COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Tuesday, October 16, 2012

மா லெ தீப்பொறி 2012 அக்டோபர் 16 - 31 தொகுதி 11 இதழ் 6

தலையங்கம்
கருப்புக்கும் பச்சைக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை
அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் முடிச்சுப் போட முடியாது என்று சொல்வார்கள். ஆனால் நமது மத்திய, மாநில ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்ற அதுபோன்ற முடிச்சுப் போட்டுப் பார்க்கிறார்கள். வரலாறு காணாத ஊழலில் ஈடுபட்டதற்காக சிறைவாசம் அனுபவித்த கனிமொழியும் ராசாவும் கல்மாடியும் முறையே மின்சாரம், உள்துறை மற்றும் வெளியுறவு துறைகளின் நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் உறுப்பினர்களாக்கப்பட்டுள்ளனர். மத்தியில் சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின்போது அமைச்சர் பதவிகள் வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக கருணாநிதி அறிவித்ததை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மன்மோகன் ஊழலை ஒழிக்க சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவருவது பற்றி பேசுகிறார். தமிழ்நாட்டில் கொடியன் குளம், பரமக்குடி என்று தலித் மக்கள் ரத்தத்தால் கறை படிந்த கரங்கள் கொண்ட ஜெயலலிதா தலித் மக்கள் மத்தியில் அருந்ததியர் இனத்தில் இருந்து ஒருவரை தமிழகத்தின் சபாநாயகர் ஆக்கியதும் சமூகநீதி வீராங்கனையாகிவிட்டார்.
சிறப்புக் கட்டுரை
பணம் மரத்தில் காய்க்கும்
காம்ரேட்
டீசல் விலையை உயர்த்தலாமா சமையல் எரிவாயு மான்யத்தை வெட்டலாமா எனக் கேள்விகள் எழுந்தபோது மன்மோகன் அடிகளார் பணம் மரத்தில் காய்க்காது என இந்திய மக்களுக்கு ஞானோபதேசம் செய்தார். கபட சந்நியாசிகள் மக்களுக்கு உபதேசம் செய்யும் போதெல்லாம், மன்னர்களின் ஆள்வோர் களின் கொள்ளைகள் தொடர வழி செய்வார்கள். சோனியா குடும்ப உறுப்பினர் ஒருவர் மரத்தில், பணம் காய்த்ததை இப்போது பார்ப்போம்.
பயணம்
கூடன்குளம் போராட்டம் ஜனநாயகத்துக்கான, உண்மைக்கான, நியாயத்துக்கான போராட்டம்
திபங்கர் பட்டாச்சார்யா
2012, செப்டம்பர் 30 அன்று, டில்லி மவலங்கர் அரங்கில், ஆழமடைந்து வரும் தேசத்தின் நெருக்கடியில் தலையீடு செய்ய இடதுசாரி மற்றும் ஜனநாயக நிகழ்ச்சிநிரல் பற்றி விவாதிக்க, டில்லி மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இடதுசாரி செயல்வீரர்கள் கூடியிருந்தனர். அவர்கள் மத்தியில் வெகுதொலைவில் இருந்து ஒருவரும் கலந்து கொண்டார். ஒரு காணொளி செய்தியில் அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் கூடன்குளம் அணுஉலையை எதிர்ப்பதற்குத் துணிந்ததால், இந்திய அரசாங்கத்தின் தாக்குதலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிற தமிழ்நாட்டின் கூடன்குளத்தில் உள்ள போராடுகிற மக்களோடு இடதுசாரிகள் நிற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாôர். கூடன்குளம் மக்களின் நியாயமான கோரிக்கைக்கும் போராட்டத்துக்கும் ஆதரவாக அக்டோபர் 1 முதல் 15 வரை நாடு தழுவிய இருவார கால இயக்கம் நடத்த கருத்தரங்கம் முடிவு செய்தது. இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, மாலெ கட்சியின் தலைவர்கள், அரசு ஒடுக்குமுறையையும் மீறி, 400 நாட்களுக்கும் மேலாக உள்ளூர் மக்கள் துணிச்சலுடன் போராட்டம் நடத்திவரும் இடிந்தகரைக்கு செல்ல முடிவு செய்தனர்.
இகக மாலெ பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா
கருத்தரங்கில் ஆற்றிய உரையில் இருந்து சில பகுதிகள்

