COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Sunday, November 6, 2011

தீப்பொறி நவம்பர் 2011

நவம்பர் புரட்சியின் நினைவைப் போற்றுவோம்!
நம் எதிரிகள் பலமானவர்கள்தான். ஆனால் அவர்கள் பலவீனமானவர்களும் கூட.
அமெரிக்கா பலமானதுதான். ஆனாலும் பலவீனமானதும் கூட. அது அரபு வசந்தத்தில் இருந்து, லிபியாவின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்ற நகர்ந்துள்ளது நிஜமே. ஆனால் அது ஈரானிடம் வாலாட்ட முடியாது என்பதும், வால் ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம் இயக்கத்தையும் அதன் தாக்கத்தையும் உள்நாட்டில் சந்தித்தாக வேண்டும் என்பதும், நிஜமே.
காங்கிரசும் பாஜகவும் இந்தியாவின் இரு பெரும்கட்சிகள் என்பது நிஜமே. ஆனால், இந்த இரண்டு கட்சிகளும் இதுவரை இல்லாத அளவுக்கு மதிப்பிழந்துள்ளனர் என்பதும் நிஜமே.
இந்திய முதலாளித்துவம் தப்பிக்கும் திறனும் தாங்கும் திறனும் கொண்டது என்பது நிஜமே. ஆனாலும், பிரதமர் அலுவலகம் நீதிமன்றங்கள் நாடாளுமன்றம் என்ற அனைத்து முதலாளித்துவ நிறுவனங்களும் மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளன என்பதும் நிஜமே.
இந்தியப் பாட்டாளி வர்க்கம் பலவிதமான போட்டிகளில் பிளவுண்டுள்ளது நிஜமே. ஆனால், அது எண்ணிக்கைரீதியாகவும் பண்புரீதியாகவும் மாறி, புறவயமான ஒரு பெரும் சக்தி ஆகியிருப்பதும் நிஜமே.
சுரண்டலை ஒடுக்குமுறையைச் சந்திக்கும் பாட்டாளி வர்க்கம், அதற்கான காரணங்களை உணராததால், அது இன்னமும் தனக்குள் ஒரு வர்க்கமாக இருப்பது நிஜமே. ஆனால், அது சுரண்டலை ஒடுக்குமுறையை எதிர்க்கும் போக்கில் சமூக மாற்றத்தை வழிநடத்தும் ஒரு புரட்சிகரமான வர்க்கமாக உருவெடுக்கும் உள்ளாற்றல் கொண்டுள்ளது என்பதும் நிஜமே.
நவம்பர் சோவியத் புரட்சியே! போல்ஷ்விக் கட்சியே!
தோழர் லெனின் அவர்களே!
உங்கள் நினைவுகள் எங்களை எப்போதும் உற்சாகப்படுத்தும்.
நரகமான இந்தப் பூமியில் சொர்க்கத்தைப் படைக்க நீங்கள் முயன்றீர்கள். தனி உடைமையை ஒழித்து நிலம் தொழிற்சாலைகள் தேசத்தின் சொத்துக்கள் அனைத்தும் பொது உடைமை என்றீர்கள்.
முதலாளித்துவ மீட்சியைத் தடுக்க பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற உன்னதமான ஜனநாயகத்தை நிறுவினீர்கள்.
தொளதொளப்பில்லாத, அராஜகவாதமில்லாத, வால்பிடிக்கும் வாதமில்லாத ஓர் உருக்கு நிகர் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவினீர்கள்.
கெட்ட போரிடும் உலகினை வீழ்த்த, ஏகாதிபத்தியச் சங்கிலியை ரஷ்யாவில் அறுத்து எறிந்தீர்கள்.
உங்கள் நினைவுகளைப் போற்றி, இந்திய மக்கள் நலன் காக்கும், எமது அருமைத் தாய்நாட்டை விடுவிக்கும் புரட்சிகரப் பணிகளில், எங்கள் தவறுகளைத் தயவு தாட்சண்யமின்றித் திருத்திக் கொண்டு, மக்களோடு எங்கள் உறவைப் பலப்படுத்திக்கொண்டு, மக்கள் இயக்கங்களையும் மார்க்சிய லெனினியத்தையும் இணைக்கும் கடமைகளைத் தொடருவோம்.

தலையங்கம்

ஜெயலலிதா கருணாநிதி விஜயகாந்த் தாண்டி...

தமிழ்நாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதி களைத் தேர்வுசெய்த, உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்து விட்டன. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அம்மாவின் பெயரால், டாக்டர் கலைஞர் பெயரால், கேப்டன் பெயரால், அன்னை சோனியா பெயரால் உறுதி ஏற்க முயன்ற ‘பகுத்தறிவு’ காட்சிகள், மெய்சிலிர்க்க வைத்தன.
சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி கடவுளின் பெயரால் எனச் சொல்லி உறுதிமொழி எடுக்கும்போது, ஜெயலிதா பக்கம் திரும்பி அவர்தான் கடவுள் எனக் குறிப்பால் உணர்த்தியதை, தமிழ்நாட்டு மக்கள் தொலைக்காட்சிகள் மூலம் தெரிந்து கொண்டனர். அஇஅதிமுக 39%, திமுக 26% வாக்குகள் பெற்றுள்ளன எனச் செய்தி ஊடகங்கள் சொல்கின்றன. தேர்தல் முடிவுகள் வெளிவந்த 21.10.2011 அன்று, 39, 26 தலைவர்கள் எங்கு இருந்தார்கள்?
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில், நீதிபதி கேள்விகளுக்குப் பதில் சொல்ல, பெங்களூரு நீதிமன்றத்தில் இருந்தார். மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கிய முதல்வர் ஜெயலலிதா! டான்சி வழக்கில், உச்சநீதிமன்றம், குற்றத்தை முடிவு செய்து கொள்ளுமாறு, ஜெயலலிதாவின் மனசாட்சிக்கு வேண்டுகோள் விடுத்தது.
நமக்குத் தெரிந்த வரை எந்த முதலமைச்சருக்கும் இப்படி நேர்ந்ததில்லை. அய்ந்தரை மணி நேரங்கள் நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு, சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் பற்றி எழுப்பப்பட்ட நூற்றுக்கணக்கான கேள்விகளுக்குப் பதில் சொன்னார் ஜெயலலிதா. இந்த முறை, ஜெயலலிதாவின் இழுத்தடிக்கும் முயற்சிகள் உச்சநீதிமன்றம் வரை சென்றும், வெற்றி பெறவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கைச் சந்திக்கும் முதல்வர், டணால் டணால் எனக் கம்பீரமாக அதேநேரம் நிதானமாக பதில் சொன்னதாக சில ஊடகங்கள் வர்ணணை செய்தன.
மீசையில் மண் ஒட்டவில்லை என்று ஜெயலலிதாவால் சொல்ல முடியாது. ஆனாலும் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட அவமானத்துக்கு (அப்படி ஏதாவது இருந்தால்) ஆறுதலும் அடுத்தச் சுற்று மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு கூடுதல் துணிச்சலும் அளித்திருக்க வேண்டும்.
10 மாநகராட்சிகளிலும் வெற்றி, உள்ளாட்சி இடங்களில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி என்றான பிறகு, இனி யார், என்ன கேட்க முடியும்? தோல்வி பெற்ற அதிமுககாரர்கள் வெற்றிச் சான்றிதழ் பெறுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களை நீதிமன்றத்தை அணுகச் சொல்கிறார் ‘நியாயமான’ தேர்தல் நடத்திய தேர்தல் ஆணையர் சோ.அய்யர்.
இப்படியாக தமிழ்நாட்டில் ஜனநாயகம் தழைத்தோங்க தனது மக்கள் விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைகளை ஆணித்தரமாகத் துவங்கிவிட்டார்.
திருவாளர் கருணாநிதி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தன் பூ போன்ற மகளை சந்திக்க டெல்லி சென்றிருந்தார். இவர்கள்தான், 39, 26 சதம் வாக்குகள் பெற்றார்கள்.
அப்படியானால் தமிழக மக்கள் ஊழலை அங்கீகரிக்கிறார்களா? ஜெயலலிதா கருணாநிதி தாண்டி, தமிழக அரசியல் செல்ல முடியாதா?
திமுக ஆட்சிக்கு எதிரான அலை மீது சவாரி செய்து, ஜெயலலிதா பதவியைப் பிடித்தார். ஜெயலலிதாதான், முதல்வர் ஆக வேண்டும் என, தமிழக மக்கள் தவம் இருக்கவில்லை. அவர் ஏற்கனவே இரண்டு முறை தண்டிக்கப்பட்டவர்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபிறகு திமுக முடங்கிப் போனது. நில அபகரிப்பு வழக்குகளில் சிக்கிய கருணாநிதியின் உடன்பிறப்புகள், தமிழ்நாட்டில் வெவ்வேறு சிறைகளில் இருந்தனர். திமுக தன் மீதான ஜெயலலிதாவின் தாக்குதல்களில் இருந்து வெளியே வரச் செலுத்திய கவனத்தை, தமிழக மக்கள் பிரச்சினைகளுக்குச் செலுத்தவில்லை.
கொட்டும் முரசு சின்னத்தைக் கேட்டு வாங்கிப் பெற்ற, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்ற விஜயகாந்த், ஆட்சியின் முதல் ஆறு மாதங்களுக்கு வாயைப் பூட்டிக் கொண்டார். அம்மா, தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாடங்கள் நடத்தினார். ஜெயலலிதா அரசுக்கு எதிர்ப்பு, தமிழக சட்டமன்றத்தில் இருந்த கட்சிகளிடமிருந்து வரவில்லை. மக்கள் மன்றத்தில் இருந்தே எழுந்தது.
ஜெயலலிதாவிற்கு, திமுக தேமுதிக இகக இககமா தரப்பில் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லாத நிலையில், உள்ளாட்சி அமைப்புகள் அதிகாரங்கள் இல்லாமல் நிதி போதாமல் மாநில அரசையே சார்ந்திருக்கும் நிலையில், மாநில அரசுக்கு இசைவானவர்கள் இணக்கமானவர்கள் உள்ளாட்சிகளுக்கு வரட்டும் என்ற நினைப்பு மேலோங்குவதில் வியப்பேதும் இல்லை. இந்தப் பின்னணியில்தான், 10 மாநகராட்சிகளையும் பெரும்பான்மை உள்ளாட்சி அமைப்புகளையும் அஇஅதிமுக கைப்பற்றியது.
திமுக, காங்கிரஸ், பாமக கூட்டணியில்லாமல், தேர்தலைச் சந்தித்தது. விஜயகாந்தையும், தன் புகழ் பாடிய இடதுசாரிகளையும், ஜெயலலிதா கழற்றிவிட்டார். கேப்டன் தலைமையில் அணிதிரளும் வாய்ப்பு மார்க்சிஸ்ட் கட்சிக்கு மட்டுமே கிடைத்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்து விடப்பட்டது.
ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக ஆட்சி, மற்றும் அஇஅதிமுகவினர், அடுத்த சுற்று ஆட்டத்திற்குத் தயாராகிவிட்டார்கள். தமிழகம் முழுவதும் உள்ள ஏகப்பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு, வேலை அளிப்பவர்கள் (முதலாளிகள்), மிகவும் மோசமான விதத்தில் மிகக் குறைந்த கூலி கொடுக்கிறார்கள். முதலாளித்துவத்திற்கு எதிரான சீற்றத்தை மட்டுப்படுத்த, முதலாளித்துவத்துக்கு முட்டுக் கொடுக்க, கட்டணம்/விலை இல்லாமல் தரப்படும் சலுகைகள், கருணாநிதி காலத்திலும், துவக்கத்தில் எடுபட்டன. போகப் போக, மவுசு மங்கிவிட்டது.
ஜெயலலிதா ஆட்சிக்கும், இது நடந்தே தீரும். ஜெயலலிதா, மூவர் மரணதண்டனைப் பிரச்சினையில், உள்ளாட்சி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, எதிர்நிலை எடுத்துவிட்டார். மக்கள் போராட்ட நிர்ப்பந்தத்தால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நீதிமன்றத்தில் தலைகீழாகிவிட்டது.
அஇஅதிமுகவின் தொழிற்சங்கம், கூடங்குளம் அணுமின் நிலையம் உடனே இயங்க வேண்டும் என, ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது. ஜெயலலிதாவின் நிஜமுகம் அடுத்தடுத்து வெளியே வரும்.
கருணாநிதியால், விஜயகாந்தால், ஜெயலலிதா ஆட்சியை, மக்கள் ஆதரவு நிலையில் இருந்து ஒருபோதும் எதிர்க்க முடியாது. விஜயகாந்தை மாற்றாக நிறுத்தி அவர் பின்னால் செல்வோம் என்ற இகக(மா) முடிவில் இககவும் சேர்ந்து கொள்ளலாம்.
ஆனால், ஜெயலலிதா அரசு அடுத்த சுற்றில் எடுக்கும் மக்கள் விரோத நடவடிக்கைகளை, சட்டமன்றத்திற்கு வெளியில் இருந்து தமிழக மக்கள் நிச்சயம் எதிர்ப்பார்கள். வாழ்வின் துயரங்கள், ஊழல், ஒடுக்குமுறை, வசதி படைத்தவர்களைக் கொழுக்க வைத்து வறியவர்களை வாட்டி வதைக்கும் கொள்கைகள் என நிஜ வாழ்க்கையின் வெப்பம், நிச்சயமாய்த் தமிழக மக்களின் எதிர்ப்பைக் கொண்டு வரும். அஇஅதிமுக திமுக தேமுதிக தாண்டிய, இடது சாரி ஜனநாயக அரசியலுக்கு, தமிழகம் காத்திருக்கிறது.

