ணிலேயே சவாலுக்குள்ளாவது, நல்ல செய்திதான்.

சீனப் புரட்சி மற்றும் அது தரும் பாடங்கள் பற்றிய ஒரு சுருக்கமான சித்திரம்

புரட்சிக்கு முந்தைய இயங்காற்றல் பற்றி ஒரு பார்வை

(சென்ற இதழில் புரட்சிக்கு முந்தைய இயங்காற்றல் பற்றி ஒரு பார்வை
என்ற தலைப்பில் வெளியான பகுதியின் தொடர்ச்சி)

டாக்டர்.சன் யாட் சென்

டாக்டர்.சன் யாட் சென் சீனாவின் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் ஒரு தனிச் சிறப்பான முன்னோடி. வர்க்க இயல்பைப் பொறுத்தவரை, டாக்டர்.சன் யாட் சென் சீன தேசிய முதலாளித்துவத்தின் ஒரு வகைமாதிரி பிரதிநிதி. அந்நிய மூலதனம் மற்றும் ஏகாதி பத்திய சக்திகளின் தலையீடு என்ற வரையறைக்குள் சீனாவில் முதலாளித்துவ வளர்ச்சி என்ற பின்னணியில், தேசிய முதலாளித்துவத்தின் வளர்ச்சி இயக்கப்போக்கு, சுமுகமானதாக இல்லை. அது மெதுவாக வளர்ந்தது. ஒரு வரலாற்று பொருளில் தேசிய முதலாளித்துவம் ஒரு பலவீனமான வர்க்கமாக இருந்தது. டாக்டர் சன் யாட்சென் இந்த குறைபாடுகளில், பலவீனத்தில் இருந்து தப்பிக்க முடியவில்லை. ஆனால், ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது, நிலப் பிரபுத்துவத்தை ஒழித்துக் கட்டுவது ஆகியவற்றில் அவர் உறுதியானவராக இருந்தார். நடைமுறையின் போக்கில், குறைபாடுகளை, பலவீனங்களை களைய, சரிசெய்ய அறிந்து கொண்டார்.

டாக்டர் சன் யாட் சென்னின் பாத்திரமும் நடைமுறையும் வளர்ந்தது பற்றி

    1894ல் டாக்டர் சன் யாட்சென் ஹோனு லுலுவில் மக்கள் மத்தியில் இருந்த ரகசிய குழுக்களின் ஆதரவுடன் ஹிசிங் சுங் ஹய் (சீன புத்துயிர்ப்புக்கான சமூகம்) என்ற சிறிய புரட்சிகர அமைப்பை நிறுவினார். 1895ல் சீன - ஜப்பானியப் போரில் சிங் அரசாங்கம் தோல்வியுற்ற பிறகு, குவாங்டேங் மாகாணத் தில் 1895ல் கேன்டனிலும் 1900ல் ஹ÷யிசோ விலும், சிங் அரசாங்கத்துக்கு எதிராக இரண்டு ஆயுதந்தாங்கிய எழுச்சிகளை நடத்தினார்.

