COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Sunday, June 12, 2011

தீப்பொறி, 2011 ஜுன்


ஊழலற்ற, ஜனநாயக இந்தியாவுக்கான மாணவர் இளைஞர் இயக்கம்

ஊழலுக்கும் பெரும் தொழில் குழுமங்களுக்கும் உள்ள பிணைப்பை அம்பலப்படுத்தி, மாலெ கட்சி நாடு தழுவிய இயக்கம் நடத்துகிறது. அகில இந்திய மாணவர் கழகமும் புரட்சிகர இளைஞர் கழகமும், நாடெங்கும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் நடத்துகின்றன. ஆகஸ்ட் 9 அன்று டில்லியில் பல்லாயிரக்கணக்கான மாணவ இளைஞர்கள், நாடு காக்கும் போராட்டத்தில் அணிவகுக்க உள்ளனர்.

தமிழ்நாட்டில் அகில இந்திய மாணவர் கழகம், ‘ஊழலுக்கு எதிராக, ஒடுக்குமுறைக்கு எதிராக நிற்பேன்’ என்று உறுதிமொழிப் படிவத்தில் மக்கள் மத்தியில் கையெழுத்துக்கள் திரட்டுகிறது. கணிசமான எண்ணிக்கையிலான தொண்டர்களைக் களமிறக்கத் திட்டமிட்டுள்ளது.

நாடு தழுவிய இயக்கத்தின் ஒரு பகுதியாகவும், தமிழக மாணவ இளைஞர்கள் கோரிக்கைகளை முன்நிறுத்தியும், ஜூலை 23 அன்று சட்டமன்றம் நோக்கி ஒரு பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக நிதி திரட்டும் இயக்கத்தில், 19.05.2011 முதல் 2 பெண் தோழர்கள், தலைநகரை மய்யப்படுத்தி முகாமிட்டு வேலை செய்கின்றனர்.

தோழர்கள் மலர்விழி கோமதியுடன், தோழர்கள் சீதா, சந்தியா, ஜெய்ஸ்ரீ, பவானி, புவனேஸ்வரி, மோகன், சீனு, முனுசாமி, சுகுமார், சுரேஷ், கலாநிதி, ஜீவா, கோபால், பாரதி ஆகியோரும் வேறு வேறு நாட்களில் இணைந்து பணியாற்றினார். பேருந்து நிலையங்களில், பேருந்துகளில், கடைவீதிகளில் பேசிப் பிரச்சாரம் செய்வதில் 40 1/2 மணி நேரங்கள் ஈடுபட்டனர். கையெழுத்துக்களோடு ரூ.22000 வரை நிதி திரட்டி உள்ளனர். மக்கள் மத்தியில் வரவேற்பையும் வாழ்த்தையும் பெற்ற பிரச்சாரம், மாணவ இளைஞர் அமைப்புகளுக்குப் புதிய தொடர்புகளைத் தேடித் தந்துள்ளது.

வின் தொலைக்காட்சியில் மாணவத் தோழர்கள், மலர்விழி, கோமதி, சீதா, புதிய அரசும் நிச்சயம் மாணவர்களுக்காக ஏதும் செய்து விடாது என்பதை வலியுறுத்த, 27.05.2011 அன்றைய நீதியின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தமிழக அரசு, சமச்சீர் கல்வியால் வரும் தலைமுறைகளுக்கே ஆபத்து என நீதிமன்றத்தில் ஒரு பக்கம் வாதாடிக்கொண்டு, மறுபக்கம், தனது கூட்டணிக் கட்சியிடம் சமச்சீர் கல்விக் கொள்கையில் தனக்கு எந்த மாறுபாடும் இல்லை என இரு குரல்களில் பேசுவதையும், கல்விக் கட்டண விஷயத்தில் கை கழுவப் பார்ப்பதையும், கல்வி தனியார்மயத்திற்கு வலு சேர்ப்பதையும் தரமான கட்டணமற்ற கல்விக்கு பொறுப்பேற்க மறுப்பதையும் கண்டித்து, ஜூன் 3 சென்னையில் ஆர்ப்பாட் டம் நடத்த முடிவு செய்துள்ளது. மாவட்டம் விட்டுச் சென்று வேறு பகுதிகளிலும் தங்கி இயக்க வேலை பார்க்கும் இந்தப் பிரச்சார இயக்கத் துவக்கம், தமிழகமெங்கும், நமது மாணவர் இளைஞர் வேலைகளுக்கு உற்சாகம் தரும்.

                                                                                     - மலர்விழி, கோமதி, சீதா

பெட்ரோல் விலைஉயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் விலைஉயர்வை எதிர்த்து மே 16 அன்று அகில இந்திய மாணவர் கழக, புரட்சிகர இளைஞர் கழக தோழர்கள் விருத்தாச்சலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தோழர் தனவேல் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாலெ கட்சி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் உரையாற்றினார். மாணவர் கழக மாநிலச் செயலாளர் தோழர் ராஜசங்கர் கண்டன உரையாற்றினார். மாலெ கட்சி மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் அந்தோணிமுத்து, தேன் மொழி, தாமோதரன், அம்மையப்பன், ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மே 26 அன்று நெல்லையில் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக மாலெ கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. மாலெ கட்சி நெல்லை நகரப் பகுதிச் செய லாளர் தோழர் வெங்கட்ராமன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் தோழர் சங்கரபாண்டியன் கண்டன உரையாற்றினார்.

தலையங்கம்

கருணாநிதி எவ்வழியோ ஜெயலலிதா அதே வழி

ஜெயலலிதா என்ன செய்கிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம் என்று அவகாசம் எடுத்துக் கொண்ட தமிழ்நாட்டு மக்களால், இப்போதே இப்படியா என்ற கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை.

தனது முந்தைய ஆட்சியில் அமெரிக்கப் பள்ளிகளை தமிழ் நாட்டில் கொண்டு வர பேரார்வம் காட்டிய ஜெயலலிதாவின் 2011 தேர்தல் அறிக்கையில், பள்ளிக் கல்வி பற்றிய வாக்குறுதிகளில் மாணவர்களின் புத்தகச் சுமை குறைக்கப்படும், தரமான இலவசக் கல்வி அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மாணவர்களின் புத்தகச் சுமை குறைந்ததோ இல்லையோ, அரசிடம் இருப்பில் உள்ள புத்தகச் சுமை அதிகரித்துவிட்டது. சமச்சீர் கல்விக்காக அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள், 6 கோடி என்றும் 9 கோடி என்றும் பத்திரிகைகள் மாறி மாறி செய்திகள் வெளியிடுகின்றன. நாட்டில் உள்ள வறிய மக்கள் பசித்துக் கிடக்கும்போது, அரசு கிட்டங்கிகளில் உணவு தானியங்கள் அழுகிப் போவதுபோல், கல்வி பெற வசதியின்றி தமிழகக் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாய் மாறிக் கொண்டிருக்கும்போது, அரசிடம் 6 கோடி அல்லது 9 கோடி புத்தகங்கள் தேங்கிக் கிடக்கின்றன. அவை பயனற்றுப் போய்விடக் கூடிய சாத்தியப்பாட்டையும் இல்லை என்று சொல்லி விட முடியாது.

தமிழ்நாட்டின் நிதிநிலைமையை திமுக அரசாங்கம் சீர்குலைத்துவிட்டது என்று திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருந்த ஜெயலலிதா சமச்சீர் கல்விக்காக புத்தகங்கள் அச்சிட செலவிடப்பட்ட ரூ.200 கோடி மக்கள் பணம் வீணாவது பற்றி அக்கறை கொள்ளவில்லை. புதிய புத்தகங்கள் அச்சிட இன்னுமோர் ரூ.200 கோடி செலவிடப்படவுள்ளது. (ரூ.1200 கோடி மக்கள் பணத்தில் கட்டப்பட்ட சட்டமன்ற கட்டிடம் கூட வீணாய் கிடக்கிறது).

கருணாநிதி புகழ் பாடும் பாடங்கள் உள்ளதாலேயே ஜெயலலிதா அந்தப் பாடத் திட்டங்களை தரம் குறைந்தவை என்று சொல்லி நிராகரிக்கிறார் என்று சொல்ல முடியாது. அவருடைய அக்கறை இன்னும் பரந்தது.

தனியார் பள்ளிகள் தரம் கூடுதலான பாடத்திட்டத்தைக் கொண்டிருப்பதாகவும் அரசு முன்வைத்த பாடத்திட்டம் அந்தத் தரத்தை ஈடு செய்யும்படி இல்லை என்றும் அதை அமல்படுத்த முடியாது என்றும் தேர்தல் முடிவுகள் வரும் முன்னரே தனியார் பள்ளி நிறுவனங்கள் அடித்துப் பேசின. தேர்தல் முடிவுகள் வந்த பிறகு புதிய முதலமைச்சருக்கு வாழ்த்துத் தெரிவித்து நமது எம்ஜிஆர் பத்திரிகையில் தனியார் பள்ளி நிறுவனங்கள் சார்பாக முழுப்பக்க விளம்பரம் வெளியானது. மறுநாள் இந்த ஆண்டு சமச்சீர் கல்வி அமலாகாது என்று ஜெயலலிதா அறிவித்தார். பாடத் திட்டம் சரியில்லை என்று கல்வி எசமானர்கள் சொன்னதைச் சொன்னார்.

இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் கேள்விகள் உருவாக்கும் என்று நன்கு அறிந்திருப்பதாலேயே, 10+2 மாணவர்கள் தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ளும் இடத்திலேயே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ள வசதிகள் என்று சொல்லி கேள்விகளின் தாக்கத்தை மட்டுப்படுத்தப் பார்த்தார். வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வதற்காக மாணவர்கள் ஓரிடம் விட்டு வேறிடம் செல்ல வேண்டியிருக்கிறது என்றும் போக்குவரத்து, காத்திருப்பு என மாணவர்கள் சிரமப்படுகிறார்கள் என்றும் அதனால்தான் இப்படி ஓர் ஏற்பாடு என்றும் ஜெயலலிதா சொன்னார்.

வேலை வாய்ப்புக்காக பதிவு செய்வது ஒரு புறம் இருக்கட்டும். அரசாங்க வேலை வாய்ப்பு எங்கே உள்ளது? ஏற்கனவே தமிழ்நாடு அரசு ஊழியர்கள் என்று பெயர் இருந்தாலும் தொகுப்பூதியம், ஒப்பந்த முறை என்று தத்தளிப்போருக்கு என்ன பதில்?

இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் இருக்கும்போதுதான் நாக்கை அறுத்து நேர்த்திக் கடன் செலுத்திய பெண்ணுக்கு அரசுப் பணிக்கான ஆணை தரப்பட்டுள்ளது. அவர் ரூ.2500 ஊதியம் பெறுவார் என்று பெரு மையாக அறிவிக்கப்படுகிறது. இது, தமிழக பெண்களுக்கு, தமிழக மக்களுக்கு, தேர்வு முடிவு தெரிந்தவுடனேயே வேலை வாய்ப்புக்கு பதிவு செய்துகொண்ட மாணவர்களுக்கு, நல்ல செய்தி எதுவும் சொல்லவில்லை.

எப்படியாயினும் வேலை வாய்ப்புக்கு உடனடி பதிவால், சமச்சீர் கல்வி அமலாக்கத் தடை தொடர்பான உடனடி கேள்விகளை தடுத்து நிறுத்த முடியவில்லை. உடனடியாக தனியார் கல்வி நிறுவனங்களின் கோரிக்கைக்கு ஒப்புதல் தந்த ஜெயலலிதா சமச்சீர் கல்வி தொடர்பான கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட முடியாது.

உயர்நீதி மன்றம் தலையிட்டுள்ளது. தமிழ்நாடு சமச்சீர் கல்விச் சட்டம் 2010அய் எதிர்த்து உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத் திலும் தனியார் பள்ளிகள் தொடுத்த வழக்குகளில் சமச்சீர் கல்வித் திட்டத்துக்கு ஆதரவாகவே நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தன. உச்சநீதி மன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புக்கள் இருக்கும் ஒரு விசயத்தில் சட்டம் போடப்பட்டுள்ள ஒரு விசயத்தில், ஓர் அரசாங்கம் மாற்றி முடிவெ டுக்க முடியுமா எனக் கேள்வி எழுப்புகிறது.

சமச்சீர் கல்வி பாடாய் படும்போது, கல்விக் கட்டணம் பற்றி சொல்ல அரசுக்கு ஏதும் இல்லை என்றும் அதை அதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு பார்த்துக் கொள்ளும் என்றும், பள்ளிகளோ, பெற்றோர்களோ கேட்டுக் கொண்டால் அரசு தலையிடும் என்று அடுத்த அதிரடி அறிவிப்பு ஜெயலலிதாவிடம் இருந்து வந்தது.

அப்படியானால், அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி என்ற ஜெயலலிதாவின் வாக்குறுதிக்கு என்னதான் பொருள்? கல்விக் கட்டண உயர்வு பற்றியே தலையிட முடியாது என்று சொல்லும் ஓர் அரசாங்கம், இலவசக் கல்வி பற்றி என்ன பார்வை கொண்டிருக்கும்?

வழக்கம்போல் மக்கள் படட்டும், உணரட்டும் என்கிறார் கருணாநிதி. ராமதாசும் கத்திப் பார்க்கிறார். கல்விக் கட்டணம் விசயத்தில் அரசு தலையிடாது என்று ஜெயலலிதா சொன்னது பற்றி கேட்டபோது, நீங்களாவது தலையிடுங்கள் என்று பத்திரிகையாளர்களிடம் சொன்னார் கருணாநிதி.

ஜெயலலிதா, கருணாநிதியும் ராமதாசும் சொல்வதை அலட்சியப்படுத்திவிடலாம். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள பெற்றோர்களும் மாணவர்களும் கவலையில் உள்ளனர். அதற்கு ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும்.

தான் எண்பது வயதை எட்டியதற்கு ஜனசக்தியில் பெரிய பெரிய விளம்பரங்கள் வெளியிட்டுக் கொண்ட தா.பாண்டியன் (குறைந்தபட்சம் சிவப்புத் துண்டாவது இல்லாத நிழற்படமாக இருந்திருக்கலாம்) கூட சமச்சீர் கல்வி பற்றி தனது நிலைப்பாட்டை அரசு அறிவிக்க வேண்டுமெனக் கேட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியும் சமச்சீர் கல்வி பற்றிய ஜெயலலிதாவின் அணுகுமுறையை மென்மையாகக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. பிரின்ஸ் கஜேந்திர பாபு போன்றோர் சமச்சீர் கல்வி அமலாக்கத்தில் அரசாங்கம் செய்ய வேண்டியவை என்று ஒரு பட்டியல் தந்துள்ளார். நான்கு கல்வி வாரியங்களையும் ஒன்றாக ஆக்குவது முதல் பெற்றோர் பங்கு பெறும் ஆலோசனைக் குழு வரை பரிந்துரைகள் தந்துள்ளார்.

இவர்கள் ஒரு வகையில் தமிழக அரசாங்கம் சொல்லும் சமச்சீர் கல்வி என்ற திட்டத்தை ஏற்றுக்கொண்டு, அதில் வர வேண்டிய ஒப்பனை மாற்றங்கள் பற்றி பேசுகிறார்கள்.

சமச்சீர் கல்வி என்ற விசயத்தை கருணாநிதி எந்தச் சூழலில் வேகப்படுத்தினார் என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். சமச்சீர் கல்வி என்ற பெயரில் உண்மையில் கருணாநிதி மிகப்பெரிய பிரச்சனையை, அடிப்படைப் பிரச்சனையை திசை திருப்பினார். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கல்விக் கட்டண உயர்வு பெரும்பிரச்சனையானது. கோவிந்தராஜன் குழு போட்டு அறிவிக்கப்பட்ட கட்டணத்துக்கு மேல் கூடுதல் கட்டணம் பல பள்ளிகளில் கட்டாயமாக வசூலிக்கப்பட்டது. கூடுதல் கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பள்ளி நிர்வாகங்களால் அவமானப்படுத்தப்பட்டனர். மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டங்களால் தமிழ்நாடு நிறைந்தது.

