COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Saturday, October 23, 2010

மாலெ தீப்பொறி, அக்டோபர் 2010

இராஜராஜ சோழன் நானே!

தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டதன் ஆயிரமாவது ஆண்டு விழா கோலாகலமாய் நடந்து முடிந்துவிட்டது. மஞ்சள் சால்வை இல்லாமல் பட்டுவேட்டி மேல்துண்டுடன், இல்லை இல்லை, அங்கவஸ்திரத்துடன், ஆபத்தான முதன்மை நுழை வாயில் மூலம் அல்லாமல், வேறு ஒரு வழியில் கருணாநிதி சோழர் தஞ்சை கோவிலுக்குள் சென்றார். பிரதான நுழைவாயில் வழியாகச் செல்லும் ஆட்சியாளர்களின் உயிருக்கு ஆபத்து என்ற மூடநம்பிக்கைக்கு, தவறு தவறு, அய்தீகத்திற்கு அவர் குடும்பத்தினர் மதிப்பு கொடுக்கின்றனர். குடும்பத்தினர் கவலைக்கு மதிப்பு கொடுக்கத் தெரிந்த மிகக்சிறந்த ஜனநாயகவாதி அல்லவா கருணாநிதி?


ஆயிரம் பேர் ஆடக் கண்டு களித்தார். இராஜராஜன் ஆட்சிக்காலம் பொற்காலம் எனப் புகழ்ந்தார். தம் ஆட்சி இராஜராஜன் ஆட்சி எனப் புகழ்பாட வைத்தார். மறக்காமல் ராஜராஜன் வாரிசு ராஜேந்திரனை அவனது கடல் கடந்த வெற்றிகளுக்காகக் குறிப்பிட்டு போற்றினார். மு.க.ஸ்டாலி னும், சீனாவிற்கும் கொரியாவிற்கும் பயணம் புறப்பட்டு விட்டார். அங்கு ஓடும் ஆறுகளை எல்லாம் ஆய்வு செய்து, கூவத்தை சுத்தப்படுத்துவாராம். அப்படியே, ஹ÷ண்டாய், நோக்கியா, சாம்சங் பன்னாட்டு முதலாளிகளைச் சந்திப்பாராம்.

ஏரோட்டும் உழவரெல்லாம் ஏங்கித் தவிக்கையிலே

தேரோட்டம் ஏனடா தியாகராசா?

எனத் துள்ளுதமிழில் எதுகை மோனையுடன் கேள்வி எழுப்பியவர் கருணாநிதி. அந்த கேள்வி இன்று கருணாநிதியை நோக்கித் திரும்புகிறது.

தில்லை நடராசனையும் சிறீரங்கநாதனையும்

பீரங்கி வாய்கொண்டு பிளக்கும் நாள் எந்நாளோ?

சபாஷ், சரியான கேள்வி. இந்த கேள்வியையும் எழுப்பியவர் கருணாநிதிதான். ஆனால் இன்று யாராவது இப்படியோ, இது போன்றோ கேள்வி கேட்டுவிட்டால் கருணாநிதி சோழர் கேள்வி கேட்டவரை சீமானுக்குப் பக்கத்தில் சிறை வைத்துவிடுவார்.

பொற்காலம்?

அரசு தனிச்சொத்தோடு துவங்கியது. சுரண்டலை நிற்க வைக்க ஒடுக்குமுறையை கையாள்கிறது. படையெடுப்பு. போர். இதில் ஆகச் சிறந்தவர்கள் ஆட்சி பொற்காலம். இன்று ‘வளர்ச்சி’. வளர்ச்சியே பொற்காலம். இராஜராஜன் காலத்தில் வளர்ச்சி இருந்தது. கருணாநிதி, சோழர்கள் பற்றி எழுதிய நீலகண்ட சாஸ்திரியை மேற்கோள் காட்டுகிறார். ‘தென்னிந்திய வரலாற்றில் மிகவும் படைப்பாற்றல் நிறைந்த காலப் பகுதி சோழர் காலமாகும். அக்காலத்தில் முதன்முதலாக தென்னிந்தியா முழுவதும், ஒரே அரசின் ஆட்சியின் ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டது.’

