COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Tuesday, August 9, 2011

தீப்பொறி ஆகஸ்ட் 2011

தலையங்கம்

முதலமைச்சரானாலும் கற்கை நன்று!

கல்வி விசயத்தில் ஜெயலலிதா மேற்கொண்டுள்ள உறுதியான தனியார் கல்வி ஆதரவு நிலைப்பாடும் அதற்கேற்ற நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில் மிகப்பெரும் அதிருப்தியை, சீற்றத்தை உருவாக்கி இருக்கிற சூழலில், நிலைமையை சரிகட்ட, சீற்றத்தை மட்டுப்படுத்த, திசை திருப்ப ஜெயலலிதா வேறு சில முயற்சிகள் எடுத்துப் பார்க்கிறார்.
மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு வைத்தால் கிராமப்புற மற்றும் வறிய பின்னணி கொண்ட மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கடிதம் எழுதுகிறார். மாணவர்களுக்காக நெரிசல் நேரங்களில் கூடுதல் பேருந்துகள் என்கிறார். மாணவர் பற்றிய அவர் அக்கறைதான் பொதுப் பாடத் திட்டத்தில் தெரிகிறதே. ஆடு, மாடு அறிவிக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு ஓய்வூதியம் என்கிறார்.
மாநில அரசாங்கங்களின் நலன் காப்பதில் நாடு தழுவிய அளவில் தனக்கு மட்டுமே அக்கறை இருப்பதாகச் சொல்லப் பார்க்கிறார். அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாகவும் அணை மசோதா திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் சொல்கிறார். மதவெறி வன்முறை தடுப்பு மசோதா மாநில அரசாங்கங்களின் அதிகாரத்தை பறிக்கும் நோக்கம் கொண்டது என்றும் அதனால் மசோதாவை எதிர்க்கும்படி, காங்கிரஸ் அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் தந்துள்ளதாகவும் அந்தக் கடிதத்தின் நகலை, காங்கிரஸ் அல்லாத, திமுக அல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் ஜெயலலிதா சொல்கிறார். அந்த முயற்சியில் பாஜகவையும் இணைத்துக் கொள்ளப் பார்க்கிறார்.
ஆனால் அதிகாரம் குறைவில்லாத மாநில அரசாங்கம் எதற்கு? வரியை உயர்த்தி மக்கள் தலையில் சுமையை ஏற்றவா? பள்ளிக்குச் செல்லும் மாணவர்களை படிக்காதே என்று சொல்லவா?
அரசியல் பகை தீர்ப்பதிலும் தனியார்மயத்தைக் காப்பதிலும் ஒடுக்குமுறைக்கு தயாராவதிலும்தான் ஜெயலலிதா இந்த இரண்டு மாதங்களில் அக்கறை காட்டியுள்ளார். இந்த குறுகிய கால மக்கள் விரோத நடவடிக்கைகள் வரும் காலங்களுக்கான அறிகுறிகளே.
தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழக மக்களிடம் ஜெயலலிதா கேட்டார்: உலகத்தில் எந்த ஜனநாயக நாட்டிலாவது, தந்தை முதலமைச்சர், ஒரு மகன் துணை முதலமைச்சர், இன்னொரு மகன் மத்திய அமைச்சர், மகள் நாடாளுமன்ற உறுப்பினர், பேரன் மத்திய அமைச்சர் என்று இருக்கிறார்களா? தமிழக மக்கள் மனத்தில் இருந்த கேள்விதான். வாக்கு எந்திரங்களில் தங்கள் பதிலை பதிவு செய்தார்கள்.
இப்போதும் மக்கள் மனதில் ஒரு கேள்வி எழுந்துள்ளது. உலகில் எந்த நாட்டிலாவது, பள்ளிகள் இருந்து, புத்தகங்கள் இருந்து, ஆசிரியர்கள் இருந்து, மாணவர்கள் பள்ளிக்கும் சென்ற பிறகு படிக்காதே என்று எந்த அரசாங்கமாவது சொல்லி இருக்கிறதா? உலகில் எந்த அரசாங்கமாவது பள்ளி மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறதா?
மூலதன விசுவாசமும் அதிகார வெறியும் பிடித்தாட்ட ஜெயலலிதா எதிர்கால தமிழகத்தின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார். தமிழக மக்கள் தண்டிப்பார்கள் என்பதைக் கற்க மறுக்கிறார். கற்க வேண்டியதை கற்க மறுத்தால், இந்த அதிகார மமதைக்கும் நிச்சயம் பதில் உண்டு.

சிறப்புக் கட்டுரை

வியாபாரிகளின் பிடியில் இருந்து
கழகங்களின் பிடியில் இருந்து
கல்வியை விடுதலை செய்ய வேண்டும்!

