COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Wednesday, May 16, 2012

மாலெ தீப்பொறி
2012, மே 16 - 31, தொகுதி 10 இதழ் 15

தலையங்கம்

32 பற்களும் ஒரு நாக்கும்

பற்களுக்கிடையில் சிக்கிக்கொண்டிருந்தாலும் அவற்றால் கடிபட்டுவிடாமல் அனைத்தையும் சமாளித்து இறுதி வரை வாழும் நாக்கு போல் தாம் செயல்படுவதாக ஜெயலலிதா சட்டமன்றத்தில் சொன்னார். தமிழகத்தைப் புறக்கணிக்கும் மத்திய அரசு, குறைகளை மட்டுமே பார்க்கிற எதிர்க்கட்சிகள் என பகைமைச் சூழல் நிலவினாலும், தமிழக மக்களுக்கு நன்மை செய்ய எப்படிஎப்படியோ தாம் பாடுபடுவதாக பெருமிதப்பட்டுக் கொண்டார்.
மாநில அரசுகளின் உரிமைகள் காக்கப் புறப்பட்ட காவல் தெய்வம் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவிப்புகளை அள்ளித் தெளிக்கிறார். சட்டமன்ற மேசைகளை தட்ட சிறப்பு பயிற்சி கூட ஜெயலலிதா அறிவிக்கலாம். அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அது மிக முக்கியமான பணியாகியுள்ளது. 30 நாட்களுக்கும் மேல் 100 சத ஊதிய உயர்வு கேட்டு போராடிய சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களுக்கு, 25 சத ஊதிய உயர்வு, விசைத்தறி நெசவாளர்களுக்கு மின்கட்டணக் குறைப்பு, ஆறாவது படிக்கும் போதே சாதிச் சான்றிதழ் போன்ற அறிவிப்புகள் அம்மாவின் அருளை காட்டுவதாக ரத்தத்தின் ரத்தங்கள் அகமகிழ்கின்றன.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அகமகிழ வைக்கும் இந்த அறிவிப்புகள் தமிழக மக்களுக்கு ஆறுதல் தருவதாகவோ மகிழ்ச்சியளிப்பதாகவோ கிஞ்சித்தும் இல்லை. சட்டமன்றத்துக்குள் அறிவிப்புகளுக்குள் ஒளிந்துகொள்ளப் பார்க்கிறார் ஜெயலலிதா. மாணவர், பெற்றோர் தலையில் இடியாய் இறங்கியுள்ள 15 சதம் கூடுதல் கட்டணம், ஜெயலலிதாவின் அறிவிப்புகளுக்குப் பின்னால் உள்ள முதலாளிகள் சாய்வை, ஜெயலலிதாவின் விடாப்பிடியான மக்கள் விரோதப் போக்கை மீண்டும் ஒரு முறை மெய்ப்பித்துள்ளது.
கூடன்குளம் மீண்டும் பற்றியெரிகிறது. மக்கள் மீண்டும் பட்டினிப் போராட்டம் நடத்துகிறார்கள். கூடன்குளம் அணு உலையே வேண்டாம் என்று விடாப்பிடியாக போராடிய மக்களை, பாதுகாப்பு ஒத்திகையாவது நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுப்பும் நிலைக்கு ஒடுக்கி அடக்கிவிட்டது ஜெயலலிதாவின் இரும்புக் கரம். சங்கரன்கோவில் இடைத் தேர்தல் உங்களில் ஒருத்தி என்று சொல்ல வைத்தது. இப்போது அதுபோன்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லாததால் போராட்டத்தில் இருக்கிற மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூட மாவட்ட நிர்வாகம் முன்வரவில்லை.
கூடன்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க  மின்தட்டுப்பாட்டை, மின்வெட்டை பயன்படுத்தியதுபோல், என்எல்சி தொழிலாளர் போராட்டத்தின்போதும் மீண்டும் மின் வெட்டு என்ற காரணம் பயன்படுத்தப்படுகிறது. குற்றம் இழைத்தவர்கள் தாம் இழைத்த குற்றத்தை தமக்குச் சாதகமாக பயன்படுத்துகிறார்கள்.  கூடன்குளம் போராட்டமும் என்எல்சி தொழிலாளர் போராட்டமும் ஜெயலலிதா எதிர்ப்பதாகச் சொல்லும் மத்திய அரசுக்கு எதிரானவைதான். இரண்டு போராட்டங்களிலும் மத்திய அரசுக்கு ஆதரவாகவே மாநில அரசின் காவல்துறை செயல்பட்டது. இந்த விசயத்தில் பற்களும் நாக்கும் இசைவாகவே இயங்கின.
ஜெயலலிதா சொல்லும் பற்களில் மிகவும் மூர்க்கமாக தாக்குவதாக அவர் சொல்லும் மத்திய அரசு பற்கள் ஜெயலலிதாவை நம்பியே இருக்கின்றன. எதிர்க்கட்சிகள் என்னும் பற்கள் எங்கிருக்கின்றன என தேட வேண்டிய நிலையில்தான் தமிழ்நாடு உள்ளது. அந்த வகையில் அந்தப் பற்களும் ஜெயலலிதாவுக்கு பெரும் அச்சுறுத்தலாகவோ ஆபத்தாகவோ மாறிவிடவில்லை.
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியில்லாமலே அஇஅதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுவிடுவார் என்பது போன்ற சூழல் கூட இருந்தது. அதனால்தான், என்எல்சி தொழிலாளர்களை கைது செய்ய காவல்துறையை அனுப்பிய சுவடு மாறாமல், என்சிடிசிக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, நரவேட்டைக் காரர்களுடன் சேர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் முன்னோட்டங்களை நடத்த முடிந்தது.
ஆக, ஜெயலலிதா சட்டமன்றத்தில் வெளிப்படையாக குறிப்பிட்ட பற்கள் அவரைப் பொறுத்தவரை பலவீனமானவை. அவர் வெளிப்படையாக குறிப்பிடாதது தமிழகமெங்கும் நடந்துகொண்டிருக்கிற மக்கள் போராட்டங்கள்.
அந்தப் பற்களுக்கிடையில் சிக்கிய நாக்குகள் தப்பியதாக வரலாறில்லை. தற்காலிக வெற்றிகளையும் தலைகீழாக மாற்றும் வல்லமை அந்தப் பற்களுக்கு உண்டு.

மானுடப் படுகொலைகள்

2012 மே 11 உருது எழுத்தாளர் சாதத் அசன் மாண்டோ வின் நூற்றாண்டு. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது அவர் எழுதிய சிறு கதைகள், சீக்கியப் படுகொலைகள், குஜராத் படுகொலைகள் மற்றும் எல்லா வகை மானுடப் படுகொலைகளுக்கும் பொருந்தும். தி இந்து நாளேடு வெளியிட்ட அவரது 3 சிறுகதைகள் இங்கு பிரசுரிக்கப்படுகின்றன.

முன்னேற்பாடு
முதல் சம்பவம் தடுப்பரண் அருகே நடந்தது. உடனே அங்கு ஒரு காவலர் போடப்பட்டார்.
மறு நாளே, மற்றுமொரு சம்பவம் கடை முன்பு நடந்தது. காவலர் இரண்டாவது சம்பவம் நடந்த இடத்திற்கு மாற்றப்பட்டார்.
மூன்றாவது சம்பவம் நள்ளிரவில் சலவையகம் முன்பு நடந்தது. ஆய்வாளர் புதிய இடத்திற்கு காவலரை மாறிச் செல்லுமாறு கூறியபோது, காவலர் சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டு, ஒரு வேண்டுகோளை வைத்தார். ‘தயவு செய்து, அடுத்த சம்பவம் நடக்க இருக்கும் இடத்திற்கு, என்னை மாற்றுங்கள்’.
சலுகை
‘தயவுசெய்து என் இளம் பெண்ணை என் எதிரில் கொல்லாதீர்கள்’.
‘சரி சரி, அவன் கோரிக்கையை ஏற்போம். அவள் ஆடைகளை எல்லாம் களைந்துவிட்டு அவளை அந்தப் பக்கம் தள்ளுங்கள்’.
சாரிகத்தி, தொப்புள் தாண்டியும் வயிற்றைக் கிழித்துப் பாய்ந்தது. பெல்ட் அறுந்துவிட்டது.
திடீரென தாக்கியவன் முழு வருத்தத்தோடு சொன்னான். ‘ஓ, நான் ஒரு தவறு செய்து விட்டேன்’.

ஒடுக்கப்பட்டவர்களின் நெடுமூச்சு சுடும்

அறவியலும் பொருளாதாரமும் மோதிக் கொள்ளும்போது, பொருளாதாரமே எப்போதும் வெற்றி பெறுகிறது என்பது வரலாறு. அவர்களை கட்டாயப்படுத்தும் அளவுக்கான சக்தி இல்லை என்றால், ஆதிக்க சக்திகள் எப்போதுமே தாமாக முன்வந்து தங்களை மாற்றிக் கொண்டதில்லை.  - டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார்

அம்பேத்கார் ஒரு நத்தை மீது அமர்ந்திருக்கிறார். அந்த நத்தையின் மேல் அரசியலமைப்புச் சட்டம் என்று எழுதியிருக்கிறது. நேரு கையில் ஒரு சாட்டையை வைத்துக் கொண்டு நத்தை மீது அமர்ந்திருக்கும் அம்பேத்காரை விரட்டுகிறார். 1949ல் பிரபல கேலிச்சித்திர வல்லுநர் சங்கர் வரைந்த இந்த கேலிச்சித்திரம் அன்றைய அரசியல் விமர்சனம்.
அன்றில் இருந்து கங்கையிலும் காவிரியிலும் ஏராளமான தண்ணீர் போன பிறகு, அந்த கேலிச் சித்திரம், 2006ல் தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி கவுன்சிலால் மத்திய பாடத் திட்டத்தின் 11ஆம் வகுப்பு சமூக விஞ்ஞானம் பாடப் புத்தகத்தில் பிரசுரிக்கப்படுகிறது.
6 வருடங்கள் கழித்து 2012ல், பாடப் புத்தகத்தில் அந்தக் கேலிச் சித்திரம் இடம் பெற்றதற்கு மாநிலங்களவையிலும் மக்களவையிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்த கேலிச்சித்திரம் பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்படும் என்றும் இருக்கிற புத்தகங்கள் விநியோகிப்பது நிறுத்தப்படும் என்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் அறிவித்தார். அந்த கேலிச்சித்திரம் பாடப் புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்டதற்காக மன்னிப்பும் கோரினார்.
விசயம் இங்கே முடிந்துவிடவில்லை. அம்பேத்கார் பற்றிய கேலிச்சித்திரம் பிரசுரிக்கப்படுவது தவறென்றால், மம்தா பற்றிய கேலிச் சித்திரம் பிரசுரிக்கப்படுவதும் தவறுதானே என திரிணாமூல் அறிவாளிகள் கேள்வி எழுப்புகின்றனர். சம்பிதராய தர்க்கம் பார்க்க, கேட்க சரி, நியாயம் என்று படுகிறது. ஆனால் அது பெரும்பாலும், காப்பாற்ற முடியாததை காப்பாற்ற முயற்சிக்கவே பயன்படுத்தப்படுகிறது.
பஞ்சாப் முதல் பரமக்குடி வரை தலித் மக்கள் மீதான அரசு மற்றும் சமூக ஒடுக்குமுறை தொடர்கிறது. கூலி உயர்வு போராட்டமானாலும் தலித் மக்கள், நரபலியானாலும் தலித் குழந்தை, பாலியல் வன்முறை என்றாலும் தலித் பெண்கள், தற்கொலை என்றாலும் தலித் மாணவர்கள், மாங்கல்யத் திட்டம் என்றாலும் தலித் சிறுமிகள், கவுரவக் கொலை பெயரில் நடக்கும் ஆதிக்கக் கொலையானாலும் தலித் பெண் அல்லது ஆண்... அவர்கள் எங்கும், எப்போதும், யாராலும் தாக்கப்படலாம்....
அந்த தலித் மக்களின் சமூக சமத்துவத்துக்காக, அவர்கள் கவுரவத்துக்காக போராடுகிற, நாளை விடுதலை நிச்சயம் என்று நம்பிக்கை கொண்டுள்ள பல தலித் அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு அம்பேத்கார் ஆதர்ச திருஉரு. இந்திய அரசியலில் தலித் மக்கள் விடுதலையின், சமத்துவத்தின், அதிகாரத்தின் அடையாளம். இந்த அடையாளம் நிறுவப்பட்டதும் சாமான்றயத்தில் நடக்கவில்லை.
1949ல் அந்த கேலிச்சித்திரத்தை யாரும் எதிர்க்கவில்லை. அதற்கு அரசியல் நியாயமும் இல்லை. அது வெளிப்பாட்டுச் சுதந்திரம். அரசியல் விமர்சனம். ஆனால், இன்று சமூக விஞ்ஞானம் பற்றிய பாடப்புத்தகத்தில் அது வெளியிடப்படுவது அம்பேத்காரை, அவர் சார்ந்த சாதியை இழிவுபடுத்துவது அல்லாமல், ஆதிக்க சாதி மனோநிலையின் வக்கிரமான வெளிப்பாடல்லாமல், சாதிய துவேஷ நஞ்சை விதைப்பது அல்லாமல் வேறல்ல.
மம்தா பற்றிய கேலிச்சித்திரம் தொடர்பான மம்தா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் கருத்துச் சுதந்திரத்தை வெட்டிச் சுருக்குவது அல்லாமல் வேறல்ல. அம்பேத்கார் பற்றிய கேலிச்சித்திரத்தை, பின்னணி முற்றிலும் மாறிய சூழலில் வெளியிடுவது ஆதிக்கவெறி என்றால், மம்தா பற்றிய கேலிச்சித்திரத்தை பொருத்தமான பின்னணியில் வெளியிடக் கூடாது என்பதும், அதையொட்டிய தணிக்கை மற்றும் கைது நடவடிக்கைகளும் ஆதிக்க வெறி நடவடிக்கைகளின் மறுபதிப்பு. ஒடுக்கப்பட்டவர்கள் நெடுமூச்சு சுடும் என்பதை கபில் சிபலும் மம்தாவும் அறிந்துகொள்வார்கள்.

மாணவர் - இளைஞர் உரிமைப் பிரகடனம்
 மே 1 முதல் ஆகஸ்ட் 9 வரை அய்சா, ஆர்ஒய்ஏ இயக்கம்
ஆகஸ்ட் 9 நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி

வேலை செய்யும் உரிமைப் பிரகடனம்
1. மத்திய அரசு வேலை செய்யும் உரிமையை அடிப்படை உரிமையாக அங்கீகரிக்க வேண்டும். புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும்.
2. அனைத்து மாநில அரசாங்கங்களும் 25 வயதிற்கு மேற்பட்ட வேலையற்ற இளைஞர்களுக்கு கவுரவமான உதவித் தொகை வழங்க வேண்டும்.
3. அனைத்துத் துறைகளிலும் பயற்சியாளர் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணிபுரிபவர்களை எல்லோரையும் நிரந்தரப்படுத்த வேண்டும். வெளிப்படைத் தன்மையை உத்தரவாதப்படுத்த வேண்டும். வேலை வாய்ப்புக்கள் உருவாக்க ஆணையங்களை உருவாக்க வேண்டும். அனைத்து காலி இடங்களும் நிரப்பப்பட வேண்டும்.
கல்வி உரிமைப் பிரகடனம்
1. முதன்மையான அடிப்படை உரிமையான கல்வி உரிமையைப் புறந்தள்ளி, கல்வியை தனியார்மயம் மற்றும் வணிகமயமாக்கும் தற்போதைய கல்வி உரிமையைப் புறக்கணிப்போம். பொதுப் பள்ளித் திட்டத்திலான புதிய கல்வி உரிமை மசோதாவை முன் வைக்க வேண்டும்.
2. பெருநிறுவனங்கள் கொள்ளையடிக்கவும் தனியார்மயத்தை ஊக்குவிக்கவும் வழி செய்யும் தனியார் பல்கலைக் கழக மசோதா, அந்நிய பல்கலைக் கழக மசோதா போன்ற மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உத்தேச மசோதாக்களை உடனடியாக வாபஸ் வாங்கு.
ஜனநாயக விரோத லிங்டோ கமிட்டி பரிந்துரையைப் புறக்கணிப்போம். முழுமையான ஜனநாயக வழிமுறையில் அனைத்து வளாகங்களிலும் மாணவர் பேரவை நடத்துவதை உத்தரவாதப் படுத்த வேண்டும்.
3. தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை ஓரே மாதிரியான கல்விக் கட்டணம், சேர்க்கை முறை, தனியார் மற்றும் அரசாங்க உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் அபிவிருத்தியைக் கண்காணிக்க மத்திய மற்றும் மாநில அளவில் சட்டம் உருவாக்க வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இட ஓதுக்கீடு அமல்படுத்தப்படுவதையும் அனைத்து வகையான பாகுபாடுகளையும் தடுத்து நிறுத்தவும் ஜனநாயகம் மற்றும் வெளிப்படைத் தன்மையை உத்தரவாதப்படுத்தவும் வேண்டும்.
ஊழல் மற்றும் பெருநிறுவனங்களின் கொள்ளைக்கெதிரான ஜனநாயக உரிமைப் பிரகடனம்
1. அரசின் லோக்பால் மசோதாவுக்கு பதிலாக ஒரு செயலூக்கமான மக்கள் லோக்பால் மசோதாவை நிறைவேற்று. பெருநிறுவனங்கள், ராணுவம், நீதித்துறை, அரசுசாரா நிறுவனங்கள், பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சக நடவடிக்கைகள் அனைத்தையும் லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வா. சமூகத்தில் அனைத்தும் தழுவியதாகவும் ஜனநாயகமானதாகவும் லோக்பால் கட்டமைப்பு உருவாக்ககு. ஊழலுக்கு அடிப்படை காரணமான புதிய பொருளாதாரக் கொள்கையை தனியார்மயக் கொள்கைகளைத் திரும்பப் பெறு.
2. பெருநிறுவனங்களுக்கு வழங்கும் வரிச் சலுகைகளை உடனே நிறுத்து. நிலம், கனிம வளங்கள், நீர், நிலக்கரி, விதைகள், அலைக்ற்றை மற்றும் இதர இயற்கை வளங்களைக் பெருநிறுவனங்கள் கொள்ளையடிக்கும் கொள்கைகளை, தனியார்மயக் கொள்கைகளைத் திரும்பப் பெறு. அனைத்து இயற்கை வளங்களும் தேசத்தின் சொத்து என அறிவி.
3. ஜனநாயக இயக்கங்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்படும்  ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், தேசத்துரோக சட்டம் போன்ற ஒடுக்குமுறைச் சட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்.

மேக முதலாளித்துவம்
- என்.கே.நடராஜன்

உலகெங்கிலும் இணைய தளத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 200 கோடி. இந்தியாவில் இந்த எண்ணிக்கை 10 கோடி. நாடுகளுக்கிடையே வேறுபாடுகள் இருப்பது போல் நாடுகளுக்குள்ளும் வேறுபாடுகள் உண்டு. இந்தியாவில் இணையதள பயன்பாட்டில் நகர்ப்புற, கிராமப்புற வேறுபாடு உண்டு. நகர்ப்புறங்களில் 6% வீடுகளில் இணையதள வசதி உண்டென்றால், கிராமப்புறங்களில் வெறும் 0.4% வீடுகளில் மட்டுமே இணைய தள வசதி உள்ளது.
தற்போதைய முதலாளித்துவ உலகத்தை ஃபோர்டுக்கு பிந்தைய காலம் என்றும் சொல்வதுண்டு. ஃபோர்டு உலக பணக்காரர்களில் முதல் வரிசையில் இருந்தவர். பின்னர் கணினி, இணையதள முதலாளிகளான பில் கேட்ஸ் வகையறாக்கள் முந்திவிட்டார்கள்.
உற்பத்தித் துறை முதன்மை இடத்தை வகித்தது கடந்த காலம். உலகமய கால கட்டத்தில் உற்பத்தித் துறையை விட சேவைத் துறை பன்மடங்கு பெரிதாகிவிட்டது. புதிய பொருளாதாரத்தில் தகவல் தொடர்பு கேளிக்கை துறைகளில் பிரம்மிக்கதக்க வளர்ச்சி முதலாளித்துவத்தின் புதிய முகத்தை காட்டுகிறது.
இணையதளத்தைப் பற்றி காலச்சுவடு பத்திரிகையில் ‘இணையமும் நானும்’ என்றத் தலைப்பில் பி.ஏ.கிருஷ்ணன் கட்டுரை எழுதியுள்ளார். அவர் ‘எனது முதல் ஆங்கில நாவலை கணினி பயன்படுத்த தெரியாமல் எழுத முடிந்திருக்குமா? முடிந்திருக்காது.’ என்கிறார். வேறொரு இடத்தில் ‘அள்ள அள்ள குறையாமல், அதிகரித்துக்கொண்டே இருக்கும் அட்சய பாத்திரம் இணையம். அறிவின் கருவிகளை மக்களிடம் எளிதாகக் கொண்டு சேர்த்ததில்  இணையத்தின் பங்கு அளவிட முடியாதது’ என்கிறார். மேலும் கூறும்போது ‘இணையத்தைப் பயன்படுத்துபவர்களில் பலருக்கும் இருக்கும் — ‘தங்களுக்கு தெரியாதது ஏதுமில்லை’ — என்ற ஆணவம் இந்த அபாயத்தை வலுப்படுத்துகிறது. அறிவைக் கூர்மையாக்கும் சாதனங்களைத் தேட அதிக முயற்சி எடுக்க வேண்டிய கட்டாயம் இல்லாத தால், தேடாமலே காலத்தைத் தள்ளி விட லாம்... இந்த முடிவு அறிவு சோம்பேறித் தனத்தை வளர்க்கிறது... அறிவியல் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும்’ என்கிறார். ‘இணையத்தின் எதிர்காலம் என்ன’ என்ற கேள்வி எழுப்பி ‘முகநூல்களும் ஆப்பிள் போன்ற நிறுவனங்களும் அது உருவாக்கிய சாதனங்களும் ‘மேக முதலாளித்துவம்’ (கிளவுட் கேப்டலிசம்) என்னும் கோட்பாட்டிற்கு அடித்தளம் போட்டுக் கொண்டிருக்கின்றன... நமது முதலீடுகள், ஊடகங்கள், தகவல்கள், மென்பொருள்கள், திட்டங்கள் போன்றவற்றை நாம் எவ்வாறு நிர்வகிக்கிறோம் என்பதை தனியார் நிறுவனங்கள் நமக்காக முடிவு செய்யும் நிலை உண்டாகலாம். நமது படுக்கை அறைக்குள் அவர்களால் நமக்கே தெரியாமல் நுழைய முடியும்’ எனப் பதில் சொல்கிறார். கணினி முன் அமரும் மனிதர்கள் சுயமிழப்பது, வெறும் திரையாவது ஆகியவை பற்றிய விமர்சன விவாதங்களும் நடக்கின்றன.
தமிழக அரசாங்கத்தின் பட்ஜெட் உரையில் ஆளுகை என்றத் தலைப்பில் ‘அனைத்து அரசு சார்ந்த பொது சேவைகளும் மக்களுக்கு ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் பொதுச் சேவை மய்யங்கள் வடிவமைக்கப்பட்டு விரைவில் தொடங்கப்படும். பல்வேறு துறைகளிடையே வன்பொருள் திறன் அளவை பங்கிட்டு பயன்படுத்தும் வகையில் ‘கிளவ்ட் கம்ப்யூட் டிங்’ (ஸ்ரீப்ர்ன்க் ஸ்ரீர்ம்ல்ன்ற்ண்ய்ஞ்) முறையையும் இந்த அரசு ஊக்குவிக்கும்.’ துரிதம் மற்றும் துல்லியம் பேணப்படுவது ஜெயலலிதாவின் முயற்சி என்கிறார்கள். இந்தத் துறையில் அனுபவம் மிக்க தொழில் அதிபர்களை ஜெயலலிதா நாடியுள்ளார் எனவும் செய்திகள் வெளியாகின்றன. உண்மையில், பகாசுர மென்பொருள் நிறுவனங்களுக்கு ‘பிசினஸ்’ தருவது முதல் நோக்கம் என்பது நமக்குத் தெரியும். கிளவுட் கம்ப்யூட்டிங் பற்றிய சாதக பாதக அம்சங்கள் இணையத்தில் விவாதிக்கப்படுகின்றன.
ஆகப்பெரிய அறிவாளி ஆக குறுக்குவழி ஒன்று உண்டு. கார்ல் மார்க்ஸ் பற்றி, கம்யூனிசம் பற்றி விமர்சனம் செய்ய வேண்டும். கணினி, கிளவுட் கம்ப்யூட்டிங் பற்றி பேசுபவர்களும் சில அறிவார்ந்த கருத்துக்கள் முன்வைக்கிறார்கள். — அவர் 1800ம் ஆண்டுகளில் வாழ்ந்தவர். அது முதலாளித்துவ வளர்ச்சியின் ஆரம்ப காலம். உற்பத்தித் துறை மேலோங்கி இருந்த காலம். உற்பத்தி கைவினைஞர்களின் கைகளில் இருந்து மாறிச்சென்ற காலகட்டம். கைவினை ஞர்கள் உற்பத்திக் கருவிகளை கையில் வைத்திருந்தார்கள். ஆலைகளில் தொழிலாளர்கள் கையில் உற்பத்திக் கருவிகள் ஏதுமில்லை. அப்போது உற்பத்திக் கருவிகளும் கச்சாப் பொருளும் முதலாளிக்குச் சொந்தமாயிருந்தன. உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களும் முதலாளிகளுக்குச் சொந்தமாயிருந்தன. முதலாளி தொழிலாளியின் உபரி உழைப்பைச் சுரண்டுவதன் மூலம் லாபம் அடைந்தான். கால மாற்றத்தில் சந்தை பிழைத்திருக்க பெரிய அளவிலான உற்பத்தி, பொருளாதாரம் தேவையாயிருந்தது. ஆனால் கணினி புரட்சி, ஆப்பிள், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்களை முன்கொண்டு வந்திருக்கிறது. இப்போது வரலாறு திரும்பியிருக்கிறது. உலகம் முழுவதும் பலருக்கு உற்பத்தி கருவியாகிய கணினிகளை வைத்துக் கொள்ள வாய்ப்பு உருவாகி உள்ளது. பழைய வகை உற்பத்தியில் நேரடியாக ஈடுபடும் தொழிலாளிக்கு முதலாளிகளின் கூட்டமைப்பில் இடமில்லை. ஆனால் புதிய வகை கைவினைஞர்களுக்கு அந்தக் கூட்டமைப்பில் உறுப்பினராகும் வாய்ப்பு உள்ளது. கணினி போன்ற உற்பத்திக் கருவிகளை பெற்றுக் கொள்ள பெரிய முதலீடு தேவையில்லை — போன்ற கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன. கணினிப் புரட்சி, தொலைவை இல்லாமல் செய்தது போல், எல்லோரையும் முதலாளிகளாக்கி, முதலாளி, தொழிலாளி என்ற பேதம் இல்லாமல் செய்துவிடுகிறது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்ப்பார்க்கிறார்கள்.
முதலாளித்துவத்தில் உற்பத்தி மக்கள் தேவைகளுக்காக நடத்தப்படுவதில்லை. லாபத்துக்காக நடத்தப்படுகின்றது. முதலாளித்துவத்தில், கணினி மற்றும் இணைய சேவைகள், மக்கள் அனைவரும் முதலாளிகளாகி நல்வாழ்வு பெறட்டுமே என்ற நல்லெண்ணத்தில் நடத்தப்படுபவை அல்ல. முதலாளிகளின் லாபத்தை மட்டுமே அடிப்படையாக, நோக்கமாகக் கொண்டவை. உலகை ஆட்டிப் படைக்கும் நிதி மூலதனத்தின் துரிதப் பாய்ச்சல், இடமாற்றம், இணையத்தால் சாத்தியமாகிறது.
முதலாளித்துவம் மார்க்ஸ் காலம் முதல் தற்போதைய உலகமய காலகட்டம் வரை விதவிதமான சுரண்டல் வடிவங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. மார்க்úஸ தனது மூலதனத்தில் பல்வகையான சுரண்டல் வடிவங்களைப் பற்றி விரிவான விளக்கங்களை கூறியுள்ளார்.
பீடித் தொழிலாளர்கள் ஓர் ஆலை வளாகத்திற்குள் சென்று வேலை செய்யவில்லை. வீடுகளில் தமக்கு சொந்தமான கத்திரி போன்ற சிறிய உற்பத்திக் கருவிகளைக் கொண்டு பீடி சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். பல கோடிக்கணக்கான தொழிலாளர்கள் நாடு முழுவதும் மிகவும் மலிவான கூலிக்கு வேலை செய்து வருகிறார்கள். சுற்றுப்புறம் வேறுவேறு தொழிலில் குறிப்பிட்ட அளவில் கூலி உயர்ந்த போதும் பீடித் தொழிலாளர் கூலி மிகவும் அற்பமானது. பழமையான தொழில் நுட்பத்தில் இயங்குகிற இந்தத் தொழிலில், பழமையான தொழில்நுட்பம் கொண்டே பீடி முதலாளிகள் கொள்ளை லாபம் ஈட்டுகிறார்கள். பீடித் தொழிலாளர்களும் ஒரு வகையில் உற்பத்திக் கருவிகளுக்கு சொந்தக்காரர்கள்தான்.
கைத்தறி நெசவாளர்களுக்கும் உற்பத்திக் கருவியாகிய தறி சொந்தம்தான். தமிழ்நாட்டில் ஏறத்தாழ 1600 கூட்டுறவு சங்கங்கள் மூலம் பல லட்சக்கணக்கான நெசவாளர்கள் கூலிக்குத்தான் வேலை செய்கிறார்கள்.
பீடித் தொழிலாளர்களுக்கு கத்தரிபோல, நெசவாளர்களுக்கு தறிகள் போல கணினிகளும் கீ போர்டு அடிமைகளுக்கு கருவியே.
பல வகையான சுரண்டல் வடிவங்களில் நவீன முதலாளித்துவம் தனது லாப  வீத சரிவை சரி கட்டிக் கொள்ள முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அமெரிக்க பெருமுதலாளிகள் மலிவான கூலிக்கு மூன்றாவது உலக நாடுகளில் வேலைகளை அவுட்சோர்ஸ் செய்கிறார்கள். இந்திய உள்நாட்டு பெருமுதலாளிகள் உள்நாட்டுக்குள்ளேயே வேலைகளை அவுட்சோர்ஸ் செய்கிறார்கள். மாங்கல்யத் திட்டம் என்ற பெயரில் நூற்பாலைகளில் இளம்பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு ஒட்டச் சுரண்டப்படுவது போல், பயிற்சியாளர், ஒப்பந்தத் தொழிலாளர் என மலிவான கூலிக்கு வேலைக்கு அமர்த்தப்படுவதுபோல் கீ போர்டு அடிமைகளும் மலிவான கூலிக்கு வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள்.
கணினி முன் அமர்ந்திருப்பவர்கள்  இணையத்தை பயன்படுத்துகிற அதேநேரம், யாஹ÷, கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற பெருநிறுவனங்களின் தொடர் பெருலாபத்தை உறுதி செய்கிறார்கள். இணையத்தில் பல்வேறு சேவைகளை தரும் தளங்களுக்குள் அக்கப்போர்கள், அவற்றின் மீது முறைகேடுகள் செய்ததாக, புகார், வழக்கு என முதலாளித்துவப் போட்டியின் அங்க அடையாளங்கள் தெரியத் துவங்கிவிட்டன.
பன்னாட்டு, உள்நாட்டு பெருநிறுவனங்களில், அழைப்பு மய்ய சிறைக்கூடங்களில், தொழிலாளர்களின் ஒவ்வோர் அசைவையும் கண்காணிப்பது, கட்டுப்படுத்துவது, மின்னணு கயிறுகளில் கட்டிப் போடுவது, அதன் மூலம் கூடுதல் உழைப்பைப் பெறுவது, விசுவாசமான, கீழ்படிதலுள்ள கூலியடிமைகளாக வைப்பது முதலாளிகளுக்கு இணையத்தால் கணினியால் சாத்தியமாகியுள்ளது. ஆனால், இதே கணினி, இணையம் மூலம் உழைக்கிற, ஒடுக்கப்படுகிற மக்கள், முதலாளித்துவப் பாய்ச்சலுக்கு தற்காலிகத் தடைகளையும் எழுப்ப முடிகிறது. அரபு வசந்தம், வால் ஸ்ட்ரீட் போன்ற மக்கள் எழுச்சிப் போராட்டங்களில் இணையம் பெரும்பங்காற்றியுள்ளது.
முதலாளித்துவ நெருக்கடியை சமாளிக்க, முதலாளித்துவம் நெருக்கடியில் இருந்து மீள கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற முறைகள்  கை கொடுக்கப் போவதில்லை. மூலதனத்திற்கும் கூலியுழைப்புக்கும் இடையிலான முரண்பாட்டை அவை மாற்றிவிடப் போவதில்லை. வர்க்கப் போராட்டம் வர்க்கங்கள் இருக்கும் வரைக்கும் நீடிக்கத்தான் செய்யும்.