உள்ளாட்சி தேர்தல்களில்
இகக மாலெ வெற்றி பெற்ற இடங்கள்


புதுகை பெரியகோட்டை ஊராட்சி தலைவர் தே.க.கோவிந்தசாமி

கோமாபுரம் ஊராட்சி வார்டு உறுப்பினர் வி.மு.வளத்தான்

புனல்குளம் ஊராட்சி வார்டு உறுப்பினர் கோமதி

சொக்கநாதபட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர் மனோன்மணி

மங்கனூர் ஊராட்சி வார்டு உறுப்பினர் செல்லம்மாள்

மங்கனூர் ஊராட்சி வார்டு உறுப்பினர் துரைமாணிக்கம்

செங்கமேடு ஊராட்சி வார்டு உறுப்பினர் சக்தி

சுத்தம்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர் ராஜேந்திரன்

பலவரசன் ஊராட்சி வார்டு உறுப்பினர் நாகரெத்தினம்

சங்கம்விடுதி ஊராட்சி வார்டு உறுப்பினர் குணசேகரன்

தீத்தான்விடுதி ஊராட்சி வார்டு உறுப்பினர் ஜோதிமணி

திருவள்ளூர் நெற்குன்றம் ஊராட்சி தலைவர் பி.சரஸ்வதி

நெற்குன்றம் ஊராட்சி வார்டு உறுப்பினர் பி.கோவிந்தசாமி

நல்லூர் ஊராட்சி வார்டு உறுப்பினர் எஸ்.வாசு

வெள்ளத்திகோட்டைஊராட்சி வார்டு உறுப்பினர் சிட்டிபாபு

குமரி ரீத்தாபுரம் பேரூராட்சி வார்டு உறுப்பினர் எஸ்.எம்.அந்தோணிமுத்து

கல்குட்டம் பேரூராட்சி வார்டு உறுப்பினர் ஓமனா

வால்வெச்சகோட்டம்ஊராட்சி வார்டு உறுப்பினர் கோவிந்தராஜ்

நெட்டாங்கோடு ஊராட்சி வார்டு உறுப்பினர் அய்யப்பன்

சைமன்காலணி ஊராட்சி வார்டு உறுப்பினர் டெனிக்சன்

ஆத்திவிளை ஊராட்சி வார்டு உறுப்பினர் புஷ்பம்

நெல்லை கொடகநல்லூர் ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆதிலட்சுமி

சுத்தமல்லி ஊராட்சி வார்டு உறுப்பினர் சொர்ணம்

திண்டுக்கல் பாலசமுத்திரம்நகரபஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தங்கவேல்

கோட்டாநத்தம் ஊராட்சி வார்டு உறுப்பினர் ஏ.அர்சுனன்

தஞ்சை மணலூர் ஊராட்சி வார்டு உறுப்பினர் கணேசன்

திருவல்லியங்குடி ஊராட்சி வார்டு உறுப்பினர் பானுமதி

நாகை கற்கோயில் ஊராட்சி வார்டு உறுப்பினர் குணசீலன்

திருமுல்லைவாசல் ஊராட்சி வார்டு உறுப்பினர் சிவசங்கரி

பன்னங்குடி ஊராட்சி வார்டு உறுப்பினர் நெடுஞ்செழியன்

விழுப்புரம் வானாம்பட்டு ஊராட்சி வார்டு உறுப்பினர் ஏழுமலை

விருதுநகர் மேலஒட்டம்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர் புஷ்பவல்லி