‘புதிய சூழ்நிலைகள் தோன்றியபோது, ஆட்சி முறைச் சிக்கல்களைச் சமாளிக்கவும் தீர்க்கவும் சோழர் காலத்தில் அக்கறையுடன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உள்ளூர் ஆட்சி முறை, கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் பிற் காலங்களில் மீண்டும் அடைய இயலாத ஒரு பொற்காலத்தை, ஓர் உயர்வை தமிழ்நாடு இக்காலத்தில் பெற்றது.’

‘வெளிநாட்டு வாணிகம், கடல் வாணிபம், செய்முறை கள் ஆகியவற்றைப் போல் முன்னிருந்த துறைகள் அனை த்திலும், ஏற்கனவே பல்லவர் காலத்தில் கொண்டு வரப் பட்ட செயல்களும் சீரமைப் புக்களும் சோழர் காலத்தில் முழுமை பெற்றன.’

இராஜராஜன் பேரரசன். வரிகள் பல வசூலித்து நல்லா ட்சி செய்தவன். முடியாட்சி யில், குடஓலை ஜனநாயக குடி ஆட்சிக்கு வழிவகை செய்த வன். விவசாயமும், வாணிப மும் செழித்தன. ‘மும்முடிச் சோழன். அவன் செல்லாத பகுதிகள் இல்லை. வெல்லாத மன்னர்கள் இல்லை. அவனைக் கண்டு நில்லாமல் ஓடிய மன்னர்கள் உண்டு. அவனைக் கண்டு நடுங்கியவர்கள் உண்டு. ஆனால், அவன் அமை தியின் உருவமாக, அதே நேரம் ஆற்றலின் வடிவமாக, ஆன்மீகவாதியாக, ஆத்திக வாதியாக, எல்லோருக்கும் நல்லவனாக, எல்லோரையும் சமமாகக் கருதுபவனாக வாழ்ந்தான். அவன் மகன்தான் ராஜேந்திரன். அவனுக்கு 1012ல் ராஜராஜன் பட்டம் கட்டினான். தந்தையும் மகனு மாக அரசாண்ட பெருமை வரலாற்றுச் சிறப்புமிக்கது. பல போர்களில் தந்தைக்குத் துணையாக நின்று வெற்றி களைக் குவித்தான் ராஜேந்திர சோழன்’ (27.09.2010 முரசொலி).

(கருணாநிதி குடும்ப ஜோசியர்கள் 2012ல் ஸ்டாலி னுக்குப் பட்டம் கட்டச் சொல்லி உள்ளனரா? அழகிரி கோபமாக இருக்கிறார். அவர் நாகர்கோயிலுக்கும் செல்ல வில்லை. தஞ்சைக்கும் செல்ல வில்லை. மூத்த முதல்வரை நினைத்தால் மிகவும் கஷ்ட மாகத்தான் இருக்கிறது).

அது அந்தப் பொற்காலம்.

இது இந்தப் பொற்காலம்.

கருணாநிதி தமது ஆட் சியை எதனால் பொற்காலம் என்கிறார்? முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையே பொற் காலம் என்கிறார். ரூ.47,000 கோடி முதலீடு பார், பாய்ந்து பரவும் மூலதனம் பார், தொழில்மயம் பார், நகர்மயம் பார், அரியானாவோடு, மகா ராஷ்டிராவோடு போட்டி போட்டு வாரித் தந்து பன் னாட்டு இந்நாட்டு முதலாளி களை எல்லாம் வரவழைத் துள்ளேன் பார், இதுவே பொற்காலம் என்கிறார்.

கருணாநிதியும் அவரது மத்திய சேக்காளி மன்மோக னும், விவசாயம் தொழிலுக்கு வழிவிட வேண்டும், மூலத னம் மூலவளங்களை எடுத் தாள வேண்டும், இல்லாவிடில் வறுமை நிலைத்து நீடிக்கும் என மூலதனத்தின் புதிய வேதம் படிக்கிறார்கள்.