ஏப்ரல் 22 - சூலை 28,
கட்சி வலுப்படுத்தும் இயக்கம்

கட்சி கட்டுதல், கட்சி அமைப்பு:
மேலும் சில விசயங்கள்


காம்ரேட்

கட்சி கட்டுதல் - நிறைவு பகுதி

தோழர் லெனினின் இரண்டு மேற்கோள்களைப் பார்ப்போம்.
“அதிகாரத்திற்கான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்திற்கு, அமைப்பு தவிர வேறு ஆயுதம் இல்லை. பாட்டாளி வர்க்கம், முதலாளித்துவ உலகின் அராஜகப் போட்டியின் ஆட்சியால் பிளவுபடுத்தப்பட்டிருக்கிறது. மூலதனத்திற்கான கட்டாய உழைப்பால் தரையில் போட்டு மிதிக்கப்பட்டுள்ளது. முழு அழிவு, காட்டுமிராண்டித்தனம், சீரழிவு ஆகியவற்றின் அதல பாதாளத்திற்கு இடையறாமல் தள்ளப்படுகிறது.
பாட்டாளி வர்க்கம், மார்க்சியக் கோட் பாடுகளால் கருத்தியல்ரீதியாக ஒன்றுபடுத்தப்பட வேண்டும். இதனை அமைப்பின் பொருளாயத அய்க்கியத்தால், மறுஉறுதி செய்ய வேண்டும். இது கோடானுகோடி, உழைப்பாளர்களை ஒரு தொழிலாளர் வர்க்கப் படையாகப் பிணைத்து இழைக்கிறது. இதன் மூலம் மட்டுமே, பாட்டாளி வர்க்கம் வெல்லப்பட முடியாத சக்தியாக மாற்றப்பட முடியும், மாறியே தீரும். இந்தப் படையைக் கிழடு தட்டிப் போன ரஷ்ய சுயேச்சதிகாரத்தாலோ, வயது முதிர்ந்த சர்வதேச மூலதனத்தின் ஆட்சியாலோ எதிர்கொள்ள முடியாது. (ஓரடி முன்னால் ஈரடி பின்னால்)
சோசலிசமும் வர்க்கப் போராட்டமும் அக்கம் பக்கமாய் உதிக்கின்றன. ஒன்றிலிருந்து மற்றொன்று உதிக்கவில்லை; ஒவ்வொன்றும் வெவ்வேறு நிலைமைகளின் கீழ் உதிக்கிறது. நவீன சோசலிச உணர்வு ஆழ்ந்த விஞ்ஞான அறிவின் அடிப்படையில் மட்டுமே உதிக்க முடியும். எடுத்துக்காட்டாகச் சொல்வதென்றால், தற்காலப் பொருளாதார விஞ்ஞானமும், சோசலிசப் பொருளாதார உற்பத்திக்கு முன் நிபந்தனையாகும்; எவ்வளவு விருப்பம் இருந்த போதும் சரி, தொழிலாளி வர்க்கத்தால் இவற்றில் எதையும் படைக்க முடியாது. இரண்டும் தற்காலச் சமுதாய நிகழ்வுப் போக்கிலிருந்து உதிக்கின்றன. விஞ்ஞானத்தை எடுத்துச் செல்லும் வாகனம் பாட்டாளி வர்க்க மல்ல. முதலாளித்துவ அறிவாளிப் பிரிவினரே. இப்பிரிவினரின் தனித்தனி உறுப்பினரின் சிந்தனையிலேதான் சோசலிசம் தோன்றியது. இவர்களே, அதனை மேலான அறிவு வளர்ச்சி பெற்ற தொழிலாளர்களிடம் கொண்டு போனார்கள்; அவர்கள், தம் பங்கிற்கு, பாட் டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தில், நிலைமைகள் அனுமதிக்கிற அளவிற்கு அதனைப் புகுத்தினார்கள். ஆக, சோசலிச உணர்வானது, பாட்டாளி வர்க்கப் போராட்டத்திற்கு வெளியிலிருந்து எடுத்துச் செல்லப்படும் ஒன்றாகுமே தவிர, அதற்குள்ளிருந்தே, தன்னியல்பாகத் தோன்றிய ஒன்றல்ல.
சமூக ஜனநாயகத்தின் கடமை, பாட்டாளி வர்க்கத்திற்குத் தன் நிலை பற்றிய, தன் கடமை பற்றிய உணர்வை ஊட்டுவது, சரியாகச் சொல்வதென்றால், நிரப்புவதாகும். வர்க்கப் போராட்டத்திலிருந்தே இந்த உணர்வு எழுமென்றால், இதற்கு அவசியமே இல்லை.”
(என்ன செய்ய வேண்டும்? நூலில் லெனின் கையாண்ட கார்ல் காவுட்ஸ்கி மேற்கோள்)
நமது கட்சி இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் அதிஉயர்ந்த அரசியல் அமைப்பாகும். அது ஒரு வெற்றிகரமான ஜனநாயகப் புரட்சியை முதலாளித்துவத்தோடு மோதி, பெருமுதலாளி வர்க்கத்தை அரசு அதிகாரத்திலிருந்து தூக்கியெறிந்து நிறைவு செய்ய உறுதி பூண்டுள்ளது.
ஆக, தமிழ்நாட்டின், இந்தியாவின் கோடானுகோடி உழைப்பாளர்களை ஒரு தொழிலாளி வர்க்கப் படையாகப் பிணைத்து இழைப்பதே, நம் கடமையாகும்.
“நாம், நகர்ப்புற மற்றும் நாட்டுப்புறப் பாட்டாளிகளைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இது மிகப் பெரிய வர்க்கமாக இருந்த போதிலும், தற்போதைய சமூக பொருளாதார அமைப்பில் விளிம்பு நிலையிலேயே உள்ளது. பிரச்சனை, அரசியல் அணிதிரட்டல் மூலம் இந்த வர்க்கத்தை அரசியலின் பிரதான நீரோட்டத்திற்குக் கொண்டு வருவதாகும். இந்த முயற்சியில், மேலோட்டமான முயற்சிகள் பயன் தராது. பிரச்சனை ஓர் அருவமான வழியில், மாலெ கட்சியை அல்லது பேரவா கொண்ட சில ஆளுமைகளை, அரசியல் பிரதான நீரோட்டத்திற்குக் கொண்டு வருவதல்ல.”
      - வினோத் மிஸ்ரா
இதனைச் சாதிக்க, பாட்டாளி வர்க்கத்தை, மார்க்சியக் கோட்டுபாடுகளால் கருத்தியல்ரீதியாக ஒன்றுபடுத்த வேண்டும். இதனை, அமைப்பின் பொருளாயத அய்க்கியத்தால் மறு உறுதி செய்ய வேண்டும். அமைப்பில் இந்தப் பொருளாயத அய்க்கியம், கோடானுகோடி உழைப்பாளர்களை ஒரு தொழிலாளி வர்க்கப் படையாகப் பிணைத்து இழைக்கிறது.
மார்க்சியக் கருத்தியல் வலிமையின் தேவையும், அமைப்பின் அத்தியாவசியமும், புரட்சிகரக் கட்சியின் முன் நிற்கின்றன.
தோழர் லெனின், புரட்சிகர உணர்வு, வர்க்கப் போராட்டத்திலிருந்து தானாகவே பிறக்காது என்றும் அது வெளியிலிருந்து, புகுத்தப்பட வேண்டும், நிரப்பப்பட வேண்டும் என்றும் சொல்கிறார். அதாவது, பாட்டாளி வர்க்கத்துக்கு தன் நிலையையும் கடமையையும் உணர்த்த வேண்டும்; அதாவது, தனக்குள் ஒரு வர்க்கமாக இருப்பதை தனக்கான ஒரு வர்க்கமாக மாற்ற வேண்டும், உடனடிக் கடமைகளில் நீண்ட கால லட்சியங்கள் புகுத்தப்பட வேண்டும் என்றாகிறது.
இந்த உணர்வுபூர்வமான பாத்திரத்தைத் திறம்படச் செய்வதில்தான், கட்சி கட்டுதல் அடங்கி உள்ளது. அரசியல் கருத்தியல்ரீதியான அமைப்பின் தேவை குறித்து, அது தொடர்பான சில கடமைகள் பற்றி, ஏற்கனவே பார்த்தோம். (9ஆவது காங்கிரஸ் நகல் ஆவணம் இது பற்றி நிறையவே சொல்ல உள்ளது). இப்போது நாம் கட்சி உணர்வு, அரசியல் உணர்வு ஆகியவை பற்றிப் பார்ப்போம்.
சமூகத்தில் வர்க்கங்கள் இயங்குகின்றன. கட்சியும் சமூகத்தில்தான் இயங்குகிறது. இந்த சமூகத்தை தலைகீழாக மாற்றி அமைக்கும் புரட்சிக்கான தயாரிப்புப் பணிகளில் கட்சி ஈடுபட்டுள்ளது. கோடானுகோடி மக்களுக்கு அரசியல் உணர்வூட்டும் பணியில் ஈடுபட்டுள்ள கட்சி, தன் அரசியல் உணர்வை தக்க வைத்துக் கொள்ளவும் வளர்த்துக் கொள்ளவும் போராட வேண்டி உள்ளது.
கட்சி உணர்வு அரித்துப் போதல் பற்றி நமது ஆவணங்கள் சுட்டிக்காட்டுவதோடு புதிதாகச் சேர்ந்துள்ள சில பிரச்சனைகளையும் பார்ப்போம்.
ஒட்டுமொத்த பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டு சுதந்திரமாகச் செயல்படும் திறன் வாய்ந்த மற்றும் பொறுப்பான ஊழியர்கள் பற்றாக்குறையைச் சந்திக்கிறோம். சில தோழர்கள் கருத்தியல் பிரச்சனைகளைச் சுமக்கிறார்கள். கட்சி மற்றும் மக்கள் நலன்களைப் பற்றிக் கவலைப்படுவதற்கு மாறாகத் தமது சொந்த மற்றும் குடும்பப் பிரச்சனைகள் பற்றியே கூடுதலாகக் கவலைப்படுவது, கட்சியிலிருந்து மேலும் மேலும் சலுகைகள் எதிர்ப்பார்ப்பது, சோர்ந்து போன ஓய்ந்துவிட்ட ஒரு போர்வீரர் போல் காலம் தள்ளுவது, ஒரு தொழில்முறைப் புரட்சியாளரின் பண்புகள் அரித்துப்போவது, கடுமையான விடாப்பிடியான பணிகள் கண்டு அஞ்சுவது, அணிகளிடமிருந்தும் மக்களிடமிருந்தும் தனிமைப்படுவது போன்ற, பாட்டாளி வர்க்க கருத்தியலுக்கு அந்நியமான அறிகுறிகள், தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன. மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தில் ஒரு பொதுவான சரிவு, தாராளவாத ஜனநாயக லட்சியங்களுக்கு இரையாவது, நாடாளுமன்ற முடக்குவாதம், பதவி கவர்ச்சி ஆகியவற்றை நாடி அலைவது, குழுவாதம் மற்றும் கட்சி முடிவுகளை அமல்படுத்துவதில் ஒரு காத்திர மற்ற அணுகுமுறை ஆகியவை, கட்சி அமைப்பைப் பீடித்துள்ள வியாதிகள்.
கட்சித் திட்டத்தின் முன்னுரை, நமது வேலை நடைபற்றி பின்வருமாறு சொல்கிறது: “கட்சி வேலை நடையில், தத்துவத்தை நடைமுறையோடு ஒன்றிணைப்பது, மக்களோடு நெருக்கமான உறவுகளை வைத்திருப்பது, விமர்சனத்தையும் சுயவிமர்சனத்தையும் நடைமுறைப்படுத்துவது ஆகியவை மூன்று பிரதான கோட்பாடுகளாகும். கட்சி தன் நடைமுறையை வளர்த்தெடுப்பதற்கு, எப்போதுமே விவரங்களிலிருந்து உண்மையைக் கண்டறிவது என்ற கொள்கையைப் பின்பற்றுவதுடன். ஆழமான ஆய்வுகளையும் தீவிரமான படிப்புகளையும் மேற்கொள்கிறது”.
தத்துவத்தை நடைமுறையுடன் அமல்படுத்துவது என்பது, நடைமுறைப் பொருளில் கட்சி முடிவுகளை அமல்படுத்துவதாகும். தலைமை ஊழியர்களிடமே இதில் சுணக்கம் இருக்கும்போது, அவர்கள் கீழணிகளிடமும் மக்களிடமும், கட்சி முடிவுகளை அமல்படுத்து மாறு எப்படி கோர முடியும்?
கட்சி கட்டுதல் என்பது அன்றாட நடவடிக்கைகளில் எதிர்கால கம்யூனிச லட்சியத்தை நுழைப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு கம்யூனிஸ்ட் கூட்டு வாழ்க்கை முறையை வளர்ப்பதோடும் தொடர்புடையதாகும். இது வெறும் அமைப்புப் பிரச்சனை அல்ல. இது கம்யூனிஸ்ட் கருத்தியலோடு நெருக்கமாகப் பிணைந்துள்ளது. இதுவே, முதலாளித்துவ கருத்தியல் மற்றும் தனிநபர்வாத அழுத்தங்களிலிருந்து கம்யூனிஸ்ட்களைக் காக்கும் முறிவு மருந்தாகும். 
மக்களிடம் நெருக்கமான உறவுகளை வைத்திருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். தமது சொந்த கமிட்டி உறுப்பினர்களிடமே இயல்பாகப் பழகுவது, ஓர் உரையாடலை நடத்துவது போன்றவற்றிற்கே சில தோழர்கள் சங்கடப்படுகிறார்கள். விஞ்ஞானபூர்வமான, அமைப்பு ஊடகப்பட்ட தோழமை உறவுகளுக்குப் பதிலாக, பரஸ்பர நம்பிக்கை உறவுகள் தலை தூக்குகின்றன.
விமர்சனம் சுயவிமர்சனம் என்பதைப் பொறுத்தவரையில், சில தோழர்கள் அது தமக்கானதல்ல எனக் கருதுகிறார்கள். மேல் கமிட்டிகள் கீழ் அணிகள் மத்தியிலிருந்து வருகின்ற விமர்சனங்கள் தமக்கும் பொருந்தும் எனப் பார்ப்பதில் மன விடுதலை அடைய சிரமப்படுகிறார்கள். ஆய்வு, படிப்பு விவரங்களிலிருந்து உண்மையைத் தேடுதல் என்ற சிரமமான வழியை நிராகரித்து, அகநிலைவாதம், அனுபவவாதம் ஆகிய சுலபமான வழிகைளத் தேர்வு செய்கிறார்கள். மாற்றங்களுக்கு ஈடுகொடுப்பதில் தேக்கம், வேலைகளைத் துணிந்து முன்நோக்கி நகர்த்துவதில் இருக்கிற இயலாமைகள், இந்தப் பிரச்சனைகளுக்கு வலு சேர்க்கின்றன.
நிஜ வாழ்க்கையில், இயங்குகிற, முன் நோக்கி நகருகிற, ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில், கருத்தியல் பிரச்சனைகள் பரிசுத்த வடிவத்தில் வெளி வருவதில்லை. அவை வேறு பிரச்சனைகளோடு கலந்து கட்டியே வருகின்றன. வேலைகளை முன் எடுத்துச் செல்கின்ற போக்கிலும், ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடுகளைக் கறாராக அமல்படுத்தும் போக்கிலும், கொள்கை முடிவுகள் எடுத்தும்தான், இவற்றை எதிர்கொள்ள முடியும்.
இறுதி ஆராய்ச்சியில், புறச்சூழலின் தேவைக்கு ஏற்ப எழுவதில் மொத்தக் கட்சியையும் அரசியல், கருத்தியல், அமைப்பு ரீதியாக அணிதிரட்டுவது என்பதே, நேர்மறையான நமது அணுகுமுறையாக இருக்கும்.
அகில இந்திய அளவில், காங்கிரசும், பாஜகவும் செல்வாக்கு இழக்கின்றன. தமிழ் நாட்டில், ஜெயலலிதா தமது முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை மும்முரமாகவும் மூர்க்கமாகவும் தொடர்கிறார். திமுக தேமுதிகவால் ஜெயலலிதாவிற்குச் சவால் விட முடியவில்லை. இடதுசாரி ஜனநாயக சக்திகள் களம் காண, வேரூன்ற, வளர, ஏராளமான வாய்ப்புக்கள் உள்ளன.
மாவோயிஸ்ட்கள், காடுகளைவிட்டு ஆயு தங்களைச் சார்ந்திருப்பதைவிட்டு வெளியே வராமல், சுற்றி வளைப்பில் சிக்கி உள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சி, ஆகக் கூடுதலாக சார்ந்திருந்த இடது முன்னணி அரசாங்கங்களை இழந் துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அவர்கள் விதைத்ததை அவர்கள் அறுவடை செய்கிறார்கள். அவர்களது சரிவும் நெருக்கடியும் இடதுசாரி இயக்கத்தின் சரிவும் நெருக்கடியும் அல்ல. இடதுசாரி இயக்கத்தின் ஓட்டுநர் இருக்கையில் இருந்து அவர்களை அகற்றுவது, மக்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் மற்றும் இடதுசாரிப் புத்தெழுச்சி மூலம் நாம் அந்த இடத்திற்குச் செல்வது என்ற நம் வரலாற்றுப்பணி தொடர்கிறது.
போராடுகிற, அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழு நடவடிக்கைகளை நாம் தொடர்கிறோம். அதே நேரம் இடதுசாரி பெருங்கூட்டமைப்பு என்ற நமது நிலைப்பாட்டிலிருந்து, மார்க்சிஸ்ட் கட்சி, எதிர்க்கட்சிப் பாத்திரம் வகிக்கும் சூழலில், விவகாரங்களில் அவர்களோடு, உரிய தருணங்களில், மட்டங்களில் ஊடாடுவது என்பதும் தொடரும்.
கட்சியின், அதன் வெகுமக்கள் அமைப்புக்களின் வளர்ச்சி, முன்முயற்சிகள், செல் வாக்கு, அரசியல் வழி, நாடெங்கும் தனித்த மரியாதையைப் பெற்றுள்ளன. வெற்றிகரமான மே 10 பீகார் பந்த், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தேர்தல் முடிவுகள், பிரிக்கால் போராட்டம், போன்றவை நமது எதிர்காலத்திற்குக் கட்டியம் கூறுகின்றன.
“தாராளவாத குறுக்கு வழிகளுக்கான தேடுதலும், மெதுவான முன்னேற்றம்தான் நம் கதி எனச் செயலூக்கமில்லாமல் சோர்வுறுவதும், ஒன்றுக்கொன்று ஊட்டி வலு சேர்க்கின்றன. அவை கட்சியின் புரட்சிகர உணர்வையும் இயங்காற்றலையும் அரித்து விடுகின்றன. நாம், இவ்விரு, அந்நிய சிந்தனைப் போக்குகளையும் மனோநிலைமைகளையும் நிராகரிக்க வேண்டும். கட்சிக்குள், ஒரு முன்நோக்கிய நம்பிக்கை நிறைந்த சூழலை, வளர்த்தெடுக்க வேண்டும். அதன் மூலம், இருக்கிற நிலைமைகளில், நம் உண்மையான வேலையை விரிவு செய்ய, பல்வேறு பகுதிகளில் துறைகளில் வளர்ச்சி வாய்ப்பைச் சாதிக்க, மகத்தான முன்முயற்சியைக் கட்டவிழ்த்துவிட, நமது எல்லா கவனத்தையும் ஆற்றலையும் ஒன்று குவிக்க முடியும்”. (எட்டாவது காங்கிரஸ் அரசியல் அமைப்பு அறிக்கை - பத்தி 57)
இறுதியாக, பர்த்வான் ஊழியர் கருத்தரங்க அறிக்கையின் இறுதிப் பகுதியை நினைவுபடுத்தி, முடித்துக் கொள்வோம்.
“நாம் கட்சி கட்டுதலைப்பற்றி விவாதித்து வந்துள்ளோம். அதில், கட்சி மற்றும் கட்டுதல் என்ற இரண்டு அம்சங்கள் உள்ளன. கட்டுதல் என்பது ஒரு படைப்பு நடவடிக்கை, ஒரு கட்டி எழுப்பும் நடவடிக்கை. ஓர் ஆக்கபூர்வமான, அனைத்தும் தழுவிய, படைப்பாற்றல் மிக்க அணுகுமுறை இல்லாமல் முக்கியத்துவம் வாய்ந்த எதையும் நாம் கட்ட முடியாது. ஆகவே, கட்சி கட்டுதலின் இந்த சாரமான அம்சத்தின் தீர்மானகரமான முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுகிற சிறுமைப்படுத்துகிற எல்லா கருத்துக்களையும் நாம் கைவிட்டாக வேண்டும். கட்டுப்பாடு, உறுதி, பொறுமை, கடின உழைப்பு, விடாப்பிடித்தன்மை, துணிச்சல், தியாகம், நம்பிக்கை மற்றும் தொலை நோக்குப் பார்வை என்ற, எதையும் கட்டுவ தற்குத் தேவையான அனைத்துப் பண்புகளையும், நாம் பேணி வளர்க்க வேண்டும். நாம் புரட்சிகர நம்பிக்கைக்கும் உறுதிக்கும் அழுத்தம் வைக்கிறோம். ஏனெனில் அவநம்பிக்கை மற்றும் கையறுநிலை அடிப்படையில் எதையும் கட்ட முடியாது.
நாம் பற்றிக் கொள்ள வேண்டிய அடுத்த அம்சம், நாம் கட்டுகிற கட்சி தொடர்பானது. நாம் ஒரு புரட்சிகர கட்சியைக் கட்டுகிறோம்; அது நீண்டதூரம் செல்ல வேண்டி உள்ளது; அதனுடைய குறைந்தபட்ச திட்டம் ஒரு வெற்றிகரமான ஜனநாயகப் புரட்சி எனவும் அதனுடைய அதிகபட்சத் திட்டம் கம்யூனிசத்தின் வளர்ச்சி வரை எனவும் அமைந்துள்ளது. இதற்கு, ஒருவர் கட்சி உறுப்பினராவதென்பது, ஒரு வாழ்நாள் கடமை, ஒரு வாழ்நாள் லட்சியம் என்று பொருளாகும்; இந்த பயணத்தில் நடுவில் ஓய்வு பெறுவது அல்லது ராஜினாமா செய்வது என்ற பேச்சுக்கே இடமிருக்கக் கூடாது. இதற்கு நாம் ஒரு புதிய சமூக மற்றும் அரசியல் அமைப்பை உருவாக்குவதை லட்சியமாக முன்னிறுத்தி வேலை செய்வது என்றும், தற்போதைய ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் அமைப்பைத் தக்க வைக்கிற பிற்போக்கான மற்றும் அழுகிப் போன அனைத்து விசயங்களோடும் நாம் மோதுவோம் என்றும் பொருளாகும். வேறு வார்த்தைகளில் சொன்னால் கட்சி என்பது போராட்டம் மற்றும் மாற்றி அமைத்தல் தொடர்பானது; ஆனால் இந்தப் போராட்டத்தை நடத்தும் போது, நாம் பொறுமையோடு இருக்க வேண்டும், நாம் ஓர் ஆக்கபூர்வமான கூட்டு அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும். நாம், சோசலிசத்தைப் போல் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரு லட்சிய உலகில் கட்டப்பட முடியாது என்பதையும், அது ஸ்தூலமான நிலைமைகளில்தான் கட்டப்பட முடியும் என்பதையும், அது வரலாற்றால் வழங்கப்பட்ட மற்றும் தற்போதைய சமூகத்தால் வடிவமைக்கப்பட்டு தரப்படுகிற மூலப் பொருட்களின் அடிப்படையில்தான் கட்டப்பட முடியும் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும், நாம் இப்போதுதான் துவங்கி உள்ளோம்; நாம் தாண்ட வேண்டிய பல தடைகள் காத்திருக்கின்றன. கண்டு பிடிக்கவும் கண்டறியவும் இன்னும் பலப்பல ஆர்வத்தைத் தூண்டும் இலக்குகள் காத்திருக்கின்றன. அடி மேல் அடி வைத்து தோளோடு தோள் நின்று, முன்னோக்கி நடைபோடுவோம்”.

உயிர் காக்கும் மருந்துகள்?

