COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Wednesday, January 19, 2011

தீப்பொறி. 2011, ஜனவரி

கருணாநிதியின் மற்றுமொரு நாடகம்


வைரமுத்து என்ற புலவருக்கு கருணாநிதி என்ற புரவலர் வெண்சாமரம் வீசும் மகத்தான சேவையில் இருந்ததால் நேரடி யாகச் சென்று தேசிய அறிவியல் மாநாட்டுக்கு சென்னைக்கு வந்த மன்மோகனை வரவேற்க முடியாமல் போனது. முதலமைச்சர் பிரதமரை வரவேற்கச் செல்லாமல் இருப்பது பற்றி விமர்சனம் வரலாம் என்று தெரிந்தும் தமிழ்ப் பற்றின் காரணமாக வைரமுத்து நூல் வெளியீட்டு விழாவில் இருந்து விட்டதாக கருணாநிதி சொல்கிறார். ஒரு வழியாக அன்பழகன் ஸ்டாலினிடம் பேசி, ஸ்டாலின் கருணாநிதியுடன் பேசி, மன்மோகனை சந்திக்க ஒப்புக்கொண்டு பிறகு சந்தித்தாராம். தமிழக அரசியலில் கருணாநிதி அன்றாடம் நடத்தும் நாடகங்களில் இதுவும் ஒன்று. ராசாவைக் காப்பாற்ற முடியாத கூட்டணி ஒரு கூட்டணியா?

மன்மோகனை சந்தித்தாலும் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் விவசாயிகள் தற்கொலைகள் பற்றியோ, வெங்காயம் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலையேற்றத் தால் சாமான்ய மக்கள் படும் துன்பம் பற்றியோ, தமிழகத்தின் பல லட்சக்கணக்கான பயிற்சி தொழிலாளர்கள் நிலை மாற்றும் சட்டத் திருத்தம் பற்றியோ, பன்னாட்டு, இந்நாட்டு பெருந்தொழில் குழுமங்களின் லாபவெறிக்கு தமிழ் பேசும் தொழிலாளர்கள் உயிர்ப்பலி தருவது பற்றியோ கருணாநிதி பேசப் போவதில்லை. கருணாநிதியின் வெற்று வார்த்தைகளில் வறிய மக்களின் வயிறு நிறையாது. வாழ்க்கை மாறாது.

கருணாநிதிக்கு ஆறுதலாக ராமதாசு மட்டுமே பேசியிருக் கிறார். கூட்டணி அரசியல் பற்றி எம்ஜிஆர், ஜெயலலிதா, ஆர்.வெங்கட்ராமன் எல்லாம் சொன்னதை எடுத்துக்காட்டி, இந்த விஷயத்தில் கருணாநிதியின் நடைமுறையை சுட்டிக்காட்டி, தான் நல்ல அரசியல்தான் நடத்துவதாக சொல்கிறார். ஜெயலலிதா, அய்யாவை 2, 3 மணி நேரங்கள் காக்க வைத்தாராம். கருணாநிதியை அப்பாய்ன்ட்மென்ட் இல்லாமலே கூட சந்திக்கலாமாம்.

ராமதாசு தனது தற்போதைய மனமாற்றம் மற்றும் வரப்போகிற கூட்டணி மாற்றத்துக்கு உதாரணம் காட்டாதது, எடுத்தாளாதது அதிகாரபூர்வ கம்யூனிஸ்ட் கட்சிகளின் நடைமுறையை மட்டும்தான். ஆனால் பாமக மட்டும்தான் கூட்டணி மாறுகிறதா என்ற அவர் கேள்விக்குள் உள்ள இந்தக் கேள்வியை பாமக கேட்கவில்லை என்றாலும் தமிழகம் முழுதும் நடந்த, நடக்கிற பல்வேறு திமுக ஆட்சி எதிர்ப்புப் போராட்டங்களில், வறிய மக்கள் வாழ்வுரிமைக்கான போராட்டங்களில் அணிதிரண்ட எண்ணற்ற நகர்ப்புற, நாட்டுப்புற வறிய மக்கள் கேட்கிறார்கள்: எங்கள் போராட்டங்கள் ஜெயலலிதாவுக்கு சமர்ப்பணமா?

அந்தக் கேள்விக்கு இல்லை என்று உரத்த பதில் சொல்லும் சவாலை எதிர்கொள்ள இடதுசாரிகள் தயாராக வேண்டும்.

கடப்பாரை செரிக்காது! ஊழல் கறை வெளுக்காது!!

                                                                           எஸ்.குமாரசாமி

ராஜராஜனும் ராஜேந்திரனும், அதாங்க நம்ம கலைஞரும் தளபதியாரும், விதவிதமாகப் பதில் சொல்கிறார்கள். வெங்காய விலை உயர்வு பற்றி கேள்வி கேட்டால், பெரியாரைப் போய்க் கேட்கச் சொல்லி எரிந்து விழுகிறார் கருணாநிதி. திமுக திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்தபோது, கண்ணீர்த் துளிகள் என இகழ்ச்சியுடன் சொன்னார் பெரியார். விலை உயர்வால் தமிழ்நாட்டு மக்கள் கண்ணைக் கசக்கி கண்ணீர் சிந்தும்போது, கருணாநிதிக்கு வெங்காயமும் ஆரியமாகிவிட்டது. ஆரிய வெங்காயத்திற்கு திராவிட இயக்கத்தின் பெரியார்தான் பதில் சொல்ல முடியும் என்று நினைக்கிறார் போலும். வேறு எந்த எந்த கேள்விகளுக்கு, யார் யாரிடம் பதில் கேட்கச் சொல்வார். பதிலே சொல்லாமல் மவுனம் சம்மதம் என இருப்பார் என அடுத்தடுத்து பார்க்கலாம்.

குட்டி பதினாறடி பாயும்

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயுமாம். ஊழலுக்கும் இழப்பிற்கும் வேறுபாடு தெரியாதவர்களைப் பார்த்து அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை எனப் பாளையங்கோட்டையில் மு.க.ஸ்டாலின் அழுது கொண்டே சிரிக்கிறார். ஆட்சி போய் விடுமே என உள்ளுக்குள் அழுகிறார். வெளியில் சிரிப்புடன், இடிச்சிரிப்பை வெடிச்சிரிப்பை உருவாக்கும் விஷயங்களைப் பேசுகிறார். கொட்டைப் பாக்குக்கு விலை கேட்டால், பட்டுக்கோட்டைக்கு வழி சொல்வதா என்ற கருணாநிதியின் கேள்வியை நாம் மு.க.ஸ்டாலினுக்குத் திருப்பி விட வேண்டும்.

பெட்ரோல், டீசலுக்கு அரசு மானியம் தருவது போல் மலிவு விலை அரிசிக்கு அரசு மான்யம் தருவது போல், தொலை தொடர்புத்துறை நுகர்வோருக்கு அரசு மானியம் தந்திருப்பதாகவும் அதை ஊழல் என்று குற்றம் சாட்டுகிறார்கள் என்றும் ஒரு தோற்றம் தர, தளபதியார் முயற்சிக்கிறார்.

ராசா பதவி ஏற்ற போது 30 கோடி அலைபேசி இணைப்புக்கள். ராசா பதவி விலகும் போது 73 கோடி அலைபேசி இணைப்புக்கள். உள்ளூர் அழைப்புக் கட்டணம் ரூ.1 என்பது 30 பைசா ஆகிவிட்டது. மு.க.ஸ்டாலின் இத்துடன் நின்றுவிடவில்லை. சந்தைப் பொருளாதாரம் பற்றி, ஒரு பொருளாதார நிபுணர் போல், பேசுகிறார். சந்தையில் போட்டியை அதிகரித்து கட்டணங்களைக் குறைத்துள்ளோம், என்றும் அடுத்தடுத்த தொலை தொடர்பு துறை அமைச்சர்கள் இதைத்தான் செய்தனர் என்றும் சொல்கிறார்.

ஒருவர் மட்டும் ரூ.1,76,000 கோடி ஊழல் செய்ய முடியுமா என கரு ணாநிதி கேட்டால், முந்தைய ஆட்சிகள், அமைச்சர்கள் செய்யாததையா ராஜா செய்து விட்டார் என ஸ்டாலின் கேட்கிறார். எப்போதும் கருணாநிதியும் ஸ்டாலினும் சொல்வதை மறுத்துப் பேசியே வந்துள்ள நமக்கு, இந்தமுறை தந்தையும் மகனும், அவர்களோடு உடன்பட, ஒரு வாய்ப்பு தந்துவிட்டனர். ராசா மட்டும் ஊழல் செய்யவில்லை. மற்றவர்களுக் கும், குறிப்பாக கருணாநிதியின் கூட்டாளி களுக்கும் தொடர்பு உண்டு என நாம் கருணாநிதியோடு உடன்படுவோம். பாஜக மட்டும் என்ன உத்தமமா என ஸ்டாலின் கேட்கும்போது அந்தக் கேள்வியிலும் நாம் உடன்படுவோம்.

பாமரத்தனமாய் சில பதில் கேள்விகள்

ராசா ஏன் இராஜினாமா செய்தார்? ராசா, கனிமொழி, ராசாத்தி அம்மாள் தொடர்பான இடங்களில் ஏன் மத்திய புலனாய்வுத் துறை சோதனை நடந்துள்ளது? ராசாவையும் நீரா ராடியாவையும் மத்திய புலனாய்வுத் துறை ஏன் விசாரிக்கிறது? உச்சநீதிமன்ற கிடுக்கிப்பிடி கேள்விகள், சிஏஜி அறிக்கை, சட்ட, நிதி அமைச்சக, பிரதமர் கடித ஆலோசனைகள் மீறல் போன்ற நெருப்பில்லாமல், ராஜா பதவி விலகல், மத்திய புலனாய்வுத் துறை சோதனை, விசாரணை என்ற புகை எழுமா?

ஸ்டாலின் உச்சநீதிமன்றத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? போகாதே போகாதே, பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் என நிதி அமைச்சகம், சட்ட அமைச்சகம், பிரதமர் அலுவலகம், 2001 விலை வேண்டாம், அலைக்கற்றை உரிம விற்பனை ல் பகிரங்கமான மாற்று முறை பற்றி பரிசீலனை வேண்டும் என ஏன் குறிப்பிட்டார் ள்? இந்த கருத்துக்களைச் சொன்னவர்கள், பாஜக அல்லது ஜெயலலிதா அணியைச் சேர்ந்தவர்களா?

அதுவும் இதுவும் ஒன்றா?

அரிசியை அரசு கூடுதல் விலைக்கு வாங்கி மக்களுக்குக் குறைந்த விலையில் தருகிறது. அரசு பொறுப்பேற்கும் தொகை, மான்யம் என அழைக்கப்படுகிறது. இது கருணாநிதி, ஜெயலலிதா, மன்மோகன், வாஜ்பாய் வீட்டு சொந்தப் பணம் அல்ல. நாட்டு மக்களின் பணம். அரசு கஜானாவில் இருந்து நாட்டு மக்க க்குத் திரும்ப வருகிறது. அதுவும், டாடா, மிட்டல், அம்பானி என்ற பெரும் தொழில் குழும ஏகபோக பகாசுர நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்படும் சலுகைகளும் ஒன்றா?

இந்தியாவில் கடன் சுமை தாளாமல் 1995 முதல் 2010 வரை 2,56,949 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுவிட்டனர். தமிழ்நாட்டில் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 2008ல் 512 என இருந்தது, 2009ல் 1014 என வெகுவாக உயர்ந்துவிட்டது. (சாதனைப் பட்டியலில் இன்னுமோர் சிறப்பு). பொது விநியோகத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று சொன்ன இந்து பத்திரிகை கட்டுரை பற்றி வாய்ப்பு கிடைத்த இடங்களில் பேசிய முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் எந்தக் கூட்டத்திலும் எந்த அறிக்கையிலும் இதுபற்றி இதுவரை வாயைத் திறக்கவில்லை.

ஆந்திராவில் இந்த ஆண்டு நுண்கடன் 24% முதல் 36% வரை வட்டிக்கு வாங்கி, விதவிதமான நிர்ப்பந்தங்கள் தாங்காமல் கடந்த சில மாதங்களில் 156 பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தப் பின்னணியில்தான் இப்போது விவசாயக் கடனுக்கு 7% வட்டி என ஏட்டளவில் மாற்றப்பட்டுள்ளது.

விவசாய தற்கொலை பூமியான மகாராஷ்டிராவில், அக்டோபர் மாதம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ரூ.60 கோடி மதிப்பு டைய 150 மெர்சிடஸ் பென்ஸ் கார்கள் வாங்க ரூ.40 கோடியை சில பணக்காரர்களுக்கு வெறும் 7% வட்டிக்குத் தந்துள்ளது. வங்கி உயர் அதிகாரி, இதுபோன்ற கடன்களை அடுத்தடுத்து வருங்காலத்தில் வழங்குவதில் தமது வங்கி பெருமிதம் கொள்ளும் என்கிறார்.

தமிழ்நாட்டில் விவசாய கருவிகள் வழங்க தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கடன் தரும் போது, 8% வட்டி வாங்குகிறார்கள். கடன் தொகை உயர வட்டி விகிதம் உயரும். கருணாநிதியும் ஸ்டாலினும் தமிழக விவசாயிகளுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் கார் வாங்குமாறு ஆலோசனை தந்தாலும் வியப்பில்லை.

இந்த துன்பங்களின் மறுபக்கத்தில் மக்கள் செல்வங்கள் சூறையாடப்படுகின்றன. டாடா, மிட்டல், அம்பானி போன்ற நாட்டின் வளங்களைச் சூறையாடும் குடும்பங்களுக்கு குறைந்த விலையில் தகாத முறையில் அரசின் வசமுள்ள அலைக்கற்றை உரிமத்தை வழங்குவதுதான் அலைபேசி பயன்படுத்தும் கோடிக்கணக்கானவர்களுக்கு வழங்கும் சலுகையா? ஸ்டாலின் விளக்குவாரா? விஞ்ஞான தொழில்நுட்ப முன்னேற்றமும் பரவலும் விலையைக் குறைக்கும். அதன் முதுகிற்குப் பின்னால் ஊழல் ஒளிந்து கொள்ள முடியாது.

அலைக்கற்றை ஊழல ன் அனா ஆவன்னா

1ஜி, 2ஜி 3ஜி எனும் போது, அது, ஆங்கில ஜி எழுத்தில் தலைமுறை (ஜெனரேஷன்) என்பதைக் குறிக்கும். ராசா ஜி, கருணாநிதி ஜி, மன்மோகன் ஜி என்று மட்டுமே புரிந்து கொள்ளலாகாது. 2ஜி, இரண்டாம் தலைமுறை தொழில் நுட்பத்திற்கு அரிதான அலைக்கற்றை வழங்குவதில் ஊழல் என்பதுதான் மய்ய விவகாரம். இவர்கள் 100 தலைமுறைகளுக்கு சொத்து குவித்து 100 கோடி மக்களை ஏமாற்றி விட்டார்களா என்பது கேள்வி.

ஸ்டாலின் சொல்லும் சந்தை, தொலை தொடர்புத் துறையில் உலகமயக் காலத்தில் நுழைந்தது. தனியார் என்றால் போட்டி, கட்டணம் குறையும், சேவையில் தரம் உயரும், ஊழியர் வேலைத் திறன் உயரும் என்ற உலகமயக்காரர்களின் வார்த்தை ஜாலத்தில்தான் ஸ்டாலின் ஈடுபடுகிறார். அரசு ஏகபோகம் போய், கூடா நட்பு முதலாளித்துவம் (இழ்ர்ய்ஹ் இஹல்ண்ற்ஹப்ண்ள்ம்) நுழைந்தது என்பதுதான் உண்மை. தொலை தொடர்புத் துறை அமைச்சர் சுக்ராம் வீட்டில் காணும் இடமெல்லாம் கற்றை கற்றையாகப் பணம் என தவறான காரணங்களுக்காக கின்னஸ் சாதனைகளில் இடம் பெற்றார். 1996ல் முதல் தகவல் அறிக்கை. 2009ல் குற்றமய சதி வழக்கு முடிந்து 3 வருட கடுங்காவல் தண்டனை. ஒரு மாதம் மட்டுமே கம்பி எண்ணிப் பின் பிணையில் வந்துவிட்டார்.

01.07.1999ல் பாஜக தலைமையிலான தேஜமு ஆட்சியின் போது ஜஸ்வந்த் சிங் தலைமையிலான அமைச்சர் குழு நிர்ணயிக்கப்பட்ட உரிமக் கட்டண முறையை (ஊண்ஷ்ங்க் கண்ஸ்ரீங்ய்ள்ஸ்ரீங் ஊங்ங்) வருமான பகிர்வு முறையாக (தங்ஸ்ங்ய்ன்ங் நட்ஹழ்ண்ய்ஞ்) மாற்றியது. இது முறைகேடு என மத்திய தணிக்கை அதிகாரி சுட்டிக்காட்டினார். ராசாவால் ராடியா மூலம் இப்போது பயன் பெற்ற ரத்தன் டாடா, அப்போது 01.07.1999 முடிவால் அரசு கஜானாவுக்கு ரூ.50,000 கோடி இழப்பு எனக் குற்றம் சுமத்துகிறார். ஈயம் பித்தளையைப் பார்த்து இளித்தது. பிரமோத் மகாஜன் மீது டிராய் பரிந்துரைகளுக்கு எதிராக, முழு உரிமக் கட்டணம் பெறாமல், ரிலையன்சுக்கு சிறப்பு உரிமைகள் (ஊன்ப்ப் ஙர்க்ஷண்ப்ண்ற்ஹ்) வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அளவிலும் வீச்சிலும் பிரும்மாண்டமான ராசா ஊழல் ஆ என வாயைப் பிளக்க வைத்துவிட்டது.

மக்கள் மருத்துவரும் மக்கள் உரிமைப் போராளியுமான டாக்டர் பினாயக் சென் மீது தேசத் துரோகம் என அபாண்டமாகவும் அபத்தமாகவும் குற்றம் சுமத்தித் தண்டிக்கும் முதலாளித்துவ சமூகம், தொலைதொடர்புத் துறையில் நடந்த அனைத்து ஊழல்களையும் விசாரித்து உண்மையான தேச துரோகிகளைத் தண்டிக்கட்டும்.

கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும்

ராசா வகையறாக்கள் 2010ல் 3 ஜிக்கான அலைக்கற்றை உரிமத்தை ஏலம்விட்டு ரூ.1,15,000 கோடி வந்தது என்பதை வைத்து 2 ஜிக்கும் அவ்வாறு வந்திருக்கும் என்று சொல்வது, பிரியாணிக்கான பாசுமதி அரிசியையும் பசிபோக்கும் பொது விநியோக அரிசியையும் ஒப்பிடுவதுதான் என வாதாடுகிறார்கள்.

இரண்டாம் தலைமுறை மூன்றாம் தலைமுறை என்பவை தொழில்நுட்பங்கள் தொடர்பானவையே. அலைக்கற்றை பொதுவானது. தலைமுறை தொழில்நுட்பம் விற்கப் படவில்லை. இரண்டு தொழில் நுட்பங்களுக்கும் பொதுவான அலைக்கற்றை உரிமமே விற்கப்பட்டது. (இந்திய மக்களின் தலைமுறைகளுக்கே நஷ்டம் என்பது வேறு விஷயும்).

திரைப்படம் காண வரிசையில் முதலில் நிற்பவருக்குத்தான் நுழைவுச் சீட்டு தரப்பட்டு படம் பார்க்க வாய்ப்பு கிடைக்கும் என்பது போல், முதலில் வந்தவர்க்கு முதலில் உரிமம் என்னும் இந்தப் போட்டியால் அலைபேசி கட்டணம் குறைந்தது என்றும் அலைபேசி பயன்படுத்துபவர்கள் அதிகமானார்கள் என்றும் முதலாளித்துவ சேவை மூலம் தங்களுக்குச் சேவை செய்து கொள்ளாமல் மக்களுக்குச் சேவை செய்ததாகவும் ராசா, ஸ்டாலின் போன்றவர்கள் வாதாடுகிறார்கள்.

