COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Wednesday, June 20, 2012

2012, ஜூன் 16 - 30 மாலெ தீப்பொறி தொகுதி 10 இதழ் 17

கல்வி

அரசும் புரட்சியும்

லெனின்

சமுதாயத்துக்கு மேலானதாய் நிற்கும் தனிவகைப் பொது அதிகாரத்தின் பராமரிப்புக்காக வரிகளும் அரசு கடன்களும் தேவைப்படுகின்றன.
‘...பொது அதிகாரமும் வரிகள் வசூலிக்கும் உரிமையும் பெற்ற அதிகாரிகள் சமுதாயத்தின் ஆட்சி உறுப்புக்கள் என்ற முறையில் சமுதாயத்திற்கு மேலானவர்களாய் நிற்கிறார்கள்’ என்று எங்கெல்ஸ் எழுதுகிறார். ‘புராதன(குலச்) சமுதாய அமைப்பின் ஆட்சி உறுப்புகளுக்கு மனம் விரும்பி சுதந்திரமாய் அளிக்கப்பட்ட மதிப்பும் மரியாதையும் - அவர்களால் இவற்றைப் பெற முடிவதாய்க் கொண்டாலும் கூட - அவர்களுக்கு திருப்தி அளிப்பனவாய் இல்லை....’ அதிகாரிகளுடைய புனித நிலையையும் காப்புரிமையையும் பறைசாற்றும் தனிச் சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ‘கீழ்த்தர போலீஸ் ஊழியனுக்குக் கூட’ குலத்தின் பிரதிநிதிகளைக் காட்டிலும் அதிக ‘செல்வாக்கு’ இருக்கிறது. ஆயினும் குலத்தின் முதலாளருக்கு சமுதாயம் அளித்த ‘வலுக்கட்டாயமற்ற மதிப்பையும் மரியாதையையும்’ கண்டு நாகரிக அரசின் ராணுவ அதிகாரத்தின் தலைவரும் கூட பொறாமை கொள்வார்.
அரசு அதிகார உறுப்புக்களான அதிகாரிகளுடைய தனி உரிமை நிலை என்கிற பிரச்சினை இங்கு எழுப்பப்படுகிறது. இங்கு சுட்டிக்காட்டப்படும் பிரதான விவரம் இதுவே: இவர்களை சமுதாயத்திற்கு மேலானவர்களாய் அமர்த்துவது எது? இந்த தத்துவார்த்த பிரச்சினைக்கு 1871ல் பாரிஸ் கம்யூன் நடைமுறையில் எவ்வாறு தீர்வு கண்டது என்பதையும், பிற்போக்கான ஒரு நிலையிலிருந்து 1912ல் காவுத்ஸ்கி எப்படி இதனை மூடி மறைத்தார் என்பதையும் பிற்பாடு நாம் பார்ப்போம்.
‘...வர்க்கப் பகைமைகளைக் கட்டுப்படுத்துவதன் அவசியம் காரணமாய் அரசு உதித்தது என்பதனாலும் அதேபோதில் இந்த வர்க்கங்களுக்கு இடையிலான மோதல்களிலிருந்தே அது உதித்தது என்பதனாலும், பொதுவாக அது மிகப்பெரும் பலம் படைத்த பொருளாதாரத் துறையில் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் அரசாகிவிடுகிறது. அரசின் உதவியால் இவ்வர்க்கம் அரசியல் துறையிலும் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கமாகி, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை அடக்கி வைப்பதற்கும் சுரண்டுவதற்கும் இவ்வாறு புதிய சாதனங்களைப் பெற்றுக் கொள்கிறது...’ புராதன அரசுகளும் பிரபுத்துவ அரசுகளும், அடிமைகளையும் பண்ணை அடிமைகளையும் சுரண்டுவதற்கான அமைப்புகளாய் இருந்தன. இதே போல ‘நவீன கால பிரதிநிதித்துவ அரசு கூலியுழைப்பை மூலதனம் சுரண்டுவதற்கான கருவியாய் இருக்கிறது. ஆனால் விதிவிலக்காய்ச் சில கால கட்டங்கள் ஏற்படுவது உண்டு. ஒன்றோடொன்று போரிடும் வர்க்கங்கள் ஒன்றொன்றுக்கொன்று ஏறத்தாழ சம நிலைப் பெறும் இக்கட்டங்களில் அரசு அதிகாரம் வெளித் தோற்றத்துக்கு நடுவர் போலாகி சொற்ப காலத்துக்கு இரு தரப்பாரிடமிருந்தும் ஓரளவு சுயேச்சையுடையதாகிறது...’ 17, 18ம் நூற்றாண்டுகளின் வரம்பற்ற முடியாட்சி முறையும், பிரான்சில் முதலாவது, இரண்டாவது சாம்ராஜ்யங்களது போனப்பார்ட் ஆட்சியும் ஜெர்மனியில் பிஸ்மார்க் ஆட்சியும் இத்தகையனவே.
குடியரசு ருஷ்யாவில், கெரென்ஸ்கி அரசாங்கம் குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகளுடைய தலைமையின் காரணமாய், சோவியத்துக்கள் ஏற்கனவே ஆற்றல் இழந்தும் முதலாளித்துவ வர்க்கம் அவற்றைக் கலைக்க இன்னமும் பலம் பெறாமலும் இருந்த ஒரு தருணத்தில், புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடத் தொடங்கியது முதலாய் இத்தகையதே என்பதையும் இங்கு நாம் குறிப்பிடலாம். எங்கெல்ஸ் மேலும் எழுதுகிறார்:
ஜனநாயகக் குடியரசில் ‘செல்வமானது மறைமுகமாய், ஆனால் முன்னிலும் திடமாய் அதிகாரம் செலுத்துகிறது’. முதலாவதாக ‘நேரடியாய் அதிகாரிகளுக்கு லஞ்சம் தருவதன் மூலமும்’ (அமெரிக்கா), இரண்டாவதாக ‘அரசாங்கத்தை பங்கு மார்க்கெட்டுடன் கூட்டு சேர செய்வதன் மூலமும்’ (பிரான்சும் அமெரிக்காவும்) அது அதிகாரம் செலுத்துகிறது.

தலையங்கம்

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம்:
ஆட்சியாளர்கள் தோற்றுப் போவார்கள்!


கூடங்குளத்தின் முதல் இரண்டு உலைகளில் இன்னும் 10 நாட்களில் மின் உற்பத்தி தொடங்கி விடும் என்று அரசாங்க இயந்திரங்கள் கூறி வருகின்றன. இவ்வாறு சொல்லத் தொடங்கி இதுவரை பதினோறு 10 நாட்கள் ஓடிவிட்டன! ஆனால், முதல் இரண்டு அணு உலைகளுக்கும் சேர்த்து மொத்தம் 6 உலைக ளுக்கும் இப்போதுதான் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. இந்திய அரசாங்கத்தின் சுற்றுச் சூழல் அமைச்சகம் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல சட்டத்தின் கீழ் இந்த அனுமதியை வழங்கி இருக்கிறது.
கடற்கரை ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் முறையான அனுமதி பெற்ற பிறகே எந்த பெரிய கட்டுமானங்களையும் தொடங்க வேண்டுமென்று சட்டம் சொல்கிறது. ஆனால், முதல் இரண்டு ஆலைகள் கட்டி முடிக்கப்பட்டு மின்சார உற்பத்தி தொடங்கப் போவதாக கூறப்படும் சமயத்தில்தான் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது! 24 ஆண்டுகளுக்குப் பிறகு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது! எவ்வளவு பெரிய மோசடி! கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் இரண்டு உலைகளும் சட்ட விரோதமாக கட்டப்பட்டிருப்பது நிரூபணமாகிறது. இந்திய அரசாங்கம் தான் உருவாக்கிய சட்டத்தையே அப்பட்டமாக மீறியிருப்பதும் நிரூபணமாகி உள்ளது.
அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசிய மன்மோகன் சிங் அணு உலை பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்துகொள்ள மாட்டோம் என்று கூறினார். பின் ஏன் இந்த சட்டவிரோத நடவடிக்கை? அனுமதி பெறாமலே அணு உலை கட்ட வேண்டும்? அணு உலை பாதுகாப்பு குறித்து, சுற்றுப்புற சூழல் தாக்க அறிக்கை குறித்து, விபத்து ஏற்பட்டால் ரஷ்ய அரசாங்கம் - நிறுவனத்தின் பொறுப்பு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் தகவல் தர மறுப்பது ஏன்? இந்திய தகவல் உரிமை ஆணையம், கேட்கும் விபரங்களை தர வேண்டும் என்று உத்தரவிட்ட பின்னரும் இந்திய அணுசக்தி துறையும் இந்திய அரசாங்கமும் அடாவடியாக ஏன் மறுக்க வேண்டும்?
தகவல் அறியும் உரிமைச் சட்டம் இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய பெருமை, மன்மோகன் அரசாங்கத்தின் மிகப் பெரிய சாதனை என்று கூறிக் கொள்கிறார்கள்! மீண்டும் ஒரு சட்ட மீறல். இந்திய அரசாங்கத்தின் சட்டத்தை இந்திய அரசாங்கமே மீறி உள்ளது! அணு உலைகள் பாதுகாப்பானது என்றால், பாதுகாப்பு விசயத்தில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்று பிரதமர் கூறுவது உண்மையானால், அணுஉலை குறித்து உண்மை தகவல்களை பொது மக்களிடமிருந்து ஏன் மறைக்க வேண்டும்?
கூடங்குளம் அணு உலைகள் குறித்தும் அணுஉலை எதிர்த்த மக்கள் போராட்டங்கள் குறித்து மத்திய, மாநில ஆட்சிகளின் அணுகுமுறையும் நடவடிக்கைகளும் இந்திய அரசியல் சட்டம், நாடாளுமன்ற ஜனநாயக முறை, நீதிநெறிகள் குறித்த அதிர்ச்சிதரும் அடிப்படைக் கேள்விகளை எழுப்புகின்றன.
24 ஆண்டுகளாக கூடங்குளம் அணு உலைகளை எதிர்த்து மக்கள் நடத்திவரும் போராட்டங்களை அலட்சியமாக புறக்கணித்து வருகின்றன. கடந்த 300 நாட்களுக்கு மேலாக அணு சக்திக்கு எதிராக மக்கள் இயக்கத்தின் அமைதி வழி போராட்டங்களை நசுக்கி விடத் துடிக்கின்றன. கல்வியாளர்கள், அறிவியல் வல்லுனர்கள், அணு விஞ்ஞானிகள், கப்பல்படை முன்னாள் தளபதிகள், பேராசிரியர்கள் போன்றோரது எதிர்ப்பு களையும் குற்றமய அலட்சியத்துடன் புறக்க ணிக்கின்றனர். இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கிறார்கள். அந்நிய நிதியை பெற்றுக் கொண்டு போராடுகிறார்கள். ஜனநாயக அடிப்படையில் அமைந்துள்ள அரசுக்கு எதிராகப் போராடுகிறார்கள். தேசத்துக்கு துரோகம் இழைக்கிறார்கள் என்றெல்லாம் போராடுபவர்கள் மீது குற்றஞ் சாட்டப்படு கின்றன! அவதூறு பரப்பப்படுகின்றன.
மார்ச் 19க்கு முன்பு வரை கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை கையாளும் பொறுப்பை மத்திய அரசு கவனித்து கொண்டது. மார்ச் 19க்குப் பின்பு மாநில அதிமுக ஆட்சி கையிலெடுத்துக் கொண்டது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி, மூர்க்கத்தனமான அவதூறு பிரச்சாரத்தை, ஒரு யுத்தத்தை போராடுபவர்கள் மீது அவிழ்த்து விட்டது. மத்திய அமைச்சர்கள் இந்த அவதூறு பிரச்சார யுத்தத்தை முன்னின்று நடத்தினர். திமுக இதற்கு துணை போனது. அணு உலை பாதுகாப்பானது என்று சான்று வழங்கிய ஜெயலலிதா, பின்னர், மக்கள் அச்சம் போக்கப்படும் வரை அணு உலை பணிகள் நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று பேசினார். 6 மாதங்களுக்குப் பிறகு, அணு உலை பாதுகாப்பானது பணிகளை தொடரலாம் என்று கூறிவிட்டார்.
மக்களது அச்சத்தை போக்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களது கருத்தை அறியவும் முன் வரவில்லை. உள்ளாட்சித் தேர்தலின் போது உங்களில் ஒருத்தியாக இருப்பேன் என்று கூறியவர் அந்த ‘உங்களை’ – மக்களை - ஒடுக்குபவராக மாறி விட்டார்! துரோகத்தின் உச்சத்தையே தொட்டுவிட்டார்.
மத்திய அரசை எதிர்த்து தினம் தோறும் போராடி வருகின்றவர் என்பதாக காட்டிக் கொள்ளும் முதல்வர் மத்திய அரசின் மிக நம்பகமான கூட்டாளியாக மாறி ஒடுக்குமுறையில் இறங்கி விட்டது அதிமுக ஆட்சி! ஏகாதிபத்திய நாடுகள், இந்திய பெருமுதலாளிகளின் ‘வளர்ச்சி’ என்றவுடன் மத்திய, மாநில ஆட்சிகள் – எந்த நிறத்திலிருந்தாலும் – ஒன்று சேர்ந்து விடுகின்றன.
துப்பாக்கி சூடு இல்லாமல், துளி ரத்தம் சிந்தாமல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து விட்டதாக ஓராண்டு சாதனை பேசுகிறார் ஜெயலலிதா! (போஸ்கோ, சிங்கூர், நந்திகிராம், பட்டாபர்சூல், நோய்டா போன்ற சம்பவங்களை மறைமுகமாக சுட்டிக் காட்டு கிறார்). ஆனால், மார்ச் 19 முதல், கூடங்குளம் கிராமங்களில், திருநெல்வேலி மாவட்டத்தில், நடத்திவரும் ஒடுக்குமுறைகள் இந்திராகாந்தி காலத்து அவசரநிலைப் பிரகடனத்தை மீண்டும் கண்முன் கொண்டுவருகின்றனர். 144 தடை உத்தரவு, 56,000 பேர்களுக்கு மேல் 287 விதமான பிரிவுகளில் வழக்குகள். 3450 பேர் மீது தேச துரோக வழக்குகள். இந்திய அரசுக்கு எதிராக, ரஷ்ய அரசுக்கு எதிராக போர் தொடுத் ததாக வழக்குகள்! நூற்றுக்கணக்கான பெண்களை 261 கி.மீ. அப்பால் உள்ள திருச்சி சிறையில் அடைத்து சித்திரவதை. மார்ச் 19க்கு முன் மத்திய அரசும் காங்கிரஸ் அமைச்சர்களும் என்னென்ன அவதூறு பிரச்சாரத்தை செய்தனரோ அவற்றையெல்லாம் வழக்குகளாக மாற்றிவிட்டார் ஜெயலலிதா! பிள்ளைகளின் கல்வி, நோயாளிகளின் மருத்துவம், மீனவர்கள், வியாபாரிகளின் தொழில், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம், பொதுமக்களின் நடமாட்டம் என அனைத்தும் முடக்கப்பட்டு விட்டன. 70,000க்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதார உரிமையும், உயிர் வாழும் உரிமையும் முடக்கி பறிக்கப்பட்டு விட்டன. கூடங்குளம் அணு உலைகளை எதிர்க்கும் அனைத்துவிதமான நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளதாக ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றன. அரசியல் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் கூடும் உரிமை, எழுத்து உரிமை, பேசும் உரிமை, மாற்றுக் கருத்துக்களை தெரிவிக்கும் உரிமை, உயிர் வாழும் உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் அதிமுக ஆட்சி பறித்து விட்டது. இதைத்தான் மத்திய அரசு எதிர்பார்த்தது.
துப்பாக்கி முனையில் ‘வளர்ச்சி’, குடி மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் ‘வளர்ச்சி’க்காக ஆட்சியாளர்கள் நிற்கின்றனர். 30 கி.மீ. சுற்றளவிலுள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரம், உயிர், உரிமை, உடமை இவை அனைத்தையும் பறித்தாகிலும் ஏகாதிபத்திய நாட்டின் அணு உலைகளை திணித்து விடவேண்டும் என்று துடிக்கின்றனர் ஆட்சியாளர்கள். இந்த மூர்க்கத்தனத்தை எதிர்த்து கூடங்குளத்தை சுற்றியுள்ள மக்கள் மட்டுமல்ல தமிழக மக்கள், இந்திய மக்கள் போராடியாக வேண்டும். போஸ்கோ, சிங்கூர், நந்திகிராம், ஜாய்தாபூர், ஹரிபூர், பர்சூல், நொய்டா என எங்கும் ‘வளர்ச்சி’யின் பாதை, இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதற்காக மக்களின் வாழ்வாதாரத்தை, வாழும் உரி மையை பறிப்பதாகவே இருக்கிறது. எந்த வொரு வளர்ச்சியும் மக்களுக்காக இருக்க வேண்டும். மக்கள் தீர்மானிப்பதாக இருக்க வேண்டும். இதைத்தான், இடிந்தகரை மக்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். அதனால்தான், இடிந்தகரை போராட்டம் இந்தியாவின் போராட்டம் என்கிறோம்.
ஜெயலலிதா சொல்வதுபோல், போராட்டம் முடிவுக்கு வந்துவிடவில்லை. தொடர்கிறது. மத்திய அரசு நம்புவதைப் போல் – அதனால்தான் 6 அணு உலைகளுக்கு அனுமதி அளித்துள்ளது – போராட்டம் முடிந்துவிடவில்லை. தொடர்கிறது. தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவிலும் இந்தியாவுக்கு அப்பாலும் போராட்டம் விரிவடைந்து வருகிறது. மார்ச் 19க்குப் பிந்தைய அடக்குமுறைகளை எதிர்த்து அகில இந்திய மாணவர் கழகத்தின் தலைமையில் இயங்கும் டெல்லி ஜவஹர்லால் பல்கலைக் கழக மாணவர் சங்கம் டெல்லி, தமிழ்நாடு இல்லம் முன் போராட்டம் நடத்தி இருக்கிறது. தெற்காசிய ஒருமைப்பாட்டுக் குழு லண்டனி லுள்ள இந்திய தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 38 பேர் அமைதியாக இருந்தாலும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மூடக்கோரி பிரதமருக்கும் முதல்வருக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர்.
அரசின் அடக்குமுறைகளை, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவின் பொது விசாரணைக் குழு மிகச் சிறப்பாக துணிச்சலுடன் அம்பலப்படுத்தி இருக்கிறது. முகத்திரையை கிழித்திருக்கிறது. மே 30 அன்று இகக(மாலெ) நடத்திய அரசியல் கருத்தரங்கை தடுத்து நிறுத்த முயன்று தோற்றுப் போனது. ஏகாதிபத்திய, பெருமுதலாளித்துவ வளர்ச்சிப் பாதை இந்திய மக்கள் மீது மூர்க்கத்தனமாக திணிக்கும் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் நிச்சயமாக தோற்றுப் போவார்கள்.

நோக்குநிலை

பதானி தோலா - 2: கருவில் கொல்லப்பட்ட நீதி

திபங்கர் பட்டாச்சார்யா

ஜூன் 2 2012, எகனாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி பத்திரிகையில் வெளியான கட்டுரை

16 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பதானி தோலாவில் பட்டப்பகலில், பச்சிளம் குழந்தைகள் உட்பட, பெண்கள், குழந்தைகள் உட்பட 21 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். அப்போதுதான் இப்படி கண்ணில் படாத ஒரு கிராமம் இருப்பதே நாட்டுக்கு தெரிய வந்தது. அத்துடன், 1990களின் இறுதியில் தொடர்ச்சியாக படுபயங்கரமான படுகொலைகள் செய்த நிலப்பிரபுத்துவ தனியார் படையான ரன்வீர் சேனா, மத்திய பீகாரெங்கும் நூற்றுக்கணக்கானவர்களை படுகொலை செய்த கேவலமான யதார்த்தத்தையும் நாடு அறிந்துகொண்டது.
‘நீதியுடனான வளர்ச்சியை’ உருவாக்குவதாக சொல்லிக் கொள்ளும் ஓர் அரசாங்கம் இப்போது பீகாரில் ஆட்சி செய்கிறது. 2010 மே மாதத்தில், அர்ரா மாவட்ட நீதிமன்றம் பதானி தோலா படுகொலைக்காக, 3 பேருக்கு மரண தண்டனை, 20 பேருக்கு ஆயுள்தண்டனை என 23 பேருக்கு தண்டனை வழங்கியதுடன் படுகொலைகள் நடப்பது நின்றுவிட்டது போலிருக்கிறது.
கடந்தகால படுகொலைகளுக்கு கடைசியில் நீதி வழங்கப்பட்டது என்று சொல்லிக் கொண்டு, நவம்பர் 2010ல் இன்னும் பெரிய பெரும்பான்மையுடன் அதே அரசாங்கம் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.  மகாதலித்துகள் (தலித்துகளுள் தலித்துகள்) என்றும் ஆதி பிச்சடாக்கள் (மிகவும் பின்தங்கிய சாதியினர்) என்றும் பஸ்மான்ட முசல்மான் (பின்தங்கிய இசுலாமியர்கள்) என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஒடுக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட கிராமப்புற வறிய மக்கள் அனைவரும் புதிய அரசாங்கத்தின் மீது கணக்கில் கொள்ளத்தக்க அளவு நம்பிக்கை வைத்தார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஏப்ரல் 2012ல், பாட்னா உயர்நீதிமன்றம் தண்டனை வழங்கப்பட்ட 23 பேரையும் விடுதலை செய்தது; இந்தத் தீர்ப்பு, 1996ல் துரதிர்ஷ்டவசமான அந்த ஜூலை 11 அன்று மதியம் பதானி தோலாவில் அந்த 23 அப்பாவி மக்களை படுகொலை செய்தது யார் என்ற கேள்வியுடன் அனைவருக்கும் அதிர்ச்சி தந்தது.
இந்த உயர்நீதிமன்றத் தீர்ப்பை நாம் எப்படி புரிந்துகொள்வது? அது வெறும் சட்டரீதியான பிழையா? மாறாக, இதுதான் பீகாரில் விதி என்று முந்தைய பதிவுகள் நமக்குச் சொல்கின்றன. கிராமப்புற வறிய மக்களை படுகொலை செய்த குற்றத்துக்காக தண்டனை வழங்கப்பட்ட அனைவரும், அவர்களில் சிலர் விசாரணைக் கைதிகளாக சில ஆண்டுகள் சிறையில் இருக்க நேரிட்டாலும், பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், பீகாரில் நிலைமைகள் மாறிவிட்டதாக அல்லவா சொல்லப்படுகிறது? நிதிஷ்குமாரின் மாறிவிட்ட பீகாரில் நிலப்பிரபுத்துவ பாகுபாடு பற்றி பேசுவது காலத்துக்கு ஒவ்வாதது அல்லவா?
லாலு ஆட்சியின் சமூக அரசியல் இயல்பை குறிப்பிட்டுச் சொல்ல ஜூலை 1996 பதானி தோலா படுகொலை உதவியதுபோல், ஏப்ரல் 2012 தீர்ப்பு, - அதை நீதித்துறை படுகொலை என்றோ, பதானி தோலா - 2 என்றோ அழைக்கலாம் - நிதிஷ்குமார் ஆட்சியின் மேலோங்கிய சமூக அரசியல் சூழலை காட்டுகிற கண்ணாடியாக இருக்கிறது. உயர்நீதிமன்றத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் சட்டரீதியாக மறுபரிசீலனை செய்து பதானி தோலாவில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்ய வேண்டும்; அதேநேரம், அரசியல் மற்றும் சமூக நீதி, பதானி தோலா பின்னணியை, அதன் விளைவுகளை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களின் கவுரவத்துக்கான, ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் அவர்கள் பக்கம் நிற்க வேண்டும் என்றும் கோருகிறது.

நக்சலைட்டுகளை குறிவைப்பது
பதானி தோலா - 1 நடந்தபோது, நிலத் தகராறு தொடர்பான மற்றுமொரு சாதியப் படுகொலை என்று பலரும் கருதினர். ஆனால், இந்த பொதுஅறிவுக்கு மாறாக, பதானி தோலா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை ஆதரவாளர்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்ற அறிவிக்கப்பட்ட நோக்கத்துடன் நடத்தப்பட்ட வெளிப்படையான அரசியல் படுகொலை. அது, கர்ப்பிணி பெண்கள், பச்சிளம் குழந்தைகள் உட்பட பெண்களையும் குழந்தைகளையும் குறி வைத்து, இன அழிப்பு நோக்கத்தால் குறிக்கப்படுகிற மனிதப் படுகொலைகளில் மட்டுமே காணப்படுகிற காட்டுமிராண்டித்தனத்துடன், பட்டப்பகலில் நடத்தப்பட்ட ஒரு படுகொலை. பெண்கள் குறி வைத்து தாக்கப்பட்டார்கள், ‘அவர்கள் நக்சலைட்டுகளை பெற்றெடுப்பார்கள்’ என்பதால். குழந்தைகள் கொல்லப்பட்டார்கள், ‘அவர்கள் நக்சலைட்டுகளாக வளர்ந்து விடுவார்கள்’ என்பதால்.
நிலம் மற்றும் கூலிப் போராட்டங்களில் இககமாலெ ‘அத்துமீறுவதன்’ சமூக பதில்வினையாகத்தான் ரன்வீர் சேனா போன்ற தனியார் படைகள் பீகாரில் உருவாயின என்று சிலர் நம்புகிறார்கள். போஜ்பூரோ, மத்திய பீகாரில் அதன் அருகில் உள்ள மாவட்டங்களோ ஒருவர் நிலப்பிரபுத்துவத்துடன் சேர்த்துப் பார்க்கிற பெருமளவிலான நிலவுடைமைகள் இல்லாதவை என்றும் எனவே, இககமாலெயின் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்கள் என்ற ஒட்டுமொத்த தத்துவமும் நடைமுறையும் பொருத்தமற்றவை என்றும் சுட்டிக்காட்டவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
போஜ்பூரிலும், பீகாரின் பிற பல பகுதிகளிலும், நிலம், கூலி ஆகியவை முக்கியமான பிரச்சனைகளாக இருக்கும் அதே நேரத்தில், மனித கவுரவம் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் ஆகிய பிரச்சனைகளில் தீர்மானகரமான போராட்டங்கள் நடத்தப்பட்டதை இகக மாலெயின் வரலாறு தெளிவாகக் காட்டுகிறது. பொருளாதாரத்துக்கு அப்பாற்பட்ட நிர்ப்பந்தங்களால்தான் நிலப்பிரபுத்துவ அதிகாரம் முதன்மையாக செலுத்தப்படுகிறது, மறுஉற்பத்தி செய்யப்படுகிறது என்பதை நாம் நினைவில் கொண்டால், இது நமக்கு வியப்பு தரும் விசயமாக இருக்காது. சமூக ஒடுக்குமுறை, பல்வேறு விதமான பல்வேறு அளவிலான அடிமைத்தனம், அரசியல்ரீதியாக வெளியேற்றப்படுவது ஆகியவை, உலகம் முழுவதும் வரலாற்றுரீதியாக நிலப்பிரபுத்துவ மேலாதிக்கத்தின் அடையாளங்களாக இருந்து வந்துள்ளன.
போஜ்பூரில் இககமாலெ இயக்கத்தின் வரலாற்றைப் பார்த்தோமானால், வாக்குரிமை மிகவும் தீவிரமாக கையில் எடுக்கப்பட்ட பிரச்சனைகளில் ஒன்று என்பதை நாம் காண முடியும். உண்மையில், போஜ்பூரில் இககமாலெ எழுச்சிக்குப் பின்னால், தோழர் ராம்நரேஷ் ராம் இககமாலெயின் வேட்பாளராக போட்டியிட்ட 1967 சட்டமன்ற தேர்தல்களும்,  ஒடுக்கப்பட்ட மக்களின், பின்தங்கிய மக்களின் ‘அரசியல் துணிச்சலை’ சீரணித்துக் கொள்ள முடியாத நிலப்பிரபுத்துவ ஆதரவு சக்திகளால் அவரும் அவரது நெருங்கிய தோழர்களும் கடுமையாக தாக்கப்பட்டதும் துன்புறுத்தப்பட்டதும் காரணங்களாக இருந்தன.
சில வருடங்களுக்குப் பிறகு, 1989 மக்களவை தேர்தல்களில் பெரும் எண்ணிக்கையிலான தலித் மக்கள் முதல்முறையாக வெற்றிகரமாக தங்கள் வாக்குரிமையை பிரயோகித்து, தோழர் ராமேஷ்வர் பிரசாத், அர்ராவில் இருந்து முதல் நக்சலைட் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தபோது, தேர்தல் நடந்துமுடிந்த உடனேயே, தன்வர் - பிடா கிராமத்தில் ஒரு ரத்தக் குளியல் நடந்தது. வாக்குரிமைக்கு விலையாக 22 பேர் தங்கள் உயிரைத் தந்தார்கள்.
பதானி தோலாவுக்கும் இதே போன்றதொரு பின்னணிதான் இருந்தது. 1978 உள்ளாட்சித் தேர்தல்களில், சாஹர் ஒன்றியத்தின் கரோன் ஊராட்சியில் முகமது யூனஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பகுதியின் நிலப்பிரபுத்துவ மதவெறி சக்திகள் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளானார்கள். இந்தப் பிரபலமான ஊராட்சித் தலைவரின் தலைமையில், கரோன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி களைச் சேர்ந்த வறிய இசுலாமிய மக்கள் இககமாலெயில் பெரும் எண்ணிக்கையில் இணைந்தார்கள். 1995ல் சாஹர் (தனி) சட்டமன்ற தொகுதியிலும், அருகில் உள்ள சந்தேஷ் தொகுதியிலும் முதல் முறையாக இககமாலெ வெற்றி பெற்றது. 1967ல் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளரும் இப்போது இககமாலெயின் முக்கிய தலைவருமான தோழர் ராம்நரேஷ் ராம் மற்றும் அர்ராவின் முன்னாள் இந்திய மக்கள் முன்னணியின் மக்களவை உறுப்பினர் தோழர் ராமேஷ்வர் பிரசாதும்தான் இந்தத் தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்.
நிலப்பிரபுத்துவ சக்திகள் பதைத்துப் போனார்கள். கையாலாகாத நிலைக்குப் போனார்கள். பீகார் மண்ணில் இருந்து இகக மாலெயை ஒழித்துக்கட்டுவது என்ற அறிவிக்கப்பட்ட நோக்கத்துடன் ரன்வீர் சேனா உருவாக்கப்பட்டது. கரோனில் மதவெறி அணிதிரட்டல் துவங்கியது. இமாம்பாடா மற்றும் கர்பாலா நிலங்கள் மீது இசுலாமியர்களுக்கு இருந்த பாரம்பரிய, அனுபவ உரிமை மறுக்கப்பட்டது. தங்கள் நிலத்தை, உரிமையைப் பாதுகாக்க நடத்திய போராட்டத்தின் ஊடே பல இசுலாமிய குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன. கரோன் ஊராட்சியின் பதானி தோலாவில் தலித் குடியிருப்பில் அவர்கள் குடியேறினார்கள். இந்த தலித் மற்றும் இசுலாமிய கிராமப்புற வறிய மக்கள் குடும்பங்களின் இந்த ஒன்றுபட்ட குடியிருப்புதான், 1996 ஜூலை 11 அன்று மரணத்தின் கொடூரமான நடனத்தை காண நேர்ந்தது.
படுகொலையைத் தொடர்ந்து பீகாரில் மிகப்பெரிய போராட்டங்கள் நடந்தன. வறியவர்கள், பின்தங்கிய சாதியினர், குறிப்பாக இசுலாமியர்கள் ஆகியோரின் பாதுகாவலன் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் லாலு பிரசாத், நீதி கிடைக்க துரிதமாக நடவடிக்கை எடுப்பார் என்று ஒருவர் எதிர்ப்பார்த்திருக்கலாம். ஆனால், தோழர் ராமேஷ்வர் பிரசாத் மற்றும் இககமாலெயின் எண்பது வயதுக்கும் மேலான தலைவர் தோழர் தகி ரஹீம் ஆகியோர் வாரக்கணக்கில் நடத்திய பட்டினிப் போராட்டம்தான், படுகொலை நடந்த இடத்தில் இருந்து வெறும் 2 கி.மீ தூரத்தில் காவல்துறையினர் இருந்தும் மணிக்கணக்கில் நடந்த இப்படி ஒரு தீவிரத்தன்மை கொண்ட படுகொலையை தடுக்க தவறியதற்காக போஜ்பூர் மாவட்ட நீதிபதிக்கு வெறும் இடம் மாற்றல் உத்தரவு வழங்க லாலு பிரசாதை நிர்ப்பந்தித்தது. ரன்வீர் சேனா ஏட்டளவில் தடை செய்யப்பட்டது. ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை; படுகொலைகளின் பட்டி யல் ஒவ்வோர் ஆண்டும் நீண்டுகொண்டே சென்றது. மிகவும் வெளிப்படையான தனது அரசியல் அறிக்கைகள் ஒன்றில், போஜ்பூரில், ஒரு பொதுக்கூட்டத்தில் இககமாலெயை எதிர்கொள்ள பிசாசுடனும் ஒன்றுபடத் தயார் என்றார் லாலு பிரசாத்!

