COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Sunday, May 8, 2011

தீப்பொறி, மே 2011

ஏப்ரல் 22 அறைகூவல்


கட்சியின் 42ஆவது நிறுவன தினத்தில் மொத்த கட்சிக்கும்


இகக மாலெ மத்திய கமிட்டியின் செய்தி

தோழர்களே!

கட்டுக்கடங்காத ஊழலும் பெருங்குழும நிறுவனங்களின் கொள்ளையும் நமது விலைமதிப்பற்ற தேசிய செல்வாதாரங்களை எப்படி சூறையாடுகின்றன என்று நமக்கு நன்கு தெரியும். அரசு, ஜனநாயகக் குரலுக்கு கட்டமைக்கப்பட்ட விதத்தில் எப்படி வாய்ப்பூட்டு போடுகிறது என்று நமக்கு நன்கு தெரியும். ஆனால் இருண்ட மேகங்களில் ஒளிக்கீற்றுக்கள் எப்போதும் தோன்றுகின்றன. ஆட்சியாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும், நாட்டை அனைத்தும் தழுவிய நெருக்கடியில் தள்ளியுள்ள பேரழிவுமிக்க கொள்கைகள் பின்னோக்கித் திருப்பப்பட வேண்டும் என்ற மனோநிலை மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதை நாம் காண முடிகிறது; உணர முடிகிறது.

வருகிற ஏப்ரல் 22 அன்று நாம் இகக மாலெயின் 42ஆவது நிறுவன தினத்தை அனுசரிக்கும்போது, மக்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்த, அதை வெற்றியை நோக்கி முன்னே எடுத்துச் செல்ல, அனைத்தும் தழுவிய முன்முயற்சி எடுக்க, அனைத்து சாத்தியமான முயற்சிகளையும் மேற்கொள்ள நாம் உறுதியேற்க வேண்டும். நமது நேசத்துக்குரிய கட்சியை அனைத்து விதங்களிலும் வலுப்படுத்த, ஆற்றல்மிக்கதாக்க நாம் எழ வேண்டும். மக்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். நமது தியாகிகளின் நம்மை விட்டு பிரிந்த தோழர்களின் நிறைவுபெறாத கடமைகளை முன்னெடுத்துச் செல்ல நாம் எழ வேண்டும்.

இகக மாலெ நீடூழி வாழ்க!

போராடத் துணிவோம்! வெற்றி பெறத் துணிவோம்!

துணிச்சல்மிக்க, போராடுகிற இந்திய மக்கள் வெல்லட்டும்!

கட்சியின் 42ஆவது நிறுவன தினத்தில்

அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும்

புரட்சிகர வாழ்த்துக்களுடன்மத்திய கமிட்டி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)தலையங்கம்

தமிழக சட்டமன்ற தேர்தல்கள் தாண்டி

ஏப்ரல் 13க்கும் மே 13க்கும் இடையில் தமிழகம் காத்திருக் கிறது. ஆனால் ஒரு பெரிய உற்சாகமான பரபரப்பு எங்கும் இல்லை. திமுக முகாம் பெரும் கவலையில் உள்ளது. கூட்டணியின் முக்கிய தளபதி சிதம்பரம், மானா மதுரையில், மே 1 அன்று, தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் எனக் கணிக்க முடியாத நிலையே உள்ளது என்றும், முடிவு எப்படி இருந்தாலும் காங்கிரசார் பக்குவமாக அதற்கேற்பச் செயல்பட வேண்டும் என்றும் பேசியதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. கருணாநிதிக்கு வேறு பெரிய கவலை. எது எப்படி ஆனாலும் அலைக்கற்றை ஊழல் விசாரணை வழக்கு என்கிற கத்தி தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. அஇஅதிமுக முகாமில், மே 13 இரவு சென்னை புறப்பட பலரும் விமானங்களில் ரயில்களில் பேருந்துகளில் பயணச் சீட்டுக்களை முன்பதிவு செய்துள்ளார்களாம்!

அலைக்கற்றை ஊழலில் இரண்டாவது குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர் சேர்க்கப்பட்டுள்ளது, தயாளு அம்மை யார் பெயர் சேர்க்கப்படவில்லை என்பது ஒரு முக்கியச் செய்தி. சிறீலங்கா அரசு, ராஜபக்சே அரசு, தமிழ் மக்களுக்கெதிராகப் போர்க் குற்றம் புரிந்துள்ளதாக அய்நா அறிக்கை தந்துள்ளது மற்றொரு முக்கியச் செய்தி. துணை போன குற்றவாளிகளான காங்கிரசும் கருணாநிதியும் நாடாளுமன்றத் தேர்தலில் தப்பினார்கள். சட்டமன்றத் தேர்தல் தாண்டி மக்கள் மன்றத்திலும் தண்டிக்கப்பட வேண்டும். ஜெயலலிதா வசதிக்கேற்ப, நேரத்திற்கேற்ப பேசுவதை தமிழக மக்கள் நிச்சயம் நம்ப மாட்டார்கள்.

அடுத்த ஆட்சி?

யார் வந்தாலும் கூட்டணி ஆட்சிதான் என்றும் தமிழ் நாட்டில் கூட்டணி சகாப்தம் துவங்கும் என்றும் பேசப்படுகிறது. அரசாங்கத்தில் ஒரு கட்சி மட்டும் பொறுப்பில் இருக்குமா அல்லது கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு தருமா என்பது வேண்டுமானால் இனி முடிவாக வேண்டி இருக்கும். அண்ணா துரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்,. ஜெயலலிதா எல்லோருமே கூட்டணிகளாகத்தான் தேர்தல்களைச் சந்தித்துள்ளனர். கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, மூவருமே காங்கிரசுடன் கூட்டணி கண்டுள்ளனர். கருணாநிதி, ஜெயலலிதா இரண்டு பேருமே பாஜகவுடன் கூட்டணி ஏற்படுத்தி, தமிழகத்தில் மதவெறி பாசிஸ்ட்களுக்கு முகவரி ஏற்படுத்தித் தந்தவர்கள்.

ஏடறிந்த வரலாற்று காலத்திலிருந்து, தமிழ்ச் சமூகம் வர்க்கங்களாகப் பிளவுண்டுள்ளது. சாதியை மய்யங்கொண்டு அரசியல் புதிய புதிய வடிவங்களில், தொடரவே செய்கிறது. திமுக, அஇஅதிமுக என்ற திராவிட முகாம்களிலிருந்து வந்த இரு பெரும் கட்சிகளுமே, காலப் போக்கில், தமது சமூக அடித்தளத்தில், அரசியல் செல்வாக்கில் கணிசமான சரிவைக் கண்டுள்ளன. ஆக, கூட்டணிகள் தேர்தல் அரசியலின் தவிர்க்க முடியாத யதார்த்தம். இந்த யதார்த்தத்தின் தர்க்கரீதியான நீட்டிப்பாக மட்டுமே கூட்டணி அரசாங்கம் இருக்கும். மூத்த, விவரமான முதலாளித்துவ அரசியல்வாதியான சிதம்பரமே, முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், அதற்கேற்ப அனுசரித்து நடப்போம் என்று சொல்லும்போது, நாமும் அதற்குமேல் கணிப்புக்களுக்குள் செல்ல வேண்டிய அவசியமில்லை.

நிலையான அரசாங்கம்

நிலையான அரசாங்கம் பற்றிய ஒரு கேள்விக்கு தோழர் வினோத் மிஸ்ரா, அரசாங்கம் மக்களுடையதாக இல்லாமல் பண மூட்டைகளுடையதாக இருக்கும்போது, அது சுரண்டலைக் காப்பாற்றும் ஒடுக்குமுறைக் கருவியாக இருக்கும்போது, அது நிலையானதாக இருப்பதைக் காட்டிலும், நெருக்கடிகளில் சிக்கி நிலையற்றதாக இருப்பதே, உழைக்கும் மக்கள் கோணத்தில் உசிதமானது என்றார். மாலெ கட்சியைப் பொறுத்தவரை, ஒரு கட்சி அரசாங்கமாக இருந்தாலும் சரி, கூட்டணி அரசாங்கமாக இருந்தாலும் சரி, அந்த அரசாங்கம் பெருமுதலாளித்துவ வளர்ச்சிப் பாதையைத்தான் பின்பற்றும் என்பதில் தெளிவாக உள்ளது. தான் வரித்துக் கொண்டுள்ள புரட்சிகர எதிர்க்கட்சிப் பாத்திரத்தை நிச்சயம் வகிக்கும்.

இரு கழக ஆதிக்கம் நிரந்தரமானதா?

எல்லாமே மாறும் என்ற விதியைத் தவிர அனைத்தும் மாறும். திமுக, அஇஅதிமுக இரண்டு கட்சிகளுமே கூட்டணிகளுக்குத் தலைமை தாங்குகிறார்கள். இது உண்மையே. அதே நேரம், அவர்கள் இருவருக்குமே, தமது சமூக அடித்தளம், அரசியல் செயல்வாக்கு சரிந்துள்ள நிலையில், வேறு வேறு கட்சிகளின் பின்னால் உள்ள சமூக அடித்தளத்தோடு, அரசியல் செல்வாக்கோடு உறவாட வேண்டிய அவசியம் உள்ளது. தனிப்பெரும்பான்மை பெற கணிசமான இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற ஆவலும் தவிப்பும் இருந்தாலும் 120, 160 இடங்கள் தாண்டி நிற்க முடியவில்லை.

இவர்களோடு கூட்டணி சேர்பவர்களின் நிலை?

மிகவும் கவலைக்குரியது, தலித் அடையாள அரசியலோடு துவங்கிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் புதிய தமிழகத்தின் நிலைதான். இவர்களது துவக்கமே, கழக அரசியல் ஆதிக்கத்தில் தலித் மக்கள் ஓரங் கட்டப்படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள் என்ற புள்ளியில்தான் நிகழ்ந்துள்ளது. இன்றைக்கும் தமிழகத்தில் தீண்டாமைச் சுவர்கள் இருக்கின்றன. இரட்டை டம்ளர் முறை நீடிக்கிறது. கோவில் நுழைவு மறுக்கப்படுகிறது. ஊர் பொது விஷயங்களில் பங்கு இல்லை. தலித் ஊராட்சித் தலைவர்களுக்கு பிரதிநிதி ளுக்கு சுதந்திரமோ கவுரவமோ கிடையாது. பரளிபுதூரில் மூர்க்கமாக தலித் மக்கள் தாக்கப்பட்ட பின்னணியில்தான், கச்சகட்டியில் தலித் குழந்தை நரபலி தரப்பட்ட பின்னணியில்தான், திருமாவளவன் கருணாநிதியே முதல்வர், ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என்கிறார்.

கிருஷ்ணசாமி அம்மா ஒதுக்கிய எண்ணிக்கையை மட்டும் இல்லாமல், அம்மா கட்சியில் தலித் மக்கள் ஒதுக்கப்படுவதையும் ஏற்றுக் கொண்டாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அடையாள அரசியலைத் துறந்து, ஜனநாயகக் கோரிக்கைகளிலிருந்து விலகி, கூட்டணி மூலம் மட்டுமே அதிகாரத்தில் சிறிய பங்காவது பெற முடியும் என்ற நிலையைத் தேர்வு செய்கின்றனர். சொந்த அடையாளத்தைத் தொலைக்காமல் கூட்டணி ஜோதியில் கலக்க முடியாது. நந்தன் எரிந்துதான், சிவனுடன் அய்க்கியம். ஆனால் ஒரு விஷயம் தெளிவாக உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி கூட்டணி பலம் தேடுவதைத் தாண்டி, கூட்டணி தலைவர் களை பயம் வாட்டி வதைக்கிறது.

கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாமன்னர் போல், மகாராணி போல் மக்களை அணுகுகிறார்கள், அரசு கஜானா பணத்தை தாம் தருவது போல் காட்டுகிறார்கள் என்பவற்றை எல்லாம் தாண்டி, அவர்களது இலவசங்கள், சலுகைகள் என்ற வாக்குறுதிகள் எதனைக் காட்டுகின்றன?

மக்கள் வறுமையில் வாடுகிறார்கள், அவர்கள் வாழ்க்கையில் வளர்ச்சி, முன்னேற்றம் இல்லை; இந்த உண்மை கழகங்களுக்குத் தெரியும். வாங்கும் சக்தி உயர்ந்துவிட்டது என்று வக்கணையாகப் பேசும் கருணாநிதி, ஏழைகளுக்காக இலவசம் எனப் பேச வேண்டிய கட்டாயம் உள்ளது. மக்கள் கை ஏந்தி நிற்காத தமிழகத்தைக் கொண்டு வர, தம் ஆட்சிக் காலம் முழுவதும் கை ஏந்த வேண்டும் என ஜெயலலிதா சொல்கிறார்.

முகேஷ் அம்பானி மூன்று பேர் வாழும் தன் அண்டில்லா என்ற 27 அடுக்கு மாளிகைக்கு மாதம் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் செலவழிக்கிறார் என்ற பின்னணியில்தான், ஜெயலலிதா, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் 20 லிட்டர் நல்ல குடிநீர் என்கிறார். இரு கழகங்களும் தமிழ்நாட்டுப் பெண்களைக் குறிவைத்தனர். மிக்சி, கிரைண்டர், தாலிக்குத் தங்கம், ஆடு, மாடு, கடன், மேலும் மேலும் கடன், ஏற்றுமதி ஆடை மண்டலங்கள் என்ற வாக்குறுதிகளின் பின்னால், தாங்கொணா துயரத்தில் இருக்கும் தமிழ்நாட்டுப் பெண்கள் பற்றிய இவர்களது மிரட்சியும் பயமும் வெளிப்படுகிறது.

போராடும் இடதுசாரி அரசியலுக்கு எதிர்காலம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சிகள், சுதந்திரமான இடதுசாரி அரசியலை மறந்துவிட்டார்கள். சட்டமன்றத் தேர்தலில் மக்கள் கோரிக்கைகளை, சுதந்திரமாக முன்வைக்க அவர்களால், சிறுமுயற்சி எடுக்கக் கூட முடியவில்லை. முதலாளித்துவ எதிர்ப்பை மேற்குவங்க கேரள தேர்தல் முடிவுகள், தேர்தலை மட்டுமே மய்யங்கொண்ட அவர்களது நாடாளுமன்ற வால்பிடி, சந்தர்ப்பவாத அரசியலுக்கு மேலும் நெருக்கடியை நிச்சயம் தரும். அவர்கள் பின்னால் உள்ள போராடும் அணிகள், ஒரு கட்டத்திலாவது, கருணாநிதி, ஜெயலலிதா விஷவிட்டத்தை விட்டு கட்சி வெளியே வராவிட்டால் தாம் வெளியேறியாக வேண்டும் என முடிவு செய்வார்கள்.