முதலில் வந்தவர்க்கு முதலில் உரிமம் எனச் சொல்லி என்ன நடந்தது? தொலை தொடர்புத் துறை இணையதளத்தில் 10.01.2008 அன்று பிற்பகல் 2.45 மணிக்கு, பிற்பகல் 3.30 முதல் 4.30க்குள், அலைக்கற்றை உரிமம் வழங்குவதற்கான விருப்ப எண்ணக் கடிதம் (லெட்டர் ஆப் இன்டென்ட்) வழங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. உரிய ஆவணங்களுடன் சில ஆயிரம் கோடிகள் மதிப்புடைய வரைவோலை தரக் கோருகிறது.

தொழில்நுட்பத் திறன், தொழில் அனுபவம், உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு மாறாக, முன்னரே உள்ரகசியம் தெரிந் திருப்பது, அரசியல் செல்வாக்கு, பெரும் தொகை புரட்டும் வேகம், வலிமை, இவையே தகுதிகள் என்பது பாமரருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் புலப்படும். முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கும் முதலாளித்துவ அரசியலுக்கும் அத்தியாவசியமான பாலம் ஊழல் என்பது புலப்படும். இழப்பே ஊழல் அல்ல; இழப்பு ஏற்படுத்துவதற்கு திட்டமிட்ட சதி செய்து ஊழல் கொள்ளை நடந்துள்ளது என்பதுதான் குற்றச் சாட்டு.

2 ஜி உரிமம் பெற்ற சில நிறுவனங்கள் பின்னர் கூடுதல் தொகைக்கு அலைக்கற்றை உரிமத்தை விற்கவில்லை என்றும் தமது நிறுவன பங்குகளைத்தான் விற்றுள்ளனர் என ராசா, ஸ்டாலின் போன்றோர் வாதாடுகின்றனர்.

அலைக்கற்றை உரிமம் தவிர வேறு எந்த சொத்தும் இல்லாத ஸ்வான் டெலிகாம், உரிமத்தை ரூ.1537 கோடிக்கு வாங்கி, தனது 45% பங்குகளை ரூ.4200 கோடிக்கு விற்றுள்ளது. அலைக்கற்றை உரிமம் தவிர வேறு சொத்துக்கள் இல்லாத யூனிடெக் நிறுவனம், உரிமத்தை ரூ.1651 கோடிக்கு வாங்கி, தனது 60% பங்குகளை ரூ.6200 கோடிக்கு விற்றது. டாடா டெலிகாம் செர்வீசசும் தனது 26% பங்குகளை ஜப்பானின் டோகோமோவுக்கு ரூ.13,230 கோடிக்கு விற்று கொழுத்த லாபம் சம்பாதித்தது.

அலைக்கற்றை உரிமம் இருந்ததால்தான் இந்த நிறுவனப் பங்குகள், பிரும்மாண்டமான விலைக்குச் சென்றன. வாங்குபவர்கள் என்ன முட்டாள்களா? வாங்குவதும், விற்பதும் 2008லேயே நடந்துள்ளன. சந்தை மதிப்பைவிட குறைந்தது 7 மடங்கு, அதிக பட்சம் 10 மடங்கு குறைவாக ராசா வேண்டியவர்களுக்கு விற்று மக்கள் சேவை (!) புரிந்துள்ளார். இதில் அக்கம் பக்க தகவலையும் பார்ப்போம்.

2008ல் வழங்கப்பட்ட 122 உரிமங்களைப் பெற்ற 13 நிறுவனங்கள், தொலை தொடர்புத் துறை நிர்ணயித்த தகுதிகளைப் பூர்த்தி செய்யவில்லை. தேவைப்பட்ட மூலதனம் கொண்டிருக்கவில்லை. 85 உரிமங்களில் 45 உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கும் தொலை தொடர்பு தொழிலுக்கும் சம்பந்தமில்லை.

குழந்தை சொன்னது:

அம்மணம்... அம்மணம்...

நாட்டுப்புறக் கதை ஒன்றில் எத்தர்களால் ஏமாற்றப்பட்டு அம்மணமாய் நகர் வலம் சென்ற ஒரு முரட்டு ராஜா, அமைச்சர்களும் மக்களும் உயிருக்குப் பயந்து, ஆடை பிரமாதம், ஆடை பிரமாதம் எனச் சொல்ல வைத்தானாம். அறியாக் குழந்தை ஒன்று மட்டும் ராசா அம்மணம் ராஜா அம்மணம் எனக் கை கொட்டி சிரித்ததாம்.

கருணாநிதி, ராசா, ஸ்டாலின், கபில் சிபல் வகையறாக்கள் ஊழல் கடப்பாரையை விழுங்கிவிட்டு செரிமானத்துக்கு வழி தேடுகிறார்கள். காலம் மாறிவிட்டது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி தொலைதொடர்புத் துறை முன்னேற்றம் ஆகியவற்றால் ராசாவின் ஊழல் நாட்டின் முன் அம்மணமாய் தெரிகிறது. முதலாளித்துவ அரசும் அமைப்பும் கூடத்தான்.

பீகார் 2010 மற்றும் அதற்கப்பால்


புரட்சிகர இடதுசாரிகள் முன் உள்ள சவால்கள்

                                                                                        திபங்கர் பட்டாச்சார்யா

2010 பீகார் தேர்தல் முடிவுகள் ஊடகங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் கணிசமான விவாதங்களைத் தூண்டி உள்ளன. இது புரிந்துக் கொள்ளக் கூடியதுதான். தேர்தல் கணிப்பாளர்கள் தேர்தல் முடிவுகளின் பேரலைத் தன்மையை விளக்க முயற்சிப்பதில் மும்முரமாய் உள்ளனர். ஊடகவியலாளர்களும் கல்வியாளர்களும் பீகார் தேர்தல் முடிவுகளின் பிரும்மாண்டத்தின் பின்னால் உள்ள, பீகார் தேர்தல் முடிவுகளுக்குப் பின் வரக்கூடிய, நிலைமைகள் பற்றி தத்தம் கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, பாஜகவும் தேஜமுவும் முன் எப்போதும் இல்லாத இந்த வெற்றியில் பெருஉற்சாகம் அடைந்துள்ளனர். இந்த வெற்றியின் ஆதாயங்களை உறுதிப்படுத்திக் கொள்ளத் தம் கைவசம் உள்ள ஒவ்வோர் ஆயுதத்தையும் நிச்சயம் பயன்படுத்துவார்கள். நிதிஷ் தம் பங்கிற்கு காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள சாத்தியமான அனைத்தையும் செய்வார். பீகாரின் சவால்கள் நிறைந்த போர்க்களத்தில், ஜனநாயகம் மற்றும் சமூக மாற்றத்திற்கான நீண்ட போரில் ஈடுபட்டுள்ள செயல்வீரர்கள், கவனம் செலுத்த நிறைய பிரச்சனைகள் உள்ளன. கற்பதற்கும் நிறைய பாடங்கள் உள்ளன.

பாஜகவின் எழுச்சி

தேஜமு எப்படியும் வெற்றி பெறும் என அரசியல் நோக்கர்கள் கருதினார்கள். 243 இடங்கள் உள்ள அவையில் 206 இடங்களில் வெற்றி என்ற இறுதி வீச்சுதான் உண்மையில் அதிர்ச்சி தரும் விஷயம். போட்டியிட்ட 102 இடங்களில் பாஜக 91 இடங்களில் வெற்றி பெற்றதுதான் உண்மையில் வியப்பூட்டும் விஷயம். முன்னாள் பாஜக, பாஜக சார்புடைய வர்கள் என வெற்றி பெற்ற சுயேச்சைகளையும் கணக்கிட்டால் பாஜக எண்ணிக்கை 95 ஆகும். இந்த குறிப்பான விஷயத்தில்தான், கருத்துக் கணிப்புகளும் அரசியல் கணிப்புக்களும் பெரிய அளவுக்கு பிழையாகிப் போயின.

உதாரணமாய், மிகவும் தாராளமாய் மதிப்பீடு செய்த, தேர்தலுக்கு முந்தைய ஓர் ஆய்வு கூட, தேஜமு 170 இடங்கள் பெறும் எனக் கணித்தபோது, பாஜக 50, அய்க்கிய ஜனதா தளம் 120 இடங்கள் என்றே கணித்தது. கடைசியில் பார்க்கும் போது, பாஜக 91 இடங் களும் அய்க்கிய ஜனதா தளம் 115 இடங்களும் பெற்றன. 2005ல் பாஜகவைவிட 33 இடங்கள் கூடுதலாய் பெற்றிருந்த அய்க்கிய ஜனதா தளம் 2010ல் 24 இடங்களே கூடுதலாய் பெற்றது.

பீகார் தேர்தலில் பாஜகவின் இந்த குறிப் பிடத்தக்க எழுச்சியே, மிகவும் வியப்பூட்டும் செய்தி. பாஜக தலைவர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தை ரத்து செய்யும் அளவிற்கு, முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு குஜராத்தின் பங்களிப்பான ரூ.5 கோடியைத் திருப்பித் தரும் அளவிற்கு நிதிஷ் சென்றார். அப்போதும் நிதிஷ் பிராண்டுக்கு அதிஉயர்ந்த விசுவாசம் காட்டி பாஜக இந்த மகா அறுவடையைக் குவித்தது.

ஆனால், நிதிஷ் குமாரின் உயர்ந்து செல்லும் பிராண்டு மதிப்பின் செயலூக்கமற்ற பயனாளியாக மட்டும் பாஜகவைப் பார்த்து, பாஜக பதாகையின் கீழ் மூர்க்கமான, மேலோங்கிய மேல்சாதி நிலப்பிரபுத்துவ மதவாத அணி திரளலைக் காணத் தவறினால், நாம் தவறு செய்வோம். ஆக, பாஜக, தனது சொந்த அமைப்பு வலைப்பின்னலாலும், தற்சமயம் நிதிஷ்குமார் கொண்டுள்ள பரந்துபட்ட சமூக நல்லெண்ணங்களாலும் பயன் பெற்றுள்ளது.

பாஜக - அய்க்கிய ஜனதா தள உறவு எப்போதுமே, பரஸ்பர சார்பு இயல்பு கொண்டுதான் உள்ளது. ஆனாலும், பாஜக, அதிகரித்த அளவில் ஒரு பெரிய பயனாளியாக எழுகிறது. ஒடிஷாவில், பஞ்சாபில், ஓர் இளைய கூட்டாளியாகவே பாஜக அதிகாரத்தில் பங்கு பெற்றது. ஆனால் பீகாரில், இன்னும் பெரிய சுதந்திரமான அடித்தளத்தையும் தோற்றத்தையும் தெளிவாக வளர்த்தெடுத்துள்ளது. அதன் மரபார்ந்த நகர்ப்புற வலுவான பகுதிகளைத் தாண்டி, பெருவீத நில உடைமை நிலவும் மாவட்டங்களிலும், சிறுபான்மையினர் கணிச மாகக் குவிந்துள்ள மாவட்டங்களிலும், பாஜக, தனது ஊடுருவலை ஆழப்படுத்தியுள்ளது என்பது நன்கு தெரிகிறது. இத்தகைய பகுதிகளாக, சீமான்சல் பிராந்தியம் மற்றும் மிதிலாவைச் சுற்றியுள்ள பிராந்தியத்தைக் காணலாம். பாஜகவின் முதல் இசுலாமிய நாடாளுமன்ற உறுப்பினர் பீகாரிலிருந்து சென்றார். இம்முறை சட்டமன்றத் தேர்தலில் பாஜக முதல் இசுலாமிய சட்டமன்ற உறுப்பினரைப் பெற்றுள்ளது.

நிதிஷ்குமார் நிகழ்வுப் போக்கு

2010 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 91 என்ற அசாதாரண எண்ணிக்கையைப் பெற்றது என்ற போதும், இந்த பீகார் தேர்தல், நிச்சய மாய் நிதிஷ் குமார் நிகழ்வுப் போக்குக்காக நினைவில் நிற்கும். அதிகார வர்க்க ஊடகங்கள் என்ற இரட்டை தூண்களால் தூக்கிப் பிடித்து நிறுத்தப்பட்ட நிதிஷ்குமார் நிகழ்வுப் போக்கு, மூன்று தனித்த காரணிகளின் சங்கமத்தால் குறிக்கப்படுகிறது. லாலு பிரசாதின் அராஜக ஆட்சியைத் தீர்மானகரமாக நிராகரித்தல். முறைசார்ந்த விதத்தில் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்டதோர் ஒழுங்கமைக்கப்பட்ட சமூக வடிவமைப்பு. சில பத்தாண்டுகள் பொருளாதார பின்தங்கிய நிலைக்கு, பறிக்கப்படுதலுக்கு, சிறுமைப்படுத்துதலுக்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த பதில்வினையால் உந்தப்பட்ட வளர்ச்சிக்கான வெகுமக்கள் விருப்பங்களின் ஓர் எழுச்சி. லாலு சகாப்தத்தின் நிறுவனமயப்படுத்தப்பட்ட அராஜகம் அகில இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு மட்டுமின்றி மொத்த பீகார் சமூகத்திற்கும் சுமக்க முடியாததொரு சுமையானது. நிதிஷ் குமார் சகாப்தம், பாதையை சரிசெய்யும் ஒன்றாக, வெகுமக்களால் அங்கீகரிக்கப்பட்டது.

பீகார் பற்றிய ஊடகக் கதைகள், வளர்ச்சி, சாதியை வென்றுள்ளதாகப் பின்னப் படுகின்றன. நிதிஷ்குமார், சாதியால் பீடிக்கப் பட்டுள்ள கூறு போடப்பட்டுள்ள பீகாரின் சமூகத்தில், எப்படி ஒரு பீகாரி பெருமிதத்தைத் தூண்டி உள்ளார், அதன் மூலம், மக்கள் குறுகிய சாதிய அடையாளங்கள் தாண்டி ஒரு புதிய துணை தேசிய அடையாளம் பெற்றுள்ள னர் என தத்துவங்கள் பல பரவுகின்றன.

ஆனால் ஒரு நெருக்கமான பார்வை, நிதிஷ்குமாரின் அரசியல் நிர்வாக இலக்கணத்தில், சாதியின் தொடரும் மய்யத்தன்மையைப் புலப்படுத்தும். மிகவும் பின்தங்கிய சாதியினருக்கு உள்ளாட்சிகளின் ஒதுக்கீடு என்பதோடு சேர்ந்து பெண்களுக்கு 50 சதம் ஒதுக்கீடு, மகாதலித்துகளின், பின்தங்கிய (பஸ்மண்டா) முஸ்லீம்களின் முன்னேற்றத்திற்கான சில ஒப்பனை நடவடிக்கைகள், ஒரு புதிய ஆட்சிக்கான ஒரு புதிய சமூக சமன்பாட்டைக் கொண்டு வந்தன. துவக்கத்தில், இந்த புதிய இடஒதுக்கீடு சூத்திரத்தால் மேல்சாதி அதிகாரக் கும்பல்கள் எரிச்சல் அடைந்ததாகச் சொல்லப்பட்டாலும், இறுதி முடிவுகள், இந்த புதிய சமூக வடிவமைப்பால், மேல் சாதியினரே அதிகபட்ச ஆதாயம் அடைந்ததைக் காட்டுகின்றன. மிகவும் பின்தங்கிய சாதியினர் பிரதிநிதித்துவம் சட்டமன்றத்தில் 7ல் இருந்து 17 என உயர்ந்தது என்றால், மேல்சாதியினர் பிரதிநிதித்துவம் குறிப்பிடத்தக்க விதத்தில் 59ல் இருந்து 76 ஆனது.

நிதிஷ்குமார் லாலுவை வீழ்த்தினார் என் றால், அது வளர்ச்சி ஆட்டத்தில் அல்லாமல், சாதி எண் கணிதம் என்ற போர்க்களத்தில்தான் நிகழ்ந்தது. 5 ஆண்டுகள் நிதிஷ் ஆட்சிக்குப் பிறகு லாலுவின் யாதவ் - முஸ்லீம் சமன்பாடு தகர்ந்து பிளவுண்டுள்ளது. நிதிஷோ எல்லா சமூகப் பிரிவினர் மத்தியிலும் ஆழமாய் ஊடுருவி உள்ளார். இந்த வானவில் கூட்டணியைப் படைக்க, நிதிஷ் குமார் கொச்சையான, உட்பொருள் பொதிந்த சில நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அமீர் தாஸ் ஆணையம் ரன்வீர் சேனாவின் புரவலர்கள் தொடர்பான தனது அறிக்கையை தாக்கல் செய்யும் முன், அந்த ஆணையத்தை கலைப்பது என்ற முடிவால், நிலப்பிரபுத்துவ நிர்ப்பந்தக் குழுவினர்க்கும் பாஜகவுக்கும், ஒரு மறுஉறுதி செய்தியை துவக்கத்திலேயே அனுப்பிவிட்டார். நிலச்சீர்திருத்த ஆணையத்தை அமைத்ததும், நிலப்பிரபுத்துவ நிர்ப்பந்தக் குழுவை மிரட்டவும் தாஜா செய்து பணிய வைக்கவும் எடுத்ததோர் நடவடிக்கையே. நிலச்சீர்திருத்தம், குத்தகைதாரர் உரிமைகள் என்ற கத்தி தலைக்கு மேல் தொங்க விடப்பட்டதால், இப்போது, பாஜகவால் முதன்மையாகப் பிரதிநிதித்துவப்படும் நிலப்பிரபுத்துவ நிர்ப்பந்த முகாம், வழிக்கு வர வேண்டியதாயிற்று.

நிலப்பிரபுத்துவ நிர்ப்பந்தக் குழுவை வழிக்கு வர வைப்பதோடு, லாலுவின் சமூக நீதி திட்டத்தில், நீண்ட காலமாக ஒதுக்கப் பட்டதாக உணர்ந்த, மிகவும் பின்தங்கிய சாதியினரை நோக்கியும் நிதிஷ்குமார் கைகளை நீட்டினார். முதலில் 22 தலித் துணை சாதிகளில் 18 சாதிகளை மகாதலித்துகள் எனப் பதிவு செய்து, பின்னர் பாஸ்வான்கள் நீங்கலாக மற்ற அனைத்து துணை சாதிகளுக்கும் வலையை விரிவுபடுத்தியது என்ற ஒழுங்க மைக்கப்பட்ட நடவடிக்கை மூலம், தலித் துணைக் குழுக்கள் மத்தியில் எழுகின்ற ஓர் அடையாள உணர்வை உண்டாக்கி ஒரு பரந்த சமூக அடித்தளத்தைத் தேடிக் கொண்டார். பாஜகவோடு நீண்ட கால தொடர்பு இருந்தபோதும், பஸ்மண்டா (பின்தங்கிய) முஸ்லீம் என்ற பாட்டைத் தொடர்ந்து பாடி, முஸ்லீம் சமூகத்திற்குள்ளும் ஓர் ஆதரவைப் பெற்றார். கடைசியாக, ஆனால் சிறியது என்று சொல்லிவிட முடியாத ஒரு காரணமும் இருந்தது. ஊராட்சிகளிலும் பேரூராட்சிகளி லும் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு, பெண் மாணவர்களுக்கு சைக்கிள், சீருடைகள் தருவது போன்ற நடவடிக்கைகளும் கூட, நிதிஷ் ஆட்சிக்கு ஒரு பெண்கள் சார்பு தோற்றம் தந்து எல்லா வர்க்க பெண்கள் மத்தியிலும் கூடுதல் ஆதரவைப் பெற்றது.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் - லோக் ஜன சக்தி கூட்டணியும் காங்கிரஸ் முகாமும்

பிரதான எதிர்க்கட்சியின் தற்காப்பு மற்றும் நம்பகத்தன்மை இழந்த நிலையும், நிதிஷ் நிகழ்வுப்போக்குக்கு ஒரு கூடுதல் முனைப்பை தந்தது. ராஷ்ட்ரிய ஜனதா தளம், லோக் ஜன சக்தியுடன் கூட்டு சேர்ந்தது. ஆனால் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தொடர்ந்து தன் சொந்த அடித்தளத்தில் சந்தித்த அரிப்பை, இது ஈடு செய்யவில்லை. வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளோர் பட்டியல், பொது விநியோகம், கேந்திரமான நிலச்சீர்திருத்தப் பிரச்சனை போன்ற கிராமப்புற வறியவர்களை பாதிக்கும் பிரச்சனைகளைக் கொண்டு அரசாங்கத்தை எதிர்கொள்வதற்குப் பதிலாக, நிலப் பிரபுத்துவ நிர்ப்பந்தக் கும்பலை, நிலச்சீர்திருத்த பூச்சாண்டி காட்டி தன்பக்கம் இழுக்கவே, ராஷ்ட்ரிய ஜனதா தளம் முயன்றது. நிலச்சீர்திருத்த எதிர்ப்பாளர்களைத் திருப்திப் படுத்த, நிலச்சீர்திருத்த எதிர்ப்பு நிர்ப்பந்தக் குழுவின் உரத்த குரலுக்குச் சொந்தக்காரரான முன்னாள் அய்க்கிய ஜனதா தள நாடாளுமன்ற உறுப்பினரான பிரபுநாத் சிங்கை, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் நட்சத்திரப் பரப்புரையாளராக்கியது. இது, கட்சியின் மூத்த தலைவர்கள் பலருக்கு எரிச்சலூட்டியது.