அடுத்தடுத்த படுகொலைகள்
பதானி தோலாவைத் தொடர்ந்து லக்ஷ்மண்பூர் பாதேயிலும் படுகொலை சம்பவங்கள் நடந்ததில் வியப்படைய ஏதுமில்லை. 1997ன் இறுதியில், ஜெகனாபாத் மாவட்டத்தின் லக்ஷ்மண்பூர் பாதே கிராமத்தில் 60க்கும் மேற்பட்டவர்களை ரன்வீர் சேனா சுட்டுத்தள்ளியது. சோனே ஆற்றின் இரண்டு கரைகளிலும் இருக்கிற இரண்டு கண்ணில் படாத கிராமங்களான பதானியும் பாதேயும் தேசியச் செய்தியில் முக்கியமான பெயர்களாயின. அப்போது குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணன், பாதே படுகொலையை ‘தேசிய அவமானம்’ என்று வர்ணித்தார். ரன்வீர் சேனாவுக்கு இருக்கிற அரசியல் மற்றும் அரசாங்க ஆதரவு பற்றி விசாரிக்க நீதிபதி அமீர் தாஸ் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் நியமிக்க லாலு பிரசாதுக்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆயினும் அந்த ஆணையம் பணியாளர்கள், அதிகாரம், ஆதாரங்கள் ஆகியவை போதுமான அளவு இல்லை என்று எப்போதும் புகார் செய்து கொண்டிருந்தது. அதேநேரம், ரன்வீர் சேனா மேலும்மேலும் தனிமைப்பட்டது; 2002ல் ரன்வீர் சேனா தலைவர் பிரம்மேஷ்வர் சிங் அரசிடம் ‘சரணடைந்தார்’.
2005 நவம்பரில் பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது; பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் நிதிஷ்குமார் முதலமைச்சரானார். அரசாங்கம் எடுத்த சில முதல்கட்ட நடவடிக்கைகளில் அமீர் தாஸ் ஆணையத்தை கலைத்ததும் ஒன்று. ஆணையத்தின் முன் விசாரணைக்கு அழைக்கப்பட்ட பாஜக - அய்க்கிய ஜனதா தள தலைவர்களும்,  ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரசின் சில தலைவர்களும் கூட, பெரிய நிம்மதி பெருமூச்சுவிட்டார்கள். இரண்டாவது பதவிக் காலம் துவங்கியபோது, பிரம்மேஷ்வர் சிங்குக்கு பிணை வழங்கப்பட்டது. இப்போது உயர்நீதி மன்றம் பதானி படுகொலையாளர்கள் என தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்துவிட்டது. பாதே பற்றிய முடிவு இன்னும் தெரியவில்லை. தனது ஆட்சியில் ‘நீதியுடனான வளர்ச்சி’ இருக்கிறது என்றும் பீகார் ‘புரட்சிகர மாற்ற அலைகளை’ காண்கிறது என்றும் நிதிஷ் குமார் பெருமை பேசுகிறார்.
நிச்சயமாக பீகார் மாறியிருக்கிறது. நேற்றைய ஜகன்னாத் மிஸ்ராக்கள் மற்றும் பிந்தேஸ்வரி துபேக்களிடம் இருந்து, லாலு, நிதிஷ் போன்றவர்களிடம் அதிகாரம் மாறியது. ஆயினும், பதானி - 1ம், பதானி - 2ம், அதிகாரம் எப்போதும் நிலப்பிரபுத்துவ அதிகாரமாகவே இருப்பதை தெளிவாகக் காட்டுகின்றன. பீகாரின் நிலப்பிரபுத்துவ - மதவெறி சக்திகளின் மிகவும் நன்கு கட்டமைக்கப்பட்ட பிரதிநிதியான பாஜகவுடன் நிதிஷ் குமார் வெளிப்படையான கூட்டணி கொண்டிருக்கிறார். மேல்சாதி ஆதிக்கத்துக்கு எதிராக வாய்வீச்சு நடத்துகிற லாலு பிரசாத்தும், நிலப்பிரபுத்துவ சக்திகளை சமானதானப்படுத்தவே, குறிப்பாக கிராமப்புற வறியவர் மற்றும் இகக மாலெ தொடர்பான விசயங்களில், எப்போதும் முயற்சி செய்திருக்கிறார். நிலச்சீர்திருத்த ஆணையத்தின் அறிக்கை கிடப்பில் போடப்பட்டது தெரியாமல் நேர்ந்த தவறு அல்ல. அமீர் தாஸ் ஆணையம் அறிக்கையை சமர்ப்பிக்கும் முன் கலைக்கப்பட்டதும் அப்படியே. பதானி படுகொலையாளர்கள் விடுதலையாவதும், டசன் கணக்கிலான படுகொலைகளை திட்டமிட்டவர் பிணை பெறுவதும் அதே போன்றதே.
பீகாரின் உண்மையான மாற்றம், ஆட்சியாளர்களின் சாதிய நிறத்தை மாற்றுவதில் இல்லை. லாலுவின் ‘சமூக நீதி’ முழக்கமாகட்டும், நிதிஷ் குமாரின் ‘நல்லாட்சி’ போதனையாகட்டும், உண்மையான மாற்றம், ஆட்சியாளர் களின் அரசியல் வாய்வீச்சை மாற்றுவதில் இல்லை. உண்மையான மாற்றம், ஏட்டளவில் கண்கவர் புள்ளியியல் வளர்ச்சியை காட்டும், பீகாரின் அரை - நிலப்பிரபுத்துவ அரசியல் பொருளாதாரத்துடன் இணைந்த உலகமய, கார்ப்பரேட்மய பளபளப்பில் இல்லை.
உண்மையான மாற்றம், பதானியும் பாதேயும் தங்கள் நீதிக்காக, கவுரவத்துக்காக, ஜனநாயகத்துக்காகப் போராடும் தெம்பில்,  துணிச்சலில், உறுதியில் உள்ளது. ஆம், நீதி, கவுரவம், ஜனநாயகம் ஆகியவை வர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட பதங்கள் அல்ல; நிச்சயம், அவை வசதி படைத்தவர்களின் அதிகாரம் படைத்தவர்களின் ஏகபோக உரிமைகள் அல்ல. 1986 ஏப்ரலில் ஆர்வால் படுகொலை நடந்தபோது, காங்கிரஸ் ஆட்சியிலான பீகாரில் ஜாலியன் வாலாபாக் மீண்டும் நிகழ்த்தப்பட்டபோது, மாலெ கட்சியின் அன்றைய பொதுச்செயலாளர் தோழர் வினோத் மிஸ்ரா எழுதினார்:
‘இதுவரை அறிந்திராத, கேள்விப்படாத, நெருக்கடியான, சகதி நிறைந்த தெருக்கள் கொண்ட, சிறிய ஆர்வால் நகரத்தில் வறிய விவசாயிகளின் கண்டுகொள்ளப்படாத மரணங்கள், பீகாரில் அதிகாரத்தில் இருப்பவர்களின் அரசியல் நெருக்கடியை வடிவமைக்க துவங்கிய போது, கடைசியில், கதாநாயகர்கள் வந்து விட்டார்கள் என்று உறுதியாக சொல்ல முடியும்’.
நீதிமன்ற தீர்ப்புக்கள் எப்படியிருந்தாலும், ஆர்வால், பதானி, பாதே ஆகியவை, மங்கிப் போக மறுக்கின்றன; பீகாரில் நீதிக்கான, ஜனநாயகத்துக்கான போராட்டத்துக்கு புத்துணர்வுமிக்க ஆற்றலை வழங்குகின்றன.
1974ல் பீகார், டில்லியில் முளைவிடத் துவங்கிய எதேச்சதிகாரத்துக்கு இளைஞர்களின் கனவுகளுடன், விருப்பங்களுடன், சவால் விடுத்தது. லாலு பிரசாதின் ‘சமூகநீதி ஆட்சி’, ஊழல்கள், படுகொலைகள் என்று சீரழிந்தபோது, சமூக நீதிக்கு, சமூக மாற்றம் அவசியம் என்று சொல்லி பீகார் போராடியது. இன்று நிதிஷ் குமாரின் ‘நீதியுடனான வளர்ச்சி’, ‘அநீதியுடனான கொள்ளை’ என்று வெகுவேகமாக மாறும் போது, ‘நல்லாட்சி’ கட்டுக்கடங்காத காவல் துறை ஆட்சிக்கு வழிகோலும்போது, ஜனநாயகம் பற்றி கனவு காண்கிற, ஜனநாயகத்தை பாதுகாக்க விரும்புகிற ஒவ்வொருவரும் பதானி தோலாவில் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்க வேண்டும்; நீதி மற்றும் நிஜமான மாற்றம் என்ற பதாகையை உயர்த்திப் பிடித்து பீகாரை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும்.


ஒப்பந்தம்

பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தில் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது

நிலவன்

உலகில் உள்ள பாலூட்டிகளில் யானைக்கு மட்டும் பிரசவ காலம் 24 மாதங்கள். சிங்கம், புலி, ஆடு, மாடு, மனிதர் போன்ற ஜீவராசிகளின் பிரசவக் காலம் குறைவானதுதான். 08.06.2012 அன்று கையொப்பமான பிரிக்கால் ஒப்பந்தம் யானைக்கு நிகரானது.
போராட்டங்கள், ஒப்பந்தங்கள் தொழிற்சங்க இயக்கத்தில் புதியவை அல்ல. அப்படியானால், பிரிக்கால் போராட்டமும் ஒப்பந்தமும் எந்த வகையில், முன்னுதாரணமானவை? அரசு, தொழிலாளர் துறை, தொழிற்சங்க இயக்கம், நமது தொழிலாளர்கள் உட்பட இன்னும் பலர், இகக மாலெ, ஏஅய்சிசிடியுவைச் சேர்ந்தவர்களுக்கு, மோதத் தெரியும், எந்தத் தாக்குதலையும் எதிர்கொண்டு, வலிமை குறையாமல், வலிமை கூடுதலாகி, மீண்டும் வரத் தெரியும் என்று நன்கு உணர்ந்திருந்தனர். ஆனால், பல தரப்பினரும், இவர்களால் முடிக்க முடியுமா, எப்படித்தான் முடிக்கிறார்கள் என்ற கேள்விகளை சுமந்திருந்தார்கள்.
08.06.2012 அன்று, தொழிலாளர் ஆணையர் தலையீட்டுடன், கூடுதல் தொழிலாளர் ஆணையர் (சமரசம்) (பொறுப்பு) அவர்கள் முன்பு சென்னையில் கையெழுத்தான ஒப்பந்தம், மேலே எழுந்த கேள்விகளுக்கு என்ன பதில் சொன்னது? 07.02.2012 அன்று கையொப்பமான புரிந்துணர்வு ஒப்பந்தம், 08.06.2012 வரை கையொப்பமாகாமல் இழுபட்டதன் மர்மம் என்ன? இவர்கள் மட்டும் சமரசமே செய்துகொள்ளாமல் ஒப்பந்தம் முடித்து விட்டார்களா?
பிரிக்கால் தொழிலாளர் போராட்டங்களோடு நெருக்கமான தொடர்புடைய கட்டுரையாளர், தான் கேட்டறிந்த விவரங்களில் இருந்து பதில்கள் தருகிறார்.
சுருக்கமான பின்னணி
 2007 மார்ச்சில், சங்க முன்னணிகள் உத்தராஞ்சலுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட போது, போராட்டம் வெடித்தது. அதற்கு முன்னால் சில பத்தாண்டுகள் கொதிப்பும் சீற்றமும் இருந்தன. குறைந்த சம்பளம், அவமரியாதைகள், சாட்டை வீசி வேலை வாங்குதல், வரைமுறையற்ற உற்பத்தி வாங்குதல், தண்டனைகள், பழிவாங்குதல்கள், துரோக சங்கங்கள் என்ற வலிகள் நிறைந்த வரலாற்றால்தான் சென்னையில் இருந்து ஒரு தலைவரைக் கூட்டி வந்து சங்கம் துவக்கினார்கள்.
 அமைதியை விரும்பிய சங்கம் என்ற மரத்தை, நிர்வாகம் என்ற காற்று சும்மா விடாமல் பழிவாங்கித் தாக்கியது. ஒடுக்குமுறை எதிர்ப்பு, சுரண்டல் எதிர்ப்பு, சுதந்திர தாகம், பிளான்ட் 1, பிளான்ட் 3 மற்றும் 12 துணை யூனிட் தொழிலாளர்களை போராட்டத்தில் இறக்கியது. (துவக்கத்தில் இருந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் மட்டும் முடிவில் இல்லை என்பது பெரிய சோகமே).
 வெளியார் தலைமை, மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள், தொழிலுக்கே ஆபத்து, கோவைக்கே ஆபத்து, அமைதிக்கு ஆபத்து, அரசு தலையிட்டு, இரும்புக்கரம் கொண்டு நசுக்க வேண்டும் என்ற நிலையையே எடுத்தது நிர்வாகம். ஊடகங்கள் நிர்வாகம் பக்கம் நின்றன. பகுதிக் கதவடைப்பு, சம்பள உயர்வு முடக்கம், ஒப்பந்த சம்பள மறுப்பு, பிரேக் இன் சர்வீஸ், ஊக்க ஊதியப் பிடித்தம், சில நூறு ஒழுங்கு நடவடிக்கைகள், தற்காலிகப் பணி நீக்கங்கள், பணி நீக்கங்கள், தான் யாரோ, யூனிட் தொழிலாளி யாரோ என்று சொல்லிக் கொண்டு 740 யூனிட் தொழிலாளர்களுக்கு வேலை மறுப்பு எனத் தன் கைவசம் இருந்த எல்லா ஆயுதங்களையும் நிர்வாகம் ஏவியது. பத்தாயிரத்துக்கும் குறைவான பட்டினிச் சம்பளம் பணிய வைக்கும் என நம்பியது.
 சங்கம் ஆலைப் போராட்டத்தை மக்கள் மன்றத்துக்குக் கொண்டு சென்றது. மற்ற உழைக்கும் மக்கள் பிரச்சனைகளையும் எழுப்பியது. சங்க அங்கீகாரச் சட்டம், பயிற்சியாளர் பாதுகாப்புச் சட்டம், பயிற்சியாளர்க்கு குறைந்தபட்ச சம்பளக் கோரிக்கை ஆகியவற்றில் பிரிக்கால் தொழிலாளர் முத்திரை பதிந்தது. கோவை, ஈரோடு, சென்னை என போராட்டம் நீண்டது. உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற வழக்குகள் நடந்தன. இரண்டு 10 பி ஆணைகள் போடப்பட்டன. சட்டமன்றம் மூன்று முறை போராட்டம் பற்றி பேசியது. பெண் தொழிலாளர் முற்றுகை, காலவரையற்ற பட்டினிப் போராட்டம், அரசுத் தலையீட்டைக் கொண்டு வந்தன. அன்றைய அமைச்சர், சங்கத்தின் மீது எரிச்சல் கொண்டிருந்தாலும், தொழிலாளர்க்கு எதிராக செயல்படவில்லை. தொழிலாளர் துறையும் சட்டப்படி நடந்தது. இவற்றுக்குப் பின்னணியில் சில ஆயிரம் தொழிலாளர்களின் எழுச்சிமிகு போராட்டம் இருந்தது.
 ஜ÷லை 23 2008, திலகர் கைது, மும்பை தொழிலாளர் அரசியல் போராட்ட நூற்றாண்டை இந்தியாவிலேயே, சுதந்திர தாகத்துடன் பிரிக்கால் தொழிலாளர்கள் அனுசரித்தார்கள். அரசியல் கூடாது எனச் சொல்லி நிர்வாக ஆதரவாளர்கள் சிலர் புறப்பட்டனர். இரு சங்கங்களின் பொதுச் செயலாளர்கள் நிர்வாகம் பக்கம் சென்றனர்.  தோழர் திபங்கர் கலந்துகொண்டபொதுப்பேரவையில், என்ன தியாகம் செய்தாலும், ஆகஸ்ட் 20, 2008 பொது வேலை நிறுத்தம் நடந்தே தீரும் என தோழர் குமாரசாமி அறிவித்தார். வேலை நிறுத்தம் நடந்தது. நிர்வாக ஆதரவுக் கருத்துக்கள் எடுபடவில்லை. அச்சுறுத்தல்கள், ஆசை வார்த்தைகள் சங்கத்தை உடைக்கவில்லை.
 செப்டம்பர் 21, 2009 அன்று ஆலையில், விரும்பத்தகாத மரணம் ஒன்று நடக்கிறது. சிதம்பரம், மல்லிகார்ஜ÷ன் கார்கே கொதித்து எழுந்து, காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணனிடம், சங்கத்தை முற்றுகையிட்டு நசுக்கச் சொல்கிறார்கள். காவல்துறை, கோவை முதலாளிகளின் ஏவல் துறையாய் மாறி, தோழர் குமாரசாமி, பெண் தொழிலாளர்கள் நால்வர், சங்கத் தலைவர்கள் அனைவர் மீதும் பொய் வழக்குப் போடுகிறது. தலைமை தோழர்கள் 100 நாட்களுக்கும் மேல் சிறையில் இருந்த போது, சங்கம் உடையவில்லை; சிதறவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறைக்குச் சென்று சிறைபட்டவர்களை சந்தித்தனர். தோழர்கள் சிறை மீண்டபின் காவல்துறை தடையை முறியடித்து, 2010ல் கோவை முதல் சென்னை வரை நெடும்பயணம் நடந்தது. 2010ன் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய மே தினக் கூட்டம் நடந்தது. 10.10.2010 அன்று பல ஆயிரம் பேர் கலந்துகொண்ட தொழிலாளர் குடும்பத் திருவிழா நடந்தது.
 இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் வெல்ல முடியாத நிலையில் திருவாளர்கள் அய்தாரி, ரகுபதி பாலம் அமைக்க முயன்றனர். அமைதி திரும்புகிறது. 2011ல் பிளான்ட் 1, பிளான்ட் 3 சங்கங்கள் இணைக்கப்பட்டு கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமைச் சங்கம் உருவானது. ஒரே பேச்சு வார்த்தை முகவர் என சங்கத்தை நிர்வாகம் அங்கீகரித்தது. தோழர் குமாரசாமியுடன் பேசத் துவங்கினார்கள்.
 முறைசாரா சமரச முயற்சிகள் துவங்கிய பிறகு, 302 வழக்கோடு தொடர்புடையவர்கள் மற்றும் லட்சுமணன் என்ற ஒரு தொழிலாளி மட்டும் வேலை நீக்கம் செய்யப்படுகின்றனர்.
 சங்க அங்கீகாரத்துக்குப் பிறகு, 44 அய்எஸ்விசி  தொழிலாளர்கள் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர்.
மோதத் தெரிந்த சங்கத்திற்கு, முடிக்கத் தெரியும் என்று காட்டும் சங்கடமான, மற்றும் சமரசங்கள் செய்ய வேண்டிய சூழலுக்குள் சங்கம் நுழைகிறது. ஒரு ரூபாய் வேண்டாம், தோழர் எஸ்.கேயுடன் நிர்வாகம் ஒருமுறை பேசினால் போதும் என வீரத்தோடு நின்ற தொழிலாளர்கள், விவேகத்தோடு சங்கத்தை நிற்க வைத்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்த விரும்பினார்கள்.
அதிகாரபூர்வமற்ற, அதிகாரபூர்வ பேச்சு வார்த்தைகள் துவங்கி 2 ஆண்டுகள் ஆன பிறகுதான், புரிந்துணர்வு ஒப்பந்தமும், 12(3) ஒப்பந்தமும் கையொப்பமாகின்றன. சங்கங்களை ஜனநாயகப்படுத்துதல், தொழிலாளர்களை அரசியல்படுத்துதல் என்ற இரண்டு புரட்சிகரக் கடமைகளையும் அக்கம்பக்கமாக, ஒன்றுக்கு ஒன்று வலுச்சேர்க்கும் விதத்தில் நிறைவேற்றியதில்தான் பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தின் முன்னுதாரணத் தன்மை உள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட முறைகள், தோழர் குமாரசாமி, தொழிலாளர்களைச் சந்தித்திருப்பார். கிட்டத்தட்ட எல்லா தொழிலாளர்களிடமும், அலுவலகத்தில், அவர்கள் வாழும் இடங்களில் சில முறைகளாவது நேரில் தனித்தனியாகச் சந்தித்து பேசியிருப்பார். 5 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட நாட்கள் கோவையில் தோழர் கள் வீடுகளில், அலுவலகத்தில் தங்கியிருப்பார். சங்க முன்னணிகள் தோழர்கள் கிருஷ்ண மூர்த்தி, குருசாமி, பாலசுப்ரமணியம், ஜானகிராமன் மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்ட தோழர்களின் தியாகம், அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு, பெண் தொழிலாளர் பங்களிப்பு, நிச்சயமாய் முன்னுதாரணங்களே.
07.02.2012 அன்று கையொப்பமான எம்ஓயு புரிந்துணர்வு ஒப்பந்தம், 12(3) ஒப்பந்தமாகாமல் யூனிட் பிரச்சனை எழுந்தது. அந்த சோதனையான நேரம், நீண்டகால காத்திருப்பின் அலுப்பு, சலிப்பு, எல்லாவற்றையும் தாண்டி, கோவை பிரிக்காலின் ஆண், பெண் தொழிலாளர்கள், அப்புவின் தோழர்களோடு கரம் கோர்ப்போம் என இககமாலெயின் 9ஆவது மாநில மாநாட்டையும் பேரணியையும் 2012 மார்ச் 30, 31, ஏப்ரல் 1 தேதிகளில், கோவை சிவக்கசிவக்க நடத்திக் காட்டினார்கள்.
எம்ஓயு மூலம் வரும் ஒப்பந்தம் பழைய சுமைகளை இறக்கிவைக்கும், உண்மையான ஒப்பந்தம் 01.04.2014ல்தான் அமையும் எனச் சங்கம் சொன்னது.
 ஆப்சென்டியிசம், அய்எஸ்சிவி, வேலை நீக்கம் ஏன் கூடாது என இரண்டாவது காரணம் கோரும் குறிப்பாணை பெற்றவர்கள், தற்காலிகப் பணிநீக்கத்தில் உள்ளவர்கள், வேலைநீக்கம் செய்யப்பட்டவர்கள் என, சங்க அங்கீகாரம் துவங்கி ஒப்பந்தம் முடியும் வரை 118 பேர் வேலை வாய்ப்புக்கு வழி ஏற்பட்டுள்ளது.
 தற்காலிகப் பணிநீக்கத்தில், வேலைநீக்கத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பிரச்சனை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர வழி உருவாகி உள்ளது.
 01.07.2010 முதல் 30.06.2014 வரை முதலாண்டு ரூ.245, இரண்டாம் ஆண்டு ரூ.255, மூன்றாம் ஆண்டு ரூ.265, நான்காம் ஆண்டு ரூ.275 என நான்கு ஆண்டுகளுக்குமாக ரூ.1040க்கு ஒப்பந்தம் முடிந்துவிட்ட இடத்தில், அந்த ரூ.1040க்கு மேல் ஒரு ரூபாய் கூட பெற முடியாது என நிர்வாக ஆதரவாளர்கள் சவால்விட்ட இடத்தில், 01.01.2012 முதல் 30.06.2014 வரை, அந்த ரூ.1040 + 01.01.2012 முதல் கூடுதலாய் ரூ.1000 என ஒப்பந்தம் ஆனது.
 நிர்வாகம் தனது தொழிலாளியே இல்லை என மறுத்த யூனிட் தொழிலாளர்கள் மத்தியில் இருந்து 150 பேரை 3 கட்டங்களில் பிரிக்கால் தொழிலாளியாக வேலைக்கு எடுத்துக்கொள்ள சம்மதித்துள்ளது. 590 பேருக்கு சட்ட பாக்கிகள், சர்வீஸ் முடிந்த ஆண்டுக்கு 45 நாட்கள் கிராஸ் சம்பளம் + ரூ.10,000 நஷ்டஈடு தர நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.
எம்ஓயு போட்ட பிறகு, ஒப்பந்தம் முடிக்க தாமதமானது யூனிட் தொழிலாளர்களுக்குக் கூடுதலாக ஏதாவது செய்ய முடிகிறதா என்று பார்த்ததால்தான் நிகழ்ந்தது. இங்கேதான், அரசும் காவல்துறையும், எம்ஓயு தாண்டி ஓர் அங்குலம் கூட நகர விடாது, உங்கள் மீதுதான் திரும்பும் என, நிர்வாகத் தரப்பில் சொல்லப்பட்டது. அதற்குப் பிறகு நிகழ்ந்தவை, சாமி வரம் தந்தாலும் பூசாரி தடுக்கும் எனக் காட்டின. நிர்வாகம், தொழிலாளர்கள் தாமதம் வேண்டாம் என கருதுவதால், சங்கத்தால் போராட முடியாது, போராட முன்வந்தால், அரசு தன் பக்கம் நிற்கும், சங்கம் சிதறும் என்ற எண்ணத்தில், திடீரெனப் புதிதாக, 01.01.2012 முதல் 31.05.2012 வரை, கூடுதல் உற்பத்தி கிடைக்காததால், 51 நாட்கள் சம்பளம்தான், 5 மாதங்கள் சம்பளம் கிடையாது என நின்றது. எம்ஓயுவுக்கு விரோதமாக, 19.04.2012 நகல் ஒப்பந்தம் தரும் வரை சொல்லாததை, 01.05.2012 அன்று சொன்னது. இதில் வேறு ஏதோ மர்மமும் சக்திவாய்ந்தவர்களின் பின்புலமும் இருப்பதைப் புரிந்து கொண்ட சங்கம், ஒரு பக்கம் எதிர்ப்பு மறுபக்கம் சமரச முயற்சிகள் என எடுத்தது. நழுவப் பார்த்த நிர்வாகத்தை 01.06.2012 முதல் ஒப்புக்கொண்ட உற்பத்தித் தருவதாகச் சொல்லி, ஒப்பந்தத்தில் இருந்து விலக முடியாமல் செய்தது. 5 மாதச் சம்பளமா அல்லது 51 நாட்கள் சம்பளமா என்ற பிரச்சனையில், சம்பளத்தை விட்டுக்கொடுக்காமல், அக்டோபரில் பேசித் தீர்ப்பது என முடிந்துள்ளது. 15.07.2012 முதல் 8% கூடுதல் உற்பத்தி எனவும், தாமதம் ஏற்பட்டதால் 01.07.2012க்கு பதில் 01.09.2012 முதல் யூனிட் தொழிலாளர்கள் 50 பேர் முதல் கட்டமாக வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள் எனவும் முடிந்துள்ளது. எம்ஓயு ஒப்பந்தமாகி விட்டதால் நிர்வாகமும் அதன்படிதான் நடந்து கொண்டாக வேண்டும். 8% கூடுதல் உற்பத்தித் திறன் என்பது, உண்மையில் உற்பத்தித்திறன் உயர்வு என நிர்வாகம் மனம்போன போக்கில் பேச முடியாமல் செய்கிறது என்பதை, தொழிலாளர்கள் புரிந்துகொண்டுள்ளனர்.
எழுச்சிப் போராட்டங்கள் நிறைந்த காலத்தில் சங்கம் நடத்துவதைவிட, மோதல் தணிந்துள்ள சுமுக நிலையில், சங்கம் நடத்துவது மிக மிக சிரமமானது. சிரமம்தான், ஆனால் இந்தக் கட்டத்திலும், வர்க்க உணர்வு பேணி வளர்க்கப்பட்டு, அடுத்து ஒரு போராட்டம் என்றால், பாயும் நிலையில் தொழிலாளர்கள் தயாரிக்கப்பட வேண்டும். சண்டை நடக்கும் போது சமாதானம் பற்றியும், சமாதானம் நிலவும் போது சண்டை பற்றியும் ஒரு பார்வை வேண்டும்.
பிரிக்கால் தொழிலாளர் போராட்ட சங்கம் சமரசம் செய்துகொண்டது, சங்கத்தை நிலைநிறுத்தவும், தீராத பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும்தான். அங்கீகாரம், சம்பள உயர்வு, யூனிட் தொழிலாளர் பிரச்சனை தீர்வு, ஒழுங்கு நடவடிக்கைகள் தீர்வு என நான்கு விசயங்களும் முடிந்துள்ளன. உண்மையான சம்பள உயர்வு, மேலும் வலுவான சங்கம் கொண்டு, 01.07.2014 முதல் பார்த்துக் கொள்ளப்படும். ஏஅய்சிசிடியு, இககமாலெ, பிரிக்காலில் காலூன்றி நிற்க முடிந்துள்ளது, தமிழகம் முழுவதுமுள்ள போராட்ட சக்திகளுக்கு நம்பிக்கை தரும்.
இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவக் கோளாறு நூலில், தோழர் லெனின், சமரசங்கள் பற்றிச் சொல்கிறார்:
‘வேலைநிறுத்த நிதி போதாமை, வெளி ஆதரவு இல்லாமை, பட்டினி அல்லது அலுத்து ஓய்வதால் கூட சமரசம் ஏற்படுகிறது. சில நிலைமைகளில் இந்த சமரசத்திற்கு ஒப்புக்கொண்ட தொழிலாளர்கள், புரட்சிகர அர்ப்பணிப்பையோ, போராட்டங்கள் தொடர்வதற்கான தயார் நிலையையோ குறைத்துக் கொள்வதில்லை. இது ஒரு வகை சமரசம்.
வேறொரு வகை சமரசமும் உண்டு.
வேலைநிறுத்தத்தை உடைப்பவர்கள் செய்யும் சமரசமும் உண்டு. வெளிநிலைமைகள் மீது பழிபோட்டு, தம் சுயநலத்திற்காக, கோழைத்தனத்தால், முதலாளிகளுக்கு ஜால்ரா போடும் குணத்தால், மிரட்டலுக்கோ, இணங்க வைத்தலுக்கோ, சலுகைகளுக்கோ, முதலாளிகளின் புகழ்ச்சிக்கோ பலியாகி செய்துகொள்ளும் சமரசங்களும் உண்டு.’
பிரிக்காலிலும் சமரசம் உண்டு. அது முதல் வகை சமரசம் என்று சொல்லாமலே புரியும்.


மண்ணில் பாதி

காதல் செய்வீர் உலகத்தீரே!

