COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Thursday, February 24, 2011

எம்எல் அப்டேட் தலையங்கம் தொகுப்பு 14, எண் 9, 2011, பிப்ரவரி 18 - 24

தலைமை நிர்வாக அதிகாரியான
ஒரு பிரதமரின் ஒப்புதல் வாக்குமூலம்
 
நாடாளுமன்றத்தின் நிதிநிலை அறிக்கை அமர்வுக்கு முன், தேர்ந்தெடுக்கப்பட்ட சில தொலைக்காட்சி சேனல்களின் ஆசிரியர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு கூட்டம் நடத்தினார். நாடு எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளுக்கும் பிரதமர் ஓர் எளிமையான விளக்கம் வைத்திருந்தார்: கூட்டணி அரசியல் நிர்ப்பந்தங்கள். ஓர் எளிமையான ஆலோசனையும் வைத்திருந்தார்: ஊடகங்கள் ஊழல்கள் பற்றி, பிற பிரச்சனைகள் பற்றி கூடுதல் கவனம் செலுத்தக் கூடாது; ஏனென்றால் அது மக்களின் தன்னம்பிக்கையை பாதிக்கிறது; நாட்டின் சர்வதேச அளவிலான தோற்றத்தை பாதிக்கிறது. பொருளாதார அறிஞரான பிரதமர், ஸ்பெக்ட்ரம் கொள்ளையை உணவுக்கு, எரிபொருளுக்கு, உரத்துக்கு வழங்கப்படும் மான்யத்துடன் ஒப்பிட்டு மொத்த 2 ஜி அலைக்கற்றை பிரச்சனையையும் புறந்தள்ளினார். தன் அரசாங்கத்துக்கு நிறைவுபெறாத கடமைகள் இன்னும் நிறைய இருப்பதால் அது தனது பதவிக்காலம் முழுதும் இருக்கும் என்றும் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு மறந்துவிடாமல் நினைவுபடுத்தினார்.


பசித்தவர்களுக்கு உணவுப் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சியின் கொண்டாட்டங்களுக்கு அழைக்கப்படாத அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்வதாகச் சொல்லி மே 2009ல் அய்முகூ மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அய்முகூவின் இரண்டாவது அத்தியாயத்தில் உணவுப் பாதுகாப்பும், உள்ளடக்கிய வளர்ச்சியும் கொடுமையான நகைச்சுவைகளாகவே உள்ளன; விலைஉயர்வும் மெகா ஊழல்களும் நாட்டை விடாமல் தாக்குகின்றன. வாக்காளர்கள் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்று அரசாங்கத்துக்குத் தெரியும்; எனவேதான் ஊழல்கள் மீது கவனம் செலுத்தி மக்களின் ‘தன்னம்பிக்கையை’ பலவீனப்படுத்த வேண்டாம் என்று ஊடகங்களைக் கேட்டுக் கொள்கிறது. ஊடகங்களும் இந்தப் பந்தை ஆடத் தயாராக உள்ளன என்பதையே பிரதமரின் பத்திரிகையாளர் சந்திப்பும் காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் ரூ.240 கோடி மதிப்பிலான இந்திய செல்வம் முறைகேடாக நாட்டை விட்டு வெளியேறுவது பற்றி கேள்வி ஏதும் கேட்கப்படவில்லை. ஊழல் கறை படிந்த ஓர் அதிகாரி மத்திய கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்ட பிரச்சனை பற்றியும் பிரதமரிடம் எந்த விளக்கமும் கேட்கப்படவில்லை.

ஸ்பெக்ட்ரம் கொள்ளையால் நாட்டின் கருவூலத்துக்கு ஏற்பட்ட இழப்பை வறிய மக்களுக்கான மான்யத்துடன் ஒப்பிடும் துணிச்சல் பிரதமருக்கு இருந்தது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் கொள்ளை பெருந்தொழில் குழுமங்களின் பணப்பெட்டிகளை நிரப்பியது; மான்யங்கள் சந்தையின் தாக்குதலைத் தாங்க வறிய மக்களுக்கு தரப்படுவது. இந்த இரண்டு விஷயங்களிலும் பயனாளிகளுக்கிடையேயுள்ள இந்தமுக்கியமான வேறுபாட்டை விட்டுவிட்டால் கூட, ஒதுக்கீடு செய்யப்பட்ட மான்யத்தை, ஒரு முக்கியமான செல்வாதாரத்தை ஏலத்துக்கு விடாததால் ஏற்பட்ட இழப்புடன் ஒரு பிரதமர் எப்படி ஒப்பிடலாம்? ஏல முறையில் அல்லாமல் முதலில் வருபவருக்கு முதலில் தரப்படும் என்ற அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதுதான் அரசாங்கத்தின் கொள்கை என்றால் அரசாங்கம் ஏன் அதை அறிவிக்கவில்லை? பின் 3 ஜி அலைக்கற்றை விஷயத்தில் கிடைத்த வருவாய்க்கு தானே காரணம் என்று பெருமை பேசும் அரசாங்கம் ஏன் ஏல முறையை கையாண்டது? தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரம் கிடைக்க வேண்டும் என்று தொலைதொடர்பு அமைச்சர் ராசா கருதினால் அதை ஏல முறையில் தரவேண்டும் என்று ஏன் 2007 கடிதத்தில் மன்மோகன் சிங் எழுதினார்?

அல்அஜிரா செய்தித் தொடர்பாளர் அரபு நாடுகளில் சமீபத்தில் நடந்துவரும் மாற்றங்கள் மீது பிரதமரின் கவனத்தைத் திருப்பி, அதுபோன்ற வெகுமக்கள் எழுச்சிகள் இந்தியாவிலும் ஏற்படுமா என்று கேட்டார். எகிப்து மக்கள் விரும்பினால் ஜனநாயகம் நோக்கிச் செல்லலாம் என்று, அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை ஆர்வமின்றி தெரிவிக்கும் முன்பு, தனது அரசியலுக்கு உண்மையானவராக, அரபு நாடுகளில் நடப்பவை பற்றி தனது கவலையை முதலில் தெரிவித்தார். இந்தியா, ‘மக்கள் ஆட்சிகளை மாற்றும் உரிமை பெற்ற ஒரு செயல்படும் ஜனநாயகம்’ என்பதால், எகிப்து, இந்தியாவில் நடக்கும் ஆபத்து ஏதும் இல்லை என்று உறுதியாகச் சொன்னார். அந்த உரிமையை அவரது அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் பயன்படுத்த மாட்டார்கள் என்று அவர் உறுதியாக இருந்ததுபோலவும் தெரிந்தது. ‘நான் எடுக்கும் முடிவுகளில் 10ல் 7 சரியானதாகவே இருக்கிறது. ஒரு சாதாரணமான பெருந்தொழில் நிறுவனத்தின் பங்குதாரர்கள் வேலை சிறப்பாக செய்யப்பட்டது என்றே சொல்வார்கள்’ என்றார் சிங்.

இதுதான் ஜனநாயகம் பற்றியும் தனது பாத்திரம் பற்றியும் சிங்கின் சாரமான பார்வை: அவர் ஒரு ‘சாதாரண பெருந்தொழில் நிறுவனத்தின்’ தலைமை நிர்வாக அதிகாரி. மன்மோகன் சிங்கும் அவரது கூட்டாளிகளும் பெருந்தொழில் நிறுவனங்களின் கண்ணாடி வழியாக மட்டுமே அரசியலைப் பார்க்க முடியும். அதன்படி அரசாங்கம் ஒரு சேவையை வாங்கும் சக்தி படைத்தவர்க்கு சேவை அளிப்பவர் மட்டுமே. ஓர் ‘இயங்காத பங்குதாரராகக்’ கூட இல்லாமல், ஒரு குடிமகன் பற்றிய கருத்து கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர் என்று சுருக்கப்பட்டுவிட்டது. கட்டணம் செலுத்த முடியாதவர்கள் ஒரு பொருட்டே இல்லை! ஆனால் இந்தியா ஒரு ‘சாதாரண பெருந்தொழில் நிறுவனம்’ அல்ல. அது நூறு கோடி மக்கள் கொண்ட ஒரு நாடு. ஒவ்வொரு நாளும் ரூ.240 கோடி முறைகேடாக அந்நிய வங்கிகளின் பாதுகாப்பான கரைகளுக்கு இடம்பெயரும்போது, அதன் 77% பேர் நாளொன்றுக்கு ரூ.20க்கும் குறைவான செலவில் வாழ்பவர்கள். மன்மோகன் சிங் ஒரு நெருக்கடி மேலாளர். அவர் நெருக்கடியை சமாளிக்கும் வழி நெருக்கடியை ஆழப்படுத்துகிறது. நாட்டின் கடன் நெருக்கடியை தீர்ப்பதாகச் சொல்லி 1991ல் அவர் புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமலாக்கினார். இருபது வருடங்கள் கழித்து இப்போது ஒவ்வோர் அரங்கிலும் நெருக்கடி உள்ளது. ஆனால் மன்மோகன் சிங்கும் அவரது கூட்டாளிகளும் தங்கள் தொழிலை சுறுசுறுப்பாக செய்து கொண்டுள்ளனர்.

மன்மோகன் சிங் முன்வைத்துள்ள சவாலை மக்கள் எதிர்கொண்டாக வேண்டும். வெறுமனே அரசாங்கத்தை மாற்றுவது என்பதற்கு அப்பால், பேரழிவுமிக்க கொள்கைகளில் மாற்றம் காண இந்திய மக்கள் எழ வேண்டும். பொருளாதார நெருக்கடி, பெரும்பண ஊழல்கள், ஜனநாயகத்தின் மீதான அரசு - பெருந்தொழில் நிறுவன தாக்குதல் ஆகியவற்றை அடையாள விளைபொருட்களாகக் கொண்ட தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற மொத்த கொள்கை நிறுவனமும் தகர்க்கப்பட வேண்டும். மன்மோகன் சிங் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், அவருடைய சாதாரண பெருந்தொழில் நிறுவனம் தொழிலில் இருந்து விரட்டப்பட வேண்டும். அதற்கு இந்தியாவில் எகிப்தின் மறுஉருவம் தேவை என்றால், இந்திய மக்கள் அதற்காக தயாராக வேண்டும்; உண்மையான மாற்றத்தை முன்னகர்த்த வேண்டும்.

Thursday, February 10, 2011

தீப்பொறி 2011 பிப்ரவரி

அகில இந்திய மாணவர் கழகத்தின் நாடுதழுவிய பிரச்சார இயக்கம்


பெருகிவரும் ஊழலுக்கு இடமில்லை!


தேசத்தின் செல்வங்களை கொள்ளையடிப்பவர்க்கு இடமில்லை!


அரசு ஒடுக்குமுறைக்கு இடமில்லை!

மிகப்பெரிய ஊழல், பெரும்தொழில் குழும கொள்ளை, அரசு ஒடுக்குமுறை, பினாயக் சென்னுக்கு தண்டனை என்ற பின்புலத்தில் 2011 ஜனவரி 11 முதல் 19 வரை நாடுதழுவிய பிரச்சார இயக்கத்தை மாணவர் கழகம் நடத்தியது. ‘பெருகிவரும் ஊழலுக்கு இடமில்லை. தேசச் செல்வங்களை கொள்ளையடிப்பவர்க்கு இடமில்லை. அரசு ஒடுக்குமுறைக்கு இடமில்லை’ என்பதே முழக்கம்.

இயக்கத்தின் பகுதியாக பல்வேறு கல்வி வளாகங்களில் ஜனவரி 11 அன்று பேரணிகளும், வேலை நிறுத்தமும் கட்டமைக்கப்பட்டன. கும்பகோணத்தில் அரசு கலை மற்றும் கலைக் கல்லூரியிலும், இன்னொரு கல்லூரியிலும் வேலை நிறுத்தம் நடந்தது. 2000க்கும் மேற் பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். டில்லி பல்கலைக் கழகத்தில் பேரணிகள் நடத்தப்பட்டன. தர்ணாவும், கொடும்பாவி எரிப்பு நிகழ்ச்சியும் டேராடூனில் நடந்தது. ஜாமியா மிலியா இஸ்லாமியாவில் கவிதைப் போட்டி பட்டறை ஒன்றும் நடத்தப்பட்டது. பினாயக் சென் தண்டனைக்கு எதிராக ஜனவரி 14 அன்று ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்திலும், ஜனவரி 18 அன்று டேராடூன் காந்தி பூங்கா விலும் ஜனவரி 19 அன்று டில்லி பல்கலைக் கழகத்திலும் கருத்தரங்கம் நடைபெற்றது. ஜாதவ்பூர் மற்றும் டில்லி பல்கலைக் கழகங்களில் அதிகாரிகள் அனுமதியை திரும்பப் பெற்று நடக்கவிடாமல் தடுக்க முயற்சி செய்தனர். டில்லியில் ஏபிவிபி ரவுடிகள் நேரடியாக தாக்குதல் நடத்தினார்கள்.

ஆயினும் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளின் ஏகோபித்த பங்களிப்பு இருந்ததால் இரண்டு இடங்களிலும் கருத்தரங்குகள் வெற்றிகரமாக நடைபெற்றன. ஜாதவ்பூர் கருத்தரங்கில் கவிஞர் நபரூன் பட்டாச்சார்யா, சப்யாசசி தேப், பேராசிரியர் சமன்தக் தாஸ், பேராசிரியர் சஞ்சய் முகோபாத்யாய், பேராசியர் குணால் சட்டோபாத்யாய், டாக்டர் தேபாசிஸ் முகர்ஜி ஆகியோரும் பல்வேறு மாணவர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் பங்கு கொண்டனர். டில்லி பல்கலையில் நடந்த கருத்தரங்கில் பல்கலைக்கழக ஆசிரியர்களான பேராசிரியர் ஜீன் ட்ரீஸ், நந்தினி சுந்தர், சம்சுல் இஸ்லாம், நீரஜ் மாலிக் ஆகியோரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், கவிஞர் விரன்தஸ்வால் ஆகியோரும் பங்கு பெற்றனர்.

ஜனவரி 19 அன்று பாட்னா மற்றும் மகாத் பல்கலைக்கழகத்திலும் அதில் இணைந்த கல்லூரிகளிலும் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றது. டில்கா மஸ்கி பல்கலைக்கழகம் (பகல்பூர்) பிர்குன்வர் சிங் பல்கலைக்கழகம் (அர்ரா) லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகம் (தர்பங்கா) பகல்பூரில் அன்று நடைபெற்ற செனட் கூட்டத்தையும் மாணவர்கள் முற்றுகையிட்டனர். அவர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறை ஏவப்பட்டது. பல்வேறு மாணவர் கழக தலைவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஜனவரி 20 அன்றும் மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள். போலீஸ் மேலும் தீவிர ஒடுக்குமுறையை ஏவி 5 மாணவர் கழக தலைவர்களை இந்திய தண்டனைச் சட்டம் 307ன் கீழ் பதிவு செய்தது.

மாணவர் கழக மாநில அமைப்பு பீகார் முழுதும் மாணவர்களின் ஜனநாயகரீதியான எதிர்ப்பு மீது ஏவப்படும் அரசு பயங்கரத்துக்கு எதிராக போராட்டத்தைத் தீவிரப்படுத்துமாறு அறைகூவல் விடுத்துள்ளது.தலையங்கம்

கருணாநிதியின் விருப்பம் நிறைவேறட்டும்!

கருணாநிதி, அமைச்சர் பெரியகருப்பன் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் பேசும்போது, தாம் தமிழக முதல்வராய் இருப்பதைக் காட்டிலும், கட்சித் தலைவராய் இருப்பதையே விரும்புவதாகச் சொல்கிறார். இது ஜோசியம் தொடர்பானதல்ல. அரசியல் கணிப்புதான். தேர்தலில் தோற்றுப் போகும் வாய்ப்புக்கு, தம் குடும்பத்தாரையும் கட்சிக்காரர்களையும் தயார்படுத்துகிறார். நல்ல தயாரிப்பு. வாழ்த்துக்கள்.

கருணாநிதி தோற்கப் போவதில், மன்மோகனுக்கும் சிதம்பரத்திற்கும் சம்பந்தம் இல்லாமலா போய்விடும்? கருணாநிதி தமிழக முதல்வர் என்பதால் மட்டும் தோற்கப் போவதில்லை. மத்திய அய்முகூ அரசின் ஒரு தூண் என்பதாலும் தோற்கப் போகிறார்.

கருணாநிதியின் கூட்டாளி மன்மோகன் தாம் ஒரு ஜோசியர் இல்லை என்றும், விலைகள் குறையும் என்று மட்டுமே தம்மால் சொல்ல முடியும் என்றும் சொல்கிறார். அதாவது விலைகள் எப்போது முதல் குறையும் என்று சொல்ல முடியாது என்கிறார். ஒரு புத்திசாலிக் கடைக்காரர், ‘இன்று ரொக்கம், நாளை கடன்’ எனத் தம் கடையில் நிரந்தரமாக எழுதி வைத்திருந்தாராம். மன்மோகன் அரசு, ‘இன்று விலை உயர்வு, நாளை விலை குறைவு’ என தினம் தோறும் சொல்கிறது.

பகலில் வெங்காயம், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, இரவு பெட்ரோல் விலை உயர்வு என 24 மணி நேரமும் மக்கள் சேவை செய்கிறார்கள். ஹார்வர்டில் படித்த அதிமேதாவி சிதம்பரம், ஒரு படி மேலே சென்று விட்டார்: ‘விலை உயர்வுக்குப் பின்னால், சாமான்ய மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாத பல காரணங்கள் உள்ளன. விலை உயர்வும் பணவீக்கமும் வளர்ச்சிக்கான அடையாளங்கள்.’