எஸ்.குமாரசாமி

ஜெயலலிதாவின் அதிரடி ஆட்டம்
ஜெயலலிதா ஜெயலலிதாவாகத்தான் செயல்படுவார். தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக பள்ளிகள் இருக்கின்றன. வகுப்புகள் இருக்கின்றன. ஆசிரியர்கள் இருக்கின்றனர். மாணவர்கள் இருக்கின்றனர். தயாரிக்கப்பட்ட பாட புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால் கல்வி மட்டும் காணாமல் போய் விட்டது. ஜெயலலிதா எதையும் பிரம்மாண்டமாகச் செய்வார். ஒரே கையெழுத்தில் ஒரு லட்சத் திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பிய சாதனையாளர், இம்முறை பதவி ஏற்ற சில நாட்களிலேயே, தமிழ்நாடு சீரான பள்ளிக்கல்வி முறைச் சட்டத்திற்கு, திருத்தச் சட்டம் 2011 கொண்டுவந்து, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி உரிமையை வம்புக்கு இழுத்துள்ளார்.
முதலாளித்துவ முறையும், முதலாளித்துவ அரசியலும், முதலாளித்துவ அரசியல்வாதிகளும், உள்ளொன்று வைத்து வெளியில் வேறு பேசுவார்கள். முதலாளித்துவ சர்வாதிகாரத்தை ஜனநாயகம் என்பார்கள். ஜெயலலிதா திருத்தச் சட்டம் என்று சொல்லி அசல் சட்டத்தை ஒழித்துக் கட்டப் பார்க்கிறார். திமுக அரசு கொண்டுவந்த தமிழ்நாடு சீரான கல்வி முறைச் சட்டம் 2010 செல்லாது என்ற வாதத்தை, சென்னை உயர்நீதிமன்றம் தனது 30.04.2010 தீர்ப்பு மூலம் நிராகரித்துவிட்டது. 05.05.2010 தீர்ப்பில் சில திருத்தங்களையும் மேற்கொண்டது. இறுதி செய்யப்பட்ட தீர்ப்பின் மூலம், அசல் சட்டம் அரசியலமைப்புச் சட்டப்படி செல்லும் என்றாகிவிட்டது. நேரடியாக செய்ய முடியாதவற்றை மறைமுகமாகச் செய்யப் பார்த்தார். மாட்டிக் கொண்டார். சீரான கல்விமுறைச் சட்டத்திற்கு, அதன் விளைவாய் வந்த பொதுப்பாடத் திட்டத்திற்கு பாடப் புத்தகங்களுக்கு வேட்டு வைக்கப் பார்த்த திருத்தச் சட்டத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் 10.06.2011 அன்று தடை விதித்தது.
ஜெயலலிதா உச்சநீதிமன்றம் சென்றார். உச்சநீதிமன்றம் 14.6.2011 அன்று, 2010 - 2011ல் ஏற்கனவே அறிமுகமான பொதுப்பாடத் திட்டமுறை வகுப்புகள் 1 மற்றும் 6க்கு தொடரலாம் என்றும் 10 வகுப்பு வரையிலான இதர வகுப்புகளுக்கு பொதுப் பாடத் திட்டப் புத்தகங்கள் சீரான பள்ளிக் கல்வி முறை ஆகியவற்றை அமல்படுத்துவதற்கான வழிமுறைகளை முழுமையாக ஆராய, மாநில அரசு ஒரு குழு அமைக்கலாம் என்றும், குழுவின் பரிந்துரை உயர்நீதிமன்றம் முன் இரு வாரத்திற்குள் வைக்க வேண்டும் என்றும், உயர் நீதிமன்றம் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
குழு அமைக்கப்பட்டது. அறிக்கை தரப்பட்டது. 19.07.2011 அன்று சென்னை உயர்நீதி மன்றம், திருத்தச்சட்டம் என்ற போர்வையில் சட்ட ஏற்பு பெற்ற ஒரு சட்டத்தை நீக்க முடியாது எனவும், அமலில் வந்து விட்ட ஒரு சட்டத்தை திருத்துவதன் மூலம், அரசு தன் அதிகார வரையறையை மீறி விட்டது என்றும் சொல்லி, திருத்தச் சட்டத்தை செல்லாது என்று அறிவித்தது. சளைக்காமல் ஜெயலலிதா திரும்பவும் உச்சநீதிமன்றம் சென்றுள்ளார். தமிழக அரசு சார்பாக வாதாடும் மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ், அரசு அவசரமாய் திருத்தச் சட்டம் கொண்டுவந்து விசயத்தைச் சிக்கலாக்கி விட்டது எனவும், அரசுக்கு உரிய ஆலோசனை வழங்கப்படவில்லை என்றும் முதலில் சொல்லி விட்டு பிறகு அது தமது சொந்தக் கருத்து என நழுவ முயன்றார். உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி ஆகஸ்ட் 5க்குள் புத்தகங்களை விநியோகிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக இதுவரை தெரியவில்லை.
சீரான பள்ளிக் கல்வி முறைக்கு ஏன் எதிர்ப்பு?
• மெட்ரிகுலேசன் பள்ளிகள் நிறைய பணம் சம்பாதிக்கின்றன. அப்போதும் பற்றாது எனக் கூச்சலிடுகின்றனர். சீரான பள்ளிக் கல்வி முறை, பொதுப் பாடத் திட்டம், பாடப் புத்தகங்கள் என்றானால், கட்டணங்களில் மட்டும் ஏன் வேறுபாடு என்ற கேள்வி எழுகிறது. அவர்களைப் பொறுத்தவரை இந்தக் கேள்வி எழவேக் கூடாது.
• பொதுப் பாடத் திட்டப் புத்தகங்கள் கொண்ட சீரான பள்ளிக்கல்வி முறையை, நிறைவான சமச்சீர் கல்வியை நோக்கிச் செலுத்த, ஒரு துவக்கமாக எவரும் பயன்படுத்தக் கூடாது என நினைக்கிறார்கள்.
• ‘தரம்’ தொடர்பான காலாகாலமான மேட்டிமை ஆதிக்க சிந்தனையில் இருந்து, பொதுப் பாடத் திட்டம் தரம் உயர்த்தாது. தரம் தாழ்த்தும் என வாதாடுகிறார்கள்.
இவையே, எதிர்ப்பாளர்களின், அவர்களை ஆதரிக்கும் ஜெயலலிதாவின் நிலைபாடு. ஜெயலலிதா உலகளாவிய பார்வை கொண்ட பேரறிஞர். அதனால், தயாராகி உள்ள பொதுப் பாடத் திட்டமும் புத்தகங்களும், உலகமயச் சவால்களை எதிர்கொள்ள மாணவர்களுக்கு உதவாது எனக் கவலைப்படுகிறார்!
கல்வியாளர்கள் நீதிமன்றங்கள் சொல்கிற கருத்துக்கள்
• சீரான பள்ளிக்கல்விமுறை 2010 சட்டம் செல்லும் என தீர்ப்பு வழங்கிய நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் எழுதுகிறார். ‘மாநிலத்தில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வியில் சமத்துவமில்லாமல், ஓர் உண்மையான ஜனநாயகம் இருக்க முடியாது. குழந்தைகளை, வர்க்க சமூக வேறுபாடுகள் அடிப்படையில், இறுக்கமான பெட்டிகளில் அடைக்க முடியாது.’
• 1882 - 1883ல் வெள்ளையர் ஆண்ட காலத்திலேயே, ஹண்டர் ஆணையம், கட்டாயக் கல்வியை வலியுறுத்தியது.
• 1951ல் இடைநிலைக் கல்வி வாரியம், பொதுப் பாடத் திட்டத்தை அரசு தயாரிக்கும் பாட புத்தகங்களைப் பரிந்துரைத்தது.
• கோத்தாரி ஆணையம், 1964ல், கல்விக்கு தேசந்தழுவிய ஒரு பொது வடிவம் தேவை என்றது.
• ராமமூர்த்தி குழு: ‘கல்வியில் சமத்துவத்தை சமூக நீதியையும் கொண்டு வர, முதல்படி, பொதுப்பள்ளி முறையாகும். 10 வருட காலத்திற்குள் கட்டம்கட்டமாய் பொதுப் பள்ளி முறையை அமல்படுத்த வேண்டும். கீழ்நிலை வகுப்புக்களுக்கு தேர்வு நடைமுறை, கல்விக் கட்டணம், தலைவீதக் கட்டணம் (கேபிடேசன் பீஸ்) ஆகியவற்றைத் தவிர்க்க அத்தியாவசியமான குறைந்தபட்ச சட்டம் வேண்டும்.’
• பேராசிரியர் அனில் சடகோபால், ‘எல்லா குழந்தைகளுக்கும் சமமான அல்லது கிட்டத்தட்ட சமமான கல்வியை வழங்கும், முழுமையாக அரசு நிதியளிக்கும் பள்ளி முறையின் அடித்தளத்தின் மீதுதான், அமெரிக்கா கனடா மற்றும் பல அய்ரோப்பிய நாடுகள் உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளின் பொருளாதாரங்கள் கட்டியெழுப்பப்பட்டன. பொதுப் பள்ளி முறையை முன்னேற்றாமல், உலகில் எந்த நாடும், துவக்கக் கல்வியை அனைவருக்குமானதாக்கியதில்லை.’
சீரான பள்ளிக் கல்வி முறை தாண்டிய நிறைவான சமச்சீர் கல்வி முறை
திமுக அரசு, முத்துக்குமரன் குழுவின் அனைத்து பரிந்துரைகளையும் ஏற்று சட்டம் இயற்றவில்லை. பொதுப்பாடத் திட்டம் பாடப் புத்தகங்கள் வரை சென்றது. மாநிலத்தில் ஏற்கனெவே 1978 முதல் +1, +2 வகுப்புகளில் பொதுப்பாடத் திட்டமும் பொதுத் தேர்வும் நடைமுறையில் உள்ளன. மாநிலத்தில் உள்ள 1,20,000,00 மாணவர்களில் 1,07,18,711 மாணவர்கள் மாநில அரசு கல்வி வாரியத்தின் கீழும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் 54,103 மாணவர்களும் ஓரியண்டல் பள்ளிகளில் 9,985 மாணவர்களும் மெட்ரிக் பள்ளிகளில் 27,21,128 மாணவர்களும் உள்ளனர். 2010 சட்டத்தின் மூலம் அதிகபட்சமாய் இவர்கள் அனைவருக்கும் பொதுப் பாடத் திட்டம் மற்றும் பாடப் புத்தகங்கள் 1 முதல் 10 வகுப்புக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. கட்டணம் மாறி மாறி இருக்கும்வரை சரியான உள்கட்டுமான வசதிகள், அக்கறையான கற்பித்தல் போதுமான ஆசிரியர்கள் புத்தகப் படிப்பைத் தாண்டிய விசயங்கள் இல்லாமல் சமச்சீர் கல்வி எப்படி சாத்தியம்? அரசின் நிதியுதவி மற்றும் கட்டுப்பாட்டின்கீழ் மட்டுமே சமச்சீர் கல்வி சாத்தியம், திமுக, அதிமுக இதைப் பற்றி கற்பனை கூட செய்ய முடியாது.
கட்டாய இலவசக் கல்வியின் கதி
உன்னிகிருஷ்ணன் வழக்கில் உச்சநீதிமன்றம் கல்வி உரிமை உயிர் வாழும் உரிமைக்குள் அடங்கும் எனத் தீர்ப்பளித்தது. அரசியலமைப்புச் சட்ட 82வது திருத்தப்படி 13.12.2002 முதல் பிரிவு 21 எ என்ற புதிய பிரிவு அடிப்படை உரிமையாக்கப்பட்டது. அதன்படி ‘சட்டப்படி அரசு நிர்ணயிக்கும் முறையில், அரசு 6 வயது முதல் 14 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்கியாக வேண்டும்’. குடிமக்கள் எவரும், அரசு அடிப்படை உரிமையை நடைமுறைப்படுத்தியாக வேண்டும் எனக் கோர முடியும் என்பதுதான், சட்டத்தின் ஆட்சியின் மேன்மை என, சொல்லப்படுகிறது. கருணாநிதியும் ஜெயலலிதாவும் வாஜ்பாயும் மன்மோகனும் பதவி ஏற்கும்போது பிரிவு 21 எ உட்பட அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதாகத்தான் உறுதியேற் றனர். ஆனால், மத்திய அரசு, இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும் குழந்தைகளின் உரிமை தொடர்பான சட்டத்தை, 27.08.2009 அன்றுதான் அமலுக்குக் கொண்டுவந்தது.
02.08.2011 அன்று சென்னை உயர்நீதி மன்றம் புதுச்சேரி அரசு மத்திய சட்ட அமலாக்கத்துக்கான விதிகளை மூன்று மாதங்களுக்குள் நிறைவேற்ற வேண்டுமென ஆணையிட்டுள்ளது. கருணாநிதியோ ஜெயலலிதாவோ மத்திய சட்டம் 2009க்கு இதுவரை தமிழ்நாட்டில் விதிகள் இயற்றியதாகத் தெரியவில்லை. ஜெயலலிதா தமது முந்தைய ஆட்சிக்காலத்தில், தமிழ்நாடு கட்டாய துவக்க நிலைக் கல்விச் சட்டம் 1994அய் கொண்டுவந்தார். அச்சட்டத்தின் பிரிவு 3ன்படி அவசியம் எனக் கருதும் அளவுக்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களுடன் போதுமான துவக்கப் பள்ளிகளை அரசு வழங்க வேண்டும். பள்ளி செல்லும் வயதில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கட்டாய துவக்கக் கல்வி தர வேண்டும்.
ஜெயலலிதா தமது 25.3.2011 தேர்தல் அறிக்கையில் பள்ளிக் கல்வி சீரமைப்பு என்ற தலைப்பில், தரமான இலவசக் கல்வி அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார். இது வரை இதுபற்றி அவர், வாய் திறக்கவில்லை. அவர் 2011 திருத்தச் சட்டத்தை சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்ற ஒத்துழைப்பு தந்த இகக, இகக(மா) இதுவரை, ஜெயலலிதா தனது ‘அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி’ வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கோரவில்லை. தமிழ்நாட்டில் படிப்பை பாதியில் நிறுத்துவது (இடைநிற்றல்) இன்னும் தொடர்கிறது. 2005 - 2006 விவரங்கள்படி உயர்நிலைக் கல்வியில் இடைநிற்றல் 42.45%, மேல் உயர்நிலைக் கல்வியில் 69.45% ஆகும். ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியில், இடைநிற்றலை தடுக்க, +2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை ரூ.1000 முதல் ரூ.5000 வரை தரப்படும் என்கிறார். லோக்பால், வல்லரசு பற்றியெல்லாம் ஆரவாரமாகப் பேசும் ஜெயலலிதா, இந்த வாக்குறுதியைப் பற்றி ஏனோ இதுவரை பேசவில்லை. கட்டாய இலவசக் கல்விக்குப் பதிலாக, கட்டாய இடைநிற்றலை உறுதி செய்வார் போலும்! பொதுப் பாடத் திட்டம் தானாகவே உயர்நிலை, உயர்மேல் நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்காது.
மத்தியச் சட்டமும் ஏமாற்றுகிறது
அரசியலமைப்புச் சட்டத்தின் 21 எ பிரிவின்படிதான் 2009ல் கட்டாய இலவசக் கல்வியை 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளின் உரிமையாக்கிவிட்டதாக மத்திய அரசு பெருமை பேசுகிறது. இச்சட்டம் அரசு பள்ளிகளுக்கு மட்டுமே 100 சதம் பொருந்தும். உதவிபெறும் பள்ளிகள், உதவிபெறும் அளவுக்கு, 25%க்கு குறைவில்லாத மாணவர்களுக்கு இலவசக் கல்வி தந்தால் போதும். உதவி பெறாத பள்ளிகள் 25% இடத்தை ஒதுக்கி, அதற்கு, அரசு பள்ளிகளில் ஆகும் செலவைத் திரும்பப் பெறலாம். இச்சட்டத்தின் 6ஆவது பிரிவு, இச்சட்டம் அமலுக்கு வந்த தேதியில் இருந்து (27.08.2009), மூன்று வருடத்திற்குள், இச்சட்டத்தை நிறைவேற்ற குடியிருப்புப் பகுதி பள்ளிகளை நிறுவச் சொல்கிறது. இலவசக் கட்டாயக் கல்வி உரிமை 2002ல் அடிப்படை உரிமையானது. இதற்கான சட்டம் 7 ஆண்டுகள் கழித்து இயற்றப்பட்டது. 2009 சட்டத்தின் பயன்கள், எப்போது இந்தியக் குழந்தைகளைச் சென்று சேருமோ?
பள்ளிக் கல்வியோடு எல்லாம் முடிந்ததா?
ஆங்கிலக் கல்வி, கட்டணக் கல்வி மட்டுமே நம் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் தரும் என நம்பும் நிலையில் பெற்றோர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தனியார் தொலைபேசிச் சேவைகளை கொழுக்க வைக்க, அரசு நிறுவனமான பிஎஸ்என்எல், அரசாலேயே நலிவை நோக்கி எப்படித் தள்ளப்படுகிறதோ, அதே போல் தனியார் கல்வி நிறுவனங்கள் வளர அரசு பள்ளிகள் பலவீனப்படுத்தப்படுகின்றன. முதலாளித்துவ சமூகத்தில், எதுவுமே, சந்தையில் விற்கும் அளவுக்கு எடுபட வேண்டும். நாளைய வேலை வாய்ப்பு எத்தகையதாக இருக்க வேண்டும், அதற்கு எத்தகைய கல்வி தேவை என்பவையே பெற்றோர்களின் இயல்பான கவலையாகிறது. இதனைக் கல்வி வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அரசு வழங்க வேண்டும் என்பதற்கு நேரெதிராக, எல்லாமே வியாபாரம் என மாறிய பிறகு, அறிவுத் தேடலுக்கான கல்வி, பண்படுத்தலுக்கானக் கல்வி என்பதெல்லாம் பசப்பு வார்த்தைகளே. ஜெயலலிதா, சீரான பள்ளிக் கல்வியையும் பொதுப் பாடத் திட்டத்தையும் அமல்படுத்தும் வழிமுறைகளை ஆராயும் குழுவில், கல்வி வியாபாரிகளான ஜெய்தேவையும், திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதியையும் கல்வி நிபுணர்களாக நியமித்ததில் வியப்பு ஏதும் இல்லை.
தமிழகத்தில் ஒரு பேராபத்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கல்லுôரிக் கல்வியும், தொழில்முறைக் கல்வியும் தனியார்களால் விழுங்கப்படுகிறது. இந்தியாவெங்கிலும் உயர்கல்வி வயதினரில் 12.39% பேர் மட்டுமே உயர்கல்வி பெறுகின்றனர் என்றால், தமிழ கத்தில் 20.12% பேர் உயர்கல்வி பெறுகின்றனர் என 2006 - 2007 விவரங்கள் சொல்கின்றன. கழகங்களின் ஆட்சியில், உலகமயக் காலங்களில் தமிழகம், வரலாறு காணாத கல்வி வர்த்தகமயத்திற்கு எப்படி ஆளாகியுள்ளது என்பதை, கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் தொடர்பாக இங்கு தரப்பட்டுள்ள அட்டவணைகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
அட்டவணை 1: தமிழ்நாடு 2006 - 2007
நிர்வாக முறைப்படி உயர்கல்வி நிறுவனக் கட்டமைப்பு
அட்டவணை 2: 2009 - 2010ல் சேர்க்கப்பட்ட மாணவர்கள்
அட்டவணை 3: பொறியியல் கல்லூரிகளில்
2009 - 2010ல் சேர்க்கப்பட்ட மாணவர்கள்
அட்டவணைகள், உயர் கல்வி தனியார் கொள்ளைக் காடாக மாறுவதை காட்டும். அரசு பின்வாங்குகிறது. சந்தை, கல்வித் துறையில் முன்னேறித் தாக்குகிறது.
முற்போக்கு இடதுசாரி ஜனநாயக இயக்கங்கள், அரசு, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் கல்விக்கு 3.5% நிதி மட்டுமே ஒதுக்குவதை கணக் கில் கொள்ள வேண்டும். கல்வி உரிமை, உயிர் வாழும் உரிமையின் பிரிக்க முடியாத பகுதி எனும்போது கல்வி பெறுவது மாணவர் உரிமை, கல்வி தருவது அரசின் கடமை, அனைவர்க்கும் கல்வி அனைவர்க்கும் வேலை என்பதாகவே நமது முழக்கம் இருக்கும்.