உத்தரபிரதேசம், அரியானா, பஞ்சாப் மத்தியபிரதேசம் போல தமிழ்நாடும் கவுரவமாகிக் கொண்டு வருகிறது. அந்த மாநிலங்களில் உள்ள மிக இறுக்கமான சாதிய, நிலப்பிரபுத்துவ கட்டுப்பாடுகள் காரணமாக கவுரவக் கொலை நடப்பதுபோல, பெரியார் மண்ணிலும், தமிழ் நாட்டிலும் திராவிடக் கட்சிகள் ஆட்சிகளில் கவுரவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. காதலர்களுக்குப் பாதுகாப்பு தர மார்க்சிஸ்ட் கட்சியினர் முன்வந்துள்ளனர். பெரியோர்கள் நிச்சயித்த திருமணங்களுக்கு அவர்கள் எதிரிகள் இல்லை என்றும் சொல்லியுள்ளனர்.
ஆருஷியின் கொலை கவுரவக் கொலை என்று தெரிந்துவிட்டது. சாதாரண கவுரவம் அல்ல. மெத்தப் படித்த கவுரவம். ஆருஷியின் தாயும் தந்தையும் மருத்துவர்கள். நுனி நாக்கு ஆங்கிலம், நாகரிக உடைகள் ஆகியவற்றுக்குள் இருண்டுபோன பழக்கவழக்கங்கள் இருப்பது மெல்ல மெல்ல தெரிய வருகிறது.
கவுரவக் கொலை செய்வர்கள் நிச்சயம் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள். இதிகாசங்களில், புராணங்களில் பாடப்படுகிற கடவுள்கள் நிஜம் என்று நம்புபவர்கள். பல கடவுளர்கள் ஓடிப்போய் மணம் செய்துகொண்டவர்களே. ருக்மணி கிருஷ்ணனுடன் ஓடிப்போய்தான் திருமணம் செய்துகொண்டாள். அர்ச்சுனனும் சுபத்ராவும் ஓடிப்போனார்கள். சந்திரக் கடவுள் பிரஹஸ்பதியின் மனைவி தாராவுடன் ஓடிப் போனதாகக் கதை உண்டு. கடவுளர்கள் செய்து கொள்ளும் கந்தர்வத் திருமணம் ஓடிப் போகும் திருமணம்தான். இந்திய வரலாற்றில் வீரன் என்று கருதப்படுகிற பிருதிவிராஜனும் சம்யுக்தாவும் ஓடித்தான் போனார்கள்.
கவுரவக் கொலைகள் செய்பவர்களுக்கு, அமெரிக்கா சொர்க்க பூமி என்ற கருத்தும் இருக்க, அனைத்து வாய்ப்புக்களும் உண்டு. அமெரிக்காவில் 50 லட்சம் பேர் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்கிறார்கள். ஸ்கேன்டிநேவியன் நாடுகளில் 50 சதம் குழந்தைகள் திருமணம் செய்துகொள்ளாதவர் களுக்குப் பிறந்தவை.
கடவுளர்களை, மேற்கத்திய நாடுகளை கொண்டாடுபவர்கள் தங்கள் குடும்பங்களில் யாரும் ஓடிப்போகக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கிறார்கள். ஏனென்றால், குடும்பத்தின் கவுரவம் அந்த குடும்பத்தின் உடைமைகளோடு தொடர்புடையதே தவிர, அதற்கப்பால் ஏதுமில்லை. சாதியும் சாதியும் சேர்வதை விட சொத்தும் சொத்தும் சேர்வதும் சொத்து கைவிட்டுப் போகாமல் இருப்பதும் கவுரவத்தின் பெயரால் மூடிமறைக்கப்படும் அடிப்படை நோக்கம். ஏதுமற்றவர்கள் மத்தியில் இந்த விதிகள் ஒப்பீட்டுரீதியில் தளர்வானவையாக இருக்கின்றன.
குடும்பம் பெண்ணுக்கு பாதுகாப்பு தரும் இடம் என்பது வெறும் கண்துடைப்புக் கதை. பெண்கள் மீதான குடும்ப வன்முறையைத் தடுக்க, பலப்பல போராட்டங்களுக்குப் பிறகு சட்டம் போடப்பட்டுள்ள நாட்டில் நாம் வாழ்கிறோம். கவுரவக் கொலைகள் குடும்ப கவுரவத்தின் பெயரால்தான் நடக்கின்றன. முதலாளித்துவ சமூகத்தில் குடும்பம் ஒரு பொருளாதார அலகு.
2011 தேர்தல் பிரச்சாரம் நெடுக, கருணாநிதியின் குடும்ப அரசியலுக்கு சவால்விட தனக்கு மட்டுமே தகுதி உள்ளது என்பதை தமிழக மக்களுக்கு எடுத்துச் சொல்ல தனக்கு குடும்பம் இல்லை, தமிழக மக்கள்தான் என் குடும்பம் என்று ஜெயலலிதா சொல்லிக்கொண்டிருந்தார். தகப்பனுக்கு தப்பாத தவப்புதல்வர் ஸ்டாலின், குடும்பம் இல்லை, குடும்பம் இல்லை என்கிறார், அதற்கு நாம் என்ன செய்வது என்று ஒரு கூட்டத்தில் கேட்டார். கழகக் கண்மணிகள் கைகொட்டி ரசிக்க, தமிழ்நாட்டு அரசியல் நாகரிகம் கொடி கட்டிப் பறந்தது.
பெண்கள் வெளியில், வேலைக்கு, பொது வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்குவது என்றால், அது குடும்பத்துக்குப் பிறகு, அல்லது, குடும்பப் பெண்கள் பொதுவெளிக்கு பொருந்தாதவர்கள், பொது வாழ்வில் ஈடுபடும் பெண்கள் குடும்பம் இல்லாதவர்கள், அவர்களில் வெற்றிகரமாக செயல்படுபவர்கள் இருந்தால், அதற்கு அவர்களுடைய குடும்பமின்மையே பிரதான காரணம் என்றெல்லாம் இன்னும் பத்தாம்பசலிக் கருத்துக்கள் வலுவாக நிலவிக் கொண்டுதான் இருக்கின்றன.
ஒபாமாவை விட வெற்றிகரமான வழக்கறிஞராக இருந்த மிச்செல் ஒபாமா தனது வெற்றிகரமான வழக்கறிஞர் வேலையை விட்டுவிட்டு, வெறும் ஒபாமாவின் மனைவியாகிவிட்டார். அமெரிக்க அதிபரின் மனைவி என்ற தகுதியுடன், அந்த அடையாளத்துடன் அதற்கு ஏற்ப திறம்படச் செயல்படுகிறார்.
அவருக்கு முன்பு இருந்த அதிபர்களின் மனைவிகளுக்கும் அடையாளம் மனைவிகள் என்பது மட்டுமே. ஹிலாரி முதலில் திருமதி கிளின்டனாகத்தான் அடையாளப்படுத்தப்பட்டார். இந்திய பிரதமர்களின் மனைவிகளும் மனைவிகளாக மட்டும் அடையாளப்படுத்தப்படுபவர்களே. உலகம் முழுக்க முதல் பெண் மணிகள் என்று அழைக்கப்படும் இந்த மனைவிகள் ஒரு பொருளில் சுயமற்றவர்கள். கணவன்மார்களின் நீட்டிப்பு. தொழிலாளி எந்திரத்தின் தொங்குசதை என்று மார்க்ஸ் சொல்வது போல், இவர்கள் கணவன்மார்களின் தொங்குசதைகள். அவ்வளவே. இவர்கள் எவ்வளவு திறமையான மனைவிகளாக நடந்து கொள்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்கள் கணவன்மார்களின் மதிப்பு கூடும். அல்லது, கணவன்மார்களின் கவுரவத்தை மேம்படுத்த இவர்கள் தங்கள் நடையுடை பாவனைகளில் இருந்து அனைத்தையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். ஏதேதோ பாடிய பாரதி கூட இந்த விசயத்தில் சற்று தடுமாறிவிட்டான். பெண்ணை, காதலொருவனை கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுக்கச் சொல்லிவிட்டான்.
இதே பாரம்பரியத்துடனான பிரான்சில் மட்டும் இப்போது கொஞ்சம் மாற்றி யோசித்திருக்கிறார்கள். வேலரி ட்ரையர்வெய்லர், பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டின் வாழ்க்கை இணை. அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்கிறார்கள். ஆங்கிலத்தில் லிவ் - இன் என்கிறார்கள். அவர்கள் கணவன் - மனைவி அல்ல. வேலரி இதற்கு முன் இரண்டு முறை விவாகரத்து பெற்றவர். வேலரிக்கு மூன்று குழந்தைகள். ஹாலண்டுக்கு நான்கு குழந்தைகள். தனது குழந்தைகளின் தந்தை ஹாலண்டு அல்ல என்றும் அவர் அதிபராகி விட்டதால் தனது வேலையை விட்டுக் கொடுக்க முடியாது என்றும் தங்கள் இருவருக்கும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றும் வேலரி சொல்லியுள்ளார். செய்கிறார். அவர் ஒரு வெற்றிகரமான பத்திரிகையாளர். அரசியல் விமர்சகர். அவர் பத்திரிகையாளர் வேலையைத் தொடர்கிறார். அரசியல் செல்வாக்கு பத்திரிகை பணிகளில் குறுக்கிடக் கூடாது என்ற, அவர் வேலை பார்க்கிற பாரீஸ் மேட்ச் என்ற பத்திரிகையின் விதிகளுக்கு ஏற்ப, இனி அவர் அரசியல் தொடர்பான பத்திரிகைப் பணிகளில் இருக்க மாட்டார். கலாச்சாரம் தொடர்பான பணிகளைச் செய்வார். நிச்சயம், ஹாலண்டின் மதிப்பைக்கூட்ட வேலரி மெனக்கெடமாட்டார்.
மார்க்சிஸ்டுகளும் முன்மாதிரி பெண்கள் என்று ஜென்னியை, குரூப்ஸ்காயாவைத்தான் இன்று வரை முன்னிறுத்துகிறார்கள். ரோசா, அலெக்சான்ட்ரா பெயர்கள் அவர்கள் நினைவில் வருவதில்லை. அவர்கள் அதிகாரத்தில் இருந்த பெண்கள். கம்யூனிஸ்ட் கட்சிகளில் தலைவர்கள். ஆண் மரபணுக்களின் இயக்கம் ரோசாவை, அலெக்சான்ட்ராவை இயல்பாகக் கண்ணுக்கு அப்பால் வைக்கப் பார்க்கிறது.
என்றோ, யாரோ சொல்லி வைத்தார்கள், செய்து விட்டார்கள் என்பதால் மிச்செல் தொடர்கிறார். வேலரி அது அவசியமில்லை என்கிறார். இதனால் வானம் இடிந்து கீழே விழுந்து விடவில்லை. எழுதப்பட்ட அரசியல் மரபு எதுவும் கெட்டுப் போய் விடவில்லை. பிரான்ஸ் அரசியல் போக்கு நின்றுவிடவில்லை.
வேலரிக்கள் உலகத்துக்குப் புதியவர்கள். மிச்செல்கள் தனியர்கள் அல்ல. உலகம் முழுக்கப் பெண்களை அப்படித்தான் நடந்து கொள்ளச் சொல்கிறார்கள்.
குடும்பமின்மை நல்லது. அப்படியானால் திரும்ப கற்காலத்துக்குச் செல்வதல்ல. குடும்பம் திருமணம் என்ற ஒப்பந்தம் இன்றி, விதிகள் இறுக்க, பொருளாதார அடிப்படை நெருக்க, ஆண், பெண் இருவருக்கும் மூச்சுத்திணறிப் போவது இன்றி, இரண்டு பேர் விருப்பத்தின் அடிப்படையில் வேலரியின் குடும்பத்தைப் போலக் கூட தொடரலாம்.
சமூகத்தில் பல பிரச்சனைகளுக்கு இதனால் தீர்வு ஏற்படலாம். கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.உதயகுமார், இந்தப் பகுதி காவல்துறையினரால் சூழப்பட்டபோது, பணிக்கு அமர்த் தப்பட்ட காவல்துறையினர் பெரும்பான்மையானோர் திருமணமாகாத இளைஞர்கள் என்றும், காட்டில், மேட்டில் தங்கி, இங்கு காவலுக்கு இருக்கிற இந்த ஆறு மாதங்களில் காவல்துறையினருக்குள் கிட்டத்தட்ட 25 ஜோடிகள் திருமணம் செய்துகொண்டுள்ளனர் என்றும், நாங்கள்தான் உண்மையிலேயே அமைதிக்காக நிற்கிறோம் என்றும் சொன்னார்.
காதல் செய்யச் சொல்லி உலகத்தாருக்கு அழைப்பு விடுத்தான் பாரதி. அதனால் நிபந்தனைகள் அற்ற உறவுகள் உருவாகும். வேலரி போன்ற சுதந்திர பெண்கள் உருவாவார்கள்.  பெற்றோர்களுக்கு, உறவினர்களுக்கு கவுரவக் கொலை செய்யும் அவசியம் ஏற்படாது. கவுரவத்துக்கு காதல் இடையூறல்ல.


கட்டுரை

தண்ணீ வாங்கலையோ தண்ணீ....

ஜி.ரமேஷ்

ஏப்ரல் 22 அன்று கொளுத்தும் வெயிலில் தண்ணீர் எடுக்க நடையாய் நடந்து இறந்தே போனார் பார்வதி ஜாதாவ். அவர் இறப்பிற்குப் பின்னர் மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள டொல்காரா கிராமத்தை நோக்கி மந்திரிகளும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் படையெடுத்தனர். மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனாவோ கிராமத்து மக்களுக்கு மூடிய பிளாஸ்டிக் டம்ளர்களில் தண்ணீர் கொடுத்து கிராம மக்களின் சோகத்தை அதிகரித்தது. பார்வதி ஜாதாவிற்கு 5 குழந்தைகள். மூத்த பெண் 14 வயது. கடைசிப் பெண் 8 வயது. எல்லாரும் வீட்டில் வேலை செய்யும் நேரத்தை விட அதிக நேரம் தண்ணீர் எடுக்கத்தான் செலவு செய்தார்கள். 6 முதல் 8 மணி நேரம் தண்ணீருக்காக, வீட்டிலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் இருக்கும் கிணற்றடியில் காத்துக் கிடக்க வேண்டும். எப்போதாவது வரும் தண்ணீர் லாரி 4000 லிட்டர் தண்ணீரை அந்தக் கிணற்றில் ஊற்றிச் செல்லும். அந்தத் தண்ணீரை கிராமத்துப் பெண்கள் வரிசையில் காத்துக் கிடந்து எடுத்துச் செல்ல வேண்டும். இரவு நேரங்களில் ஆண்கள் காத்துக் கிடப்பார்கள். வாரத்திற்கு ஒரு முறை அழுக்குத் துணிகளை அள்ளிக் கொண்டு 10 கி.மீட்டருக்கு அப்பால் உள்ள வாய்க்காலுக்கு துவைப்பதற்குச் செல்ல வேண்டும். நாற்றமடிக்கும் அழுக்குத் துணிகளை எவ்வளவு ரூபாய் கொடுத்தாலும் ஏற்றக் கூடாது என்பார் பேருந்து நடத்துனர். இப்படி தண்ணீர் இல்லாமல்  எங்களைச் சாகடிப்பதை விட பேசாமல் விஷத்தைக் கொடுத்து கொன்று விட்டால் நல்லது என்கிறார் யசோதா வர்கடே.


தேசிய தண்ணீர்க் கொள்கை 2012
தண்ணீர் ஓர் இயற்கை வளம். வாழ்க்கைக்கான அடிப்படை ஆதாரம். உணவுப் பாதுகாப்பு. ஆனால், பற்றாக்குறையாகவே உள்ளது. உலகில் 43 நாடுகளில் கிட்டத்தட்ட 700 மில்லியன் மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் தவித்துக் கொண்டிருக்கிறார்கள், 2025ல் 1.8 பில்லியன் மக்கள் கடும் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள், 2030ல் உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் தண்ணீருக்காக கண்ணீர் விடக்கூடிய நிலை உருவாகும் என்கிறது அய்நாவின் ஆய்வறிக்கை, மூன்றாம் உலகப் போர் நடந்தால் அது தண்ணீருக்காகத்தான் நடக்கும் என்கிறது  மற்றொரு ஆய்வு, இந்தியா உலக மக்கள் தொகையைவிட கூடுதலாக 17% மக்கள் தொகையைக் கொண்டுள்ளது, ஆனால், உலக நிலப்பரப்பில் 2.6% மட்டுமே கொண் டுள்ள இந்தியாவில் 4% தண்ணீர் வளம் மட்டுமே உள்ளது என்று மிகவும் அக்கறையோடு ஆரம்பிக்கிறது தேசிய தண்ணீர் கொள்கை 2012 நகலறிக்கை.
இந்தியாவில் தண்ணீருக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதேவேளை, தண்ணீர் இல்லாத வறட்சியான பகுதிகளும் மோசமான நிலத்தடி நீர் உள்ள பகுதிகளும்தான் அதிகமாக உள்ளன. 90% தண்ணீர் தேவை மாநிலம் விட்டு மாநிலம் பாயும் ஆறுகளால்தான் பூர்த்தி செய்யப்படுகிறது. அதனா லேயே மாநிலங்களுக்கிடையில் மோதல். மோதலைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் பார்க்கின்றன ஆளும் வர்க்கக் கட்சிகள்.
பெருகும் மக்கள் தொகை, அதற்கேற்ப அதிகரிக் கும் உணவு உற்பத்தி, மாறிவரும் வாழ்க்கை முறை, நகர்மயமாதல், தொழில் வளர்ச்சி, அதிகரித்து வரும் கட்டுமானங்கள், தட்பவெப்பநிலை மாற்றங்கள், காடுகள் அழிப்பு, மழையின்மை அல்லது பெருவெள்ளம், சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதால் நிலத்தடி நீர் கெட்டுப் போவது, கிடைக்கும் தண்ணீரையும் சிறப்பாக கையாளுவதில் உள்ள நிர்வாகக் கோளாறு, ஏரிகளும் குளங்களும் கண்மாய்களும் கால்வாய்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தண்ணீரை சேமிக்க முடியாமை இவையெல்லாம் இன்றைய தண்ணீர் பற்றாக்குறைக்குக் காரணங்கள் என்கிறது ஓர் ஆய்வறிக்கை. இதையே தான் தேசிய தண்ணீர் கொள்கை 2012 நகலறிக்கையும் சொல்கிறது. தண்ணீர் சம்பந்தப்பட்ட விசயங்களில் முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ள அரசாங்க அமைப்புகள் சம்பந்தப்பட்டவர்களை, அதாவது பொது மக்களை கலந்தாலோசிக்காமல் தங்கள் இஷ்டம் போல் முடிவு செய்கிறார்கள் என்றும் கவலைப்பட்டுள்ளது.
அப்படி கவலைப்பட்ட தேசிய தண்ணீர்க் கொள்கை 2012 நகலறிக்கையை ஜனவரி 31ல் வெளியிட்டு அது பற்றி மக்கள் தங்கள் கருத்துக்களைச் சொல்வதற்கு கொடுக்கப்பட்ட அவகாசம் எவ்வளவு தெரியுமா? 1 மாத காலம் மட்டுமே. தண்ணீர் கொள்கை நகல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்கிற விபரம் சென்னை, மும்பை, டில்லி போன்ற பெருநகரங்களில் உள்ள படித்தவர்களுக்குக் கூட தெரிந்திருக்கவில்லை. கோபால் கிருஷ்ணா போன்ற சமூக ஆர்வலர்கள்,  மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க குறைந்த பட்சம் 3 மாத காலமாவது அவகாசம் கொடுக்க வேண்டும் என்றார்கள். எப்போதும்போல் அரசு அதைக் கண்டு கொள்ளவே இல்லை.

பறிபோகுது தண்ணீர் உரிமை
1991ம் ஆண்டிற்குள் இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த மக்களுக்கும் குடிநீர் வழங்கப்பட்டுவிடும் என்று தேசிய தண்ணீர்க் கொள்கை 1987ல் கூறப்பட்டது. ஆனால், தேசிய தண்ணீர்க் கொள்கைகள் 2002 மற்றும் 2012 இதுபற்றி மவுனம் சாதிக்கின்றன. மாறாக, உயிரினங்கள் வாழ்வதற்கும் மனித வாழ்க்கைக்கும் தேவையான குறைந்த அளவுத் தண்ணீரைப் பயன் படுத்திய பிறகு ஏழைகளின் அடிப்படை வாழ்வாதாரத்தை உயர்த்தவும் தேசிய உணவுப்பாதுகாப்பை உத்தவாதப்படுத்தவும் முன்னுரிமை தரும் விதம் தண்ணீரை பொருளாதார நலனுக்கு பயன்படுத்த வேண்டும் என்கிறது தண்ணீர்க் கொள்கையின் பத்தி 3.3. அதாவது தண்ணீரை பெட்ரோல், டீசல் போல் ஒரு முழுமையான நுகர்வுப் பொருளாக (விற்பனைப் பொருளாக) மாற்ற வேண்டும் என்கிறது. தண்ணீரை விற்பனைப் பொருளாக மாற்ற வேண்டும் என்றும் மக்களின் தேவைக்கும் உயிரினங்களின் தேவைக்குமே தண்ணீர் மிகவும் பற்றாக்குறையாக இருக்கும்போது, குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்திய பிறகு மிச்சம் இருப்பதைப் பொருளாதார நலனுக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறுவது தண்ணீரை  தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்கும் நோக்கமே.
ஒரு சிறப்பான தண்ணீர் நிர்வாகம் தேவை. அதற்காக பல்வேறு செயல் திட்டங்கள், நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சொல்லும் நகலறிக்கை, அதை யார் செய்ய வேண்டும் எப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. அதே வேளை, நகலறிக்கையின் பத்தி 5.5, ஆற்றுப்படுகைகள் அல்லது ஆற்றுப்பள்ளத்தாக்குகளுக்கிடையே தண்ணீரை இடமாற்றம் செய்வதன் மூலம் நீர் வளத்தை அதிகரிக்கவும், மக்களுக்கான தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வதோடு சமத்துவத்தையும் சமூக நீதியையும் ஏற்படுத்தவும் முடியும் என்கிறது. மேலும் வெள்ள நீரை ஓர் ஆற்றுப் படுகையிலிருந்து மற்றொரு ஆற்றுப்படுகைக்கு இடமாற்றம் செய்தால் வறண்டு கிடக்கும் நிலத்தில் தண்ணீர் ஊறும். அதனால், இதை ஊக்கப்படுத்த வேண்டும் என்கிறது. ஆனால், இது ஓர் அறிவற்ற செயல் என்கிறது சுற்றுச் சூழல் மாசுபடுவதற்கும் பெருநிறுவனக் குற்றங்களுக்கும் எதிரான டாக்ஸிக் வாட்ச் கூட்டமைப்பு. இத்திட்டம் இயற்கையை பேரழிவிற்குள்ளாக்கும், பொதுவாக தெற்கு ஆசியாவின் புவியமைப்பையும் குறிப்பாக இந்தியாவின் புவியமைப்பையும் மாற்றிவிடும் திட்டம் என்கிறது. இத்திட்டத்தால் ஆறுகளின் போக்கு மாற்றப்பட்டு ஆற்றுப்படுகைகள் அழிக்கப்பட்டுவிடும். ஆறேல் கடலின் இரண்டு செரிபியன் ஆறுகளை இணைத்ததன் மூலம் அந்த ஆற்றுப்படுகைகள் வறண்டுபோனது போல் இந்திய ஆறுகளும் மாறிவிடும் என்று எச்சரிக்கிறார்கள்.
தேசிய நீர் வள அமைப்பு கோஷி மெச்சி இணைப்பு மற்றும் பர்ஹி கண்டக் பிகாரின் நோன்பாயா கங்கா இணைப்பு ஆகியவற்றிற்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருவதாக நீர்வள இணையமைச்சர் 2011 செப்டம்பர் 5 அன்று ராஜ்ய சபாவில் தெரிவித்தார். தேசிய நீர் வள அமைப்பு 1982லேயே தேசிய தொலை நோக்குத் திட்டம் என்ற பெயரில் நதிகள் இணைப்பு தொடர்பான சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய்வதற்காக நீர்வள அமைச்சகத்தால் உருவாக்கப் பட்டுள்ளது என்று கூறினார். ஆனால், நதிகள் இணைப்புக்கான தேசிய தொலைநோக்குத் திட்டம் உயர் அதிகாரம் கொண்ட ஒருங்கிணைந்த நீர் வள நிர்வாகத்திற்கான தேசிய ஆணையத்தால் 1999லேயே நிராகரிக்கப்பட்டுவிட்டது என்பதை அமைச்சர் மாநிலங்களவையில் தெரிவிக்காமல் மறைத்துவிட்டார். நீர் வள நிர்வாகத்திற்கான தேசிய ஆணையத்தின் அறிக்கையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் பார்வைக்குக் கொண்டு செல்லாமல், நதிகள் இணைப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்கான  உத்தரவை 27.2.2012ல் போடச் செய்தது மத்திய அரசு. இதே யேதான் 2002 அக்டோபரிலும் செய்தார்கள். நதிகள் இணைப்பு தொடர்பாக மாநிலங்களுக்கிடையில் ஒத்த கருத்து ஏற்பட்டுவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி ஆரம்பக் கட்ட உத்தரவைப் பெற்றார்கள்.
தண்ணீர்க் கொள்கை 2012யைத் தயாரித்தவர்கள், நீர்வள நிர்வாக தேசிய ஆணையம், நதிகள் இணைப்பால், குறிப்பாக இமயமலையில் உள்ள ஆறுகள் இணைப்பால், ஏற்படும் ஆபத்து தொடர்பாக வெளியிட்ட இரண்டு பெரிய அறிக்கைகளைக் கண்டுகொள்ள வேயில்லை. தேசியத் திட்டத்தில் பிரச்சனைக்குரிய 30  இணைப்பு திட்டங்கள் உள்ளன. அவற்றில் 6 திட்டங்கள், இமயமலை ஆறுகள் தொடர்பானவை. இதில் ஒரு திட்டத்தை பொருளாதார ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சில்  2008 ஏப்ரலிலேயே நிராகரித்துவிட்டது.
ஏற்கனவே மத்திய அரசின் 10வது அய்ந்தாண்டுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட 1300 நீர்ப்பாசனத் திட்டங்களில் 900 நீர்ப்பாசனத் திட்டங்கள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 400 திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஜெ.அரசின் சாதனைகளாக பல்வேறு நீர்பாசனத் திட்டங்களின் ஒரு பக்க விளம்பரங்கள் அனைத்து பத்திரிகைகளிலும் வண்ணப் படங்களுடன் காட்சி தருகின்றன. ஆனால், நாட்டில் பல்வேறு ஏரிகளில், குளங்களில் கல்லூரிகளை தொழிற்சாலைகளை அமைத்து, வீணாகப் போகும் வெள்ள நீரை சேமித்து வைக்க முடியாமல் நீர் ஆதாரங்களை அழித்துவிட்ட ஆலை முதலாளிகள் மீதோ, அமைச்சர்கள், அரசியல்வாதிகள் மீதோ, கல்வி வியாபாரிகள் மீதோ, காடுகளை அழிக்கும் பெருநிறுவனங்கள் மீதோ, சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தி நீர் நிலைகளை நாசப்படுத்தும் நிறுவனங்கள் மீதோ எந்த அரசுகளும் நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை.  மாறாக, நீரற்ற ஆறுகள் அல்லது வெள்ளப் பெருக்கு, இரண்டையும் இணைத்து விட்டால் எல்லாம் சரியாகும் என்கிறார்கள்.
பல்வேறு உயர்மட்ட அமைப்புக்களால் நிராகரிக்கப்பட்ட நாட்டிற்கும் மக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் திட்டங்களை எல்லாம் நீர் வளத்தைப் பெருக்க, தண்ணீர் ஆதாரங்களை அதிகரிக்க என்று சொல்லிக் கொண்டு தண்ணீர்க் கொள்கையின் வாயிலாக அமல்படுத்த மத்திய அரசு முயற்சிப்பது எதற்காக?
தண்ணீரையும் தனியார்மயமாக்கிக் கொள்ளையடிக்கச் செய்யவே தண்ணீர்க் கொள்கை 2012 உருவாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின், சேவை அளிப்பவர் என்கிற பாத்திரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் தண்ணீர் விநியோகம் மற்றும் பராமரிப்பு தனியார் மற்றும் அரசு கூட்டுப் பங்கெடுப்பின் மூலம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அரசு, நாட்டு மக்களுக்கு பாரபட்சம் இன்றி தண்ணீர் வழங்க வேண்டிய தன் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்றும் தண்ணீர்க் கொள்கை நகலறிக்கை மிகவும் வெளிப்படையாகவே கூறுகிறது.
அய்முகூ அரசின் முதல் அய்ந்தாண்டு ஆட்சியின்போது டெல்லியில் தனியார் அரசு கூட்டுச் செயல்பாட்டின் மூலம் தண்ணீர் விநியோகம் அமல்படுத்தப்பட்டது. தண்ணீர் விலை 700% அதிகமானது. மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக தண்ணீர் விநியோகத்தில் தனியார்மயம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது அய்முகூ அரசு அதை மீண்டும் கொண்டு வர முயற்சிக்கிறது.
பாதுகாப்பான சுத்தமான தண்ணீர் ஒவ்வொரு மனிதனின் அடிப்படை வாழ்வாதார உரிமை, அதை அவன் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கச் செய்ய வேண்டும் என்று வர்ணனையாகப் பேசும் தண்ணீர் கொள்கை 2012, தண்ணீர் தொடர்பான அனைத்து சேவைகளும் சமுதாயப் பங்களிப்புடனோ அல்லது தனியார் - அரசுப் பங்களிப்புடனோ செயல்படுத்தப்பட வேண்டும் என்கிறது. தண்ணீருக்கு விலை நிர்ணயம் செய்யச் சொல்கிறது. விவசாயத்திற்காக இருந்தாலும் சரி, வீடுகளுக்காக இருந்தாலும் சரி எல்லாவிதமான தண்ணீர் மானியங்களும் நிறுத்தப்பட வேண்டும், விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை நிறுத்த வேண்டும் என்கிறது. ஏனென்றால், இலவச மின்சாரத்தால், தண்ணீரும் மின்சாரமும் வீணாகிறதாம். ஆனால், தனியார் தொழிற்சாலைகள், ஏற்கனவே பயன்படுத்திய தண்ணீரை அல்லது கழிவுநீரை மறுபயன்பாட்டிற்காக சுத்திகரிப்பு செய்வதற்கு மட்டும் தண்ணீர் மானியமும் ஊக்க உதவித் தொகையும் வழங்கிடப் பரிந்துரைத்துள்ளது.

நம் நிலத்தின் தண்ணீர் நமக்கில்லை
பிரிட்டிஷ்காரர்கள் நிலத்தையும் நீரையும் தனித் தனியே பிரித்ததுபோல தேசிய தண்ணீர்க் கொள்கை நிலத்தையும் நீரையும் தனியாகப் பிரிக்கச் சொல்கிறது. ஊராட்சிகள், நகராட்சிகளில் போதுமான நிதி ஆதாரங்கள் இல்லாததால் அடிமட்ட நிர்வாக அமைப்புகள் சீர்குலைகின்றனவாம். அதனால், நிதி ஆதாரத்தைப் பெருக்க இந்திய வசதிகள் அனுபவச் சட்டம் 1882ல் (Indian Easements Act 1882)   திருத்தம் கொண்டு வந்து நிலத்தின் உரிமையாளரிடம் இருந்து அந்நிலத்து நீரின் உரிமையை தனியாகப் பிரித்திட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இனி நிலத்தின் உரிமையாளருக்கு அவர் நிலத்தின் தண்ணீர் மீது உரிமை கிடையாது. கார்ப்பரேஷன் குழாய் தண்ணீருக்கு வரி செலுத்துவதுபோல் நம் நிலத்தடி போர்வெல் தண்ணீருக்கும் நாம் இனி கப்பம் கட்ட வேண்டும். தண்ணீரும் தனியார் முதலா ளிகள் கையில் கொடுக்கப்பட்டு பெட்ரோல், டீசல் விலை மாதாமாதம் உயர்வதுபோல் தண்ணீர் விலையும் உயர்ந்து கொண்டே போகும். தவிக்கிற வாய்க்கு கொஞ்சம் தண்ணீர் கொடு என்று இனி யாரிடமும் கேட்க முடியாது. காட்டு விலங்குகள் குடிக்கும் தண்ணீருக்கும் நாட்டு மனிதர்களிடம் காசு வாங்கினாலும் வாங்குவார்கள் இந்தக் கயவர்கள்.  
உலக வங்கி, சர்வதேச நிதியம் மூலம் பல்வேறு நாடுகளுக்கு சர்வதேச நிதி நிறுவனங்கள் 2000 முதல் 2012 வரை வழங்கியிருக்கும் 40 கடன்களில் பெரும்பாலானவை தண்ணீர் விநியோகத்தை தனியார் மூலம் செய்யவே வழங்கப்பட்டுள்ளன. வழங்கிய கடனை வட்டியோடு சேர்த்து வசூலிக்க தண்ணீர் மானியத்தை முற்றிலுமாக ஒழித்துவிட்டார்கள்.
இந்தியாவில் தாக்குப்பிடிக்கக்கூடிய நிலையான பொருளாதார வளர்ச்சி வேண்டும் என்றால் இந்திய தண்ணீர்க் கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் நீர்ப்பாசனம், தண்ணீர் மற்றும் துப்புரவுச் சேவையில் சந்தையையும் போட்டியையும் உருவாக்க வேண்டும் என்றும் 2005ம் ஆண்டில் உலக வங்கி முன்மொழிந்தது. அதை உலக வங்கியின் முன்னாள் தலைவரும் இந்நாள் புறக்கடைவழிப் பிரதம ருமான மன்மோகன் வழிமொழிகிறார். மத்திய அரசை எதிர்ப்பதில் நான் மந்திரிகுமாரி எனக் கொக்கரிக்கும் ஜெயலலிதா தண்ணீருக்கு விலை நிர்ணயம் செய்து ஏழைகள் தங்கள் கண்ணீராலேயே தாகத்தை தணிக்கச் சொல்லும் மத்திய அரசின் தண்ணீர்க் கொள்கையை எதிர்க்கத் தயாராக இல்லை. உலகம் முழுவதும் நடக்கும் மக்கள் போராட்டங்களில் இருந்து பாடம் படிக்க மறுத்து பன்னாட்டு நிறுவனங்களின், பெருமுதலாளிகளின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு திட்டங்கள் தீட்டும் மன்மோகன், மான்டெக், ஜெயலலிதா வகையினருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.  