தொகுப்பு: எஸ்.சேகர்

சிறப்புக் கட்டுரை

அரசு ஒடுக்குமுறை, ஆதிக்க வன்முறை: ஒரு பரிசீலனை

காம்ரேட்

சதீஷ்குமார். அரசு பயங்கரவாதத்துக்கு எதிராகக் குரல் கொடுத்துவரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன். கனவுகள் விருப்பங்கள் நிறையவே கொண்டிருந்த இளைஞன். கொடூரமாக கொலை செய்யப்பட்ட சதீஷ்குமாரின் உடலில், காவல்துறையினரின் முத்திரை பதிந்திருந்தது. தெளிவான திட்டவட்டமான முன்விரோதம் இருந்தது. வழக்கு மத்திய புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்ட பிறகும், தங்கள் துறையைச் சேர்ந்த குற்றவாளிக்குப் பக்கத்தில் கூட காவல்துறை செல்லவில்லை.
ஆனந்தீஸ்வரன். ஒரு சாமான்ய சாதாரண மனிதர். நியாய உணர்வும் போர்க்குணமும் கொண்ட கோவை வழக்கறிஞர் சமூகத்தைச் சேர்ந்தவர். துடியலுôர் காவல் நிலையத்துக்குச் சென்று, சிவில் வழக்கில் தமது கட்சிக்காரரைக் கைது செய்வது முறையல்ல என முறையிட்டார். கேட்கக் கூடாதவரிடம் கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டதுபோல் கோபம் கொண்ட காவல்துறை பெண் உதவி ஆய்வாளர் மற்ற காவலர்களுடன் சேர்ந்து கொண்டு, காவல்நிலையத்திலேயே, அவரைக் கொலை வெறியுடன் தாக்கினார். வழக்கறிஞர்கள் கோவை ஊரகக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை, வாரக் கணக்கில் முற்றுகையிட்ட பிறகும், குற்றம் செய்த காவலர்கள், இதுவரை கைது செய்யப்படவில்லை.
பரமக்குடி. சாமரம் வீசிய பாமர சாதிகள், தலித்துகள், சாதி ஆதிக்கச் சாட்டையைப் பிடுங்கி எறியத் தயாராகினர். இம்மானுவேல் சேகரன் நினைவு நாளுக்கு அரசு அங்கீகாரம் கோரினர். சின்ன சாதிகளுக்குத் திமிரா என மேல் சாதித் திமிருடன் காவல்துறை, தலித் அறுதியிடலை, துப்பாக்கிச்சூட்டுப் படுகொலை மூலம் அடக்கப் பார்த்தது. நாளும் கொலையாவோர் மீது, மேலும் ஒருவன் கொடுமைத் தாக்குதல். மாநில முதல்வர் ஜெயலலிதா, தயங்காமல், காவல்துறையினர் புனிதமானவர்கள் என்றும், தலித்துகளே வன்முறையாளர்கள் என்றும் பகிரங்கமாகச் சட்டமன்றத்தில் சொன்னார்.
தமிழகம் தாண்டிப் பார்க்கும்போது, மோதல் படுகொலைகள், பசுமை வேட்டை, ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் எனக் கொடூரமாகப் பற்களிலும் நகங்களிலும் ரத்தம் சொட்டச் சொட்ட அரசு பயங்கரவாதம் வெறியாட்டம் போடுகிறது. ஜனநாயக உரிமைகள் மூச்சுத் திணறி விழி பிதுங்கி நிற்கும்போது, மேலும் வன்மையான அரசு வேண்டும் கடுமையான சட்டங்கள் வேண்டும் என்ற குரல்கள் எழுகின்றன.
எல்லா வகைப்பட்ட அரசுகளும், மக்கள் மீது வன்முறையை ஒடுக்குமுறையை ஏவுகின்றன. இடது முன்னணி அரசு, சுந்தர்பன் தொடங்கி, சிங்கூர், நந்திகிராம், லால்கர் என மக்கள் மீது வன்முறையை ஏவியது. பெரும் முதலாளிகள் நிலங்களை கனிம வளங்களை இயற்கை ஆதாரங்களைச் சூறையாட, மக்கள் மீது ஆந்திராவில், ஒடிஷாவில், உத்தரபிர தேசத்தில், அரியானாவில், பீகாரில் வன்முறை ஏவப்படுகிறது. விலகு, ஒதுங்கு, வளர்ச்சி வருகிறது, குறுக்கே நின்றால், இடித்து மிதிப்போம் என்கிறார்கள். எங்கள் சங்கத்தை அங்கீகாரம் செய் என்ற சட்டபூர்வமான கோரிக்கையை வைத்துப் போராடிய மாருதி தொழிலாளர்களை, அரியானா அரசும், பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றமும் இணைந்து, மனேசர் ஆலையில் இருந்து வீசி எறிகின்றனர்.
பார்த்த மாத்திரத்தில் இது அரசு ஒடுக்குமுறை, வன்முறை எனப் புரிகிறது. வேறொரு பாணி வன்முறையும், மதவெறி ஆதிக்க சாதி வெறி ஆதிக்க வன்முறையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தலித்துகளும் இஸ்லாமியர்களும்தான், தங்கள் எண்ணிக்கைக்குப் பொருந்தாத அதிகரித்த அளவில், இந்தியச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் இஸ்லாமியப் படுகொலையை நடத்திய சங்பரிவார், கிறிஸ்தவப் பாதிரி யாரையும், அவரது குழந்தைகளையும் எரித்துக் கொன்ற சங்பரிவார் கூட்டம், தேவாலயங்களையும் மசூதிகளையும் இடித்த சங்பரிவார் கூட்டம், ஓவியர் ஹ÷சைன் இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாட்டிலேயே சாகக் காரணமாயிருந்த சங்பரிவார் கூட்டம், பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதித்துத் தாக்கிய சங்பரிவார் கூட்டம், இப்போது, பிரசாந்த் பூஷனைத் தாக்கியுள்ளது.
பிரசாந்த் பூஷன், உச்சநீதிமன்றத்திற்கே சவால் விட்ட வழக்கறிஞர். ஊழல்களை அம்பலப்படுத்தியவர். குடியுரிமை, ஜனநாயக உரிமைகளுக்காக வாதாடுபவர். அன்னா ஹசாரே குழுவில் உறுப்பினர். காஷ்மீரில் இருந்து ராணுவம் வெளியேற வேண்டும், காஷ்மீரின் எதிர்காலம் பற்றி வாக்கெடுப்பின் மூலம் காஷ்மீர் மக்களே முடிவு செய்ய வேண்டும் எனச் சொன்னதற்காக, சங்பரிவாரால் தாக்கப்பட்டார்.
அரசு ஒடுக்குமுறைக்கு ஆதிக்க வன்முறைக்கு உள்ளே நுழைந்து பார்த்தால்
சாந்தன் முருகன் பேரறிவாளன் மரண தண்டனையை ரத்து செய்யக் கோருபவர்கள், அப்சல் குருவின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோருகிறார்களா? தடா சட்டம் சாந்தன் முருகன் பேரறிவாளன் வழக்குக்குப் பொருந்தாது என்று சொன்ன உச்சநீதிமன்றம், அதே சட்டத்தின் கீழ் சித்ரவதை மூலம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்கள் மூலம் மரண தண்டனை வழங்கியது நியாயமல்ல, கருணை மனு மீது முடிவெடுக்காமல் பல ஆண்டுகள் காலதாமதப்படுத்தியது நியாயமல்ல என மூவர் மரண தண்டனைக்கு எதிராக எழுந்த குரல்கள் மிகச் சரியானவை. நியாயமானவை. செங்கொடி போன்ற கோடிக்கணக்கான தமிழக மக்களின் குரலுக்கு மாநில அரசும் மத்திய அரசும் மதிப்பளிக்க வேண்டும் என நாமும் விரும்புகிறோம்.
ஆனால், அப்சல் குரு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் எனக் குரல் கொடுக்க தீர்மானம் நிறைவேற்ற ஜம்மு காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லாவும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றமும் ஏன் தயங்குகின்றனர்?
அப்சல் குரு, காஷ்மீரைச் சேர்ந்த இஸ்லா மியர், பக்கத்தில் உள்ள பகை நாடான பாகிஸ்தான் சதிகாரர்களோடு சேர்ந்து அப்சல் குரு நாடாளுமன்றத்தை தாக்கினார், பாகிஸ்தான், இஸ்லாமிய பயங்கரவாதம் என்றெல்லாம் சொன்ன பிறகு யாரும் எதுவும் பேச முடியாது, பேசக் கூடாது. பாப்ரி மசூதி வழக்கில் இந்துக்களின் நம்பிக்கைப்படி அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்சல் குருவுக்கு எதிரான வழக்கில் சான்றுகள் சாட்சியங்கள் இல்லாத போதும், நாடாளுமன்றம் மீது தாக்குதல் என்பது மாபாதகக் குற்றம், ஆகவே, மரண தண்டனை வழங்க வேண்டும் என நாட்டின் வெகு மக்கள் கருத்து இருப்பதால் மரண தண்டனை என உச்சநீதிமன்றம் காரணம் சொன்னது.
இந்தப் பின்னணியில்தான் அப்சல் குரு அநியாயமாகத் தண்டிக்கப்பட உள்ளார் என்று காணவிடாமல், பொய்யான ஆபத்தான, பாகிஸ்தான் எதிர்ப்பு, இஸ்லாமிய எதிர்ப்பு, தேசபக்தி, குறுக்கே நிற்கிறது. அத்துடன், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதியை உடனே துôக்கில் போடு என வக்கிரமாய்க் கொக்கரிக்கிறது.
அமெரிக்காவின் கதையில் இருந்து
அமெரிக்க மக்களின் ஆன்மாவை, உணர் வுகளை, நம்மால் சுலபமாக, ‘வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்’ இயக்கத்தில் காண முடியும். பனிப்புயல் அமெரிக்காவை பாடாய்ப் படுத்தும்போதும், விடுதலைச் சதுக்கம் எனப் பெயர் சூட்டப்பட்ட சுக்கோட்டி பூங்காவில், வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கத்தினர், தம் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.
ஆனால், அமெரிக்க அரசு, இரட்டைக் கோபுரம் தாக்குதலுக்குப் பிறகு மிகவும் வசதியாக ஒரு கருத்தொற்றுமையை உற்பத்தி செய்தது. இஸ்லாமிய பயங்கரவாதத்தால், பின்லேடனால், முல்லா உமரால், சதாம் உசேனின் பேரழிவு ஆயுதங்களால் அமெரிக்காவுக்கு அமெரிக்க மக்களுக்கு ஆபத்து என திரும்பத் திரும்பச் சொன்னார்கள். ‘நாம் எதிர் அவர்கள்’, என்னோடு இல்லாதவர் எதிரியோடு இருக்கிறார் என்ற கருத்துக்கள், அமெரிக்கா முழுவதும் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் போர்த் தொழிலையும் நிதிநிறுவன முதலாளிகளையும் கொழுக்க வைத்து, அமெரிக்க மக்களின் வீடுகளை, வேலைகளை வருமானத்தைப் பிடுங்கிக் கொண்டார்கள். அமெரிக்க மக்கள் மீதான போர் தொடுக்கும்போதே, அமெரிக்க மக்கள் நன்மைக்காகவே எல்லாம் செய்கிறோம் என நியாயப்படுத்தினார்கள்.
துனீசியாவில், எகிப்தில் உருவான அரபு வசந்தத்தை, லிபியாவில் கடாபி படுகொலை, சிரியாவிற்கு, ஈரானுக்கு மிரட்டல் என எடுத்துச் சென்றுள்ளார்கள். லிபியாவின் எண்ணெய் வளத்தை, எரிசக்தி ஆற்றலைக் கைப்பற்ற, ஒடுக்குமுறைக்கு எதிரான ஜனநாயகத்திற்கான போர் என, நாடகம் ஆடுகிறார்கள்.
நேரடியாக ஒடுக்குமுறை என்றில்லாமலேயே, சாமர்த்தியமாக, தமது நடவடிக்கைகளுக்கு, ஒரு கருத்திசைவை ஏற்படுத்தி மக்கள் ஒப்புதலைப் பெற்றுள்ளார்கள். சிரியா, ஈரான் விசயத்தில் இந்த சதி எடுபடாது. அமெரிக்கா, இஸ்ரேல் மூலம் லெபனானின் ஹிஸ்புல்லாவையும் பாலஸ்தீனின் ஹமாசையும் அழிக்க முயன்று மூக்குடைந்து போனது. ஈரான் பதிலடி கொடுக்கும். அமெரிக்க மக்கள் மத்தியிலும் ஏகாதி பத்திய போர்களின் சாயம் வெளுத்து வருகிறது.
அரசு: தட்டையான ஒற்றைப் பரிமாணப் பார்வை உதவாது
அரசு ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை அடக்கி ஆளும் ஒடுக்குமுறைக் கருவி என்பது மிகச் சரியான அடிப்படை நிலைப்பாடு ஆகும். முதலாளித்துவச் சமூகத்தில், அரசு, முதலாளித்துவம், பாட்டாளி வர்க்கத்தை ஒடுக்குவதற்கான ஓர் ஒடுக்குமுறைக் கருவி என்பது சரிதான். ஆனால், இதனைத் தட்டையாக ஒற்றைப் பரிமாணத்தில் நிறுத்துவது போதாது. இங்கே மதம் மக்களுக்கு அபினி போன்றது என்ற அளவுக்கு மட்டுமே மார்க்சின் மேற்கோளைச் சுருக்கிப் பார்க்கக் கூடாது. மதம் ஒடுக்கப்பட்ட மக்களின் நெடுமூச்சு, ஆன்மா இல்லாத உலகின் ஆன்மா, இதயம் இல்லாத உலகின் இதயம், தனது உண்மையான சாரத்தை இழந்த மனிதராலும், தனது உண்மையான சாரத்தை உணராத மனிதராலும் உணரப்படும் உலகப் பார்வையே மத உணர்வாக வெளிப்படுகிறது.
இத்தகைய மனப்பாங்கு, இத்தகைய சமூகநிலை மதத்தை உருவாக்குகிறது என மார்க்ஸ் குறிப்பிட்ட விசயங்கள் மீது கவனம் செலுத்தப்படாததை, நினைவில் கொள்வது நல்லது. மதம் மனிதர்களை உருவாக்குவதில்லை, மனிதர்களே மதங்களை உருவாக்குகிறார்கள், ஆகவே மதம் நிலவுவதற்கான சமூகப் பொருளியல் நிலைமைகளை மாற்றப் போராடாமல், மதஉணர்வை தனித்து எதிர்க்கப் பார்ப்பது உதவாது என்பது தெளிவாகும்.
எங்கெல்ஸ் அரசு, வர்க்க ஆட்சி, ஒடுக்குமுறை, சுரண்டல் என ஏதுமில்லாத புராதனப் பொது உடமை சமூகத்தில் இருந்து, குடும்பம், தனிச்சொத்து, அரசு என்பவை உருவெடுத்தன என்பதை விவரிக்கிறார். வர்க்கங்கள் தோன்றிய உடன் வர்க்கப் பகைமை வந்துவிடுகிறது.
‘இந்தப் பகைமைகள், எதிர்மறையான பொருளாதார நலன்களைக் கொண்டிருக்கும் வர்க்கங்கள், வீண் சண்டையில் தம்மையும் சமூகத்தையும் அழித்துவிடக் கூடாது என்பதற்காக, சமுதாயத்திற்கு மேலே இருப்பதாகக் காட்டிக் கொள்கிற ஒரு சக்தி அவசியமாய் இருந்தது. சண்டையின் கடுமையைத் தணிப் பது, ஒழுங்கு எனும் வரம்பிற்குள் அதைக் கட்டுப்படுத்துவது, அதன் நோக்கமாகும். சமூகத்தில் இருந்து தோன்றிய, சமூகத்திற்கும் மேலாகத் தன்னை உயர்த்திக் கொண்டு, சமூகத்தில் இருந்து தன்னை மேலும்மேலும் அந்நியப்படுத்திக் கொள்கிற இந்த சக்தியே அரசு என்பதாகும்’. அரசு சமூகத்தில் இருந்துதான் எழுகிறது. ஆனால், வர்க்க சமூகம், வர்க்க பகைமைகள் என்பவற்றிற்கெல்லாம் மேலே இருப்பதாக, தன்னை உயர்த்திக் கொண்டு, தோற்றம் தருகிறது.
ஏன் அப்படிச் செய்கிறது? எதிர்மறை வர்க்கங்கள் எப்போதும் எந்நாளும் சண்டையிட்டுக் கொண்டு தம்மையும் சமூகத்தையும் அழித்துவிடக் கூடாது. அப்படித் தோற்றம் தருவதன் மூலம், சண்டையின் கடுமையைத் தணிக்கப் பார்க்கிறது. சண்டையை ஒழுங்கு எனும் வரம்பிற்குள், கட்டுப்படுத்துகிறது. வர்க்கப் பகைமையில் இருந்து எழும் வர்க்கப் போராட்டத்தின் கடுமையைத் தணிக்கவும், அதனை ஒரு வரம்பிற்குள் கட்டுப்படுத்தவும், அரசு முயற்சிக்கும். பாரிஸ் கம்யூன், ரஷ்ய புரட்சி, சீனப் புரட்சி அனுபவங்களில் இருந்து நிச்சயம் முதலாளித்துவம் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறது.
முதலாளித்துவம், முதலாளித்துவ அரசு மற்றும் முதலாளித்துவ அரசியலின் துணை கொண்டு ஆள்கிறது. அனைவருக்கும் வாக்குரிமை, அரசியலமைப்புச் சட்ட ஆட்சி சட்டத்தின் முன் அனைவரும் சமம் போன்றவற்றின் மூலம்தான் வர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட பொதுவான சக்தி என்ற தோற்றம் தர முயற்சிக்கிறது. மக்களின் வாக்குகள் பெற்று முதலாளிகளின் ஆட்சி நடத்தப்படுகிறது. கைகளுக்கும் கால்களுக்கும் விலங்கு போடும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளோடு நின்றுவிடாமல், மூளைக்கு விலங்கு போடும் சிந்தனை மேலாதிக்கத்திற்காக, தன் சதித்திட்டங்களை திணித்து ஏற்க வைப்பதற்காக இடைவிடாமல் முயற்சிக்கிறது. அப்படிச் செய்யாமல், ஒரு சிறுபான்மை, ஒரு மிகப் பெரும்பான்மையின் மீது தன் ஆதிக்கத்தைச் சில ஆயிரம் ஆண்டுகளாக நீடிக்க முடியுமா?
அந்நிய சதி, பாகிஸ்தான் சீனா ஆபத்து, வளர்ச்சி எனப் பல கருத்தாயுதங்களை அரசு தன் கைவசம் வைத்துள்ளதோடு, திறம்படப் பயன்படுத்தவும் செய்கிறது. கூடங்குளத்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு பேராபத்து என்பதை மூடிமறைக்க, மின்சாரத் தேவை நிறைவு அதனால் வளர்ச்சி முன்னேற்றம், அதனால் மக்களுக்கு நல்வாழ்க்கை கிடைக்கும் எனச் சொல்லி, இவற்றை நடக்கவிடாமல் மக்கள் விரோத சக்திகள் சதி செய்கிறார்கள் எனப் பிரச்சாரம் செய்கிறது. குற்றவாளிகள் நியாயவான்களாக நடிக்கிறார்கள்.
சமூகம் வர்க்கங்களாக பிளவுண்டிருக்கிறது என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்குச் சமூகத்திலுள்ள வர்க்கங்களுக்கு வெவ்வேறு பிரிவினர்க்கு வெவ்வேறு பகுதி/பிரிவு நலன்கள் உள்ளன என்பதும் உண்மையே.
பல நேரங்களில் பகையற்ற இந்தப் பகுதி/பிரிவு நலன்களை, மிகவும் திறமையாகவும் இயல்பாகவும், ஒன்றோடு ஒன்று மோத விடவும் செய்கிறார்கள். தலைமுறை தலைமுறையான வழக்கம்/பழக்கம் காரணமாக ஆளும் வர்க்கங்கள், ஆளும் வர்க்கக் கட்சிகள், அரசு ஆகியவை தம்மைக் காப்பாற்றிக் கொள்ளவும், மக்கள் மீது ஆதிக்கம் செலுத்த வும் மிக இயல்பாகக் காய்களை நகர்த்துவார்கள். (எந்த அறையிலும் கூடி உட்கார்ந்து சதி செய்ய வேண்டியது இல்லை).
ஒடுக்குமுறையை வன்முறையைச் சுருக்கிப் பார்க்கலாமா?
துப்பாக்கி கொண்டு சுடுவது, தடியால் அடிப்பது, சிறையில் அடைப்பது மட்டுமே ஒடுக்குமுறை வன்முறை ஆகுமா? சுதந்திரப் பாட்டாளி பற்றிப் பேசும்போது, உற்பத்திச் சாதனங்கள் பறிக்கப்பட்டதன் மூலம் காலும் கையுமே உள்ளவன் சுதந்திரப் பாட்டாளி எனவும், எந்த முதலாளிக்கு வேண்டுமானாலும் தன் உழைப்பு சக்தியை விற்கும் சுதந்திரம் உள்ளவன் பாட்டாளி எனவும் சொல்லி, மூன்றாவதாக முதலாளித்துவம் பாட்டாளிக்கு வழங்கியுள்ள இன்னொரு சுதந்திரத் தன்மையை மார்க்ஸ் குறிப்பிடுகிறார். உழைப்புச் சக்தியை விற்க முடியாதபோது செத்து மடியும் சுதந்திரம் பாட்டாளிக்கு உண்டென்று சொல்லி, முதலாளித்துவச் சுரண்டலை ஒடுக்கு முறையை தோலுரித்துக் காட்டுகிறார்.
செல்வத்தைச் சிலர் கைகளில் மலையெனக் குவித்து வறுமையை கடலெனப் பெருக்குவது வன்முறை ஒடுக்குமுறை இல்லையா? கோடிக்கணக்கான மக்களுக்கு போதுமான அளவுக்கு வேலையோ கூலியோ தராமல் அரைப்பட்டினி போடுவது, ஒரு நாளில் நகரத்தில் ரூ.32 அல்லது கிராமத்தில் ரூ.26 இருந்தாலே வறுமை போய்விடும் எனக் கேலி பேசுவது வன்முறை ஒடுக்குமுறை இல்லையா? கல்வி மருத்துவ வசதி குடிமை வசதிகள் மறுப்பது வன்முறை ஒடுக்குமுறை இல்லையா? 1995 முதல் 2010 வரை கடன் சுமை தாளாமல் 2,56,913 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலையை உருவாக்கியது வன்முறை ஒடுக்குமுறை இல்லையா? வேலை மறுப்பது, போராடுபவர்களைப் பட்டினி போட்டு பணிய வைப்பது வன்முறை ஒடுக்குமுறை இல்லையா?
மனிதகுல வரலாற்றில், போரை விட பல மடங்கு பிரும்மாண்டமான ஆட்கொல்லி, வறுமையே. வறுமையைப் பரவ விடுவது நீடிக்க விடுவதுதான் எல்லாவற்றையும் விட மிகப் பெரிய வன்முறையும் ஒடுக்குமுறையும் ஆகும்.
தேவை ஓர் ஒருங்கிணைந்த பார்வை. தேவை ஒரு சங்கமம்
அரசு ஒடுக்குமுறையின் அனைத்தும் தழுவிய தன்மையை உணர வேண்டும். அதன் அடிப்படை இயல்பைக் காண வேண்டும். அவற்றில் இருந்து ஒரு விடாப்பிடியான அனைத்தும் தழுவிய ஜனநாயக அணுகு முறையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இடிந்தகரை போராட்டம் இந்திய மக்கள் போராட்டம், மாருதி தொழிலாளர்கள் போராட்டம் எங்கள் வர்க்கப் போராட்டம், தலித் மதச்சிறுபான்மையினர் போராட்டம் எங்கள் மக்கள் போராட்டம் என்ற அனைத்தும் தழுவிய ஜனநாயகப் பார்வையே காலத்தின் தேவை. சுரண்டலைக் காப்பாற்றவே ஒடுக்குமுறை. ஒடுக்குமுறையை வீழ்த்த, ஆட்சியில் அமர்ந்துள்ள முதலாளித்துவக் கொள்கைகளைப் பின்னுக்குத் தள்ளுவதற் கான ஓர் ஒன்றுபட்ட போராட்டம் தேவை.
சமாதானத்திற்கான பொதுவான ஜனநாயக இயக்கம், நில ஆதீனங்களுக்கு எதிரான விவசாய ஜனநாயக இயக்கம், ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் தேச விடுதலை மற்றும் தேசிய சமத்துவத்திற்கான இயக்கம், முதலாளித்துவ சர்வாதிகாரத்தை வீழ்த்தி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் படைக்கும் சோசலிச இயக்கம் போன்ற அனைத்து நீரோட்டங்களையும் நவம்பர் புரட்சியில் இணைக்கும் திறமையை போல்ஷ்விக் கட்சி பெற்றிருந்தது. அதனால்தான் ரஷ்யப் புரட்சி வென்றது. ரஷ்யப் புரட்சியில் இருந்து நாமும் இந்தப் பாடங்களைக் கற்போம்.