குற்றவாளிக் கூண்டில்
முதலாளித்துவ அரசு
குற்றம் சுமத்துகிறது உச்சநீதிமன்றம்

- காம்ரேட்

குற்றமும் தண்டனையும்
‘குற்றமும் தண்டனையும்’ என்ற, டாட்ஸ்யவேட்ஸ்கியின் நெடுங்கதை, உலகெங்கும் பிரபலமானது. முதலாளித்துவத்தின் குற்றங்களுக்கு, மக்கள் தண்டனை அனுபவிப்பதுதான் வாடிக்கை. அடிப்படையான, உண்மையான சமூக மாற்றம் வரும் வரை, முதலாளித்துவத்தின் குற்றங்களுக்கு மக்களுக்கு தண்டனை என்பது தொடரும். விதிகளுக்கு விதிவிலக்குகள் இல்லாமலா போகும்?
மக்களின் ஊழல் எதிர்ப்பு உணர்வின் முன், உயர்மட்ட ஊழலை ஏற்கவோ மன்னிக்கவோ மாட்டோம் என்ற உணர்வின் முன், ஆதர்ஷ் ஊழலில் மகாராஷ்டிரா முதல்வர் பதவியை இழந்தார். ராசா, கல்மாடி, கனிமொழி சிறையில் உள்ளனர். தயாநிதியை, திஹார் கொடும் கனவுகள் விரட்டுகின்றன. சுரங்க ஊழலால் சூழப்பட்டுள்ள எடியூரப்பா, பதவி விலகுகிறார். ராசாவின் சுட்டுவிரல், நீ மட்டும் யோக்கியமா என, மன்மோகன், சிதம்பரம் நோக்கித் திரும்பியுள்ளது. அடம் பிடித்த நீதிபதி தினகரன் ஒரு வழியாக பதவி விலக நேர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட பிறகு, அஞ்சாநெஞ்சரும் அஞ்சிஅஞ்சிச் சாகிறார்.
முதலாளித்துவப் பொருளாதார சூறையாடலுக்குத் துணைபோன, அதில் பங்கேற்ற, பங்கு பெற்ற முதலாளித்துவ அரசியல்வாதிகள், இதுவரை இல்லாத அளவுக்கு, இவர்களில் எவரும் யோக்கியமில்லை என்ற மக்களின் அவநம்பிக்கைக்கு ஆளாகி உள்ளனர். மக்களின் சீற்றம் கொந்தளித்து எழுகின்றது. இந்தப் பின்னணியில், மக்களை நோக்கி சாட்டையை வீசிப் பழக்கப்பட்ட நீதித்துறை, இப்போது முதலாளித்துவ அரசை நோக்கி, அடுத்தடுத்து சாட்டையை வீசியுள்ளது.
முதலாளித்துவ நீதிமன்றங்கள்பால், போராடும் இயக்கங்களுக்கு மாயைகள் கூடாது. லோக்பால் நகல் மசோதா உருவாக்கும் குழுவில் அன்னா ஹசாரேயோடு இடம் பெற்ற உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், 2006ல், வேட்டையாடும் முதலாளித்துவத்தின் கூர்முனை நீதித் துறை என்ற தலைப்பில் பேசியதை நினைவில் கொள்வது நல்லது. ‘தற்போது நீதிமன்றங்களின் பாத்திரம் என்பதில், அவர்கள் வறியவர்கள் நலன்கள் காப்பதில்லை என்பது பிரச்சனை அல்ல. இதனை அவர்கள் வெகுகாலம் முன்பே சொல்லிவிட்டனர். அவர்கள், பொருளாதார தாராளமய சகாப்தத்தில், வறியவர்கள் மீதான ஒரு மிகப் பெரிய தாக்குதலை வழிநடத்துகின்றனர். நர்மதை அணையால் வெளியேற்றப்படும் பழங்குடியினர், நீதிமன்ற உத்தரவுப்படி அறிவிப்போ மறுகுடியிருப்போ இல்லாமல் புல்டோசர் கொண்டு வீடு இடிக்கப்படும் நகர்ப்புற குடிசைப் பகுதியினர், டெல்லி மும்பை நகரங்களில் நீதிமன்ற உத்தரவுப்படி வீதிகளில் இருந்து வெளியேற்றப்படும் ரிக்ஷா ஓட்டுபவர்கள், கூவி விற்கும் சிறு வியாபாரிகள் என அடுத்தடுத்த வழக்குகளில் மக்கள்தான் தாக்குதல்களைச் சந்திக்கின்றனர். பொதுநல வழக்காடுதல் தலைகீழாய் புரட்டிப் போடப்பட்டுள்ளது. அது, இப்போது, வர்த்தக வளர்ச்சிக்காக, மேட்டுக்குடியினரின் நலன்களுக்காக, வறியவர்களின் மீது பெரும் தாக்குதல்களைத் தொடுத்து நகரவெளிகளில் இருந்து அவர்களை வெளியேற்றவும் கிராமப்புற நிலங்களிலிருந்து வறியவர்களை வெளி யேற்றவும் பயன்படுத்தப்படுகிறது.’
மக்கள் சீற்றம், முதலாளித்துவ அமைப்புக்கே கடும் நெருக்கடி என்ற பின்புலத்தில், ஜ÷லை 2011ல் இந்திய உச்சநீதிமன்றம் அடுத் தடுத்து சில வரவேற்கத்தக்க தீர்ப்புக்களை வழங்கியுள்ளது. நீதிபதிகள் சுதர்ஷன் ரெட்டியும் சுரீந்தர்சிங் நிஜ்ஜாரும் சல்வா ஜ÷டும் மற்றும் கருப்புப் பண வழக்குகளில் தனியார் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட சந்தைப் பொருளாதாரத்தைத் தோலுரித்துக் காட்டி, கடுமையாகச் சாடியுள்ளனர். டெல்லி குடிநீர் வாரிய வழக்கில் நீதிபதிகள் சிங்வி மற்றும் கங்குலி ‘நாங்கள் வசதி படைத்தவர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தால் புகழப்படுகிறோம்; வறியவர் உரிமைகளை உயர்த்திப் பிடித்தால் சாடப்படுகிறோம்’ என்றார்கள்.
சல்வா ஜ÷டும் வழக்கு தீர்ப்பு பற்றி முதலில் பார்ப்போம்.
பயங்கரம் பயங்கரம்
ஜோசப் கான்ராட் ‘கும்மிருட்டின் இதயம்’ என்ற தமது நெடுங்கதையில் காலனியச் சுரண்டலை அதன் ஆன்மீக இருண்மையைப் படைப்பாற்றலோடும் கலை நேர்த்தியோடும் சித்திரமாய்த் தீட்டுகிறார். யானை தந்தக் கொள்ளையர்கள் ஆப்பிரிக்க மக்கள் மீது தாக்குதல்கள் தொடுப்பது ஆகியவற்றின் உருவகமான குர்ட்ஸ் என்ற கதாபாத்திரம், ‘பயங்கரம் பயங்கரம்’ எனச் சொல்லிக் கொண்டே தன் இறுதி மூச்சை விடும் காட்சி வர்ணனை, நீங்காமல் வாசகர்கள் நினைவில் நிற்கும். பசுமை வேட்டையின் பிரிக்கமுடியாத ஒரு பகுதியாக சல்வா ஜ÷டும் அமைக்கப்பட்டு செயல்பட்டதை பயங்கரம் பயங்கரம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் வர்ணனை செய்து, ‘கும்மிருட்டின் இதயம்’ நெடுங்கதையின் பின்னணியையும் சமகால சட்டீஸ்கரில் நடைபெறும் மூலதனத்தின் சூறையாடலையும் ஒப்பிடுகிறார்கள். இத்தீர்ப்பின் முன்பு பாஜகவின் ராமன்சிங் அரசாங்கமும் மத்திய அய்முகூ அரசாங்கமும் அம்மணமாய் நிற்கின்றன.
அரசு ஆதரிக்கும் அரசியல் பொருளாதாரம், அறங்களுக்கு அப்பாற்பட்டதாய் நிற்பதைச் சுட்டிக்காட்டும் நீதிபதிகள், மனித உரிமைகளுக்காகப் பேசுபவர்களையெல்லாம் சந்தேகத்துக்குரியவர், மாவோயிஸ்ட் என முத்திரை குத்துவதையும், வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர்.
சாட்டையடி
‘அரசியலமைப்புச் சட்ட வரம்புகளையும் விழுமியங்களையும் நேரடியாக மீறி அரசால் ஆதரிக்கப்பட்டு முன்தள்ளப்படும், முதலாளித்துவத்தின் வேட்டையாடும் வடிவங்கள், பல நேரங்களில், சுரங்கத் தொழில்களைச் சுற்றியே வேர் விடுகின்றன.’
‘ஆதாயங்களில் நியாயமான பங்கு பற்றியோ சுற்றுச் சூழலின் நீடித்த நலன் காப்பது பற்றியோ எந்த நம்பகமான வாக்குறுதிகளும் இல்லாமல், தனியார் துறை, மூல வளங்களை மிகவும் விரைவாகச் சுரண்ட வழிவகுக்கும் கொள்கைகள், ‘நாட்டை நடத்துவதற்கான’ அடிப்படையான கோட்பாடுகளுக்கு விரோதமானவை. இத்தகைய அத்துமீறல்கள் மிகப்பெரிய அளவில் நடக்கும்போது, அவை அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14படியான சட்டத்தின் முன் சமத்துவம் சமப்பாதுகாப்பு வாக்குறுதியையும், பிரிவு 21 சொல்லும் கவுரவமான வாழ்க்கைக்கான வாக்குறுதியையும் பொருளற்றவையாக்குகின்றன. கூடுதலாக, சுரங்கத் தொழில் நடத்துவோர் சில இடங்களில் சுரங்கக் குற்றக் கும்பல் எனப்படுவோருடன், அரசு நிறுவனங்களின் கூடா நட்பு, அரசின் தார்மீக ஆளுமையை அரித்துப் போகச் செய்கிறது.’
‘வசதி படைத்தவர்களுக்கு வரிச்சலுகைகள், வறியவர்கள் மத்தியிலிருந்து வரும் இளைஞர்களுக்கு துப்பாக்கிகள். இதுதான், அரசின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார கொள்கைகளின் உயர்பீடங்கள் ஓதும் புதிய மந்திரங்கள் என்பதும், அவர்கள் வறிய இளைஞர்கள் தமக்குள் மோதிக் கொள்வதையே விரும்புவதும் தெரிகிறது.’
‘சிறப்புக் காவல் அதிகாரிகளாக கிட்டத் தட்ட எந்தக் கல்வியறிவும் இல்லாத இளைஞர் களை சட்டீஸ்கர் அரசு பணியில் அமர்த்த, மத்திய அரசுதான் நிதியுதவியளிக்கிறது.’
அய்ந்தாவது படித்தாலே சிறப்புக் காவல் அதிகாரிகள், அவர்கள் ஒரு மணி நேரம் நடக்கும் 24 வகுப்புகளில் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் சட்டம், சாட்சியங்கள் சட்டம், சிறார் சட்டம் கற்றுத் தேறுகிறார்கள், பன்னிரண்டு மணி நேர வகுப்புகளில் மனித உரிமைகள் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் பற்றி தேர்ந்து தெளிவடைகிறார்கள், அவர்களுக்கு, சிறப்புக் காவல் அதிகாரிகள் என வேலை தந்துள்ளது, பிரிவு 21ன் கீழான அவர்களது உயிர்வாழும் உரிமையைப் பாதுகாப்பதாகும் என்ற சட்டீஸ்கர் அரசாங்கத்தின் வாதங்கள், அந்த அரசாங்கம் பழங்குடி மக்களின் வாழ்வுரிமையை எள்ளளவும் மதிக்கவில்லை என்பதையும் அவர்களது மானுட கவுரவத்தைக் கேவலப்படுத்துகிறது என்பதையும்தான் காட்டுகின்றன எனச் சாடுகிறார்கள்.
தீர்ப்பு முடிவுகள்
• சல்வா ஜ÷டும்/கோயா கமாண்டோ என்ற கிட்டத்தட்ட கல்வியறிவற்ற சிறப்புக் காவல் அதிகாரிகள் என்ற தனியார் படையினருக்கு, ஆளுக்கு மாதம் ரூ.3000 கவுரவத் தொகை என நிர்ணயித்து சட்டீஸ்கர் அரசாங்கம் பணியில் அமர்த்தி உள்ளது, அரசியல் அமைப்புச் சட்டம் 14, 21 பிரிவுகளுக்குப் புறம்பானது.
• சட்டீஸ்கர் மாநில அரசாங்கம், சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோஸ்ட் நக்சலைட் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகிறோம், எதிர்க்கிறோம், மட்டுப்படுத்துகிறோம், நீக்குகிறோம் எனக் காரணம் சொல்லி, நேரடியாகவோ, மறைமுகமாகவோ சிறப்புக்காவல் அதிகாரிகளைப் பயன்படுத்துவதை, உடனடியாக நிறுத்தவேண்டும்.
• மாவோயிஸ்ட் நக்சலைட் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் நோக்கத்திற்காக எனச் சொல்லி நேரடியாகவோ மறைமுகமாகவோ சிறப்புக் காவல் அதிகாரிகள் என வேலைக்கு எடுப்பதற்கு உதவும் வகையில் மத்திய அரசு தன் நிதி எதையும் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
• சட்டீஸ்கர் அரசாங்கம், சிறப்புக் காவல் அதிகாரிகள் கைகளில் தரப்பட்டுள்ள அனைத்து ஆயுதங்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
• மாவோயிஸ்ட்கள் நக்சலைட்கள் உள்ளிட்ட அதே நேரம் அவர்களோடு மட்டும் சுருக்கப்படாத அனைத்து சக்திகளிடமிருந்தும், இந்தச் சிறப்புக் காவல் அதிகாரிகளுக்கு அரசியலமைப்புச் சட்ட வரையறைக்குள்ளான பாதுகாப்பு வழங்க வேண்டும்.
• சல்வா ஜ÷டும்/கோயா கமாண்டோ உள்ளிட்ட ஆனால் அவர்களோடு மட்டும் சுருக்கப்படாத எந்தவொரு குழுவும் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொள்வதை, அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகச் செயல்படுவதை, எந்தவொரு மனிதருடைய மனித உரிமைகளை மீறுவதைத் தடுப்பதற்கு, சட்டீஸ்கர் அரசாங்கம் எல்லா பொருத்தமான நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். இதுவரை உரிய விதத்தில் விசாரிக்கப்படாத அல்லது முழுமையாக விசாரிக்கப்படாத சல்வா ஜ÷டும்/கோயா கமாண்டோக்களின் குற்ற நடவடிக்கைகள் என்று கூறப்படுகிற அனைத்து விசயங்களிலும், உரிய முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து அக்கறையுடன் குற்றவியல் நடவடிக்கையைத் தொடர வேண்டும்.
கருப்புப் பணம்
நாட்டு நடப்புப் பற்றிய நீதிபதிகளின் சித் திரம், உண்மை கட்டுக் கதைகளை விட விநோதமானது என்ற கூற்றுக்கு, வலு சேர்க்கும்.
‘குடிமக்களின், குறிப்பாக வறியவர்களின் மனித உரிமைகளை பலநேரங்களில் மீறி, வேட்டையாடும் முதலாளித்துவம் ஆதாயம் அடையும் வகையில் அரசு வன்முறை நிறைந்த ஆதரவு தரும்போது, சந்தை, பெரும்தொழில்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஓர் அதிகாரத்துவ இயந்திரம்போல் செயல்படுகிறது. அரசு, சந்தை போல் செயல்படுகிறது. இங்கு எல்லாமே ஒரு விலைக்குக் கிடைக்கிறது’.
‘பொருளாதார சமூக நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் பணி ஒப்படைக்கப்பட்ட, அரசு நிறுவனங்கள், நவதாராளவாதக் கருத்தியலால் உந்தப்பட்டு, அதீத எச்சரிக்கை நிலையிலிருந்து தவறு செய்ய முழுமையாய் வாய்ப்பு உண்டு. தவறு நடக்கிறது என்ற அறிகுறிகள் எவ்வளவு வலுவாக புலப்படும்போதும் அவை கண்டுகொள்ளாமல் விடப்படலாம். பொது மக்களுக்கு நன்கு புலப்படும் பங்குச் சந்தை மகா ஊழல்களை கண்டுகொள்ளாமல் விடுவது, அல்லது பெருவீத அளவில் நடைபெறும் சட்டவிரோத சுரங்கத் தொழிலை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது போன்றவை, உடனடி உதாரணங்கள். அரசிடமிருந்து பலவீனமான பதில்வினை அல்லது பதில் வினையே இல்லாமல் தொடர அனுமதிக்கப்படும் இந்நடவடிக்கைகள், மிகவும் சாதாரணமாகச் சொன்னால் கூட, மேலும்மேலும் பணம் சம்பாதிக்கும் தனியார் நடவடிக்கைகள்பால் கொண்டுள்ள, சுலபமாக அனுமதிக்கும் கலாச்சாரத்தைக் காட்டுகிறது.’
‘மேட்டுக்குடியினர்’ - அரசு அதிகாரத்தைச் செலுத்துவோர், மேலும் மேலும் சுரண்டல் நிறைந்த ஓர் அரங்கில் கொழுப்பவர்கள்’ - மேற்கொள்ளும், அறங்களுடனான (தார்மீக நெறிகளுடனான) சமரசங்கள், எதையும் அனுமதிக்கும் ஓர் அணுகுமுறை, பலவீனமான சட்டங்கள், பலவீனமான சட்ட அமலாக்கம் அணுகுமுறைகள் என்ற ஒரு சூழலில்தான், செழித்து வளர்கின்றன எனக் கணிக்க முடியும்.’
‘அசன் அலிகானை, அவர் இந்தியாவிலேயே வாழும்போது, கைது செய்து விசாரிக்க முயற்சிக்காததிலிருந்து, மத்திய அரசு முழுமையாக விசாரணையை முடக்கி உள்ளது என்பது எங்களுக்குத் தெளிவாகிறது. இந்த நீதிமன்றம் ஆணையிட்டு முதல்முறையாக அசன் அலிகான் மற்றும் தபூரியா தொடர்ந்து விசாரிக்கப்படும் போது, பல பிரபல புள்ளிகள், பெரும் தொழில் குழும அதிபர்கள், சக்தி வாய்ந்த அரசியல் தலைவர்கள், சர்வதேச ஆயுத வியாபாரிகள் ஆகியோரின் பெயர்கள் வெளிவந்துள்ளன. இவற்றை விசாரிக்க, சரிபார்க்க, இதுவரை எந்தக் குறிப்பிடத்தக்க முயற்சியும் எடுக்கப் படவில்லை. இது, இந்த நீதிமன்றத்தின் ஆழ்ந்த கரிசனத்திற்குரியதாகிறது. சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை இந்த நீதிமன்றமே அமைத்து, இந்த நீதிமன்றம் சார்பாக அதன் ஆணை மற்றும் வழிகாட்டுதல்படி சிறப்பு விசாரணைக் குழு விசாரணையை, தொடர்ந்து திறன்வாய்ந்த வகையில் அன்றாடம் மேற்பார் வையிடும் அவசியத்தைக் காட்டுகிறது.’
கருப்பு, கருப்பு, கருப்பு. உள்ளேயும் கருப்பு, வெளியேயும் கருப்பு. உலகமயக் கருப்பு. சந்தைப் பொருளாதாரக் கருப்பு. முதலாளித்துவக் கருப்பு. உச்சநீதிமன்றம், எல்லை தாண்டி தன் அதிகாரத்தில் நுழைவதாக, உச்சநீதிமன்றம் மீது புகார் சொல்லி, ஊழல் அய்முகூ அரசு, கண்காணிப்பிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறது. இத்தகைய தீர்ப்புக்களை காங்கிரஸ் பாஜக இரண்டுமே இரட்டைக் குழல் துப்பாக்கிகளாய் எதிர்க்கின்றன.
சாக்கடையைச் சுத்தம் செய்யும்போது...
டெல்லி குடிநீர் வாரியத் தொழிலாளி ஒருவர், சாக்கடையைச் சுத்தம் செய்யும்போது, நச்சுவாயு வெளியேற, செத்து மடிந்தார். டெல்லி உயர்நீதிமன்றம் நஷ்ட ஈடு வழங்குமாறும், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்குமாறும் உத்தரவிட்டது. வாரியத்தின் மேல்முறையீடு, நீதிமன்றத்தின் எல்லை தாண்டிய தலையீடு பற்றிப் புகார் செய்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிங்வி மற்றும் கங்குலி நஷ்ட ஈட்டை உயர்த்தினார்கள். ஒப்பந்தக்காரர்கள் பாதுகாப்பு ஏற்பாடு செய்வதை அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டு அமைப்புசாரா தொழிலாளர்களின் சட்ட உரிமைகள் பற்றியும் எடுத்துச் சொன்னார்கள். அப்போது அவர்கள் சொன்னார்கள்: ‘அரசின் மூன்று அங்கங்களில் ஒன்றான நீதித்துறை, இல்லாதவர்களின் நலன் காக்க, இயற்றப்பட்ட நலச்சட்டங்களை அமல்படுத்த எப்போதெல்லாம் ஆணையிடுகிறதோ, அப்போதெல்லாம், நீதித்துறை செயலுôக்கம் நீதித்துறையின் எல்லை தாண்டல் என்ற பூச்சாண்டியைக் கிளப்பி ஒரு தத்துவ விவாதம் துவக்கப்படுகிறது. பலவீனமானவர்களுக்குச் சாதகமான தீர்ப்புக்கள், விதிவிலக்கின்றி, மேல்முறையீடுகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இவ்வாறு அடுத்தடுத்த மேல்நிலை நீதிமன்றங்களுக்கு பல வழக்குகள் செல்வதன் ஒரே நோக்கம், பலவீனமானவர்களுக்காக, வறியவர்களுக்காக வாதாடுபவர்களைச் சோர்வடைய வைப்பதே ஆகும்.’
வராமலேயிருப்பதை விட, தாமதமாக வருவது மேல் என்பார்கள். சாக்கடையைச் சுத்தம் செய்யும்போது என்னென்ன பிரச்சனைகள் வரும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிலர் இப்போது புரிந்து கொள்கின்றனர். நல்லது. வரவேற்போம்.
ஊழலுக்கு எதிராக ஒடுக்குமுறைக்கு எதிராக விலை உயர்வுக்கு எதிராக, முதலாளித்துவக் கொள்ளையையும் கொள்ளையர்களையும் வெளியேற்றப் போராடுபவர்களுக்கு, முதலாளித்துவ அமைப்பை, அரசுகளைத் திருப்பித் தாக்க, இத்தீர்ப்புக்கள் நிச்சயம் உதவும்.