எந்திரனும், சன்னும், ரெட் ஜெயன்டும், கிளவுட் நைனும், கொஞ்சம் சென்னை சங்கமமும் கலை உலகின் பொற்காலம் இல்லையா எனக் கேட்கிறார் கருணாநிதி.

முட்டை போட்டேனே, பொற்காலம் இல்லையா? அரிசி தந்தேனே, வண்ணத் தொலைக்காட்சி தந்தேனே, பொற்காலம் இல்லையா என்கிறார். கான்கிரீட் வீடு தருவதாகச் சொல்லியுள்ளேனே, பொற்காலம் தெரியவில்லையா என்கிறார்.

வரலாற்றையும் வல யையும் மறந்தால் . . .

எந்த ஒரு மக்கள் சமூகமும், சுரண்டல் வரலாற்றையும் ஒடுக்குமுறை வலியையும் மறந்துவிடக் கூடாது. மறந்தவர்கள் வீழ்வார்கள். மறவாதவர்கள், எழுவார்கள். வெல்வார்கள். அன்றைய இன்குலாப், இராஜஇராஜனின் ஆயிரமாவது பிறந்த நாளில் ஓர் இலக்கியக் குறுக்கீடாகக் கவிதை எழுகிறார்.

தஞ்சையிலிருந்து காந்தளூர் செல்லும் சாலைகளில்

குளம்படிகள் கேட்காதிருக்கலாம்.

அலைமோதும் துறைதோறும்

புலிக்கொடிகள் புரளாதிருக்கலாம்

குளம்படிகள் கேட்காவிட்டால் என்ன

டாங்கிச் சக்கரங்கள் செவிகளை நிரப்பும்.

இருந்தாலும் கடந்த ஆயிரம் ஆண்டுகளை

அப்படி ஒன்றும் கைகழுவ முடியாது.

இனிவரும் ஆயிரம் ஆண்டுகளிலும்

ஏமாந்துவிடக் கூடாது

சொல்வோம் ஆயிரம் ஆண்டுகளாக அழுகை -

மொழி மாற்றிக் கொண்டதில்லை;

ஆத்திரமும் கூடத்தான்.

கண்ணீர் -

நிறம் மாற்றிக் கொண்டதில்லை;

ரத்தமும் கூடத்தான்.

வரலாற்றையும் வல யையும்

நினைவுபடுத்திக் கொள்வோம்.

கருணாநிதி மேற்கோள் காட்டிய, நீலகண்ட சாஸ்திரியார் தென்னிந்திய வரலாறு நூலில் எழுதுகிறார். ‘இடைக்கால ஆட்சிமுறை, சோழர் ஆட்சிமுறை, சமுதாயத்தின் உயர் நிலையில் இருந்த மக்களின் நலனுக்கேற்ற தனிச்சிறப்பான இயல்புகளைக் கொண்டிருந்ததாகவும், பொதுமக்களின் நலன்களைப் புறக்கணித்ததாகவும் தோன்றுகிறது எனப் பொதுவாகக் கூறலாம். அந்த ஆட்சிமுறை வரம்பு கடந்த தீய விளைவுகளை உண்டாக்கக் கூடிய இயல்புகளைக் கொண்டி ருந்தது உண்மையே.’ இந்தக் கூற்று உண்மைதான் எனக் காட்டும் விவரங்கள் எவை?

தஞ்சைப் பெரிய கோயில்

கோவில். ஊர். ஊருக்கு வெளியே சேரி. கோவிலை அடுத்து அக்ரஹாரம். பிற சாதியினர் படிநிலை வரிசைக்கேற்ற தெருக்கள். அதற்கு வெளியே பஞ்சமர்கள். அந்தணரிலிருந்து புல்லுப் பறிக்கிற பறமன் வரை எனப் பார்ப்பனீய நில உடைமை சமூகம் இருந்தது.