ஜி.ரமேஷ்

சிறுநீரகம் மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்குக்கான சோராபெனிப் என்கிற மாத்திரை நெக்ஸôவர் என்கிற பெயரில் ஜெர்மன் பேயர் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது. இந்த மாத்திரையை நோய் வந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் சாப்பிட்டாக வேண்டும். ஒரு மாதத்திற்கு 120 மாத்திரைகள். 120 மாத்திரைகளின் விலை ரூபாய் 2 லட்சத்து 80 ஆயிரம். காப்புரிமைச் சட்டத்தைக் காட்டி இந்திய நிறுவனங்களை இதே மாத்திரையைத் தயாரிக்க விடாமல் செய்து, அநியாய விலைக்கு விற்றுக் கொண்டிருந்தது பேயர் நிறுவனம். இந்திய மக்கள் இந்த விலை கொடுத்து வாங்க முடியாது, விலையைக் குறையுங்கள் என்றார் இந்திய காப்புரிமைக் கட்டுப்பாட்டுத் தலைவர் பி.எச்.குரியன். பேயர் நிறுவனம் கண்டுகொள்ளவில்லை. குரியன் தன் பதவிக்காலம் முடியும் கடைசி நாளான மார்ச் 12 அன்று இந்திய காப்புரிமைகள் சட்டம் பிரிவு 84ன் கீழ் இந்திய நிறுவனமான அய்தராபாத்தைச் சேர்ந்த நாட்கோ பார்மா என்ற நிறுவனத்திற்கு கட்டாய உரிமம் வழங்கி அதே சோராபெனிப் மாத்திரையை தயாரித்து விற்பனை செய்ய அனுமதி தந்தார். இதன் மூலம் முதன்முதலாக, இந்திய மக்களின் வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான மருந்துகள் மீது அந்நிய நிறுவனங்கள் வைத்திருந்த ஏகபோகத்திற்கு அடி விழுந்தது. இப்போது 120 மாத்திரைகளின் விலை ரூ.8,800 மட்டுமே. பேயர் நிறுவனத்திற்கு காப்புத் தொகையாக 6% தன் விற்பனையில் நாட்கோ நிறுவனம் வழங்கிவிடும்.
(Controller Genral of Patents)
அறிவுச் சொத்துரிமையும் அந்நிய நிறுவனங்களும்
அறிவுச் சொத்துரிமைகள் ( Intelectual Property Rights) சட்டத்தின் மூலம் அந்நிய நிறுவனங்கள், குறிப்பாக அமெரிக்கா, இந்தியாவின் பாரம்பரியப் பொருட்களான மஞ்சள், வேப்பிலை, பாஸ்மதி அரிசி போன்றவற்றை தன்னுடைய பொருள் என்றும் தான் கண்டுபிடித்தது என்றும் கூறி காப்புரிமை செய்து வைத்துக் கொண்டு அப் பொருட்களை மற்றவர்கள் தயாரிக்கவோ, விற்கவோ, பயன்படுத்தவோ கூடாது அப்படி அவர்கள் பயன்படுத்தினால், தயாரித்தால், விற்றால் தனக்கு காப்புத் தொகை வழங்க வேண்டும் என்று உரிமை கொண்டாடுகிறார்கள். மஞ்சளுக்கு மருத்துவ குணங்கள் உள்ளன என்பதை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாகச் சொல்லி மிசிசிபி மருத்துவ மய்யப் பல்கலைகழகம் அமெரிக்க வணிக மற்றும் காப்புரிமை அலுவலகத்தில் ( United States Trade and Patents Office) காப்புரிமை வாங்கி வைத்துக் கொண்டது. அமெரிக்க வணிக மற்றும் காப்புரிமை அலுவலகத்தில் காப்புரிமை செய்யப்பட்டுள்ள 40,000 பொருள்களில் 50க்கும் மேலான பொருள்கள் இந்தியாவில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் பொருட்களும் தாவர வகைகளும் ஆகும். வேப்பிலைக்கு காப்புரிமையை டபிள்யு.ஆர். கிரேஸ் அன் கோ என்கிற நிறுவனமும் அமெரிக்க விவசாயத் துறையும் அய்ரோப்பிய காப்புரிமை அலுவலகத்தில் பதிவு செய்து வைத்துக் கொண்டன. இவற்றிற்கு எதிராக இந்தியாவின் வந்தனா சிவா போன்றவர்கள் போராடி வழக்கு தொடுத்து இவை இந்தியாவின் பாரம்பரியப் பொருள்கள் என்கிற உரிமை இப்போது நிலைநாட்டப்பட்டுள்ளது.
மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் காப்புரிமைச் சட்டம் மற்றும் அறிவுச் சொத்துரிமைகளைப் பயன்படுத்தி அந்நிய நிறுவனங்கள் ஏகபோகமாக கொடிகட்டிப் பறந்தார்கள். 1972 வரை பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் மருந்துகளை உற்பத்தி செய்யாமலும் காப்புரிமையைக் காட்டி இந்தியக் கம்பெனிகள் அம் மருந்துகளை தயாரிக்கவிடாமலும் தடுத்து வந்தன. அநியாய விலைக்கு, மக்களுக்கு கட்டுபடியாகாத விலைக்கு விற்றுக் கொள்ளை லாபம் சம்பாதித்தார்கள். 1972ல் இந்திய காப்புரிமைச் சட்டத்தை மருந்துத் தயாரிப்புக்கு பயன்படுத்துவது ஒழித்துக் கட்டப்பட்டது. இதன் விளைவாக இந்தியாவில் மருந்துகள் தயாரிப்பு முன்னேற்றமடைந்தது. குறைந்த விலையில் கிடைத்தது. பிற வளரும் நாடுகளுக்கு மட்டுமின்றி அமெரிக்கா உட்பட வளர்ந்த நாடுகளுக்கும் இந்திய மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
2001ல் எச்அய்வி/எய்ட்ஸ் நோயாளிகளுக்கு குறைந்தபட்ச செலவே ஆண்டிற்கு 10 ஆயிரம் டாலர்கள் அதாவது 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். சில ஆப்பிரிக்க நாடுகள் எய்ட்ஸ் மருந்துகளை வாங்குவதற்கு அவர்கள் உள்நாட்டு உற்பத்தியில் பாதிக்குமேல் செலவு செய்ய வேண்டியதிருந்தது. அதே மருந்தை 2003ல் இந்திய நிறுவனமான சிப்ளா வருடத்திற்கு 250 டாலருக்கு (ரூ.12,250) விற்பனை செய்தது. இப்போது அதன் விலை 100 டாலருக்கும் அதாவது ரூ.4900க்கும் குறைவு. 1972 முதல் 2005 வரையில் இந்திய காப்புரிமைச் சட்டங்கள் முற்போக்கானவையாக இருந்தன. இந்தியா மருந்துத் தயாரிப்பில் உலகத்தில் மூன்றாவது இடத்தில் இருந்தது. 1994ல் உருகுவேயில் உலக வர்த்தக ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. அது 1995ல் உலக வர்த்தக அமைப்பாக உருமாறியது. 1995 - 2005 கால கட்டத்தில் இந்திய மருந்துக் கம்பெனிகளுக்கு ஏறுமுகம்.
2005ஆம் ஆண்டிற்கு முன்பு வரை எந்த இந்திய நிறுவனமும் எந்தவொரு மருந்தையும் தயார் செய்து விற்கலாம். யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. தான் தயாரிக்கும் மருந்தின் தொழில் நுட்பம் அந்நிய நிறுவனத்தின் தொழில் நுட்பத்தில் இருந்து வேறுபட்டது என்று நிரூபித்தால் மட்டும் போதும். ஆனால், 2005ஆம் ஆண்டு இந்திய காப்புரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து காப்புரிமை செய்யப்பட்ட எந்தவொரு மருந்தையும் (தொழில் நுட்பம் வேறாக இருந்தாலும் கூட) இந்தியக் கம்பெனிகள் தயாரிக்கக் கூடாது என்று அந்நிய நிறுவனங்கள் அந்த மருந்தின் மீது ஏகபோக உரிமை கொண்டாட வழிவகுத்தார்கள். இதன் விளைவாக இந்தியாவில் குறைந்த விலையில் மருந்துகளை தயாரித்து விற்பனை செய்து வந்ததற்கு தடை ஏற்படுத்தினார்கள். இந்திய காப்புரிமைச் சட்டத்தில்  1999, 2002, 2005 ஆண்டுகளில் வணிகம் தொடர்பான அறிவுச் சொத்துரிமைகள் ஓப்பந்தம் 1995ன் அடிப்படையில் மூன்று முறை திருத்தங்கள் செய்யப்பட்டன. இந்தத் திருத்தங்கள்தான் மீண்டும் மருந்துத் தயாரிப்பில் அந்நிய நிறுவனங்கள் தலையெடுக்கக் காரணமாயின.
பன்னாட்டு நிறுவனங்கள் மூன்று வழிகளில் இந்திய மருந்துச் சந்தையை கைப்பற்றத் தொடங்கின. 1. தங்கள் நிறுவனம் மூலம் ஒரு குறிப்பிட்ட மருந்து வகையையே கைப்பற்றின. 2. ஏகபோக காப்பீடு மூலம் மருந்துச் சந்தையைக் கைப்பற்றின. 3. இந்திய நிறுவனங்களுக்கு நிதி அளித்து பின்னர் அவற்றை வாங்கிக் கொண்டன. சிப்ளா, சன், கெடிலா ஹெல்த் கேர், மேன்கைன்ட், அல்கம், லுப்பின் போன்ற இந்திய கம்பெனிகளில் பன்னாட்டு கம்பெனிகளின் பங்கு 50%த்தைத் தாண்டியது. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியக் கம்பெனிகளை எடுத்துக் கொண்டதுடன் மற்ற இந்திய கம்பெனிகளின் மீதான கட்டுப்பாட்டையும் உறுதிப்படுத்திக் கொண்டன. புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக சீர்திருத்தம் என்ற பெயரில் 1990களில் அன்னியச் செலவானி ஒழுங்குமுறைச் சட்டம் ஒழிக்கப்பட்ட பின்னர் இந்திய மருந்து நிறுவனங்களில் 40%த்துக்கும் குறைவாக இருந்த பன்னாட்டு நிறுவனங்களின் பங்குகள் 50%க்கும் மேல் உயர்ந்தது.
காப்புரிமைச் சட்டம் பிரிவு 3(டி)யும் கட்டாய உரிமையும்   
2005 ஆம் ஆண்டின் திருத்தத்திற்குப் பிறகு இந்திய கம்பெனிகள் நேரடியாக உயிர் காக்கும் மருந்துகளை தயாரித்து விற்க முடியவில்லை. இருப்பினும், காப்புரிமைச் சட்டத்திருத்தங்களுக்கு ஏற்பட்ட பலமான எதிர்ப்பின் காரணமாக இந்திய பாராளுமன்றம் காப்புரிமைச் சட்டத்தில் சில பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதில் முதன்மையானது இந்திய காப்புரிமைச் சட்டம் 1970 பிரிவு 3(க்)யில் கொண்டு வரப்பட்ட திருத்தம். மற்றொன்று கட்டாய உரிமம் வழங்குதல். இந்த இரண்டு அம்சங்களும் பன்னாட்டு நிறுவனங்களின் எதிர்ப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.
காப்புரிமைச் சட்டம் பிரிவு 3(க்)யை எதிர்த்து சுவிட்சர்லாந்து மருந்துக் கம்பெனியான நோவர்டிஸ் வழக்கு தொடுத்துள்ளது.  நோவர்டிஸ் நிறுவனம் லுகேமியா எனப்படும் இரத்தப் புற்றுநோய் எதிர்ப்பு மருந்தான இமாடினிப் மிஸிலேட் என்கிற மருந்தை க்ளிவெக் (எப்ண்ஸ்ங்ஸ்ரீ) என்ற பெயரில் 2001ல் அறிமுகப்படுத்தியது. இந்த க்ளிவெக்கை குறிப்பிட்ட காலத்திற்கு தயாரித்து விற்பதற்கு உலகில் உள்ள பல நாடுகளிலும் காப்புரிமை வாங்கி வைத்துக் கொண்டது நோவர்டிஸ் நிறுவனம்.
உண்மையில், நோவர்டிஸ் 1993ஆம் ஆண்டு க்ளிவெக் மாத்திரையில் உள்ள இமாடினிப் மிஸிலேட்டி மருந்தின் வேதியியல் பொருளான அமோபௌஸ் உப்பு மூலக்கூறுக்குதான் காப்புரிமை வாங்கியது. பின்னர், அதே அமோபௌஸ் உப்பை சிறிய மாறுபாடுடன் புதிய கண்டுபிடிப்பு என்று கூறி 1990களின் கடைசியில் மீண்டும் காப்புரிமை பெற விண்ணப்பித்தது. அந்தக் காலக்கட்டத்தில் இந்தியாவில் மருந்துகளுக்கு காப்புரிமை வழங்கப்படாததால் நோவர்டிஸ்ஸின் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், 2005ல் உலக வர்த்தக அமைப்பால் ஏற்பட்ட மாற்றங்களை அடுத்து மீண்டும் நோவர்டிஸ், இந்திய நிறுவனங்கள் இமாடினிப் மிஸிலேட் என்ற ரத்தப் புற்றுநோய்க்கான மருந்தை தயாரிக்கக் கூடாது தான் மட்டுமே தயாரிக்க முடியும் என்று காப்புரிமை கோரி விண்ணப்பித்தது.  இந்திய காப்புரிமை அலுவலகம் நோவர்டிஸ்ஸின் விண்ணப்பத்தை க்ளிவெக் ஒரு புதிய கண்டுபிடிப்பு இல்லை என்று கூறி மீண்டும் தள்ளுபடி செய்துவிட்டது. அதைத் தொடர்ந்து நோவர்டிஸ் அறிவுச் சொத்திற்கான மேல்முறையீட்டு வாரியத்தில்  மேல்முறையீடு செய்தது. அங்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து நோவர்டிஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்திய காப்புரிமைச் சட்டம் பிரிவு 3(டி), உலக வர்த்தக அமைப்பில் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளது என இன்னொரு வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்தது. சென்னை உயர்நீதிமன்றம், காப்புரிமைச் சட்டப் பிரிவு 3(டி) சர்வதேச விதிமுறைகளுக்கு எதிராக இல்லை என்று கூறி நோவர்டிஸ்ஸின் இரண்டு வழக்குகளையும் தள்ளுபடி செய்தது.
நோவர்டிஸ் இந்திய உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது. சுவிட்சர்லாந்து நிறுவனமான நோவர்டிஸ்ஸிற்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடியவர்கள் உள்துறை அமைச்சர் சிதம்பரம், இந்திய அரசின் சொலிஸிடர் ஜெனரலாக இருந்த கோபால் சுப்ரமணியம், மூத்த வழக்கறிஞர் ரோஹின்டன் நாரிமன். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தல்வீர் பண்டாரிக்கு மருந்து நிறுவனங்களுடன் உறவு உள்ளது என்ற குற்றச்சாட்டின் காரணமாக அவர் இவ்வழக்கில் இருந்து விலகினார். இவ்வழக்கில் சூலை 10, 2012ல் இறுதியாக வாதப்பிரதிவாதங்கள் தொடங்க உள்ளது. இந்திய அரசின் காப்புரிமைச் சட்டத்திற்கு எதிராக அந்நிய நிறுவனமான நோவர்டிஸ்க்கு வக்காலத்து வாங்கிய சிதம்பரம்தான் இப்போது இந்தியாவின் உள்துறை அமைச்சர். இந்திய அரசின் சொலிஸிடர் ஜெனரலாக இருந்தவர் நோவர்டிஸ் பக்கம். தீர்ப்பு என்னவாகும் என்று சொல்லவேண்டியதில்லை. ஏற்கனவே சட்டத்தில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்திதான் இதே உச்சநீதிமன்றம் இந்திய அரசிற்கு ஏற்படும் இழப்பைப் பற்றிக் கவலைப்படாமல் அந்நிய நிறுவனமான வோடாபோனுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.
இரத்தப்புற்று நோய்க்குரிய க்ளிவெக் மாத்திரையை ஆயுள் முழுவதும் எடுக்க வேண்டும். ஒரு மாதத்திற்கான க்ளிவெக் மாத்திரையின் விலை 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய். இந்திய நிறுவனங்கள் இதே மாத்திரையை ஒரு மாதத்திற்கு ரூ.8000க்கு விற்கிறார்கள். நோவர்டிஸ் நிறுவனத்திற்கு க்ளிவெக் மாத்திரையால் வரும் வருமானம் மட்டும் 20 ஆயிரம் கோடி ரூபாய். இது இந்திய அரசின் 2010 - 11 ஆண்டிற்கான சுகாதார பட்ஜெட்டிற்கு சமமானது. ஆனால், நோவர்டிஸ், விலையைப்பற்றி இந்திய இரத்தப்புற்று நோயாளிகள் கவலைப்படத் தேவையில்லை. நாங்கள் க்ளிவெக் சர்வதேச நோயாளிகள் உதவித் திட்டத்தின் கீழ் 11,000 பேருக்கு இலவசமாக மாத்திரை வழங்குகிறோம் என்கிறது. ஆனால், இந்தியாவில் 1 லட்சம் இரத்தப் புற்று நோயாளிகள் உள்ளனர் என்றும் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 20,000 பேர் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அய்ரோப்பாவையும் வட அமெரிக்காவையும் விட இந்தியாவில்தான் இளம் வயதில் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் புற்று நோயாளிகள் உதவிச் சங்கம் கூறுகிறது. உண்மையில், இந்த நோவர்டிஸ் நிறுவனம் இலவசச் சேவை என்ற பெயரில் க்ளிவெக் மாத்திரையை நோயாளிகளை பயன்படுத்தச் செய்து பின்னர், அதற்குரிய பணத்தை கட்டாயப்படுத்தி அரசாங்கங்களிடமிருந்தும் சுகாதார அமைப்புகளிடமிருந்தும் கறந்துவிடுகிறது என்று தி நியூயார்க் டைம்ஸின் ஆய்வறிக்கை கூறுகிறது.
நோவர்டிஸ் நிறுவனம் இந்திய மக்களின் இரத்தத்தையே உறிஞ்சக் காத்துக் கொண்டிருக்கிற இந்த வேளையில்தான், பேயர் நிறுவனம் இந்தியாவில் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சோராபெனிப் மாத்திரையை தயாரித்து விற்கவில்லை. இறக்குமதியை மட்டுமே நம்பியுள்ளது. தேவைக்கேற்ப இந்தியாவில் உற்பத்தி செய்யத் தயாராக இல்லை  இது எல்லாவற்றையும்விட, இந்திய மக்கள் வாங்கக் கூடிய விலையில் மாத்திரையின் விலை இல்லை என்று கூறி கட்டாய காப்புரிமையின் அடிப்படையில் பேயர் நிறுவனத்திற்கு காப்புரிமை வழங்க மறுத்து தேசத்தின், தேச மக்களின் நலன் என்கிற அடிப்படையில் நாட்கோ நிறுவனத்திற்கு உரிமம் வழங்கியுள்ளார் இந்திய காப்புரிமை கட்டுப்பாட்டுத் தலைவர் குரியன். பேயர் நிறுவனமும் நோவர்டிஸ் போல நீதிமன்றத்தை நாடலாம்.
ஆட்சியாளர்கள் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி பன்னாட்டு நிறுவனங்களைக் கொழுக்கச் செய்வது மட்டுமல்லாமல் அவர்களுக்காக சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளத் துடிக்கிறார்கள்.
நஞ்சாகும் மருந்துகள்
உயிர் காக்கும் மருந்துகளை அநியாய விலையில் விற்றுக் கொள்ளையடிப்பது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மருந்துகளே விஷமாவது மற்றொரு புறம் நடக்கிறது. இந்திய மருந்துக் கம்பெனிகளை அந்நிய நிறுவனங்கள் வாங்கிக் கொண்டு அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகளில் தடைசெய்யப்பட்ட மருந்துகளை இந்தியாவில் விற்றுக் காசாக்குவதோடு நில்லாமல் இந்திய மண்ணையும் தண்ணீரையும் மனிதனையும் விலங்குகளையும் நாசமாக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கின்றன.
1990களில் கழுகுகள் கொத்துக் கொத்தாக செத்து விழுந்தன. அந்தக் கழுகுகள் கொத்திக் தின்ன செத்த மாட்டின் உடலில் டைக்ளோபினக் (ஈண்ஸ்ரீப்ர்ச்ங்ய்ஹஸ்ரீ) என்ற மருந்து கலந்து இருந்ததால், கழுகுகள் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு இறந்தன என்பதை 10 ஆண்டுகள் கழித்து கண்டுபிடித்தனர். அந்த மருந்து தடை செய்யப்பட்ட பின்னரும் இன்றும் இந்தியாவில் பல மாநிலங்களில் கால்நடைகளுக்கு கொடுக்கப்பட்டு வருகின்றன. நாம் அடிக்கடி விளம்பரங்களில் பார்க்கும் ஆக்சன் 500, டி கோல்ட், நோவால்ஜின் ஆகியவையும் மேலை நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள்.
அய்தராபாத்திற்கு அருகில் உள்ள பட்டஞ்செரு கிராமம்தான் உலக மருந்துக் கம்பெனிகளின் மய்யம். இங்கு தயாராகும் மருந்துகளில் தேவையான அளவுக்கும் அதிகமாக மருந்துக் கலவைகள் இருப்பது ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள கழிவு நீரில் அமெரிக்காவில் உள்ள அளவைக் காட்டிலும் 150 மடங்கு அதிகமாக மருந்துகள் கலந்து இருந்தது.  சிப்ரோபிளாக்சஸின் என்ற பாக்டீரியா எதிர்ப்பு மருந்து மேலை நாடுகளில் உள்ள மருந்துக் கம்பெனி கழிவு நீரில் 1 லிட்டருக்கு சில மைக்ரோ கிராம் அளவுதான் இருக்கும். ஆனால், பட்டஞ்செருவில் 1 லிட்டரி கழிவு நீரில் 31 மில்லி கிராம் இருந்தது. இது சிகிச்சைக்காக அளிக்கப்படும் மருந்தின் உச்சபட்ச அளவைவிட அதிகமானதாகும். கழிவில் மட்டும் ஒரு நாளைக்கு 45 கிலோவிற்கும் அதிகமான சிப்ரோபிளாக்சஸின் வெளியேற்றப்படுகிறது. அவற்றை மாத்திரையாக மாற்றினால் ஒரு நாளைக்கு 65 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்குமாம். அந்த அளவிற்குக் கழிவுகளில் மருந்து வெளியேறுகிறது. இக்கழிவுகளால் மண், நீர் அனைத்தும் மாசுபடுகிறது. இக் கழிவை வெறும் தண்ணீரைக் கொண்டோ அல்லது மழை நீராலோ சுத்திகரிப்பு செய்ய முடியாது. இதற்கென தனியாக வேதியல் முறையில் சுத்திகரிப்பு செய்யப்பட வேண்டும். அதற்கு அதிக செலவாகும் என்று மருந்து நிறுவனங்கள் அவற்றைச் செய்வதில்லை.
 அவுட் சோர்சிங் மூலம் குறைந்த கூலியில் இந்தியாவில் மருந்தைத் தயாரித்து ஏற்றுமதி செய்து லாபம் சம்பாதிக்கும் அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகளின் மருந்து நிறுவனங்கள், இந்தியாவின் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தும் வேலையை அவர்கள் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இந்தியாவில் உள்ள தண்ணீரில் 70 சதவீதம் ஏற்கனவே மாசு பட்டுப்போய் உள்ளது. தண்ணீரால் வரும் நோயால் மட்டும் வருடத்திற்கு 7.3 கோடி வேலை நாட்கள் வீணாகின்றன. இந்நிலையில் மேலும் மாசுபடுத்தும் வேலையை மருந்துக் கம்பெனிகள், மருத்துவமனைகள் செய்கின்றன. உலகத் தேவையில் 40%மும் உள்நாட்டுத் தேவையில் 90%மும் மருந்துகள் இந்தியாவில்தான் தயாரிக்கப்படுகின்றன. சுவிட்சர்லாந்து சந்தைக்கான 31% மருந்துகள் இந்தியாவில்தான் தயார் ஆகின்றன. ஆக, பன்னாட்டு நிறுவனங்கள் இரண்டு வழிகளில் இந்தியாவை மாசுபடுத்துகின்றன. ஒன்று, அந்நிறுவனங்களின் மருந்துகளை உட்கொள்ளச் செய்வதன் மூலம். மற்றொன்று, மருந்துக் கழிவுகளால் குளங்களையும் ஆறுகளையும் கடலையும் விஷமாக்குவதன் மூலம்.

அந்த எதிரி, நிதி மூலதன உலகம்

மஞ்சுளா

பெருநிறுவனங்களுக்கு, பணக்காரர்களுக்கு 75% வருமான வரி விதிக்கப்படும்.
பணவீக்கத்துக்கு ஏற்றாற் போல் அல்லாமல் வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் குறைந்த பட்ச ஊதியம் உயர்த்தப்படும்.
அதிபருக்கும் பிற அமைச்சர்களுக்கும் 30% ஊதியம் குறைக்கப்படும்.
மூன்று மாத காலத்துக்கு பெட்ரோல் விலை உயராது.
தண்ணீர் மற்றும் மின்சாரத்துக்கு மானியம் வழங்கப்படும்.
சிக்கன நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டப்படும்.
60,000 ஆசிரியர்கள் பணிக்கமர்த்தப்படுவார்கள்.
ஓய்வு பெறும் வயது 62ல் இருந்து 60 எனக் குறைக்கப்படும்
மாற்று எரிசக்தி உற்பத்தி செய்யப்பட்டு, அணுமின்சாரத்தின் மீதான சார்பு குறைக்கப்படும்
.
உலகமய காலங்களில் இவை கற்பனையா? ஆனால், இவைதான் பிரான்ஸ் அதிபர் தேர்தலில் சோசலிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிற பிரான்கோயிஸ் ஹாலண்டே முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகள்.
2011 முழுவதும் உலகெங்கும் குறிப்பாக பிரான்ஸ், கிரீஸ் போன்ற அய்ரோப்பிய நாடுகளில் தொழிலாளர்கள், மாணவர்கள் என பல்வேறு பிரிவினரும் போராட்டங்களில் இறங்கினார்கள். சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் நல்வாழ்வு நடவடிக்கைகள், தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக லட்சக்கணக்கானவர்கள் வீதிகளில் திரண்டார்கள்.
ஆள்பவர்கள் பழைய முறைகளில் ஆள முடியவில்லை. ஆளப்படுபவர்கள் பழைய முறைகளில் ஆளப்படுவதை அனுமதிக்கவில்லை. சமீபத்தில் பிரான்சில் நடந்த தேர்தல்களில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சோசலிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. பிரான்ஸ் சந்திக்கும் பொருளாதார நெருக்கடி, அதை சமாளிப்பது என்ற பெயரில் அமலாக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகள், சம்பள வெட்டு, ஓய்வூதியக் குறைப்பு, ஓய்வு பெறும் வயது உயர்த்தப்படுவது என அவற்றின் பெயரால் மக்கள் உரிமைகள் பறிப்பு, சுருக்கமாகச் சொல்வதானால் நவதாராளவாதக் கொள்கைகளின் படுதோல்வி பிரான்சில் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே, பிரான்சின் பெருமுதலாளி ஒருவரின் சொகுசுப் படகுக்கு ஓய்வெடுக்கச் சென்று, ஓய்வு முடித்து வந்து அடுத்தத் தேர்தல் வரை சிக்கன நடவடிக்கைகள் பெயரால் பிரான்ஸ் மக்களை வாட்டி வதைத்து, அவர்கள் உரிமைகளை வெட்டிக் கொண்டிருந்த சர்கோசி, 1958ல் பிரான்சின் அய்ந்தாவது குடியரசு அமைந்ததில் இருந்து, இரண்டாவது முறையாக, இரண்டாவது பதவிக் காலத்தைப் பிடிக்க முடியாத அதிபர். பிரான்ஸ் மக்கள் மாற்றத்தை எதிர்ப் பார்த்துக் காத்திருந்தனர்.
வெற்றி பெற்றவுடன் மக்கள் மத்தியில் பேசிய புதிய அதிபர் ஹாலண்டே, ‘எல்லா தலைநகரங்களிலும், அங்குள்ள மக்கள் நமக்கு நன்றி சொல்கிறார்கள். நம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். சிக்கன நடவடிக்கைகளுக்கு முடிவுகட்ட விரும்பும் நம்மிடம் அவர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்’ என்றார்.
ஆனால், சமீப காலங்களில் அய்ரோப்பாவின் அடையாளமாகிவிட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என போராடுகிற அய்ரோப்பிய மக்களின் எதிர்ப்பார்ப்பை, தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது ஹாலண்டேவுக்கு அவ்வளவு எளிதானதாக இருக்கப் போவதில்லை. அவரது முக்கியமான வாக்குறுதியான நிதிக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்கள் பற்றி மீண்டும் பேச்சுவார்த்தை என்பதைப் பொறுத்தவரை, அந்த ஒப்பந்தங்களில் ஒரு வார்த்தையைக் கூட மாற்ற முடியாது என, பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சிக்கன நடவடிக்கைகளே சிறந்த தீர்வு என்று உறுதியாக அமலாக்கும் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியுள்ளார். ஹாலண்டே முன்வைக்கும் வளர்ச்சி ஒப்பந்தம் என்பதைப் பொறுத்தவரை, கூடுதல் செலவில்லாமல் கூடுதல் வளர்ச்சி என்கிறார் ஜெர்மனியின் அயலுறவு அமைச்சர்.
அய்ரோப்பிய யூனியன், சர்வதேச நிதியம், அய்ரோப்பிய மத்திய வங்கி என்ற முக்கூட்டை ஹாலண்டே எதிர்கொள்ள வேண்டும். பிரான்சின் பல நிதி நிறுவனங்களுக்கு நிதி கட்டுப்பாட்டு ஒப்பந்தம் அடிப்படையில்தான் அய்ரோப்பிய மத்திய வங்கி கடன் தந்துள்ளது.
முதல் 24 மணி நேரங்களிலேயே ஹாலண்டேயின் முக்கியமான வாக்குறுதியை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று தெரிந்துவிட்டது என்றும், தான் இத்தனை ஆண்டுகளாக எதிர்த்து வந்த அதே ஒப்பந்தத்தை இப்போது ஹாலண்டே அமல்படுத்த வேண்டும் என்றும், 10 நாட்களில் மாமன்னர் நிர்வாணமாகி விடுவார் என்றும் இப்போதே சர்கோசிக்கு ஆதரவானவர்கள் பேசத் துவங்கிவிட்டனர்.
பிரான்சில் அமைந்திருப்பது சோசலிஸ்ட் ஆட்சி அல்ல. சோசலிஸ்ட் கட்சி தலைமையிலான முதலாளித்துவ ஆட்சி. பிரான்சில் நடந்திருப்பது இடதுசாரி திருப்பம் அல்ல, வலதுசாரி திசையிலான மூர்க்கமான முன்னேற்றம் ஒப்பீட்டுரீதியில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்சின் அரசியல் பொருளாதார நிலைமைகள் குறுக்குச் சாலையில் உள்ளன.
தமது வாழ்க்கையில் மாற்றம் வேண்டும் என்றால், சிக்கன நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டுவது அவசியம் என்பதால் அவற்றுக்கு எதிராக எழுந்த மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு வழி செய்துள்ளார்கள். சிக்கன நடவடிக்கைகளின் பிடியில் சிக்கியிருக்கிற கிரீசிலும் வாக்குச் சீட்டுகள் மூலம் மக்கள் இதேபோன்றதொரு மாற்றத்தை நிகழ்த்தி உள்ளனர்.
பழமைவாதக் கட்சியான புதிய ஜனநாயகம் மற்றும் இடதுசாரி கட்சியான பசோக் என்கிற இரண்டு பெரிய கட்சிகளுக்கு இந்த முறை வாக்களிக்கப் போவதில்லை. இந்த இரண்டு பெரிய கட்சிகளும்தான் கிரீசில் இன்று ஏற்பட்டுள்ள மோசமான நிலைமைகளுக்குக் காரணம். நான் சிறிய கட்சிகளுக்கு வாக்களிக்கப் போகிறேன் என்றார் ஒரு மாணவர். பொதுத் தேர்தலில், கிரீசில் இரண்டாண்டு கால சிக்கன நடவடிக்கைகள், 314 பில்லியன் டாலர் மதிப்பில் இரண்டு மீட்பு முடிப்புகள் ஆகியவற்றுக்கு எதிரான தங்கள் சீற்றத்தை மக்கள் பதிவு செய்தார்கள்.
தீவிர இடதுசாரி கட்சியான சிரிசா கட்சியின் தலைவர் அலெக்சிஸ் சிப்ராஸ், இரண்டாண்டு கால காட்டாட்சிக்குப் பிறகு ஜனநாயகம் திரும்பப் போகிறது என்றார். மே 17க்குள் புதிய ஆட்சி அமையவில்லை என்றால் மீண்டும் தேர்தல் என்ற நிலையில், பெரிய கட்சிகள் இரண்டும் ஆட்சி அமைக்க, கூட்டணி உருவாக்கி பெரும்பான்மை பெறாததால், சிரிசா கட்சியை ஆட்சி அமைக்க அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரான்சிலும் கிரிசிலும் தேர்தல் மூலம் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றங்கள், நவதாராளவாதக் கொள்கைகளால் 99% மக்கள் வஞ்சிக்கப்படுவதற்கு எதிராக வால் ஸ்ட்ரீட் முதல் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிற மக்கள் எழுச்சிகளின் தொடர் நிகழ்வுகளே.
தான் எதிர்கொள்ளவிருக்கும் கடுமையான சவால்களைப் பற்றி பேசிய ஹாலண்டே, ‘எனது உண்மையான எதிரிக்கு பெயரில்லை. முகமில்லை. கட்சியில்லை. அது ஒருபோதும் ஆட்சி அதிகாரத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. ஆயினும் அது ஆட்சியில் இருக்கும். அந்த எதிரி நிதி (மூலதனம்) உலகம்’ என்றார்.
நிதி மூலதனம் என்ற சட்டகத்துக்குள் அடைந்து நின்று, பிரான்சிலும் கிரீசிலும் மக்கள் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் பொருளுள்ள விளைவுகளை உருவாக்குவது உடனடி சாத்தியப்பாடு இல்லை. இடதுசாரி அரசியலும் கருத்தியலும் பலவீனமாக இருக்கும்போது அரசியல் வலதுசாரி பாதை நோக்கி திரும்பும். பிரான் சில், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் சோசலிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பிரான்சிலும் கிரீசிலும் இடதுசாரி கருத்துக்கள், போக்குகள் வலுப்பெறுவது மட்டுமே, இந்தத் தற்காலிக மாற்றத்தை தொடர வைக்கும். நிதி மூலதன ஆதிக்கம் என்ற முகம் தெரியாத அந்த எதிரியை வீழ்த்தும் வல்லமை இடதுசாரி அரசியலுக்கு மட்டுமே உண்டு.

