COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Monday, April 4, 2011

தீப்பொறி, 2011 ஏப்ரல்

இருகழக அரசியலுக்கு முடிவு கட்டுவோம்!


போராடும் இடதுசாரி அரசியலை வலுப்படுத்துவோம்!!
 
திமுக அஇஅதிமுக என்ற இரண்டு கழகங்களும் மொத்த தேர்தல் களத்தையும் ஒரு மெகா திரைப்படம் போல் மாற்றி உள்ளன. திமுகவின் அரசியல் மொழியே திரைப்பட மொழியாகிவிட்டது. 2006 திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்றால் 2011 திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகி என்கிறார் கருணாநிதி. மிகவும் கவனமாக, தம்மையோ திமுக அரசாங்கத்தையோ, கருணாநிதி கதாநாயகன் என்று சொல்லவில்லை. மக்கள் வாக்களிப்பார்களா என்ற அச்சம் இருப்பதால், கதாநாயகியைக் களம் இறக்கி இருக்கிறார்.


கடைசி ஏழை இருக்கும் வரை இலவசம் தொடரும் என உருகும் போது, இலை வசம் வாக்குகள் சென்றுவிடக் கூடாது என்ற கவலையே முன் வந்து நிற்கிறது.

இலவசம் சர்வநாசம் எனப் பொருளாதார மேதையாகப் பேசிய ஜெயலலிதா, கருணாநிதியின் கதாநாயகியை பின்னுக்குத் தள்ளும் எண்ணத்துடன், அடுத்த 5 ஆண்டுகள் தமிழ்நாட்டில் சலுகைகள் மழை பெய்யும் எனும் வானிலை அறிக்கை படித்துள்ளார். தன் ஆட்டத்தையே ஜெயலலிதா ஒரு படி மேலே சென்று ஆடிய பிறகு, சிக்கிக் கொண்ட கருணாநிதி, தமக்கு ஏலமும் ஜாலமும் பிடிக்காது என எரிச்சலுடன் பேசுகிறார். திரைப்படத்திலும் நாடகத்திலும் இறுதிக் காட்சியின் வில்லன்கள் வீழ்வார்கள் என்பதை மட்டும் சரியாகவே சுட்டிக்காட்டுகிறார்.

கதாநாயகி இங்கே. கதாநாயகன் எங்கே?

கதாநாயகன் என சிதம்பரம்தான், 2006 திமுக தேர்தல் அறிக்கைக்குப் பெயர் சூட்டினார். அந்த தேர்தல் அறிக்கையை மையால் எழுதாமல், கண்ணீரால் வியர்வையால் எழுதியதாகக் கருணாதிதி சொன்னார். ‘உழுபவனுக்கே நிலம்’, 55 லட்சம் ஏக்கர் அரசு நிலம் 27.5 லட்சம் விவசாயத் தொழிலாளர்களுக்கு வறிய விவசாயிகளுக்குத் தரப்படும் என்றவுடன், இகக, இககமா தலைவர்கள் காம்ரேட் ஆகக் கருணாநிதியைக் கொண்டாடினார்கள். இப்போது காம்ரேட்கள் ஜெயலலிதாவிடம் திண்டாடுகிறார்கள்.

உண்மைக் கதாநாயகன் 55 லட்சம் ஏக்கர் நிலம்தான். அந்தக் கதாநாயகன் கடைசியில் காணாமல் போய்விட்டான். தில்லைவாழ் அந்தணர்கள் தலித் நந்தனை கோயிலில் நுழைய விடாமல், எரித்து ஜோதியில் கலக்க வைத்து, எல்லாம் சிவமயம் என்றார்கள். கருணாநிதி அந்த நிலம் காணாமல் போய்விட்டது என்று கதாநாயகனின் கதையை முடித்துவிட்டு, புதுமையான கழக பாணி கதாநாயகியை கதாநாயகன் இல்லாமலே அறிமுகப்படுத்துகிறார்.

இந்தப் புதிய கதை, சன், கலைஞர் தொலைக்காட்சி விளம்பரங்கள், அழகிரி அற்புதங்கள் தாண்டி, வாக்காளர்களிடம் எடு படுமா என்ற கவலையில் அழுது கொண்டே சிரிக்கிறார். 234 தொகுதிகளிலும் வெற்றி என மு.க.ஸ்டாலினையும் மு.க. அழகிரியையும் பாட வைத்துள்ளார். பின்னணி இசை பக்தி ரசத்துடன் 63 காங்கிரஸ் நாயன்மார்கள். அவர்கள் தனித்தனி கோஷ்டியாகத்தான் நூதனமாக இசை அமைப்பார்கள். மருத்துவர் அய்யா, ஆட்சியில் பங்கு கேட்க மாட்டேன், 5 ஆண்டுகளும் விசுவாசமாய் இருப்பேன் என பசுமைத் தமிழ், பொங்கு தமிழ் ஜால்ரா போடுகிறார். 1,77,356 குடும்பங்களுக்கு 2,11,507 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. 2 ஏக்கர் நிலம் முழுவதுமாக ஒருவருக்கும் கிடைக்கவில்லை. இந்த நிலங்களையும் வசதி படைத்தவர்கள் வளைத்துப் போட்ட செய்திகளும் உண்டு.

பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தனியார் கல்லூரிகள் மருத்துவமனைகள் விழுங்கி உள்ளன. கரை வேட்டி அமைச்சர்கள் நில முதலைகள் பிடியில் சிக்கி உள்ளன. நிலம் இருக்கிறது. மீட்டுத் தர மனம்தான் இல்லை.

கதாநாயகியும் நகைச்சுவை நடிகரும்

நடிகர் வடிவேல், கருணாநிதி மு.க.ஸ்டா லின், மு.க.அழகிரி ஆகிய மூவரையும் சேர சோழ பாண்டியர்கள் என்று அழைத்தார். மூவேந்தர்களைக் கண்டு மகிழ்ந்து நெகிழ்ந்து போன வடிவேலு, தமிழக மக்களுக்கு, கருணாநிதி தமது தேர்தல் அறிக்கை கதாநாயகி மூலம், வாரி இறைத்துள்ளதாகச் சொல்கிறார்.

மகராசன், மகாராஜா தமது பிரஜைகளுக்கு குடிமக்களுக்கு வாரி இறைக்கத் தயாராகி விட்டார். படம், பழைய காலங்களுக்கு நம்மைக் கூட்டிச் செல்லும், பீரியட் படமாகி விட்டது. வளங்கள் மீது, உழைப்பின் மீது உழைப்பின் விளைவுகள் மீது, நாட்டின் கொள்கைகள் மீது பாத்யதை கொண்ட மக்கள், அதுவே ஜனநாயகம் குடியரசு என்ற பத்தாம்பசலித்தனத்திற்கு பதிலாக, அண்டிப் பிழைக்கும் குடிமக்களுக்கு பேரரசர் வாரி இறைப்பார். மக்களுக்கு என்ன தேவை, எது விருப்பம் என்பது ஒரு பொருட்டல்ல. மாமன் னர் உப்பரிகையில் இருந்து வீசி எறிவார். மக்கள் பொறுக்கிக் கொள்ள வேண்டும்!

கதாநாயகியைக் களம் இறக்கியவரே நகைச்சுவை வேடத்திலும்

தமிழக மக்களுக்கு கைப்புள்ளயும் வட்டச் செயலாளர் வண்டு முருகனும் நன்கு பரிச்சயமானவர்கள். கூட இருப்பவர்கள் உசுப்பிவிட்டு வாங்கிக் கட்டிக் கொள்ள வைப்பார்கள். இழுத்து மிதிக்கப்பட்டு அடி பட்டு வந்தவரைப் பார்த்து, கைப்புள்ளக்கே இந்த அடி என்றால், கைப்புள்ள கிட்ட சிக்கியவர்களுக்கு என்ன ஆகியிருக்கும் என்று கேட்டுச் செல்வார்கள். காங்கிரஸ் 63 இடம் எனக் கேட்டவுடன் கூட்டணி முறிந்தது, மத்திய அமைச்சர்கள் இராஜினாமா என வீர வசனம் பேசினார் கருணாநிதி. மானமிகு வீர மணியும் தொல்.திருமாவளவனும் தொலைந்தது தோளில் ஏறிய காங்கிரஸ், மீண்டது திராவிட மரியாதை தமிழர் கவுரவம் எனக் கொம்பு சீவினார்கள்.

புழல் சிறை பாளையம்கோட்டை சிறை என்றில்லாமல் ஆ.ராசாவுக்கு டெல்லி திஹார் சிறை எனப் பதவி உயர்வு தந்தது போல், கருணாநிதிக்கு நெருக்கமானவர்களுக்கும் திஹார் சிறைக் கதவுகளைத் திறக்கலாமா என காங்கிரஸ் மேலிடம் கையைப் பிடித்து முறுக்க, 63க்கு 63 தந்து கைப்புள்ளயாகத் திரும்பிய கருணாநிதி, வண்டு முருகனாய், 63 நாயன்மார்களும் இனி பக்தியுடன் பாடுங்கள் எனப் பேசிய காட்சி, துன்பத்தில் உள்ள தமிழ்நாட்டு மக்களை வாய்விட்டுச் சிரிக்கச் செய்தது. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பதற்காகத்தான் கருணாநிதி தமிழ் மக்கள் ஆரோக்கியம் கருதிச் செய்திருப்பார்.

வில்லனா? வில்லன்களா?

இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தில் ஒரே ஒரு வில்லன் இருந்தால் எவ்வளவு இழுக்கு? சொன்னதைச் செய்யாத சொல்லாததை எல்லாம் செய்யும் மாநில திமுக அரசும், மத்திய காங்கிரஸ் - திமுக அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுகளும்தான் வில்லன்கள்.

அவர்கள் சொல்லாமலே செய்தவை என்ன?

விலை உயர்வு, ஊழல், அரசு ஒடுக்கு முறை, சமூக ஏற்றத் தாழ்வுகளைப் பெருக்குவது, பன்னாட்டு இந்நாட்டு முதலாளிகள் நாட்டின் வளங்களையும் மக்களின் மலிவான உழைப்பையும் கொள்ளையடிக்க உதவுவது. பெரும் தொழில் குழுமங்களால், பெரும் தொழில் குழுமங்களே, பெரும் தொழில் குழுமங்களுக்காக ஆட்சி என்பதை உறுதி செய்வது, அமெரிக்க அடிமைச் சங்கிலியை இறுக்குவது, விவசாயத்தின் மீது, உழைக்கும் விவசாயிகள், நகர்ப்புற, நாட்டுப்புறத் தொழிலாளர்களின் வாழ்வுரிமைகள் ஜனநாயக உரிமைகள் மீது போர் தொடுப்பது.... இவற்றைத்தானே செய்தார்கள்?

விலை உயர்வு வளர்ச்சியின் அறிகுறி எனப் பேசும் சிதம்பரம், விலை உயர்வு இயற்கையின் சீற்றம் போன்றது எனச் சொல்லும் அன்பழகன், எப்போது விலை குறையும் எனச் சொல்ல நான் என்ன ஜோசியனா எனக் கேட்கும் மன் மோகன், எல்லோருமே வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார்கள்.

விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியாது என உறுதியோடு இருப்பவர்கள்தான் அலைக்கற்றை உரிமத்தை 2008ல் 2005 கட்டணத்திற்கு விற்று ரூ.1,76,000 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தினார்கள். பெரிய பணக்காரர்கள் கொள்ளையடிக்கத் துணை நின்று, தரகுத் தொகை பெற்றார்கள்.

அய்முகூ அலமாரியில் இருந்து அடுத்த டுத்து வெளியே விழுந்த மகா ஊழல் எலும்புக் கூடுகள் நாட்டையே அச்சுறுத்தி அதிர்ச்சிக்கு ஆளாக்கின. ஆ.ராசா கூட்டாளி சாதிக் பாட்சா இனி எப்போதும் உண்மையைச் சொல்ல முடியாது. திமுக வேட்பாளர் தேர்வு நடைபெற்ற அதே நேரத்தில், அதே அண்ணா அறிவாலயத்தில், தயாளு அம்மையாரும் கனிமொழியும், ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான சிபிஅய்யின் நேர்காணலைச் சந்திக்கிறார்கள்.

கொள்ளை அடிக்க ‘கொள்கை கூட்டணி’ அயராது பாடுபடுகிறது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரே ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர் என்பதால் அவர் நியமனம் செல்லாது என்றது உச்சநீதிமன்றம். அப்படியானால் அவரை நியமித்த மன்மோகன் பதவி விலக வேண்டாமா எனக் கேட்கிறது மக்கள் மாமன்றம். அமெரிக்க தூதர் டேவிட் முல்ஃபோர்ட் ஈரானில் இருந்து ஆழ்குழாய் மூலம் எண்ணெய் கொண்டு வரப் பார்க்கும் மணி சங்கர் அய்யர் தூக்கப்பட்டு, தமக்கு வேண்டிய முரளி தியோரா அமைச்சராக்கப்பட்டதில் மகிழ்ச்சி தெரிவிக்கிறார். பல நாடாளுமன்ற உறுப்பினர் கள் அமெரிக்காவோடு போர்த்தந்திர உறவைப் பலப்படுத்துவார்கள், புதிய அமைச்சர்கள் அமெரிக்காவுக்கு நெருக்கமாக நிற்பார்கள் என்கிறார். காங்கிரஸ் கட்சி, இந்திய அமெரிக்க அணு ஆற்றல் ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க எம்பிக்களுக்கு தலா ரூ.10 கோடி வரை தரத் தயாராக இருந்ததையும், அதற் கான பணப் பெட்டியைக் காட்டியதையும் சான்றாகக் குறிப்பிடுகிறார். டேவிட் முல்ஃபோர்ட், டாடா போன்றவர்கள்தான், அமைச்சர்களை நியமிப்பவர்கள், அரசாங்கத்தைச் செலுத்துபவர்கள்.