தமிழ்நாட்டில் இடதுசாரி இயக்கத்தில், மாவோயிஸ்ட் வழிவிலகல்கள் இல்லை. புரட்சி செய், வாக்களிக்காதே எனப் பேசும் குட்டிமுதலாளித்துவ வாய்ச்சவடால் போக்கு ஒன்றே இருக்கிறது. கடினப்பட்டு ஆழமாக வேர்க்கால் வரை அடிப்படை வர்க்கங்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் வெகுமக்கள் அரசியல் வேலை எப்படி செய்வது என்பது பற்றிய கவலை அவர்களுக்கு இல்லை. முழக்கங்கள், வருடாந்திர நிகழ்ச்சிகள், தீவிரவாத வாசனையுடன் ஏதாவது எழுதுவது பேசுவது என்று சுலபமாக புரட்சியை அவர்களும் சுருக்கிவிட்டார்கள். புதிய ஜனநாயகத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி களுக்கு புதிய ஜனநாயகமும் வலு சேர்ப்பார்கள். இரண்டு பேரும் சுதந்திரமான போராடும் பாட்டாளி வர்க்க அரசியலுக்கு, முதலாளித்துவ அரசியலை, அதன் கட்சிகளை எல்லா தளங்களிலும் களங்களிலும் மோதி எதிர்கொள்கிற, பாட்டாளி வர்க்க அரசியலுக்கு வலு சேர்க்கமாட்டார்கள்.

மாலெ கட்சி தமிழ்நாட்டின் வேறுவேறு பகுதிகளில், 11 தொகுதிகளில், முதலாளித்துவ வளர்ச்சிப் பாதைக்கு எதிரான மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து, உழைக்கும் மக்களை அரசியலின் நடுநாயகத்துக்கு கொண்டு வருவதை நோக்கி, தனது தேர்தல் பிரச்சார இயக்கத்தை கட்டமைத்தது.

மாலெ கட்சிக்கு களம் காத்திருக்கிறது. வரலாறு வழிநெடுகவும் சில குறிப்பிட்ட தருணங்களில் கம்யூனிஸ்ட்களுக்கு வாய்ப்புக்களை கூடுதலாகவும் வழங்குகிறது. கூடவே சவால்களையும் சேர்த்துத்தான் தூக்கிப் போடுகிறது.

ஏப்ரல் 22, கட்சி நிறுவன தினத்துக்குக் கட்சி அழைப்பு தந்துள்ளது. சூழலுக்கேற்ப எழுங்கள். போராடத் துணியுங்கள். வெற்றி பெறத் துணியுங்கள்.

சுரண்டல், ஒடுக்குமுறைச் சமூகத்தைப் புரட்டிப் போடுவது, நிலவுகிற சமநிலையை தலைகீழாக மாற்றுவதுதான் புரட்சி. புரட்சிக்குத் தயாராக, புரட்சிகர எதிர்க்கட்சிப் பாத்திரம் ஆற்ற வேண்டும்.

சமூகத்தை மாற்றும் போராட்டத்தின் மூலம் நாம் நம்மை மாற்றிக் கொள்கிறோம்.

நாம் நம்மை தயவுதாட்சண்யமின்றி மாற்றிக் கொள்வதன்மூலம்

சமூகத்தை மாற்றும் போராட்டத்திற்கு வலு சேர்ப்போம்!

காங்கிரஸ் - பாஜக நிழல் சண்டை

காண்பவர் கண்களுக்கு காங்கிரசும் பாஜகவும் ஒருவரை ஒருவர் ஒழித்துக்கட்ட முயற்சிப்பதாகவே ஒரு தோற்றம் தெரியும். தோற்றத்திற்குள் ஊடுருவிப் பார்த்து நிஜம் என்ன எனக் காண்பது மார்க்சிஸ்டுகளின் கடமை.

அலைக்கற்றை ஊழலில் பொதுக் கணக்கு குழு விசாரணையா, கூட்டுப் பாராளுமன்றக் குழு விசாரணையா என்ற விவாதத்தில் நாடாளுமன்றம் பல நாட்கள் முடங்கியது. நாடாளுமன்ற வெற்று விவாத மூடுதிரைக்குப் பின்னால் அரசு எப்படி இயங்கும் என்பதை தோழர் லெனின் தமது ‘அரசும் புரட்சியும்’ நூலில் சுட்டிக் காட்டுகிறார். ‘‘‘அரசுக்குரிய’ மெய்யான வேலை திரைக்குப் பின்னால் நடத்தப்படுகிறது; இலாக்காக்களும், அமைச்சகச் செயலகங்களும், படைத் தலைமையகங்களும் இதை நடத்துகின்றன. பொதுமக்களை ஏய்ப்பதற்கான வாய்ப்பேச்சு பேசுவதே நாடாளுமன்றத்தின் பணி.’’

நிழல் சண்டை

கூட்டு நாடாளுமன்றக் குழு வேண்டும் எனக் கேட்ட பாஜக இன்று முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பொதுக் கணக்குழு அறிக்கையைப் பிடித்துக் தொங்குகிறது. பொதுக் கணக்குக் குழுவே போதும் என வலியுறுத்திய காங்கிரஸ், இன்று நாடாளுமன்றக் கூட்டுக்குழு என்கிறது. பொதுக் கணக்குக் குழுவின் அறிக்கை இன்று அந்தரத்தில் தொங்குகிறது. 21 பேர் கொண்ட குழுவில், பாஜக, தெலுங்குதேசம், அஇஅதிமுக, மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவற்றின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முரளி மனோகர் ஜோஷி அறிக்கையை ஆதரிக்கின்றனர். காங்கிரஸ், மத்தியப் புலனாய்வுத் துறை விசாரணை என்ற தனது வலிமையான வழக்கமான ஆயுதம் கொண்டு, உத்தரப்பிரதேசத்தில் தன்னோடும், தமக்குள்ளும் போட்டியிடும் சமாஜ்வாதி கட்சியையும், பகுஜன் சமாஜ் கட்சியையும், அறிக்கைக்கு எதிராக, வாக்களிக்க வைத்தது. காங்கிரசோடு திமுக நின்றதில் வியப்பேதுமில்லை. இந்த வெற்று விவாதம், இனி வரும் சில நாட்களில் ஊழல், லோக்பால் மற்றும், நாட்டு மக்களை வாட்டும் மற்ற பிரச்சனைகளிலிருந்து கவனத்தைத் திருப்ப, நன்றாகவே உதவும்.

காங்கிரசும் பாஜகவும் நிழல் சண்டைகளுக்கு அப்பால்,
நிஜமான பிரச்சனைகளில் எப்படி எல்லாம் கரம் கோர்க்கிறார்கள்?

ஏகாதிபத்திய ஆதரவு தேச விரோத நடவடிக்கைகள், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போர்த்தந்திரக் கூட்டு, வலுவடையும் அமெரிக்க - இஸ்ரேல் - இந்திய அச்சு, ஏகாதிபத்திய விசுவாசம் என்ற பிரச்சனைகள் நாட்டுப் பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியரும் கவலை கொள்ளும் விஷயங்கள். விக்கிலீக்ஸ் கசிவுகள், அமெரிக்காவுக்கு காங்கிரஸ் மீது இருக்கும் இரும்புப் பிடியையும், காங்கிரஸ் தலைவர்களுக்கு அமெரிக்க அதிகாரிகளிடம் உள்ள அந்தரங்க நட்பையும் காட்டுகின்றன. பாஜக, தாங்கள் மக்களை ஏமாற்ற அவ்வப்போது, அமெரிக்காவை எதிர்ப்பது போல் காட்டுவதை எல்லாம் கண்டுகொள்ள வேண்டாம் என்கிறது. அருண் ஜெட்லி, தாம் எப்படி இயல்பிலேயே அமெரிக்க ஆதரவாளர் என்பதையும், இந்துத்துவா என்பது கூட தங்களுக்கு ஒரு சந்தர்ப்பவாத ஆயுதம்தான் என்றும் அமெரிக்க அதிகாரிகளிடம் மனம் விட்டுப் பேசுகிறார்.

அமெரிக்காவின் கேடுகெட்ட கூட்டாளியான இஸ்ரேலுடன், பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான ஒரு மூர்க்கமான இன அழிப்புப் போரில் ஈடுபட்டுள்ள, அரபு மக்களை அடக்கி வைக்க ஆனதெல்லாம் செய்கிற, ஈரானே இல்லாமல் போக வேண்டும் எனத் துடிக்கிற இஸ்ரேலை, காங்கிரசும் பாஜகவும் போட்டி போட்டுக் கொண்டு பலப்படுத்தினார்கள்.

இந்தியா - இஸ்ரேல் ஆயுத வியாபாரம் புதிய சிகரங்களைத் தொட்டுள்ளது. சிறீலங்காவின் இராஜபக்சே தமிழ் மக்களுக்கு எதிரான போர்க் குற்றங்களில் ஈடுபட்டனர் என்ற அய்நா அறிக்கை மீது இந்திய அரசு ஏதும் செய்யாமல் இருப்பதற்கும், இனப்படுகொலைக்கு புலிகள் அழித்தொழிப்புக்கு உதவிய போர்க் குற்றவாளிகளோடு சதி செய்ததற்கும், இந்தியா - இஸ்ரேல் - அமெரிக்கா அச்சு மிக முக்கியக் காரணம். அமெரிக்காவோடு சேர்ந்து சீனாவைக் கட்டுப்படுத்துவது என்பதிலும், காங்கிரஸ் - பாஜகவிற்கு கருத்தொற்றுமை உண்டு. தமிழ் தேசியம் பேசும் சிலர் இஸ்ரேல் போல் இருக்க வேண்டும் என்று சொல்லியும், சீனாவிற்கு எதிராகக் குறிப்பாகப் பேசியும், இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்க மேலாதிக்கம், அதன் பிடியில் இந்தியாவின் துணை மேலாதிக்கம் என்ற பேரழிவுமிக்க ஆபத்துக்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ துணை போகிறார்கள்.

பாகிஸ்தானோடு பகைமை நீடிக்க வேண்டும் என்பதிலும், தொழில் - இராணுவ - அதிகாரத்துவ அச்சைப் பலப்படுத்துவதில், ஆயுதப் போட்டி நீடிப்பதில், காங்கிரசும் பாஜகவும் ஒத்தக் கருத்து கொண்டுள்ளனர். ஏகாதிபத் தியம் நிதி மூலதனம் மூலம் ஆதிக்கம் செய்வது போல், தமது மிகப் பெரிய ஆயுத தளவாட உற்பத்திக்கு நிரந்தரமான, நீடித்த சந்தைகளையும் விரும்புகிறது. கெட்ட போரிடும் உலகம் இல்லை என்றால், சாவு வியாபாரிகளின், ஆயுத வியாபாரம் என்ன ஆகும்?

அணு ஆற்றல் - அணு வல்லரசு

சுனாமியும், பூகம்பமும் அணுக்கசிவு ஆபத்தை ஜப்பான் மூலம் உலகிற்குப் புலப்படுத்தியுள்ளது. பாதுகாப்பான அணு ஆற்றல் என்ற ஒரு விஷயமே இருக்க முடியாது என்பது மேலும் மேலும் தெளிவாகிறது. காங்கிரசும் பாஜகவும் இந்தியாவை ஓர் அணு வல்லரசாக்குவதில் போட்டியிடுகின்றனர். கல்பாக்கம், கூடங்குளம், தாராப்பூர் இந்த வரிசையில் இப்போது பிரான்சு நாட்டு அரிலா ஜய்தாபூரில் உருவெடுக்கிறது. மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். எல்லா அடிப்படை பிரச்சனைகளிலும் ‘எனக்குத் தெரியாது, நான் ஜோதிடர் அல்ல’ எனப் பேசி நழுவும் மன்மோகன், அரிலாவின் அணுமின் நிலையம் கட்டி முடிக்கப்படும், பிறகு போதுமான பாதுகாப்பு இருக்கிறதா என்ற ஆய்வைப் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார். முதன்மை எதிர்க்கட்சி சம்மதமே என மவுனம் மூலம் சொல்கிறது. நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, நாடாளுமன்றத்திற்கும், அணு ஆற்றல் தொடர்பான அனைத்து விஷயங்களும் மூடுமந்திரமே என்பதில் இருவரும் உடன்படுகின்றனர்.

வன்மையோ மென்மையோ, இந்துத்துவா எப்போதும் வேண்டும்

அயோத்தியின் பாப்ரி மசூதி, இந்திய இசுலாமியரை இரண்டாம் நிலையினராக மாற்றுவது, பயங்கரவாதி தேசவிரோதி என்ற சந்தேகத்தை அவர்கள் மீது எப்போதும் பரப்புவது, குஜராத் படுகொலைக்குக் காரணமான நரேந்திர மோடி இப்போதும் முதல்வராக நீடிப்பது, சீக்கியப் படுகொலை, இசுலாமியப் படுகொலைகளுக்கு இன்னமும் நீதி மறுக்கப்படுவது என எல்லா விஷயங்களிலும் இவர்கள் இருவருமே இந்துத்துவாவின் நண்பர்களே.

ஜம்மு காஷ்மீரில் ஒரு வினோதம்

ஏப்ரல் 2011ல் ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற மேலவைத் தேர்தல் நடந்தது. அங்கு ஆட்சியில் தேசிய மாநாட்டுக் கட்சியும் காங்கிரசும் இருக்கின்றன. பாஜகவுக்கு சட்டமன்றத்தில் 11 உறுப்பினர்கள் உள்ளனர். மாற்றி வாக்களியுங்கள் என பல இடங்களில் கேட்கும் பாஜகவின் 7 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்காமல், காங்கிரஸ் தேசிய மாநாடு கட்சி வேட்பாளருக்கு மாற்றி வாக்களித்தனர்! கொள்கை என்பதே சந்தர்ப்பவாதம்தான் என்பது மேலும் தெளிவாக நிரூபணமாகி உள்ளது. நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர், சுஷ்மா ஸ்வராஜ், உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட மத்திய ஊழல் கண்காணிப்பாளர் தாமஸ் நியமனத்திற்கு மன்மோகன் பொறுப்பேற்றுக் கொண்டதால், அவர் பதவி விலக வேண்டியதில்லை என்று சொன்னதையும் இங்கு நினைவில் கொள்வோம்.

நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற மேலவையில்

27.03.2011 அன்று நாடாளுமன்றம் கூடியது. 530க்கும் மேற்பட்ட கனவான்களில் அன்று 159 பேர்தான் அவையில் இருந்தனர். அன்று ஓய்வூதிய நிதி ஒழுங்கமைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு மசோதாவை, அதாவது, 4 கோடி தொழிலாளர்களின் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் மதிப்புள்ள வருங்கால வைப்பு நிதியோடு தொடர்புடைய ஓய்வூதிய நிதியை, பங்குச் சந்தை வர்த்தக சூதாட்டத்திற்குச் செலுத்தும் மசோதாவை, அன்று அவையில் தனக்குப் பெரும்பான்மை உள்ளதா என அறியாமல் காங்கிரஸ் அறிமுகப்படுத்திவிட்டது. திடீரென வாக்கெடுப்பு கோரிக்கை எழுந்தது. காங்கிரசிற்கு விழி பிதுங்கிவிட்டது. காப்பாற்ற இருக்கவே இருக்கிறது பாஜக என பாஜகவை அணுக பாஜகவும் பரந்த மனதுடன், காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களித்தது. 115 பேர் ஆதரிக்க, 43 பேர் எதிர்க்க காங்கிரஸ் வாக்கெடுப்பில் வென்று தப்பித்தது. இந்தியாவைக் கட்டி எழுப்பியவர்களின் ஓய்வூதியத்திற்கு, முதுமைக் கால பாதுகாப்பிற்கு, இருவரும் உலை வைத்து விட்டார்கள். பணியில் இருக்கும் தொழிலாளர்களை மட்டும் விட்டு வைப்பார்களா?

டில்லியில் ஏப்ரல் 30 அன்று ஒரு காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்தில் 10 பேர் வெந்து சாம்பலாகிச் செத்தார்கள். சட்டப்படியான பாதுகாப்பு விதிகள் அமலாகாததுதான் காரணம். நாடெங்கும் ஒவ்வோர் ஆண்டும் பல்லாயிரம் பேர் உடல் உறுப்புக்களை, உயிர்களை, பாதுகாப்பின்மையால் இழக்கிறார்கள். கோடிக்கணக்கானவர்களுக்கு, குறைந்தபட்ச சம்பளம், விடுப்பு, ஈஎஸ்அய், பிஎஃப் என்ற சட்டப் பயன்கள் கிடைப்பதில்லை. ஏட்டில் உள்ள சட்டங்கள் நடை முறையில் அமலாவதில்லை. சட்டங்கள் கறாராக அமலாக வேண்டும் என உழைக்கும் மக்கள் கோருகிறார்கள். ஆனால், கொழுத்த முதலாளிகளோ, சட்ட அமலாக்கத்தை ஆய்வு செய்ய வேண்டிய, ஆய்வாளர்கள் ராஜ்யத்தால் ஒரே கெடுபிடி என்றும், தொழிலே நடத்த முடிவதில்லை என்றும் கூப்பாடு போட்டார்கள். அவர்கள் காலால் இட்டதை தலையால் செய்யக் காத்திருக்கும் காங்கிரஸ் தலைமையிலான அய்முகூ அரசு, 40 பேருக்குக் குறைவாக வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள், இனி, தொழிலாளர்கள் சட்டப்படியான பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டியதில்லை, சட்டங்கள் பின்பற்றப்படுகின்றனவா என்ற அறிக்கைகளைத் தாக்கல் செய்ய வேண்டியதில்லை என நாடாளுமன்ற மேலவையில் 26.03.2011 அன்று ஒரு மசோதா தாக்கல் செய்துள்ளது. கவலையே வேண்டாம். பாஜக பிரச்சனை என்றால் காப்பாற்றும். உற்பத்தித் துறையில் இருக்கும் 78% தொழிலாளர்கள் இனி தொழிலாளர் சட்டங்கள் அமலாக்கத்திற்கு வெளியே தள்ளப்படுவார்கள்.

ஊழல், தேச வளங்கள் சூறையாடல்


அடுக்கடுக்கான அத்தனை ஊழல்களிலும் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இருக்கும். நீ ஒழுங்கா, நீ மட்டும் உத்தமமா என ஈயங்களும் பித்தளைகளும் ஒன்றைப் பார்த்து மற்றொன்று மாறி மாறி இளிக்கும். முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கு சேவை செய்ய முதலாளித்துவ அரசியல்வாதிகள் விதிகளை வளைப்பார்கள். நடைமுறைகளை மிதிப்பார்கள். கொள்கைகளை மாற்றுவார்கள்.

இங்கேதான் நவீன பிரும்மாண்ட ஊழல்கள் பிறக்கின்றன. நீதித்துறை, இராணுவ உயர் பீடங்கள், உயர் அதிகாரிகள், அனைத்து வகை முதலாளித்துவ அரசியல்வாதிகளோடு ஊழல் பின்னிப் பிணைந்துள்ளது. நீக்கமற நிறைந்துள்ளது. அதுவும் அந்த வகையில் பரம்பொருளே. ஆனால் ஊழலின், மவுசும் மகாத்மி யமும், பிரும்மாண்டமும் விசுவரூபமெடுத்தது, உலகமய தாராளமய தனியார்மய காலங்களில்தான். திறமையின்மையை ஒழித்துக் கட்டுகிறோம், சந்தையின் சுதந்திரத்தை முடக்கும் அரசுக் கட்டுப்பாட்டை ஒழிக்கிறோம், ஊழல் போயே போய்விடும் என்ற முழக்கங்களோடு வந்த நவதாராளவாதம் வெட்டிய கிணற்றில் இருந்து, ஊழல் பூதம் வெளிப்பட்டுள்ளது.

ஊழல் முதலாளித்துவ சட்டத்திற்கு விரோதமானது. கறாரான, கண்காணிக்கிற, தண்டிக்கிற, லோக்பால் நல்ல விஷயம்தான். லோக்பால் சட்டமசோதா வரைவுக் குழுவில், அரசு தரப்பு தாண்டி 5 பேர் இடம் பெறுவதும் கூட நல்லதுதான். கடந்த காலங்களில் பல முறை லோக்பால் சட்டத்திற்கு நடந்தது போல், பெண்கள் இட ஒதுக்கீடு, விவசாயத் தொழிலாளர் சட்டம் ஆகியவற்றிற்கு நேர்ந்தது போல், இந்த முறை லோக்பால் சட்டத்திற்கு நேராமல் பார்த்துக் கொள்வதில், புரட்சிகர முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கும் அக்கறை உள்ளது. அந்தச் சட்டத்தை பொருளுள்ளதாக திறன்வாய்ந்ததாக மாற்றுவதிலும் பங்கு இருக்கிறது. ஆனால் அதையும் தாண்டிச் செல்ல வேண்டிய கடமையும் இருக்கிறது.

சட்டிஸ்கரில் பாஜக அரசாங்கம். ஜார்கண்டில் பாஜக முதல்வர். சோம்பேட்டா காக்கரபள்ளியில் நிலப்பறிக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்தி உயிர்களைப் பறித்த ஆந்திராவில் காங்கிரஸ் அரசாங்கம். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அய்முகூ அரசாங்கம். இவை, சட்டப்படியே, அரசு கொள்கைகள் மூலம், கனிமங்கள், இயற்கை வளங்களைச் சூறையாட, ரியோடெண்டோ, போஸ்கோ, வேதாந்தா, டாடா, மிட்டல், ஜிண்டல் ஆகியோருக்கு அனுமதி தருகிறார்கள்.

மன்மோகனும் சிதம்பரமும், போனால் வராது, விடாதே பிடி, காற்றுள்ள போதே தூற்றிக் கொள், அடுத்தச் சுற்று பிரும்மாண்ட வளர்ச்சி, பிரும்மாண்டமான மூலதன வருகை, இந்திய வளங்களைத் தோண்டி எடுப்பதில்தான் எனச் சொல்கிறார்கள். நாடாளுமன்றத் தில் தானே, எந்த எதிர்ப்புமின்றி நிலம் நீர் ஆகாயம் என எல்லா வளங்களையும் உள் நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சூறையாட ஒப்புதல் தரும், சிறப்பு பொருளாதார மண்டல சட்டங்கள் நிறைவேற்றினார்கள். காங்கிரஸ் பாஜக இருவருமே, பெரும் தொழில் குழுமங்களால், பெரும் தொழில் குழுமங்களே, பெரும்தொழில் குழுமங்களுக்காக ஆட்சி நடத்துவதில் வைராக்கியமாக இருப்பவர்கள்.

ஜார்கண்டில், நுழையும் பெருமுதலாளி களுக்கு நகரங்களைச் சுத்தப்படுத்தித் தரும் பணியில் நீதிமன்றத்தின் துணை கொண்டு ஈடுபட்டுள்ளனர். தலைமுறை தலைமுறையாய், ராஞ்சி, தன்பாத், பொக்காரோ, ஹசாரிபாக் நகரங்களில் வாழ்ந்தவர்களின் வீடுகளை இடித்துத் தள்ளி வெளியேற்றுகிறார்கள். மக்கள் அசுத்தம். முதலாளித்துவ மேட்டுக்குடியினர் சுத்தம். பார்ப்பனீய சுத்தக் கோட்பாடு கனகச்சிதமாக உலகமயத்துடன் பொருந்துகிறது.

சட்டிஸ்கரில், மூலதனம் வளங்களை சூறையாட, பசுமை வேட்டை நடக்கிறது. தமிழகம் தொடங்கி இமாச்சலப் பிரதேசம் வரை, மூலதனம், கிராமப்புறங்களில் நுழைகிறது. அரசு உதவியுடன் சிறுவீத விவசாயத்தை அழிக்கிறது. இந்த அடிப்படையான மூலதன சேவையில், முதலாளித்துவ விசுவாசத்தில், காங்கிரசிற்கும் பாஜகவிற்கும், கருணாநிதிக்கும் ஜெயலலிதாவிற்கும் வேறுபாடு இல்லை.

அது அதுவாக இருக்கிறது. அது அதுவாக இல்லாமலும் இருக்கிறது

எதுவும் அதுவாகவும் அதுவாக அல்லாம லும் இருக்கிறது என்பது மார்க்சீய இயங்கியல் போதனை. காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளுமே பலவீனமாக உள்ளன. காங்கிரஸ் இந்தி இதய பூமியில், பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தில் கிட்டத்தட்ட காணாமல் போய் உள்ளது. தனித்து சில மாநிலங்களில் மட்டுமே ஆட்சிக்கு வர முடியும். மற்ற இடங்களில் கூட்டணி பலத்தில்தான் வெற்றி பெற முடியும். பாஜகவும் சில மாநிலங்களில் தனித்தும் சில மாநிலங்களில் கூட்டணி பலத்திலும் ஆள்கிறது.

இரு பெரும் முதலாளித்துவக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால் நாடாளுமன்றத்தில் 100 இடங்கள் பெறுவதே கடினம். 200 பெறுவது மிகமிகக் கடினம். ஆனால் நம்பகமான, எடுபடக் கூடிய, மாற்றுக் கொள்கைகளுடைய மாற்று ஏதும் இல்லாததால், அய்முகூ, தேஜமு என வெவ்வேறு கட்சிகளை வளைத்துக் கொள்கின்றன. அரசியல் வெளியில் இயங்குகிற பல கட்சிகளுக்கும், வேறு வேறு சூழல்களில் காலகட்டங்களில், இந்த கூட்டணிகளில் இடம் பெறுகிற, இவற்றோடு உறவாடுகிற நிர்ப்பந்தம் உள்ளது.

எகிப்து, துனிஷியா போன்ற வட ஆப்பிரிக்க, மேற்கு ஆசிய நாடுகளில், விலை உயர்வு, ஊழல், சமூக ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றுக்கு எதிரான மக்கள் போராட்ட அலைகள் வீசின. ஆனால் நவதாராளவாதத்திற்கு மாற்று இல்லாத நிலையில், அங்கே ஒரு தேக்கம் நிலவுகிறது. எந்த அடிப்படை மாற்றமும் இல்லாமல், சில ஒப்பனை சீர்திருத்தங்களுடன், நாசகர உலகமயக் கொள்கைகள் தொடரும் ஆபத்து நீங்கிவிட்டதென சொல்ல முடியாது.

இந்தியா எங்கும் மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். மாவோயிஸ்ட்கள் மீள முடியாமல் முட்டுச் சந்தில் நிற்கிறார்கள். மார்க்சிஸ்ட் கட்சித் தலைமை தாங்கும் இடது முன்னணி அரசாங்கங்கள், எல்லைக்குள் ளேயே செயல்பட்டு, அந்த எல்லையிலிருந்தும் வெளியேற்றப்பட கூடுதல் வாய்ப்புக்கள் உள்ளன.

இந்தப் பின்னணியில்தான் மாலெ கட்சியின் எட்டாவது காங்கிரஸ் முழக்கம், மக்களின் எதிர்ப்புப் போராட்டங்கள், இடதுசாரிப் புத்தெழுச்சி என்ற முழக்கம், அவசர அவசியம் பெறுகிறது. ஊழல் மற்றும் பெருந்தொழில் குழும சூறையாடல் கோட்டைகளுக்கு எதிராக தீர்மானகரமான தாக்குதல்கள் தொடுப்பது, நாடெங்கும் உள்ள புரட்சிகர முற்போக்கு ஜனநாயக சக்திகளின் கடமையாகிறது. இந்தப் பயணப் பாதையில், சிறிய சக்திகள் பெரிதாவதும், பெரிய சக்திகள் சிறிதாவதும் நடந்தே தீரும்.பினாயக் சென்னுக்கு பிணை விடுதலை கிடைத்துவிட்டது.


நமது அத்தனை பினாயக்குகளுக்கும் எப்போது நீதி கிடைக்கும்?

உச்சநீதிமன்றத்தின் ஒரு சாதகமான உத்தரவால், ஒருவழியாக பினாயக் சென்னுக்கு பிணை கிடைத்துவிட்டது. அவருக்கு பிணை வழங்கிய உச்சநீதிமன்றம், அவர் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்த சட்டிஸ்கர் அரசாங்கம் முன்வைத்த பலவீனமான அடிப் படை பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளது. நீதிபதிகள் ஹர்ஜித் சிங் பேடி மற்றும் சந்திரமவுலி குமார் பிரசாத் ஆகியோர், பினாயக் மாவோ யிஸ்ட் அனுதாபியாக இருக்கலாம், ஆனால் அப்படி இருப்பதே தேசத் துரோகக் குற்றம் சுமத்த காரணமாக இருக்க முடியாது என்று சொல்லியுள்ளதாக சொல்லப்படுகிறது. காந்தியின் சுயசரிதையை வைத்திருப்பதாலேயே ஒருவர் காந்தியவாதியாகி விடமுடியாது என்றும் இதே விசயம்தான் மார்க்ஸ், லெனின் அல்லது மாவோ நூல்களுக்கும் பொருந்தும் என்றும் சொல்லியுள்ளனர். தேசத் துரோகக் குற்றம் பற்றிய இந்தக் கருத்துக்கள் நீதிமன்றத்தில் பகிரங்கமாக சொல்லப்பட்டிருந்தாலும், ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டிருந்தாலும், நீதிமன்றத்தின் உத்தரவில் இடம் பெறவில்லை. உண்மையில் இந்த வழக்கில் நீதிபதிகள் ‘இரு தரப்பிலும் பிறகும் பாதிப்பு வரக்கூடாது என்பதால்’ எந்தக் காரணமும் சொல்லவில்லை!