பொருளாதார நெருக்கடி இருப்பதை ஆளும் வர்க்கங்கள் கூட இனிமேலும் மறுக்க முடியாது. ஆளும் வர்க்கங்கள், அந்த நெருக்கடியை தீர்ப்பது என்ற பெயரில், நெருக்கடியின் சுமையை சாமான்ய மக்கள் தலையில் போட, நவதாராளவாத தாக்குதலை தீவிரப்படுத்த, அந்த நெருக்கடியை வாய்ப்பாக பயன்படுத்துகின்றன. போராடுகிற, இடதுசாரி, ஜனநாயக சக்திகளும், இந்த நெருக்கடியை ஒரு புரட்சிகர வாய்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
நவதாராளவாதத் தாக்குதல் முதன்முதலாக கட்ட விழ்த்துவிடப்பட்ட போது, 1992 நவம்பரில், செங்கொடி ஏந்திய தொழிலாளர் வர்க்க அமைப்புக்கள் தேசத்தின் தலைநகரில் மிகப்பெரிய பேரணி நடத்தினார்கள். தொழிலாளர் வர்க்கத்தின் அந்த எதிர்ப்புக்கு இடது சாரிகள் ஒரு தொடர்ச்சியான அரசியல் வடிவம் தர முடியாமல் போனது. அதைத் தொடர்ந்து பாஜக, பாபர் மசூதியை இடித்து, நாட்டை மதவெறிப் படுகொலைபயில் மூழ்கடித்தது.
அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பு கருத்தரங்கம்
தேசத்தின் நெருக்கடியும்
இடதுசாரி ஜனநாயக நிகழ்ச்சிநிரலும்

அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பு டில்லியில் செப்டம்பர் 30 அன்று ‘தேசத்தின் நெருக்கடியும் இடதுசாரி ஜனநாயக நிகழ்ச்சி நிரலும்’ என்ற பொருளில் கருத்தரங்கம் நடத்தியது. கருத்தரங்கில் பல்வேறு இடதுசாரி கட்சிகள், ஜனநாயக இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் இவை பற்றி அக்கறை கொண்ட தனிநபர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
பிரதமர் உட்பட முக்கிய அமைச்சர்கள் தொடர் மெகாஊழல்களில் ஈடுபடுவதற்கு பொறுப்பான, பெருநிறுவன சூறையாடலை ஊக்குவிக்கிற, சாமான்ய மக்களின் வாழ்வுரிமை மீது தாக்குதல் தொடுக்கிற, அய்முகூ அரசாங்கத்தை வெளியேற்ற இடதுசாரி, ஜனநாயக சக்திகளின் ஒன்றுபட்ட போராட்டம்  வேண்டுமென கருத்தரங்கம் அறைகூவல் விடுத்தது.
தோழர்கள் ஸ்வப்பன் முகர்ஜி, ஹர்கன்வால் சிங், விஜய் குல்கர்னி, கோபிந்த் சேத்ரி, ஸ்மிதா, ராஜாராம் சிங், கவிதா கிருஷ்ணன் ஆகியோர் கருத்தரங்கில் தலைமை தாங்கினர்.
உலகம்
அமெரிக்க கண்டத்தின் இரு தேர்தல்கள்
எஸ்.குமாரசாமி
வட அமெரிக்காவில், அமெரிக்க அய்க்கிய நாடுகளில் நவம்பர் 2012ல் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. பாரக் ஒபாமா ஜனநாயக கட்சியின்  வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் மிட் ராம்னி போட்டியிடுகிறார்.
இந்தத் தேர்தலில் பெரும்பான்மை மக்களுக்கு ஆர்வமில்லை. 1996ல்  அதிபர் தேர்தலில் 49%பேர்தான் வாக்களித்துள்ளனர். 2008ல் ஒரு கருப்பு அமெரிக்கர் போட்டியிட்ட பின்னணியில் 56% பேர் வாக்களித்தனர். அது விதிவிலக்கு. பெரும்பான்மை மக்கள், வேறு வேலை இருக்கிறது, வேட்பாளர் பிடிக்கவில்லை, ஆர்வமில்லை, என்ற காரணங்களால் வாக்களிப்பதில்லை.
மண்ணில் பாதி
ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி..