2010-2011 மத்திய பட்ஜெட்டில் உர மான்யம் ரூ.54,976.682 கோடியில் இருந்து ரூ.49,987.87 கோடியாகவும், உணவு மான்யம் ரூ.60599.53 கோடியில் இருந்து ரூ.60572.98 கோடியாகவும், பெட்ரோலியம் மான்யம் ரூ.38,386 கோடியில் இருந்து ரூ.23,640 கோடியாகவும், விவசாயக் கடன் தள்ளுபடி ரூ.12,000 கோடியில் இருந்து ரூ.6000 கோடியாகவும், தேசீய ஊரக வேலைத்திட்ட ஒதுக்கீடு ரூ.40,100 கோடியில் இருந்து ரூ.40,000 கோடியாகவும், மத்திய வறியவர் வீடு கட்டும் திட்டமான இந்திரா அவாஸ்யோஜ்னா ஒதுக்கீடு ரூ.9333.50 கோடியில் இருந்து ரூ.8996 கோடியாகவும், கிராமப்புற சாலைகள் மற்றும் பாலங்களுக்கான ஒதுக்கீடு ரூ.19,986 கோடியில் இருந்து ரூ.18,217 கோடியாகவும் குறைத்து விட்டார்கள்.

ஆனால் பெருமுதலாளிகளிடம் வசூலிக்க வேண்டிய வருமான வரியை வசூலிக்காமல் இருக்க, ‘முன்னுரிமை வரி செலுத்துவோர்க்கு மான்யம்’ என்ற பெயரால் சென்ற ஆண்டு ரூ.72881 கோடி என்று இருந்ததை 2010 - 2011ல் ரூ.88263 கோடி என உயர்த்திவிட்டார்கள். வருமானவரி சுங்கவரி கலால்வரி என 2005 - 2006 முதல் 2010 - 2011 வரை வசதி படைத்தவர்களுக்கு ரூ.21,240,23 கோடி தள்ளுபடி செய்துள்ளார்கள். சட்டவிரோதமாகவும், சட்டபூர்வமாகவும், முதலாளிகள் வசதி படைத்தவர்கள் கொள்ளையடிக்க, கொழுக்க, வழிவகை செய்துள்ளனர்.

இதன் விளைவாக, இந்தியாவில் 55 டாலர் பில்லியனர்களிடம் (டாலர் பில்லியன் ரூ.4500 கோடி) ரூ.1,11,375 கோடி நிகர சொத்து மதிப்பு என செல்வம் மலை போல் குவிந்துள்ளது. இதனோடு நெருக்கமாகத் தொடர்புடையது வறுமை கடலெனப் பரவுவதாகும். பறித்துக் கொடுத்தவர்கள், சாட்டையால் அடித்தவர் கள், சலுகை எனக் களிம்பு தடவுகிறார்களாம்.

மாநில அமைச்சர்கள் எவருமே ரூ.1000 கோடிக்குக் குறைவாக சொத்து சேர்த்திருந்தால் கவுரவக் குறைவாகக் கருதுவார்கள். கேளிக்கை, மருத்துவம், நில பேரம் என எங்கும் எதிலும் பரவி இறுகப் பற்றியுள்ள கொடும் கரங்களில் தமிழகம் சிக்கி இருக்கிறது.

திமுக தேர்தல் அறிக்கை, மணல் கடத்தலை ஒழிப்போம் என்ற தலைப்பில் ஒப்புதல் வாக்குமூலம் தருகிறது. ‘ஆற்று மணல் கடத்தல், அரிசி கடத்தல் போன்றவைகளை அடியோடு ஒழிப்பதற்கு, எத்தகைய முயற்சி எடுத்தாலும், தொடரும் நிலைமையே உள்ளது’. கழக கட்டுப்பாட்டில் கடத்தல்! எல்லா விதங்களிலும் எல்லா அரங்கங்களிலும் நாடு காக்க, நாட்டு மக்கள் வாழ்வு காக்க, மத்திய அய்முகூ மாநில திமுக அரசுகள் வெளியேற்றப்பட வேண்டும்.

தயாராகிறார் ஜெயலலிதா

கருணாநிதி 120 இடங்களுக்கு மேல் நிற்க முடியாத தம் பலவீனத்தை, பெருந்தன்மை யான விட்டுக் கொடுத்தலுடன் உருவாக்கப்பட்ட வலுவான கூட்டணி எனக் காட்டுகிறார். மம்தா மேற்கு வங்கத்தில் காங்கிரசுக்கு வெறும் 64 இடங்கள் என அறிவித்து, போனால் போகிறது, கூட ஓர் இடம் போட்டுக் கொடுக்கிறேன் என்றார்.

இரும்புப் பெண், தங்கத் தாரகை, மகா கூட்டணி அமைத்தாக வேண்டிய கட்டாயத் திற்கு ஆளானதோடு மட்டுமல்லாமல், கூட்டணி கட்சிகளுக்குக் கொஞ்சம் விட்டுக் கொடுக்க வேண்டிய நிலைக்கும் ஆளானார். இரண்டு கூட்டணிகளிலும், பெரும் கட்சிகளில், தொகுதி ஒதுக்கீட்டில், வேட்பாளர் தேர்வில் இருந்த எதிர்ப்பு, கலைஞர், சன், ஜெயா தொலைக்காட்சிகளுக்குத் தீனி போட்டது.

வைகோவை ஒதுக்கியது, கூட்டணி கட்சிகளை அவமரியாதை செய்தது போன்ற வற்றால் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகளைச் சந்திக்கவும், கருணாநிதியின் கதாநாயகியை எதிர்கொள்ளவும், அம்மையார் பல்டி அடித்து, சலுகை மழை பற்றி அறிவிக்கிறார். திமுக காங்கிரஸ் எதிர்ப்பு, இலையில் வாக்காக விழும் என நம்புகிறார்.

சலுகைகள் அரசியலும் கழகங்களின் வெற்று தேர்தல் அறிக்கைகளும்

1967ல் இருந்து தமிழகத்தைக் கழகங்கள் மாறி மாறி ஆண்டு வருகின்றன. 44 வருடங்களில் நடக்காததை, செய்யாததை, செய்ய முன் வராததை, அடுத்த 5 ஆண்டுகளில் செய்யப் போவதாகச் சொல்கிறார்கள்.

கொள்ளையடிக்கவே கவனத்தைத் திருப்புகிறார்கள்.

வாழ்நாள் முழுதும் பாடுபட்டுச் சேர்த்த ரூ.5 லட்சத்தை ஒருவர் மிகவும் அவசரமான அத்தியவசியமான தேவைக்காக வங்கியில் இருந்து எடுத்துக் கொண்டு வெளியே வருகிறார். காத்திருக்கும் கொள்ளையன் அவரது கவனத்தைத் திருப்ப ஓர் அய்ம்பது ரூபாய் நோட்டை கீழே போடுகிறான். அட, சும்மா கிடக்கிறதே எனக் குனிந்து எடுக்கிறார். கொள்ளையன் ரூ.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிடுகிறான். தேசத்தின் செல்வங்களை, மக்களின் சமூக உழைப்பால் உருவான செல்வங்களை, முதலாளிகள், வசதி படைத்தவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள். இந்த முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்ளைக்கு துணைபோவதுதான், முதலாளித்துவ ஊழல் குற்றமய அரசியல். மக்களின் கவனத்தைத் திருப்பவே சலுகைகள்.

தானம் தர்மம் இலவசம்.


தப்பித் தவறியும் உரிமை இல்லை.

கருவில் இருக்கிற குழந்தையும் கலைஞர் அய்யாவைப் பார்த்து கை கூப்பும் என்கிறார் வடிவேல். நட்சத்திரப் பரப்புரையாளர் குஷ்புவோ, திமுக அதிகாரத்திற்கு வந்தால், தமிழகப் பெண்களுக்கு சூரியனுக்கு கீழே உள்ள எல்லாம் கிடைத்து விடும். ஆகவே, அவர்கள் கஷ்டப்பட்டுப் பாடுபடாமல், வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே மகிழ்ச்சியாக வாழலாம் என்கிறார். ஜெயலலிதா அம்மையார் சலுகைகளை வாரி வாரித் தந்துள்ளதாக, இரட்டை இலையின் ரத்தத்தின் ரத்தங்கள் கூப்பாடு போடுகின்றன. கழகங்கள் ஆண்டது போதும் மக்கள் மாண்டது போதும், வாழும் போது மட்டுமல்லாமல் சாகும் போதும் கவுரவம் இல்லையே என வாய் நிறைய சாபம் கொடுக்கும் மக்களிடம் மிரண்டு போய், சலுகைகளை அறிவிக்கிறார்கள். வாங்கும் சக்தி, கையில் கொஞ்சம் சேமிப்பு, கவுரவமான நல்வாழ்க்கை, உரிமைகள் உடைய ஜனநாயகம், இவை பற்றி கழகங்கள் பேசவில்லை. 55 லட்சம் ஏக்கர் நிலம், வீட்டில் இருவர்க்கு 200 நாள் வேலை ரூ.200 கூலி, பஞ்சமி நில மீட்பு, உழைப்பவர் எவரானாலும் மாதம் ரூ.11,000 வருமானம், தொழிற்சங்க அங்கீகாரச் சட்டம், பயிற்சியாளர் உள்ளிட்ட லட்சக்கணக்கான நிரந்தரமற்ற தொழிலாளர் பாதுகாப்பிற்கான 14.05.2008 தமிழக சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறுதல், நகர்ப்புற நாட்டுப்புற அமைப்புசாரா, கட்டுமானத் தொழிலாளர், ஒப்பந்தத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு, உழைக்கும் விவசாயிகளின் உரிமைகள் பற்றி, தேர்தல் அறிக்கைகள் கள்ள மவுனம் சாதிக்கின்றன.

பெண் மய்ய வாக்குறுதிகள்

உழைப்பு பெண்மயமாகிறது என்றால், பாய்ந்து வளரும் முதலாளித்துவம், குறைந்த கூலி, கூடுதல் சுரண்டலுக்கு அதிக ஆள் கேட்கிறது எனப் பொருள். கடன் பெண்மயமாகிறது. அதனால்தான் கருணாநிதி, ஜெயல லிதா இரண்டு பேருமே, தமிழக உழைக்கும் பெண்களை மீள முடியாத கடன் பொறிக்குள் சிக்க வைக்கவும், உலக மூலதன சுழற்சியில் தமிழகக் குக்கிராமங்கள் வரை சிக்கிக் கொள்ள வைப்பதையும் உறுதி செய்ய முயற்சி எடுக்கிறார்கள்.

ஒவ்வொரு தேர்தலிலும், கழகங்களின் வேட்பாளர்கள், பெண்களை நெருங்கப் பயப்படுவது அதிகமாகிறது. சட்டக் கூலி கேட்டு தடியடிக்கு ஆளான ரெட்டணை பெண்கள், திருமாங்கல்யத் திட்ட சுருக்குக் கயிறால் கழுத்து நெறிபடும் பெண்கள், கொலை வழக்கிற்கு ஆளான சிறையில் அடைக்கப்பட்ட பிரிக்கால் பெண்கள், குற்றமய அரசியலும் கல்விக் கொள்ளையரும் கை கோர்த்ததால் கச்சைகட்டியில் நரபலி தரப்பட்ட தலித் பெண் குழந்தை, சாதி ஆதிக்கத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளான பரளிபுதூர் பெண்கள், வறுமை தாங்காமல் கடலூரை விட்டு கேரளா வுக்குப் பிழைக்கப் போய் வீட்டு வேலை செய்து சித்திரவதையில் செத்த தனலட்சுமிகள், நோக்கியாவின் லாபப் பசிக்குத் தலையைக் கொடுத்த அம்பிகாக்கள் எல்லாம், ஆடு, மாடு, மிக்சி, கிரைண்டர், காற்றாடி, நலப்பயன்கள் என்ற வாக்குறுதிகளில் திருப்தி அடைவார்களா? கழக ஆட்சிகளால் தொலைந்த வாழ்க்கை கழக ஆட்சிகள் வெளியேறினால்தான் மீண்டும் கிடைக்கும் எனப் புரிந்து கொள்ளாமலே போய்விடுவார்களா?

அண்டப் புளுகு ஆகாசப் புளுகிற்கு அப்பாலும் சில உண்மைகள் ஒப்புக்கொள்ளப்படுகின்றன

ஜனநாயக விரோதமாக, எதை எதையோ செய்கிற தேர்தல் ஆணையம், கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் உண்மை அறியும் சோதனைக்கு (நார்கோ அனலிசிஸ்) உட்படுத்தினால், யார் கூடுதலாகப் பொய் சொல்கிறார்கள் என்பது தெரிய வரும். உச்சி முதல் உள்ளங்கால் வரை பொய்யால் நிறைந்தவர் களிடம், இந்த சோதனையே கூட மிரண்டு போகலாம்.