கோவில் நில உடைமையாளராக இருந்தது. அந்தக் கால தொழில் முனைவோராக இருந்தது. கோவிலுக்கு எல்லோரும் விழாக் காலங்களில் புனித சேவைகள் செய்தாக வேண்டும். புனிதம் என்றாலே அது கட்டாயம் என்பதும் இலவசம் என்பதும் தெளிவு.

‘தஞ்சைப் பெரிய கோயிலில் உழுபறையர் நீங்கலாக கலைஞர்கள் (ஆடல், பாடல்) கைவினைஞர், சேவையாள் என 609 பேர் இருந்தனர்.’ (கி.பி. 1011ஆம் ஆண்டு கல்வெட்டு)

அரசாங்கத்தை அடுத்து, உழைப்பையும் உற்பத்திப் பொருட்களையும் வாங்கும் பெரிய நிறுவனமாக, கோயிலே இருந்தது. அது ஒரு நுண்அரசாக, இரண்டாம் நிலை அரசாங்கமாக, அரசதிகார வெளிப்பாடாக, மத்திய அரசதிகார வாய்க்காலாக இருந்தது.

நிலஉடைமை பொருளாதார அமைப்பால் அரசதிகாரம் உறிஞ்சிய உபரியின் கணிசமான பகுதி கற்கோயில் கட்டுமானத்திற்கும் விரிவாக்கத்திற்கும் பயன்படுத்தப்பட்டது.

கோவிலை மய்யங்கொண்டே பார்ப்பனீயமும், அன்றைய பாலியல் தொழிலாளர் முறையும் (தேவதாசி) நிறுவனமயமாயின.

கோவிலுக்கு வெளியே இருந்த சமூகம்

தில்லைவாழ் அந்தணர்கள்தான், அருண்மொழித் தேவனின் 19ஆம் ஆட்சியாண்டில் அவனுக்கு இராஜராஜன் என்றும் சிவபாதசேகரன் என்றும் பட்டம் வழங்கினர் என்பதும், அன்றைய அரசர்கள் அருமறை முழுதுணர்ந்து அந்தணரை ஆதரிப்பவர்கள் எனப் புகழப்பட்டனர் என்பதும் கருணாநிதியின் பகுத்தறிவுக்கு நன்றாகவே தெரியும்.

யாரிடம் நிலம்?

மன்னர்கள், தனித்தனி பிராமணர்களுக்கு அளித்த நிலங்களை ஏகபோகம் என்றும், பிராமணர்கள் குழுவுக்கு நிலம் அளித்தபோது கணபோகம் என்றும் அழைத்தனர். கணபோக வகையிலேயே நிலங்கள் பெரிதும் அளிக்கப்பட்டன. பிராமணர்களுக்கு நிலம் வழங்குவது பிரமதேயம் எனப்பட்டது.

கருணாநிதி 100 குழி 1 மா, 20 மா ஒரு வேலி எனத் தம் தந்தையார் சொல்லித் தந்ததை, தஞ்சையில் நினைவு கூர்ந்தார். எபிகிராஃபிகா இண்டிகா நூல், அன்றிருந்த பிரும்மராஜா என்ற பிராமணருக்கு 10 வேலி நிலம் மான்யமாகக் கொடுக்கப்பட்டது என அன்பில் செப்பேட்டை ஆதாரம் காட்டுகிறது. அன்பில் செப்பேடு சொல்கிறது: இந்தப் பூமிக்குச் சொந்தமான எல்லாப் பொருட்களும், கனிதரும் மரங்களும், நீர், நிலம், தோட்டம், ஆழ்கிணறுகள், புறம்போக்கு, மேய்ச்சல் நிலம், மன்றங்கள், கால் வாய்கள், ஆறு, குளம், எல்லாமே பிரமதேயமாகக் கொடுக்கப் பட்டன. காராண்மை மீயாட்சி உட்பட்ட, அரசனால் இப்பூமி யில் அனுபவிக்கப்பட்ட அனைத்துமே கொடுக்கப்பட்டது.