சிறிலங்கா பற்றிய அய்நா அறிக்கை மீது
மக்களவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!

சிறிலங்கா பற்றிய அய்நா அறிக்கை மீது மக்களவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி சபாநாயகருக்கு மாலெ கட்சி அளித்துள்ள கடிதம் இங்கு தரப்படுகிறது. மொழியாக்கம்: தேசிகன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
(மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)
யூ - 90, ஷகர்பூர், டில்லி - 110 092

பெறுநர்
சபாநாயகர்
மக்களவை
பொருள்: சிறிலங்காவில் பொறுப்பேற்கக் கோரும் அய்நா பொதுச் செயலாளர் நிபுணர் குழு அறிக்கை மீது இந்திய நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றக் கோரி.
மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களுக்கு,
சிறிலங்காவில் உள்ள நிலைமைகள் பற்றி அறிய அய்நா சபை பொதுச் செயலாளர் நியமித்த நிபுணர் குழு மார்ச் மாதத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்ததை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.
விடுதலைப் புலிகளுடனான போரின் இறுதிக் கட்டங்களில் போர்க் குற்றங்கள் நடைபெற்றன என்ற குற்றச்சாட்டில் ‘நம்பகத்தன்மை’ இருப்பதாக அறிக்கை கண்டறிந்துள்ளது; ‘போர்க் குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்’ உள்ளிட்ட மனித உரிமை மீறல்களுக்கு சிறிலங்கா அரசாங்கமும், ராணுவமுமே பொறுப்பு என்று அறிக்கை கூறுகிறது. ‘போரின் இறுதி கட்டங்கள் பற்றி சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்ததில் இருந்து பெரிதும் மாறுபட்ட நிலையை’ தான் கண்டதாக அய்நா அறிக்கை சொல்கிறது.
குடிமக்கள் நிறைந்த பகுதிகளில் பரவலாக விண்ணிலிருந்து குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் பல பத்தாயிரக்கணக்கான குடிமக்கள் கொல்லப்பட்டதை, உணவு விநியோகிக்கும் இடங்களில், செஞ்சிலுவைச் சங்க மீட்பு கப்பலுக்கு அருகில், மருத்துவமனைகள் மீது திட்டமிட்டு, மீண்டும் மீண்டும் நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதல்களைத், ‘திட்டமிட்டு’ மனிதாபிமான உதவிகள், உணவு, மருந்துகள் மறுக்கப்பட்டதை அறிக்கை ஆவணப்படுத்தியிருக்கிறது.
விசாரணை ஏதுமின்றி தண்டனைகள், சித்திரவதை, பாலியல் வன்முறை என போரில் உயிர் பிழைத்தவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் மறுக்கப்பட்டு அவர்கள் துன்புறுத்தப்பட்டதற்கு, பல பத்தாயிரக்கணக்கானோர் ‘காணாமல் போனதற்கு’, இட நெருக்கடியால் உயிரிழந்தோர், கொடுமையான மனிதத் தன்மையற்ற முகாம்களின் வாழ்நிலைமைகளால் உயிரிழந்தோர் என எல்லாவற்றுக்குமான ஆதாரங்களை நிபுணர் குழு அளித்துள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக, ‘பொறுப்பாக்குதல்’ மற்றும் ‘சமரசம் மேற்கொள்ளுதல்’ என்று சிறிலங்கா அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளில் எவ்வித நம்பகத்தன்மையும் இல்லை. உண்மையில் அவை பாரபட்சமானவையாக, பழிவாங்கும் நோக்குடன் எடுக்கப்பட்டதையும் அய்நா அறிக்கை கண்டறிந்துள்ளது.
‘நம்பகத்தன்மை’ இருப்பதாக சொல்லும் போர்க் குற்றங்கள் பற்றி சிறிலங்கா அரசாங்கம் காத்திரமான, பாரபட்சமில்லாத விசாரணை நடத்த வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைக்கிறது. சிறிலங்கா அரசு போர்க் குற்றங்களை விசாரிக்கும் இயக்கப்போக்கும், பொறுப்பானவர்களை அடையாளம் காண்பதும் சுதந்திரமான சர்வதேச பொறியமைவு ஒன்றால் மேற்பார்வையிடப்பட வேண்டும் என்றும் அறிக்கை பரிந்துரைக்கிறது.
சிறிலங்காவில் தமிழர்கள் ‘அச்சமய சூழலில்’ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது அய்நா அறிக்கையில் இருந்து தெளிவாக தெரிகிறது. கடந்த காலத்தில் போர்க்குற்றம் புரிந்தவர்கள் பொறுப்பாக்கப்பட்டு, தண்டிக்கப்படாமல் நிகழ்காலத்தில் இனச் சிறுபான்மையினருக்கு சமத்துவமும், கவுரவமும் உத்தரவாதப்படுத்தாமல் சிறிலங்காவில் மற்றும் இந்தப் பிராந்தியத்தில் நீடித்த அமைதி சாத்தியமில்லை.
இந்த வெட்கக்கேடான, வேதனையான நிகழ்வில் இந்தியாவின் பாத்திரமென்பது, இதுவரை பெருமை கொள்ளக் கூடியதாக இல்லை. உண்மையில் சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிரான நடத்தப்பட்ட குற்றங்களில் இந்திய அரசும் உடந்தையாக இருந்திருக்கிறது. அய்நா அறிக்கை பற்றி, நமது அண்டை நாட்டில் மனித குலத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுங்குற்றம் பற்றி, இப்போதும் கூட இந்தியா ராஜதந்திர மவுனம் காப்பது என்ற நிலைப்பாட்டையே தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த மவுனம் உடைக்கப்பட வேண்டிய நேரமிது. சிறிலங்கா பற்றிய அய்நா அறிக்கையின் பரிந்துரைகளை சிறிலங்கா ஏற்றுக் கொண்டு அமலாக்க வேண்டும் என்று சிறிலங்காவை கோரியும், போர்க் குற்றங்களால் பாதிக்கப்பட்ட அந்நாட்டின் தமிழ் மக்களுக்கு நீதி கேட்டு சுதந்திரமான சர்வதேச பொறியமைவு ஒன்றை உருவாக்கும் இந்தியாவின் நோக்கத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தும் சிறிலங்கா பற்றிய அய்நா அறிக்கை மீது மக்களவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற வேண்டுகோளுடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறோம்.
மிகப்பெரிய ஜனநாயகத்தின் நாடாளுமன்றம் மனிதத் தன்மை, அமைதி மற்றும் நீதி ஆகிய மதிப்பீடுகளை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்று உலகம் எதிர்ப்பார்க்கிறது. நமக்கு மிக அருகில் உள்ள அண்டை நாட்டில் மனிதகுலத்துக்கு எதிராக குற்றங்கள் நடக்கும்போது கண்ணை மூடிக் கொண்டு இந்திய மக்களின் மனசாட்சிக்கு இந்திய நாடாளுமன்றம் துரோகமிழைக்கக் கூடாது என்று இந்திய மக்கள் விரும்புகிறார்கள். இந்தியாவுக்குள்ளிருந்தும், வெளியிலிருந்தும் வரும் மனசாட்சியின் குரல்களுக்கு நாடாளுமன்றம் செவி சாய்க்க வேண்டும்.
உங்களிடமிருந்து சாதகமான பதிலை எதிர்நோக்குகிறோம். தங்கள் உண்மையுள்ள,
திபங்கர் பட்டாச்சார்யா
பொதுச் செயலாளர்
இகக (மாலெ) விடுதலை
25 ஜுலை 2011