தமிழா... தமிழா... தமிழ்நாடு உனதில்லையே....

05.05.2012 அன்று ஏப்ரல் மாத தொழிலாளர் ஒருமைப்பாடு பத்திரிகையை ஃபோர்டு இந்தியா மற்றும் பிற தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு விநியோகிக்க தோழர்கள் இரணியப்பன், ஸ்ரீதர், இராஜகுரு அடங்கிய குழுவினர் மறைமலை நகர் ஃபோர்டு தொழிற்சாலை அருகில் பத்திரிகை விநியோகம் செய்தனர்.
தொழிலாளர்கள் மத்தியில் பத்திரிகை விநியோகம் செய்து கொண்டிருக்கும்போது மூன்று செக்யூரிட்டி கார்டுகள் வந்து குழுவினரிடம் இங்கு நின்று விளம்பர பிரசுரம் கொடுக்கக் கூடாது என்றனர். இது விளம்பர பிரசுரமல்ல தொழிலாளர் பத்திரிகை என்று குழுவினர் கூறினர். தொழிலாளர் பத்திரிகையும் இங்கு நின்று கொடுக்கக் கூடாது என்று செக்யூரிட்டி கூறினார். தொழிலாளர்கள் வந்து செல்லும் வழியில்தானே பத்திரிகை விநியோகிக்க முடியும் என்று குழுவினர் கூறினர். சாலையில் நிற்கக் கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார் என்று குழுவினர் கேட்டனர். நான் இங்கு செக்யூரிட்டி என்றபோது, நீங்கள் ஆலைக்குத்தான் செக்யூரிட்டி, சாலைக்கு அல்ல என்றும் ஆலைக்குள் வந்தால் நீங்கள் கேட்கலாம், சாலையில் நிற்பது பற்றி பேசக் கூடாது என்றும் குழுவினர் சொன்னபோது, இந்த ரோடு எங்களுக்கு சொந்தமானது என்று செக்யூரிட்டி கூறினார்கள். உங்களுக்கு என்றால் யாருக்கு? ஃபோர்டு முதலாளிக்கா? அங்கு வேலை செய்யும் உங்களுக்கா? சாலைகள் எப்படி உங்களுக்கு சொந்தம் ஆகும்? குழுவினர் கேள்விகளுக்கு அவர்களால் சரியான பதில் சொல்ல முடியவில்லை. அவர்கள் தமது மேலதிகாரிக்கு போன் செய்து பாதுகாப்பு அதிகாரிகளை வரவழைத்தனர்.
வந்த மூன்று பாதுகாப்பு அதிகாரிகளும் இங்கு நின்று பத்திரிகை விநியோகிக்க கூடாது என்று குழுவினரிடம் கூறினர். நாங்கள் இங்குதான் நின்று விநியோகிப்போம் என்று குழுவினர் கூறினர். இது ஃபோர்டு நிர்வாகத்திற்கு சொந்தமான சாலை என்று பாதுகாப்பு அதிகாரி கூறினார். சாலை எப்படி ஃபோர்டு நிர்வாகத்திற்கு சொந்தமாகும் என குழுவினர் கேட்டனர். இது ஹென்றி ஃபோர்டு சாலை என போர்டு வைக்கப்பட்டுள்ளது, ஆகையால் ஃபோர்டுக்கு சொந்தமானது என்று பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர். அப்படியானால் அண்ணாசாலை ‘அண்ணாதுரைக்கு’ சொந்தமானதா என குழுவினர் கேட்டனர். நாங்கள் சொல்கிறோம் இது ஃபோர்டுக்கு சொந்தமானது, இங்கு நின்று பத்திரிகை விநியோகிக்க கூடாது என்று பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர். நீங்களோ ஃபோர்டு நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. மேலும் நீங்கள் வேண்டுமானால் காவல்துறையிடம் புகார் செய்யுங்கள். மேலும் இந்த சாலை உங்களுக்கு சொந்தமானதென்றால் நீங்கள் கேட் அமைத்து பாதுகாப்புக்கு ஆள் போட்டிருக்கலாமே என்று குழுவினர் கூறினர். பாதுகாப்பு அதிகாரி ஃபோர்டு மனிதவள அதிகாரியை வரவழைத்தார்.
குழுவினருக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே நடந்த உரையாடலை அங்கு வந்து சென்ற தொழிலாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். மனிதவள மேம்பாட்டு அதிகாரி என்ன செய்ய வேண்டும் என குழுவினரை கேட்டார். நாங்கள் பத்திரிகை விநியோகிக்க வேண்டும் என்று குழுவினர் கூறினர். இது எங்களுக்கு சொந்தமான சாலை, இங்கு விநியோகிக்க கூடாது என்று கூற, வாக்கு வாதம் தொடர்ந்தது. இறுதியில் பத்திரிகை விநியோகிக்கும் வேலை இருந்ததால் குழுவினர் ஒரு பத்தடி தள்ளி நின்று பத்திரிகையை விநியோகம் செய்தனர்.
ஃபோர்டு நிறுவனம் அமைந்துள்ள இடம் தமிழக மக்களின் விவசாய நீர்ப்பாசன ஏரியும், விவசாய நிலமும் ஆகும். நிலத்தையும் ஏரியையும் பறிகொடுத்த தமிழக மக்கள், எப்படி தமிழன் என்று சொல்வது? தலை நிமிர்ந்து நிற்பது?
தமிழ்நாட்டின் சாலைகளில் நிற்க தமிழர்களுக்கு உரிமை இல்லை. தமிழ்நாடு தமிழர்களுக்கு சொந்தமல்ல. தமிழ்நாட்டை நேற்றைய, இன்றைய ஆட்சியாளர்கள் ஃபோர்டு, ஹ÷ண்டாய், நோக்கியா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இன்னும் பல உள்நாட்டு முதலாளிகளுக்கும் எழுதிக் கொடுத்துவிட்டார்கள். தமிழ்நாட்டை முதலிடத்துக்குக் கொண்டு செல்ல துடிப்பவர்களும் தமிழ்நாட்டில் தமிழ் ஈழம் பற்றி நாடகம் நடத்துபவர்களும் சாமான்ய தமிழனுக்கு தமிழ்நாட்டில், தமிழகத்தின் தெருக்களில் இடமில்லை என்னும் நிலைக்கு பதில் ஏதும் வைத்திருக்கிறார்களா?

முற்போக்கு பெண்கள் கழக ஆர்ப்பாட்டம்

ஜெ அரசு அறிவித்துள்ள திருமண உதவித் திட்டத்தில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் விழுப்புரம் மாவட்ட தலைவர்களில் ஒருவரான தோழர் சுசீலாவின் மகள் திருமணத்திற்கு வழங்கப்பட்டது. திருமண உதவித் தொகையாக ரூ.25,000 உரிய ஆவணங்களை பெற்றுக் கொண்டு மாவட்ட நிர்வாகத்தால் பாரத ஸ்டேட் வங்கியின் காசோலையாக வழங்கப்பட்டுள்ளது. மே 10 அன்று காசோலையை பாரத ஸ்டேட் வங்கியின் கிளையில் பணமாக மாற்றச் செல்லும்போது சம்மந்தப்பட்ட காசோலைக்கு கணக்கில் பணம் இல்லை என வங்கி மேலாளர் சொன்னார். திரும்ப திரும்ப வலியுறுத்தியும் முறையான பதில் கிடைக்காததால் பெண்கள் கழக தோழர்கள் வங்கி மேலாளரை முற்றுகையிட்டனர். அதன் பின் புகார் காவல் நிலையத்திற்கு சென்றது. வங்கியை முற்றுகையிட்ட தோழர்களை காவல்துறையினர் கைது செய்து மிகவும் தரக் குறைவான வார்த்தைகளால் பேசியதுடன் கைது செய்து சிறையிலடைப்போம் என மிரட்டினார்கள். தோழர்கள், ஜெ ஆட்சியில் பணம் வந்தாலும், ஜெயில் வந்தாலும், எது வந்தாலும் கவலையில்லையென அறிவித்துவிட்டனர். அதன்பின் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினரின் மரியாதைக் குறைவான அணுகுமுறைக்கு வருத்தம் தெரிவித்ததுடன் அனைவரையும் விடுதலை செய்து காசோலை சம்மந்தமாக முறையான புகாரை பதிவு செய்யுமாறு தோழரிடம் கேட்டுக் கொண்ட பிறகு போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

திருநாவலூரில் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் 2000ம் ஆண்டு 100க்கும் மேற்பட்ட வறிய மக்களுக்கு மனை பட்டா வழங்கப்பட்டது. பல வருடங்களாக வழங்கப்பட்ட பட்டாவுக்கான நிலம் எங்கிருக்கிறது என குறிப்பிட்டு அளந்து பிரித்துக் கொடுக்க தாசில்தார் அலுவலகமும் ஊராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் மக்களை திசைதிருப்பி வந்தனர்.
மே 3 அன்று உளுந்தூர் பேட்டை வட்டாட்சியர் அலு வலகத்தில் வருடாந்திர ஜமாபந்தி நடைபெற்றது. அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் பாதிக்கப்பட்டவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதன் பின் மாவட்ட உதவி ஆட்சியர் நேரில் வந்து பட்டா விவரங்களை கேட்டுப் பெற்று உரிய நடவடிக்கை எடுத்து பட்டா வழங்கி உள்ளவர்களுக்கு நிலம் அளக்கப்பட்டு ஒப்படைக்கப்படும் என்று உறுதியளித்ததால் முற்றுகை தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. கட்சி மாவட்ட செயலாளர் தோழர் வெங்கடேசன் மாவட்ட கமிட்டி உறுப்பினர்கள் கலியமூர்த்தி, தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தோழர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

நரிக்குறவர் முற்றுகைப் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர், செங்குன்றம் உட்பட சில நகர்ப்புற பகுதிகளில் நரிக்குறவர் சமூக மக்கள் பெருந்திரளாய் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பாக ஆண்டுக்கொருமுறை ரூ.6,000 சிறுகடன் மானியத்துடன் வழங்கப்படுகிறது. இந்த கடனின் 75 சதம் வரை திரும்ப செலுத்தினால் அடுத்த ஆண்டுக்கு திரும்ப கடன் கிடைக்கும் என்ற அறிவிக்கப்படாத ஒரு விதிமுறை உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளும் சில அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் இந்த ஆண்டு நரிக்குறவர் மக்களுக்கு வழங்க வேண்டிய கடன் தொகையை சிலருக்கு மட்டும் வழங்கி விட்டார்கள். பெரும்பாலானோர்க்கு இந்த கடன் கிடைக்காமல் ஏமாற்றப்பட்டது தெரிந்து ஏப்ரல் 20 அன்று வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் செய்தியை பெரிதாக்கிவிட்டனர். வேறுவழியின்றி தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் பாதிக்கப்பட்டோர் பட்டியல் தயார் செய்யவு உறுதியளிக்கப்பட்டது. அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களை கேவலமாக நடத்தி பேசுவதால் கட்சி அலுவலகத்திற்கு வந்து உழைப்போர் உரிமை இயக்க தலைவர் தோழர் மோகன் அவர்களை அழைத்துக் கொண்டு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாதிக்கப்பட்டோர் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. கடன் தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.   மே 10 அன்று புனல்குளம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தராத மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட் டம் கந்தர்வகோட்டையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் ஆசைத்தம்பி அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில நிர்வாகிகள் தோழர் வளத்தான், தோழர் ராஜாங்கம், கட்சி மாவட்ட கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் மூக்கையன், முருகையன், ஜோதிவேல் பங்கேற்று உரையாற்றினர்.

மே நாள் நிகழ்ச்சிகள்

மே 6 2012 அன்று செங்குன்றத்தில் அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கமும், அகில தொழிற்சங்க மய்ய கவுன்சில் சங்கமும் இணைந்து மே நாள் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு கட்சி மாவட்ட கமிட்டி உறுப்பினர் தோழர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் தோழர் ஜானகிராமன், கட்சி மாநில கமிட்டி உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார், ஏஅய்சிசிடியு மாநில சிறப்பு தலைவர் தோழர் ஜவகர், ஏஅய்சிசிடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர் புவனேஸ்வரி, புரட்சிகர இளைஞர் கழக மாநில பொறுப்பாளர் தோழர் பாரதி,  மாலெ கட்சி சென்னை மாவட்ட செயலாளர் தோழர் சேகர், காஞ்சிபுரம் மாவட்டப் பொறுப்பாளர் தோழர் இரணியப்பன், ஏஅய்சிசிடியு மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் அன்புராஜ், அவிதொச திருவள்ளூர் மாவட்டத் தலைவர் தோழர் வண்ணை சந்திரசேகர், கட்சி திருவள்ளூர் மாவட்ட கமிட்டி உறுப்பினர் கலைபாபு உரையாற்றினர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத் தோழர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலால் மே தின பேரணி பொதுக் கூட் டத்திற்கு மே 1 அன்று அனுமதி மறுக்கப்பட்டதால், புதுக்கோட்டை, கீரனூரில் அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மே தின பொதுக் கூட்டம் மே 9 அன்று நடத்தியது. கூட்டத்திற்கு தோழர் சத்தியமூர்த்தி, மாவட்டக் கமிட்டி உறுப்பினர் தலைமை தாங்கினார். கட்சி மாவட்ட செயலாளர் தோழர் ஆசைத்தம்பி அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில நிர்வாகிகள் தோழர் வளத்தான், தோழர் ராஜாங்கம், கட்சி மாவட்ட கமிட்டி உறுப்பினர்கள் தோழர் மூக்கையன், தோழர் முருகையன், ஜோதிவேல் ஆகியோர் உரையாற்றினர்.

ரயில் நிலையம் செல்லும்
பொதுவழியை மூடுவதை எதிர்த்து
முற்றுகைப் போராட்டம்

அம்பத்தூர் ரயில் நிலையத்துக்கு ஸ்டேஷன் ரோடு வழியாக செல்லும் முக்கிய வழியை முள்வேலி போட்டு அடைத்ததை எதிர்த்து சி.பி.அய்.(எம்.எல்) வரதராஜபுரம் கிளை சார்பாக மே 11 அன்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில், அம்பத்தூர் ரயில் நிலைய மேலாளரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.
ரயில் நிலையத்துக்கு செல்லும் முக்கிய வழியை அடைத்துவிட்டு அதனருகில் உள்ள சிறிய பாதையைப் பயன்படுத்துமாறு கூறும் ரயில் நிர்வாகத்தை எதிர்த்து ரயில்வே நடைமேடையில் நிலைய மேலாளர் அலுவலகம் முன்பு அரை மணி நேரம் முழக்கமிட்டு போராட்டத்தை நோக்கி பயணிகளின் கவனத்தைத் தோழர்கள் ஈர்த்தனர்.
தோழர்கள் மோகன், முனுசாமி, புலவேந்திரன் (கடலூர்), கட்சி மாநிலக்குழு உறுப்பினர் தோழர் பாரதி, லஷ்மி, கோபாலன், ரத்தினசபாபதி, மீனாட்சி, ஞானம்மாள், புகழ் பொற்செல்வன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்துக்கு முன்னிலை வகித்தனர்.
பயணச்சீட்டு வாங்குவதற்காக பயணிகள் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்க்க, ரயில் நிலையத்தில் உள்ள அனைத்துக் கவுண்ட்டர்களையும் இயக்க வேண்டும், சில்லறை இல்லை என்று பயணிகளிடம் டிக்கெட் கவுண்டர் ஊழியர்கள் மரியாதைக் குறைவாக நடந்து கொள்ளக் கூடாது, நடைமேடையில் உள்ள மேம்பாலத்தை சீரமைத்து மேற்கூரை போடவேண்டும், அம்பத்தூர் ரயில்வே கேட் அருகில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு தரப்பட்டது.


அதிமுகவினரின் மண் அரசியல்

குமரி மாவட்டத்தில் 2000த்திற்கும் மேற்பட்ட பாசனத்திற்கு பயன்படும் குளங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக அதிமுக, திமுக மாறிமாறி ஆட்சி செய்த போதும் குளங்களை ஆழப்படுத்துவது, கரைகள் கட்டுவது, கால்வாய்கள் பராமரிப்பது, மடைகள் சரி செய்வது என்ற அடிப்படையான விவசாயப் பணிகளை கவனிப்பதில்லை. மாதந்தோறும் விவசாயிகள் கோரிக்கை தின கூட்டத்தில் பாசன விவசாயிகள் இது பற்றி புகார் தெரிவிப்பதும் அதிகாரிகள் காலம் கடத்துவதும் நடந்து வந்தது.
குமரியில் உள்ள பாசன விவசாயிகள் குளங்கள் அமைந்துள்ள கிராமங்களின் விவசாய பிரதிநிதிகள் அடங்கிய குழுக்கள் குளங்களை ஆழப்படுத்துவது என்ற கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. பின்னர் கனிம வளத்துறையும், பொதுப் பணித்துறையும் ஒப்பந்த முறையில்தான் குளம்  ஆழப்படுத்த முடியும் என்று நிபந்தனை விதித்தன. அதிமுக பிரமுகரின் பினாமிகள், அதிமுக ஒப்பந்தகாரர்கள், குளத்தில் உள்ள மணல் மண் ஒரு டெம்போவிற்கு குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்து கூட்டுக் கொள்ளை அடிக்க முயற்சி செய்தனர். இது சம்பந்தமாக 20.04.2012 அன்று நடைபெற்ற  விவசாயிகள் கோரிக்கை தின கூட்டத்தில் அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கம் பகுதியை சார்ந்த விவசாயிகள், விவசாய தொழிலாளர் பிரதிநிதிகளுக்குத்தான் குளம் ஆழப்படுத்தல் தொடர்பான பணிகளை தர வேண்டும் எனவும் கண்காணிப்பு குழு அமைக்கவும் மணல் மண் கொள்ளையை தடுப்பதோடு செங்கல் சூளை, ஓடு தயாரிப்பு சூளை மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்டவைகளுக்கு குறிப்பிட்ட விலைக்கு அரசு நிர்ணயம் செய்து விற்பனை செய்யவும் வலியுறுத்தியது.
பாசன விவசாயிகள் சங்க தலைவர் இது சம்பந்தமாக தீவிரமாக குரல் கொடுத்தார். மண் மணல் திருட்டு அதிமுக கும்பல்கள் வின்ஸ் அன்றோவை (பா.வி.ச.தலைவர்) கடுமையாக தாக்கியதோடு குமரி மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்க அனுமதிக்காமலும் பொய் வழக்கு தொடுத்தும் பெரும் நெருக்கடி கொடுத்துள்ளனர். இது தொடர்பாக அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கமும், மாலெ கட்சியும் விவசாயிகள் தொழிலாளர்களை திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.
 

நரபலி குற்றவாளிகள் கைது

மதுரை, வாடிப்பட்டி அருகில் உள்ள கச்சகட்டி கிராமத்தில் 2011 ஜனவரி 1 அன்று ராஜலட்சுமி என்ற சிறுமி நரபலி தரப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமி நரபலி தரப்பட்டதை மூடி மறைக்க அன்றைய திமுகவினர் முயற்சி செய்தபோது மாலெ கட்சியின் தலையீட்டால் பிரச்சனை வெளிச்சத்துக்கு வந்தது. அப்போது கைது செய்யப் பட்டவர்கள் இரண்டு பேர் மர்மமான முறையில் இறந்துபோனார்கள். நரபலி தொடர்பாக சிபிசிஅய்டிக்கு வழக்கு மாற்றப்பட்டு, அந்த இரண்டு பேர் சாவு பற்றிய கோப்பு  மூடப்பட்டது.
விசாரணையில் சிறுமி நரபலி தரப்பட்டது உறுதி செய்யப்பட்டது. உள்ளூர் திமுக பிரமுகர் அயூப்கான் கட்டி வந்த கல்லூரி பாதியில் நின்ற நிலையில், நரபலி கொடுத்தால் கல்லூரி வேலை முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மொத்த குற்றமும் நிகழ்த்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அயூப்கான் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றத்துக்கு உடந்தையாக இருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவருமே குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். இன்னும் ஒரு குற்றவாளி தேடப்பட்டு வருகிறார். முதலில் கைது செய்யப்பட்டு, பிறகு இறந்துவிட்ட இரண்டு பேர் வழக்கையும் மீண்டும் விசாரிக்கப் போவதாகவும் சிபிசிஅய்டியினர் தெரிவித்துள்ளனர். பகுத்தறிவு பாசறையில் வந்தவர்கள் என்று பெருமை பேசும் திமுகவினரின் நடைமுறை உண்மையில் எப்படியிருக்கிறது என்பதற்கு நரபலி ஓர் உதாரணம்.
குற்றம் செய்தவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும், பலிதரப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என மாலெ கட்சி கோரிக்கை எழுப்பியுள்ளது. 
மாலெ தீப்பொறி மே 01 - 15 2012
தொகுதி 10 இதழ் 14

தலையங்கம்

லாலுவின் பீகாரில் ரன்வீர் சேனா படுகொலை செய்தது!
நிதிஷ் ஆட்சியில் நீதிமன்றம் படுகொலை செய்தது!

நிலவுடைமை மேல்சாதி ஆதிக்கத்திற்கு, இகக(மாலெ) தலைமையில் முடிவுகட்டப் புறப்பட்ட  கிராமப்புற உழைக்கும் மக்களை படுகொலை செய்ய, மேல்சாதி நிலப்பிரபுத்துவம் ரன்வீர் சேனா என்ற தனியார் படையை நிறுவியது. பதானி தோலாவில், ஜ÷லை 11, 1996 அன்று மதியம் 11 பெண்கள், 7 சிறுவர்கள், 2 குழந்தைகள் ரன்வீர் சேனாவால் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை கோர தாண்டவம் நடந்த இடத்திற்கு 100 மீட்டரில் காவல்நிலையம் இருந்தது. பக்கத்திலேயே காவல் முகாம்கள் இருந்தன.
2010ல் அர்ரா செசன்ஸ் நீதிமன்றம் 3 பேருக்கு மரண தண்டனை, 20 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. ஏப்ரல் 2012ல் பீகார் உயர்நீதிமன்றம் அனைவரையும் விடுவித்துத் தீர்ப்பளித்துள்ளது.
கீழ்வெண்மணி படுகொலையை வழிநடத்திய கோபாலகிருஷ்ண நாயுடுவை, நீதிபதி மகராஜன், அவ்வளவு பெரிய மனிதர் குடிசைக்குத் தீ வைத்திருக்க முடியாது எனச் சொல்லி விடுவித்தார். இப்போது பீகார் உயர்நீதிமன்றம் படுகொலைக்கான சாட்சிகள் “சாகாததால்” அவர்கள் சாட்சியத்தை ஏற்க முடியாது, நடந்த படுகொலையிலிருந்து எவரும் தப்பியிருக்க முடியாது, ஆகவே தப்பித்து ஒளிந்து பார்த்ததாகச் சொல்வதை ஏற்க முடியாது என்கிறது. செத்தால் நம்புவேன், உயிரோடு தப்பித் தால் நம்பமாட்டேன் என்கிறார்கள் நீதிபதிகள்! குற்றம் சுமத்தப்பட்டவர்கள் இவ்வளவு நாள் அனுபவித்த வேதனைக்காக நீதிபதிகள் கிட்டத்தட்ட மன்னிப்பு கோருகிறார்கள். ரன்வீர் சேனா தலைவர் பிரமேஷ்வர் சிங், சிறையில் வேறு ஒரு வழக்கில் இருந்தபோதே அவர் காணாமல் போனவர் (ஹக்ஷள்ஸ்ரீர்ய்க்ங்ழ்) என நீதிமன்றமும் பீகார் அரசும் அறிவித்து காப்பாற்றினார்கள்.
வசதி படைத்தவர்களுக்கு சாதி ஆதிக்கத்துக்கு ஆதரவான ஒரு தீர்ப்பு வழங்கும் சமூக பொருளாதார அரசியல் சூழல் பீகாரில் நிலவுகிறது. ரன்வீர் சேனா 29.04.1995ல் துவங்கி 03.06.2000 வரை 270 தலித் மிகவும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய கிராமப்புற வறியவர்களை 30 சம்பவங்களில் படுகொலை செய்தது. இகக(மாலெ) சட்டமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் நடத்திய போராட்டங்களால் ரன்வீர்சேனா மிகவும் தாமதமாகத் தடை செய்யப்பட்டது. தோழர் வி.எம். அறை கூவலின்படி களத்தில் துடைத்தெறியப்பட்டது. ரன்வீர் சேனா படுகொலைகளை, ஆயுத சேகரிப்பை,  படை நடத்தியதை விசாரிக்க, மாலெ கட்சியின் போராட்டங்களால் நீதிபதி அமீர்தாஸ் ஆணையம் உருவாக்கப்பட்டது. அமீர்தாஸ் ஆணையம், ரன்வீர் சேனாவுக்கும் பாஜக, அய்க்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் தலைவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகச் சொன்னது. பாஜகவின் இப்போதைய துணைமுதல்வர் சுசில்குமார் மோடி, மத்திய அமைச்சராக இருந்த டி.பி.தாகூர், ஆர்ஜேடியின் முன்னாள் அமைச்சராக இருந்து இப்போது அய்க்கிய ஜனதா தளத்தின் அதிகாரபூர்வ பேச்சாளராக மாறியுள்ள சிவானந்த் திவாரி ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
மாலெ கட்சி தொடர்ந்த பொதுநல வழக்கில், நீதிமன்றம், அமீர்தாஸ் ஆணைய அறிக்கையைப் பகிரங்கமாக வெளியிடச் சொன்னது. ஆனால் அறிக்கையை வெளியிட மறுத்ததோடு நில்லாமல், நிதிஷ் குமார் அரசு, அமீர்தாஸ் ஆணையத்தின் காலத்தை நீட்டிக்காமல் அதனைக் கலைத்துவிட்டது. பதானி தோலா மக்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை என்றால் 21 பேரைக் கொன்றது யார் எனக் கேட்கிறார்கள்?
நீண்ட காலத்திற்குப் பிறகு மாலெ கட்சிக்கு இம்முறை சட்டமன்ற உறுப்பினர் இல்லை. தீர்ப்பால் அதிருப்தி அடைந்துள்ள பீகார் வறிய மக்கள் மாலெ கட்சி தலைமையில், பதானி தோலாவில் பலியானவர்களுக்கு நியாயம் கிடைக்கவும், தனது ஒரே பாதுகாவலனான இகக (மாலெ)யைப் பலப்படுத்தவும், நிலத்திற்கான வாழ்வுரிமைக்கான ஜனநாயகத்திற்கான தங்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தவும் உறுதி ஏற்றுள்ளனர்.