அந்தணர்கள் ஏர்பிடித்து உழக்கூடாது என மனுதர்மம் சொல்வதை சதுர்வேதிமங்கலத்து சபையும் தீர்மானித்ததாக, தென்னிந்திய கல்வெட்டுக்கள் நூல் பக்கம் 365ல் குறிப்பிடப் படுகிறது.

முதலாம் இராஜராஜனின் 17ஆம் ஆட்சியாண்டுக் கல் வெட்டின்படி, இராசகேசரி சதுர்வேதிமங்கல கிராமத்தில், வேறு இனத்தவர் தம் நிலங்களை பிராமணர்களிடம் விற்றுவிட வேண்டும் என ஆணையிடப் பட்டது (கல் வெட்டு 46/1897, 311/1911).

கே.கே. பிள்ளை, தமிழக வரலாறும் பண்பாடும் நூலில் எழுதுகிறார்: பிராமணரை எதிர்த்துக் கலவரம் நடந்த போது, மூன்றாம் குலோத்துங் கன் அதை அடக்க ஆணை யிட்டு, பிராமணரை எதிர்ப்ப வரிடமிருந்து அபராதம் வசூலி க்கப்படும் என்றும் அப்படி அபராதம் செலுத்தாதவர்கள் நிலத்திலிருந்து வெளியேற்றப் படுவார்கள் என்றும் எச்சரித் துள்ளான்.

கி.பி. 960ன் லால்முடி கல்வெட்டு சொல்கிறது. பாவி ஷ்யம் கற்றுத்தரும் ஒரு பிராமணருக்கு 72 குழி மான் யமாக்கப்பட்டது. ஆனால் 50 குழி வெட்டும் பணிமகனுக்கு ஒரு காசு மட்டுமே தரப்பட் டது. காவல்காரனுக்கு ஒரு குருணை நெல்லும் சங்கு ஊதுபவனுக்கு இரு வேளை சோறும் தரப்பட்டது. அரசர், அந்தணர், மேல்சாதி வேளா ளர், பெருவணிகர் நலன்கள் காக்க, பெரும்பான்மை மக் கள் ஒட்டச் சுரண்டப்பட்ட னர். 400 வகை வரிகள் போடப்பட்டன. எதிர்ப்பு மூர்க்கமாக நசுக்கப்பட்டது. அந்த வரலாற்றுத் தொடர்ச்சி யான சவுக்கடிக்கும் சாணிப் பாலுக்கும்தான், கம்யூனிஸ்ட் இயக்கம் தஞ்சையில் சாவு மணி அடித்தது.

கருணாநிதியும் இராஜராஜனும்

இரண்டு பொற்காலங்கள்

இன்றைக்கு உலகமயம் பார்ப்பனீயத் தேரேறி வருகி றது. மேலே இருப்பவர்கள் அள்ளி அள்ளிக் குடிப்பார்கள். கீழே இருப்பவர்கள், ஏதாவது கசிந்தால், தொட்டுத்தொட்டு நக்கிக் கொள்ளலாம். ஏதிலி கள் வாழ்விற்கும் சாவிற்கும் இடையில், வாழ்வின் விளிம் பில் ஊசலாடி நிற்பார்கள்.

27.5 லட்சம் குடும்பங்க ளுக்கு 55 லட்சம் ஏக்கர் நிலம், என்ன ஆனது எனக் கேட் டால், கருணாநிதி, ஒரு திரைப்படத்தில் ஒரு நகைச் சுவை நடிகர் தன் கிணறு காணாமல் போய்விட்டது என்று சொன்னது போல், மனம் இருக்கிறது நிலம் இல்லை என்கிறார். ஆனால் நோக்கி யாவிற்கு, டாடாவிற்கு, வேறு வேறு பெருமுதலாளிகளுக்கு, கல்வி மருத்துவ வியாபாரி களுக்கு, ஒப்பந்த விவசாயத் திற்கு, லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் தருகிறார். சலு கைகளை அள்ளித் தருகிறார். வீட்டு மனை, வீடு கேட்டால், வெளியேற்றம் என மிரட்டு கிறார். மின்சாரம் கேட்டால் கிடையாது, வராது, பம்ப் செட் தலைமுறை தலைமுறை யாய் தருகிறேன் என்கிறார். நூறு நாள் வேலையும் கிடை யாது, வேலை இல்லாக் காலப்படியும் கிடையாது. நூறு ரூபாய் கூலியும் கிடையாது. ஆனால் கொள்ளையோ கொள்ளை நடக்கும் என்கி றார். ஹøண்டாயில், அரசு ஆலோசனை தந்த 32 தொழி லாளர்களை வேலைக்கு எடுக்கச் சொன்னால், கொரிய இந்தியப் போர் நடக்கும் என்பது போல் பதறுகிறார்.