தனிப்பட்ட அடையாள அட்டையும் பறிபோகும் தனிமனித சுதந்திரமும்

“நான் சோனியாஜியின் காலைத் தொட்டு வணங்கினேன். அது எனக்குக் கிடைத்த பாக்கியம்” என 64 வயது பட்வி தாராசந்த்ருமாலும் “நான் மன்மோகன்ஜியுடன் கைகுலுக்கினேன்” என பெருமை பொங்க 52 வயதான குரேசி அர்மான் சேக் முன்னீரும் சொன்னார்கள்.
“நான் சோனியாஜியுடன் மன்மோகனஜியுடனும் கைகுலுக்கினேன். இப்போது நான் வங்கியில் கணக்கு வைப்பதை யாரும் தடுக்க முடியாது. ஆனால், என்னிடம் பணம்தான் இல்லை. என்ன செய்ய?” என 20 வயது இளம் பெண் மாலிபுரி ரோகிதாஸøம் “கடந்த 15 நாட்களாக நான் வேலைக்குச் செல்லவில்லை. நீங்கள் எனக்கு உணவும் வேலையும் தருவீர்களா? நான் என் கதையை உங்களிடம் சொன்னால்” என்று 65 வயது காந்திபாயும் பத்திரிகையாளர்களிடம் கேட்டனர்.
இது நடந்தது மகாராஷ்டிரா மாநிலம் நந்துர்பர் மாவட்டம் தெம்பாலி கிராமத்தில். கடந்த வருடம் தெம்பாலியில் பாரதப் பிரதமர் மன்மோகன்சிங்கிடமும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும் 12 இலக்க எண்கள் கொண்ட ஆதார் எனும் தனிநபர் அடையாள அட்டையை வாங்கிவிட்டு அவ்வாறு கூறினார்கள். இந்த அடையாள அட்டையால் தங்கள் வாழ்க்கையே மாறப்போவதாக நினைத்துக் கொண்டார்கள். அந்த அடையாள அட்டையை பிரதமரிடம் வாங்கிய 10 பேரும் ஓலைக் குடிசையில், தினம் 50 ரூபாய் கூலியில் வாழும் பரம ஏழைகள்.
இந்தியாவில் உள்ள 121 கோடி மக்களுக்கும் தனித்தனி யாக எண்கள் கொடுக்கப்பட்டு அடையாள அட்டை வழங்கத் திட்டமிட்டுள்ளது மன்மோகன் அரசு. இந்த அடையாள அட்டை வழங்கும் திட்டப் பணியை செய்யும் இந்திய அடையாள அட்டைக்கான (மய்ண்வ்ன்ங் ஐக்ங்ய்ற்ண்ச்ண்ஸ்ரீஹற்ண்ர்ய் அன்ற்ட்ர்ழ்ண்ற்ஹ் ர்ச் ஐய்க்ண்ஹ) ஆணையத்தின் தலைவர் நந்தன் நீல்கேணி. இவர் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் முன்னாள் கூட்டாளி. அந்த பெருந்தொழில் குழும நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவர். இவர் சொல்கிறார்: கிராமங்களில் உள்ள ஏழை, ஒதுக்கப்பட்ட மக்களைக் கணக்கெடுத்து தனிப்பட்ட எண்கள் வழங்கப் போகிறோம். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், வேலைக்கு உணவுத் திட்டம் போன்ற அரசின் நலத்திட்டங்களில் நடக்கும் ஊழல்களால் உரியவர்களுக்கு பலன் போய் சேரவில்லை. இத்திட்டப் பயன்களை வசதிகள் இல்லாத கிராமங்களில் உள்ளவர்களால் பெற முடியவில்லை. இனிமேல் இந்த ஆதார் அடையாள அட்டை இந்த பிரச்சனைகளுக்கு முடிவு கட்டும் என்றும், எல்லோருக்கும் எண்கள் கொடுக்கப்பட்டுவிட்டால் இடைத் தரகர்கள் கொள்ளையடிக்க வாய்ப்பில்லை என்றும் சொல்கிறார். தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் மிகத் தெளிவாக பணமும் உணவுப் பொருளும் பயனாளிகளுக்கு நேரடியாகத்தான் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் திட்டத்திற்கான பணத்தையும் உணவு தானியத்தையும் மொத்தமாக இடைத்தரகர்களிடம், ஒப்பந்தக்காரர்களிடம் கொடுத்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் அதிகாரிகள் இருக்கும்போது இந்த அடையாள அட்டை மட்டும் ஊழலை எப்படி தடுக்கும்?
நீல்கேணியின் தலைமையிலான ஆணையம் கடந்த மாதம் பெட்ரோலிய அமைச்சகத்திற்கு ஒரு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ள ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு 4 முதல் 6 சமையல் எரிவாயு உருளைகள் மட்டும் மான்ய விலையில் கொடுத்தால் போதும். அதற்கு மேல் தேவைப்படுபவர்கள் வெளிச்சந்தையில் வாங்க வேண்டும். வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் கூட ஆதார் அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே அவர்களுக்கும் மான்ய விலையில் சமையல் எரிவாயு உருளைகள் கொடுக்கலாம் என்று இந்தப் பரிந்துரை கூறுகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் சமையல் எரிவாயு உருளைகள் வைத்திருக்கும் நிலையிலா இந்தியாவில் இருக்கிறார்கள்?
அமெரிக்காவிலும் அய்ரோப்பிய நாடுகளிலும் காலாவதியான கைவிடப்பட்ட திட்டங்களை எல்லாம் இந்தியாவில் அமல்படுத்துவதில் மன்மோகனுக்கு அலாதிப் பிரியம். அணு உலைகளை மற்ற நாடுகள் மூடிக் கொண்டிருக் கும்போது இந்தியா புதிய அணுமின் திட்டங்களை துவக்கிக் கொண்டிருக்கிறது. அதே போல் தனிநபர் அடையாள எண் திட்டத்தை அமெரிக்கா மறுபரிசீலனை செய்து வருகிறது. பிரிட்டனும் அடையாள அட்டைச் சட்டம் 2006அய் ரத்து செய்துள்ளது. ஏனென்றால், இந்தத் திட்டம் தனிநபர் அந்தரங்கத்திற்கும் சுதந்திரத்திற்கும் பங்கம் ஏற்படுத்துகிறது. அடையாள அட்டை கட்டாயம் அல்ல. அது அவரவர் விருப்பம் என்கிறது பிரிட்டன்.
ஆனால், இந்தியாவில் இந்த அபாய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமல், நாடாளுமன்ற ஒப்புதல் பெறாமல் செயல்படுத்தத் துவங்கிவிட்டார்கள். எதற்கு இந்த அவசரம்? ஒவ்வொருவரின் பிறப்பு, இறப்பு, பரம்பரை, மரபு சம்பந்தப்பட்ட விவரங்களும் கண் கருவிழிப் படலத்தை ஸ்கேன் செய்தல், பத்து விரல்களின் ரேகையைப் பதிவு செய்தல் போன்ற அனைத்தும் இந்த அடையாள எண்ணிற்காகச் சேகரிக்கப்படுகிறது. மேலும் இப்பணியை தனியார் நிறுவனங்கள் செய்கின்றன. இந்தப் பணிக்காக 2009ம் ஆண்டு ரூ.120 கோடி அரசால் ஒதுக்கப்பட்டது. இது ஆரம்பக்கட்டச் செலவுக்குதான். பின்னர் தேவைப்படும் போது அரசிடம் வாங்கிக் கொள்வோம் என நீல்கேணி அப்போதே சொன்னார். இப்போது அது பலப்பல ஆயிரம் கோடியாக மாறியிருக்கும்.
பலப்பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தை செலவழித்து அமலாக்கப்படும் இந்தத் திட்டம் செயல்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்தியா போன்ற கடின உழைப்பு செலுத்தும் மக்கள் அதிகம் உள்ள ஒரு நாட்டில் கைரேகைகள் தேய்ந்து போய் விடக் கூடும். கைரேகைகள் மாறி விடக்கூடும். அது காலத்துக்குமான மாறாத அடையாளமாக இருக்க முடியாது. கருவிழிப் படல அடையாளமும் புரைபடர்ந்து மறைந்து விடலாம். இதுவும் நந்தன் நீல்கேணி சொல்லும் பொருளில் நிலையான அடையாளமாக இருக்க முடியாது.
வறிய மக்களுக்கு ஓரளவுக்கு ஏதாவது கிடைக்கும் என்றால், ஏற்றத்தாழ்வு இருப்பதை ஒரு பிரச்சனையாகப் பார்க்கக் கூடாது; வறிய மக்களுக்கு துரிதமான விகிதத்தில் வருமானம் அதிகரிக்கும்போது, அது ஏற்றத்தாழ்வும் ஓரளவு அதிகரிப்பதை அவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்துவிடும் என்று திட்டக்குழு துணைத் தலைவர் மான்டெக் சிங் 12ஆவது அய்ந்தாண்டு திட்டத்தில் உள்ள வாய்ப்புக்களும் கொள்கை மாற்றங்களும் என்ற தனது சமீபத்திய தாள் ஒன்றில் குறிப்பிடுகிறார். ஏற்றத்தாழ்வு எப்போதும் இருக்கும் என்று திட்டக் குழு சொல்லும்போது அடையாளம் எதற்கு?
அடையாள எண் கொடுப்பதற்காக சேகரிக்கப்படும் தகவல்கள் தனிநபரின் அந்தரங்கங்களுக்குள் தலையிடுவதே என எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளனர் கோபால் கிருஷ்ணா போன்ற மனித உரிமை ஆர்வலர்கள். மனிதனுக்கு எண் கொடுப்பது மனிதனை விலங்கிற்கு ஒப்பாக நடத்துவதாகும். காந்தி தென் ஆப்ரிக்காவில் இருந்தபோது அங்கு இது போன்ற மனிதனுக்கு எண் கொடுக்கும் கருப்புச் சட்டத்தை கடுமையாக எதிர்த்தார்.
அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான அய்பிஎம் (ஐய்ற்ங்ழ்ய்ஹற்ண்ர்ய்ஹப் ஆன்ள்ண்ய்ங்ள்ள் ஙஹஸ்ரீட்ண்ய்ங்ள்) கொடுத்த அடையாள எண் பட்டியலின் உதவியுடன் ஹிட்லர் நாஜி ஜெர்மனியில் 1933ல் பதவிக்கு வந்தது முதல் இரண்டாம் உலகப் போர் வரை யூதர்களை அடையாளம் கண்டு கொன்று குவித்தான். நம் நாட்டில் குஜராத்தில் வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு இசுலாமியர்களைத் தேடிப்பிடித்து நரவேட்டையாடினார்கள் நரேந்திரமோடியின் ஆட்கள். அதுபோன்ற இனவெறியர்களுக்கு வேண்டுமானால் ஆதார் அடையாள அட்டைத் திட்டம் பயன்படுமேயொழிய பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும் வறிய விவசாயிகள் பசியைப் போக்கவோ மாநிலம் விட்டு மாநிலம், ஊர் விட்டு ஊர் வந்து பிழைக்கும் அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்க்கையை மேம்படுத்தவோ பயன்படப் போவதில்லை.
சோனியா தலைமையில் உள்ள தேசிய ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பொருளாதார அறிஞர் ஜீன் ட்ரீஸ், இந்த அடையாள அட்டைத் திட்டம் பேராபத்தை விளைவிக்கும் என்கிறார். ஆனால், எதிர்க்கட்சியான பாஜகவோ இந்தியர்கள் எல்லோருக்கும் கண்டிப்பாக அடையாள எண் கொடுக்கப்பட வேண்டும் என்கிறது. ஒவ் வொரு தனிநபரின் நடவடிக்கையையும் அரசின் கடும் கண்காணிப்பிற்குள் கொண்டு வருவதே இதன் நோக்கம்.
இந்த லட்சணத்தில் தனிமனிதனின் அந்த ரங்கங்களைப் பாதுகாக்கப் போவதாகச் சொல்லி அந்தரங்க உரிமைச் சட்டம் 2011 (தண்ஞ்ட்ற் ற்ர் டழ்ண்ஸ்ஹஸ்ரீஹ் ஆண்ப்ப் 2011) கொண்டுவர உள்ளனர். உண்மையில், இந்தச் சட்டத்தின் மூலம் மேலும் அரசு குடிமக்கள் ஒவ்வொருவரின் அந்தரங்கத்துக்குள், சுதந்திரத்திற்குள் தங்கு தடையின்றி நுழையப் போகிறது.
தொலைபேசியை ஒட்டுக் கேட்பது, தனி நபர்களுக்கிடையிலான தகவல் பரிமாற்றங்\களை இடைமறிப்பது, எவரிடமிருந்தும் எந்தத் தகவல்களையும் பெறுவது போன்றவற்றிற்கு ஏற்கனவே உள்ள சட்டங்கள் அரசிற்கு முழு அதிகாரம் வழங்கியுள்ளதை இந்த அந்தரங்க உரிமைப் பாதுகாப்புச் சட்டம் தடைசெய்யப் போவதில்லையாம். அந்த சட்டங்கள் எல்லாம் அப்படியே இருக்குமாம்.
முன்னெப்போதையும் விட கடந்த மூன்று வருடங்களாக ஒட்டுக் கேட்கும் வேலையை அரசுதான் அதிகமாகச் செய்து வருகிறது. புள்ளி விபரங்கள் சேகரிப்புச் சட்டம் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின்படி அரசு கேட்கும் தகவல் களைத் தர மறுப்பவர்கள் தண்டனை பெறுவார்கள் என்கிறார் உஷா ராமநாதன் என்னும் சட்ட ஆய்வாளர். அரசியலமைப்புச் சட்டம் தந்துள்ள அடிப்படை உரிமையான பேச்சுச் சுதந்திரத்தைப் பறிக்கும்விதம் இச்சட்டத்தின் மூலம் தணிக்கை முறை அமல்படுத்தப்படும்.
தனிநபர் அந்தரங்க உரிமையை அரசே மீறினால் கூட அரசிற்கு இந்தச் சட்டம் மூலம் தண்டனை வழங்க முடியுமாம். லோக்பால் சட்ட வரம்பிற்குள் பிரதமரை, உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு வரக் கூடாது என்று சொல்லும் இவர்கள் எப்படி, யாரைப் பொறுப்பாக்கி தண்டனைக்குள்ளாக்குவார்கள்?
ஆதார் அடையாள அட்டை, அந்தரங்கப் பாதுகாப்புச் சட்டம் எல்லாம் மக்கள் நலனுக்கல்ல. ஊழல் அரசியல்வாதிகளை, பெருந் தொழில் குழுமக் கொள்ளையர்களைப் பாதுகாக்கவே. ஆட்சியாளர்கள், பெருந்தொழில் குழுமக் கொள்ளையர்கள் பற்றிய தகவல்களை நாம் இனி தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்டு வாங்க முடியாது. ஏனென்றால் இச்சட்டத்தின்படி, அது அவர்கள் அந்தரங்கத்துக்குள், தனிமனித சுதந்திரத்துக்குள் தலையிடுவதாகும்.
இச்சட்டத்தின்படி ஒரு பத்திரிகை அல்லது தொலைக்காட்சி நிருபர் தனிப்பட்ட ஒருவர் பற்றிய தகவல்களை அந்த நபரின் எழுத்து பூர்வமான ஒப்புதல் இன்றி எழுதினாலோ அல்லது ஒளிபரப்பினாலோ அவர் மீது சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்கள் பாயும். முதல் முறை ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். அதே தகவல்களை அந்த நிருபர் திரும்பவும் பயன்படுத்தினால் அவருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். ரகசிய காமிரா கொண்டு லஞ்சம் வாங்குதை படம் பிடித்து ஒளிபரப்பினால் அந்த நபருக்கு, லஞ்சம் வாங்கியவருக்கு அல்ல, அதைப் படம் பிடித்து ஒளிபரப்பியவருக்கு சிறைத் தண்ட னையாம். ஏனென்றால் நிருபர் தனிமனித அந்தரங்கத்தில் ஊடுருவி விட்டாராம். இப்படி புதிய அந்தரங்க உரிமைச் சட்டம் சொல்கிறது.
அடுத்தடுத்து நடக்கிற ஊழல்களை அம்பலப்படுத்திவரும் ஊடகவிலாளர்களை ஒடுக்குவதற்கும் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் ஆட்சியாளர்களின் அநியாயங்களை அரங்கத்திற்கு கொண்டு வருவதைத் தடுக்க, மக்கள் போராட்டங்களை அடக்கி ஒடுக்க, இதுபோன்ற கருப்புச் சட்டங்களையும் திட்டங்களையும் கொண்டு வருகிறது அறிவிக் கப்படாத அவசரநிலையை அமலாக்கியுள்ள அய்முகூ அரசு. காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக என அனைத்து கட்சிகளும் ஊழலில் ஒன்றுபட்டு நிற்பது போல் இதிலும் ஒத்த கருத்துடன் உள்ளனர். இந்தச் சட்டமும் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சத்தமின்றி நிறைவேற்றப்படலாம்.
- ஜி.ரமேஷ்