தேர்தல்

புதுக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சார வேலைகள்

ஜூன் 12 அன்று நடந்த புதுக்கோட்டை இடைத்தேர்தலில் பெரிய கட்சிகள் போட்டியிட தயங்கி விலகியபோது அதிகாரபூர்வ இடதுசாரிகள் முதலாளித்துவ கட்சிகளின் பின்னால் வால் பிடித்தபோது, இடதுசாரி குரலை ஒலிக்கச் செய்ய தேர்தலில் போட்டியிடலாம் என மே  12, 13, 14 தேதிகளில் சென்னையில் நடந்த மாநிலக் கமிட்டி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
நமக்கு தொகுதியில் கட்சி உறுப்பினர் வெகுமக்கள் பலம் இல்லை எனத் தெரிந்திருந்தும் மிகக் குறுகிய அவகாசம் எனத் தெரிந்திருந்தும், மாவட்டக் கமிட்டி உற்சாகத்துடன் அரசியல் சண்டையில் ஈடுபட ஒரு வாய்ப்பு, வேலையை மற்றொரு சட்டமன்ற தொகுதிக்கு விரிவுபடுத்த ஒரு வாய்ப்பு என உணர்ந்து தேர்தலில் போட்டியிடக் கோரியதால், புதுக்கோட்டையில் போட்டியிட முடிவு செய்தோம்.
வேலைகளை துவக்குவதில், துவங்கிய வேலைகளை தொடர்வதில் மிகவும் சிரமப்பட்டோம். மாவட்டத்திற்கு வெளியில் இருந்து இந்த முறை தேர்தலுக்கு வந்திருந்த கணிசமான நன்கொடை, (சென்னை ரூ.14100, குமரி ரூ.10,000, கோவை ரூ. 3000, திருவள்ளூர் ரூ. 2500, விழுப்புரம் ரூ.2500, தஞ்சை, நாகை ரூ.1500, நாமக்கல் ரூ.1000, சேலம் ரூ.1000), மாவட்டத்தில் உள்ள மூன்று மாநிலக் குழு உறுப்பினர்கள் போக அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் குமாரசாமி, மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் எஸ்.ஜானகிராமன், எ.எஸ்.குமார், எஸ்.இளங்கோவன், எம்.வெங்கடேசன், ராமேஷ்வர் பிரசாத் ஆகியோரும் தஞ்சை, நாகை மாவட்ட தோழர்கள் கண்ணையன், மைக்கேல் ஆகியோரும் தேர்தல் பணிகளில் கலந்துகொண்டது, மாவட்ட வேலைகளுக்கு உந்துதலாக இருந்தது.
எல்லா சிரமங்களுக்கு அப்பாலும், தேர்ந்தெடுத்த ஊராட்சிகளுக்குள் சென்று வீடுவீடாக வாக்கு சேகரிப்பது, பெண் தோழர்களை மட்டுமே கொண்ட ஒரு குழுவை பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவது, இளைஞர்கள் மூலம் ஒரு சைக்கிள் பயணம் நடத்துவது  ஆகிய அனைத்து வேலைகளும் திட்டமிட்டபடி நடந்தன.
ஜூன் 9 அன்று, ஒரே நாளில், மாணவர் இளைஞர் பிரச்சாரம், பெண்கள் பிரச்சாரம், அவிதொச பிரச்சாரம், கட்சி தோழர்கள் பிரச்சாரம் என நான்கு விதமான பிரச்சாரம் நகரத்தில் நடைபெற்றது. இந்தத் தீவிரமான வேலைகளின் ஊடே அவிதொச மாநில செயற்குழுக் கூட்டத்தை புதுக்கோட்டை மாவட்டக் கமிட்டி நடத்தியது. தங்கி வேலை செய்ய புதிதாக சிலர் தயாராகி உள்ளனர். பிரச்சாரத்துக்கு ரூ.1 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது.
மொத்த வேலைகளும் 8, 9, 10 தேதிகளில் உச்சத்தை நோக்கிச் சென்றன. ஏதோ ஒரு விதத்தில் கட்சி மாவட்டக் கமிட்டியில் ஒருவர் நீங்கலாக மற்ற அனைவரும் வேலைகளில் பங்கேற்றனர். சென்னையில் இருந்து வந்திருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தோழர் சாக்ரடீஸ் வேலைகளுக்கு மிகுந்த உதவியாக இருந்தார். இளைஞர்களின் சைக்கிள் பிரச்சாரம் என்பதோடு சேர்த்து 9, 10 தேதிகளில் தோழர் பாரதி வாகனப் பிரச்சார கூட்டங்களில் பேசிய விசயங்கள், கம்யூனிஸ்ட் கட்சி ஒன்று இளமைத் துடிப்புடன் இருக்கிறது, அது எதையும் சந்திக்க தயாராக இருக்கிறது, ஆதிக்க அதிகார அரசியலுக்கு சவால் விடுகிறது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் உருவாக்கியது.
கடைசி இரண்டு நாட்களில் பல நூற்றுக்கணக்கானவர்கள் மத்தியில் இந்தப் பிரச்சாரத்தில் நாம் துணிச்சலான, கூர்மையான ஒரு கருத்துப்போரை நடத்தியுள்ளோம். அதிமுக அமைச்சர்கள், பிரபலங்கள் காதுபட நடந்த இந்தப் பிரச்சாரம், எப்போது வேண்டுமானாலும் ஒரு மோதல் வெடிக்கலாம் என்ற சூழலை உருவாக்கிய பிரச்சாரம், நாம் இடைத்தேர்தலில் ஓர் அரசியல் சண்டை போட முயன்றுள்ளோம் என்பதைக் காட்டியது.
கட்சி மாவட்டக் கமிட்டி தேர்தல் பணிகள் மூலம் உற்சாகம் பெற்றுள்ளது. இன்னும் நன்றாக செய்திருக்க முடியுமே, அதனை தவற விட்டுவிட்டோமே என்ற உணர்தலுடன் ஜூலை 28 அணிதிரட்டலை வெற்றிகரமாக்க தயாராகி வருகிறது.


போராட்டம்

பீகார்

புர்னியாவில் நிலப் போராட்டம்

எல்லா அரசாங்க, குத்தகை மற்றும் பூதான் நிலங்களிலும் செங்கொடிகளை நடுங்கள்!
எல்லா வறிய மக்களையும் நிலம் மற்றும் வாழ்வாதாரத்துக்கான போராட்டத்தில் ஒன்றுபடுத்துங்கள்
!

மாலெ கட்சியின் 4வது புர்னியா மாவட்ட மாநாட்டை ஒட்டி ‘எல்லா அரசாங்க, குத்தகை மற்றும் பூதான் நிலங்களிலும் கொடிகளை நடுங்கள். எல்லா வறிய மக்களையும் நிலம் மற்றும் வாழ்வாதாரத்துக்கான போராட்டத்தில் ஒன்று படுத்துங்கள்’ என்ற முழக்கத்தோடு பேரணி கட்டமைக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்துக்கு இந்தப் பேரணி எச்சரிக்கை விடுத்தது. அதனால் புர்னியா மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்டத்தில் 14 ஒன்றியங்களின் அதிகாரிகளை அழைத்து கூட்டம் போட்டு, நிலம் சம்பந்தப்பட்ட, அதிலும் குறிப்பாக, விதி 48டி மற்றும் 48ஈ தொடர்பான அத்தனை தாவாக்களும் தீர்க்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். நிலமில்லாத அனைவரும் 3 டெசிமல் நிலம் கொடுக்கப்பட்டு அதில் அவர்களின் பாத்தியதை உத்தரவாதம் செய்யப்பட வேண்டும் என்றார். இருந்தபோதிலும் உள்ளூர் நிலப்பிரபுத்துவ சக்திகள் உத்தரவுகள் அமலாகாமல் பார்த்துக் கொண்டனர்.
புர்னியாவில், பெரும்பாலும் குத்தகை விவசா யமே நடைபெறுகிறது. ஆனால் மாவட்ட நிர்வாகத்தோடு கூட்டு வைத்தும், உயர்நீதிமன்ற தடையைப் பயன்படுத்தியும், நிலப்பிரபுக்கள் பல வருடங்களாக  குத்தகை செய்துவரும் விவசாயிகளை, நிலத்தில் இருந்து அப்புறப்படுத்துவதோடு விவசாயிகளின் நிலத்தில் விளைந்து நிற்கும் பயிர்களையும் அழித்து வந்தனர்.
குத்தகை விவசாயிகளுக்கான சட்டப்படி, ஒரு குத்தகை விவசாயி தொடர்ச்சியாக 12 வருடங்கள், ஒரு துண்டு நிலத்தில் பயிர் செய்து வந்தால், அந்த நிலம் அவருக்கு பாத்தியதைப் பட்டதாகிவிடும். ஆனால் குத்தகைதாரர் இறந்துவிட்டால் அவருக்கான இந்த உரிமை போய்விடும் என்று தவறாகப் பிரச்சாரம் செய்து, அந்த அடிப்படையில் குத்தகை விவசாயிகளை அப்புறப்படுத்தி வந்தனர். போலியான கைரேகைப் பதிவுகளை காட்டி, ஏற்கனவே நிலம் கைமாறிவிட்டதாகச் சொல்லி வந்தனர்.
அரசாங்க நிலத்தில், புறம்போக்கு நிலத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்தும், வீட்டுமனைக்கான சட்டபூர்வ உரிமையை வறிய மக்கள் வாங்க முடியாமல் இருப்பது இன்னொரு பெரிய பிரச்சினை. 12 வருடங்களுக்கும் மேலாக புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து வருபவர்களுக்கு வீட்டுமனைக்காக 12 டெசிமல் நிலம் பட்டா வழங்க சட்டத்தில் இடமிருக்கிறது. எந்த இடமும் இல்லாத நிலமற்ற வறியவர்க ளுக்கு 3 டெசிமல் வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. வறியவர்கள் எங்கே வாழ்கிறார்களோ அந்த இடத்தில் இந்த நிலங்களைப் பெற கோரிக்கை வைத்தால்தான் அவர்கள் அரசாங்க திட்டங்களின் பயன்களைப் பெற முடியும்.
சமீபத்திய சில போராட்டங்கள்
பதாரா தாலுகாவில், மய்கந்த் கிராமத்தில், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான 5 ஏக்கர் நிலத்தை செல்வாக்கு மிக்கவர்களும், குற்றக்கும்பலும் அபகரித்து வைத்திருந்தனர். 2012, மார்ச் 18 அன்று மாலெ கட்சி தலைமையில் மக்கள் அந்த இடத்தில் செங்கொடிகளை நட்டனர். அப்போது நடைபெற்ற போராட்டத்தில் அரசாங்க அதிகாரி ஒருவர் உள்ளூர் தலைவர் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டார். மக்கள் அவரைப் பிடித்து  மன்னிப்பு கேட்க வைத்தனர். பெரும் எண்ணிக்கையில் வில், அம்புகளுடன் அணி திரண்ட மக்கள் மீது அடக்குமுறை ஏவ முடியாமல் காவல்துறை பின்வாங்கியது.
மார்ச் 21 அன்று நிலப் பிரச்சினையை தீர்ப்பதற்காக நிர்வாகம் பஞ்சாயத்தைக் கூட்டியது. மாவட்டக் கமிட்டி உறுப்பினர் தோழர்.லாலன் சிங் தலைமையில் வில், அம்பு மற்றும் வீட்டிலுள்ள மரபு ஆயுதங்களுடன் பெரும் எண்ணிக்கையில் மக்கள் பஞ்சாயத்தில் திரண்டனர். இதைப் பார்த்து துப்பாக்கிகளுடன் இருந்த குற்றக்கும்பலும், செல்வாக்கு மிக்கவர்களும் ஒதுங்கினர். துப்பாக்கியோடு இருந்த காவல் துறையும்  தள்ளியே நின்றது.
பஞ்சாயத்தில் கட்சியின் இருத்தல் பலம் வாய்ந்ததாய் இருந்தது. கூட்டத்தில், குறிப்பிட்ட அந்த நிலத்தைப் பற்றி பேச வேண்டுமானால், அந்த ஒன்றியத்திலுள்ள நிலம் சம்பந்தப்பட்ட அத்தனை பதிவேடுகளும்  பொதுமக்கள் முன் கொண்டு வரப்பட வேண்டும் என்று கட்சி பிரதிநிதிகளால் தெளிவாக சொல்லப்பட்டது. ஒரு மாதத்திற்குள் முகாம்கள் நடத்தி உச்சவரம்பைத் தாண்டி இருக்கும் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்,  குத்தகைதாரர்களுக்கு நிலத்தின் மீதான பாத்தியதைக்கான தஸ்தாவேஜ்கள் வழங்கப்பட வேண்டும், 12 வருடங்களுக்கு மேலாக குத்தகை விவசாயம் செய்பவர்கள் பிரிவு 48ஈபடி பதிவு செய்யப்பட வேண்டும், 12 வருடங்களுக்கு மேலாக நிலத்தில் குடியிருந்துவரும் வறியவர்களுக்கு 12 டெசிமல் நிலத்திற்கான பட்டா வழங்க வேண்டும் என்பவற்றை மாவட்ட நிர்வாகத்திடம் கட்சி தெரிவித்தது.
மாவட்ட நிர்வாகம் இக் கோரிக்கைகளை ஏற்க நிர்பந்திக்கப்பட்டது. நிர்வாகம் இவற்றை இன்னும் அமல்படுத்த வேண்டியிருக்கிறது என்ற போதிலும், போராட்டம் குற்றமயக் கும்பல் மற்றும் வலுவானவர்கள் மீதான மக்கள் அச்சத்தைப் போக்கியதோடு, 5 கிராமங்களின் நிலமற்ற வறியவர் மற்றும் குத்தகைதாரர்களின் நம்பிக்கையையும், அறுதியிடலையும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.
தம்டாகா ஒன்றியத்தில், குக்ரௌன் நம்பர் 1ல், 30 பச்சை அட்டை வைத்திருக்கும் ஆதிவாசி விவசாயிகள் 30 ஏக்கர் நிலத்தில் விதைத்திருந்தார்கள். துணைக் கோட்ட நிர்வாகம், ஓர் உத்தரவை காரணம் காட்டி பயிர்களை அழித்துவிட்டனர். மேலும் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக அவர்கள் மீது வழக்கும் தொடுத்தனர். அவர்கள் அய்க்கிய ஜனதா தளம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்கள். இவ்வருடம் அய்க்கிய ஜனதா தள முக்கிய பிரமுகர் அந்த இடத்தை குத்தகைக்கு எடுத்திருப்பதாக கூறி பச்சை அட்டை உரிமையாளர்களை அப்புறப்படுத்தத் துவங்கினர். அவர்கள் மாலெ கட்சியை தொடர்பு கொண்டார்கள்.
மார்ச் 20 அன்று, பச்சை அட்டைதாரர்களின் முற்றிலும் விளையாத பயிர்களைக் கூட அய்க்கிய ஜனதா தள தலைவர் வெட்டிய போது, சீற்றமுற்ற மக்கள் அந்தத் தலைவர் குத்தகைக்கு எடுத்து பயிரிட்ட இடத்தில் புகுந்து அந்தப் பயிர்களை வெட்டினர். தாக்குதலுக்கு வந்த தலைவரின் குண்டர்கள் மக்களால் விரட்டியடிக்கப்பட்டனர். பிறகு, அய்க்கிய ஜனதா தள ருபௌலி சட்டமன்ற உறுப்பினரின் கணவரும், கொடூரமான கிரிமினலான பவானிபூர் ஒன்றிய தலைவருமான அவதேஷ் மண்டல் மிகப் பெரிய காவல்துறை மற்றும் குண்டர் பட்டாளத்தை குவித்தார். ஆனால் வில், அம்புகளுடனான மிகப் பெரிய மக்கள் கூட்டத்தைப் பார்த்ததும் குண்டர்களும், காவல் துறையும் பின்வாங்கினர். அதே நாளில் பிஸ்னுபூரில் ஏழை குத்தகைதாரரின் உடமையில்  உள்ள  நிலத்தை அவதேஷ் மண்டலின் குண்டர்கள் புதிய பணக்கார லும்பனுக்கு ஆதரவாக செயல்பட்டு பறிக்க முயன்றபோது மரபுவழி ஆயுதங்களுடன் மக்கள் அவர்களை விரட்டி அடித்தனர்.
ஏப்ரல் 6 அன்று பிஸ்னுபூர் சந்தையில் கட்சியின் மாவட்டச் செயலாளர் பங்கஜ் குமார் சிங் மற்றும் தோழர் லாலன் சிங் ஆகியோர் பங்குபெற்ற கூட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் மரபுவழி ஆயுதங்களுடன் கலந்து கொண்டனர்.
மார்ச் 20 அன்று பவானி ஒன்றியம், கடையா கிராமத்தில் 2 உள்ளூர் பெண்கள், இயக்கத்துக்குத் தலைமை தாங்கி, நிலப்பிரபுத்துவ படஹாரி எஸ்டேட்டில், நில உச்சவரம்புக்கு மிகையான 35 ஏக்கர் நிலத்தில் கொடிகளை நட்டனர். நிலத்தின் மீதான பிடி நிலப்பிரபுத்துவ சக்திகளின் கையைவிட்டுப் போகாமல் இருக்க, காவல்துறை மாலெ கட்சியின் பல தோழர்கள் மீது வழக்கு போட்டிருக்கிறது.
நில மறு வினியோகத்துக்கான பல போராட்டங்கள், பல பஞ்சாயத்துகளில் நடைபெற்று வருகின்றன.
கச்சாஹரி பலுவா பஞ்சாயத்தில், உள்ளூர் வறியவர்கள் மறுவிநியோகத்துக்கு வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த உச்சவரம்புக்கு மிகையான 21 ஏக்கர் நிலம், நிலச்சுவான்தார் ஒருவருக்கு விற்கப்பட்டது. அவர் அந்த நிலத்தில் உழுவதற்கு ஏற்பாடு செய்தபோது மக்கள் தடுத்து  நிறுத்தி, இடத்தை பாதுகாத்ததோடு, சில கூரைகளையும் போட்டார்கள். கூரைகள் ஒரு முறை தரைமட்டமாக்கப்பட்டன. ஆனால் மீண்டும் போட்டார்கள். இம்முறை மாலெ கட்சியை தொடர்பு கொண்டார்கள். மாலெ கட்சியின் அமைப்பாக்கப்பட்ட முயற்சியால் இதுவரை காவல்துறையால் கூரையை அகற்ற முடியவில்லை.
இதே கிராமத்தில் போஹரிய தோலா என்ற குடியிருப்பில், மார்ச் 16 அன்று, மாலெ கட்சியின் மார்ச் 15 பேரணியில் பங்கெடுத்த காரணத்தால் 4 மகாதலித்துகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காவல்துறை மறுத்துவிட்டது. மார்ச் 17 அன்று உள்ளூர் கட்சித் தோழர்களின் தலைமையில் வில் அம்புகளுடன் மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
பன்மாகி ஒன்றியம், போக்ரா பஞ்சாயத்து, கோபால் நகர் தலித் குடியிருப்பு பகுதியில் 9 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் கொடிகள் நடப்பட்டன. உள்ளூர் தரகர்கள், நிலச்சுவான்தார்கள், காவல்துறை, நிர்வாகம் எல்லாம் எச்சரிக்கை விடுத்தும், எல்லா திரை மறைவு வேலைகள் செய்தும் காலி செய்ய முயற்சித்தனர். ஏப்ரல் 5  அன்று மாலெ கட்சி பிரகலாத் நகரில் நடத்திய பொதுக் கூட்டம் இம்மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளித்திருக்கிறது.
புர்னியா மாவட்டத்தில் நடைபெறும் போராட்டங்களை உறுதிப்படுத்த, விரிவாக்க கட்சி முயற்சித்து வருகிறது. தீவிரமான பிரச்சாரமும், எதிர்ப்புப் போராட்டமும் நடந்துவரும் புர்னியா மாவட்டத்தில் மே மாதத்தில் நில உரிமைக்கான நீதி யாத்திரையை கட்சி துவங்கியிருக்கிறது.

களம்

கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பு
ஒடுக்குமுறை எதிர்ப்பு அரசியல் கருத்தரங்கம்


மே 30 அன்று திருநெல்வேலியில் கூடன்குளம் அணுஉலைக்கு எதிராக, போராட்டக்காரர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக மாலெ கட்சி திறந்தவெளிக் கருத்தரங்கம் நடத்தியது. நிகழ்ச்சிக்கு காவல்துறையின் அனுமதி மறுப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மறுப்பை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடுத்து அனுமதி பெறப்பட்டு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. வழக்குக்குப் பிறகு காவல்துறையினர் அனுமதி கொடுத்த இடம் நெல்லை நகரத்தின் மய்யம். பெருமளவில் மக்கள் கூடும் இடம். நெல்லை காவல்துறையினர் ஒரு வகையில் கருத்தரங்க செய்தியை இன்னும் வீச்சாக, பரவலாக கொண்டு செல்ல உதவினர் என்று சொல்ல வேண்டும்.
கருத்தரங்கில் கூடன்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிற இடிந்தகரை மற்றும் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 300 பேருக்கும் மேல் கலந்துகொண்டார்கள். மாலெ கட்சி நெல்லை மாவட்டச் செயலாளரும், கட்சியின் மாநிலக் கமிட்டி உறுப்பினருமான தோழர் டி.சங்கரபாண்டியன் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினார். கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி, மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், முற்போக்கு பெண்கள் கழக தேசியச் செயலாளர் தோழர் கவிதா கிருஷ்ணன், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் அந்தோணிமுத்து, பாரதி, ரமேஷ், இடிந்தகரையைச் சேர்ந்த சகாய இனிடா மற்றும் அணுசக்திக்கெதிரான ஆசிரியர் கூட்டமைப்பைச் சேர்ந்த சாமுவேல் ஆசீர்ராஜ் ஆகியோர் கருத்தரங்கில் உரையாற்றினார்கள். கூடன்குளம் அணுஉலை மூடப்பட வேண்டும், போராட்டக்காரர்கள் மீதான பொய் வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் உள்ளடக்கிய கருத்தரங்கின் தீர்மானங்களை தோழர் தேன்மொழி  முன்வைத்தார்.
அணுசக்தியை மக்கள் சக்தி வெல்லும் என்று தனது உரையை துவக்கிய அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி, ஏகாதிபத்திய நாடுகளில் காலாவதியாகிவிட்ட அணுசக்தி தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு கொண்டுவந்து இந்திய மக்களை பலியாக்கும் அய்முகூ அரசாங்கத்தின் முயற்சியை முறியடிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். சிங்கூரிலும் நந்திகிராமிலும் மக்கள் வெற்றி பெற்று ஆட்சியாளர்கள் தோற்றதுபோல் கூடன்குளத்திலும் மக்கள் வெற்றி பெறுவார்கள், போராட்டக்காரர்களை முதலில் நம்பவைத்து பிறகு அவர்களை முற்றுகையிட்டு, இலங்கை தமிழ்மக்கள் மீது போர் நடத்தப்பட்டதைப் போல், அவர்கள் மீது போர் நடத்திய தமிழக அரசு தோற்றுப் போகும் என்றார். 
போராட்டக்காரர்கள் மீதான ஜெயலலிதா அரசின் காவல்துறை ஒடுக்குமுறையை கடுமையாக சாடிய கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், போராட்டக்காரர்கள் மீதான அனைத்து பொய் வழக்குகளும் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இடிந்தகரை மக்களின் போராட்டத்துக்கு மாலெ கட்சியின் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுவின் ஆதரவை தெரிவித்த தோழர் கவிதா கிருஷ்ணன், இடிந்தகரை மக்களின் போராட்டம் நிச்சயம் வெல்லும் என்றும் அது கூடன்குளம் அணுஉலையை மூடுவது மட்டுமின்றி ஜெய்தாபூர், அரிப்பூர் போன்ற இடங்களில் அணுஉலைகளை மூடுவதையும் உறுதி செய்யும் என்றும் கூறினார்.
கருத்தரங்குக்கு முன்பு, தோழர் கவிதா கிருஷ்ணன், கட்சி குமரி மாவட்டச் செயலாளர் தோழர் அந்தோணிமுத்து மற்றும் ஏஅய்சிசிடியு மாநில துணைப் பொதுச்செயலாளர் தோழர் புவனேஸ்வரி ஆகியோருடன் இடிந்தகரை சென்று போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார் மற்றும் புஷ்பராயன் ஆகியோரை சந்தித்தார். மாலெ கட்சியும் அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுவும் என்றும் அவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக இருக்கும் என தெரிவித்தார். அணுஉலை எதிர்ப்புப் போராட்டக் குழுவினரும் மாலெ கட்சியின் சரியான நேரத்திலான தலையீடு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.
குமரி, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்தும் தோழர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

அகில இந்திய மாணவர் கழக முன்முயற்சிகள்
மே 1 முதல் ஆகஸ்ட் 9 வரை ஊழலுக்கு எதிராக ஒடுக்குமுறைக்கு எதிராக நாடு முழுவதும் அகில இந்திய மாணவர் கழகமும் புரட்சிகர இளைஞர் கழகமும் நடத்திக் கொண்டிருக்கிற இயக்கத்தினூடே சென்னை, திருவள்ளூர், கடலூர், நாகை, தஞ்சை, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஊழியர் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தக் கூட்டங்களில் மாணவர் இளைஞர்கள் 100 பேர் வரை கலந்துகொண்டனர்.

பள்ளிக் கட்டண முறைகேட்டுக்கு எதிராக அகில இந்திய மாணவர் கழகம் முற்றுகை போராட்டம்
அம்பத்தூரைச் சுற்றி உள்ள தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஏழைக் குழந்தைகள் படிக்கின்ற குப்தா உயர்நிலை பள்ளியில் ரூ.300 முதல் ரூ.1000 பெற்றுக் கொண்டு ரூ.50 மட்டும் பெற்றுக் கொண்டதாக நிர்வாகம் பெற்றோர்களிடம் ரசீது அளித்தது.
இதைக் கண்டித்து அகில இந்திய மாணவர் கழகமும், புரட்சிகர இளைஞர் கழகமும் 06.06.2012 அன்று குப்தா பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தின. அன்று காலையில் இருந்தே காவல்துறையினர் 50 பேருக்கு மேற்பட்டோரை  நிறுத்தி போராட்டத்தை ஒடுக்க பார்த்தது தமிழக அரசு. பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக உரத்த குரல் எழுப்பிய தோழர்கள் அம்பத்தூர் மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்த பெற்றோர்களின் ஆதரவைப் பெற்றனர்.
முற்றுகை போராட்டத்தின் இறுதியில் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சு வார்த்தையில் ஒரு மணி நேரத்தில் அரசு அறிவித்துள்ள கல்வி கட்டணத்தை அறிவிப்பு பலகையில் ஒட்டுவதாகவும், வாங்கிய கட்டணத்திற்கு முறைப்படி ரசீது தருவதாகவும் நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முற்றுகை போராட்டத்தில் பேசிய தோழர்கள், தமிழகம் முழுக்க நடைபெறுகிற கல்வி வியாபார கொள்ளையையும், அதற்கு ஆதரவான தமிழக அரசின் போக்கையும் கண்டித்தனர்.  முற்றுகை போராட்டத்தில் தோழர் பாரதி (அகில இந்திய துணைத் தலைவர்), தோழர் மலர்விழி (மாநில தலைவர்), மாலெ கட்சி மாவட்டக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் மோகன், முனுசாமி, வேணுகோபால், பசுபதி, அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக நிர்வாகி தோழர் லில்லி, மற்றும் அம்பத்தூர் நகர முன்னணி தோழர்கள் சுஜாதா, சுரேஷ், புகழேந்தி, எல்லப்பன், ஜீவா, முருகதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாளை சித்த மருத்துவ கல்லூரி மாணவர்களுடன் சந்திப்பு
30.05.2012 அன்று அகில இந்திய மாணவர் கழக, புரட்சிகர இளைஞர் கழக முன்னணி தோழர்கள் பாரதி, வெங்கடாசலம், ரமேஷ்வர்பிரசாத், ராஜசங்கர், இளவரசன் ஆகியோர் 50 பேர் கொண்ட சித்த மருத்துவ மாணவர்களை சந்தித்தனர். மாணவர்கள் வழக்கு நடத்த ரூ.2.50 லட்சம் செலவு செய்து இருப்பதாகவும், இனியும் செலவு செய்ய போவதாகவும் தெரிவித்தனர். அதற்கு அகில இந்திய மாணவர் கழகமும், புரட்சிகர இளைஞர் கழகமும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக வழக்கு நடத்தத் தயாராக உள்ளதாகவும், மேலும் சித்த மருத்துவ கல்லூரி மாணவர்களின் பிரச்சனையில் என்றும் மாணவர்களுடன் ஒருங்கிணைத்து போராடுவோம் என தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் தரப்பில் அகில இந்திய மாணவர் கழகத்தில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்தனர்.

பெட்ரோல் விலைஉயர்வுக்கு எதிராக ரயில் மறியல்
மே 31 அன்று பெட்ரோல் விலை உயர்வை கண்டித்தும் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய கோரியும் கட்சி விடுத்திருந்த நாடு தழுவிய சிறை நிரப்பும் போராட்டத்தை ஒட்டி, நெல்லையில் நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி, மாவட்ட செயலாளர் தோழர் சங்கரபாண்டியன், கட்சி மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் என்.கே.நடராஜன், ரமேஷ், தேன்மொழி, மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் கணேசன் உட்பட கலந்து கொண்டனர். தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு பின் மாலை விடுவிக்கப்பட்டனர்.
இதே நாள் கோவையில் பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன், ஏஅய்சிசிடியு மாநில செயலாளர் தோழர் கிருஷ்ணமூர்த்தி, கட்சி மாநிலக்குழு உறுப்பினர் தோழர் தாமோதரன் உட்பட தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு பின் மாலை விடுதலை செய்யப்பட்டனர்.
கும்பகோணத்தில் நடந்த மறியலில் மாவட்டச் செயலாளர் தோழர் இளங்கோவன், அய்சா மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ரமேஷ்வர் பிரசாத், அயலா மாநிலத் தலைவர் தோழர் டிகேஎஸ் ஜனார்த்தனன் உட்பட தோழர்கள் கைதுசெய்யப்பட்டு பின் மாலை விடுவிக்கப்பட்டனர்.
அம்பத்தூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி  மாவட்ட கமிட்டி உறுப்பினர் தோழர் ஜி.முனுசாமி தûலைமை தாங்கி நடத்தினார். ஏஅய்சிசிடியு மாநில துணை பொதுச் செயலாளர் தோழர் புவனேஸ்வரி மாநிலச் செலாளர் தோழர் கே.பழனிவேல், மாலெ கட்சி மாவட்ட செயலாளர் தோழர் எஸ்.சேகர், உழைப்போர் உரிமை இயக்க மாவட்டத் தலைவர் தோழர் ஆர்.மோகன் செயலாளர் தோழர் வேணுகோபால் உரையாற்றினர்.
சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட கமிட்டி உறுப்பினர் தோழர் வேல் முருகன் தலைமை தாங்கினார். மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள் தோழர் சந்திரமோகன், தோழர் மோகனசுந்தரம் உரையாற்றினர். கட்சி, ஏஅய்சிசிடியு முன்னணி தோழர்கள் பங்கேற்றனர்.