அறைகூவல்

பதானிதோலா படுகொலையும்
மூடி மறைக்கும் ஊடகங்களும்

செப்டம்பர் 7, 1996 மெயின்ஸ்ட்ரீம் இதழில் தோழர் வினோத் மிஸ்ரா எழுதிய கட்டுரையில் இருந்து)

....தலித்துகளின் அதிகாரபூர்வ பேச்சாளர்களாக, தங்களைத் தாங்களே நியமித்துக் கொண்ட கன்ஷி ராமோ, ராம் விலாஸ் பஸ்வானோ நடந்த படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்பது கூட அவசியம் என்று கருதவில்லை. தலித்துகள் அதிகாரம் பெறுவது பற்றி முதல் குரல் கொடுக்கும் வி.பி.சிங், இந்த மொத்த நிகழ்வு பற்றியும், மர்மமான மவுனம் காத்தார். ரன்வீர் சேனா பாஜகவின் முன்னணி அமைப்பு என்றபோதும், பலியானவர்களில் கணிசமானவர்கள் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றபோதும், உடனடி பிரச்சினை என்பது  கப்ரிஸ்தான் மற்றும் கர்பாலா நிலங்களை மீட்பதுதான் என்றபோதும், இந்தப் படுகொலைக்கு வலுவான மதவாத சாயல் இருந்தபோதும், முஸ்லீம்களின் தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் எவரும் படுகொலை நடந்த இடத்தைப் பார்வையிட வேண்டும் என்பதில் அக்கறை காட்டவில்லை.
கம்யூனிஸ்ட் உள்துறை அமைச்சரான இந்திரஜித் குப்தா, விமானத்தில் சம்பவ இடத்திற்கு பறந்து வந்து, நிலச் சீர்திருத்தங்கள் இல்லாததே பிரச்சினையின் வேர் என்று மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிற வாசகங்களை கிளிப்பிள்ளை போல் சொல்லி, உள்துறை அமைச்சராக தன்னால் எதுவும் செய்ய முடியாது என்றார். முதலமைச்சரும், உயர்காவல்துறை அதிகாரியும் கேட்டுக் கொண்டபடி பீகார் காவல்துறையை நவீனமயமாக்கவும், துணை இராணுவப்படை துருப்புகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், மத்தியநிதி தரப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு டெல்லிக்கு திரும்பப் பறந்துபோனார். போலீஸ்படைக்கு ஆயுதங்கள் இல்லாமல் போனதுதான், காவல்துறை செயலின்மைக்குக் காரணம் என்றால் அது வியப்புக்குரியது! பீகாரில் தீவிரவாதம் வளர்வதற்கான காரணங்களை ஆராய ஓய்வு பெற்ற உயர்காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட படை(டாஸ்க் ஃபோர்ஸ்) அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். மாவட்ட நிர்வாகம் தனது கடமையில் இருந்து தவறிய குற்றமயப் புறக்கணிப்புக்காக மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக ஒரு சொல் கூட சொல்லப்படவில்லை; எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; பொதுமைப்படுத்துவது என்ற  திரைக்குப் பின்னால், இது போன்ற கொடிய சம்பவங்களை விசாரிக்க, நீதி விசாரணைக்கு உத்தரவிடும் பழைய நடைமுறை கூட கைவிடப்பட்டது.
நிலச் சீர்திருத்தம் இல்லாததுதான் பிரச்சனையின் வேர் என்று குப்தா குறிப்பிட்டது, பிரச்சனையின் நாடி நரம்பைத் தொட்டுவிட்டதாக தாராளவாத ஊடகங்களால், பெருமிதமாக சொல்லப்பட்டது. ஆயினும், சற்று நெருங்கிப் பார்த்தால், அந்த ஸ்தூலமான பின்னணியில், அந்தக் குறிப்பான நேரத்தில், வெளியான அறிவிப்புகளில் இந்த அறிவிப்பு பெரும் நகைப்புக்குரியது என்பது புலப்படும். நக்சலிசத்தின் வளர்ச்சிக்கு, நிலச் சீர்திருத்தம் இல்லாததே காரணம் என்று  தலையங்கங்களும், சமூக பகுப்பாய்வுகளும் சுட்டிக்காட்டுவதை நாம் அடிக்கடி படிக்கிறோம். அதேபோன்ற கவலை யினால் மூழ்கடிக்கபட்ட குப்தாவும், வழமையான செய்முறையை முன்வைத்திருக்கிறார். அவருடைய தவறான கல்வியாளருக்குரிய சாகசத்தில், பதானி தோலா, வளர்ந்து வரும் நிலப்பிரபுத்துவ பதில்வினை என்ற தலைகீழ் சம்பவம் என்பதை கிரகித்துக் கொள்ளத் தவறிவிட்டார்.
பொதுவாக போஜ்பூரிலும், குறிப்பாக பதானி தோலா அருகிலுள்ள பார்கி காரோன் என்ற முக்கிய கிராமத்திலும் அந்த மக்கள், தங்கள் அமைப்பாக்கப்பட்ட பலத்தையும் வளர்ந்துவரும் அரசியல் வலிமையையும் சார்ந்து நின்று கூலி மற்றும் நிலம் தொடர்பான சீர்திருத்தங்களை ஏற்கனவே வென்றுவிட்டார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் பீகாரில் பாஜகவின் வளர்ச்சியால் துணிச்சல் பெற்றிருக்கும் நிலப் பிரபுத்துவ தாக்குதல் இந்த ஆதாயங்களைப் பறிக்கும், சவர்ணா மேலாதிக்க வெறியை மீண்டும் நிலை நாட்டும் நோக்கம் கொண்டவை. தற்செயலான விசயம் என்னவென்றால், ரன்வீர், அந்த காலத்தில் ராஜபுத் மேலாதிக்கத்துக்கு எதிராக போராடிய பூமிகார் இன நாயகன். எனவே, ராஜபுத்கள் பொதுவாக ரன்வீர் சேனாவுடன் சேருவதை விரும்ப மாட்டார்கள். பார்கி கரோனில் இப்போது நடக்கிற போராட்டம் சவர்ணா நிலப்பிரபுக்களால் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்ட கப்ரிஸ்டான் மற்றும் கர்பாலா நிலங்கள் பற்றியது என்பதால், வசதியான மதவெறி காரணத்தை பயன்படுத்தி, பாஜக சக்திகள் இரு சாதியினருக்கிடையே ஒற்றுமையை உருவாக்கின. 1978ல் ஊராட்சித் தலைவர் தேர்தலில் யூனஸ் மியான் என்பவர் கேஷோ சிங்கை தோற்கடித்ததிலும், அதைத் தொடர்ந்து இமாம்பராவை இடித்து தரை மட்டமாக்கியதிலும் இந்த முரண்பாட்டுக்கான தோற்றக் கூறு இருக்கிறது.
பதானி தோலா வெளிப்படையான வர்க்கப் போராட்டத்தின் வகை மாதிரி உதாரணம்; வேர்க்கால் மட்டத்தில் அது வெடித்திருந்தாலும் மேல் மட்டத்தில் நடக்கிற அரசியல் போராட்ட அளவுஎல்லைகளால் அது வரையறுக்கப்படுகிறது; அது, சமகால இந்திய சமூகத்தின் இரண்டு பெரிய சமூக வகையினங்களான சாதி மற்றும் மத துவேஷங்கள் வர்க்கப் போராட்டம் என்னும் வரையறைக்குள் ஒன்று கலந்திருக்கும் வகை மாதிரி உதாரணம். ஒட்டுமொத்த போஜ்பூர் மாவட்டத்தையும் பற்றிக் கொண்டிருக்கும், பீகாரின் பிற பகுதிகளிலும் வேகமாக பரவி வரும் இந்த வர்க்கப் போராட்டத்தில், புரட்சிகர இடதுசாரிகளும், அதிதீவிர வலதுசாரியின் மதவெறி பாசிச சக்திகளும்   போர்க் களத்தில் நேருக்கு நேர் மோதி நிற்பது தற்செயலான விபத்து அல்ல. வெளிப்படையான வர்க்கப் போராட்டம்  வெடித்தவுடன், மய்யவாத மற்றும் சமூக ஜனநாயக சக்திகள் ஆற்றல் இழந்து, ஆட்கொல்லி சக்திகளுக்கு ஆதரவாக மட்டுமே முடியும் வகையில், நடுநிலை வகிப்பதும் தற்செயல் நிகழ்வு அல்ல.
சாதி மற்றும் மதவெறி பாகுபாடு பிரச்சனைகளை தன்னுள் அடக்கிய இந்த வர்க்கப் போராட்டம், அதே நேரம், தலைகீழான முன்னுரிமை கொண்ட பின்நவீனத்துவ நிகழ்ச்சிநிரலின் மறுதலிப்பாகவும்  இருக்கிறது.
ஊடகங்கள் மூடி மறைப்பதையும், தலித் மற்றும் சிறுபான்மையினர் அதிகாரம் பற்றி பேசுபவர்கள் அமைதி காப்பதையும் இந்தப் பின்புலத்தில் பார்க்க வேண்டும்.
25 ஆண்டுகால போஜ்பூர் வரலாறு வழிகாட்டியாக இருக்குமென்றால், போராட்டம் ஒருபோதும் பாதியில் நிற்காது. 25 ஆண்டுக்கு முந்தைய நிலையை ஒப்பிடும்போது, கிராமப்புற வறியவர்கள் சமூக, பொருளாதார ஆதாயங்கள் பலவற்றைப் வென்றெடுத்திருக்கிறார்கள்; அரசியல்ரீதியாக குறிப்பிடத்தக்க அளவு முன்னேறி இருக்கிறார்கள். எந்த பதானி தோலாவும் அவர்களை சரணடையச் செய்யாது; அவர்கள் பெற்ற ஆதாயங்களின் சிறு அளவைக் கூட சரணடைய வைக்க முடியாது. எனவே நிலப்பிரபுத்துவத்தின் கடைசி மிச்சசொச்சத்தை இறுதியாக மண்ணோடு மண்ணாக வீழ்த்தும் வரை போர் நடக்கும்; தொடரும்.

வென்றெடுத்தாக வேண்டிய போராட்டம்

வினோத் மிஸ்ரா

ஜனவரி 1998, லிபரேசன் இதழில் வெளியான கட்டுரையில் இருந்து

கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக, பீகாரின் வரலாறு படுகொலைகளால் நிறைந்ததாக இருக்கிறது. பல்வேறு நிலப்பிரபுக்களின் படைகளால் தலித் சாதியைச் சேர்ந்த கிராமப்புற வறியவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். வளர்ந்து கொண்டே இருக்கிற கிராமப்புற வறியவர் எழுச்சியை முறியடிக்கும், சாதிய - வர்க்க முன்னுரிமைகளை தக்கவைத்துக் கொள்ளும் வெறித்தனமான முயற்சியில், நிலப்பிரபுக்கள் மற்றும் குலக்குகளின் புதிய வர்க்கங்கள், மக்களை அச்சுறுத்த இந்த பயங்கரவாத செயல்தந்திரத்தை அடிக்கடி கையிலெடுக்கின்றன. ஆயினும், ஜெகனாபாதின் லக்ஷ்மண்பூர் பாதேயில் டிசம்பர் 1 அன்று இரவு நடந்த படுகொலை வேறுவிதமானது. அது, இந்தியா விடுதலை பெற்ற இந்த 50ஆவது ஆண்டில், தேசத்தின் மனசாட்சியை உலுக்கியது.
அந்த இரவின் நிசப்தத்தில், ஒரு கொலை வெறி நடவடிக்கையில் 61 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். அவர்களில் மூன்றில் இரண்டு பகுதி குழந்தைகள், பெண்கள், முதியோர்கள். படுகொலை செய்யப்பட்ட அனைவருமே விவசாயத் தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்; சமூகப் படிநிலையில் தலித்துகள். சமூக - பொருளாதார விடுதலைக்கான அவர்கள் போராட்டத்தில், இககமாலெயின் புரட்சிகரப் பதாகையை அவர்கள் கையில் எடுத்துக் கொண்டார்கள்.
கொலைகாரர்கள் ரன்வீர் சேனாவைச் சேர்ந்தவர் கள். அது மேல்சாதி நிலப்பிரபுக்களின் படை. அதற்கு பாஜகவின் அரசியல் பின்புலமும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் ஒரு பிரிவினரின் ஆதரவும் இருக்கிறது.
இந்த முறை, போஜ்பூர், பாட்னா மற்றும் அவுரங் காபாத் மாவட்டங்களுக்கு அருகில் உள்ள, ஜெகனாபாதில் உள்ள ஒரு கிராமம் அவர்கள் இலக்காக தேர்ந் தெடுக்கப்பட்டது. மத்திய பீகார் முழுவதும் அவர்கள் செய்தியைச் சொல்வது என்பது சாரமான நோக்கமாக இருந்தது. படுகொலைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நேரமும் முக்கியத்துவம் வாய்ந்தது. மத்தியில் அரசியல் நெருக்கடி முற்றி, ஒரு காபந்து அரசாங்கம் இருந்த நேரம் அது. பூமிகார் மற்றும் ராஜ்புத் என்ற இரண்டு மேல்சாதிகளின் அணிதிரட்டலை நிகழ்த்துவதன் மூலம், அப்பட்டமான பிற்போக்கு சக்திகளின் அரசியல் தாக்குதலின் துவக்கத்தையும் அது குறித்தது......
எண்ணிக்கை மட்டுமின்றி, மிருகத்தனமான தாக்குதல், கோழைத்தனம் என்ற பொருளிலும் ஒரு பதிவு உருவாக்கப்பட்டது. அக்கம்பக்கமாக, கபட வேடத்துக்கு பெயர்போன ஊடகங்களில், குறிப்பாக பீகாரில், ஒரு பதிவு உருவாக்கப்பட்டது. முதல் நாளில் இருந்தே, சங் பரிவாரத்தின் பிரச்சார பொறியமைவு செயலில் இறங்கியது. ஊடகங்கள் அதன் ராகத்தையே  இசைக்கத் துவங்கின. பாட்னாவைச் சேர்ந்த ஒரு முக்கியமான பத்திரிகையாளர், ரன்வீர் சேனாவுக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையில் நடக்கும் மோதல் என்ற அதே பழைய கதைதான்; ஒரே ஒரு வித்தியாசம், இந்த முறை நக்சலைட்டுகள் நிராயுதபாணியாக இருந்தனர் என்பதுதான் என்று ஒரு நாளிதழில் எழுதினார். பெண்களும் குழந்தைகளும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது எவ்வளவு புத்திசாலித்தனமாக ஒரு வழமையான மோதல் என்று நியாயப்படுத்தப்படுகிறது! அதே பத்திரிகையாளர், அதற்குப் பிறகு தனது பல கட்டுரைகளில், கண்மூடித்தனமான நக்சலைட் வன்முறைக்கு எதிரான விவசாயிகள் வேதனையின் வெளிப்பாடே ரன்வீர் சேனா என்று ரன்வீர் சேனாவை நியாயப்படுத்த முயற்சி செய்தார். ஒரு சில விதிவிலக்குகள் தவிர, இந்த வகைமாதிரி அணுகுமுறை ஒட்டுமொத்த மேல்சாதி பத்திரிகையாளர்களின் அணுகுமுறையாக இருந்தது. நக்சலைட்கள் பழிவாங்கும் நீண்ட பட்டியலில் உள்ளதாகச் சொல்லப்படும் மேல்சாதி கிராமங்கள் நாளிதழ்களில் கொட்டை எழுத்துக்களில் வெளியிடப்பட்டன; ஜெகனாபாதுக்குள் மக்கள் யுத்தக் குழுவினர் நுழையும் கதைகள் புனையப்பட்டன. லக்ஷ்மண்பூர் பாதே படுகொலையை ஒட்டி துவங்கிய செய்தி ஆய்வுகள், எப்போதும், பொதுவாக சட்டம் ஒழுங்கு சீர்குலைவது, இணை அரசாங்கங்கள் நடத்தும் துணிச்சல் கொண்ட, காவல்துறையினரைக் கூட தாக்குதலுக்கு உள்ளாக்குகிற நக்சலைட் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைக் கோருவது என்பனவற்றில் நிறைவுற்றன. எதிர்ப்புப் போராட்டங்கள் பற்றிய செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டன; ஆனால் பாஜக தலைவர்களின் உண்ணாவிரதமும் வாஜ்பாய் வருகையும் ஊதிப்பெருக்கிக் காட்டப்பட்டன. இவை அனைத்தும் ரன்வீர் சேனா மீது இருந்து, ரன்வீர் சேனா பாஜகவுடன் கொண்டுள்ள உயிரார்ந்த பிணைப்புக்களில் இருந்து மக்கள் கவனத்தைத் திசைத் திருப்பவும், பாதிக்கப்பட்டவர்கள் மீதே அரசு நடவடிக்கைகளைத் திருப்ப அரசுக்கு நிர்ப்பந்தம் தரவும் நடத்தப்பட்ட நன்கு திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளே.
.....ஆயினும், ஒட்டுமொத்த கூலிப் படைகளின் பொறியமைவு என்பது கிராமப்புற வறியவர்களின் விடுதலை நோக்கிய பயணத்தில் இறுதிச் சொல்லாக இருக்காது. போராட்டம் வெகுவேகமாக வளர்கிறது; ஆகப்பெரிய பரிமாணங்களை அடைகிறது.
....கிராமப்புற வறியவர் மத்தியில் இந்தப் படுகொலை கடுமையான வர்க்கப் பகைமையை உருவாக்கியுள்ளது; அவர்கள் ஒன்றுபடுவதற்கான தீர்மானத்தை உறுதிப்படுத்தியுள்ளது; தாக்குதலே சிறந்த தற்காப்பு என்ற அதிகரித்து வருகிற புரிதலுக்கு இட்டுச் சென்றுள்ளது.
......ரன்வீர் சேனா உருவானதில் இருந்து, இனி மேலும், மத்திய பீகாரின் ஏதோ ஒரு பகுதி என்று வர்க்கப் போராட்டம் சுருங்கி நிற்காது. அது மொத்த மத்திய பீகாரையும் பற்றிக் கொண்டுள்ளது. ஒரு பரந்த வர்க்க ஒற்றுமையை, ரத்தத்தால் இணைக்கப்பட்ட ஒற்றுமையை அடைவதற்கான நிலைமைகளையும் அது உருவாக்கியுள்ளது; நமது கட்சியை ஒழித்துக் கட்டும் சாணக்கிய திட்டமாக, தனது முந்தைய அவதாரத்தில், ரன்வீர் சேனாவின் வளர்ச்சியை ஊக்குவித்த, சமூக நீதியின் பொய் கடவுளான லல்லு யாதவையும் இந்த வர்க்கப் போராட்டம் பொருத்தமற்றதாக்கி விட்டது. அது உண்மையில் அவர் முதுகில் ஏறிய வேதாளமாக மாறி, பாஜகவின் அதிகரித்து வருகிற அரசியல் தாக்குதல் என்ற மாறிவருகிற அரசியல் சூழலில், அவருடைய சமூக அடித்தளத்தையே அச்சுறுத்துகிறது.
.......தேசிய அவமானத்தை நிகழ்த்திய ரன்வீர் சேனா என்கிற சவால், எதிர்கொள்ளப்பட வேண்டும். பீகாரின் ஸ்தூலமான நிலைமைகளில், புரட்சிகர விவசாய இயக்கத்தின் நலன்கள் மற்றும் காவிப் படையின் தாக்குதலை தடுத்து நிறுத்தும் தேசியக் கடமை ஆகிய இரண்டும், ரன்வீர் சேனாவை ஒழித்துக்கட்டும் ஒரே கடமையாக, ஒன்றுகலந்து உள்ளன.
கிராமப்புற பாட்டாளி வர்க்கம், தனது சமூக - பொருளாதார விடுதலைக்காகவும் அரசியல் சுதந்திரத்துக்காகவும் ரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறது. தங்கள் வர்க்க சகோதரர்களின் படுகொலைக்கு பழிவாங்க, மக்களை அமைப்பாக்குவது நமது கடமை; அதற்காக, குறிப்பாக ஊடகங்கள் நமக்கு எதிராக இருக்கும்போது, நாம் பரந்ததோர் அம்பலப்படுத்து தல் இயக்கத்தை நடத்த வேண்டியுள்ளது; அனைத்து குறுங்குழுவாத அணுகுமுறைகளையும் விட்டுத்தள்ளி, அனைத்து ஆக்கபூர்வமான சமூகப் பிரிவினரையும் அரசியல் சக்திகளையும் ஒன்றிணைக்க வேண்டியுள்ளது; இந்த கொலைகாரப் படையை, கோழைகளின் படையை நொறுக்கித் தள்ளும்படி தாக்குதல் தொடுக்க நமது தயாரிப்புக்களை ஓர் உயர்ந்த மட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது; இந்தப் போராட்டம் வெற்றி பெறும். வெற்றி பெற்றாக வேண்டும். இது, மானுட முன்னேற்றத்தின், ஜனநாயகத்தின், உண்மையான தேசியவாதத்தின் அறைகூவல். இது நவீன காலங்களின் அறைகூவல்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்

மக்கள் நிலைமைகளும்
ஆட்சியாளர் நினைப்புக்களும்

“நாங்கள் ஒரு நாளைக்கு 1500 பீடிகள் சாதாரணமாகச் சுத்துவோம். பீடி சுற்றுவதில் கூலி கட்டுப்படியாவதில்லை. நாங்கள் இப்போ குளத்து வேலைக்கு வாறோம்” என்று ஒரே குரலில் சொன்னார்கள் மனோகரியும் சாந்தியும். இவர்கள் இருவரும் திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாறாந்தை பஞ்சாயத்தில் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் குளத்தை ஆழப்படுத்தும் வேலைக்குச் செல்கிறார்கள். இருவருமே அரு கில் உள்ள கரும்புளியூத்து என்ற கிராமத்தில் இருந்து 1 மணி நேரம் நடந்தே வந்து இந்த வேலையைச் செய்கிறார்கள். “பீடியை வீட்டில் உட்கார்ந்து கொண்டு சுற்றுவோம். குளத்து வேலையை இந்த வேகாத வெயிலில்தான் செய்ய வேண்டியதிருக்கு. ஆனா இங்கு 100 ரூபாய் கிடைக்கிறதே. பீடி சுத்துனா 85 ரூபாய் கிடைக்கிறதே பெரிய விசயம். அதான் வெயில பார்க்காம இந்த வேலைக்கு வாறோம்” எனச் சொல்கிறார்கள். இதேயேதான் தங்கமும் லெட்சுமியும் கூறினார்கள்.
மாறாந்தை குளத்தில் வேலை செய்து கொண்டிருந்த 250 பேர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இவர்களைப் போன்ற பெண்கள்தான். மற்றவர்கள் இவர்களுக்கு நேர் எதிர். பீடி சுற்றத் தெரியாதவர்கள். விவசாயக் கூலி வேலைக்குச் சென்று கொண்டிருந்தவர்கள். “விவசாயத்தில் இப்போது வேலை இல்லை. அப்படியே வேலைக்குச் சென்றாலும் இதே 100 ரூபாய்தான் கிடைக் கிறது. களை பறிக்க, நாற்று நட எல்லாவற்றிற் கும் 100 ரூபாய்தான் கொடுக்கிறாங்க வயல் அறுப்பு ஆரம்பித்துவிட்டால் வைக்கோல் கட்டுவதற்குச் சென்றுவிடுவோம். ரூ 150. கூலி கிடைக்கும்” என்கிறார்கள் 55 வயது சண்முகத் தாயும் சுந்தரியும். வைக்கோல் கட்டுவதற்கு உள்ளூர் பெண்கள் என்றால் 130 ரூபாய்தான். அதேவேளை வைக்கோல் கட்டும் ஆண்களுக்கு ரூபாய் 250 கொடுக்கிறார்கள். சுந்தரியின் மகன் கண்ணன். இளைஞர். 8ஆம் வகுப்பு வரைதான் படித்துள்ளார். இவரும் குளத்து வேலைக்கு வருகிறார்.
தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ஒரு குடும்பத்திற்குத்தான் ஆண்டிற்கு 100 நாட்கள் வேலை. ஆண்டிற்கு இத் திட்டத்தின் மூலம் 100 நாட்களும் வேலை கிடைத்தால், ஒரு குடும்பத்திற்கு வரும் மொத்த வருமானமே ரூ.10,000தான். அரசு மாற்றியமைத்துள்ள சட்டக்கூலி ரூ.132 தரப்பட்டாலும் ஆண்டுக்கு ரூ.13,200தான் கிடைக்கும்.
பீடியில் வருமானம் குறைவாக உள்ளதால் பீடி சுற்றும்  பெண்கள் நூறு நாள் வேலைக்கு வர ஆரம்பித்துவிட்டார்கள். இந்த வேலை, விவசாய காலம் ஆரம்பித்துவிட்டால் இருக்காது. மறுபடியும் பீடி சுத்தப் போகும்போது பீடி காண்ட்ராக்ட்காரர்கள் கடையை மூடி விட்டு போய் விடுகிறார்கள். அல்லது “நீங்க குளத்துலேலே போய் வேலை பாருங்க” என்று சொல்லி அப்பெண்களுக்கு வேலை தர மறுக்கிறார்கள் எனச் சொல்கிறார் 65 வயது ராமையா. முன்பு இந்த வேலையில் 75, 80 ரூபாய்தான் கொடுப்பார்கள், இப்போது 100 கொடுக்கிறார்கள், அம்பாசமுத்திரம் தாலுகாவில் 119 வரை கொடுக்கிறார்கள், அதனால் இந்த வேலைக்கு வருகிறார்கள் என்றார்.
காலை ஒன்பது மணிக்கு ஒவ்வொருவராக வர ஆரம்பித்தவர்கள் எல்லாரும் வந்து சேரும் வரை வெயிலிலேயே காத்துக் கிடக்கிறார்கள். மற்றவர்கள் வரும் வரை நிழலில் உட்காரலாமே என்றதற்கு, காலையிலேயே நிழலில் உட்கார்ந்தால் வேலை ஆகாது. எவ்வளவு வெயில் அடித்தாலும் நிழலுக்குச் செல்ல மாட்டோம் என்கிறார்கள்.
திட்டத்தில் சட்டக் கூலி கிடைப்பதில்லை என்பதுதான் விதி. நிர்ணயிக்கப்பட்ட அளவு முழுவேலை நடந்தால்தான் முழுச்சம்பளம். தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் எளிய உழைப்பில் ஊதியம் கிடைப்பதாக வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. உழைப்பு எப்போதும் எளிதாக இருப்பதில்லை என்பது உழைப்பில் ஈடுபடாதவர்களுக்கு எப்போதும் தெரியப் போவதில்லை. ஆலைகளில் டைம் ஸ்டடி நடத்துவதுண்டு. டைம் ஸ்டடி ஊரக வேலைத் திட்டத்தில் நடந்ததாக தகவல் ஏதும் இல்லை.
வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை நடக்கும் இடத்திற்கு தொலைவில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு போக வர பேருந்துக் கட்டணம் ரூபாய் 10 வழங்கப்படுகிறது. இது இன்றைய பேருந்துக் கட்டணத்தில் ஒரு முறைக்குக் கூட பற்றவில்லை. பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்கிறார்கள் தொழிலாளர்கள். ஆனால், அரசு இந்தக் கட்டணத்தைக் கூட 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு மட்டும்தான் என்றும் 4 தீ கிலோ மீட்டர் என்றாலும் இல்லை என்கிறது. வேலை அட்டை எண்ணிக்கையை குறைக்க ரகசிய வாய்மொழி உத்தரவு போடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
வேலை உறுதித்திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மாநிலத்தில் உள்ள குறைந்த பட்சக் கூலிச் சட்டத்தின்படி கூலி வழங்கப்பட வேண்டும் என்று கர்நாடகா உயர்நீதிமன்றம் 2011 செப்டம்பர் 23ல் மத்திய அரசிற்கு உத்தரவு பிறப்பித்தது. அதை எதிர்த்து 2012 ஜனவரி 2ல் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் மூலம் வேலை என்பது சமூகப் பாதுகாப்பிற்கான கூடு தல் (நன்ல்ல்ப்ங்ம்ங்ய்ற்) வேலை வாய்ப்புக்குத்தானே தவிர (ஹப்ற்ங்ழ்ய்ஹற்ண்ஸ்ங் ங்ம்ல்ப்ர்ஹ்ம்ங்ய்ற்) மாற்று வேலை வாய்ப்புக்கானது இல்லை என்று வாதிட்டது. விவசாய வேலைகளுக்கு குறைந்தபட்ச கூலி சட்டத்தின்படி கூலி வழங்குவதுபோல் தேசிய வேலை உறுதித் திட்டத்திலும் வழங்கப்பட வேண்டும் என்று சொல்வது ஆப்பிளையும் ஆரஞ்சையும் பொருத்திப் பார்ப்பதற்கு ஒப்பாகும் என்றும் அது அநீதியான சூழ்நிலைக்கும் நிச்சயமற்றதன்மைக்கும் இட்டுக் செல்லும் என்றும் வாதிட்டது. மட்டுமின்றி கர்நாடகா உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடைவிதிக்கக் கோரியது. ஆனால், உச்சநீதி மன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும் வேலை உறுதித் திட்டத்தில் குறைந்தபட்சக் கூலிச் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு ஆலோசிக்க பரிந்துரைத்தது. ஆரம்பத்தில் கர்நாடகா உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டாம் எனக் கூறிய மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பின்னர் மன்மோகன் பேச்சுக்கு அடிபணிந்தார்.
வேலை செய்வது அடிப்படை உரிமை, மிகக் கொடூரமான சுரண்டலில் சிக்கித் தவிக்கும் கிராமப்புற அடித்தட்டு ஏழை மக்களுக்கு குறைந்தபட்சம் 100 நாட்களாவது ஒரு நிதியாண்டில் வேலை வழங்கப்பட வேண்டும் என்கிற அடிப்படையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. அதில் பல்வேறு மட்டங்களில் ஊழல்கள் மலிந்து கிடக்கிறது என்பதும் வெளிப்படை. இது பற்றி சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் நடந்த தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் 6ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் மன்மோகன் சிங்கும் சோனியாவும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள். அதே கூட்டத்தில், குறைந்தபட்சக் கூலிச் சட்டத்தை இத்திட்டத்தில் அமல்படுத்தினால் அரசு பெரும் நிதி நெருக்கடிக்குள்ளாகும் என்றார். மன்மோகன், மான்டெக், பிரணாப் ஆகியோரின் தடைகளைக் கடந்து ஒருவழியாக திட்டத்துக்கு ஓரளவுக்கு கூலி உயர்ந்துள்ளது.
நாட்டில் 80 கோடிக்கும் மேற்பட்டவர்கள் நாளொன்றுக்கு 20 ரூபாய்க்குக் கூட வழியில்லாமல் இருக்கிறார்கள் என்று சொல்லும் அரசாங்கம் 2011-2012 நிதியாண்டில் தேசிய அளவில் 4.08 கோடி குடும்பங்களுக்கு மட்டுமே வேலை அளித்துள்ளது. 137.39 மனித நாட்கள் (இதில் 22.5% தாழ்த்தப்பட்டோர், 17.73% மலைவாழ் மக்கள், 49.02% பெண்கள், 59.77% மற்றவர்கள்) மட்டுமே வேலை அளிக்கப்பட்டுள்ளது. 64.26 லட்சம் வேலை கள் எடுக்கப்பட்டு 7.07 லட்சம் வேலைகள் முடிக்கப்பட்டுள்ளது என்று அரசின் புள்ளி விபரம் கூறுகிறது. இதே நிதியாண்டில் தமிழ்நாட்டில் 50.51 லட்சம் குடும்பங்களுக்கு 1820.44 மனித நாட்கள் வேலையளிக்கப்பட்டுள்ளது. எடுக்கப்பட்டுள்ள வேலைகள் 64.26 லட்சம். நடந்து கொண்டிருக்கும் வேலைகள் 57.19 லட்சம். தமிழ்நாட்டில் 75.44 சதவீதம் பெண்கள் இந்த வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
வேலை உறுதித் திட்டத்தால் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்ற கூப்பாடு அதிகரிக்கிற நேரத்தில், விவசாய நெருக்கடியில் சிக்கித் தவிக்கிற சிறுகுறு ஏழை நடுத்தர விவசாயிகளுக்கு நேசக்கரம் நீட்டவும்  விவசாயத் தொழிலாளர்கள் கூலி மட்டத்தை உயர்த்தவும் உதவும், இத்திட்டத்தை விவசாய வேலைக்கும் விரிவுபடுத்த வேண்டும் என அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
கிராமப்புறத் தொழிலாளர்கள் வேலை தேடி வேறு இடங்களுக்குச் சென்றுவிடுவதால் ஆள் பற்றாக்குறையை சமாளிக்கவே எந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாகவும்  சொல்லப்படுகிறது. எந்திரங்கள் பயன்பாடு வேலையின்மையை மேலும் அதிகரித்து நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துமே தவிர நெருக்கடியை ஒரு நாளும் முடிவுக்கு கொண்டு வராது.
2012 பிப்ரவரி 22ல் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், திட்டக் கமிஷன் உறுப்பினர் மிகிர் ஷா இருவரும் திருத்தப்பட்ட தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதன்படி சிறு மற்றும் விளிம்பு நிலை விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் 1 ஏக்கருக்கு நாற்று நட 8 மனித நாட்களுக்கும்களை பறிக்க இடை வெளிவிட்டு 4 மனித நாட்களுக்கும் தொழி லாளர்களை அமர்த்திக் கொள்ள முடியும் என்றும், தகுதியுள்ள விவசாயிகள் சார்பாக தொழிலாளர்களுக்கு அரசே இத்திட்டத்தின் மூலம் கூலி வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இப்புதிய திட்டம் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்தப் பின்னணியில் தமிழக சட்டமன்றத் தில் ஊரக வளர்ச்சித் துறை கோரிக்கை மான்யங்கள் மீதான விவாதத்தில் பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, ஊரக வேலை உறுதித்திட்ட அமலாக்கம் 2011 - 2012ல் தமிழ்நாட்டில் சிறப்பானதாக இருந்ததால், அதாவது 33 கோடி மனித நாட்கள் வேலை வழங்கப்பட்டதால் இந்த ஆண்டுக்கு 37 கோடியே 90 லட்சம் என கூடுதல் வேலை நாட்கள் உருவாக்க மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும், 33 கோடி வேலை நாட்கள் உருவாக்க ஆன செலவு ரூ.3000 கோடி என்றும் இப்போது வேலை நாட்களும் அதிகரித்து கூலியும் ரூ.132 என உயர்ந்துள்ளதால் ஊரக வேலை உறுதித்திட்டத்துக்கு ரூ.5000 கோடி ஒதுக்க மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் அனுமதித்துள்ளதாகவும் சட்டமன்றத்தில் பெருமையுடன் தெரிவித்தார்.
இந்த ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கை யில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்துக்கு ரூ.33,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக வும் அதில் தமிழ்நாட்டின் பங்கு ரூ.5000 கோடி என்றும் இந்த ரூ.5000 கோடி பற்றி வேறொரு விவரமும் வெளியாகியுள்ளது. (மத்திய நிதி நிலை அறிக்கையில் வேலை உறுதித் திட்டத்துக்கு சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு ஒதுக்கீடு ரூ.7000 கோடி குறைந்திருப்பது அய்முகூ அரசாங்கத்தின் அனைவரையும் உள்ளடக்கும் நடைமுறைக்கு மற்றுமொரு சான்று.)
தமிழக நிதிநிலை அறிக்கையில் நலத் திட்டங்களுக்கு சென்ற ஆண்டை விட 40% கூடுதல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, இதுவரை இல்லாத அளவு ரூ.30,000 கோடிக்கும் மேல் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக, விவசாயத்துக்கான ஒதுக்கீடு இதுவரை இல்லாத அளவு ரூ.3,804.96 கோடி என்றும் சொல்லப்படுகிறது. நிதிநிலை அறிக்கையில் விவசாயம் மற்றும் கூட்டுறவு என்ற தலைப்பிலோ, ஊரக வளர்ச்சி என்ற தலைப்பிலோ, வேறெந்த தலைப்புகளிலுமோ தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் என்ற ஒரு சொல்லே இடம் பெறவில்லை. அப்படியிருக்கும் போது, மாண்புமிகு முதலமைச்சர் அம்மா எப்படி ரூ.5000 கோடி ஒதுக்க அனுமதித்திருப்பார்? (இது அதே வாழைப் பழம்தான்).
அட்டவணை சாதியினர், பழங்குடியினர், சிறுகுறு விவசாயிகள், இந்திரா ஆவாஸ் யோஜனா பயனாளிகள், வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ள குடும்பங்கள், நிலச்சீர்த்திருத்தத்தின் கீழ் வருகிற குடும்பங்கள் ஆகியோரின் நிலங்களில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள் செய்யப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சொல்லும் இந்த வகை யினங்களைச் சேர்ந்தவர்களிடம் என்ன பெரிய நிலம் இருந்துவிடும்? அமைச்சர் சொல்கிற நில மேம்பாடு, நீர் சேகரிப்பு போன்ற வேலைகள் உண்மையில் யார் நிலத்தில் நடக்கும் என்பது நெருக்கமான மக்கள் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது.
கட்டுமான, அமைப்புசாரா தொழிலாளர் போராட்டங்களால் கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர் வாரியங்களை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் கருணாநிதிக்கு உருவானது. வாரியப் பயன்கள், வாக்குகளாக மாறும் என்ற கணக்கும் போட்டார். ஆனால் வாரியங்களைப் பயன்படுத்தி அந்தத் தொழிலாளர்களை ஒரு வர்க்கமாக திரட்டும் வாய்ப்பு உருவானது. விவசாய நெருக்கடியின் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகியிருக்கும் சிறுகுறு ஏழை நடுத்தர விவசாயிகளை, கிராமப்புற தொழிலாளர்களை கிராமப்புறங்களில் முக்கூட்டுக்கு எதிராக ஒன்றுபடுத்த, ஊராட்சி மட்டத்தில் சக்திகளின் சமநிலையில் மாற்றம் கொண்டுவர இந்த நடவடிக்கை உதவுமானால் அதை பயன்படுத்திக் கொள்ள, விவசாய சமூகத்தை முன்செலுத்த வேண்டிய கடமை நம்முன் உள்ளது.