‘புதிய புதிய வெற்றிகள்... புதிய புதிய திருமணங்கள்... இரண்டுக்கும் அவற்றுக்கே உரிய முக்கியத்துவம் உண்டு. ஆனால் நாட்கள் செல்லச்செல்ல வெற்றி பழையதாகிவிடும். நாட்கள் செல்லச்செல்ல மனைவிக்கும் வயதாகிவிடும். அந்தக் கவர்ச்சி தங்காது. அதன் பிறகு அந்த அனுபவம் இருப்பதில்லை’.
கான்பூரில் கவிதை மாநாடு துவக்கிவைக்க சென்ற மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் பேசிய வன்மொழிகள் இவை. அவர் துவக்கி வைத்துக் கொண்டிருந்த போது டி 20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானை இந்தியா வென்றுவிட்ட செய்தி வந்தபோது பட்டாசு வெடித்து கொண்டாடி இருக்கிறார்கள். அப்போது அவர் இப்படிச் சொல்லியுள்ளார்.
தமிழக பழங்குடியினர் வாழ்வுரிமையும் எதிர்காலமும்
சந்திரமோகன்
முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஜ÷லை 2011ல் ஊட்டியில் வசிக்கும் படுகர் சாதியினரை தமிழக பழங்குடியினர் பட்டியலில்  இணைக்க வேண்டுமென மத்திய அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்தார். கோரிக்கையை பழங்குடியினர் விவசாயத்திற்கான அமைச்சரகம் நிராகரித்துவிட்டது. சுமார் 8 லட்சம் மக்கள் தொகையை மட்டுமே கொண்டுள்ள, தமிழகத்தில் 1% மட்டுமே, கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டின் பலனைப் பெற்றிருக்கிற, தமிழகப் பழங்குடியினருக்கு அச்சுறுத்தலாக 4 லட்சத்திற்கும் மேற்பட்ட சமூக, பொருளாதாரத்தில் முன்னேறிய படுகரை நிறுத்த முயற்சித்தனர். தேயிலை பாக்டரி முதலாளிகள் எனப் பல வண்ண சேர்க்கையை கொண்ட பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் உள்ள சாதியை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க கோரியது ஏதோ கொடநாடு பாசத்தினால் அல்ல. வாக்கு வங்கி அரசியல் என்ற சந்தர்ப்பவாத அரசியலே ஆகும். தமிழக பழங்குடியினரின் நிலையை பற்றி, குறிப்பாக கல்வி, வேலைவாய்ப்புகளில் அவர்களின் மிக மிகப் பின்தங்கிய இருத்தல் குறித்த அக்கறையற்ற, கரிசனமற்ற அணுகுமுறையே.
கட்டுரை
பகத்சிங் கனவு கண்ட இளைய இந்தியா எங்கே?
கே.ஜி.தேசிகன்
செப்டம்பர் 28, பகத்சிங் பிறந்த நாள். 2012ல் அதே நாளில் பாகிஸ்தானின் லாகூர் மாவட்ட நிர்வாகம், பகத்சிங் தூக்கிலிடப்பட்ட இடமான சாட்மான் சவுக் என்ற இடத்தை பகத்சிங் சவுக் என பெயர் மாற்றம் செய்து அறிவித்தது. இந்திய நாட்டுக்காரர் பெயரை வைக்கக் கூடாது என்று பலத்த எதிர்ப்பு இருந்த போதும், பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் இக் கோரிக்கையை வலியுறுத்தி புரட்சிகர, ஜனநாயக இயக்கங்கள் நடத்தி வந்த தொடர் பிரச்சாரத்தினால் லாகூர் மாவட்ட நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இளைஞர்களின் ஆதர்ச திருவுருவாக இருக்கும் பகத்சிங் கனவு கண்ட இந்தியாவில் இளைஞர்கள் மாணவர்களின் இன்றைய நிலை என்ன?
களம்
கூடங்குளம் சென்ற
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)
பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா கைது

அக்டோபர் 1 2012 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா ராதாபுரத்தில் கைது செய்யப்பட்டார். அவருடன் மாலெ கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி, தமிழ்மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தோழர் திபங்கர் பட்டாச்சார்யா தலைமையில் சென்ற குழுவில் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் ரமேஷ் மற்றும் கோவை சந்திரன் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். கைது செய்யப்பட்ட தோழர் திபங்கர் பட்டாச்சார்யா, கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்களை சந்திக்க முடியாமல், அவர்களுடன் ஊடாட முடியாமல் ஏன் குடிமக்கள் தடுக்கப்படுகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். மேலும், இது போன்ற கைது நடவடிக்கைகள் மக்கள் எதிர்ப்புக்களை பலவந்தமாக நெறிக்கப் பார்க்கும் மத்திய மாநில அரசுகளின் கொடூரமான ஒடுக்குமுறை நடவடிக்கைகளை அம்பலப்படுத்துகின்றன என்றார்.