முற்போக்கு பெண்கள் கழக ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்டம் ஆவத்திபாளையத்தில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை கண்டித்து ஜூன் 4 அன்று அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர் மாரியம்மாள் தலைமை தாங்கினார். பெண்கள் கழகத்தின் மாநிலத் தலைவர் தோழர் தேன்மொழி, மாவட்டத் தலைவர் தோழர் ஜாக்குலின்மேரி, கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் எ.கோவிந்தராஜ், ஏஅய்சிசிடியு தலைவர் தோழர் புகழேந்தி மற்றும் தோழர்கள் ஜெயலட்சுமி, ஜெயா ஆகியோர் உரையாற்றினர்.

நெடுஞ்சாலைக்காக நிலத்தை இழந்த வறிய விவசாயிகள் இழப்பீடு கோரி போராட்டம்
தேசிய நெடுஞ்சாலை 68க்கு நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து மே 30 அன்று உடையார்பட்டி பைபாஸ் சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏழை சிறுகுறு விவசாயிகள் 150க்கும் மேற்பட்டோர்கள் பங்கேற்றனர். கட்சியின் மாவட்ட கமிட்டி உறுப்பினர்கள் தோழர் செல்வராஜ், தோழர் அய்யன்துரை, மற்றும் கட்சியின் முக்கியத் தலைவர்கள் போராட்டத்தை வழி நடத்தினார்கள்.
ஜூன் 1 அன்று கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு அவார்ட் வழங்குவதில் காலதாமதம் செய்து வந்த நிலம் கையகப்படுத்தும் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகை யிட்டு குடும்பத்துடன் அகில இந்திய விவசாயிகள் மகா சபா சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இழப்பீடு அவார்ட் வழங்காமல் வெளியே செல்லமாட்டோம் என அறிவித்ததால் வேறுவழியின்றி வெளியில் இருந்து கணிணி மற்றும் பிரின்ட் உபகரணங்களை வாடகைக்கு ஏற்பாடு செய்து அதிகாரிகள் அவார்ட் வழங்கினார்கள். அவார்ட் வழங்கிய பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் வெங்கடேசன், உட்பட மாவட்டத் தலைவர்கள் பங்கேற்றனர்.

இடிந்தகரை பொதுக் கூட்டத்தில் இககமாலெ
கூடன்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கம் 10.06.2012 அன்று அதன் 300ஆவது நாளை எட்டுகிறது. இதை ஒட்டி அந்த மக்கள் இடிந்தகரையில் நடத்திய பொதுக்கூட்டத்துக்கு மாலெ கட்சியும் அழைக்கப்பட்டிருந்தது. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கட்சியின் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட தலைமைத் தோழர்கள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் தோழர் சங்கரபாண்டியன், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் தோழர் அந்தோணிமுத்து, ஏஅய்சிசிடியு தலைவர்கள் தோழர் ரமேஷ், தோழர் கணேசன், முற்போக்கு பெண்கள் கழக தலைவர் தோழர் தேன்மொழி, புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் நிம்மி உட்பட கட்சியின் முன்னணி தோழர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பேச்சிப்பாறை அணையிலிருந்து அணுஉலையின் ரியாக்டரை குளிர்விப்பதற்கு தண்ணீர் எடுத்துச் செல்லப்படுவதை கைவிட வேண்டும், மொத்த அணுஉலையும் மூட வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஜெ.அரசின் ஓராண்டு சோதனைகளுக்கு எதிராக
ஜூன் 9 அன்று விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் திராவிட இயக்கத்தின் நூறாண்டு வேதனை, ஜெ. அரசின் ஓராண்டு சோதனைகளை கண்டித்து கண்டனக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார், மாவட்ட செயலாளர் தோழர் வெங்கடேசன், மாவட்ட தலைவர்கள் தோழர் செண்பகவள்ளி, தோழர் தட்சணாமூர்த்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்று உரையாற்றினார்கள்.
இதே நாள் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் ஜெ. அரசின் ஓராண்டு வேதனையை கண்டித்து நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் அந்தோணிமுத்து, ஏஅய்சிசிடியு மாநில தலைவர்களில் ஒருவரான தோழர் மேரிஸ்டெல்லா, மாவட்ட நிர்வாகிகள் தோழர் ஆன்றோலெனின், தோழர் சுசீலா, ஆகியோர் உரையாற்றினர்.

Friday, June 1, 2012

மாலெ தீப்பொறி 2012, ஜுன் 01 - 15 தொகுதி 10 இதழ் 16

முன்முயற்சி

உள்ளாட்சி அமைப்புக்களை
மக்கள் போராட்ட மேடைகளாக்குவோம்
!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம், நெற்குன்றம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்யும் கிராமப்புற வறியவர்களுக்கு ரூ.132 சட்ட கூலி தராமல், வேலை அளவுக்கு ஏற்ப ரூ.80, ரூ.70 எனக் கொடுத்து ஏமாற்றுவதாக, ஊராட்சித் தலைவராக வெற்றி பெற்றுள்ள மாலெ கட்சியின் தோழர் சரஸ்வதியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. மாலெ கட்சியின் தோழர் ஒருவர் தலைவராக பொறுப்பெடுத்துள்ள ஊராட்சியில் அரசாங்கத்துக்கு, ஊராட்சி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டிய சூழல் உருவானது.
ஊர் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கே ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மக்கள் வேலை செய்யும் இடத்துக்கு போய், அந்த இடத்துக்கு அதிகாரிகளை வரவழைத்து மாலெ கட்சியின் ஊராட்சி தலைவர் கூட்டம் நடத்தினார். இந்நிலையில் 21.05.2012 அன்று வேலை உறுதித் திட்டத்தில் ரூ.132 கூலி தராத ஒன்றிய வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என மாலெ கட்சி அறிவித்தது. போராட்டத்தை தடுக்க ஒன்றிய வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர், அலுவலக அதிகாரிகள், ஒன்றியத் தலைவர் ஆகியோர் முயன்றனர். சட்டக் கூலி ரூ.132 என அறிவித்து எந்த ஊராட்சியில் தருகிறார்கள் எனக் கேட்டனர். மத்திய அரசின் அறிவிப்பு எங்கு அமலா னது எனக் கேட்பதற்கு மாறாக இங்கு அமலாக வேண்டும் எனவும், மாலெ கட்சி தலைமை உள்ள ஊராட்சியில், அதை அமலாக்குவதே முதல் கடமை எனவும் அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
அதன்பின் அதிகாரிகளும் ஆளும் கட்சிக் காரர்களும் மிரட்டும் தொனியில் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். மக்கள் வேலைக்கு ஒழுங்காக வருகிறார்களா, அளவைப்படி வேலைகள் செய்கிறார்களா என்று கேட்டனர்.  வேலைக்கு வரும் மக்களை, போராட்டத்துக்கு போனால் செய்த வேலைக்கான கூலி இல்லை, வேலை இல்லை என மிரட்டினர். மக்கள் இதை கண்டுகொள்ளவில்லை.
ஒன்றிய வளர்ச்சி அலுவலரும், ஒன்றிய தலைவரும் ஊராட்சி தலைவர் பதவியை பறித்துவிடுவோம் என மிரட்டினர். ஊராட்சியில் எந்த வேலையும் நிதியும் வருவதை தடுத்து விடுவதாகவும் மிரட்டிப் பார்த்தனர். மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதே முக்கியம், பதவி பொருட்டல்ல என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
மிரட்டல்களை முறியடித்து, 21.05.2012 அன்று சோழவரம் ஒன்றிய வளர்ச்சி அலுவலர் அலுவலக முற்றுகைக்கு 200க்கும் மேற்பட்ட கிராமப்புற வறியவர்கள் வந்து சேர்ந்தனர். முற்றுகையில் கலந்துகொண்டவர்கள் அதிகாரிகளிடம் வேலை உறுதித் திட்டத்தில் சட்டக் கூலி தராமல் ஏமாற்று நடப்பதைக் கண்டித்து சரமாரியாக கேள்விகள் எழுப்பினர். மக்கள் கேள்விகளுக்கு துணை வட்டாட்சியரும், ஒன்றிய வளர்ச்சி அலுவலரும் ஊராட்சி அதிகாரிகளும் பதில் சொல்ல முடியவில்லை.
வேறு வழியின்றி கூலி உயர்வு உடனே தருவதாகவும், மக்களிடம் மரியாதையாகவும் வெளிப்படையாக நடப்பதாகவும் அறிவித்த பின் போராட்டம் முடிவுக்கு வந்தது. அவிதொச மாநில பொதுச் செயலாளர் தோழர் ஜானகிராமன், கட்சி மாநில குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார்,  ஊராட்சியின் மாலெ கட்சித் தலைவர் தோழர் சரஸ்வதி, மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
ஊராட்சிகளை போராட்ட மேடைகளாக வளர்த்தெடுப்பது, கிராமப்புற முக்கூட்டுக்கு எதிரான சக்திவாய்ந்த போராட்டங்களைக் கட்டமைப்பது என மாலெ கட்சி முன்வைத்துள்ள கடமைகளுக்கு ஏற்ப இந்தப் போராட் டம் கட்டமைக்கப்பட்டது. ஊராட்சிக்கு வர வேண்டிய நலத்திட்டங்கள் வராது என்ற மிரட்டல்கள், அதன் மூலம் வெற்றி பெற்ற வரை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்துவது, மக்களுக்குச் சேர வேண்டியவற்றை தடுப்பது போன்ற ஆதிக்க சக்திகளின் வழமையான முயற்சிகளை, மக்களை சார்ந்து நின்று, மக்கள் போராட்டங்கள் மூலம் முறியடித்து முன்செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. இந்த விசயத்தில் ஊராட்சி மட்ட கட்சி அமைப்புக்களின் அரசியல், கருத்தியல் வலிமை மட்டுமே வழிவிலகல்களில் இருந்து பாதுகாக்கும்.

தலையங்கம்

புதுக்கோட்டை இடைத் தேர்தலில்
மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி!


‘எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’. இது ஜெயலலிதாவின் லட்சியமாம்! நூறாண்டு பேசும் ஓராண்டுச் சாதனை விளம்பரங்கள் சொல்கின்றன. இந்த வரிகள் தீக்கதிர், ஜனசக்தி உள்ளிட்ட ஏடுகளைக் கூட ஆக்கிரமித்துள்ளன.
சாமான்ய மக்கள் தாங்கமுடியாத பஸ் கட்டண உயர்வைப் பெற வேண்டும். சுமக்கமுடியாத பால் கட்டண உயர்வை சுமக்க வேண்டும். மின்கட்டண உயர்வின் தொடர் அதிர்ச்சியில் வாழ வேண்டும். கசக்கிப் பிழியும் விலைவாசி உயர்வால் துன்பப்பட வேண்டும். தலித்துகள் துப்பாக்கிச் சூட்டில் மடிய வேண்டும். பழங்குடிப் பெண்கள் காவல்துறை வன்முறையால் சின்னாபின்னமாக வேண்டும். கூடங்குளம் மக்கள் ஜெயலலிதாவின் நயவஞ்சக வாக்குறுதியால் ஏமாற வேண்டும். கிராமப்புற ஏழைகள், தேசிய வேலை உறுதித் திட்டத்தில் வேலைக் குறைப்பை, கூலிக் குறைப்பை பெற வேண்டும். நகர்ப்புற, கிராமப்புற தொழிலாளர்கள் வேலைஇல்லா திண்டாட்டத்தைப் பெற வேண்டும். தானே புயலால் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் வறுமையில் வாட வேண்டும். டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் கொத்துகொத்தாக மடிய வேண்டும். இதுதான் ‘எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்’ என்ற ஜெயலலிதாவின் லட்சியம். அவரது லட்சியம் இவ்வாறுதான் நிறைவேறியுள்ளது! இதுதான் நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை!
ஜெயலலிதாவின் கனவுத் திட்டமான தொலை நோக்கு திட்டம் 2023ம் இந்த ஓராண்டு சாதனையில் அடங்கும். இந்த திட்டம் 2023ல் வறுமை இல்லா தமிகத்தை உருவாக்கும் என்கிறது. இந்த திட்டத்தின் மூலம் நெருக்கடியிலிருக்கும் விவசாயம் அழிவுக்குள் தள்ளப்படும். உள்கட்டமைப்பு வளர்ச்சி என்ற பேரால் நிலவங்கி உருவாக்கப்படும். அந்த நிலங்கள் பெருமுதலாளிகளுக்கு வாரி வழங்கப்படும். நீர், மின்சாரம், மலிவான உழைப்பு பெரு முதலாளிகளுக்குத் தங்குதடையின்றி கிடைக்கும். பெரும் உள் நாட்டு, வெளி நாட்டு முதலாளிகள் வளர்ச்சி பெறுவார்கள். முதலாளித் துவம் மூர்க்கத்தனத்துடன் தாக்கும். இதைத்தான் எல்லாரும் (உள் நாட்டு, வெளிநாட்டு பெருமுதலாளிகள்) எல்லாமும் (நிலம், நீர், மலிவான உழைப்பு, அளவில்லா சலுகைகள்) பெறுவார்கள் என்று ஜெயலலிதா சொல்கிறார்!
இந்தப் பாடல் கருப்புப் பணம் திரைப்படத்தில் வருகிறது. எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். வரிகளை அடுத்து வருவது. ‘வல்லான் (வலுத்தவன் - முதலாளிகள்) பொருள் குவிக்கும் தனிஉடமை ஒழிந்து, வரவேண்டும் இந்நாட்டில் பொது உடமை’. வலுத்தவன் பொருள் குவிக்கும் நிலை உள்ள வரை, ஏற்றத்தாழ்வுகள் பெருகும். மக்கள் வாழ்வாதாரங்கள் பறிபோகும். பட்டினி பெருகும். வறுமை தாண்டவமாடும். வேலைஇல்லா திண்டாட்டம் தலை விரித்தாடும். வலுத்தவர்கள் (பெருமுதலாளிகள்) பொருள் குவிக்கும் தனிஉடமை ஒழிந்தால்தான் மக்கள் துயரம் நீங்கும். துன்பம் ஒழியும். இந்த வரிகளை ஏனோ ஜெயலலிதா மறந்துவிட்டார்!
அவரது தலைமையிலான ஆட்சியின் ஓராண்டு சாதனையை சட்ட மன்றத்தில் விளக்கும்போது, ஜனநாயகம் பற்றியும் ஜெயலலிதா வகுப்பு நடத்தியிருக்கிறார். அதிகப்படியான மக்களுக்கு அதிக நன்மைகளை செய்வதுதான் ஜனநாயகம் என்று பேசியிருக்கிறார்! அதிகப்படியான மக்களுக்கு அதிகப்படியான தீமைகளைத் தருவதும் மிகமிகக் குறைவானவர்களுக்கு (வலுத்த பெருமுதலாளிகளுக்கு) அளவில்லா நன்மைகளைத் தருவதும்தான் ஜெயலலிதாவின் ஜனநாயகம் என்பது ஓராண்டில் நிரூபணமாகிவிட்டது. வல்லான் (வலுத்தவர்கள்) பொருள் குவிக்கும் முதலாளித்துவ வளர்ச்சி திட்டத்தைத்தான் (2023) தமிழ்நாட்டின் வறுமையை ஒழிக்கும் திட்டம் என்கிறார் ஜெயலலிதா!
மக்கள் விரோத முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் மக்கள் போராடி வருகிறார்கள். வெற்றிகரமான பிப்ரவரி 28 அகில இந்திய வேலை நிறுத்தமும் இதைத்தான் உணர்த்தியது. முதலாளித்துவத்தை தாங்கிப் பிடிக்கும் ஆட்சியாளர்களை தோற்கடித்து வருகிறார்கள். தமிழக மக்கள் தங்கள் தேர்தல் தீர்ப்பு மூலம் பெருமுதலாளித்துவ வளர்ச்சிப் பாதைக்கு எதிராக, அதன் விளைபொருளான ஊழலுக்கு எதிராக தங்கள் கோபத்தைக் கொட்டி தீர்த்தனர். ஆனா லும் தேர்தல் தீர்ப்புக்கு எதிராகவே அதிமுக ஆட்சி சென்றுகொண்டிருக்கிறது. பெருமுதலாளித்துவ பாதையை வெகுஆவேசமாக செயல்படுத்திவருகிறது. அதையே நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனையாகவும் காட்டுகிறது!
ஓராண்டு சாதனை பத்திரிக்கைகளை ஆக்கிரமித்துக்கொள்ள 43 அதிமுக அமைச்சர்கள் புதுக்கோட்டையை ஆக்கிரமித்துள்ளனர். மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். சுதந்திரமான தேர்தலை அடாவடி தேர்தலாக மாற்றி வருகின்றனர். ஜெயலலிதாவோ தேசிய அரசியலில் - ஜனாதிபதி தேர்தலில் - இறங்கியுள்ளார். மலைவாழ் சமூகத்து சங்மாவுக்கு ஆதரவு தேடி வருகிறார். மலைவாழ் மக்கள் மீது அவருக்குள்ள  அக்கறையைவிட தேசிய அரசியலில் தன்னை முக்கிய சக்தியாக காட்டிக்கொள்ளும் அக்கறையே தூக்கலாக தெரிகிறது. தேசிய அரசியலில் கருணாநிதியை பின்னுக்கு தள்ளும் அனைத்து உத்திகளையும் செய்து பார்க்கிறார். பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து கருணாநிதி 30ம் தேதி ஆர்ப்பாட்டம் என்றவுடன் 29ம் தேதியே அதிமுக போராட்டம் என்று அறிவித்திருக்கிறார். கர்நாடகா, புதுடெல்லி, மகாராஷ்ட்ரா, கேரளா, புதுச்சேரி, ஆந்திர மாநிலங்களிலும் போராட்டம் அறிவித்திருக்கிறார். அதிமுக ஒரு அகில இந்திய கட்சி, தான் ஒரு தேசிய தலைவர் என்று காட்ட முற்படுகிறார். கருணாநிதியால் தமிழ்நாட்டில் மட்டும்தான் போராட்டம் அறிவிக்க முடியும். தன்னால் அகில இந்திய அளவில் போராட்டம் அறிவிக்க முடியும் என்று காட்டுகிறார்.
மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அதேசமயம் பெட்ரோல் மீதான மாநில வரியை ரத்து செய்தால் சாமான்ய மக்களுக்கு சுமை குறையும். அதை செய்ய ஜெயலலிதா முன்வரவில்லை. மத்திய அரசு எதிர்ப்பு - மாநில உரிமை என்ற அரசியலை தூக்கலாக காட்டிக்கொள்வதன் மூலம் செல்வாக்கு மிக்க பிராந்திய அரசியல் தலைவராக தன்னை நிறுத்திக் கொள்ள முயலுகிறார். மத்திய அரசுக்கு எதிராக பெருகிவரும் தமிழக மக்களின் கோபத்தை ஆதாயமாக்கிக்  கொள்ளும் திட்டத்தில் இறங்கியிருக்கிறார். இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலிலும் மத்திய அரசாங்கத்தை உருவாக்குவதிலும் முக்கிய பங்காற்ற முடியும் என்று நம்புகிறார்.
காங்கிரஸ் - திமுக கூட்டணி நடத்திவரும் மத்திய ஆட்சி பின்பற்றி வரும் நாசகரமான ஏகாதிபத்திய - பெருமுதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைகளை அணுவளவும் மாறாமல் செயல்படுத்தி வருகிறது அதிமுக ஆட்சி. அதிமுக ஆட்சியின் மக்கள் விரோத - சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான மக்கள் அதிருப்தியை மத்திய அரசு எதிர்ப்பு அரசியலுக்குள் மறைத்துக் கொள்ளப் பார்க்கிறார் ஜெயலலிதா. மறைந்து விடும் என நம்புகிறார்.
ஜெயலலிதாவின் இந்த இரட்டை வேடத்தை அம்பலப்படுத்த வேண்டிய அவசர அவசியம் உருவாகியுள்ளது. அதிமுக ஆட்சியின், நூறாண்டு பேசும் ஓராண்டு வேதனையிலிருந்து மக்களைப் பாதுகாக்க, முதலாளித்துவ வளர்ச்சிப்பாதையின் தாக்குதலிலிருந்து உழைக்கும் மக்களைப் பாதுகாக்க, அதிமுக ஆட்சிக்கு எதிராக உழைக்கும் மக்களை அணி திரட்ட வேண்டிய தேவை முன்வந்துள்ளது.
இந்த அரசியல் கடமையை முன்னெடுத்துச் செல்ல புதுக்கோட்டை இடைத்தேர்தலில் மாலெ கட்சி போட்டியிடுகிறது. அதிமுகவின் மூர்க்கத்தனமான முதலாளித்துவக் கொள்கைகளை எதிர்த்து, சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து அதிருப்தி அடைந்து வரும் உழைக்கும் மக்களின் குரலாக, இடதுசாரி அரசியலாக களத்தில் நிற்கிறது மாலெ கட்சி. பெரிய கட்சிகள், தேர்தலிலிருந்து விலகியுள்ளன. அதிமுக எதிர்ப்பு அரசியலிலிருந்து விலகியுள்ளன. களத்திலிருக்கும் கட்சிகளில் மாலெ கட்சியைத் தவிர ஏனைய கட்சிகள், அதிமுக ஆட்சியின் பெருமுதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை எதிர்க்கிற கட்சிகள் இல்லை. பெருமுதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை நிராகரிப்போம். மக்கள் சார்பு வளர்ச்சிப் பாதைக்காகப் போராடுவோம் என்ற கட்சியின் கோவை மாநாட்டு முழக்கத்தை செயல்படுத்தும் வகையில் களமிறங்கியுள்ளது மாலெ கட்சி.
அதிமுக ஆட்சிக்கு எதிர்ப்புக் குரலாக, புரட்சிகர எதிர்க்கட்சியாக களத்திலிருக்கும் மாலெ கட்சியை உழைக்கும் மக்கள் ஆதரித்து வலுப்படுத்த அழைப்பு விடுக்கிறோம். மூர்க்கத்தனமான முதலாளித்துவ ஆட்சிக்கு, சர்வாதிகார ஆட்சிக்கு கடிவாளம் போட, இடதுசாரி கட்சிகள், ஜனநாயக, முற்போக்கு அமைப்புகள், போராடும் தலித் இயக்கங்கள் மாலெ கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும். அதிகாரபூர்வ இடதுசாரி கட்சிகள் களத்தில் இறங்குவதை தவிர்த்துவிட்ட நிலையில் உழைக்கும் மக்கள் அரசியலுக்கு, இடதுசாரி அரசியலுக்கு ஆதரவு தருவதே மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சியை ஆதரிப்பதே, இடதுசாரிகளின் கடமையாகும். உண்மையான அதிமுக எதிர்ப்பு அரசியலுக்கு வலுச்சேர்க்க, அதிமுக ஆட்சிக்கு எதிரான உழைக்கும் மக்கள் குரலாக, இடதுசாரி, ஜனநாயக அரசியலாக துணிச்சலுடன் செயல்படுவோம்!

வழக்கு

வழக்கு எண் (ரிட் மனு) 6785/2012

கோடை விடுமுறையில் உயர்நீதிமன்றம் எல்லா நாட்களிலும் இயங்காது. வாரத்தில் ஒரு நாள்தான் செயல்படும். நாம் சட்டவிரோதமாக சர்வாதிகார முறையில் எது செய்தாலும் யாராலும் இந்த நேரத்தில் ஒன்றும் செய்ய முடியாது என, தப்புக் கணக்கு போட்டனர் தமிழக அரசும் காவல் துறையும். அவர்கள் எண்ணத்தில் மண் விழ வைத்தது வழக்கு எண். 6785/2012. வாழ்க்கையில் சுட்டெரிக்கும் நிஜங்களையும், மக்களுக்குள் ஊற்றெடுக்கும் எதிர்ப்புணர்வையும், வழக்கு எண். 18/9 திரைப்படம் தமிழக மக்கள் முன்கொண்டு வந்த நேரத்தில்தான், சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையில், வழக்கு எண். 6785/2012ல் 17.05.2012 அன்று, அரசின் அத்து மீறல் உத்தரவு ஒன்று, தன் முடிவைச் சந்தித்தது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) தனது மாநிலக் குழு உறுப்பினரும் திருநெல்வேலி மாவட்டச் செயலாளருமான தோழர் டி.சங்கரபாண்டியன் மூலம், 03.05.2012 மனுவில் 30.05.2012 அன்று, நெல்லையில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு ஒடுக்குமுறை எதிர்ப்பு அரசியல் கருத்தரங்கம் நடத்த, காவல் துறையிடம் அனுமதி கேட்டது. காவல்துறை, 11.05.2012 அன்று தேதியிடப்படாத ஓர் உத்தரவின் மூலம், நெல்லை மாநகரக் காவல் ஆணையர் சென்னை நகர காவல் சட்டம் 1888ன் கீழ் 04.05.2012 அன்று தடை உத்தரவு போட்டுள்ளதால், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பதாக உத்தரவிட்டது.
கட்சி மாநிலக்குழு கூட்டம் சென்னையில் 12, 13, 14 தேதிகளில் மே மாதம் நடைபெற்றது. 12 அன்று மாலை அனுமதி மறுப்பு உத்தரவு மின் அஞ்சல் மூலம் கூட்டம் நடக்கும் போது கிடைத்தது. உத்தரவு சட்டவிரோதமானது என நன்கு தெரிந்தும், நம்மால் ஏதும் செய்ய முடியாது என்ற இறுமாப்பில் செயல் படுகிறார்கள் என்பதால், இதனை விட்டு விடக் கூடாது எனக் கட்சி மாநிலக்குழு முடிவெடுத்தது. ஏப்ரல் - மே 2012 நெடும் பயண அனுமதி மறுப்பை, சட்டபூர்வமாக முறியடித்ததையும் மாநிலக் குழு நினைவில் வைத்தது.
12.05.2012 அன்று இரவு ரிட் மனு தோழர் சந்திரமோகன் உதவியுடன் தோழர் குமாரசாமியால் தயாரிக்கப்பட்டது. 13.05.2012 அன்று தோழர் பாரதி, தொழிலாளர் வழக்கறிஞர் திரு.ரமேஷ் மூலம் வழக்கை முறைப்படி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் விதம் ஒழுங்குபடுத்துவதில் ஈடுபட்டார். அந்த வாரத்தில் 14.05.2012 திங்கள்கிழமை தாக்கல் செய்யும் நாள் என்பதால் 13.05.2012 மாலை தோழர் சங்கரபாண்டியனிடம் கையொப்பம் பெறப்பட்டு அன்றிரவே ஒருவர் சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளைக்குப் புறப்பட்டார். 14.05.2012 அன்று காலை வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, ரிட் மனு 6785/2012 என்ற எண் பெற்றது. வழக்கு விவரம் அன்று மாலையும், மறுநாள் காலையும் செய்தித் தாள்களில் வெளியானது.
16.05.2012 அன்று காலை இரு நீதிபதிகள் அமர்வம் முடிந்த பிறகு, பிற்பகல் வழக்கு விசாரணைக்கு வந்தது. தோழர்கள் குமாரசாமி நெல்லை ரமேஷ், கோவை குருசாமி, ஆகியோருடன் சென்னை மூத்த வழக்கறிஞர் திரு.ரமேஷ÷ம் நீதிமன்றத்தில் இருந்தனர். 
வழக்கில், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆபத்தானது, மனிதர்கள் மற்றும் சூழலுக்கு உடனடியாகவும், தலைமுறை தலைமுறையாகவும் தீமை விளைவிக்கும், ஃபுகுஷிமாவுக்குப் பிறகு மேலை நாடுகளெல்லாம் அணு நிலையங்களைக் கைவிடுகின்றன, எதிர்ப்பாளர்கள் மீது தேச விரோதக் குற்றம் உட்பட வழக்குகள் மனம் போன போக்கில் போடப் படுகின்றன, கடுமையான ஒடுக்குமுறை ஏவப்படுகின்றது போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன.
அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் கருத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை மீறப்பட்டுள்ளது என்பதையும், இது போன்ற சூழல்களில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதாசிவம் தனபாலன், மணிகுமார் ஆகியோர் அனுமதி வழங்கக்கோரி உத்தரவு பிறப்பித்த தீர்ப்புக்களையும், நெடுமாறன் வழக்கில் நீதிபதி ஜெயசிம்மபாபு வழங்கிய மாற்றுக் கருத்துக்களுக்கான உரிமை பற்றிய முக்கியத் தீர்ப்பையும் ஆதாரமாகத் தந்தனர்.
வழக்கை, நீதிபதி வாசுகி 16.05.2012 அன்று பிற்பகல் விசாரித்தார். சென்னை மாநகரக் காவல் சட்டம் 1888ன் பிரிவு 41 மீறல்களைத் தோழர் குமாரசாமி பட்டியலிட்டுச் சொன்னார். இந்தச் சட்டம் அந்நிய காலனிய ஆட்சிக் காலச் சட்டம் என்பதும் சுட்டிக் காட்டப்பட்டது. பிரிவு 41ல் நான்கு துணைப் பிரிவுகள் உள்ளன. ஊர்வலங்கள் கூட்டங்களுக்கு 15 நாட்கள் தடை போடும் அதிகாரம் தரப்பட்டுள்ளது. ஆனால் தடை உத்தரவு 15 நாட்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும். நம் நாட்டில் 1947 ஆகஸ்ட் 15 முதல் ஆட்சியாளர்கள் தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒரு முறை தடை உத்தரவு போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இந்தப் பொது தடை உத்தரவுக்கு அவர்கள் காரணம் சொல்ல வேண்டியதில்லை. யாரிடமும் விளக்கம் கோரவோ, யாருக்கும் வாய்ப்பு தரவோ வேண்டியதில்லை.
ஆனால், தடை உத்தரவு அமலில் உள்ள போது, எந்த ஒரு தனி நபரோ அமைப்போ, ஆர்ப்பாட்டம் கூட்டம் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி மனு செய்யலாம். காவல்துறை அனுமதி மறுப்பதென்றால், மனு கொடுப்பவரிடம் விளக்கம் கோர வேண்டும். தம் தரப்பைச் சொல்ல வாய்ப்பு தர வேண்டும். அனுமதி மறுப்பதென்றால், அதற்கான காரணங்களை எழுத்து மூலம் பதிவு செய்ய வேண்டும்.
மாலெ கட்சியின் வழக்கில், முதலில் நீதிபதி, காவல்துறை பொதுத் தடை போட வாய்ப்பு தர வேண்டியதில்லை என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு, கேள்வி எழுப்பியதாகத் தெரிந்தது. நம் தரப்பில், அது பொதுத் தடை போட மட்டுமே பொருந்தும் எனவும், தனித்தனி அனுமதி மறுப்பு பற்றி பிரிவுகள் 41 (3) 41 (4) சொல்கின்றன எனவும் சுட்டிக் காட்டப்பட்டது. பிறகு நீதிபதி அரசு வழக்கறிஞரிடம் பிரிவு 41படி பொதுத் தடை அவர்களது 04.05.2012 உத்தரவுப்படி, 19.05.2012 வரைதான் அமலில் இருக்கும் எனக் குறிப்பிட்டு, 30.05.2012 நிகழ்சிக்கு அது எப்படிப் பொருந்தும் எனக் கேள்வி எழுப்பினார். கட்சி தரப்பில், நாங்கள் அரசியல் கருத்தரங்கத்திற்கு அனுமதி கேட்டதற்கு, காவல்துறை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பதாகச் சொல்லி உள்ளதிலிருந்தே குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பற்றிய ஆணவமான அலட்சியம் புலப்படுகிறது எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
அரசு தரப்பில், கருத்தரங்கம் ஆர்ப்பாட்டம் என்ற இரண்டுமே கூட்டங்கள்தானே, அதனால் சொற்களைப் பெரிதுபடுத்தக் கூடாது என வாதிடப்பட்டது. கட்சி தரப்பில், சட்டத்தில், மற்றும் அல்லது என்ற ஒவ்வொரு சொல்லுக்கும் வேறு வேறு பொருள் உள்ளது என விளக்கப்பட்டது. நீதிபதி, கட்சியிடம் விளக்கம் கோராததையும் கட்சிக்கு வாய்ப்பு தராததையும் கணக்கில் கொண்டு, கட்சி நேரில் எடுத்துச் சொல்ல (பெர்சனல் இயரிங்) வாய்ப்புத் தந்தால் பொருத்தமாக இருக்காதா எனக் கேட்டார். முந்தைய மூன்று தீர்ப்புக்க ளிலும், கருத்துக்களைச் சொல்ல, கூட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று பதில் தரப்பட்டது. அவர்கள் கருத்தை அவர்கள் கூட்டம் போட்டுச் சொல்ல என்ன தடை என நீதிபதி அரசு வழக்கறிஞரி டம் கேட்டார். அரசு தரப்பு, எழுத்துப்பூர்வமான உத்தரவுகள் பெற்று, மறுநாள் தாக்கல் செய்வதாகச் சொன்னது.
வழக்கு 23.05.2012 அல்லது 30.05.2012 எனத் தள்ளி வைக்கப்படாமல், 17.05.2012 என மறுநாளே போடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டக்குழு கூட்டமும் வேட்பாளர் அறிமுகமும், தோழர் குமாரசாமி கலந்து கொள்ளும் 17.05.2012 அன்றைய கூட்டத்தில் நடைபெறுவதாக இருந்தது. அந்நிகழ்ச்சி 18.05.2012க்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கறிஞர் ரமேஷ் சென்னை திரும்பினார். 17.05.2012 அன்று தோழர்கள் குமாரசாமி, ரமேஷ், குருசாமி மதுரையிலேயே இருந்தனர்.
வழக்கு மீண்டும் 17.05.2012 அன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு பழைய பாட்டையே பாடியது. சென்சிடிவ், சட்டம் ஒழுங்கு எனத் திரும்பவும் சொன்னது. உங்கள் பெரிய படையைக் கொண்டு சட்டம் ஒழுங்கைப் பார்த்துக் கொள்ளுங்கள் என நீதிபதி சொன்னார். கலந்து கொள்பவர்கள் எண்ணிக்கை, இடம் போன்றவற்றில் காவல் துறைக்கு ஒத்துழைப்பு தர நமக்குச் சொல்லப்பட்டதை, நாம் ஏற்றுக் கொண்டோம்.
தேதியை மாற்ற அரசு கோருவதை நாம் ஏன் ஏற்கக் கூடாது என நீதிபதி கேட்டார். அதற்கு அரசு தரப்பில் ஒரே ஓர் நியாயமான காரணம் சொன்னாலும் ஏற்பதாகச் சொன்னோம். அரசு தரப்பு, ஜ÷ன் மாதம் முதல் மின்சார நிலைமை சீர்படும் என மிகவும் வினோதமான ஒரு காரணம் சொன்னது. இந்தக் காரணம் ஏற்கத்தக்கதல்ல, நகைப்புக் குரியது என அனைவர்க்கும் தெரியும். பிறகு 17.05.2012 மாலை நீதிபதி, அனுமதி மறுப்பை ரத்து செய்தும், முந்தைய தீர்ப்புக்கள், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல், அரசியலமைப்புச் சட்ட 19ஆவது பிரிவு ஆகியவைப்படி மனுதாரர் தரும் புதிய மனுவிற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும், மனுதாரர் எவ்வளவு பேர் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்க வேண்டும் எனவும், காவல் துறை பொருத்தமான இடத்தில் அனுமதி வழங்கலாம் எனவும், உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், வழக்கு எண். 6785/2012அய் முடித்து வைத்து தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பு நகல் 18.05.2012 பெறப்பட்டு, 19.05.2012 புதிய மனு கொடுக்கப்பட்டு, 23.05.2012 அன்று பாளையங்கோட்டை ஜவஹர் மைதானத்தில் 30.05.2012 நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
அரசும் காவல்துறையும் நீதிமன்றக் கோடை விடுமுறை நாட்களில், அடிப்படை உரிமைகளுக்கு விடுமுறை கொடுக்கப் பார்த்தார்கள். முந்தைய வழக்குகளில் எல்லாம், நீதிமன்றம் அன்றாடம் இயங்கும் நாட்களிலேயே கூட, நிகழ்ச்சிக்கு முதலில் அனுமதி கோரிய தேதிக்குப் பின்புதான் அனுமதி கிடைத்தது. ஆனால், விடுமுறைக் காலத்தில், இரண்டே நாட்களில், நிகழ்ச்சிக்கு முன்பாகவே, கட்சி அனுமதியைப் பெற்றுள்ளது. நீதிமன்றத்தில் மட்டுமல்லாமல், மக்கள் மன்றத்திலும், கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு, ஒடுக்குமுறை எதிர்ப்பை எடுத்துச் செல்ல, இகக(மாலெ) முடிவு செய்துள்ளது. அந்தத் திசையில், 30.05.2012 கருத்தரங்கம் அமையும் விதம், தமிழகத்தின் இடதுசாரி முற்போக்கு ஜனநாயக சக்திகள் ஒத்துழைப்பு தர வேண்டுமென அழைக்கிறோம்.