விலைகள் உயர்ந்தால் மக்கள் வளர்ச்சி அடைந்துள்ளதாகப் பொருள். விலைகள் விழி பிதுங்கும் அளவுக்கு உயர்ந்தால், மக்கள் ஓஹோ என வளர்ச்சி அடைந்துள்ளதாகப் பொருளாகும். கருணாநிதியும் அவரது காங்கிரஸ் கூட்டாளிகளும், பன்னாட்டு இந்நாட்டு பெரும்தொழில் குழும வளர்ச்சியே வளர்ச்சி என்கிறார்கள்.

மக்கள் எங்கள் வாழ்வில் எந்த வளர்ச்சியும் இல்லையே வீழ்ச்சிதானே ஏற்பட்டுள்ளது எனக் கேள்வி கேட்டு எழும்போது, ஒடுக்குமுறை சாட்டையை வீசுகிறார்கள். சாமரம் வீசும் பாமர சனங்கள் சாட்டையைப் பறிக்காமலா விடுவார்கள்? திரும்ப வீசாமலா இருப்பார்கள்? கருணாநிதியின் ‘முதல்வர் இல்லை, கட்சித் தலைவர் மட்டுமே’ என்ற விருப்பம் அப்போது நிச்சயம் நிறைவேறும்.

அன்று, ராமதாஸ் எழுதிய கோரிக்கை கடிதத்தை வெளிப்படுத்தி சங்கடப்படுத்தினார் கருணாநிதி. இன்று, கருணாநிதி டில்லி போய் காத்திருந்து சோனியாவை சந்திக்கிறார். கூட்டணியில் ராமதாஸ் இருப்பதாக கருணாநிதி அறிவித்த பிறகு, அது முதல்வரின் விருப்பம் என்றும் பல கட்சிகளும் அணுகுவதாகவும் பொதுக்குழு கூடிதான் எந்த முடிவும் எடுக்கும் என்றும் ராமதாசும் தன் பங்குக்கு கருணாநிதியை காக்க வைக்கிறார்.

மாமன்னர் கருணாநிதி விழாக்களில் பங்கேற்பது, மீனவர் படுகொலை உள்ளிட்ட தீராத பிரச்சனைகளில் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவது, முரசொலியில் புலம்புவது வசைபாடுவது எனத் தம் நேரத்தைச் செல வழித்துக் கொண்டிருக்கும்போது, பட்டத்து இளவரசர் அரசாங்கத்தை வழி நடத்துகிறார். தமிழக வளர்ச்சி பற்றி சில சான்றுகளை மு.க.ஸ்டாலின் முன்வைக்கிறார்.

5 ஆண்டுகளில் ரூ.50,615 கோடி முதலீடு வந்துள்ளது.

இந்தியாவில் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு மட்டுமே 18%.

இந்தியாவின் ஆட்டோ உதிரி பாகங்கள் தொழில்களில் 35% தமிழகத்தில் உள்ளன.

தொழில் வளர்ச்சி மதிப்பு கூட்டும் பணி களில், தொழிற்சாலைகள் எண்ணிக்கையில், தொழிலாளர்கள் எண்ணிக்கையில், முதலீட்டு வருகையில், தமிழகம், இந்தியாவில் முதல் மூன்று இடங்களுக்குள் உள்ளது.

வளர்ந்த நாடுகள், குறைந்த செலவு என்ற காரணத்தால் இந்தியா நோக்கி நகர்கின்றன என்றும், அந்த வாய்ப்புக்களைக் கைப்பற்றுவதில் தமிழகம் மும்முரமாய் உள்ளது என்றும் துணை முதல்வர் மார் தட்டுகிறார்.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி பற்றி பிறகு பார்ப்போம். அதற்கு முன் தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள், விவசாயம் பற்றி சில கேள்விகள் எழுப்புவோம்.

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில், 86 தொகுதிகள் நகர்ப்புற, புற நகர், அரை நகரத் தொகுதிகள். 148 தொகுதி கள் கிராமப் புற தொகுதிகள். மிகப்பெரிய நகர்மயம் தொழில்மயம் தாண்டி, இதுதான் நிலவரம். இங்கே என்ன நிலைமைகள்? 1991 -1992ல் அரிசி உற்பத்தி 65.96 லட்சம் டன். 2009 - 2010ல் 59.16 லட்சம் டன். 1991- 1992ல் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி 15.98 லட்சம் டன். 2009-2010ல் 8.61 லட்சம் டன். 1992 - 1993ல் பஞ்சு உற்பத்தி 4.54 லட்சம் டன். 2009 - 2011ல் 1089 லட்சம் டன்.

உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளதும், விளைநிலங்கள் சுருங்குவதும், விவசாய வளர்ச்சியா? கிராமப்புற வளர்ச்சியா? சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு 30,000 ஏக்கர் நிலம், மின் நிலையங்களுக்குப் பல ஆயிரம் ஏக்கர்கள் நிலம் என அரசு பக்கபலமாய் நிற்க, மூலதனம் முன்னேறிப் பாயும் போது, விவசா யம் தாக்குப்பிடிக்கிறதா? தமிழக விவசாயிகளில் 75% பேர் ஏன் கடனாளிகளாக உள்ள னர்? நெல்லுக்கும் விவசாய விளைபொருட்களுக்கும் கட்டுப்படியான விலை இல்லையே? விவசாயம் செய்வதை விட கேரளா போய் கூலி வேலை செய்தால் கூடுதல் வருமானம் என்ற நிலை ஏன்?

தமிழகத்தின் சராசரி நிலப் பற்றுகை 1.25 ஹெக்டேர் என்பதிலிருந்து 2005 - 2006ல் 0.83 ஹெக்டேர் என, தேசிய சராசரியான 1.33 %ல் இருந்து ஏன் குறைந்தது? தமிழக விவசாயிகளில் 91% பேர் ஏன் சிறுகுறு, விளிம்பு நிலை விவசாயிகளாகி உள்ளனர்?

விவசாயத் தொழிலாளர்களுக்கு 2 ஏக்கர் நிலம், 100 நாள் வேலை ரூ.100 கூலி, வேலை இல்லா நாட்களுக்கு 50 சதவீதம் படி என எதையும் வழங்காத தமிழக அரசு, இப்போது உழைக்கும் விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் எதிரெதிராய் நிறுத்தப் பார்க்கிறது.

தேசீய வேலை உறுதிச் சட்ட வேலையை இனி விவசாயிகளின் நிலத்தில் செய்ய வேண்டும், விவசாயி ரூ.50 கூலியும் அரசு ரூ.50 கூலியும் தரும் என ராமதாசு ஸ்டாலின் சிவகாமி ஓரணியில் பேசுகிறார்கள். கிராமப் புறங்களிலும், பெரு நிலப்பிரபுக்களுக்கும் குலாக்குகளுக்குமே சேவை செய்யப் பார்க்கிறார்கள். அரசு பின் வாங்கும்; நிலப் பிரபுக்கள் குலாக்குகள் ஆதாயமடைவார்கள். விவசாயத் தொழிலாளர் உழைக்கும் விவசாயிகள் அய்க்கியம் தடைப்படும். எல்லாவற்றையும் விவசாயி நலன் காத்தல் என்ற வஞ்சக முகமூடியுடன் செய்யப் பார்க்கிறார்கள்.

தொழிலாளர்கள் என்று வரும்போது, குறைந்த செலவு அதாவது குறைந்த கூலி என்பதால்தான் தமிழகம் நோக்கி மூலதனம் பாய்கிறது என மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார். ஆனால் கொஞ்சமும் தயங்காமல் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் போட்டு மறைக்கப் பார்க்கிறார்: ‘தொழில் அமைதியைப் பேணுவதில் இன்று தமிழகம் சிறந்து விளங்குகிறது. ஓரிரு இடங்களில் ஏற்பட்ட ஒரு சில தொழில் தாவாக்களும் அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையில் சுமுகமாகத் தீர்க்கப்பட்டுள்ளன’.

கோவை பிரிக்காலில், ஹ÷ண்டாயில் பல ஆண்டுகளாக பெரும்பான்மை சங்கத்திற்கு அங்கீகாரப் பிரச்சனை தீரவில்லை. ஜனவரி 10 முதல் ஜனவரி 19, 2011 வரை போராடிய நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர் பிரச்சனையை தீர்க்க அரசு சுட்டு விரலைக் கூட அசைக்கவில்லையே. பிஓய்டி, ஏஷியன் பெயிண்ட்ஸ், ஹøண்டாய் துணை யூனிட்கள், ஃபாக்ஸ்கான, டெல்பி டிவிஎஸ் என எங்கும் சென்னைக்குப் பக்கத்திலேயே தொழிலாளர் உரிமைகள் காலில் போட்டு மிதிக்கப்படுகின்றனவே. அங்கீகார சட்டத் திருத்தக் குழு வாக்குறுதி என்ன ஆனது? பயிற்சியாளர் நிரந்தரத் தொழிலாளர் நலன் காக்கும் தமிழகச் சட்டத்திற்கு ஏன் 3 ஆண்டுகளாய் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறவில்லை? துரத்தும் கேள்விகளுக்கு இளவரசரிடம் பதில் கிடையாது.

ஊழல் கடப்பாரையை விழுங்க முடியாத திமுக, தேர்தல் செலவுகளுக்கு கட்சி மக்களிடம் வசூல் செய்யும் என்று நாடக மாடினால் மக்கள் நம்ப மாட்டார்கள்.

ஜப்பானிய, கொரிய, சர்வதேச உள்நாட்டு மூலதனத்துக்கு சேவை செய்து கொண்டு, தமிழ் மக்களில் வாழ்வுரிமைக்கு வேட்டு வைத்து ஜனநாயக உரிமைகள் மீது சாட்டையை வீசி, மொழிப்போர் தியாகிகள் என திமுக பேசினால் தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.

725 ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன, ஆனால் அவற்றில் 240 தமிழகத்தில் தான் உள்ளன, மேலும் 40 வர உள்ளன எனப் பெருமை பொங்கப் பேசுகிறார் துணை முதல்வர். 2012ல் பழைய மகாபலிபுரம் சாலையில், 1450 ஏக்கரில் ஒரு ஜப்பானிய ஒருங்கிணைந்த தொழில் பூங்காவும், குடியிருப்பும் வர உள்ளன. அங்கே ஓட்டல்கள், பள்ளிகள், மருத்துவ நிலையங்கள், கோல்ஃப் பூங்காக்கள் இருக்கும். தொழிலாளர் குடியிருப்புக்கள் பற்றி, குறைந்தபட்ச ஊதியம் பற்றி, பணி நிலைமைகள் பற்றி, உரிமைகள் பற்றி கிஞ்சித்தும் அக்கறை இல்லாத திமுக அரசு, முதலாளித்துவ சேவையிலேயே குறியாய் உள்ளது.

நலத்திட்டங்கள் வழங்கும் விழாக்களில் 2010 நவம்பர் 13 முதல், 35,000 பயனாளிக ளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறாராம் துணை முதல்வர் ஸ்டாலின். புகைப்படம் எடுத்த 5 நிமிடங்களில் விழா நடக்கும் போதே பயனாளியின் கைக்கு புகைப்படம் சென்றுவிடுகிறதாம். அது வெறும் நிழல், நிஜம் வேறு என்று அந்தப் பயனாளிக்கும் தெரியும்.

அதனால் தமிழ்நாட்டின் தொழிலாளர்கள், கிராமப்புறத் தொழிலாளர்கள், உழைக்கும் விவசாயிகள், நிச்சயமாய், தாம் முதல்வர் இல்லை என்ற கருணாநிதியின் விருப்பத்தை நிறைவேற்றுவார்கள்.

கருணாநிதிக்கு மாற்று ஆட்சி அமைக்கும் வலிமை இன்றளவில் இடதுசாரி ஜனநாயக சக்திகளுக்கு தேர்தல் களத்தில் இல்லை. ஆனால் ஒரு மாற்று அரசியலை முன் நிறுத்தி வளர முடியாதா? மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் கட்சியுடன் தாம் கூட்டு வைக்கப் போவதாக விஜய்காந்த் சொல்கிறார். தமிழ்நாட்டின், உழைக்கும் விவசாயிகளை, விவசாயத் தொழிலாளர் உள்ளிட்ட கிராமப்புறத் தொழிலாளர்களை, தொழிலாளர்களை, ஜெயலலிதா மகிழ்ச்சியோடு இருக்க வைப்பார், அவர் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதைக்கு மாற்றாக மக்கள் சார்பு வளர்ச்சிப் பாதையில் பயணம் செல்வார் என நிச்சயம் இகக, இகக(மா) நம்ப முடியாது. மக்களிடம் உறுதி சொல்ல முடியாது. கருணாநிதி ஜெயலலிதா, ஜெயலலிதா கருணாநிதி என்ற சாத்தியமான விஷ வட்டம், முதலாளித்துவ அரசியலுக்கு வால்பிடிப்பது பலம் சேர்ப்பது என்பவற்றைத் தாண்டி, சுதந்திரமான இடதுசாரி மாற்று அரசி யலை, அவசியமானதை முன்வைக்க வேண்டாமா?

வருங்காலத்தின் மீது, மக்கள் மீது நம்பிக்கை வைத்து, எதிர்க்கட்சியாக, போராடும் புரட்சிகர இடதுசாரிக் கட்சியாக செயல்படுவது அவசியமானது. மாற்றுப் பாதைக்கு மாற்று அரசியலே முன்நிபந்தனை.

ஆட்சியாளர்கள் நாட்டை


ஆழமான நெருக்கடிக்குத் தள்ளுகிறார்கள்.


நெருக்கடியில் இருந்து வெளியில் வர


கம்யூனிஸ்ட்கள் மக்களை வழி நடத்த வேண்டும்!

- திபங்கர் பட்டாச்சார்யா

அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பை துவக்க நாம் டில்லியில் கூடியபோது 2010 சுதந்திர தினத்துக்கு நான்கு நாட்களே இருந்தன. இன்று நாம் மீண்டும் கோழிக்கோடில் சந்திக்கும் போது தேசத்தின் இன்னொரு முக்கியமான நாளான 2011 குடியரசு தினத்திற்கு இன்னும் 4 நாட்களே உள்ளன.

2010 சுதந்திர தினத்திற்கும், 2011 குடியரசு தினத்திற்கும் இடையில் நாடு எந்தத் திசையில் சென்றுள்ளது? இந்த நாடு ஆழமான நெருக்கடியை நோக்கிச் சென்றிருக்கிறது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

இந்த நெருக்கடியை எல்லா இடத்திலும் நாம் பார்க்க முடியும். எல்லா இடத்திலும் நாம் உணர முடியும். வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை சந்தைக்குப் போய் நாம் வாங்கும் ஒவ்வொரு முறையும் இது நம்மை பாடாகப் படுத்துகிறது. சில நாட்கள் முன்பு, வெங்காயம், பெட்ரோல் மற்றும் பீர் ஆகியவை நாட்டில் ஒரே விலையில் விற்கப்படுவதாய் ஒரு பத்திரிகை எழுதியது. அதற்குப் பிறகு, வெங்காயம் மற்றும் பெட்ரோல் விலைகள் ஒன்றுக்கொன்று கடுமையான போட்டியில் ஈடுபட்டதைப் பார்த்தோம். பகலில் வெங்காய விலை முந்திச் சென்றதென்றால், அன்று நள்ளிரவில் இருந்தே எண்ணெய் விலையில் மீண்டும் ஒரு உயர்வு இருந்தது.

பொருளாதார நெருக்கடியை சந்தையில் இருந்து குடும்பத்துக்கும், வயல்வெளிகளுக்கும், ஆலைகளுக்கும் உரத்த குரலில் விலைஉயர்வு அறிவிக்கிறது என்றால், விவசாயிகளும், தொழிலாளர்களும் அதே நெருக்கடியால் துன்பப்படுகிறார்கள். விடிகிற ஒவ்வொரு நாளும், விதர்பாவில் இருந்தோ, அல்லது தெலுங்கானாவில் இருந்தோ விவசாயிகளின் கூடுதலான தற்கொலைச் சாவு செய்தியை கொண்டு வருகிறது.

இந்தியாவின் கண்ணுக்குத் தெரியாத கிராமப்புற வறியவர்களின் பட்டினிச் சாவுகள் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. நகரங்களில் ஆலைகளும், அலுவலகங்களும் மூடப்பட்டு தொழிலாளர்கள் வீதிகளில் வீசி எறியப் படுகிறார்கள். உணவுப் பாதுகாப்பும் வேலை உத்தரவாதமும் வெற்று முழக்கங்களாக உள்ளன. இவை ஊழல், பேராசை அரசியல்வாதிகளால் மக்கள் மீது தொடுக்கப்படும் குரூரமான நகைச்சுவை ஆகும்.

பொருளாதாரரீதியான இந்த நெருக்கடி, முழுமுற்றான அரசியல் நெருக்கடியும் கூட. அரசு மக்கள் மீதும், மக்கள் வாழ்க்கை மீதும் போர் தொடுத்துள்ளது. அது மக்களைக் கண்டு, அவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளைக் கண்டு அஞ்சுகிறது. அரசு அறிவுஜீவிகள் கண்டு, அவர்கள் மாற்றுக் கருத்து கண்டு அஞ்சுகிறது. அது சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் பெரும் தொழில் குழும சூறையாடலைத் தடுக் கும் மக்களைக் கொல்கிறது. அது பினாயக் சென் போன்ற மருத்துவர்கள் மீதும், அருந்ததி ராய் போன்ற எழுத்தாளர்கள் மீதும் தேசத்துரோக குற்றச் சாட்டை ஏவுகிறது. நீதித்துறையின் தவறான நடவடிக்கைகளுக்கு எதிரான துணிச்சலுடன் குரல் கொடுக்கும் பிரசாந்த் பூஷன் போன்ற வழக்கறிஞர்களை நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்துகிறது.

மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி அமைச்சக அலமாரியில் ஊழல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை நிதர்சனமாகப் பார்க்க முடியும். ஊழல்கள் இன்று மிகப்பெரிய சமன்படுத்தும் வேலையை செய்கின்றன. ஊழல் கறைபடாத எந்த நிறுவனங்களும் இல்லை எனலாம். மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மத்திய கண்காணிப்பு ஆணையர் மீதே ஊழல் குற்றம் சாட்டப்பட்டு அவர் விசாரணையை சந்திக்க வேண்டியிருக்கிறதென்றால், ஊழல் முடைநாற்றம் எவ்வளவு ஆழமாகவும், பரந்தும் சென்றிருக்கிறது என்பதை ஒருவர் யூகிக்க முடியும்.

ஏதோ அரசாங்கம், அமைச்சர்கள், அதிகாரிகள் மாத்திரமல்ல. ராணுவ அதிகாரிகள் பெரிய நில ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆதர்ஷ் ஊழலுக்குப் பிறகு, தன்னுடைய தோற்றம் பற்றிய கவலையில் ராணுவமே, தனது உயர்ராணுவ அதிகாரிகள் மீது அடையாள நடவடிக்கை எடுத்திருக்கிறது. தேர்ந்தெடுத்த மேலோட்டமான ராணுவ, நீதிமன்ற நடவடிக்கைகளை தாண்டிச் செல்ல வேண்டும் என்றால், அதை முழுமையாக சரி செய்து மாற்றுவதைத் தவிர வேறு வழி இல்லை. நீதிபதி கள் ஊழல் குற்றச்சாட்டுகளையும், பதவிப் பறிப்பு நடவடிக்கைகளையும் சந்திக்கிறார்கள். மிகச் சமீபத்தில் ஓய்வு பெற்ற இந்தியாவின் தலைமை நீதிபதி ஒருவர் மீது, வேண்டியவர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டதாகவும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், குற்றச்சாட்டுகள் உள்ளன.

ராணுவம், நீதித்துறைக்கு அப்பால், செல்வாக்கு மிக்க ஊடகத் துறையில் உள்ளவர்கள் உண்மையிலேயே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிவோம். அவர்கள் நமக்குத் தகவல்களை மட்டும் தரவில்லை. நம் எண்ணங்களை வடிவமைக்க, முயற்சிக்க மட்டும் இல்லை. அவர்கள் செல்வாக்கு செலுத்தும் பெரும்தொழில் குழுமங்களோடு ஒத்திசைவாக செயல்பட்டு சாதகமாக வளைந்து கொடுக்கும் அமைச்சர்கள் மற்றும் அவர்களின் நட்புக் கொள்கைகளின் முழுப்பயனையும் பெரும் தொழில் குழுமம் பெறுவதை உத்தரவாதம் செய்கின்றனர். 2ஜி ஊழலும், ராடியா ஒலி நாடாக்களும், பெரும்தொழில் குழுமம், செல்வாக்குமிக்க ஊடக குடும்பங்கள், முக்கிய அமைச்சர்கள், உயர்அதிகாரிகள் மற்றும் ஆட்சியில் இருக்கும் கட்சிகள் ஆகியோருக்கு இடையில் அன்னியோன்னியமான கூட்டு இருப்பதை தெளிவாக வெளிப்படுத்தின.

சமூக தளத்திலும் இந்த நெருக்கடியைப் பார்க்க முடியும். பொருளாதாரரீதியாக முன்னேறியதாகச் சொல்லப் படும். மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலித்துகள் மீதான ஒடுக்குமுறை அதிகரித்த அளவில் உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி ஆளும் உத்தரபிரதேசத்தில் தலித் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் குற்றம் சாட்டப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த உயர்சாதி சட்டமன்ற உறுப்பினர் கட்சியின் அரவணைப்பில் தொடர்ந்து இருக்கிறார்.

நிதிஷ்குமாரின் பீகாரில், பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினரால் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் ஆசிரியர் வேறு வழியின்றி அவரைக் கத்தியால் குத்திக் கொன்றார். தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ள துணிந்த இளஞ்ஜோடிகள், பெண்கள் எத்தனை பேர் சாதியின், கிராமத்தின் அல்லது குடும்பத்தின் கவுரவத்தை பாதுகாப்பதாகச் சொல்லி கொல்லப்பட்டிருக்கிறார்கள்?

நெருக்கடி நீக்கமற நிறைந்திருக்கிறது. அது பல தளங்களில், மட்டங்களில், கட்டமைக்கப்பட்டதாக இருக்கிறது. அது இந்திய ஆட்சியாளர்களின் தோல்வியில், துரோகத்தில் வேர் கொண்டுள்ளது. இது இந்திய ஆட்சியாளர்களின் நம்பகத்தன்மைக்கு அவர்கள் தொடர்வதற்கான நியாயத்துக்கு வந்துள்ள நெருக்கடியாகும்.

இந்த நெருக்கடிக்கு கம்யூனிஸ்ட்களின் பதில்வினை என்னவாக இருக்க வேண் டும்? மக்களின் வாழ்வுரிமை ஆபத்தில் இருக்கும் போது ஊழலின் நிழல் தேசப் பொது வாழ்வின் எல்லா அம்சங்களிலும் கவிந்திருக்கும்போது, ஜனநாயகம் அதிகரித்த தாக்குதலுக்குள்ளாகும்போது, மக்களின் நல்வாழ்வு, நேர்மை மற்றும் ஜனநாயகம் என்ற பதாகையின் கீழ் ஒன்றுபட்டு மக்களுக்கு தலைமை தாங்க வேண்டியது கம்யூனிஸ்ட்களின் பொறுப்பாகும்.

இந்த கம்யூனிஸ்ட் உந்துதலின், பொறுப்புணர்வின் விளைபொருளாகவே 2010 ஆகஸ்ட் மாதம் அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பை உருவாக்கி, பல்வேறு கருத்தரங்கங்கள், எதிர்ப்புப் பிரச்சார இயக்கங்கள் போன்ற முன் முயற்சிகள் மூலம் இந்த செய்தியை இந்தியா முழுவதும் போராடும் இடதுசாரி அணிகள் மத்தியில் பரவலாக எடுத்துச் சென்றிருக்கிறோம். முதலாளித்துவ அதிகாரத்தில் ஒரு பங்கிற்காகவே அனைத்தும் என்ற சந்தர்ப்பவாத இடதுசாரி கொள்கைக்கு மாற்றாக, அனைத்தும் கம்யூனிஸ்ட் அறுதியிடலுக்காக அனைத்தும் மக்கள் போராட்டங்களுக்காக என்று போராடும் இடதுசாரிப் பதாகையை உயர்த்திப் பிடித்திருக்கிறோம்.

அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பின் வருகை இந்திய இடதுசாரி இயக்கத்தில் புதிய சாத்தியப்பாட்டை குறிக்கிறது. இது வரலாற்றுரீதியாக பல்வேறு பின்புலம் உள்ள இடதுசாரிகளை ஒன்றிணைக்கிறது என்பது மட்டுமின்றி, நாம் ஒருவரை ஒருவர் இன்னும் கூடுதலாக புரிந்து கொள்ள உதவியுள்ளது. இந்த இயக்கப்போக்கில் இடதுசாரிகளிடையே ஒரு மறுஅணிச் சேர்க்கையை பலப்படுத்தவும், இடதுசாரி இயக்கத்தை புரட்சிகரமாக்கவும், இது உதவும். கேரளாவில் இககமாவின் ஊழல் மற்றும் சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக உங்கள் போராட்டத்தைப் பற்றி, மிகச் சமீப காலம் வரை, நாங்கள் குறைவாகவே அறிவோம். அதேபோல் இககமாலெ பற்றி மிகச்சிறிதளவே அறிந்திருப்பீர்கள். ஆனாலும் இன்று பொதுவான போராட்டங்களில் நாம் தோளாடு தோள் இணைந்து நடக்கிறோம்.

பல்வேறு மாநிலங்களில் வித்தியாசமான வரலாற்றுச் சூழலை நாம் சந்திக்கிறோம். வித்தியாசமான சமூக, அரசியல் நீரோட்டங்கள் உள்ளன. மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் ஆட்சியாளர்களின், ஒரே கொள்கைகளையும், ஒரே மாதிரியான தாக்குதலையும் நாம் எதிர்கொள்கிறோம். ஜனநாயக மற்றும் மாற்றுக் கருத்து கொண்டோர் மீது இடதுசாரிகளால் நடத்தப்படும் அரசாங்கம் தாக்குதல் தொடுக்கும்போது அது அய்முகூ அல்லது தேஜமு அரசாங்கத்தை நாம் நேரடியாக எதிர்த்துப் போராடுவதை விட, கூடுதல் சிக்கல் நிறைந்ததாக உள்ளது. ஆயினும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்களை தடுக்கிற மற்றும் இககமா கட்சியின் வளர்ந்து வரும் சீர்குலைவு மற்றும் எதேச்சதிகாரப் போக்கு ஆகியவற்றுக்கு எதிராகப் போராடும் அதே வேளை சுதந்திரமான, போராடும் இடது பதாகையை உயர்த்திப் பிடிப்பதில் தீர்மானகரமாக உள்ளோம். ஏனென்றால் அது மட்டுமே உண்மையான சவால். கம்யூனிச இயக்கத்துக்கு தற்போதைய தேவை.

முன்பு நன்கு அறியப்பட்ட இககமா தலைவர்களான எம்.வி.ராகவன் மற்றும் கே.ஆர்.கௌரி ஆகியோர் எப்படி கம்யூனிஸ்ட் அடையாளத்தைத் தக்க வைப்பதில் தோல்வி கண்டு அய்க்கிய ஜனநாயக முன்னணியில் கரைந்தனர் என்பதை நாம் அறிவோம். அந்த மோசமான அனுபவத்தில் இருந்து கற்றுக் கொண்டு கேரளாவில் வேர்க்கால் மட்டத்தில் போராடும் இன்றைய கம்யூனிஸ்ட்டுகள் முன்னேறுவதற்கு புதிய வழிகளை ஏற்படுத்தி வெற்றி பெற இககமாலெயும் அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பும் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறது.

ஆகஸ்ட் 20 டில்லியில் இருந்து, கோழிகோட்டில் ஜனவரி 2011 வரை நிச்சயமாக சில தூரங்களை கடந்து வந்திருக்கிறோம். ஆனால் இன்னும் நீளமான, சவால்மிக்க பாதை நம்முன் உள்ளது. அய்முகூ அரசாங்கத்தால் எல்லா தளத்திலும் உருவாக்கப்பட்டுள்ள நெருக்கடிக்கு எதிராக தேசந்தழுவிய பிரச்சார இயக்கத்தை மேற்கொள்ள நாம் உறுதி பூண்டுள்ளோம். குறிப்பாக பற்றி எரியும் பிரச்சனைகளான விலைஉயர்வு, வேலையின்மை, ஊழல் மற்றும் அரசு ஒடுக்கு முறை ஆகியவை மீது கவனம் குவிக்கப்படும். பல்வேறு மாவட்டங்களில், மாநிலங்களில் எதிர்ப்பு இயக்கங்கள் நடத்து வதைத் தாண்டி பல மாநிலங்களில் இருந்தும் டில்லியை நோக்கிச் செல்வோம். மார்ச் 11 அன்று தேசியத் தலைநகரில் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.

கேரளா, மேற்குவங்கம் உட்பட முக்கிய மாநிலங்களில் நாம் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம். சந்தர்ப்பவாத இடதுசாரிகள் அதிகாரத்துவ ஆணவம் மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்காக மக்கள் சீற்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் வரும் நாட்கள் தேசிய அரசியலில் கொந்தளிப்பான சூழலை காண உள்ளன.

இடதுசாரி இயக்கத்துக்கு உள்ள கொந்தளிப்பான சூழலில் நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள எல்லா போராடும் சக்திகளையும் ஒன்றிணைத்து, சக்திவாய்ந்த மக்கள் போராட்டங்கள் ஊடே இடது அடையாளத்தைப் புத்துயிரூட்டி புரட்சிகரமாக்கி அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பு முன்னேறிச் செல்ல வேண்டும்.

ஜார்கண்ட் உள்ளாட்சித் தேர்தல்


நமது துவக்க வெற்றிகளும் புதிய சவால்களும்

32 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, ஜார்கண்டின் 3 அடுக்கு உள்ளாட்சி முறைக்கு நடைபெற்ற தேர்தல் வேர்க்கால் மட்டத்தில் மிகப்பெரிய உற்சாகத்தையும் பங்களிப்பையும் குறிப்பாக, பெண்கள், இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. 70% வாக்குகள் பதிவாயின. அட்டவணை பகுதிகளில் குறிப்பாக மலைவாழ் மக்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் உற்சாகமாக தேர்தலில் பங்கெடுத்தனர்.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டு நடந்த தேர்தல் முடிவுகள், டிசம்பர் 30 அன்று அறிவிக்கப் பட்டன. போராடும் கம்யூனிஸ்ட் சக்தி என்ற முறையில் இககமாலெ முக்கியமான இந்த அரசியல் போராட்டத்தில் செயலூக்கமிக்க பங்களிப்பு செய்தது. 20 மாவட்ட ஊராட்சிகளிலும், 139 ஒன்றியங்களிலும், நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் பதவிகளில் 135லும், 800 ஊராட்சி வார்டுகளிலும் மாலெ கட்சி வெற்றி பெற்றுள்ளது.

மாவட்ட பஞ்சாயத்தைப் பொறுத்தவரை கிரிடியில் 9 இடங்களும், கும்லாவில் 5 இடங்களும், கோடர்மாவில் 2 இடங்களும், லதேஹர், ராம்கர், அசாரிபாக் மற்றும் தன்பாத்தில் முறையே ஒரு தொகுதியிலும் மாலெ கட்சி வெற்றி பெற்றுள்ளது. கிரிடி மாவட்டத்தில் மட்டும் 9 மாவட்ட ஊராட்சி, 66 ஒன்றியம் மற்றும் 45 பஞ்சாயத்துத் தலைவர் பதவிகளைக் கைப்பற்றியுள்ளது. கார்வா மாவட்டத்தில் 5 மாவட்ட பஞ்சாயத்து, 20 ஒன்றியம் மற்றும் 18 பஞ்சாயத்து தலைவர் பதவிகளைப் பெற்றுள்ளது.

சட்டமன்றத் தொகுதி என்று பார்த்தால் பகோதர் சட்டமன்றத் தொகுதியில் 3 மாவட்டப் பஞ்சாயத்துகளிலும், ராஜ் தன்வாரில் 4 மாவட்டப் பஞ்சாயத்துகளிலும் பவந்பூரில் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. கொடர்மா நாடாளுமன்றத் தொகுதி என்று பார்த்தால், மொத்தத்தில் 11 மாவட்ட பஞ்சாயத்துகளிலும், அதனுள் வரும் 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒவ்வொரு மாவட்டப் பஞ்சாயத்து என்று மாலெ கட்சி வெற்றி பெற்றுள்ளது.

மலைவாழ் மக்கள் பெருவாரியாக உள்ள அட்டவணைப் பகுதிகளில், குறிப்பாக தியோஹர், தும்கா, ராஞ்சி, லோகர் டக்கா, கும்லா ஆகிய இடங்களில் நன்கு அமைப்பாக்கப்பட்ட பங்கெடுப்பு இருந்தது. ஆனால் நம்மால் மாவட்டப் பஞ்சாயத்தில் ஓர் இடம் கூட பெற முடியவில்லை. ஆனால் இரண்டு இடங்களில் இரண்டாவதாக வந்தோம். இருந்தாலும் ஒன்றியம், பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் வார்டுகள் ஆகியவற்றில் பல இடங்களைப் பிடித்திருக்கிறோம்.

பெரும்தொழில் குழும நிலப்பறிக்கு எதிராக தீர்மானகரமான போராட்டம் நடத்திய ராஞ்சி, தும்கா மாவட்டங்களில் மாலெ கட்சி பெற்றிருக்கும் வெற்றி முக்கியமானதாகும். உதாரணமாக ஜின்டல் கார்ப்பரேஷனின் நில அபகரிப்புக்கு எதிராக ஆழமான விடாப்பிடியான போராட்டம் நடத்தி வரும் சிகரிபடா ஒன்றியம் ஹரிப்பூர் பஞ்சாயத்தில் அனைத்து வார்டுகள், ஒன்றியங்கள், தலைவர் பதவிகளிலும் மாலெ கட்சி வெற்றி பெற்றுள்ளது.

2011 ஜனவரி - பிப்ரவரியில் மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள், பஞ்சாயத்து ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கும், பஞ்சாயத்தில் துணைத் தலைவர் பதவிக்கும் சம்பந்தப்பட்ட அமைப்புகளில் மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது. நமது சுதந்திரமான வலிமையைச் சார்ந்து நின்றும், நமது அடிப்படைக் கொள்கைகளில் ஊன்றி நின்று கொண்டு கூட்டணிக்கான வாய்ப்புக்களை கண்டறிவதன் மூலமும், இந்த மறைமுகத் தேர்தலில் தலையிட சாதகமாக முயற்சி செய்வோம். கிரிடி, கார்வா மற்றும் கொடர்மா மாவட்டங்களில் மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு மாலெ கட்சி போட்டியிடும். இன்னும் 4,5 மாவட்டங்களில் 10, 12 ஒன்றியத் தலைவர் பதவிகளுக்கு போட்டியிட கட்சி முயற்சிக்கும்.