இரண்டு பேரும், விவசாயத்தை மூலதனம் முன்னேறிப் பாய்ந்து அழிக்க வழி சொல்கிறார்கள். இரண்டு பேருமே, மூலதனத்தை மேலும் மேலும் ஈர்க்க, ஒற்றை சாளர முறையில், அவர்கள் சிக்கலின்றி நுழைய, சுரண்ட, சூறையாட சிவப்புக் கம்பள வரவேற்பு தருவோம் என்கிறார்கள். கூடங்குளம், கல்பாக்கம் ஆபத்து பற்றி அமெரிக்க அடிமைத்தனம் பற்றி இருவருக்கும் கவலை இல்லை.

ஜெயலலிதா இரண்டு விஷயங்களில் சற்று மாற்றிப் பேசுகிறார். அவையும் அபாயகரமானவையே. கறாரான சட்டம் ஒழுங்கு அமலாக்கம், காவல்துறை பலப்படுத்துதல் என்பதன் மூலம், போலீஸ் ராஜ்யம் நிச்சயம் என்கிறார். ஜப்பானின் சமீபத்திய சுனாமி நிலநடுக்கத்தை அடுத்து உலகமே அஞ்சுகின்ற அணுமின் ஆற்றலை, நாடித் தேடி வலுப்படுத்துவதாகச் சொல்கிறார். அணுசக்தி மின்சாரம் 25% என அபாய அறிவிப்பு தந்துள்ளார். கருணாநிதி வகையறாக்கள் கொள்ளையடித்த சொத்துக்கள் கைப்பற்றப்படும் என்பவர், தமது உரிமம் மட்டும் தொடரும் எனச் சொல்லாமல் சொல் கிறார். சல்வா ஜ÷டும் போன்ற தனியார் படையை அமைக்கும் பாசிச கனவையும் வெளிப்படுத்துகிறார்.

ராயப்பேட்டை, கோயம்பேடு, போயஸ் தோட்டம் என அலைந்து திரிந்து அசதிக்கு ஆளான, இகக, இகக(மா) தலைவர்கள், ஜெயலலிதா தேர்தல் அறிக்கையின் உண்மை சொரூபம் பற்றி வாயைத் திறக்க அஞ்சுகிறார்கள். படாத பாடுபட்டு பத்து பன்னிரெண்டு எனப் பெற்ற இடங்களில், தப்பிப் பிழைத்தால் போதும், என்ற கவலை அவர்களுக்கு.

அழுத்தும் சுமையாக மாறி உள்ள இரு கழக காந்தம்

காந்தம், இரும்புத் துகள்களை எல்லாம் ஈர்த்து விடும். தனியாக இருக்க விட்டு வைக்காது. இரண்டு கழகங்களுமே பலவீனப் பட்டுள்ளன. தனித்து 120, 170 இடங்கள் கூட போட்டியிட முடியாது. அதே நேரம், கழகங்களுக்கு எதிராகப் புறப்பட்டவர்கள், முரசு கொட்டியவர்கள் உட்பட ஏதாவது ஒரு கழகத்தோடு கைகுலுக்கியாக வேண்டும்.

தொல்.திருமா திமுக பக்கம் என்றால் கிருஷ்ணசாமி அம்மா பக்கம். முஸ்லீம் லீக் திமுக பக்கம் என்றால் மனித நேய மக்கள் கட்சி அம்மா பக்கம். சிறீதர் வாண்டையார் திமுக பக்கம் என்றால் சேதுராமன் அம்மா பக்கம். பெஸ்ட் ராமசாமி திமுக பக்கம் என்றால் தனியரசு அம்மா பக்கம். சரத்குமார் அம்மா பக்கம் போனால் தனபாலன் கருணாநிதி பக்கம். காங்கிரஸ், ராமதாசு, இகக, இகக(மா) எப்போதும் ஏதாவது ஒரு கழகத்துடன் இருப்பார்கள். பாஜக பாவம், தனித்து விடப்பட்டுவிட்டது. சுப்பிரமண்ய சுவாமி மட்டும் உடன் உள்ளார். இரு கழகங்களும் வைகோவை வசதியாகப் பயன்படுத்தி, பின் அவமரியாதை செய்துவிட்டனர்.

பேயா பிசாசா, எரிகிற தீயா கொதிக்கிற எண்ணையா, ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்யுமாறு, மக்கள் மீது, ஒரு திணிப்பு நடக்கிறது. இரு கழக காந்தம், கருணாநிதி ஜெயலலிதா, ஜெயலலிதா கருணாநிதி என மாறி மாறி வரும் விஷ வட்டத்தை ராட்டினம் போல் சுற்றி விடுகிறது.

ஆனால் இது மாறவே மாறாதா? இரு கழக காந்தம் என்ற யதார்த்தத்தை ஒப்புக் கொண்டு, திமுகவை வீழ்த்த அஇஅதிமுக, அஇஅதிமுகவை வீழ்த்த திமுக எனச் சாத்தியமானதை மட்டுமே செய்வது, முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்குப் போதுமானதா? இரு கழக அரசியலை மாற்றி தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டாமா? அது அவசியமானதல்லவா?

மாற்றுப் பாதை மாற்று அரசியல்


காலத்தின் கட்டாயம்


வரலாற்றின் அறைகூவல்

அகில இந்திய அரசியலில், மன்மோகன் தாமஸ் நியமனத்தில் தவறை ஒப்புக்கொண்டதால், இராஜினாமா செய்யுமாறு கேட்க வேண்டியதில்லை என்கிறார் பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ். தேச விரோத, தொழிலாளர் விரோத, உழைக்கும் மக்கள் விரோத, ஓய்வூதிய சட்டம் நிறைவேற காங்கிரசுக்கு பாஜக கை கொடுக்கிறது. பாஜக, காங்கிரஸ் இரண்டுமே, அமெரிக்காவிடம் நாங்கள் உங்கள் பக்கம் என்கிறார்கள்.

தமிழகத்திலும் திமுக ஆளும் வர்க்க ஆளும் கட்சி என்றால் அஇஅதிமுக ஆளும் வர்க்க எதிர்க்கட்சி. இருவருமே, முதலாளித்துவ ஆளும் கட்சியாக எதிர்க்கட்சியாக மட்டுமே இருப்பார்கள். பெருமுதலாளிகளின், வசதிபடைத்த நகர்ப்புற, நாட்டுப்புற, மேட்டுக் குடியினரின் விருப்பங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை மட்டுமே வலுப்படுத்துவார்கள். வாக்களிக்கும் மக்களின் விருப்பங்களை, தேவைகளைக் காலில் போட்டு மிதிப்பார்கள்.

முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு சேவை செய்யும் குற்றமய ஊழல் முதலாளித்துவ அரசியல், இரு கழக அரசியல், மக்கள் கண்களுக்குப் பளிச்செனத் தெரிகிற மாற்று இல்லாததால், மக்களின் முதுகில் ஏறி சாட்டையால் அடித்து சவாரி செய்கிறது.

மக்கள் விருப்பங்களை தேவைகளை அடிப்படையாகக் கொண்ட மாற்று அரசியல், மக்கள் சார்பு வளர்ச்சிப் பாதை, ஓரிரவிலோ, ஒரு தேர்தலிலோ பலம் பெற முடியாது. மாற்று அரசியல், தற்போதைய நிலைகளில், புரட்சிகரமான பாட்டாளி வர்க்க எதிர்க்கட்சியாக மட்டுமே செயல்பட முடியும். நாட்டை, நாட்டு மக்களை, ஜனநாயகத்தை, சமூக சமத்துவத்தை, முற்போக்கு விழுமியங்களை நேசிக்கிற சக்திகள், இந்தத் தேர்தலிலும், தேர்தல் முடிந்த பிறகும், மாற்று அரசியலை மக்களைத் திரட்டி மக்கள் போராட்டங்கள் மூலம் பலப்படுத்தியாக வேண்டும்.

இகக (மாலெ) அந்தப் பாதையில் பயணம் செய்கிறது. முற்போக்கு ஜனநாயக சக்திகளுடன் கரம் கோர்க்கத் தயாராகவுள்ளது. ஊழல் துரோக திமுக கூட்டணியை முறியடிக்க, சந்தர்ப்பவாத அஇஅதிமுக கூட்டணியைப் புறக்கணிக்க, இரு கழக அரசியலின் நாளைய வீழ்ச்சியைப் பிரகடனம் செய்ய, மக்கள் சார்பு வளர்ச்சிப் பாதையை மய்யம் கொண்ட மாற்று அரசியலில் வருகையைப் பதிவு செய்ய, உழைக்கும் மக்களின், ஜனநாயகத்தின், நாட்டுப் பற்றின், முற்போக்கு விழுமியங்களின் குரலை, போராடும் எதிர்க்கட்சியாக சட்ட மன்றத்தில் ஒலித்திட, குளச்சல், திருநெல்வேலி, சோழவந்தான், மேட்டுப்பாளையம், குமாரபாளையம், கந்தர்வகோட்டை, திருவிடைமருதூர், உளுந்தூர்பேட்டை, திருபெரும்புதூர், அம்பத்தூர், மாதவரம் தொகுதிகளில் இகக மாலெ வேட்பாளர்களுக்கு மூன்று நட்சத்திரக் கொடி சின்னத்தில் தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும்.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) போட்டியிடும் தொகுதிகளும் வேட்பாளர்களும்


மேட்டுப்பாளையம் தோழர் ஆர்.ஜானகிராமன்கந்தர்வகோட்டை தோழர் ப.ஆசைத்தம்பி


அம்பத்தூர் தோழர் க.பழனிவேல்


திருநெல்வேலி தோழர் எஸ்.தேன்மொழி


குமாரபாளையம் தோழர் வெங்கடாசலம்


திருபெரும்புதூர் தோழர் எ.சாக்ரடீஸ்


குளச்சல் தோழர் எஸ்.எம்.அந்தோணிமுத்து


மாதவரம் தோழர் எஸ்.ஜானகிராமன்


திருவிடைமருதூர் தோழர் எஸ்.இளங்கோவன்


உளுந்தூர்பேட்டை தோழர் மா.வெங்கடேசன்


சோழவந்தான் தோழர் எஸ்.முருகேசன்மேற்குவங்கத்தில் 37 தொகுதிகளிலும் புதுச்சேரியில் 3 தொகுதிகளிலும்

அசாமில் 13 தொகுதிகளிலும் கேரளாவில் இரண்டு தொகுதிகளிலும்

மாலெ கட்சி போட்டியிடுகிறது.


தேர்தல் அறிக்கை

சட்டமன்ற தேர்தல், ஏப்ரல் 13, 2011

தேச வளங்களைக் கொள்ளையடிக்கும்

மக்கள் வாழ்வாதாரங்களை சூறையாடும்

ஜனநாயக விரோத, பெருமுதலாளித்துவ

வளர்ச்சிப் பாதையை முறியடிக்க,ஊழல், துரோக, ஒடுக்குமுறை

திமுக-காங்கிரஸ் கூட்டணியை தோற்கடியுங்கள்!

சந்தர்ப்பவாத அஇஅதிமுக கூட்டணியை புறக்கணியுங்கள்!புரட்சிகர எதிர்கட்சி

மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சியை ஆதரியுங்கள்!மக்கள் சார்பு வளர்ச்சிப் பாதைக்காகப் போராட

உழைக்கும் மக்கள் வாழ்வுரிமையைப் பாதுகாக்க

உழைக்கும் மக்கள் கவுரவத்திற்காக, ஜனநாயகத்திற்காக,

மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சிக்கு

வாக்களியுங்கள்!குற்றமய பொருளாதாரத்திற்கெதிராக,

குற்றமய அரசியலுக்கெதிராக

ஜனநாயக விரோத இரு அணி

திராவிட அரசியலுக்கெதிராக

அதிகார வெறி, அரசியல் சந்தர்ப்பவாதம்.

சாதி, மத சீரழிவு அரசியலுக்கெதிராக

சரணாகதி இடதுசாரி அரசியலுக்கெதிராகஉழைக்கும் மக்கள் ஒற்றுமைக்காக,

உண்மையான இடது, ஜனநாயக,

முற்போக்கு, சக்திகளின் வளர்ச்சிக்காக,

மாற்றத்திற்காக வாக்களியுங்கள்

மூன்று நட்சத்திரக் கொடி

சின்னத்தில் வாக்களியுங்கள்!அன்பிற்கினிய வாக்காளர்களே,

நாடும் நாட்டு மக்களும் அளவிட முடியாத துயரங்களோடு வாழ்ந்து வருகிற வேளையில் 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் வருகின்றன. விலைவாசி உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம், விவசாய நெருக்கடி, தொழில் உற்பத்தி சரிவு, பணவீக்கம், இமாலய ஊழல்கள், ஒடுக்குமுறை ஆகியவை நாம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சனைகளாகும். கடந்த 20 ஆண்டுகளாக மத்திய மாநில அரசாங்கங்கள் செயல்படுத்திய தவறான பொருளாதாரக் கொள்கைகள் மேற்கூறிய பெருந் துயரங்களுக்கு காரணம்.