உள்நாட்டு பாதுகாப்புக்கு மாவோயிசம் மிகப்பெரிய ஆபத்து என்று அரசு அடையாளப்படுத்தும்போது, மாவோயிஸ்டுகளை எதிர்கொள்வது என்ற பெயரால் ஜனநாயகத்தின் மீது போர் தொடுக்க, மத்திய, மாநில அரசுகள் கருத்தியல் வேறுபாடுகளைத் தாண்டி கை கோர்க்கும்போது, உச்சநீதிமன்றத்தின் இதுபோன்ற பொருளுள்ள சொற்களைக் கேட்க புத்துணர்வு ஏற்படுகிறது. உண்மையில் இதுபோன்ற பொருளுள்ள விசயங்களை உச்சநீதிமன்றம் எப்போதாவதுதான் சொல்கிறது. அரசு ஒடுக்குமுறையால், கீழ்நீதிமன்றங்களின் அநீதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நிவாரணமும் தராமல், கீழ்நீதிமன்றங்கள் சொன்னவற்றையே பல சமயங்களில் உச்சநீதிமன்றம் உயர்த்திப் பிடித்துள்ளது. உதாரணமாக, பீகாரின் ஜகனாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த தோழர் ஷா சந்த் மற்றும் 13 பேருக்கு, 2003ல் தடா நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டபோது, உச்சநீதிமன்றத்திலும் நீதி கிடைக்கவில்லை. இந்தத் தோழர்களிடம் இருந்த எந்த ஆயுதமும் பறிமுதல் செய்யப்படவில்லை; கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, மாவோ கட்டுரைகள், பீகார் மாநில விவசாய சங்கத்தின் சில கையேடுகள், பீகாரின் விவசாயப் பொருளாதாரம் பற்றிய ஆய்வுகள் ஆகியவை உள்ளிட்டவைதான் அவர்களிடம் இருந்ததாக பட்டியலில் சொல்லப்பட்டுள்ளது. இந்த கட்டுரைகளை பயங்கரவாதமானவை என்று தடா நீதிமன்றம் சொன்னது; உச்சநீதிமன்றம் தடா நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அப்படியே உயர்த்திப் பிடித்தது.

டாக்டர் பினாயக் சென் வழக்கிலும், அவருக்கு பிணைதான் கிடைத்துள்ளது; வழக்கில் இருந்து விடுபடுவது தொலைவில் உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 2007 மே மாதம், ‘தேசத் துரோகக் குற்றம்’ சுமத்தப்பட்டு சென் கைதானபோது, நாடு முழுவதும் உறுதியான போராட்டங்கள், சர்வதேச அளவில் மனித உரிமை ஆர்வலர்களின் ஆதரவு குரல்கள் ஆகியவற்றுக்குப் பிறகு, அவரை பிணையில் விடுவிக்க, கிட்டத்தட்ட இரண்டாண்டு காலம் ஆனது; ஆயினும், ராய்பூர் நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கியதும், உயர்நீதிமன்றம் பிணை மனுவை மறுத்ததும் நமக்குத் தெரியும். டாக்டர் சென்னுக்கு பிணை விடுதலை கிடைத்துள்ள இந்த நேரத்திலும், சட்டிஸ்கர் சிறைகளில் தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு, பழங்குடி செயல்வீரர்களான கோபா குஞ்சம், கர்டம் ஜோஹா வர்த்தகர் பியுஷ் குஹா, தேசத் துரோகக் குற்றங்கள் உருவாகும் பூமி என்று பெயரிடப்பட்ட சட்டிஸ்கர் கிராமங்களின் நூற்றுக்கணக்கான பழங்குடி மக்கள் துன்புறுகிறார்கள்! உச்சநீதி மன்றம் அவ்வப்போது தலையிடும்போதும், அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமான சல்வா ஜ÷டும் கலைக்கப்பட வேண்டும் என்று திரும்பத்திரும்ப உத்தரவிட்டபோதும், சட்டிஸ்கர் மனித உரிமைகளின் மயான பூமியாகவே இருக்கிறது.

மார்ச் இரண்டாவது வாரத்தில், தண்டேவாடா காடுகளில் மாவோயிஸ்டுகளுடன் மோதல் போர் மேற்கொண்டதாக சட்டிஸ்கர் காவல்துறை சொல்கிறது. அந்தப் பகுதியில் சின்தல்நார், மொரபள்ளி, திம்மபுரம், டட்மெட்லா கிராமங்களுக்குச் சென்ற உண்மை அறியும் குழு காவல்துறை சொல்வது பொய் என்பதை கண்டறிந்தது. அரசு ஆதரவு பெற்ற கோயா படைவீரர்களும், மத்திய காவல்படையின் ‘கோப்ராவும்’ மார்ச் 11 முதல் 16 வரை பகுதியை சூறையாடியதுதான் உண்மையில் நடந்தது. இதில் பழங்குடி மக்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். 3 பெண்கள் பாலியல் வன் முறைக்கு உட்படுத்தப்பட்டார்கள். 300 வீடுகள்/குடிசைகள், உணவு தானியங்கள் சேமிப்பு, பிற உடமைகள் தீயிலிட்டுக் கொளுத்தப்பட்டன. சில நாட்கள் கழித்து, சுவாமி அக்னிவேஷ் நிவாரணக் குழுவினருடன் அங்கு சென்றபோது, அவரும் தாக்கப்பட்டார். தேசிய மனித உரிமை ஆணையம் தலையிட் டது; நான்காண்டுகளாக நடந்து கொண்டி ருக்கும் சல்வா ஜ÷டும் மீதான வழக்கில் இன்னும் ஒரு விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய விசாரணை, சட்டிஸ்கரில் மனித உரிமைகள் மீது கட்டமைக்கப்பட்ட போர் நடக்கிறது என்ற உண்மையை, இந்தப் போர் மத்திய, மாநில அரசாங்கங்களின் கூட்டு ஆதரவுடன் நடக்கிறது என்ற உண்மையை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியது.

டாக்டர் பினாயக் சென்னுக்கு வழங்கப்பட்டுள்ள பிணை மற்றும் நீதிபதிகள் முன்வைத்துள்ள விசயங்கள் ஆகியவற்றை வரவேற்கும் அதேநேரம், மனித உரிமை இயக்கம், நடந்து கொண்டிருக்கிற இன்னும் பெரிய போரை காணத் தவறிவிடக் கூடாது. உண்மையில், ஜனநாயக உரிமைகளுக்கான சக்திவாய்ந்த நாடு தழுவிய மக்கள் இயக்கத்துக்கான காலம் கனிந்துள்ளது. கருப்புச் சட்டங்கள் - அவற்றில் சில மிகப் பழமையானவை, சில புதியவை - ரத்து செய்யப்பட வேண்டும். தேசத் துரோகக் குற்றச் சட்டம் (இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு 124எ), ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம், சட்டிஸ்கர் சிறப்பு பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம் 2005, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் படுபாதகமான பிரிவுகள் - இவை அனைத்தும், செயல்படுகிற ஜனநாயகம் என்ற கருத்துடன் சிறிதும் பொருந்தாதவை. ஊழல் எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரும் நிகழ்ச்சிநிரலில் அரசாங்கத்துக்கு நிர்ப்பந்தம் கொடுத்த விழிப்புணர்வு பெற்ற பொதுமக்கள் கருத்து, நமது அரசியல மைப்புச் சட்ட உரிமைகள் அனைத்தையும் கேலிக் கூத்தாக்கும் இந்த பயங்கரமான சட்டங்கள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட வேண்டும் என்றும் குரல் எழுப்ப வேண்டும். ஊழல் இல்லாத, ஒடுக்குமுறை இல்லாத ஜனநாயக இந்தியா என்ற பதாகையை உயர்த்திப் பிடித்து, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினரும் மனித உரிமை செயல்வீரர்களும் ஒன்றாக முன்செல்ல வேண்டும்.தமிழ்நாட்டில் கட்சிக் கட்டுதலின் வழித்தடம்: ஒரு சுருக்கமான சித்திரம்

தீப்பொறி ஆசிரியர் குழு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் டி.பி.பக்ஷி எழுதிய கட்டுரையின் நிறைவுப் பகுதி.இந்த இயக்கப்போக்கு விவசாய தொழிலாளர் மற்றும் தொழிலாளர் வர்க்க அரங்குகளில் வெகுமக்கள் செயலூக்கத்துக்கான ஒரு புதிய உயிரோட்டத்தை கொண்டு வந்தது. பழைய பகுதிகளில், வட்டங்களில் சுருங்கி நிற்பதற்கு விடை தரும் முயற்சிகளும் காணப்பட்டன. கீழ்மட்ட கட்சி அமைப்பை வலுப் படுத்துவதில் சிறப்பு கவனம், கட்சி உறுப்பினர்களை அவர்களின் முறையான பங்கேற்புடன் முறைப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. தீப்பொறி மாத இதழாக முறைப்படுத்தப்பட்டது.

மேலே குறிப்பிடப்பட்ட ஆக்கபூர்வமான வளர்ச்சிக் கூறுகள் இருந்தபோதும், கூட்டமைப்புவாதம், குழுவாதப் போக்கு போன்ற நாள்பட்ட பிரச்சனைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. மூத்த தோழர்களுக்கு, அவர்கள் கருத்துக்கள் எப்படி இருந்தபோதும், முக்கியமான பொறுப்புக்கள் தந்த நமது பரந்த அணுகுமுறை, நமது பலவீனம் என தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. குழுவாத விஷக் கிருமிகளை பரப்ப வெகுமக்கள் அரங்கை கட்சிக்கு எதிராக நிறுத்த, முக்கியமான வெகுமக்கள் அமைப்புக்களின் பதவிகள் இணையான செயல்பாடுகளுக்கு பயன்படுத் தப்பட்டன. ஆழமாகப் பரவியிருந்த இந்த குழுவாதப்போக்கு 2005ல் நடந்த அடுத்த மாநில மாநாட்டில் இன்னும் மோசமான வடிவெடுத்தது. திட்டமிடப்பட்ட, கட்டமைக்கப்பட்ட சதியின் மூலம், பதவிக் காலம் முடிந்த மாநிலக் கமிட்டியால் முன்வைக்கப்பட்ட அதிகாரபூர்வ பட்டியலில் ஒரு மத்திய கமிட்டி உறுப்பினர் தோற்கடிக்கப்பட்டார். சந்தர்ப்பவசமாக, கட்சி பொதுச் செயலாளர் இருந்தபோது இது நடந்தது.

அப்போது முதல், கட்சியின் மத்திய கமிட்டி வழிகாட்டுதலில் மாநிலக் கமிட்டி, குழுவாதப் போக்கின் இந்த பாதகமான விளைவை கையாள்வதில் ஓர் உறுதியான நிலை எடுத்தது. கட்சி விரோத நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்கின்மை நடவடிக்கைகளின் சில குறிப்பிட்ட விஷயங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது குழுவாத அணிதிரட்டலுக்கு இட்டுச் சென்றது. சில தீவிரமான குழுவாத சக்திகள் அதிருப்தி கொண்ட, வெறுப்பு கொண்ட சக்திகளைக் கொண்டு இணையான கூட்டம் நடத்துவது வரை சென்றது. எனவே, தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள மறுத்த பிற தீவிரமான குழுவாத சக்திகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் கட்சிக்கு ஏற்பட்டது.

இறுதியில் தமிழ்நாட்டில் வரலாற்றுரீதியாக இறுகிப்போன குறுங்குழுவாத சக்திகள் ஒழிக்கப்பட்டன. அவர்களை பின்பற்றிய, ஒப்பீட்டளவில் குற்றமற்ற அணிகளின் சிறு பிரிவினரும் இந்த இயக்கத்தால் பாதிக்கப்பட்டனர்; அவர்கள்பால், நாம் எப்போதும் சாதகமான அணுகுமுறை என்ற கொள்கையையே கையாள்கிறோம். மறுபுறம், இணையான மய்யம் உருவாக்கப்பட்ட போதும், அகிலேந்தர் பிரதாப் சிங்கின் அழிவுவாத நடவடிக்கையுடன் இணைந்த போதும் - கட்சியை செங்குத்தாக பிளவுபடுத்துவது இருக்கட்டும் - அந்த குறுங்குழுவாத சக்திகளால் எந்த பொருளுள்ள துவக்கத்தையும் உருவாக்க முடியவில்லை; மூத்த, அனுபவமிக்க தலைமை ஊழியர்களின் கணிசமான பிரிவினரும் உயிரோட்டமான சக்திகளின் பெரும்பான்மையும் கட்சித் தலைமையின் பின் உறுதியாக அணிதிரண்டார்கள். மிகவும் முக்கியமான தமிழ்நாடு கட்சி மூச்சுத் திணறுகிற, திசைதிருப்புகிற சூழலை புறந்தள்ளியது; இன்னும் பெரிய வெளியில் வெகுமக்கள் அரசியல் செயலூக்கத்தில் புத்துயிர் புகுத்தப்பட்டது.

இந்த வரலாற்றுரீதியான இயக்கம் தரும் அடிப்படை பாடத்தை பின்வருமாறு சொல்லலாம்: முன்னோக்கிய அணுகுமுறை, தெளிவான கருத்தியல் எல்லை, அமைப்பு வலுப்படுத்துதல், ஆக்கபூர்வமான வெகுமக்கள் அரசியல் செயலூக்கத்தை உருவாக்குவது, தீவிரமான கட்சி விரோத சக்திகளை தனிமைப்படுத்தி, பெரும்பான்மை அணிகளை ஒரு புதிய அடிப்படையில் மறுவார்ப்பு செய்வது, மிகவும் முக்கியமாக இன்னும் உறுதியான ஒற்றுமையான தலைமைக் கரு ஆகியவை எந்த சிக்கலான உட்கட்சிப் போராட்டத்தையும் சமாளித்து, கட்சியின் கருத்தியல், அமைப்பு உறுதியின் புதிய மட்டத்தை நோக்கி எடுத்துச் செல்வதற்கு அவசியம்.