இந்தக் கட்சி சாராத இரகசிய வாக்கெடுப்புத் தேர்தல்களில் ஊழலும், பணமும் தங்குதடையின்றி தீர்மானகரமாக விளையாடும். இந்த ஊழலுக்கு எதிராகப் போராடுவதும், நமது அடித்தளத்தை உறுதிப்படுத்திக்கொண்டு அமைப்பாக்கப்பட்ட, போராடும் அரசியல் சக்தியாக உள்ளாட்சிக் கட்டமைப்பின் பல்வேறு அடுக்குகளில் எழுவதும் கட்சியின் அடிப்படைக் கடமையாக இருக்கும்.

நிலச்சீர்திருத்த ஆணையம் அமைக்கப்பட வேண்டும்!


விவசாயத் தொழிலாளர் சட்டமன்றம் கூடுகிறது!

1892ல் ஆங்கிலேய அரசாங்கம் தலித் மக்கள் நலன்காக்க என்று சொல்லி தமிழ்நாட்டில் அவர்களுக்கு ஒதுக்கிய 12 லட்சம் ஏக்கர் நிலம் தலித் மக்களிடம்தான் இருக்கிறதா அல்லது பிற சாதியினர் முறைகேடாக பறித்துவிட்டனரா என்று ஆய்வு செய்ய 2011ல் ஓய்வு பெற்ற நீதிபதி மருதமுத்து தலைமையில் குழு அமைத்திருக்கிறார் கருணாநிதி. ஆளுநர் உரையில் அதை அறிவிக்க வைத்தார். நமது அரசாங்கங்கள் மக்கள் பிரச்சனை என்று வரும்போது எவ்வளவு துரிதமாக நடவடிக்கை எடுக்கின் றன என்று பார்க்கும்போது புல்லரித்துப் போகிறது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 64 வருடங்கள்! நிலம் ஒதுக்கப்பட்டு 119 வருடங்கள்!

பிரிட்டிஷ் அரசாங்கம் ஒதுக்கிய 12,61,591 ஏக்கர் பஞ்சமி நிலத்தில் 1,23,266 ஏக்கர் நிலம்தான், 1%தான் தலித் மக்களுக்கு தரப்பட்டது. இந்த நிலமும் பெருமளவில் தலித் மக்கள் அனுபவ பாத்யதையில் இல்லை என்பது பிரச்சனை. சுதந்திர இந்தியாவில், தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு, ஆறாவது முறையும் முதலமைச்சராக முயற்சி செய்யும் கருணாநிதிக்கு இப்போதுதான் பஞ்சமி நிலமும் தலித் மக்களும் கவனத்துக்கு வருகிறார்கள்.

அதற்கும் சிறுதாவூர் அடிப்படை காரணமே தவிர, அதை வைத்து தமிழ்நாட்டில் நடக்கும் லாவணிக் கச்சேரியை தொடரலாம் என்பதுதான் நோக்கமே தவிர, தலித் மக்கள் நலன் அவர் முன்னுரிமையாக இருக்க வாய்ப்பில்லை.

தலித் மக்கள் எதிர்கொள்ளும் சமூக பொருளாதார அரசியல் ஒடுக்குமுறைகளைக் களைவதில், தலித் மக்கள் பொருளுள்ள விடுதலை பெறுவதில் அடிப்படை அவர்களுக்கு நிலத்தின் மீதான, சமூகத்தின் செல்வங்கள் மீதான பாத்யதை பற்றியது. வெண்மணி முதல் திண்ணியம் ஊடாக தீண்டாமைச் சுவர்கள் வரை தலித் மக்களுக்கு கருணாநிதி இழைத்த துரோகங்களில் முக்கியமானது பஞ்சமி நிலப்பறிதான். முற்றிலும் அவநம்பிக்கைக்கு ஆளாகி இருக்கும் நிலையில் தேர்தலை சந்திக்க வேண்டியிருப்பதால், சும்மா போட்டுப் பார்க்கிறார்.

பூமிதானத் திட்டத்தில் தமிழகத்தில் மட்டும் 19,858 ஏக்கர் நிலங்கள் பெறப்பட்டு, 18,757 ஏக்கர் நிலம் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு கிராமங்களில் உள்ள தலித் மக்கள் ஏட்டளவில் நிலம் பெற்றார்களே தவிர, நிலத்தின் மீதான அனுபவ பாத்தையை பெறவில்லை.

பஞ்சமி நிலத்துக்கு ஆய்வுக் குழு அமைத்து விட்டால், தமிழ்நாடு முழுதும் வெவ்வேறு பெயர்களில் நடக்கும் நிலப்பறி பற்றிய கேள்விகளை பின்னுக்குத் தள்ளலாம் என்றும் எதிர்ப்பார்க்கிறார் கருணாநிதி.

வளர்ச்சி, அந்நிய முதலீடு என்ற பெயர்களில் நாடு முழுதும் நடக்கும் கார்ப்பரேட் நிலப்பறி தமிழ்நாட்டில் மிகவும் சாதுரியமாக நடைபெறுகிறது. மின்நிலையங்கள் அமைப்பது என்ற பெயரால், பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி என்ற பெயரால் தமிழகக் கடலோர கிராம மக்களின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பறிக்கப்பட்டதை தீப்பொறி பக்கங்கள் ஏற்கனவே விவாதித்துள்ளன.

தமிழ்நாட்டில் கல்லூரிகள், மருத்துவமனைகள் பெயரால் பெருமளவிலான நிலம் அபகரிக்கப்படுவதைப் போல், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சத்தமின்றி வறிய மக்கள் நிலங்களை வளைத்துப் போடுகின்றன. சத்தம் எழுந்தால் வளர்ச்சி போற்றும் திமுக அரசு அடக்கிவிடும்.

நிலம் வாங்கும் சிரமத்தை பெருந்தொழில் குழுமங்களுக்கு தருவதில்லை கருணாநிதி அரசு. அவற்றுக்கு எங்கு, எந்த நிலம், எவ்வளவு வேண்டுமோ அதை அபகரித்துக் கொடுப்பதுதான் சிப்காட் மற்றும் டிட்கோ ஆகியவற்றின் சிறப்புப் பணி.

மாநிலம் முழுதும் உள்ள 16 சிப்காட் வளாகங்களில் வளைக்கப்பட்டுள்ள நிலம் மொத்தம் 24,500 ஏக்கர். இந்த நிலம் சாம பேத தான தண்டம் எல்லாம் பயன்படுத்தி கையகப்படுத்தப்பட்டதுதான்.

இது தவிர தமிழ்நாட்டில் அதிகாரபூர்வ அனுமதி பெற்றுவிட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் 70. இவற்றுக்காக நிலம் பறிக்கும் கடமையை சிப்காட் ஆற்றுகிறது.

மைக்கெலீன் என்ற பிரஞ்சு டயர் நிறுவனத்துக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தேர்வாய் கண்டிகை கிராமத்தில், கிராமசபை தீர்மானங்கள், உள்ளூர் மக்கள் போராட்டங்கள் அனைத்துக்கும் அப்பால், கடந்த 100 வருடங்களாக மக்கள் பயன்படுத்தி வருகிற 1,127 ஏக்கர் மேய்ச்சல் நிலத்தை கையகப்படுத்தி தந்துள்ளது சிப்காட்.

காஞ்சிபுரத்தில் ஒரகடம் மற்றும் சென்னக்குப்பம் கிராமங்களில் நிசான் - ரேனால்ட் நிறுவனத்துக்கு 2,174 ஏக்கர் பூதான் நிலத்தை சிப்காட் பறித்துத் தந்துள்ளது.

திருபெரும்புதூரில் சிப்காட் மூலம் பெற்ற 2,500 ஏக்கர் நிலத்தில்தான் நோக்கியா, ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள் நிற்கின்றன.

திருவண்ணாமலையில் செய்யூரில் 840 ஏக்கர் நிலம் ஏற்கனவே சிப்காட் கையகப்படுத்திவிட்டது. இன்னும் 2,030 ஏக்கர் நிலங்களைப் பறிக்க முயற்சிகள் நடக்கின்றன.

வேலூர் மாவட்டம் பனப்பாக் கத்தில் 1,200 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது சிப்காட். இந்த 1,200 ஏக்கரில் 300 ஏக்கர் பஞ்சமி நிலமும் அடக்கம்.

தருமபுரியில் நல்லம்பல்லி, பாகலஹல்லி, பலஜங்கனமனஹல்லி ஆகிய கிராமங்களில் 2,388 ஏக்கர் நிலம் கையகப்படுத்தத் திட்டமிட்டிருந்த சிப்காட், மக்கள் எதிர்ப்பின் காரணமாக பாகலஹல்லி கிராமத்தில் மட்டும் 1,142 ஏக்கர் நிலம் பறிக்க முடிவு செய்துள்ளது.

கிருஷ்ணகிரியில் ஜிஎம்ஆர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனம் டிட்கோ உதவியுடன் 1,700 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளது.

திருமங்கலத்தில் 1,500 ஏக்கர், ஓசூரில் 2,600 ஏக்கர், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ராகின்டோ சிறப்புப் பொருளாதார மண்டலம் 849 ஏக்கர், சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு 2,640 ஏக்கர், எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் 385 ஏக்கர், ராணிப்பேட்டையில் சிறப்புப் பொருளாதார மண்டலம் 3,500 ஏக்கர், டிட்கோ மூலம் நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலம் 2,600 ஏக்கர், பெரம்பலூரில் 3,702 ஏக்கர், (2,937 ஏக்கர் நிலம் ஏற்க னவே கையகப்படுத்தப்பட்டு விட்டது) என பட்டியல் நீள்கிறது. இந்தப் பட்டியலே கிட்டத்தட்ட 30,000 ஏக்கர் நிலம் மக்களிடம் இரு ந்து பறிக்கப்பட்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்களாக, பெருந் தொழில் குழும நிறுவனங்களின் சிறப்பு லாபக்குவிப்பு மண்டலங்க ளாக, தமிழக தொழிலாளர்களுக்கு சிறப்பு சுரண்டல் மண்டலங்களாக மாற்றப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.

இந்த நிலங்களில் பஞ்சமி, பூதான் நிலங்களும் உண்டு. மூன்று, நான்கு போகம் விளையும் செழிப்பான நிலங்கள் உண்டு. மருதமுத்து குழு இந்த நிலங்களை கணக்கில் எடுக்குமா? பறித்த நிலத்தை பறிகொடுத்த மக்களுக்கு திருப்பித் தருமா? அல்லது அது யானை வாய்க்குள் போன கரும்பாகுமா?

ராசா கைது செய்யப்பட்டு விட்டார். நாட்டுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்தினார் என்று போர்க்கொடி தூக்கினார் ஜெயலலிதா. ‘நிதி அமைச்சகம் நடத்திய ஆய்வொன்றின் படி கடந்த 5 ஆண்டுகளில், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்கள் பெற்ற வரிச் சலுகைகளால் அரசு கஜானாவுக்கு ரூ.1.7 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்று சிறப்புப் பொருளாதார மண்டல எதிர்ப்பு இயக்கம் நடத்திய மக்கள் தணிக்கை அறிக்கை சொல்கிறது.

இதுவும் ரூ.1.7 லட்சம் கோடிதான். இதுவும் கஜானாவுக்கு வர வேண்டிய பணம்தான். ஜெயலலிதா கண்களை மூலதன விசுவாசம் மறைக்கிறது. அரசு ஊழியர்க்கு ஊதியம் தர 90% கஜானா காலியாகிறது என்று வருத்தப்பட்ட ஜெயலலிதாவுக்கு நோக்கியாவுக்கு தந்தது மகிழ்ச்சி தருகிறது.

தமிழகமெங்கும் பெருந்தொழில் குழும பேராசைக்கு நிலத்தைப் பறிகொடுத்த வறிய மக்கள், தலித் மக்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பத் தயாராகிவிட்டனர். கோயில், மடம், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என விதவிதமாக தனியார் கைகளில் குவிந்திருக்கும் நிலத்தை கண்டறிந்து மீட்க நிலச்சீர்திருத்த ஆணையம் கோரி பிப்ரவரி 14 அன்று இககமாலெயும் அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கமும் நடத்தவுள்ள விவசாயத் தொழிலாளர் சட்டமன்றத்தின் கேள்விக்கு கருணாநிதி பதில் சொல்லியே ஆக வேண்டும்.

விசைத்தறித் தொழிலாளர் வேலை நிறுத்தம்


செங்கொடிதான் வேண்டும்!

கூலி உயர்வு கேட்டு குமாரபாளையம் விசைத்தறித் தொழிலாளர்கள் 10,000 பேர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் இருக்கும் தொழிலாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி பிப்ரவரி 1 அன்று 500 விசைத்தறி தொழி லாளர்கள் சி.என்.பாளையம் சந்தையில் ஏஅய்சிசிடியு தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் தலையிட்டு, அவர்களை கைது செய்யும் அளவு தங்களிடம் காவலர்கள் இல்லாததால் கைது செய்யவில்லை என்றும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் கலைந்து செல்ல வேண்டும் என்றும் முதலாளிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தாங்கள் ஏற்பாடு செய்வதாகவும் உறுதி தந்ததன் பேரில் தொழிலாளர்கள் தற்காலிகமாக தங்கள் போராட்டத்தை நிறுத்திவிட்டு கலைந்து சென்றனர்.

இதே நேரத்தில் கச்சேரி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுடன் பேச முதலாளிகள் தயாரானார்கள். ஆனால் கம்யூனிஸ்டுகள் இருந்தால் பேச முடியாது என்றும் அவர்களைப் போகச் சொல்ல வேண்டும் என்றும் சொன்னார்கள். தொழிலாளர்கள் ஏஅய்சிசிடியு தலைவர்கள் இருப்பார்கள் என்று சொன்னதால் முதலாளிகள் பேச்சுவார்த்தை நடத்தாமல் போய்விட்டனர்.

தொழிலாளர்கள் இப்போதே இங்கேயே ஏஅய்சிசிடியு கொடி ஏற்ற வேண்டும் என்று முடிவு செய்து உடனடியாக 100 தொழிலாளர்கள் சங்கத்தில் சேர்ந்து பகுதியில் ஏஅய்சிசிடியு கொடி ஏற்றினர்.

தீ பரவும்
எஸ்.குமாரசாமி

அரபு தெரு, அதாவது அரபு நாடுகளின் மக்கள் வசிக்கும் வீதிகள், இன்று கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன. டுனிஷியாவில் ஒரு மல்லிகைப் புரட்சி நடந்துள்ளதாம். அந்த நாட்டின் தேசிய மலர் மல்லிகை என்பதால், மல்லிகைப் புரட்சி என்கி றார்கள்.

மல்லிகை ஏன் தீயாய்க் கனன்று எரிந்தது? வேலையின்மை, விலை உயர்வு, ஊழல், ஒடுக்குமுறை, பெருகும் ஏற்றத்தாழ்வுகள்தான் காரணம். 23 ஆண்டு காலம், ஒரு கோடியே அறுபது லட்சம் மக்களை, 1.50 லட்சம் அரசப்படை துப்பாக்கிகள் கொண்டு அடக்கிய பென் அலியின் ஆட்சி ஜனவரி 14 முடிவுக்கு வந்தது. ஆட்டிப் படைத்த அதிபர் நாட்டை விட்டே ஓடினார். படித்த வேலையில்லா இளைஞன், வண்டியில் உணவு விற்றுப் பிழைத்தார். அரசு அவர் வண்டியைப் பறித்தது. வாழ்வே போனது என்பதால், அவன் தீயிட்டுத் தன்னை எரித்துக் கொண்டான். டுனிஷியா பற்றி எரிந்தது. அரபு தெருவையும் பற்ற வைத்தது.

ஓமன், அல்ஜீரியா, எகிப்து எங்கும் குமுறல்கள் வெடித்தன. எகிப்து எரியத் துவங்கியது. இன்று வரை அணையவில்லை. பிப்ரவரி 1 அன்று 20 லட்சம் பேர் கலந்து கொண்ட பேரணி நடந்துள்ளது.

சூயஸ் கால்வாயின் பாதுகாவலனான எகிப்து, நைல் நதி பாயும், பிரமிடுகளைக் கொண்ட, 8 கோடி மக்களைக் கொண்ட எகிப்து, இன்று, மக்கள் போராட்ட அலைகளைச் சந்திக்கிறது. அதிபர் ஹோஸ்னி முபாரக் அமைச்சரவையைக் கலைத்துப் பார்க்கிறார்; துணை அதிபர் ஒருவரை நியமிக்கிறார். மக்கள் ஏற்காமல், தேசியக் கொடியால் தம் உடலில் சுற்றிக்கொண்டு, ‘ஆட்டம் முடிந்து விட்டது’ என எழுதித் தூக்கிப் பிடிக்கிறார்கள்.

சிறைகள் தகர்ந்தன. ஆயிரக்கணக்கானவர்கள் தப்பினர். விடுவிக்கப்பட்டனர். காவல் துறையின் காட்டுமிராண்டித்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அய்நா இதுவரை கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 300 என்கிறது. கலவரம் சூறையாடல் நடக்குமாறு அரசு பார்த்துக் கொள்கிறது. எதிர்ப்புப் போராட்டத்தை எதிர்மறையாய்க் காட்ட, திசைதிருப்ப, பிளவுபடுத்த, இன்றும் ஏதேதோ செய்கிறது.