லாலு பிரசாத் தம்மை ஒரு வளர்ச்சி திருஉருவாக முன்நிறுத்த முயன்றார். இந்திய ரயில்வேயை தலைகீழாய் மாற்றியது போல் பீகாரின் முகத்தையே மாற்றுவோம் என்றார். லாலு கட்சியின் விளம்பரங்கள், வாக்காளர்களை, ஒரு வெற்றிகரமான ரயில்வே அமைச்சரின் கைகளில் பீகாரைத் தரப் போகிறீர்களா அல்லது வெற்றி பெறமுடியாத ரயில்வே அமைச்சர் கைகளில் தரப் போகிறீர்களா எனக் கேட்டன. ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் அபத்தமான தேர்தல் பிரச்சாரமும் கூட, வாக்காளர்களை தேஜமு முகாம் நோக்கி மேலும் தள்ளியது. லாலு எவ்வளவு தீவிரமாக மீண்டும் ஆட்சிக்கு வர சபதமெடுத்து முயன்றரோ, அந்த அளவுக்கு எளிதாக, மீண்டும் லாலு சகாப்தமா என்ற பீதியை, நிதிஷால் உருவாக்க முடிந்தது.

காங்கிரஸ், காங்கிரஸ் தலைமையிலான ஓர் அரசாங்கம் அமைப்போம், பீகாரை தேசிய வளர்ச்சி வீதத்துடன் இணைப்போம் என்ற பேரவா கொண்ட கூற்றுடன், களம் இறங்கியது. காங்கிரஸ் புதிய நம்பகத்தன்மை உடையவர்களை நிறுத்தப் போவதாகச் சொன்னது. ஆனால் உயர்மட்டத் தொடர்புடையவர்க்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக்கள் விற்கப்பட்டதாக, முடிவில்லாத சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டது. இந்தப் பின்னணியில், பீகார் மத்திய அரசாங்க நிதியை வீணடிக்கிறது என்பதைக் கேட்க ஆளில்லாமல் போனது. இதில் வேறு ஏதாவது நடந்ததென்றால், காங்கிரசின் இந்த பெரும் கூப்பாட்டு பிரச்சாரம், நிதிஷ் எளிதாக, பீகாரை மத்திய அரசாங்கம் வேறுபடுத்தி நடத்துகிறது என்றும் அலட்சியப்படுத்தும் மத்திய அரசாங்கத்திற்கு எதிராக தாமே பீகார் நலன்களுக்காகப் போராட முடியும் என்றும் சொல்ல வாய்ப்புக் கள் தந்தது.

மக்கள் குறைகளும்

இகக மாலெ பிரச்சாரமும்

தேர்தல் முடிவுகளில் இருந்து, பீகார் மக்களுக்கு மிகவும் குறைவான குறைபாடு களே உள்ளன என்றோ, இந்த குறைபாடுகள் போராட்டங்களாக மாற்றப்படவில்லை என்றோ முடிவு செய்வது, அப்பட்டமான தவறாகும். மாறாக, அய்ந்தாண்டுகள் நிதிஷ் அரசாங்கத்தில், உயர்ந்த அளவிலான ஒடுக்கு முறையால், இடையறாத போராட்டங்களைக் காணமுடிந்தது.

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியல்தான் சேர்த்துள்ளவர்களை காட்டி லும், கூடுதலானவர்களை விலக்கி வைத்தது. உச்சநீதிமன்றத்தால் மிகவும் ஊழல் மலிந்த திறனற்ற பொது விநியோகத் திட்டம் பீகாரில்தான் உள்ளது எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிழைத்திருந்தலே, கிராமப்புற வறியவர்க்கு ஒரு விடாப்பிடியான போராட்டம்தான்.

வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் நீர்ப்பாசன முனைகளில் அரசாங்கத்தின் முழுமையான தோல்வியால், வடக்கு பீகார் ஒவ்வொரு வருடமும் பேரழிவு நிறைந்த வெள்ளங்களை சந்திக்கிறது. தெற்கு பீகார், கடந்த இரண்டாண்டுகளில் வறட்சி மற்றும் பஞ்ச நிலைமைகளை திரும்பத்திரும்பச் சந்திக்கிறது. இவை பிரச்சனைகளை மேலும் மோசமாக்குகின்றன.

பீகாரின் நிலமற்ற கிராமப்புற வறியவர்கள், குத்தகைதாரர்கள், வார சாகுபடியாளர்கள், பிழைத்திருப்பதற்காகவும், அடிப்படை வசதி களுக்காகவும் போராடுவதோடு, டி.பந்தோபாத்யா தலைமையிலான நிலச்சீர்திருத்த ஆணைய அறிக்கை வெளியிடப்பட்டு அமல்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவும் உறுதியான போராட்டம் நடத்துகின்றனர். இகக மாலெ மற்றும் போராடும் கிராமப்புற வறியவர்களின் விடாப்பிடியான போராட்டத்தால்தான், அறிக்கையை ஆங்கிலத்தில் குறுந்தகடு வடிவத்திலாவது அரசாங்கம் வெளியிட நேர்ந்தது. இந்த போராட்ட இயக்கத்தின் முக்கிய மைல் கற்களாக, மிகவும் வெற்றிகரமாக 23.11.2009 அன்று கட்சி நடத்திய பீகார் பந்த் விளங்கியது; 30.03.2010 கட்சி பட்னாவில் நடத்திய மிகப் பிரும்மாண்டமான மக்கள் அதிகார (ஜன் அதிகார்) பேரணி அமைந்தது. இன்று வரை நிதிஷ் ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட பேரணிகளில், அதுதான் மிகப் பெரிய எதிர்க்கட்சிப் பேரணி எனப் பரவலாக அங்கீகரிக்கப்படுகிறது. குத்தகைதாரர்களுக்கு, வார சாகுபடியாளர்களுக்கு மானியங்கள் மற்றும் கடன்கள் பெற ஊராட்சி மட்ட சக்தி வாய்ந்த தலையீடுகள் நடந்தன.

நிதிஷ் குமார் அரசாங்கத்தின் முதல் ஆட்சி காலத்தில், ஊழல் ஒரு வெகுமக்கள் கவலை யாக இருந்தது. சில வகையான குற்றங்களில் (உதாரணத்திற்கு பிணைத் தொகைக்கான கடத்தல்) ஒரு சரிவு ஏற்பட்டது. அதே நேரம், மேலிருந்து கீழ் வரை, ஊழல் மிகப் பெரும் அளவில் வளர்ந்தது. ரேஷன் கடைக்காரர்கள், ஊராட்சி பிரதிநிதிகள், ஒன்றியமட்ட அதிகாரிகள் மட்டத்தில் நிலவும் பல ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக, பீகார் சக்தி வாய்ந்த போராட்டங்களைக் கண்டது. மத்திய தணிக்கை அதிகாரி மூலமும், உயர்நீதிமன்றம் மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டதை அடுத்தும், கருவூல ஊழல் வெளிப்பட்டதும், உயர்ந்த இடங்களில் நடைபெறும் ஊழலுக்கு எதிராக ஓர் இயக்கம் துவக்கப்பட்டது. ஆனால், உயர்நீதிமன்றம் தனது சொந்த மத்திய புலனாய்வுத் துறை விசாரணை உத்தரவில் இருந்து பின்வாங்கிய பிறகு, எங்கும் மிகவும் பிரும்மாண்டமான ஊழல்கள் வெளிவரத் துவங்கிய பிறகு, கருவூல மோசடியும், போலி பில்களும், எதிர்பார்த்த முக்கியத்துவம் பெறவில்லை.

ஊழல் நீங்கலாக, நிதிஷ் ஆட்சி, அதன் அதிகரித்த அதிகாரத்துவ நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தாலும், மக்கள் போராட்டங்கள் மற்றும் ஜனநாயக அக்கறைகள் தொடர்பான அதன் ஆணவமான அணுகுமுறையாலும், அறியப்பட்டது. ஒப்பந்த ஆசிரியர்கள், நிரந்தரமற்ற சுகாதார ஊழியர்கள், ஆண்கள், பெண்கள், தங்களது கோரிக்கைகளுக்காக ஆர்ப்பாட்டம் செய்தபோது, பாட்னாவில் மிருகத்தனமான தடியடியை எதிர்கொண்டனர். முதலமைச்சரின் மக்கள் தரிசன நிகழ்ச்சிக்குச் சென்றவர்கள், அதிகாரத்துவ துன்புறுத்தல், கூருணர்வின்மை, வெற்று வாக்கு றுதிகள் என்ற மோசமான அனுபவங்களின் கதைகளுடன் வெறுங்கைகளுடன் திரும்பினர். மாநிலம் முழுதும் பரவி உள்ள சாராயக் கடைகள் மக்களின் கடும் சீற்றத்தை எதிர்கொண்டன. அரசு ஆதரவு சாராயக் கடைகளுக்கு எதிராக, பெண்களின் சக்தி வாய்ந்த போராட்டங்கள் நடந்தன.

சட்டமன்றத்திற்கு உள்ளும் வெளியும், இகக மாலெயும் அதன் வெகுமக்கள் அமைப் புக்களும், மக்கள் லட்சியங்களை முன் எடுப்ப தில், அவர்களது கோரிக்கைகளை, குறைகளை வெளிப்படுத்துவதில், போராட்டங்களை வழி நடத்துவதில், முன் நின்றுள்ளன. கருவூல மோசடி வெளிப்பட்ட பிறகு, மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு வலியுறுத்தியதற்காகவும் முதலமைச்சர் பதவி விலகலை வலியுறுத்தியதற்காகவும், மற்ற எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன், மாலெ கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர்.

பல முனைகளில் போராட்டங்கள் என்ற தனது பதிவுகளின் பின்புலத்தில், கட்சியின் தேர்தல் பிரச்சாரம், வளர்ச்சி கவுரவம் மற்றும் ஜனநாயகத்திற்கான மக்களின் தேடுதலை மய்யங்கொண்டு இருந்தது. எதிரெதிரான இரண்டு வளர்ச்சி மாதிரிகளை வேறுபடுத்திக் காட்டியது. நிலச்சீர்திருத்தங்களை நிராகரிக்கும், வறுமையை வேலை இன்மையை நீடிக்க வைக்கும், பொது நிதியை முறைசார்ந்த விதத்தில் சூறையாடும் நிலப்பிரபுத்துவ அதிகாரத்துவ வளர்ச்சி மாதிரி மற்றும் அதற்கு எதிரான நிலச்சீர்திருத்தங்கள், விவசாய மற்றும் தொழில் வளர்ச்சி ஊடாகப் பயணிக்கும், வெகுமக்களு க்கு வேலை வாய்ப்பை உருவாக்கும், அவர் களது உரிமைகளையும் கவுரவத்தையும் உத்தரவாதப்படுத்தும் ஒரு தீவிர ஜனநாயக மாதிரி என இந்த இரண்டு மாதிரிகளும் உள்ளன.

2010 தேர்தல் முடிவுகளும்

நம் முன் உள்ள சவால்களும்

தேர்தல் முடிவுகள், தெளிவாக, இகக மாலெ வழிநடத்திய போராட்டங்களின் வலிமையைப் பிரதிபலிக்கவில்லை. மாறாக, இது, இகக மாலெயின் மற்றும் மொத்த இடதுசாரிகளின் மிகவும் பலவீனமான தேர்தல் செயல்பாடாகும். சக்தி வாய்ந்த போராட்டங் கள், கவனம் கவர்கின்ற அரசியல் அணிதிரட் டல்கள், பரந்த வெகுமக்கள் உறுப்பினர்கள், ஆனாலும் வாக்குகளில் சரிவு என்ற முரணை, நாம் எப்படி விளக்கப் போகிறோம்?

இப்போதைய சமூக தேர்தல் போக்குகள் சக்தி வாய்ந்த விதத்தில் தம்மை வெளிப்படுத்தியதுபோல், கடந்த நாடாளுமன்றத் தேர்தல் களிலும், இதே போன்றதொரு சூழலை கட்சி எதிர்கொண்டது. நாம் 20 வேட்பாளர்களை நிறுத்தினோம். இது வரை இல்லாத அளவுக்கு 470,000 என குறைந்த வாக்குகள் பெற்றோம். கட்சி இந்த விளைவை காத்திரமாக எதிர் கொண்டது. அமைப்பை முறைப்படுத்த, போராட்டங்களைத் தீவிரப்படுத்த, கட்சியின் அரசியல் செல்வாக்கை உறுதிப்படுத்த, தொடர் திருத்தும் நடவடிக்கைகளைத் துவக்கியது.

தேர்தல் முடிவுகள், நம்மால் 50,000 வாக்கு கள் அதிகரிக்க முடிந்துள்ளதைக் காட்டுகின் றன. ஆனாலும், இந்த முன்னேற்றம் நிச்சயமாய் போதுமானதல்ல. நாடாளுமன்றத் தேர்தலில், போஜ்பூரின் ஒரு சட்டமன்றத் தொகுதியில் மட்டும் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முதலிடம் பெற்றோம். மற்ற எந்த கேந்திரமான தொகுதியிலும் இரண்டாவது இடம் கூடப் பெறவில்லை.

இந்த முறை, நமது வேட்பாளர்கள் 5 தொகுதிகளில், இரண்டாம் இடம் பெற்றனர். எல்லா இடங்களிலும் நாம் தேஜமு வேட்பாளர்களிடம் தோற்றோம். போஜ்பூரின் கிராமப்புற பாட்னாவின் பெரும்பான்மைத் தொகுதிகளிலும், மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டோம். வர்க்கக் கோணத்தில் பார்த்தால், நிதிஷ் குமார் அலையின் மீது சவாரி செய்து, நிலப்பிரபுத்துவ சக்திகள், நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு அணிதிரட்டல் மற்றும் மக்களின் போராடும் ஒற்றுமையை முறியடித்து, சமூக பொருளாதார சமநிலையை தமக்கு சாதகமாக திருப்ப முடிந்தது என நாம் சொல்ல முடியும்.

நிலப்பிரபுத்துவ மிச்சசொச்சங்கள் பின்னுக்குச் சென்று, அதனால், நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு முரண்பாடு மென்மையாக்கப்பட்டுள்ள விதத்தில், பீகாரில், அரசியல் முதலாளித் துவ மறுகட்டமைப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதன் அறிகுறிகள் எழுவதை இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுவதாக சிலர் சொல்கிறார்கள்.

நிலப்பிரபுத்துவ மிச்சசொச்சங்கள் பலவீன மடைந்துள்ளது என்றால் அது பீகாரில், இகக மாலெ இயக்கத்தின் மிகப் பெரிய ஆதாயமாகும். தனியார் படைகளும், பெரிய படுகொலை களும் கடந்த கால விஷயங்கள் ஆகிவிட்டன என்றால், அதற்கான பெருமை முதன்மையாக மக்கள் நடத்திய துணிச்சலான உறுதியான எதிர்ப்பையே சேரும்.

ஆனால் தேர்தல் முடிவுகள், முதலாளித்துவ மறுகட்டமைப்பின் சாரத்தையும் வடிவ மைப்பையும் காட்டுகின்றன. இது, பீகாரைப் பொறுத்தவரையில், சாரமாக, நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தின் பழைய வடிவங்களுக்கு ஒரு முதலாளித்துவ மாற்றம் செய்வதுதான்.

பார்த்த மாத்திரத்தில், ஊராட்சிகள் மூலம் கணிசமான அதிகாரப் பரவல், இடஒதுக்கீடுகள் மூலம் இதுவரை ஓரஞ்சாரத்தில் வைக்கப்பட்டிருந்த சமூக குழுக்களை உள்கொண்டு வருதல் ஆகியவற்றை பீகார் சாதிப்பதாகத் தோன்றுகிறது. ஆனால், பொதுவாக தேஜமு, குறிப்பாக பாஜக பதாகையில் ஒரு மறு சேர்க்கை ஏற்படுத்திக் கொண்டு சக்திவாய்ந்த வகையில் ஒரு மீட்சியை நிகழ்த்தியுள்ள நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கு ஆதாயம் தரும் வகையில்தான், உண்மையில் அமைப்பு முறை செயல்படுகிறது.

பீகாரில், கடந்த பத்தாண்டு உள்ளாட்சி முறையில், கட்சி ஊராட்சிகளில் பங்கேற்பு மூலம் கணிசமான அனுபவம் பெற்றுள்ளது. ஆனால், வெகுமக்கள் மேற்பார்வை தலையீட்டை நிகழ்த்திக் காட்டுவதில், ஊராட்சிகளை ஒரு போராட்ட மேடையாகப் பயன்படுத்துவதில், இன்னமும் நம்மால் ஒரு திருப்திகரமான முன்மாதிரியை பெற முடியவில்லை. இது, நிச்சயம், கட்சி செயல்பாட்டில் அவசரமாய் முன்னேற்றம் கொண்டு வரவேண்டிய ஓர் அரங்கம்.

பீகாரில், இகக மாலெ அதன் துணிச்சலான மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு பாத்திரத் திற்காக அறியப்பட்டாலும், இகக மாலெயின் திட்டம் எந்த ஓர் அருவமான அல்லது வறட் டுத்தனமான நிலப்பிரபுத்துவ எதிர்ப்பில் சுருங்கியோ அல்லது அதில் மட்டும் கவனம் குவித்தோ நின்றுவிடாது. நிலப்பிரபுத்துவ மிச்சசொச்சங்கள் மறுகட்டமைப்பு செய்யப்படுவது, ஏகாதிபத்திய, முதலாளித்துவ கொள்ளை மற்றும் சூறையாடலின் இன்னும் நேரடியான வடிவங்கள் மற்றும் வழிகள் ஆகியவற்றிற்கு காத்திரமான கவனம் செலுத்தும் ஒரு புரட்சிகர மான, துடிப்பான ஜனநாயகத் திட்டத்தை கட்சி பின்தொடர்கிறது. ஏமாற்றும் முழக்கங்கள், நவதாராளவாத ‘சீர்திருத்த தாக்குதல்’ ஆகியவற்றின் முன்னிலையில் இந்த ஜனநாயகத் திட்டத்தைப் பின்தொடர்வதன் சிக்கலான தன்மையையும், பிரம்மாண்ட இயல்பையும் வேண்டுமானால் பீகார் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன எனக் கருதலாம்.

இரண்டு உதாரணங்களை எடுத்துக் கொள்வோம். நிலமற்ற ஒடுக்கப்பட்ட வறியவர்கள், தமது வாக்களிக்கும் உரிமையை நினைத்துப் பார்க்கக்கூட முடியாத நேரத்தில், இகக மாலெதான் தலித் மக்கள் வாக்களிப்பதற்காகப் போரிட்டது. இன்று நிலப்பிரபுத்துவ சக்திகள், தலித் மக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதில்லை. ஆனால் மகாதலித் அரசியல் மூலம் தலித்துகளின் வாக்குகளைக் கையகப்படுத்துகின்றனர். இகக மாலெதான் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கத்திற்கு பலத்த அடிகள் கொடுத்தது. வறிய ஒடுக்கப்பட்ட கிராமப்புற பெண்களின் விழிப்புணர்வு மற்றும் அறுதியிடலின் முதல் அலையை வழிநடத்தியது. இன்று விந்தைமுரணாண விதத்தில், தேஜமுதான், பீகாரில், பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல் என்ற முழக்கத்தைக் கையகப்படுத்தி உள்ளது. நாம், மிகவும் தெளிவாக, மாயைகளின் முகமூடியைக் கிழித்து எறியும் வர்க்க உணர்வைக் கூர்மைப்படுத்தும், மக்களின் போரா ட்ட உணர்வையும் ஆற்றலையும் பலப்படுத்தும் ஒரு சக்தி வாய்ந்த இயக்கத்தை, வளர்த் தெடுக்கும் சவாலை எதிர்கொள்கிறோம்.