விசைத்தறிக் கூடங்கள் வியர்வைக் கூடங்களாக
இருப்பதை இனியும் அனுமதிக்க முடியாது

விந்தைகள் நிறைந்த விசைத்தறி அரங்கம்
இந்தியாவில் ஜவுளித்துறை உற்பத்தியில் கைத்தறியின் பங்கைவிட, ஜவுளி ஆலைகளின் பங்கைவிட, விசைத்தறியின் பங்கே அதிகம். உற்பத்தியாகும் துணிகளில் 62% விசைத்தறி அரங்கில் தயாராகின்றன. மேற்கு இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் சூரத், பிவாண்டி, மலேகான், இச்சல்கரஞ்சி மய்யங்களில் கொடி கட்டிப் பறக்கும் விசைத்தறித் தொழில், தமிழகத்தில் கோவை, சேலம், ஈரோடு, மதுரை, கரூர், சென்னை என்ற 6 பிராந்தியங்களில் கால் பதித்துள்ளது. 1990களில் நூற்பு நெசவு என்பவற்றைச் சேர்த்து இயங்கி வந்த காம்போசிட் ஜவுளி மில்கள், நூற்பு ஆலைகளாக இயங்கினால்தான் லாபம் என்ற நிலை உருவானது. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் விவசாய சமூகத்தின் சில பிரிவினரிடம் கையில் உபரி மிஞ்சியது. விசைத்தறித் தொழில் செழித்து ஓங்கி வளர்ந்தது. கிராமமும் நகரமும் சந்தித்தன. விவசாயமும் தொழிலும் சந்தித்தன. விசைத்தறித் தொழில் உருவானது.
விசைத்தறிக் கூடங்களுக்கு, சாதாரண தொழில்நுட்பம் போதும். பெருமுதலீடு தேவையில்லை. போட்ட முதலீட்டுக்கு கணிசமான லாபம் காலதாமதமின்றி கிடைக்கும். கைத்தறி நெசவாளர்களும், கிராமப்புற வறியவர்களும் விசைத்தறித் தொழிலாளர்களாக மாறினார்கள். குறைந்த கூலி, கூடுதல் உற்பத்தி என்பதே இன்றுவரை இந்தத் தொழிலை உந்திச் செலுத்தும் விதியாக உள்ளது.
விசைத்தறித் தொழிலாளியை நேரடியாக வேலைக்கு அமர்த்தும் அடப்புத் தறி முதலாளி, மூலப்பொருட்களுக்காகவும், சந்தைக்காகவும், நூல் முதலாளிகளைச் சார்ந்திருக்கிறார்கள். சில நூறு நூல் முதலாளிகள், சில 10 ஆயிரம் அடப்புத் தறி முதலாளிகள், சில லட்சம் விசைத்தறித் தொழிலாளர்கள் என்ற இந்தச் சிக்கலான உறவுகளில் அடப்புத்தறி முதலாளிகள் என்ற ஒரு சமூகப் பிரிவு, வர்க்க சுரண்டலையும் மோதலையும் கூர்மையடைய விடாமல் தடுக்கின்றது. குமாரபாளையத்தில் மட்டும் 60 நூல்கடை முதலாளிகள் 45,000 தறிகளுக்கு நூல் வழங்குகிறார்கள்.
2002 - 2003 ல் நாடெங்கும் 16,92,737 என இருந்த தறிகளின் எண்ணிக்கை 2009 - 2010ல் 22,46,474 என உயர்ந்துள்ளது. ஆனால், ஆண்டுக்கு 8.5% என உயர்ந்த தறிகளின் வளர்ச்சி வீதம் 2010 - 2011ல் வெறும் 1.02% ஆனது. நாடெங்கும் உள்ள தொழிலாளர் எண்ணிக்கையும் 60 முதல் 70 லட்சம் என வந்து, அங்கேயே நிற்கிறது.
2003ல் மத்திய ஜவுளி அமைச்சகம் தந்த விவரப்படி தமிழகத்தில் 4.37 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. 7 லட்சம் விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர். ஒரு தறி ஓட்டிய தொழி லாளி, 3 தறி ஓட்ட ஆரம்பித்து இன்று 5 தறி ஓட்டுகிறார். தொழிலாளியின் உற்பத்தித் திறன் உயர்ந்துள்ளது. லாபம் உயர்ந்துள்ளது. ஆனால், அவர்கள் உழைப்பால் பெருகிய சமூக செல்வத்தில், அவர் பங்கு குறைவாகவே இருப்பதால், அவரது சமூக அந்தஸ்தில் எந்த உயர்வும் இல்லை. கல்வி, மருத்துவ வசதி, குடியிருப்பு என்ற சமூக வளர்ச்சி/முன்னேற்றம் தொடர்பான குறியீடுகளை வைத்துப் பார்த்தால், விசைத்தறித் தொழிலாளி, சமூக ஏணியில் கடைசிப் படிகளைத் தாண்டாமலே இருக்கிறார்.
இரு கழகங்களும் போட்டி போட்டுக் கொண்டு விசைத்தறிக் கூடங்களுக்கு சலுகைகளைத் தருவார்கள். வாட் வரி ரத்தும், இலவச மின்சாரமும் முதலாளிகளுக்குக் கிடைக்கும். தொழிலாளர்களுக்கு எந்த சட்டப் பாதுகாப்பும் கிடைக்காது. அட்வான்ஸ் முறை என்ற கொத்தடிமைச் சங்கிலி அவர்களை கட்டிப் போடக் காத்திருக்கும்.
சட்டத்தில் இருந்து தப்பித்தலும் சட்ட மீறலும்
2003 ஜவுளி அமைச்சக அறிக்கையின் பத்தி 9:5:2ன் துணைப்பிரிவு ‘தொழிலாளர்களின் பாதுகாப்பின்மை, சுரண்டல்’ எனத் தலைப்பிட்டுச் சொல்கிறது. ‘விசைத்தறி அரங்கில் வேலையளிப்பவர்கள் பல தந்திரங்களை/ஏமாற்றுக்களைக் கையாண்டு, தொழிலாளர் பாதுகாப்புக்கான சட்டங்களைத் தவிர்க்கின்றனர்; மிகப்பெரிய அளவுக்குக் கட்டாய 12 மணி நேரப் பணி உள்ளது. விசைத்தறிகளைப் பிரித்துக் காட்டி, சட்டங்கள் அமலாகாமல் பார்த்துக் கொள்கின்றனர். இதன் மூலம் தொழிலாளர்கள் சட்டம், தொழிலாளர்கள் அரசு காப்பீட்டு சட்டம், தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதிச் சட்டம், பணிக் கொடைச் சட்டம், போனஸ் சட்டம், அமலாவதில்லை. தொழிலாளர்கள் அமைப்பாகாதது, அரசாங்கம் சட்டத்தை கறாராகச் அமலாக்காதது ஆகியவை இந்தக் கடுமையான சுரண்டலுக்குக் காரணங்கள் ஆகும்.’
விசைத்தறி முதலாளிகள் மிகவும் தந்திரமாக தொழிற்சாலைகள் சட்டம் 1948ன் பிடியில் இருந்து தப்பிக்கிறார்கள். இதன் மூலம் மட்டுமே ஒவ்வொரு விசைத்தறித் தொழிலாளியும் தமது பணிக்காலங்களில் சில லட்சங்களை இழந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டுக்கும் விசைத்தறி முதலாளிகள் தொழிலாளர்களுக்குத் தர வேண்டிய சில நூறு கோடிகளை விழுங்கியுள்ளனர்.
எப்படித் தப்பியுள்ளனர்?
தமிழகத்தில் 500 யூனிட் வரை இலவச மின்சாரம் பெற்ற விசைத்தறிக் கூடங்களின் எண்ணிக்கை 96,000! ஒரே முதலாளி, பலராக மாறி விடுகிறார். தசாவதாரம் எடுக்காததுதான் மிச்சம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கிறார். தனது விசைத்தறிக் கூடத்தை, ஒன்றுக்கு மேற்பட்டதாக பிரித்துக் காட்டி, ஒவ்வொன்றுக்கும் அரசாங்க சலுகை பெறுகிறார். மின்சாரம் பயன்படுத்தி பொருளுற்பத்தியில் 10 பேரை ஈடுபடுத்துமிடம் ஒரு தொழிற்சாலை என்று சொல்லும் தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் அதன் சரத்துக்களில் இருந்து தப்பிக்கிறார். உற்பத்தி நடக்கும். லாபம் கிடைக்கும், ஆனால் சட்டத்தில் இருந்து வெளியேறிவிடுவார்கள்!
தொழிற்சாலைகள் சட்டம் 1948 விசைத்தறிக் கூடங்களுக்கு பொருத்தப்பட்டால் முதலாளிகள் என்னென்ன தர வேண்டும்?
• 2010ல் 260 நாட்கள் வேலை செய்தால் 2011ல் 13 நாட்கள் ஈட்டிய விடுப்பு தர வேண்டும். அதாவது முந்தைய வருடத்தில் வேலை செய்யும் 20 நாட்களுக்கு ஒரு நாள் ஈட்டிய விடுப்பு தர வேண்டும். தொழிலாளி இதனை விடுப்பாக எடுத்து அதற்குச் சம்பளம் பெறலாம். அல்லது விடுப்பு எடுக்காமல் சேர்த்து வைத்து பின்னர் பணமாகப் பெறலாம்.
• ஒரு நாளில் 9 மணி நேரத்திற்கு மேலோ ஒரு வாரத்தில் 48 மணி நேரத்திற்கு மேலோ வேலை செய்தால், அப்படிக் கூடுதலாக வேலை செய்யும் நேரத்திற்கு இரட்டிப்பு சம்பளம் பெற முடியும்.
• தறி ஓட்டும் தொழிலாளருக்கு, அரசு, அரசு நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனத் தொழிலாளர்கள் போல், தமக்கு வார விடுமுறை கிடையாதா என்ற ஏக்கம் எப்போதும் உண்டு. தொழிற்சாலைகள் சட்டம் பொருந் தினால், அவருக்கு கட்டாயமாய் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை கொடுத்தாக வேண்டும். ஆண்டுக்கு 52 வார விடுமுறைகள். நினைத்தாலே சுகமாக உள்ளது! வார விடுமுறை நாளில் வேலை செய்யச் சொன்னால், மாற்று விடுமுறையோ, அல்லது இரட்டிப்புச் சம்பளமோ தர வேண்டும்.
• ஒவ்வோர் ஆண்டும் 9 நாட்கள் தேசிய பண்டிகை விடுமுறைகளைச் சம்பளத்துடன் தர வேண்டும். குடியரசுதினம் (ஜனவரி 26), மே தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), காந்தி பிறந்த தினம் (அக்டோபர் 2) கட்டாய தேசிய விடுமுறைகள், அவை போக 5 பண்டிகை விடுமுறைகளைத் தேர்வு செய்யலாம்.
• பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு ஆதாயச் சட்டப் பயன்கள் கிடைக்கும். அதாவது, மகப்பேறு அல்லது கருச்சிதைவு நடந்தால், ஒன்றரை மாதங்கள் சம்பளத்துடன் விடுப்பு கிடைக்கும்.
• பணிக்கொடைச் சட்டம் பொருந்தும். 5 வருடங்கள் வேலை செய்து, பணி நீங்கும்போது, வருடத்துக்கு பாதி மாத சம்பளம் கிடைக்கும். 10 வருடங்கள் என்றால் கடைசி மாத சம்பளம் அடிப்படையில் 5 மாதச் சம்பளம் பணிக்கொடையாகக் கிடைக்கும்.
இதற்கெல்லாம் சட்டத்தில் வழியுண்டா?
என்னிடம் 10 பேர் இல்லவே இல்லை எனச் சத்தியம் செய்து முதலாளி சட்டத்தில் இருந்து தப்பிக்கிறார். இதே சட்டத்தில் ஓட்டையை அடைக்கவும் வழியுண்டு. ஓட்டையை அடைக்க தொழிலாளர்களுக்குச் சட்டப் பாதுகாப்பு பெற, தொழிற்சாலைகள் சட்டம் 1948ன் பிரிவு 85 உதவும்.
பிரிவு 85 (1) படி மின்சாரம் பயன்படுத்தி பொருளுற்பத்தியில் ஈடுபடும் எந்தவொரு நிறுவனத்தையும், அதில் 10 பேருக்கு குறைவான வர்கள் பணிபுரிந்தாலும், மாநில அரசாங்கம் ஓர் அரசாணை போட்டு, தொழிற்சாலைகள் சட்டத்துக்குள் கொண்டு வர முடியும். சட்டத்தின் அனைத்துப் பிரிவுகள் அல்லது ஏதாவது சில பிரிவுகள் பொருந்தும் எனச் சொல்லலாம். (உரிமையாளர் குடும்ப உழைப்பைச் செலுத்தும் இடங்களுக்கு இப்பிரிவு பொருந்தாது).
இப்பிரிவின்படி, விசைத்தறிக் கூடத்தின் மேல் அனுபவ பாத்தியதை கொண்டுள்ள குத்தகைக்கு எடுத்தவரும் அடமானம் பிடித்தவரும் உரிமையாளர் ஆவார். பிரிவு 85 (2)ன்படி, இத்தகைய அரசாணை அறிவிப்பிற்குப் பிறகு, அந்த இடம், நிகர்நிலை தொழிற்சாலை ஆகும், உரிமையாளர், ஆக்குபையர் என்றாகி சட்டக் கடமைகளுக்குப் பொறுப்பாவார். ஆக மாநில அரசாங்கம், தமிழகத்திலுள்ள அனைத்து விசைத்தறிக் கூடங்களும் தொழிற்சாலைகள் என அறிவித்து, விசைத்தறித் தொழிலாளர்கள் அனைவருக்கும் தொழிற்சாலைகள் சட்டப் பயன்கள் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள முடியும். முந்தைய பத்திகளில் குறிப்பிட்டுள்ள சட்டப் பயன்களும் கிடைக்கும்.
ஏன் இதுவரை இவ்வாறு நடக்கவில்லை?
இனி இது நடக்க என்ன செய்யலாம்?
விசைத்தறி ஓட்டும் தொழிலாளியை திமுகவோ, அதிமுகவோ கண்டுகொள்ளவில்லை. இப்போது ஆட்சிக்கு வந்திருக்கும் ஜெயலலிதாவும்கூட, ஏகப் பெரும்பான்மை விசைத்தறித் தொழிலாளர்கள் வாக்குகளை அள்ளிச் சென்றவர்தான். ஆனால், முதலாளித்துவ அரசியல் குரூரமாக, வாக்குகள் தொழிலாளர்களுடையவை, ஆட்சிகளும் சலுகைகளும் முதலாளிகளுக்கானவை என்ற விதிப்படியே, உழைக்கும் மக்களை ஏறி மிதிக்கிறது. திமுகவை அதிமுகவை மாற்றி மாற்றி தொற்றிக் கொண்டு சட்டமன்றத்தில் விடாமல் சில இடங்கள் பெற்று வரும் இகக, இகக(மா)வும் கூட விசைத்தறித் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கவில்லை. தொழிலைக் காக்கும் லட்சிய முழக்கத்துடன் அடப்புத் தறி முதலாளிகளின் வேட்டி நுனியை எப்போதும் பிடித்துக் கொண்டிருப்பார்கள். தமிழ்நாட்டில் பல்வேறு தொழில்களுக்கு அரசு குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயம் செய்துள்ளது. பல அமைப்பாக்கப்படாத தொழில்களில் இந்த குறைந்தபட்சச் சம்பளமும் தரப்படுவதில்லை. ஆனால் விசைத்தறித் தொழிலில் அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச சம்பளம் எப்போதுமே நடைமுறையில் தரப்படும் கூலியைவிட குறைவாகவே இருக்கிறது.
தானாய் எதுவும் மாறாது. விசைத்தறித் தொழிலாளர்கள் ஒரு சக்திவாய்ந்த இயக்கத்தைக் கட்டமைத்து, தமிழக அரசை, பிரிவு 85படி அனைத்து விசைத்தறிக் கூடங்களுக்கும் தொழிற்சாலைகள் சட்டம் பொருந்தும் என உத்தரவிட வைக்க வேண்டும்.
ஜுலை 30 அன்று குமாரபாளையத்தில் தோழர்கள் என்.கே. நடராஜன், கோவிந்தராஜ், சந்திரமோகன் கலந்துகொண்ட ஏஅய்சிசிடியு, இகக(மாலெ) ஊழியர் கூட்டத்தில், இனியும் விசைத்தறிக் கூடங்களை வியர்வைக் கூடங்களாகத் தொடர அனுமதிக்க மாட்டோம் என்ற முழக்கத்துடன் மிகப்பெரிய அரசியல் இயக்கம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
தலைநகரை நோக்கிப் பேரணி, ஒரு நாள் வேலை நிறுத்தம், கோரிக்கைக்காக ஒரு லட்சம் கையெழுத்து பெறுவது, ஈரோடு, நாமக்கல், சேலம் என இருவார தொடர்பயணம் என அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்குத் தயாரா கிறார்கள். ஏஅய்சிசிடியு, இகக(மாலெ) எழுப்புகின்ற கோரிக்கையை கற்பனை வளத்துடன், படைப்பாற்றலுடன் பரந்த விசைத்தறித் தொழிலாளர்களின் கோரிக்கையாக மாற்றப் பாடுபட வேண்டும்.
- என்கே, ஏஜி, எஸ்கே

அலிபாபா குகைகளா? சாய்பாபா அறைகளா?