ஆனால் முதியவர்கள், இளைஞர்கள் குழந்தைகள், பெண்கள், நடுத்தர வர்க்கத்தினர், வெள்ளை கோட் அணிந்த மருத்துவர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் எனச் சமூகமே, முபாரக் வெளியேறு என வீதியில் இறங்கி உள்ளது. அரசு, இணையதளத்தை, அலைபேசி சேவையை மூடியது. இப்போது, போராட்டச் செய்திகளைத் தாங்கி வரும் அல் அஜீரா தொலைக்காட்சிக்கும் தடை விதித்துள்ளது. ஆனால் வாரத் துவக்க நாளான ஞாயிறன்று, வங்கிகள், பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள், பங்குச் சந்தைகள் அனைத்தும் மூடியே இருந்தன. ராணுவ டேங்குகள், கவச வண்டிகள், வீதியில் இறக்கப்பட்டன. வானத்தில் போர் விமானங்கள் பறந்தன. ஆனாலும் மக்கள் அசைந்து கொடுக்கவில்லை. வீதிக்கு வராதவர்கள், கண்ணீர்ப் புகைக்கு ஆளாபவர் களுக்குப் பாதுகாப்புக்காக, தங்கள் வீட்டு மாடிகளிலிருந்து, காகித முகமூடிகள், தண்ணீர் புட்டிகள், வெங்காயங்களை வீசி எறிகிறார்கள். வாகனம் ஓட்டுபவர்கள் ஆதரவு தெரிவித்து ஹார்ன் அடிக்கிறார்கள்.

எகிப்து தேசத்தின் 8 கோடி மக்களில் 4 கோடியே 80 லட்சம் பேர் 30 வயதுக்குக் கீழனாவர்கள். அவர்களில் 10ல் 9 பேருக்கு வேலை இல்லை. விலை உயர்வு தாங்க முடியவில்லை. ஊழலும் ஒடுக்குமுறையும் எகிப்து தேசத்தின் உயிரைப் பறிக்கிறது. ஆன்மாவை அழிக்கிறது. சுரண்டல் ஒடுக்கு முறை. இப்போது எதிர்ப்பு. கெய்ரோ மாநகரில், ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சி அலுவலகம் தாக்கப்படுகிறது. அரசின் தொலைக்காட்சி அலுவலகம் அயல் விவகாரத் துறை அமைச்சகம் தாக்கப்படுகின்றன. அமெரிக்கா தன் நாட்டவர்கள் எகிப்து செல்ல வேண்டாம் என அலறுகிறது. அமெரிக்க அயல் விவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஒழுங்கான முறையில் எகிப்து மாறிச் செல்லட் டும் எனப் பசப்புகிறார்.

அரபு தெரு, இதற்கு முன்னால், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கெதிராக, அதன் அடியாளான இஸ்ரேலுக்கு எதிராக, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஆர்த்தெழும். இந்த முறை, அமெரிக்க அடிவருடிகளான உள்ளூர்க் கொடுங்கோலர்களுக்கு எதிராகக் கிளர்ந்து எழுகின்றனர். சமீப வாரங்களில், லிபியா கோதுமை பொருட்கள் மீதான வரியைக் குறைத்துள்ளது. மொரோக்கா, எரிபொருட்கள் உணவுப் பொருட்கள் மீதான வரியைக் குறைத்துள்ளது. குவைத் 14 மாதங்களுக்கு இலவச உணவு என அறிவித்துள்ளது.

சிம்மாசனங்கள் சரியலாம். மகுடங்கள் மண்ணில் உருளலாம். ஆனால், எவ்வளவு தூரம் எத்தகைய மாற்றங்கள் வரும் எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இடதுசாரி அரசியலை விளிம்பு நிலைக்கும் கீழே கொடுங்கோலர்கள் தள்ளி இருந்த அரபு உலகத்தில், மக்கள் எதிர்ப்புப் போராட்ட அலைகள், ஆட்சியாளர்களை தினமும், நாளும் பொழுதும் விரட்டும் காலம் வந்துவிட்டது. இந்தத் தீ உலகின் பிற பகுதிகளுக்குப் பரவாமலா போகும்?

இந்திய ஆட்சியாளர்கள் அந்தத் தீயை தங்கள் செயல்பாடுகளால் வா வா என அழைக்கிறார்கள். மன்மோகன் விலைகள் எப்போது குறையும் எனக் கேட்டால்தான் ஒன்றும் ஜோசியக்காரர் இல்லை என்கிறார். சிதம்பரம், விலை உயர்ந்தால் வளர்ச்சி என எரிகிற சீற்றத் தீயில் எண்ணெய் ஊற்றுகிறார். கருணாநிதி விலை உயர்வெல்லாம் ஒரு விஷயமே இல்லை, மக்கள் ரங்கநாதன் தெருவில் முட்டி மோதிப் பொருட்கள் வாங்குவது தெரியவில்லையா எனக் கேலி பேசி மகிழ்கிறார். பெட்ரோலுக்கான டீசலுக் கான மாநில வரியில் தமிழகத்தை இரண்டாம் மூன்றாமிடத்தில் இருந்து முதலிடத்திற்கு கொண்டு செல்லத் துடிக்கிறார்.

மத்திய மாநில அரசுகள், இராணுவம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், கனம் நீதிபதிகள் சிலர், ஊழலில் பன்றிகளாய்ப் புரள்கிறார்கள். வெளிநாடுகளில் உள்ள இந்திய கருப்புப் பணம் திரும்பிவிட்டால் அந்த வங்கிகள் திவாலாகிவிடும் எனக் கேலிச் சித்திரங்கள் வரையப்படுகின்றன. மண்ணெண்ணெய் கடத் தலில் ஆண்டுக்கு ரூ.10000 கோடி இழப்பு. 40% மண்ணெண்ணெய் கடத்தப்படுகிறது என தடுக்கப் பார்த்த மலேகானின் கூடுதல் மாவட்ட ஆட்சித் தலைவர் எஷ்வந்த் சோனேவானா குற்றக் கும்பல்களால் எரிக்கப்படு கிறார். மகாராஷ்டிராவின் 15 லட்சம் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். கடத்தல் மீது சீற்றம் என்பதற்கு மாறாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு, கடத்தலை ஒழிக்க மண்ணெண்ணெய் மானியத்தை நீக்கச் சொல்கிறது. பெரிய அளவுக்குப் பணம் என்றால், பெரிய மாஃபியா குற்றக் கும்பல்கள்.

டாடா, அம்பானி, மிட்டல் எல்லாம் கனவான் மாஃபியாக்கள். இவர்கள் சிறிய விஷயங்களைத் திருட மாட்டார்கள். தேசத்தின் செல்வங்களைச் சூறையாடுவார்கள். நடுநிலை நாடகமாடும் ஊடகங்கள், அசல் புரோக்கர்களான நீரா ராடியாக்களுடன் முதலாளித்துவ அரசியல்வாதிகளுடன் சேர்ந்து, யார் எந்த துறைக்கு அமைச்சர் என முடிவு செய்வார்கள். கொள்ளை அடித்து தரகுத் தொகை தருவார்கள்.

அம்பானி தன் குடும்பத்தின் 4 பேர் வாழ ரூ.9800 கோடியில் வீடு கட்டுவார். தன் வீட்டிற்கு மாதம் ரூ.70,69,488 மின்கட்டணம் கட்டுவார். இதுவும் கூட, அவர் முறையாக மின்கட்டணம் செலுத்துகிறார் என்பதால் அவருக்கு அளிக்கப்பட்ட தள்ளுபடி ரூ.48,354 போக மீதி. பொன்முடியும் துரைமுருகனும் கான்க்ரீட் வீட்டுப் பயனாளிகளிடம் தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே என எகத்தாளமாய்ப் பேசுவார் கள். இந்த தேச துரோகிகள் மக்கள் போராளி பினாயக் சென்னை சிறைவைப்பார்கள். எழுத்தாளர் அருந்ததி ராயை தேசத்துரோகம் என மிரட்டுவார்கள். நீதித்துறை ஊழலை எதிர்க்கும் பிரஷாந்த் பூஷனை நீதிமன்ற அவமதிப்பு என மிரட்டுவார்கள்.

விலை உயர்வு, ஊழல், வேலை இன்மை, ஒடுக்குமுறை, ஏற்றத்தாழ்வால், மேற்கு ஆசியாவில் எரியும் தீ, இந்தியாவிற்கு தமிழகத்திற்கு நிச்சயம் பரவும்.

தமிழ்நாட்டில் கட்சிக் கட்டுதலின் வழித்தடம்:


ஒரு சுருக்கமான சித்திரம்

- டி.பி.பக்ஷி

நவீன சமூகத்தில் வர்க்கங்கள் நிலவுவதை, அவற்றுக்கிடையில் போராட்டம் நிலவுவதை கண்டுபிடித்ததில் மார்க்சுக்கு எந்த பெருமையும் இல்லை. அவருக்கு வெகுகாலம் முன்பே முதலாளித்துவ வரலாற்று அறிஞர்கள் வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டத்தின் வரலாற்றுரீதியான வளர்ச்சியை விவரித்து விட்டார்கள். முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் வர்க்கங்களின் பொருளாதார உட்கூறுகளை விளக்கிவிட்டார்கள். இறுதியில் எல்லா வர்க்கங்களுக்கும், தனக்கும் சேர்த்து முடிவு கட்டும் வர்க்கத்தை கண்டறிந்ததில்தான் மார்க்சின் பெருமை உள்ளது. அந்த வர்க்கம் பாட்டாளி வர்க்கம். இந்தக் கடமையை நிறை வேற்ற புறநிலைரீதியாக இருத்தப்பட்டுள்ள ஒரே வர்க்கம் இதுதான். ஆக, வர்க்கப் போராட்டத்தை அங்கீகரிப்பது என்பதில் இருந்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதை அங்கீகரிப்பதற்குச் செல்வது, பெரும்பான்மை மீதான சிறுபான்மையின் சர்வாதிகாரத்தின் இடத்தில், சிறுபான்மை மீதான பெரும்பான்மை சர்வாதிகாரத்தை நிறுவுவதில், வர்க்கங்களற்ற சமூகம் நோக்கி, கம்யூனிசம் நோக்கி மாறிச் செல்வதை முன்நகர்த்துவதில் முதல் படியாகும். இங்குதான் புறநிலைரீதியான வர்க்கப் போராட்டத்தை திசைவழிப்படுத்துவதில் உணர்வுபூர்வமான முயற்சிகளின் முக்கியத்துவம் உள்ளது. அந்தப் பொருளில் பாட்டாளி வர்க்கப் புரட்சி மானுட சமூக வரலாற்றில் மிகவும் உணர்வுபூர்வமான புரட்சியாகும். விஞ்ஞானபூர்வமான தத்துவ மும் அதை உயிரோட்டமாக பொருத்துவதும், - நம் விசயத்தில் மார்க்சியம், லெனினியம், மா சே துங் சிந்தனை - இந்த உணர்வுபூர்வமான முயற்சிகளின் அடிப்படை வழிகாட்டும் உணர்வை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அந்த உணர்வுபூர்வமான முயற்சிகளின் லட்சியத்தை முன்நகர்த்த தேவையான அமைப்புரீதியான கருவிதான் கம்யூனிஸ்ட் கட்சி.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நோக்கிய வர்க்கப் போராட்டம் இல்லாத சோசலிசம், கற்பனாவாதமாகவே இருக்கும். அதேபோல், மார்க்சியம் - லெனினியம் என்ற விஞ்ஞானபூர்வமான தத்துவத்தால் வழி நடத்தப்படும் கம்யூனிஸ்ட் கட்சி இல்லாத பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமும் பொருளற் றது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவது மட்டும் அதன் வரலாற்றுரீதியான பாத்திரத்தை ஆற்ற ஆற்றல் தராது. கட்சி கட்டுதல் என்ற கடமையை முறையான அன்றாட வேலை என்று மட்டும் புரிந்து கொள்ளக் கூடாது. ஏனென்றால் எந்த சமூகத்தை மாற்றியமைக்க வேண்டுமோ அந்த சமூகத்துக்குள்ளேயே புரட்சியை கட்டமைக்க, சமூகத்தை மாற்றியமைக்கும் கருவியாக திறன் மிக்க பாத்திரம் ஆற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் துடிப்பை தக்க வைக்கும் சவால் மிக்க கடமை இது. அந்நியக் கருத்தியல்களும் போக்குக்களும் கம்யூனிஸ்ட் கட்சியை தொடர்ந்து விரட்டும். அதன் அடிப்படை உறுதியை நீர்த்துப் போகச் செய்து உறுதி குலையச் செய்யும். இந்தியா போன்ற ஒரு குறைவளர்ச்சி கொண்ட சமூகத்தில், குட்டிமுதலாளித்துவ கருத்தியல் மேலோங்கி இருக்கும் நிலையில், கம்யூனிஸ்ட் கட்சி கட்டுதல் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்வது மிகவும் சவால்மிக்கது.

கம்யூனிஸ்ட் கட்சி கட்டுதலின் பல பரிமாணங்களைப் பார்க்கும்போது, பின்வரும் கூறுகளை ஓர் ஒருங்கிணைந்த முழுமை என நாம் அடையாளப்படுத்துகிறோம்: கருத்தியல் தெளிவு (சந்தர்ப்பவாதத்தையும் அராஜகவாதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அந்நியப் போக்குகளை விடாப்பிடியாக எதிர் கொள்வது); அரசியல் கூர்மை (சமூக ஜனநாயக மற்றும் அராஜகவாத ராணுவவாத செயல்தந்தி ரங்களை முறியடிப்பதன் மூலம்); அமைப்புரீதியான உறுதி (குழுவாதப் போக்குகள், கட்டமைப்பு தளர்வு, ஊழியர் கொள்கையில் இடைவெளிகள், தவறான வேலைநடை, தலைமை தாங்கும் முறைகள் ஆகியவற்றால் உருவாகும் உறுதிகுலைக்கும் அம்சங்களை களைவதன் மூலம்).

இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒரு பெரிய நாட்டில், வெவ்வேறு மாநிலங்களில், பிராந்தியங்களில், கம்யூனிஸ்ட் கட்சி கட்டுதலின் குறிப்பான இயல்புகள் மற்றும் வரலாற்றுரீதியான இயக்கப்போக்கு ஆகியவற்றை பற்றிக் கொள்வது அவசியம். இந்தப் பின்னணியில் தமிழ்நாட்டின் குறிப்பான அனுபவங்களைப் பற்றி விவாதிப்போம்.

நமது கட்சி கட்டுதலின் தோற்றம் தமிழ் நாட்டின் இககமா அமைப்புக்குள் நடந்த கருத்தியல் போராட்ட இயக்கப்போக்கில் உள்ளது. நக்சல்பாரி உணர்வை உயர்த்திப் பிடிப்பதில், தமிழக மண்ணில் இகக மாலெ வடிவில் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்ட பாடுபட்டதில் தொழிலாளர் வர்க்க இயக்கத்துடன் தொடர்புடைய தோழர்களின் குறிப்பிட்ட வகையினர் (தொழிலாளர் முன்னோடிகள் அல்லது தொழிலாளர் வர்க்க இயக்க அமைப்பாளர்கள்) முதுகெலும்பு போன்ற சக்தியாக இருந்தனர். தமிழ்நாடு இகக மாலெயின் மாநிலச் செயலாளர் தோழர் அப்பு ஒரு போக்குவரத்து தொழிலாளி. அது தொடர் பான தொழிலாளர் வர்க்க இயக்கத் தலைவர். அவர் காவல்துறையினரால் கொல்லப்பட்டார். மாணவர், இளைஞர்களின் துவக்கநிலை எழுச்சியையும் தமிழ்நாட்டில் காண முடிந்தது. புரட்சிகர விவசாயப் போராட்டத்தைக் கட்டமைப்பதற்கான அனைத்தும் தழுவிய முயற்சிகளும் இருந்தன. ஆனால் அனுபவம் இன்மை, அராஜகவாத மற்றும் ராணுவவாதப் போக்குகள், தமிழக விவசாய அரங்கின் புற நிலைரீதியான இயங்காற்றலை பற்றிக்கொள்ள தவறியது ஆகியவற்றால், ஒரு ஸ்திரமான விவசாயப் போராட்டப் பகுதியை கட்டி யெழுப்பும் முயற்சி, கடுமையான அரசு ஒடுக்குமுறை இருந்ததால், உறுதிப்படுவதற்கு முன்பே பின்னடைவை எதிர்கொண்டது.

1968ல் அண்ணாதுரை தலைமையிலான திமுக ஆட்சியில், தஞ்சையில் 40க்கும் மேற்பட்ட தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கிராமப்புற வறிய மக்கள் இககமா செல்வாக்கில் இருந்தனர். இந்தப் படுகொலை தமிழக கிராமப்புற சமூகத்தின் புதிய மோதலை பிரதிபலித்தது. குலக்குகள் எதிர் விவசாயத் தொழிலாளர்கள் என எழுவதற்கு உதவிய ஒப்பீட்டுரீதியான துவக்கநிலை முதலாளித்துவ வளர்ச்சி இருப்பதைக் காட்டியது.