முதலாளித்துவ முழக்கங்கள் எவ்வளவுதான் கவர்ச்சிகரமாக இருந்தாலும், அவை அவற்றுக்கே உரித்தான தீர்க்க முடியாத முரண்பாடுகளில் சிக்கி உள்ளன. மக்களின் சொந்த அனுபவங்களின் பலத்தைச் சார்ந்து, ஈர்க்கும் தன்மையுடைய அதிகாரபூர்வ முழக்கங்களையும் வாக்குறுதிகளையும் அம்பலப்படுத்த, அவற்றை எதிர்கொள்ள, நாம் சாத்தியமான அனைத்தையும் செய்ய வேண்டும்.

நிதிஷ்குமார் தேர்தல்களில் உச்சபட்ச வாக்குறுதிகளைத் தந்துள்ளார். மத்திய அரசு பீகாரில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் இருப்பவர்கள் 65 லட்சம் என்று சொன்னாலும், நிதிஷ்குமார் பீகாரில் 1 1/2 கோடி வறிய குடும்பங்களுக்கு மான்ய விலையில் உணவு தருவதாகச் சொல்லியுள்ளார். ஊழலை 0% கூடச் சகிக்க முடியாது என்றும், ஊழல் அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அந்தப் பணம் பள்ளிகள் அல்லது பொது கட்டிடங்கள் கட்டப் பயன்படும் என்றும் சொல்லியுள்ளார். பீகாரின் ஒவ்வொரு பகுதிக்கும் போதுமான மின்சாரம் வழங்கப்படும் எனச் சொல்லியுள்ளார். பட்டியல் நீள்கிறது. இந்த முறை அவர் செயல்படாமல் இருக்க எந்த சாக்குபோக்கு சொல்லவும் பீகார் மக்கள் இடமளிக்கவில்லை.

இப்போது சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்று சொல்ல ஏதுமில்லை. பீகாரின் பிரச்சனைகள் அதிகரித்த அளவில் வீதிகளில் நடைபெறும் போராட்டங்களில்தான் முன்வைக்கப்படும்; தீர்க்கப்படும். தேர்தல் தோல்வியால் முடங்காமல், இகக மாலெ இந்த போராட்ட இயக்கப் போக்கை வழிநடத்தி, தீர்மானகரமான மக்கள் போராட்டங்கள் மூலம் தேஜமு தாக்குதலைப் பின்னுக்குத் தள்ள வேண்டும்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்டும் அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பும்

                                                                                                   எஸ்.குமாரசாமி

கட்சி 2010ல் எடுத்த முக்கிய முன்முயற்சிகளில் ஒன்றாக, ஆகஸ்ட் 11 அன்று புது டெல்லியில் நடந்த ஒரு கருத்தரங்கில் அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பை உருவாக்கியது. இகக மாலெ விடுதலை, சிபிஎம் பஞ்சாப், லால் நிஷான் கட்சி (லெனினிஸ்ட்) மகாராஷ்டிரா, இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழு கேரளா என நான்கு அமைப்புக்கள் சேர்ந்து அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பை உருவாக்கின. கட்சியின் சூழ்நிலையின் தேவைக்கேற்ப எழுவோம் என்ற டிசம்பர் 18 உறுதி ஏற்பு அழைப்பு, பல்வேறு அரங்குகளில் மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த, புரட்சிகர கம்யூனிஸ்டுகளின் இன்னும் பெரிய, இன்னும் கூடுதலான அறுதியிடல் பாத்திரத்தைக் கோருகிறது என்று சொல்லி, இந்தத் திசையில் நாம் 2010ல் எடுத்த இரண்டு முக்கிய முன்முயற்சிகளாக, மே 10ல் அகில இந்திய விவசாய மகாசபையை உருவாக்கியதையும், ஆகஸ்ட் மாதத்தில் அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கியதையும் குறிப்பிட்டுக் காட்டுகிறது. அழைப்பு மேலும் சொல்கிறது: அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பு ஒரு நல்ல துவக்கத்தை நிகழ்த்தியுள்ளது. நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள காத்திரமான இடதுசாரி சக்திகளின் கவனத்தை ஈர்ப்பதற்கான உள்ளாற்றலை வெளிப்படுத்தி உள்ளது. அனைத்திந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பைப் பலப்படுத்த, இந்தியாவின் இடதுசாரி அரசியலைக் தீவிரப்படுத்துவது அதற்குப் புத்துயிரூட்டுவது என்ற நமது பெருவிருப்ப திசையில் முன்எடுத்துச் செல்ல வரும் நாட்களில், நாம் அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஜனவரி 22 அன்று அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பு கருத்தரங்கம் நடக்கிறது. ஜனவரி 23 அன்று இதுவரை செய்துள்ள வேலைகளைப் பரிசீலித்து, அடுத்த கட்ட வேலைகளைத் திட்டமிட உள்ளது. கோவையில், ‘நாடு காக்க, மக்கள் வாழ்வு காக்க தொழிலாளர் வர்க்கம் எழுவோம். நாமே நாடாவோம், நாடே நமதாகட்டும்’ என்ற தலைப்பில் ஒரு திறந்தவெளி கருத்தரங்கை 25.01.2010 அன்று நடத்த உள்ளது.

இந்தியாவில் இடதுசாரி இயக்கம் ‘மரணப் படுக்கையில்’ கிடக்கிறது என்றும், அதற்கு எந்தப் பொருத்தப்பாடும் இனி இல்லை என்றும் முதலாளித்துவ ஊடகங்கள் கூப்பாடு போடுகின்றன. இகக, இககமாவின் ஓர் இளைய கூட்டாளியாகவே உள்ளது. பெரிய அண்ணனின் நிழலிலேயே இருக்கிறது. இந்தி பேசும் பகுதிகளில், இகக மாவை விடக் கூடுதல் செல்வாக்கு பெற்றிருந்தாலும், அது அங்கு வளர்முகத்தில் இல்லாமல் சரிந்து வருகிறது. மார்க்சிஸ்ட் கட்சி, இடது முன்னணி அரசாங்கங்கள், சிங்கூர் நந்திகிராமுக்குப் பிறகு, மேற்குவங்கத்திலும் கேரளாவிலும் மக்களால் தோற்கடிக்கப்படும் நிலையில் உள்ளன. மாவோயிஸ்ட்களின் இராணுவ சாகசங்கள், அவர்களது செயல்பாட்டை முடக்கி, முட்டுச் சந்தில் நிறுத்தி உள்ளது. சாமான்யர்களின் மனங்களில், ஊடகங்களில் இகக, இகக மாதான் இடதுசாரிகள் என்ற எண்ணம் உள்ளது. இந்தப் பின்புலத்தில் எல்லா நேர்மையான உண்மையான புரட்சிகரமான இடதுசாரிகளுக்கும் தங்களது நடவடிக்கைகளை ஆழப்படுத்த விரிவுபடுத்த, பாத்திரத்தை உயரத்தில் கொள்ள, தங்கள் ஒற்றுமைக்கு ஒன்றுபடும் நிலைபாடுகளுக்கு ஓர் அகில இந்திய வடிவமும் தோற்றமும் தர வேண்டியது, காலத்தின் தேவையாக மாறியுள்ளது. அதனால்தான் அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பு உருவாக்கப்பட் டுள்ளது.

அதேநேரம், இந்த அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பு மாலெ குழுக்களை ஒன்று சேர்க்கும் அல்லது முன்னாள் இகக மா கட்சிகள் தமக்குள் மீண்டும் ஓர் ஒற்றுமையை உருவாக்கும் முயற்சியும் அல்ல. மாறாக வரலாற்றுரீதியாகவே வேறுபட்ட பின்புலங்கள் கொண்ட பூகோளரீதியாக வேறுவேறு பகுதிகளில் செயல்படும் நீரோட்டங்கள், இன்றைய நெருக்கடியான தருணத்தில் ஒரு பொதுவான அகில இந்திய செயல்பாட்டு தளத்தை காண எடுத்துள்ள முயற்சியாகும்.

இதுவரையில், அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழு

விலை உயர்விற்கு எதிராக நடந்த தேசிய அகில இந்திய பந்த்தில், இகக மாலெ, லால் நிஷான் கட்சி லெனினிஸ்ட், சிபிஎம் பஞ்சாப் கூட்டாக ஓர் அறைகூவலை விடுத்தன.

ஆகஸ்ட் 12 அன்று காஷ்மீர் பிரச்ச னையை ஒட்டி, ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அரசுப் படையினரின் மனித உரிமை மீறல்கள் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், காஷ்மீர் பிரச்சனைக்கு ஒரு ஜனநாயக பூர்வமான அரசியல் தீர்வு உடனடியாகக் காணப்பட வேண்டும் என குடியரசுத் தலைவரிடம் முறையீடு தரப்பட்டது.

ஆகஸ்ட் 20 அன்று நாடெங்கும் ஒரு புரட்சிகர இடதுசாரி நிலைப்பாட்டுடன் காஷ்மீர் மக்களோடு ஒருமைப்பாடு தினம் அனுசரிக்கப்பட்டது.

நான்கு அமைப்புக்களின் தொழிற்சங்கங்கள் செப்டம்பர் 7 அகில இந்தியத் தொழிலாளர் பொது வேலை நிறுத்த்தை வெற்றி பெறச் செய்ய ஆகஸ்ட் 12 அன்று ஒரு கருத்தரங்கம் நடத்தி அறைகூவல் விடுத்தன. வேலை நிறுத்தத்தில் பங்கேற்றன.

‘இந்தியா மீது, ஆசியா மீது அமெரிக்க ஏகாதிபத்தியமே கை வைக்காதே, அமெரிக்க தலையீட்டிற்கான ஆக்ரமிப்புக்கான களமல்ல ஆசியா, போரை, பயங்கரத்தை பொருளாதார நெருக்கடியை அவுட்சோர்ஸ் செய்யாதே’ என்ற பொதுவான அறை கூவலை ஒபாமா வருகையை ஒட்டி வெளியிட்டன.

அக்டோபர் 5 அன்று கொல்கத்தாவில் ‘சந்தர்ப்பவாத இடதுசாரிகளின் சரிவும் போராடும் இடதுசாரிகளின் எழுச்சியும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

ராஞ்சியில், ‘ஜார்கண்டை, பட்டினி சூறையாடல் மற்றும் அநீதியில் இருந்து விடுவிப்போம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

ஒபாமா வருகையின்போது ஜலந்தரில், மும்பையில் கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன.

கொல்கத்தா கருத்தரங்கின் தொடர்ச்சியாக போராடும் இடதுசாரி சக்திகளின் ஊடாடல்கள் தீவிரப்பட்டு, மேற்கு வங்கத்தில் செயல்படும் பிற இடதுசாரி சக்திகளுடன் சேர்ந்து கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

மாணவர் அரங்கில் மகாராஷ்டிரா தோழர் கள் அகில இந்திய மாணவர் கழகத்தின் பெயரால் செயல்படத் துவங்கி உள்ளனர். அகில இந்திய தொழிற்சங்க மய்ய கவுன்சிலிலும், அகில இந்திய விவசாய மகாசபையிலும் மகாராஷ்டிரா தோழர்கள் நிர்வாகப் பொறுப்புக்களில் இடம் பெற்றுள்ளனர்.

அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் இயக்கத்தின அடுத்த அகில இந்திய மாநாடு பஞ்சாபில் நடைபெறும் போது, சிபிஎம் பஞ்சாபின் விவசாயத் தொழிலாளர் அமைப்பு நம்முடன் அமைப்புரீதியாக மேலும் நெருக்கமாக வாய்ப்பு உள்ளது.

மாவோயிஸ்ட் பாணி அய்க்கியம்

1980ல் இகக மாலெ மக்கள் யுத்தம் உருவானது. இந்திய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மய்யம், இகக மாலெ கட்சி அய்க்கியம் தனித்தனியாகச் செயல்பட்டன. கட்சி அய்க்கியம், மக்கள் யுத்தம் பிரிவினர் இருதரப்புக்களுக்கும் இழப்புக்கள் ஏற்பட்ட அழிவுமிக்க மோதல்களில் ஈடுபட்டன. அவர்களே பிறகு இதனை ஒரு கருப்பு அத்தியாயம் எனக் குறிப்பிட்டனர். 1998ல் மக்கள் யுத்தமும் கட்சி அய்க்கியமும் இணைந்தனர். 2004 செப்டம்பரில் இகக மாலெ மக்கள் யுத்தமும் இந்திய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மய்யமும் இணைந்து, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் பெயரைத் துறந்து இகக (மாவோயிஸ்ட்) ஆனார்கள். ஒன்றுபட்ட அமைப்பு இகக மாலெ வழியில் இருந்து மரபில் இருந்து முற்றிலுமாக விலகி ஓர் அராஜகவாத ராணுவவாதப் போக்காக தமது தனித்த பயணத்தைத் துவக்கினார்கள். அரசியல் துப்பாக்கிக்குத் தலைமை தாங்குவதற்குப் பதிலாக, துப்பாக்கி அரசியலுக்குத் தலைமை தாங்குவது தீவிரமடைந்தது என அவர்களது போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரம் ஆவணம் திட்டவட்டமாகக் கூறுகிறது: ‘முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி கூட முற்றுப்பெறாத, ஏற்றத்தாழ்வான சமூக பொருளாதார அரசியல் சூழல் நிலவுகிற அரை காலனிய அரை நிலப்பிரபுத்துவ இந்தியாவின் ஸ்தூலமான நிலைமைகளில், பாட்டாளி வர்க்க கட்சி, ஆயுதப் போராட்டத்தைத் துவக்க, நீடித்து தொடர, புறச்சூழல் உகந்ததாக உள்ளது’. அவர்களது பார்வையில், அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்ட வடிவமே, பிரதான போராட்ட வடிவம் ஆக இருக்க முடியும். ராணுவம்தான் பிரதான அமைப்பு வடிவமாக இருக்கும். வெகுமக்கள் அமைப்புக்கள் போராட்டங் கள் எல்லாம் அவர்கள் அணுகுமுறைப்படி, ஆயுதப் போராட்டத்திற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ சேவை செய்ய வேண்டும். அவர்களுக்கு, முதலாளித்துவ நிறுவனங்கள், முதலாளித்துவ அரசியல், அவற்றுக்கெதிரான வெகுமக்கள் போராட்டங்கள், வெகுமக்கள் அரசியல் போன்றவை எல்லாம் ஒரு பொருட்டேயல்ல.

லெனின் அராஜகவாதமும் சோசலிசமும் நூலில் சொன்னதைச் சுட்டிக்காட்டி, மாவோயிஸ்ட்களிடமிருந்து நகர்ந்து செல்லலாம். ‘முதலாளித்துவ தனிநபர்வாதத்தின் தலைகீழ் வடிவம்தான் அராஜகவாதம். ............அராஜகவாதம் நம்பிக்கையின்மையின் விளைவு. ஒரு முடிவுக்கு வராத அறிவுஜீவி அல்லது நாடோடியின் மனோபாவமே அராஜகவாதம். பாட்டாளி வர்க்கத்தினுடையது அல்ல. பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தை புரிந்து கொள்ளத் தவறுவது முதலாளித்துவ சமூகத்தில், அரசியலை அபத்தமாக மறுதலிப்பது. தொழிலாளர்களை அமைப்பாக்குவதன் அவர்களுக்கு கல்வியூட்டுவதன் பாத்திரத்தைப் புரிந்து கொள்ளத் தவறுவது. ஒருதலைபட்சமான, தொடர்பில் லாத வழிகளை உள்ளடக்கிய சர்வரோக நிவாரணிகள். அனைத்துக்குமான தீர்வுகள், அரசியலை மறுதலிப்பது என்ற பெயரில் உழைக்கும் வர்க்கத்தை முதலாளித்துவ அரசியில் முன் மண்டியிடச் செய்வது.’

இகக மா நடைமுறைப்படுத்தும் இடதுசாரி ஒற்றுமை

நடைமுறைத் தளத்தில் அவர்களது இடதுசாரி ஒற்றுமை, இடது முன்னணி அரசாங்கங்களில் மய்யங் கொண்டுள்ளது. அவர்களது ஒட்டுமொத்த அரசியல் வழியில், அவர்களுக்கு இடதுசாரி ஒற்றுமையைக் காட்டிலும், இடதுசாரி ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையே முக்கியமானது. ஜனநாயக சக்திகள் என்ற பெயரில் மதச்சார்பற்ற அணி, சர்வாதிகார எதிர்ப்பு அணி என்ற வேறுவேறு பெயர்களில் முதலாளித்துவக் கட்சிகளுக்கு வால்பிடிப்பது, மக்களுக்கு மக்க ளின் போராட்டங்களுக்கு தருகின்ற முக்கியத்து வத்தைக் காட்டிலும், பழைய புதிய முதலாளித்துவ கட்சிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் தருவது எளிதா கிறது. மக்களின் ஆற்றலின் மீது உள்ள நம்பிக்கையைக் காட்டிலும் கூடுதல் நம்பிக்கையை முதலாளித்துவக் கட்சிகள், தலைவர்கள் மீது வைக்கிறார்கள். இதனால் சுதந்திரமான இடதுசாரி அரசியல், போராடும் இடதுசாரி ஒற்றுமை ஓரங்கட்டப்படுகின்றன.

ஒரு பரந்த எதிர்க்கட்சி அல்லது ஜனநாயக அய்க்கியத்தின் சுதந்திரமான அரசியல் கருவாக, இடதுசாரி அய்க்கியம் இல்லை. மாறாக துண்டிக்கப் பட்ட பகுதியாக, முதலாளித்துவ முகாமின் அணிசேர்க்கை, மறு அணிசேர்க்கை சார்ந்ததாகக் கருதப்படுகிறது. இடது முன்னணி அரசாங்கங்களின் விஷயத்தில் மட்டுமே ஏதோ ஒரு வித அய்க்கியமாக இடதுசாரி அய்க்கியம் விளங்குகிறது. மற்றபடி பல நேரங்களில் அரசியல் முனைப்பு அழுத்தம் ஏதுமில்லாத வெகுமக்கள் அமைப்புக்களின் கூட்டு நடவடிக்கைகள் மூலம் அடையப்படுவதாகவே, இடதுசாரி அய்க்கியம் காணப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கட்சி தலைமை தாங்கும் இடது முன்னணி அரசாங்கங்களுக்கு அவர்களது புதுப்பிக்கப்பட்ட திட்டம், சில சில்லறை நிவாரணங்கள் வழங்குவது, எல்லைகளுக்குட்பட்டு மாற்று கொள்கைகளை நிறுத்துவது என்பதுதான். இவற்றிற்கும் முதலாளித்துவ சமூகத்தில் ஒரு புரட்சிகர கட்சி ஆற்ற வேண்டிய மக்கள் ஆதரவு சீர்திருத்தங்களை கையில் எடுப்பது, ஒரு புரட்சிகர மாற்றுக்காக மக்களை அணிதிரட்டுவது, இருக்கிற எல்லைகளை தாண்டிச் செல்வது என்ற கடமைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இந்த அரசுகள் மற்ற முதலாளித்துவ கட்சிகளின் அரசுகளோடு ஒப்பிடும்போது, மக்களுக்கு எந்த கூடுதல் நிவாரணமும் தருவதில்லை. உண்மையில் இவர்கள் தனியார்மய, தாராளமய, உலகமய நவதாராளவாத கொள்கைகளை திறன்வாய்ந்த விதத்தில் முன்னிறுத்துபவர்களாக செயல்படுகிறார்கள்.