    அதே நேரத்தில், முதலாளித்துவத்தார், குட்டி முதலாளித்துவத்தார் மற்றும் நிலப்பிரபு கோமான்களின் ஒரு பிரிவினர் ஆகியோர் கொண்ட அய்க்கிய முன்னணியான துங் மேங் ஹியுயி அல்லது சீன புரட்சிகர முன்னணி, ஹிசுன் சங் ஹய் மற்றும் சீன புத்துயிர்ப்புக் கான குழு, அந்நிய நுகத்தடியை நொறுக்கும் குழு என்ற இரண்டு குழுக்களை இணைத்து உருவாக்கப்பட்டது. அது முதலாளித்துவ புரட்சிக்கான ஒரு திட்டத்தை முன்வைத்தது. த்ராத்தர்களை (மன்சு இனத்தவர்) வெளியேற்றுவது, சீனாவை மீட்டெடுப்பது, குடியரசை உருவாக்குவது, நில உடைமையை சமமான தாக்குவது ஆகியவற்றை திட்டம் வலியுறுத்தியது. சீன புரட்சிகர முன்னணி காலத்தில், டாக்டர் சன்  யாட் சென், ரகசிய குழுக்களுடன் இணைந்தும் சிங் அரசாங்கத்தின் புதிய படையின் ஒரு படையுடனும் சிங் அரசாங்கத்துக்கு எதிராக பல்வேறு ஆயுதந்தாங்கிய எழுச்சிகளை கட்டமைத்தார். 1906ல், காங்சி மாகாணத்தின் பிங்ஹியாங் மற்றும் ஹ÷னான் மாகாணத்தின் லியுங் மற்றும் லினின், 1907ல் குவாங்துங் மாகாணத்தின்  ஹ÷வாங்லாங், சன்சோவ் மற்றும் சின்சோவ், குவாங்சி மாகாணத்தின் சென்னன் கீன், 1908ல் யூனன் மாகாணத்தின் ஹோகோ, 1911ல் கேன்டன் ஆகிய இடங்களில் நடந்த புரட்சிகள் குறிப்பிடத்தக்கவை. 1911ல் நடந்த வுசேங் எழுச்சி, சிங் ஆட்சியை தூக்கியெறிந்தது.

    1912ல் சீன புரட்சிகர முன்னணி குவாமின்டானாக மாற்றியமைக்கப்பட்டது. யுவான் சி காய் தலைமையிலான வடக்கு யுத்த பிரபுக்களின் ஆட்சியுடன் ஒரு சமரசம் செய்தது. 1911 புரட்சியின் இயக்கப்போக்கில் உருவான சியாங்சி, அன்வாய், குவாங்டாங் ஆகிய மாகாணங்களில் உருவான சக்திகளை ஒடுக்க 1913ல் யுவானின் படைகள், தெற்கு நோக்கி நகர்ந்தன. டாக்டர் சன் யாட்சென் ஆயுதந்தாங்கிய எதிர்ப்பைக் கட்டியமைத்தார். அதுவும் நசுக்கப்பட்டது. 1914ல், குவாமின்டாங்குடன் ஏற்பட்ட சமரசக் கொள்கையின் தவறை உணர்ந்து கொண்ட சன் யாட்சென் அப்போதைய குவாமின்டாங்கில் இருந்து பிரித்து நிறுத்திக் கொள்ள ஜப்பானின் டோக்கியோ வில் சுங் ஹ÷வா கி மிங் டேங் (சீனப் புரட்சிகரக் கட்சி) உருவாக்கினார். இந்த புதிய கட்சி, யுவான் ஷி காய்க்கு எதிரான குட்டி முதலாளித்துவத்தார் மற்றும் முதலாளித்துவத்தாரின் ஒரு பிரிவினர் கொண்ட அரசியல் அமைப்பின் கூட்டணியாகும். இந்தக் கூட்டணி மூலம் 1914ல் ஷாங்காயில் ஒரு சிறிய எழுச்சியை வழி நடத்தினார். 1915ல் யுவான் ஷி - காய் தன்னை மன்னராக அறிவித்துக் கொண்டபோது, சாய் நிகோவும் மற்றவர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். யுவான் ஷி -காய்க்கு எதிரான ஆயுதந்தாங்கிய எதிர்ப்புக்களை பரப்புவதில் முன்னகர்த்துவதில் டாக்டர் சன் யாட்சென்னும் செயலூக்கமிக்கவராக இருந்தார்.

    1917ல் சென் ஷாங்காயில் இருந்து கப்பல் படையின் தலைவராக கேன்டன் சென்றார். குவாங்துங்கை தளமாகக் கொண்டு, தெற்கு யுத்த பிரபுக்களுடன் இணைந்து, துவான் சி ஜ÷யி யுத்த பிரபுக்களுக்கு எதிராக ஒரு ராணுவ அரசாங்கத்தை நிறுவினார். 1921ல் டாக்டர் சென் வடக்கு நோக்கிய பயணத்தைத் திட்டமிட்டார். ஆனால் வடக்கு யுத்தப் பிரபுக்களுடன் சேர்ந்து கொண்டு அவருக்குக் கீழ் இருந்த சென் சியான் மிங் செய்த கலகத்தால் அவரது திட்டம் முறியடிக்கப்பட்டது.