இந்தப் பின்னணியில்தான் சமச்சீர் கல்வி கொண்டு வந்து தமிழக மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வைக் குறைக்கப் போவதாகச் சொன்னார் கருணாநிதி. செய்தார். செய்ததற்குப் பின்னால், அவர் கண்டுகொள்ளாமல் விட்டது, கல்வி தருவதில் அரசின் பாத்திரமும், கல்வி வணிகமய வேட்டையும்தான். இரண் டும் எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்தன.

கருணாநிதி எவ்வழியோ ஜெயலலிதாவும் அதே வழியில் சாட்டைகளை கைகளில் எடுத்துக்கொண்டு தயாராகிவிட்டார். கருணாநிதியின் இடத்தில் ஜெயலலிதா என்ற மாற்றம் வந்தாலும், இந்த 10, 15 நாட்களில், கல்விக் கொள்கையில் தொடர்ச்சியே உள்ளது.

சமச்சீர் கல்வி பாடத்திட்டங்களை மாற்றி சிலவற்றை நீக்கி, சிலவற்றைச் சேர்த்து கூட ஜெயலலிதா அமலாக்கலாம். ஆனால் கல்வி வணிகமயத்தில் மாற்றம் ஏதும் இருக்காது.

கல்வி சமமில்லாமல் போனதற்கு வெவ் வேறு பாடத் திட்டங்களா காரணம்? ஏன் வெவ்வேறு பாடத் திட்டங்கள் வந்தன? கல்வி தனியார்மயம்தான் கல்விச் சூழலில் ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கியது. இந்தக் கேள் விக்கு விடை காணாமல் கல்வி தனியார்மயத் துக்கு சமச்சீர் கல்வி என்ற போர்வை போர்த்தி பிரச்சனையை திசை திருப்ப முடியாது.

உயர்நீதி, உச்சநீதிமன்றங்கள் கூட சமச்சீர் கல்விக்கு பச்சைக் கொடிதான் காட்டுகின்றன. தாராளவாத கருத்து கொண்டோருக்கு இது போதும் என்று கூட படலாம். சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் மட்டும் வந்துவிட்டால் கல்வி தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு வந்து விடாது.

சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை அமல்படுத்தி, வேலம்மாள் பள்ளியும், செட்டிநாடு வித்யாஸ்ரமும் கல்விக் கட்டணத்தை மட்டும் அப்படியே தொடர்ந்தால், ஹ÷ண்டாய் தொழிலாளி கூட தன் பிள்ளைகளை அங்கே சேர்க்க முடியாது என்ற இன்றைய நிலைமை மாறிவிடுமா? எல்கேஜி சேர்க்க ரூ.30,000 செலவாகும் என்றால், சமச்சீர் கல்வி அதில் என்ன மாற்றத்தை கொண்டு வரும்?

தனியார் பள்ளிகள், சமச்சீர் கல்வி பாடத் திட்டங்களைக் கூட அமல்படுத்திவிட்டு தங்கள் விருப்பப்படி கட்டணம் வசூலிக்கும் என்றால், சமச்சீர் கல்வியால் என்ன பயன்?

தனியார் பள்ளிகள் இருப்பதால்தானே இந்தக் கேள்விகளே எழுகின்றன. தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்தும் என்றால் சமச்சீர் கல்வி பற்றிய சர்ச்சையே எழாதே. அரசே அனைவருக்கும் சமமாக கல்வி தரலாமே. கல்வி தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கல்வி தனியார்மயத்துக்கு முடிவு கட்டுவதில்தான் இருக்கிறது. சமச்சீர் கல்வி ஒரு வலி நிவாரணி மட்டுமே. தற்காலிகப் பூச்சு மட்டுமே.

சமச்சீர் கல்வி, சட்டமன்றக் கட்டிடம் ஆகியவற்றில் கருணாநிதிக்கு பதிலடி கொடுப்பதாகக் காட்டிக் கொள்ள விரும்பும் ஜெயலலிதா டாஸ்மாக் விசயத்தில் மட்டும் மதிப்புக் கூட்டப் பார்க்கிறார். அதாவது, உள்ளூர் பெட்டிக் கடைகள் போலுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வர மேட்டுக் குடியினர் தயங்கு வார்களாம். அதனால், அந்தக் கடைகளின் தரத்தை உயர்த்தி, உயர்ரக பானங்களை விற்பனை செய்து மேட்டுக்குடி பிரிவினரையும் ஈர்க்கப் போகிறதாம் டாஸ்மாக். எவ்வளவு முக்கியமான கடமை. இந்த 10 நாட்களில் ஜெயலலிதா வெளிப்படுத்திய நிர்வாகத் திறன் பற்றி அஇஅதிமுகவினர் வியந்து போற்றுகி றார்கள். டாஸ்மாக் மேம்பாடு அவற்றில் ஒன்றாக இருக்குமா?

தஞ்சை மாவட்டத்தில் தெலுங்கன்குடி காடு துவக்கப் பள்ளியில் ஒன்று முதல் அய்ந்தாம் வகுப்பு வரை வெறும் 8 மாணவர்கள் படிக்கின்றனர். சித்திரைக்குடி கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியின் மொத்த மாணவர் எண்ணிக்கை 11. களிமேடு ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் மொத்தம் 31 மாணவர்கள் படிக்கிறார்கள் (தினமணி, செப்டம்பர் 9, 2010).

தமிழ்நாட்டில் அரசு தரும் கல்விக்கு இது ஓர் உரைகல். சத்துணவு, முட்டை போன்ற அரசு பெருமை பேசும் சலுகைளுக்குப் பிறகு, சமச்சீர் கல்வி பற்றிய ஆரவாரத்துக்குப் பிறகு இதுதான் அரசுக் கல்வியின் உண்மை முகம்.

வறுமையை ஒழிக்கும் மான்டெக் மந்திரம்

                                                                                                               - எஸ்.குமாரசாமி

மான்டெக் ஒரு தலைசிறந்த மந்திரவாதி. மான்டெக் சிங் அலுவாலியா மன்மோகனுக்கு நெருக்கமானவர். பலம் வாய்ந்த திட்டக் கமிஷனை வழி நடத்துபவர்.

அவர் வெறும் மந்திரவாதி மட்டும் அல்ல. மிகவும் இரக்க குணம் உள்ளவர். அவருக்குள் மனிதாபிமானம் வற்றாமல் ஊறிக் கொண்டே இருக்கும். அவர் ஏற்றத்தாழ்வுகளை வெறுக்கிறார். ஏற்றத்தாழ்வுகளை ஆழமாக இதயபூர்வமாக வெறுப்பதால்தான், ஏற்றத்தாழ்வுகள் பற்றி யார் பேசினாலும் அவருக்குப் பிடிப்பதில்லை. அதனால்தான், ஊடகங்கள் வறியவர் பணக்காரர் பிளவை ஊதிப் பெரிதாக்குவதாகச் சமீபத்தில் சீறினார்.

டாடா, சுற்றியுள்ள வறுமை முன் அம்பானி 27 மாடி ஆடம்பர அண்டில்லா மாட மாளிகை கட்டியது சரியா எனக் கேட்டதை, ஊடகங்கள் வெளியிட்டதும், அவருக்குப் பிடிக்கவில்லை. ஏனென்றால் அவருக்கு ஏற்றத்தாழ்வுகள் பிடிக்காது.

இந்தியாவில் வறுமை தாண்டவமாடுகிறது என்று யாராவது சொன்னால், இரக்க குணம் கொண்ட, மனிதாபிமானம் நிறைந்த மான்டெக்கால் பொறுத்துக் கொள்ள முடியுமா?

உலகம் முழுவதும் அறியப்பட்ட ஹாரி பாட்டர் கதையில் ஹாரிபாட்டர் ஹாக் வார்ட்ஸ் மந்திரவாதிகள் பள்ளியில் மந்திர வித்தை கற்றானாம். மான்டெக், நிதி மூலதன பிரபுக்களின், சர்வதேச நிதியத்தில் உலக வங்கியில், வறுமை ஒழிப்பு மந்திரத்தைக் கற்றார்.

மான்டெக், வறியவர்களே இல்லை என்று சொல்லிவிட்டால் வறுமை ஒழிந்துவிடும் என்ற மந்திரத்தை, ஏகாதிபத்தியத்திடம் கற்றார். கற்றபடி கசடற நிற்குமாறு அய்யன் வள்ளுவர் சொல்லிச் சென்றதால், தாம் கற்றதற்கேற்ப உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்ய ஏற்பாடு செய்தார்.

அதன்படி, நகரத்தில் வாழும் ஓர் இந்தியர், ஒரு மாதத்தில் வாடகை மற்றும் போக்கு வரத்திற்கு ரூ.31, கல்விக்கு ரூ.18, மருத்து வத்திற்கு ரூ.25, காய்கறிகளுக்கு ரூ.36.50, செலவழிக்க முடிந்தால், நகர்வாழ் இந்தியர் ஒருவர் நாளுக்கு ரூ.20ம் கிராமத்தில் வாழும் இந்தியர் நாளுக்கு ரூ.15ம் செலவழிக்க முடிந்தால், அவர் வறுமை கோட்டிலிருந்து மீண்டு, வளர்ந்த இந்தியாவில் சேர்ந்து விடுவார். அவர் அம்பானிக்குப் பக்கத்தில், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என அட்டகாசமாய் அமர்ந்து கொள்வார். பல கோடி பேரின் வறுமை, காணாமல் போய்விடும். மெய் சிலிர்க்க வைக்கும் மந்திர வித்தை!

மான்டெக் புல்லரிக்க வைக்கும் இந்த மந்திர வித்தையை ஏதோ சந்து பொந்துகளில் செய்து காட்டவில்லை. அலைக்கற்றை ஊழலை, காமன்வெல்த் ஊழலை, கருப்புப் பண விவகாரத்தை விசாரிக்கும் உச்சநீதி மன்றத்தில்தான் செய்து காட்டினார்.

வறியவர் பசித்திருக்க தானியங்கள் வீணாவதா, எனக் கேள்வி கேட்ட உச்சநீதிமன்றம் முன்புதான், இந்த வித்தை காட்டினார். மாட்சிமை பொருந்திய பாலகிருஷ்ணன் தினகரன் போன்ற பூனைகளை தன் தொப்பியிலிருந்து வெளியே எடுத்து காட்டிய உச்சநீதி மன்றம், மான்டெக் மந்திரம் பார்த்து திடுக்கிடவில்லை. துடிதுடித்தும் போகவில்லை.

மந்திரவாதிக்குப் பரிசளிக்கச் சிலர் சென்றார்கள். அருணா ராய், ஜீன் ட்ரீஸ், ஹர்ஷ் மந்தெர், மற்றும் சில ஆர்ப்பாட்டக்காரர்கள், கண்டு கொண்டோம் கண்டு கொண்டோம், ஒரு நாளில் ரூ.20 தாண்டி செலவழித்தால் வறுமை ஒழிந்து போகும் என உணர்ந்தோம், சிந்தை மகிழ்ந்தோம், மனம் குளிர்ந்தோம் என திட்டக் கமிஷனுக்கு ஒரு பொட்டலம் பரிசளித்தார்கள். அந்தப் பொட்டலத்தில் ஒரு சிறு கரண்டி, 25 கிராம் பருப்பு, கொஞ்சம் துணி தோய்க்கும் சோப்புத்தூள், ஒரு கிழிந்த சட்டை, ஓர் இருபது ரூபாய் நோட்டு இருந்தது. அவர்கள் மாண்டெக்குக்கு அளித்த பொட்டலத்தில், சீப்பு, கொஞ்சம் பருப்பு, கொஞ்சம் அரிசி, ஒரு பேண்ட் எய்ட் இருந்ததாம். மான்டெக் தன்னைவிடப் பெரிய மந்திரவாதி, நிதி அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர் திரு கவுசிக் பாசு என்றும் அவரே பரிசுக்குரியவர் என்றும் பரிந்துரைத்தார்.

மான்டெக் சரியாகத்தான் சொன்னார். கவுசிக் பாசு, இந்தியாவின் பிரச்சனைகளுக்குச் சொன்ன மூன்று மந்திர தீர்வுகள், நமக்கு மான்டெக் சொன்னது சரி என உணர்த்தும்.

கவுசிக் பாசு சொல்லும் தீர்வுகள்

1. பொது விநியோகம், ரேஷன் கடை, கிட்டங்கிகள், இந்திய உணவுக் கழகம், விவசாயிகளிடம் கொள்முதல், எல்லாமே வீண் வேலைகள். அரிசி கோதுமைக்குப் பதில் பணம் தந்தால், முடிந்தது கதை. (ஆம், கதை முடிந்து தான் போகும்.) சந்தை விலையில் தரப்படும் பணம் காணாது. அதிகார உறவுகள் உள்ள குடும்பத்தில் குடிகார/ஊதாரி ஆண் பணத்தைச் செலவழிக்க, குடும்பம் திண்டாடும்.

2. பயிர் செய்யும் விவசாயிக்கும் நுகர் வோர்க்கும் பயன் கிடைக்க, சில்லறை வர்த்தகத்தில், வால்மார்ட் போன்ற பகாசுர பன்னாட்டு கம்பனிகளை, ரிலையன்ஸ் போன்ற உள்நாட்டு பெருமுதலாளிகளை நுழைக்க வேண்டும். சந் தையின் போட்டியில், விவசாயியும், நுகர்வோரும் பயன் பெறுவார்கள். (விவசாயி, நுகர் வோர், சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பல லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள். கவுசிக் பாசுவுக்கு, பாஜகவின் அருண் ஜேட்லி சளைத்தவரல்ல. அவர் அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம், அந்நிய நிறுவனங்கள் போட்டியால், எங்கள் கட்சியின் சமூக அடித்தளமாக உள்ள குடும்பக் கடைகளுக்கு எந்தப் போட்டியும் இல்லை என்றார்).

3. (மத்திய மாநில அரசுகள், முதலாளித் துவச் சுரண்டலைக் காக்கும் ஒடுக்குமுறைக் கருவிகள் என்பதும், மூலதனம் இந்திய வளங்களைச் சூறையாட எந்தத் தடையும் கூடாது என்பதற்காகவே பசுமை வேட்டை என்பதும் நமக்குத் தெரியும்). கவுசிக் பாசு ஒரு படி மேலே போய்விட்டார். பெருமுதலாளித் துவ கார்ப்பரேட் நிறுவனங்கள், தம்மைக் காத் துக்கொள்ள, தனியார் படைகள் அமைத்துக் கொள்ள வாய்ப்பு தர வேண்டுமாம். எல்லை பாதுகாப்புப் படை, மத்திய சேம பாதுகாப்புப் படை போல, போஸ்கோ பாதுகாப்புப் படை, அம்பானி பாதுகாப்புப் படை, ஹூண்டாய் பாதுகாப்பு படை. அடடா, அற்புதம்!

மான்டெக், கவுசிக்பாசு மந்திரவாதிகள், தொலைக்காட்சிகளில் வரும் யதார்த்தக் காட்சிகளில் (ரியாலிட்டி ஷோ) ராகுலிடம் ரூ.20, பிரியங்காவிடம் ரூ.15 ஒரு நாளுக்கு என 10 நாட்கள் கொடுத்து, இந்திய நகரங்களில், கிராமங்களில் வாழ்ந்து காட்டச் சொல்ல வேண்டும். ராகுல், பிரியங்காவுக்கு பதில், மான்டெக்கோ, மன்மோகனோ செய்து காட்டினாலே நமக்குப் போதும். கோடானுகோடி இந்தியர்களுக்கு, வறிய இந்தியர்களுக்கு அந்த மந்திர வித்தை மிகவும் உபயோகமாக இருக்கும்.ஒரு நிலப்பிரபுவின் அழித்தொழிப்பு பற்றி இன்குலாப் எழுதிய ‘திருவிழா’ கவிதையில் இருந்து

தண்ணீரில் இவன் தனது மந்திரம் சபித்தால்

அண்டாதாம் பேயும்... அண்டாதாம் நோயும்.

என்ன மடமை?

பேயும் நோயும் வேறே யார்?

ஊர் சனங்க ரத்தமெல்லாம் உறிஞ்சற பேய் இவன்தான்.