நமது பார்வையில் இடதுசாரி ஒற்றுமை

நாம் முன்வைக்கும் இடதுசாரி பெருங்கூட்டமைப்பு என்ற முழக்கம், புரட்சிகர ஜனநாயகத்திற்கும் சமூக ஜனநாயகத்திற்கும் இடையிலான இரு செயல்தந்திரங்களுக்கு இடையிலான ஒரு போராட் டத்தின் விளைவாகவே முன்வைக்கப்படுகிறது. நமது முழக்கங்கள் யதார்த்தமானவையாக இருக்க வேண்டும். அவை நிகழ்காலத்தின் ஸ்தூலமான கடமைகளைக் கொண்டிருக்கிற அதே நேரம் நமது முன்னேற்றத் திசை பற்றிய வழிகாட்டுதல்களையும் கொண்டிருக்க வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட சூழலில் எதை மட்டும் அடைய முடியுமோ அந்த அளவுக்கு மட்டுமே நமது முழக்கங்களையும் கடமைகளையும் சுருக்கி நிறுத்து வது காரியசாத்தியவாதமாகும். இதற்கும் மார்க்சியத்திற்கும் பொதுவானது எதுவும் இல்லை. அதேபோல், யதார்த்தத்தில் இருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட அகநிலை விருப்பங்களின் அடிப்படையிலான முழக்கங்கள் அரசியல் சூதாட்டமாகவே இருக்க முடியும். திரிபுவாதிகள் நிகழ்காலத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். கற்பனாவாதிகள் எதிர்காலம் தொடர்பான வண்ணமயமான கனவுகளில் மூழ்கி, நிகழ்காலத்தை மறுதலிக்கிறார்கள். நமது முழக்கம், கம்யூனிஸ்ட்டுகள் நிகழ்காலத்தில் எதிர்காலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்ற மார்க்சிய அடிப்படையில் எழுப்பப்படுவதாகும்.

இந்தத் திசைவழியை கவனத்தில் கொண்டு கட்சி உருவாக்கியுள்ள அகில இந்திய இடதுசாரி ஒருங்கி ணைப்பு ஓர் அடக்கமான துவக்கமே. இன்றளவில், உடனடியான பற்றியெரியும் பிரச்சனைகள் மீது, ஒரே அணுகுமுறையோடு, புரிதலோடு ஒருங்கிணைவதற்கான ஒரு மேடையாகவே அது திகழ்கிறது. இதனை கவனத்துடன் வளர்த்தால், இது ஒரு நீண்ட பயணமாக அமைய முடியும். இந்த சிறிய துவக்கம், இந்திய இடதுசாரிகளின் மறுஅணிச்சேர்க்கை மற்றும் புரட்சிகரமயமாக்குதல் ஆகியவற்றுக்கான மகத்தான சாத்தியப்பாடுகளைக் கோடிட்டுக் காட்டுகிறது.தமிழக தொழிலாளர் இயக்கத்தின் முன்

எழுந்து வருகிற சவால்கள்

                                                                                              பி.சிவராமன்

வரலாறு இணையான நிகழ்வுகள் பல நிறைந்தது. 40 வருடங்களுக்குப் பின் செல் வோம். கருணாநிதி அதிகாரத் திற்கு வரத் துவங்கியபோது, சென்னை மாநகராட்சி மஸ்டர் ரோல் ஊழல் உட்பட பல ஊழல்கள் அவரை துரத்தத் துவங்கின. இப்போது நாடு முழுதும் உள்ள அரசியல் நோக்கர்கள் ஒரு கேள்விக்கு விடை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். மெகா ஊழல் மேக மூட்டத்தில் மதிப்பிழந்து போய், தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் தனது மகன்களில் ஒருவரிடம் தாமாக முன்வந்து ஆட்சியை ஒப்படைத்துவிட்டு பதவி விலகுவாரா? அல்லது, வருகிற தேர்தல்களில் தோற்றுப் போய் வெளியேறுவாரா? அவருடைய பினாமி வாரிசு ஸ்பெக்ட்ரம் ராஜா என்ற தனித் தன்மையை பெற்றிருக்கும்போது, ஊழல் பேரரசர் என்ற பட்டம் கருணாநிதி வெளியேறும்போது அவருக்கு இல்லாமல் போய்விடுமா? எப்படியாயினும், நீண்ட, ஆனால் அவ்வப்போது குறுக்கீடுகளுக்கு உள்ளான தனது ஆட்சி காலங்களில், மெகா ஊழல்களில் துவங்கி மெகா ஊழல்களில் முடிக்கும் ஒரு மூத்த முதலமைச்சர் என்ற தனிப்பெருமையை அவர் ஏற்கனவே பெற்றுவிட்டார். முதல் கோணல், முற்றிலும் கோணல்.

அவரது ஆட்சிக் காலங்களில் ஒரே மாதிரியான சில நிகழ்வுகளை நாம் காண முடியும். 1971ல், கருணாநிதி தலைமையிலான திமுக, (இந்திரா) காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து பெருவெற்றி பெற்றது. 226 இடங்கள் கொண்ட சட்டமன்றத்தில் 205 இடங்களை, அதாவது 90% இடங்களை வென்றது. சமீபத்தில் பீகார் தேர்தல்களில் நிதிஷ் பெற்ற வெற்றியைவிட பெரிய வெற்றி! அடுத்த ஆறே ஆண்டுகளில், 1977ல் திமுக, அவரது தலைமையில் வெறும் 48 இடங்கள் மட்டும் பெற்று தோல்வியும் கண்டது. எம்ஜிஆரின் அஇஅதிமுகவால் தோற்கடிக்கப்பட்டது. இந்த மிகப் பெரிய மாற்றத்துக்கு காரணம் கருணாநிதியின் ஊழல் நடவடிக்கைகள் என்று பத்திரிகையாளர்கள் சொன்னார்கள். இது உண்மை. ஆனால் தமிழ்நாட்டில் தேர்தல்கள் பற்றி நெருக்கமாக ஆய்வு செய்தவர்கள் திமுகவின் தொழிலாளர் விரோதப் போக்கும் ஒரு முக்கிய காரணம் என்பதை அங்கீகரிப்பார்கள். திமுகவின் சமூக ஆதரவு அடித்தளத்திலும் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது.

உண்மையில், துவக்கத்தில், 1960களில் அமைப்பாக் கப்பட்ட தொழில்துறையின் பெரும்பான்மை தொழிலாளர்கள் அரசியல்ரீதியாக திமுக வுடன்தான் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். ஆனால், தீவிரமான காங்கிரஸ் எதிர்ப்பு வாய்வீச்சில் ஈடுபட்டி ருந்த கட்சி, மாநிலத்தில் உள்ள பெரிய தொழிலதிபர்களின் முழுமையான அடிமையானதைப் பார்த்த பிறகு, பல தொழிலாளர்கள் திமுகவிடம் இருந்து விலகத் துவங்கினார் கள். 1967 – 1969ல், அம்பத்தூர் – பாடி பகுதியில் உள்ள டிவிஸ், டிஅய்சைக்கிள்ஸ், டன்லப் மற்றும் பிற ஆலை களில், போராடும் தொழிலாளர்கள் மேல், அரசு ஆதரவு டன் ரவுடித்தனம் ஏவப்பட் டது. திமுகவின் இந்த தொழிலாளர் விரோதப் போக்கு, அண்ணாதுரை இறந்த பிறகு கருணாநிதி ஆட்சிக்கு வந்த அதன் முதல் ஆட்சிக் காலத்திலேயே துவங்கிவிட்டது என் றாலும், எங்கும் கண்டிராத வெற்றிக்குப் பிறகு அமைந்த கருணாநிதியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில், சிம்சன், பி அண்டு சி மில்ஸ், எம்ஆர்எஃப், அசோக் லேலண்ட் தொழிலா ளர்கள் மற்றும் பல எண்ணற்ற தொழிலாளர்களின் மகத்தான போராட்டங்களுக்கு நகரம் முழுதும் உள்ள தொழிலாளர்களின் ஒருமைப்பாட்டு போராட்டங்கள் என வேலை நிறுத்தப் போராட்ட அலை எழுந்தது. திமுக ஆட்சியின் ஆதரவு பெற்ற தொழிலாளர் விரோத மாஃபியா ஆட்சி சிம்சன் தொழிலாளர் போராட்டத்தில் அதன் உச்சத்தைத் தொட்டது. அவர்களுக்கு தக்க பாடம் கற்பித்து தொழிலாளர்களும் வரலாறு படைத்தார்கள். 1970களின் துவக்கத் தில் தொழில்துறை தொழிலாளர்களுக்கு கருணாநிதி என்ன செய்தாரோ அதையே தான் 1990களின் துவக்கத்தில் மோடி, மனிதப் படுகொலை அளவுக்கு சிறுபான்மை மக்களுக்குச் செய்தார். அந்த வரலாறு நமக்குத் தெரியும்.

கீழ்வெண்மணியில் உச்ச றத்தை அடைந்த நிலப்பிரபுக்களின் மூர்க்கமான தாக்குதல்களை கண்டு கொள்ளாமல் இருந்ததில் மிகவும் தெளிவாக வெளிப்பட்ட திமுகவின் தலித் – விரோத, விவசாயத் தொழிலாளர் விரோத போக்குகள், பணக்கார விவசாயிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் நலன்களை பாதுகாத்தது ஆகியவற்றைத் தொடர்ந்து, தொழிலாளர் எழுச்சி மீதான அரசு ஒடுக்குமுறை நடந்தது. திமுகவின் கோட்டைகள் உட்பட பல தொழிற்சாலை பகுதிகளில் செங்கொடிகள் உயர்ந்தன. திமுகவின், கருணாநிதியின் முதலாளித்துவ ஆதரவு, நிலப்பிரபுக்கள் ஆதரவு போக்குகள் பெரும்எண்ணிக்கையிலான தொழிலாளர்களை அந்நியப்படுத்தின. முறைகேடுகள், திமுக பிளவு ஆகியவ ற்றை பயன்படுத்தி பாட்டாளி வர்க்கப் பிரிவினர் திமுகவை ஆட்சியதிகாரத்தில் இருந்து தூக்கியெறிந்தனர். பொது நிதியை சூறையாடிய கைகள் தொழிலாளர்களின், கிராமப்புற வறியவர்களின், அண்ணா மலை பல்கலை கழகத்தின் உதயகுமார் போன்ற மாணவர் தலைவர்களின் ரத்தக் கறை படிந்த கைகளாகவும் இருந்தன. கருணாநிதி தனது தோல்விக்கு மக்களின் சினிமா மோகத்தை பழி சொன்னாரே தவிர, தனது தொழிலாளர் விரோத போக்குகள் பற்றி கவலைப்படவே இல்லை.

1977ல் இருந்ததைப் போன்ற நிலைமைகள் 2010ல் உருவாகியுள்ளன. 2006 – 2010ன் அய்ந்தாண்டு காலத்தில் தொழிலாளர்களின் பற்றி யெரியும் பிரச்சனைகளை கருணாநிதி அரசு சிறிதும் கண்டு கொள்ளவில்லை. தொழிலாளர் உரிமைகளை, தொழிற் சங்க உரிமைகளை உத்தரவாதப்படுத்தவில்லை. நிரந்தரமற்ற தொழிலாளர்கள் சட்ட விரோதமாக சுரண்டப்படுவதை கண்டுகொள்ளவில்லை. பிரச்சனைகள் இவை மட்டுமல்ல. திமுக அரசு தமிழ்நாட்டில் தொழிலாளர் போராட்டங்களை நசுக்க, தொழிற்சங்க இயக்கத்தை முடக்க நாசுக்கான வழிகளை கையாள்வதும் பிரச்சனையே.

ஊழல் பூதம் கருணாநிதியை மீண்டும் விரட்டுவது போல் தொழிலாளர் சீற்றம் என்ற பூதமும் அவரை மீண்டும் விரட்டுகிறது. தேசிய ஊடகங்கள் திமுகவின் ஊழல் பற்றி கவனம் செலுத்துகின்றன. ஆனால் தொழிலாளர் சீற்றத்தின் மேல் கவனம் செலுத்துவதில்லை. ஸ்பெக்ட்ரம் ராசாவை கிழித்தெறிவதில் ஊடக சர்க்கஸ் மும்முரமாக இருக்கிறது. ஆனால் பொது மக்கள் நினைவாற்றலை விட ஊடக நினைவாற்றல் குறைவானது. என்எஃப்டிஈ மற்றும் எஃப்என்டிஓ சங்கங்களின் தலைமையில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் தொழி லாளர்கள்தான் 2ஜி ஊழலை முதலில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தனர். இந்த ஊழலுக்கு எதிராக நாடு முழுதும் நடத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டங்கள் 11.07.2007 வேலை நிறுத்தத்தில் நிறைவு பெற்றன. அமைச்சர் ஆ.ராசா ஊழல், 2 ஜி ஊழல் மட்டும் அல்ல. தனது பினாமி நிறுவனங்கள் உட்பட தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு ஆதரவாக, அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் செல்சேவை தருவதற்கான ஆணையை திருத்தி, தாமதப்படுத்தி, பிஎஸ்என்எல்லை தந்திரமாக பலவீனப்படுத்தியதும், பங்குச் சந்தை வீழ்ச்சிக்குப் பிறகு, பங்குச் சந்தை நிலவரங்கள் மிகவும் பாதகமாக இருந்தபோது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 30% பங்கு விற்பனைக்கு பூர்வாங்க ஏற்பாடுகள் செய்ததும் போராட்டத்தில் பிரச்சனைகளாக முன்வைக்கப்பட்டன. அந்த சமயத்தில், வேலை நிறுத்தம் பற்றி தேசிய ஊடகங்கள் வெளியிட்ட ஒரே செய்தி என்னவென்றால், அது தொலைதொடர்பு சேவைகளை பாதித்து, பொருளாதாரத்துக்கு நட்டத்தை ஏற்படுத்தியது என்பதுதான். ஊடகங்களின் ஆய்வு நிபுணர்கள் யாரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் எழுப்பிய கோரிக்கைகள் என்ன என்பதை விசாரித்து தெரிந்து கொள்ளவோ, அவர்கள் சொல்கிற ஊழல் நாட்டிற்கு இழப்பு ஏற்படுத்துகிறதா என்று கண்டறியவோ அக்கறை காட்டவில்லை. இப்போது ரூ.1.74 லட்சம் கோடியில் எத்தனை பூஜ்ஜியங்கள் என்று எண்ணுவதில் அவர்கள் மும்முரம் காட்டுகிறார்கள். எப்படியாயினும், திமுகவின் ஊழல்கள் மீது ஊடகங்கள் வெளிச்சம் பாய்ச்சுவது நல்ல விஷயமே. நாம் மிகவும் குறைவான ஊடக கவனம் பெற்ற, 2011ல் திமுகவுக்கு பெரும் நட்டம் ஏற்படுத்தக் கூடிய திமுகவின் தொழிலாளர் விரோத போக்கு மீது கவனம் செலுத்தலாம்.

2011ல், 1977 மீண்டும் நடந்திருக்காவிட்டாலும், திமுகவின் ஸ்பெக்ட்ரம் கூட்டாளியான காங்கிரசின் தலைவர்களே, தமிழ்நாட்டில் ஒரு கட்சி ஆட்சி என்பது இனி வரலாறு என்றே அறுதியிட்டுச் சொல்கின்றனர். தொழிலாளர்கள் மட்டுமின்றி அனைத்து பிரிவு வெகுமக்களும் திமுக ஆட்சிக்கு எதிராக கடுமையாக சீற்றம் கொண்டுள்ளனர். 2006ல், ரூ.1 அரிசி, வண்ணத் தொலைக்காட்சி, போன்ற ஜனரஞ்சக வாக்குறுதிகளின் பலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே, 2011ல் அதே நாடகத்தை மீண்டும் நடத்துவது கடினமானதே. வாக்காளர்களை எல்லா தேர்தல்களிலும் எப்போதும் ஏமாற்ற முடியாது. வாக்குறுதிப்படி நிலமோ, வண்ணத் தொலைக் காட்சியோ பெறாதவர்கள் திமுகவுக்கு வாக்களிக்க மறுத்தால் என்ன ஆகும்? ஸ்பெக்ட்ரம் கொள்ளையில் இருந்து ஒரு பங்கை, சில பெரிய ரூபாய் தாள்களை கொடுப்பது என்ற திருமங்கலம் சூத்திரத்தை மாநிலம் முழுவதற்குமாக பொதுமைப்படுத்திய பிறகும் திமுகவுக்கு வாக்களிக்க மறுத்தால் என்ன ஆகும்? வாக்குறுதிகளை வாரி இறைப்போம்; வாழ்வுரிமைகளைத் தட்டிப் பறிப்போம். இதுதான் கடந்த 5 ஆண்டுகளாக திமுகவின் லட்சியமாக இருந்துள்ளது.

திமுக இப்போது வளர்ச்சி பற்றி பெருமை பேசுகிறது. நிதிஷ் மந்திரம் தமிழ்நாட்டிலும் பலிக்கும் என்று அவர்கள் கடைசியாக நம்பக்கூடும். திமுக தமிழ்நாட்டை இந்தியாவின் முதல் தொழில் மாநிலமாக மாற்றும் என்று திமுக அமைச்சர் சொல்கிறார். ஆனால் என்ன விதமான வளர்ச்சி? யாருக்கான வளர்ச்சி? பன்னாட்டு நிறுவனங்களின், பெருந்தொழில் குழுமங்களின் வளர்ச்சி என்றால், அனைத்தும் பறிக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு ஏதுமில்லை என்று பொருள். கருணாநிதி குடும் பம் கொள்ளையடித்தது போக, கருவூலத்தில் மிஞ்சியுள்ள நிதியை, கருணாநிதி, தொழில் நகரங்கள், தொழில் தாழ்வாரங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தொழிற்பேட்டைகள், தொழில்நுட்ப பூங்காக்கள், ஜவுளி பூங்காக்கள் போன்வற்றை அமைக்க செலுத்துகிறார். விவசாயிகளுக்கு நீர்ப்பாசனத்துக்கு மின்சாரம் கிடைக்காமல் போகலாம். நகர்ப்புற வறிய மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் போகலாம். ஆனால் தொழிற்சாலை நடத்துபவர்களுக்கு நிச்சயமான மின் விநியோகம் பற்றிய வாக்குறுதி கிடைக்கும்.

அவைகளின் எண்ணிக்கை என்ற பொருளில் தமிழ் நாடு முதலிடம் பெறுவதில் வியப்படைய ஏதுமில்லை. ஆனால், அதிக எண்ணிக்கை யில் தற்காலிகமயமாக்கப்பட்ட ஆலைத் தொழிலாளர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. உறுதிப்படுத்தப்பட்ட உள்கட்டுமான வசதிகள் இருப்பதால், அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. ஆனால் ஆலை தொழிலாளர்களுக்கு தொழிலாளர் காப்பீடு மற்றும் வைப்பு நிதி ஆகியவற்றை மறுப்பதில் உயர்ந்த இடத்தில் இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தொழில் வளர்ச்சியில் முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு தொடர்ந்து இருக்கலாம். ஆனால் முக்கிய தொழிற்துறைகளில் கூலியின் மட்டம் என்பதைப் பொறுத்தவரை, முதலிட மாநிலங்கள் வரிசையில் தமிழ்நாடு எப்போதும் இருந்ததில்லை. உதாரணமாக, ஆட்டோமொ பைல் தொழில் வளர்ச்சி பெறுவதால், இந்தியாவின் டெட்ராய்ட் என்று சென்னை அறியப் படலாம். ஆனால், ஆட்டோமொபைல் (கார், இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள்) மற்றும் ஆட்டோ பாகங்கள் உற்பத்தியில் உள்ள தொழிலாளர்களின் கூலி மட் டும் சர்வதேச கூலி மட்டத்துடன் ஒப்பிடுகையில், சீனா, பிரேசில் போன்ற பிரிக் நாடுகள், தென்கொரியா போன்ற நாடுகளில் உள்ள கூலி மட்டத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. தொழில்துறை வேலை வாய்ப்பில் முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கலாம். ஆனால், வேலை வாய்ப்பின்மை, லே ஆஃப் ஆகியவற்றில் தமிழ்நாடுதான் முதலிடம். தொழிற்சங்க இயக்கத்துக்கு பிறப்பிடமாக தமிழ்நாடு இருக்கலாம். ஆனால் இன்று தமிழ்நாட்டில் உள்ள ஆலைகளில் 10% ஆலைகளில் கூட சங்கம் இல்லை.