Saturday, October 6, 2012

மாலெ தீப்பொறி
தொகுதி 11 இதழ் 5 2012, அக்டோபர் 01 - 15

உள்ளே...
கற்றுத்தரப் பார்க்கும் மன்மோகனுக்கு கற்றுத் தருவோம்
இசுலாமிய சீற்றமும் அரசு ஒடுக்குமுறையும்
தங்கள் வீட்டில் பெண்கள் செய்யும் வேலைக்கு சம்பளம்:
சொல்ல சொல்ல இனிக்குதடா....
திராவிட இயக்கத்தின் பரிணாமம்
கூடன்குளம்: ‘அரசு என்பது ஒடுக்குமுறை கருவி’
தலையங்கம்
செப்டம்பர் 20 முழுஅடைப்பில் தமிழக அரசியல் கட்சிகள்

செப்டம்பர் 20 முழுஅடைப்பை ஒட்டி அகில இந்திய அளவில் நடந்த
நாடகங்கள் அளவுக்கு தமிழக நடப்புக்கள், அவ்வளவு விறுவிறுப்பாக இல்லை.
ஜெயலலிதா, கச்சத்தீவை மீட்க, காவிரி நீரைக் கொண்டு வர பிரதமரிடம் வாதாடுகிறார். உச்சநீதிமன்றக் கதவுகளைத் தட்டுகிறார். டீசல் விலையை உயர்த்தாதே, மானிய விலையிலான சமையல் எரிவாயு உருளைகள் எண்ணிக்கையைக் குறைக்காதே, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டைப் புகுத்தாதே என்றெல்லாம் அறிக்கைகள் விடுகிறார். ஆனால், மத்திய அரசுக்கெதிரான முழுஅடைப்பில், முதல் நாள் பள்ளிகள் இயங்காது என அறிவிப்பு வெளியிட்டு, தொமுசவும் திமுகவும் பந்த்தை ஆதரிக்கின்றன எனத் தெரிந்த பிறகு, பள்ளிகள் இயங்கும் என மறுநாளே தலைகீழாகப் பேசுகிறார். மன்மோகன் பதவி விலக வேண்டும் என்று கோரவில்லை. முழுஅடைப்பை ஆதரிக்கவுமில்லை. ஜெயலலிதாவின் மத்திய அரசு எதிர்ப்பு வெறும் நிழல் சண்டை என அம்பலமானது.
தஞ்சை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவி!
விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15,000
வேலையிழந்த விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்கு!

வெள்ளப்பெருக்கால் மஞ்சளாறு சீனாவின் துயரமானது. வறட்சியால் காவிரியாறு தமிழகத்தின் துயரமானது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ், பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளின் துரோகத்தால் காவிரி டெல்டா மக்கள் பெரும் துயரத்திற்கும் துன்பத்திற்கும் ஆளாகியுள்ளனர். அண்டை மாவட்டங்களின் பஞ்சம் போக்கிய தஞ்சை மாவட்டம் இன்று தன் பஞ்சத்தை போக்கிக் கொள்ள அண்டை மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் ஆலாய் பறந்து கொண்டிருக்கிறது.
கட்டுரை
கற்றுத்தரப் பார்க்கும்
மன்மோகனுக்கு கற்றுத் தருவோம்