பண்ணைக் சனங்களை பாதிக்கும் நோயும் இவன்தான்.

மந்திரம் சபித்தவன் மாயப் பிசாசுருவாய்

வந்தாலும் வருவான் என்றா மயங்குகிறீர்?

மந்திரங்கள் ஏமாற்று.

மந்திரங்கள் இவனோட மண்டை சாய்ஞ்சப்ப

உதவிக்கு வரவில்லை.

மான்டெக், கவுசிக் பாசு, மன்மோகன் எல்லோருமே மூலதன விசுவாசிகள். மூலதனத்திற்கு ஆதரவான, மக்களுக்கு விரோதமான, பொருளாதாரக் கொள்கைகளும், முதலாளித்துவ சமூகமும் ஒழியும்போதுதான், வறுமை ஒழியும். இவற்றைக் கட்டிக்காக்கும் முதலாளித்துவ அரசியலை, திறனோடும் உற்சாகத்தோடும் எதிர்கொள்வதுதான் நமக்குத் திருவிழா.

மேற்கு வங்கத்தில் ‘இடது முன்னணியின்’ வீழ்ச்சியும்


இந்திய இடதுசாரிகள் முன்செல்ல வேண்டிய பாதையும்

கடைசியில், தவிர்க்க முடியாதது நடந்து விட்டது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் மிகவும் நீண்டகால அரசாங்கமான மேற்கு வங்கத்தின் இடது முன்னணி அரசாங்கம், சமீபத்திய சட்டமன்ற தேர்தல்களில் பரிதாபமாக தோற்கடிக்கப்பட்டது. இந்தத் தோல்வி திடீரென வந்ததல்ல; மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சி ஆபத்தான விதத்தில் தனது அடித்தளத்தை இழந்து வருகின்றது என்று 2008 உள்ளாட்சித் தேர்தல்கள், 2009 நாடாளுமன்றத் தேர்தல்கள், 2010 முனிசிபாலிடி தேர்தல்கள் மற்றும் பல இடைத்தேர்தல்கள் தெளிவாக வெளிப்படுத்தின. மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சரிந்துவரும் இயக்கப்போக்கின் முடிவாக 2011 சட்டமன்றத் தேர்தல்கள் இருந்தன.

மேற்குவங்கத்திலும் பிற இடங்களிலும், பிரதான நீரோட்ட ஊடகங்களின் பெரும் பிரிவினர், மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் அதன் கூட்டாளிகளின் தோல்வியை, இந்தியாவில் இடதுசாரிகள் முடிவுக்கு வருவதைக் காட்டும் திருப்புமுனை என்று சொல்ல தலைப்பட்டார்கள். நவதாராளவாதக் கொள்கைகளுக்கு, இந்திய - அமெரிக்க போர்த்தந்திர உறவுக்கு, இடதுசாரிகளின் வறட்டுவாத எதிர்ப்புதான் இந்தத் தோல்விக்குக் காரணம் என்று சொல்ல விரைந்தனர். இடதுசாரிகளுக்கு பொருத்தப்பாடு இருக்க வேண்டுமானால், அது தனது வறட்டுவாதக் கொள்கைகளை கைவிட்டு, ஆளுகிற மேட்டுக்குடியினர் வகுத்துள்ள, கொள்கைச் சூழலை, அரசியல் பொருளாதார திசைவழியை சவாலுக்கு உட்படுத்தாமல், மேலான ஆட்சியை மட்டும் தருவதாக இடதுசாரி அரசியலை சுருக்கிவிட வேண்டும் என்று அவர்கள் அறிவுரை தருகின்றனர்.

இந்த பகுப்பாய்வில் உள்ள பிரச்சனை என்னவென்றால் இதற்கும் மேற்கு வங்கத்தில் நடந்ததற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உண்மையில் மேற்குவங்கத்தின் இடது முன்னணி அரசாங்கம், ஆளும் வர்க்க அறிவுத்திறன் அறிவுறுத்திய வழியைத்தான் பின்பற்றத் துவங்கியது. தன் ஆட்சிக் காலத்தில் சந்திரபாபு நாயுடு போல், இன்றைய கட்டத்தில் நரேந்திர மோடி, நவீன் பட்நாயக் மற்றும் நிதிஷ் போல், புத்ததேவ் பட்டாச்சார்யாவும் சில வருடங்கள் முன்பு, பெருந்தொழில் குழும ஊடகங்களின் செல்லப் பிள்ளையாக இருந்தார். சில ஊடக நிறுவனங்கள் பேரார்வத்துடன், அவரை இந்தியாவில் இடதுசாரி அரசியலின் புதிய வகை என்று உயர்த்திக் காட்டின. ‘புத்தா வகை’ (பிராண்ட் புத்தா) என்று அதை அவர்கள் செல் லமாக அழைத்தனர். உலகமய, தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை எதிர்த்ததால் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தோல் வியை சந்திக்கவில்லை; மாறாக, கிராமப்புற வறிய மக்களின், உழைக்கும் விவசாயிகளின் உரிமைகள் மற்றும் நலன்களை காலில் போட்டு மிதித்து அந்தக் கொள்கைகளை அமல்படுத்தத் துணிந்ததற்கான விலையைத்தான் கொடுத்துள்ளது.

மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி வெளியேற்றப்பட்ட பின்னணியை, சூழலைப் பார்ப்போம். பகைமை கொண்ட ஒரு மத்திய அரசால் அதன் அரசாங்கம் கவிழ்க்கப்படவில்லை. டாடாக்களோ அல்லது பிற பெருந்தொழில் குழும நிறுவனங்களோ மேற்கு வங்கத்தில் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்பதால், அல்லது அவை போர்க்குணமிக்க தொழிற்சங்கவாதத்தால் விரட்டியடிக்கப்பட்டன என்பதால், அந்த நிறுவனங்கள் திட்ட மிட்டு ஏற்படுத்திய தோல்வியும் அல்ல. மார்க்சிஸ்ட் கட்சி பெருமையாகப் பேசுகிற நிலச்சீர்திருத்த சாதனைகளுக்கு எதிரான நிலப்பிரபுத்துவ தாக்குதலுக்கு அதன் முக்கியமான மாநிலம் பலியாகிவிடவில்லை. உலகமய படாடோப நுகர்வுக் கலாச்சாரக் கனவுகள் நிறைவு செய்யப்படாததால் சீற்றமடைந்த மேல்நோக்கி நகரும் நடுத்தர வர்க்கத்தின் எதிர்ப்பாலும் இந்தத் தோல்வி ஏற்படவில்லை. மாறாக, நிலம், வாழ்வுரிமை, ஜனநாயகம் என்ற அந்தப் பழைய தளத்திலான விவசாயிகள் எழுச்சிதான், மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த மிகவும் கண்கவர் தேர்தல் தோல்வியை உருவாக்கியது.

மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்குவங்க தோல்வி பற்றிய ஊடகங்களின் பகுப்பாய்வு தவறானது என்றால், அதற்காக சொல்லப்படும் சிகிச்சை கயமைத்தனமான நோக்கம் கொண்டது என்றால், மார்க்சிஸ்ட் கட்சியின் பதில்வினை அதன் இயல்புக்கேற்றாற் போல் நழுவிச் செல்வதாகவும் உள்ளீடற்றதாகவும் உள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கூரில் விவசாயிகள் எதிர்ப்பு எழுந்தது முதல், அவர்கள் தொழில் மயத்தை எதிர்ப்பவர்கள் என்று மார்க்சிஸ்ட் கட்சி புறந்தள்ளியது; சிங்கூரின் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தந்த எவரையும் நரோத்னிக் அல்லது லுட்டைட் என்று குற்றம் சுமத்தியது. நந்திகிராம் நிகழ்ந்தபோது, தீவிர வலதுசாரி மற்றும் அதிதீவிர இடதுசாரிகள் சேர்ந்து செய்த இடதுசாரி எதிர்ப்பு சதி என்று மார்க்சிஸ்ட் கட்சி சொன்னது. காவல்துறை ஒடுக்குமுறைக்கு எதிராக லால்கர் எழுந்த போது, மார்க்சிஸ்ட் கட்சி மத்திய அரசாங்கத்துடன் சேர்ந்து ராணுவத் தாக்குதல் நடத்தியது. நாடாளுமன்றத் தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகுதான் ஏதோ தவறு நிகழ்ந்துள்ளது என்பதை ஒப்புக்கொண்டு, திருத்திக் கொள்வதாக உறுதி தந்தது; திரும்ப மேலே எழவும் உறுதி பூண்டது.

ஆனால் முக்கியமான அரசியல் தவறுகள் பற்றிய எந்த தெளிவான ஒப்புதலும் இல்லை; சிங்கூரில் கட்டாயமாக நிலப்பறி செய்ததற்கோ, நந்திகிராமில் படுகொலைகள் செய்த தற்கோ உண்மையாக மன்னிப்பு ஏதும் கோரவில்லை; பாதையை திருத்திக் கொள்ள முயற்சிகள் எடுக்கவில்லை. அதனால்தான் நேதாயில் மீண்டும் நந்திகிராம் நிகழ்ந்தது; ஆனால் தேர்தல் நெடுக, நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க மனோபாவத்தை பிரதிபலிக்கும் விதம், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் இறுமாப்புடன் பெருமை பேசுவதைத் தொடர்ந்தார்கள்; பல தலைவர்கள் ஆபாசமாக பாலியல்தன்மை கொண்ட உரைகள் நிகழ்த்தினார்கள். நாடாளுமன்ற தேர்தல் தோல்வி 11 லட்சம் வாக்குகள் குறைவு என்று வெறும் புள்ளிவிவர பற்றாக்குறையாக சுருங்கிப் போனது; ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கொஞ்சம் கூடுதலான வாக்குகளை உறுதி செய்வதன் மூலம் இந்தப் பற்றாக்குறையை எளிதாக நிவர்த்தி செய்துவிடலாம் என பேசப்பட்டது!

இப்போதும் கூட ‘விலகிப் போனவர்களை’ திரும்பக் கொண்டுவருவது, ‘அந்நியப் படுத்தப்பட்ட’ மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவது என்றுதான் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் பேசுகிறார்கள். உண்மையான இடதுசாரி செயல்வீரர்களும் இடதுசாரிகள் நலன் விரும்புவோரும் தீவிரமாக உணர்கிற தடம்புரண்ட உணர்வு பற்றியோ, மார்க்சிஸ்ட் கட்சி இப்போது எதிர்கொள்வது ‘அதிருப்தியாளர்களை’, ‘விலகிப் போனவர்களை’ சமாளிக்கும் பிரச்சனை மட்டும் அல்ல. மாறாக, பரந்த உழைக்கும் மக்களிடம் இருந்து, முற்போக்கு ஜனநாயக அறிவாளிப் பிரிவினரின் பெரும்பான்மையினரிடம் இருந்து, தானே அதிகரித்த அளவில் தனிமைப்பட்டுப் போவதும்தான் என்பது பற்றி, எந்த அங்கீகாரமும் இல்லை.

தங்களை துணிச்சலானவர்களாகக் காட்டிக் கொள்ளும் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் இப்போது தொடர்ச்சியாக ஏழு முறை வெற்றி பெற்ற பிறகு ஒரு தேர்தலில் ஏற்பட்ட தோல்வி என்று முன்வைக்கிறார்கள். மேற்குவங்க மக்கள் மாற்றத்தை மாற்றத்துக்காகவே விரும்பியிருக்கிறார்கள் என்றும் காலத்தால் ஏற்பட்ட அயற்சியே தவிர வேறொன்றும் இல்லை என்றும் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் நம்மை நம்பச் சொல்கிறார்கள். தங்கள் ஒட்டுமொத்த அரசியல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியே தேர்தல் என்றும் எனவே ஒரு தேர்தலில் தோல்வி என்பதற்கு எந்த அரசியல் தாக்கமும் இல்லை என்றும் சொல்கின்றனர். ஆனால் வங்கத்தில் அவர்கள் வாங்கியிருக்கிற அடியை என்னதான் குறைத்துக் காட்டப் பார்த்தாலும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு மேற்குவங்கம் ஒரு சராசரி மாநிலம் இல்லை என்ற உண்மை இருக்கத்தான் செய்கிறது. முப்பத்தைந்து ஆண்டுகளாக, மேற்குவங்கம் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆகப்பெரிய கோட்டையாக இருந்தது; இப்போது மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சந்தித்திருக்கிற தோல்வி, கேரளாவில் மாறிமாறி ஒவ்வொரு முறையும் சந்திக்கிற தோல்வி போன்ற ஒரு சாதாரண தோல்வி அல்ல; அது அதனுடைய ‘தகர்க்க முடியாத கோட்டையின்’ ஒரு மெய்யான வீழ்ச்சியே.

மேற்குவங்கத்தில் நிலச்சீர்திருத்தங்கள் செய்யப்பட்டது மற்றும் உள்ளாட்சி அதிகா ரத்தை நிறுவியது ஆகியவற்றில் நிகழ்த்திய சாதனை பற்றி மார்க்சிஸ்ட் கட்சி பிரச்சாரகர்கள் மீண்டும் மீண்டும் நமக்கு நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது இனியும் நம்பத்தகுந்ததாக இல்லை; ஏனென்றால், பின்னோக்கிய நிலச்சீர்திருத்தம், விவசாயிகள் மற்றும் சாகுபடியாளர்கள் வெளியேற்றப்படுவது, தகுதியானவர்களுக்கு, தேவையானவர் களுக்கு வழக்கமான உள்ளாட்சி சலுகைகள் பெரிய அளவில் மறுக்கப்படுவது ஆகியவற்றுக் காகத்தான் கிராமப்புற வறியவர்கள் மார்க்சிஸ்ட் கட்சி மீது குற்றம் சுமத்தியுள்ளனர். இது, எல்லா அரங்கங்களிலும் அமெரிக்க ஆதிக்கம் அதிகரிப்பதை, கருப்புச் சட்டங்கள் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் மூலம், ஜனநாயகத்தின் மீது கட்டமைக்கப்பட்ட தாக்குதல் நடப்பதை மக்கள் உணரும் ஒரு தருணத்தில், சுதந்திரத்தை, நாடாளுமன்ற ஜனநாயகத்தை கொண்டு வருவது என்று காங்கிரஸ் பேசுவதைப் போல் உள்ளது!

விந்தைமுரணாக, மேற்குவங்க தேர்தல்கள் சந்தர்ப்பவாதம், ஓடுகாலித்தனம் போன்ற வெட்கங்கெட்ட நடவடிக்கைகளுக்காக மார்க்சிஸ்ட் கட்சிக்கு கடுமையான தோல்வியை தந்தது மட்டுமின்றி, மாவோயிஸ்டுகளின் அப்பட்டமான அரசியல் திவாலாத்தனத்தையும் அம்பலப்படுத்தியுள்ளன. நந்திகிராமில் விவசாயிகள் எழுச்சி, லால்கரில் பழங்குடி மக்கள் போராட்டம் ஆகியவை நடந்தபோது, ஜங்கல்மஹால் என்று அழைக்கப்படுகிற மேற்குவங்கத்தின் காடுகள் நிறைந்த மேற்கு பகுதியில் மாவோயிஸ்டுகள் ஒரு செழுமையான அரசியல் வாய்ப்பைப் பார்த்தார்கள். மேற்குவங்கத்தில் அடித்த அலையில் மிதந்து வந்த அவர்கள், அடுத்த முதல்வராக மமதா பானர்ஜிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தார்கள்; மேற்குவங்க ஊடகங்களில் பரபரப்பாக, அடிக்கடி அனுதாபம்மிக்க விதத்தில் காட்டப்பட்டார்கள். ஆனால் அவர்கள் தங்கள் பாணி ஆயுத நடவடிக்கைகளில் மட்டுமே ஆர்வமாக இருந்தார்கள்; மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களை, செயல்வீரர்களை, பாகுபாடு ஏதுமின்றி குறி வைத்தார்கள்; கடுமையான அரசு ஒடுக்குமுறையின் முன் லால்கரின் சக்தி வாய்ந்த, போர்க்குணமிக்க வெகுமக்கள் எழுச்சியை தடம் புரளச் செய்தார்கள். லால்கர் இயக்கத்தின், எஞ்சியிருந்த அதன் முகமான சத்தரதார் மஹாதோ, ஜார் கிரம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்த போது, மாவோயிஸ்டுகள் அவரை கைவிட்டு விட்டார்கள்; இதை மார்க்சிஸ்ட் கட்சிக்கு உதவக் கூடிய, திரிணாமூல் வாய்ப்புக்களுக்கு சேதம் உருவாக்கக் கூடிய வழிவிலகல் என்று அவர்களில் பலர் காட்டப் பார்த்தார்கள். இறுதியில் திரிணாமூல் வேட்பாளர் வெற்றி பெற்றார்; சத்தரதார் மஹாதோ 20000 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை அடைந்தார்.