கடிதம்

ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ.....

தமிழக முதலமைச்சருக்கு ஒரு கடிதம்

மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கு,
வணக்கம்.
எனக்கு ஓர் உண்மை தெரிய வேண்டும். உங்கள் வீட்டு வாசலில் வந்து என்னால் உடுக்கையடிக்க முடியாது. அதனால்தான் இந்தக் கடிதம்.
இப்போதெல்லாம் கொடநாட்டுக்கு ஓய்வெடுக்க உங்களால் செல்ல முடிவதில்லை. ஒரு முறை டில்லி சென்று வந்தீர்கள். பிறகு பெங்களூரு நீதிமன்றம்தான், இந்த ஆறுமாத காலத்தில் நீங்கள் தமிழகம் விட்டு வெளியே சென்ற பயணம். தமிழக மக்களுக்கு ஆற்ற வேண்டிய தீராப்பணி உங்களை தடுத்தாலும் உங்களால் பெங்களூரு நீதிமன்றம் செல்வதை தவிர்க்க முடியாமல் போனது.
இந்த அயராப் பணிகள் ஊடே ஹிலாரி கிளின்டன் கூட சென்னை வந்து உங்களை சந்தித்து வாழ்த்துச் சொல்லிச் சென்றார். கழகக் கண்மணிகள் இதுவரை இந்தியாவுக்கு வருகை தந்த அமெரிக்க ஆட்சித் தலைவர்கள் யாராவது எந்த முதலமைச்சரையாவது நேரில் வந்து பார்த்துவிட்டு வாழ்த்துச் சொல்லியிருக்கிறார்களா? எங்கள் அம்மாவுக்கு மட்டுமே அந்தப் பெருமை என்று புளங்காகிதமடைந்தார்கள்.
ஹிலாரி சந்திப்பு அப்படியே இருக்கட்டும். சமீபத்தில் தெகல்கா பத்திரிகையில் வெளி வந்துள்ள கட்டுரை இலவச மடிக்கணினி தொடர்பாக சில விசயங்கள் சொல்லியுள்ளது. தாங்கள் படித்திருப்பீர்கள். இருந்தாலும் நானும் சொல்கிறேன்.
சமச்சீர் பாடத்திட்டத்தில் தமிழக மாணவர்கள் என்ன பாடு பட்டார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. அப்போது அவர்களுக்கு தரப்படும் கல்வி பற்றிய தரம் பற்றி தாங்கள் மிகுந்த அக்கறை காட்டினீர்கள். தேர்தல் வாக்குறுதிப்படி 70 லட்சம் ஏழை மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்குவதற்கான வேலையையும் தமிழக அரசு துவங்கிவிட்டது.
முதல் கட்டமாக இந்த ஆண்டு 9,12,000 மடிக்கணினிகள் விநியோகிக்க தமிழக அரசின் எல்காட் நிறுவனம் சூன் 4 அன்று ஒப்பந்தப் புள்ளிகளுக்கான விளம்பரம் வெளியிட்டது. மடிக்கணினியின் கட்டமைப்பு (கான்ஃபிகரேசன்) பற்றியும் தெளிவாக தெரிவிக்கப் பட்டிருந்தது.
இடையில் திடீரென செலவு கூடுதலாகிறது என்று சர்ச்சை எழுப்பப்பட்டு செலவைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் ஆகஸ்ட் 20 அன்று திருத்தப்பட்ட ஒப்பந்தப் புள்ளிக்கான இரண்டாவது விளம்பரத்தை எல்காட் நிறுவனம் வெளியிட்டது. இந்த இரண்டு தேதிகளுக்கும் இடையில் சூலை 20 அன்று ஹிலாரி உங்களை சந்தித்தார்.
ஹிலாரி உங்களை சந்தித்ததற்கும் இரண்டாவது ஒப்பந்தப் புள்ளி கோருவதற்கும் தொடர்பு ஏதும் இல்லை என்று நீங்கள் சொல்ல முனையலாம்.
நல்லது. மேலே படியுங்கள்.
முதலில் வெளியிடப்பட்ட ஒப்பந்தப் புள்ளியில் கேட்கப்பட்டிருந்த மடிகணினியில் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட இரண்டு விதமான துவங்குதளங்கள் (பூட்டிங் சிஸ்டம்), ஒரு வருடத்துக்கான வைரஸ் எதிர்ப்பு மென்பொருள், கம்பி மூலம் தொடர்பில்லாமல் மின் னணு அலைகள் மூலம் (வயர்லெஸ்) இணையதளம் பெறும் வசதி, புகைப்படக் கருவி, கூடுதல் கொள்ளளவு என கூடுதல் வசதிகள் இருந்த தாகவும், இரண்டாவது வெளியிடப்பட்ட ஒப்பந்தப் புள்ளியில் இரண்டு விதமான துவங்குதளங்களுக்குப் பதிலாக மைக்ரோசாஃப்ட் துவங்குதளம் மட்டுமே கோரப்பட்டுள்ளதாகவும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள், கம்பி மூலம் தொடர்பில்லாமல் மின்னணு அலைகள் மூலம் (வயர்லெஸ்) இணையதளம் பெறும் வசதி, புகைப்படக் கருவி ஆகிய அவசியமான வசதிகள் இல்லாமல் முதல் ஒப்பந்தப்புள்ளியில் சொல்லப்பட்ட கொள்ளளவில் பாதி மட்டுமே கோரியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழக அரசே சொன்னதுபோல், செலவைக் குறைக்கத்தான் இப்படிச் செய்துள்ளார்கள். செலவு கூடியதே மைக்ரோசாஃப்ட் துவங்குதளம் கோரப்பட்டதால்தான். ஒரு கணினிக்கு ரூ.15,000 வரை செலவு செய்யலாம் என்றால் மைக்ரோசாஃப்ட் துவங்குதளமே ரூ.5,000 ஆகிவிடுகிறது. மைக்ரோசாஃப்ட் துவங்குதளம் இல்லாமல் பொதுவில் இலவசமாகக் கிடைக்கிற லினக்ஸ் துவங்குதளம் மட்டும் இருந்தால் செலவு குறைவதுடன் மாணவர்களுக்கு மிகவும் அவசியமான மென் பொருட்களையும் கொடுத்திருக்கலாம். மைக்ரோசாஃப்ட் துவங்குதளம் என்றால் மற்ற அனைத்து செயல்பாடுகளுக்கும் மைக்ரோ சாஃப்ட் மென்பொருட்களை சார்ந்து இருக்க வேண்டியிருக்கும். அது மடிக்கணினி பெறப் போகிற ஏழை மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் தண்டனையும் தந்ததாக இருக்கும். ஆனால் இலவசமாகக் கிடைக்கும் லினக்ஸ் இயங்குதளம் மேம்பட்ட செயல்பாடு கொண்டது. எல்காட் நிறுவனமே லினக்ஸ் கொண்டுதான் இயங்குகிறது.
இப்படி இருக்க, மைக்ரோசாஃப்ட் இயங்குதளம் இல்லை என்று முடிவு செய்வதற்கு பதிலாக, லினக்ஸ் இல்லை, பிற அவசியமான வசதிகள் இல்லை என்று எல்காட் அதிகாரிகள் ஏன் முடிவு செய்தார்கள்? இந்த முடிவின் படி இலவச மடிக்கணினி திட்டத்துக்கு தேவைப்படும் 68 லட்சம் உரிமங்களுக்கு இன்னும் கூடுதல் செலவல்லவா ஆகும்?
இதற்கும் ஹிலாரிக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? இன்னும் படியுங்கள். இனி வருவதும் உங்களுக்கு தெரிந்த கதைதான்.
ஹிலாரியும், கிளின்டனும் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்துக்கு மிக நெருக்கமானவர்கள். ஹிலாரியின் தேர்தல் பிரச்சாரத்துக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மிகப்பெரிய நிதியாதாரமாக இருந்தது.
உலகின் முதல் பணக்காரராக இருந்த பில் கேட்ஸ் தகவல்தொழில் நுட்பத் தொழிலின் கடுமையான போட்டியின் காரணமாக இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். இன்றும் கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அலைபேசிக் கருவிகளில் கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு மென்பொருளே பயன்படுத்தப்படுகிறது. அங்கு மைக்ரோசாஃப்டுக்கு இடமே இல்லை. எனவே, கணினிகள், மடிக்கணினிகள் சந்தையில் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்வது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு மிகவும் அவசியம்.
அப்படி இருக்கும்போது, 68 லட்சம் உரிமங்கள், அதனால் வரும் தொடர் சந்தை ஒன்று கண்ணில் தெரியும்போது அதைக் கைப்பற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முயற்சி செய்கிறது. எல்காட் நிறுவனம், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இயங்குதளத்தை திரு.உமாசங்கர் பொறுப்பில் இருந்தபோது நிராகரித்து இருக்கிறது.
இந்தப் பின்னணியில் கூடவா ஹிலாரி உங்களை சந்தித்தது வெறும் வாழ்த்துச் சொல்ல என்று சொல்லப் பார்க்கிறீர்கள்? இன்னும் கொஞ்சம் படியுங்கள்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன் சந்தையைப் பெருக்க பலவிதமான வழிகளையும் கையாள்கிறது. வியட்நாம் அரசாங்கம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் 3 லட்சம் உரிமங் கள் வாங்க அமெரிக்க அரசாங்கத்தால் நிர்ப் பந்திக்கப்பட்டது என்று விக்கிலீக்ஸ் கசிவுகள் சொல்கின்றன. துனிசியா அரசாங்கம் இலவச மென்பொருட்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில், துனிசிய அதிபரின் மனைவி நடத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனத்துக்கு பில் கேட்ஸ் ஃபவுண்டேசன் நிதியுதவி செய்கிறது என்றும், இது மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் சந்தையை விரிவாக்கும் பல நேரடி, மறைமுக முயற்சிகளில் ஒன்று என்றும் விக்கிலீக்ஸ் கசிவுகள் சொல்கின்றன.
இப்போதும், ஹிலாரி சந்திப்புக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கும் இலவச மடிக்கணினித் திட்டத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்வீர்களா?
இலவச வண்ணத் தொலைக்காட்சித் திட்டமே குடும்பத் தொழிலை வளர்க்க என்று நீங்களும்தானே சொன்னீர்கள்? இலவச மடிக் ணினி விசயத்தில் அப்படி ஏதும் நடக்காமல் நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள். ஏனென்றால் உங்களுக்கு குடும்பமே இல்லை என்பீர்கள்.
நல்லது. அப்படியானால், ஹிலாரி உங்களுக்கு வாழ்த்துச் சொல்ல மட்டும்தான் வந்தாரா? நீங்கள் அவரிடம் இருந்து வாழ்த்து மட்டும்தான் பெற்றுக்கொண்டீர்களா? அவர் வெறுங்கையுடன் திரும்பினாரா? எனக்கு இது பற்றிய உண்மை தெரிய வேண்டும். அடுத்த முறை பெங்களூரு நீதிமன்றம் செல்வதற்கு முன் சொல்வீர்களா?
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள,
மடிக்கணினிக்காக காத்திருக்கும்
70 லட்சம் மாணவர்களில் ஒருவர்