காம்ரேட்
பணம் மரத்தில் காய்க்காது என்று மன்மோகன் இந்திய மக்களுக்கு, கற்றுத் தருகிறார். பணம் மரத்தில் காய்க்காது என்பது சரிதான். உலகம் பண்டங்களால் (பொருட்கள், சேவைகள்) நிறைந்தது. இவற்றை வாங்க விற்க பணம் தேவை. பணம் இல்லாதோர்க்கு இவ்வுலகம் இல்லை. ஏன் பல கோடி மக்களிடம் பணம் இல்லை? சிலர் கைகளில் எப்படி எல்லா பணமும் குவிகிறது? இயற்கையும் உழைப்பும் சேர்ந்துதானே எல்லா பண்டங்களும் உருவாகின்றன. அந்தப் பண்டங்களை உருவாக்கிய நகர்ப்புற நாட்டுப்புற பாட்டாளிகள் உழைக்கும் விவசாயிகள் ஏன் வறுமையில் சிக்கி உள்ளனர்? இந்தக் கேள்விகளுக்கு மன்மோகன் பதில் சொல்லமாட்டார்.
சிறப்புக் கட்டுரை
இசுலாமிய சீற்றமும் அரசு ஒடுக்குமுறையும்
எஸ்.குமாரசாமி
இசுலாம் என்றால் வன்முறை. இசுலாம் என்றால் சகிப்புத்தன்மை இல்லாதது. இசுலாம் என்றால் ஜனநாயக விரோதமானது. இந்தக் கருத்துக்களை, ஏகாதிபத்தியம் உருவாக்கி உலகெங்கும் உலவ விட்டுள்ளது. சோவியத் ஒன்றிய சரிவிற்குப் பிறகு, கலாச்சாரங்களின் மோதல் என்ற நூலில், ஏகாதிபத்திய சிந்தனையாளர் ஹண்டிங்டன், கிறிஸ்துவமும் இந்துத்துவாவும் இணைந்து, எதிர்கொள்ள வேண்டிய எதிரி இசுலாம் என்று குறிப்பிட்டார். நியுயார்க் இரட்டை கோபுரங்கள் தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்கா, இசுலாமிய பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்றுதான் அறிவித்தது.
ஜவஹர்லால் நேரு பல்கலை கழக மாணவர் சங்கத் தேர்தல்
அகில இந்திய மாணவர் கழகம் பெரும்பான்மை வெற்றி
செப்டம்பர் 14 அன்று நடத்தப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலை கழக மற்றும் டில்லி பல்கலை கழக மாணவர் சங்கத் தேர்தல்களில் அகில இந்திய மாணவர் கழகம் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தைப் பொறுத்தவரை இடதுசாரி சக்திகள் பெரும் வெற்றிபெற்றுள்ளன. சங்கத்தின் பெரும்பான்மை இடங்களை அகில இந்திய மாணவர் கழகம் மீண்டும் வென்றது. ஜவஹர்லால் நேரு பல்கலை கழக எஸ்எஃப்அய்யும் எஅய்ஒய்எஃப்பும் இணைந்து தேர்தலை சந்தித்தன.
மண்ணில் பாதி
தங்கள் வீட்டில் பெண்கள் செய்யும் வேலைக்கு சம்பளம்:
சொல்ல சொல்ல இனிக்குதடா....

மஞ்சுளா
இல்லப்பணியாளர் ஒருவர், 4 பேர் கொண்ட குடும்பத்தில் பாத்திரம் தேய்த்து, துணி துவைத்து, வீடு பெருக்கி துடைக்க மாதம் ஒன்றுக்கு ரூ.1,500 சம்பளம் பெறுகிறார். மூன்று வேளை சமையல் செய்பவர் ரூ.2,000 சம்பளம் பெறுகிறார்.
படுத்த படுக்கையாக இருக்கும் முதியோர் அல்லது நோயுற்றோரை கவனித்துக் கொள்பவர் நாளொன்றுக்கு 8 மணி நேர வேலைக்கு குறைந்தது ரூ.500 சம்பளம் பெறுகிறார். அதாவது மாதம் ரூ.15,000. இவர்கள் இரவுப் பணி அல்லது பகல் பணி என்று மாறி மாறி வருவார்கள். ஆக, இந்த வேலைக்கு மட்டும் மாதம் ஒன்றுக்கு ரூ.30,000 செலவாகும்.
மேலே சொல்லப்பட்டுள்ள வேலைகளில் எந்த வேலையையும் நிறுத்தி வைக்க முடியாது. இவற்றை செய்பவர்களுக்கு இன்றைய சந்தை நிலவரப்படி மாதம் ஒன்றுக்கு ரூ.33,500 சம்பளம் தரப்படுகிறது. இதில் முதல் வகை வேலையில் மட்டும் ரூ.3,500 சம்பளம்.
பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு கருத்தரங்கம்
மேற்கு வங்கத்தில் பெண்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து கொல்கத்தாவில் செப்டம்பர் 12 அன்று முற்போக்கு பெண்கள் கழகம் கருத்தரங்கம் நடத்தியது. பெண்கள் கழக மாநிலச் செயலாளர் தோழர் சைதாலி சென் கருத்தரங்குக்கு தலைமை தாங்கினார். பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி ஒருவர் கருத்தரங்கில் கலந்துகொண்டு தனது சகோதரிக்கு நடந்த கொடுமை பற்றி பேசினார். கவிஞர்கள் நபருன் பட்டாச்சார்யா, கிருஷ்ணா பாசு மற்றும் மாலெ கட்சி, முற்போக்கு பெண்கள் கழகம், ஏஅய்சிசிடியு தவைர்கள் கருத்தரங்கில் உரையாற்றனர்.
திராவிட இயக்கத்தின் பரிணாமம்
மக்கள் மத்தியில் நம்பகத்தன்மை இழந்து, தனிமைப்பட்டு நிற்கிறபோது, கருணாநிதிக்கு திராவிட இயக்கத்தின் முன்னோடி என்ற அடையாளம் தேவைப்படுகிறது. திராவிட இயக்கத்தில் எஞ்சியிருக்கிற ஏகபோக வாரிசு தானே என்று சொல்லி அதை முன்னிறுத்தும் போது கூடவே ஜெயலலிதாவுக்கு பார்ப்பன முத்திரை குத்திவிட முடியும் என்பதாலும் ஜெயலலிதா திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் அல்ல என்று சொல்ல முடியும் என்பதாலும் அதைக் கையில் எடுக்கிறார்.
திராவிட இயக்கத்தில் கொண்டாட இப்போது ஏதுமில்லை என்ற தெளிவு பெற்றவராக ஜெயலலிதா இருப்பது போல் தெரிகிறது. அவர் போட்டியில் இறங்கவில்லை.
கூடன்குளம்:
‘அரசு என்பது ஒடுக்குமுறை கருவி’