இப்போது மமதா பானர்ஜி தலைமையிலான ஆட்சி வந்துள்ளது. திரிணாமூல் - காங்கிரஸ் கூட்டணியின் அமோக வெற்றியில் பிரதிபலிப்பதுபோல், மேற்குவங்கத் தெருக்களில் பிரம்மாண்டமான வெகுமக்கள் மகிழ்ச்சிக் களிப்பை வெளிப்பாடுகளை தெளிவாகக் காண முடிகிறது. மாற்றம், மாறிச் செல்லும் கட்டம் என்ற இந்த தருணத்தில் இந்தத் துவக்க மகிழ்ச்சிக் களிப்பை புரிந்துகொள்ள முடிகிறது; சந்தேகத்துக்கிடமின்றி தன்னெ ழுச்சிக்கான கூறு ஒன்றும் இதில் உள்ளது; ஆயினும் இந்த மகிழ்ச்சிக் களிப்பை, அனைத்து இடதுசாரி அரசியல் மற்றும் கருத்தியல் நீரோட் டத்தின் மீதும் அனைத்துவிதமான தாக்குதல்களும் தொடுக்க ஓர் உரிமமாக பயன்படுத்தி, வலதுசாரி சக்திகள் மிகவும் உணர்வுபூர்வமான, ஒருமித்த, அனைத்தும் தழுவிய பிரச்சாரம் துவங்குவதை நாம் தெளிவாகக் காண முடியும். ஒரு மூர்க்கத்தனமான வலதுசாரி திருப்பம், மேற்குவங்க தீர்ப்பின் மேலோங்கிய உணர்வுடன் ஒத்துப்போகாதது என்றாலும், புரட்சிகர கம்யூனிஸ்டுகள், துவங்கிவிட்ட வலதுசாரி நிகழ்ச்சிநிரலுக்கு சவால் விடுத்து, அதை எதிர்கொள்ள சமீபத்தில் நடந்த எதிர்ப்பு இயக்கங்களின் வெகுமக்கள் ஜனநாயக மய்யத்தை/கருவை துணிச்சலுடன் கைகொண்டு வளர்த்தெடுக்க வேண்டும்.

மேற்குவங்கத்தில் ஓர் எதிர்க்கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சி எப்படி தன்னை மறுகண்டுபிடிப்பு செய்து கொள்ளப்போகிறது எனப் பார்க்க வேண்டியிருக்கிறது. 34 ஆண் டுகள் அரசாங்கத்தை மய்யங் கொண்ட இருத்தலை பெற்றிருந்த பிறகு, ஓர் எதிர்க்கட்சியாக, அதிலும், வர்க்கப் போராட்டம், வெகுமக்கள் போராட்டம் ஆகியவற்றை முன்னிறுத்துவதாகச் சொல்லும் கட்சியாக, மக்களிடம் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதன் விளைவுகள் என்ன என்பதை பார்க்க சுவாரசியமாகவே இருக்கும். புரட்சிகர கம்யூனிஸ்டுகளுக்கும் உண்மையான இடதுசாரிகளின் பிற பிரிவினருக்கும், தற்போதைய கட்டம், மேற்குவங்கத்துக்குள்ளும் தேசிய அரசியல் தளத்திலும் ஏராளமான வாய்ப்புக்களையும் சவால்களையும் கொண்டுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் அரசாங்கத்தை மய்யமாகக் கொண்ட ‘இடதுசாரி ஒற்றுமை’, இதுவரை காணாத தாக்குதலை சந்தித்துள்ளது. போராடும் இடதுசாரிகள் மீண்டும் ஒன்றிணைந்து, மக்கள் போராட்ட நிகழ்ச்சிநிரலில் முன்னேறிச் செல்ல நேரம் வந்துவிட்டது.

2007 டிசம்பரில் கொல்கத்தாவில் நடந்த இககமாலெயின் எட்டாவது அகில இந்திய மாநாடு, ‘மக்களின் எதிர்ப்புப் போராட்டங்கள், இடதுசாரி புத்தெழுச்சி’ என அழைப்பு விடுத்தது. நவதாராளவாதத் தாக்குதல் நடந்த கடந்த 20 ஆண்டு களில் சக்திவாய்ந்த போராட்டங்களுக்கு நாட்டில் பஞ்சமில்லை. மக்களுடன் இன்னும் வலுவான பிணைப்புகள் ஏற்படுத்திக் கொண்டு, மக்கள் போராட்டங்களை அவற்றின் இறுதி வரை உயிரார்ந்த விதத்தில் முன்னெடுத்துச் சென்று வழிநடத்து வதன் மூலம் மட்டுமே இடதுசாரிகள் முன்செல்ல முடியும். அரசாங்கத்தை மய்யமாகக் கொண்ட, மார்க்சிஸ்ட் கட்சியை மய்யமாகக் கொண்ட இடதுசாரி ஒரு கடுமையான தாக்குதலை சந்தித்துள்ளதால், ஒரு விடாப்பிடியான ஜனநாயக மற்றும் போராடும் சக்தியாக இடதுசாரிகளின் பாத்திரம் ஆகக்கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது; இந்தியாவில் இடதுசாரி முகாமை முன்தள்ளும் சக்தியாக புரட்சிகர இடதுசாரிகள் முன்வர வேண்டும்.

(லிபரேசன், ஜுன் 2011 இதழில் இருந்து)

தமிழகத் தேர்தல் முடிவுகள்:
ஒரு தண்டனை, ஓர் எச்சரிக்கை

                                                                                                   - எஸ்.குமாரசாமி

முதலில் சில விவரங்கள்

2006 தேர்தல் முடிவுகள்

பதிவான மொத்த வாக்குகள் 3,30,05,492

                                   திமுக கூட்டணி             அஇஅதிமுக கூட்டணி


திமுக அணி வாக்கு சதவீதம் 44.57. அஇஅதிமுக அணி வாக்கு சதவீதம் 39.85.

2011 தேர்தல் முடிவுகள்

பதிவான மொத்த வாக்குகள் 3,67,53,114

அஇஅதிமுக கூட்டணி


*அஇஅதிமுக சின்னத்தில், இந்தியக் குடியரசுக் கட்சி போட்டியிட்ட ஓரிடத்திலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி போட்டியிட்ட இரண்டு இடங்களிலும், கொங்கு இளைஞர் பேரவை போட்டியிட்ட ஓரிடத்திலும் வெற்றி பெற்றன. டாக்டர் சேதுராமன் தலைமை யிலான அமைப்பு போட்டியிட்ட ஓரிடத்தில் தோற்றது.

திமுக கூட்டணி*இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இரண்டு இடங்களில் ஸ்ரீதர் வாண்டையார் அமைப்பு ஓரிடத்தில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு தோற்றன.

விவரங்கள் உணர்த்தும் செய்திகள்

2006 தேர்தலில் திமுக கூட்டணி அஇஅதிமுக கூட்டணியை விட 4.72% கூடுதலாகப் பெற்றது. அந்தக் கூட்டணியைவிட 15,57,858 வாக்குகள் கூடுதலாகப் பெற்றது.

2011 தேர்தலில் அஇஅதிமுக கூட்டணி திமுக கூட்டணியைவிடக் கூடுதலாக 12.36 சதமும், 45,55,000 வாக்குகளும் பெற்றுள்ளது.

திமுக கூட்டணியின் சாதிய சமன்பாட்டுக் கணக்கு, குறிப்பாக, தலித்கள் வன்னியர்கள், கொங்கு வேளாளர்கள் தொடர்பான கணக்கு 2011ல் எடுபடவில்லை.

போட்டியிட்ட தொகுதிகளில் வாக்கு சதவீதம் எனப் பார்க்கும்போது, அஇஅதிமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியே குறைவாக 42.36% பெற்றது. அதைவிடக் குறைவாகத்தான் திமுக கூட்டணியில் திமுக உள்ளிட்ட கட்சிகள் பெற்றன.

புதிய தமிழகம் கட்சிக்கு, தலித் அல்லாத வாக்குகள் விழாது எனப் பேசப்பட்டது. ஆனால் அக்கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் 54.30 வாக்குகள் பெற்றுள்ளது. சாதி தாண்டி, அஇஅதிமுக கூட்டணி அரசியல்ரீதியாக வென்றுள்ளது.

சென்ற தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிகள் தாண்டி 16.58% வாக்குகள் விழுந்தன. இரு துருவ ஆதிக்கத்தில் ஒரு தளர்வு இருந்தது. (அதில் 8.32 வாக்குகளைப் பெற்று விஜய்காந்த் அக்கட்சியின் ஒரே சட்டமன்ற உறுப்பினரானார்).

2011 தேர்தலில் இரு துருவ ஆதிக்கம் பலப்பட்டது. திமுக, அதிமுக கூட்டணிகள் 91.24% வாக்குகளைப் பெற்றன. மட்டுமின்றி, மிகவும் கடுமையான ஜனரஞ்சகவாத வாக்குறுதிகள் போட்டியும் இருந்தது.

கருணாநிதி தோற்கடிக்கப்பட்டார். அதனால் ஜெயலலிதா வென்றார்.

தமிழகத்தில் கடந்த சில தேர்தல்களில், கருணாநிதியும் ஜெயலலிதாவும் முதல்வர்களாகத் தோற்கிறார்கள். முதல்வர்களாக வெற்றி பெறுகிறார்கள். ஜெயலலிதா மூன்றாவது முறையாக வெற்றி பெறுகிறார். அதேசமயம் இரண்டு முறை தோற்கடிக்கப்பட்டுள்ளார். பக்கத்து மாநிலமான கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி வெறும் 1.7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. மேற்கு வங்கத்தில், மமதா, சிங்கூர் நந்திகிராமுக்குப் பிறகு, நாடாளுமன்றத் தேர்தலில், உள்ளாட்சி நகராட்சித் தேர்தல்களில் அடுத்தடுத்து வெற்றி பெற்று வந்துள்ளார். இடது முன்னணி சட்டமன்றத் தேர்தலில் தோற்கும் என்பது மார்க்சிஸ்ட் கட்சி தவிர, மற்ற அனைவர்க்கும் நன்கு தெரிந்த செய்தி. ஆனால் தமிழகத்தில், சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் 2009ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், திமுக கூட்டணி 39ல் 28 இடங்களில் வென்றது. எல்லா இடைத்தேர்தல்களிலும் வென்றது. பென்னாகரம் இடைத்தேர்தலில், பாமக கூட்டணியை விட்டு வெளியேறி தனித்து நின்றபோதும், திமுகவே வென்றது. அஇஅதிமுக மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவிற்குத் தாவினர். ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலம் மீது பெரும் கேள்விக்குறி எழுந்தது. ஆனால், 294 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட மேற்குவங்கத்தில், மமதா கூட்டணி இடது முன்னணியை விட 35 லட்சம் வாக்குகளே கூடுதலாகப் பெற்றபோது, ஜெயலலிதா கூட்டணியோ, திமுக காங்கிரஸ் கூட்டணியைக் காட்டிலும் 45 லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. ஜெயலலிதா இவ்வளவு பெரிய வெற்றி பெறுவார் என்றோ, திமுக கூட்டணி இவ்வளவு மோசமாகத் தோற்கும் என்றோ, அரசியல் வட்டாரங்களில் எவரும் எதிர்பார்க்கவில்லை.

வெறும் தோல்வியல்ல, பெரும் தண்டனையே

கருணாநிதி தனது நலத் திட்டங்கள் கரை சேர்க்கும் என நம்பினார். கூடுதல் வலுசேர்க்க, மேலும் பல வாக்குறுதிகளைச் சொன்னார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நல நடவடிக்கை ஜனரஞ்சகவாதம் தொடர்பான போட்டி இவ்வளவு உக்கிரமாக இருந்ததில்லை. கருணாநிதி காங்கிரஸ் கூட்டணி ஆதிக்கத்தின் முடிவின் துவக்கம், அலைக்கற்றை ஊழலில் வெளிப்பட ஆரம்பித்தது. தமிழ்நாட்டு மக்களின் வருமானம் உயரவில்லை. ஆனால் கட்டுக்கடங்காமல் விலை உயர்ந்தது. பெருந்தொழில் குழுமங்கள் தேச வளங்களைச் சூறையாடிக் கொழுக்க, சமூக ஏற்றத்தாழ்வுகள் பெருக, விலைகள் உயர, விவசாயம் நலிந்துபோக, திமுக காங்கிரஸ் அரசுகளே காரணம் என, மக்கள் உணர்ந்தனர். உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்கு வாரிக் கொடுப்பவர்கள், தம்மை ‘இலவசம்’ என சிறுமைபடுத்தி மோசடி செய்வதாக, மக்கள் உணர்ந்தனர். மேடும் பள்ளமும் அப்பட்டமாகத் தெரிந்தன. கருணாநிதி, அவர் குடும்பத்தினர், அவர் கட்சி தளபதிகளின் குடும்பங்கள், எல்லா அரங்குகளிலும் நுழைவதையும், சூறையாடுவதையும் மக்களால் காண முடிந்தது. மணல் கொள்ளை, அரிசி கடத்தல், நிலப்பறி, ரியல் எஸ்டேட், மருத்துவமனை, கல்வி சாம்ராஜ்யங்களை, கழகக் குடும்பங்கள் நிறுவி விரிவுபடுத்தும் போது, தாமோ இருப்பதை எல்லாம் இழப்பதை மக்கள் உணர்ந்தனர். காவல்துறை திமுகவின் ஏவல்துறையாக மாறி மக்கள் மீது பாய்ந்தது. கருணாநிதி காங்கிரஸ் இரகசிய உறவுடன், சிறீலங்காவில் இனப்படு கொலையும், போராளிகள் அழித்தொழிப்பும் நடந்தது. இவை எல்லாவற்றிலும் உருண்டு திரண்ட மக்கள் சீற்றம், மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் எதிராக வாக்குகளாகக் குவிந்தன. சட்டமன்றத்தில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழக்கும் அளவிற்குத் தண்டனை பெற்றது. முதலாளிகளின் பணக்காரர்களின் மேட்டுகுடியினரின் விருப்பங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்பப் பின்பற்றப்பட்ட முதலாளித்துவ வளர்ச்சிப் பாதைக்கு, நவதாராளவாத நிகழ்ச்சிநிரலுக்கு, தமிழக மக்கள் தண்டனை கொடுத்துள்ளனர். மக்களை தமது பொருளாதார கொள்கைகள் என்ற சாட்டையால் அடித்த திமுக அரசு, கதாநாயகன், கதாநாயகி, ஜனரஞ்சகவாத நலப்பயன்கள் என ஒத்தடம் தருவதாகப் பேசியதை மக்கள், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே கருதினார்கள்.

மக்கள், ஜெயலலிதாதான் வேண்டும் என வாக்களித்துள்ளனரா?