நூற்றுக்கணக்கான கிலோ தங்கம் வெள்ளி நகைகள். ரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட ஆறு கீரிடங்கள். பெட்டி பெட்டியாய் கற்கள் பதிக்கப்பட்ட கைக்கடிகாரங்கள், அலங்காரப் பொருட்கள், புகைப்படக் கருவிகள், சுவர் கடிகாரங்கள், வைரங்கள் நிறைந்த பைகள். நூற்றுக்கணக்கான காலணிகள். அலமாரிகள் முழுவதும் வெளிநாட்டு வாசனைத் திரவிய புட்டிகள், தலைமுடிக்குப் பயன்படுத்தப்படும் தைலங்கள், சாம்புகள், நகபூச்சுக்கள். தங்க ஆரங்கள், மோதிரங்கள், தங்கப் பாத்திரங்கள், வெள்ளி ஆசனம், வெள்ளி தட்டுகள், வெள்ளி டம்ளர்கள், வெள்ளிப் பாத்திரங்கள். அலமாரிகள் பட்டு அங்கிகள், பட்டாடைகள். ரகசிய அறைகள் கொண்ட பெரிய படுக்கை. பெட்டிபெட்டியாக கத்தைகத்தையாக கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கிறது பணம்.
இது ஹாரிபாட்டர் படத்தில் வரும் கிரிங்காட்ஸ் பாதாள அறையா? அல்லது அலிபாபா கண்டெடுத்த நாற்பது திருடர்களின் செல்வங்களா?
இரண்டும் இல்லை. திருவனந்தபுரம் பத்ம நாபசாமி கோயிலில் திருவாங்கூர் மன்னர்கள் சேர்த்து வைத்த செல்வமும் அல்ல.
இவையெல்லாம் இருப்பது புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாயிபாபாவின் தனி அறைகளில். முதல் கட்ட ஆய்விலேயே அதிர்ந்து போனார்கள் அதிகாரிகள். ஆய்வு முடிந்து வெளியே வந்தவர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி. புட்டபர்த்தியில் இருந்து போய்க் கொண்டி ருந்த ஒரு காரை காவல்துறையினர் நிறுத்திப் பார்த்தபோது அதில் 1 மில்லியன் டாலர் பணத்தை பாபா அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் கடத்திச் சென்று கொண்டிருந்தார்கள்.
பாபாவின் ஆசிரமத்தில் யஜ÷ர் மந்திர் என்கிற பெயரில் உள்ள ஏகப்பட்ட அறைகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. அவற்றின் கதவுகளைத் திறப்பதற்கு பாபாவின் அந்தரங்க சிஷ்யர்களின் கைரேகைகள் வேண்டுமாம். அந்த அறைகளுக்குள்ளே எத்தனை பாதாள அறைகள், ரகசிய மாடங்கள் உள்ளனவோ? அவற்றில் எத்தனை ஆயிரம் கோடி பணம் இருக்கிறதோ? தெரியவில்லை.
தன்னைத் தானே கடவுள் என்றும் அவதார புருசன் என்றும் சொல்லிக் கொண்ட ஆன்மிகவாதி சாய்பாபா ஏன் இவ்வளவு சொத்துக்களை மறைத்து வைத்திருந்தார்? பிலிப்பைன்ஸின் முன்னாள் அதிபரின் மனைவி எமில்டா மார்கோஸ் 3000 காலணிகளை சேர்த்து வைத்தது போல் இந்தச் சாமியார் ஏன் பகட்டான பட்டாடைகளை, கவர்ச்சிகரமான அலங்காரப் பொருள்களை சேர்த்து வைத்திருந்தார்?
பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த சொத்துக்களை ஏன் சாய்பாபா அறக்கட்டளையால் நடத்தப்படும் மருத்துவமனை, பள்ளிக்கூடங்களுக்கு பயன்படுத்தவில்லை? கண்மூடித்தனமாக பாபாவை நேசித்த பக்தர்களால்கூட இதற்கு காரணம் சொல்ல முடியாது. பதுக்கப்பட்ட இச்சொத்துகளுக்கு பாபாவின் அறக்கட்டளை உறுப்பினர்கள் மீது மட்டுமே பழிசொல்ல முடியுமா? பாபாவிற்கு ஒன்றும் தெரியாது என்று சொல்ல முடியுமா? அப்படியென்றால் ஏன் தங்கமும் வெள்ளியும் வைரமும் அறக்கட்டளைக் கணக்கில் வைக்கப் படாமல் பாபாவின் தனி அறைகளுக்குள்ளே வைக்கப்பட்டிருந்தன? இவையெல்லாமல் ஏன் அறக்கட்டளை சேவைகளுக்காகப் பயன்படுத்தப்படாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன? அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் என்பது போல் அறக்கட்டளைக்கும் ஆடம்பரப் பொருள்களுக்கும் என்ன சம்பந்தம்? நூற்றுக்கணக்கான பட்டு அங்கிகள், காலணிகள், நெக்லஸ்கள், மோதிரங்கள், வெளிநாட்டு கைக்கடிகாரங்கள், வாசனைத் திரவி யங்கள், முடித் தைலம், தங்கம், வெள்ளியிலான ஆசனங்கள் இவையெல்லாம் சாமி யாருக்கு எதற்கு? இந்த மனிதர் உலக வாழ்க்கையைத் துறந்துவிட்டவராக வெளி உலகிற்கு காட்டிக் கொண்டு இரகசியமாக கற்பனைக் கெட்டாத ஆடம்பர வாழ்கையை வாழ்ந்து வந்துள்ளார். மட்டுமின்றி பல ஆயிரம் கோடிக்கான சொத்துக்களை கணக்கில் காட்டாமல் கள்ளத்தனமாக பதுக்கி வைத்திருந்திருக்கிறார்.
காசு வேண்டுமா? கடவுள் வேடம் போடு. ஆன்மீக ராஜ்ஜியம் நடத்தினால் அரசாங்கம் கூட உன்னைக் கேள்வி கேட்காது. உன் சொத்துக்களை சோதனை போடாது. கடவுள் விளையாட்டைப் பற்றி பக்தர்கள் கேள்வி எழுப்புவதில்லை. எண்ணிலடங்காத சிறுவர்கள், பாபாவின் பரிதாப பக்தர்களின் மகன்கள் பாலியல்ரீதியாக பாபா தங்களை மானபங்கப்படுத்தினார் என்று குற்றம் சுமத்தினார்கள். அதன் மீது இதுவரை எந்தவொரு விசாரûணையும் நடத்தப்படவில்லை. மற்ற வர்களைக் காட்டிலும் காவிக்குள் ஒளிந்து கொள்ளும் கயவர்கள் மக்களை மிக எளிதாக ஏமாற்றிவிடுகிறார்கள்.
காற்றில் இருந்து விபூதி எடுத்து பக்தர்களுக்குக் கொடுப்பது, பிரபலங்களுக்கு வெளிநாட்டு ரோலக்ஸ் வாட்ச்சை வரவழைத்து பரிசளிப்பது என அற்புதங்கள் நிகழ்த்தினாராம் சாய்பாபா. இவை பற்றி ஏற்கனவே கேள்வி எழுப்பியுள்ளனர். பகுத்தறிவுவாதிகள். இது போன்ற செயல்கள் வித்தைகளே தவிர அதற்கு எந்த தெய்வீக சக்தியும் தேவையில்லை என்றார் மேஜிக் நிபுணர் பி.சி.சர்க்கார்.
சத்யசாய்பாபா இறப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு என பிரதமர் சொல்கிறார். காங்கிரஸ், மற்றும் பாஜக தலைவர்கள், மத்திய மந்திரிகள், மாநில முதல்வர்கள், கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள் என பலரும் பாபாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். இறுதிச் சடங்கிற்குப் பின்னர் ரத்தன் டாடா புட்டபர்த்திக்கு பயணம் மேற்கொண்டார். இந்தப் பெரிய மனிதர்கள் எல்லாரும் போடுகிற ஓம் சாய் ராம் கூச்சலில் சாய்பாபாவின் மோசடிகள் ஆழப் புதைக்கப்பட்டுவிடும் ஆபத்து உள்ளது.
சாய்பாபா மட்டுமல்ல. இப்படி பல சாமியார்கள் இருக்கிறார்கள். பாபா ராம்தேவ் சொத்துக்கள் பற்றிய அமலாக்கப் பிரிவின் விசாரணை அய்முகூ அரசு சொல்வதைக் கூட உறுதிப்படுத்தலாம். ஆனால் பாபா ராம்தேவும் அவருக்கு நெருக்க மானவர்களும் நடத்துகிற வர்த்தக நடவடிக்கைகள் பெருமளவு பரவியிருப்பதால் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பது உண்மையே. கடவுள் அவதார புருசர்கள் காவியுடை கபடதாரிகள் கணக்கு காட்டாமல் தப்பிக்க முடியாது. மத அறக்கட்டளைகள் முறையாக தணிக்கை செய்யப்பட வேண்டும். அவற்றுக்கு வரி விதிக்கப்பட வேண்டும். பாபாக்களின் வர்த்தக நடவடிக்கைகள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். கருப்பு ஆடுகள் தண்டனைக்குட்படுத்தப்பட வேண்டும்.
மக்கள் ஆறுதல் தேடி அலைகிற நெருக்கடி நிறைந்த உலகத்தை கடவுள் அவதார புருஷர்கள் பயன்படுத்திக் கொள் கிறார்கள். “மதம் ஒடுக்கப்பட்டவர்களின் பெருமூச்சு, இதயமற்ற உலகத்தின் இதயம், ஆன்மா இல்லாத நிலை மைகளின் ஆன்மா” என்று மார்க்ஸ் கூறினார். ஒடுக்கப்பட்டவர்களின் பெருமூச்சு இருக்கட்டும்; ஒடுக்கப்பட்டவர்களை ஏமாற்றி செல்வம் சேர்க்கும் சாய் விசயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.
- கவிதா கிருஷ்ணன்
(லிபரேசன், ஆகஸ்ட் 2011 இதழில் இருந்து) தமிழில்: ஜி.ரமேஷ்