தமிழ்நாட்டு தேர்தலை சந்திக்க புறப்பட்டுள்ள இரண்டு கூட்டணிகளும் பணப் பெட்டிகளுடனும் வானளாவிய வாக்குறுதி மூட்டைகளுடனும் நம்மை விரட்டுகின்றன. திமுக, அதிமுக தலைமையிலான இரண்டு அணிகளும் மதிப்புமிக்க நமது வாக்குரிமையை குறிவைத்து போரைத் துவக்கியுள்ளன. வாக்குகளுக்காக நம்மைத் துரத்தும் திமுக, அதிமுக கட்சிகளும் இக்கட்சிகளின் ஆட்சிகளும்தான் நாம் சந்திக்கும் அனைத்து துயரங்களுக்கும் காரணம். இந்த ஆட்சிகளுக்கெதிராக கட்சிகளுக்கெதிராக நமது வாக்குரிமை ஆயுதம் திரும்ப வேண்டும். நமது வாக்குரிமை நாட்டின் தலையெழுத்தை, நாம் சந்திக்கும் சமூகப் பொருளாதார துயரங்களை மாற்று வதற்குப் பயன்பட வேண்டும்.

தேர்தல் தீர்ப்பு, ஊழல், துரோக, ஒடுக்குமுறை மன்மோகன் ஆட்சி பதவி விலகும் தீர்ப்பாக இருக்க வேண்டும்.

கடந்த ஏழு ஆண்டுகளாக தேசத்தை ஆண்டு வரும் காங்கிரஸ் - திமுக கூட்டணி தேசத்தைக் கடும் நெருக்கடியில் தள்ளிவிட்டுள்ளது. ஏழைகளுக்கு விலைவாசி உயர்வையும் வேலை இல்லா திண்டாட்டத்தையும் விவசாய சமூகத்துக்கு பெரும் நெருக்கடியையும் உள்நாட்டு, வெளிநாட்டு பெரும் முதலாளிகளுக்கு வரிச்சலுகைகளையும் வாரிக்கொடுத்து வருகிறது. எந்த துறைக்கு யார் அமைச்சர் என்பதை டாடாவும் நீரா ராடியாவும் அமெரிக்க நிர்வாகமும் முடிவு செய்கின்றன. ஒப்பந்தங்கள், சட்டங்கள் நிறை வேறுவதும் நிராகரிக்கப்படுவதும் அமெரிக்காவின் கைகளில் இருக்கின்றன. காங்கிரசும், பாஜகவும் அமெரிக்க கைப்பிடிக்குள் இருக்கின்றன. ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் தொடர்ந்து அவமானப்படுத்துகிறார்கள். பாலியல் வன்முறையும் படுகொலையும் தொடர்கிறது. அமெரிக்க ஆட்சியாளர்களை கண்டிக்க கூடத் திராணியில்லாத இந்தியா, இந்திய நலன்களை அமெரிக்காவுக்கு விலை பேசி விற்பதில் மட்டும் குறியாக இருக்கிறது. அமெரிக்க வல்லரசின் கைப்பாவையாக மாறிவரும் இந்திய அரசு, இந்தியாவின் அரசியல், பொருளாதாரம், அரசாங்கம், கட்சிகள் அனைத்தையும் அமெரிக்கா உளவு பார்க்கவும் கட்டுப்படுத்தவும் கதவைத் திறந்துவிட்டிருக்கிறது. இந்திய இறையாண்மையும் சுதந்திரமும் கடும் அச்சுறுத்தலுக்காளாகி வருகின்றன.

நாட்டு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்ட மன்மோகன் அரசாங்கம் நோட்டுகளின் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற ஜனநாயக மோசடியை விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியிருக்கிறது. நரசிம்மராவ் காலம் முதல் மன்மோகன் காலம் வரை இது காங்கிரசின் கலாச்சாரமாகவே இருந்து வருகிறது. நாட்டின் முக்கியப் பிரச்சனைகளை எதைப் பற்றி கேள்வி கேட்டாலும் எனக்கு எதுவுமே தெரியாது என்று சொல்வதையே தொழிலாக வைத்திருக்கிறார் பிரதமர் மன்மோகன். எதுவுமே தெரியாத ஒருவர் எதற்கு பிரதமராக இருக்க வேண்டும்? நாட்டு மக்களின் குரலாக, மன்மோகன் சிங்கே பதவி விலகு என்று மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி குரலெழுப்புகிறது. இயக்கம் நடத்தி வருகிறது. ஆட்சியை விட்டு வெளியேறு என எந்த கட்சியும் சொல்லத் துணியாத நேரத்தில், தேசத்தின் குரலாக, ஊழல், துரோக, ஒடுக்குமுறை மன்மோகன் ஆட்சியே பதவி விலகு என மார்ச் 14 அன்று போர்க்குணமிக்க நாடாளுமன்றப் பேரணி நடத்தியது.

தமிழக வாக்காளர்கள் தேர்தலில் அளிக்கும் தீர்ப்பு, மன்மோகன்சிங் ஆட்சி பதவி விலக வேண்டு மென்ற இயக்கத்திற்கு வலு சேர்க்கிற தீர்ப்பாக, அந்த இயக்கத்தை வெற்றிபெறச் செய்யும் தீர்ப்பாக அமைய வேண்டும். மத்தியில் அழிவுகரமான ஆட்சி நடத்தி வரும் காங்கிரஸ் - திமுக, கூட்டணியை, தமிழ்நாட்டில் ஜனநாயக முற்போக்கு எனச் சொல்லிக் கொள்ளும் கூட்டணியை எழ முடியாத வகையில் தண்டிக்க வேண்டும். திமுக - காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிப்பதன் மூலம் மன்மோகன் பதவி விலக வேண்டுமென்ற இயக்கத்திற்கு வலுசேர்க்குமாறு, வெற்றி பெறச் செய்யுமாறு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது மாலெ கட்சி.

ஆட்சி போட்டியா? அழிவுப்போட்டியா?

ஆட்சிப் போட்டிக்காக 14வது சட்டப் பேரவைத் தேர்தலில் களத்தில் இறங்கியுள்ள திமுகவும் அதிமுகவும் இலவசங்களால் வாக்குகளை அபகரிக்கும் போரில் இறங்கியுள்ளன. தமிழ்நாட்டில் கடைசி ஏழை இருக்கும் வரை இலவசங்கள் இருக்கும் என்று கருணா நிதி கூறுகிறார். சமத்துவத் தமிழகத்தை உருவாக்குவோம் என்று ஜெயலலிதா கூறுகிறார். தமிழ்நாட்டில் ஏழைகள் ஏராளமாக அதிகரிப்பதற்கும் தமிழ்நாடு சமத்துவமின்றி இருப்பதற்கும் யார் காரணம்? எவை காரணம்? நாற்பத்து மூன்று ஆண்டுகால திமுக, அதிமுக ஆட்சிகள்தான் காரணம்.

கடந்த 20 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆட்சிகள் தீவிரமாக செயல்படுத்தி வரும் பெரு முதலாளிகள் ஆதரவு பொருளாதாரக் கொள்கைகள், விவசாயத்தை அழித்து வருகிறது. தன்னிறைவு கொண்ட உள்நாட்டு தொழில் வளர்ச்சியைப் புறக்கணித்து அந்நிய நேரடி முதலீடு தொழில் நுட்பம், ஏற்றுமதி என்ற பேரால் நிலம், நீர், இயற்கை வளங்கள், கனிவளங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அழித்து ஒழித்து வருகின்றன. லாபவெறி பிடித்த வெளிநாட்டு நிறுவனங்கள் மிக மலிவான உழைப்புச் சக்தியை கொள்ளையடித்துச் செல்வதற்கு வசதியாக தொழில் வளர்ச்சி செயல்படுத்திப்படுகிறது. விவசாயம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது. கோடிக்கணக்கான கிராமப்புற, நகர்ப்புற உழைப்பாளிகள் ஓட்டச் சுரண்டப்பட்டு ஓட்டாண்டிகளாக்கப்பட்டு வருகின்றனர். கிராமப்புறத்தில், நாளொன்றுக்கு 11 ரூபாயைக் கொண்டும் நகர்ப்புறத்தில் நாளொன்றுக்கு 17 ரூபாயைக் கொண்டும் வாழ வேண்டிய துன்பகரமான வறுமைக்குள் பெரும்பான்மை உழைப்பாளிகளைத் தள்ளிவிட்டன. பட்டினிச் சாவும் விவசாயிகள் தற்கொலையும் அதிகரித்து வருகின்றன.

நாசகரமான பொருளாதாரக் கொள்கைகள் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் அனைத்து துறைகளையும் ஆக்கிரமித்து வருகின்றன. பெருமுதலாளிகள் ஆதரவுக் கொள்கைகளும் நடவடிக்கைகளும் பெரும்பான்மை மக்களின் வருமானம், வாழ்க்கைக்கான அனைத்து ஆதாரங்களையும் அபகரித்து வருகின்றன. சமூகப் பொருளாதார வாழ்விலிருந்து தூக்கியெறியப்பட்டு கடும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த அழிவு கரமான நடவடிக்கைகளுக்கு எதிராக எழுந்து வரும் மக்கள் கோபங்களையும் எதிர்ப்புகளையும் அமைதிப் படுத்துவதற்காகவே சமூகநலத் திட்டங்கள், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கரிசனமிக்க வார்த்தைகள் புழக்கத்தில் விடப்படுகின்றன.

வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்ட மக்கள், கட்சி களுக்கும் ஆட்சிகளுக்கும் எதிராகத் திரும்பியுள்ள நிலையில் இலவசங்கள் அறிவித்தால்தான் வாக்குகள் பெற முடியும் என்ற நெருக்கடிக்கு கட்சிகள் ஆளாகியுள்ளன. ஆட்சிக்கு ஸ்திரத்தன்மை தேடியும் அதே சமயம் பெருமுதலாளிகள் கொள்கைகளை தொடர்ந்து செயல்படுத்தவும் கண்டுபிடிக்கப்பட்டதுதான் திமுகவின் கதாநாயகன், கதாநாயகி, தேர்தல் வாக்குறுதி, ஜெயலலிதாவின் போட்டி இலவசங்கள்

தமிழக மக்களது துன்ப துயரங்களுக்கு தீர்வு காண வேண்டுமென்றால் வருமானம் வாழ்க்கைக்கான ஆதாரங்கள் சொந்தமாக்கப் படவேண்டும். நிலம், வீடு, வேலைவாய்ப்பு, கூலி, கல்வி, மருத்துவம், வருமானம், சேமிப்பு, ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட வாழ்வாதாரங்களைப் பெறுவதற்கான உரிமைகள் வழங்கப்பட்டால்தான் சமூகப் பொருளாதார தீமைகள் குறையும். உயிர் வாழும் உரிமைகள் பாதுகாக்கப்பட்டால்தான் வேலை இல்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்ற துயரங்கள் ஓரளவுக்காவது நீங்கும். இதற்கு மக்களது வாழ்வாதாரங்களையும் இயற்கை வளங்களையும் உள்நாட்டு, வெளிநாட்டு பெருமுதலாளிகள் சூறையாடும் கொள்கை தலைகீழாக்கப்பட வேண்டும். மக்கள் சார்பு வளர்ச்சிப் பாதை முன்னுரிமையாக்கப்பட வேண்டும். ஏழைகளை, சாமான்யர்களைக் குறி வைத்து வாக்குரிமை அபகரிப்புப் போரில் குதித்துள்ள திமுக, அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் என்ன சொல்கின்றன?

1. நிலச்சீர்த்திருத்தம் உள்ளிட்ட

விவசாய சீர்த்திருத்தம்

விவசாயமும், விவசாய சமூகமும் உச்சகட்ட நெருக்கடியில் தள்ளப்பட்டிருப்பதுதான் துயரங்களுக்கெல்லாம் அடிப்படையான துயரம், வேலை இல்லா திண்டாட்டம். விவசாய நெருக்கடி, விலைவாசி உயர்வு, ஆழமடைந்து வரும் ஏற்றத் தாழ்வுகள், உச்ச கட்ட வறுமை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளுக்கும் விவசாயமும் விவசாய சமூகமும் புறக்கணிக்கப்படுவதுதான் அடிப்படைக் காரணம்.

நிலத்தின் மீதான உடைமையில் உரிமையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளே எல்லா ஏற்றத்தாழ்வுகளுக் கும் மூல காரணமாகும். நிலத்தின் மீதான ஏற்றத்தாழ்வு களையப்படாமல் எந்த ஏற்றத்தாழ்வையும் போக்க முடியாது. எனவே நிலச் சீர்த்திருத்தம் உள்ளிட்ட விவசாய சீர்த்திருத்தமே உடனடித் தேவை. 1991 முதல் (நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு, இந்த 12 ஆண்டுகளில் திமுக ஆட்சி 5 ஆண்டுகள், அதிமுக ஆட்சி 7 ஆண்டுகள்) 2003 வரை தமிழ்நாட்டில் 25 லட்சம் ஏக்கர் விவசாய விளைநிலங்கள் அபகரிக்கப் பட்டுவிட்டதாக இந்திய அரசாங்கம் கூறுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.15,994 கோடி மதிப்புள்ள உற்பத்தி நஷ்டம். பனிரெண்டு ஆண்டுகளில் ரூ.2 லட்சத்து 100 கோடி உற்பத்தி இழப்பு. ஆண்டுக்கு 5 கோடி வீதம் 12 ஆண்டுகளில் 60 கோடி மனித நாள் இழப்பு (பறிப்பு) அடிப்படையான வாழ்வாதாரமான நிலம் அபகரிக்கப்பட்டதால் விவசாய சமூகத்திலும் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திலும் ஏற்பட்டுள்ள அழிவுகரமான சமூகப் பொருளாதார விளைவுகள் எத்தகையது என்பதை கணக்கிட்டுக் கொள்ளலாம்.