கருணாநிதி ஆட்சி, துணை நிற்கும் காங்கிரஸ், முதலில் தோற்கடிக்கப்பட வேண்டும், அடுத்து என்ன வருகிறது என அடுத்து பார்த்துக் கொள்வோம் என்ற மனநிலையில் தமிழக மக்கள் இருந்தனர். அதற்கேற்பவே அரசியல் காய்கள் நகர்ந்தன. திமுக, அஇதிமுக என்ற இரு துருவங்கள் கிட்டத்தட்ட அரசியல் களத்தில் இருந்த எல்லா சக்திகளையும் தம் பின்னால் இழுத்துக்கொண்டனர். விஜய்காந்த் அம்மையாருடன் சேர, தேர்தல்ரீதியாக எடுபடக்கூடிய எந்த மாற்றணியும் இல்லாத நிலையில், திமுக அரசைத் தோற்கடிப்பதில் உதவாதினி ஒரு தாமதம் என்ற மக்கள் சீற்றமே, ஜெயலலிதாவை வெற்றி பெற வைத்துள்ளது. கருணாநிதிக்கு தண்டனை வழங்கிய மக்கள், இன்று கருணாநிதிக்கு நடந்தது, நாளை அம்மையாருக்கும் நடக்கும் என ஜெயலலிதாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அம்மையார் இருமுறை தமிழக மக்கள் தமக்குப் பாடம் புகட்டியதை வெற்றி மிதப்பில் மறந்தால், மக்கள் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்.

2011 தேர்தல்கள் உணர்த்தும் செய்திகள் என்ன?

கேரளத்தில் நிச்சயமாய் பெரிய வெற்றி பெறும் என நினைத்த காங்கிரஸ் ஏன் தட்டுத் தடுமாறி வென்றது? கேரளாவிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் அதைவிட மோசமாக உள்ளாட்சித் தேர்தல்களிலும் தோற்ற இடது முன்னணி, இந்தத் தேர்தலில் எப்படிச் சமாளித்தது? ஆட்சியில் இருந்த முதல்வர் அச்சுதானந்தன், தாமே ஊழலுக்கு எதிரான ஒரு போராளி என எதிர்க்கட்சி வெளியைக் கைப்பற்றுவதில், குறிப்பிடத்தக்க அளவுக்கு வெற்றி பெற்றார். ஆனால் அச்சுதானந்தனும் மார்க்சிஸ்ட் கட்சியை இடதுசாரி நிலைகளிலிருந்து வெகுவாக விலக்கி வரு வதையும், நாம் காணத் தவறக்கூடாது. கேரளா முஸ்லீம் பெரும்பான்மை மாநிலமாகிவிடும் என பாஜக போல் சிறிது காலம் முன்பு அபாய அறிவிப்பு வெளியிட்ட அச்சுதானந்தன், இத்தேர்தலில் ஓமன் சாண்டி முதல்வர், குன்னியால் குட்டி துணை முதல்வரா எனக் கேள்வி எழுப்பினார். அதாவது, கிறிஸ்துவ முதல்வர், இசுலாமிய துணை முதல்வரா என இந்து வாக்குகளைக் கவர்ந்து உறுதிப்படுத்தும் வகையில் பேசினார். அவர் நினைத்தது நடந்தது. ஆனால், ஆபத்தான எதிர்விளைவும் நடந்தது. காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட முஸ்லீம் லீக் 24 இடங்களில் 20 இடங்களில் வென்றது. கிறிஸ்தவர்கள் ஆதரவுபெற்ற கேரளா காங்கிரஸ் போட்டியிடட 15 இடங்களில் 9ல் வென்றது. காங்கிரஸ் போட்டியிட்ட 82 இடங்களில் 34ல் மட்டுமே வென்றது. காங்கிரஸ் வென்றாலும், முள்மகுடம் சுமக்கிறது. அச்சுதானந்தனும் விஜயனும் இடதுசாரி அரசியலை கேரளாவில் ஒழித்துக்கட்ட போட்டி போடுகிறார்கள்.

வலதுசாரியான மமதா, இடதுசாரி தளத்திலிருந்து, நிலம் மக்கள் நலன் என்ற தளத்திலிருந்து, வலது திசையில் வேகமாகச் சென்று கொண்டிருந்த இடது முன்னணியை முறியடித்தார். தன் தோல்வியை மார்க்சிஸ்ட் கட்சி தானே உறுதி செய்து கொண்டது. தமிழ் நாட்டிலும் கூட இடதுசாரிகள், அய்யா கம்யூனிஸ்ட்கள் அம்மா கம்யூனிஸ்ட்கள் என சுய அடையாளத்தையும் அடித்தளத்தையும் இழந்து கொண்டிருக்கின்றனர். இடதுசாரிகளின் சொந்தத் தொகுதிகள் என்று ஏதும் இருக்கக் கூடாது என்பதில், திமுக, அஇஅதிமுக காட்டிய விவேகம் முதிர்ச்சியோடு ஒப்பிடுகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சியின் சுதந்திரமான எதிர்காலம் பற்றி தமது தலைவர்கள் அக்கறை காட்டவில்லை என அந்தக் கட்சிகளின் அணிகளே கவலைப்பட்டனர். 19 இடங்கள் பெற்றாலும், படாதபாடு படப்போகிறார்கள்.

அசாமில் முற்றிலும் எதிர்பார்க்காத வகையில் காங்கிரசின் தருண் கோகோய், தனிப் பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக முதல்வராகி உள்ளார். எதிர்க்கட்சிகள் நம்பகத்தன்மை இழந்தபோது, ஜனரஞ்சக நலத்திட்டங்கள் என்பதோடு, உல்பாவுடன் பேச்சுவார்த்தை, சிறுசிறு இனக்குழுவாக இருந்தாலும் ஏதாவது செய்கிறோம் என்ற வாக்குறுதி போன்றவற்றுடன், விந்தைமுரணான விதத்தில் காங்கிரஸ் அசாமிய அடையாள உருவெடுத்தது. கன பரிஷத், உல்பா வகை பிராந்தியவாதமும் வலுவிழந்தது.

வேறுவேறு மாநிலத் தீர்ப்புக்களில் சில பொதுவான தன்மைகளும் சில குறிப்பான தன்மைகளும் உள்ளன. ஆனால், முதலாளித்துவ தேர்தல்களிலும், அந்த நேர, அந்த மாநில சூழலுக்கு ஏற்ப மக்களின் விருப்பங்களும் கவலைகளும் பிரதிபலிக்கவே செய்கின்றன. நிலப்பறி, மெகா ஊழல், விலைஉயர்வு, அரசு ஒடுக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கட்சி, திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு பாடம் புகட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இரு கழகங்களும், திராவிட இயக்கத்திலிருந்து தூசி தட்டி எடுத்துப் புதிதாகப் பேச எதுவும் இல்லை. வளர்ச்சி நல்லாட்சி ஜனரஞ்சகவாத நல நடவடிக்கைகள் மிஞ்சி மிஞ்சிப் போனால் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு என்ற தளங்கள் தாண்டி அவர்களிடம் எதுவுமில்லை. அதேநேரம் தமிழக மக்களோ, துரிதமும் தீவிரமும் அடைந்துள்ள நகர்மயத்தால் தொழில்மயத்தால், கண்ணெதிரே தாம் எழுப்பிய செல்வங்கள் தெரிய, மிகப்பெரிய அளவுக்கு நல்வாழ்க்கைக்கான எதிர்ப்பார்ப்புக்களுடன் காத்திருக்கின்றனர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் சரிவு இடதுசாரி இயக்கத்தின் சரிவல்ல. அதற்குக் கண்ணீர் சிந்தவோ, கவலைப்படவோ வேண்டியதில்லை. தேவைப்படுவது, மக்களின் விருப்பங்கள், தேவைகள் மீதான போராட்டங்களும், அந்தப் போராட்டங்களை வழிநடத்தும் இடதுசாரிப் புத்தெழுச்சியுமே. இந்தக் கோணத்திலிருந்து, தமிழகத் தேர்தல் முடிவுகள், போராடும் இடதுசாரிகளுக்கு, வாய்ப்புக்களை நன்றாகவே புலப்படுத்துகின்றன.

ஜெயலலிதா ஆட்சியின் துவக்க நாட்களும் நடவடிக்கைகளும்

பதவியேற்பு ‘வைபவம்’ நடந்தது. ‘வைபவத்திற்கு’ நரேந்திரமோடி அழைக்கப்பட்டார். நரவேட்டைக்காரர், அம்மையார் கண்களில் நல்லாட்சி தருபவர், வெற்றிக் கூட்டணி உருவாக உதவிய சோவின் பார்வையில், இந்தியாவின் பிரதமராக லாயக்கானவர் நரேந்திரமோடி.

அடுத்த அழைப்பாளர் சந்திரபாபு நாயுடு. உலக மூலதனத்தின் ஆந்திர தலைமை அலுவலராகச் செயல்பட்டவர். அந்த வகையில் அம்மையார் பொருத்தமாகத்தான் அழைப்பு விடுத்துள்ளார். அடுத்த அழைப்பாளர்கள் இககவின் ஏபிபர்தனும், து.ராஜாவும். முதல் வைபவத்திலேயே து.ராஜாவின் காலணி போய்விட்டது. போகப் போக அவர்கள் கட்சிக்கு என்ன என்ன போகுமோ?

அம்மையார் தேர்தல் பிரச்சாரத்தில் மிகவும் கவனமாக காங்கிரசைக் காட்டமாகத் தாக்குவதை தவிர்த்தார். இப்போதும், காங்கிரசுக்கு ஆதரவு தருவதாக முன்னர் சொன்னீர்களே என்று கேட்ட போது, அதற்கு பதில் சொல்ல வேண்டியவர்களைப் போய்க் கேளுங்கள் என எரிச்சலுடன் சொன்னார். ஊழல் வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அதுபற்றிப் பேச ஏதுமில்லை என அடக்கி வாசித்துள்ளார். ஆக, அஇஅதிமுக, தேசிய அரசியலில், தன் வசதிக்கேற்ப எந்தக் காயையும் ஆடத் தயாராய் உள்ளது. காங்கிரஸ் திமுக உறவு முறிய, திமுகவை மத்திய அமைச்சரவையிலிருந்து அகற்ற, தன்னால் ஆனதையெல்லாம் செய்யும். வாக்காளர்கள் காங்கிரசுக்கு எதிராக ஊழலுக்கு எதிராக அளித்துள்ள முடிவை, ஜெயலலிதா பொருட்படுத்தப் போவதில்லை என்பதற்கான துவக்க அறிகுறிகள் தெரிகின்றன.

நல நடவடிக்கைகள் ஜனரஞ்சகவாதம் ஆகியவற்றைச் சாடிய ஜெயலலிதா, தேர்தல் அரசியலில், கருணாநிதி வழியே தன்வழி என மாற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார். கையொப்பமிட்ட முதல் ஏழு கோப்புகளுமே நல நடவடிக்கைகள் பற்றியவைதான். அரிசி, திருமண உதவித்தொகை, விடுப்பு, ஓய்வூதியம், மீனவர் நிவாரணம், நலத்திட்ட அமலாக்கத்துறை, அமைச்சகம் என்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட உள்ளன. மிக்சி, கிரைண்டர், காற்றாடியும் கூட முடிந்துவிட வாய்ப்புள்ளது.

ஆனால், 3 சென்ட் நிலம், வீடுகள், வீடுகட்ட நிதி, ஆடு, மாடு, அரசு கேபிள் என்ற முக்கிய வாக்குறுதிகள் காத்திருக்கின்றன. கஜானா காலி, இடித்துத் தள்ளி விட்டார்கள், குப்பை அகற்றி புதிதாகக் கட்ட வேண்டும் என்று முன்னெச்சரிக்கையாக, கருணாநிதியை கைகாட்ட தயாராகிறார். கஜானா காலியாம். ஆனால் புதிய சட்ட மன்றம் வேண்டாம். சமச்சீர் பாட புத்தகங்கள் வேண்டாம். மக்கள் வரிப்பணம் பல நூறு கோடி விரயம்.

இவை எல்லாம் தாண்டி அம்மையாரின் தடுமாற்றம், கல்வி விஷயத்தில்தான் பளிச் என வெளிப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கு மேட்டுக்குடியினரை வரவழைக்க, மேலான வசதிகளும் உயர்ந்த ரகங்களும் வரும் எனச் சொல்லும் அரசு, கல்விக் கட்டண விஷயத்தில் ஏதும் செய்ய இயலாது என்கிறது. சவுந்தர்ராஜனிடம் சமச்சீர் கல்விக் கொள்கை தொடரும் என்கிறார் அமைச்சர் சண்முகம். ஆனால் தமிழக அரசின் முதன்மை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இராஜேஸ்வரன் மற்றும் வாசுகி முன் நடக்கும் வழக்கில், சமச்சீர் கல்வி, அடுத்த தலைமுறைகளை பாதிக்கும் என்கிறார். கல்வி பெறும் வாய்ப்பில் சமச்சீர் நிலைமை வராமல், பொதுவான பாடத் திட்டமே சமச்சீர் கல்வி ஆகாது என்பது ஒருபுறம் இருந்தாலும், கல்வி முதலாளிகளுக்கு, எதிராக அம்மையார் ஏதும் செய்யத் தயாரில்லை என்பது தெளிவாகிவிட்டது. மடிக்கணினி தந்து மாணவர், பெற்றோர் சீற்றத்தை தணிக்கத் திட்டமிட வாய்ப்புண்டு.

நாடாளுமன்ற ஜனநாயக மரபுகள், பிரிட்டிஷ் நாடாளுமன்ற வரலாறு பற்றிய பேச்சு, அரசர் யாரும் இல்லாததால் ஜெயகுமாருக்கு தலைபோகும் ஆபத்தில்லை என்ற நகைச்சுவை, திமுக கடந்த காலத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெறித்தாலும், தமது அரசு எதிர்கட்சிகளுக்கு வாய்ப்பு தரும் என்ற அறிவிப்புக்களுடன் ஜெயலலிதா தமது சட்டமன்ற நடவடிக்கைகளைத் துவங்கி உள்ளார்.

ஆட்டம் ஆரம்பித்து விட்டது. எதிர்கட்சித் தலைவர் இப்போது விஜய்காந்த். தமிழகத்தில் இரு கழக அரசியல் தாண்டிய நிலைமைகளுக்கும் வாய்ப்பு உள்ளது. போராடும் இடதுசாரிகள் மக்கள் நலன் காக்கத் தயாராவோம்.

தமிழ்நாட்டில் மாலெ கட்சியின் தேர்தல் வேலைகள்: ஒரு பரிசீலனை

இந்தத் தேர்தல்களில் நாம் போட்டியிட்ட தொகுதிகளின் பெரும்பான்மையானவற்றில் நமது தோழர்கள் துடிப்புமிக்க பிரச்சார இயக்கம் நடத்தினார்கள். தேர்தல்களில் ஒரு லட்சத்துக்கும் சற்று கூடுதலான வாக்குகள் நாம் பெற்றுள்ளோம்......... தமிழ்நாட்டில் விழுப்புரம், குமரி, கோவை மாவட்டங்களில், 3 புதிய தொகுதிகளில் 1500 என்ற எண்ணிக்கையில் வாக்குகள் பெற்றுள்ளோம்; ஆனால் நமது பழைய வேலைப் பகுதிகளில், நகர்ப்புற/தொழில் பகுதிகள் அல்லது கிராமப்புற பகுதிகளில் நமது வாக்குகள் மிகவும் குறைந்துள்ளன.