சிறப்புக் கட்டுரை

எப்போது முடியும் இந்த மறைமுக யுத்தம்?
எப்போது நிற்கும் ஈழத்தமிழர் சிந்தும் ரத்தம்?


என்.கே.நடராஜன்

2008ல் இலங்கை கடற்படையிடம் சரணடைந்த தனது மகனை தேடுகிறார் முல்லைத்தீவைச் சேர்ந்த சரோஜாதேவி. கொழும்புவில் மே 19 அன்று மூன்றாவது வெற்றி தினத்தைக் கொண்டாட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, மே 18 அன்று, முன்னாள் விடுதலைப் புலிகளை மறுவாழ்வு மற்றும் பயிற்சிக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ராஜபக்சே ஒப்படைத்தார். அந்த காணொளிக் காட்சியில் தன் மகனைப் போன்ற ஒருவர் இருப்பதாக செய்தி கிடைக்க, ஓடோடிச் சென்ற சரோஜாதேவிக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. சரத் பொன்சேகா விடுதலையாகிவிட்டார். ஆனால், சரோஜாதேவி போன்ற ஆயிரக்கணக்கான தாய்மார்கள் இன்னும் தங்கள் பிள்ளைகளை தேடிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கை மட்டும் அவர்களை இயங்க வைக்கிறது.
முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டன. 30 ஆண்டு கால தீவிரவாதத்துக்கு முடிவு கட்டிவிட்டதாக பேரினவாத சிங்கள அரசு கொண்டாடும் போது போரில் அனைத்தையும் இழந்த இலங்கை தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கானோர் போர் தடுப்பு முகாம்களில்தான் வாழ்கிறார்கள். அவர்கள் மீள்குடியேற்றம் நீள்கிறது. முட்சிறை வாழ்க்கை தொடர்கிறது.
தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் ‘இது ராணுவத்தின் பூமி’ எனப் பெயர்ப் பலகைகள் மாட்டப்படுகின்றன. தமிழர் பகுதிகளில் புத்தர் சிலைகள் நிறுவப்படுகின்றன. ராணுவ முகாம்கள் நிலை கொள்கின்றன. தமிழர்கள் அதிகம் இருந்தால்தானே தனிஈழம் கேட்பார்கள்? ராணுவம் கையகப்படுத்தும் இடங்களில் சிங்களர் குடியிருப்புகள் எளிதாக வந்து அமைகின்றன. சிங்கள குடும்பங்களின் எண்ணிக்கை தமிழர் வாழும் பகுதிகளில் அதிகரிக்கிறது.
உயிர்களை இழந்து உறவுகளை பறி கொடுத்து அங்கங்களை இழந்து சொந்த நிலத்திற்கு மீண்டவர்களின் வாழ்க்கை மிகவும் கொடூரமானது. அரசாங்கமும், ராணுவமும் நடத்துகிற பல்வேறு அடக்குமுறைகளுக்கு எதிராக போராடும் நிலையில் மக்கள் இல்லை.  உலகம் முழுவதும், வடக்கு பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தை உடனே வெளியேற்றக் கோரி, மீள்குடியேற்றம் கோரி ஜனநாயகக் குரல் மேலோங்கி வருகிறது.     
சில சர்வதேச சடங்குகள்
2005க்குப் பிறகு மூழ்கடிக்கப்பட்ட புலிகளின் 11 ஆயுதக் கப்பல்களில் 5 கப்பல்கள் அமெரிக்காவால் மூழ்கடிக்கப்பட்டன. விடுதலைப் புலிகளை அழிக்க வழங்கப்பட்ட ஆயுதங் களில் 40% அமெரிக்கா வழங்கியது என கியூபா குற்றம் சாட்டியது. 2009ல் மட்டும் பிரிட்டன் ரூ.700 கோடி மதிப்புள்ள ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கியது என்று டாக்டர் ராகுல் சாய்ஸ் என்ற பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் பிப்ரவரி 13, 2009ல் தெரிவித்தார். ஓர் இனப்படுகொலை நடக்க அனைத்து உதவிகளையும் செய்துவிட்டுத்தான் அய்நா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் என்ற சடங்கு நடந்தேறியது.
போர் விமானம் பறக்க, ராணுவ வீரர்கள் அணி வகுக்க மகிந்த ராஜபக்சே வெற்றி விழா கொண்டாடுகிறார். விழாவில், ராஜபக்சே ஆணவமாக, ‘இலங்கையின் வடக்கு பகுதியில் இருந்து ராணுவத்தை வெளியேற்ற முடியாது’ என்கிறார். கொழும்பு நகரில் வெற்றி விழா நடந்து கொண்டிருக்கும் போது, இலங்கை வெளி உறவு அமைச்சர் பெரீஸ் அமெரிக்க அரசின் செயலாளர் ஹிலாரி கிளிண்டனை வாஷிங்டனில் சந்திக்கிறார். வாஷிங்டனில், ஹிலாரி கிளிண்டன் ‘இலங்கை அரசின், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் மீள்இணக்க விசாரணைக் குழுவின் (ககதஇ) திட்டத்தை அமலாக்குவதற்கான விரிவான நடைமுறை மிகச் சிறந்தது’ என மகிழ்ச்சி அடைகிறார். நண்டுக்கு நரியை காவல் வைத்து எல்லாம் நலம் என்கிறார்கள். 1,46,679 தமிழர்கள் பற்றி எந்த விவரங்களும் இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்று எல்எல்ஆர்சி முன்பு சான்று வழங்கிய மன்னார் ஆயர் சொல்கிறார். எல்எல்ஆர்சி எப்படி செயல்படும் என்பதை யாரும் விளக்க வேண்டியிருக்காது.
அமெரிக்கா, இந்தியா மூலம் இலங்கையை கட்டுக்குள் வைக்கப் பார்க்கிறது. அமெரிக்கா இந்தியாவை தெற்கு ஆசியாவின் பேட்டை ரவுடியாக்கப் பார்க்கிறது. ஒரு காலத்திலும், அமெரிக்கா, இந்தியா உதவி ஈழத் தமிழர்கள் விடுதலை பெற முடியாது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இலங்கை மீது யுத்த தந்திரரீதியான போட்டி இருக்கவே செய்யலாம். ராஜபக்சே அதைப் பயன்படுத்தலாம்.
இந்திய, தமிழக அரசுகளின் தொடர் துரோகம்
இந்திய அரசின் தொடர் நாடகத்தில் ஒரு காட்சியாக மீண்டும் ஒரு நாடாளுமன்ற குழு ஒன்று இலங்கைக்கு சென்றது. அதற்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர், பாஜகவின் சுஷ்மா சுவராஜ் தலைமை தாங்கினார். இடதுசாரித் தலைவர்களும் உடனிருந்தனர். பூச்செண்டுகள், புன்சிரிப்பு பரிமாற்றம், விருந்துகள், சில புகைப்படங்கள் ஆகியவற்றுக்குப் பிறகு இலங்கையில் இருந்து திரும்பி வந்த நாடாளுமன்ற குழுவிடமிருந்து எதார்த்த விவரங்களை தமிழக மக்கள் எதிர்ப்பார்த்தனர். வந்தவர்கள் சொன்ன செய்திகளில் தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவம் வெளியேறுவது, முட்சிறையில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழர்கள் மீள்குடியேற்றம், மறுவாழ்வு நடவடிக்கைகள், தமிழர்களின் சொந்த நிலங்களை மீட்பது போன்ற செய்தி களை விட, ‘தனிஈழத்தை இலங்கை தமிழ் மக்கள் யாரும் விரும்பவில்லை’ என்ற செய்தி தான் மேலோங்கியதாக இருந்தது. பாஜகவின் சுஷ்மா சுவராஜ் குரலும், மார்க்சிஸ்ட் கட்சியின் ரங்கராஜன் குரலும், காங்கிரஸ் குரல் போல் இருந்தன.
இந்திய, தமிழக அரசாங்கங்கள் இன்று வரை இலங்கைத் தமிழ்மக்களுக்கு துரோகத்தைத் தவிர வேறேதும் செய்யவில்லை. அன்று இலங்கை அரசாங்கத்துக்கு அதன் இடத்தைக் காட்ட வேண்டியிருந்தது. அதனால் புலிகளுக்கு பயிற்சியும் ஆயுதமும் தந்தார்கள். சிங்கள பேரினவாத அரசாங்கத்தால் ஒடுக்கப்படும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு என்று ராணுவ எச்சரிக்கை வரை சென்றார்கள்.
இலங்கைத் தமிழர்கள் சார்பாக நிற்பதாகச் சொல்லி இலங்கை அரசாங்கத்துடன் ஒப்பந்தம் போட்டார்கள். 1987 இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து ராணுவம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். அந்த மாகாணங்கள் நிரந்தரமாக இணைக்கப்பட்டு அந்த பிராந்தியத்துக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும். தமிழ், இலங்கையின் அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும். இவற்றில் எதுவும் நடக்காதபோது, புலிகள் ஆயுதங்களை துறக்க வேண்டும் என்பதும் நடக்கவில்லை. இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தை எந்த விதத்திலும் அமலாக்காத இலங்கை அரசாங்கம் பற்றி எந்தக் குரலும் எழுப்பாத இந்திய அரசாங்கம், எந்தப் புலிகளை தானே வளர்த்ததோ அதே புலிகள் மேல் பாய்ந்து தமிழர்களை சூறையாடியதைத் தானே உலகம் பார்த்தது.
2002ல் புலிகள் தனிஈழம் என்பதல்லாமல், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் சுயாட்சி பற்றி பேசினர். போர் நிறுத்தமும் செய்தனர். தமிழ் மக்களை இரண்டாம்தர குடிமக்களாக வைத்திருப்பது, புலிகளை ஒழிப்பது என்பவற்றில் இலங்கை அரசாங்கம் உறுதியாக இருக்கும்போது, புலிகளின் விட்டுக் கொடுத்தல்கள் புறந்தள்ளப்பட்டன.
இந்தியாதான் பிராந்திய மேலாதிக்க சக்தி என்று இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்வது தெரிந்த பிறகு அந்த அரசாங்கத்தைக் காப்பாற்றுவது இந்திய ஆட்சியாளர்களுக்கு இயல்பான முன்னுரிமையானது. ராஜீவ் காந்தி படுகொலை என்ற வசதியான காரணமும் கிடைக்க, அமெரிக்காவின் ஆசியும் துணைநிற்க, இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க வெறிக்கு இலங்கை தமிழ் மக்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். பேரினவாதம் பேயாட்டம் போடுகிறது.
கடைசியாக நடத்தப்பட்ட நாடாளுமன்ற குழு நாடகத்தில் அஇஅதிமுகவும் திமுகவும் இடம் பெற மறுத்துவிட்டார்கள். அதனால் அவர்கள் இலங்கைத் தமிழர் நலன் காப்பவர்கள் என்று தமிழ்நாட்டின், இலங்கையின் தமிழ் மக்கள் யாரும் நம்பவில்லை. நாடாளுமன்றக் குழு இலங்கை செல்வது ஒரு நாடகம் என்பதால் அதில் பங்கு கொள்ளவில்லை என்று கருணாநிதியும் ஜெயலலிதாவும் சொல்வதும் ஒரு நாடகம்.
சிதைக்கப்பட்ட மார்புகள்... கொத்து குண்டுகளால் துண்டாகித் தெறித்துவிழுந்த கால்கள்... சில முண்டங்கள்... இலங்கை தெருக்களில் இறைந்து கிடக்கின்றன. ரத்த வாடை விலக இன்னும் பல தலைமுறை காலம் ஆகும். கருணாநிதி அந்தப் பிணங்களின் மீது அரசியல் நடத்தப் பார்க்கிறார். இரங்கற்பா ஏதும் இல்லாமல் தமிழின விடுதலை இயக்கத் தலைவனின் மரணம் நடத்தி முடிக்கப்பட்ட பிறகு, திமுக அங்கம் வகிக்கிற அய்முகூ தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் உறுதியான ஆதரவு பெற்ற இலங்கையின் ராணுவத்தால், இலங்கை தமிழர்களுக்கென போராடிக் கொண்டிருந்த இயக்கம் ரத்த வெள்ளத்தில்  மூழ்கடிக்கப்பட்ட பிறகு, எஞ்சி இருப்பவர்கள் மீது மறைமுகப் போர் நடக்கும் போது, இனஅழிப்பு திட்டமிடப்பட்டு கட்டம் கட்டமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறபோது, கருணாநிதி தமிழ்நாட்டில் ‘தனிஈழம்’ கோரும் அமைப்பைக் கூட்டுகிறார்.
எப்போது முடியும் இந்த மறைமுக யுத்தம்?
எப்போது நிற்கும் ஈழத்தமிழர் சிந்தும் ரத்தம்?
‘முள்ளிவாய்க்கால் படுகொலையும் இந்தியாவின் மத்திய மாநிலங்களின் பழங்குடி மக்கள் வேட்டையும் இம்மாதிரியான போராட்டங்களை அடக்குவதற்கான வெளிப்படையான சாட்சியங்கள்... அதுபோலவே கூடங்குளத்தின் சுற்றி வளைப்பையும் காண முடியும்.... சுருங்கச் சொன்னால் மக்கள் எழுச்சிகள் உருவாகக் காரணமாக இருந்து, ஓர் எல்லை வரை வளர்ச்சிக்கு கொண்டு செல்வது, பின்னர் அதை அரச பயங்கரவாதம் வழியாக உள்ளடங்கச் செய்வது என எல்லாம் உலகமயம்.’ (காலச்சுவடு இதழில் பா.செயப்பிரகாசம்). எழுச்சி உள்ளடக்கப்படுவதும் தற்காலிகமானதே. தற்காலிகம் என்பதன் கால அளவு, ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் சற்று நீண்டதாகக் கூட இருக்கலாம். எந்த ஓர் இனமும் அடிமையாக தொடர உறுதி பூண்டு விடுவதில்லை.
புலிகளை விமர்சிக்கிறவர்கள் இன்னும் தங்கள் வாதங்களை நிறுத்திக் கொள்ளவில்லை. சாகடிக்கப்பட்டுவிட்ட பாம்பை அடித்துக் கொண்டே இருக்கிறார்கள். அரசு தன்னை பாதுகாத்துக் கொள்ளப் போர் நடத்தும்போது அது எப்படி நியாயமற்றது ஆகும் என்ற வாதங்கள் எழும்போது, இது, இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைமைகளுக்கு சிங்களப் பேரினவாதம் முழுப்பொறுப்பு ஏற்பதில் இருந்து தள்ளுபடி அளிப்பதாகவே இருக்கும்.
சானல் 4 தொலைக்காட்சியின் ‘இலங்கையின் கொலைக் களங்கள்’ (நழ்ண்ப்ஹய்ந்ஹ’ள் ந்ண்ப்ப்ண்ய்ஞ் ச்ண்ங்ப்க்ள்) காணொளி ஒளிபரப்பு உலகெங்கும் ஜனநாயக ஆர்வலர்கள் மத்தியில் சீற்றம் உருவாக்கியது. இனவாத ஒற்றைப் பரிமாணம் கொண்டுள்ள சிங்கள மக்களின் ஒரு சிறிய பிரிவினர் மத்தியில் கூட இது அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘இலங்கையின் கொலைக் களங்கள்’ காணொளி சானல் 4 தொலைக்காட்சி மூலம் அம்பலம் ஏறியதில் சிங்களப் பத்திரிகையாளர்களுக்கு பெரிய பங்கு உண்டு.
‘1987 - 1990 காலகட்டத்தில் ஏறத்தாழ 60,000 சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுடைய உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன. டயர் போட்டு எரிக்கப்பட்டன. எங்களுக்கெனவும் மனிதப் புதைகுழிகள். கடத்தல்கள்’ என்கிறார் நாடு கடத்தப்பட்ட சிங்கள எழுத்தாளர் பாஷண அபேவர்த்தன. இலங்கை அரசாங்கம் எப்படியெல்லாம் போராட்டத்தை ஒடுக்கும் என்று சிங்கள மக்களும் அனுபவித்தவர்கள்தான். ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவித்து விசாரிக்க வேண்டும் என்ற குரல் உலகெங்கும் இன்று எழுவதுபோல், சிங்கள பேரினவாத அரசாங்கம் நடத்தும் இனஅழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான கேள்வி சிங்களர் மத்தியில் இருந்தும் எழும். ஏற்கனவே எழுந்தும் உள்ளது.
தோற்றத்துக்குக் கூட எந்தப் பாசாங்கும் இன்றி பேரினவாத ஒடுக்குமுறை அரசியல் நடத்துகிற இலங்கை அரசாங்கத்திடம் எதிர்ப் பார்க்க ஈழத்தமிழர்க்கு இனி ஏதுமில்லை.  இரண்டாம்தர வாழ்வை விட எதிர்ப்பும் மரணமும் மேல் என்று அவர்கள் தீர்மானிக்கும் கணம் எப்போது வேண்டுமானாலும் நிகழும். அதுவரை, அவர்கள் கால் பதித்து நின்ற சொந்த நிலம் வேண்டும். வாழ்ந்த வீடு வேண்டும். சுவாசிக்க ராணுவம் படாத சுதந்திரக் காற்று வேண்டும். செய்த தொழில் வேண்டும். பிள்ளைகளுக்கு பள்ளிகள் வேண்டும். கும்பிடக் கோயில்கள் வேண்டும்.
‘தனி ஈழமா’ ‘ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களின் சம உரிமையா’ என்பது பற்றி வாக்கெடுப்பு உரிய நேரத்தில் நடத்தலாம். அதற்கெல்லாம் முன்பாக முள்வேலி முகாமில் உள்ள தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ராணுவத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும். தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் சிங்களர்களின் குடியிருப்புகள் அகற்றப்பட வேண்டும். இந்த உட னடி அவசிய முன்னகர்த்தல்கள் சக்தி வாய்ந்த இயக்கங்களை கோருகின்றன. தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் உள்ள முற்போக்கு, ஜனநாயக சக்திகள் இது விசயத்தில், அமெரிக்க, இந்திய, தமிழக ஆதிக்க சக்திகளின் பிடியில் இருந்து விலகி சுதந்திரமாக இயக்கம் காண வேண்டும்.

மூன்றாவது முறையாக
மூர்ச்சித்து தெளிந்திருக்கிறாள்.
ஒரு மார்பு சிதைக்கப்பட்டும்
குண்டுகளை கண்டுபிடிக்க இயலவில்லை
அவர்கள் தேடுகிறார்கள்
உதடுகளில் சயனைட்டையும்
இரண்டு நாட்களாக ஆகாரம் வழங்கப்படாத
வயிற்றுக்குள்
கைத்துப்பாக்கியையும்
அவளது பிறப்புறுப்பினுள்
குறிகளாலும் குண்டாந்தடிகளாலும்
ஒருவர் மாற்றி ஒருவர்
துளாவிப் பார்க்கிறார்கள்
சிறு தடயமும் இல்லை.
எதிரிகளின் ஆயுதக்கிடங்கைக் கொளுத்தும்
எக்களிப்போடு
சிகரெட்டால்
மறைவிடத்து (இப்போது நிறைந்திருக்கிறது)
மயிரைப் பொசுக்குகிறார்கள்.
வன்மத்தோடு
வயிற்றில் இறங்குகிறது
துப்பாக்கியின் ‘பயனைற்’
விரிந்த கால்களுக்கிடையில்
வடிந்து ஓடிப் பதுங்குகிறது
குருதி.
இராணுவச் சீருடையையும் நட்சத்திரங்களையும்
நேர்த்தியாகச் சரிசெய்தபின்
குறிப்பெழுத வேண்டியிருக்கிறது
ஒரு பயங்கரவாதியைப் பற்றி.
தமிழ்நதி
நன்றி: தீராநதி மே 2012


அமைப்பு

தாராளவாதத்தை எதிர்த்துப் போரிடுவோம்

மாவோ, 1937 செப்டம்பர் 7

நாம் செயலூக்கமான கருத்தியல் போராட்டத்திற்காக நிற்கிறோம். ஒவ்வொரு கம்யூனிஸ்டும், ஒவ்வொரு புரட்சியாளரும் இந்த ஆயுதத்தை ஏந்த வேண்டும். ஆனால், தாராளவாதம் கருத்தியல் போராட்டத்தை நிராகரிக்கிறது. கோட்பாடற்ற அமைதிக்காக நிற்கிறது. இவ்வாறு அழுகிப்போன, வாடிக்கையான அணுகுமுறை ஒன்றைத் தோற்றுவித்து, கட்சியிலும் புரட்சிகர அமைப்புக்களிலுமுள்ள சில குழுக்களிடத்திலும் தனி நபர்களிடத்திலும் அரசியல் சீரழிவை ஏற்படுத்துகிறது.
தாராளவாதம் பல்வேறு வழிகளில் வெளிப்படுகிறது.
ஒருவர் தவறிழைத்துவிட்டார் என்பது தெளிவானபோதும், நீண்டகாலம் பழகியவர், ஒரே ஊரைச் சேர்ந்தவர், ஒரே பாடசாலையில் படித்தவர், நெருங்கிய நண்பர், அன்புக்குரியவர், பழைய கூட்டாளி அல்லது பழைய கீழ்ப்பணியாளர் என்ற காரணத்தால், அவருடன் கோட்பாட்டுரீதியில் வாதிடுவதற்கு மாறாக, சமாதானத்துக்காகவும், நட்புறவுக்காகவும் விஷயங்களை நழுவவிடுவது; அல்லது நல்ல உறவுகளை வைத்திருப்பதற்காக, விஷயங்களுக்கு முழுமையான தீர்வு காண்பதற்குப் பதில் அவற்றை லேசாகத் தொட்டுவிட்டு விட்டுவிடுவது. இதன் விளைவாக அமைப்புக்கும் தனி நபருக்கும் தீங்கு விளைவிக்கப்படுகிறது. இது தாராளவாதத்தின் முதலாவது வகை.
அமைப்பில் தனது யோசனைகளை ஊக்கமாய் முன்வைப்பதற்குப் பதிலாக முதுகுக்குப் பின் பொறுப்பற்ற விமர்சனத்தில் ஈடுபடுவது, மக்களின் முகத்திற்கு நேராக ஒன்றும் பேசாமல் அது முடிந்த பின் பேசுவது. இது இரண்டாவது வகை.
விஷயங்களை, தன்னை நேரடியாகப் பாதிக்காவிட்டால், அவற்றை நழுவிச் செல்லவிடுவது; ஒரு விஷயம் தவறு என்பது முழுமையாகத் தெரிந்திருந்தும் அதைப்பற்றி முடிந்த அளவு சொற்பமாகப் பேசுவது, குறை கூறப்படாமல் தப்புவதற்காக ஆபத்தில்லாத முறையில் பாதுகாப்பாய், உலகமறிந்தவர் போல நடந்து கொள்வது, இது மூன்றாவது வகை.
கட்டளைகளுக்குப் பணிந்து ஒழுகாமல் தமது சொந்த அபிப்ராயங்களுக்கு பெருமைப்படத்தக்க இடத்தைக் கொடுப்பது, அமைப்பிடமிருந்து தனிச்சிறப்புமிக்க சலுகை கோருவது, ஆனால் அதன் கட்டுப்பாட்டைப் புறக்கணிப்பது. இது நாலாவது வகை.
ஒற்றுமைக்காக அல்லது முன்னேற்றதுக்காக அல்லது வேலையை முறையாகச் செய்து முடிப்பதற்காக அல்ல. மாறாக, தனிப்பட்ட தாக்குதல் தொடுப்பதற்காக, சண்டைகள் பிடிப்பதற்காக, சொந்த விரோதங்களைக் கொட்டித் தீர்ப்பதற்காக, அல்லது பழிவாங்குவதற்காக மட்டுமே தவறான கருத்துக்களுக்கெதிரான போராட்டத்திலும் விவாதத்திலும் ஈடுபடுவது, ஐந்தாவது வகை.
தவறான கருத்துக்களை மறுத்துரைக்காமல் கேட்டுக் கொண்டிருப்பது, எதிர்ப்புரட்சியாளர்கள் குறிப்பிட்டுச் சொல்வதைக் கூட அமைப்பிற்கு அறிவிக்காமல் கேட்டுக் கொண்டிருப்பது. ஆனால் மாறாக ஒன்றுமே நடக்காததுபோல் அவற்றை அமைதியாக எடுத்துக் கொள்வது, இது ஆறாவது வகை.
பரந்துப்பட்ட மக்களிடையே இருந்தும், பிரச்சாரம் செய்யாமலும் கிளர்ச்சியில் ஈடுபடாமலும் இருப்பது; அல்லது கூட்டங்களில் பேசாமல் அல்லது அவர்கள் மத்தியில் ஆய்வுகளும் விசாரணைகளும் நடத்தாமல் இருப்பது; மக்கள் மீது பாராமுகமாகவும், அவர்கள் நல்வாழ்வில் அக்கறை இல்லாமலும், தான் ஒரு சாதாரண ஆள்போல நடந்து கொள்வது. இது ஏழாவது வகை.
ஒருவர் மக்களின் நலன்களை ஊறுபடுத்தக் கண்டும், ஆத்திரம் அடையாமல், அல்லது அவருக்கு அறிவுரை கூறாமல், அல்லது அவரைத் தடுக்காமல், அல்லது அவரிடம் நியாயம் காட்டி வாதிடாமல், தொடர்ந்து அப்படிச் செய்ய அவரை அனுமதிப்பது. இது எட்டாவது வகை.
ஒரு தெளிவான திட்டமோ அல்லது திசையோ இல்லாமல், அரைமனதுடன் வேலை செய்வது, கவனக் குறைவாகவும் தாறுமாறாகவும் வேலை செய்வது, ஒரு பூசாரியாய் இருக்கும் வரை மணியடித்துக் கொண்டே இருப்பது. இது ஒன்பதாவது வகை.
புரட்சிக்குத் தான் பெருஞ்சேவை செய்துவிட்டதாகத் தானே நினைத்துக் கொள்வது. பெரும் அனுபவசாலி எனத் தனக்குத் தானே பெருமைப்படுவது. உயர்ந்த கடமைகளுக்குத் தகுதியில்லாமல் இருக்கும் அதே வேளையில், சிறிய பணிகளை அவமதிப்பது, வேலையில் ஆர்வமின்றியும், படிப்பில் அக்கறையில்லாமலும் இருப்பது. இது பத்தாவது வகை.
தன் சொந்தத் தவறுகளை அறிந்தும் அவற்றைத் திருத்த எவ்வித முயற்சியும் செய்யாமல் தன் மீது தாராள மனோபாவத்தை மேற்கொள்வது. இது பதினோராவது வகை.
நாம் இதற்கு மேலும் குறிப்பிட முடியும். ஆனால் இந்தப் பதினொன்றும் பிரதான வகைகள். இவைகள் அனைத்தும், தாராளவாதத்தின் வெளிப்பாடுகள், ஒரு புரட்சிகரக் கூட்டு வாழ்வில் தாராளவாதம் என்பது பெருந்தீங்கு விளைவிக்கும் ஒன்று. இது ஒற்றுமையை அரித்துத் தின்னுகின்ற, ஒன்றிணைப்பைச் சீர்குலைக்கின்ற, வேலையில் பாராமுகத்தை உண்டாக்குகின்ற, வேற்றுமையை விதைக்கின்ற, ஓர் அரித்துத் தின்னும் விஷயமாகும். அது புரட்சிகர அணிகளிலுள்ள கட்டுக்கோப்பான அமைப்பையும், கண்டிப்பான கட்டுப்பாட்டையும் அழித்துவிடுகிறது. கொள்கைகள் முழுமையாய் அமல்படுத்தப்படுவதை அது தடுக்கிறது. கட்சியின் தலைமையிலுள்ள மக்களிடமிருந்து கட்சி அமைப்புக்களைப் பிரித்துவிடுகிறது. இது மிகத் தீமையான ஒரு போக்காகும்.
குட்டி முதலாளித்துவக் சுயநல மனோபாவத்திலிருந்து தாராளவாதம் தோன்றுகிறது. அது சொந்த நலனை முதலாவது இடத்திலும் புரட்சியின் நலனை இரண்டாவது இடத்திலும் வைக்கிறது. இதுவே அரசியல் அமைப்பு துறைகளில் தாராளவாதத்தைத் தோற்றுவிக்கிறது.
தாராளவாதிகள் மார்க்சீயக் கோட்பாடுகளை வெறும் வறட்டுத் தத்துவமாகக் கருதுகிறார்கள். ஆனால் அதை நடைமுறைப்படுத்த அல்லது முழுமையாக நடைமுறைப்படுத்தத் தயாராக இல்லை. தமது தாராளவாதத்திற்குப் பதிலாக, அதன் இடத்தில் மார்க்சீயத்தை வைக்க அவர்கள் தயாராக இல்லை. இந்த நபர்களிடம் மார்க்சீயம் இருக்கும் அதே வேளையில் தாராளவாதமும் இருக்கிறது. அவர்கள் மார்க்சீயம் பேசுகின்றனர். ஆனால் தாராளவாதத்தை நடைமுறைப்படுத்துகின்றனர். பிறருக்கு மார்க்சீயத்தையும் தமக்கு தாராளவாதத்தையும் பயன்படுத்துகின்றனர். அவர்கள் இரண்டு விதமான சரக்குகளையும் இருப்பில் வைத்து இரண்டுக்கும் உபயோகம் காண்கின்றனர். இப்படித்தான் சில நபர்களின் மூளைகள் வேலை செய்கின்றன.
தாராளவாதம் என்பது சந்தர்ப்பவாதத்தின் ஒரு வெளிப்பாடு. அது மார்க்சீயத்துடன் அடிப்படையில் மோதுகிறது. அது எதிர்மறைத் தன்மையுடையது என்பதோடு விரோதிக்கு உதவி செய்யும் புறநிலையான விளைவையும் கொண்டிருக்கிறது. இதனால்தான் நமக்கிடையில் தாராளவாதம் நிலைநிறுத்தப்படுவதை விரோதி வரவேற்கிறான். இத்தகைய இயல்புடையதாக இருப்பதால், புரட்சியின் அணிகளில் தாராளவாதத்திற்கு இடமிருக்கக் கூடாது.
எதிர்மறை உணர்வைக் கொண்ட தாராளவாதத்தை வெற்றி கொள்ள, நாம் ஆக்கபூர்வமான உணர்வைக் கொண்ட மார்க்சீயத்தைப் பயன்படுத்த வேண்டும்.
கம்யூனிஸ்ட் ஒருவர் பரந்த மனம் படைத்தவராக இருக்க வேண்டும். அவர் உறுதியும் ஊக்கமும் உடையவராக இருக்க தனது சொந்த நலன்களைப் புரட்சியின் நலன்களுக்குக் கீழ்ப்படுத்த வேண்டும். எங்கும் எப்பொழுதும் அவர் சரியான கோட்பாட்டின் வழி ஒழுகி, தவறான கருத்துக்கள், செயல்கள் எல்லாவற்றுக்கும் எதிராகச் சளையாத போராட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு, கட்சியின் கூட்டு வாழ்க்கையை உறுதிப்படுத்தி, கட்சிக்கும் பரந்துபட்ட மக்களுக்கும் இடையிலுள்ள பிணைப்பைப் பலப்படுத்த வேண்டும். அவர் எந்த ஒரு தனி நபரிலும் பார்க்க கட்சியிலும் மக்களிலும் கூடுதலான அக்கறையும் தன்னை விடப் பிறர் மீது கூடுதலான அக்கறையும் செலுத்த வேண்டும். இப்படிச் செய்தால்தான் அவரை ஒரு கம்யூனிஸ்ட் என்று கருத முடியும்.
நம்மிடையே சிலர் காட்டும் தாராளவாதப் போக்கை எதிர்க்க, விசுவாசமிக்க, நேர்மையான, ஊக்கம் நிறைந்த, நெஞ்சு நிமிர்ந்த கம்யூனிஸ்ட்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். நமது கருத்தியல் அரங்கிலுள்ள கடமைகளில் இதுவும் ஒன்று.