கையேடு

தமிழகத்தைக் கட்டியெழுப்பும் இடம்பெயரும் தொழிலாளர் நலன் காக்க

தீபாவளி கொண்டாட்டம், அடைமழை எல்லாம் இருந்தபோதும், அந்த நாட்கள் உட்பட, பிற மாநில தொழிலாளர் மத்தியில் விடாமல் வேலை செய்கிற தோழர் மோகன் ஏஅய்சிசிடியு சென்னை மாவட்ட மாநாட்டில் பேசும்போது,
எங்குடும்ப பாரமெல்லாம்
என் தோளில் நானிழுக்க
என்னை அந்த ஏரிழுக்க
ஏரை எருதிழுக்க
சென்ட் நெலமுமில்ல
செல்வாக்கு ஏதுமில்ல
அந்த மாடு ரெண்டும் இல்லையின்னா
நா மாரடிக்கணும் பண்ணையில
என்ற பாடலைச் சொல்லி ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பற்றிய இந்தப் பாட்டு பிற மாநில தொழிலாளர்களுக்கும் பொருந்தும் என்றார்.
விவசாய நெருக்கடி வெளியே தள்ள, மாடுகளோ அவற்றைக் கொண்டு விவசாயம் செய்ய நிலமோ ஏதுமின்றி, தங்கள் சொந்த மண்ணை விட்டு பிழைப்புத் தேடி வந்த பிற மாநில தொழிலாளர்கள் இன்று தமிழகத்தின் கட்டுமானப் பணிகளில் மாரடிக்கிறார்கள். பண்ணைக்கும் கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்களுக்கும் அவர்கள் வாழ்நிலைமைகளில் பெரிய வேறுபாடுகள் இல்லை. அங்கு பண்ணை அடிமை. இங்கு கூலி அடிமை.
இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் வேலை செய்வது ஒரு சிறப்பு அனுபவம். உலகமயக் காலங்களிலும், மனிதர்கள், தமது வேர்களை மறப்பதில்லை. வேறு வழி இல்லாததால்தான், வேலை தேடி, வெளிமாநிலம் செல் கிறார்கள்.
ஈழத்திற்கான போராட்டத்தின் ஊடே லட்சக்கணக்கான தமிழர்கள் வேறு நாடுகள் சென்றனர். பனையைப் பிரிந்து பனியில் புலம் பெயர்ந்து புகலிடம் தேடி உள்ளனர். பாலஸ்தீனியர்கள், ஆசிய நாட்டவர், ஆப்பிரிக்க இசுலாமியர், கிழக்கு அய்ரோப்பியர் அய்ரோப்பாவெங்கும் உள்ளனர். அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் புலம் பெயர்ந்தவர்களால் உருவான நாடுகள். மண்ணின் மைந்தர்களை அந்த மண்ணிலேயே புதைத்து விட்டனர்.
இன்றைய உலகில், தமிழக மக்களில் ஒரு கணிசமான எண்ணிக்கையினர் வேறு நாடுகளுக்கும் வேறு மாநிலங்களுக்கும் இடம் பெயர்ந்துள்ளனர்.
நெருக்கடிக்குள்ளாகும் முதலாளித்துவம், ‘நாம் எதிர் மாற்றார்கள்’ என்ற முரண் பாட்டை உருவாக்கிக் கூர்மைப்படுத்தி, குளிர் காயவும் தப்பிக்கவும் முயற்சிக்கும்.
இன்று தமிழ்நாட்டு விவசாயம் நாசமாகி உள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் மக்கள் இடம் பெயர்கின்றனர். தமிழ்நாட்டில், ஒரு சமச்சீரற்ற, நகர்மயமாதல் தொழில்மயமாதல் கொண்ட, முதலாளித்துவ வளர்ச்சி நடை பெறுகிறது.
முதலாளித்துவத்தைக் கட்டி எழுப்ப, குறைந்த கூலி, மோசமான வேலை நிலைமைகள், ஒடுக்குமுறை எல்லாவற்றையும் தாண்டி, வங்கம், ஒடிஷா, பீகார், சட்டிஸ்கர், ஜார்க்கண்ட், ஆந்திர மாநிலத் தொழிலாளர்கள், லட்சக்கணக்கில் தமிழகம் வந்துள்ளனர்.
அவர்களை வரவேற்பதும், பாதுகாப்பதும், பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தில், மானுட சாரத்தில் நம்பிக்கையுள்ள நம் ஒவ்வொருவரின் கடமை. எல்லா வெறிவாதங்களைப் போல், தமிழ்த்தேச வெறியும் ஆபத்தானதே.
மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயரும் தொழிலாளர்களின் உரிமைகள் காக்க, இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான சட்ட ஷரத்துக்கள், விதிகள், படிவங்கள் பற்றிய குறிப்புக்கள் அடங்கிய ஒரு கையேடு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
அவர்களை இயக்கமாக்க, அவர்களது வேலை நிலைமைகளையும், சமூக வாழ்நிலை மைகளையும், அக்கறையுடன், பழகிப் படித்து, தேடி நாடி, ஆய்வு செய்து, அறிந்து கொள்ள வேண்டும். அவர்களைச் சங்கமாக்குவதில், இயக்கங்களில் திரட்டுவதில் முன்கை எடுக்க வேண்டும். பெருநகர சென்னை, மற்றும் மேற்கு மாவட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
இடம்பெயரும் தொழிலாளர் கோரிக்கைகள்
தமிழ்நாட்டில், இடம்பெயர்ந்த தொழிலாளர் நலன் காக்க, ஒரு கூடுதல் தொழிலாளர் ஆணையர் மற்றும் போதுமான அலுவலர்கள் வேண்டும்.
இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய விவரங்கள், சட்ட அமலாக்கம் பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சட்ட அமலாக்கம் கறாராகக் கடை பிடிக்கப்பட்டு, மத்திய தொழிற்சங்கங்களிடம், தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டு, ஆலோசனைகள் கேட்கப்பட வேண்டும்.
இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பு, கவுரவம் என்ற நோக்கில், வன்கொடுமைச் சட்டத்தின் ஓட்டைகள் தவிர்த்தபின், அதற்கு இணையான ஒரு சட்டம் வேண்டும்.
இந்த மூன்று அடிப்படைக் கோரிக்கைகளுடன், கையேட்டின் உதவியுடன், களப் பணிகள் துவங்கப்படும். சில நூறு உறுப்பினர்கள் உள்ளனர். பிற மாநில தொழிலாளர்களை பல்லாயிரங்களில் அமைப்பாக்கும் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

- எஸ்.கே

அறைகூவல்

அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பின் தேசிய கருத்தரங்கம்

மக்களின் செல்வாதாரங்கள் மீது மக்களுக்கு உரிமைகள் வேண்டும்!
இடதுசாரி புத்தெழுச்சிக்கான மக்கள் போராட்டங்கள் முன்செல்லட்டும்!

அக்டோபர் 10 - 11 தேதிகளில் ஜலந்தரில் அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பின் தேசிய கருத்தரங்கம் நடத்தப்பட்டது. பஞ்சாப் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் ஹர்கன்வால் சிங், இகக மாலெ விடுதலையின் தோழர் கிருஷ்ணா அதிகாரி, லால் நிஷான் கட்சி (லெனினிஸ்ட்) தோழர் உத்தவ் ஷிண்டே, கேரளா இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுவின் தோழர் சந்திரசேகர் ஆகியோர் கொண்ட தலைமைக் குழு கருத்தரங்கிற்கு தலைமை தாங்கியது.
அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பின் உறுப்பு அமைப்புக்களான பஞ்சாப் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் தோழர் மங்கத்ராம் பஸ்லா, லால் நிஷான் கட்சி (லெனினிஸ்ட்)யின் பொதுச்செயலாளர் தோழர் பீம்ராவ் பன்சோத், கேரளா இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளர் தோழர் கே.எஸ்.ஹரிஹரன், இககமாலெ விடுதலையின் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா ஆகியோர் கருத்தரங்கில் உரையாற்றினர்.
டார்ஜீலிங்கின் புரட்சிகர மார்க்சிஸ்டுகள் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சியவாதிகள் மேடையின் பொதுச் செயலாளர் தோழர் ஜெயந்த குப்தா பய்யா, அரியானா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் தோழர் பல்வீந்தர் சிங் திண்ட் ஆகியோர் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.
கேரளா இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுவின் 6 பேர் கொண்ட குழு கருத்தரங்கில் கலந்து கொண்டனர். புரட்சிகர மார்க்சிஸ்டுகள் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர். மாலெ கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கார்த்திக் பால் மற்றும் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் சஞ்சய் சர்மா, பிரபாத் குமார், சுதாகர் யாதவ், ராஜாராம் சிங், பகதூர் ஓரான், கவிதா கிருஷ்ணன் ஆகியோருடன் அகில இந்திய கிசான் மகாசபா, அகில இந்திய மாணவர் கழகம் மற்றும் பிற வெகுஜன அமைப்பின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
சமீபத்தில் உயிரிழந்த புரட்சிகர கலாச்சார செயல்வீரர் தோழர் குருச்சரண் சிங்குக்கு கருத்தரங்கம் அஞ்சலி செலுத்தியது. அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பு துவங்கப்பட்ட கடந்த ஓராண்டு கால அனுபவத்தை தோழர் மங்கத்ராம் பஸ்லா தனது வரவேற் புரையில் முன்வைத்து அந்த அனுபவங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றார். கருத்தரங்கில் கலந்து கொண்ட கட்சிகள் தவிர மேற்குவங்கத்தின் டிசிசிபிஅய்எம், மகாராஷ்டிராவின் கோதாவரி வருலேகர் மஞ்ச் ஆகியன இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க இயலாவிட்டாலும் தங்களது ஆதரவை, நல்லெண்ணங்களை தெரிவித்துள்ளன என்றார்.
தோழர் திபங்கர் பட்டாச்சார்யா கருத்தரங்க வரைவு தீர்மானத்தை முன்வைத்து அதன் நோக்கங்களை விளக்கினார்.
லால் நிஷான் கட்சி (லெனினிஸ்ட்)யின் தோழர் பீம்ராவ் பன்úஸôட் கருத்தரங்கில் உரையாற்றினார். எல்லா இடங்களிலும் மக்கள் இயக்கங்கள் வளர்ந்து வருகின்றன. இடதுசாரிகளுக்கான வாய்ப்பு விரிவடைகிறது என்றார். இடதுசாரிகள் இதர போராடுகிற சக்திகளை சென்றுசேர இது சரியான தருணம் என்றார்.
கேரளா இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுவின் தோழர் குமரன்குட்டி, மார்க்சிஸ்ட் கட்சியின் திவால் தனமும், துரோகமும் மிகுந்த செல்வாக்குடன் இருந்த மேற்குவங்கம் உட்பட இரு மாநிலங்களில் ஆட்சி இழப்புக்கு இட்டுச் சென்றது என்றார். துரதிஷ்டவசமாக மார்க்சிஸ்ட் கட்சி பெயரால் எல்லா இடது இயக்கங்களின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தப்படு கிறது என்றார். அதேநேரம் எழுந்து வரும் மக்கள் போராட்ட அலை விடாப்பிடியான புரட்சிகர இடது சக்திக்கான தேவையை உணரச் செய்திருக்கிறது, அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பு இந்தத் தேவையை அடைவதற்கான முயற்சி என்றும், இந்த முயற்சியில் நாங்கள் முன்னேறிச் செல்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புரட்சிகர மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் தரமணி ராய், மார்க்ஸ் வாதி மோர்ச்சாவின் பொதுச் செயலாளர் தோழர் ஜெயந்தா குப்தா பையா, அரியானா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் தோழர் பல்விந்தர் சிங் திண்ட் ஆகியோரும் கருத்தரங்கில் உரை நிகழ்த்தினர்.
வரைவு தீர்மானத்தின் மீதான விவாதத்தில், தங்களது பலதரப்பட்ட போராட்ட அனுபவங்களை, படிப்பினைகளை பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த தோழர்கள் பகிர்ந்து கொண்டனர். விவாதத் தின் முடிவில் பல்வேறு ஆலோசனைகளையும் உள்ள டக்கிய வரைவுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கருத்தரங்க நிறைவு நாளான அக்டோபர் 11 அன்று மீண்டும் பிரதிநிதிகள் அமர்வு நடந்தது. அகில இந்திய கிசான் மகாசபாவின் பொதுச் செயலாளர் தோழர் ராஜாராம் சிங் உரையாற்றினார். பின்னர் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பின் 4 உறுப்பு அமைப்புகளின் தலைவர்களின் தொகுப்புரைக்குப் பின் பிரதிநிதிகள் அமர்வு முடிவு பெற்றது. கேரளா இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுவின் தோழர் ஹரிஹரன் இடதுசாரி அறுதியிடலுக்கான புறச்சூழல் அடிப்படை நிலவுவதாகவும், நேர்மையான போராட்ட சக்திகள் தங்களுக்குள் உள்ள மாறுபாடுகளை தள்ளி வைத்து போராட்டக் களத்தில் ஒன்றுபட்டு நிற்க எடுக்கும் முயற்சியை அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பு பிரதிநிதித்துவப்படுத்துவதாக குறிப்பிட்டார்.
கடந்த ஓராண்டு காலத்தில் அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பு பல்வேறு முற்போக்கு இடது சக்திகளை சென்றடைந்திருக்கிறது என்றும், அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பு ஒரு போராட்ட மேடை என்பதற்கான பொருத்தப்பாடு முன்னைவிட அதிகரித்திருப்பதாகவும் தோழர் பன்úஸôட் குறிப்பிட்டார்.
ஜலந்தர் கருத்தரங்கம் அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பு உறுப்பு அமைப்புகளும், மற்ற நட்புக் குழுக்களும் ஒருவரைஒருவர் இன்னும் மேலாக புரிந்துகொள்ள வாய்ப்பளித்தது என்று தோழர் பஸ்லா குறிப்பிட்டார். தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள பிரச்சனைகளால் பாதிக்கப்படும் மக்களிடம் அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பு சென்று சேர வேண்டும் என்றும், அவர்களை வீதிக்கும், இடதுசாரி இயக்கத்துக்கும் அழைத்து வரவேண்டும் என்றும் சொன்னார்.
உரத்த முழக்கங்களுக்கிடையில் பிரதிநிதிகள் அமர்வு முடிவுற்றது. பொது அமர்வு தோழர் ஜ்வாலா சிங் நினைவு அரங்கில் நடைபெற்றது. அரங்கம் நிறைந்த கூட்டத்தில் தோழர்கள் திபங்கர் பட்டாச்சார்யா, பீம்ராவ் பன்úஸôட், மங்கத்ராம் பஸ்லா மற்றும் கிருஷ்ணா அதிகாரி ஆகியோர் உரையாற்றினர்.

கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
ஊழலை எதிர்ப்போம். பெருந்தொழில் குழுமக் கொள்ளையை எதிர்ப்போம்!
நிலப்பறியை எதிர்ப்போம். விவசாய நிலம், வன நிலம், கடலோர பகுதிகள், மீன்பிடி பகுதிகளை பாதுகாப்போம்!
விலைஉயர்வுக்கு எதிராகப் போராடுவோம்!
உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த, பொதுவிநியோகத்தை அனைத்தும் தழுவியதாக்க, அனைவருக்குமானதாக ஆக்கப் போராடுவோம்!
வேலை செய்யும் உரிமையை அடிப்படை உரிமையாக்கப் போராடுவோம்!
ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்!
நிலப்பிரபுத்துவ மாஃபியா மற்றும் அரசு ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவோம்!

கருத்தரங்கில் மாலெ கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா ஆற்றிய உரையில் இருந்து

நாட்டில் பற்றியெறியும் பிரச்சனைகளில், ஒன்றுபட்ட சக்திவாய்ந்த இடதுசாரி சக்திகளின் தலையீட்டுக்கான அவசியம் பற்றிய வேட்கையை பகிர்ந்து கொள்வது என்ற பின்புலத்தில், தேசியத் தலைநகரில் அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பு துவங்கி ஓராண்டு முடிந்து இப்போது இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் இயக்கம் உலக முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் சன்னிதானங்களை குறிவைப்பதாய் இருக்கிறது. இந்தியாவிலும் ஊழல், விலை உயர்வு, வேலை வாய்ப்பின்மை ஆகியவற்றுக்கு எதிராக வீதிகளில் மக்கள் நடத்தும் போராட்டம் அய்முகூ ஆட்சியை முக்கிய இலக்காக நிச்சயமாகக் கொண்டிருக்கிறது.
ஆளும் வர்க்கம் மற்றும் முதலாளிகளின் ஊழல் மற்றும் பேராசைக்கு எதிராக இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் மக்கள் சீற்றமுற்று இருக்கும்போது, போராடுகிற இடதுசாரி சக்திகளின் சக்திவாய்ந்த அறுதியிடலுக்கான தேவை உணரப்பட்டது. அது ஊழல், விலைஉயர்வு, நில அபகரிப்பு, பசி, வேலையின்மை மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் ஆகிய சாமனிய மனிதன் இன்று சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் மற்றும் சவால்கள் வீதிகளில் கண்டுணரத்தக்கதாக இருக்க வேண்டும். இந்தப் பின்புலத்தில்தான் இன்றைய அரசியல் சவாலுக்கான பதில்வினையாக இந்தக் கருத்தரங்கம் நடந்து கொண்டிருக்கிறது.
அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பு ஊழலை வெறும் கையூட்டு தொடர்பான பிரச்சனையாக மட்டும் பார்க்கவில்லை. மாறாக இன்று ஊழல் என்பது நிலம், கனிமவளம், பிற இயற்கை வளங்களை பெருந்தொழில் குழுமங்கள் கொள்ளையடிப்பது, இதற்கு சவால் விடக்கூடிய மக்கள் இயக்கங்கள் மீதான தாக்குதல் என்பதோடு கேள்விக்கிடமில்லாமல் பிணைக்கப்பட்டிருக்கிறது. அதனால் சக்திவாய்ந்த லோக்பால் சட்டத்திற்காக போராடும்போது, மக்கள் செல்வாதாரங்கள் மீது மக்களுக்கான உரிமை என்பது இடது மற்றும் முற்போக்கு சக்திகளின் மய்ய முழக்கமாக இருக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கங்களை அமைதிப்படுத்த மக்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தை நிறுத்த முயன்று பார்த்தார்கள். அதே நேரத்தில் சில சக்திகள், அரசியல் கட்சிகள், அரசியல் இயக்கங்கள் பொருத்தப்பாட்டை இழந்துவிட்டன என்றும் தொண்டு நிறுவனங்கள் மட்டுமே சரியானது என்றும் சொன்னார்கள். இந்த இரண்டு வாதங்களையும் தீர்மானகரமாக புறந்தள்ளிய போராடும் இடதுசாரி சக்திகள் மக்கள் போராட்ட எதிர்ப்புகள் மூலம் இடதுசாரி புத்தெழுச்சி என்பது அவசரத் தேவை என்று அறைகூவல் விடுத்தார்கள்.
அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பு இடதுசாரி ஒற்றுமைக்கான ஒரு மாற்று மாதிரி. மார்க்சிஸ்ட் கட்சியின் இடது முன்னணி ஆட்சி நடத்துகிற மாதிரி. அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பு சொல்கிற ஒற்றுமை போராட்ட மாதிரி. நாட்டின் பலதரப்பட்ட ஜனநாயகப் போராட்டங்களையும் பிரதிபலிப்பதாய் இந்த ஒற்றுமை அமைய வேண்டும்.
நமது குறிப்பான பூகோள இருத்தலையும், நமது வரலாற்று பரிணாம வளர்ச்சியையும் உடைத்துக் கொண்டு வரலாற்றின் தேவையை நிறைவேற்ற அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பின் உறுப்பு அமைப்புகள் ஒன்றாக இணைந்திருக்கிறோம். நாம் மார்க்சிஸ்ட் கட்சியின் தோல்வியில் இருந்து படிப்பினைகள் பெற வேண்டும். 1977ல் மார்க்சிஸ்ட் கட்சியின் வெற்றி நிலம், ஜனநாயகம் மற்றும், அரசு ஒடுக்குமுறை எதிர்ப்பு என்ற பின்னணியில் வந்தது.
இதே பிரச்சனைகளை நக்சல்பாரி இயக்கமும் முன்னிறுத்தியது. 1977 தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி அதன் பயனை அறுவடை செய்தது. ஆனால் 30 ஆண்டுகளுக்குப் பின் நிலம், ஜனநாயகம் மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகளில் துரோகம் இழைத்த தால் மார்க்சிஸ்ட் கட்சி மரண அடி வாங்கியது. இடதுசாரிகள் ஜனநாயகப் பிரச்சனைகள் மற்றும் போராட்டங்களுக்கு பதில்வினையாற்றுவதன் மூலம் மட்டுமே முன்செல்ல முடியும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
பெண்கள், தலித்துக்கள், சிறுபான்மையினர், இளைஞர்கள் ஆகியோரின் ஜனநாயக விருப்பங்களுக்கான போராட்டங்களுக்கு தலைமை ஏற்கும் இடதுசாரி களின் பொறுப்பிற்கும் வர்க்கப் போராட்டத்துக்கும் இடையில் எவ்வித தடைச்சுவரும் கிடையாது.
ஜனநாயகமும், நிலமும் நமக்கு வெறும் கோரிக்கைகள் அல்ல. அவை நமது புரட்சிகர அரசியலின் உயிர்த்துடிப்பு. இந்தியாவில் இடதுசாரி அரசியல் திருப்புமுனையில் இருக்கிறது. சிலர் இடதுசாரிகளுக்கு மரண அறிக்கை எழுதி, நம்மை சமூக ஜனநாயக அமைப்பாக மாறிக்கொள்ளும்படி ஆலோசனை சொல்கிறார்கள். வேறு சிலர் அராஜகவாத திசைவழியில் சென்று மக்கள் இயக்கங்களிலிருந்து தங்களை முழுவதும் துண்டித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தச் சூழலில் அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பு, ஒற்றுமையை ஆழப்படுத்துவது, இடதுசாரி சக்திகளின் போராட்டத்தை அறுதியிடச் செய்வது என்ற சவாலை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் நாம் நிச்சயம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.

லிபரேசன், நவம்பர் 2011. தமிழில்: தேசிகன்

தமிழக காவல்துறையின் ஒடுக்குமுறைக்கு எதிராக

கோவையில் வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரன் மீது துடியலூர் காவல்நிலைய அதிகாரிகள் நடத்திய தாக்குதல், உச்சநீதிமன்றத்தில் தனது அறையில் இருந்த பிரசாந்த் பூஷன் மீது நடத்தப்பட்ட தாக்குதல், வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் கொலை வழக்கில் குற்றவாளி கைது செய்யப்படாதது ஆகியவற்றைக் கண்டித்தும் துடியலூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் ரேணுகா தேவி மற்றும் 4 காவல் துறையினரை கைது செய்யக் கோரியும் அக்டோபர் 21 அன்று சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கமும் மற்ற அமைப்புக்களும் மறியல் போராட்டம் நடத்தின. மாலெ கட்சி மாநிலக்குழு உறுப்பினர் தோழர் பாரதி, தோழர்கள் விஜய், சுரேஷ், ஜெயச்சந்திரன், ரமேஷ், சதீஷ், சாந்தன், கௌதம், முருகதாஸ் மற்றும் ஜனநாயக வழக்குரைஞர் சங்கத்தின் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