‘ஒரு வேலை நாள்’

இன்னுமொரு மே தினம் வந்துவிட்டது. அன்று எட்டு மணி நேர வேலை கேட்டுப் போராடினார்கள். வென்றார்கள். இன்று 21ஆம் நூற்றாண்டில் 19ஆம் நூற்றாண்டு வேலை நிலைமைகள் திரும்புகின்றன. ‘ஒரு வேலை நாள்’ பற்றிய மார்க்ஸ் மேற்கோள் இன்று இங்கு பொருத்தமானது

ஒரு சாதாரணமான வேலைநாள் என்பது, முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையிலான நூற்றாண்டுகள் போராட்டத்தின் விளைவாகவே நிறுவப்பட்டது. இந்தப் போராட்டத்தின் வரலாறு இரண்டு எதிரெதிர் போக்குகளைக் காட்டுகிறது. உதாரணத்துக்கு, நம் காலத்து இங்கிலாந்து தொழிற்சாலைச் சட்டங்களையும், 14ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலான இங்கிலாந்து தொழிலாளர் சட்டங்களையும் ஒப்பிடுவோம். நவீன தொழிற்சாலை சட்டங்கள் வேலை நாளைக் கட்டாயமாகக் குறைத்தன. ஆனால் முந்தைய சட்டங்கள் வேலை நாளை நிர்ப்பந்தத்தால் நீட்டப் பார்த்தன. கருநிலையில் உள்ள மூலதனம் வளரத் துவங்கும்போது, பொருளாதார உறவுகளின் நிர்ப்பந்தம் மூலம் மட்டுமல்லாமல், அரசின் உதவியோடும் உபரி உழைப்பை போதுமான அளவுக்கு உறிஞ்சிக் கொள்ளும் உரிமையை பெற்றுவிடுகிறது. எனவே வளர்ந்துவிட்ட நிலையில், உறுமலோடும், முரண்டு பிடித்துக் கொண்டும் அது தந்தாக வேண்டிய சலுகைகள் முன் பார்க்கும்போது கருநிலையில் உள்ள மூலதனத்தின் பாசாங்குகள் மிதமானவையாகவேத் தெரிகின்றன.
முதலாளித்துவ உற்பத்தியின் வளர்ச்சியால் ‘சுதந்திரத்’ தொழிலாளி சமூக நிலைமைகளால் நிர்ப்பந்திக்கப்பட்டு, தனது மொத்த செயலூக்கமான வாழ்க்கையை, தனது வேலை செய்வதற்கான ஆற்றலையே, வாழ்வின் தேவைகளுக்கான விலைக்காக, தன் பிறப்புரிமையான ஒரு பானை கஞ்சிக்காக விற்குமாறு ஒப்புக்கொள்ள வைக்க, சில நூற்றாண்டுகள் ஆயின.
ஆகவே, 14ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து, 17ஆம் நூற்றாண்டின் இறுதி வரை, மூலதனம், வயது வந்த தொழிலாளர்கள் மீது அரசு நடவடிக்கைகள் மூலம் வேலை நாள் நீட்டிக்கப்படுவதைத் திணிக்க முயன்ற நடவடிக்கைகள், இயல்பாக, 19ஆம் நூற்றாண்டின்  இரண்டாவது பாதியில் குழந்தைகளின் ரத்தத்தை மூலதனமாக மாற்றுவதைத் தடுக்க, அங்குமிங்குமாக அரசு அமலாக்கப் பார்த்த வேலை நாளைக் குறைப்பதோடு பொருந்திப் போகின்றன.
உதாரணமாய், வடஅமெரிக்கக் குடியரசில் மிகச்சமீபக் காலம் வரை ஆகச்சிறந்த சுதந்திரம் நிலவும் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் இன்று, 12 வயதுக்குக் கீழான குழந்தைகளுக்கான வேலை நேரத்திற்கான சட்டபூர்வ எல்லை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இது, இங்கிலாந்தில், 17ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே, உடல்வலு கொண்ட கைவினைஞர்கள், வலுவான தொழிலாளர்கள், உடல்வளையும் கருமான்கள் ஆகியோருடைய சாதாரணமான வேலை நாளாக இருந்துள்ளது.
முதல் ‘தொழிலாளர் சட்டம்’ (23 எட்வர்டு ஐஐஐ., 1349) அதற்கான உடனடி சாக்கை, மக்களை கொன்றொழித்த மாபெரும் பிளேக் கொள்ளை நோயில் கண்டது.  (அதன் காரணத்தைக் கண்டறியவில்லை. ஏனெனில் இதுபோன்ற சாக்கு மறைந்து நூற்றாண்டுகள் கழிந்த பிறகும் இத்தகைய சட்டங்கள் தொடர்கின்றன). இதனால்தான் ஒரு டோரி எழுத்தாளர் சொல்கிறார்:  ‘மனிதர்களை நியாயமான நிபந்தனைகளுக்கு (அதாவது ஒரு போதுமான அளவுக்கு உபரி உழைப்பை வேலை அளிப்பவர்களுக்கு விட்டு வைக்கிற ஒரு விலையில்) வேலை செய்ய வைப்பதில் இருக்கிற சிரமம் பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு வளர்ந்துவிட்டது’. ஆகவே நியாயமான கூலி சட்டத்தாலும் வேலை நாளுக்கான எல்லைகளாலும் நிர்ணயிக்கப்படுகிறது.
இங்கு நமக்கு ஆர்வம் தருகிற ஒரே விஷயமான வேலை நாளின் எல்லை, 1496 (ஹென்றி 7) சட்டத்தில் மீண்டும் சொல்லப்பட்டது. இந்தச் சட்டப்படி (ஆனால், இது அமலாக்கப்படவில்லை) மார்ச் முதல் செப்டம்பர் வரை எல்லா கைவினைஞர்களுக்கும் களத் தொழிலாளர்களுக்கும், வேலை நேரம் காலை 5 மணியில் இருந்து மாலை 7, 8 மணி வரை. ஆனால் உணவு நேரம், காலை சிற்றுண்டிக்கு 1 மணி நேரம், ‘மதிய உணவுக்கு’ 1/2 மணி நேரம், இரவு உணவுக்கு 1 1/2 மணி நேரம் என இருந்தது. இப்போதுள்ள தொழிலாளர் சட்டங்களில் உள்ளதைப் போல் மிகச்சரியாக இரண்டு மடங்கு இருந்தது. குளிர் காலத்தில் இதே இடைவேளைகளோடு, வேலை காலை 5 மணி முதல் இருட்டும் வரை இருந்துள்ளது. 1562, எலிசபெத் சட்டம், ‘நாள் கூலிக்கு அல்லது வாரக் கூலிக்கு’ அமர்த்தப்பட்ட எல்லா தொழிலாளர்களின் வேலை நாளின் நீளத்தைத் தொடவில்லை. ஆனால் இடைவேளைகளை கோடைகாலத்தில் 2 1/2 மணி நேரம், குளிர்காலத்தில் 2 மணி நேரம் எனச் சுருக்க முயன்றது. இரவு உணவு 1 மணி நேரம், ‘அரை மணி நேர மதிய உறக்கம்’, மே நடுப்பகுதியில் இருந்து ஆகஸ்ட் நடுப்பகுதி வரை மட்டுமே இருக்கும். ஒரு மணி நேரம் வராவிட்டால், கூலியில் இருந்து ஒரு தொகை (1 க்) பிடிக்கப்படும். ஆயினும் சட்டத்தில் இருப்பதை விட நடைமுறையில் நிலைமைகள் தொழிலாளர்களுக்குக் கூடுதல் சாதகமாய் இருந்தன. அரசியல் பொருளாதாரத்தின் தந்தையும் புள்ளியியல் நிறுவனருமான வில்லியம் பெட்டி, 17ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் பிரசுரிக்கப்பட்ட தம் படைப்பில் சொல்கிறார்.
‘உழைக்கும் தொழிலாளர்கள் (அதாவது களப்பணியாளர்கள்) ஒரு வாரத்தில் 20 சாப்பாடுகள் பெற்றுக் கொள்ள, ஒரு நாளில் 10 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். அதாவது ஒரு வேலை நாளுக்கு 3 சாப்பாடுகள், ஞாயிறுகளில் 2 சாப்பாடுகள்; வெள்ளிக் கிழமை இரவுகளில் பட்டினி கிடந்து, 11ல் இருந்து 1 மணி வரை என்ற இரண்டு மணி நேரங்களுக்குப் பதிலாக 1 1/2 மணி நேரத்தில் சாப்பிட்டு, அதனால், 20ல் 1 பங்கு கூடுதல் வேலை செய்து 20ல் 1 பங்கு குறைவாகச் செலவழிப்பதன் மூலம், மேற்கூறியதை (வரியை) செலுத்தலாம் என்பது தெளிவு’.
மார்க்ஸ், மூலதனம், தொகுப்பு 1, அத்தியாயம் 10, வேலை நாள், பிரிவு 5,
‘ஒரு சாதாரண வேலை நாளுக்கான போராட்டம்’

ஏப்ரல் 22 அறைகூவலும் கிளைக்கூட்டங்களும்

சென்னை: ஏப்ரல் 17 அன்று  மாநகரக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஏப்ரல் 22 அன்று மாநகர கமிட்டி உறுப்பினர்கள் கிளைகளை கூட்ட வேண்டும், கிளைகள் சுதந்திரமாக இயங்கிடும் வரை பொறுப்பெடுத்து இயக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. கிளைகளை கூட்ட அனைத்து தோழர்களும் இயங்கினார்கள். திரும்பத் திரும்ப முயன்றதால் 33 கிளைகளில் 22 அன்று 18 குடியிருப்பு பகுதி கிளைகள் கூடின. 180 கட்சி உறுப்பினர்கள் கூட்டங்களில் கலந்து கொண்டார்கள்.
25, 26, 28 தேதிகளில் சாய்மீரா கிளையும், டிஅய்டிசி ஆலை கிளைகள் மூன்றும் கூடின. இவற்றில் 66 தோழர்கள் கலந்துகொன்டனர். ஆக, இதுவரை 22 கிளைகள் கூட்டப்பட்டு 246 உறுப்பினர்கள் பங்கெடுத்துள்ளனர்.  29 அன்று திருமுல்லைவாயில் 7ஆவது வார்டு பகுதி கிளைகள் கூட்ட உள்ளனர். 30 அன்று ஒரு டிஅய்டிசி கிளை கூடும். இன்னும் 9 கிளைகளை கூட்ட வேண்டும். இரண்டாவது கட்டமாக, மே தினத்துக்குப் பின், மே 10க்குள் மீண்டும் கிளைகள் கூடி ஜøலை 28 தயாரிப்புகள், மக்கள் கோரிக்கை இயக்கம், போராட்டம் என திட்டமிட உள்ளன. ஜøலை 28 அன்று 8 இடங்களில் 2000 பேர் வரை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
விழுப்புரம்: 17 கிளைகளில் 12 கிளைகள் கூட்டப்பட்டன. மாவட்ட கமிட்டி உறுப்பினர்கள் 4 பேர் தவிர மற்றவர் அனைவரும் இயங்கினர். கிளைக் கூட்டங்களில் பங்கேற்று நடத்தினார்கள். கட்சி உறுப்பினர்கள் 173 பேர் கலந்து கொண்டனர். அன்றே 12 கிளைகளில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. மற்ற 5 கிளைகள் 23.04.2012 அன்று கூட்டப்பட்டன.   
நாமக்கல்: 21 கிளைகளில் 8 கிளைகள் கூட்டப் பட்டன. மாவட்ட கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் இயங்கினர். கிளை கூட்டங்களில் பங்கேற்றனர். கட்சி உறுப்பினர்கள் 80 பேர் கலந்து கொண்டனர். அன்றே 5 கிளைகளில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. மற்ற கிளைகள் 23.04.2012 அன்று கூட்டப்பட்டன. கட்சியில் புதியதாக 10 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். 7 கிளைகள் 30க்குள் கூட்டப்பட வேண்டும்.
கோவை: 18 கிளைகளில் 12 கிளைகள் கூட்டப்பட்டன மாவட்ட கமிட்டி உறுப்பினர்கள், கிளை கூட்டங்களில் பங்கேற்று நடத்தினார்கள். கட்சி உறுப்பினர்கள் 75 பேர் கலந்து கொண்டனர். கூட்டங்களில் ஏப்ரல் 22 அழைப்பு வாசிக்கப்பட்டது மே தின நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டன.
சேலம்: 15 கிளைகளில் 8 கிளைகள் கூட்டப்பட் டன. கட்சி உறுப்பினர்கள் 62 பேர் கலந்து கொண்டனர். 10 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். 22 அன்று 5 கிளைகளில் கட்சி கொடி ஏற்றப்பட்டது.  மற்ற  கிளை ள் கூட்ட மாவட்ட கமிட்டி விவாதிக்கிறது.
நாகை - தஞ்சை: 18 கிளைகளில் 13 கிளைகள் கூட்டப்பட்டன. கட்சி உறுப்பினர்கள் 103 பேர் கலந்து கொண்டனர். அன்றே 3 கிளைகளில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. மற்ற கிளைகள் கூட்டுவதற்கு மாவட்ட கமிட்டியில் விவாதிக்கப்பட்டுள்ளது.
குமரி: 36 கிளைகளில் 18 கிளைகள் கூட்டப் ட்டன. கட்சி உறுப்பினர்கள் 220 பேர் கலந்து கொண்டனர். கூட்டங்களில் ஏப்ரல் 22 அழைப்பு வாசிக்கப் ட்டது. மேதின நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டன
திருவள்ளூர்: 16 கிளைகளில் 9 கிளைகள் கூட்டப்பட்டன. கட்சி உறுப்பினர்கள் 92 பேர் கலந்து கொண்டனர். மற்ற கிளைகள் கூட்ட திட்டமிடப்பட்டுள்ளது.     
நெல்லை: 25 கிளைகளில் 11 கிளைகள் கூட்டப்பட்டன. கட்சி உறுப்பினர்கள் 110 பேர் கலந்து கொண்டனர். நுகர் பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர் போராட்டத்திற்கு பின் மற்ற கிளைகள் கூட்டப்படும். 

ஏப்ரல் 22 அறைகூவல்

ஊழல் மற்றும் பெருநிறுவனத் தாக்குதலுக்கு எதிரான
போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்!
கட்சியின் ஒன்பதாவது காங்கிரசுக்கான
அனைத்தும்தழுவிய தயாரிப்புக்களைத் துவக்குவோம்!

சமீப காலங்களில்உலகம் முழுவதும் வெகுமக்கள் போராட்டங்களில் எழுச்சியைக் காண முடிகிறது. இந்தியா நிச்சயம் இதற்கு விதிவிலக்கல்ல. மெகாஊழல்கள், நிலப்பறி, சுரங்கக் கொள்ளை, இறுமாப்பு பிடித்த, எதேச்சதிகார ஆட்சிமுறை ஆகியவற்றுக்கு எதிரான சக்திவாய்ந்த போராட்டங்களால் நாடு தொடர்ந்து துடிப்புடன் இருக்கிறது. ஊழல் மலிந்த அய்முகூ அரசாங்கம் பல பிரச்சனைகளில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. சிறுவர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு, ரயில் கட்டண உயர்வு, பயங்கரவாதத்தை எதிர்கொள்வது என்ற பெயரில் உளவுத் துறைக்கு மிகப்பரந்த அதிகாரம் தருவது போன்ற பிரச்சனைகளில் அரசாங்கம் தனது முடிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நேர்ந்தது; அல்லது திரும்பப் பெற நேர்ந்தது. சாரமான கொள்கை மாற்றங்கள், இந்தியப் பொருளாதாரம் மற்றும் அரசியல் மீது அதிகரித்து வரும் பெருநிறுவனத் தாக்குதலை பின்னுக்குத் தள்ளுவது ஆகியவற்றுக்காக, அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது சக்திவாய்ந்த தாக்குதல் தொடுக்க, சூழல் நமக்கு அழைப்பு விடுக்கிறது.
அதேநேரம், கட்டமைப்பின் உயர்அடுக்குகளுக்குள் வெடிக்கிற அம்பலப்படுத்தல்கள் எழுகிறபோது, ஊழல் பட்டியல் நீளமாகிக் கொண்டே செல்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்குவதில், தேசத்தின் கருவூலத்துக்கு ரூ.11 லட்சம் கோடி அளவுக்கு மதிப்பிடப்படுகிற இழப்பு ஏற்பட்டதை அம்பலப்படுத்திய மத்திய தணிக்கை அதிகாரி அறிக்கையை, ஒரு முதன்மை நாளிதழ் வெளியிட்டது. 2010ல் வெளிச்சத்துக்கு வந்த 2 ஜி ஊழலை விட இது 6 மடங்கு கூடுதல். நாட்டின் மதிப்புமிக்க செல்வாதாரங்கள் மீது பொது மக்கள் கட்டுப்பாடு நிறுவப்படுவதன் அவசியத்தை இது மீண்டும் முன்கொண்டு வந்துள்ளது.
அதிர்ச்சிதருகிற அடுத்தடுத்த அறிக்கைகளில், ராணுவத்துக்கான கொள்முதல்களில் நடக்கிற ஆகப்பெரிய ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக ராணுவ தளபதியே குரல் எழுப்பியுள்ளார். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை ராணுவ செலவினங்களுக்கென கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் கோடி என்ற மிகப்பெரிய தொகையை ஒதுக்கியுள்ளது. அடுத்தடுத்த நிதிநிலை அறிக்கைகளில் ராணுவத்துக்கான செலவுகள்தான் ஒரே பெரிய நிதி ஒதுக்கீடாக உள்ளது. தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் எப்போதும் நியாயப்படுத்தப்படும் இந்த மிகப் பெரிய செலவினம், ராணுவ வியாபாரிகள், ராணுவ உயர் அதிகாரிகள், மற்ற உயரதிகாரிகள் மற்றும் ஆளுகிற அரசியல்வாதிகள் ஆகியோரின் ஊழல் கூட்டால் நடத்தப்படும் அளவற்ற கொள்ளையின் ஆதாரமாக மாறியுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. ராணுவ செலவினம் மீதான கறாரான கண்காணிப்பு மற்றும் முழுமையான பொறுப்பேற்பு ஆகியவற்றை கட்டாயமாக்குவது உடனடி அவசியம். இது, ராணுவ தளவாடங்கள் இறக்குமதியை குறைப்பது, மேம்படுத்தப்பட்ட உள்நாட்டு ராணுவ உற்பத்தியின் மீது கூடுதல் அழுத்தம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட வேண்டும்.
அரசியல் ஊழலின் அதிர்ச்சியூட்டுகிற மூன்றாவது நிகழ்வு ஜார்க்கண்டில் மீண்டும் நிகழ்ந்துள்ளது. தேர்தல் ஆணையம் மாநிலங்களவைத் தேர்தலை ரத்து செய்ய நேர்ந்தது; வெவ்வேறு அரசியல் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் விலைக்கு வாங்கப்பட்ட குதிரை பேரம் தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதுவரை இதுபோல் நடந்ததில்லை. எப்போதும் போல, ஜார்க்கண்ட் சட்டமன்றத்தின், மாலெ கட்சியின் ஒரே சட்டமன்ற உறுப்பினர், மிகவும் கண்ணியத்துக்குரிய, தொடர்ச்சியான விதிவிலக்காகவும், இந்த இருண்ட அரசியலுக்கு எதிரான துணிச்சலான குரலாகவும் இருந்துள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம், மாநிலங்களவையை மாநிலங்களின் கவுன்சிலாக, கூட்டாட்சி தன்மையுடன் லோக்சபாவை அல்லது மக்களின் அவையை, நிறைவு செய்யும் ஓர் உறுப்பாகக் காண்கிறது. பொய்யான இருப்பிடங்கள் அடிப்படையில், மாநிலங்களில் உள்ள தலைவர்களுக்கான பின்கதவு நுழைவாயிலாக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் மாநிலங்களவையை பயன்படுத்துவதால் மாநிலங்களவையின் கூட்டாட்சித் தன்மை முதலில் சீர்குலைக்கப்பட்டது. இப்படித்தான், குஜராத்தில் இருந்து பிரணாப் முகர்ஜி மாநிலங்களவைக்குள் நுழைந்தது போல, மன்மோகன் சிங் அசாமில் இருந்து மாநிலங்களவைக்குள் நுழைந்தார். இந்த முறை சட்டபூர்வமாக்கப்பட்டதால், பெருநிறுவன பணமூட்டைகளுக்கு இப்போது மாநிலங்களவை எளிதில் சென்று சேரும் இடமாகிவிட்டது. மாநிலங்களவைத் தேர்தல் முறைகேடு, முன்வைக்கப்பட்டுள்ள லோக்பால்/லோக்ஆயுக்தா சட்ட வரம்புகளுக்குள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை, பெருநிறுவன பிரதிநிதிகள் கூட்டாட்சி கோட்பாட்டை சீர்குலைத்து மாநிலங்களவைக்குள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க மாநிலங்களவையின் உண்மையான இயல்பு மீட்கப்பட வேண்டும் என்பதை, தெளிவாகக் காட்டுகிறது.
ஊழலுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, இந்த அதிகரித்து வருகிற பெருநிறுவனத் தாக்குதலுக்குப் பதிலடி தர வேண்டும். இங்குதான் கம்யூனிஸ்ட் இயக்கம் முன்கை எடுத்து நாட்டில் உள்ள அனைத்து தேசப்பற்றுள்ள, ஜனநாயக சக்திகளுக்கு வழிகாட்ட வேண்டும். 43ஆவது கட்சி நிறுவன நாளில் இந்த சவால்மிக்க கடமைக்கு நாம் நம்மை முழுமனதுடன் அர்ப்பணித்துக் கொள்வோம்.
சமீபத்திய அய்ந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் ஆளும் வர்க்கங்களின் இரண்டு பெரிய கட்சிகள்பால் மக்கள் பொறுமையிழந்து விட்டார்கள் என்பதை தெளிவாகக் காட்டியுள்ளன. தேர்தல்களில் ஆகப்பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த மாநில அரசாங்கங்கள் மீதும் வெகுமக்கள் அதிருப்தி அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. மேற்கு வங்கமும் பீகாரும் இரண்டு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுக்கள். கேடுகெட்ட பாஜக பல ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் குஜராத் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் இப்போது, சரிவுக்கான தெட்டத்தெளிவான அறிகுறிகள் காணப்படுகின்றன; பாஜக முகாமுக்குள் சிதைவுக்கான கூறு கூட காணப்படுகிறது.
காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத சக்திகள் எழுவதற்கு சூழல் சாதகமாக இருப்பதாகத் தெரிகிறது. அய்முகூவும் தேஜமுவும் அந்த வெப்பத்தை உணர்கின்றன. ஆனால் மூன்றாவது அணிக்கான எந்தச் சிறிய அறிகுறியும் இன்னும் தென்படவில்லை; இடதுசாரி இயக்கத்தின் சக்திவாய்ந்த புத்தெழுச்சி இல்லாமல், நாட்டின் செல்வாதாரங்கள் மீது, நாட்டு மக்களின் வாழ்வுரிமைகள் மீது தாக்குதல் தொடுக்கிற இருபதாண்டுகால நவதாராளவாதக் கொள்கைகளின் ஆட்சிக்கு சவால் விடுக்கக்கூடிய, மூன்றாவது அணி வர முடியாது.
2012ன் முதல் நான்கு மாதங்களில் நான்கு முக்கிய மாநிலங்களில் நாம் கட்சி மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். இப்போது இருந்து இன்னும் ஓராண்டுக்குள் நமது ஒன்பதாவது காங்கிரசை நடத்தவுள்ளோம். நமது அமைப்பை விரிவாக்க, வெகுமக்கள் போராட்டங்கள், வர்க்கப் போராட்டங்கள் மற்றும் கருத்தியல் - அரசியல் தலையீடு என்ற விஷயங்களில் சக்திவாய்ந்த முன்முயற்சிகளைக் கட்டவிழ்த்துவிட, வருகிற மாதங்களில் ஒவ்வோர் அரங்கிலும் நாம் கடுமையான பணியாற்ற வேண்டியிருக்கும். மொத்த இடதுசாரி முகாமும் ஒரு தீவிரமான கடைசலின் ஊடே சென்று கொண்டிருக்கிறது. நமது வெற்றிகரமான ஒன்பதாவது காங்கிரஸ், புரட்சிகர இடதுசாரிகளின் சக்திவாய்ந்த புத்தெழுச்சியை உருவாக்குவது என்ற நமது போற்றப்படுகிற இலக்கை நோக்கி நம்மை முன்கொண்டு செல்லும். நமது அனைத்து பலத்தையும் ஒன்றுசேர்த்து நம்முன் உள்ளே கடமைகளை நிறைவேற்ற சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் நாம் எடுக்க வேண்டும்.
மத்திய கமிட்டி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை

கட்சி கட்டுதல்: அய்ந்து முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது

காம்ரேட்

கட்சி கட்டுதல் பகுதி 2

சூழலில் உள்ளார்ந்த விதத்தில் பொதிந்திருக்கும் அதிகரித்த தேவைகள் மற்றும் வாய்ப்புக்களுக்கும் நமது அமைப்பின் போதுமானதல்லாத, மெதுவான வளர்ச்சிக்கும் இடையிலான முரண்பாடு
நமது வெகுமக்கள் அடித்தளத்திலும் வெகுமக்கள் நடவடிக்கைகளிலும் விரிவாக்கம் எதிர் தொழிலாளர், மாணவர் இளைஞர் பெண்கள் அதீத குறை பிரதிநிதித்துவம் மற்றும் அறிவாளிப் பிரிவினர்  இதர நடுத்தரப் பிரிவினருடன் மிகவும் சுருங்கிய கட்சிப் பிணைப்புக்கள்  என்பவற்றோடு கூடிய கட்சி உறுப்பினர் எண்ணிக்கையில் தேக்கம் என்ற முரண்பாடு
பர்த்வான் ஊழியர் கருத்தரங்கம், உறுப்பி னர் சேர்ப்பு என்ற தலைப்பில், சேர்ப்பது, தகுதிகாண் பருவநிலை, லெவி மற்றும் புதுப்பித்தல் என்ற துணைத் தலைப்புக்களை பரிசீலித்தது.
ஒரு சுருக்கமான பின்னணி
கட்சியில், முறையான உறுப்பினர் முறை, 1979 முதல்தான் துவங்கப்பட்டது. துவக்கத்தில் முழுநேர ஊழியர்கள் மட்டுமே உறுப்பினர்களாகக் கருதப்பட்டனர். படிப்படியாக வெகுமக்கள் நடவடிக்கைகள் விரிவடையத் துவங்கியதும், குறிப்பாக, இந்திய மக்கள் முன்னணி பரந்த அடிப்படையில் விரிவடையத் துவங்கிய பிறகு, செயல்வீரர்களுக்கும் கட்சி உறுப்பினர் அந்தஸ்து தரத் துவங்கினோம். 1987ல் நான்காவது அகில இந்திய காங்கிரஸ் நடக்கும்போது, நமது உறுப்பினர் எண்ணிக்கை 4000த்தைக் கூட எட்டவில்லை. 1992ல் அய்ந்தாவது காங்கிரசில் முழுமையாக வெளிப்படை கட்சியாக செயல்பட முடிவெடுத்தோம். அப்போது 22,000 என்ற உறுப்பினர் எண்ணிக்கையை எட்டியிருந்தோம். 1993ல் இந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்க காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. ஆனால், 28 - 29 ஜ÷லை 1995ல் திபு அமைப்பு மாநாடு நடந்தபோது, 29,000 என்ற உறுப்பினர் எண்ணிக்கை யைத்தான் எட்டியிருந்தோம். 1997ல் ஆறாவது காங்கிரஸ் நடக்கும்போது உறுப்பினர் எண்ணிக்கை 52,000 ஆனது. 2002ல் ஏழாவது காங்கிரசில் உறுப்பினர் எண்ணிக்கை 73,985 ஆனது. ஆனால் பர்த்வான் ஊழியர் கருத்தரங்கம், 2006 செப்டம்பர் 12, 13 தேதிகளில் நடந்தபோது, உறுப்பினர் எண்ணிக்கை 63,514 ஆனது. 2007, டிசம்பர் 10 - 18 தேதிகளில் எட்டாவது காங்கிரஸ் நடந்தபோது உறுப்பினர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியது.
20 லட்சத்துக்கும் மேற்பட்ட வெகுமக்கள் உறுப்பினர்கள் இருந்தபோது, 1 லட்சம் கட்சி உறுப்பினர்கள் கொண்டிருந்தோம். கட்சியின் ஒன்பதாவது காங்கிரசை 2013 ஏப்ரலில் நடத்தவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் கட்சியின் ஒன்பதாவது மாநில மாநாடு, 3 லட்சம் வெகு மக்கள் அமைப்பு உறுப்பினர்கள், 4,651 கட்சி உறுப்பினர்களுடன் நடந்து முடிந்துள்ளது.
பார்த்த மாத்திரத்தில் இரண்டு விசயங்கள் புலப்படுகின்றன.
1. பொதுவாக, தமிழ்நாட்டில் மக்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் என்ற பின்னணியில் கட்சி அமைப்பின் வளர்ச்சி போதுமான தல்ல. மிகவும் மெதுவானது.
2. குறிப்பாக, நமது சொந்த வெகுமக்கள் உறுப்பினர் எண்ணிக்கை வளர்ச்சிக்கேற்ப, நாம் கட்சி அமைப்பை போதுமான அளவுக்கு வளர்க்கவில்லை.
கட்சி உணர்வு அரித்துப் போதல் என்ற நோயின் அறிகுறிகளே, மெதுவான வளர்ச்சி, சமச்சீரற்ற வளர்ச்சி, நிலையற்ற வளர்ச்சி என ஏற்கனவே பார்த்தோம். கட்சி கட்டுதல் என்பதை எப்படி வலுப்படுத்த வேண்டும், அமைப்பு தொடர்பான அரசியல், கருத்தியல் வலுப்படுத்துதல் எப்படிச் செய்வது என்பதை அடுத்த இதழ்களில் பார்ப்போம்.
இப்போது, நாம் எப்படி உறுப்பினர் சேர்க்கிறோம், தகுதிகாண் பருவநிலையில் எப்படி அணுகுகிறோம், லெவி எப்படி வசூல் செய்கிறோம், எப்படி புதுப்பிக்கிறோம் என்பனவற்றைப் பார்ப்பது நல்லது.
அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில தோழர்கள் சொல்வது கேட்கிறது. - கம்யூனிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியாக இருக்க, அதன் தரம் காப்பாற்றப்பட வேண்டும். யார் யாரையோ எப்படி எப்படியோ சேர்த்து, தரம் நீர்த்துப் போகிறது. கட்சி, அளவுக்கு தருகிற அழுத்தத்தை, பண்புக்குத் தருவதில்லை. கச்சிதமான அமைப்பு இல்லாமல் அல்லது இருக்கிற அமைப்பை ஒழுங்குபடுத்தாமல், மேலும் மேலும் உறுப்பினர் சேர்ப்பதில் என்ன பயன்? - இந்த வாதங்கள் அகநிலைவாதத்தில் இருந்து எழுகின்றன. கணிசமான வெகுமக்கள் நடவடிக்கைகள் மேற்கொண்ட, அரசியல் தலையீடுகள் நிகழ்த்திய இந்த மூன்று ஆண்டுகளில் நாம் கூடுதல் கட்சி உறுப்பினர்களைச் சேர்க்கவில்லை என்பதுதான் உண்மை.
• தமிழ்நாட்டில் நமது வெகுமக்கள் உறுப்பினர் எண்ணிக்கை 50,000அய் தாண்டிய குமரியிலோ, நெருங்கும் சென்னை அல்லது நாமக்கல் மாவட்டங்களிலோ, 20,000, 25,000 என்ற அளவை எட்டிய புதுக்கோட்டை, நெல்லை மாவட்டங்களிலோ, எந்தவொரு மாவட்டத்திலும் நமது கட்சி உறுப்பினர் எண்ணிக்கை 1000த்தை எட்டவில்லை. குமரி, விழுப்புரம், கோவை மாவட்டங்களில் புதிய உறுப்பினர் சேர்ப்பால், சென்ற மாநாட்டை விட இந்த மாநாட்டில் கட்சி உறுப்பினர் எண்ணிக்கையில் சிறியதோர் உயர்வைக் கொண்டு வந்துள்ளோம்.
• உறுதிப்படுத்துதலுக்கும் விரிவாக்கத்துக்கும் இடையிலான இயங்கியல் உறவைப் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது கட்சி உறுப்பினர் சேர்ப்பில் உள்ள தேக்கத்தைத் தகர்ப்பதுதான் நமது வேலையே தவிர, அந்தத் தேக்கத்தை உறுதிப்படுத்துவது நமது வேலையல்ல. துணிச்சலான விரிவாக்கத்துடன் கூடிய உறுதிப்படுத்துதலே நம்முன் உள்ள தேவையாகும்.
• இருக்கிற நிலைமைகளை கச்சிதமாக மாற்றுவதுதான் நமது வேலையே தவிர, கச்சிதமான நிலைமைகளுக்காக ஏங்குவதில் பயனில்லை.
• கட்சி உறுப்பினர் சேர்ப்பில், இயலவில்லை என்பதை விட முயலவில்லை என் பதே, சரியான காரணமாக இருக்க முடியும்.
செயல்வீரர் குழுக்கள் மூலம் உறுப்பினர் சேர்ப்பு, தகுதிகாண் பருவ நிலையில் உள்ள உறுப்பினர்களைப் பேணி வளர்ப்பது என்ற இரண்டு விசயங்களிலும் அக்கறையின்மையும் தன்னெழுச்சிக்குத் தலை வணங்குவதும் தொடர்கின்றன. சேர்ப்பு, புதுப்பித்தல் ஆகியவற்றில் உள்ள பிரச்சனைகள், செயல்படும் கட்சிக் கிளைகளும் கீழ்மட்ட கட்சிக் கட்டமைப்புக்களும் இல்லை என்ற பிரச்சனையால் தீவிரமடைகிறது. உள்ளூர் கமிட்டியின் தொடர்பு எல்லைக்குள் உறுப்பினர்களை வருடம் முழுவதும் வைத்திருப்பது நடக்க வில்லை. லெவி வசூல், புதுப்பித்தல் ஆகியவற்றுக்கு இவையே பெரும் தடைகள்.
நமது வார்டு மட்ட குடியிருப்புப் பகுதி தொழிற்சங்க அமைப்போ, அல்லது ஊராட்சி மட்ட அவிதொச அமைப்போ, கிளர்ச்சி, போராட்டம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறைவு. வெகுமக்கள் அமைப்பு வேலைக்கும் கட்சி அமைப்பு வேலைக்கும் எல்லைக் கோடு என்பதே மங்கி வருகிறது என்பதும் முக்கிய பிரச்சனையாகும்.
கட்சி வேலையும் வெகுமக்கள் வேலையும் ஒன்றுக்கொன்று வலுச்சேர்க்க வேண்டும். ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்தப்படக் கூடாது. அதேநேரம், சுதந்திரமான கட்சி அமைப்பின் செயல்பாடு, அதன் தனித்த வேலைகள் என்பனவற்றில் நம் தோழர்கள் மத்தியில் நிலவுகின்ற தெளிவின்மையும் பிரச்சனையைத் தீவரப்படுத்துகிறது.
ஏப்ரல் 22 - ஜ÷லை 28 இயக்கத்தில் கீழ்மட்டக் கட்சி அமைப்புக்கள் சுதந்திரமாக இயங்குவதை உறுதிப்படுத்த முயற்சிப்போம். உள்ளூர்மட்ட ஆய்வு, படிப்பு, கிளர்ச்சிகள் கல்வி, அணிதிரட்டல் என்ற நமது பல்முனை நடவடிக்கைகள் மூலம் உறுப்பினர் சேர்ப்பு முறையை அனைத்து அம்சங்களிலும் வலுப் படுத்தப் பார்ப்போம். அனைத்தும் சேர்ந்து ஒரு நிலையான நீடிக்கிற வெகுமக்கள் அடித்தளம் பெறுவதை நோக்கி திட்டமிடப்பட வேண்டும்.
‘நமக்குத் தெரியாதவற்றை நாம் எப்போதும் கற்றுக்கொள்ள முடியும். நேற்று வரை நமக்கு ஏதும் தெரியாத விசயங்களை, இன்று நாம் கையாள்கிறோம். நாம் முயன்றால், நாம் பல புதிய விசயங்களையும் நாளை கற்றுத் தேற முடியும். மாற்றம் மற்றும் வளர்ச்சி என்ற இந்த விதி, நமது கட்சி வரலாற்றில் திரும்பத் திரும்ப மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை இறுகப் பற்றிக்கொண்டு பொருத்துவதன் மூலம், அமைப்பு வாழ்க்கையில் மிகவும் எதிர்நோக்கப்படும், தேவைப்படும் முன்னேற் றத்தைக் கொண்டு வருவோம். சூழலின் வளரும் தேவைகளைச் சந்திக்க கட்சியை ஆற்றலுள்ளதாக்குவோம்’. தோழர் திபங்கர் பர்த்வான் ஊழியர் கூட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசிய இந்த விசயத்தை நாம் நினைவில் வைப்போம்.
தமிழ்நாட்டில் சில தேர்ந்தெடுத்த மாவட்டங்களில் உறுப்பினர் எண்ணிக்கை 1000த்தைத் தாண்டுவது எனவும், மாவட்ட கமிட்டி இருக்கும் மாவட்டங்களில் உறுப்பினர் எண்ணிக்கை 500க்குக் குறையாது எனவும், ஒன்பதாவது காங்கிரஸ் நேரத்தில் கட்சி உறுப்பினர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கு வது எனவும் முயற்சிப்போம்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான கட்சி உறுப்பினர்கள் அமைப்புசாரா தொழிலாளர்களாகவும் விவசாயத் தொழிலாளர்களாகவும் உள்ளனர். டைமண்ட் செயின், பிரிக்கால், நுகர்பொருள் வாணிபக் கழகம் தவிர பிற அமைப்பாக்கப்பட்ட தனியார்/அரசுத்துறை/பொதுத்துறை ஊழியர் மத்தியில் நமது உறுப்பினர் சேர்ப்பு விரிவடையவில்லை. நமது தொழிலாளர் வர்க்க அரங்க பொறுப்பாளர்கள், இந்த விசயத்தில் கூடுதல் முயற்சிகள் எடுக்க வேண்டும். சில கவனம் குவிக்கப்பட்ட துறைகள், நிறுவனங்கள், தொழில்பேட்டைகள் ஆகியவற்றில் இருந்து உறுப்பினர் சேர்ப்பதன் மூலம் அமைப்பாக்கப்பட்ட துறை தொழிலாளர் உறுப்பினர் எண்ணிக்கையை ஒன்பதாவது காங்கிரசுக்குள் இரட்டிப்பாக்க வேண்டும்.
தொழிற்சங்க அரங்கில் உள்ள சிரமங்க ளும் தோல்விகளும், பல தொழிலாளர் வர்க்க தோழர்கள் மத்தியில், அரசியல், கருத்தியல் உணர்வு நமத்துப் போகச் செய்கிறது. தொழிலாளர் வர்க்கத் தோழர்கள் புதிய சூழலை ஒரு புரட்சிகர உணர்வோடு சந்திக்கவும், எழுகிற சாத்தியப்பாடுகளை அடையாளம் காணவும் பற்றிக் கொள்ளவும், தொழிற்சங்க அரங்கில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கட்சி நடைமுறையிலும் அவர்கள் தங்கள் பாத்திரத்தை மறுஉறுதி செய்யவும், கட்சி உதவியாக வேண்டும். கட்சிக்கும் தொழிலாளர் வர்க்க உறுப்பினர்களுக்கும், தொழிலாளர் வர்க்க உறுப்பினர்களுக்கும் கட்சிக்கும் இடையிலான உறவுகள் தொழிற்சங்கங்கள் மூலம் செயல்படுத்தப்படுபவை அல்ல. தொழிற்சங்கங்கள் பரந்த தொழிலாளர்களுக்கானவை. கம்யூனிஸ்ட் கட்சியாக அமைப்பாக்கப்பட்டிருக்கும் முன்னணிப் படைவரிசையின் உறுப்பினர்களாக தொழிலாளர் வர்க்க முன்னணிகள் இருப்பார்கள். - பர்த்வான் அறிக்கை.
பெண் தோழர்கள் முன்னேற்றத்தை முடக்கும், தடுக்கும் சமூக மற்றும் குடும்ப நிலைமைகளால் எழுகிற தடைகளை அவர்கள் வெற்றி கொள்ள, கட்சி கமிட்டிகள் உதவிட வேண்டும். கட்சியின் நிலைமைகளில் ஒட்டு மொத்த முன்னேற்றம் கொண்டு வர பெண்களின் கூடுதல் பங்களிப்பு முக்கியமான அம்சமாக இருக்கும். நமது மொத்த வெகுமக்கள் அடித்தளத்தின் எச்சரிக்கை உணர்வு மற்றும் செயலூக்க மட்டத்தின் மீது சக்திவாய்ந்த தாக்கம் செலுத்தும். - பர்த்வான் அறிக்கை.
தமிழ்நாட்டில் நமது பெரும்பாலான அணி திரட்டல்களில், வெகுமக்கள் உறுப்பினர் எண்ணிக்கையில், பெண்கள் எண்ணிக்கை கணிசமா னது. கட்சி வாழ்வில், அவர்களுக்கு உரிய இடம் இருப்பதில், பெண் உறுப்பினர்களைச் சேர்ப்பதில், அவர்கள் முன்னேற்றத்தில், கட்சி தன் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும்.
மாணவர், இளைஞர் மத்தியிலான நமது வேலைகள், அறிவாளிப் பிரிவினரோடு, பிற நடுத்தர பிரிவினரோடு நமது தொடர்புகள், அதிகரித்துள்ளன. வேகம் பெற்றுள்ளன.
மாணவர், இளைஞர்களை அலுவலகப் பணிகளிலோ, பொதுவான செயல்வீரர்களாகவோ நாம் சுருக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்தால், வயதில் இளையவர்களான அவர்கள் சீக்கிரம் முதுமை அடைந்து சோர்வு அடைவார்கள். வேலை செய்வதற்கான இயற்கையான உற்சாகத்தை இழப்பார்கள். கட்சி, மக்கள், புரட்சி ஆகியவற்றின் மீது மதிப்பு இழந்து, சீக்கிரமே எல்லாம் தெரிந்த விமர்சகர்களாகவும் வர்ணனையாளர்களாகவும் மாறிவிடுவார்கள். அவர்களுக்குக் குறிப்பான கடமைகள் தரப்பட வேண்டும். விடாமல், மாணவர் மற்றும் உழைக்கும் மக்கள் பெரும் திரளினர் மத்தியிலான பணிகளுக்கு அனுப்ப வேண்டும்.
கட்சிக்கு புதுரத்தம் பாய்ச்ச, மாணவர், இளைஞர் மற்றும் அறிவாளிப் பிரிவினர் மத்தியில் இருந்து பெரும் எண்ணிக்கையில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட வேண்டும். ஒன்பதாவது காங்கிரசுக்குள் மாணவர், இளைஞர் மத்தியிலான கட்சி உறுப்பினர் எண்ணிக்கையை 1000 என உயர்த்த வேண்டும். மாநில மற்றும் மாவட்ட மட்டங்களில் இதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.
செயலூக்கமான கிராமங்கள் எதிர் செயலூக்கமில்லாத கட்சிக் கிளைகள் மற்றும் அமைப்பாக்கப்படாத வேர்க்கால் மட்டக் கட்டமைப்பு என்ற முரண்பாடு.
உள்ளாட்சிகள், ஆளும் வர்க்கங்களின் அதிகாரப் பரவல் மய்யங்களாக எழுவதும், அதன் விளைவாக ஒரு புதிய வர்க்கப் போராட்ட அரங்காக எழுவது - கட்சி கமிட்டிகள், இந்தச் சவால்களுக்கு ஈடு கொடுக்கத் தயாராகாதது என்ற முரண்பாடு
கிராமங்களிலும் நகரங்களிலும் வேர்க்கால் மட்ட கட்சி அமைப்புக்களைப் பலப்ப டுத்துவது என்ற விசயத்தில் முக்கிய அம்சத்தை பர்த்வான் அறிக்கையின் பின்வரும் பகுதி புலப்படுத்தும்.
‘பெரும்பாலான நமது வேலைப் பகுதிக ளில் செயலூக்கத்துக்குப் பஞ்சமில்லை. ஆனால் இந்த செயலூக்கம் பருவகால அடிப்படையில் உள்ளது. எப்போதெல்லாம் திட்டமிட்ட இயக்கங்கள் மேற்கொள்ளப்படுகிறதோ, எப்போதெல்லாம்  சிறப்பாக அக்கறை செலுத்துகிறோமோ, எப்போதெல்லாம் தலைவர்களும் ஊழியர்களும் வெகுமக்கள் மத்தியில் தங்கியிருந்து அவர்களை ஊக்கப்படுத்தி அணி திரட்டுகிறோமோ, அப்போதெல்லாம் இந்த செயலூக்கம் உச்சத்தை அடைகிறது. இதை ஏன் நீடித்த அடிப்படையில் திரும்பத்திரும்பச் செய்ய முடியாது? பெரிய இயக்கங்களின் போது செய்வதுபோல் இல்லாவிட்டாலும், கிளைகள் இருக்கும் இடங்களில் முக்கியமான வெகுமக்கள் நடவடிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட கிளைகள் வழிகாட்டுவதாக ஆக்க முடியாது?
பிரச்சனை செயலூக்கம் இல்லை என்பதல்ல. மாறாக, பிரச்சனை, நமது  அழுத்தத்திலும் அணுகுமுறையிலும்தான் உள்ளது. மாவட்ட கமிட்டிகளும் பிளாக் கமிட்டிகளும் நமது வேலைப் பகுதிகளில் தங்கியிருந்து  முறையான தொடர்புகளை பராமரிக்க முடியுமானால், அதிகரித்த அளவில் நேரடியாக பொறுப்பேற்று, நமது சொந்த முடிவுகளின் அமலாக்கத்தைக் கண்காணிக்க முடியுமானால், கட்சிக் கிளைகள் மேலும் மேலும் செயலூக்கம் பெறும். தொடர்ந்து செயல்படும். நாம் பல ஊராட்சிகளைக் கவனிக்கிறோம் என்று கூறுகிறோம். ஆனால், ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள கட்சிக் கிளைகளை, உள்ளூர் கமிட்டிகளை செயல்பாட்டுக்குக் கொண்டு வர முடியாவிட்டால், பல ஊராட்சிகளை நேரடி யாகக் கவனிக்கிறோம் என்பதற்கு என்னதான் பொருள்?
நம்மால் பல வேலைகளை செய்ய முடிகி றது. அன்றாட அடிப்படையில் கட்சி அலுவலகங்களை நடத்தி வருகிறோம். மாதந்தோறும் வாரந்தோறும் கட்சி பத்திரிகைகள் கொண்டு வருகிறோம். பின் ஏன் கட்சிக் கிளைகளை, உள்ளூர் கமிட்டிகளைச் செயல்படுத்த முடியாது?’
ஏப்ரல் 22 - ஜ÷லை 28 இயக்கம் இந்தத் திசையிலான நமது பயணத்துக்கு நிச்சயம் உதவும். ஏப்ரல் 22 அன்றே தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகள் கூடியுள்ளதும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கூட்டங்களில் கலந்து கொண்டதும், இந்த விசயத்தில் ஏகப்பெரும்பான்மை மாநிலக்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் நேரடி கவனம் செலுத்தியதும் நல்ல துவக்கமே.
நமது ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தலைவர்கள் புறநிலைரீதியாக, பொதுமக்கள் பார்வையில் கட்சியின் தூதர்கள். அவர்களே உள்ளாட்சி அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். கடந்த முறை வெற்றி பெற்ற நமது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மீது, நமக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாமல் போனது. இந்த முறை இரண்டு ஊராட்சித் தலைவர்கள், டசன் கணக்கில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பெற்றுள்ளோம். துவக்கத்தில் இருந்தே நாம் இவர்கள் விசயத்தில் கவனம் செலுத்தாவிடில், கட்சி வழி மற்றும் கட்சியின் இயல்பு பற்றிய பொது மக்கள் நல்லெண்ணத்தில் சரிவு ஏற்படும்.
 கருத்தியல் அழுகல் எதிர்க்கப்பட வேண்டும்.
 மக்கள் கண்காணிப்பும் கட்சி கட்டுப்பாடும் உறுதி செய்யப்பட வேண்டும்.
அதற்காக,
இந்த நிறுவனங்களை போராட்ட மேடைகளாகப் பயன்படுத்துதல், அதேநேரம், இங்கு நமது பாத்திரத்துக்கும், நாடாளுமன்ற அரங்கில் நமது ஒட்டுமொத்த புரட்சிகர எதிர்க்கட்சிப் பாத்திரத்துக்கும் இணக்கம் காண, பொருத்தமான கொள்கைகள் உருவாக்கப்பட்டு அமலாக்கப்பட வேண்டும்.
ஏப்ரல் 22 - ஜ÷லை 28 இயக்கம் முடிந்த பின், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு வழிகாட்ட ஒரு சிறப்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் நமது ஊராட்சி மட்ட வேலை என்பது, ஊராட்சி அமைப்பு தொடர்பானதாகவும், அதற்கு அப்பாற்பட்டதாகவும் எப்படி இருக்க வேண்டும், இவை எப்படி இணைக்கப்பட வேண்டும் என மாவட்ட கமிட்டிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நலத்திட்டங்கள் மற்றும் கட்டணம்/விலையில்லா சலுகைகள் விசயத்தில் நமது ஊராட்சிமட்ட செயல்பாடு கூர்மையானதாக்கப்பட வேண்டும். நமது ஊராட்சி மட்ட வேலைகள், நிலம், வாழ்வுரிமை மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றுக்கான போராட்டங்களின் அங்கமாக இருக்கும். ஊராட்சிகளுக்கு கூடுதல் நிதி மற்றும் அதிகாரங்கள் கோருகிற அதேநேரம், வெளிப்படைத் தன்மை, ஜனநாயகம் ஆகியவற்றை மக்கள் உரிமைகள் என்ற தளத்தில் இருந்து, நாம் அணுக வேண்டும்.
தகவல் மற்றும் அறிவிற்கான மக்களின் மாபெரும் தாகம், முதலாளித்துவ ஊடகங்களின்
பெரும் ஊடுருவல் - நம் கட்சி ஏடுகளின் பலவீனமான வீச்செல்லை
கட்சிக் கல்வி, கட்சி இலக்கியம், கட்சி வெளியீடுகள் ஆகிய மூன்றும் பலப்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் தீப்பொறி வெளியிடுவதில் ஒரு முன்னேற்றத்தைச் சாதித்துள்ளோம். மாதமிருமுறை எனவும் 4000 பிரதிகள் எனவும் ஜனவரி 2012 முதலே நம்மால் திட்டமிட்டு முறைப்படுத்த முடிந்துள்ளது. காங்கிரஸ் நேரத்தில் வாரம் ஒரு முறை என வெளியிடுமாறு பொதுச்செயலாளர் ஆலோசனை வழங்கியுள்ளது, நம்முன் சவால்மிக்க கடமையாக உள்ளது. காங்கிரசுக்கு முன்பு பிரதிகள் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டியுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் சமூக, பொருளாதார நிலைமைகள், நமது முயற்சிகள், நடவடிக்கைகள் பற்றி கூடுதலாகச் செய்திகள் வருவதையும், கட்சி மற்றும் பத்திரிகைக்கு இடையிலான தகவல் தொடர்பை முன்னேற் றுவதும், எழுத்தாளர்கள் மற்றும் செய்தி அனுப்புபவர்கள் வரிசை ஒன்றை உருவாக்குவதும், நம்முன் உள்ள கடமைகளாக உள்ளன.
அரசியல் சமூக நிகழ்வுகள், கருத்தியல் பிரச்சனைகள் போன்றவற்றில் வெளியீடுகள் கொண்டுவருவதும் அவசியமானதாகியுள்ளது. தொழிலாளர் அரங்கில் ஒருமைப்பாடு இதழ் மாதம் 5000 பிரதிகளுடன் தொடர்கிறது. எழுத்தாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தீப்பொறி, ஒருமைப்பாடு ஆகியவற்றில் காட்டப்பட்ட கவனம், லிபரேசன் விசயத்தில் காட்டப்படவில்லை. அறிவாளிகள், மாணவர், இளைஞர், நடுத்தரப் பிரிவினர் மத்தியிலான வேலை விரிவாக்கத்தோடு, லிபரேசன் பிரதிகள் அதிகரிப்பதை இணைக்க வேண்டும்.
ஒன்பதாவது காங்கிரசை ஒட்டி, கட்சிப் பள்ளிகள் மத்திய கமிட்டி வழிகாட்டுதலில் கட்டமைக்கப்பட வாய்ப்புள்ளது. மாநில, மாவட்ட மட்ட பள்ளிகள் தவிர, கட்சிக் கல்வி பற்றி 1990 சிறப்பு மாநாடு சொன்ன பின்வரும் விசயம் கவனிக்கத்தக்கதாகும்.
‘நமது கட்சி நடைமுறையின் ஒருங்கி ணைந்த பகுதியாக, கட்சி முழுவதும், ஒரு மார்க்சிய கல்வி இயக்கத்தை நடத்துவது நமக்கு மிகவும் அவசியமானதாகும். ஒவ்வொரு மாதமும், ஒரு படிப்பு அமர்வாவது நிச்சயம் நடத்தப்பட வேண்டும். பெரும்பாலான பங்கேற்பவர்கள் உள்ளூர் செயல்வீரர்களாக இருக்கும் விதம், உள்ளூர் மட்டங்களில் பள்ளிகள் இருக்க முன்னுரிமை தர வேண்டும். கவனமாக, கட்டமைக்கப்பட்டு, சரியாக நடத்தப்பட்டால், பொதுவான கட்சி உறுப்பினர்கள் புரிந்துகொள்ளும் எல்லை தாண்டி, சில மேதாவி தோழர்களின் மிக உயர்ந்த பேச்சு பேசும் விதமாக சீரழிய அனுமதிக்கப்படாவிட்டால், கட்சிப் பள்ளிகள் உண்மையிலேயே கட்சி கட்டுதலின் ஒரு முக்கியக் கருவியாக மாறும். கட்சிப் பள்ளிகள், அடிப்படைக் கல்வி தருவது, அதற்கும் மேலான படிப்பை திசைவழிப்படுத்துவது என்பதைத் தாண்டி, கட்சி ஆவணங்களை, இலக்கியங்களை முறையாகக் கற்பதிலும், நிகழ்கால விவகாரங்களைச் சுதந்திரமாக, வெளிப்படையாக விவாதிக்கும் கலாச்சாரத்தை முன்னெடுப்பதிலும், ஒரு முக்கிய பங்காற்றும், பரஸ்பர கல்வி, படிப்பது, பயிற்சி மய்யங்கள் என்ற வகையில், கட்சிப் பள்ளிகள், புதிய கட்சி உறுப்பினர்களை அடை யாளம் காண்பது, தகுதிகாண் உறுப்பினர்களைப் பேணிவளர்ப்பது, பொதுப் பேரவைகள், செயல் வீரர் குழுக்கள், செல்கள், இன்ன பிறவற்றைக் கட்டமைப்பது என்பதன் மூலம், கட்சியின் துவக்க நிலை அமைப்புக்களை முழுவீச்சில் செயல்பட வைக்க முடியும்’.