தமிழ்நாடு கட்சியின் இந்த புதிய சூழலில் நமது முக்கிய சாதனைகளை பின்வருமாறு அடையாளப்படுத்தலாம்:

அ) 5000 கட்சி உறுப்பினர்கள், இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட வெகுமக்கள் அமைப்பு உறுப்பினர்கள் என கட்சி விரிவடைந்துள்ளது.

ஆ) புதிய செயலூக்கத்துடன் சில விவசாயப் போராட்டப் பகுதிகள் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளன. பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தை தொழிலாளர் வர்க்க எதிர்ப்பின் மாற்று முன்மாதிரியாக வடிவமைத்துள்ளோம். கூடவே, அமைப்புசாரா தொழிலாளர் மத்தியிலும் அமைப்பாக்கப்பட்ட விரிவாக்கம் ஏற்படுத்தியுள்ளோம். மாணவர் மற்றும் பெண்கள் செயலூக்கத்துக்கு துவக்கநிலை அமைப்பாக்கப்பட்ட வடிவம் தந்துள்ளோம்.

இ) 8 வருடங்களாக எந்த இடைவெளியும் இன்றி மாநில ஏடான தீப்பொறியை தொடர்ந்து கொண்டு வருகிறோம். தொழிலாளர்களின் வெகுமக்கள் அரசியல் ஏடாக ஒருமைப்பாடு தொடர்ந்து வெளியிடுகிறோம்.

ஈ) வெவ்வேறு இடதுசாரி நீரோட்டங்களில் இருந்து ஊழியர்களை, செயல்வீரர்களை ஈர்த்துள்ளோம். அவர்களை மறுவார்ப்பு செய்து கட்சியின் பிரதான நீரோட்டத்துக்குள் உள்வாங்கும் இயக்கப்போக்கை வடிவமைத்துள்ளோம்.

இந்த முன்னேற்றத்தை அதன் முழுமுற்றான பொருளில் புரிந்துகொள்ள முடியாது. தேவைக்கேற்ப உயர்வதில், குறிப்பாக தமிழ்நாட்டில் கட்சியின் அரசியல் தோற்றத்தை உயர்த்துவதில், இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.

எட்டாவது கட்சி காங்கிரஸ் சொல்வது போல், ‘இப்போது, குறுங்குழுவாதத்தின் இறுதி விளைவுகள் பற்றி மொத்த கட்சி அமைப்புக்கும் கல்வி தர வேண்டியுள்ளது..... மிகவும் முக்கியமாக, கட்சியின் பலவீனத்தை தங்களுடைய குறுகிய, சீரழிவு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள குறுங்குழுவாத சக்திகளுக்கு எந்த வாய்ப்பும் தராத விதம், மாநிலத்தில் ஓர் ஒற்றுமையான உறுதியான கட்சி அமைப்பு, கட்சியை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு, உறுதிக்கு எடுத்துச் செல்ல கடுமையாக முயற்சிக்க வேண்டும்.’

இறுதியாக தோழர் வினோத் மிஸ்ரா வழிகாட்டுதலில் இருந்து சில பாடங்கள் கற்றுக் கொள்வோம்:

‘எம்எல் குழுவின் ஒரு தோழரை நான் சந்தித்தேன். நமது கட்சி மீது அவருக்கு பல்வேறு விமர்சனங்கள் இருந்தன. ஆனால் கட்சி கட்டுதலில் நிபுணத்துவம் உள்ளதாக நம்மை பாராட்டினார். உண்மையில் அது அமைப்பு திறமையோ, தனிப்பட்ட தலைவர்கள் மீதான ஈர்ப்போ அல்ல; கட்சி கட்டுதலின் முக்கிய கண்ணியாக கருத்தியல் - தத்துவ வேலையை எடுத்துக் கொண்டதால்தான், எம்எல் இயக்கத்தில் இருந்த அனைத்தும் தழுவிய அரசியல் குழப்பம் மற்றும் அமைப்பு ரீதியான குழப்பத்தின் மத்தியிலும், கட்சி கட்டு தல் பணியை முன்னெடுத்துச் செல்ல முடிந்தது. இது நமது கட்சிக்கே உரிய தனிப்பட்ட ஒன்று; இந்த மகத்தான மரபை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும்; பாதுகாக்க வேண்டும்.’ (‘மார்க்சியத்தை அதனை செழுமைப்படுத்துவதன் மூலம் பாதுகாக்க வேண்டும்’ கட்டுரையில் இருந்து).இலங்கையில் நடந்த போரில் போர்க் குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!


இலங்கை தமிழர்களின் ஜனநாயக உரிமைகள் மீட்கப்பட வேண்டும்!


மறுவாழ்வு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்!

இலங்கையில் புலிகள் மீது இறுதிப் போர் என்ற பெயரில் நடத்தப்பட்ட இனப்படு கொலையில் இலங்கை அரசு போர்க் குற்றம் புரிந்துள்ளது என்று இரண்டாண்டுகள் கழித்து அய்நா அறிக்கை சொல்கிறது. இருப்பவர்கள் குறைந்தபட்ச உரிமைகளுடன் வாழ்வதை உறுதிசெய்யும் இயக்கப்போக்கையாவது அறிக்கை துவக்கி வைக்க வேண்டும்.

40,000 சாதாரண குடிமக்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள்; மருத்துவமனைகள் மீது திட்டமிட்டே மீண்டும் மீண்டும் ராணுவத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன; மறுவாழ்வு முகாம்கள் மீது தாக்குதல்கள் நடந்தன. முகாம்களில் இருப்பவர்கள் எண்ணிக்கை, அவர்களுக்கு சென்று சேரும் உதவிகளை குறைப்பதற்காக, வேண்டுமென்றே குறைத்துக் காட்டப்பட்டது; பிற நாடுகளில் இருந்து வந்த உதவிகள் சென்று சேர்வதில், குறிப்பாக மருத்துவ உதவிகள், அவற்றிலும் அறுவை சிகிச்சைக்குத் தேவையான உதவிகள் சென்று சேர்வதில் தடைகள் ஏற்பட்டன; அய்நா உதவி மய்யம் மீதே ராணுவம் தாக்குதல் நடத்தியது; புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் சாதாரண குடிமக்கள் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்; சரணடைந்த புலிகள் கொல்லப்பட்டனர்; போர் முடிந்த பிறகும் சகஜ வாழ்வு திரும்பவில்லை; பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர்; முகாம்களில் வாழ்நிலைமைகள் மிகவும் மோசமாக இருந்தன; பிடித்து வைக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் முறையாக அவர்கள் குடும்பங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை; புலிகள் என்று கருதப்பட்ட இளைஞர்கள் நிர்வாணமாக்கப்பட்டு, பின்னால் கைகள் கட்டப்பட்டு, பின்னால் மிக அருகில் இருந்து தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டனர்; ஜனநாயகக் குரல்கள் நசுக்கப்பட்டன; போர் எதிர்ப்பு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்; சாதாரண குடிமக்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள்; ......

இப்படி அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் புலிகள் மீது இறுதித் தாக்குதல் நடந்து கொண்டிருந்த போதும், அதற்குப் பிறகும் இலங்கைக்கு உள்ளும் இலங்கைக்கு வெளியிலும் இருந்த ஜனநாயக சக்திகள் சொல்லிக் கொண்டிருந்தவை. அவற்றுக்கு இப்போது அய்நா சபை அங்கீகாரம் கிடைத்துள்ளது. முன்பு அலட்சியம் செய்தவர்கள், மறுக்கப் பார்த்தவர்கள் இனி அதை எச்சரிக்கையுடன் செய்ய வேண்டியிருக்கும்.

அய்நா அறிக்கை இலங்கை அரசாங்கத்தை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறது. மனித உரிமை மீறல் குற்றங்கள் அப்பட்டமாக நடந்தேறியதை சுட்டிக் காட்டுகிறது. இப்படி தமிழ் போராளிகளை அழித்து, போர் முடிந்த பிறகு இலங்கை அரசாங்கம் எஞ்சிய தமிழர்கள் மறுவாழ்வு பற்றி சொன்ன, சொல்லிக் கொண்டிருக்கிற விசயங்கள் பற்றியும் அய்நா அறிக்கை கேள்விகள் எழுப்புகிறது. உடனடி மற்றும் நீண்டகால பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் பற்றி குறிப்பிடுகிறது.

அரசு, அதன் அமைப்புக்கள், அனைத்து விதமான துணைப் போர்ப் படைகள், அரசுக்காக செயல்படும் ரகசிய குழுக்கள், அரசினால் சகித்துக் கொள்ளப்படும் ரகசியக் குழுக்கள் ஆகியவற்றின் அனைத்து வன்முறை தாக்குதல்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அறிக்கை சொல்கிறது. அப்படியானால் தமிழ் மக்கள் இன்னும் முறைசார்ந்த மற்றும் முறைசாராத விதங்களில் தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர்.

இறந்தவர்கள் உடல்கள், எஞ்சிய உடல் பாகங்கள் உறவினர்களிடம் முறையான ஈமச் சடங்குகளுக்காக ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அறிக்கை சொல்கிறது. அப்படியானால் அது இன்னும் நடக்கவில்லை.

முகாம்களில் இருப்பவர்கள், சிறைகளில் அடைக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் பற்றிய முழு விவரங்களையும் அரசு வெளியிட வேண்டும் என்கிறது. அப்படியானால் அது இன்னும் நடக்கவில்லை.

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு நடவடிக்கைகள் உடனடியாக துவக்கப்பட வேண்டும் என்கிறது. அப்படியானால் அது கூட இன்னும் நடக்கவில்லை.

இப்படியாக, போர் முடிந்த பிறகும் மிகவும் அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு இலங்கை தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற நிலைமைகளைப் பற்றி சொல்லாமல் சொல்கிறது அறிக்கை.

விடுதலைப் புலிகளும் போர்க் குற்றம் செய்ததாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆனால், இப்போது அது பற்றி விசாரிக்க, குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கத்தான் புலிகள் என்று யாரும் இல்லை. இறுதிப் போர் என்ற பெயரில் நடந்த இனப்படுகொலையில் புலிகள் மொத்தமாக அழித்தொழிக்கப்பட்டு விட்டனர்.

ஆனால், இலங்கை அரசாங்கம், புலிகள் தவிர வேறு யாரையும் குற்றவாளிகள் என்று அறிக்கை அடையாளப்படுத்தவில்லை. சீதையின் சீற்றத்தால் இலங்கை எரிகிறது என்று கூட அந்த இறுதிப் போரில் தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்திய தாக்குதல் தமிழக செய்தித் தாள்களில் வருணிக்கப்பட்டது. குற்றம் புரிய உதவியவர்களும் குற்றவாளிகள் என்ற அடிப்படைக் கோட்பாடு பாதுகாக்கப் பட வேண்டுமானால், இலங்கை ராணுவத்துக்கு சகல உதவிகளும் செய்து, கிட்டத்தட்ட போரை மேற்பார்வையிட்ட இந்திய அரசுக்கு என்ன பெயர்?

இலங்கையின் ராணுவத் தாக்குதலுக்கு ஆளாகிக் கொண்டிருந்த இலங்கைத் தமிழர்கள் பக்கத்தில் இருக்கும் தமிழர்கள் உதவிக்கு வர மாட்டார்களா என்று ஏங்கித் தவித்த போது, மத்திய அரசாங்கத்தில் பெரும்பங்கு வகித்துக் கொண்டு, போருக்கு ஆதரவாக அய்முகூ அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளுக்கெல்லாம் மவுன சம்மதம் தந்த தமிழக அரசாங்கம், அதன் முதலமைச்சர் கருணாநிதி குற்றவாளி அல்லவா?

இறுதிப் போர் முடிந்த பிறகு இலங்கைக்குச் சென்று ராசபக்சேவுக்கு பூங்கொத்துக் கொடுத்து, அவர் கொடுத்த பரிசுப் பொருளோடு நாடு திரும்பி, முள்கம்பிகளுக்குப் பின் தமிழர்கள் நலம், எல்லாம் ராசபக்சே பார்த்துக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறார் என்று சொன்ன நாடாளுமன்றக் குழுவினர் குற்றமற்றவர்களா?

கடிதச் சக்ரவர்த்தி கருணாநிதிக்கு இன்று இலங்கைத் தமிழர் பிரச்சனையை விட கனிமொழி பிரச்சனை முன்னுரிமை பெற்றுள்ளது. போர் என்றால் சாதாரண குடிமக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாதது என்று ஹிட்லர் மொழி பேசிய ஜெயலலிதா கருணாநிதியும் போர்க் குற்றவாளி என்று அறிவிக்கப்பட வேண்டும் என்று கத்துகிறார். அய்முகூ அரசாங்கம் ஏனோ அவருக்கு குற்றவாளியாகத் தெரிய வில்லை. இப்போதும் கூட தன் அரசியல் கணக்கை நேர் செய்வதுதான் ஜெயலலிதாவின் நோக்கமேயன்றி இலங்கைத் தமிழர்கள் நல்வாழ்வு அல்ல.

இலங்கைத் தமிழர்கள் இயக்கம் என்று இலங்கையில் ஏதும் இல்லாத நேரம், தனிஈழம் ஒன்றுதான் தீர்வு என்று ராமதாசு சொல்கிறார். அவருக்கும் அய்முகூ அரசாங்கமும் தமிழக அரசாங்கமும் காங்கிரசும் திமுகவும் குற்றமற்றவையாகவே தெரிகின்றன. திருமாவளவனுக்கு கூட காங்கிரஸ் கண்ணில் தெரியவில்லை.

சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதற் கண்டு சிந்தையிரங்காத தமிழக அரசின் மீது இருந்த கடைசி நம்பிக்கையையும் இழந்து விட்ட இலங்கைத் தமிழர்கள் முழுவதுமாக, போர்க் குற்றவாளியான ராசபக்சேயின் கனிவில் கருணையில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தி வெளியான பிறகு, வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய ராசபக்சே, இலங்கை மண்ணை மிதித்தவுடன் மண்டியிட்டு அந்த மண்ணை முத்தமிட்டார். தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்றார். ஆடுகளுக்கு ஓநாய் நல்வாழ்வு அமைத்துத் தரும் என்று யாரும் சொல்ல முடியாது.

அய்நா அறிக்கை செய்துள்ள தலையீடு மிகமிக துவக்கநிலை நடவடிக்கை மட்டுமே. இந்த அறிக்கையையும் இலங்கை அரசு ஒரு தலைபட்சமானது என்று மறுக்கிறது; அறிக்கை வெளியிட தடை கோருகிறது. இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மை பெற வேண்டும், இன இணக்கம் ஏற்பட வேண்டும் என்று காரணங்கள் சொல்லி, இலங்கையின் போர்க் குற்றங்களை கண்டிக்காமல் இருக்கும் நாடுகளின் போக்கும் ஏற்கத்தக்கதல்ல. நீதி, நியாயத்தின் அடிப்படையிலான சர்வதேசியத்துக்கு உகந்ததல்ல.