உலகம்

லிபிய விடுதலை

அரேபிய வசந்தமும் அமெரிக்க இலையுதிர் காலமும் சந்திக்கிற சவால்கள்

2006ல் அது ஈராக்காக இருந்தது. இன்று 2011ல் அது லிபியா. 2006ல் சதாம் ஹ÷சைனின் சிதிலமடைந்த உடலை சன்மான கோப்பைப் போல் காட்சிப்படுத்தி ஈராக்கை கைப்பற்றிய வெற்றியைக் கொண்டாடியது புஷ் நிர்வாகம். லிபியாவின் வெற்றிக் கொண்டாட்டமும் அது போன்ற ஒன்றாகவே மாறி வருகின்றது.
உடல் நலமின்றி இருந்த லிபிய அதிபர் மும்மர் கடாஃபி ஈவிரக்கமின்றி தீர்த்துக் கட்டப்பட்டதை அக்டோபர் 20, 2011 அன்று உலகம் அறிந்தது. அவர் உயிருடன் பிடிக்கப்பட்டார். ஆனால் சதாம் போல் விசாரணை என்று தோற்றத்துக்காக கூட காட்டாமல் கொடுமையான முறையில் கொல்லப்பட்டு, இரத்தம் தோய்ந்த அவரது உடல் மிஸ்ரடா நகரத்தில் ஒரு வர்த்தக கட்டிடத்தில் வியாபாரத்திற்கான குளிரூட்டும் பெட்டி ஒன்றில் வைத்துக் காட்டப்பட்டது. கிட்டத்தட்ட அதே வேளையில் கடாஃபி ராஜ்ஜியத்தின் கடைசி பலம் வாய்ந்த பகுதி என்று சொல்லப்பட்ட சிர்டேயில் அவரது மகன் முடாசிம் பிடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
உடனடியாக ஒபாமா நிர்வாகமும், நேட்டோவும் லிபியா ‘விடுதலை’ பெற்றுவிட்டதாக பறைசாற்றின. லிபிய நாட்டு வீதிகளில் லிபிய கொடிகளும், அக்கம்பக்கமாக அமெரிக்க, பிரான்ஸ் நாட்டு கொடிகளும் அசைத்துக் காட்டப்பட்டதை பார்க்க முடிந்தது.
வரலாற்றில் இது எதிர்பாராத முரண்பாடு. ஒரு பக்கம் எகிப்தில் துவங்கிய அரபு வசந்தம் ஹோஸ்னி முபாரக்கின் 30 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவு கட்டி, வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் இயக்கமாக அமெரிக்க மண்ணை வந்தடைந்திருக்கிறது. இன்னொரு பக்கம் அரபு வசந்தத்தை தன் யுத்த தந்திர நோக்கங்களுக்கும், கணக்குகளுக்கும் எப்பாடு பட்டாவது கீழ்ப்படுத்திட அமெரிக்க - நேட்டோ யுத்த நடவடிக்கை தீவிரமாக முயன்று வருகிறது.
ஈராக்கைப் போலவே லிபியாவும் அதன் எண்ணெய் வளத்திற்கும், ஆப்பிரிக்காவுக்கான பூகோள அரசியல் நுழைவாயில் என்ற கோணத்திலும் சற்றும் குறையாத போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடு. கடாஃபிக்கு பிந்தைய லிபிய மாற்றம் என்பது சதாமுக்கு பிந்தைய ஈராக் போலவே சிக்கல்கள் நிறைந்தது. அமெரிக்க நேட்டோ அதிகாரம் லிபியாவின் மீது இறுகுவதற்கும், ஆப்பிரிக்காவினுள் நுழைவதற்கான ஏவுதளமாக பயன்படவும், மத்திய கிழக்கு நாடுகளில் ஆட்சிக் கவிழ்ப்பு களை நடத்தவும் போதுமான வாய்ப்புகளை இது வழங்குகிறது.
சமீப காலங்களில் ஈராக்கில் சதாம் ஆட் சியைப் போலவே லிபியாவில் கடாஃபி அரசு ஆளும் தகுதியையும், செயலூக்கத்தையும் இழந்துவிட்டது என்பதை மறுப்பதற்கில்லை. 1970, 1980களில் நவீன லிபியாவை கட்டமைக்க கடாஃபி தலைமையேற்ற காலம் ஒன்றிருந்தது. முன்னர் பிரிட்டிஷ் காலனியாக இருந்த இந்த நாட்டில் எண்ணெய் நிறுவனங்கள் தேசவுடைமையாக்கப்பட்டன; நவீன தேசத்துக்கான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன; யூத இனவாத ஆக்கிரமிப்பு மற்றும் தலையீட்டிற்கு எதிராக லிபியா பாலஸ்தீனத்தோடு நின்றது; காலனிய எதிர்ப்பு, நிறவெறி எதிர்ப்பு அறுதியிடலுக்கு ஆப்பிரிக்க நாடுகள் அனைத்துக்கும் ஆதரவு கரம் நீட்டியது.
ஆனால் காலப்போக்கில் கடாஃபி ஈவிரக்கமற்ற சர்வாதிகாரி என்ற பெயரை சம்பாதித்துக் கொண்டார். இந்தத் தருணத்தில் 1988ல் லாக்கர்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் (லிபியா தவறுதலாக குற்றஞ்சாட்டப்பட்ட) விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை லிபியப் பொருளாதாரத்தை வெகுவாக முடக்கியது. சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பிறகு மிகச் சமீபத்தில், அமெரிக்கா தலைமையில் ஆப்கானிஸ்தான், ஈராக் ஊடுருவல்கள் நடந்தே றியதும், லிபியாவை மட்டும் விட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கையோடு பிரிட்டன் மற்றும் பிற மேற்கத்திய நாடுகளோடு கடாஃபி செயல்பாட்டு உறவை வளர்த்துக் கொண்டார்.
ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் ராணுவ நடவடிக்கைகளில் சிக்கிக்கொண்டு, உள்நாட்டில் கடுமையான பொருளாதார தேக்கத்தை சந்திக்கும் அமெரிக்கா, உலக அளவில் மேலாதிக்கம் என்ற தனது போர்த்தந்திரத்துக்கு உதவக்கூடிய வேறு மாற்று செயல் தந்திரத்தை தேடிக் கொண்டிருந்தது. அரபு எழுச்சியின் பயனை தான் எடுத்துக் கொண்டு அதில் சவாரி செய்வது என்பதை அமெரிக்கா தேர்ந்தெடுத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் செல்வாக்கிழந்த சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராக உள்நாட்டில் எழும் எதிர்ப்பைப் பயன்படுத்தி, அமெரிக்கா அங்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தலைப்பட்டு, அந்த மாற்றத்திற்கான இயக்கப்போக்கில் பொருளாதார மற்றும் அரசியல் பிடியை நிறுவிக் கொள்கிறது.
இந்த செயல்தந்திரம் இதுவரை லிபியாவில் சிறப்பாக செயல்பட்டிருப்பதாகத் தெரிகிறது. கேந்திரமான இயற்கை வளங்களான எண்ணெய், எரிவாயு மற்றும் நிலத்தின் மீது தனது பிடியை நிறுவிக் கொள்வது என்பதோடு ஆப்பிரிக்காவில் பொருளாதாரரீதியாக வளர்ந்து வரும் சீனாவை எதிர்கொள்வதையும் அமெரிக்கா நோக்கமாகக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா தனது இராணுவப்பிடியை உலகம் முழுவதும் பரப்பிக் கொண்டிருக்கும் வேளையில், சீனா, ஆப்பிரிக்காவின் வளர்ந்துவரும் உள்கட்டுமானப் பணிகளிலும், அது தொடர்பான முதலீடுகளிலும் ஈடுபட்டு தனது பொருளாதார நடவடிக்கையை ஆழப்படுத்தியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
லிபிய ‘விடுதலை’ நிச்சயமாக அமெரிக்காவை ஆப்பிரிக்கா நோக்கி துரிதமாக செல்வதை ஊக்கப்படுத்தும்; இரண்டாவது முறை புஷ் ஜனாதிபதியாக இருந்த கடைசி தருணங்களில் அமெரிக்கா, 54 ஆப்பிரிக்க நாடுகளில் நேரடி ராணுவ நடவடிக்கைகளை திசைவழிப்படுத்த ‘ஆப்பிரிகாம்’ என்ற ஒருங்கிணைந்த ராணுவ தலைமையை நிறுவியது.
‘ஆப்பிரிக்காவிலிருந்து உருவாகும் நாடு கடந்த அச்சுறுத்தலிலிருந்து’ அமெரிக்க தேச நலனை பாதுகாக்கவும், தனிநபராலோ, அல்லது அமைப்பாலோ அமெரிக்காவுக்கோ, அமெரிக்க தேச நலன்களுக்கோ, அமெரிக்க நட்பு சக்திகளுக்கோ, கூட்டாளிகளுக்கோ அச்சுறுத்தல் இருந்தால் அதை சமாளிக்க ஆப்பிரிகாம் அக்டோபர் 1, 2008ல் முழு செயல்பாட்டுக்கு வந்தது. லிபியா, வசப்பட்டுவிட்ட சூழலில், காங்கோ உகாண்டா, சமீபத்தில் இரண்டாக பிரிக்கப்பட்ட சூடான் மற்றும் இன்னபிற ஆப்பிரிக்க நாடுகளில் மனிதாபிமான தலையீடு மற்றும் அமைதிகரமான ஊடாடல் என்ற பெயரில் தனது இராணுவ நடவடிக்கைகளை வலுப்படுத்திக் கொள்ள அமெரிக்கா ஏற்கனவே ஊக்கமாக செயல்படத் துவங்கிவிட்டது.
அரேபிய வசந்தம் மற்றும் அமெரிக்க இலையுதிர்கால உணர்வு ஆகிய இரண்டிற்குமான தெளிவான, நேரடியான சவாலாக அமெரிக்க - நேட்டோ திட்டம் விளங்குகிறது. அரேபிய மக்கள் தங்கள் நாட்டை சுதந்திரமாக, ஜனநாயகப் பூர்வமாக நடத்த வேண்டும் என்று விரும்பும் அதே வேளையில், வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் இயக்கம், பெரும் தொழில்குழும பேராசை மற்றும் கொள்ளை, உலகம் முழுவதும் அமெரிக்கா ராணுவ தளம் அமைப்பது மற்றும் தலையீடு ஆகிய இரண்டிற்கும் எதிராக வெளிவந்துள்ளது. வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் இயக்கம் அமெரிக்காவின் பொருளாதார மந்தநிலை மற்றும் வால் ஸ்ட்ரீட்டை மீட்க வழங்கப்படும் ஏராளமான பண முடிப்புகள் ஆகியவற்றால் உழைக்கும் மக்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்பதால் மாத்திரமல்ல, உலகம் முழுவதும் அமெரிக்க இராணுவத் தலையீட்டால், உயர்ந்து வரும் இராணுவச் செலவினங்களால், அமெரிக்க சாம்ராஜ்ஜியம் தங்களை நசுக்கும் பளுவைப் பற்றிய வலி மிகுந்த உண்மையையும் அறிந்து இருந்தது. இயக்கத்தின் உணர்வு வால் ஸ்ட்ரீட்டுக்கு எந்த அளவு எதிரானதோ அதே அளவு பெண்டகனுக்கு எதிராகவும் திருப்பப்படுகிறது.
ஆனால் அமெரிக்க மக்களின் வெறுப்பையும், நீடித்த பொருளாதார தேக்கத்தையும் அங்கீகரிக்கிற ஒபாமா நிர்வாகம் தொடர்ந்து அமெரிக்க யுத்த இயந்திரத்துக்கு எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கிறது. அரபு வசந்தம் மற்றும் அமெரிக்க இலையுதிர் காலத்தின் அடிநாதமாக இருக்கும் ஜனநாயக வேட்கை உலக ஆளுமைக்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒட்டுமொத்தத் திட்டத்திற்கும் சவால் விடுவதாய் இருக்க வேண்டும்.