அ. நிலம், வீட்டுமனை

திமுக

விளைச்சல் நிறைந்தது விவசாயிகளின் கண்ணீர் மறைந்தது என்று பட்டியல் போடுகிறார் கருணாநிதி. ஆனால் அவரது கதாநாயகி தேர்தல் அறிக்கையில் நிலச் சீர்திருத்தம் குறித்த எந்தப் பேச்சுமில்லை.

நிலமற்ற ஏழைக் குடும்பங்களுக்கு 2 ஏக்கர் விவசாய நிலம் வழங்கப்படும் என்பது 2006 தேர்தலில் திமுகவின் மிக முக்கியமான கதாநாயகன் தேர்தல் வாக்குறுதி. அதிமுக ஆட்சி காலத்தில் பெரும் தொழில் கம்பெனிகளுக்கும் முதலாளிகளுக்கும் வழங்கப்பட்ட 55 லட்சம் ஏக்கர் அரசாங்க தரிசு நிலங்களை மீட்டு, செம்மைப்படுத்தி நிலமற்ற வறியவர்களுக்கு வழங்குவோம் என்று திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதி அளித்தது. இரண்டு ஏக்கர் நில வாக்குறுதி கதாநாயகனைக் கொண்டு ஆட்சியைப் பிடித்த திமுக, கடந்த 5 ஆண்டுகளில், நிலத்துக்கும் விவசாயத்துக்கும் வில்லனாக மாறிவிட்டது. வாக்குறுதி அளித்தவாறு நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் விவசாயிகளுக்கு நிலம் வழங்கவில்லை. இந்த தேர்தல் வாக்குறுதியில் நிலம் பற்றிய பேச்சே இல்லை சொன்னதையெல்லாம் செய்துவிட்டோம் என்று பொய் கூறும் திமுக 2 ஏக்கர் வாக்குறுதி பற்றி எதுவுமே பேசவில்லை.

கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் மட்டும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மட்டும் 32,235 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 10 லட்சத்து 80 ஆயிரம் குடும்பங்கள் விவசாயத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன. ஆண்டுக்கு 212 கோடி உற்பத்தி இழப்பு. இதனால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் விவசாயத் தொழிலாளர்களும் கிராமப்புற வறியவர்களும்தான். 5 ஆண்டுகளில் தொழில் முதலாளிகளுக்காக நில வங்கி அமைத்து 20000 ஏக்கர் விளை நிலங்களை அபகரித்த திமுக ஆட்சி, 2011 தேர்தல் அறிக்கை, விளை நிலங்கள் பாதுகாக்கப்படும் என்று கூறுகிறது. தமிழகம் எங்கும் 59 சிறப்பு பொருளாதார மண்டலுங்களுக்காக விளை நிலங்களை, சமுதாயப் பொது நிலங்களை இழந்து போராடிக் கொண்டிருக்கும் தேர்வாய்கண்டிகை, சிவரக்கோட்டை விவசாயிகள், தலித் மக்களின் கோபத்தை தணித்து வாக்குகளை வசப்படுத்துவதற்காக இந்த பசப்பு வாக்குறுதியை திமுக அளிக்கிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அபகரித்துக் கொடுத்த விளை நிலங்களைத் திரும்ப பெறுவோம் என்று ஏன் கூறவில்லை. விவசாயிகளையும் பங்குதாரர்களாகக் கொண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும். உரிய இழப்பீடு கிடைக்கச் செய்யப்படும் என்று கூறுகிறது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தொடரும் வரை எப்படி விளை நிலங்கள் பாதுகாக்கப்படும்?

கடந்த ஆட்சியில் முதலாளிகளுக்காக நிலவங்கி அமைத்த திமுக ஆட்சி, இம்முறை கோவில், மட நிலங்களைப் பாதுகாக்க நிலவங்கி அமைப்போம் என்று உறுதி கூறுகிறது. நிலத்தைப் பகிர்ந்தளிப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்து வாக்குறுதிக்கு துரோகம் செய்துள்ள திமுக, கோவில், மடங்கள் நிலக் குவிமானத்தைப் பாதுகாப்போம் என்று கூறி தலை கீழாகத் திரும்பியுள்ளது.

கோவில், மடங்களுடைய நிலங்களில் குடியிருப் போருக்கு அந்த இடங்களை சொந்தமாக்கிட வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை நிறைவேற்று வதாகச் சொல்லவில்லை. 1971 குடியிருப்புதாரர் அனுபோக உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி வழங்கப் படும் என்று சொல்லவில்லை. நில உச்சவரம்பு சட்டத் திலுள்ள விதிவிலக்குகள் ரத்து செய்யப்டும் என்று சொல்லவில்லை. மாறாக, சட்டவிதிகளுக்கு உட்பட்டு பரிசீலிக்க குழு நியமிக்கப்படும் என்று சொல்கிறது. கோவில், மடங்களுக்கு ஆதரவாக குத்தகை முறைப்படுத்தப்படும் என்று சொல்கிறது.

அதிமுக

இரண்டாம் விவசாயப் புரட்சி பற்றிப் பேசும் அதிமுக தேர்தல் அறிக்கையும்கூட நிலம் பற்றி எது வும் சொல்லவில்லை. அவரது முதல் எதிரி கருணாநிதி 2 ஏக்கர் நிலம் வாக்குறுதிக்கு இழைத்த துரோகம் பற்றி எதுவும் கூறவில்லை. கடந்த முறை அவர் ஆட்சியிலிருந்த போது 55 லட்சம் ஏக்கர் அரசாங்க நிலங்களை பெரு முதலாளிகளுக்கு வழங்குவேன் என்று அறிவித்தவர். இப்போது கூட்டாளிகளாக இருக்கும் இடதுசாரிகள், அந்த 55 லட்சம் ஏக்கர் அரசாங்க நிலங்களை ஏழைகளுக்கு வழங்கவேண்டுமென்று சட்டமன்றத்தில் கேட்டதையும் மறுத்துவிட்டு முதலாளிகளுக்கு கொடுத்தவர் ஜெயலலிதா. அவர் நிலச்சீர்த்திருத்தம் பற்றி பேசாதது மிக நியாயமா னதுதான். அதுமட்டுமல்ல, விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்டு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மாற்றியமைக்கப்படும் என்று கூறுகிறது. திமுக கூறியுள்ளதை விட கூடுதலாக, அதிகப்படியாக வாக்குறுதி அளிக்கும் அதிமுக தேர்தல் அறிக்கை, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ரத்து செய்யப்படும். விளைநிலங்கள் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று ஏன் சொல்லியிருக்கக்கூடாது? ஆனால் பருத்தி விவசாயிகளை அங்கத்தினர்களாகக்கொண்டு 6 ஆயத்த ஆடை சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும் என்று கூறுகிறது. ஒப்பந்த விவசாயத்தை கொண்டுவர வாக்குறுதி அளிக்கிறது திமுக வின் கொள்கையை பின்பற்றி முதலாளிகளுக்காக விளை நிலஅபகரிப்பை தொடர இருக்கிறது.

வீட்டுமனை இல்லாதவர்களுக்கு 3 சென்ட் வீட்டுமனை தரப்படும் என்று சொல்கிறது. ஆனால் இடதுசாரிகளும் கூட்டணி கொண்டுள்ள அதிமுக கோவில், மடத்து நிலங்களில் குடியிருக்கும் தலித், மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழைகளுக்கு குடியிருக்கும் அந்த நிலங்களைச் சொந்தமாக்குவோம் என்று ஏன் சொல்லவில்லை? நில உச்சவரம்பு சட்டத்தை திருத்தவோம் என்று சொல்லவில்லை.

கருணாநிதி சொல்லாத ஒன்றை ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். திமுக குடும்பத்தினர் அமைச்சர்கள் அபகரித்து வைத்திருக்கும் நிலங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று சொல்லியிருக்கிறார். செய்ய வேண்டியதுதான். கூடவே சசிகலா அபகரித்து வைத்திருக்கும் சிறுதாவூர் நிலங்களையும் விஜயகாந்த் வளைத்து வைத்திருக்கும் விவசாய நிலங்களையும் நீதிபதி தினகரன் காவேரிராஜபுரம் நிலங்களையும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் குவித்து வைத்திருக்கும் கணக்கற்ற நிலங்களையும் எக்ஸ்பிரஸ் அம்பலப்படுத்தியுள்ள 4477 ஏக்கர் உள்ளிட்ட 19 லட்சம் ஏக்கர் பஞ்சமர் நிலங்களையும் பறிமுதல் செய்து உரியவர்களுக்கு வழங்கப்படும் என்று சொல்லவில்லை. நிலச்சீர்த்திருத்தமில்லை. நிலக்குவி மானத்தைக் காப்பாற்றுவதுதான் வேலை என்பதில் திமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகளில் எந்த வேறு பாடுமில்லை.

மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி

இந்தியா முழுவதும் தமிழ்நாட்டிலும் நிலச்சீர் திருத்தத்திற்காகவும் விவசாய சீர்திருத்தத்திற்காகவும் போராடி வருகிறது. மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி. கோவில் மடம், அறக்கட்டளை, சர்ச் மற்றும் வக்பு வாரியம், 55 லட்சம் ஏக்கர் ஆட்சி தரிசு நிலங்கள், கல்வி, மருத்துவமனை நிறுவனங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தொழிற் பூங்காக்கள் வைத்துள்ள நிலங்கள் அபகரிக்கப்பட்ட 12 லட்சம் பஞ்சமர் நிலங்கள் உள்ளடக்கி உச்சவரம்பு அளவைக் குறைத்து, உச்சவரம்பு சட்டத்திலுள்ள விதி விலக்குகளை ரத்து செய்து தீவிர நிலசீர்திருத்தத்தை செயல்படுத்துகிற வகையில் சுய அதிகாரம் கொண்ட நிலச்சீர்திருத்த ஆணையம் அமைக்க வேண்டுமென குரல் கொடுத்து வருகிறது. மாலெ கட்சியும் வேட்பாளர்களும் தொடர்ந்து போராடுவார்கள்.

ஆட்சியில் அமரும் அரசாங்கம். விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கும் கொள்கைக்கு மாறாக, விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள், கட்டுமானத் தொழிலாளர்கள், இடம்பெயரும் கிராமப்புறத் தொழிலாளர்கள், சிறு, குறு, விவசாயிகள், கோவில், மடம், அறக்கட்டளை நிலங்களைப் பயிரிடும் குத்தகை விவசாயிகளை மய்யமாகக் கொண்டு விவசாயக் கொள்கையை செயல்படுத்திட வேண்டுமெனப் போராடும்.

நிலமற்றவர்களுக்கு நிலம், வேலைவாய்ப்பு, சொந்த வீட்டுமனை, வீடு, ஆதரவற்ற நலிந்த பிரிவி னர்க்கு முழுமையான சமூகப் பாதுகாப்பு, முழுமை யான மருத்துவ பாதுகாப்பு, வருமானம் ஈட்டக் கூடிய வகையில் விவசாயிகளுக்கு ஊக்கமளித்தல் ஆகியவற்றை உறுதி செய்கிற கொள்கைக்காகப் போராடும்.

கடலோர விவசாய நிலங்களைப் பாதுகாக்க, அனல்மின் நிலையங்களுக்கு விளை நிலங்களை வழங்கக் கூடாது என்பதற்கும் கடலூர் முதல் ராமநாதபுரம் வரை தொடங்கப்படவுள்ள உர, ரசாயன தொழிற்சாலைகளை ரத்து செய்யப்படவும் போராடும்.

ஆ. விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள்

தமிழக கிராமப்புறத்தில் பெரும்பான்மை உழைக் கும் மக்கள், விவசாயத் தொழிலாளர்களும் கட்டு மானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட கிராமப்புறத் தொழிலாளர்களும்தான் இவர்கள்தான் பெரும்பான்மை வாக்காளர்கள். அவர்களது வாக்குகள்தான் ஆட்சிக்கு அனுப்புகிற ஆட்சியிலிருந்து இறக்குகிற சக்தி படைத்தவை. இவர்கள்தான், உழைக்க நிலமின்றி சொந்த வீட்டுமனையின்றி, உடமைகள் எதுவுமின்றி, கல்வி, மருத்துவ பாதுகாப்பின்றி, சமூக கவுரவமின்றி, வேலை வாய்ப்பின்றி, விலைவாசிக் கொடுமையால் வறுமையின் உச்சத்தால் துன்பப்படும் பெரும்பான்மை மக்கள். ஒரு கோடிக்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் கடும் வேலை இல்லா திண்டாட்டத்தால் துன்பப்படுகின்றனர். தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பதிவு செய்து கொண்டிருப்பதும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்து கொண்டிருப்பதும் கிராமப்புற வறுமை உச்சகட்டத்தை அடைந்துள்ளதைக் காட்டுகிறது. வேலை இல்லாத நிலையில் கந்து வட்டிக்காரர்களை நம்பி வாழ்க்கை நடத்தவேண்டிய அபாய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். வாழ்க்கை துன்பத்தை தாங்கமுடியாமல் குடும்பத்தோடு தற்கொலை செய்வது தொடர்கிறது.