மார்க்சிஸ்ட் கட்சியின் கோழிக்கோடு 20ஆவது அகில இந்திய மாநாடும்
மாலெ கட்சியின் கோவை ஒன்பதாவது மாநில மாநாடும்

கம்யூனிஸ்ட் கட்சி மாநாடுகளில் பிரதிநிதிகள் விவரம் தொடர்பான ஒரு படிவம் பெறுவார்கள். கிரெடென்ஷியல் படிவம் என்று அதற்குப் பெயர். படிவங்களின் விவரங்கள் தொகுக்கப்படும்போது, அது, பிரதிநிதிகள் அவை பற்றி, கட்சி பற்றி செய்திகள் சொல்லும்.
மார்க்சிஸ்ட் கட்சியின் கோழிக்கோடு மாநாட்டில் 727 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தொழிலாளர் வர்க்கப் பின்னணியில் இருந்து 101 பிரதிநிதிகளும் விவசாயத் தொழிலாளர் வர்க்கப் பின்னணியில் இருந்து 31 பிரதிநிதிகளும் ஏழை விவசாயிகள் பின்னணியில் இருந்து 118 பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். ஆக, 250 பேர் அடிப்படை வர்க்கப் பிரதிநிதிகள். மற்றவர்கள், அதாவது 477 பிரதிநிதிகள் பிற வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள். 1044833 உறுப்பினர்களை அகில இந்திய அளவில் கொண்டிருந்த அக்கட்சியின் மாநாட்டுப் பிரதிநிதிகளில் 53 பேர் மட்டுமே 90க்குப் பிறகு கட்சிக்கு வந்தவர்கள். 674 பிரதிநிதிகள் உலகமயக் கொள்கைகள் வேகம் பிடிக்கும் முன் கட்சிக்கு வந்தவர்கள். பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, முதுகலைப் பட்டப் படிப்பு முடித்தவர்கள் 609 பேர். 118 பேர் மட்டுமே பள்ளிநிலை வரை படித்தவர்கள்.
727 பிரதிநிதிகளில் 464 பேர் மாணவர், இளைஞர் அரங்கம் மூலம் கட்சிக்கு வந்தவர்கள். 30 வயதுக்குக் கீழ் 2, 30 முதல் 40 வயதில் 28, 40 முதல் 50 வயதில் 92, 50 முதல் 60 வயதில் 267, 60 முதல் 70 வயதில் 233, 70 வயதுக்கு மேல் 105 பிரதிநிதிகள் இருந்தனர்.
727 பிரதிநிதிகளில் தற்போது கட்சி அரங்கில் 295, தொழிற்சங்க அரங்கில் 149, விவசாயிகள் சங்கத்தில் 113, விவசாயத் தொழிலாளர் சங்கத்தில் 32, நடுத்தர வர்க்க ஊழியர் மத்தியில் 9, மாணவர் அரங்கில் 11, இளைஞர் அரங்கில் 14, பெண்கள் அரங்கில் 47, கலாச் சார அரங்கில் 7 பிரதிநிதிகள் என தமது முதன்மை அரங்காகப் பணிபுரிகின்றனர்.
மாலெ கட்சியின் ஒன்பதாவது மாநில மாநாட்டில் 290 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 18 முதல் 35 வயதில் 72 பிரதிநிதிகள், அதாவது கிட்டத்தட்ட 25% பிரதிநிதிகள் இருந்தனர். 36 முதல் 55 வயதில் 176 பிரதிநிதிகளும் 55 வயதுக்கு மேல் 42 பிரதிநிதிகளும் இருந்தனர். 90க்கு முன் கட்சிக்கு வந்தவர்கள் 42 பிரதி நிதிகள் மட்டுமே. 91 முதல் 2005க்குள் கட்சிக்கு வந்தவர்கள் 197 பிரதிநிதிகள். 2005க்குப் பிறகு கட்சிக்கு வந்தவர்கள் 51 பேர்.
பிரதிநிதிகளில் தொழிலாளர் வர்க்கப் பின்னணி கொண்டவர்கள் 190 பேர். விவசாயத் தொழிலாளர் வர்க்கப் பின்னணி கொண்டவர்கள் 74 பேர். ஆக 290 பிரதிநிதிகளில் 264 பேர் அடிப்படை வர்க்கப் பின்னணி கொண்டவர்கள். பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, தொழில்முறை படிப்பு முடித்தவர்கள் 73 பேர். 199 பிரதிநிதிகள் பள்ளிப் படிப்பு மட்டுமே கொண்டவர்கள். பள்ளிக்குச் செல்லாதவர்கள், எழுத்தறிவு பெறாதவர்கள் 18 பேர்.
விவரங்களில் இருந்து உண்மைகளைக் கண்டறியும் பொறுப்பை வாசகர்களுக்கும், உறுப்பினர் சேர்ப்பில், சேர்க்கையில், கட்சி கட்டுதலில் உள்ள சமநிலையின்மையைக் கரிசனத்தோடு கவனிக்கும் பொறுப்பை கட்சிக் கமிட்டிகளுக்கும் விட்டுவிடுவோம்.

மார்ச் 30 - ஏப்ரல் 1 தேதிகளில் கோவையில் நடந்த மாலெ கட்சியின் ஒன்பதாவது மாநில மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலக் குழு உறுப்பினர்கள்

தோழர் எஸ்.குமாரசாமி
தோழர் என்.கே.நடராஜன்
தோழர் தேன்மொழி
தோழர் எ.எஸ்.குமார்
தோழர் கோ.ராதாகிருஷ்ணன்
தோழர் எஸ்.சேகர்
தோழர் கே.பாரதி
தோழர் ராகவன்
தோழர் மஞ்சுளா
தோழர் எஸ்.ஜானகிராமன்
தோழர் எஸ்.இரணியப்பன்
தோழர் எம்.வெங்கடேசன்
தோழர் எஸ்.இளங்கோவன்
தோழர் டிகேஎஸ்.ஜனார்த்தனன்
தோழர் ராமேஷ்வர் பிரசாத்
தோழர் பழ.ஆசைத்தம்பி
தோழர் தேசிகன்
தோழர் வளத்தான்
தோழர் பாலசுப்ரமணியம்
தோழர் தாமோதரன்
தோழர் எ.கோவிந்தராஜ்
தோழர் வெங்கடாசலம்
தோழர் மலர்விழி
தோழர் சந்திரமோகன்
தோழர் மோகனசுந்தரம்
தோழர் டி.சங்கரபாண்டியன்
தோழர் ஜி.ரமேஷ்
தோழர் எஸ்.எம்.அந்தோணிமுத்து
தோழர் மேரி ஸ்டெல்லா
தோழர் அம்மையப்பன்
மாநிலச் செயலாளர்: தோழர் பாலசுந்தரம்

கூடிய சீக்கிரம்
கல்வி தற்கொலை செய்துகொள்ளும்

 சென்னை அண்ணா பல்கலை கழக பொறியியல் மாணவர் மணிவண்ணன் 26 அரியர் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டார்.
 சென்னை அண்ணா பல்கலை கழக பொறியியல் மாணவர் தைரியலஷ்மி,   தன்னால் படிக்க முடியவில்லை என்பதால் குடும்பத்தின் கனவை தான் சிதைத்துவிடக் கூடும் என்பதால் தற்கொலை செய்து கொண்டார். (தற்கொலை செய்துகொண்ட தைரியலஷ்மியை மருத்துவமனையில் இருந்து சொந்த ஊரான விழுப்புரம், கேவி பாளையம் எடுத்துச் செல்லக்கூட அவரது பெற்றோரிடம் வசதியில்லை.)
 அயனாவரத்தில் 9ஆவது படிக்கும் கவிதா என்கிற மாணவி தேர்வில் தான் எழுதிய பதில்களை தனது சக மாணவிக்கு கொடுத்ததால் ஆசிரியர் கண்டித்தார். வீட்டிற்கு வந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாள்.
 திருவண்ணாமலை தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு தேர்வில் காப்பி அடிக்க ஆசிரியர்கள் உதவி செய்தனர். கட்டமைக்கப்பட்ட விதத்தில் காபி அடித்தல் என்று இதைச் சொல்கிறார்கள்.
 பள்ளி வாகனங்கள் விபத்துக்குள்ளாகி மாணவர்கள் உயிரிழப்பு முறையான இடைவெளிகளில் நடக்கின்றன.
 சென்னையில் தனியார் பள்ளியில் ஆசிரியர் வகுப்பறையில் கொல்லப்பட்டார்.
 சென்னை தனியார் பள்ளி ஒன்றில் தேர்வு எழுதும்போதே வினாக்கள் கடுமையாக இருந்ததால் மாணவி ஒருவர் இரண்டாவது மாடியில் இருந்து குதித்தார்.
 ஏப்ரல் துவக்கத்தில் மட்டும் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 4 மாணவர்கள் குறை மதிப்பெண் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர்.
 சென்னையைச் சேர்ந்த மாணவன் ஒருவன் தேர்வு எழுதாமல் போனபோது, வீட்டுக்குப் போனால் பாட்டி திட்டுவார் என்று நினைத்து கடற்கரையில் ஒரு கடையில் வேலைக்குப் போய்விட்டான்.
 புதுச்சேரி கல்வி அமைச்சர் தனக்கு பதில் வேறொருவரை பத்தாம் வகுப்பு தேர்வு எழுத அனுப்பி சிக்கிக்கொண்டார்.
 உயரதிகாரியும் தலைமை ஆசிரியரும் திட்டியதால் சென்னை அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் அமிலம் குடித்தார்.
சமீப சில மாதங்களில் தமிழ்நாட்டில் நடந்த சம்பவங்கள் இவை. கெயாஸ், (ஸ்ரீட்ஹர்ள்) கட்டுக்கடங்காத கலவரச் சூழல். உலகமய ஆட்சி யாளர்கள் கல்விச் சூழலை அந்த நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்திவிட்டார்கள்.
பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி வரை அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கும்பகோணத்தில் 92 குழந்தைகளை உயிருடன் தீ தின்னப் பார்த்திருந்தோம். இப்போது அதையொத்த ஒன்று தவணை முறையில் நடந்து கொண்டிருக்கிறது.
முதலாளித்துவம் என்றால் எங்கும் எதிலும் போட்டி. தனியார் பள்ளிகள் போட்டி போட்டு லாபம் சம்பாதிக்க, மாணவர்கள் மதிப்பெண் பெறுவதில் போட்டி, இப்போது யார் முதலில் தற்கொலை செய்துகொள்வது என்பதில் போட்டி. ஏதேதோ முதலிடம் பற்றி ஜெயலலிதா பேசிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு மாணவர் தற்கொலைகளில், கல்விச் சூழல் சீர்குலைவதில் முதலிடம் பிடிக்க விரைந்து முன் சென்று கொண்டிருக்கிறது. சட்டமன்றத்துக்கு வெளியே மாணவர்கள் தற்கொலைகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கிக் கொண்டிருந்தபோது, சட்டமன்றத்துக்குள் அஇஅதிமுகவும் திமுகவும் காங்கிரசும் மதிய உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டம் கொண்டு வந்த பெருமை யாருக்கு என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.
நமது ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரி களைப் பார்த்து நமது மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். எத்தனை முறைகேடு களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். விசாரணை, கைது, சிறை என்றெல்லாம் சந்தித்தாலும் விருது பெற்றதுபோல் சிரித்துக் கொண்டே போஸ் தருகிறார்களே.  யாராவது தற்கொலை செய்து கொண்டார்களா?
மாணவர்கள் தற்கொலையும் மற்ற பிற முறைகேடுகளும் இந்தியா முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றன. தேசிய குற்றப் பதிவு அலுவலகத்தின் 2010 விவரங்கள்படி நாளொன்றில் 7 மாணவர்கள் தேர்வில் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டனர்.
73 நாடுகளின் மாணவர் மத்தியில் நடத்தப்பட்ட சர்வதேச மாணவர் மதிப்பீட்டு ஆய்வில் இந்தியா 72ஆவது இடத்தைப் பிடித்தது. வாசிப்பு, எண்கணிதம், அறிவியல் போன்ற திறன்களில் கிர்கிஸ்தான் மட்டும்தான் இந்தியாவுக்கு அடுத்த நாடாக இருந்தது. எண்கணித ஆற்றலில் எட்டாவது படிக்கிற இந்தியக் குழந்தையின் தரம் மூன்றாவது படிக்கிற தென்கொரிய குழந்தையின் தரத்தை ஒத்து இருக்கிறது என்றும் வாசிப்புத் திறனில் இரண்டாவது படிக்கிற ஷங்காய் குழந்தையின் தரத்தை ஒத்து இருக்கிறது என்றும் அதிர்ச்சி தரும் விவரங்களை ஆய்வு முன்வைத்துள்ளது.
தமிழக மாணவர்களைப் பொறுத்தவரை, சாதாரண வாழ்க்கைக்குத் தேவையான குறைந்தபட்ச படிப்புத் திறன் 17% மாணவர் களுக்கு மட்டுமே இருந்தது. வேறு வார்த்தை களில் சொல்வதென்றால் 83% மாணவர் களுக்கு அந்தத் திறன் இல்லை.
தமிழகத்தின் 29 மாவட்டங்களில் 26,000 மாணவர் மத்தியில் ஆய்வு செய்து, பிரதம் என்கிற தொண்டு நிறுவனம் முன்வைத்துள்ள கல்வி ஆய்வு ஆண்டறிக்கை 2011 தருகிற தகவல்கள் படி, 5ஆம் வகுப்பு மாணவர்களில் 32% பேர் மட்டுமே தமிழில் ஒரு எளிமை யான கதையை வாசிக்கும் திறன் பெற்றவர்கள். பெருக்கல் மற்றும் வகுத்தல் கணக்குகள் தெரிந்திருக்க வேண்டிய 4ஆம் வகுப்பு மாணவர்களில் 40.6% பேர் மட்டுமே இரண்டு இலக்க கழித்தல் கணக்கு போட முடிகிறது.
தனியார் பள்ளிகள் மாணவர்களை உலகத் தரத்துக்கு உயர்த்தும் என்ற வாதங்கள் இந்த ஆய்வுகள் முன்வைத்துள்ள விவரங்களால் தூளாகிப் போயுள்ளன.
கல்வி தனியார்மயத்தின் உண்மை முகம் வெளிப்பட வெளிப்பட, முறைகேடுகள் அதிகரிக்க அதிகரிக்க, தனியார் கல்வி நிறுவனங்களைக் காப்பாற்ற கல்வி பற்றி அசாத்திய அக்கறை உள்ளவர்கள் போல் ஆட்சியாளர்கள் காட்டிக் கொள்ள வேண்டியதாகிறது.
அரசியலமைப்புச் சட்டப்படி அரசியல மைப்புச் சட்டம் உருவாகி 10 ஆண்டுகளுக்குள் 14 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி தருவது அரசின் கடமை. அரசு இந்தக் கடமையில் இருந்து தவறி பல பத்தாண்டுகள் ஆகிவிட்ட பின் அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டும் கோட்பாட்டை அமலாக்க கல்வி உரிமைச் சட்டம் என்கிறார்கள். அடிப்படை உரிமையைப் பாதுகாக்கும் சட்டத்தையும் கேள்விக்குள்ளாக்க ஜனநாயகத்தில் இடமிருப்பதால், அதன் அரசி யலமைப்புச் சட்டத் தகுதியை உச்சநீதிமன்றம் தூக்கிப் பிடிக்க வேண்டியதாயிற்று.
இந்தச் சட்டப்படி சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர பிற தனியார் பள்ளிகள், பின் தங்கிய பின்னணி கொண்ட மாணவர்களுக்கு 25% இலவச இடம் ஒதுக்க வேண்டும். இந்த ஒதுக்கீடு கல்வியில் உள்ள சமூக ஏற்றத்தாழ் வுகளை நீக்கும் என்று ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். இந்த ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பைக் காப்பாற் றினார்கள்.
உண்மையில், தீர்ப்பு வழங்கிய உச்சநீதி மன்ற நீதிபதிகள்பால், இந்திய குழந்தைகளுக்கு தாத்தா... நீங்க நல்லவரா? கெட்டவரா? என்ற கேள்வி எழ வாய்ப்புள்ளது. ஒரு விதத்தில் தீர்ப்பு, கல்வி தனியார்மயத்துக்கு அங்கீகாரம்.
கல்வி உரிமைச் சட்டம் கல்விக்கு அரசே முழு பொறுப்பு என்று சொல்லவில்லை. கல்வி தனியார்மயம் பற்றி எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை. சட்டம் கல்வி தனியார்மய எல்லைகளுக்கு உட்பட்டது. இதில் 25% இட ஒதுக்கீடு என்ன சமத்துவத்தைக் கொண்டு வரும்? இந்தத் தீர்ப்பு கல்வி தனியார்மயத்துக்கு, மாணவர் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகளுக்கு முடிவு கட்டி விடுமா? நடந்து கொண்டிருக்கிற மாணவர் தற்கொலைகளுக்குத் தீர்வு தருமா?
இந்த 25% ஒதுக்கீட்டால் தங்கள் லாபத்தில் 25% பாதிப்பு ஏற்படும் என்று கல்வி வியாபாரிகள் கூக்குரல் எழுப்புகிறார்கள்.
மிகவும் அப்பட்டமான மக்கள் விரோதக் கொள்கைகளை அதிஉயர்ந்த கொள்கை என்று முன்வைப்பதில் கபில் சிபலுக்கு நிகர் யாரும் இருக்க முடியாது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அவர் கையில். வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற மாநில அரசாங்கங்களுக்கு 10 கட்டளைகள் இட்டுள்ள அவர், தனியார் பள்ளிகளுக்கு ஏற்படக்கூடிய 25% லாப இழப்பைச் சமாளிக்க வழிசொல்கிறார். அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவருக்கு என்ன செலவாகுமோ அதை அரசு தரும். அரசு தரவிருக்கும் இழப்பீடு போதுமானதாக இருக்காது என்று கபில் சிபல் ஒப்புக்கொள்கிறார். அதாவது அரசு கல்வியில் தேவையான அக்கறை காட்டவில்லை என்பதை ஒப்புக்கொண்டு இனியும் அக்கறை காட்டப் போவதில்லை என்றும் அறிவிக்கிறார். தனியார் பள்ளிகளுக்கு அறிவார்ந்த தீர்வு ஒன்றும் சொல்கிறார். தனியார் பள்ளிகள் அரசு தரும் இழப்பீடு போதாமையை ஈடு செய்ய பெருநிறுவனங்களை அணுகி அவற்றின் உதவியைக் கேட்க வேண்டும் என்கிறார். பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு பற்றி எடுத்துச் சொல்லி அவர்கள் பங்களிப்பைப் பெற தனியார் பள்ளிகள் முயற்சிக்க வேண்டுமாம்.
அரசே கல்வி பற்றிய பொறுப்பை தட்டிக் கழிக்கும் சூழலில் தனியார் பள்ளிகளும் பெருநிறுவனங்களும் கல்விக்குப் பொறுப்பேற்பார்கள் என்று கபில் சிபல் நம்மை நம்பச் சொல்கிறார்.
25% எப்படி அமலாகும்? உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அமலாக்கப்பட்டு அதனால் சில தலித் மாணவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு பற்றி அ.முத்துகிருஷ்ணன் உயிர்மை பத்திரிகையில் நவம்பர் 2011ல் ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையில் தனது ஆய்வு இன்னும் நிறைவு பெறவில்லை என்றும் இன்னும் தொடர்வதாகவும் சொல்லியிருந்தார். முற்றுப்பெறாத ஆய்வின் அடிப்படையில் அவர் அந்தக் கட்டுரையில் சொல்லியிருந்த விசயங்களே அதிர்ச்சி தருவதாக இருந்தன. ரூர்கி அய்அய்டி, டில்லி ஏய்ம்ஸ், சண்டிகர் மருத்துவக் கல்லூரி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அந்தக் கல்லூரிகளில் சேர்ந்த தலித் மாணவர்கள் ஆசிரியர்களால், சக மாணவர்களால், கடுமையான சாதி பாகுபாடுகளுக்கு உள்ளாகி மன உளைச்சல் தாளாமல் தற்கொலை செய்து கொண்டதை அவர் அம்பலப்படுத்தியிருந்தார். இந்தியாவின் மிக உயர்ந்த உயர்கல்வி நிறுவனங்களில் கடந்த 4 ஆண்டுகளில் சாதியின் பெயரால் அவமானப்படுத்தப்பட்டு இடஒதுக்கீட்டின் அடிப்படை யில் அந்த உயர்கல்வி நிறுவனங்களை எட்டிய 18 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட தாக குறிப்பிட்டிருந்தார். இது உயர்கல்வி நிறுவனத்தில், மெத்தப் படித்தவர்கள் கூடியிருக்கிற இடத்தில் நடந்தது. பள்ளிகள் எப்படி இருக்கும்?
நாகப்பட்டினம், வேதாரண்யத்தில் உள்ள அரசு ஊராட்சி துவக்கப் பள்ளியில் 80களின் துவக்கத்தில் சில தலித் மாணவர்கள் படித்தார்கள். சாதி பாகுபாடு மிகுந்திருந்ததால் அதற்குப் பிறகு இன்று வரை தலித் மாணவர்கள் அந்தப் பள்ளியில் சேர்வதில்லை. வேறு வழியின்றி தனியார் பள்ளிகளுக்குச் செல்கிறார்கள்.
2010 - 2011ல் அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 30 சதம் செலவழிக்கப்படவில்லை. இந்தியாவில் உள்ள பள்ளிகளில் 10% பள்ளிகளில் குடிநீர் வசதியும் 40% பள்ளிகளில் கழிவறை வசதியும் இல்லை. 95.2% பள்ளிகளில் சட்டம் வரையறுத்துள்ள வசதிகள் அனைத்தும் இல்லை. வெறும் 4.8% அரசுப் பள்ளிகளில்தான் சட்டம் சொல்கிற வசதிகள் உள்ளன. 30% பள்ளிகளில் 5 வசதிகள் கூட இல்லை. 25% அமலானாலும் 90 சதம் குடும்பங்கள் அரசுப் பள்ளிகளில்தான் தங்கள் குழந்தைகள் கல்விக்கு நம்பியிருக்கும். அரசுப் பள்ளிகள் தரத்தை உயர்த்துவது, கூடுதல் அரசுப் பள்ளிகள் உருவாக்குவது ஆகிய அவசிய அவசர நடவடிக்கைகள் பற்றி கபில் சிபல் பேச மறுக்கிறார்.
அரசுப் பள்ளி எதிர் தனியார் பள்ளி, அரசுப் பள்ளி ஆசிரியர் எதிர் தனியார் பள்ளி ஆசிரியர் என்று ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்தி  கல்வி வர்த்தகமயம் என்ற அடிப்படை பிரச்சனையைப் பூசி மெழுகப் பார்க்கிறார்கள். அரசுப் பள்ளிகள் நக்சலைட்டுகளை உருவாக்குகின்றன என்றும் தனியார் பள்ளிகள் ஒழுக்கம் கற்றுத் தருபவை என்றும் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் போன்ற அறிவாளிகள் சொல்லிவிடுகிறார்கள். மூளைக்கு விலங்கு போட்டு, மூலதனத்தை நியாயப்படுத்தப் பார்க்கிறார்கள். கல்வியை லாபக் காடாக்கி மாணவர்களை, அவர்கள் எதிர்காலத்தை, நாளைய சமுதாயத்தைப் பகடைக் காய்கள் ஆக்குகிறார்கள்.
தமிழ் சமூகத்தின் அறிவாளிகளில் ஒருவர் என்று தன்னைக் கருதிக் கொள்ளும் ஒருவர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சரியாக வேலை செய்யாததால்தான் தனியார் பள்ளிகளுக்குப் பெற்றோர்கள் செல்கிறார்கள் என்கிறார். கிராமப்புறங்களில் வறிய குடும்பத்து மாணவர்கள் அரசுப் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள் என்றும் அவர்கள் தரம் உயராமல் இருக்க ஆசிரியர்களே காரணம் என்றும் சொல்கிறார். 
எட்டாவது வகுப்பு வரை பாஸ் செய்துவிடுவது என்பது கொள்கை. அது வரை மதிப்பெண் கவலையில்லாமல் இருந்துவிட்டு, பத்தாவது வகுப்புக்குள் நுழைந்ததும் குழந்தைகளையும் ஆசிரியர்களையும் 100% வெற்றி என்ற சனி பிடித்துவிடுகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்படும் அழுத்தம்தான் ஆசிரியர் அமிலம் குடிப்பதில் வெளிப்பட்டது.
ஆறாம் வகுப்பில் இருந்து அடிப்படை களைக் கற்றுக் கொள்வதில் அல்லது கற்றுத் தருவதில் மெத்தனமாக இருந்துவிட்டு மூன்றாண்டு கல்வியை ஓராண்டில் திணித்து மாணவர்கள் உயர்மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூகம் என அனைவரும் எதிர்ப்பார்ப்பது நடைமுறை சாத்தியமற்றது.
சிறைக் கைதிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். பள்ளிக்கூடங்கள் சட்டதிட்டங்களின் இறுக்கமான சுவர்களாக, கறாரான மதிப்பெண் தராசுகளாக மாணவர்களை அச்சுறுத்துகின்றனவே தவிர அவர்கள் அறிவுபூர்வமான வளர்ச்சிக்கு மிகக் குறைவாகவே பங்களிக்கின்றன.
அக்கம்பக்கம் பார்க்காமல், அறிவைச் செலுத்தாமல், மாறாத சூத்திரங்களை மனப்பாடம் செய்து மதிப்பெண் பெறும் எந்திரங்களாக மாணவர்களை மாற்றி பள்ளிவிட்டு வெளியேறும்போது, மொத்த சமூகத்தையும் சூத்திரங்களுக்குள் அடங்கியதாக, அல்லது அடக்கப்பட வேண்டியதாகப் பார்க்கும் வார்ப்பு உருவாகிவிடுகிறது. இப்படிப்பட்ட மாணவர்கள் மட்டுமே வேண்டும் என்கிறார்கள் ஸ்ரீஸ்ரீக்கள்.
திருவண்ணாமலை தனியார் பள்ளியில் அமைப்பாக்கப்பட்ட விதத்தில் மாணவர்கள் பார்த்து எழுதிய முறைகேட்டில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுவிட்டனர். அடுத்தடுத்து அந்தப் பள்ளி தீவிரமான கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டது. மாணவர்களுக்கு தேர்வு காய்ச்சலுடன், திடீர் சோதனைக் காய்ச்சலும் சேர்ந்துகொள்ள தேர்வுக்குப் படிப்பதில் கவனம் செலுத்த முடியாமல் போனது. பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டார்கள். மொத்த சூழலும் பதட்டமானது. இப்போது, பள்ளி தொடர்ந்து நடக்கும். கல்விக் கட்டணம், நன்கொடை எல்லாம் எப்போதும் போல் வரும். பாதிப்பு மீண்டும் மாணவர்களுக்குத்தான்.
கோடை காலத்தில் குளிர்சாதன கருவிகள் விளம்பரங்கள் அதிகரிப்பது போல் கல்வி நிறுவன விளம்பரங்கள் வெளியாகும். அடுத்த மாதம் முழுவதும் கல்வி கட்டண உயர்வு தாளாமல் பெற்றோர் குமுறுவது செய்தியாகும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவித்து ஆசிரியர் பயிற்சியில் பட்டம் பெற்று, வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்துவிட்டு, 40 வயது கூட கடந்து, வேலைக்காகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் நம்பிக்கையில் மண் போட்டார் ஜெயலலிதா. தரமான ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்பட வேண்டும் என்று கல்வி உரிமைச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளதை அமலாக்குவதே இதன் நோக்கம் என்று சொல்லிவிட்டார். படித்து பட்டம் பெற்று வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு சாக்கு சொன்னதுபோல், கல்வி கட்டண உயர்வால் குமுறும் பெற்றோருக்கும் சாக்கு சொல்வார். தனியார்மயப் பிசாசிடம் இருந்து கல்வியை விடுவிக்கும் வரை கல்விச் சூழல் கலவரமாகவே தொடரும். கூடிய சீக்கிரம் கல்வி தற்கொலை செய்துகொள்ளும்.

தானே புயல் நிவாரணம் வழங்கக் கோரி பட்டினிப் போராட்டம்

23.04.2012 அன்று விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் ஒன்றியத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்காத அதிமுக அரசை கண்டித்து இகக மாலெ பட்டினிப் போராட்டம் நடத்தியது. மாவட்ட கமிட்டி உறுப்பினர் தோழர் டி.கலியமூர்த்தி தலைமையில் நடந்த போராட்டத்தில் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் மா.வெங்கடேசன், மாவட்ட தலைவர்கள் தோழர்கள் ஜி.ஏழுமலை, இ.தட்சிணாமூர்த்தி, ஆர்.கந்தசாமி. பரமசிவம், சம்மனசுமேரி, சேகர், சுப்பிரமணியன் உரையாற்றினார்கள்.

சமையல் கலைஞர்கள் சங்கம்
உழைப்போர் உரிமை இயக்கத்தில் இணைந்தது

ஏப்ரல் 20 அன்று காஞ்சி நகரில் அன்னபூரணி சமையல் கலைஞர்கள் சங்கம் உழைப்போர் உரிமை இயக்கத்தில் இணைந்தது. சமையல் கலைஞர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.700 சம்பளம் உள்ளிட்ட பல கோரிக்கைகளுடன் கூட்டம் நடத்தப்பட்டது. சங்கப் பெயர் பலகை திறக்கப்பட்டது. கட்சி மாவட்ட பொறுப்பாளர் தோழர் சொ.இரணியப்பன், நகர செயலாளர் தோழர் முருகன், நகர கட்சி உறுப்பினர் தோழர் கமலக்கண்ணன் உரையாற்றினர். சங்கத் தலைவர் தோழர் என்.கே.குமார் தலைமையேற்றார்.

களச் செய்திகள் தொகுப்பு எஸ்.சேகர்

Search