திரைப்படம்

வழக்கு எண். 18/9
கதை உணர்த்தும் நிஜ வாழ்க்கை


ஜெயசிறீ

வழக்கு எண். 18/9 திரைப்படத்திற்கு ஆனந்தவிகடன் 55/100 மதிப்பெண் தருகிறது. குழுதம் புகழ்கிறது. தீக்கதிர், கற்பனையில்லை நிஜம் என்கிறது. ஆங்கிலப் பத்திரிகைகள் 5 நட்சத்திர மதிப்பு அளிக்கின்றன. ஜோதி காவல் ஆய்வாளரின் முகத்தில் ஆசிட் ஊற்றும் காட்சியில், திரையரங்கப் பார்வையாளர்கள், நீதி வழங்கப்பட்டதாகக் கை தட்டுகிறார்கள். ஏதோ ஒரு வகை நிம்மதி அடைகிறார்கள்.
கோடி கோடியாய்க் கொட்டி எடுக்கப் படாத படம். எந்திரத்தனமான விளம்பரம் ஏதுமில்லாத படம். சூப்பர் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், இளைய தளபதி போன்றவர்கள் நடிக்காத படம். ஆனால், தமிழ்த் திரை உலகில் அலை அடிக்க வைத்துள்ளது. இது எப்படி நடந்தது? எதனால் நடந்தது? இதற்கும் சமகாலத் தமிழக அரசியல் பொருளாதாரத் திற்கும் என்ன தொடர்பு உள்ளது?
கதையும், கதையில் வருபவர்களும், பின்னணிச் சம்பவங்களும், நமக்குப் பக்கத்தில் நெருக்கமாய் உள்ளன. பார்க்க முடியும். கேட்க முடியும். உணர முடியும். ரத்தமும் சதையுமாய் மக்கள் தமது துயரக் கதைகளுடன் சீற்றத் துடன் விருப்பங்களுடன் நடமாடுகிறார்கள்.
வீட்டு வேலை பார்க்கும் பெண் ஜோதி. கிட்டத்தட்ட வசனமே பேசாமல், பெரும்பான்மைக் காட்சிகளில் ஒரு சாதாரண பாவாடை சட்டையுடன் வலம் வருகிறார். கந்துவட்டிக் கொடுமை, மூலதன ஊடுருவலால் விவசாய விளைநிலங்கள் சுருங்குவது, கொத்தடிமை முறை ஆகியவற்றைக் கொடுங்கனவுகளில் அல்லாமல், சிறுவனிலிருந்து  இளைஞனாக மாறும்போது நிஜ வாழ்க்கையில் அனுபவித்த வேலுச்சாமி, சாலையோர உணவகத்தின் ஒரு பணியாளராக, எப்போதும் உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் திரைப்படம் நெடுக நடமாடுகிறார். ஜோதியின் தாயும் ஒரு வீட்டு வேலை செய்யும் பெண். கழுகிடம் இருந்து குஞ்சைக் காக்கும் தாய்க் கோழியாக, சென்னையின் அடித்தட்டு மக்கள் மொழியில் தன் வலிகளை வேதனைகளை சவால்களைப் பேசுகிறார்.
வேலுச்சாமி என்ற சாதாரண இளைஞன் ஜோதி என்ற சாதாரண இளம் பெண்ணை நேசிக்கிறான். அரசியல், சாதி தொடர்புடைய ஒரு கல்வி முதலாளியின் மகன், தீய செயல்களுக்கு இயல்பாகப் பழக்கமான பின், ஆணாதிக்க வக்கிரத்துடன், தான் பழகிய ஒரு நடுத்தர வர்க்கப் பெண் முகத்தின் மீது ஆசிட் ஊற்ற முயற்சிக்கிறான். எதிர்பாரா விபத்தாக ஜோதியின் முகம் சிக்கித் தீய்ந்து போகிறது. அரசியல், சாதி செல்வாக்கில் செயல்படும் காவல் ஆய்வாளர் குமாரவேல், குற்றம் செய்தது யார் எனத் தெரிந்தும், வேலுச்சாமியிடம் நயவஞ்சகமாகப் பேசி, ஜோதியின் சிதைந்த முகத்தைக் குணப்படுத்தலாம் என நம்ப வைத்து, குற்றத்தை ஒப்புக் கொள்ள வைத்து தண்டனை பெற வைக்கிறார். குமாரவேலின் வஞ்சகம், வேலுச்சாமியின் நேசம் பற்றிய உண்மை தெரிந்த ஜோதி, குமாரவேல் முகத்தில் ஆசிட் ஊற்றுகிறார்.
பீகாரின் ரூபம் பதக் என்ற பெண் தன்னைப் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கிய பாஜக சட்டமன்ற உறுப்பினரை அவரது வீட்டிலேயே பலர் முன் கொன்ற சம்பவம் உடனடித் தூண்டுதலாகவும், இடதுசாரி இயக்கப் பற்று, தனது தந்தை, ஏழைகளைப் பணக்காரர் கள் அவமரியாதை செய்வதை சும்மா விடக் கூடாது என்று போதித்தது, ஜோதி தானே நீதி வழங்கியதற்கு உந்துதல் எனவும் திரைப்படம் சுட்டுகிறது. தந்தை பெயர் பாலன், அவர் வீட்டில் லெனின் பகத்சிங் இன்குலாப் ஜிந்தாபாத் முழக்கம் இருப்பது போன்றவை போகிற போக்கில் வருகிற செய்திகள்.
மாபெரும் கலைஞரான பீத்தோவனே, ‘இந்த உலகில் கலைக்கான ஒரு மாபெரும் களஞ்சியம் இருக்க வேண்டும். படைப்பாளி அங்கு சென்று தனது படைப்புக்களைச் சேர்க்க வேண்டும். பிறகு, தனக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், இப்போதோ, படைப்பாளி பாதி வர்த்தகராகவும் இருக்க வேண்டியுள்ளது. இதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது?’ என எழுதினார்.
தமிழக அறிவுலகில் நிலவும் அவலச் சூழலில், வழக்கு எண் 18/9, சமகாலச் சமுதாயம் அறிவுக்கு மாறானது, ஒழுக்கக் கேடானது எனச் சொல்வது ஆரோக்கியமானதே.
அநீதி கண்டு அறச்சீற்றம், வாழ்க்கை மீது சாமான்ய மனிதர்கள் மீது பற்று, பரிவு, அக்கறை, நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்தும் பாலாஜி சக்திவேல் இயக்கி உள்ள படம், நிச்சயமாய், வரலாறு நெடுகத் தொடரும் அடக்குமுறை நிரந்தர வெற்றி பெற முடியாது, அவற்றையும் தாண்டி, சாமான்ய மக்கள் வாழ்வார்கள், உயிர்த்துடிப்புடன் இருக்கும் மானுடம் வெல்லும் என, உரத்த பிரச்சாரமாக இல்லாமல், உள்ளீடான செய்தியாகச் சொல்கிறது.
அந்த வகையில், தமிழ்த் திரைப்படங்களில், இது ஒரு மாறுபட்ட நல்ல முயற்சியாகும். திரைப்படம் திரைக்கதை, தமிழக மக்களின் நிஜ வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ள தால்தான், அலைகளை உருவாக்கி உள்ளது. தமிழகத்தின் பெரும்பான்மை மக்கள், ஜோதியாக வேலுச்சாமியாக சென்னையில், கோவையில், மதுரையில், திருச்சியில், திருப்பூரில், கரூரில், ஈரோட்டில், தமிழகத்தின் சிறு பெரு மற்றும் அரை நகரங்களில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தற்காலத் தமிழ் சமூகத்தை அதன் அரசியல் பொருளாதாரத்தை வழக்கு எண். 18/9 மூலம் நாம் காண முடிகிறது. ஜெயலலிதாவின் கனவுத் திட்டம் 2023படி, 2023ல் 2 கோடி தமிழர்கள் வேலை செய்து பிழைப்பார்கள். அவர்கள் ஒரு திறன் பிரமிட்டில் (ஸ்கில் பிரமிட்) மூன்று அடுக்குகளாக இருப்பார்கள்.
திரைப்படத்தில் வருகிற ஆர்த்தி போன்ற மேல் நோக்கி முன்னேறும் நடுத்தர வர்க்க, கான்வென்ட் படிப்பு இளம் பெண்கள், 2023ல் அதிஉயர் திறன் பெற்றவர்களாக 20 முதல் 40 லட்சம் பேர் இருப்பார்கள். நடுநிலை, இளநிலை கல்வி பெற்றவர்கள் 68 முதல் 78 லட்சம் பேர் இருப்பார்கள். கடைசி அடுக்கில் திறன் ஏதும் இல்லாதவர்கள் (அன்ஸ்கில்ட்) 1.2 முதல் 1.3 கோடி வரை இருப்பார்கள். புரட்சித் தலைவியின் கனவில் ஜோதி, வேலுச்சாமி போன்றவர்கள் 2023ல் 1.3 கோடி பேர் வரை தமிழகத்தில் இருப்பார்கள். இப்போது தமிழ் நாட்டின் மக்கள் தொகை 7.2 கோடி. 2023ல் 8 கோடி என்றால், இல்லப் பணியாளர்கள், சாலையோர கடைப் பணியாளர்கள், அங்காடித் தெருக்களில், வேலை செய்பவர்கள், முறைசாரா சேவைத் தொழில்கள் வர்த்தகத்தில் இருப்பவர்கள் 2 கோடியைத் தாண்டுவார்கள். (முதல்வர் கணக்குப்படி) எவ்வளவு மோசமான கொடுங்கனவு?
இன்றைய தமிழகத்தில் எவ்வளவு ஜோதி எவ்வளவு வேலுச்சாமி இருப்பார்கள்? 2009ல் வெளியான ஆய்வொன்றின்படி நாடெங்கும் 9 கோடி இல்லப் பணியாளர்கள் உள்ளனர். (தேசிய மாதிரி கணக்கெடுப்பு 2004 - 2005 47.5 லட்சம் என்கிறது). தமிழ்நாட்டில் அவர்கள் எண்ணிக்கை 22 லட்சம் என்றும் சென்னையில் 7 லட்சம் என்றும் விவரங்கள் சொல்கின்றன. நடைபாதை வியாபாரத்தின் மூலம் பிழைப்பவர்கள் 3 கோடியே 95 லட்சம் பேர் நாடெங்கும் உள்ளனர் என்றும் ஆய்வறிக்கைகள் சொல்லும் போது அரசு 1 கோடி பேர் என்கிறது. தமிழகத்தில் 50 லட்சம் பேர் நடைபாதை வியாபாரத்தின் மூலம் பிழைக்கிறார்கள்.
வேலுச்சாமி நடைபாதையில் உறங்கி, கட்டணக் கழிப்பிடம், குளியலறையைப் பயன்படுத்துகிறார். நடைபாதையில் வாழவும், தள்ளுவண்டி உணவக உரிமையாளர் காவல் துறைக்கு மாமூல் தர வேண்டும். ஜோதியும் நெஞ்சில் ஈரமுள்ள ரோசியும் எங்கு வாழ்கிறார்கள்? சென்னை சேரிகளின் பொந்து வீடுகளில். இந்த பூமியும் அந்த சாமியும் சிரிக்கும் விதம், அண்ணாந்து பார்க்கிற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலைக் குடிசை வைத்து, பொன்னான உலகென்றும், நூறாண்டு சாத னைகளை ஓராண்டில் முடித்துவிட்டதாகவும் துதிபாடுகிறார்கள். ஜோதியின் வேலுச்சாமியின் சிருங்காரச் சென்னை பற்றி, சேரிகளின் சவால் என்ற தலைப்பில் அய்நாவின் மனிதக் குடியிருப்புக்கள் திட்டம் சொல்வதில் இருந்து பார்ப்பது பொருத்தமானது. ‘நகரங்கள், வளர்ச்சி மற்றும் வளமையின் குவிமய்யமாக இருப்பதற்கு மாறாக, திறன்கள் இல்லாத, பாதுகாக்கப்படாத, குறைந்த கூலி பெறும், முறைசாரா சேவைத் தொழில்கள் வியாபாரம் ஆகியவற்றில் பணியாற்றும் ஓர் உபரி மக்கள் தொகைக்கான குப்பைக் கூடங்களாக உள்ளன’.
அரசியல் பொருளாதாரத்தில், உபரி மக்கள் தொகை, உபரி மதிப்பு என்ற சொற்களுக்கு அடிப்படையான முக்கியத்துவம் உண்டு. உபரி மதிப்பு என்பது முதலாளித்துவச் சுரண்டலால் உறிஞ்சப்படும் லாபம். உபரி மதிப்பு - லாபம் குறையாமல் கிடைக்க, முதலாளித்துவம் பண்டங்களையும் சேவைகளையும் பிரும்மாண்டமாய் மறுஉற்பத்தி செய்வது போல், உபரி மக்கள் தொகையையும் பிரும்மாண்டமாய் மறுஉற்பத்தி செய்கிறது.
சில விவரங்களை முதலில் பார்த்துவிட்டு இது பற்றி மார்க்ஸ் சொன்ன விஷயங்களைக் காணலாம். சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் (அய்எல்ஓ) கணக்குப்படி 1980ல் இருந்து 2007 வரை உலகளாவிய தொழிலாளர் எண்ணிக்கை 193 கோடியில் இருந்து 310 கோடியாக உயர்ந்துள்ளது. 73% தொழிலாளர்கள் வளரும் நாடுகளில் உள்ளனர். 40% பேர் சீனாவில், இந்தியாவில் உள்ளனர். எண்ணிக்கை பெருக்கத்திற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
1. விவசாயிகளாக இல்லாமல் செய்தல். சிறு வீத விவசாய அழிப்பு. விளை நிலங்கள் சுருங்குவது. (வேலுச்சாமியின் பூர்வ கதை) முதலாளித்துவ வளர்ச்சியால், முதலாளித்துவ வளர்ச்சிக்காக நகர்ப்புற சேரிகள் பெருக்கம்.
2. முதலாளித்துவ முகாமில் சிதைவுண்ட (முன்னாள்) சோசலிச முகாம் இணைவு.
அய்எல்ஓவின் 2011 கணக்குப்படி, உலகின் செயலூக்கமான தொழிலாளர் பட்டாளம் 140 கோடி. சேமப்பட்டாளம், உபரி மக்கள் தொகை 240 கோடி பேர்.
முதலாளிகளும் தொழிலாளிளும் ஓர் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர். முதலாளிகள் தமக்குள் நடக்கும் போட்டியில் வெற்றி பெற புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தி, வேலை செய்பவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பார்கள். மறுபுறம், தொழிலாளர் கால்களில், வேலையில்லாதோர், தொழில்துறை சேமப்பட்டாளம், உபரி மக்கள் தொகை என்ற இரும்புக் குண்டைக் கட்டி விடுகிறார்கள்.
ஜெயலலிதா, தமிழ்நாட்டில் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதைக்கு 2023ல் ஜோதி, வேலுச்சாமி போன்ற 2 கோடி பேர் வேண்டும் என ஏன் சொல்கிறார் என்பதற்கு, மார்க்ஸ் 150 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியுள்ள விளக்கத்தில் பதில் இருக்கிறது.
‘ஆனால் ஓர் உபரி உழைக்கும் மக்கள் தொகை, ஒரு முதலாளித்துவ அடிப்படையில் செல்வத்தின் வளர்ச்சி அல்லது திரட்சியின் ஓர் அவசியமான விளைபொருளாக இருக்குமானால், எதிர்மறையாக இந்த உபரி மக்கள் தொகை முதலாளித்துவ திரட்சியின் நெம்புகோலாக இருக்கும், இல்லை, முதலாளித்துவ உற்பத்தி முறையின் இருத்தலுக்கான ஒரு நிபந்தனையாக இருக்கும். மூலதனம் தன் சொந்த செலவில் ஊட்டி வளர்த்ததுபோல், முழுமுற்றூடாக மூலதனத்திற்கு சொந்தமான, ஒரு தூக்கி எறியக்கூடிய தொழிற்துறை சேமப்பட்டாளத்தை அது உருவாக்குகிறது. மக்கள் தொகையின் நிஜமான அதிகரிப்பின் எல்லைகளில் இருந்து சுதந்திரமாக, அது, மூலதனத்தின் சுயவிரிவாக்கத்தின் மாறும் தேவைகளுக்காக, எப்போதும், சுரண்டலுக்கு தயாரான ஒரு மக்கள் திரளைப் படைக்கிறது’.
‘ஒப்பீட்டுரீதியான உபரி மக்கள் தொகை சாத்தியமான எல்லா வடிவத்திலும் தன் இருத்தலைக் கொண்டுள்ளது. ஒரு பகுதி வேலை வாய்ப்பு மட்டுமே பெற்றிருக்கிற அல்லது முழுமையாக வேலை இல்லாமல் இருக்கிற காலத்தில் ஒவ்வொரு தொழிலாளியும் உபரி மக்கள் தொகையை சேர்ந்தவராக உள்ளார். அதற்கு, எப்போதும் மிதக்கிற, உள்உறைகிற (மறைந்துள்ள) அல்லது தேங்கியுள்ள என்ற மூன்று வடிவங்கள் உண்டு.’
‘நகரத்தை நோக்கிய இடைவிடாத ஓட்டம் என்பது கிராமப்புறத்தில் ஓர் இடைவிடாத உள்உறையும் (மறைந்துள்ள) உபரி மக்கள் தொகை இருக்கிறது என்பதை முன் அனுமானம் செய்கிறது. ஆகவே, விவசாயத் தொழிலாளி மிகக் குறைந்த கூலிக்கு தள்ளப்படுகிறார். எப்போதும் அவருடைய ஒரு கால் ஓட்டாண்டித்தனம் என்ற புதைச்சேற்றில் ஏற்கனவே நிற்கிறது.’
‘இறுதியில் ஒப்பீட்டு உபரி மக்கள் தொகையின் கடைசி வண்டல் ஓட்டாண்டித்தனம் என்ற வரம்பிலேயே வாழ்கிறது. ‘ஆபத்தான’ வர்க்கங்களை நாடோடிகள், குற்றவாளிகள், பாலியல் தொழிலாளர்கள் ஆகியோரை நீக்கிவிட்டால் இந்த அடுக்கு மூன்று வகையினங்களை கொண்டுள்ளது. முதலடுக்கில் வேலை செய்யும் ஆற்றல் உள்ளவர்களும் இரண்டாம் அடுக்கில் அநாதைகளும் ஓட்டாண்டி குழந்தைகளும் உள்ளனர். மூன்றாம் அடுக்கில் மனோதிடம் இழந்தவர்கள், உடைந்து போனவர்கள், வேலை செய்ய முடியாதவர்கள் உடலுறுப்புக்களை இழந்தவர்கள், நோயுற்றவர்கள், விதவைகள் போன்றோர் உள்ளனர். ஒட்டாண்டித்தனம் செயலூக்கமான தொழிலாளர் வர்க்கப் பட்டாளத்தின் மருத்துவமனையாகவும் தொழில்துறை சேமப்பட்டாளத்தின் பிணச் சுமையாகவும் உள்ளது.’
‘சமூக செல்வம், செயல்படும் மூலதனம், அதன் வளர்ச்சியின் வீச்சும் சக்தியும் எந்த அளவிற்கு அதிகரிக்கிறதோ, அதனாலேயே கூடவே முழு மூச்சூடான பாட்டாளி வர்க்க திரளும் உழைப்பின் உற்பத்தி திறனும் அதிகரிக்கிறது. அதனாலேயே தொழில்துறை சேமப்பட்டாளமும் அதிகரிக்கிறது. ஆனால், செயலூக்கமான தொழிலாளர் பட்டாளத்தின் அளவோடு ஒப்பிடுகையில் சேமப்பட்டாளம் அதிகரிக்கும்போது, ஓர் உறுதிப்படுத்தப்பட்ட உபரி மக்கள் தொகையும் அதிகரிக்கிறது. அதன் துயரம் அதன் உழைப்பின் சித்தரவதைக்கு தலைகீழ் விகிதத்தில் உள்ளது’.
‘ஒரு துருவத்தில் செல்வக் குவிப்பு என்பதனாலேயே, அதே நேரத்தில் அதன் எதிர் துருவத்தில், துயரத்தின், பாடுபடுதலின் வலியின், அடிமைத்தனத்தின், அறியாமையின், மிருகத்தனத்தின், மனஇழிவின் திரட்சியும் நிகழ்கின்றன’.
சமகாலச் சமூகத்தின் இந்த முரண்பாடுகளை, வழக்கு எண் 18/9 உருவத்திலும் உள்ளடக்கத்திலும் வெளிப்படுத்துகிறது. திரைப்படம் எல்லாக் காலங்களுக்குமான முழுமுற்றூடான உண்மைகளை கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், அது சமகால உணர்வை ஆழமாக வெளிப்படுத்தியதால், அடுத்து வரும் படைப்பு தலைமுறையினரின் உள்உந்துதல்களுக்கு நிரந்தர ஊற்றுக்கண்ணாக இருக்கும்.
சென்னையில், தமிழ்நாட்டில், இந்தியாவில் இந்த முதலாளித்துவ வளர்ச்சிப் பாதைதான் அதிகாரத்தில், ஆணையில் உள்ளது. அதற்கு நாளும் பலியாகும் கோடிக்கணக்கானவர்களில்தான் ஜோதியும், வேலுச்சாமியும், உள்ளனர். காவல் ஆய்வாளர் குமாரவேல் போல் வஞ்சகமாக உதவுவதாக நடித்து தமிழக மக்களுக்குத் துரோகம் செய்து பெரு முதலாளிகளுக்கும் வசதிபடைத்தவர்களுக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் சேவை செய்பவர்கள்தான் ஜெயலலிதா கருணாநிதி போன்றவர்கள். ஓநாய்கள் ஆடுகளின் நல்மேய்ப்பர்களாக நாடகமாட உதவுவதே, முதலாளித்துவ அரசியல்.
வருங்கால மானுடம் பற்றி, ‘தளைகளற்ற பிரமோதியஸ்’ என்ற ஷெல்லியின் கவிதை தரும் நம்பிக்கையோடு நம்மை இறுகப் பிணைத்துக் கொள்வோம்.
அருவருப்பூட்டும் முகத்திரை விழுந்துவிட்டது
மனிதன் இருக்கிறான்
செங்கோல் இன்றி
விட்டு விடுதலையாகி
வரம்புகள் இன்றி
ஆனால் மனிதனாக.
அவனோ சமத்துவமானவன்,
வர்க்கம், இனம், தேசம் ஏதுமற்றவன்.
பயபக்தி, வழிபாடு, ஆணை
இவற்றிலிருந்து விடுபட்டவன்
அவனே
தன்னை ஆளவல்ல அரசன்.


விண்ணில் பாதி மண்ணில் பாதி

காவல்துறை, அரசாங்கங்கள், நீதிமன்றங்கள் ஆகியவற்றின் பெண்கள் விரோத பாகுபாட்டுக்கு எதிராக
முற்போக்கு பெண்கள் கழகம் நாடு தழுவிய இயக்கம்