திமுக

இந்த விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புற தொழிலாளர்கள் பற்றி திமுக தேர்தல் அறிக்கை எதுவும் கூறவில்லை. திமுக அறிவித்து செயல்படுத்தியதாக சொல்லும் திட்டங்களும் அறிவிக்கப்பட்டிருக்கிற வாக்குறுதிகளும் கிராமப்புற ஏழைகள் பற்றி எதுவும் சொல்லவில்லை. நூறு நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்தப் பாடுபடுவோம் என்ற வாக்குறுதி பற்றி எதுவும் சொல்லவில்லை. கடுமையாக உயர்ந்துள்ள விலைவாசியால் அடித்துச் செல்லப்படும் கூலியை உயர்த்துவது பற்றி எதுவும் சொல்லவில்லை. சட்டக்கூலி கேட்ட ரெட்டணைப் பெண் தொழிலாளர்களை அதிரடிப் படை கொண்டு தாக்கி, உழைப்புக்கேற்ற ஊதியம் உழைத்தால்தான் சாத்தியம் என்று துணை முதல்வர் ஸ்டாலின் கொச்சைப்படுத்திப் பேசினார். இப்போது, வேலை நாட்களை குறைக்கும் வகையில், பெரும் பண்ணையார்களுக்கு ஆதரவாக நூறு நாள் வேலையை விவசாயத்துக்கும் விரிவுபடுத்தப்படும் என்று கூறுகிறது. நீண்டகால கோரிக்கை யான விவசாயத் தொழிலாளர் பாதுகாப்புச் சட்ட கோரிக்கையையும் புறக்கணித்துவிட்டது.

அதிமுக

நூறு நாள் வேலைக்கு விவசாயக் கருவிகள் வழங்கப்படும் என்று கூறுகிறது. ஊழல் முறைகேடுகளால் கொள்ளையடிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவோம், வேலை வழங்காத நாட்களுக்கு பாதி சம்பளம் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும் என்ற வாக்குறுதியும் இல்லை. ஊராட்சி வரை கூட ஏராளமான போராட்டங்களை நடத்திய ஆர்ப்பாட்ட அம்மா 100 நாள் வேலை முறைகேடுகளை, ஊழல்களை எதிர்த்து துரும்பளவுப் போராட்டத்தைக் கூட நடத்தவில்லை.

மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 200 நாட்களுக்கு வேலை, நாளொன்றுக்கு ரூ.200 வீதம் கூலி வழங்க வேண்டும் குடும்பத்தில் ஆண், பெண் இருவருக்கு வேலை வேண்டும், பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்திட வேண்டும், வேலை வழங்கப்படாத நாட்களுக்கு பாதி சம்பளம் வழங்க வேண்டும், ஊழல், முறைகேடுகள் நடக்கும் இடங்களில் மாவட்ட திட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர்களது ஊதியத்தை வெட்ட வேண்டுமென்பதற்காகவும் போராடும்.

விவசாயத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட கிராமப்புறத் தொழிலாளர்கள் பாதுகாப்புக்கு தனிச்சட்டம் கொண்டு வரப் போராடும்.

இ. வறுமைக் கோட்டுப் பட்டியல், வறியவர் முன்னேற்றம்

பசுமைப் புரட்சியும் 20 ஆண்டுகால பொருளாதார சீர்த்திருத்தங்களும் விவசாயப் புறக்கணிப்பும் ஆட்சியாளர்களின் மேட்டுக்குடி சார்பு கொள்கைகளும் ஏழைகள் பரம ஏழைகளின் எண்ணிக்கையை தாறுமாறாக அதிகரிக்கச் செய்துவிட்டன. திமுக, அதிமுக ஆட்சிகள் செய்வதாக கூறும் நலத்திட் டங்களும் ஏழைகள் வாழ்வில் எந்த மாற்றங்களையும் கொண்டு வரவில்லை. உலக வங்கி உதவியுடன் செய்யப்பட்டு வரும் திட்டங்கள், சுய உதவிக் குழுக்கள் எதுவும் வறியவர்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தவில்லை. மாறாக மேலும் ஓட்டாண்டிகளாக்கவே செய்திருக்கிறது. உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு எதுவுமின்றி உள்ளனர்.

திமுக

ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் இருக்கும் என்று சொல்லுகிற கருணாநிதியின் தேர்தல் அறிக்கை வறுமைக் கோட்டுப் பட்டியல் உருவாக்குவது பற்றிக் கவலைப்படவில்லை. பரம ஏழைகள் பற்றி அதிகம் பேசும் திமுக, உண்மையான பரம ஏழைகளைக் கண்டறிந்து கணக்கெடுக்க முன்வரவில்லை. நலத்திட்டங்கள் எதுவும் வறுமைக்கோட் டுக்கு கீழ் உள்ளவர்களை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும். பரம ஏழைகளுக்கு 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கை கூறுகிறது. பதினெட்டு லட்சத்து அறுபத்து நாலாயிரம் குடும்பங்கள் இதனால் பயன்பெறுவார்கள் என்றும் கூறுகிறது. கணக்கெடுக்காமலேயே 18 லட்சம் குடும்பங்கள் என்று கூறுவது மோசடியாகும். நலத்திட்டங்களும் வறியவர்களுக்கு சென்று சேர்வதில்லை. ஆளுங்கட்சி ஆதரவாளர்களும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வாய்ப்புள்ளவர்களும் அபகரித்துக் கொள்கின்றனர். அனைவருக்கும் பொது விநியோகத் திட்டம் என்ற பெயரால் வறிய பயனாளிகளுக்கு பயன்கள் கிடைப்பதற்கு மாறாக வசதி படைத்தவர்களுக்கு போய்ச் சேருகிற நிலை உருவாகிறது.

ரேஷன் அரிசி தேவைப்படாதவர்கள், வெளிச் சந்தையில் வாங்கி சாப்பிடுகிறவர்கள் மற்றும் 40 லட்சம் போலி அட்டைகள் இவற்றுக்கு உரிய அரிசி, கடத்தப்பட்டு வெளிநாடுகளில் கூட விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.4800 கோடி மதிப்புடைய அரிசி கடத்தப்பட்டுள்ளது. கடத்தல்காரர்களை தண்டிப்பதற்கு மாறாக கடத்தலுக்கு துணைபோக மறுத்த தூத்துக்குடி முருகன் போன்ற அதிகாரிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அரிசி, மணல் கடத்தல் பேர்வழிகளை தண்டிக்க வகை செய்யப்படும் என்று (ரூ.1 கோடி 75 லட்சம் ஊழல் செய்தவர்கள் இவ்வாறு சொல்வது மிகப்பெரிய நகைச் சுவை) சொல்கிற திமுக அரிசியும் நலத்திட்டங்களும் உரியவர்களுக்கு சென்று சேர்வதற்கு வழியேதும் சொல்லவில்லை. வறியவர்கள் மாதம் முழுவதற்குமான அரிசி கிடைக்காமல் வெளிச்சந்தைகளில் வாங்கி சாப்பிட வேண்டிய அல்லது பட்டினி கிடக்க வேண்டிய நிலையை மாற்ற வழி சொல்லவில்லை.

அதிமுக

அதிமுக ஆட்சியின் போது வறுமைக்கோட்டுப் பட்டியலில் வசதி படைத்தவர்களையும் சேர்த்து குளறுபடிகள் செய்தது. வசதிபடைத்த அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களையெல்லாம் வறுமைக் கோட்டுப் பட்டியலில் சேர்த்து வைத்திருந் தது. அதே பட்டியலைத்தான் திமுகவும் பயன்படுத்துகிறது. இப்போது, அனைவருக்கும 20 கிலோ இலவச அரிசி என வாக்குறுதி அளித்துள்ளது. இது இன்னும் பெருமளவுக்கு அரிசிக் கடத்தலை தீவிரப்படுத்தும் திமுக பாதையிலேயே செல்லும்.

மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி

வறுமைக் கோட்டுப் பட்டியலில் உள்ள பணக் காரர்கள், வசதி படைத்தவர்களை நீக்கி மேற்கூறியவர்களை இணைத்து புதிய பட்டியல் வெளியிடப்பட வேண்டுமென்று பல விதமானப் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. புதிய வறுமைக் கோட்டுப் பட்டியல் உருவாக்கப்பட வேண்டும். அதில் விவசாயத் தொழிலாளர்கள் கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட கிராமப்புறத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், அனைத்துவகை உடலுழைப்புத் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்களும் சேர்க்கப்பட வேண்டும். இந்தக் குடும்பங்கள் அனைத்துக்கும் இலவசமாக மாதம் 50 கிலோ அரிசியும், லிட்டர் 3 விலையில் மாதம் 5 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட தொடர்ந்து போராடும். எமது வேட்பாளர்கள் போராடுவார்கள்.

வீட்டுமனையில்லாத அனைத்துக் குடும்பங்க ளுக்கும் சொந்த வீட்டுமனையுடன் 2 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டுமெனப் போராடும். வறிய குடும்பங்களின் கல்வி, மருத்துவம், அடிப்படை வசதிகள் அனைத்தையும் அரசே பொறுப்பேற்று செய்து தர வேண்டும். கந்து வட்டிக்காரர்களிடம் இருந்து வறியவர்களை விடுவிக்கும் வகையில் கடன்களை ரத்து செய்யவேண்டும்.

ஊ. சிறு குறு, நடுத்தர விவசாயிகள்

திமுக

விவசாயம் செய்யும் விவசாயிகளுள் 92% பேர் சராசரியாக 2 ஏக்கர் நிலத்தைக் கொண்டே வாழ்ந்து வருகின்றனர். ரூ.7000 கோடி கடன் தள்ளுபடியில் 57% ஆதாயம் பெரிய விவசாயிகள் பணக்கார விவசாயிகளுக்கு கிடைத்ததே தவிர சிறு, குறு விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. சிறு, குறு விவசாயிகள் 75% பேர் இன்னும் கடனாளிகளாகவே உள்ளனர். விவசாயக் கூட்டுறவு வங்கிகளுக்கு 15-20 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமலிருப்பதால் அரசாங்க அதிகாரிகள், மிராசுதாரர்கள், ஆளுங்கட்சி பிரமுகர்கள் கைகளில் சிக்கியுள்ளது. அதனால் சிறு, குறு விவசாயிகளால் கடன் வாங்க முடியவில்லை. கோவில், மடம் நிலங்களைப் பயிரிட்டு வரும் ஏழை குத்தகை விவசாயிகள் 90%க்கும் மேற்பட்டவர்கள் கடனாளிகளாகியுள்ளனர். கடன் தொல்லையால் துன்பப்படுகிற விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில், கோவில் பாக்கிகளை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவது குத்தகை விவசாயிகளை குழி தோண்டி புதைக்கிற வேலை யாகும். நேரடியாக விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஆர்டிஆர் பதிவு வழங்குவதோடு உள் குத்தகை முறைகள் ஒழித்துக்கட்டப்பட வேண்டும். தனியார் நிலங்களில் பயிரிடும் குத்தகை விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் கணக்கெடுக்கப்பட்டு பதிவு செய்யப்படவேண்டும்.

கோவில், மடங்கள் நிலங்களை ஆறுகள், குளங்கள், ஏரிகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட பொது நீர் ஆதாரங்களின் மீதுள்ள ஆக்கிமிப்பாளர்களை அப்புறப்படுத்தி பாசனப் பாதுகாப்பை உறுதிப்படுத் திட வேண்டும். ஆற்று மணல் கொள்ளையை தடுத்து நிறுத்திட வேண்டும். காவிரி, முல்லைப் பெரியார், பாலாறு பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமை பாதுகாக்கப்பட போராடும்.

2. தொழிலாளர் நலன், தொழில் வளர்ச்சி

திமுக ஆட்சி பின்பற்றி வரும் தொழில் கொள்கை, சிறப்புப் பொருளாதார மண்டலங்களை, அந்நிய நேரடி முதலீட்டை ஆதாரமாகக் கொண் டிருக்கிறது. 47 ஒப்பந்தங்கள் மூலம் 15 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்த்துள்ளதாக சாதனை பேசி வருகிறது. ஹ÷ண்டாய், நோக்கியா, மோட்டோரோலா போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் வருவதையே ஆகக்கூடிய தொழில் வளர்ச்சி என்று கூறுகிறது. நோக்கியா போன்ற நிறுவனங்களுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒரு ரூபாய் க்கு குத்தகை வாடகைக்கு கொடுத்துள்ளது. நீர், மின்சாரம், நிலம், வரி அனைத்திலும் இலவசங்களை அளித்து வருகிறது.