இந்தப் பின்னணியில் சமூக அரசியல் தளத்தில், பிற்போக்குவாதம், குலக் மற்றும் கிராமப்புற புதியப் பணக்காரர்கள் உறுதி பெற்றபோது, ஒரு புதிய இணைப்பை வடிவமைக்கத் துவங்கியது. திராவிட அச்சுடன் பிராமண எதிர்ப்பு இயக்கம் என்ற போர்வையில் நடந்த திமுகவின் எழுச்சி இதற்கு உதவியாக இருந்தது. இந்தச் சூழலில் இது ஒரு விதிவிலக்கான வளர்ந்து வரும் போக்காக இருந்தது. நக்சல்பாரியின் வெளிச்சத்தில் புரட்சிகர விவசாயப் போராட்டம் பற்றிய நமது பார்வை நிலப்பிரபுத்துவத்தை பிரதானமான நிகழ்வுப்போக்காகக் கொண்ட அரை-நிலப் பிரபுத்துவ யதார்த்தம் என்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஆக, இந்த வளர்ந்து வரும் போக்கை நாம் பற்றிக் கொண்டு நக்சல்பாரி விவசாயப் போராட்ட சட்டகத்துடன் இணைத்திருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்க முடியாது. தமிழக விவசாய அரங்கின் இந்த சிக்கலான தன்மை, புரட்சிகர விவசாயப் போராட்டத்தை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு முன்நகர்த்துவதில் நாம் எதிர்கொண்ட பிரச்சனைகளுக்கும் காரணமாக இருந்தது.

1972ல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் நமது முதல் காத்திரமான முயற்சிக்குப் பிறகு, குறிப்பாக, நமது நிறுவனத் தலைவர் தோழர் சாரு மஜ÷ம்தார் தியாகியான பிறகு கட்சி சந்தித்த ஒட்டுமொத்த பின்னடைவுக்கு தமிழ்நாடும் ஆளானது. இந்தப் பின்னடைவின் குறிப்பான தாக்கம் கருத்தியல் அரசியல் குழப்பம் மற்றும் சங்கிலித் தொடர் போன்ற பிளவுகள் ஆகியவற்றால் நிறைந்திருந்தது.

நமது கட்சியை, நமது போராட்டங்களை மீட்டெடுக்கும் இந்த சவால்மிக்க சூழலை எதிர்கொள்ளும் போக்கில், நாடு முழுவதும் நடந்ததைப் போல், சந்தர்ப்பவாதம் மற்றும் அழிவுவாதம், ராணுவவாதம் மற்றும் அராஜக வாதம் ஆகியவற்றை நோக்கி இரண்டு தனிப்பட்ட போக்குகள் காணப்பட்டன. அவநம்பிக்கைவாதம் மற்றும் செயலின்மை, வாய்ச்சவடால் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட ராணுவ நடவடிக்கைகள் இந்தப் போக்குகளின் வெளிப்பாடுகளாக இருந்தன. கூடுதலாக, தமிழ்நாட்டில் தமிழ் ஈழ உணர்வு என்ற வடிவில் அராஜக மற்றும் பயங்கரவாத போக்கும் காணப்பட்டது. மேலும் நக்சலைட் முகாமில் இருந்து, ஏ.கே.ராய் அல்லது சங்கர் குஹா நியோகி போன்ற போக்குகளைப் போன்ற, குசேலர் தலைமையிலான சுதந்திர மான தொழிற்சங்கவாதத்தின் சக்திவாய்ந்த போக்கும் எழுந்தது. அதேநேரம் தமிழ்நாட்டில் எளிமைப்படுத்தப்பட்ட, ஒருபக்கத் தன்மை கொண்ட போக்குகளில் திருப்தியுறாத புரட்சிகர அணிகளும் இருந்தனர். தோழர் சாரு மஜ÷ம் தாரின் புரட்சிகர உணர்வை பாதுகாப்பதில் அவர்கள் குறிப்பிட்ட கவனம் செலுத்தினர். ஆனால் அதை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பதில் தெளிவின்மையும் அவர்கள் மத்தியில் இருந்தது. ஆயினும் பீகாரின் போஜ்பூர் போராட்டங்களில் இருந்து படிப்படியாக உத்வேகம் பெறலாயினர்.

1977க்குப் பிந்தைய காலகட்டத்தில், நாடு முழுதும், இகக மாலெயின், புரட்சிகர இயக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சி வேகம் பெற்றபோது, தோழர் வினோத் மிஸ்ரா தலைமையிலான நமது கட்சி மய்யம், அந்த இயக்கப் போக்கில் தமிழ்நாட்டையும் இணைத்துக் கொண்டது. சென்னை தொழிலாளர் வர்க்க இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட சில செயல்வீரர்களும் அமைப்பாளர்களும் துவக்கத்தில் இந்த முயற்சியில் அணிதிரட்டப்பட்டனர்.

1970களின் இறுதியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சீர்செய் இயக்கத்தை நடத்தினோம். அது, 1979ல் போஜ்பூரில் நடந்த நமது கட்சியின் அகில இந்திய மாநாட்டில் நிறைவுற்றது. வெகுமக்கள் அரசியல் அழுத்தத்துடனான ஒரு புதிய கருத்தியல் அரசியல் திசைவழியை உருவாக்கும் இந்த முயற்சியில் தமிழக தோழர்களும் இணைத்துக் கொள்ளப்பட்டனர். ஒன்றுபட்ட தன்மையும் ஸ்திரத்தன்மையும் இல்லாத போதும், நமது கட்சியின் தமிழ்நாடு மாநிலக் கமிட்டியும் உருவாக்கப்பட்டது.

1980களின் துவக்கத்தில் இந்திராகாந்தியின் எதேச்சதிகார ஆட்சி மீண்டும் வந்த பின்னணி யில், விவசாயப் போராட்டங்களை, தொழிலாளர் வர்க்க இயக்கத்தை மீட்டெடுப்பதுடன் நமது நாட்டின் ஜனநாயக அரங்கில் நுழைய நமது கட்சி முடிவு செய்தபோது, தமிழகக் கட்சியும் இந்த இயக்கத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டது. தமிழக மக்கள் முன்னணி உருவாக்கப்பட்டது. இது, வெகுமக்கள் அரசியல் மேடையாக இந்திய மக்கள் முன்னணி, 1982ல், டில்லியில் உருவாக்கப்படுவதற்கு உதவியது. வெகுமக்கள் அரசியல் முன்முயற்சி கள் எடுக்கவும் ஜனநாயக சக்திகளை ஈர்க்கவும், தலைமறைவு நிலையில் இருந்த நமது கட்சி எடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை இது. தமிழகப் பின்னணியில் இந்த முயற்சி இரட்டை தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒருபக்கம், சுருங்கி நிற்கும் நிலையை உடைத்து வெகுமக்கள் முன்முயற்சிகளை கட்டவிழ்த்து விட்டது; மறுபக்கம், திராவிட இயக்கம், தலித் இயக்கம் மற்றும் அரசுசாரா நிறுவனங்கள் போன்ற நீரோட்டங்களின் சக்திகள் நுழையும் சூழலை உருவாக்கியது. தமிழ்நாட்டின் சமூக யதார்த்தத்தில் இந்தப் பின்னணி கொண்டவர்கள் கட்சிக்கு வருவதே அசாதாரணமானதோ பிரச்சனையோ அல்ல. ஆனால் தமிழ்நாட்டு கட்சியின் ஒற்றுமை மட்டம் என்ற பின்னணியில் கட்சியின் ஒருபடித்தான தன்மை மேலும் நீர்த்துப் போவதற்கு அது துணை நின்றது.

இந்தக் கட்டத்தின் மிக முக்கியமான சாதனை என்று சொன்னால், அது ஒரு புதிய மாணவர் - இளைஞர் செயல்வீரர்கள் உருவானதும் அவர்களை கட்சி ஊழியர்களாக நம்மால் வளர்த்தெடுக்க முடிந்ததுமே ஆகும்.

விவசாயப் போராட்ட அரங்கில் நமது கடுமையான முயற்சிகள் இருந்தபோதும் நமது பல தலைமை தோழர்களை நாம் இழந்த போதும், எந்த ஸ்திரமான புரட்சிகர விவசாயப் போராட்டப் பகுதியையும் நம்மால் வளர்த்தெடுக்க முடியாமல் போனது. அராஜகவாத அல்லது ராணுவவாதப் போக்குகளின் மிச்சசொச்சங்கள், விவசாய சமூகத்தின் புதிய இயங்காற்றலை பற்றிக் கொள்ளத் தவறியது, கிராமப்புற வறியவர் மத்தியில் இருந்து தலைவர்களை, செயல்வீரர்களை வளர்க்கத் தவறியது, வர்க்க அணுகுமுறையில் நீர்த்துப் போனது, ‘மாறுகிற சாகுபடி’ என்ற கலாச்சாரத்துடன் தொடர்ச்சியின்மை ஆகியவை இந்தத் தோல்விக்குப் பின் இருந்த காரணங்கள் என அடையாளப்படுத்த முடியும்.

தொழிலாளர் வர்க்க இயக்க அரங்கில் புதிதாக எழுந்த யதார்த்தத்துக்கு எதிரான பழைய அல்லது ஓரளவுக்கு காலாவதியாகிப் போன அகநிலைவாதம் என்ற முரண்பாட்டை நாம் எதிர்கொண்டோம். இந்த விவாதப் போக்குக்குள் ஜனநாயகத் தொழிலாளர் சங்க நடைமுறை மூலம் சென்னையில் அம்பத்தூர் தொழிற்பேட்டையை மய்யமாகக் கொண்டு சிறிய ஆலைத் தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்ட, தொழிற்சங்க தொழிற்முறை யுடன் இணைந்த ஒரு புதிய போக்கு படிப்படியாக எழுந்தது.தேசத்துரோக சட்டம்:

இன்றைய மாற்றுக் கருத்துள்ளோருக்கு எதிராக நேற்றைய காலனிய காலத்து ஆயுதம்

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து இந்திய அரசு சுவீகரித்துக் கொண்ட பிரிவு 124எ. ஆனால் பிரிட்டன் எப்போதோ, தேசத்துரோக சட்டத்தை ரத்து செய்துவிட்டது. பிரிட்டிஷ் ஆட்சியின் கடைசி தேசத்துரோக வழக்கு விசாரணை இந்தியா சுதந்திரம் பெற்ற 1947ல்தான் நடந்தது.

இந்தச் சட்டப்பிரிவு சொல்கிறது: ‘சட்டப்படி இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள அரசாங்கத்துக்கு எதிராக வெறுப்பை அல்லது அவமதிப்பை அல்லது அதற்கு எதிரான தூண்டுதலை அல்லது அதன் மீது பற்று இல்லாமல் போவதை தூண்ட முயற்சிப்பதை வாய்மொழியாகவோ, எழுத்து மூலமாகவோ குறிப்புணர்த்துதல் மூலமாகவோ காட்சிப்படுத்துதல் மூலமாகவோ எவர் ஒருவர் செய்தாலும், செய்ய முயன்றாலும், அது தேசத் துரோகம்.’

லோகமான்ய திலகருக்கு எதிரான தேசத்துரோக வழ க்கு விசாரணையில் நீதிபதி, பற்றுக்கு விரோதம் என்பதை, பற்று இல்லாமல் இருப்பது என விவரிக்கிறார் இந்த காலனிய மனோபாவம் ஓர் அரசாங்கத்திடம் விசுவாசம் இல்லாமல் இருப்பதை ஒரு குற்றமாக மாற்றுகிறது. அதன்படி அரசாங்கத்தின் கொள்கைகள்பால் விமர்சனம் கொண்டுள்ளவர்களை அரசாங்கத்துக்கு எதிராக மக்களைத் திரட்டுபவர் களை தேசவிரோதிகள் என முத்திரை குத்த முடியும்.

எம்.கே.காந்தி தேசத் துரோக சட்டம் பற்றி சொன் னார்: ‘நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டுள்ள, என் மீது சுமத்தப்பட்டுள்ள 124எ பிரிவு, குடிமக்களை, சுதந்திரத்தை நசுக்குவதற்காக இந்திய தண்டனைச் சட்டத்தில் உருவாக்கப்பட்ட அரசியல் ஷரத்துக் களிலேயே, இளவரசன் போன்றது.’ காலனிய இந்தியாவில் குடிமக்களின் சுதந்திரத்தை ஒடுக்க வடிவமைக்கப்பட்ட ஒரு சட்டம், குடிமக்களின் உரிமைகளை நசுக்குவதற்காகத் தானே இன்றைய சுதந்திர இந்தியாவில் தொடரப்படுகிறது?

1951ல் நடந்த ஒரு நாடாளுமன்ற விவாதத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர் லால் நேரு சொன்னார்: ‘இந்திய தண்டனைச் சட்டத்தில் பிரிவு 124எ வை எடுத்துக் கொள்ளுங்கள். என்னைப் பொறுத்தவரையில் நாம் உருவாக்க உள்ள சட்டங்களில் இந்தக் குறிப்பிட்ட ஷரத்து நடைமுறைக் காரணங்களாலும், வரலாற்றுக் காரணங்களாலும் இடம் பெறவே முடியாது. ஏனெனில் இது மிகவும் எதிர்ப்புக்குரியது. அருவருக்கத்தக்கது. எவ்வளவு சீக்கிரம் இதை நீக்குகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.’ எப்படியாயினும் அருவருக்கத்தக்க இந்த சட்டத்தை இந்தியா விட்டொழிக்கவில்லை. அரசியலில் மாறுபட்ட கருத்து கொண்டோர் மீது இந்தச் சட் டம் தொடர்ந்து பிரயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

1961ல், உச்சநீதிமன்றம் வன்செயல்களில் ஈடுபடுவோர் மீது மட்டுமே இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று சொன்னது. ஆனாலும் கூட அந்தச் சட்டத்தின் அரசியல் குணாம்சம் காரணமாக மாற்றுக் கருத்துடையோரை தண்டிக்கும் ஆயுதமாக மாறாமல் இருந்து வருகிறது.

சமீபத்தில் மக்கள் சிவில் உரிமைக் கழக செயல்வீரரும், முற்போக்கு பெண்கள் கழகத் தின் அகில இந்திய துணைத் தலைவருமான ரதிராவ் மீது கர்நாடக அரசு இந்தச் சட்டத்தின் கீழ் வழக்கு போட்டது. பிறகு நிர்ப்பந்தம் காரணமாக அதை திரும்பப் பெற்றது. சில வருடங்கள் முன்பு அத்வானிக்கு கருப்புக் கொடி காட்டிய மாணவர் கழக செயல் வீரர்கள் மீது பீகாரின் ஆர்ஜேடி அரசாங்கம் இந்தச் சட்டத்தை பிரயோகித்தது. இப்போது பினாயக் சென் மீது தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு தேசத் துரோக சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டியதன் அவசர அவசியத்தைக் கோரு கிறது.

பினாயக் சென்னிற்கு தண்டனை வழங்கப்பட்டதைக் கண்டித்து ஜனவரி 3 அன்று மதுரையில் கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது. மாலெ கட்சி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், பெண்கள், பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டனர். உச்சநீதிமன்றம் தலையிட கோரிக்கை எழுப்பப்பட்டது.

கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி:
ஒரு சித்திரம்

கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி உருவாக்கம்

தொண்டைமான் மன்னர்களின் ஆட்சியில் இருந்த புதுக்கோட்டைத் தனியரசு (சமஸ்தானம்) 03.03.1948ல் ஒன்றுபட்ட இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

1974 ஜனவரி 14 அன்று திருச்சி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தமிழகத்தின் 15வது மாவட்டமாக புதுக்கோட்டை உருவானபோது, தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கந்தர்வகோட்டை பிரிக்கப்பட்டு புதுக்கோட்டை வருவாய் கோட்டத்துடன் இணைக்கப்பட்டது.

தமிழகத்தின் தொகுதி மறுசீரமைப்பில் கந்தர்வ கோட்டை (தனி) தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.

178 கந்தர்வகோட்டை (தனி) தொகுதி

மக்கள் தொகை: 2,24,602

தாலுக்காக்கள்: 3 (கந்தர்வ கோட்டை, குளத்தூர், கரம்பக்குடி)

ஒன்றியங்கள்: 3 (கந்தர்வ கோட்டை, குன்றாண்டார்கோவில், கரம்பக்குடி)

ஊராட்சிகள்: 93

பேரூராட்சிகள்: 2 (கரம்பக்குடி, கீரனூர்)

டிசம்பர் 2010 வரை வாக்காளர்: 1,48,701 (ஆண் 74189 + பெண் 70547 + புதிது 3965)

நாடாளுமன்ற தொகுதி: 24, திருச்சிராப்பள்ளி

விவசாயம்

கிராமப்புற பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்கு மிக முக்கியமானது. அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகளாலும் நிலப்பிரபு பாதை முதலாளித்துவ வளர்ச்சியாலும், விவசாயப் பொருளாதாரத்தில் தேக்கமும், பின்னடைவும் அதிகரித்து வருகிறது.

நிலப்பிரபுக்கள், பணக்கார விவசாயிகள்

தொகுதியில் நிலப்பிரபுக்கள், பணக்கார விவசாயிகள் என்றாலே அது வெளிமாவட்ட, மாநிலத்தை சேர்ந்த, பெரும்பகுதியான நிலத்தை சுருட்டி போட்டுள்ள 100க்கும் மேற்பட்ட பண்ணை முதலாளிகள்தான். தொகுதியை சேர்ந்தவர்கள் எண்ணிக்கை சொல்லும் அளவிற்கு இல்லை.