    1923ல் டாக்டர் சென் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியுடன் குவாமின்டாங்கை புனரமைப்பு செய்வதெனவும் குவாமின்டாங் - கம்யூனிஸ்ட் ஒத்துழைப்பை உருவாக்குவ தெனவும், குவாமின்டாங்கில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களை இணைப்பது எனவும் முடிவு செய்தார். 1924ல் டாக்டர் சென் கேன்டனில் குவாமிங்டானின் முதல் தேசிய காங்கிரசை நடத்தினார்.

ரஷ்யாவுடன் கூட்டணி, கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒத்துழைப்பு, தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் உதவி என்ற மூன்று மகத்தான கொள்கைகளை முன் வைத்தார். தோழர் மாவோ, லி தாவோ - சாவோ, லியு போ - சூ, சூ சின் - பாய் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சில தோழர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட னர். அவர்களில் சிலர் குவாமின்டாங்கின் மத்திய செயற்குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    1924ல் குவாமின்டாங் புனரமைப்பு செய்யப்பட்ட பிறகு, சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சோவியத் யூனியனின் உதவியுடன்  கேன்டனுக்கு அருகில், டாக்டர் சென் வாம்போவா ராணுவ அகாதமியை நிறுவினார். 1927 வரை, குவாமின்டாங்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து அகாதமியை நடத்தின. தோழர் சூ இன் - லாய், யே சென்னிங், யுன் தய் - யிங் ஆகியோர் அகாதமியின் பொறுப்பாளர்களாக இருந்தனர். அவர்களில் சிலர் சீன கம்யூனிஸ்ட் கட்சியிலும் கம்யூனிஸ்ட் இளைஞர் அணியிலும் இருந்தனர். கட்டமைக்கப்பட்ட பயிற்சியுடனான புரட்சிக்கு முந்தைய ராணுவத்தின் புதிய வீரர்களை வடிவமைப்பதில் அகாதமி பங்காற்றியது.

    சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை மேலோங்கியதாக இருந்த, கட்சியின் செல் வாக்கில் இருந்த, புரட்சிகரப் படை வடக்கு யுத்தப் பிரபுக்களுக்கு எதிராக நடத்திய தண்டிக்கிற போரான வடக்கு நோக்கிய பயணம், கம்யூனிஸ்ட் - கோமின்டாங் ஒத்துழைப் பின் விளைபொருளே. 1926 மே - ஜ÷லை மாதங்களில் ராணுவம் குவாமின்டாங்கில் இருந்து வடக்கு நோக்கி அணிவகுத்தது. பரந்த தொழிலாளர் மற்றும் விவசாய வெகுமக்களின் ஆதரவைப் பெற்றது. 1926ன் இரண்டாவது பாதி மற்றும் 1927ன் முதல் பாதியில் யங்சே மற்றும் மஞ்சள் ஆற்றங்கரையின் பல மாகாணங்களை அது ஆக்கிரமித்து வடக்கு யுத்தப்பிரபுக்களை முறியடித்தது.

ஆனால், டாக்டர் சன் யாட்-சென்னின் மறைவுக்குப் பிறகு, புரட்சிகரப் படைக்குள் இருந்த சியாங் கே - ஷேக்கின் தலைமையில் இருந்த பிற்போக்குக் குழுவின் துரோகத்தின் விளைவால் இந்த புரட்சிகரப் போர் தோல்வியுற்றது. கம்யூனிஸ்ட் கட்சி - குவாமின்டாங் ஒத்துழைப்பு மோதலாக மாறியது. வடக்கு பயணத்தின் முக்கியமான வெற்றி வியப்புதரும் பின்னடைவாக, தோல்வியாக மாறியது.

ஆயினும் இந்தப் பின்னடைவு மாற்று வடிவில் இருந்த வரமாக இருந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கான சுதந்திரமான முன்னேற்றப் பாதையை உருவாக்கியது.

சீன சமூகத்தில் வர்க்கங்கள்.....
அடுத்த இதழில்.....

Search