ஜி.ரமேஷ்
‘இன்னும் இரண்டு கேஸ்களில் எங்களைச் சிறையில் அடைக்கத்தான் இங்கு கொண்டு வந்துருக்காங்க. இன்னும் எத்தனை பொய் வழக்குகளை எங்கள் மீது போடுவார்களோ. போடட்டும். நாங்கள் என்ன தவறு செய்தோம். எங்களை காலி பண்ணச் சொல்லும் அணு உலையை வேண்டாம் என்கிறோம்’. செப்டம் பர் 21 அன்று திருச்சி சிறையில் இருந்து வள்ளியூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட இடிந்தகரை சேவியர் அம்மாள் மற்றும் 6 பெண்களிடம் வள்ளியூர் நீதித்துறை நடுவர், உங்களை எதற்காக அழைத்து வந்துள்ளார்கள் எனத் தெரியுமா? என்று கேட்டதற்கு அவர்கள் சொன்ன பதில்தான் அது.
களம்
டீசல் விலையை குறை!
சிறுவணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு கூடாது!
சமையல் எரிவாயு உருளை குறைப்பை கைவிடு!

எதிர்ப்பு - கைது - விடுவிப்பு
15.09.2012 அன்று அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) சார்பில் டீசல் விலையை குறைக்க வேண்டும். சிறு வணிகத்தில் அந்நிய மூலதன நுழைவை கைவிட வேண்டும். கேஸ் சிலிண்டருக்கு கட்டுப்பாட்டை அனுமதிக்க மாட்டோம் போன்ற முழக்கங்களுடன் அம்பத்தூர் ஓ.டி.யில் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநில துணைத் தலைவர் தோழர் தேவகி தலைமை தாங்கினார். அகில இந்திய மாணவர் கழக அகில இந்திய துணைத் தலைவர் தோழர் பாரதி கண்டன உரையாற்றினார். கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் சேகர், ஏஅய்சிசிடியு மாவட்ட பொதுச் செயலாளர் தோழர் பழனிவேல், பொருளாளர் தோழர் பாலகிருஷ்ணன், உழைப்போர் உரிமை இயக்க மாவட்டத் தலைவர் தோழர் மோகன், செயலாளர் தோழர் பசுபதி, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர்கள் தோழர் முனுசாமி, தோழர் ஏ.சேகர், தோழர் பொன்ராஜ், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக நிர்வாகிகளில் ஒருவர் தோழர் லில்லி, புரட்சிகர இளைஞர் கழக அமைப்புக்குழு உறுப்பினர்கள் தோழர் சுஜாதா, தோழர் தண்டபாணி, சீனிவாசன் உட்பட சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். கூடன்குளத்தில் கடுமையான காவல்துறை வேட்டை நடந்து கொண்டிருந்த பின்னணியில் சென்னையிலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறை கைது செய்து இரவு 10.00 மணிக்கு விடுதலை செய்தது.

Search