போக்குவரத்து, நுகர்பொருள் வாணிபக் கழகம் போன்ற தொழிற்சாலை அல்லாத அமைப்பாக்கப்பட்ட துறைகளானாலும், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெருந்தொழில் குழுமங்களின் பெரிய மற்றும் நடுத்தர ஆலைகளானாலும், ஆயத்த ஆடை நிறுவனங்கள் உள்ளிட்ட சிறுவீத தொழிற்சாலைகளானாலும், தமிழக நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அமைப்புசாரா துறைகளானாலும், இங்குள்ள தொழி லாளர்கள் அடுத்தடுத்து தொடர்ந்து தாக்குதல்களை எதிர்கொள்கிறார்கள். ஆனால் திமுக ஆட்சி தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்க, தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க ஏதும் செய்யவில்லை. போர்க்குணமிக்க போராட்டங்கள் அன்றாட நிகழ்வுகளாக இருக்கும்போது, சட்டத்தின், நீதியின் ஆட்சியை உறுதி செய்ய, அனைத்தையும் அழிக்கும் மூலதனத்தை கட்டுப்படுத்த, பொருத்தமான சட்டங்களை நிறைவேற்றி கொள்கை மட்டத்தில் தலையீடு செய்வது அரசாங்கத்தின் பாத்திரமாக இருக்க வேண்டும். தொழிற்சங்க இயக்கம் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பியபோதும் 2006 –2011ல், திமுக ஆட்சி எந்த ஒரு தொழிலாளர் சார்பு கொள்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திமுக சங்கத் தமிழுக்கு பாராட்டுவிழா எடுக்கும். ஆனால் சமகாலத்திய தமிழக தொழிலாளர்களின் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும். கடந்த 5 ஆண்டுகளில் தொழிலாளர் பிரச்சனைகளில் திமுக ஆட்சி என்ன செய்தது என்று பார்ப்போம்.

வேலை அளிப்பவர்கள் தொழிற்சங்க சட்டத்தை ஒரு பொருளற்ற வெற்றுக் காகிதமாக மாற்றிவிட்டனர். தொழிலாளர்களுக்கு சங்கம் அமைக்கும் உரிமை மட்டும் உண்டு, நிர்வாகம் சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற உரிமை இல்லை.

பெரும்பான்மை உறுப்பினர்கள் உள்ள தொழிற் சங்கத்தை அங்கீகரிக்கும் சட்டம் இயற்றுவதற்கு பதிலாக, திமுக அரசாங்கம், சாலைப் போக்குவரத்து கழகத்தில் திமுக சங்கத்துக்கு மட்டும் ஒப்பந்தம் பேசும் உரிமையை வழங்கி பிற எல்லா சங்கங்களையும் ஒன்றுமில்லாதவையாக்கிவிட்டது. ஆக, அங்கீ காரத்துக்கான உரிமை வழங்காமல் இருப்பதன் மூலம் தொழிற்சங்க உரிமையை சீர்குலைப்பது கூட்டுபேர உரிமையை சீர்குலைப்பதாகும். திமுக அரசாங்கம் தனது திமுக தொழிற்சங்க அடிவருடிகளி டம்தான் பேசும் என்றால் அதை பேரம் என்று ஏன் அழைக்க வேண்டும்? அந்த கருங்காலிகளை கூட்டுபேர முகவர்கள் என்று ஏன் சொல்ல வேண்டும்?

திமுக அரசாங்கத்தின் கொள்கைகள் கல்விக் கடைகளுக்கு ஒரு சுதந்திர வெளியை திறந்துவிட்டுள்ளன. தமிழ்நாட்டில் கல்வி நல்லதொரு வர்த்தகம். அதன் விளைவுகளை ஆசிரியர்களே சுமக்க வேண்டியுள்ளது. அவர்கள் அடிமைகளாக்கப்பட்டுவிட்டனர். முந்தைய ஜெயலலிதா அரசாங்கம், அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் செலுத்தியது என்றால், தற்போதைய திமுக அரசாங்கம் அரசு ஊழியர்கள் பால், குறிப்பாக அவர்கள் ஓய்வூதிய உரிமைகள் பற்றி காட்டும் அக்கறையின்மையால், அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக கொலை செய்கிறது.

முன்மாதிரி வேலையளிப்பவர் என்று ஒரு காலத்தில் பொதுத்துறை அறியப்பட்டது. ஆனால் இப்போது அது கொடூரமான ஒப்பந்தத் தொழிலாளர் முறைக்கு முன்மாதிரியாகிவிட்டது. ரயில்வே, துறைமுகம், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் என மத்திய துறைகளில் ஒப்பந்தத் தொழிலாளர் எண்ணிக்கையில் அய்தராபாதை அடுத்து இரண்டாவது இடத்தில் சென்னை உள்ளது. சென்னையில் உரிமம் பெற்ற ஒப்பந்தக்காரர்களின் கீழ் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்கள் 2,07,790 பேர் உள்ளனர். மணலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், மெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ் போன்ற பொதுத் துறை நிறுவனங்கள், கனரக வாகன தொழிற் சாலை, சென்னை துறைமுகம் போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் ஆகியவற்றில் ஒப்பந்தத் தொழிலாளர் எண்ணிக்கை நிரந்தர தொழிலாளர் எண்ணிக்கையை விடக் கூடுதல். இது ஒப்பந்தத் தொழிலாளர் ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஒழித்தல் சட்டத்தை கேலிக் கூத்தாக்குகிறது. மட்டுமின்றி வேலை அளிப்பவர் என்ற பொருளில் அரசாங்கம் அநீதி இழைக்கிறது. ஒவ்வொரு வருடமும் இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களிடம் இருந்து அரசாங்கத்தாலும் ஒப்பந்தக்காரர்களாலும் கொள்ளையடிக்கப்பட்ட பணம் கருணாநிதி – ராசா கூட்டு அரசாங்கத்திடமிருந்து அடித்த கொள்ளையை விட மிகக் கூடுதலாய் இருக்கும். ஆனால் முதலாளித்துவ ஊடகங்களின் கண்களுக்கு இது ஊழல் என்று தெரியாது. என்எல்சியின் 10,000க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் மீண்டும் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களுக்காக கருணாநிதி முதலைக் கண்ணீர் கூட வடிக்கவில்லை. சட்டத்தை பிரயோகித்து நிரந்தரத்தன்மை கொண்ட வேலைகளில் ஒப்பந்த முறையை ஒழிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தும் திமுக அரசு அதன் சுண்டு விரலைக் கூட அசைக்கவில்லை.

அமைப்பாக்கப்பட்ட துறையில், தமிழக தொழில் முகத்தின் எல்லா பிரபலமான பெயர்களும் தொழிலாளர் போராட்டங்களால் செய்திகளில் அடிபட்டன. ஆட்டோ மொபைல் மற்றும் உயர்தொழில்நுட்ப தொழில் பேட்டைகள் பொறுத்தவரை, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்கள், குறிப்பாக, திருபெரும்புதூர், இருங்காட்டுக் கோட்டை, ஒரகடம் பகுதி, குர்கான், மனேசர் மற்றும் காசியாபாத், ஃபரிதாபாத் மற்றும் நோய்டாவை உள்ள டக்கிய தேசிய தலைநகர் பகுதியுடனும், ஓரளவுக்கு புனே, நாசிக் பகுதியுடனும் போட்டி போடும் பகுதியாக உள்ளது. ஆனால் ஹ÷ண்டாய், ஃபாக்ஸ்கான், நோக்கியா ஆலைகளின் தொழிலாளர் போராட்டங்கள், குர்கான் – மனேசரில் உள்ள ஹோண்டா ஸ்கூட்டர்ஸ், ரிகோ ஆட்டோ, மாருதி சுசுகி மற்றும் புனே – நாசிக்கில் உள்ள பஜாஜ் ஆட்டோ மற்றும் மஹிந்திரா அண்டு மஹிந்திரா தொழிலாளர்களின் போராட்டங்களுடன் ஒத்தவையாக உள்ளன. 2009ல் சர்வதேச பொருளாதார நெருக்கடியால் 50 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். தமிழ்நாட்டில் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். தொலைதொடர்பு துறையில் கொள்ளையடிப்பதில் மும்முரமாக இருந்த திமுக, வேலையிழந்த தொழிலாளர்களின் வாழ்வுரிமை காக்கும் நடவடிக்கைகள் எடுக்க அதன் அய்முகூ தலைமையை வலியுறுத்தவில்லை.

தமிழ்நாட்டின் அமைப்புசாரா தொழிலாளர்களும் பல்வேறு தாக்குதல்கள் எதிர் கொள்கின்றனர். கிட்டத்தட்ட இரட்டிப்பாகிவிட்ட நூல் விலை தமிழகத்தின் கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்களை துன்பத்தில் தள்ளியுள்ளது. தயாநிதி மாறன் பஞ்சாலை முதலாளிகளின் கவலைகள் பற்றி பேசுகிறாரே தவிர, நெசவாளர்களுக்கு நிவாரணம் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. உண்மையில் மாநில அரசுத் துறை நிறுவனமான உப்பு கழகம், அதன் வேலைகள் பருவகால வேலைகள் என்பதால் உப்பளத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி தர வேண்டியதில்லை என்று சொன்னதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்டனத்துக்குள்ளானது. உப்பு உற்பத்தியில் குஜராத்துக்கு அடுத்து அதிக உற்பத்தி செய்யும் மாநிலமான தமிழ்நாட்டின் பல்லாயிரக்கணக்கான உப்பளத் தொழிலாளர்கள், வேதாரண்யம், தூத்துக்குடி, நாகர்கோயில், விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் சுனாமியால் தங்கள் வாழ்வுரிமைகளை இழந்தார்கள். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிவா ரண நடவடிக்கைகளுக்கான அவர்கள் கோரிக்கையை ஏற்க மறுத்தது.

யாதும் ஊரே, யாவரும் கேளிர்.... என்று துவங்கி கருணாநிதி பாட்டெழுதுவார். ஆனால், ஒடிசா, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து வரும் இடம்பெயரும் தொழிலாளர்கள் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள செங்கல் சூளைகளில் கொத்தடிமை முறையில் சுரண்டப்படுவார்கள். அவர்கள் உழைப்பில் சென்னையைச் சுற்றி நில வர்த்தகம் வளரும்.

தமிழக தொழிலாளர்களின் இதுபோன்ற பிரச்சனைகளை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். மொத்தத்தில் தமிழ்நாட்டின் தொழிலாளர் வர்க்கம் கருணாநிதியை வெளியேற்ற தயாராகியே தீர வேண்டும்.

இறுதியாக ஒரு விஷயம் சொல்ல வேண்டும். ஒரு துடிப்பான தொழிலாளர் அச்சு ஊடகம் இல்லாமல், உலகில் எங்குமே ஒரு சக்தி வாய்ந்த தொழிலாளர் இயக்கம் எழுந்ததில்லை. இது ஒரு வழக்கமான நிறுவன தேவை அல்ல. அல்லது தகவல் பரிமாற்றத்துக்கான வெறும் ஊடகம் அல்ல. தொழிலாளர் வர்க்க முன்னோடிகள் கருத்துத் தளத்தில் தங்கள் சொந்த ஆதிக்கத்தை கட்டமைக்க உதவும் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம். இந்தப் பின்னணியில் தொழிலாளர் வர்க்க இயக்கம் பற்றிய கட்டுரையுடன் சிறப்பிதழ் வெளியிட தீப்பொறி ஆசிரியர் குழு எடுத்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தீப்பொறி வாசகர்களுக்கும் மூலதனத்தின் அன்றாட தாக்குதல்களை எதிர்கொள்ள கடுமையான முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கும் வீரமிக்க தொழிலாளர் வர்க்க போராளிகளுக்கும் எனது வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலில் இருந்து பெண்களை பாதுகாக்கும் மசோதா, 2010

சட்டமாக வேண்டும்! அமலாக வேண்டும்!!

நாடாளுமன்றம் நடக்க வில்லை என்று இகக, இககமா கட்சிகள் உட்பட பலரும் பெரிதும் வருத்தப்பட்டார்கள். ஜனசக்தி பத்திரிகை இகக நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடந்த காலங்களில் எப்படி யெல்லாம் நாடாளுமன்றத்தின் மாண்பு காத்தார்கள் என்று தோழர் வீரபாண்டியன் கட்டுரை மூலம் விளக்கியது. எப்போதும் அந்த மாண்பை காக்கும் கடப்பாடு இககவுக்கு உண்டு என்கிறது ஜனசக்தி பத்திரிகை. 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் இந்திய நாடாளுமன்றம் இந்திய மக்களை எந்த கட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதை வெங்காய மண்டிகள் சொல்கின்றன.

நாடாளுமன்றம் நடந்திருந்தால் விவசாயிகள் தற்கொலைகளை தடுக்க, விவசாய நெருக்கடிக்கு முடிவு கட்ட கொள்கைகள் வகுக்கப்பட்டிருக்குமா? விவசாய தொழிலாளர் நலன் காக்க சட்டம் இயற்றப்பட்டிருக்குமா? நாடெங்கும் உள்ள தொழிற் சாலைகளில் உள்ள தொழிலாளர்கள் தாங்கள் விரும்பும் சங்கத்தை அமைத்துக் கொள்ளும் ஜனநாயக உரிமை காக்க, நிரந்தரமற்ற தொழிலாளர் நலன் காக்க, பெண்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்த, அல்லது வேறு மக்கள் நல சட்டங்கள் இயற்றப்பட்டிருக்குமா? அப்போதும் வெட்டி மன்றமாகவே, லெனின் அழைத்தது போல் பன்றித் தொழுவமாகவே இருந்திருக்கும்.

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா பல நாடாளுமன்ற அமர்வுகளை பார்த்துவிட்டது. இந்த மசோதா போல் வெவ்வேறு கட்சிகளின் கூட்டணிகளின் ஆட்சிகளை கண்ட மசோதா வேறொன்று இருக்க முடியாது. இப்போது, பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 1997ல் உச்சநீதி மன்றம் முன்வைத்த வழிகாட்டுதல்கள் பெண்கள் இயக்கங்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக சட்டமாக காத்திருக்கின்றன. பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலில் இருந்து பெண்களை பாதுகாக்கும் மசோதா, 2010 டிசம்பர் 7 அன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுவிட்டது.

இந்த மசோதா சட்டமாகி விடும் வாய்ப்புக்கள் அதிகம். இதைச் சொல்லி பெண்கள் அதிகாரத்தை உறுதி செய்யும் மசோதாவை இன்னும் சில அமர்வுகள், இன்னும் சில ஆண்டுகள், இன்னும் சில ஆட்சிகள் தள்ளிப் போட்டுக் கொண்டே, பெண்கள் பிரச்ச னைகளை களைவதில் எங்க ளுக்குத்தான் அதிக அக்கறை என சொல்லிக் கொள்ளலாம்.

மசோதா பரந்து விரிந்து அனைத்துவிதமான பெண் தொழிலாளர்களையும் சட்டப் பாதுகாப்புக்குள் கொண்டு வரப் பார்க்கிறது. புகார் விசாரிக்கப்படுவதை உறுதி செய்யாத நிர்வாகத்துக்கு ரூ.50,000 அபராதம் என்கிறது. ஆயினும் பொய் புகார், வேண்டுமென்றே புகார் தரப் பட்டது என்று தெரிய வந்தால் புகார் கொடுத்த பெண் தொழிலாளி தண்டனை எதிர் கொள்ள நேரும் என்று மசோதா பிரிவு 16 சொல்கிறது. சட்டத்தின் நோக்கத்தை கொன்று புதைக்க இந்த ஒரு பிரிவு போதும்.

பணியிடத்தில் பாலியல் குற்றம் புரிந்து, புகார் செய்த ருசிகாவை, அவர் குடும்பத்தாரை அதிகாரத்தை பயன்படுத்தி மேலும் துன்புறுத்தி ருசிகாவை தற்கொலைக்கு தள்ளிய ரத்தோர் விடுதலையாகி வெற்றிப் புன்னகையுடன் வெளியே வந்தாரே?

நிரூபிக்கப்பட்ட குற்றத்தில், பாதிக்கப்பட்டு புகார் கொடுத்த பெண் மடிந்து போனதும் குற்றம் புரிந்தவர் சுதந்திரமாக உலாவுவதும் யதார்த்தமாக இருக்கும் போது பிரிவு 16 பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு அடுத்த கட்ட பாதிப்பை உருவாக்குவதாகவே அமையும். இந்தப் பிரிவுக்கு என்ன நியாயம் சொல்லப்பட்டாலும் நடைமுறை பொருளில் இது பெண் தொழிலாளர்களுக்கு எதிரானதாகவே பயன்படுத்தப்படும். எனவே பிரிவு 16 நீக்கப்பட்டு மசோதா அமலாக வேண்டும்.

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி புகார் தர துணிவு பெற்று பின் புகார் தரும் பெண் தொழிலாளர்களை இந்த மசோதா சட்டமான பின் பாதுகாக்கும்.

எப்படிப்பட்ட பெண் தொழிலாளிக்கு புகார் செய்ய துணிவு வரும்? பணிப்பாதுகாப்பு உள்ள பெண் தொழிலா ளர்கள் புகார் தர முன்வரலாம். அவர்களுக்கு சட்டம் உண்மையான பொருளில் பாதுகாப்பு தரலாம். ஆனால் நாடு முழு ம் உள்ள பெண் தொழிலா ர்க்கு பணிப்பாதுகாப்பு முதன்மை பிரச்சனையாகும் போது பிற பிரச்சனைகள் பின்னுக்குத்தானே போகும்?

தகவல் தொழில்நுட்பத் துறையில் 88% பெண்கள் பணி டத்தில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிறார்கள் என்றும் பாதிக்கப்பட்டவர்க ல் 91% பேர் பழிவாங்கப்ப லாம் என்று அஞ்சி புகார் செய்வதில்லை என்றும் 72% குற்றங்கள் மேலதிகாரிகளால் இழைக்கப்படுபவை என்றும் இந்தியாவை மாற்றுவதற்கான மய்யம் என்ற அமைப்பின் ஆய்வொன்று சொல்கிறது.

தமிழ்நாட்டின் தனிச்சிறப்பான சுமங்கலித் திட்ட பெண் தொழிலாளர்களுக்கு புகார் செய்ய துணிவு வருமா? இருக்கிற துன்பம் போதாதா? புதிதாகப் பட வேண்டுமா? அவர்கள் இந்தத் துன்பத்தை ஏற்கனவே பட்டுக்கொண்டுதானே இருக்கிறார்கள்?

அங்காடி தெரு திரைப்படத்தில் விற்பனை பெண் ணாக வரும் கதைநாயகியின் வசனம் ஒன்று: ‘மாரைப் பிடிச்சு கசக்கினான்’. கதைநாயகனும் சின்னதோர் எதிர்ப்புக்குக் கூட வாய்ப்பில்லை என்று வாழ்வதால் வெறுமனே கேட்டுக்கொள்கிறான். இது வெறும் கதைக்காக எழுதப் பட்ட வசனம் அல்லவே. எடுக்கப்பட்ட காட்சி அல்லவே. உச்சந்தலைக்குள் கத்தி பாய்ச்சுகிற நிஜம்தானே. அது போன்ற பெண் தொழிலாளர்களின் உள்ளக் குமுறல்தானே? இந்திய கிராமப்புறங்களில் சாதி, கடுவட்டி போன்ற பொருளாதாரத்துக்கு அப்பாற்பட்ட நிர்ப்பந்தங்கள் கிராமப்புற வறியவர் வாழ்க்கையை தாழ்ந்த நிலையிலேயே வைத்திருக்க பயன்படுத்தப்படுவதைப் போல், பாலியல் துன்புறுத்தலும் சேர்ந்தல்லவா அந்த பெண் தொழிலாளர்களை மிரட்டி பணிய வைக்க பயன்படுத்தப்படுகிறது? அந்த பெண் தொழிலாளர்கள் தங்கள் மேல் ஏவப்படும் பாலியல் துன்புறுத்தல்களை முறையிட முன்வருவார்களா?