ஜுலை 28 தியாகிகள் தினம் ஊடாக ஆகஸ்ட் 9 சிறை நிரப்பும் போராட்டம் நோக்கி

கோவை: ஆகஸ்ட் 9 சிறை நிரப்பும் போருக்கு ஆதரவு திரட்ட பெட்டதாபுரம் ஊராட்சி, வீரபாண்டி, கூடலூர் பெரியநாயக்கன்பாளையம், காரமடை, பேரூராட்சிகளி லும் 24 பிரச்சார நடைபயணங்கள் நடந்துள்ளன. ஏறக்குறைய 350 தோழர்கள் ஈடுபட்டுள்ளனர். அடுத்த கட்டமாக தெருமுனைக் கூட்டங்கள் நடக்க உள்ளன.
திருப்பூர்: ஆகஸ்ட் 9 சிறை நிரப்பும் போராட்டத்துக்கு ஆதரவு திரட்ட தோழர்கள் தாமோதரன், கோவிந்தராஜ் தலைமையில் 2 பிரச்சார நடைபயணங்கள் நடந்தன.
சென்னை: சென்னையில் கட்சி மாவட்டக் குழுவும் ஏஅய்சிசிடியு மாவட்ட செயற்குழுவும் கூட்டப்பட்டு அம்பத்தூர், திருபெரும்புதூர், திருவெற்றியூர், அயனாவரம், நுங்கம்பாக்கம், எழும்பூர், வில்லிவாக்கம் என 30 இடங்களில் நடை பயணப் பிரச்சாரம் நடத்தத் திட்டமிடப்பட்டது.
சென்னையில் 29.07.2011 வரை 18 இடங்களில் பிரச்சார நடைபயணங்கள் நடந்துள்ளன. 280 தோழர்கள் பிரச்சார இயக்கங்களில் பங்கேற்றுள்ளனர். மாவட்ட தலைமை தோழர்கள் கட்சி உறுப்பினர்களை நேரடியாக வேலையிடத்தில், வீடுகளில் சந்தித்து பேசி வருகிறார்கள். ஆகஸ்ட் 9 அணிதிரட்டலுக்கான தீவிரமான வேலைகள் மேற்கொள்ளப் படுகின்றன.
ஜுலை 28 தியாகிகள் தினம், அம்பத்தூரில் ஊழலுக்கெதிராக, ஒடுக்குமுறைக்கெதிராக திறன்வாய்ந்த லோக்பால் சட்டம் வேண்டும், என்ற முழக்கங்களுடன் ஆகஸ்ட் 9 சிறை நிரப்புவோம் என்று உறுதியேற்கும் நிகழ்ச்சியாக பிரச்சார கூட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்ட கமிட்டி உறுப்பினர் ஆர்.மோகன் கூட்டத்துக்கு தலைமை தங்கினார். அகில இந்திய மாணவர் கழக மாநில தலைவர் கே.பாரதி, மாநிலச் செயலாளர் ராமேஷ்வர் பிரசாத், ஏஅய்சிசிடியு மாநில செயலாளர் கே.பழனிவேல் கட்சி மாவட்ட செயலாளர் எஸ். சேகர், பெண்கள் கழக மாவட்ட செயலாளர் குப்பாபாய், கட்டுமான தொழிலாளர் சங்க மாநில செயலாளர் கோவி.முனுசாமி ஆகியோர் பேசினார்கள்.
புதுக்கோட்டை: சிறை நிரப்பும் போராட்டத்துக்கு தயாரிப்பு பணிகளுக்காக அனைத்து ஊராட்சிகளிலும் கிளை கூட்டங்கள், ஊர்க் கூட்டங்கள் நடந்துள்ளன. ஜுலை 28 தியாகிகள் தினத்தன்று மூன்று கிளைக்கூட்டங்கள் நடந்தன. வேப்பனபட்டி, சங்கம் விடுதி, சங்கமடம், துவார், வள்ளியம்பட்டி ஊராட்சிகளில் 5 நடைபயணங்கள் நடந்துள்ளன.
திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை எல்லாபுரம் ஒன்றியத்தில் புதியதாக விவசாய தொழிலாளர் சங்க வேலைகள் துவங்கப்பட்டுள்ளன. 1000 உறுப்பினர் சேர்க்கப்பட்டுள்ளனர். தாராட்சி, தொம்மரமேடு, தாமரைகுப்பம் ஊராட்சிகளில் 7 கிராம கூட்டங்கள் நடந்துள்ளன. 500க்கும் கூடுதலானவர்கள் கலந்து கொண்டனர். அத்திப்பட்டு, அழிஞ்சிவாக்கம், அலமாதி, நல்லூர், ஊராட்சிகளிலும் மாதவரம், செங்குன்றம் பகுதியிலும் நடைபயணங்கள் நடந்துள்ளன. 150 பேர் பங்கெடுத்துள்ளனர். ஜுலை 28 தியாகிகள் தின அனுசரிப்பு கூட்டம் மாதவரத்தில் தோழர் திருநாவுக்கரசு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் மாநில கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் எஸ்.ஜானகிராமன், எ.எஸ்.குமார், ஏஅய்சிசிடியு மாநில பொதுக்குழு உறுப்பினர் தோழர் ஜெயராஜ் உரையாற்றினார்கள்.
விழுப்புரம்: ஜுலை 28 தியாகிகள் தினத்தை ஒட்டி சுவரொட்டி இயக்கம் நடத்தப்பட்டது. ஆகஸ்ட் 9 சிறை நிரப்பும் போராட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், கோட்டக்குப்பம் மய்யங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
சேலம்: ஆகஸ்ட் 9 போராட்டத்திற்கு மணியனூர், தெற்கு அம்மாபேட்டை, வடக்கு அம்மாபேட்டை, காந்திஜி காலனி, பூவனூர் ஊராட்சி, குப்பனூர் ஊராட்சி பகுதிகளில் ஜுலை 27, 28, 29, 30, 31 தேதிகளில் பிரச்சார நடைபயணங்கள் நடைபெற்றன. 70 தோழர்கள் பிரச்சார வேலைகளில் பங்கெடுத்துள்ளனர். உடையார்பட்டி, வடக்கு அம்மாபேட்டை. மணியனூர் பகுதிகளில் பிரச்சார நடைபயணங்கள் ஆகஸ்ட் 3 அன்று நடந்தன.
நாமக்கல்: ஆகஸ்ட் 9 தயாரிப்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. வெப்படையில் தோழர் வெங்கடாசலம் தலைமையில் நடைபயணம் நடந்தது. பள்ளிபாளையம் அக்ரகாரம் பகுதியில் தோழர் புகழேந்தி தலைமையிலும் ஈரோட்டில் அசோக்நகர், வீரப்பசத்திரம், ஜான்சி நகர் பகுதிகளில் தோழர் கார்த்திக் தலைமையிலும் பெருந்துறையில் தோழர் மோகன்தாஸ் தலைமையிலும் நடைபயணங்கள் நடைபெற்றன.
நெல்லை: நான்கு மயயங்களில் வேலைகள் துவங்கி உள்ளன. பீடி தொழிலாளர் சங்க மாவட்ட மாநாடு நடக்க உள்ளது. 4 நடை பயணங்கள் நடந்து முடிந்துள்ளன.
நாகை - தஞ்சை: ஜுலை 28 தியாகிகள் தினத்தை ஒட்டி புங்கனூர் ஊராட்சியில் ஆகஸ்ட் 9 சிறை நிரப்பும் போருக்கு ஆதரவு திரட்டும் நடைபயண பிரச்சாரம் நடந்துள்ளது. தஞ்சையில் திருப்பனந்தாள் ஒன்றியத்தில் அனைத்து கிளைகளிலும் வீடுவீடாக மக்களை சந்திக்கும் பிரச்சாரம் நடக்கிறது.
காஞ்சிபுரம்: ஜுலை 31 அன்று வண்டலூர் உள்ளூர் கமிட்டி மாநாடு நடைபெற்றது. கட்சி மாநில கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் எஸ்.சேகர் மற்றும் எஸ்.இரணியப்பன் வாழ்த்துரையாற்றினர். உள்ளூர் கமிட்டி தலைவர்கள் எ.கோபால், பாலாஜி, ராஜ்குமார், கோபால கிருஷ்ணன் உட்பட கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசினார்கள். முன்னதாக இப்பகுதியில் 2000க்கும் மேற்பட்ட மக்களை வீடுவீடாக சந்தித்து மாநாட்டுக்கும் ஆகஸ்ட் 9 சிறை நிரப்பும் போருக்கும் ஆதரவு திரட்டப்பட்டது.
கரூர்: கரூரில் இரண்டு நடைபயணங்கள் நடந்துள்ளன.
குமரி: ஜுலை 28 அன்று குமரி மாவட்டம் குளச்சலில் உள்ள ரீத்தாபுரம் பேரூராட்சி அலுவலகத்தை தண்ணீர் குடங்களுடன் முற்றுகையிட்ட போரட்டம் நடந்தது. 300 பேருக்கும் மேல் மக்கள் பங்கெடுத்தனர். ஆகஸ்ட் 9 நோக்கி நடைபயணம், வாகனப் பிரச்சாரம் நடத்தப்படுகின்றன.
தொகுப்பு: எஸ்.சேகர்

மாணவர் இளைஞர் உரிமை பேரணி

ஜுலை 23 அன்று கோட்டை நோக்கி அகில இந்திய மாணவர் கழகம், புரட்சிகர இளைஞர் கழகம் இணைந்து, மாணவர் இளைஞர் உரிமை பேரணி நடத்தின. பேரணியை மாலெ கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார் துவக்கி வைத்தார். பேரணியில் மலர்விழி, கோமதி, சீதா, ராமச் சந்திரன், தனவேல், ரமேஷ்வர் பிரசாத், கோபால், ராஜசங்கர், வெங்கடாசலம், திவ்யா ஆகியோர் முக்கிய பங்காற்றினர். இறுதியாக அகில இந்திய மாணவர் கழக மாநிலத் தலைவர் தோழர் கே.பாரதி உரையாற்றினார்.
7 பேர் கொண்ட குழு முதல்வரின் தனிப் பிரிவு செயலரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தது. கோரிக்கை மனுவில் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புப்படி பொதுப்பாடத் திட்டத்தை உடனே அமல்படுத்து!
தேர்தல் வாக்குறுதிப்படி அனைவருக்கும் தரமான இலவச கல்வி வழங்கு!
தனியார் பள்ளி, கல்லூரிகளை அரசே ஏற்று நடத்து!
ரவிராஜபாண்டியன் கல்வி கட்டணத்தை ரத்து செய்!
ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தாய்மொழியில் வழங்கு!
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த 75 இலட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடு!
வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 வழங்கு!
கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கை உயர்நீதி மன்றமே ஏற்று விரைந்து நடத்தி அனைத்து குற்றவாளிகளுக்கும் தண்டனை வழங்கு!
பேரணியில் தஞ்சை, புதுக்கோட்டை, திருவள்ளுர், சென்னை, காஞ்சிபுரம், கோவை, கடலூர், நாமக்கல், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர்.
- மலர்விழி, பிரசாத்

மாலெ கட்சி தலைவர்கள் மீது போடப்பட்ட
பொய் வழக்கை திரும்பப் பெறு!

மாலெ கட்சி மாநிலக் குழு உறுப்பினர் மற்றும் விழுப்புரம் மாவட்டப் பொறுப்பாளர் தோழர் மா.வெங்கடேசன் மற்றும் புதுவை மாநில மாலெ கட்சி தலைவர்கள் மீது ஆரோவில் காவல் நிலையத்தில் போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெறக் கோரி உளுந்தூர் பேட்டை, திருக்கோயிலூர், விழுப்புரம் கமிட்டிகள் சார்பாக பின்வரும் முழக்கங்களுடன் சுவரொட்டிகள் வெளியிடப்பட்டன.
தமிழக அரசே! காவல்துறையே!
விழுப்புரம் மாவட்டம், புதுவை மாலெ கட்சி தலைவர்கள் மீது ஆரோவில் காவல் நிலையத்தில் போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்திடு!
இரவு நேரத்தில் தேடுதல் என்ற பெயரில் வீடுகளில் நுழைந்து பெண்களை இழிவுபடுத்தி, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்திடு!
வானூர் ஒன்றிய கட்சி அலுவலக சிவில் உரிமை பிரச்சனை யில் காவல்துறை தலையிட்டு பொய் வழக்கில் கைது செய்வதை தடுத்து நிறுத்து!
இந்தக் கோரிக்கைகள் மீது ஜுலை 13 அன்று உளுந்தூர்பேட் டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 70 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தோழர் கந்தசாமி தலைமை தாங் கினார். மாலெ கட்சி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், கடலூர் மாவட்டப் பொறுப்பாளர் தோழர் அம்மையப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக முற்போக்கு பெண்கள் கழகம் ஆர்ப்பாட்டம்

அதிகரித்து வரும் பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு விலை உயர்வு, குமரி மாவட்டத்தில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, கடலூரில் பள்ளி மாணவியை கழிப்பிடம் கழுவச் செய்தது, நெல்லையில் தாழையூத்து ஊராட்சி பெண் தலித் தலைவர் தாக்கப்பட்டது போன்றவற்றை கண்டித்தும், ஈரோடு பெண் காவலர் வள்ளி தொடுத்துள்ள வழக்கில் அவர் கோரியுள்ளபடி தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் மீது நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தலை தடுக்க விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று கோரியும் மாநிலம் முழுவதும் முற்போக்கு பெண்கள் கழகம் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது.
மாலெ கட்சியும் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகமும் இணைந்து திரு நெல்வேலியில் ஜுலை 2 அன்று முற்போக்கு பெண்கள் கழக தோழர் தேன்மொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தின. கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் சங்கரபாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ரமேஷ், ராஜமாணிக்கம் கணேசன், ரவிடேனியல், கருப்பசாமி, முற்போக்கு பெண்கள் கழக மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்புச் செல்வி, வேலம்மாள், மாரியம்மாள், சந்திரா, ராஜலட்சுமி, கோமதி, ஜெயக்கொடி ஆகியோர் பங்கு பெற்றனர்.
ஜுலை 7 அன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மாவட்ட முற்போக்கு பெண்கள் கழக செயலாளர் தோழர் ஜாக்குலின்மேரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்டத் தலைவர் தோழர் ஜெயா முன்னிலை வகித்தார். முற்போக்கு பெண்கள் கழக மாநிலத் தலைவர் தேன்மொழி மாலெ கட்சி மாவட்ட செயலாளர் தோழர் கோவிந்தராஜ் அகில இந்திய மாணவர் கழக மாநிலச் செயலாளர் தோழர் மலர்விழி கண்டன உரையாற்றினர்.
ஜுலை 7 அன்று குமரியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழர் சுசீலா தலைமை தாங்கினார். தோழர்கள் மேரி ஸ்டெல்லா, ஜாக்குலின், கட்சி மாவட்ட பொறுப்பாளர் அந்தோணிமுத்து கண்டன உரையாற்றினர்.
ஜுலை 8 அன்று விழுப்புரத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்போக்கு பெண்கள் கழக மாவட்ட செயலாளர் தோழர் செண்பகவள்ளி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாலெ கட்சி கடலூர் மாவட்ட செயலாளர் அம்மையப்பன், புதுவை மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் சங்கரன், முற்போக்கு பெண்கள் கழக மாநில தலைவர் தேன்மொழி கண்டன உரையாற்றினர்.
விழுப்புரத்தில் மாலெ கட்சி தலைவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெற ஆர்ப்பாட்டம் வலியுறுத்தியது.
ஜுலை 12 அன்று அம்பத்தூரில் கண்டன தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தோழர் தேவகி தலை மையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாலெ கட்சி மாநிலக்குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார், முற்போக்கு பெண்கள் கழக மாநிலத் தலைவர் தோழர் தேன்மொழி, மாநிலத் துணைத் தலைவர் தோழர் குப்பாபாய், தோழர் ரேவதி, மாலெ கட்சி சென்னை மாவட்ட செயலாளர் தோழர் சேகர் உழைப்போர் உரிமை இயக்கத் தோழர்கள் மோகன், ராஜா, பத்திரிகையாளர் ஜீவா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். பாம்பே ரேயான்ஸ் ஆயத்த ஆடை நிர்வாகம் அறிவிக்கப்படாத, அனுமதி பெறாத ஆட்கு றைப்பு செய்து பெண் தொழிலாளர்களை ஒடுக்குவதை கண்டித்தும் அம்பத்தூர் மார்க்கட்டில் இன்னும் ஒரு டாஸ்மாக் கடை வரவிருப்பதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொகுப்பு: தேன்மொழி

அம்பத்தூர் மார்க்கெட்டில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும், புதிய மதுக்கடை திறப்பதை கைவிட வேண்டும், தமிழ்நாட்டில் மதுவிலக்கை உடனே அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் உழைப்போர் உரிமை இயக்கம் ஜுலை முதல் வாரத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தியது.

ஜுலை 17 அன்று சேலத்தில் அகில இந்திய மாணவர் கழகம், புரட்சிகர இளைஞர் கழகம் இணைந்து ஊழல் எதிர்ப்பு கருத்தரங்கம் நடத்தின. கட்சியின் மாநில கமிட்டி உறுப்பினர் தோழர் அ.சந்திரமோகன் அகில இந்திய மாணவர் கழக மாநில தலைவர் கே.பாரதி, கட்சி மாவட்டச் செயலாளர் மோகனசுந்தரம், ஏஅய்சிசிடியு தலைவர்கள் விஸ்வநாதன், நடராஜன் ஆகியோர் பேசினர். மாணவர்கள், இளைஞர்கள், பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர். மாணவர் கழக பொறுப்பாளர் தோழர் கோமதி தலைமை தாங்கினார்.

சேலத்தில் கிச்சிப்பாளையம் காந்தி மகான் தெருவில் அருந்ததியர் குடியிருக்கிற தெருவில் பிற்படுத்தப்பட்ட சாதி மக்கள் வசிக்கும் வஉசி நகரை இணைக்கும் சாலையின் நடுவே 25 ஆண்டுகளுக்கு முன் சுவர் எழுப்பப்பட்டு அருந்ததிய மக்களின் நடமாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. தோழர்கள் செல்வராஜ், வேல்முருகன், சந்திரமோகன் உள்ளடக்கிய மாலெ கட்சி உண்மையறியும் குழு பகுதி மக்களை சந்தித்தது. இந்தச் சுவர் உடனே அகற்றப்பட வேண்டுமென மாலெ கட்சி கோருகிறது.

சிவகங்கையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), லெனின் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து 13.7.2011 அன்று பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாலெ கட்சி சார்பாக தோழர் ஜீவா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

Search