தமிழ்நாட்டில் ராசபக்சே போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று போராட்டங்கள் நடக்கின்றன.

ராசபக்சே மட்டும் அல்ல. அய்முகூ அரசாங்கம், அதன் வலுவான கூட்டாளியான திமுக தலைமையிலான தமிழக அரசாங்கமும் கூட இந்த விசயத்தில் போர்க் குற்றவாளிகளே. நடந்து முடிந்த இனப்படுகொலையில் இலங்கை அரசாங்கத்தின் பாத்திரம் மட்டுமின்றி இந்திய அரசாங்கத்தின் பாத்திரமும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது மட்டுமே நீதி வழங்குவதாக இருக்கும்.

ஆனாலும் அவற்றை விட அவசியமாக அவசரமாக, சொந்த நாட்டில் மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப்படும் இலங்கைத் தமிழர்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் உடல், பொருள், ஆன்மாக்களுக்கு போரால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து அவர்களை மீட்க, சர்வதேச கண்காணிப்பில் மறுவாழ்வு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். அவர்களின் கவுரவமான வாழ்க்கை உத்தரவாதப்படுத்தப் பட வேண்டும். போரின் வடுக்கள், இலங்கை தமிழர்களின் அடுத்தத் தலைமுறையை நம்பிக்கை இழக்கச் செய்யாதவிதம் சர்வதேச நடவடிக்கைகள் அமைய வேண்டும்.ஊழல், நிர்வாகச் சீர்கேட்டிற்கு எதிராக


ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம்

நிர்வாகச் சீர்கேட்டின் காரணமாக ஏர் இந்தியா நஷ்டமடைந்துள்ளது. அதற்குக் காரணமானவர்கள் மீது மத்திய புலனாய்வுத் துறை விசாரணை வேண்டும், நிர்வாகத்தில் இருந்து ஊழல் பேர்வழிகள் வெளியேற்றப்பட வேண்டும் என்றும், ஊதிய உயர்வு உள்ளிட்ட தங்களுடைய இருபதாண்டு கால கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் ஏர் இந்தியா விமானிகள் ஏப்ரல் 27ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்திய வர்த்தக விமான ஓட்டிகள் சங்கம் (அய்சிபிஏ) இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. ஏர் இந்தியா நிர்வாகம் நீதிமன்றம் சென்றது. டில்லி உயர்நீதிமன்றமோ ஏர் இந்தியா நிறுவனத்திற்கும் அரசுக்கும் பெரும் நஷ்டம் ஏற்படுத்திய ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை என்பதற்கு மாறாக (பெருமுதலாளிகளும் உயர் அதிகாரிகளுமே அதிகம் பயணிக்கிற) பொது மக்கள் நலன் கருதி விமானிகள் எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என்று தடை உத்தரவு போட்டது. ஆனபோதிலும் விமானிகள் தங்கள் வேலைநிறுத்தத்தினை தொடர்ந்தார்கள். அய்சிபிஏ விமானிகளுக்கு ஆதரவு தெரிவித்த ஏர் இந்தியாவின் விமானிகள் 7 பேரை நிர்வாகம் தற்காலிகப் பணி நீக்கம் செய்ததைத் தொடர்ந்து போராட்டம் மேலும் வலுப்பெற்றது. நிர்வாகம் நீதிமன்றத்திடம். விமானிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரியது போராடும் விமானிகள் மீது அத்தியாவசிய பணிப் பாதுகாப்புச் சட்டம் (எஸ்மா) பாயும் என்று மிரட்டியது. எதையும் சந்திக்கத் தயார் என்றார்கள் விமானிகள். நிர்வாகம் சங்க அங்கீகாரத்தை ரத்து செய்து மும்பையிலும் டில்லியிலும் உள்ள சங்க அலுவலகங்களை இழுத்து மூடியது.

உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சர் வயலார் ரவி, விமானிகளின் வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது. தேசிய விமானப் போக்குவரத்து பெரும் நிதி நெருக்கடியில் இருக்கும்போது விமானிகளின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ள முடியாதது என்கிறார். ஊழலும் பெருங்குழும நிறுவனங்களின் கொள்ளையும் மலிந்து போய்விட்ட மன்மோகன் தலைமையிலான அய்முகூ ஆட்சியில் உழைப்பவர்கள் கோரிக்கை வைக்கும் போது மட்டும் நிதிநெருக்கடியாம். தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கைகளால் ஊழலும் கொள்ளையும் பெருக்கெடுத்து ஓடுகிறது. அரசும் ஏர் இந்தியா நிர்வாகமும் போராடும் ஊழியர்களை அழைத்துப் பேசாமல் ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிடுகின்றன. எவ்வித மிரட்டலுக்கும் அஞ்சாத விமானிகள் மே தினத்தன்று ஊழல் எதிர்ப்புப் பேரணி நடத்தியுள்ளனர். விமானிகளின் உறுதியால் நிர்வாகத் தரப்பில் முதலில் இருந்த இறுக்கம் தற்போது தளர்கிறது. ஊதியத்திற்காக மட்டுமல்ல, ஊழலுக்கு எதிரான விமானிகள் போராட்டம் வெற்றி பெறும் நிச்சயம்.அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம்

பத்திரிகை செய்தி

பெண்களை பாலியல்ரீதியாக சிறுமைப்படுத்திப் பேசிய


மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் அனில் பாசு தண்டிக்கப்பட வேண்டும்

புதுடில்லி, ஏப்ரல் 24, 2011ஹ÷க்ளி மாவட்டத்தின் அரம்பாக் நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட அனில் பாசு, மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில், 22.04.2011 அன்று அரம்பாக்கில் பேசியபோது, மமதா பானர்ஜியை மிகவும் அநாகரிகமாக பாலியல்ரீதியாக சிறுமைப்படுத்தி பேசியுள்ளார். கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் திரண்டிருந்த வெகுமக்கள் மத்தியில், மமதா பானர்ஜியை சோனாகச்சியின் பாலியல் தொழிலாளர்களுடன் ஒப்பிட்டு பேசினார்.

பொதுவாழ்க்கையில் ஈடுபடுகிற ஒரு பெண் ஆணாதிக்க சமூகத்தில் மீண்டும் மீண்டும் இழிவுபடுத்தப்படுவதையே, அனில் பாசுவின் ஆணாதிக்க அவதூறுகள் உருவகப்படுத்துகின்றன. பாசு 7 முறை தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கலாம்; ஆனால் பெண்களும் அரசியலில் ஈடுபடும்போது, அரசியலை அரசியலாக அவரால் எதிர்கொள்ள முடியாது என்று காட்டியிருக்கிறார். ஓர் அரசியல் எதிரி பெண்ணாக இருக்கும்போது, அவர் அரசியல்ரீதியான விவாதங்களை பின்னுக்குத் தள்ளிவிடுகிறார்; மாறாக வசதியான ஆணாதிக்க பாதுகாப்பில் நின்று கொண்டு, அவர்கள் பாலியல் தன்மை மீது தாக்குதல் தொடுக்கிறார்; அவர்களை பாலியல் தொழிலாளர்கள் என்று முத்திரை குத்துகிறார்.

சிங்கூர் போராட்டம் நடந்தபோதும், அனில் பாசு, தன் விருப்பப்படி செயல்பட முடியும் என்றால், டாடா ஆலை வாயிலில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தும் மமதாவை அவர் முடியைப் பிடித்து இழுத்து கொண்டு போய் அவருடைய காலிகாட் வீட்டில் வீசி இருப்பார் என்றார். இந்த மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர், இதிகாச துச்சாதன முறைகளின் ஆணாதிக்க படிமத்திடம் தஞ்சமடைந்துதான், ஓர் எதிர்க்கட்சி பெண் தலைவர் நடத்துகிற போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

அனில் பாசு பயன்படுத்திய மொழி ‘மன்னிக்க முடியாதது’ என்று மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பாட்டாச்சார்யா சொல்லியுள்ளார். பாசுவுக்கு எச்சரிக்கைக் கடிதம் தரவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சிக்கு சொல்லியுள்ளார். ஆனால், பொது வாழ்வில் ஈடுபடும் பெண்களை இழிவுபடுத்த சொல் வன்முறை பயன்படுத்தப்படுவது மன்னிக்க முடியாதது என்று மார்க்சிஸ்ட் கட்சி கருதுமானால், ஓர் எச்சரிக்கை மட்டும் எப்படி போதுமானதாக இருக்கும்? மார்க்சிஸ்ட் கட்சியும் மேற்கு வங்க அரசாங்கமும் பாசு மேல் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை?

முந்தைய சம்பவங்களிலும் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் இதே போன்ற ஆணாதிக்க ஏச்சுக்கள், அவதூறூகள் என்றுதான் பதில்வினையாற்றி உள்ளார்கள். காலஞ்சென்ற சுஹாஸ் சக்ரவர்த்தி, திரிணாமூல் கட்சித் தலைவரின் தாய், நிலம், மக்கள் முழக்கத்தை கேலி செய்ய, ‘அவரே மலட்டுப் பெண், அவருக்கு தாயைப் பற்றி என்ன தெரியும்?’ என்று கேட்டார். மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர் பினய் குமார், நந்திகிராமுக்கு வரும் மேதா பட்கருக்கு ‘உங்கள் பின்புறத்தைக் காட்டுங்கள்’ என்று மார்க்சிஸ்ட் கட்சி அணிகளிடம் சொன்னார். தேர்தல் பற்றிய கவலைகள் ஏதும் உடனடியாக இல்லாத அந்த நேரங்களில் கூட மார்க்சிஸ்ட் கட்சியிடம் இருந்து எந்த கண்டனமும் எழவில்லை.

அனில் பாசு சோனாகச்சி பாலியல் தொழிலாளர்களை இழிவுபடுத்தி பேசியதற்காக, மார்க்சிஸ்ட் கட்சி அவர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்கள் மீது பாய்ந்து புசிப்பதற்காக, அவர்களை வாழ்வின் விளிம்புக்கு தள்ளிவிட்ட சமூகத்தில், பிழைத்திருக்கப் போராடி பிழைத்திருக்கிறார்கள். அவர்களை ஏன் அவமானச் சின்னமாகக் காட்ட வேண்டும்? அவமானப்படுத்தப்பட அவர்கள் அப்படி என்ன செய்துவிட்டார்கள்? சோனாகச்சி பாலியல் தொழிலாளர்களின் கவுரவத்தை குறைத்துப் பேச பாசுவுக்கு உரிமையில்லை; மாறாக, முப்பது ஆண்டுகால மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சிக்குப் பிறகும், சோனாகச்சி பெண்கள் அனைத்தும் பறிக்கப்பட்ட வாழ்வை ஏன் நடத்த வேண்டியுள்ளது என்ற கேள்விக்கு அவரும், அவரது கட்சியும் பதில் சொல்லியாக வேண்டும்.

கவிதா கிருஷ்ணன்

தேசிய செயலாளர், முற்போக்கு பெண்கள் கழகம்அருணிமா, சௌம்யா, வள்ளி மற்றும் பலர்

அருணிமா. சிவப்பு கலந்த விடியல் வெளிச்சம் என்று பொருள். விடியல், வெளிச்சம் என எதுவும் இனி அருணிமா வாழ்வில் இல்லை.

நாட்டை பாதுகாக்கும் பணி செய்ய வேண்டும் என்ற உயர்ந்த லட்சியம் கொண்ட அந்த 23 வயது இளம்பெண், மத்திய தொழில் பாதுகாப்புப் படை பணி அதற்கு பொருத்தமானது என்று கருதினார். ஏப்ரல் 11 அன்று அதற்கான தேர்வுக்கு லக்னோவில் இருந்து டில்லிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார்.

தங்கச் சங்கிலி அணிவது அத்தனை பெரிய ஆபத்தாக முடியும் அவர் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. அவர் சென்றிருந்த ரயிலுக்குள் சங்கிலி பறிப்பவர்கள் ஏறினார்கள். சங்கிலியை தரக் கேட்டார்கள். நாட்டைப் பாதுகாக்கும் லட்சியம் கொண்ட அருணிமா தன்னை பாதுகாக்க எதிர்ப்புக் காட்டினார். பெண், அதுவும் சிறுபெண், எதிர்ப்புக் காட்டலாமா? அவரை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வெளியே வீசினார்கள் அவர்கள். பக்கத்து தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த ரயில் சக்கரத்தில் அவர் கால் நசுங்கிப் போனது.

இப்போது அருணிமா டில்லியில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவருடைய இடதுகால் முழங்கால் வரை துண்டிக்கப்பட்டுவிட்டது. அதிலும் இப்போது கிருமிகள் உருவாகின்றன. வலது கால் முழுவதுமாக கட்டுப் போடப்பட்டு அசைவற்றுக் கிடக்கிறது. முகத்தில் அங்கங்கு சிராய்ப்புக்கள். கையில் சில காயங்கள். தண்டுவடத்தில் முறிவுகள் இருப்பதாக டில்லி மருத்துவமனை மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

அருணிமா ஒரு கால் பந்தாட்ட வீராங்கனை. தேசிய அளவில் உத்தரபிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர். கால் பந்தாட்டத்தில் சாதிக்க வேண்டும் என்று கனவுகள் பல கொண்டவர். இவருக்கு அருணிமா என்ற பெயர் இனியும் பொருந்துமா?

தன் கனவுகள் அனைத்தும் நொறுங்கிப் போய்விட்டன என்கிறார் அருணிமா. இப்படி காலில்லாமல் வாழ்வது மிகவும் கடினம், ஓர் அரசாங்க வேலை இருந்தால் ஓரளவாவது கவுரவத்துடன் வாழ முடியும் என்கிறார்.

அருணிமாவின் மாநிலமான உத்தரபிரதேச முதலமைச்சர் ஒரு பெண். உத்தரபிரதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசின் தலைவர் ஒரு பெண். ரயில்வே மத்திய அமைச்சர் ஒரு பெண். அருணிமா இப்போது அனுமதிக் கப்பட்டிருக்கும் மருத்துவமனை உள்ள டில்லியின் முதலமைச்சர் ஒரு பெண். குடியரசுத் தலைவர் ஒரு பெண். நாடாளுமன்ற அவைத் தலைவர் ஒரு பெண்.