இன்னும் வெவ்வெறு துறைகளில் உள்ள இவர்களைப் போன்ற இன்னும் பல லட்சக்கணக்கான பெண் தொழிலாளர்கள், தொழிலாளர் சட்டங்கள் கூட அமலாகாத நிலையில் தமக்கென சில உரிமைகள் உண்டு என்பதை அறிந்திராத நிலையில் உண்மையில் பாதிக்கப்படும்போது மேலதிகாரி மேல் அல்லது செல்வாக்குமிக்க குற்றவாளி ஒருவர் மேல் புகார் தர அவர் களுக்கு என்ன துணிவு வரும்?

இவர்கள் கூட ஒரு பக்கம் இருக்கட்டும். தமிழ்நாட்டின் காவல்துறையில் வெவ்வேறு மட்டங்களில் உள்ள பெண் காவலர்கள் சந்திக்கும் வசவுகளும் துன்புறுத்தல்களும் இந்த சட்டத்தின் கீழ் குற்றங்கள் என்று விவரிக்கப்படுபவையே. அவர்கள் மத்தியில் இருந்து புகார்கள் எழுமா?

கனிமொழி மேடை மேடையாக நம்பிக்கை சொற்பொழிவாற்றினால் தமிழக பெண் தொழிலாளர்களுக்கு துணிவு வந்து விடாது.

புகார் செய்யும் துணிவு பெற பெண் தொழிலாளர்கள் வேலை நிலைமைகளில் அடிப்படை மாற்றங்கள் பல ஏற்பட வேண்டும். புகார் செய்தால் வேலைக்கு பங்கம் நேராது என்ற நிலை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இவற்றுக்குப் பிறகு சட்ட வடிவம் பெறும் மசோதா மட்டுமே உண்மையில் பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பையும் கவுரத்தையும் உறுதி செய்யும். மசோதா சட்டமாக வேண்டும். சட்டம் அமலாக வேண்டும்.

இவை நடக்க வேண்டும் என்றால் பெண் தொழிலாளர்கள், தொழிலாளர்கள் என்ற பொருளில், பெண்கள் என்ற பொருளில் வலுவான போராட்டங்கள் நடத்த வேண்டி யிருக்கும். வேலை வாய்ப்புக்கள் பெருக, வளர்ச்சி விகிதம் அதிகரிக்க, இருக்கிற தொழிலாளர் சட்டங்கள் தடையாக உள்ளன என்று தொழிலாளர் மாநாட்டிலேயே மன்மோகன் சிங் சொல்லும்போது, இருக் கிற நிலைமைகளை மாற்ற அரசு தயாரில்லை என்று தெளிவாக தெரியும்போது பெண் தொழிலாளர்களுக்கு உண்மையிலேயே இந்த மசோதாவினால் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டுமென்றால் அந்தப் போராட்டங்கள் இன்னும் தீவிரமானவையாக இருக்க வேண்டியிருக்கும்.தலித் மக்களின் முதல் எதிரி கருணாநிதியே!

கருணாநிதி சிறந்த கதை வசனகர்த்தா மட்டுமல்ல. சீட்டாட்டத்திலும் வல்லவர். பிற்படுத்தப்பட் டோர் சீட்டு, சிறுபான்மையினர் சீட்டு, தலித் சீட்டு, கம்யூனிஸ்ட் சீட்டு, தமிழன் சீட்டு, திராவிடன் சீட்டு என தேவைக்கேற்றபடி எந்த சீட்டையும் விளையாடுவார்.

இப்போது ஊழல் ராசாவை காப்பாற்ற, தலித் சீட்டை ஆடிப்பார்க்கிறார். ராசா தலித் என்பதால்தான் அவர் வேட்டையாடப்படுகிறார் என்கிறார். ஆச்சாரியருக்கு ஒரு நீதி, ஆதிதிராவிடருக்கு ஒரு நீதியா என்று கேட்கிறார். கருணாநிதி தலித்துகளுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நண்பரா? பகைவரா? வரலாற்றின் பக்கங்களை சற்று திரும்பிப் பார்ப்போம்.

வெண்மணி தியாகிகளின்

ரத்தக்கறையைக் கழுவ முடியுமா?

1968 டிசம்பர் 25 அன்று, நாகை மாவட்டம் கீழவெண்மணியில் அரைப்படி நெல்கூலி உயர்வு கேட்டுப் போராடிய தலித் விவசாயத் தொழிலாளர்கள் நிலப்பிரபுக்களால் தாக்கப்பட்டனர். 20 பெண்கள் 19 குழந்தைகள் உட்பட 44 தலித்துகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டதை உலகமே அதிர்ச்சியுடன் பார்த்தது. தமிழ்நாட்டில் அப்போது நடைபெற்றது திமுக ஆட்சி. முதலமைச்சர் சி.என்.அண்ணாத்துரை. காவல்துறை மந்திரி மு.கருணாநிதி. 5.12.1968 அன்று முதலமைச்சருக்கு, காவல்துறைக்கு அன்றைய விவசாயிகள் சங்கத் தலைவர் வே.மீனாட்சிசுந்தரம் கடிதம் எழுதினார். கொலை வெறித் தாக்குதல் அபாயம் பற்றி சுட்டிக்காட்டினார். கருணாநிதி எடுத்த நடவடிக்கை என்ன? அதற்கு பிறகு, நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று 06.04.1973 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அரசுத் தரப்பில் குற்றத்தை நிரூபிக்கத் தவறிவிட்டதால், குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்வதாக, நீதிமன்றம் கூறி கொலைகாரர்களை விடுதலை செய்தது. கருணாநிதி முதலமைச்சராக இருந்த போதுதான், இந்த தீர்ப்பு வெளிவந்தது. கருணாநிதியால், 44 தலித்துகளின், தியாகிகளின் ரத்தக் கறையை என்றைக்கும் கழுவ முடியாது.

திமுக ஆட்சிகள் அனைத்திலும் தலித்துகள் மீது ஒடுக்குமுறைதான்

கருணாநிதி முதல்வராக இருந்தபோது, செப்டம் பர் 1989ல் போடிநாயக்கனூர் மீனாட்சிபுரத்தில் சாதி மோதல் ஏற்பட்டு முத்துப்பிள்ளை என்ற தலித் பெண் கொல்லப்பட்டார். இதன் தொடர்ச்சியாக போடி, தேனி, சின்னமனூர், ஆண்டிப்பட்டி ஆகிய இடங்களில், முதன்முறையாக நூற்றுக்கணக்கான கிராமங்களில் தலித்துகள் மீது கொடிய தாக்குதல்கள் நடைபெற்றன. தலித்துகள் ரத்தம் சிந்தினர், வீடிழந்தனர், சொத்துக்களை இழந்தனர். அப்போது காங்கிரஸ் பினாமி பிரதமர் சந்திரசேகர் மூலம், ஜெயலலிதா, திமுக ஆட்சியை கலைப்பதற்கு உருவாக்கிக் கொண்டிருந்த அரசியல் சித்து வேலைகளை பார்ப்பதற்கு கருணாநிதிக்கு நேரம் போதவில்லை. திமுக ஆட்சியைக் காப்பாற்றி கொள்வதா? தலித்துக்களைக் காப்பாற்றுவதா? இந்த சூழ்நிலையில் தலித்துகளை கைகழுவினார் கருணாநிதி.

1996ல் திமுக ஆட்சியில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றபோது, கீரிப்பட்டி, பாப்பாபட்டி, நாட்டார்மங்கலம், மருதங்குடி, மேலவளவு ஆகிய 5 தலித் ஊராட்சி தொகுதிகளில், தலித் வேட்பாளர்கள் எவரொருவரும் வேட்புமனுத் தாக்கலே செய்ய முடிய வில்லை. சாதியாதிக்க சக்திகள் தடுத்தனர். மேலவளவில் மட்டும் முருகேசன் என்பவர் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவரோடு சேர்த்து ஏழு பேர் கொல்லப்பட்டனர். பிற தொகுதிகளில், திமுக ஆட்சியிலிருந்த 5 ஆண்டுகளில் 6 முறை தேர்தல் அறிவிப்பு செய்தும் கூட எவரொருவரும் போட்டியிட முன்வரவில்லை. தலித்துகளின் நண்பனாக காட்டிக் கொள்ளும் கருணாநிதி தனது திமுக கட்சி மூலமாகக் கூட ஓர் இடத்தில் கூட வேட்பாளர்களை நிறுத்தவில்லை. தலித்துகளை விட பிறசாதிகள் முக்கியம் ஆகிப்போனது.

1996-1997ல் திமுக ஆட்சியில், தென் மாவட்டங்களில், அரசு எந்திரம் (நிர்வாகம் மற்றும் காவல்துறை) வெளிப்படையாக, தேவர், முக்குலத்தோர் பக்கம் நின்று தலித்துகளை தாக்கியது. தலித்துகளை பாதுகாக்க கருணாநிதி எதுவும் செய்யவில்லை. வடமாவட்டங்களிலும் பரவலாக தலித்துகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தலித்துகளிடம் இருந்து தொடர்ந்து அந்நியப்படுவதை உணர்ந்த கருணாநிதி, புதியதொரு வசனத்தை எழுதினார். அதுதான் சமத்துவபுரங்கள்.

1999 ஜ÷லை 23 அன்று, மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் திருநெல்வேலியில் ஊர்வலம் சென்றார்கள். திமுக அரசின் காவல்துறை ஊர்வலத்தில் சென்ற தலித் தொழிலாளர்கள் மீது காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் நடத்தியது. துப்பாக்கி சூடு நடத்தியது. தாமிரபரணி ஆற்றுக்கு துரத்தி 17 தலித் தோட்டத் தொழிலாளர்களை படுகொலை செய்தது கருணாநிதி அரசாங்கம். அப்போது தலித்துகள் மீது பாசமோ, கண்ணீரோ கருணாநிதிக்கு வரவில்லை.

1999 செப்டம்பரில், நாடாளுமன்ற தேர்தலில், சிதம்பரம் தனித் தொகுதியில் நடந்தது என்ன? தமிழ் மாநில காங்கிரஸ் மூப்பனாருடன் சேர்ந்து, திருமாவளவன் போட்டியிட்டார். ஆளுங்கட்சி திமுக கூட்டணி சார்பில் பாமக போட்டியிட்டது. மாபெரும் வன்முறை கட்டமைக்கப்பட்டது. உருவாகி வந்த தலித்துகளின் எழுச்சியை அறுதியிடலை நசுக்கிட வாக்குச் ôவடிகளுக்கு வரவே கூடாது என 21 சேரிகளை கொளுத்தினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் வெட்டப்பட்டனர். சிலர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான தலித்துகள் வாக்களிக்க முடியவில்லை. பாமகவின் வன்முறைக்கு திமுக தோள் கொடுத்ததா? தலித்துகளின் வாக்குரிமைக்கு உடன் நின்றதா?

2000ல் திருநெல்வேலி அருகே புளியங்குடியில் தலித்துகள் 3 பேர் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டனர். 2001 வரையிலான அவரது ஆட்சியிலே, தலித் எழுச்சியை தடுத்திட பல்வேறு தலித் தலைவர்கள் மீது இளைஞர்கள் மீது குண்டர் சட்டம், தடா சட்டம் என அடக்குமுறைகளை கருணாநிதி கையாண்டார். சிறையில் அடைத்தார். தலித்துகள் மீதான பாசம் அப்போது மட்டும் எப்படிப் பகையானது?

வெளிப்படையாக தலித்துகளுக்கு எதிராக வன் முறையையும் தூண்டிவிட்டவர்தான் கருணாநிதி. 2006 ஏப்ரலில், சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் அதிமுக அணியில் இருந்தது. தேவர்களுக்கும், தலித்துக்களுக்கும் இடையில் சாதிய மோதலை தூண்டும் வகையில் சிறுத்தைகள் சுதந்திரமாக உலவும் போது, ஏன் சிங்கங்கள் திரியக்கூடாது என விஷம் தோய்ந்த பிரச்சாரத்தை மேற்கொண்டார். (சிங்கம் என்பது தேவர்களின் சமூக அடித்தளத்தைக் கொண்டு உள்ள பார்வார்டு பிளாக் கட்சியின் சின்னம்).

தலித் அதிகாரியாக இருந்தாலும் நேர்மையாக இருந்தால் ஆப்பு

திமுக அரசாங்கம் அமைத்த ஒவ்வொரு முறையும், தலித் உயர் அதிகாரிகள் அதிகார வர்க்கத்தில் முக்கிய இடம் பெற முடியவில்லை. நேர்மையான, திமுக மந்திரிகளின் ஊழல்களுக்கு உடன்படாத பல அதிகாரிகள் (மாவட்ட ஆட்சியர்கள் உட்பட) தூக்கி அடிக்கப்பட்டார்கள். கருணாநிதி முதல் யாரும் அவர்களை மதிப்பதில்லை.

தலித் அய்.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கரின் கதை, கருணாநிதி தலித்துகளுக்கு ஆதரவானவரா, எதிரான வரா என்பதை தெளிவுபடுத்துகிறது. 21.07.2010ல் கருணாநிதியால் உமாசங்கர் அய்.ஏ.எஸ். தற்காலிக பணி நீக்கம் செய்யபட்டார். நேர்மையான அதிகாரியான அவர் மீது போலியான குற்றச்சாட்டுக்களை கருணாநிதியே வீசி எறிந்தார். எஸ்.சி. எஸ்.டி., தேசிய கமிஷனுக்கு 2010 ஜ÷லை 26 அன்று உமாசங்கர் அனுப்பிய கடிதம் கருணாநிதியை அம்பலப்படுத்துகிறது (1) தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடுகளும், மனைகளும் பினாமி பெயரில் திமுக அரசியல்வாதிகளுக்கும், அதிகாரவர்க்கத்தினருக்கும் வழங்கப்பட்டுள்ளது. (2) உமாசங்கர் அய்.ஏ.எஸ். எல்காட்டின் மேனேஜிங் டைரக்டராக இருந்தபோது, மே 2006ல் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள் தனது ஆதரவாளருக்கு 45,000 மீனவர் வயர் லெஸ் செட் வாங்குவதற்குரிய டென்டர் வழங்கக் கோரினார் (3) எல்காட்டும் தியாகராஜா செட்டியாரின் ஒரு கம்பெனியும் சேர்ந்து உருவாக்கிய எல்நெட்டும் அதன் துணை நிறுவனம் மூலம் உருவாக்கிய தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் 700 கோடி ரூபாய் சொத்தை அபகரிக்க தொழிலதிபர் தியாகராஜா செட்டியார் முயற்சித்ததை அடுத்து மு.க.அழகிரி தலையிட்டால் தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனத்திற்கு மாற்றப்பட்டார். (4) 2008ல் மாறன் சகோதரர்களின் சன் டிவி குழுமத்திற்கும், மு.க.அழகிரிக்கும் மோதல் நடைபெற்ற பின்னணியில் உமாசங்கர் அரசு கேபிள் டி.வி., மேனேஜிங் டைரக்டராக நியமிக்கப்பட்டார்.

மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான சுமங்கலி டி.வி அரசு கேபிள் டிவியின் சொத்துக்களை அழித்தது. மாறன் சகோதரர்களை கைது செய்ய வேண்டும் என உமாசங்கர் தமிழக அரசாங்கத்திற்கு வேண்டுகோள் அனுப்பினார். ஊழல் கொள்ளை, கருணாநிதி குடும்பத்தின் அதிகார துஷ்பிர யோகங்களை தட்டிக் கேட்டதற்கு, தலித் அதிகாரி உமாசங்கருக்கு கருணாநிதி கொடுத்தது தற்காலிக வேலை நீக்கம். ஊழல் ராசாவுக்கு அரவணைப்பு. நேர்மையானவருக்கு வேலை நீக்கம். இங்கு தலித் என்ற கதை எல்லாம் எங்கே வந்தது?

கருணாநிதி ஆட்சியில் விடுதி தலித் மாணவர்களின் அவல நிலை

2010 டிசம்பர் இறுதியில், சென்னையில், எம்.சி.ராஜா ஆதி திராவிடர் மாணவர் விடுதி மாணவர்கள், அண்ணா சாலையில் மறியல் நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். விடுதி வசதிகளை மேம்படுத்தக் கோரி, தரமான உணவுக் கோரி, தமிழ்நாடு முழுதும் ஆதிதிராவிடர் விடுதி மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். உயர்படிப்பிற்காக, கிராமங்களை விட்டு வெளியேறி நகரத்திற்கு வந்து படித்து முன்னேறிவிட வேண்டுமென்று, ஆதிதிராவிடர் விடுதிகளுக்கு வரும் தலித் மாணவர்கள் சந்திப்பது மீண்டுமொரு சேரி அல்லது குடிசை பகுதி சூழலைத்தான். பல விடுதிகளில் குளியலறைகள் கிடையாது. சுகாதாரமற்ற சமையலறைகள், தரமற்ற உணவுகள், பாதி நாட்களுக்கு மெஸ் சாப்பாடு கிடையாது, சிறிய அறைகள், சுகாதாரமற்ற கழிப்பறைகள், மின் வசதி போதாமை, சுகாதாரம் இல்லாமை என படுமோசமான நிலையில் இவ்விடுதிகள் உள்ளன.

தமிழ்நாட்டில் 1229 ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் உள்ளன. 185 விடுதிகள் தனியார் வாடகை கட்டிடத்தில் இயங்குகின்றன. சுமார் 1 லட்சம் மாணவர்கள் இதில் படிக்கின்றனர். ஆண்டிற்கு, இந்த விடுதிகளுக்கு கருணாநிதி அரசாங்கம் 4 கோடி ரூபாய்தான் தருகிறது. அதாவது, ஒரு மாணவருக்கு, ஆண்டிற்கு வெறும் 400 ரூபாயை மட்டுமே ஒதுக்குகிறது. ஒடுக்கப்பட்டதொரு சமூகத்தின் முன்னேற்றம், அதன் கல்வி பெறும் ஆற்றலில்தான் உள்ளது என்பது கருணா நிதிக்கு நன்றாகவே தெரியும். சிறந்ததொரு விடுதிச் சூழலை உருவாக்கி தலித் மாணவர்களை கைதூக்கி விட்டுவிடக்கூடாது என்பதில் கருணாநிதி தெளிவாகத்தான் இருக்கிறார்.

ஆதிதிராவிடர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கருணாநிதி அரசாங்கம் கொடுத்த மரியாதையைப் பார்ப்போம். டிசம்பர் 28ல் தமிழ்நாடு முழுவதுமுள்ள ஆதிதிராவிடர் பள்ளிகளில் பணியாற்றும் 400 ஆதிதிராவிடர் ஆசிரியர்களுக்கு மூன்று நாள் சிறப்பு பயிற்சி முகாம் கோவையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேவையான தங்கும் வசதி, குளியலறை வசதி, சாப்பாடு வசதி இல்லாது ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 400 பேருக்கு 3 நாட்களுக்கு கருணாநிதி அரசாங்கம் ஒதுக்கியது ரூ.76,000தானாம். அதாவது 3 நாளுக்கு 1 ஆசிரியருக்கு ரூ.190 மட்டுமே ஒதுக்கப்பட்டதாம். ஆதிதிராவிடர் பள்ளிகளின் தரங்களை உயர்த்திட பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு நேர்ந்த கதி இதுதான். கருணாநிதியின் தலித் மீதான பாசம் இப்படிப்பட்டதே.

கிராமப்புற, நகர்ப்புற ஏழை தலித்துகளின் நிலை

சமத்துவப் பகலவன் கருணாநிதி ஆட்சியில், கிராமங்களில் இன்னும் இரட்டைக் குவளை முறை, தீண்டாமைச் சுவர்கள், கோவில் உள்ளே நுழையத் தடை, சுடுகாட்டிற்கு செல்ல பொதுவழி இல்லாமை நாடு ஆதிக்க சட்டங்கள், தண்டனைகள், வன்கொடுமை தாக்குதல்கள் நீடிக்கின்றன. பொருளாதாரரீதியாக நிலமற்ற ஏழைகளாக, அன்றாடம் வேலைக்கு அலையும் கூலிகளாக, வீடற்றவர்களாக, இடம் பெயரும் தொழிலாளர்களாக கிராமப்புற தலித்துகள் உள்ளனர் சமூகரீதியாக மனித வளர்ச்சி மேம்பாட்டு குறியீட் டெண்ணில் தலித்துக்கள்தான் மிகவும் பின்தங்கி இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நகரங்களுக்கு இடம் பெயரும் தலித்துகளின் வாழ்நிலையோ படுகேவலமாக உள்ளது. நகர்ப்புற 60% தலித்துகள் சாக்கடைகளை ஒட்டியுள்ள குடிசைப் பகுதிகளில்தான் உள்ளனர். குடிநீர், கழிப்பிடம், சாக்கடை வசதியற்று வாழ்கின்றனர். தமிழகத்தில் வேகமான நகர்மயமாக்கம், முதலாளித்துவமயமாக்கம் நடைபெறுவதாக கருணாநிதி பீற்றுகிறார். ஆனால், தலித்துகளின் நிலையோ கீழிறங்கி கொண்டுள்ளது.