எம்எல் அப்டேட் தலையங்கம் தொகுப்பு 14, எண் 44, 2011, அக் 25 - 31
தமிழில்: தேசிகன்

கட்டுரை

இடிந்தகரை மக்களின் போராட்டம்
இந்திய மக்களின் போராட்டம்

அணுவிபத்துக்கும் உண்டோ அடைக்கும் தாழ்? மத்திய, மாநில ஆட்சியாளர்கள் இருக்கிறது என்று சொல்லப் பார்க்கிறார்கள். ஆபத்தே இல்லை என்று நம்பச் சொல்கிறார்கள். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரையில் 3ஆவது கட்டமாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொள்கிறார்கள். தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் இந்த போராட்டத்திற்கான ஆதரவு பெருகுகிறது.
ஆட்சியாளர்கள் போராட்டத்தை திசை திருப்ப, மழுங்கடிக்க, ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்குகிறார்கள். ஆட்சியில் உள்ள கட்சிகள் மட்டுமின்றி எதிர்கட்சிகளும் அணு உலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று சொல்லத் தயாராக இல்லை. ஜெயலலிதா, மக்கள் அச்சத்தைப் போக்கும் வரை அணுஉலை பணி நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் போட்டார். ஆனால், அக்கட்சியின் தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கப் பேரவையும் கூடங்குளம் அணு உலை ஊழியர்கள் சங்கமும் சேர்ந்து அணு உலையை உடனே இயக்க வேண்டும் என்று நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் உங்கள் பக்கம் என்று சொன்ன ஜெயலலிதா இன்று மத்திய அரசும் அணு விஞ்ஞானிகளும் மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறபோது மவுனம் காக்கி றார். தன்னுடைய தேர்தல் அறிக்கையிலேயே இன்னும் நான்கு அணு உலைகளைத் திறப் பேன் என்று சொன்னவர்தான் ஜெயலலிதா.
திமுக தலைவர் கருணாநிதி வழக்கம் போல நாளொரு விளக்கம் பொழுதொரு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். மக்கள் போராட்டத்தைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்று முதலில் சொன்னவர் மகள் கனிமொழிக்காக மன்மோகனையும் சோனியாவையும் சந்தித்தபின் உரிய பாதுகாப்புடன் அணுமின் நிலையப் பணியை நடத்த வேண்டும் என்று மாற்றிப் பேசுகிறார். ஆரம்பத்தில் கூடங்குளம் அணு உலையை மூடவேண்டும் என்று திமுக செயற்குழுவில் தீர்மானம் போட்டு விட்டு தேசப்பாதுகாப்பு தொடர்பான விசயத்தில் தலையிட முடியாது என ஆட்சியில் இருந் தபோது பின்வாங்கியவர்தான் கருணாநிதி.
தன் கட்சி ஆட்சியில் இருந்தபோது புத்தர் சிரித்தார் என்று பொக்ரானில் அணு குண்டு வெடித்து சோதனை நடத்திய அத்வானி இப்போது மதுரைக்கு வந்தவுடன் கூடங்குளம் அணு உலையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்கிறார். பாஜக ஆட்சி காலத்திலும் இந்த அணு உலைக்கான பணி நடந்து கொண்டுதான் இருந்தது என்பதை மக்கள் மறந்துவிடுவார்கள் என்று நினைக்கிறார் இந்த கார்கில் போர் சவப்பெட்டி ஊழல், சுரங்க ஊழல் புகழ் பாஜகவின் அத்வானி.
அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு மதச்சாயம் பூச நினைக்கிறது சங்பரிவார் கூட்டம். அமெரிக்க கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் இங்குள்ள பாதிரியார்களைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்துகிறார்கள், அவர்களுக்கு நிதி அமெரிக்காவில் இருந்து வருகிறது, எனவே அரசு போராட்டத்தை ஒடுக்கி அணு உலையை உடன் இயங்கச் செய்ய வேண்டும் என்று சிவசேனா அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
காங்கிரஸ் கட்சியினரோ அவர்களுக்கே உரித்தான வகையில் கோஷ்டி கோஷ்டியாக அணு உலைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கம் நடத்துகிறார்கள். அக்கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி கூடங்குளம், இடிந்தகரையில் உண்ணாவிரதம் இருப்பவர்கள் வன்முறையில் ஈடுபடுவதாக அறிக்கை விடுகிறார். இது வரப்போகும் ஒடுக்குமுறைக்கு முன்னறிவிப்பு. இப்போதே போராடுகிற தலைவர்கள் மீதும் மக்கள் மீதும் பல பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவின் ஜெய்தாப்பூரில் உள்ள அணு உலைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் உள்பட 15 பேர் கொண்ட ஜெய்தாப்பூர் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் போராட்டத்தின் முன்னால் யார் ஆட்டமும் செல்லாது, மக்கள் சக்தி மகத்தானது என்று முழக்கமிடும் சிபிஅய், சிபிஅய்எம் கட்சிகள் மூன்று மாத காலமாக பல ஆயிரக் கணக்கான மக்கள் தமிழ்நாட்டில், கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும்போது அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கூடங்குளம் அணு உலை ரஷ்யாவின் தொழில்நுட்பம் என்பதாலேயே மவுனம் காப்பது என்பது இவர்களின் கார்ப்பரேட் ஆதரவு நிலைபாட்டிற்கு வலுசேர்ப்பதாக உள்ளது. இவர்களுக்கு பிரான்ஸ் அணுஉலைதான் ஆபத்தானது. ரஷ்ய அணுஉலை அழகானதோ?
சென்னையில் அக்டோபர் 23 அன்று அணு உலைக்கு ஆதரவாக ரசாயனத் தொழிற்சாலைகள் சங்கம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் அணு உலை எதிர்ப்பாளர்கள் கேட்ட கேள்வி களுக்கு பதில் சொல்ல முடியாமல் அணு உலை அதிகாரிகள் திணறி குழப்பம் ஏற்பட்டபோது மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் ராமகிருஷ்ணனும் டி.கே.ரங்கராஜனும் சமாதானம் செய்தார்களாம். தோழர் தா.பாண்டியன் கூடங்குளத்தில் போராடும் மக்களை கொச்சைப்படுத்திப் பேசி பின் பின்வாங்கினார்.
குழந்தையின் சிரிப்பையும் பொக்ரான் அணுகுண்டு வெடிப்பையும் ஒன்றாகவே பார்க்கும் ஒப்பற்ற மனிதர் என்று அழைக்கப்படும் அப்துல்கலாம் மற்ற எல்லா மின்சாரத்தைவிட அணுமின்சாரம் சுத்தமானது என்று நற்சான்றிதழ் வழங்குகிறார். மின்சாரத்தில் கூட சுத்தம், அசுத்தத்தை கண்டுபிடித்துள்ள இந்த அற்புத மனிதர் கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்ய வரப் போவதாக அறிவித்தார். ஆனால், போராடும் மக்கள் அவர் அந்தப் பக்கம் வரக்கூடாது என்று அறிவித்துவிட்டனர். உடனே சில சாதிச் சங்கங்களைத் தூண்டிவிட்டு அப்துல் கலாமை அவமதிப்பதா என்று போராட்டக்காரர்களுக்கு எதிராக அறிக்கை விடுக்கிறார்கள் அணு உலை ஆதரவாளர்கள். அப்துல்கலாம் அணுவிஞ்ஞானி இல்லை. அவர் விஞ்ஞானியே இல்லை. அவர் ஒரு அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர் (ற்ங்ஸ்ரீட்ய்ர்ஸ்ரீழ்ஹற்) என்று உண்மையான அறிஞர்கள் கூறுகிறார்கள்.
அணு விஞ்ஞானி, இந்திய அணுசக்தி கழகத்தின் தலைவர் எஸ்.கே.ஜெயின், டெல்லியில் பிரதமரை போராட்டக் குழுவினர் சந்தித்தபோது அருகில் இருந்தாராம். அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமாரும் மற்றவர்களும் அணு உலை பாதுகாப்பாகத்தான் அமைக்கப்பட்டுள்ளது என்று சொல்கிறீர்கள், அப்படியே வைத்துக் கொண்டாலும் அணுக் கழிவை என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு எஸ்.கே.ஜெயின், கூடங்குளத்தில் உள்ள அணுக்கழிவு கல்பாக்கத்திற்கு எடுத்துச் செல்லப்படும், அங்கு அது மறு சுழற்சியில் பயன்படுத்தப்படும், கடைசியில் ஓர் உள்ளங்கையளவு கழிவுதான் இருக்கும், அதைக் கண்ணாடிப் பந்துபோல் செய்து அலங்காரமாக அலமாரியில் வைத்துவிடலாம் என்று பதில் கூறினாராம்.
இப்படி பொறுப்பற்று பதில் சொன்ன ஜெயின்தான் இப்போது அணு உலை கார் தொழிற்சாலை அல்ல, நினைத்தவுடன் இயக்கவும் நிறுத்தவும் என்கிறார். அணு சக்தி ஆணையத்தின் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜியோ அணு உலை தொடர்ந்து பராமரிக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும், குளிர்விக்கப்படுவது நிறுத்தப்பட்டால் தொழிலாளர்களும் போராட்டக்காரர்களும்தான் பாதிக்கப்படுவார்கள், எதிர்காலத்தில் பெரும் ஆபத்து ஏற்படும், தற்போது பராமரிப்பு இல்லாததால் அதிநவீன விலையுயர்ந்த உபகரணங்கள் மழையிலும் வெயிலிலும் கிடந்து வீணாகிக் கொண்டிருக்கின்றன என்று புலம்புகிறார்.
ஆபத்தான அணு உலைக்கான உபகரணங்களைக் கூட இவர்கள் காவல் நிலைத்தில் கார்களையும் பைக்குகளையும் பிடித்து போட்டு வைத்திருக்கிற லட்சணத்தில்தான் வைத்திருக் கிறார்கள் என்பதும் அணு உலை செயல்படத் துவங்கும் முன்னரே இப்படி என்றால் செயல்படத் துவங்கிவிட்டால் இன்னும் எவ்வளவு மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதும் அவர்கள் சொல்வதில் இருந்தே தெரிகிறது. ஜெயினும் பானர்ஜியும் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள், விஞ்ஞானிகள் என்பதை மறந்து அரசியல்வாதிகள் போல் அந்நிய நாட்டவர் தூண்டுதலால் போராட்டம் நடத்தப்படுவதாக அறிக்கை விட்டு போராடும் மக்களை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அணு உலை வளாகத்திற்குள் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது, 1,000 நிரந்தரத் தொழிலாளர்கள் 6,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலையில்லாமல் வாடிக் கொண்டிருக்கிறார்கள், அதனால் அணு உலைப் பணியை உடன் துவங்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்கள் அணுமின் நிலைய அதிகாரிகள்.
தொழிலாளர்கள் மீது அரசுக்கு திடீர் பாசம் வந்துள்ளது. (அணுமின் நிலைய கதிர் வீச்சில் உடனடி பாதிப்புக்குள்ளாகிறவர்கள் தொழிலாளர்கள்தான் என்பது வேறு விஷயம்) உண்மையில், தேவையான தொழிலாளர்களை கொண்டு அணு மின் நிலையத்திற்குள்ளே வேலைகள் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளன என போராடும் மக்கள் சொல்கிறார்கள். தமிழக அரசு தீர்மானம் போட்டதுபோல் மக்கள் அச்சம் தீரும் வரை பராமரிப்பு பணியை நிறுத்தி வைக்க மத்திய அரசு தயாராக இல்லை. மக்கள் அச்சத்தைப் போக்குவதற்காக மத்திய அரசு நியமித்துள்ள விஞ்ஞானிகள் குழுவில் மாநில அரசு சார்ந்தவர்களோ, போராட்டக் குழுவைச் சார்ந்தவர்களோ இல்லை. மாநில அரசும் அதை கண்டு கொள்ளவில்லை.
வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரால் நிலம் கனிம வளங்களை கார்ப்பரேட் கொள்ளையர்கள் கொள்ளையடிக்கத் துணைபோகும் மத்திய அரசு கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக போராடும் மக்களை ஒடுக்குகிறது. தண்டேவாடா மலைவாழ் மக்கள் போராட்டத்தையும் போஸ்கோவிற்கு நிலம் கையகப் படுத்துவதற்கு எதிரான மக்கள் போராட்டத்தையும் ஒடுக்குவதற்கு அரசு எடுத்த அதே வழியைத்தான் கூடங்குளம் போராட்டத்திற்கு எதிராகவும் கையாள்கிறது.
கூடங்குளம் அணுமின் நிலையம் தேச வளர்ச்சிக்கானது என்ற பொய்யான வாதத்தையும் முன்வைக்கிறது. இந்திய வளங்களைக் கொள்ளையடிக்க இந்திய மக்களை பேராபத்திற்குள் தள்ள நடக்கும் முயற்சிக்கு எதிரான யுத்தத்தின் ஒரு பகுதியே கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம். இந்தப் போராட் டம் இடிந்தகரை மக்களுக்கு மட்டுமான போராட்டம் மட்டுமில்லை. இந்தியாவின் போராட்டம். இந்தியாவில் எந்தப் பகுதியிலும் அணு உலை இல்லை என்கிற நிலையை உருவாக்குவதற்கான போராட்டம்.
இந்தப் போராட்டத்தை இந்தியா முழுமைக்கும் எடுத்துச் செல்லும் அதே நேரம், மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும், ஒடுக்கும் ஆட்சியாளர்களை எதிர்த்திடவும் போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்யும் சந்தர்ப்பவாதிகளை அம்பலப்படுத்திடவும் வேண்டும். மாலெ கட்சி அக்டோபர் 30 அன்று தமிழகம் தழுவிய அணு உலை எதிர்ப்பு நாள் அறிவித்து ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்தியது. அணு உலை மூடப்படும் வரை போராட்டங்கள் தொடரும்.

- ஜி.ரமேஷ்

அக்டோபர் 30, தமிழகம் தழுவிய கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு நாள்

அக்டோபர் 30 அன்று தமிழகம் தழுவிய அணு உலை எதிர்ப்பு நாள் அறிவித்து மாலெ கட்சி ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்தியது.

கோவை பொதுக்கூட்டம்: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு ஏஅய்சிசிடியு மாநிலச்
செயலாளர் தோழர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ஏஅய்சிசிடியு மாவட்டத் தலைவர் தோழர் சாமிநாதன் வரவேற்றுப் பேசினார். இகக(மாலெ) அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி சிறப்புரையாற்றினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் என்.கே.நடராஜன், ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் தாமோதரன், மாவட்ட துணைத் தலைவர் தோழர் ஜானகிராமன், எல்எம்டபிள்யு சங்கத் தோழர் சந்திரன் ஆகியோர் உரையாற்றினார்கள். தோழர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் நன்றி தெரிவித்தார். 700க்கும் மேற்பட்டோர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
நெல்லை ஆர்ப்பாட்டம்: நெல்லையில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு 30.10.2011 அன்று காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். இகக(மாலெ) கட்சியின் மாநிலச் செயலாளர் பாலசுந்தரம் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்சிசிடியு மாநிலத் துணைத்தலைவர் ஜி.ரமேஷ், அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழக மாநிலத் தலைவர் தேன்மொழி, கட்சியின் தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளர் பொன்ராஜ், அனைந்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ஆவுடையப்பன் மற்றும் கருப்பசாமி, ரவிடேனி யல், கணேசன் ஆகியோர் உரையாற்றினர்.
இடிந்தகரை போராட்டப் பகுதிக்குப் பயணம்
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத் தோழர்களோடு குமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த இகக(மாலெ), ஏஅய்சிசிடியு, முற்போக்குப் பெண்கள் கழகம், அவிதொச முன்னணியினர் தோழர் பாலசுந்த ரம் தலைமையில் இடிந்தகரைக்குச் சென்று அங்கு தொடர் உண்ணாவிரதப் போராட்டத் தில் இருக்கும் மக்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இடிந்தகரையில் அன்று மாலை இகக(மாலெ) கட்சியின் மாநிலச் செயலாளர் பாலசுந்தரம் அன்றைய உண்ணாவிரதத்தை முடித்து வைத்துப் பேசினார். இப்பயணத்தில் குமரி மாவட்டப் பொறுப்பாளர் தோழர் அந்தோணிமுத்து, தோழர்கள் மேரி ஸ்டெல்லா, சுசிலா, குமாரசாமி, ராமசாமி, ஆன்றோ லெனின், ஜாக்குலின் மேரி, நெல்லை மாவட்டத் தோழர் கள் செல்வகணபதி, சபாபதி, இ.எஸ்.முருகன், அன்புச் செல்வி, சையதுஅலி பாத்திமா, இப்ராஹிம் உட்பட 150 பேர் கலந்துகொண்டனர்.
சென்னை ஆர்ப்பாட்டம்: சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாலெ கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் சேகர் தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் ஜானகிராமன், இரணியப் பன், ஏஅய்சிசிடியு மாநில துணைத் தலைவர் தோழர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் உரை யாற்றினர். 150க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சை ஆர்ப்பாட்டம்; தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாலெ கட்சி மாநிலக்குழு உறுப்பினர் தோழர் தேசிகன் சிறப்புரையாற்றி னார். கட்சி மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் ஆசைத்தம்பி, இளங்கோவன், டிகேஎஸ்ஜனார்த்தனன் அவிதொச தலைவர்கள் கன்னையன், வளத்தான் ஆகியோர் உரையாற்றினர். 75க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
சேலம் ஆர்ப்பாட்டம்: சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாலெ கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன் உரையாற்றினார். ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் ஏ.கோவிந்தராஜ், தோழர் வெங்கடாசலம், தோழர் கே.கோவிந்தராஜ், வீ.அய்யன்துரை ஆகியோர் உரையாற்றினர். 75 பேர் கலந்து கொண்டனர்.

தொகுப்பு: ஜி.ரமேஷ்

Search