மலிவான உழைப்புக்காகப் படையெடுக்கும் இந்தப் பெரும் நிறுவனங்கள், நிரந்தரத் தொழிலாளர்களை குறைத்து பயிற்சி, ஒப்பந்த தொழிலாளர்களை அதிகப்படுத்தி கொள்ளை லாபம் அடித்து வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் நோக்கியா நிறுவனம் மட்டும் ரூ.22,000 கோடியை தமிழ்நாட்டிலிருந்து எடுத்துச் சென்றுள்ளது. இந்த தொழிற்சாலைகளில் தொழிற்சங்கம் அமைக்கக்கூடாது. மோசமான வேலை நிலைமை, குறைந்த சம்பளம், கடும் அடக்குமுறைகள், நித்தம் தொழிலாளர்கள் உயிர் குடிக்கும் பல துயரச் சம்பவங்கள். அம்பிகா என்ற இளம் தொழிலாளி நிர்வாக அலட்சியத்தால் கொல்லப்பட்டார். பாக்ஸ்கான் ஆலையில் விஷவாயுக் கசிவு, கிரேன் விபத்துக்கள், மொத்தத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சிறப்புக் கொலைக் களங்களாக உள்ளன.

திமுக

இந்தக் கொலைக் களங்களைத்தான் தொழில் வளர்ச்சி என்று கூறுகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தொடரும் என்கிறது. வணிகர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்ப்பதாகக் கூறும் திமுக தேர்தல் அறிக்கை தொழில் வளர்ச்சிக்காக அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்க உறுதி ஏற்கிறது. தொழிற்சங்க அங்கீகாரச் சட்டத்திருத்தம் பற்றிய தொழிற்சங்க இயக்கத்தின் கோரிக்கை பற்றி எதுவும் சொல்லவில்லை. பயிற்சியாளர் நலன் காக்கும் திருத்தச் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதலைப் பெறவில்லை. தொழிலாளர் நலன், தொழிற்சங்க அங்கீகாரத்துக்கு குழு அமைப்பது என்ற தனது சட்டமன்ற அறிவிப்பு பற்றி எதுவும் கூறவில்லை.

அதிமுக

அதிமுகவின் தேர்தல் அறிக்கையும் திமுகவைப் பின்பற்றியே அமைந்துள்ளது. தமிழகம் முழுவதும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்க வாக்குறுதி அளித்திருக்கிறது. தொழிற்சங்க அங்கீகாரம், தொழிலாளர் நலன் பற்றி எதுவும் கூறவில்லை.

நகர்புறமயமாக்கமும், தொழில் வளர்ச்சியும் அதிகம் கொண்ட தமிழ்நாட்டில் மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர் வர்க்கம் உள்ள தமிழ்நாட்டில் நகர்ப்புற தொழிலாளர் வர்க்கம் மற்றும் நகர்ப்புற ஏழைகளை இரண்டு கட்சிகளுமே முற்றிலுமாகப் புறக்கணித்து விட்டன. பெருமுதலாளிகள் வளர்ச்சிப் பாதைக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் அவர்களின் கோபத்துக்கு ஆளாகாமல் தங்கள் தேர்தல் அறிக்கைகளை வடிவமைத்துள்ளன.

மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி

மிருகத்தனமான மூலதனத் தாக்குதலுக்கு எதிராக, பெருமுதலாளிகள் தாக்குதலுக்கு எதிராக மாலெ கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. பிரிக்கால் ஆலையின் 4 ஆண்டுகளுக்கு மேலான வெற்றிகரமான போராட்டத்தின் மூலம் தொழிற்சங்க அங்கீகார சட்டத் திருத்த கோரிக்கையை தமிழக தொழிற்சங்க இயக்க கோரிக்கையாக மாற்றியுள்ளது. பயிற்சியாளர் நலன் காக்கும் சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற அரசாங்கத்தை நிர்ப்பந்தித்து வெற்றி கண்டுள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்களின் பிரச்சனைகளை தமிழகம் தழுவிய பிரச்சனைகளாக மாற்றியுள்ளது. தொழிற்சங்க அங்கீகார சட்ட திருத்தம் வேண்டுமென்றும் பயிற்சியாளர் நலன் காக்கும் சட்டத் திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற போராடும்.

விசைத்தறி, பின்னலாடை, கட்டுமான தொழி லாளர் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வேலை, கூலி உத்தரவாதம், சொந்த வீட்டுமனை, வீடு, மருத்துவம், கல்வி உரிமை உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புக்கு தனிச் சட்டம் கொண்டுவரப் போராடும். நலவாரியப் பதிவுக்கு வருவாய் அதிகாரி சான்று பெறும் நடைமுறையை ரத்து செய்ய போராடும். கட்டுமான பணிகளில் 1% நல நிதி வசூலிக்கப்படவும், அனைத்துவகை நலவாரியத் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் மாதம் ரூ.3000 வழங்கப்படவும் மருத்துவம் மற்றும் உணவுப் பாதுகாப்பை அரசே ஏற்க வேண்டுமென்பதற்காகவும் போராடும்.

நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து நகரப் பகுதிகளுக்கும் தேசிய ஊரக வேலைத் திட்டம் போல் தேசிய நகர்ப்புற வேலைத் திட்டத்தைக் கொண்டு வரப் போராடும். வேலை தேடி இடம் பெயர்ந்து செல்லும் தொழிலாளர்கள் பதிவு செய்யப்படவும் அடையாள அட்டை வழங்கப்படவும் அவர்களது வேலை, கூலி, சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வகையில் இடம் பெயரும் தொழிலா ளர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும். வெளிமாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டப் பாதுகாப்புக்காகப் போராடும்.

மீனவர் விரோத கடற்கரை ஒழுங்குமுறை சட்ட த்தை ரத்து செய்யப் போராடும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தவும் அவர்கள் அச்சமின்றி தொழில் செய்யவும் உயிர், உடமைகள் மற்றும் கவுரவம் பாதுகாக்கப்படப் போராடும். ஏற்காடு மலைவளங்களையும், மலைவாழ் மக்களின் வாழ்வுரிமையை அழிக்கும் வேதாந்தாவை ஏற்காடு மலைகளிலிருந்து வெளியேற்றவும் அனுமதியை ரத்து செய்யவும் போராடும். காவிரி, தாமிரபரணி, நொய்யலாறு, பாலாறு உள்ளிட்ட ஆறுகளையும் நிலத்தடி நீரையும் மாசுபடுத்தும் பெரும் முதலாளிகள் நடத்தும் தொழில் திட்டங்களை ரத்து செய்யவும் நிலத்தடி நீர்வளங்களை உறிஞ்சும் மினரல் ஆலைத் திட்டங்களை மூடவும் போராடும்.

தொழிலாளர் உரிமைக்காகப் போராடுகிற மாலெ கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் குமாரசாமி மற்றும் தொழிலாளர் தலைவர்கள், முன்னோடிகள் மீது போடப்பட்டுள்ள பொய்யான கொலை வழக்குகளை ரத்து செய்யப் போராடும்.

3. விலை உயர்வு

திமுக

திமுக கிலோ ரூ.1 விலையில் அரிசி வழங்கி விலைவாசி உயர்விலிருந்து ஏழைகள் காப்பாற்றப்பட்டிருப்பதாக நிதி அமைச்சர் அன்பழகனும் ஸ்டாலினும் மற்றவர்களும் திரும்பத் திரும்பக் கூறி வருகின்றனர். உலகளாவிய பொருளாதார மந்தத்திற்கு மத்தியிலும் தமிழ்நாடு பாதிக்கப்படாமல் பாதுகாக் கப்பட்டதாகவும் உண்மைக்குப் புறம்பாகப் பேசுகிறார்கள். ஆனால் சுட்டெரிக்கும் விலைவாசி உயர்வு ஏழை, சாமான்ய மக்கள் மற்றும் நடுத்திர மக்கள் வரை மிக மோசமாகப் பாதித்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில் விலைவாசி உயர்வு ஏழைகளுக்கு பெரும் பாதுகாப்பின்மையை உருவாக்கியுள்ளது. வறுமையால் வாழ்க்கை வெறுத்து ஏழைகள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.

4. வேலைவாய்ப்பு

திமுக

மக்கள் தொகையில் 72% பேர் சார்ந்திருக்கும் விவசாயத்தில் வேலைவாய்ப்பு அழிக்கப்பட்டு வருகிறது. விவசாயத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டால் மட்டும்தான் விவசாயம் புத்துயிர் பெறும். நீர்ப்பாசனப் பிரச்சனையால், பயிர்க் கடன் கிடைக்காததால் அரசாங்க முதலீடு இல்லாததால், விளைபொருள்களுக்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகளும் விவசாயமும் நசிந்து, பயிர் செய்யும் பரப்பு குறைந்து வருகிறது. விளைநிலங்கள் மேலும் மேலும் விவசாயமில்லாத காரியங்களுக்கு ஒதுக்கப் படுவதால் விவசாயம் மேலும் அழிவுகரமான விளைவுகளை சந்திக்கிறது. நவீன தொழில்நுட்பம், எந்திரமயமாக்கலைப் புகுத்தி மேலும் மேலும் வேலை வாய்ப்பை பறிக்கும் விவசாயக் கொள்கையே பின்பற்றப்படுகிறது.

திமுக தேர்தல் அறிக்கை, விவசாயத்தில் ஒப்பந்த விவசாயம், கார்ப்பரேட் விவசாயம் தீவிரமான எந்திரமயமாக்கல் மேட்டுக்குடி வணிக விவசாயத்தை ஊக்குவிப்பதற்கே திட்டமிடுகிறது. இது சிறு, குறு விவசாயிகளை விவசாயத்திலிருந்து அப்புறப்படுத்துவதற்கே இட்டுச் செல்லும். வேலை இழப்பினால் விவசாயத்திலிருந்தும் கிராமங்களிலிருந்தும் விரட்டப்படும் தொழிலாளர்கள் துன்பகரமான குறைந்த கூலிக்கு நகரங்களை நோக்கிச் செல்வது மேலும் தூண்டப்படும். நிறுவனமயப்படுத்தப்படும். அதிமுக வும் மேற்கூறிய அழிவுகரமான பாதையை செயல் படுத்தும் விதமாகவே தேர்தல் அறிக்கையை வடித்துள்ளது.

மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி

தொழில் வளர்ச்சி என்ற பேரால் விவசாயத்தை அழித்து வரும் கொள்கையால் கிராமப்புற வேலை இல்லா திண்டாட்டமும், வறுமையும் வேகமடைந்து ஆழமடைந்துள்ளது. தொழில் வளர்ச்சியால் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்ற அறிவிப்புக்கு மாறாக கிராமப்புறத்திலிருந்து வருவோரை மிகக் குறைந்த கூலிக்கு அமர்த்திக் கொள்ளும் ஒப்பந்த, தற்காலிக முறை நிரந்தரமாக்கப்படுகின்றன. வெளிநாட்டு முதலாளிகள் தமிழ்நாட்டை நோக்கிப் படையெடுப்பதற்கு காரணமே மிக மலிவான உழைப்பு, வெகு குறைவான சம்பளம் என்பதால்தான். வெளி நாட்டு முதலாளிகளும் பஞ்சாலைகளை நடத்தும் உள்நாட்டு முதலாளிகளும் விவசாய அழிவால் உற்பத்தி செய்யப்படும் மலிவான உழைப்பை அபகரித்தே கொள்ளை லாபம் அடிக்கிறார்கள். இதற்கென்றே ஆட்சியாளர்களால் மலிவான உழைப்பு திட்டமிட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. ஏற்கனவே இருந்த வேலைகள் பறிக்கப்பட்டிருக்க புதிய வேலைகளும் உருவாக்கப்படவில்லை. மிகக்குறைந்த கூலிக்கு வேண்டும் வரை வைத்துக் கொண்டு வேண்டாதபோது தூக்கியெறியப்படும் கொள்கைதான் பின்பற்றப்பட்டுவருகிறது. வேலைத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டதாக பெருமை பேசிக்கொள்ளும் திமுக ஆட்சி, அரசாங்கத் துறையில் மட்டும் 2 லட்சத்துக்கு மேலுள்ள காலியிடங்களை நிரப்ப வில்லை.

5. தீண்டாமை, சமூகக் கொடுமைகள்

பாப்பாபட்டி, கீரிப்பட்டிக்காக முதல்வர் கருணாநிதி, சமத்துவப்பெரியார் விருது பெற்றுக் கொண்டார். விடுதலை சிறுத்தைகளைக் கூட்டணி யில் பிடித்து வைத்துக்கொண்டதன் மூலம், அருந்த தியர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்துவிட்டதாகவும் கூறி தலித் மக்களின் பிரச்சனையை தீர்த்து விட்டதாக கூறுகிறார். பெரியார், அண்ணா வழியில் வந்ததாகக் கூறும் கருணாநிதி ஆட்சி தலித்துகளின் முதல் எதிரியாக ஆகிவிட்டது. தீண்டாமை சமூகக் குற்றங்களில் தமிழ்நாடு முதலிடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. உத்தபுரம் மட்டுமல்லாது கோவை, திருச்சி போன்ற பெரும் தொழில் நகரங்களில் கூட தீண்டாமைச் சுவர்கள் முளைக்கின்றன. கோவில்களில் வழிபடும் உரிமை மறுக்கப்படுகின்றது. இன்னும்கூட இரட்டை கிளாஸ் முறை பின்பற்றப்படுகிறது. வன்கொடுமை வழக்குகளை விசாரிக்காமலும் தண்டனை வழங்காமல் இருப்பதிலும் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. போலீஸ், நீதித் துறையில் ஆதிக்க சாதி பிரதிநிதிகள் அதிகம் இருப்பதாலும் காவல் நிலையங்களைக் கட்டுப்படுத்தும் ஆளும் கட்சி, எதிர் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதும் தலித்துகள் மீதான வன்கொடுமைக் குற்றங்கள் பதிவு செய்யப்படுவதில்லை விசாரிக்கப்படுவதில்லை. தண்டிக்கப்படுவதில்லை. திமுக ஆட்சி மூர்க்கத்தனமாக செயல்படுத்தி வரும் பெருமுதலாளிகள் ஆதரவு வளர்ச்சிக் கொள்கைகள் சமூகத்தின் நலிந்த பிரிவினர், தலித், மலைவாழ் மக்கள், பெண்கள் மீது பெரும் சமூகக் கொடுமை களாக உருவெடுத்துள்ளன. தீவிரப்படுத்தியுள்ளன. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொடியங்குளம் என்றால் கருணாநிதிக்கு பரளிப்புதூர் வந்திருக்கிறது.