கொள்ளையர்க்கு சாதி, மத, இன பேதம் கிடையாது

சில மாதங்கள் முன், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் நாரணமங்கலம், காரை கிராமங்களில் உள்ள தலித் மக்கள் மற்றும் ஏழை விவசாயிகளுக்கு சொந்தமான 600 ஏக்கர் நிலம் கீரின் ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தால் வாங்கப்பட்டது. ஏக்கர் ரூ.40,000 முதல் ரூ.90,000 வரை மிரட்டி விலை பேசி வாங்கிய ரூ.18 லட்சம் வரை விற்றது. அந்த நிறுவனம் ஸ்பெக்ட்ரம் ஊழல் புகழ் ஆ.ராசாவின் குடும்ப நிறுவனமாகும். கொள்ளையடிப்பதில் சாதி எங்கே இருக்கிறது? ஆ.ராசாவுக்கும் சாதி கிடையாது. கருணாநிதிக்கும் சாதி கிடையாது. முதலாளித்துவ வர்க்கத்திற்கு பணிபுரிபவர்களுக்கு, முதலாளிகளாக மாறிப் போனவர்களுக்கு, சாதி, மதம், இன பேதம் கிடையாது.

சாதி, இனம் எல்லாமே தேர்தல் கால விளையாட்டுக்கான சீட்டுக்களே. கருணாநிதி சிறந்த திரைக்கதை வசனகர்த்தா மட்டுமல்ல, மிகத் திறமையான நடிகருங்கூட. புதிய புதிய வேஷங்களோடு வரும் கருணாநிதியை அம்பலப்படுத்திடுவோம்.

வேலைக்கு உணவுத் திட்டத்தில் ஊழல்

இந்தியா முழுவதும் 2001 ஆகஸ்ட் 15 அன்று வேலைக்கு உணவுத் திட்டம் துவங்கப் பட்டது. தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டன. 2001 முதல் 2007 வரை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஓர் ஆண்டுக்கு 4 மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ரூ.48,51,00,000. 7 ஆண்டுக்கு கணக்கிட்டால் 339 கோடியே 57 லட்சம் ரூபாய்.

திட்டத்தில் பாதி கூலி பணமாகவும், பாதி கூலி அரிசி, கோதுமை எனவும் தர வேண்டும். ஆள்கூலி ரூ.150. இதில் பணமாக ரூ.75ம் 15 கிலோ அரிசியும் வழங்கப்பட வேண்டும். தொழிலாளிக்கு கூப்பன் வழங்கப்படும். இதை ரேஷன் கடையில் கொடுத்து பெற்றுக் கொள்ள வேண்டும். இதில் இயந்திரம் பயன்படுத்தக் கூடாது.

திட்டத்தில் அட்டவணை சாதி மற்றும் அட்டவணை பழங்குடியின மக்களுக்கு நிலம், தோட்டம், கிணறு, ஆழ்குழாய் கிணறு, குளம், குட்டை உள்ளிட்ட வேலைகள் வழங்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு சேர வேண்டியதில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. அரசு அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர், முகையூர், திருவெண்ணைநல்லூர் ஒன்றியங்களில் 2006 - 2007ல் சுமார் 15 ஆயிரம் தொழிலாளிகள் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஒன்றியங்களுக்கு ஒதுக்கப்பட்ட 750 டன் அரிசியில் 15 கிலோ அரிசி 50,200 பேர்க்கு வழங்க முடியும். அன்றைய தேதியில் இதன் மதிப்பு 3 கோடி ரூபாய்.

விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஒன்றியங்கள் உள்ளன. இந்த மாவட்டத்திற்கு மட்டும் 2005ல் ரூ.15 கோடியே 26 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றியத்திற்கு தலா 68 லட்சத்து 18 ஆயிரத்து 181 ரூபாய் வருகிறது. மேற்கண்ட 3 ஒன்றியத்திற்கு கணக்கிட்டால் 2 கோடி 45 லட்சத்து 45 ஆயிரத்து 45 ரூபாய் ஆகும். இந்த 3 ஒன்றியங்களுக்கு அரிசி தனியாக பிரித்துப் பார்த்தால் 200 டன் அரிசி. இதன் அரசு மதிப்பீடு 1 கோடி ரூபாய்.

2006 - 2007ல் 3 ஒன்றியங்களில் வேலை செய்த 15 ஆயிரம் தொழிலாளர்க்கு சேர வேண்டிய அரிசி 2010 வரை கிடைக்கவில்லை.

19.04.2010 அன்று கோபாலகிருஷ்ணன் தொடர்ந்த ரட 5644/2010 வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 750 டன் அரிசியை கூப்பன்தாரருக்கு வழங்க மாவட்ட ஆட்சியர்க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி ஆட்சியர் பழனிச்சாமி 11.05.2010 தேதியிட்ட ந.க.எண்.ஆ 18/1633/10 கடிதம் மூலம் நுகர் பொருள் வாணிபக் கழக பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அரிசி வழங்க வேண்டுமென பரிந்துரை செய்தார். 7 மாதம் ஆகியும் இன்று வரை உரியவர்க்கு அரிசி வழங்கப்படவில்லை. அரிசி ஏன் வழங்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் கேட்கவில்லை. கண்காணிக்கவில்லை.

உயர்நீதிமன்ற உத்தரவை அவமதிப்பு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 15 ஆயிரம் தொழிலாளர்க்கு சேர வேண்டிய அரிசி வழங்காமல் காலம் தாழ்த்திய அதிகாரிகள் அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நஷ்டஈடு தரவேண்டும். அரசாங்க மதிப்பு 1 கிலோ அரிசி ரூ.19.90 பைசா என்றால் 750 டன் அரிசியின் இன்றைய சந்தை மதிப்பு ரூ.14.90 கோடி.

2005ல் துவங்கப்பட்ட ஊரக வேலை உறுதித் திட்டம், 2001ல் துவங்கப்பட்ட வேலைக்கு உணவு திட்டம் (சம்பூர்ண யோஜனா) போன்றவை கிராமப்புற தொழிலாளர் வாழ்வுரிமை காக்க உருவாக்கப்பட்டவை. இவற்றில் மிகப் பெரிய அளவிற்கு ஊழல் முறைகேடு நடந்துள்ளது. நாடு முழுதும் இந்தத் திட்டத்தில் நடக்கிற ஊழல் தொகையை கணக்கிட்டால் எல்லா ஊழல்களையும் விட பல மடங்கு அதிகமாக இருக்கக் கூடும்.

விழுப்புரம் மாவட்டத்தில் வேலைக்கு உணவு திட்டத்தில் நடக்கும் ஊழல் பற்றி இப்போது மாலெ கட்சி வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அரசு திட்டத்தின் முறைகேடுகள் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி மாவட்டம் முழுதும் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்க 4ஆவது மாநில மாநாடு

ஒரு லட்சம் கிராமப்புறத் தொழிலாளர்களை சங்கத்தில் உறுப்பினர்கள் ஆக்குவது, ஒரு நூறு ஊராட்சிகளில் சங்கத்தைக் கட்டுவது, 5000 பேர்களை பேரணியில் அணிதிரட்டுவது என்ற இலக்குடன் அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்க 4வது மாநில மாநாட்டை டிசம்பர் 18-19 தேதிகளில் கும்பகோணத்தில் நடத்துவதென மார்ச்சில் நடைபெற்ற அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில செயற்குழு முடிவு செய்தது.

புதுக்கோட்டையில், 5 ஒன்றியங்களில் உள்ள 38 ஊராட்சிகளில் 13 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மட்டங்கால் ஊராட்சியில் 1000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் கந்தர்வக்கோட்டை ஒன்றி யத்தில் 9000 உறுப்பினர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தஞ்சையில், 3 ஒன்றியங்களில், 23 ஊராட்சிகளிலும் 1 பேரூராட்சியிலும் 11,556 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். உறுப்பினர் கட்டணமாக ரூ.20 ஆயிரத்து 900 ரூபாய் ஒப்படைத்துள்ளது. திருவலஞ்சுழி ஊராட்சியில் 1000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் திருப்பனந்தாள் ஒன்றியத்தில் 5,513 உறுப்பினர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரத்தில், 5 ஒன்றியங்களில், 17 ஊராட்சிகள், ஒரு பேரூராட்சியில் 10,009 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். திருநாவலூர் ஒன்றியத்தில் 6000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 3 ஊராட்சிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர் கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த 3 மாவட்டங்களும் மாநிலம் முழுவதும் சங்கமாக்கப்பட்டுள்ள மொத்த உறுப்பினர்களான 51,180ல் 67% (34,565) உறுப்பினர்கள் கொண்டுள்ளன. உறுப்பினர் சேர்ப்பு நடந்துள்ள 129 ஊராட்சிகளில் இந்த 3 மாவட்டங்கள் 61% ஊராட்சிகளைக் கொண்டிருக்கின்றன.

திருவள்ளூர், கடலூர், மதுரை தலா 4 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்த்துள்ளன. திருவள்ளூர் ஓர் ஊராட்சியிலும் மதுரை 2 ஊராட்சிகளிலும் கடலூர் ஓர் ஊராட்சியிலும் 1000க்கும் மேற்பட்ட உறுப்பினர் கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் 25 ஊராட்சிகளில் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 34 ஊராட்சிகளில் மட்டும் 22,500க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் (43%). நல்லூர் ஊராட்சியில் 1600 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 36 ஊராட்சிகளில் ஊராட்சி மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன (27%).

1. திட்டவட்டமான ஊராட்சிகள், அதிக உறுப்பினர் எண்ணிக்கை, ஊராட்சி மாநாடுகள், புதிய ஊராட்சிகள், புதிய மாவட்டங்கள் என்ற திசையில் அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கம் உறுதிப்பட்டுள்ளது. விரிவடைந்துள்ளது. மாநிலம் தழுவிய கிராமப்புற வெகுமக்கள் அமைப்பாக முன்வந்துள்ளது.

2. ஊராட்சிகளில் 300, 500 எண்ணிக்கையில் இருந்து 1000, 1600 எண்ணிக்கை வரை உறுப்பினர்கள் சேர்க்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

3. பெண் முன்னணிகள் (மதுரை, விழுப்புரம்) சுதந்திரமாக உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். நிதிதிரட்டல், அணிதிரட்டல் உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் முன்னின்று செய்துள்ளனர்.

4. அமைப்பாக வேலை செய்து பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் பயிற்சி பெறாத கிராமப்புறத் தொழிலாளர்களுடன் சேர்ந்து செயல்பட்டதால் வேலைகளில் வீச்சும் வளர்ச்சியும் உருவானது.

5. கிராமப்புற ஏழைகளின் இயக்கத்தை தீவிரப்படுத்துவோம், ஊழல், துரோக திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்ற முழக்கத்துடன் தொடரப்பட்ட உறுப்பினர் இயக்கம் கிராமப்புறத் தொழிலாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

6. கிராமப்புறப் பகுதிகள் மட்டுமின்றி தொழிலாளர் வர்க்கப் பகுதிகளிலும் ஏஅய்சிசிடியு தலைவர்கள், முன்னோடிகள் பிரச்சாரம், நிதிவசூலில் ஈடுபட்டனர்.

கிராமப்புற வறியவர் உரிமைப் பேரணி, பொதுக் கூட்டம்

கிராமப்புற வர்க்கப் போரட்டங்களில் இருந்து தான் இந்தியாவின் முகத்தை மாற்றும் வல்லமை படைத்த சக்திகள் எழுந்து வருவார்கள் எனக் கூறிய தோழர் விஎம்மின் 12ஆவது நினைவு நாளான டிசம்பர் 18 அன்று மாலை 4 மணி அளவில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் கிராமப்புற நகர்ப்புற தொழிலாளர்கள், இககமாலெ, ஏஅய்சிசிடியு, பெண்கள் கழகம், மாணவர் கழகம், பண்பாட்டுக் கழகத் தலைவர்கள் திரண்டிருந்தனர். பண்பாட்டுக் கழக கலைக்குழு போர்ப்பறை முழக்கம் எழுப்பிச் செல்ல, மணலூரில் இருந்து தியாகிகள் சந்திரகுமார்-சந்திரசேகர் நினைவிடத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட தியாகிகள் சுடர் முன்செல்ல கிராமப்புற ஏழைகளின் இயக்கத்தை தீவிரப்படுத்துவோம், ஊழல், துரோக திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் எனும் பதாகை கம்பீரமாக எழுந்து நிற்க பேரணி புறப்பட்டது. சங்கத்தின் அகில இந்திய தலைவர் ரமேஷ்வர் பிரசாத், அகில இந்திய பொதுச் செயலாளர் திரேந்திர ஜா, மாநிலத் தலைவர் ஜனார்தனன், மாநிலப் பொதுச் செயலாளர் ஜானகிராமன் பிற மாநில நிர்வாகிகள், மாலெ கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் குமாரசாமி, மாநிலச் செயலாளர் பாலசுந்தரம், மூத்த தலைவர்கள் கோ.ராதாகிருஷ்ணன், சங்கரபாண்டியன், என்.கே.நடராஜன் உள்ளிட்டோர் முன்வரிசையில் செல்ல திமுக ஆட்சிக்கு எதிரான ஆவேச முழக்கங்களுடன் பேரணி அணிவகுத்து வண்ணமயமான சிவப்பு பேரணியாக காட்சி அளித்தது. ஊர்வலப் பாதையில் சிவப்பு மட்டுமே ஓங்கி உயர்ந்து நின்றது.

தோழர் விஎம் - ராம்நரேஷ் ராம் திடலில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் டிகேஎஸ் ஜனார்தனன் தலைமை தாங்கினார். தோழர்கள் விஎம், ராம்நரேஷ் ராம், சந்திரகுமார், சந்திரசேகர், சுப்பு உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் வெண்மணித் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அகில இந்திய மாணவர் கழக தஞ்சை மாவட்டத் தலைவர் ரமேஷ்வர் பிரசாத், ஆனந்தன் உள்ளிட்டோர் ஒப்படைத்த தியாகிகள் சுடரை தலைவர்கள் பெற்றுக் கொண்டனர். விதொச தஞ்சை மாவட்டத் தலைவர் கண்ணய்யன் வரவேற்புரை ஆற்றினார். பொதுக் கூட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரேந்திர ஜா, கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எஸ்.குமாரசாமி பெண்கள் கழக மாநிலத் தலைவர் தேன்மொழி உரையாற்றினர். மாநிலம் முழுவதும் தொழிலாளர்கள் மாநாட்டிற்காக கொடுத்த ரூ.40,000த்தை ஏஅய்சிசிடியு தலைவர்கள் பழனிவேல், கிருஷ்ணமூர்த்தி அவிதொச தலைவர்களிடம் வழங்கினர். தலைவர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. பேரணி தீர்மானங்களை சங்கத்தின் மாநிலச் செயலாளர் எம்.வெங்கடேசன் முன்வைத்தார். தஞ்சை மாவட்டச் செயலாளர் மாசிலாமணி நன்றி உரையாற்றினார்.

பிரதிநிதிகள் மாநாடு

19 காலை மாநாட்டு அரங்கின் முகப்பில் சங்கத்தின் தேசிய தலைவர் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். இளங்கோவன் தலைவராகவும் உஷா, ரேவதி, சாந்தி, செண்பகவள்ளி, பொன்ராஜ், மாசிலாமணி, சிகாமணி, ரவிடேனியல் ஆகியோர் கொண்ட தலைமைக்குழு மாநாட்டை வழி நடத்தியது. உறுப்பினர் கட்டணம் மற்றும் மாநாட்டு கட்டணம் ரூ.11,236அய் மாநிலப் பொதுச் செயலாளர் ஜானகிராமனிடமிருந்து பெற்றுக் கொண்டு மாநாட்டை துவக்கி வைத்துப் பேசிய தேசியத் தலைவர் ரமேஷ்வர், தமிழ்நாட்டிலும் விதொச வளர்ந்து வருகிறது, வரும் காலங்களில் நிலப்போராட்டத்தை தீவிரப்படுத்த இம்மாநாடு முடிவெடுக்க வேண்டுமென்ற அழைப்பு விடுத்தார்.

பதவிக் காலம் முடிந்து செல்லும் மாநிலப் பொதுக்குழுவின் சார்பாக மாநாட்டு அறிக்கையை தோழர் ஜானகிராமன் முன்வைத்தார். பெண் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏறத்தாழ 25 பிரதிநிதிகள் அறிக்கை மீதும் தங்கள் போராட்ட அனுபவங்கள், ஆலோசனைகள் மற்றும் கேள்விகளை முன்வைத்தனர். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எஸ்.குமாரசாமி, புதுச்சேரி மாநிலச் செயலாளர் சோ.பாலசுப்ரமணியன், ஏஅய்சிசிடியு மாநில பொதுச் செயலாளர் என்.கே.நடராஜன், மாநில துணைப் பொதுச் செயலாளர் புவனேஸ்வரி, மாணவர் கழக தலைவர் ரமேஷ்வர், மானுட விடுதலைப் பண்பாட்டு கழக மாநில அமைப்பாளர் மதிக்கண்ணன், கட்சியின் மாநிலச் செயலாளர் பாலசுந்தரம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

விவாதங்களை தொகுத்து, பதிலளித்து ஜானகிராமன் பேசினார் அறிக்கையை மாநாடு நிறைவேற்றியது. மாநாட்டுப் பார்வையாளர் திரேந்தி ஜா, தேசிய துணைத் தலைவர் பாலசுந்தரம் புதிய அமைப்புக்கான தேர்தலை நடத்தினர். 55 பேர் கொண்ட மாநிலப் பொதுக்குழு, 19 பேர் கொண்ட மாநில செயற்குழு, 11 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. மாநிலத் தலைவராக ஜனார்த்தனன், பொதுச் செயலாளராக ஜானகிராமன், மாநில நிர்வாகிகளாக தோழர்கள் இளங்கோவன், வெங்கடேசன், அம்மையப்பன், உஷா, வளத்தான், ராஜாங்கம், கன்னையன், பொன்ராஜ், செண்பகவள்ளி, ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதுகை, தஞ்சை, விழுப்புரம் ஆகிய கவனம் குவிக்கப்பட்ட மாவட்டங்களில் தற்போதுள்ள உறுப்பினர் எண்ணிக்கையை 3 மடங்காக்குவது, தேசிய மாநாட்டின்போது 75,000 உறுப்பினர் எண்ணிக்கையை எட்டுவது, 500 பேர்கொண்ட 75 ஊராட்சி மாநாடுகள், 3000 உறுப்பினர் எண்ணிக்கையுடன் 10 ஒன்றிய மாநாடுகள் நடத்துவது, 5வது மாநில மாநாட்டின் போது 1,50,000 உறுப்பினர் எண்ணிக்கையை அடைவது என்ற உறுதிப்பாட்டுடனும் சர்வதேச கீதத்துடனும் மாநாடு நிறைவுற்றது. பேரணி அணிதிரட்டலுக்காக தஞ்சையில் தங்கி பணியாற்றிய ஏஅய்சிசிடியு தலைவர்கள், மாநாட்டு சுவர் பிரச்சாரம் மற்றும் மாநாட்டுப் பணிகளில் ஈடுபட்ட ஓவியக் கலைஞர்கள் தோழர் லால்குடி நடராசன், புதுச்சேரி தோழர்கள் உலகநாதன், வேல் முருகன் மற்றும் தொண்டர்கள், கலைக்குழுத் தோழர்களுக்கு திரேந்திர ஜா நினைவுப் பரிசுகள் வழங்கினார்.

Search