உயர்ந்து எழுந்த இருகழக துருவச்சேர்க்கை, அஇஅதிமுக அலை மற்றும் பெருமளவிலான பணப்பட்டுவாடா ஆகியவை நிச்சயம் நமக்கு தேர்தலை கடினமானதாக ஆக்கின; ஆனால், நமது சொந்த அமைப்பு மற்றும் அரசியல் பலவீனங்கள் பற்றி நாம் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் நல்ல உறுப்பினர் எண்ணிக்கை, தொடர்ச்சியான அமைப்பாக்கப்பட்ட செயல்பாடுகள் என ஒப்பீட்டளவில் சிறந்த கட்டமைக்கப்பட்ட தொழிற்சங்க வேலை உள்ளது; அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்க உறுப்பினர் எண்ணிக்கையும் பல ஊராட்சிகளில் உற்சாகம் தரும் அளவில் உள்ளது; ஆனால், வெகுமக்கள் அமைப்புக்களின் உறுப்பினர் எண்ணிக்கையை வாக்குகளாக மாற்றுவது மிகவும் மோசமாக உள்ளது; அல்லது சில இடங்களில் நமது வெகுமக்கள் உறுப்பினர் எண்ணிக்கைக்கும் நாம் பெற்ற வாக்குகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மற்றபடி நாம் திறமையாக நடத்துகிற தொழிற்சங்கங்களில், பிற வெகுமக்கள் அமைப்புக்களில் உள்ள உறுப்பினர்களோடு அரசியல்ரீதியாக ஒன்றுபடுவதென்பதே இல்லை என்பதை இது காட்டுகிறது. இந்த விசயத்தில் கட்சி ஒரு தகர்த்து முன்னேறுதலைக் கொண்டு வர வேண்டும்; நமது அடித்தளத்தில் இன்னும் ஆழமாகச் சென்று, அனைத்து பற்றியெரியும் பிரச்சனைகள் மற்றும் பொதுமக்கள் கவலைகள் மீது சரியான அரசியல் பதில்வினையை வளர்த்தெடுக்க வேண்டும். இது தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, நமக்கு ஒப்பீட்டுரீதியில் மேலான அமைப்பாக்கப்பட்ட வெகுமக்கள் வேலையும், ஆனால், மிகக்குறைந்த அரசியல்/தேர்தல் விளைவுகளும் கொண்ட நமது அனைத்து வேலைப் பகுதிகளுக்கும் பொருந்தும். - அரசியல் தலைமைக் குழு கூட்ட சுற்றறிக்கையில் இருந்து, 25 - 26 மே 2011, டில்லி

சட்டமன்ற தேர்தல் செயல்பாடு பற்றிய அரசியல் தலைமைக் குழுவின் மதிப்பீட்டின் வெளிச்சத்தில் தமிழ்நாட்டில் மாலெ கட்சியின் தேர்தல் செயல்பாடு பற்றி பரிசீலனை மேற்கொள்வது பொருத்தமானது.

வேட்பாளர்கள் யார் என்று அறிவிக்க முடியாத தருணத்தில், திருபெரும்புதூரில் நிற்கிறீர்களே, வெற்றி பெற முடியுமா என்று மாலெ கட்சி தலைமை தோழர் ஒருவரிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை தோழர் ஒருவர் கேட்டார். வெற்றி பெறுவது இருக் கட்டும், நாங்கள் போட்டியிடவில்லை என்றால் இந்தத் தொகுதியில் தொழிலாளியின் குரலை யார் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்று மாலெ கட்சி தோழர் திருப்பிக் கேட்டார். அதற்கு அந்தத் தோழர் நீங்கள் சொல்வது சரி என்று முடித்துக் கொண்டார்.

திருபெரும்புதூர் மட்டும் அல்ல, தமிழ் நாட்டில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் உழைக்கும் மக்கள் குரல், அவர்கள் நிகழ்ச்சி நிரல் மாலெ கட்சி போட்டியிட்ட 11 தொகுதிகளில் மட்டுமே முன்னிறுத்தப்பட்டது. கூட்டணி நிர்ப்பந்தங்கள் அதிகாரபூர்வ இடதுகளை இந்த விசயத்தில் மவுனமாக்கி விட்டிருந்தன.

இதுவரை இல்லாத அளவு, முதலாளித்துவ கட்சிகளுக்கு நிகராக மாலெ கட்சியின் தேர்தல் பிரச்சாரம் கட்டமைக்கப்பட்டது. மேட்டுப்பாளையம், கந்தர்வகோட்டை, அம்பத்தூர் தொகுதிகளில், தேர்தல் அறிவிப்புக்கு வெகுமுன்னரே துவங்கிவிட்ட தேர்தல் வேலைகள், அறிவிப்பு எதிர்பாராத குறுகிய கால அவகாசமே தந்திருந்தாலும், இன்னும் விசையுடன் முடுக்கிவிடப்பட்டன.

மேட்டுப்பாளையம்

வேட்பாளர்கள் யார் என்று தமிழ்நாட்டின் எந்தக் கட்சியும் முடிவு செய்ய முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்த சமயத்தில் மேட்டுப்பாளையம் தொகுதியில் நடந்த வேட்பாளர் அறிமுக பொதுக் கூட்டம் தொழிலாளர்களுக்கு உற்சாகமூட்டியது.

ஏப்ரல் 1 முதல் 11 வரை நடந்த தேர்தல் பிரச்சார வேலைகள், திமுக, அஇஅதிமுக உள்ளிட்ட கட்சிகளை, தங்கள் வாக்குகள் பாதிக்கப்படுமோ எனக் கவலையடையச் செய்தன.

சங்கத்துக்கு, சங்கத்தின் போராட்டங்களுக்கு எப்போதும் குறைவின்றி நிதியிளித்திடும் பிரிக்கால் தொழிலாளர்கள், மாலெ கட்சி தலைமையில் மேட்டுப்பாளையம் தொகுதியில் நடக்கும் தேர்தல் போராட்டமும் தங்க ளுடையதே என உணர்வுபூர்வமாக அறிந்து கொண்ட பின்னணியில் நடந்த தேர்தல் வேலைகளுக்கு ஆர்வத்துடன் நிதியளித்தனர்.

வெவ்வேறு வேலைகளில், வெவ்வேறு பிரச்சார நிகழ்ச்சிகளில், வெவ்வேறு நேரங்களில் சில நூறு தொழிலாளர்கள் மாலெ கட்சிப் பதாகையை ஏந்தி மூன்று நட்சத்திரக் கொடிச் சின்னத்துக்கு வாக்குக் கேட்டார்கள்.

பிரிக்கால் தோழர்களுடன் அய்டிபிஎல் தோழர்களும் சுபா பிளாஸ்டிக்ஸ் தோழர்களும் தேர்தல் வேலைகளின் அனைத்து அம்சங்களிலும் இணைந்து கொண்டார்கள்.

பிரிக்கால், சுபா பிளாஸ்டிக்ஸ், அய்டிபிஎல் தொழிலாளர் மத்தியிலான தொழிலாளர் வர்க்க வேலைகள் விளைவு தந்ததை தேர்தல் முடிவுகள் காட்டின. நான்காண்டு கால தொழிலாளர் வர்க்க வேலைகள், அந்தத் தளம் தாண்டி பரந்த சமூகத்தில் செல்வாக்கு ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்பதையும் தேர்தல் முடிவுகள் காட்டின.

அம்பத்தூர்

அம்பத்தூர் தொகுதியில் பல முறை தேர்தல்களில் போட்டியிட்டு தேர்தல் பிரச்சார பொறியமைவு கட்டமைப்பதில் நிபுணத்துவம் பெற்ற தோழர்கள் தேர்தல் வேலைகளுக்கு தலைமை தாங்கினர். மாலெ கட்சியின் தொடர் முன்முயற்சிகள், மக்கள் பிரச்சனைகளில் விடாப்பிடியான தலையீடு, அதனால் உருவான செல்வாக்கு வாக்கு எண்ணிக்கையில் பிரதிபலிப்பதில்லை என்ற நாள்பட்ட பிரச்சனைக்கு முடிவு கட்டுவது என்ற உறுதியுடன் தேர்தல் வேலைகள் சில மாதங்களுக்கு முன்பே துவங்கப்பட்டன. பகுதி மக்கள் மத்தியில் உள்ள தொழிற்சங்க செல்வாக்கை அரசி யல் செல்வாக்காக மாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது போன்ற ஒரு முயற்சியால் ஒரு குறிப்பிட்ட வார்டில் அரசு திட்டமிட்ட டாஸ்மாக் கடைத் திறப்பு கூட தடைபட்டது. பத்திரிகைகளில் செய்தியானது.

நமக்கான வாக்காளர்களை பட்டியலிட்டு அவர்களை மீண்டும் மீண்டும் சந்திப்பது என மிகவும் ஸ்தூலமாக வேலைகள் திட்டமிடப்பட்டன. திட்டமிட்ட பல்வேறு பிரச்சார வேலைகள் திட்டமிட்டபடி நிறைவேற்றப்பட்டிருந்தாலும் இந்தக் குறிப்பான அம்சத்தில் மட்டும் திட்ட அமலாக்கம் நூறு சதம் நடக்கவில்லை. குறுகிய கால அவகாசம் ஒரு காரணமாக இருந்தாலும், பகுதி மக்கள் மத்தி யிலான நமது வேலைகள் இன்னும் ஆழப்படுத்தப்படுவதன் அவசியத்தை, நம்மோடு இணைந் துள்ள அமைப்புசாராத் தொழிலாளர்கள் மத்தியிலான உறுப்பினர்களை அரசியல்படுத்துவதில் உள்ள இடைவெளியை நாம் பெற்ற வாக்கு எண்ணிக்கை வெளிப்படுத்தியது. இந்தத் தொகுதியில் நமது தேர்தல் செயல்பாடு ஆழமான பரிசீலனையைக் கோருகிறது.

கந்தர்வக்கோட்டை

தமிழ்நாட்டின் மிகவும் பின்தங்கிய மாவட்டமான புதுக்கோட்டையில், கிராமப்புற வறியவர்களின் துன்பத்தால் வறுமையால் நிறைந்திருக்கும் கந்தர்வக்கோட்டை தொகுதியில் மாலெ கட்சி போட்டியிட்டது.

தேர்தல் அறிவிப்புக்கு சில மாதங்களுக்கு முன்பே, புதுக்கோட்டை மாவட்ட கமிட்டி தேர்தல் வேலைகளை திட்டமிட்டு, ஆய்வுகள் முதல் பல்வேறு வேலைகளை கட்டமைத்தது.

தொகுதி மக்கள் கவலைகள், விருப்பங் கள் பற்றிய மக்கள் கோரிக்கை சாசனம் தொகுதியில் அரசு ஊழியர், வங்கி ஊழியர் உட்பட பலதரப்பட்ட பிரிவினரிடமும் வரவேற்பு பெற்றது. கந்தர்வக்கோட்டை தொகுதியின் வளர்ச்சி, முன்னேற்றம், நல்வாழ்க்கை என்ற சிறுபுத்தகத்தை, மாற்றுக் கட்சிக்காரர்கள் மாலெ கட்சியின் மக்கள் கோரிக்கை சாசனத்தை பயன்படுத்த வேண்டியிருந்தது.

கடுமையான வறுமை வாட்டி வதைக்கும் அந்தத் தொகுதியிலும் வறிய மக்கள் தங்கள் கோரிக்கைகளை தொடர்ந்து முன்னிறுத்தும் மாலெ கட்சிக்கு ரூ.1 லட்சத்துக்கும் மேல் நிதியளித்தனர்.

வேட்பாளர் அறிமுகப் பொதுக் கூட்டம் முதல் இறுதி கட்ட வாகனப் பிரச்சாரம் வரை விறுவிறுப்பான தேர்தல் பிரச்சாரம் என்று தொகுதியில் அறியப்பட்டது. தொகுதியில் வாக்காளர்கள் மத்தியில் பரந்து கிடக்கும் ஆதரவை, எதிர்பார்ப்பை வாக்காக மாற்ற அமைப்பு தயாராகவில்லை என்பதை, ஊராட்சி மட்ட வேலைகள் வேர் விடவில்லை என்பதை, வாக்குகள் காட்டுகின்றன.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கட்சி அமைப்பும் அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கமும், ஊரக வேலை உறுதித் திட்டம் முதல் உதவித் தொகை வழங்குவது வரை, அரசின் மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் என்ற பெயரில் நடக்கும் ஊழல்களை தொடர்ந்து அம்பலப்படுத்தின. விழுப்புரத்தில் மக்கள் பிரச் சனைகளில் உடனடியாக, விடாப்பிடியாக, சமரசமின்றி போராடும் இடதுசாரி கட்சி என்ற அடையாளம் மாலெ கட்சிக்கு மக்கள் மத்தியில் உள்ளது. இந்த சாதக அம்சங்களின் அடிப்படையில் நின்று கொண்டு உளுந்தூர்பேட்டையில் தேர்தல் களத்தில் நின்றது மாலெ கட்சி.

தேர்தலில் போட்டியிடுவது பற்றி முன்னரே முடிவு செய்யப்பட்டிருந்தாலும் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு வேலைகள் துவங்கின. வெகுவிரைவாகவே வேகம் பிடித்தன. பிற கட்சிகள் களத்தில் இறங்கும் முன் மாலெ கட்சி களத்தில் இருந்தது.

தேர்தலுக்கு முன்பு நடந்த மாலெ கட்சியின் தொடர் முன்முயற்சிகளால், ரூ.1.5 லட்சத்துக்கும் மேல் கிராமப்புற வறியவர் மத்தியில் நிதி திரட்டப்பட்டது. கிராமப்புறங்களில் நிதி திரட்டுவது சிரமம் என்று சொல்லப்படு வதை கந்தர்வக்கோட்டை தோழர்கள் போல் விழுப்புரம் மாவட்ட தோழர்களும் பொய்யாக்கிக் காட்டினர்.

குறைவான ஊழியர்களைக் கொண்டு நிறைவான, பரபரப்பான பிரச்சாரம், 1700க்கும் மேற்பட்ட வாக்குகள் என விழுப்புரம் மாவட்ட தோழர்கள் தேர்தல் களத்தில் சிறப்பான செயல்பட்டுள்ளனர். கட்சி பெறும் செல்வாக்கிற்கு பொருத்தமான அமைப்பு கட்ட வேண்டுமென விரும்புகின்றனர்.

குளச்சல்

சில பத்தாயிரக்கணக்கில் வெகுமக்கள் உறுப்பினர்கள், அவர்களுடன் நிறுவனரீதியான தொடர்பு, அன்றாடம் மக்கள் பிரச்சனைகளில் தலையீடு, போராடும் ஒரே இடதுசாரி கட்சி என்ற அடையாளம், மீனவர் முதல் மாணவர் வரை சமூகத்தின் பல்வேறு பிரிவினர் மத்தியிலும் நன்மதிப்பு என சாதக அம்சங்கள் உள்ள குளச்சல் தொகுதியில் மாலெ கட்சி போட்டியிட்டது.

தேர்தல் வேலைகள் சில மாதங்களுக்கு முன்பே துவங்கிவிட்டன. எனவே, எதிர்பா ராத நேரத்தில் வந்த தேர்தல் அறிவிப்பு எந்த அதிர்ச்சியும் தரவில்லை. காங்கிரஸ், அஇஅதி முகவுக்கு இணையாக, தொகுதி முழுவதும் விரிவான பிரச்சாரம் நடத்தப்பட்டது.

பிரச்சாரம் துவங்கியபோது சில பத்தாயி ரங்களில் வாக்குகள் பெறுவோம் என்று கட்சிக்கு வெளியில் கூட கணிக்கப்பட்டது. 1500க் கும் சற்றுக் கூடுதலான வாக்குகள் பெற்றுள்ளோம். புரட்சிகர கட்சியைப் பொறுத்தவரை பொத்தாம்பொதுவான செல்வாக்கு ஒருபோதும் வாக்காக மாறாது என்பதை, குறிப்பாக அரசியல்படுத்தும், அமைப்புரீதியான, வெகுமக்களுடனான உயிரார்ந்த தொடர்பு உருவாக்கும் வேலைகள் மட்டுமே மாற்று என்பதை வாக்குகள் காட்டுகின்றன.

திருநேல்வேலி

நெல்லையில் பீடித் தொழிலாளர் மத்தியிலான தொழிலாளர் வர்க்க வேலைகள் பிற அமைப்புசாரா தொழிலாளர்களையும் மாலெ கட்சிபால் ஈர்த்துள்ளது. பெண் தொழிலாளர் மத்தியில் செல்வாக்கு தளம் கொண்ட இந்தத் தொகுதியில் கட்சி பெண் வேட்பாளரை களமிறக்கியது.

தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பே பீடித் தொழிலாளர் வாழ்நிலைமைகள் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மக்கள் சந்திப்பு இயக்கமும் நடத்தப்பட்டது.

ஆய்வு மற்றும் மக்கள் சந்திப்பு இயக்கத்தில் எழுப்பப்பட்ட பிரச்சனைகள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை சாசனத்துடன் சில நூறு அமைப்புசாரா தொழிலாளர்கள் பகுதி மக்களை சந்தித்தனர். திட்டமிட்ட பகுதி அடிப்படையிலான பிரச்சார வேலைகள் எடுத்துச் செல்லப்பட்டன.