இவர்கள் அனைவரும் அதிகாரம் படைத்தவர்கள். ஆனால் இவர்களின் அதிகாரச் செவிகளுக்கு அந்த கனவுகள் சிதைந்த பெண்ணின் அற்பக் கோரிக்கை உடனடியாக விழவில்லை. மாயாவதி துவக்கத்தில் ரூ.25,000 இழப்பீடு என்று அறிவித்தார். அந்தப் பெண்ணை மாயாவதி இதற்கு மேல் சிறுமைப் படுத்தியிருக்க முடியாது.

உலகக் கோப்பை வென்ற வெளிச்சத்தில் இருந்த கிரிக்கெட் வீரர்கள் ஷேவாகும் ஹர் பஜன் சிங்கும் தங்களால் முடிந்த சிறிய பங்களிப்பு என்று ஆளுக்கு ரூ.1 லட்சம் தருவதாக அறிவித்தார்கள். அலகாபாத் உயர்நீதிமன்றம் தலையிட்டு அருணிமாவுக்கு உத்தரபிரதேச அரசாங்கம் ரூ.5 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க வேண்டுமென உத்தரவிட்டது. பிறகு மாயாவதி சொன்ன ரூ.25,000, ரூ.2 லட்சம் ஆனது. ஊடகங்களில் அருணிமாவின் நிலை மீண்டும் மீண்டும் காட்டப்பட அவர் மருத்துவ செலவை ரயில்வே அமைச்சகம் ஏற்கும் என்றும் அவருக்கு ரயில்வே துறையில் வேலை வழங்கப்படும் என்றும் அறிவிப்புக்கள் வந்தன.

பிப்ரவரி 1 அன்று கேரளாவில், வேலை முடித்து ரயிலில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த சௌம்யா என்ற 23 வயது பெண் தன்னை பாலியல்ரீதியாக தாக்க வந்த ஒருவரை எதிர்த்துப் போராடிய போது, ஓடும் ரயிலில் இருந்து தூக்கியெறியப்பட்டு, தலையில் காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது அந்தக் கயவனால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானார். பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செத்துப் போனார். நல்ல வேலைக்குச் சென்று குடும்பத்தை வளமாக வாழ வைக்க வேண்டும் என்ற சாதாரண கனவு கொண்ட பெண்ணுக்கு நம் நாடு உயிர் வாழ வாய்ப்பு தரவில்லை.

பெண்களுக்கு ரயில் பயணம் பாதுகாப்பற்றது என்றாகிவிட்டது. பிற இடங்களும் அப்படித்தான். டில்லியில் கல்லூரிக்குச் செல்ல ஒரு பாலத்தின் மீது நடந்து கொண்டிருந்த ஒரு பெண் திடீரென சுருண்டு விழுந்தார். அக்கம்பக்கம் இருந்தவர்கள் சுதாரித்து அருகில் சென்று பார்த்தபோது அவர் துப்பாக்கியால் சுடப்பட்டது தெரிந்தது. சுட்டவன் மறைந்து விட்டான். ஜார்க்கண்டில் கல்லூரி முதல்வர் அறைக்கு மிக அருகில், திடீரென தோன்றிய ஒருவன் ஒரு மாணவியின் தலையை கூரான ஆயுதத்தால் துண்டித்தான். அவர் துண்டித்து முடித்த பிறகுதான் சுற்றியிருந்த மாணவர்களிடம் பிடிபட்டான். இவை பட்டப்பகலில், அனைவரும் பார்க்க நடந்தவை. இன்னும் பல்வேறு இடங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக பெண்கள் படுகொலை செய்யப்படுவது அன்றாடம் நடக்கிறது.

பெண்கள் மாறி விட்டார்கள். தங்கள் மேல் தொடுக்கப்படும் தாக்குதல்களை தலைவிதி என்று நம்பி ஏற்றுக் கொள்ள இனியும் அவர்கள் தயாராக இல்லை.

ஆனால், பெண்களை அடக்கிப் பழகிய ஆண்களின் கூட்டு மனஉணர்வு அவர்களிடம் இருந்து எதிர்ப்பு வருவதை ஏற்றுக்கொள்ள இன்னும் பழகவில்லை. தாங்கள் மட்டுமே புழங்கிய பொதுவெளியில் பெண்களும் வளைய வரும்போது, திறன்மிக்க விதத்தில் அங்கு இடம் பிடித்துவிடும்போது, அதை இயற்கையாக ஏற்றுக்கொள்ள ஆண்களின் கூட்டு மனஉணர்வு இன்னும் பக்குவப்படவில்லை. ஆண்களின் கூட்டு மனஉணர்வு மட்டுமின்றி, சமூகத்தின் கூட்டு மனஉணர்வு இவற்றை இன்னும் தீவிரமான பிரச்சனைகளாக கருதவில்லை. ஆனால், பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளுக்கு இந்த கூட்டு மன உணர்வு மட்டும் காரணமாக இருந்துவிடாது.

பெண்கள் தாங்கள் பெற்றுள்ள ஒப்பீட்டு அளவிலான விடுதலைக்கான விலையை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் போராடிப் பெற்ற சட்டங்கள் தாமதமாக உதவிக்கு வருகின்றன. அல்லது வருவதில்லை.

சட்டங்களை அமல்படுத்துபவர்களுக்கு பெண்கள் மீதான வன்முறை ஒரு பொருட்டே அல்ல. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஓர் அதிர்ச்சி தரும் செய்தியை சொல்கிறது. பிறந்தது முதல் 6 வயது வரையிலான பெண் குழந்தைகள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந் துள்ளது. 1000 ஆண் குழந்தைகளுக்கு 927 பெண் குழந்தைகள் என்றிருந்த விகிதாச்சாரம் 914 என்று குறைந்துள்ளது. இந்தியாவின் 27 மாநிலங்களில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் கருவிலோ அல்லது பிறந்த பின்போ, பெண் குழந்தைகள் அழிக்கப்படுகின்றன.

அதிகார மய்யமாக, அறிவுலக மய்யமாக இருக்கும் இந்திய தலைநகரம் இன்று பாலியல் வன்முறை நகரம் என்று அழைக்கப்படுகிறது.

பெண்ணுரிமை பேசிய பாரதி, பெரியார் மண்ணில் பெண்கள் மீதான கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன. கவுரவக் கொலைகள் என்ற பெயரில் ஆதிக்கப் படுகொலைகள் அரங்கேறுகின்றன. பெண்கள் அதிகாரம், பெண்கள் பாதுகாப்பு என்ற பளபளப்புப் பெயர்களுடன் அரங்குக்கு வந்த பெண் காவலர்கள் தாங்கள் அனுபவிக்கும் பாலியல்ரீதியான தொந்தரவுகளை, துன்புறுத்தல்களை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.

அவர்கள் தவிப்புக்கு ஓரளவாவது பதில் சொல்லும் விதம் ஈரோட்டைச் சேர்ந்த வள்ளி என்ற பெண் காவலர், தமிழ்நாட்டில் பெண் காவலர்கள் சக காவலர்களாலும் காவல்துறை உயரதிகாரிகளாலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாகவும் அவற்றை விசாரிக்க தனியாக ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வள்ளிக்கு, அவரைப் போன்ற பெண் காவலர்களுக்கு எந்தச் சட்டத்திலும் இதுவரை பாதுகாப்பு கிடைக்கவில்லை.

வழக்கு தொடரப்பட்டுள்ள பின்னணியில் வள்ளி மீது காவல்துறை விசாரணை நடத்தப்பட்டு பல ஆவணங்களில் அவரிடம் கையொப்பம் பெற்றுள்ளார்கள் உயரதிகாரிகள். இந்த ஆவணங்கள் வள்ளிக்கு எதிராகத் திரும்பலாம்.

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் சட்டம் வந்த பிறகு, அது அமலாவதாக தமிழக பெண்கள் ஆணையம் கூட பெருமை பேசும்போது வள்ளி இந்தப் பிரச்சனையை எழுப்பியுள்ளார். கருணாநிதி என்கிற வசனகர்த்தா இதைப் பற்றி பேசினால் கூட பெண்களை இழிவுபடுத்தித்தான் பேசுவார்.

டில்லி முதல் தமிழகம் வரை பெண்கள் மீது குறையேதுமின்றி வன்முறை ஏவப்படுகிறது. இவற்றைத் தடுக்க வேண்டியவர்கள் வேடிக்கைப் பார்க்கிறார்கள். அக்கறையின்றி இருக்கிறார்கள். அலட்சியப்படுத்துகிறார்கள். கேளாச் செவிகளைக் கேட்க வைக்க வலுவான போராட்டங்கள் வேண்டும்.அய்முகூ அரசாங்கத்தின் அரசியல் முன்னுரிமைகள்

அணுவிபத்துக்கு பச்சைக் கொடி


உணவுப் பாதுகாப்புக்கு புதைகுழி

வறுமை ஒழிப்புக்கு காங்கிரஸ் கண்டுபிடித்த தீர்வு வறியவர்களை ஒழித்துவிடுவது. அதே பாணியில் ஊழலை ஒழிக்க மத்திய நிதியமைச்சக தலைமை பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு ஒரு தீர்வு முன்வைத்துள்ளார். ஊழலை சட்டபூர்வமாக்கிவிட்டால், அதன் மூலம் கையூட்டு தருபவர் குற்றமற்றவர் என்று ஆகிவிட்டால், பிறகு அவர் கையூட்டு பெற்றவர் மீது புகார் அளித்தால், பிறகு கையூட்டு பெற்றவர் மீது விசாரணை மேற் கொண்டு நடவடிக்கை எடுத்தால், படிப்படியாக கையூட்டு பெறுவதில் அச்சம் ஏற்பட்டு, பிறகு குறைந்து, பிறகு மறைந்து விடும் என்கிறார். இதை நிதி அமைச்சகத்தின் அதிகாரபூர்வ வலைதளத்திலேயே வெளியிட்டுள்ளார். இது ஒரு புதுமையான தீர்வு என்று அவர் வருணிக்கிறார். எரிகிற வீட்டில் கிடைக்கிற வரை கொள்ளையடித்துக் கொள்ளுங்கள் என்கிறார்.

ஊழலை இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார். ஒன்று துன்புறுத்தலை தவிர்க்க அல்லது துன்புறுத்தல் தாங்காமல் தரப்படும் கையூட்டு. மற்றது துன்புறுத்தல் இல்லாமல் தரப்படுவது; பெறப்படுவது. அதாவது, வருமான வரி அதிகாரிகளுக்கு கணக்கு காட்டுவதில் சரிகட்டுதல் செய்யச் சொல்லி தரப்படுவது முதல் வகை. சட்டத்தை மீறி தொழில் துவங்க சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெற தரப்படுவது இரண்டாவது வகை. நடுத்தர பிரிவினரை இந்த வாதம் கவரக் கூடச் செய்யும்.

பாசுவின் புதுமை தீர்வில் முதல் வகை மட்டுமே இடம்பெறுகிறது. இரண்டாவது வகை தீவிரமான ஆலோசனைக்கு உட்படுத்தப்பட வேண்டியது என்கிறார். ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணை தீவிரமான ஆலோசனைக்கு உட்படுத்தப்படாமல் அவசரப்பட்டு திஹார் சிறை வரை வந்துவிட்டது எனக் கவலைப்படுகிறார் போலும். மக்கள் சட்டபூர்வமாக பெற வேண்டியதை பெற அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கையூட்டு தரும் நடை முறையில் கையூட்டு பெறுவது சட்டபூர்வமா வது இதன் மறுபக்கம். ஏதோ ஒரு சிலர் புகார், வழக்கு, நீதிமன்றம் என்று துணிச்சல் பெற்று விட்டால் அதைச் சொல்லி காலம் கடத்திக் கொண்டிருக்க, திமிங்கலங்களும் சுறாக்களும் நாட்டை வேட்டையாடி விடலாம்.

வேட்டைகள் தொடர்கின்றன. ஸ்பெக்ட்ரம், வனங்கள், சுரங்கங்கள், நிலம், நீர், காற்று எல்லாம் தொடர்கொள்ளை போகின்றன. மன்மோகன் பலவீனமான பிரதமர் என்று தவறாக சொல்கிறார்கள். அறிவியல் தொழில்நுட்பத்தின் உச்சத்தில் மிகமிக பாதுகாப்பான ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டு இயற்கை பேரழிவு என்ன வந்தாலும் தாங்கி நிற்கும் என்று நம்பப்பட்ட ஃபுகுஷிமா அணுஉலை ஜப்பானை மீண்டும் ஓர் அணுவிபத்தில் தள்ளியுள்ள சூழலிலும், நாடெங்கும் உலகெங்கும் அணு தொழில்நுட்பத்தை கைவிடக் கோரி போராட்டங்கள், எதிர்ப்புக்கள் வலுக்கும் போதும், பரிசோதிக்கப்படாத தொழில்நுட்பத்தில் ஜெய்தாபூரில் பிரான்ஸ் நாட்டு அணு உலை அமையவிருப்பதை எதிர்த்துப் போராடியவர்கள் மேல் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டிருந்தாலும், ஜெய்தாபூரில் அணு உலை அமைத்தே தீருவது என்ற எடுத்த முடிவில், பன்னாட்டு மூலதனத்துக்கு காவடி தூக்குவதில் உறுதியான ஒரு பிரதமர் எப்படி பலவீனமானவராக இருக்க முடியும்?

அணு உலை அமைக்கும் தொழில்நுட்பம் வளர்ந்த நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் பற்றிய விவரங்களை சரியாகச் சொல்ல முடியவில்லை. இதைப் பற்றி இந்த வலுவான பிரதமர் ஏதும் பேசுவதில்லை. வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் 83%, 75%, 54%, 37% என்று விதவிதமான விவரங்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

இவை தவிர அதிகாரம் வழங்கப்பெற்ற அமைச்சர்கள் குழு 11 கோடி குடும்பங்கள் என்கிறது. வறுமைக் கோட்டையே அழித்துவிட உறுதி பூண்டுள்ள திட்ட கமிஷனின் அதிகாரி 2004 - 2005 நிலைமையை விட 2009 - 2010 கணக்குப்படி வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் எண்ணிக்கை 5% குறைந்துள்ளது என்கிறார். ஆசிய வளர்ச்சி வங்கியின் சமீபத்திய அறிக்கை உணவுப் பொருட்கள் விலை வீக்கத்தால், 2011 - 2012ல், இந்தியாவில் பசித்திருப்பவர்கள் எண்ணிக்கை உயரப் போகிறது என்று சொல்கிறது.