மே 21 முதல் ஜுன் 5 வரை

அன்பு சகோதரிகளே,
நமது சமூகத்தில் பெண்கள் தொடர்ந்து அனைத்துவிதமான வன்முறையையும் பாகுபாட்டையும் எதிர்கொள்கிறார்கள். ஆனால், நாம் நீதி கேட்கும்போது, அரசுகளோ, காவல்துறையோ, நீதிமன்றங்களோ, நமது உரிமைகளை பாதுகாக்கின்றனவா? பெண்களுக்கு நீதி வழங்குகின்றனவா? அல்லது, அவை எப்போதும், நமது சமூகத்தில் மேலோங்கியிருக்கிற பெண்களுக்கு எதிரான தப்பெண்ணங்களை பிரதிபலிக்கின்றனவா? பெண்கள் காவல்துறையை, அரசாங்கங்களை நீதிமன்றங்களை உதவி நாடி அணுகும்போது, அவர்களுக்கு கிடைப்பது ஆழமான அநீதியே என்பது உண்மையல்லவா?
• சமீபத்தில், பாலியல் வன்முறை பற்றி புகார் செய்யும் ஒரு பெண் பாலியல் தொழிலாளி; ஏனென்றால், நன்னடத்தை கொண்ட பெண்கள், பாலியல் வன்முறைக்கு உண்மையிலேயே உள்ளாகியிருந்தால் வெளிப்படையாக புகார் செய்யமாட்டார்கள் என்று டில்லி - தேசிய தலைநகர பிராந்தியம் பகுதியின் 17 மூத்த காவல்துறை அதிகாரிகள் சொன்னது காமிராவில் சிக்கியது.
• சில மாதங்கள் முன்பு, ஆந்திராவில் காவல்துறை துணைத் தலைவர் பெண்கள் ஆண்களைத் தூண்டும்படி உடையணிவதுதான் பாலியல் வன்முறைக்குக் காரணம் என்றார்.
• மேற்குவங்கத்தில், பாலியல் வன்முறை புகார் கொடுக்க வந்த ஒரு பெண்ணை காவல்துறை அதிகாரிகள் தரக்குறைவாகப் பேசினர்; பிறகு, மாநில முதலமைச்சரும், ஒரு மூத்த அமைச்சரும் அந்தப் பெண் பொய் சொல்வதாகச் சொன்னதுடன் அந்தப் பெண்ணின் நடத்தை பற்றியும் கேள்வி எழுப்பினர்.
• உத்தரபிரதேசத்தின் சஹரன்பூர் மாவட்டத்தின் காவல்துறை துணைத் தலைவர், தனது தங்கை ஓடிவிட்டதாக புகார் கொடுத்த ஒருவரிடம், அவர் இடத்தில் தாம் இருந்தால், அவர் தனது தங்கையை சுட்டுக் கொன்றிருப்பார் அல்லது தூக்குப் போட்டு செத்திருப்பார் என்று சொன்னார். காவல்துறை அதிகாரி ஒருவரே கவுரவக் கொலையை ஊக்குவிப்பதன் அதிர்ச்சி தரும் சம்பவம் இது! உத்தரபிரதேசத்தின் சந்த் கபீர் நகர் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் ஒரு பொது நிகழ்ச்சியில், காணாமல் போகும் பெண்கள் எல்லாம் ‘ஓடிப்போனவர்கள்’ என்று முத்திரை குத்தி, ‘திருடர்களையும் ஓடிப்போனவர்களையும் பிடிப்பதுதான் காவல்துறையின் வேலையா’ என்று கேட்டார். மாவட்ட நீதிபதி அவர் பேசுவதைக் கேட்டு கைத்தட்டி சிரித்தார்.
• சோனி சோரி என்ற பழங்குடிப் பெண்ணை சட்டிஸ்கர் காவல்துறையினர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கினர்; அவர் பிறப்புறுப்பில் கற்களை செலுத்தினர். இந்தக் குற்றத்தை செய்த காவல்துறை அதிகாரி அங்கித் கார்குக்கு கடுமையான தண்டனை தருவதற்குப் பதிலாக குடியரசு தலைவர் விருது அளிக்கப்பட்டது!
• தமிழ்நாட்டில் விழுப்புரத்தில் இருளர் பெண்கள் 4 பேரை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய காவல்துறையினர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
சஹரன்பூர் மற்றும் சந்த் கபீர் நகர் மாவட்டங்களின் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்; ஆனால் பெண்களுக்கு எதிராகப் பேசியதற்காக அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை. ஆந்திராவில் காவல்துறை துணைத் தலைவர் மீதோ, டில்லி - தேசிய தலைநகர பிராந்தியத்தின் 17 காவல்துறை அதிகாரிகள் மீதோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நீதிமன்றங்களும் பெண்கள் உரிமைகள் தொடர்பான தங்கள் கடமையில் இருந்து தவறிவிட்டன.
• சஹரன்பூர் சம்பவத்தில் வேறு மதத்தைச் சேர்ந்த தனது காதலனும் ஓடிப்போன பெண், நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டார். அந்தப் பெண்ணுடைய வாக்காளர் அடையாள அட்டை அந்தப் பெண்ணின் வயது 19 என்று காட்டியபோதும், அந்தப் பெண், அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் பாதுகாப்பில் விடப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போதிருந்து அந்தப் பெண்ணைக் காணவில்லை. அந்தப் பெண்ணின் குடும்பம் காவல்துறை துணைத் தலைவரின் அழைப்பால், நீதிமன்றத்தின் அணுகுமுறையால் ஊக்குவிக்கப்பட்டு, அந்தப் பெண்ணுக்கு தீங்கிழைத்துவிட்டதா?
• கர்நாடகாவில், தான் விரும்பியவரை திருமணம் செய்துகொண்ட ஒரு பெண், அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் பாதுகாப்பில் விடப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சட்டப்படி பெண்ணின் மணவயது 18 என்றாலும், 21 வயதுக்கு குறைவான பெண்கள் திருமணம் செய்துகொள்ள பெற்றோரின் அனுமதி வேண்டும் என்றது! நீதிமன்றங்கள், காப் பஞ்சாயத்துகளின் மனநிலையை ஏன் ஆதரிக்கின்றன? தங்கள் குடும்பங்களின் விருப்பங்கள் எப்படியிருப்பினும், தாங்கள் விரும்புபவரை திருமணம் செய்துகொள்ளும் உரிமையை பெண்களுக்கு ஏன் மறுக்கின்றன?
• 1996ல், ரன்வீர் சேனா என்கிற மேல்சாதி நிலப்பிரபுக்களின் தனியார் படை, பீகாரில் உள்ள பதானி தோலாவில் 11 பெண்கள், 3 சிறுமிகள், 2 பச்சிளம் பெண் குழந்தைகள், 4 சிறுவர்கள் உட்பட 21 சாதாரண மக்களை வேட்டையாடி படுகொலை செய்தது. சமீபத்தில், பீகார் உயர்நீதிமன்றம், அதிர்ச்சி தரும் விதத்தில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது. அதற்கு முன்பு, இந்தப் படுகொலையை திட்டமிட்ட, ரன்வீர் சேனா தலைவர் பிரம்மேஷ்வர் சிங் பிணை மனுவை எதிர்த்து வழக்காட பீகார் அரசாங்கம் தவறியது. ஆக, பீகார் அரசாங்கமும், நீதிமன்றமும் பதானியின் பெண்களை, குழந்தைகளை கைவிட்டுவிட்டன. ஆனால், அவர்களை படுகொலை செய்தவர்கள் சுதந்திரமாக உலவுகிறார்கள்.
• பீகாரின் பள்ளி ஆசிரியை ரூபம் பதக், தன்னை பாலியல்ரீதியாக தாக்குதலுக்கு உள்ளாக்கிய சட்டமன்ற உறுப்பினருக்கு, அவரது உதவியாளருக்கு எதிராக நீதி வேண்டி எடுத்த முயற்சிகளை காவல்துறை அலட்சியம் செய்தது. வேறு வழியின்றி, அவர் தன்னை பாதுகாத்துக் கொண்டார்; அதன் விளைவாக, அந்த சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பட்டார். சம்பவம் பற்றி மத்திய புலனாய்வு விசாரணை நடத்தப்பட்டது. சமீபத்தில் மத்திய புலனாய்வு நீதிமன்றம் ரூபம் பதக்குக்கு ஆயுள்தண்டனை வழங்கியது. ஒரு பெண்ணை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியவர்கள் மீது குற்றம் சுமத்தாமல், பாலியல் வன்முறைக்கு எதிராக தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்த அந்தப் பெண்ணுக்கு ஆயுள்தண்டனை வழங்குவது, பயங்ரமான அநீதி அல்லவா?
அனைத்துவிதமான அரசாங்கங்களும் பெண்கள் விரோத அரசுகளாகவே இருக்கின்றன. மேற்குவங்கத்தில், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் அரசியல்ரீதியான நோக்கம் கொண்ட பொய்யர்கள் என்று முதலமைச்சர் சொல்கிறார். பீகாரில், பதானி தோலாவில் படுகொலை செய்தவர்களையும் ரூபம் பதக் சம்பவத்தில் பாலியல் வன்முறை செய்பவர்களையும் அரசாங்கம் பாதுகாக்கிறது. அரியானாவில், சமீபத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர், அலுவலகங்களுக்கு பெண்கள் மேற்கத்திய ஆடைகள் அணிந்து செல்வதற்கு தடை விதித்தார்!
சகோதரிகளே, நண்பர்களே,
நாடாளுமன்றம் தனது அறுபதாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. ஆனால், இன்றும் கூட, நாடாளுமன்றத்தில் வெறும் 10% பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்பதும், பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற அரசாங்கம் தவறியிருப்பதும் வெட்கக் கேடல்லவா?
சமூகத்தில், அனைத்துக்கும் மேலாக, ஜனநாயகம், உரிமைகள் ஆகியவற்றை உயர்த்திப் பிடிக்கும் பொறுப்புள்ள காவல்துறை, அரசாங்கங்கள், நீதிமன்றங்கள் ஆகியவற்றில், இதுபோன்ற பெண்களுக்கு எதிரான, ஆழப்புதைந்துள்ள பாகுபாடுகளை நாம் எதிர்க்க வேண்டும். பெண்கள், தங்கள் உரிமைகள் பறிக்கப்படும் போது அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். பெண்களுக்கு எதிரான பாகுபாடான கருத்துக்களை வெளியிடும், சமத்துவத்துக்கான பெண்களின் உரிமைகளை மீறும் காவல்துறை அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், நீதிபதிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நாம் கோருகிறோம்.

தேர்தல்

புதுக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல்

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின்
சமூக, அரசியல், பொருளாதார நிலைமைகள்


பழ.ஆசைத்தம்பி

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியை கம்யூனிஸ்ட்களிடம் ஒப்படைக்க போகிறோமா? மீண்டும் பழைமைக்குத் திரும்பி மன்னர் பரம்பரையிடம் ஒப்படைக்க போகிறோமா?
இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் ஒருவர் கூட தலித் அல்ல. 1962, 1967 நாடாளுமன்றத் தேர்தல்களில் புதுக்கோட்டை மக்கள் கம்யூனிஸ்ட்களை தேர்ந்தெடுத்தனர்.
எதிர்வரவுள்ள இடைத்தேர்தலில், உழைக்கும் மக்களின் பிரதிநிதியாக, ஏழைகளின் பிரதிநிதியாக தலித் மக்களின் பிரதிநிதியாக மாலெ கட்சி களம் காண்கிறது. இடதுசாரி மற்றும் தலித் அமைப்புகள், முற்போக்கு சக்திகள், அறிவாளி பிரிவினர் ஆதரவு கொடுங்கள் என மாலெ கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
180, புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் புதுக்கோட்டை தொகுதி ஒன்று. புதுக்கோட்டை தொகுதி 1952 முதல் உள்ளது.
புதுக்கோட்டை நகராட்சி புதுக்கோட்டை ஒன்றியம் (26 ஊராட்சிகள்) கரம்பக்குடி ஒன்றியம் (20 ஊராட்சிகள்) மூன்றும் இணைந்தது புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி.
மார்ச் 2012 வரை மொத்த வாக்காளர்கள் 1,92,362. ஆண் வாக்காளர்கள் 96,167. பெண் வாக்காளர்கள் 96,255. 25.05.2012ல் வெளியிடப்பட்ட இறுதி பட்டியலில் மொத்த வாக்காளர்கள் 1,94,980.
மொத்த வாக்குச் சாவடிகள் 224. புதுக்கோட்டை ஒன்றியத்தில் 74 வாக்குச் சாவடிகள். கரம்பக்குடி ஒன்றியத்தில் 47 வாக்குச் சாவடிகள். புதுகை நகராட்சியில் 103 வாக்குச் சாவடிகள்
சமூகம்
தொகுதியில் பெரும்பான்மை தலித் மக்கள்.  முத்தரையர் சமூகம், முக்குலத்தோர் (மறவர் இல்லை), பிற சமூகத்தினர் என அடுத்தடுத்த எண்ணிக்கையில் உள்ளனர்.
வர்க்கம்
விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்கள் ஏழை, சிறு, குறு விவசாயிகள் நிறைந்த பகுதி. நிலவுடைமையாளர்கள் சிறிய பிரிவினரே. சிறுவிகித விவசாய உற்பத்தியை கொண்ட பகுதி. மிகவும் பின்தங்கிய, வறட்சியான பகுதி.
மன்னர் ஆட்சியின் மிச்சசொச்சம்
1948ல் மன்னர் ஆட்சி ஒழித்து கட்டப்பட்டது. ஆனால் அதன் மிச்சசொச்சம் பெயர்களில் நீடிக்கிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பெயர் தொண்டைமான் மாளிகை. அரசு மருத்துவமனை, ராணியார் மருத்துவமனை. அரசுப் பள்ளி, ராணியார் மேல்நிலை பள்ளி. அரசுக் கல்லூரி, மாட்சிமை தங்கிய மாமன்னர் கல்லூரி.
நாட்டு கூட்டமைப்பு முறை
தொகுதியில் இன்னும் நாட்டு அம்பலம் முறை, சாதிய மிச்சசொச்சங்களுடன் உயிர் வாழ்கிறது. கவி நாடு, வடவாளம் நாடு, வாராப்பூர் நாடு, கோத்துபனை நாடு வீரக்குடி நாடு, ஈ சங்க நாடு என பல நாடு முறை இருக்கிறது.
சாதிய ஒடுக்குமுறை
தலித் மக்கள், முத்தரையர் மக்கள் கோவிலில் நுழைய தடை துவங்கி, தனிக் குவளை, தனி சுடுகாடு, முடித்திருத்த தடை, உள்ளூர் அதிகாரத்தில் பங்கு மறுப்பு, உரிமை மறுப்பு, தலித் தலைவர் கருக்கள குறிச்சியில் தேசிய கொடி ஏற்ற தடை என சாதிய ஒடுக்குமுறை தொடர்கிறது.
வரலாறு நெடுக வறட்சி, பஞ்சம் தொடர்கிறது. புதுகை தொகுதியில், கி.பி. 15ஆம் நூற்றாண்டில் துவங்கி 1708, 1709, 1733, 1837, 1866, 1868, 1879, 1884, 1889, 1893, 1895, 1904 - 05, 1907, 1909, 1921, 1925, 1926 - 30, 1945, 1969, 1974 - 75 என தொகுதி மக்களை வாட்டி வதைத்த வறட்சி. அதனால் ஏற்பட்ட பஞ்சம்.
பஞ்சத்தை போக்க மாவட்டம் முழுவதும் 6000 குளங்கள் வெட்டப்பட்டன. புதுக்கோட்டை நகரத்தில் மட்டும், புதுகுளம், பல்லவன்குளம் துவங்கி 66 குளங்கள் வெட்டப்பட்டது.
குளங்கள் பராமரிக்கப்படாமல் பல காணாமல் போயின. சில சென்னை கூவம் போல் ஆயின. சிலவற்றை அரசாங்கமே அங்கீகரித்து கட்டிடங்கள் கட்டுவது என ஆரம்பித்துள்ளது. புதுக்கோட்டை நகரத்தில் யூனியன் ஆபீஸ், கல்லூரி, கல்லூரி விடுதி என குளத்தை தூற்றுவிட்டனர். இதனால் தண்ணீர் பிரச்சனை தொகுதி மக்களின் பிரதான பிரச்சனை.
காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வருவது, விரிவுபடுத்துவது, ஏரி, குளங்களை பராமரிப்பது, பாதுகாப்பது மிகமிக அவசியம்.
விவசாயம்
தொகுதி முழுவதும் விவசாயம் சார்ந்த மக்கள் பெரும்பான்மை. மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 466329 ஹெக்டேர். அதில் சாகுபடி நிலம் 32 சதவீதம் மட்டும். மீதி புறம்போக்கு வகையினம் 143895 ஹெக்டேர். ஓரளவு வன நிலம் உள்ளது. 2010ல் நிகர சாகுபடி 150671 ஹெக்டேர். 2011ல் நிகர சாகுபடி 149367 ஹெக்டேர். 2011ல் சாகுபடி பரப்பு குறைந்துதுள்ளது.
ரியல் எஸ்டேட் வளர்ச்சி, நீர் ஆதாரம் இல்லாமை, மின் தட்டுப்பாடு, இடுபொருள் விலை உயர்வு, விளைச்சலுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காமை, சிறு விகித உற்பத்தி என விவசாயத்தை விட்டு மக்கள் விரட்டப்படுவதும், விளை நிலம் சுருங்கி போவதும் நடைபெறுகிறது.
வேலைவாய்ப்பு
தொகுதியில் சிப்காட் மற்றும் முந்திரி தொழிற்சாலை தவிர இதர தொழிற் சாலைகள் இல்லை. விவசாய வேலைகளும் இல்லை. (மேலே உள்ள விபரம் இதை காட்டும்). 100 நாள் வேலையில் இது வரை ஒரு நாள் கூட, 80, 100, 119, 132 கூலி வழங்கியதும் இல்லை. 100 நாள் வேலையும் தரப்படுவது இல்லை.
புலம் பெயர்தல்
வேலை இல்லை. போதுமான கூலி இல்லை. வேறு எந்த வாழ்வாதாரமும் இல்லை. மக்கள் திருப்பூர், கோவை சென்னை என பெருநகரங்களுக்கு புலம் பெயர்வதும், உடல் உழைப்பு தொழிலாளர் களாக வெளிநாடு செல்வதும் தொடர்கிறது.
மன்னராட்சி வேண்டாம். மக்களாட்சி வேண்டும்
புதுக்கோட்டை நாடாளுமன்ற தேர்தல்களில் 2004 வரை வெற்றிபெற்றவர்கள் விவரங்கள் தரப்படுகின்றன.
1951 கே.எம்.வல்லதரசு, கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி.
1957 ராமநாதன் செட்டியார், இந்திய தேசிய காங்கிரஸ்.
1962 உமாநாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
1967 உமாநாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
1971 வீரையா, திமுக
1977 இளஞ்செழியன், அதிமுக
1980 சுவாமிநாதன், இந்திய தேசிய காங்கிரஸ் (தி)
1984 சுந்தர்ராஜன், இந்திய தேசிய காங்கிரஸ்
1989 சுந்தர்ராஜன், இந்திய தேசிய காங்கிரஸ்
1991 சுந்தர்ராஜன், இந்திய தேசிய காங்கிரஸ்
1996 திருச்சி சிவா, திமுக
1998 ராஜா பரமசிவம், அதிமுக
1999 திருநாவுக்கரசு, எம்.ஜி.ஆர்.அதிமுக
2004 ரகுபதி, திமுக
2009 தொகுதி சீரமைப்பில் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி இல்லாமல் போனது. 14 முறை நாடாளுமன்ற தொகுதியாக இருந்து 2009ல் தொகுதியாக இல்லாமல் போனது தொகுதி மக்களுக்கு ஏமாற்றமே. தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து 2009 நாடாளுமன்ற தேர்தலில் புதுக் கோட்டை தொகுதியில் மட்டும் 12,326 வாக்குகள் 49 ஓவுக்கு போடப்பட்டன.
சட்டமன்ற தேர்தல்களில் 2011 தேர்தல்களில் தான் இடதுசாரிகள் வெற்றி பெற்றனர். மத்திய, மாநில அரசுகளின் முதலாளித்துவ ஆதரவு நிகழ்ச்சிநிரலுக்கு எதிராக மக்கள் ஆதரவு நிகழ்ச்சிநிரலை முன்னிறுத்த இடதுசாரி இருத்தல் அவசியம். புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மீண்டும் இடதுசாரி அரசியல் வெற்றிபெற வேண்டும். மன்னராட்சி அல்லாமல் மக்களாட்சி வேண்டும்.

புதுக்கோட்டை நகரில், நகர மக்களை குடிமனை, வீட்டு வாடகை குடிநீர், வேலையின்மை நகரத்தைவிட்டு துரத்துகிறது. கிராமத்தில், விவசாய நெருக்கடி, வேலையின்மை, சாதிய ஒடுக்குமுறை சொந்த ஊரைவிட்டு பெரும்நகரத்தை நோக்கி, வெளிநாட்டை நோக்கி விரட்டுகிறது.
புதுக்கோட்டை தொகுதி மக்களின் வளர்ச்சி, முன்னேற்றம், நல்வாழ்க்கைக்கு பின்வரும் அம்சங்கள் அவசியம்.
தொகுதியில் உள்ள நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு 2 ஏக்கர் நிலம்.
நகரத்தில், கிராமத்தில் வீட்டுமனை இல்லாமல் அவதிப்படும் மக்களுக்கு 5 சென்ட் வீட்டுமனை.
100 நாள் வேலை திட்டத்தில் 200 நாட்கள் வேலை, 300 ரூபாய் கூலி, வேலை கேட்கும் அனைவருக்கும் வேலை.
தொகுதியில் உள்ள ஏரி, குளங்களை பராமரிப்பது, பாதுகாப்பது. நீராதாரத்தை பெருக்குவது.
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வருவது, விரிவுபடுத்துவது.
மத்திய, ரிசர்வ் பாரஸ்ட் இடத்தை மாநில அரசு அரசின் கீழ் கொண்டு வந்து, விவசாய பண்ணைகளாக, பழந்தோட்டங் களாக அமைத்து மக்களுக்கு வேலை தருவது, அல்லது மக்களுக்கு பிரித்து வழங்குவது.
ஆர்.எஸ்.பதி மரங்களை தொகுதியில் இருந்து அப்புறப்படுத்துவது. மக்களை, விவசாயத்தை, நிலத்தடி நீரை பாதுகாப்பது.
முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெயரில் மருத்துவக் கல்லூரி
அரசு கால்நடை பண்ணையில் கால்நடை மருத்துவ கல்லூரி.
வம்பன விதைப் பண்ணை, வெள்ளான் விடுதி எண்ணெய் வித்து பண்ணை, அண்ணா பண்ணை, அரிமளம் பண்ணை, கால்நடை பண்ணை ஆகியவற்றை மய்யப்படுத்தி விவசாயக் கல்லூரி.
 மாவட்ட தலைநகரம் என்பதால் அரசு பொறியியல் கல்லூரி.
 அரசு முந்திரி தொழிற்சாலை.
 விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள்.
 அனைத்து கிராமங்களுக்கும் இணைப்பு சாலை, கூடுதல் பேருந்து இயக்கி பேருந்து வசதி இல்லா கிராமம் இல்லை என்கிற நிலை.
 அரசு பள்ளிகளையும், ஆதிதிராவிடர் பள்ளிகளையும் எண்ணிக்கையிலும் தரத்திலும் மேம்படுத்துவது.
 கிராமப்புறங்களில் மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் உடனே அப்புறப்படுத்துவது.
 துப்புரவு தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு, வேலை பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு வழங்குதல்.
 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அதிகப்படுத்துதல். அரசு மருத்துவமனைகளை உயிர்காக்கும் மருத்துகளை கொண்டு, கூடுதல் கட்டிட வசதியுடன் 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனைகளாக மாற்றுதல்.
இன்னும் பல. . .

தொகுதி வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள்
அன்பார்ந்த புதுக்கோட்டை தொகுதியில் வசித்து வரும் கிராமப்புற தொழிலாளர்களே,
ஏழை, சிறு, குறு, நடுத்தர விவசாயிகளே,
சமூகரீதியாகவும், வர்க்கரீதியாகவும் ஒடுக்கப்படுகிற தலித் மற்றும் முத்தரையர் சமூக மக்களே,
அனைத்து சமூக உழைக்கும் மக்களே.
வர்க்கமாக, சாதியாக, பெண் என்பதாலும் சுரண்டப்படும் மண்ணின்பாதி, விண்ணில் பாதியாக உள்ள பெண்கள் சமூகமே,
சமூக மாற்றத்தை, சமத்துவத்தை விரும்பும், தலித் அமைப்பு தோழர்களே,
பாட்டாளிகளின் கரத்தை வலுப்படுத்த, இடதுசாரி இயக்கத்தை முன்னெடுத்து செல்ல தம்மை அர்ப்பணித்துள்ள இடதுசாரி இயக்க தோழர்களே,
அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் அங்கன் வாடி பணியாளர்களே, சத்துணவுப் பணியாளர்களே, மக்கள்நலப் பணியாளர்களே, சாலைப் பணியாளர்களே,
துப்புரவுத் தொழிலாளர்களே, சுமைதூக்கும் தொழிலாளர்களே, தரைக் கடை வியாபாரிகளே.
ஆசிரியர்களே, அரசு ஊழியர்களே, அறிவாளி பிரிவினரே, சமூகத்தை புரட்டி போடும் தொழிலாளர் வர்க்கமே.
உங்கள் பிரதிநிதியாய் தேர்தல்களத்தில் சிபிஅய் (எம்.எல்).
உங்கள் சின்னம் மூன்று நட்சத்திரக்கொடி.
உங்கள் வேட்பாளர் தோழர் ம.விஜயன்.


களம்

பெட்ரோல் விலை உயர்வை உடனே திரும்பப் பெறு!

அய்முகூ அரசு 23.05.2012 அன்று இரவு பெட்ரோல் விலை ரூ.7.50 என உயர்த்தியது. இந்த கட்டண உயர்வு ஏற்கனவே மிகவும் பாதிக்கப்பட்டுள்ள உழைக்கும் மக்களை மேலும் பொருளாதாரரீதியாக ஒடுக்குகிறது. சமையல் எரிவாயு மானியம் படிப்படியாக வெட்டப்பட்டு விலை உயர்வு மக்கள் மீது சுமத்தப்படும், அடுத்த வாரத்தில் டீசல் விலையும், உயர்த்தப் படும் என மத்திய அமைச்சர்கள் ஆணவத்துடன் அறிவிப்பு செய்து வருகிறார்கள். இந்த நிலையில்  மாலெ கட்சி, ஏஅய்சிசிடியு, பிற வெகுஜன அமைப்புக்கள் முழுமையாக விலை உயர்வையை குறைக்க வேண்டுமென கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

கோவையில் பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமைச் சங்கத்தின் தோழர்கள் பிரிக்கால் பிளான்ட் 1, பிளான்ட் 3 ஆலைவாயில்களில் மே 24 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
மே 26 அன்று பெரியநாயக்கன்பாளையத்தில் மாலெ கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஏஅய்சிசிடியு மாவட்ட பொதுச் செயலாளர் தோழர் எம்.குருசாமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் என்.கே.நடராஜன், தாமோதரன், புரட்சிகர இளைஞர் கழக மாநிலப் பொறுப்பாளர் தோழர் பாரதி, அகில இந்திய மாணவர் கழக மாநிலத் தலைவர் தோழர் மலர்விழி கலந்து கொண்டனர்.
மே 24 அன்று கந்தர்வக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் ஆசைத்தம்பி, வளத்தான் உட்பட மாவட்டத் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.
மே 25 அன்று குமாரபாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் கோவிந்தராஜ், மாணவர் கழக மாநிலத் தலைவர் தோழர் மலர்விழி, ஏஅய்சிசிடியு மாவட்ட செயலாளர் தோழர் எஸ்.புகழேந்தி, மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் கே.ஆர்.குமாரசாமி கண்டன உரையாற்றினர்.  
மே 25 அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் தோழர் வெங்கடேசன் கண்டன உரையாற்றினார்.
மே 25 அன்று அம்பத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாவட்ட கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர். கட்சி மாநிலக்குழு உறுப்பினர், மாவட்ட செயலாளர் தோழர் சேகர், மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார், ஏஅய்சிசிடியு மாவட்ட தலைவர்கள் தோழர் குமரேஷ், தோழர் பழனிவேல் உட்பட பலரும் கண்டனம் முழங்கினார்கள். இதே நாள் டிஅய்டைமண்ட் செயின் ஆலைவாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். கட்சி பொறுப்பாளர்கள் தோழர்கள் பழனிவேல், எ.சேகர், சாதிக்பாஷா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

பட்டா இங்கே. நிலம் எங்கே?
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் ஊராட்சியில் இலவச மனைப் பட்டா வழங்கிவிட்டு இடம் அளந்து கொடுக்காமல் தாலுக்கா நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் காலம் கடத்துவதைக் கண்டித்து ஏற்கனவே வட்டாட்சியர் அலுவலகத்தில் அவிதொச தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. விரைவில் அளந்து தருவதாக வாக்குறுதி அளித்தனர். அதை காற்றில் பறக்கவிட்டனர். இதை கண்டித்து திருநாவலூர் ஊராட்சியில் மனைப்பட்டா வைத்திருக்கும் கிராமப்புற வறியவர்கள் 100க்கும் மேற்பட்டோர் மே 24 அன்று சமையல் செய்யும் போராட்டம் நடத்தினர். மாவட்ட நிர்வாகமும் காவல்துறையினரும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயற்சி மேற்கொண்டனர். அளந்து இடம் காட்டாமல் போராட்டத்தை முடிக்க மாட்டோம் என போராட்டக்காரர்கள் அறிவித்தனர். சில நாட்களுக்குள்  நிலத்தை அளந்து வழங்குவதாக வாக்குறுதி மீண்டும் அளிக்கப்பட்டதால் போராட்டம் முடிவுக்கு வந்தது. கட்சி மாவட்ட செயலாளர் தோழர் வெங்கடேசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் கலியமூர்த்தி, செண்பகவள்ளி பங்கேற்றனர்.

வேலை உறுதித் திட்டத்தில் சட்டக்கூலி ரூ.132 வழங்கு
!21.05.2012 அன்று தர்மபுரியில் தர்மபுரி ஒன்றிய வளர்ச்சி அலுவலர் அலுவலக வளாகத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் சட்டக் கூலி ரூ.132 தரக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில், மின்வாரிய பொறி யாளர் மற்றும் பணியாளர் சங்கத் தலைவர்களில் ஒருவரான தோழர் முருகன் தலைமை தாங்கினார். கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன், ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் கோவிந்தராஜ், அவிதொச துணை பொதுச் செயலாளர் தோழர் வெங்கடேசன் கண்டன உரையாற்றினர்.
மே 28 அன்று ஊத்துக்கோட்டை ஒன்றியம் தாராட்சி ஊராட்சியில் வேலை உறுதி திட்டத்தில் சட்டக்கூலி ரூ.132, நாள்கூலி ரூ.200 என உயர்த்துவது, குடும்பத்திற்கு 2 பேருக்கு, ஆண்டுக்கு 200 நாள் வேலை, மணல் கொள்ளையை தடுப்பது, பழங்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைகளை, பட்டா இருந்தும், ஆதிக்க சக்திகள் ஆக்கிரமித்துள்ளதை மீட்டு மக்களுக்கு வழங்குவது போன்ற கோரிக்கைகள் மீது நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் எஸ்.ஜானகிராமன், எ.எஸ்.குமார், கே.பாரதி கலந்து கொண்டனர்.

குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் சங்கம் ஆர்ப்பாட்டம்
சேலம் மாநகராட்சியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்களில் வசிக்கும் மக்களின் பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான கோரிக்கைகளை கண்டு கொள்ளாததைக் கண்டித்து ஏஅய்சிசிடியுவில் இணைந்துள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஏஅய்சிசி டியு மாவட்ட தலைவர்களில் ஒருவரான தோழர் ஜோதி பாசு தலைமையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் மோகனசுந்தரம், மாநிலக்குழு உறுப்பினர் தோழர் சந்திர மோகன், சங்கத்தின் மாவட்ட தலைவர்கள் தோழர்கள் அய்யந்துரை, வேல்முருகன் உரையாற்றினர்.

சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக
மே 22 அன்று மணலூர் திருவிழாவில் அர்ச்ச னைத்தட்டு வியாபாரம் செய்த தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள் தாக்கிவிட்டனர். இதைக் கண்டித்து மாலெ கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் கண்ணையன் தலைமையில் அனைத்து கட்சியிலும் உள்ள தலித் முன்னோடிகள் அதே இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவிடை மருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கியவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி முற்றுகை ஆர்ப்பாட்டமும் அன்றே நடைபெற்றது.

வைப்புநிதி மோசடிக்கு எதிராக
துப்பாக்கித் தொழிற்சாலை ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்புநிதியை மோசடி செய்த ஒப்பந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கைக் கோரியும், முதன்மை வேலை அளிப்பவரான துப்பாக்கித் தொழிற்சாலை நிர்வாகமே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தியும், நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அம்பத்தூரில் 30 ஆண்டுகளாக மக்கள் குடியிருக்கும் உப்புகாரமேடு பகுதியில் மின்இணைப்பு தரப்படவில்லை. பலமுறை மனு அனுப்பியும், மனுக்களை திருப்பி அனுப்ப சாக்குபோக்கு சொல்லப்படுகின்றது. 22.05.2012 அன்று  உழைப்போர் உரிமை இயக்க மாவட்ட தலைவர்கள் தோழர்கள் மோகன், புகழ்வேந்தன், லில்லி, கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் முனுசாமி ஆகியோர் தலைமையில் பகுதி மக்கள், மனு கொடுக்க செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு சென்றனர். மனு கொடுக்க செல்லும் மக்களை உள்ளே செல்லக்கூடாது எனத் தடுத்ததால் அலுவலக வாயிலில் மக்கள் முற்றுகை ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் வேறு வழியின்றி செயற்பொறியாளர் அனைவரையும் அழைத்து தனது அலுவலக அறையில் அமர வைத்து பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து மனுவை பெற்றுக் கொண்டார்.

மே தினம்
மே 1 அன்று சீர்காழி நகராட்சியில் உள்ள துப்புரவுக் தொழிலாளர்கள் மே தின கொடியேற்று நிகழ்ச்சியும் சங்க பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சியும் நடத்தினர். மே நாள் அன்று துப்புரவுத் தொழிலாளர்க்கு விடுமுறை இல்லை. பல்வேறு இன்னல்களுக்கு இடையே தோழர்கள் கொடியேற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கட்சி மாவட்ட செயலாளர் தோழர் எஸ்.இளங்கோவன் சிறப்புரையாற்றினர்.

சமையல் எரிவாயு விநியோக முறைகேட்டுக்கு எதிராக
வண்டலூர் ஸ்ரீ மூகாம்பிகை கேஸ் ஏஜென்சியின், சமையல் எரிவாயு விநியோக முறைகேட்டை கண்டித்து 15.05.2012 அன்று ஸ்ரீ மூகாம்பிகை கேஸ் ஏஜென்சிஸ் அலுவலகம் முன்பு 150க்கும் மேற்பட்டடோர் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தோழர் கோபால் தலைமை தாங்கினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் இரணியப்பன் கண்டன உரையாற்றினார். கேஸ் விநியோகத்தை சீராக்கு, கூடுதல் விலைக்கு விற்கிற, புதிய இணைப்புக்கு கட்டாயமாக குக்கர் அல்லது அடுப்பை திணிக்கிற மூகாம்பிகை கேஸ் ஏஜென்சி மீது நடவடிக்கை எடு, 30 நாட்களுக்குள் உருளை கிடைக்க நடவடிக்கை எடு, சமையல் வாயுவுக்கு மானியத்தை ரத்து செய்த அய்முகூ அரசை கண்டிக்கிறோம் போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

முற்போக்கு பெண்கள் கழக தலையீடு
வாடிப்பட்டியில் ஆதரவற்ற ஏழைப் பெண்ணின் சொத்தைப் பறிக்க அவரது அண்ணன் எடுத்த முயற்சியை முற்போக்கு பெண்கள் கழகம் முறியடித்தது. தோழர் பெரியக்காள் தலைமையில் முற்போக்கு பெண்கள் கழகத்தின் தலையீட்டில் மே 13 அன்று அந்தப் பெண் இடிக்கப்பட்ட வீட்டுச் சுவற்றைக் கட்டி முடித்தார். அந்தப் பெண் கட்டிய சுவற்றை இடித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களச்செயதிகள் தொகுப்பு: எஸ்.சேகர்

Search