திட்டமிட்ட பிரச்சார வேலைகள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் மக்கள் மத்தியில் உள்ள தொழிற்சங்க செல்வாக்கை அரசியல் செல்வாக்காக மாற்றுவதில், அமைப்பு பலத்தில் ஆழமான அமைப்புப் பணிகள் தேவைப்படுவதை தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன.

மாதவரம்

மாதவரம் தொகுதியில் போட்டியிடுவது என, எதிர்பாராத நேரத்தில், கட்சி முன்வைத்த கடமையை நிறைவேற்ற திருவள்ளூர் மாவட்ட தோழர்கள் உடனடியாக தயாரானார்கள்.

எப்போதும் எந்த நிகழ்ச்சியிலும் எந்த கால அவகாசத்திலும் சில நூறுகளில் அணி திரட்டல் என்பதை இயல்பாகக் கொண்ட திருவள்ளூர் மாவட்டத்தின் தேர்தல் பிரச்சார வேலைகளில் 700 பேருக்கும் மேல் வெவ்வேறு விதங்களில் கலந்து கொண்டார்கள். இங்கும் கிராமப்புற வறியவர்கள் மத்தியில் ரூ.1.5 லட்சம் வரை நிதி திரட்டப்பட்டது.

பகுதி மக்களின் பல்வேறு அன்றாடப் பிரச் சனைகளில் தொடர்ந்து தலையீடு செய்யும் கட்சி, வறிய மக்களுக்கு வீட்டுமனை கோரும் போராட்டங்களில் நல்விளைவுகள் உருவாக்குகிற கட்சி என்ற அடையாளத்துடன், வேட்பாளர் நன்கு அறிமுகமான வேலைப் பகுதிகளில் உள்ள வாக்குகள் பெற்றுள்ளோம். கட்சி வேலைகளின் வீச்சு எட்டிய பகுதிகளில் கட்சி பெற்றுள்ள செல்வாக்கை வாக்காக மாற்றுவதில் முன்செல்ல வேண்டியுள்ளது என்பதையே வாக்குகள் காட்டுகின்றன.

குமாரபாளையம்

நாளும் தறியில் நசியும் வாழ்க்கை வாழும் தமிழர்களை பெருமளவில் கொண்ட குமாரபாளையம் தொகுதியில் மாலெ கட்சி போட்டியிட்டது. இந்தியாவின் பாரம்பரிய தொழிலான ஜவுளித் தொழிலை ஆதாரமாகக் கொண்ட மக்கள் பாரம்பரிய நிலப்பிரபுத்துவ தளைகளில் இருந்தும் விடுபடாமல் அவதியுறும் இந்தத் தொகுதியில் மாலெ கட்சியின் வேலைகள் மக்களுக்கான, தொழிலாளர்களுக்கான வேலைகள், போராட்டங்கள் என நன்கு அறியப்பட்டுள்ளன. அடையாளம் பெற்றுள்ளன.

இங்கும் தேர்தலில் போட்டியிடும் முடிவு தாமதமாகவே எடுக்கப்பட்டது. ஆயினும் வேலைகளில் எந்தத் தொய்வையும் அந்தத் தாமதம் ஏற்படுத்தவில்லை. சமீபத்தில் நடந்த வெற்றிகரமான கூலிப் போராட்டம் தோழர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. இந்த நம்பிக்கை தந்த உற்சாகத்தில் வேலைகள் முடுக்கிவிடப்பட்டன. முன்சென்றன.

கூலிப் போராட்ட வெற்றி மட்டும் தேர்தலில் வாக்குகளாக மாறாது என்று தேர்தல் முடிவு மீண்டும் ஒரு முறை நமக்கு அறிவுறுத்தியது. கூலிப் போராட்டத்தில் திரண்ட சில ஆயிரம் தொழிலாளர்களுடன் உள்ள அரசியல் பிணைப்பின் ஆழம் மட்டுமே செல்வாக்கை வாக்காக மாற்றும் என்று தேர்தல் முடிவுகள் உணர்த்தின.

திருபெரும்புதூர்

திருபெரும்புதூர் தொகுதியில் தமிழ்நாடு ‘பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கல்ல, தமிழ்நாடு தமிழக உழைக்கும் மக்களுக்கே’ என்ற முழக்கத்துடன் தொழிலாளர் பிரச்சனைகளை முன்னிறுத்தி தேர்தல் வேலைகள் கட்டமைக்கப்பட்டன.

15 பேர் கொண்ட கட்சிக் கிளை தேர்தல் பிரச்சார வேலைகளை கட்டமைத்தது. வேறு வெகுமக்கள் அமைப்புக்கள் ஏதும் இல்லாமல், ஒருமைப்பாடு மன்ற வேலைகள் உருவாக்கிய செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டு, புதிய பகுதியில் சிறப்பான பிரச்சாரம் நடத்துவது என்ற பொருளில் தேர்தல் வேலைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.

தொழிற்சங்கம் இல்லாத மண்டலமாக திருபெரும்புதூர் இருக்காது என்று தமிழக அரசுக்கு வலுவான செய்தி சொன்ன ஹ÷ண்டாய் தொழிலாளர்கள் ரூ.50,000 வரை நிதியளித்தனர்.

திருவிடைமருதூர்

திருவிடைமருதூர் கிராமப்புற வறியவர் மத்தியிலான மாலெ கட்சியின் வேலைகள் உருவாக்கிய தாக்கம், வேலைகளில் இடை வெளி இருந்தபோதும் தொடர்கிறது. தொகுதியில் ஓர் ஊராட்சியில் மாலெ கட்சி நடத்திய போராட்டத்தின் விளைவாக அந்த ஒன்றியம் முழுவதும் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.100 சட்டக் கூலி அமலானது.

அமைப்புரீதியாக மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலும் வீடுவீடாக பிரச்சாரத்துக்கு அழுத்தம் தரப்பட்டு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அமைப்பு நிலைமைகள், வேலைகளுக்கு ஏற்ப வாக்குகள் பெற்றோம்.

சோழவந்தான்

சோழவந்தான் தொகுதியில் போட்டியிடும் முடிவும் ஜனவரியில்தான் எடுக்கப்பட்டது. மாலெ கட்சி இருத்தலை தேர்தல் பிரச்சாரம் மூலம் உறுதி செய்வது என்ற நோக்கத்துடன், பக்கத்து மாவட்டங்களின் தோழர்களின் ஒத்துழைப்புடன், கடுமையான முயற்சிகள் மேற்கொண்டு நடத்தப்பட்ட பிரச்சார வேலைகள் நோக்கத்தை நிறைவேற்றின.

தொகுப்பாக

தொகுத்துப் பார்த்தால், மாலெ கட்சி இதுவரை பங்கேற்ற தேர்தல்களில், இந்தத் தேர்தலில் முனைப்பான, விரிவான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. மாநிலம் முழுவதிலும் இருந்து 500 பேர் வரை கட்சி ஊழியர்களும் உறுப்பினர்களும், 2000 பேர் வரை வெகுமக்கள் அமைப்புக்களின் ஊழியர்களும் உறுப்பினர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ரூ.16 லட்சத்துக்கும் மேல் நகர்ப்புற, கிராமப்புற வறியவர் மத்தியில் நிதி திரட்டப்பட்டுள்ளது.

அடுத்த கட்ட வேலைகளைப் பொறுத்தவரை, உடனடியாக எதிர்வரும் கடமையான, உள்ளாட்சித் தேர்தல்களில் பங்கேற்பு என்ற அரங்கில், அரசியல் தலைமைக் குழு காட்டியுள்ள வழிகாட்டுதலை அமலாக்கும் விதம், கட்சியின் செயல்பாடு அமையும் என கட்சி உறுதி பூணுகிறது.

தோழர்கள் சொன்னார்கள்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்னணியில், தேர்தல் வேலைகள், தேர்தல் முடிவுகள், அடுத்த கட்ட வேலைகள் பற்றி மாலெ கட்சி முன்னணி ஊழியர்களிடம் மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் தேன்மொழி நடத்திய அலைகாணலில் வெளியான கருத்துக்கள் தரப்படுகின்றன.

தோழர் ராஜகுரு, திருபெரும்புதூர்

தேர்தலை ஒட்டி செய்த ஆய்வில் பகுதி மக்கள் வாழ்க்கை பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது.

களம் காத்திருக்கிறது. நமது அரசியலை திராவிட அரசியலுக்கு மாற்றாக வளர்த்தெடுக்க வேண்டும். இன்னும் தீவிரமான வேலை தேவைப்படுகிறது. பிற தொகுதிகளுக்கும் சென்று வேலை செய்து கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

ஜெயலலிதாவே எதிர்பாராத வெற்றி.

தோழர் மேரி ஸ்டெல்லா, குளச்சல்

இகக, இககமா மட்டுமே அறிந்த மக்கள் மத்தி யில் மாலெ கட்சி அரசியலை கொண்டு சென்றோம். வெற்றி பெறுவோம் என்று கூட நினைத்தோம். ஆனால், பிற கட்சிகள் களத்தில் இறங்கிய பிறகு 10,000 வாக்குகளாவது பெற வேண்டும் என்ற உறுதியுடன் கடுமையாக பணியாற்றினோம். பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்றும் அதனால் ஜெயலலிதாவுக்கு வாக்களிக்கப் போவதாகவும் வாக்காளர்கள் சொன்னார்கள். உள்ளாட்சித் தேர்தல்களில் நமக்கு வாக்களிப்பதாகச் சொன்னார்கள். நாம் பெற்ற வாக்குகள் மாலெ கட்சி அரசியலுக்குக் கிடைத்த மதிப்புமிக்க வாக்குகள். அந்த வாக்காளர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

நாம் பணம் தரவில்லை. எந்த முதலாளித்துவ கட்சியுடனும் கூட்டு சேரவில்லை. எந்த முதலாளி யிடமும் நிதி வாங்கவில்லை. இதை மக்களிடம் சொன்னபோது புரிந்துகொண்டார்கள். ஆனால் நமக்கு வாக்களிக்கவில்லை என்று வரும்போதுதான் உண்மையிலேயே அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ளவில்லை என்பது தெரிகிறது. நாம் நமது வேலைகளை தீவிரப்படுத்த வேண்டும். நமது அமைப்பை வலுவாக்க வேண்டும்.

ஜெயலலிதா கருணாநிதியால் வெற்றி பெற்றார்.

தோழர் மோகன், அம்பத்தூர்

அய்ந்தாறு தேர்தல்களை சந்தித்துவிட்டோம். இந்த முறையும் கடுமையாக வேலை செய்தோம். கூடுதல் வாக்குகள் எதிர்பார்த்தோம். ஆனால் குறைவான வாக்குகள் பெற்றோம்.

தொடர்ந்து வேலை செய்கிறோம். ஆனால் செய்கிற வேலைகளை தொடர்ச்சியாக செய்கிறோமா எனக் கேள்வி எழுகிறது. வாக்குகள் பெறுவது சவா லாக உள்ளது. நடந்த வேலைகளை ஆய்வுக்குட்படுத்தி, அடுத்த கட்ட வேலைகளை திட்டமிட வேண்டும். புதிய பகுதிகளுக்கு வேலைகளை விரிவுபடுத்த வேண்டும்.

கருணாநிதிக்கு மக்கள் கடுமையான தண்டனை தந்துள்ளனர்.

தோழர் திவ்யா, சோழவந்தான்

வேலைகளுக்கு ஏற்ற வாக்குகள் பெற்றோம். வேலைகளுக்கு கட்சி அடையாளம் தர வேண்டும். பெண்கள் 20 பேர் வரை ஈடுபட்டனர். கட்சிப் பத்திரிகை எடுத்துச் செல்லப்பட வேண்டும். அரசியல் கல்வி தரப்பட வேண்டும். தலைமைக் குழுவை அரசியல்படுத்த வேண்டும்.

கருணாநிதியை தோற்கடிக்க ஜெயலலிதாவை மக்கள் வெற்றி பெறச் செய்வார்கள் என்பது எதிர் பார்த்ததுதான். ஆனால் கருணாநிதிக்கு இவ்வளவு பலமான அடி விழும் என்பது எதிர்பாராதது;

தோழர் வாசு, மாதவரம்

நல்ல வேலை, நல்ல பிரச்சாரம், நல்ல நிதி வசூல்... ஆனால் குறைவான வாக்குகள். புதிய தொகுதி என்பதால் சில முக்கிய வேலைப் பகுதிகள் தொகுதிக்கு வெளியில் போய்விட்டன. இதனாலும் வாக்குகள் குறைந்தன. நீங்கள் வெற்றி பெறப் போவதில்லை. உள்ளாட்சித் தேர்தல்களில் உங்களுக்கு வாக்களிக்கிறோம் என்றார்கள் வாக்காளர்கள்.

மக்களுக்கு நம் மீது மரியாதை இருக்கிறது. நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இது மட்டும் போதாது. மக்கள் மத்தியில் இன்னும் ஆழமாக வேலைகள் எடுத்துச் செல்லப்பட வேண்டும். அமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும்.

நாம் முன்வைக்கிற கோரிக்கைகளைத்தான் அவர்கள் தேர்தல் அறிக்கைகளில் வாக்குறுதிகளாக வைக்கிறார்கள். நாம் நிலம் தொடர்பான நமது போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும். விரிவுபடுத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தல்களில் நல்ல வாக்குகளும் வாங்க வேண்டும்.

மக்கள் கருணாநிதியை தோற்கடிக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டார்கள்.

தோழர் கலியமூர்த்தி, உளுந்தூர்பேட்டை

புதிய தொகுதி. முக்கிய வேலைப் பகுதியாக திருநாவலூர் மட்டுமே உள்ளது. ஆயினும் கடுமையாக வேலை செய்தோம். வீடுவீடாக வாக்குகள் கேட்டோம்.

திமுக, அஇஅதிமுக போல் நீங்கள் தமிழ்நாடு முழுவதும் போட்டியிடவில்லையே என்று சிலர் கேட்டார்கள். கூட்டணியில் நீங்கள் இல்லையே என்றும் வாக்காளர்கள் கேட்டார்கள். ஆனால் சுதந்திரமாகப் போட்டியிட்டது கட்சியின் சாதகமான அம்சம் என்பதை நாம் வாக்காளர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும். கிராமங்கள் மட்டத்தில் மக்களுக்கு உள்ள அனைத்து பிரச்சனைகளிலும் தலையிட வேண்டும். போராட்டங்கள் கட்டமைக்க வேண்டும். கிராமங்கள்தோறும் உறுப்பினர் சேர்ப்பு, அமைப்பு கட்டும் பணி தீவிரமாக நடத்தப்பட வேண்டும்.

தோழர் கிருஷ்ணமூர்த்தி, மேட்டுப்பாளையம்

திட்டமிட்ட வேலைகளை சிறப்பாக நிறைவேற்றினோம். மக்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தினோம். 5000 வாக்குகள் எதிர்பார்த்தோம்.

தேர்தல்களுடன் வேலைகள் முடிந்துவிடுவதில்லை. வார்டு மட்டத்திலான அன்றாட வேலைகள் அவசியம். மக்கள் மாலெ கட்சி பற்றி பேச வேண்டும். தங்கள் கட்சி என்று சொல்ல வேண்டும். இதற்கான வேலைகள் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

கருணாநிதி தண்டிக்கப்பட்டுள்ளார்.

தோழர் ரேவதி, கந்தர்வக்கோட்டை

நிறைய வேலை செய்தோம். ஆனாலும் வாக்குகள் குறைந்துள்ளன.

கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே சரியில்லை என்று மக்கள் சொன்னார்கள். ஆனால் நமக்கு வாக்களிக்கவில்லை.

போராட்டங்களுக்கு மாலெ கட்சி, வாக்குக்கு வேறு கட்சி என்று பார்க்கிறார்கள். வாக்குகள் என்று வந்தால் மக்களுக்கு கருணாநிதியும் ஜெயலலிதாவும் தான் தெரிகிறார்கள்.

அவர்களுக்கான போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் நாம் அவர்கள் வாக்குகளையும் பெறும்விதம் நமது வேலைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

தோழர் ராமேஷ்வர் பிரசாத், திருவிடைமருதூர்

குறைவான ஊழியர்கள் கொண்டு வீடுவீடாகப் பிரச்சாரம் செய்தோம்.