நடுத்தர விவசாயிகள்

தொகுதியில், நடுத்தர விவசாயிகளின் எண்ணிக்கை அவ்வளவு அதிகம் இல்லை. அதிலும் முக்குலத்தோர், உடையார், வெள்ளாளர் என பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள்தான் அதிகம், விரல் விட்டு சொல்லும் அளவுக்குதான் தலித் மற்றும் முத்தரையர் எண்ணிக்கை உள்ளது. பசிப்பயிர் (சிறுதானிய முறை) உற்பத்தி செய்யும் அளவுக்குக் கூட இவர்களது நிலைமை இல்லை. பொருளாதார நெருக்கடி தாங்காமல் பணப்பயிருக்குத் தாவி பயிர்க் கடன், வங்கிக் கடன் கிடைக்காமல், இடுபொருட்கள் (விதை, உரம், பூச்சிக்கொல்லி) விலை ஏற்றத்தால், விளைபொருளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால் மீளமுடியாத துயரில் சிக்கியுள்ளனர்.

இவர்கள் விவசாயத்தின் மீது நம்பிக்கையில்லாமல் பிள்ளைகளை படிக்க வைத்து வெளிநாட்டுக்கு ஏதோ வேலைக்கு எப்படியாவது அனுப்புவது தொடர்கிறது.

ஏழை விவசாயிகள்

துண்டுதுக்காணி நிலத்தை வைத்து கொண்டு சிறுவீத விவசாய உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஏழை விவசாயிகள்தான் தொகுதியில் பெரும் பகுதி.

இதிலும் பெரும்பகுதி தலித் முத்தரையர் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். இவர்களும் பாசன வசதி இல்லாமல் 1 மணிக்கு ரூ.40 வரை கொடுத்து தண்ணீர் பாய்ச்சும் நிலைமை இருக்கிறது. சிறிய அளவு நிலம் என்பதால் உழவு மற்றும் இதர வேலைகளுக்கு கூடுதல் செலவு செய்வதாலும் இவர்களுக்கு மிச்சம் என சொல்வதற்கு ஏதுமில்லை. விவசாயம் செய்யக் கடன் வாங்கி கந்து வட்டியில் சிக்கி மீளமுடியாமல் தவிக்கின்றனர்.

இவர்களது குடும்பத் தேவையில் பெரும் பகுதி காவிரி பாசனப் பகுதிக்கு வேலைக்கு செல்வது, மரம் வெட்டுதல், கட்டுமானப் பணிக்கு செல்வது, ஆடு, மாடு, கோழி வளர்த்தல் மூலம் ஈடுகட்டப்படுகிறது. பெரும்பகுதி இளைஞர்கள். திருப்பூர், கோவை, சென்னை என வேறு ஊர்களுக்கு வேலை தேடி சென்றுவிடுகின்றனர். இவர்கள் விவசாய வேலைகளில் ஈடுபடுவதில்லை. ஏழை விவசாயிகள் எப்படி வாழ்க் கையை நகர்த்துவது என தெரியாமல் தவிக்கின்றனர்.

விவசாயத் தொழிலாளர்கள்

உழைப்பை விற்றே பிழைப்பு நடத்தும் இவர்களுக்கு வருடத்தில் 3 மாதங்கள் கூட பகுதியில் வேலை கிடைப்பதில்லை. எனவே 6 மாதங்களுக்கு மேல் வெளி மாவட்டங்களில், விவசாயம் சாராத வேலைகளுக்குச் செல்கின்றனர். குளத்தூர் ஒன்றியத்தில் விராலிமலை, திருச்சி பக்கமும் கந்தர்வகோட்டை, கரம்பக்குடி பகுதியினர் தஞ்சை, பட்டுக்கோட்டை பகுதிக்கும் செல்கின்றனர். ஆடு மாடு, வளர்த்தல் இவர்களுக்கு ஓரளவு கை கொடுக்கிறது.

இவர்களில் தலித் மற்றும் முத்தரையர் பெரும் பகுதியாகவும் முக்குலத்தோர், இதர பிற்படுத்தப்பட்டோர் ஒரு பகுதியாகவும் இருக்கின்றனர்.

தேசிய உணவுப் பாதுகாப்பு லட்சியத் திட்டம்

உணவு தானியங்கள் மற்றும் நெல் உற்பத்தித் திறனில் தேசிய சராசரியை விடக் குறைவாக உற்பத்தித் திறன் கொண்ட மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்கள் என்று அடையாளப்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் அதுபோன்ற 5 மாவட்டங்களில் புதுக்கோட்டையும் ஒன்று.

பாசன வசதி

ஆழ்குழாய் கிணறு போட ரூ.4 லட்சம் வரை செலவாகிறது. வறிய மக்கள் யோசித்துக் கூடப் பார்க்க முடியாது. எனவே, சாகுபடி செய்யவும் முடியாமல் நிலத்தை விடவும் முடியாமல் தத்தளிக்கின்றனர்.

கால் நடை வளர்ப்பு

தொகுதியில் கால்நடை வளர்ப்புக்கு, கிராமப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய இடமுண்டு. ஆடு, மாடு வளர்ப்பதை முக்குலத்தோர், வெள்ளாளர், உடையார், கோனார், தலித், முத்தரையர் என சாதி பாகுபாடு இன்றி அனைவரும் செய்கின்றனர்.

அரசாங்கம், ஆடு மாடு வளர்க்கக் கடன் வழங்குவது, கால்நடை மருத்துவமனை, மருந்தகம், மருத்து வர்கள், உயிர்காக்கும் மருந்துகளை அதிகப்படுத்துவது கிடையாது. மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களை, வசதி படைத்தோர் ஆக்கிரமிக்க விட்டுவிடுகிறது, எளிய மக்களை தடுக்க வெள்ளாடு வளர்க்கத் தடை உத்தரவு போடுவது தொடர்கிறது.

தொகுதியில் வரலாற்றுரீதியாக ஆடு, மாடு வளர்ப்பதை பிரதானமாக கொண்ட கிராமங்களுக்கு (சுந்தம்பட்டி, துடுகப்பட்டி, புதுப்பட்டி) பட்டி என முடியும் பெயர்களாக இருந்து வருகிறது. தொகுதியில் மட்டும் சுமார் 210 பட்டிகள் இருக்கின்றன. இதில் இருந்தே, தொகுதியே வறிய மக்களின் தொகுதி என்பது புலப்படுகிறது.

நாட்டு கட்டமைப்பு முறை (அம்பலம்)

அனைத்து சாதி ஏழைகளையும் பெரும் பான்மையாக கொண்ட பட்டிகள் நிறைந்த தொகுதியில் ஊர் என முடியும் கிள்ளனூர், தெம்மாவூர் மின்னாத்தூர், குளத்தூர், அண்டனூர் என்கிற பகுதிகளில் நாட்டு அம்பல முறை இன்னும் நிலவுகிறது. நிலப்பிரபுத்துவ மிச்சசொச்சமாக சாதிய கட்டமைப்பு என்ற அநீதி தொடர்கிறது.

தலித், முத்தரையர் நிலைமைகள்

தேனீர் கடைகளில் தனிக்குவளை, தனிச் சுடுகாடு, முடிதிருத்தத் தடை, பொதுக் கோவில், குளம், ஊர் சொத்து ஆகியவற்றில் உரிமை பறிப்பு, மீன்பாசி குத்தகை, பொது மரம் ஏலம் எடுத்தல், பொது இடத்தை புறம்போக்கை அனுபவிக்கத் தடை, தலித் மக்கள் பறையடிக்க, பிணம் எரிக்க, பாடை கட்ட, திருமணத்திற்கு ஆடுகட்ட, கோழி போட நிர்ப்பந்திக்கப்படுவது ஆகியவை இன்னும் நீடிக்கின்றன.

சாதி மறுப்பு திருமணமோ, சம்பிரதாய முறையில் மாற்றமோ வந்துவிடக் கூடாது என சாதிய தப்பெண்ணத்தின் காரணமாக உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த உயர்சாதி ஏழைகளும் அவற்றைப் பாதுகாக்கிறார்கள்.

அனைத்து சாதிய தப்பெண்ணங்களையும் கடந்து, உரிமை மறுக்கப்பட்ட குளத்தில் 100 நாள் வேலையில் ஒன்றாக நிற்கிறார்கள். கூலி குறைவுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்கள். மோசடியைத் தடுக்க வேலை நாளை அதிகரிக்க வேலை நிறுத்தமும் செய்கிறார்கள்.

ரேசன் கடை, அரசு மருத்துவமனை, அரசுப் பள்ளி, கல்லூரி, 2 ஏக்கர் நிலம், 5 சென்ட் வீட்டுமனை, 35 கிலோ அரிசி குடும்ப அட்டை, முதியோர் உதவி தொகை, ஆதரவற்றோர் ஓய்வூதியம், விதவைகள் ஓய்வூதியம் என பல்வேறு கோரிக்கைகளிலும் ஒன்றாகவே நிற்கிறார்கள்.

உற்பத்தி சாராத செலவினங்கள்

விவசாய நெருக்கடியும், வேலையின்மையும் அதிகரித்து வரும் சூழலில் உற்பத்திக்கான செலவை விட, உற்பத்திசாரா செலவு அதிகரிக்கிறது.

குடும்ப விழாக்கள், திருமணத்திற்கு பெண் பார்ப்பது எனத் துவங்கி, வீடுபார்ப்பது, நிச்சயதார்த்தம், திருமண அழைப்பிதழ், மேளதாளம், வெடிப்பொருட்கள், சாலைகளை அடைக்கும் டிஜிட்டல் பேனர்கள், சுவரொட்டிகள், மிகப்பெரிய விருந்து உபசரிப்பு ஒருபுறம்.

மறுபுறம் வரதட்சணைக் கொடுமை, பணக்காரர், ஏழை என எவரையும் விட்டு வைக்கவில்லை. திருமணம் என்றால் குறைந்தது ரூ.3 லட்சம் தேவை. பாத்திரம், கட்டில், பீரோ, நகை, இருசக்கர வாகனம், 10 ஆண்டுகளுக்கான துணிகள் என பட்டியல் நீள்கிறது. வசதிக்கு ஏற்றாற்போல் அனைத்தும் அதிகரிக்கும். இவற்றை செய்ய இயலாத வறிய குடும்பங்களின் பெண்கள், திருமணம் ஆகாமலே வயதை கடந்து இருப்பது, திருமணம் ஆனவரை 2வது, 3ஆவது மனைவியாக திருமணம் செய்து கொள்வது, வயது முதிர்ந்தவரை திருமணம் செய்து கொள்வது என நடக்கிறது.

வரதட்சணை கலாச்சார சீரழிவு மட்டும் அல்ல. பெண்ணைப் பொருளாக்கி பேரம் பேசுவது மட்டுமல்ல. அது ஏழை விவசாயிகளை, விவசாயத் தொழிலாளர்களை மீளமுடியாத கடன் பொறியில் தள்ளுகிறது.

திருமணத்திற்காக நிலத்தை வீட்டை விற்பது அடகு வைப்பது, வட்டிக்குக் கடன் பெற்று திருப்பிக் கொடுக்க முடியாமல் அனைத்தையும் இழந்து வீதிக்கு வருவது. தற்கொலை செய்வது, வரதட்சணை போதவில்லை என பெண்கள் படும் சித்தரவதை பெண்கள் கொலை, தற்கொலை, விவாகரத்து என அடுத்தடுத்த பிரச்சனைகள் தொடர்கின்றன.

மது அருந்தும் பழக்கம்

தொகுதியில் மருத்துவமனை, பள்ளி, கால்நடை மருந்தகம் இவற்றை எல்லாம் விட சாராயக் கடை (டாஸ்மாக்) கூடுதலாக இருக்கிறது. கடை திறந்ததன் நோக்கத்தை பூர்த்தி செய்யும் விதமாக கிராமப்புற விவசாயக் கூலித் தொழிலாளர், மாணவர், இளைஞர் ஆகியோரின் சிறிதளவு வருமானத்தையும் பறிக்கிறது.

இடஒதுக்கீடு

கந்தர்வகோட்டை கள்ளர்கள், தலித் மக்களின் வாழ்க்கையில் கல்வி, அரசு வேலை வாய்ப்பு பொருளாதாரம் சமூக நிலை ஆகியவற்றில் ஒப்பீட்டுரீதியான முன்னேற்றம் ஏற்பட இடஒதுக்கீடு பங்கு வகித்தது. முத்தரையர் சமூகத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை.

வேலை வாய்ப்பு

வெள்ளாள விடுதியில், 630 ஏக்கர் நிலத்தில், 100 பேருக்கு கூட நிரந்தர வேலை கொடுக்க முடியாத அரசு மாநில எண்ணெய் வித்து பண்ணை.

100 நாள் வேலை கூலியை விட மிகக் குறைந்த கூலிக்கு இளம் பெண்களை காலை 7 மணிக்கே அழைத்து வந்து மாலை 5 மணி வரை உழைப்பைச் சுரண்டி, கொழுக்கும் முந்திரி தொழிற்சாலைகள் 5.

மாதம் ரூ.600 சம்பளம் வரை கொடுத்து எந்த தொழிலாளர் நலச் சட்டங்களையும் பின்பற்றாமல், நூற்றுக்கணக்கான இளைஞர்களை 15 ஆண்டுகள் வேலை வாங்கி கொண்டு திடீரென ஆலையை மூடிவிட்டுச் சென்ற சித்தார் இன்டஸ்ட்ரீஸ். அடுத்த வேலைக்கு வழியின்றி அல்லல்படும் தொழிலாளர்கள்.

கல்லாக்கோட்டையில், விவசாயத்தை அழித்து, இயற்கை வளங்களை கொள்ளையடிக்க வந்த ‘கால்ஸ்’ சாராய ஆலை, இப்போது, பகுதியின் சில நூறு பெண்கள் இளைஞர்களின் உழைப்பைச் சுரண்ட ஆரம்பித்திருக்கிறது. குறைந்த கூலி, போனஸ் இன்மை, கடுமையான உழைப்பு என தொழிலாளியை வதைக்கும் சாராய ஆலையை நிறுவ கடும் முயற்சி எடுத்த திமுக, காங்கிரஸ், தேர்தல் நாடகமாடிய அதிமுக ஆகியோரை மறந்தா விடுவார்கள் மக்கள்?

100 பேருக்குக் கூட வேலை வாய்ப்பு தராத, 100 நிலப் பண்ணைகள்.

குன்றாண்டார்கோயில் பகுதியில் தொழிலாளர்களை மிருகங்களைப் போல் நடத்திய மலையடி.

இதுதான் தொகுதியில் தொழில்மயம்

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்

தொகுதியின் மூன்று ஒன்றியங்களில்
மொத்த குடும்பங்கள் 63,950.
100 நாள் வேலை பதிவு பெற்ற குடும்பங்கள் 49021.
100 நாள் வேலை பதிவு பெறாத குடும்பங்கள் 14929.
மொத்த வாக்காளர்கள் 1,81,954.
100 நாள் அட்டை பெற்றவர்கள் 88239.
அட்டை பெறாதோர் 93,715.
உழைக்கும் மக்கள் 80%.
100 நாள் அட்டை பெற்றவர்கள் 40%.
வேலை, கூலி 75% கிடைத்துள்ளது.
வேலையில்லா காலப்படி யாருக்கும் தரப்படவில்லை.

அரசியல் நிலைமை

1,2,3 என்ற வரிசையில் அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகள் உள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆதிக்கம் இன்னும் தொடர்கிறது. அதிமுக, திமுக கட்சிகள் சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் செல்வாக்கு பெற்றவையாக உள்ளன.

இந்தக் கட்சிகளில் கள்ளர் ஆதிக்கம் நிறைந்திருக்கிறது. பொருளாதாரரீதியில் முன்னேறியிருந்தாலும் அரசியல் செல்வாக்கு என்றால் தலித் மற்றும் தலித் அல்லாத உடையார், வெள்ளாளர், கோனார், முத்தரையர் அனைவரும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றனர்.

தொகுதி முழுவதும், இடதுசாரி அரசியலுக்கும் ஓர் இடம் உண்டு. தலித் அடையாள அரசியலும் உள்ளது. தனித்துவத்தோடு சுதந்திரமாகக் களம் கண்டால் தொகுதியின் இடதுசாரி அரசியல் வளர முடியும்.

கல்வி

ஒரு லட்சம் மக்கள் தொகையை நெருங்கும் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில், 2 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 5 உயர்நிலைப் பள்ளிகள்தான் உள்ளன. ஏழைகள் எட்டிக் கூடப் பார்க்க முடியாத டி.ஆர். பாலுவின் கிங்ஸ் தனியார் கல்லூரிகள் உள்ளன. கீரனூர் பகுதியில், பாலிடெக்னிக், ஆசிரியர் பயிற்சிப் பள்ளி என தனியார் கல்லூரிகள் உள்ளன.

அரசு பொறியியல் கல்லூரியோ, கலை கல்லூரியோ ஆசிரியர் பயிற்சி நிறுவனமோ தொழிற்பயிற்சி நிலையமோ தொகுதிக்குள் வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை.

மருத்துவம்

ஒரு லட்சம் மக்களுக்கு ஒரு தாலுக்கா மருத்துவமனை. கரம்பக்குடி தாலுக்காவில் அது தாலுக்கா ஆன பிறகும் ஆரம்ப சுகாதார நிலையமே தொடர்கிறது. தொகுதி முழுதும் 20,000 பேருக்கு ஓர் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் தனியார் மருத்துவமனைகள் கூட தொகுதிக்குள் இல்லை. அவசரம் என்றால் தஞ்சை, திருச்சி, பட்டுக்கோட்டை செல்ல வேண்டும்.