இராஜராஜன் வேதம் ஓதும் பள்ளிகளுக்கு நிலமும் நிதியும் வாரித்தந்தான். கரு ணாநிதி, காசுள்ளவருக்குத் தான் கல்வியும் மருத்துவமும் என மாற்றிவிட்டார்.

குடஓலை ஜனநாயகம், பார், பார், பொற்கால இராஜராஜன் ஆட்சி என்கிறார். (அன்பழகன் கொஞ்சம் உஷாராய், இராஜராஜன் பற்றி அளந்து பேசுகிறார்). 33 முதல் 70 வயது வரை உள்ளவர்கள், ஒழுக்க சீலர்கள் என்றெல்லாம் வாக்களிப்பவர் பற்றி கதை வசனம் எழுதி, முழுப்பூசணிக் காயைக் சோற்றில் மறைக்கக் கருணாநிதி முயற்சிக்கிறார்.

உண்மை என்ன? வேதத்துடன் தொடர்புடைய அந்தணர்க்கு வாக்குரிமை உண்டு. வேதத்தோடு தொடர்பில்லாதவர் எனில் 1 வேலி நிலமும் சொந்தவீடும் உள்ளவர்க்குத்தான் வாக்குரிமை உண்டு. பார்ப்பனர், வேளாளர் போக, மற்ற உழைக்கும் பிற்படுத்தப்பட்ட தலித் மக்களுக்கு வாக்குரிமை கிடையாது.

அன்று இராஜராஜனின் குடஓலை ஜனநாயக முறையில், ஏகப்பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு வாக்குரிமை இல்லாத, மேல்சாதி நில உடைமையாளர் பொற்காலம் இருந்தது. இன்று கருணாநிதி சோழன் காலத்தில், பிரிக்கால் ஹøண்டாய் என எங்கும், தொழிலாளிக்கு, இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தொழிற்சங்க அங்கீகார உரிமை மறுக்கப்படும், முதலாளிகளின் பொற்காலம் நிலவுகிறது.

குழு போடுவதாகச் சட்டமன்றத்தில் சொன்னவர்கள், ஞாபகமாக மறக்கிறார்கள். ஆனால் தொமுசவை முதலாளிகள் விருப்பத்திற்கேற்ப திருபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, சுங்குவார்சத்திரம் பகுதியில் முதலாளிகளோடு சேர்ந்து திணிக்கிறார்கள். பயிற்சியாளர்கள், நிரந்தரமற்ற தொழிலாளர் கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், நகர்ப்புற கிராமப்புற வறிய வர்கள், உழைக்கும் விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து மக்களுக்கும் விரோதமான மக்கள் விரோத முதலாளித்துவ வளர்ச்சிப் பாதை, பேயாட்டம் போடுகிறது.

இன்குலாப் கவிதை வரிகளைத் திரும்பவும் கவனத்தில் நிறுத்துவோம்.

நமது ஓங்காரம் ஓதப்படும் தேவாரங்களை மிஞ்சி

உறங்கும் அடிமைகளின் செவிப்பறைகளைக் கிழிக்கட்டும்.

மகுடங்களின் மாயையில் மக்களை மூடும்

சூன்யக்காரர்களும் சூன்யக்காரிகளும்

சாம்பலாகட்டும் உண்மைச் சரித்திர விழிப்பில்.

Search