நமது போராட்டங்களின் அரசியல் மட்டத்தை உயர்த்த வேண்டும். நமது அரசியலை மக்கள் மத்தியில் ஆழமாக எடுத்துச் செல்ல வேண்டும். ஊராட்சி மட்ட வேலைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். மாணவர், இளைஞர், பெண்கள் மத்தியிலான வேலைகளுக்கு சிறப்பு கவனம் வேண்டும்.

கருணாநிதியின் ஜனரஞ்சகவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

தோழர் மலர்விழி, குமாரபாளையம்

பகுதி வேலைகள் பலவீனமாக உள்ளன. 33 வார்டுகளிலும் கட்சி வேலை எடுத்துச் செல்லப்பட வேண்டும். தோழர்களுக்கு குடும்பம் முதன்மையான தாகவும் கட்சி வேலைகள் அடுத்ததாகவும் இருக்கிற முன்னுரிமை மாற்றப்பட வேண்டும். கட்சி வேலைகளுக்குக் கூடுதல் நேரம் தர வேண்டும். கட்சி பத்திரிகைகள் தொடர்ந்து வாசிக்கப்பட வேண்டும். அரசியல், கருத்தியல் கல்வி தரப்பட வேண்டும். வெகு மக்கள் அமைப்புக்களின் வேலைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

தோழர் வெங்கட்ராமன், திருநெல்வேலி

மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டும் என முடிவு செய்திருக்கிறார்கள். கருணாநிதி எதிர்ப்பு வாக்குகளால்தான் ஜெயலலிதா வெற்றி பெற்றுள்ளார்.

நாம் மக்கள் கோரிக்கை சாசனத்தில் முன்வைத்துள்ள கோரிக்கைகள்தான் அவர்கள் தேர்தல் வாக்குறுதிகளாக வந்துள்ளன.

ஆனால் போராட்டங்களுக்கு மாலெ கட்சி, வாக்குகளுக்கு பிற கட்சிகள் என்று மக்கள் கருதுகிறார்கள். உள்ளாட்சித் தேர்தல்களில் இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

மொத்த மாவட்டக் கமிட்டியும் முழுமையாக வேலைகளில் ஈடுபட வேண்டும். உள்ளூர் மட்டத்தில் ஆழமான வேலைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பெண் ஊழியர்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

அசாம்

காங்கிரஸ் எதிர்பாராத விதமாக தீர்மானகரமான பெரும்பான்மை பெற்றிருக்கிறது

எல்லா அரசியல் வட்டார, ஊடகக் கணிப்புகளையும் தோற்கடித்து எதிர்பாராத விதமாக காங்கிரஸ் அஸ்ஸôம் சட்டமன்றத்தில் உள்ள 126 இடங்களில் 78 இடங்களைக் கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. தருண் கோகோய் தொடர்ந்து மூன்றா வது முறையாக அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறார். காங்கிரசின் இந்த எதிர்பாராத வெற்றி பல கேள்வி களை எழுப்பியுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான அசாம் கன பரிஷத், வாக்கு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்து காங்கிரஸ் இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறது என குற்றம் சாட்டுகிறது. பல தரப்பினரும் இது போன்று புகார் செய்துள்ளனர். இந்த தேர்தலில் அசாம் கன பரிஷத்தான் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. 24 தொகுதிகளில் இருந்து அதன் எண்ணிக்கை 10ஆகச் சரிந்துவிட்டது. அசாம் கன பரிஷத் ஆட்சிக்கு வந்த 1985ல் இருந்து இதுதான் அந்தக் கட்சி பெற்ற மிகக் குறைந்த தொகுதிகள் ஆகும்.

வாக்கு எந்திர தில்லுமுல்லு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், எதிர்க்கட்சியினரிடையே ஒற்றுமையின்மை மற்றும் காங்கிரஸ் வெற்றிகரமாக கையாண்ட பிரித்தாளும் மற்றும் பேசியாளும் போர்த்தந்திர கொள்கை முதன்மையான காரணமாகும். அசாம் கன பரிஷத்தும் பாஜகவும் பின்னடவைச் சந்திக்கிற அதேவேளை முஸ்லீம் ஆதரவு ஏஅய்டி யுஎஃப் தனது எண்ணிக்கையை 9ல் இருந்து 18 என இரட்டிபாக்கியிருக்கிறது.

காங்கிரஸ் கூட்டாளியான போடோ மக்கள் முன்னணி அதன் எண்ணிக்கையை 10ல் இருந்து 12 ஆக உயர்த்தியுள்ளது. ஏஅய்டியு எஃப்பின் வெற்றி இடம் பெயர்ந்த முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் கிழக்கு அஸ்ஸôம் பகுதியிலிருந்து வந்திருக்கிறது. இங்கு 2006ல் 3 இடங்களைப் பிடித்த இந்த அமைப்பு 2011ல் 13 இடங்களை பிடித்துள்ளது. போடோ முன்னணி பெற்ற வெற்றி முக்கியமாக போடோ மக்கள் மத்தியிலிருந்து பெற்றதாகும்.

தேர்தலுக்கு சற்று முன்புதான் காங்கிரஸ் உல்ஃபா அமைப்புடன் அமைதி முயற்சியைத் துவக்கியது. அது காங்கிரசிற்குச் சாதகமான சூழலை உருவாக்கியது. எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால் மீண்டும் கலகக்காரர்கள் தலைதூக்க அது உந்துதல் அளிக்கும் அல்லது சூழலை உருவாக்கும் என மக்கள் கருதினர். காங்கிரஸ் எல்லா தரப்பினருக்கும் எவ்வளவு சிறிய மலைவாழ் இனங்களானாலும் அவர்களையும் உள்ளடக்கிக் கொள்ள மேம்பாட்டுக் கவுன்சிலை அமைத்தது.

உதாரணமாக மிசிங், ரிபா, திவா சுயாட்சிக் கவுன்சில்கள் மட்டுமல்லாது தெங்கல் கசாரி, சோனேவால் தியோரி, மன் - டாய் மொழி பேசும் பிஷ்னுபிரியா மணிபுரி, மணிபுரி, நத்யோகி இனங்கள் ஆகியவற்றிற் கும் கவுன்சில் அமைத்தது. இதேபோல், கம்பளி போர்வைகள் விநியோகம், கொசுவலை நெய்வதற்கு நூல் விநியோகம், அன்ன சுரக்ஷா யோஜனா, மஜானி - மனோனி, அய்டியோ - பைடியோ இன்னும் இது போன்ற பெண்கள் நலத்திட்டங்கள் ஆகியவை பரந்த, கிராமப்புற மக்கள் மத்தியில் ஆளும் கட்சி ஆழமாக வேரூன்ற உதவின.

மாலெ கட்சிக்கு முக்கியமான இடங்களை இகக விட்டுக் கொடுக்க மறுத்ததால் இடதுசாரிகளுக்குள் இடங்களைப் பகிர்ந்து கொள்வது சாத்தியமாக வில்லை. (இதில் ஒரு இடத்தில் இகக அசாம் கன பரிஷத்தை ஆதரித்தது). இகக(மாலெ) 8 இடங்களில் போட்டியிட்ட தோடு, இகக(மா) மற்றும் ஃபார்வர்டு பிளாக் வேட் பாளர்களையும் கர்பி ஆங்லாங் பகுதியில் சுயேச்சை யாகப் போட்டியிட்ட அமைதி ஒப்பந்தத்திற்கான மக்கள் ஒருங்கிணைப்பு அமைப்பின் வேட்பாளர்களையும் ஆதரித்தது.

நாம் கிட்டத்தட்ட 25,000 வாக்குகள் பெற்றோம். சோனித்பூர் மாவட்டம் பிஹாலி தொகுதியில் 12,784 வாக்குகள் பெற்று மூன்றாவதாக வந்தோம். திப்ரூகர் மாவட்டத்தில் டின்காங் மற்றும் ஹோக்ராட் மாவட்டத்தில் டியோக் ஆகிய தொகுதிகளில் நம் வாக்குகள் சிறிது உயர்ந்திருந்தாலும் தேயிலைத் தோட்டப் பகுதியில் போட்டியிட்ட பிஹாலி, சபுவா தொகுதிகளில் நம் வாக்கு எண்ணிக்கை குறைந்துள் ளது. இம்முறை காங்கிரஸ் ஆதிவாசி - தேயிலை இனத்தவர் பெருவாரியாக வாழும் தொகுதிகளில் அனைத்திலும் வெற்றி பெற்றிருக்கிறது. தேயிலைத் தோட்டப் பகுதியில் நம் சரிவைப் பற்றி ஆழமான, காத்திரமான பகுப்பாய்வு அவசரமாக அவசியம்.

இகக, இககமா கட்சிகளைப் பொறுத்தவரை இருந்த எம்எல்ஏக்களை இழந்துவிட்டார்கள். இகக ஓர் இடத்தை காங்கிரசிடமும் இகக(மா) பெற்றிருந்த தில் ஒரு இடத்தை காங்கிரசிடமும் மற்றொன்றை பாஜகவிடமும் இழந்துவிட்டன. கர்பி ஆங்லாங் பகுதியில் நாம் போட்டியிடவில்லை. காங்கிரஸ் எதிர்ப்பு வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தோம். 4 இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று மலைமாவட்டங்களில் தன் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டது.

(லிபரேசன், ஜுன் 2011 இதழில் இருந்து)

கேரளா

கூட்டணிகள் மாறி மாறி வரும் மரபை


கேரளா கிட்டத்தட்ட உடைத்துவிட்டது

ஆட்சியில் இருந்த அரசாங்கமும் ஆட்சி செய்த கூட்டணியும் 72 இடங்களுக்கு எதிராக 68 இடங்களைப் பெற்று அப்போதைய எதிர்க்கட்சிக்கு செயலூக்கமான சவால் விட்டிருக்கிறது. இது கேரளாவின் 40 ஆண்டு கால வரலாற்றில் கேள்விப்பட்டிராத ஒன்று. கேரளா, ஒவ்வொரு முறையும் ஆட்சியாளர் களை மாற்றுவது என்ற நிலைநிறுத்தப்பட்ட மரபை உடைக்க கிட்டத்தட்ட தயாராகி விட்டது.

இடது ஜனநாயக முன்னணியின் முன்னேறிய செயல்பாட்டுக்கான வெகுமதி வயது முதிர்ந்த, வெளிப்படையாகப் பேசக் கூடிய மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தனையே சாரும் என சொல்லப்படுகிறது. (2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் 2010 பஞ்சாயத்துத் தேர்தலிலும் இடது முன்னணி துடைத்தெறியப்பட்டது.)

இதில் உண்மை இருக்கவே செய்கிறது. ஊழலுக்கு எதிரான பெருவாரியான மக்களின் மனோநிலையோடு அவர் தன்னை இனங்காண வைக்க முடிந்தது. ஊழலுக்கு எதிரான அவரது நீண்ட போராட்டமும் அய்க்கிய ஜனநாயக முன்னணியின் இன்னும் பல தலைவர்களை சிறைக்கனுப்புவேன் என்ற உத்தரவாதமும் உண்மையிலேயே மக்களின் மனோநிலையை பிரதிபலிப்பதாக இருந்தது. நன்கு அறியப்பட்ட கேரள காங்கிரஸ்(பி) கட்சியின் தலைவரான, பாலகிருஷ்ண பிள்ளை நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் சிறைக்கு அனுப்பப்பட்டதற்கு அச்சுதானந்தனின் தலையீடு அந்த வழக்கில் முக்கிய பங்காற்றியதாகக் கருதப்படுகிறது. அச்சுதானந்தனின் தூய்மையான, கண்ணியமான தோற்றம் ஊழலுக்கு எதிரான நிகழ்ச்சிநிரலில் அவருக்குத் தேவையான உந்துதலையும் வெகுமதியையும் தந்தது.

அச்சுதானந்தன் தலைமையிலான பிரச்சாரம் வறிய மக்களின், விளிம்புநிலை மக்களின் பல்வேறு பிரச்சனைகளை அதிலும் குறிப்பாக பெண்கள் மீதான பாலியல் சுரண்டல் பற்றிய பிரச்சனைகளை வெற்றிகர மாக வெளிக் கொண்டுவந்தது. கேரளா பல்வேறு அம்சங்களில் முன்னேறிய மாநிலமாக விளங்கினாலும் பெண்கள் பற்றிய கேள்வியில் ஆபத்தான விதத்தில் பிற்போக்கானதாகவே இருந்து வருகிறது. கேரளாவின் எந்த அரசியல் கட்சியும் இது விசயத்தில் காத்திரமாக எதையும் செய்யவில்லை. நன்கு அறியப்பட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர்களில் ஒருவரான குன் ஹலி குட்டி பழைய ஐஸ்கரீம் பார்லர் பாலியல் தொழில் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது தொடர்பாக சில புதிய தகவல்கள் வெளியானதை அடுத்து அச்சுதானந்தன் புதிய விசாரணைக்கு உத்தரவிட்டது கேரள தேர்தல் களத்தில் பெரும் பேசும் பொருளாக மாறியது.

மார்க்சிஸ்ட் கட்சிக்குள் பழிவாங்கப்பட்டவர், தியாகி என்ற தோற்றம் அச்சுதானந்தன் மக்கள் மத்தியில் நெருக்கத்தை ஏற்படுத்த உதவியது. இது முக்கியமானதாகும். கேரள மக்கள் மார்க்சிஸ்ட் கட்சி யின் அதிகாரபூர்வ தலைமையான மாநிலச் செயலாளர் பினரயி விஜயன் மற்றும் மேற்பார்வையிடும் அரசி யல் தலைமைக்குழு ஆகியவற்றை விட அச்சுதானந் தன் மீதே கனிவு கொண்டிருந்தார்கள். சுவாரஸ்மாக, அச்சுதானந்தன் முதல்வராக இருந்தாலும் மக்களால் எதிர்க்கட்சித் தலைவராகவே பாவிக்கப்பட்டார்.

இறுதியாக இசுலாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக அச்சுதானந்தன் அவ்வப்போது திட்டமிட்டு நடத்திய பேச்சுக்களும் கேரளாவை முஸ்லீம் பெரும் பான்மை மாநிலமாக மாற்ற சதி நடக்கிறது என்ற கூற்று களும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக இந்துக்கள் வாக்குகள் உறுதிபட உதவியது என்றே நம்பப்படு கிறது. பிரச்சாரத்தின் போக்கில் அய்க்கிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால் கேரளா ஒரு கிறிஸ்தவரை (உம்மன் சாண்டி) முதல்வராகவும் ஓர் இசுலாமியரை (குன்ஹலி குட்டி) துணை முதல்வராகவும் கொண்டிருக்க வேண்டும் என்று அச்சுதானந்தன் வகுப்புவாத மொழியில் பேசினார்.

இவ்வாறு கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி ஓர் இந்து முனையை எடுத்துக் கொண்டதால், நல்ல அமைப்பு வலைப்பின்னல் இருந்தும் பெரும்முயற்சி கள் எடுத்தும் பாஜகவால் ஓர் இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. ஆனால், இந்த அணுகுமுறை கிறிஸ்தவ, முஸ்லீம் சமூகத்தினரை மார்க்சிஸ்ட் கட்சி யிடமிருந்து அந்நியப்படுத்தி இறுதியில் இடது முன்னணி தலைவிதிக்கு முடிவு கட்டியது.

இடது முன்னணி இந்தச் சமூகங்களில் இருந்து எந்த அளவிற்கு தனிமைப்பட்டிருக்கிறது என்பதை யும் முஸ்லீம், கிறிஸ்தவ வாக்காளர்கள் எந்த அளவிற்கு உறுதிப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் முஸ்லீம் லீக் போட்டியிட்ட 24 இடங்களில் 20 இடங் களில் வெற்றி பெற்றிருப்பதிலிருந்தும் கேரளா காங் கிரஸ் கட்சி போட்டியிட்ட 15 இடங்களில் 9 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதிலிருந்தும் அளவிட முடியும். இதற்கு முரணாக காங்கிரஸ் போட்டியிட்ட 82 தொகுதிகளில் 38 தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்ட 84 தொகுதிகளில் 45 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

(லிபரேசன், ஜுன் 2011 இதழில் இருந்து)Search