போக்குவரத்து

கீரனூர் கந்தர்வகோட்டை கரம்பக்குடி பகுதியில் போக்குவரத்துப் பணிமனை, விரிவுபடுத்தப்பட்டப் பேருந்து நிலையம், பொது மக்களும், மாணவர்களும் காத்துக் கிடக்காமல் கண்ணீர் வடிக்காமல், நெரிசலில் சிக்கி தவிக்காமல் செல்ல கூடுதல் பேருந்துகள் இல்லை.

காவேரி கூட்டு குடிநீர் திட்டம்

காவேரி குடிநீர் திட்டத்தை தொகுதி முழுவதும் விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் பிரச்சனைக்கு முடிவு கட்ட வேண்டும்.

வளர்ச்சி, முன்னேற்றம் இப்படி இருந்தால் நல்வாழ்க்கை எப்படி இருக்கும்?

தமிழகத்தில் வளர்ச்சி, முன்னேற்றம் பற்றி வாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த சட்டமன்ற தொகுதியில் விவசாயத் தொழிலாளர் ஏழை விவசாயி கள் வாழ்க்கையில் வளர்ச்சி முன்னேற்றம் உள்ளதா?

சில குறிப்பிட்ட கேள்விகள் நமக்கு உண்மை நிலைமையைக் காட்டும். எத்தனை விவசாயிகளிடம் டிராக்டர், கதிர் அறுக்கும் இயந்திரம், கதிர் அடிக்கும் இயந்திரம், குபேட்டா, கரும்பு வெட்டும் இயந்திரம் ஜே.சி.பி. இயந்திரம், களை எடுக்க, அரிசி போடும் இயந்திரம் இருக்கின்றன?

தொகுதியில் தரமான ஓட்டல், டிப்பார்ட் மெண்டல் ஸ்டோர், சினிமா தியேட்டர், 24 மணி நேரமும் இயங்கும் தனியார் மருத்துவமனை, ஏ.டி.எம். சென்டர், ஏ.டி.எம். கார்டு வைத்திருப்போர் வங்கி கணக்கு வைத்திருப்போர், வங்கிக் கிளைகள், லேப் டாப் வைத்திருப்போர், கணிணி இயக்கத் தெரிந்தோர், பிரவுசிங் சென்டர் எத்தனை?

சொத்துக்கள், சொந்த இருசக்கர வாகனம், அடுக்குமாடி குடியிருப்புகள், கழிப்பறை வசதியுள்ள வீடுகள், பொது கழிப்பறை, பொது மக்கள் பூங்கா, பயணியர் விடுதி, தனியார் விடுதிகள் எத்தனை?

அய்ஏஎஸ், அய்பிஎஸ், படித்தோர் எத்தனை பேர் தொகுதியில் உள்ளனர்? வர்த்தகத்தையும், தொழிற் நிறுவனங்களையும் துவங்கி முன்னேற்றம் அடைந்தவர் என எத்தனை பேர்? திருச்சி, தஞ்சை, புதுகை, பட்டுக்கோட்டை சாலையை தவிர கிராமப்புற சாலைகள் தரமானதாக உண்டா? கிராமப்புறங்களில் பேருந்து வசதி குறைவின்றி மக்கள் பிற கிராமங்களுக்கு சென்று வருவதுண்டா?

1990 முதல் 2010 வரை தொகுதியில் பகுதியில் ஏற்பட்ட வளர்ச்சி முன்னேற்றம்தான் என்ன? எந்த முன்னேற்றமும் இல்லை அல்லது மிகவும் சொற்பமான வளர்ச்சி என்றே பதில் சொல்ல முடியும்.

தமிழ்நாட்டில் வளர்ச்சி முன்னேற்றம் பற்றிய தர வரிசை பட்டியலில் 234 தொகுதிகளிலும், கந்தர்வ கோட்டை கடைசி இடங்களுக்கான போட்டியில் இருக்கிறது. ஆனால், எத்தனையோ, நாடாளுமன்ற சட்ட மன்ற உறுப்பினர்களை தொகுதி பார்த்துவிட்டது. பகுதியைச் சேர்ந்த திமுக மாரியப்பா, அதிமுக நெடுஞ்செழியன் என இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் குமார் இந்த பகுதிக்காக, தொகுதிக்காக கொண்டு வந்தது என்ன? இவர்களது காலத்தில் என்ன வளர்ச்சி, முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என பரிசீலித்தால், பூஜ்ஜியம்தான் மிச்சம்.

வளர்ச்சி முன்னேற்றம் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடும்பத்தில் ஏற்பட்டுள்ளது. கழகங்களை சேர்ந்தவர்களுக்கும், கட்சிக்காரர்களுக்கும், ஏற்பட்டுள்ளது. வாக்களித்த மக்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

விவசாயத் தொழிலாளர் உள்ளிட்ட கிராமப்புற தொழிலாளர் உழைக்கும் விவசாயிகள் நலன் காக்க, சிறுவீத விவசாயப் பொருளாதாரத்தைப் பொருளாதார ரீதியில் எடுபடக் கூடியதாக மாற்ற, அரசுக்கெதிராக அதன் விவசாயக் கொள்கைகளுக்கெதிராக போராட்டங்கள் நடத்த வேண்டும்.

கோவையில் அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பு திறந்த வெளிக் கருத்தரங்கம்

நாடு காக்க, மக்கள் வாழ்வு காக்க தொழிலாளர் வர்க்கம் எழுவோம்!


நாடே நாமாவோம்! நாட்டை நமதாக்குவோம்!

கோவையில் ஜனவரி 25 அன்று அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பின் திறந்த வெளிக் கருத்தரங்கம் நடந்தது. முதன்மையாக மேட்டுப்பாளையம் தொகுதி மக்களிடம் பிரிக்கால் தொழிலாளர்கள் நிதி வசூல் செய்து கருத்தரங்கை நடத்தினர். பிரிக்கால் மற்றும் அய்டிபிஎல் தொழிலாளர், பொது விநியோகத் துறையின் சுமை தூக்கும் தொழிலாளர்கள், சுபா பிளாஸ்டிக் தொழிலாளர்கள், விசைத்தறித் தொழிலாளர்கள், கோவையின் இடதுசாரி, முற்போக்கு சக்திகள், நாமக்கல், சேலம், மதுரை, கரூர், சிவகங்கை மாவட்ட கட்சி முன் னணிகள், மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள் என 1000 பேர் வரை கலந்துகொண்டனர். பெரியநாயக்கன்பாளையம் பகுதிக் கமிட்டிச் செயலாளர் தோழர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.

கருத்தரங்கில் பேசிய இகக மாலெ பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் நாளை ஜனவரி 26 குடி யரசு தினம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ராணுவ டாங்குகளின் அணிவகுப்புக் காட்டப்படும். பிரதமர் அணிவகுப்பு மரியாதை ஏற்பதும் காட்டப்படும். ஆனால் மக்க ளின் துயரங்கள், விவசாயிகளின் தற்கொலைகள் காட்டப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.

இந்தியா, அமெரிக்க ஏகாதிபத்திய ஒழுங்கமைப்போடு இணைக்கப்பட்டதால் கோடிக்கணக்கான இந்திய மக்கள் பட்டினிச் சாவுக்குள் தள்ளப்படுகின்றனர். விலை உயர்வு, வேலையின்மை, ஊழல்கள், விவசாயிகள் கடன் சுமை ஆகியவை மக்களை மரணக்குழிக்குள் தள்ளுகின்றன. இதற்கு எதிராக அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பு விடுத்துள்ள பிப்ரவரி 11 - மார்ச் 11 நாடு தழுவிய பிரச்சார இயக்க அறை கூவலை தொழிலாளர்கள் வெற்றிகரமாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். தமிழகத்தில் நிலவும் திமுக-அதிமுக இருதுருவ அரசியலைத் தகர்த்து தொழிலாளர் வர்க்கப் போராட்டக் குரல் சட்டமன்றத்தில் எதிரொலிக்க உறுதி செய்யுங்கள் என்றார்.

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் குமாரசாமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை செய்யும் 10,000 சுமை தூக்கும் தொழிலாளர்கள் பைசா கணக்கில் இன்னமும் வாங்கும் கூலிக்கு எதிராக பத்து நாட்கள் நடத்திய வேலை நிறுத்தத் துக்கு ஆட்சியாளர்கள் பதில் சொல்ல வேண்டும் என்றார். தமிழகத்தில் இரு துருவ அரசியலிலிருந்து விடுபட்டு தொழிலாளர் வர்க்கம் சுதந்திரமான அரசியல் சக்தியாக எழ வேண்டும் என்றார்.

கேரளாவின் இடதுசாரி ஒருங்கிணைப்புக் (எல்சிசி) குழுவின் தோழர் ஹரிஹரன் கேரளாவின் ஆளும் கட்சி போராடும் மக்கள் இயக்கங்கள் மீது ஒடுக்குமுறை ஆயுதத்தைப் பிரயோகிக்கிறது. இந்தச் சூழலில் இடதுசாரி சுதந்திர அரசியல் பாதையை உருவாக்க எல்சிசி பாடுபடுகிறது என்றார்.

லால் நிஷான் கட்சி (லெனி னிஸ்ட்)ன் உதய் பட், தொழிலாளர் வர்க்கம் மத்தியில் தத்தா சமன்த் ஆற்றிய பணியைப் பற்றி எடுத்துரைத்தார். இந்திராகாந்தி படுகொலையை அடுத்து நடந்த தேர்தலில் நாடு முழுதும் ராஜீவ் காந்தி 400 இடங்களுக்கு மேல் பெற்றார் என்றும், அந்த சூழலிலும் முதலாளித்துவ அரசியலை எதிர்த்து மும்பை நாடாளுமன்றத் தொகுதியில் தத்தா சமன்த் வெற்றி பெற்றார் என்றும் எடுத்துரைத்தார். தமது கட்சி மகாராஷ்டிராவில் சிதறிக் கிடந்த பஞ்சாலைத் தொழிலாளர்களைத் திரட்டி நடத்திய தொடர் போராட்டத்தால் மும்பையில் பஞ்சாலை நிலத்தின் மீது தொழிலாளர் உரிமை நிலைநாட்டப்பட்டது என்றார்.

மாலெ கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் ஜனவரி 25, மொழிப் போர் தியாகிகள் தினம், மொழிப் போர் காங்கிரஸ் ஆட்சியை அகற்றியது. இன்று ஊழல், துரோக திமுக ஆட்சியை தொழிலாளர் வர்க்கம் ஆட்சியை விட்டு அகற்றும் என்றார்.

தோழர் ஜானகிராமன் வர வேற்புரை ஆற்றினார். தோழர் பாலசுப்ரமணியன் தியாகிகளுக்கு அஞ்சலி தீர்மானம் முன்வைததார். அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பின் டில்லி பிரகடனத்தை தோழர் என்.கே.நடராஜன் வாசித்தார். தோழர் கிருஷ்ணமூர்த்தி தீர்மானங்கள் முன்வைத்தார். தோழர் குருசாமி நன்றி கூறினார்.

மாணவர் இளைஞர் கலந்துரையாடல் கூட்டம்

ஜனவரி 30 அன்று மாணவர் இளைஞர் கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் தஞ்சை, நாகை, கடலூர், நாமக்கல், திருவள்ளூர், மதுரை, சென்னை கோவை, காஞ்சிபுரம், குமரி, திருப்பூர், சேலம் என 12 மாவட்டங்களை சேர்ந்த மாணவர் இளைஞர் 100 பேர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் அரசியல் சூழல் பற்றிய விசயங்கள் பற்றி மாணவர்கள் கருத்துக்களை முன்வைத்தனர். கடப்பாரை செரிக்காது, ஊழல் கறை வெளுக்காது என்ற சிறு வெளியீட்டை மாணவர் இளைஞர் மற்றும் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற மாலெ கட்சி பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா மாணவர்கள் படிக்கும் இடங்களில், வெளியுலகில் நடக்கின்ற அநீதிகள் மீது இயல்பாக சீற்றம் கொள்கிறார்கள் என்றும் இத்தகைய மாணவர் இளைஞர் சீற்றம் அரசியல் மாற்றத்துக்கான, சமூக மாற்றத்துக்கான உணர்வாக மாற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். இக்கூட்டம் மாண வர், இளைஞர் மத்தியில் அமைப்பு கட்டமைப்பை உருவாக்கி, தமிழக அரசியலில் மாணவர் போராட்ட நீரோட்டமாக வளர வேண்டும் என்றார்.

மேலும் சீற்றம் என்பதோடு தர்க்கரீதியான சிந்தனையையும் இணைக்க வேண்டும் என்றும், நம்பி க்கை, துணிச்சல், வைராக்கியம் என்ற நற்பண்புகளை பலப்படுத்த வேண்டும் என்றும் நவீன முற்போக்கு கருத்துக்களை தம் குடும்பத்திற்குள் எடுத்து செல்ல வேண்டும் என்றும் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோர் மத்தியில் மாற்றத்திற்கான முற்போக்கு கருத்துக்களை கொண்டு செல்ல வேண் டும் என்றும் வலியுறுத்தினார்.

கோழிக்கோட்டில் எஅய்எல்சி கருத்தரங்கம்

2011 ஜனவரி 22 அன்று கோழிக்கோட்டில் இடது ஒருங்கிணைப்புக் குழு கேரளா ஏற்பாடு செய்திருந்த அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பின் கருத்தரங்கமும் 1000 பேர் பங்கு கொண்ட பேரணியும் நடைபெற்றன.

இகமா(பஞ்சாப்) கட்சியின் செயலாளர் தோழர் பங்கத் ராம் பஸ்லா துவக்க உரையாற்றினார்.

மாலெ கட்சிப் பொதுச்செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் குமாரசாமி, எல்சிசி அமைப்பின் தோழர் முரளி ஆகி யோர் உரையாற்றினார்.

எல்சிசியின் துணைத் தலைவர் தோழர் ஹரிஹரன் அறிமுக உரையாற்றினார். எல்சிசியின் செயலாளர் தோழர் குமரன்குட்டி வர வேற்றார். தோழர் சுமிதா தீர்மா னங்களை வாசித்தார். தோழர் குன் கிஹரன் நன்றி கூறினார். எல்சிசி துணைத்தலைவர் டாக்டர் ஆஸôத், தலைவர் சந்திரசேகர் ஆகியோர் உரையாற்றினர்.

தமிழ்நாடு பன்னாட்டு, இந்நாட்டு முதலாளிகளுக்கல்ல!
தமிழ்நாடு தமிழக உழைக்கும் மக்களுக்கே!

2011 ஜனவரி 30 அன்று திருபெரும்புதூரில் ‘தமிழ்நாடு பன்னாட்டு, இந்நாட்டு முதலாளிகளுக்கல்ல, தமிழ்நாடு தமிழக உழைக்கும் மக்களுக்கே’ என்ற முழக்கத்துடன் மாலெ கட்சி திறந்தவெளிக் கருத்தரங்கம் நடத்தியது.

‘கடப்பாரை செரிக்காது; ஊழல் கறை வெளுக்காது’ என்ற அகில இந்திய மாணவர் கழகம் பிரசுரித்திருந்த சிறுபுத்தகத்தை மாலெ கட்சிப் பொதுச்செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா வெளியிட மாணவர் கழக தலைவர்கள் பெற்றுக் கொண்டனர்.

ஏஅய்சிசிடியு சென்னை மாவட்ட தலைவர் தோழர் பழனிவேல் மற்றும் மாவட்டப் பொதுச் செயலாளர் தோழர் சேகர், சென்னை மாவட்ட ஏஅய்சிசிடியு சார்பாக கட்சி மத்திய கமிட்டி, லிபரேசன் ஏடு, மாநிலக் கமிட்டி, தீப்பொறி, ஏஅய்சிசிடியு மாநிலக் குழு, ஒருமைப்பாடு, சென்னை மாவட்ட கட்சி ஆகிய அமைப்புக்களுக்கு ரூ.1,95,000 நிதி வழங்கினர்.

நோக்கியா, ஹ÷ண்டாய், சாம்சங் போன்ற நிறுவனங்கள் திருபெரும்புதூர் பகுதியில் சூப்பர்லாபம் ஈட்டும்போது, தொழிலாளர்களும் பகுதி மக்களும் விலைஉயர்வால் துன்புறுகின்றனர் என்றும், ஊழல், ஒடுக்குமுறை ஆட்சிக்கு எதிராக பகுதியின் தொழிலாளர்களும் பொது மக்களும் வருகிற தேர்தல்களில் பொதுவாழ்வில் நேர்மை, நீதி, ஜனநாயகம், மக்கள் வளர்ச்சி, முன்னேற்றம், நல்வாழ்க்கை ஆகியவற்றுக்காக செங்கொடியை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்று மாலெ கட்சிப் பொதுச்செயலாளர் தோழர் திபங்கர் அறைகூவல் விடுத்தார். மாலெ கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் குமாரசாமி, மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் ஆகியோர் உரையாற்றினர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், புதுக்கோட்டை மாவட்ட தோழர்களும், மாநிலம் முழுதும் இருந்து மாணவர் கழக தோழர்களும் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டனர்.

இலவச எரிவாயு இணைப்பு வழங்காததைக் கண்டித்தும், வழங்கப்பட்ட இடங்களில் பயனாளிகள் பட்டியலில் உள்ள ஊழலைக் கண்டித்தும் ஜனவரி 5 அன்று மதுரையில் மாலெ கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. மாலெ கட்சி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், மாநிலக்கமிட்டி உறுப்பினர் தோழர் உஷா மற்றும் பகுதி முன்னணிகள் உரையாற்றினர்.Search