என்ன கணக்கு வந்தால் என்ன, கோதுமை, அரிசி ஏற்றுமதி தடை நீக்கப்பட வேண்டும் என்று சரத் பவார் சொல்கிறார். நடப்பு ஆண்டு விளைச்சல் எதிர்ப்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும் என்பதால் ஏற்றுமதி செய்துவிட வேண்டும் என்கிறார். பாஜக ஒத்தூதுகிறது. கட்சி வேறுவேறானாலும் வறிய மக்கள் நல்வாழ்க்கை என்று வந்தால் கொள்கை ஒன்றுதான். வறியவர்களை ஒழித்து விடுவதுதான். இப்போது ஏற்றுமதி செய்யவில்லை என்றால் 2002ல் செய்தது போல் குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்ய வேண்டியிருக்கும் என்று விவசாயப் பொருளாதார வல்லுநர் குலாதி சொல்கிறார். 2002லும் இந்திய வறிய மக்கள் பட்டினிச் சாவுக்கு பலியானார்கள்.

இந்திய வறிய மக்கள் பட்டினியில் சாகும் போது, கூடுதல் விளைச்சலை சேமித்து வைக்க மேலான வழிகள் கண்டறிவதற்கு பதிலாக ஏற்றுமதி செய்துவிட வேண்டும் என விவாதம் நடத்துகிறார்கள் ஆட்சியாளர்கள். ஏற்றுமதி செய்யலாமா வேண்டாமா என்று விவாதிக்க அதிகாரம் வழங்கப்பெற்ற அமைச்சர்கள் குழு மே 2 அன்று கூடுகிறது.

சோனியா தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழு பரிந்துரைப்படி உணவுப் பாதுகாப்புச் சட்டம் வந்து, அதன்படி உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட வேண்டுமானால் ஆண்டொன்றுக்கு 73.98 மில்லியன் டன் உணவு தானியம் கொள்முதல் செய்ய வேண்டும். ஆனால் 2011 - 2012ல் 56.35 மில்லியன் டன், 2013 - 2014ல் 57.61 மில்லியன் டன்தான் கொள்முதல் செய்ய முடியும் என்கிறார் பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் ரங்கராஜன். சோனியாவுக்கும் மன்மோகனுக்கும் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் ஒத்தக் கருத்து இன்னும் உருவாகவில்லை. ஒருவேளை ஒத்துக் கருத்து உருவாகக் கூடாது என்பதில் அவர்களிடையே ஒத்தக் கருத்து இருக்கலாம்.

உணவு தானியங்கள் விளைச்சல் அதிகரித்தாலும், அரசுக் கிட்டங்கிகளில் எலிகள் தின்ன திறந்து கிடந்தாலும், நீரில் ஊறி பழுதாகிப் போனாலும், அவற்றை ஏற்றுமதி என்று நாடு கடத்தினாலும், உணவுப் பாதுகாப்புச் சட்டத்துக்கென கொள்முதல் செய்ய முடியாது என்கிறார் பிரதமரின் ஆலோசகர். உணவுப் பாதுகாப்புச் சட்டம் பற்றிய வாக்குறுதி நிச்சயம் காற்றில் பறக்கும் என்பதைத்தான் மத்திய அமைச்சக அதிகாரிகள், திட்ட கமிஷன் அதிகாரிகள் மத்தியில் நடக்கும் விவாதங்கள், அவர்கள் முன்வைக்கிற புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இவற்றை எல்லாம் கேட்டு குறிப்பறிந்து நடந்து கொள்வார் வலுவான பிரதமர்.

இந்த விவாதங்களில் முன்வந்துள்ள மற்று மொரு ஆபத்து, வறிய மக்களுக்கு உணவு தானியங்களுக்கு பதில் பண அட்டைகள் வழங்குவது. உணவு விலைவீக்கம் பற்றி கவலை தெரிவிக்கிற பிரதமர் பண அட்டைகள் உணவு தானியங்கள் இடத்தை இட்டு நிரப்பாது என்பதை ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை? பண அட்டைகள் ஈவிரக்கமற்ற சந்தையின் ஏற்றஇறக்கத்தின் பிடியில் வறிய மக்களை தள்ளும். கொடுக்கப்பட்ட அட்டையில் சொல்லப்பட்ட பணத்திற்கு ஏற்றாற் போல் அவர்கள் வாழும் நாட்கள் நீடிக்கும். சரியாகச் சொல்வதானால் சுருக்கப்படும். இந்திய மக்களின் மிகச்சிறிய பிரிவு மாஸ்டர் கார்ட், விசா கார்ட் கொண்டு பணத்தை செலவழிக்க புதுப்புது வழிகள் தேடி அலையும். பகட்டில் மிதக்கும். மிகப்பெரிய பிரிவொன்று இந்தப் பண அட்டைகள் என்ன தரும் என்று ஏங்கிக் கிடக்கும். அனைவருக்கும் அலைபேசி கிடைத்ததுதான் அலைக்கற்றை விற்பனை சாதனை என்று சொல்வது போல், அனைவருக்கும் பளபளவென பண அட்டை கொடுத்து விட்டோம் என்று கூட அய்முகூ சொல்லும்.

நிதிரீதியாக அனைவரையும் உள்ளடக்க எடுக்கும் முயற்சிகள்தான் பண வீக்கத்துக்குக் காரணம் என்றும் கவுசிக் பாசு சொல்கிறார். ஊரக வேலை உறுதித் திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற அய்முகூ வாய்வீச்சுக்கள் உள்ளீடற்றவை, பொருளற்றவை என்பதை ஆட்சியாளர்களே வெளிப்படையாகக் காட்டி விடுகிறார்கள்.லோக்பால் சட்டம் கோரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து


மாலெ கட்சி ஒருமைப்பாட்டு நடவடிக்கைகள்


லோக்பால் சட்டம் கோரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாலெ கட்சி தேசந்தழுவிய அளவில் பல்வேறு ஒருமைப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டது.

ஏப்ரல் 8 அன்று டில்லியில் ஆர்ப்பாட்டமும் பாட்னா, ராஞ்சி, லக்னோ உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பட்டினி போராட்டமும் நடத்தியது.

ராஞ்சியில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான ஒருமைப்பாட்டு பட்டினிப் போராட்டத்தில் மாலெ கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா கலந்து கொண்டார். அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்க அகில இந்திய தலைவர் தோழர் ராமேஷ்வர் பிரசாத், அகில இந்திய கிசான் மகாசபா பொதுச் செயலாளர் தோழர் ராஜாராம் சிங், முற்போக்கு பெண்கள் கழகத்தின் அகில இந்திய துணைத் தலைவர் தோழர் சரோஜ் சவுபே, மற்றும் தோழர்கள் சத்யதேவ் ராம், அருண்சிங், கமலேஷ் சர்மா ஆகியோர் பாட்னாவில் நடைபெற்ற பட்டினிப் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

லோக்பால் மசோதாவிற்காக அன்னா ஹசாரே டில்லியில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உத்தரப்பிரதேசத்தில் லக்னோ உள்ளிட்ட பல மாவட்டங்களில் மாலெ கட்சி ஏப்ரல் 8 அன்று ஆர்ப்பாட்டம், பட்டினிப்போர், பேரணி ஆகியவற்றை நடத்தியது. லக்னோவில் கோம்தி நதிக்கரையில் உள்ள ஜøலேலால் பூங்காவில் நடந்த தர்ணாவில் கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். அலகாபாத்தில் உள்ள பகத்சிங் சிலையருகிலும் கான்பூர் ராம்ஷ்ரே பூங்காவிலும் தர்ணா நடைபெற்றது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் வாரணாசி, சந்தவுலி, மிர்சாபூர், சோனே பத்ரா, லக்கிம்பூர் போன்ற இடங்களிலும் நடத்தப்பட்டன. காசிபூர் ஜமன்யாவில் நடைபெற்ற ஒடுக்கு முறை எதிர்ப்பு, ஊழல் எதிர்ப்புப் பேரணியில் கட்சியின் மாநிலச் செயலாளர் கலந்து கொண்டார்

டில்லியில் நடைபெற்ற ஒருமைப்பாட்டு தர்ணா வில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் அய்சா மற்றும் ஏஅய்சிசிடியு பதாகையின் கீழ் மாலெ கட்சி தோழர்களுடன் கலந்து கொண்டார்கள். மாலெ கட்சியின் டில்லி மாநிலச் செயலாளர் சஞ்சய் சர்மா, கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள் ஸ்வப்பன் முகர்ஜி, பிரபாத் குமார், கவிதா கிருஷ்ணன், மாணவர் கழக தேசிய பொதுச் செயலாளர் ரவிராய், ஏஅய்சிசிடியு தலைவர் சந்தோஷ்ராய், கிரிஜா பதக் மற்றும் பலர் தர்ணாவை முன்னின்று நடத்தினார்கள். தர்ணாவில் கலந்து கொண்டவர்கள் ஜந்தர்மந்தர் வழியாக ஊர்வலமாகச் சென்றார்கள். பெருங்குழும கொள்ளை மற்றும் பெருங்குழும ஆதரவு கொள்கைகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பினார்கள். ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் கட்சியின் நிலைப்பாடு பற்றிய துண்டறிக்கைகளையும் விநியோகித்தார்கள்.

நாட்டில் ஊழலுக்கு எதிராக பரந்த அளவில் ஏற்பட்ட விழிப்புணர்வை வரவேற்கும் மாலெ கட்சி, ஜன் லோக்பால் சட்டத்தை ஒரு துவக்கப்புள்ளியாகக் கொண்டு, ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் பின்வரும் கோரிக்கைகளையும் இணைத்து முன்னெடுத்துச் செல் லும் போராட்டமாக உயர்த்த அழைப்பு விடுத்தது.

டாடா, ரிலையன்ஸ், வேதாந்தா, டோ போன்ற சட்ட விதிகளை மீறிய, ஊழல் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பெருங்குழும நிறுவனங்கள் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

சுவிஸ் வங்கியில் கருப்புப் பணத்தைத் பதுக்கி வைத்துள்ளவர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டு அனைத்து கருப்புப் பணமும் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டு மக்களின் நல்வாழ்வுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். மொரீசியசுடனான இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் போன்றவற்றின் மூலம் கருப்புப் பணம் வெளியில் செல் லும் வழிகளை உடனடியாக அடைக்க வேண்டும்.

ராணுவ நிலம் மற்றும் ராணுவ ஒப்பந்த ஊழல்களில் ஈடுபட்ட, ஆதர்ஷ் ஊழலில் ஈடுபட்ட ராணுவ உயர் அதிகாரிகளை விசாரணைக்குட் படுத்த வேண்டும்.

ஊழல் மற்றும் பெருங்குழுமக் கொள்ளைகளின் விளைநிலமாக இருக்கிற தனியார்மய மற்றும் வணிகமயக் கொள்கைகளைத் திரும்பப் பெற வேண்டும்.

பெருங்குழும நிறுவனங்கள் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் நெருக்கடியால் எடுக்கப்பட்ட எல்லா அரசாங்க முடிவுகள் மற்றும் பணி நியமனங்கள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.

மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், பெண்கள், ஜனநாயக குடிமக்கள் அனைவரும் ஊழல் வேரோடு அறுக்கப்படும் வரை போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லத் உறுதியேற்க வேண்டும்.

மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல கட்சி அமைப்பை வலுப்படுத்துவோம்!

ஏப்ரல் 22, கட்சி நிறுவன தின உறுதியேற்புக் கூட்டங்கள்

தமிழகம் முழுவதும் கட்சி மாநிலக் கமிட்டி உறுப்பினர்களும், ஊழியர்களும் கலந்து கொண்ட உறுதியேற்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தேர்தலில் போட்டியிட்ட மய்யங்களில் நமது தாக்குதல்மிக்க பிரச்சார இயக்கத்தின் தொடர்ச்சியாக இந்தக் கூட்டங்கள் உற்சாகத்துடன் நடந்தன.

கூட்டத்தில் ஊழல் மற்றும் தேசவளங்கள் சூறையாடப்படுவதை தடுக்க வெகுமக்கள் அரசியல் இயக்கத்தை வளர்த்தெடுப்போம் என தோழர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதம், அதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் விவாதங்கள், நமது கட்சியின் நிலைப்பாடு ஆகியன பற்றி விவாதிக்கப்பட்டது.

கோவையில் 85 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் லெனின் வாழ்க்கை வரலாறு பற்றி சுருக்கமான உரை நிகழ்த்தப்பட்டது. மாநில நிலைக்குழு உறுப்பினர் தோழர் என்.கே.நடராஜன் கலந்து கொண்டார்.

நெல்லையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் 80 பேர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர். சுவரொட்டி, துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டது. கூட்டத்திற்கு தோழர் சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தேன்மொழி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ரமேஷ், ராஜமாணிக்கம், கணேசன், கருப்பசாமி, டேனியல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையம், குமாரபாளையம் ஆகிய இடங்களில் 2 உள்ளூர் கமிட்டிக் கூட்டங்களும், ஈரோட்டில் ஒரு கிளைக் கூட்டமும் நடத்தப்பட்டது. ஏப்ரல் 22 அறைகூவல், ஊழல் எதிர்ப்பு இயக்கம் பற்றிய எம்எல் அப்டேட் தலையங்கம், ஒருமைப்பாடு இதழில் வெளியான மே தின உறுதியேற்பு கட்டுரை ஆகியவை விவாதிக்கப்பட்டன. உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. மொத்தம் 75 பேர் கூட்டங்களில் பங்கெடுத்தனர். மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஏ.கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.

குளச்சலில் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் அந்தோணிமுத்து தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தோழர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகை மாவட்ட ஊழியர்கள் இணைந்து உறுதிமொழி ஏற்புக் கூட்டம் நடத்தினர். அயாலாவின் மாநிலத் தலைவர் ஜனார்த்தனன் கொடியேற்றி துவக்கி வைத்தார். மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

புதுக்கோட்டையில் வேப்பம்பட்டி சமுதாயக் கூடத்தில் உறுதிமொழி ஏற்புக் கூட்டம் மாநில நிலைக்குழு உறுப்பினர் பழ.ஆசைத்தம்பி தலைமையில் நடைபெற்றது. கட்சி சுற்றிக்கைககள், ஊழல் எதிர்ப்பு இயக்கம் பற்றிய எம்எல் அப்டேட் தலையங்கம் படித்து விவாதிக்கப்பட்டன. மாநிலக் குழு உறுப்பினர் தோழர் கே.ஜி.தேசிகன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள், முன்னணிகள் கலந்து கொண்டனர்.

மாநிலக் கமிட்டி உறுப்பினர்களும், முன்னணிகளும் கலந்துகொண்ட கூட்டங்கள் சென்னை, திருவள்ளூர், சேலம், மதுரை ஆகிய இடங்களிலும் நடைபெற்றன.

தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் தேர்தல் வேலைகள் பற்றிய பரிசீலனை மேற்கொள்ளப்பட்டது.

மே தின நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த கூட்டங்களில் முடிவுகள் எடுக்கப்பட்டன.

Search