திமுக, அதிமுக

இரண்டு கட்சிகளுமே தீண்டாமை, சமூகக் கொடுமைகள் பற்றி கண்டுகொள்ளவே இல்லை. உத்தபுரம் போன்ற தீண்டாமைக் கொடுமைகள் எழுந்தபோது விடுதலை சிறுத்தைகள் கூட்டணி சேர்ந்திருக்கும் திமுகவும் புதிய தமிழகம் கூட்டணி சேர்ந்திருக்கும் அதிமுகவும் வாய்திறக்கவில்லை.

மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி

தலித்துகளின் சமத்துவ உரிமை, சமூக நீதி பாதுகாக்கப் போராடும். தலித்துகள் மீதான அனைத்துவகை தீண்டாமை நடைமுறைகள், பாகுபாடுகள் ஒழிக்கப்படப் போராடும். வன்கொடுமை தடுப்புச் சட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படவும் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவில் விசாரித்து குற்றவாளிகள் தண்டிக்கப்படவிரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படப் போராடும். தலித்துகளுக்கான சிறப்புக்கூறு திட்ட நிதி மற்ற திட்டங்களுக்கு திருப்பி விடாமலிருக்க சட்டப் பாதுகாப்புக்காகப் போராடும். உத்தபுரம், பரளிப்பதூர் உள்ளிட்ட கிராமங்களில் தலித் துகள் மீது தாக்குதல்கள் நடத்தியவர்கள் உடனடியாகத் தண்டிக்கப்பட வேண்டும். மதுரை மாவட்டம் கச்சைக் கட்டியில் நாலரை வயது தலித் பெண் குழந்தை நரபலியிடப்பட்ட சம்பவத்தில் ஆளுங்கட்சி ஆதரவு பெற்ற பிரமுகர்கள் காவல்துறை உயர் அதிகாரிகள் துணையுடன் ஆதாரங்களை அழித்து வருகிறார்கள். குற்றவாளிகளைக் கண்டுபிடித்து விரைவாக தண்டிக்கிற வகையில் மத்தியப் புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரி முருகனது சந்தேகத்துக்குரிய மரணம் குறித்தும் மத்திய புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

6. கல்வி, மருத்துவம்

கல்வியும், மருத்துவமும் கார்ப்பரேட் முதலாளிகளின் பிடிக்குள் சென்றுவிட்டன. முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் கல்வி நிறுவனங்களையும் மருத்துவமனைகளையும் நடத்தி வருகின்றனர். அரசியல்வாதிகள் கல்வித் தந்தைகளாகவும் கல்வித் தந்தைகள் அரசியல்வாதிகளாகவும் மாறுவதும்தான் புதிய பொருளாதாரக் கொள்கை கொண்டு வந்துள்ள புதிய வளர்ச்சிகள் புதியவகை பணக்காரர்களான ஆளும் கட்சி ஆதரவுள்ளவர்கள் ஏரியை ஆக்கிரமித்துக் கட்டும் கல்லூரியில் இருப்பதாகச் சொல்லப்படும் கெட்ட ஆவியை விரட்ட 4 வயது தலித் பெண் குழந்தையை நரபலியிட்டிருக்கிறார்கள். தனியார் கல்விக்கூடங்கள் குற்றக்கூடங்களாக மாறி விட்டன. கட்டணக் கொள்ளையால் வன்முறை நடத்தி வரும் இக்கல்வி நிறுவனங்களில் பலவிதமான குற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தனியார் கல்வி நிறுவன அதிபர் ஒருவர் கொலைக்குற்றவாளியானார். முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா தொழில் போட்டியால் கொல்லப்பட்டார் ஜேப்பியார் கல்வி நிறுவனத்துக்கும் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்துக்கு மான போட்டியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டு அது 2 மாணவர் கொலையில் முடிந்துள்ளது. தற் கொலை என்ற பேரால் மர்ம சாவுகள், பாலியல் துன்புறுத்தல்கள், தற்கொலைக்கு தூண்டுதல் ஆகியன அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. மாணவிகள் இதில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். மிகச் சமீபத்தில் சின்ன சேலத்திலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மேற்குவங்க மாணவி ஒருவர் சந்தேகத்திற்குரிய வகையில் மரணமடைந்திருக்கிறார். கல்விச் சூழல் குற்றச் சூழலாகவே மாறிவிட்டன. சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாக கூறும் திமுக ஆட்சி, கல்வியை குற்றக்கும்பலிடமிருந்து விடுவிக்காமல் கல்வியில் எந்தவொரு சமச்சீரையும் கொண்டு வரமுடியாது.

மருத்துவமும் தனியார் குற்றக்கும்பல்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. அரசு மருத்துவமனைகள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகின்றன. ஏழைகள், சாமானியர்கள் பெரும் செலவு செய்து தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டிய கட்டாயம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. ஏழைகள், சாமானியர்களுக்கு மிகவும் அவசியமானது அடிப்படை மருத்துவம். அய்யாயிரம் பேர்களுக்கு ஓர் ஆரம்ப சுகாதார நிலையம் என்று அளவுகோல் உத்தரவாதப் படுத்தப்படவில்லை. கலைஞர் காப்பீட்டுத் திட்டம், 108 ஆம்புலன்ஸ் திட்டம் இவை அரசாங்கப் பணத்தை தனியார்களுக்கு திருப்பிவிடும் திட்டமாக இருக்கிறதே தவிர ஏழை எளிய மக்களுக்கு பயனளிப்பதாக இல்லை. ஆரம்ப அடிப்படை மருத்துவ வசதி உத்தர வாதப்படுத்தப்பட்டால் மட்டுமே ஏழைகளுக்கு மருத் துவப் பாதுகாப்பு கிடைக்கும். சாமான்ய மக்களுக்கான மருத்துவப் பாதுகாப்பை அரசாங்கம் கைகழுவிவிட்டு மருத்துவத்தையும் மருத்துவப் பாதுகாப்பையும் தனியார்மயமாக்கிவிட்டது திமுக அரசு.

விவசாயம், தொழில், கல்வி, மருத்துவம், பெண்கள் நலன், தலித்துகள் நலன், போராடும் ஜனநாயக உரிமை என அனைத்து விசயங்களிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்தைக் குரூரமாக அழித்துவிட்ட ஊழல், துரோக திமுக ஆட்சியை அதிகாரத்திலிருந்து தூக்கி எறியவும் திமுக காங்கிரஸ் கூட்டணியை வாக்காளர்கள் தோற்கடிக்க வேண்டும்.

7. பெண்கள் நலன்

தலித், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், ஏற்காடு பழங்குடிப் பெண்கள், கடலோர மீனவப் பெண்கள், 13-19 வயதுடைய இளம்பெண்கள் கோவை, திருப்பூர் பஞ்சாலைகளில் கொத்தடிமைகள் போல் துன்புறுத்தப்படுகின்றனர். பாலியல் துன்புறுத்தல் முதல் கொலைகள் வரை நடக்கும் குற்றக் கூடங்களாக பஞ்சாலைகள் செயல்படுகின்றன. பெண்கள் சம உரிமை, சம வாய்ப்பு பெறவும் பெண்களுக்கெதிரான சமூக ஒடுக்குமுறைகளை எதிர்த்தும் போராடி வருகிறது.

தலித் மக்கள் மீது ஆதிக்க சக்திகள், அரசாங்க நிர்வாகம் ஒடுக்குமுறைகளை எதிர்த்து போராடி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்கப்படவும் சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் 33% ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப் படவும் போராடும். பஞ்சாலைகளில் சட்டவிரோதமாக செயல்படுத்தப்படும் ‘திருமாங்கல்யத் திட்டம்’ ஒழிக்கப்படவும் முதலாளிகள் தண்டிக்கப்படவும் இந்த ஆலைகளில் வேலை செய்ததால் பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு வாழ்க்கை இழப்பீடு பெறவும் அவர்களது மருத்துவம், கல்வி உள்ளிட்ட மறுவாழ்வு நடவடிக்கைகளை அரசே ஏற்கவும் பாலியல் துன்புறுத்தல்களில் பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்டம் கொண்டு வரப்படவும் செயல்படுத்தவும் போராடும். பெண்சிசுக் கொலைகள், கவுரவக் கொலைகள் தடுத்து நிறுத்தப் போராடும்.

8. ஜனநாயக உரிமைகள்

கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சி பின்பற்றி வரும் பெரு முதலாளித்துவ வளர்ச்சிபாதையை எதிர்த்து மக்கள் சார்பு வளர்ச்சிக் கொள்கைக்காக தீவிரமான போராட்டங்களை நடத்தி வருகிறது மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி.

மத்திய, மாநில அரசாங்கங்கள் பின்பற்றி வரும் விவசாய விரோத கொள்கைகளால் உருவாக்கப்பட்ட விவசாய நெருக்கடியால் கடும் பாதிப்புக்கு ஆளான விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புற தொழி லாளர்கள், ஏழை, சிறு, குறு விவசாய சமூகத்தைப் பாதுகாக்க பலவிதமான போராட்டங்களை நடத்தி வருகிறது.

நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகளுக்கு அரசாங்கம் அறிவித்தவாறு 2 ஏக்கர் நிலம் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி பலவிதப் போராட்டங்களை நடத்தியுள்ளது. வழங்கப்பட்ட அரைகுறை நிலங்கள்கூட ஏழைகளுக்கு கிடைக்காதபோது உரியவர்களுக்கு கிடைக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் போராட்டங்களை நடத்திப் பெற்று தந்திருக்கிறது. நிலத்தை அபகரித்தவர்களை எதிர்த்து போராடியிருக்கிறது. ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்தியிருக்கிறது.

தீவிர நிலச் சீர்திருத்தத்திற்கான தொடர் பிரச்சார, கிளர்ச்சி, போராட்டங்களை நடத்தி வருகிறது. நிரந்தர நிலச்சீர்திருத்த ஆணையம் அமைக்கப்பட வேண்டுமென குரலெழுப்பி வருகிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் கிளர்ச்சிகளை நடத்தியுள்ளது.

நிலம், வீட்டுமனை உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சனைகளில் போராட்டங்களை நடத்தி ஏழைகளின் உரிமையை நிலை நாட்டியிருக்கிறது. திருவள்ளுர் மாவட்டத்தில் பல நூறு குடும்பங்களுக்கு வீட்டு மனை உரிமையை நிலைநாட்டியிருக்கிறது.

தொழிற்சங்க அங்கீகார திருத்தச் சட்டம் பெற போராடி வருகிறது. பயிற்சியாளர் நலன் காக்கும் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற, ஒப்பந்த, தற்காலிக தொழிலாளர் நிரந்தரத்திற்காக சட்டங்களை மாற்றியமைக்க அரசை நிர்பந்தப்படுத்திக்க போராடி வருகிறது.

கல்வி மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை துறைகளில் தனியார் ஆதிக்கத்தை எதிர்த்து அனைவருக்கும் கல்வி மருத்துவம் கிடைக்கப் போராடி வருகிறது.

தமிழக அரசியலில் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்வுரிமைகள பாதுகாக்கவும் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்கவும் போராடி வருகிறது. உழைக்கும் மக்களின் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு இடது, ஜனநாயக, முற்போக்கு சக்திகளின் வளர்ச்சியை வலுப்படுத்தப் பாடுபட்டு வருகிறது.

9. தமிழ்நாட்டிலுள்ள மலை மற்றும் வன நிலங்களைப் பாதுகாக்கவும் நில ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும். உயர்நீதிமன்ற வழக்குகளைப் பொருட்படுத்தாமல் 2006 வன உரிமைச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்திட வேண்டும். மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகளில் சாலை, பள்ளி, கல்லூரி, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படப் போராடும்.

பெருமுதலாளிகள் வளர்ச்சிப் பாதைக்கெதிராக

பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்வுரிமை,

ஜனநாயக உரிமைகளுக்கான

இந்த உடனடி குறைந்தபட்ச திட்டத்திற்காக

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)

உறுதியுடன் போராடும்.

உழைக்கும் மக்களின், இடது, ஜனநாயக,

முற்போக்கு சக்திகளின் உறுதுணையுடன்

சமரசமின்றிப் போராடும்.

மக்கள் சார்பு வளர்ச்சிப் பாதைக்காக

மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி போராடும்.

மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் போராடுவார்கள்.Search